தீயின் எடை - 3
அஸ்வத்தாமன் இருந்த இடத்திலிருந்து துரியோதனன் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை. பக்கவாட்டில் திரும்பியிருந்த முகத்தில் தசைகள் இறுகியிராமல் எளிதாக படிந்திருப்பதை மட்டுமே அவன் நோக்கினான். ஒருவர் புன்னகைத்துக்கொண்டிருப்பதை முகத்தின் பின்பக்கமேகூட காட்டுவதை அவன் கண்டிருந்தான். துரியோதனன் உள்ளம் மலர்ந்திருக்கிறானா? அவன் சிதையருகே கண்ட முகத்தை நினைவுகூர்ந்தான். அங்கே அமர்ந்திருக்க முடியாதபடி ஓர் ஒவ்வாமை அவன் உள்ளத்தை அலைக்கழித்தது.
துரியோதனனின் குழலிழைகளில் விளக்கின் செவ்வொளி படிந்திருந்தது. அவன் பேசியபடி திரும்பி முன்னால் அமர்ந்திருந்த கிருபரையும் கிருதவர்மனையும் நோக்கியபோது அவர்களிருவரும் தெய்வத்தை நோக்கும் அடியவனின் விழிகள் கொண்டிருப்பதை அஸ்வத்தாமன் கண்டான். சகுனி நிலத்திலேயே நிலைத்த விழிகளுடன் புண்பட்ட காலை சற்றே நீட்டி அதன் முழங்கால் மடிப்பில் விரல்களை ஓட்டியபடி அங்கிலாதவர்போல் அமர்ந்திருந்தார். அவருடைய இடக்கைச் சுட்டுவிரல் காற்றில் எதையோ எழுதிக்கொண்டிருப்பதுபோல் சுழித்தது. அது எழுத்துக்கள் அல்ல, எண்கள்.
துரியோதனனின் முகத்தை பார்க்க வேண்டுமென்று அஸ்வத்தாமன் சற்றே அசைந்தான். ஆனால் தன்னில் எழுந்த அசைவை தானே அஞ்சி உடலை இறுக்கிக்கொண்டான். துரியோதனன் கைகளைத் தூக்கி “நமது படைகள் எழட்டும். இங்கிருக்கும் படைகளைக் கொண்டு அமைக்கக்கூடிய சிறந்த சூழ்கை ஒன்றை அஸ்வத்தாமன் வகுக்கட்டும். இன்றைய போரில் வெற்றி நமக்கே. ஐயமில்லை. இத்தருணத்தில் அதை தெள்ளிதின் உணர்கிறேன்” என்றான்.
கிருபர் சலிப்புடன் கையை வீசி அதை தவிர்த்து “வீண் முனைப்பால் இம்முயற்சியை நாம் எடுக்க இயலாது. பிறிதொரு முறை எண்ணிச் சூழவேண்டும். அனைத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஒருவேளை அதன் பொருட்டே கருக்கிருள் சூடி வானம் நமக்கு பொழுதளித்திருக்கிறதோ என்னவோ?” என்றார். “கருக்கிருள் இருவருக்கும் பொதுவானதே. இது அவனுக்கான இருள்” என்று துரியோதனன் சொன்னான். அவன் எவரை எண்ணி அதை சொன்னான் என அஸ்வத்தாமன் வியந்தான்.
கிருபர் மேலும் எரிச்சல் கொண்டார். “அரசே, இச்சொற்களை மீளவும் அழுத்திக் கூற விரும்புகிறேன். இக்கணம் வரை போரை நீட்டித்ததே நமது பிழை. நம் இழப்புகள் பெரியவை என்பதை நாம் இனியாவது உணரவேண்டும்” என்றார். துரியோதனன் சினமில்லாத குரலில் “சரி, நாம் என்ன செய்யலாம்?” என்றான். கிருபர் திகைக்க “சொல்லுங்கள், என்ன செய்யலாம்?” என்று துரியோதனன் கேட்டான். கிருபர் “நாம் உகந்ததை இயற்றவேண்டும்” என்றார். “உகந்தது என்னவென்று சொல்லுங்கள், ஆசிரியரே” என்றான் துரியோதனன்.
அக்குரலில் முற்றிலும் சீற்றம் இல்லையென்பதை கண்ட அஸ்வத்தாமன் மீண்டும் தலை திருப்பி துரியோதனன் முகத்தை பார்க்க முயன்றான். சினமோ ஒவ்வாமையோ இல்லாமல் இனிதென எழுந்த அக்கேள்வி கிருபரை திகைக்க வைத்தது. சிறுசொல்லுக்கே எரிகொண்டவன்போல் விசையுடன் கொந்தளித்தெழும் துரியோதனனையே அவர் பழகி அறிந்திருந்தார். இரு கைகளையும் கோத்து மடியில் வைத்தபடி “நாம் போரிடவில்லை என்று முடிவெடுத்துவிட்டால் அதன்பின் செய்வதற்கென்ன இருக்கிறது என்பதை விரிவாகவே எண்ணிச்சூழ முடியும்” என்றார்.
“என்ன செய்யலாம்? அதை சொல்லுங்கள்” என்று குரலெழாமல் துரியோதனன் சொன்னான். அதே தணிவுடன் “அவனிடம் சென்று நாம் போரிட விரும்பவில்லை என்று சொல்லலாமா? அது என் முடியை அவன் காலடியில் வைப்பதற்கு நிகர். என் கொடிவழியினர் அவனிடம் தொழும்பர் ஆவார்கள். என் குடிகள் அவனுக்குரியவர்களாவார்கள்” என்றான். கிருபர் “அப்படி அல்ல. எந்தப் போர்முடிவும் இருபக்கமும் விட்டுக்கொடுத்தலே. நாம் பேசலாம்” என்றார்.
“என்ன பேசுவது? என் இளையவர் அனைவரையும் களத்தில் இழந்துள்ளேன். எனக்கு இனியவராகிய அங்கரை இழந்த பின்னர், என் உடலின் பகுதியாகிய ஜயத்ரதனையும் பூரிசிரவஸையும் இழந்த பின்னர், இம்மணிமுடியையும் இழந்து என் உயிரை மட்டும் ஈட்டிக்கொண்டு இங்கிருந்து நான் திரும்பிச்செல்ல வேண்டும் அல்லவா?” என்றான் துரியோதனன். “ஆசிரியரே, உயிருடன் இருப்பவர்களைவிட இறந்தவர்களிடம் நாம் கடன்பட்டிருக்கிறோம். நான் அத்தனை சொற்களையும் அளித்துவிட்டேன். இப்புவியில் எவருக்கும் நான் இனி கட்டுப்பட்டவன் அல்ல. என்னவர் விண்ணில் உறைகிறார்கள்.”
கிருபர் கடும் சீற்றமடைவது அவர் விழிகளில் தெரிந்தது. அதை அடக்கும் பொருட்டு இரு விரல்களையும் இறுக்கிக்கொண்டு “ஒவ்வொரு நாளும் களத்தில் எதையோ இழந்துகொண்டுதான் இருக்கிறோம். முதல் நாள் அந்தியில் இப்போரை நிறுத்தியிருந்தாலும் நமக்கு இனியவர்களும் நம் பொருட்டு களத்துக்கு வந்தவர்களுமாகிய பல்லாயிரம் பேரை இழந்திருப்போம். இங்கு உயிர் துறந்த ஒவ்வொரு படைவீரனும் உங்களுக்கு உங்கள் இளையோர் அளவுக்கே அணுக்கமானவர்களே. ஒருசிலர் பொருட்டு மட்டும் நீங்கள் துயருற வேண்டியதில்லை” என்றார். சகுனி ஏதோ சொல்ல வர கையமர்த்திவிட்டு குரலை எழுப்பினார்.
“ஊழால் இதோ சிலர் எஞ்சியிருக்க செய்யப்பட்டிருக்கிறார்கள். தந்தையரின் வாழ்த்தோ அன்னையரின் வேண்டுதலோ அவர்களை காத்திருக்கிறது. இவர்களையும் வைத்து ஆடுவதில் என்ன பொருள்?” என்றார் கிருபர். “சரி, இந்த மணிமுடியையும் துறந்து நான் என்ன செய்ய வேண்டும்? கானேகுவதா?” என்று துரியோதனன் கேட்டான். கிருபர் தணிந்து “அரசே, அவர்களும் நம்மைப்போலத்தான் இருப்பார்கள். இப்போது போரின் அழிவுகளைக் கண்டு திகைத்து இருளுக்குள் அமர்ந்திருப்பார்கள். நம்மிடமிருந்து போர் நிறுத்தத்திற்கான ஒரு சிறு அறிவிப்பு எழுந்தால் போதும், அவர்களும் மாற்று அறிவிப்பை அளிப்பார்கள்” என்றார்.
தாழ்ந்த முதுமைக் குரலில் கிருபர் சொன்னார் “இப்போது இக்களத்திலிருந்து கலைந்து செல்வோம். இருவரும் நிகரெடை கொண்டவர்கள் என்பதை நிறுவிவிட்டோம். இயல்வதென்ன என்பதை எங்கேனும் அமர்ந்து முடிவெடுப்போம். இன்னமும் போரிடும் ஆற்றல் நமக்கு உள்ளதென்பதை நாம் சொல்லாமலே அவர்கள் அறிவார்கள். அஸ்வத்தாமனும் நானும் இங்கிருப்பது வரை இப்போரில் அவர்கள் முழுதாக வெல்ல இயலாதென்பதை எவரும் கூற வேண்டியதில்லை.”
எண்ணியதற்கு மாறாக துரியோதனனின் குரல் அப்போதும் மேலே எழவில்லை. மாறாத சீரான ஒலியுடன் கிருபரை கூர்ந்து நோக்கி “சொல்லுங்கள் ஆசிரியரே, நாம் எந்நிலையில் இருக்கிறோம்? நீங்களே கூறினீர்கள். நாம் வெல்லவில்லை, நிகர்எடை கொண்டிருக்கிறோம் என்பதை மட்டுமே நிறுவியிருக்கிறோம். இவ்வண்ணம் சென்று நைமிஷாரண்யத்தில் அமர்ந்து சொல்லெடுப்போமெனில் அறுதியாக நாம் எதிர்பார்க்கக் கூடியது என்ன?” என்றான்.
கிருபர் ஒன்றும் சொல்லவில்லை. துரியோதனன் சொன்னான் “பாதி நிலம், அவர்களுக்கு உளம்விரிந்திருந்தால் அஸ்தினபுரி. அல்லவா?” கிருபர் விழிதூக்கி அவனை நேர்நோக்கி “ஆம்” என்றார். “இன்று முழுநிலத்தையும் என் கையில் வைத்திருக்கிறேன். பாதிநிலம் அவர்களுக்கு அளிப்பேனெனில் அதற்கு பொருள் என்ன? இப்போரில் அவர்கள் வென்றார்கள் என்பதல்லவா?” என்றான் துரியோதனன். “அவர்களிடம் அடிபணிவது என்பதற்கு அப்பால் வேறென்ன பொருள் அதற்கு? சொல்லுங்கள். நானறியாத ஏதேனும் பொருள் உண்டா?”
கிருபர் “இவ்வண்ணம் சொல்லிக்கொண்டே செல்லலாம். அதற்கு எப்பொருளும் இல்லை” என்றார். “இன்று போர் நிறுத்தம் செய்தால் அது எவ்வகையில் ஆயினும் எனது தோல்வியே. இக்களத்தில் நான் வென்றாகவேண்டும். அன்றி அழிந்தாகவேண்டும். என் பொருட்டு அழிந்தவர்கள் அனைவருக்கும் நான் செய்யக்கூடிய ஈடு அது மட்டுமே. நான் நன்கறிவேன், ஒருகணமும் தோற்றேன் என்று உணராதிருத்தலே அங்கன் என்னிடம் எதிர்பார்ப்பது. பிற அனைத்தையும்விட நான் அதை அறிவேன். அவனிடம் அதை நான் கேட்கக்கூட வேண்டியதில்லை.”
கையை அசைத்து அவன் கூவினான். “இல்லை, ஒரு கைப்பிடி மண்ணைக்கூட நான் விட்டுவிடப் போவதில்லை. ஒரு சொல் அளவுக்குக்கூட தழையப் போவதில்லை. ஒரு கணம்கூட பின்னடி வைக்கப்போவதும் இல்லை. அப்பேச்சை இங்கு என்னிடம் எவரும் எடுக்க வேண்டாம்.” சகுனி நிலத்தை நோக்கியபடி புன்னகைத்தார்.
கிருபர் உறுமினார். அவருடைய உளம் கட்டவிழ்வதை அஸ்வத்தாமன் உணர்ந்தான். அவன் எண்ணியதுபோலவே அவர் கூரிய நோக்குடன் தாடியைத் தடவியபடி சொன்னார் “இன்று களத்தில் தன்னந்தனியனாக சென்று நிற்கப்போகிறீர்கள், அதை எண்ணுக!” துரியோதனன் உடலில் ஓர் உலுக்கல் நிகழ்வதை அஸ்வத்தாமன் கண்டான். சினம் தலைக்கேற அவன் எழுந்தான். ஆனால் எடைமிக்க உடலுடன் அசைவிலாது அமர்ந்திருந்தான். கிருதவர்மன் கைநீட்டி ஏதோ சொல்ல முயல கிருபர் தன் சொல்லின் விசையை உணர்ந்து தணிந்தார்.
“ஆம், நானும் அஸ்வத்தாமனும் காந்தாரரும் மத்ரரும் கிருதவர்மனும் உடன் இருப்போம். ஆயினும் நீங்கள் நூறு கைகள் கொண்டிருந்தீர்கள், இன்று அவை இல்லை என்பதே உண்மை” என்றார். துரியோதனன் சிலமுறை தொண்டையைத் தீட்டி இடறிய குரலில் “ஆம், தனியன். முற்றிலும் தனியன்” என்றான். “தனியன்தான், ஆசிரியரே” என்றபடி கைகளை விரித்தான். “ஆனால் என் முதல் இளையோன் களம் பட்ட கணமே இவ்வாறு தனித்து நிற்பேன் என்பதை நான் உணர்ந்துவிட்டிருந்தேன்.அதை இன்றுதான் தெளிவுற அறிகிறேன்” என்று துரியோதனன் சொன்னான்.
“முதல் நாள் என் உடன்பிறந்தார் களம்பட்ட செய்தியுடன் பாடி வீட்டுக்கு மீண்டபோது நான் உணர்ந்தது இழப்புணர்வை அல்ல, துயரையும் அல்ல, தனிமையைத்தான். அத்தனிமை ஒவ்வொரு நாளும் குன்றாமல் கூடாமல் அவ்வண்ணமே இருந்து இன்று என்னுடன் உள்ளது. நன்று, இக்களம் வென்றபின் முடி சூடி அஸ்தினபுரியில் அரியணையில் அமர்ந்த மறுகணமே அதைத் துறந்து கானேகுகிறேன். கங்கைக் கரையில் சென்று நின்று என் கழுத்தை அறுத்து நீரொழுக்கில் விழுகிறேன். விண்ணில் எழுந்து என் உடன்பிறந்தாருடன் சேர்கிறேன். அங்கே ஒளியுலகில் அவர்களுடன் தோள்கோத்து மகிழ்கிறேன். ஒவ்வொருவராக களம்பட்ட என் இளையோருக்கு நான் ஆற்றும் கடன் இதுவே” என்றான் துரியோதனன்.
கிருபர் பெருமூச்சுடன் “நான் இதற்கப்பால் சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்றார். துரியோதனன் “ஆம், நாம் செல்வதற்கு பிறிதொரு பாதை இல்லை” என்றான். கிருதவர்மன் “நாம் போரிடுவோம், வெல்வோம்” என்றான். கிருபர் “நானும் அவ்வாறே எண்ணினேன்” என்றார். புண்பட்ட காலை சற்று அசைத்து வைத்து உடலை நிமிர்த்துக்கொண்ட சகுனி “பிறிதெதை நீங்கள் எதிர்பார்த்தீர்கள்? இச்சொல்லை இங்கே எடுப்பதற்கு முன்னரே உங்களுக்குத் தெரியும், இவை செவி கொள்ளப்படாதென்று. இறுதி வரை இதை சொன்னேன் எனும் நிறைவு உங்களுக்கு எழும் பொருட்டு அல்லவா இச்சொற்களை இங்கே கோத்துக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றார்.
“ஆம், அதன் பொருட்டே” என்று கிருபர் சொன்னார். “ஏனெனில் எந்த அவையிலும் நான் வாய் திறந்ததில்லை. உண்மையில் நான் வாய் திறந்திருக்கவேண்டிய அவை இது அல்ல. அஸ்தினபுரியின் நாற்களப் பேரவையில் நான் பேசியிருக்கவேண்டும். அன்று எழுந்து வாள் நீட்டி குலக்கொடிமேல் கைவைத்தவனை சங்கறுப்பேன் என்று சொல்லியிருந்தேன் எனில் நான் எந்தையரின் சொல்லுக்குத் தகுதியானவன். இல்லை என் சங்கில் வாள்வைத்து இழுத்திருப்பேன் என்றால் இப்பேரழிவை முற்றிலும் தவிர்த்திருப்பேன்.”
“அன்று உளம் குழம்பி பிதாமகரை நோக்கினேன். எனக்கிணையான ஆசிரியரான துரோணரை நோக்கினேன். அவையிலிருந்தவர்களை நோக்கினேன். என் அகம் திரும்பி நோக்க மறந்தேன். கற்ற நூல்கள் அனைத்தையும் நினைவுகூராதொழிந்தேன். அதன் பொருட்டே இக்களம் முழுக்க உளக்கொதிப்புடன் நின்று போரிட்டேன். நான் எண்ணி எண்ணி நோக்கிய ஒவ்வொருவராக உயிரிழந்து களத்தில் கிடப்பதை பார்த்தேன். இன்று இதோ தன்னையே தான் பழித்து தன்னை தானே அருவருத்து வெற்றுடல் வீணுயிர் என இங்கே அமர்ந்திருக்கிறேன்.”
கசப்புடன் உதட்டைச் சுழித்து கிருபர் தொடர்ந்தார். “இன்றேனும் இதை சொல்லவேண்டும். இதை சொல்லும்பொருட்டு இங்கு எஞ்சியிருக்கும் மூத்தவன் நான் ஒருவனே.” சகுனி இதழ் வளைய புன்னகைத்து “ஆம், முறைப்படி கூறிவிட்டீர்கள். நன்று” என்றார். கிருபர் “சொல்லவேண்டிய பிறிதொன்றும் உள்ளது. காந்தாரரே, அவர் மேல் படர்ந்த நஞ்சு நீங்கள். அவரை முற்றழிக்காமல் செல்லமாட்டீர்கள்” என்றார். சகுனியின் புன்னகை பெரிதாகியது. “மானுடர் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளிலேயே அத்தகைய ஒருவரை சந்திப்பார்கள். அவர்களின் ஊழை முற்றாக வகுக்கும் பிறிதொருவரை” என்றார்.
துரியோதனன் “ஆசிரியரே, உங்கள் உளச்சான்று தடுக்குமெனில் தாங்கள் இன்று போருக்கு எழவேண்டியதில்லை. உரிய முறைமைகளுடன் தங்களை இங்கிருந்து கானேக வைப்பதற்கு நான் ஒருக்கமே. போர் முடிந்த பின் தங்களை வந்து சந்தித்து தாள் பணிந்து வாழ்த்துகளை பெற்றுக்கொள்கிறேன்” என்றான். கிருபர் “களம் எழுந்தபின் பின்காலடி வைக்க மாட்டேன் என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள், அரசே. நான் என் உயிருக்கு எப்போதும் அஞ்சியதில்லை. இழிபெயருக்கும் அறத்துக்கும்கூட நான் அஞ்சவில்லை என்பதை இக்களம் வந்தபின் அறிந்தேன்…” என்றார்.
கசப்புடன் புன்னகைத்து கிருபர் சொன்னார் “நன்று. இக்களத்தில் தெய்வங்கள் நிறைந்திருக்கின்றன என்கிறார்கள். இங்கு இவ்விருளில் எங்கேனும் காலம் கடந்து செல்லும் தெய்வம் ஒன்று நின்றிருக்குமெனில் நாளை இக்களத்தை எழுதப்போகும் புலவனின் காதில் இச்சொற்களை அது சென்று சொல்லட்டும். நூல்களை சொல்லாடிக் கற்பவன் ஒன்றையும் பெற்றுக்கொள்வதில்லை. பகுத்தும் பிரித்தும் மாற்றுத்தரப்பு கண்டும் சீர்தூக்கியும் வகுத்துக்கொள்ளும் அறமென்று ஒன்று இன்று இப்புவியில் இல்லை.”
“வில்லிலிருந்து எழுந்த கணமே சென்று தைக்கும் இலக்கு போன்றது அறம். வினா எழுந்த மறுகணமே விடையென நின்றிருப்பதே அறம். உசாவி அறிவது அறமல்ல. உள்ளெழுந்து நின்றிருப்பது மட்டுமே அறம். உசாவுவதும் மாற்று நோக்குவதும் மறித்து எண்ணுவதும் வீண் ஆணவம் மட்டுமே. ஆகவேதான் நவில்தொறும் நூல் நயம் மட்டுமே காண்பர் அறிஞர் என்று சொல்லப்பட்டிருக்கிறது” என்றபின் கைகளைக் கூப்பி கண்களை மூடினார் கிருபர்.
துரியோதனன் தன்னை நோக்கி திரும்பியதும் அஸ்வத்தாமன் அவன் முகத்தை பார்த்தான். இனிய நகை ஒன்று அம்முகத்தில் நிறைந்திருப்பதுபோல் தோன்றியது. கண்கள் இளம்சிறுவனுக்கு உரியவைபோல் தெளிந்து மலர்ந்திருந்தன. புன்னகை எங்குள்ளது? இதழ்களில் இல்லை. கண்களில்கூட இல்லை. ஆனால் அம்முகத்தின் அனைத்து தசைகளிலும் புன்னகை இருக்கிறது. இருளில் நீர்ப்பரப்பு உள்ளொளி கொள்வதுபோல.
அப்புன்னகை அவனை அச்சுறுத்தியது. அங்கு காட்டில் சிதையில் தானும் பாய்ந்து துரியோதனன் உயிர்விட்டிருக்கக் கூடுமோ? அங்கு நின்றிருந்த கந்தர்வன் ஒருவனை அவ்வுருவில் நாம் அழைத்துவந்துவிட்டோமா? அஸ்வத்தாமன் விழிதழைத்துக்கொண்டான். துரியோதனன் “சொல்லுங்கள் பாஞ்சாலரே, நாம் படையெழக்கூடுமா?” என்றான். ஆம் என அஸ்வத்தாமன் தலையசைத்தான்.
கிருதவர்மன் “அரசே, நான் எண்ணியதையே நீங்கள் சொன்னீர்கள். இப்போரை இனி ஒருகணமும் நாம் பின்னெடுக்க இயலாது” என்றான். துரியோதனன் “பின்னெடுக்க அனைத்து வழிகளும் திறந்து கிடந்தாலும்கூட, அத்தனை தெய்வங்களும் அங்கு நின்று என்னை அழைத்தாலும்கூட, மண் மறைந்த மூதாதையர் அனைவரும் வந்து நின்று என்னை அங்கு செல்ல அழுத்தினாலும்கூட அதை தெரிவு செய்யப்போவதில்லை” என்றான்.
கிருதவர்மன் உரக்க நகைத்து “ஆம், அதை இன்று உணர்கிறேன். அனலாடி வெந்து மீண்டபின்னர் என்னில் எஞ்சுவதென்ன என்று பார்த்தேன். அச்சமும் தயக்கங்களும் அழிந்துவிட்டிருக்கின்றன. அச்சத்தாலும் தயக்கத்தாலும் நாம் உருவாக்கிக்கொள்வதே அறம் எனும் சொல் என்பதை உணர்ந்திருக்கிறேன். எது வருமோ எனும் அச்சம். இருக்குமிடத்தில் இருந்துகொள்வோம் எனும் தயக்கம். அவை இரண்டையும் கடந்தவனுக்கு அறம் என்பது இல்லை. வீரம் உள்ளது, வீரத்தைவிட ஆற்றல் மிக்கதான வஞ்சம் உள்ளது, வஞ்சத்தைவிடவும் பேருருக்கொண்ட மாற்றில்லாத கசப்பு உள்ளது. அவை விளைக்கும் வெற்றி மட்டுமே அவனுக்குப் பொருட்டு” என்றான்.
“நேற்று களம் முழுக்க நின்றெரிந்த உடல்களை பார்த்தபோது என்னுள்ளிருந்து எழுந்து கூத்தாடிய ஒன்றை கண்டேன். இத்தனை பேருவகையை நான் இதற்கு முன் அறிந்ததில்லை. கொல்வதில் இருக்கிறது மானுடனின் நிறைவுகளில் முதன்மையானது. இவ்வுலகிலுள்ள அத்தனை உயிர்களும் அறியும் அதை.” கிருதவர்மன் கண்ணுக்குத் தெரியாத சரடால் கட்டி இழுக்கப்படுபவன்போல் எழுந்து துரியோதனனை நோக்கி சென்றான். நாகம்போல் கழுத்தை நீட்டி சொன்னான்.
“அரசே, இப்புவியில் இன்பமென அறியப்படுபவை எவை? இங்கு அமர்ந்து நெடுநேரம் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அன்னம் அன்னத்துடன் உறவாடுவதன் இன்பமல்லவா நீராடுவதில் உள்ளது? புழுதியாடுவதன் இன்பம். தோழரை தழுவுவதன் இன்பம். குழவியை நெஞ்சோடணைக்கும் இன்பம். மற்போரின் இன்பம். உண்ணும் இன்பம். காமத்தில் புணர்வதன் இன்பம். அவ்வின்பங்களில் தலையாயது பிறிதொரு உடலை கொன்று அழிப்பது… உண்பது என்பதே கொலைதான். இன்னொரு அன்னத்தை நம் அன்னம் தான் என்றாக்கிக்கொள்வது அது.”
“கொலையே இன்பங்களில் தலையாயது. அரசே, உண்பவனும் புணர்பவனும் நிறைகிறான். கொல்பவனுக்கு நிறைவென்பதே இல்லை. புவியில் அத்தனை மானுடரையும் கொன்ற பின்னரும் அவன் நிறைவற்றிருக்கக்கூடும். கொல்லக் கொல்ல வரும் பேரின்பத்தை அஞ்சியே அறத்தை உருவாக்கினர் மனிதர். ஒவ்வொரு குழவியின் சித்தத்திலும் அதை மொழியுடன் சேர்த்து செலுத்தி அதை கட்டி நிறுத்தினர். அத்தளையை வென்றவன் புவியில் தெய்வங்களுக்கு மட்டுமே அருளப்பட்டுள்ள பேரின்பத்தை தான் சென்றடைகிறான்.”
“தெய்வங்கள் திளைக்கும் பேரின்பம்” என அவன் கைநீட்டி கூவினான். விழிகள் பளபளத்தன. “அந்த தெய்வங்கள் மட்டுமே மெய்யான இன்பத்தை அறிந்து அதில் திளைக்கின்றன. கொல்பவன் முதற்கொலை வழியாக மானுட எல்லையைக் கடந்து தெய்வங்களை நோக்கி செல்கிறான். கொல்லுந்தோறும் தெய்வமாகிறான். ஆயிரம் கொலை செய்தவன் சிறிய தெய்வம். எல்லையிலா ஆயிரங்களை கொன்றவனோ இந்திரன். கொன்றுகொண்டே இருப்பவன் மூன்று முதற்தெய்வங்களுக்கு நிகரானவன்.”
அவன் குரல் மந்தணம் உரைப்பதுபோல் கீழிறங்கியது. “அங்கே கொலையாடி தெய்வமான ஒருவன் இருக்கிறான்… அவனுக்கு எதிராகவே நான் நின்றிருந்தேன். அவ்விசையாலேயே நானும் தெய்வமானேன். நான் அவனை களத்தில் எரிந்த அந்நெருப்பில் கண்டேன். மெய்யாகவே கண்டேன். விழிமயக்கு அல்ல. நேருக்கு நேர் என கண்டேன்.” சகுனி கிருதவர்மனின் ஆடையைப்பற்றி இழுத்து “அமர்க!” என்றார். அவன் ஆடை நழுவி விழுந்தது. அவன் விழிகள் தெறித்து நின்றிருக்க “நான் அவனை கண்டேன்” என்று முணுமுணுத்தான்.
“அந்தத் தழல்கள் அவன் நாக்குகள்… அவன் வாய்திறந்து அவ்வுடல்களை உண்டான். ஆம், சுவைத்து நா துழாவி உண்டான்… அவன் மானுடரைக் கொன்று எழுபவன். கொலையால் தெய்வமானவன்.” சகுனி “அமர்க!” என்றார். “கொல்வோம்! நாமும் கொல்வோம்! கொல்வதன் பொருட்டு போர்புரிவோம்!” என்றான் கிருதவர்மன். “நாம் தெய்வமாவோம்… தெய்வமானால் ஒழிய நம்மால் தெய்வங்களிடம் போரிட இயலாது.”
கிருபர் எழுந்து கிருதவர்மனின் தோளைத் தொட்டு “அமர்க!” என்றார். அவன் தரையில் அமர்ந்து மண்ணில் கையால் அறைந்து “கொல்வோம்… கொல்வோம்… கொல்வோம்” என ஊழ்கம்போல் சொல்லிக்கொண்டிருந்தான். துரியோதனன் திகைப்பு கொண்டிருப்பான் என அஸ்வத்தாமன் எதிர்பார்த்தான். ஆனால் அவன் முகம் அதே நகைப்புடன் இருந்தது. கிருதவர்மனிடம் “ஆம், நாம் கொல்வோம். நாம் வென்றெழுவோம். நாம் தெய்வங்களாக ஆவோம்” என்றான். கிருதவர்மன் வெடித்து நகைத்து நிலத்தை அறைந்து “கொல்வோம்! கொல்வோம்!” என்றான்.
துரியோதனன் திரும்பி அஸ்வத்தாமனிடம் “இன்றைய சூழ்கையை வகுத்தளியுங்கள், பாஞ்சாலரே” என்றான். “ஆணை” என்றான் அஸ்வத்தாமன். சகுனி “இதற்கு இயைந்த சூழ்கை என்ன?” என்றார். “நம் படைகள் மிகச் சுருங்கியிருக்கின்றன. இன்று அவர்களுக்குத் தேவை அவர்கள் ஒரு கூட்டம் அல்ல படை என்னும் நம்பிக்கை. அதற்குரிய சூழ்கையை வகுக்கவேண்டும்” என்ற அஸ்வத்தாமன் “நூல்களில் சர்வதோபத்ர வியூகம் என ஒன்று சொல்லப்பட்டுள்ளது. மிகப் பெரிய படைகளுக்குரியது. கட்டுக்கடங்காது விரிந்த படைகளை அவ்வாறு அமைப்பார்கள். அதை நம் படைகளுக்கு அளிக்கலாம்” என்றான்.
சகுனி புன்னகைத்தார். “அனைத்தாற்றல் சூழ்கை உண்மையில் வீரர்களை தங்கள் எண்ணிக்கை மிகுதி என எண்ணச்செய்யும் ஆற்றல்கொண்டது…” என்றான் அஸ்வத்தாமன். “இங்கே நமக்கு பெரும்படைத்தலைவர்கள் இருக்கிறார்கள். கிருபரும் தாங்களும் மத்ரரும் இருக்கிறீர்கள். நானும் மாதுலரும் உடனிருப்போம்” என்றான் துரியோதனன். அஸ்வத்தாமன் “அனைத்து வகையிலும் இன்று நம் தலைவர் ஆசிரியரே. படைசூழ்கை அறிந்தவர். தந்தைக்கு நிகரான விற்தொழில் கொண்டவர். தன் வில்லுடன் அவர் களம் நின்றாரெனில் நமது படைகள் மீண்டும் வெற்றியை உறுதி செய்யும். பீஷ்மரும் துரோணரும் கர்ணனும் நின்ற இடம் நிரப்பப்படும்” என்றான்.
“வில்லுடன் அவருக்கு வலங்கையென நான் இருப்பேன். இடங்கையென யாதவர் அமையட்டும்” என்றான் துரியோதனன். கிருபர் “என் வில்லுடன் முன் நின்று இப்போரை நான் முழுமை செய்கிறேன்” என்றார். சகுனி “பொறுத்திருப்போம். மத்ரர் வந்துகொண்டிருக்கிறார்” என்றார். “அவரைத் தேடி ஒற்றர்களை அனுப்பியிருக்கிறேன். கண்டடைந்திருப்பார்கள் இந்நேரம்.”