தீயின் எடை - 26
சகுனி முதலில் இளைய யாதவர் தேர்முகத்தில் அமர்ந்திருப்பதைத்தான் பார்த்தார். தேரில் வில்லுடன் நின்றிருந்த நகுலன் அர்ஜுனன் என்று தோன்றினான். ஒருகணம் எழுந்த உளக்கொப்பளிப்பை அவரே வியந்தார். ஆம் ஆம் ஆம் என்னும் ஓசையாக தன் அகத்தை உணர்ந்தார். ‘சூழ்க!’ என்று கைகாட்டிவிட்டு நாணொலி எழுப்பியபடி அவர் அத்தேரை நோக்கி சென்றார். மைந்தர்கள் அவரைச் சூழ்ந்து தேர்களில் சென்றனர். செல்லும் வழியெங்கும் தேர்கள் உலைந்தாட அவர்கள் கூட்டுநடனமிடுவதுபோல் தோன்றியது.
அதுவரை அவருடைய உள்ளம் களத்தில் திசையறியாததுபோல் தொட்டுத்தொட்டு தாவிக்கொண்டிருந்தது. இலக்கு முன்னால் வந்ததும் அனைத்துப் புலன்களும் தொகுக்கப்பட்டு கூர்கொண்டன. அதன் பின்னரே அவர் வெவ்வேறு கொம்பொலிகளையும் சங்கொலிகளையும் கேட்டார். எங்கோ கிருபரும் கிருதவர்மனும் வீழ்ந்துவிட்டனர். அஸ்வத்தாமன் களமொழிந்தான். சல்யர் களம்பட்ட செய்தியை அவர் முன்னரே கேட்டுவிட்டிருந்தாலும் அதன் பின்னரே அது உள்ளத்தை அடைந்தது. அனைவரும் சென்றுவிட்டிருக்கிறார்கள். துரியோதனனுக்கு அவர் மட்டுமே எஞ்சியிருக்கிறார்.
“எஞ்சியவர் நாம்!” என்று அவர் மைந்தர்களை நோக்கி கைகளால் சொல் காட்டினார். “நாம் பொருதப்போவது இறுதிக்கணத்துடன். இங்கே புகழ் ஒன்றையே நாம் வெல்ல முடியும்.” அவர் மைந்தர்கள் அக்கையசைவை ஓரவிழிகளால் நோக்கி சொற்களைப் பெற்றபடி பின்தொடர்ந்து வந்தனர். சகுனியின் கைகள் கூவின. “பிதாமகரை வீழ்த்திய வில். ஆசிரியரை வென்ற வில். அந்த வில் இருப்பது அர்ஜுனனின் கையில் அல்ல. அதை ஏந்தியவனுடனேயே இதுவரை ஆடிவந்தேன். அவன்முன் வீழ்வதும் பெருமையே.” அச்சொற்களைக் கூறிய கணமே அவர் தேர்த்தட்டில் அமர்ந்திருந்த இளைய யாதவரின் விழிகளை கண்டார். அதிலிருந்த அறியாத ஒன்றால் துணுக்குற்று விழிதூக்கியபோது தேரில் நின்றிருந்த நகுலனை கண்டார். திகைப்புடன் வில்தாழ்த்தினார்.
“அவன் அர்ஜுனன் அல்ல!” என்று சகுனி சொன்னார். “அர்ஜுனன் வீழ்ந்துவிடவில்லை… ஆயினும் என்னை வெல்ல அவன் களமெழவில்லை. இது இளைய யாதவரின் சூழ்ச்சி…” அவர் உள்ளம் கொதிப்பு கொண்டது. “என்னை சிறுமைசெய்கிறார்கள்… இக்களத்தில் இச்சிறுவன் கையால் நான் மாளப்போவதில்லை. இவர்களை வெல்வோம். அவன் காண்டீபத்துடன் எழுந்து வரட்டும். அவனுடன் பொருதுகிறேன்.” அவர் அச்சொற்கள் முடிவதற்குள்ளாகவே நகுலனின் அம்புவளையத்திற்குள் சென்றார். புண்பட்ட காலை முன்னால் நீக்கி வைத்து தேர்த்தூணில் சற்றே சாய்ந்தபடி வில் துடிக்க அம்புகள் பீறிட்டெழ அவர் நகுலனிடம் போரிட்டார். ஒவ்வொரு அம்பிலும் சீற்றம்கொண்ட ஒரு சொல் இருந்தது.
இளையவன். கரியவன் என்பதனால் நான் இவனை அர்ஜுனன் என எண்ணினேன். அவ்வண்ணம் எண்ணியதுமே இவனில் அர்ஜுனன் எழுந்தமையால் இவனை நோக்காமலானேன். இக்களத்தில் நான் தேடியது அவனை மட்டுமே. ஆகவே இக்களமே அவன் என ஆகியது. இவனும் அர்ஜுனனே. ஆம், இவன் தேரை அவன் தெளிக்கிறான். அவ்விழிகள். அவை சொன்னது என்ன? அருள்பவை போலவும் எள்ளுபவை போலவும் திகழும் அப்புன்னகை. ஆடிமுடித்துவிட்டிருக்கிறான். அடைந்துவிட்டானா? இதையா அவன் எண்ணியிருந்தான். எனில் இங்குளோரில் கொடியவன் வேறெவன்? இவன் நகுலன். இவன் அர்ஜுனன் அல்ல. இவன் நகுலனேதான். இவனிடம் வீழ்வேன் எனில் நான் சிறுக்கிறேன். என்னை நான் வைத்திருக்குமிடத்தில் இருந்து சரிகிறேன். அதுவே மெய்யான வீழ்ச்சி.
ஆனால் அவர் அவனை நகுலன் நகுலன் நகுலன் என சொல்லிக்கொண்ட பின்னரும் அவன் அவருக்குள் அர்ஜுனனாகவே எஞ்சினான். அவன் செலுத்திய அம்புகள் அர்ஜுனனின் அம்புகளின் விசைகொண்டிருந்தன. இல்லை, இவன் அர்ஜுனன் அல்ல. அர்ஜுனனின் நடனம் இவனிடம் இல்லை. முக்கண்ணனை வென்று அவன் பெற்ற பாசுபதம் அவனுடைய அம்புகள் ஒவ்வொன்றிலும் திகழ்ந்தது. இவன் வெறும் வீரன். பெருவெள்ளத்தால் எடுத்துவரப்படும் அடிமரம். இவன் பெரும்படகுகளை உடைக்கக்கூடும். ஆயினும் இவனல்ல அவன். இவனை அர்ஜுனன் என எண்ணுவதனூடாக இவன் அம்புகளுக்கு நான் ஏற்றிக்கொள்வதே இந்த விசை. இவ்வெண்ணம் என்னுள் திகழ்வதுவரை நான் இவனை வெல்ல இயலாது. இவனை நகுலனாக ஆக்குவேன். இவன் கையில் வில்லில் இருந்து காண்டீபத்தை அகற்றுவேன்.
ஆனால் இவன் தேரிலிருந்து யாதவனை என்னால் அகற்ற இயலாது. அவன் ஓட்டும் தேரில் எவர் நின்றிருந்தாலும் அவன் அர்ஜுனனே. அவன் ஏந்திய வில் காண்டீபமே. நீல விழிகள். மகளிருக்குரிய செவ்வுதடுகள். பீலி நலுங்குகிறது. மஞ்சள் ஆடை ஒளிகொண்டிருக்கிறது. ஊழ்கத்திலென தளர்ந்திருக்கிறது உடல். ஒருகணத்தில் அவர் மெய்ப்புகொள்ள அம்பு தயங்கியது. ஆம் என அது சீறி எழுந்தது. அவன் உடலில் ஒரு துளியும் கரிச்சேறு பட்டிருக்கவில்லை. இக்களத்தில் அவன் மட்டுமே நீராடி எழுந்தவன் போலிருக்கிறான்.
நகுலனுக்குத் துணையாக வந்த சுருதகீர்த்தியையும் சுருதசேனனையும் உலூகனும் விருகனும் தம்பியரும் செறுத்தனர். நகுலனின் அம்புகளை தன் அம்புகளால் அறைந்து தடுத்து அம்புத்திரையைக் கிழித்து மேலும் மேலும் என முன்னேறிச்சென்று அவனை தாக்கினார் சகுனி. நகுலன் மிகவும் களைத்திருந்தான். அவன் உடலெங்கும் புண்கள் இருந்தன. கைகளைத் தூக்கி அம்புகளை எடுக்கையில் அவன் முகம் வலியை காட்டியது. அவன் கால் ஒன்று துடித்துக்கொண்டிருப்பதை சகுனி கண்டார். ஒரு விழி வீங்கி அரைப்பங்கு மூடியிருந்தது. சல்யருடனான போரில் அவன் கடுமையாக புண்பட்டிருக்கலாம். அவனில் எழுந்தவை வழிந்து அகலட்டும். மானுடன் உடலால் ஆனவனே. உடலைக் கடக்க எவராலும் இயலாது. சகுனி அம்புகளால் அவனை அறைந்தபடியே உந்திச் செல்ல நகுலன் மெல்ல பின்னடையலானான்.
அக்கணத்தில் சகதேவன் அம்புகளைத் தொடுத்தபடி வெறியுடன் முன்னெழுந்து வந்து சகுனியை தாக்கினான். சகுனி திரும்பி அவனை எதிர்கொள்ள அந்த இடைவெளியில் தேரை பின்னடையச் செய்து அவரிடமிருந்து நகுலனை காத்தார் இளைய யாதவர். நகுலன் தேர்த்தட்டில் வில்லை ஊன்றி தளர்ந்து நின்று மூச்சிளைத்தான். சகதேவன் சகுனியின் முழுச் சித்தத்தையும் தன்பால் ஈர்த்து அம்புகளால் அறைந்தபடியே நிலைகொண்டான். அவனுக்குப் பின்னால் இணைசேர்ந்த சுருதகீர்த்தியும் சுருதசேனனும் மைந்தரை தாக்கினார்கள். அப்பாலிருந்து சங்கொலிகள் எழுந்தன. சிகண்டியும் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் வெற்றியோசை எழுப்பியபடி அணுகிவந்தனர். அவர்கள் வந்து சூழ்ந்துகொள்வதற்குள் இப்போர் முடிந்தாகவேண்டும். தேர்த்தட்டில் இருவரில் ஒருவர் வீழ்ந்தால் அர்ஜுனன் காண்டீபத்துடன் எழுவான்.
சகதேவனின் குண்டலங்களை அறுத்தெறிந்தார் சகுனி. தோள்கவசங்களை உடைத்தார். அவன் நெஞ்சிலறைந்த அம்பால் நிலைகுலைந்து பின்னால் சரிந்தான். வில் சரிய தேர்த்தூணை பற்றிக்கொண்டான். இருமி குருதியுமிழ்ந்தான். அவனை வீழ்த்த பேரம்பை சகுனி எடுத்த கணம் நகுலன் நாணொலி எழுப்பியபடி விரைந்து வந்து சகுனியை அம்புகளால் அறைந்தான். அக்கணமே சகதேவன் தேரை பின்னிழுத்து தன்னை அகற்றிக்கொண்டான். தானே அள்ளி அள்ளி அம்புத்தூளியை நிறைத்தான். அவன் பாகன் நெஞ்சில் பட்ட அம்பால் நுகத்திலேயே அறைபட்டிருந்தான். அவனை காலால் உதைத்து வீழ்த்தி கடிவாளத்தை தன் கால்களால் பற்றிக்கொண்டான். மைந்தரிடம் “சூழ்க! இவரை இன்றே வீழ்த்தியாகவேண்டும்!” என்றான்.
சுருதகீர்த்தி மிகவும் களைத்திருந்தான். அவன் உடலில் குருதி வழிந்துகொண்டிருந்தது. சுருதசேனன் துயிலில் மூழ்கியவன் என அம்புகளை தொடுத்தான். அவர்களை எதிர்த்த உலூகனும் விருகனும் அவர்களின் இளையோரும் விசைகொண்டபடியே சென்றனர். அவர்கள் தங்கள் தருணம் அது என அறிந்திருந்தனர். சுருதசேனன் விருகனின் அம்பு பட்டு தேர்த்தட்டில் விழுந்தான். சுருதகீர்த்தி அவன் உதவிக்கு வர உலூகன் அவனை அம்புகளால் அறைந்து அறைந்து பின்செலுத்தினான். உடைந்த கவசத்தை நெஞ்சோடு பற்றிக்கொண்டு சுருதகீர்த்தி பின்னகர்ந்தான். “கொல்லுங்கள்!” என்று சகுனி திரும்பி நோக்காமலேயே கூவினார். ஆனால் உலூகன் கைகாட்ட மைந்தர்நிரை வளைந்து பின்னடைந்து சகுனிக்கு புறக்காப்பு என ஆகி தொடர்ந்தது.
நகுலனை அம்புகளால் அறைந்து வீழ்த்த இன்னும் சிறுபொழுதுதான். இன்னொரு அம்பு. மேலும் ஓர் அம்பு. மேலும் ஒரு பெரிய அம்பு… அவனை வீழ்த்தும் அம்பு அவர் கையை அடையாமல் விளையாடியது. அவரை நோக்கி அவன் செலுத்திய அம்புகளை அவர் உடைத்து வீசினார். அம்புவேலியைக் கடந்து அவன் தொடைச்செறியை தாக்கி உடைத்தார். தோளிலையை சிதறடித்தார். குளவித்திரள் என அவன் கழுத்தில் கவசத்தின் இடைவெளியை தேடித்தேடிச் சென்று கொட்டிக் கொட்டி உதிர்ந்தன அவருடைய அம்புகள். இவன் தேரிலிருந்து விழுந்தால் போதும். இன்னும் ஒரு கணம். அவர் இளைய யாதவரின் விழிகளை நோக்கினார். அவை ஏதோ சொல்லின. ஒரு சொல். அறியாத சொல். அது என்ன?
அலறியபடி விருகன் தேரிலிருந்து கீழே விழுந்தான். சகுனி திகைத்து திரும்பி நோக்கினார். சகதேவன் எய்த பிறையம்பு அவன் கழுத்தை வெட்டிவிட்டிருந்தது. கரிய நிலத்தில் விழுந்து தலையற்ற உடல் துடித்தது. அவருடைய கால் வெட்டி இழுத்தது. நெஞ்சிலும் கன்னத்திலும் தசைகள் அதிர்ந்தன. அம்புகளை ஏவியபடி அவர் சகதேவனை நோக்கி சென்றார். அது அவர் செய்த பிழை என திரும்பிய கணமே உணர்ந்தார். அந்த இடைவெளியில் உரக்க ஓசையிட்டபடி அம்புகளுடன் அவரிடமிருந்து திரும்பிய நகுலன் விருபாக்ஷனின் நெஞ்சில் நீளம்பை இறக்கி அவனை தேரில் குழைந்து விழச்செய்தான். சகுனி திகைத்து நகுலனை நோக்கி திரும்பிய கணத்தில் சகதேவன் உலூகனின் தலையை கொய்தான்.
ஒருகணம் மின் என அது நிகழ்ந்து முடிந்தது. முன்னும் பின்னும் நீண்ட வாழ்க்கை. ஆனால் அது எப்போதுமே ஒரு கணம்தான். ஒரு கணம் என்பது அத்தனை பொருட்டு என காட்டுவது இறப்பைப்போல் பிறிதில்லை. உலூகனின் உடல் தேர்த்தட்டில் நின்று தள்ளாடி பக்கவாட்டில் சரிந்து விழுந்து தலைகீழாக தொங்கியது. அவன் கால்கள் தேர்த்தட்டில் சிக்கியிருக்க தேர் நிலையழிந்து ஓடியது. அறுந்த அவன் கழுத்திலிருந்து கவிழ்ந்த குடத்தில் இருந்து என குருதி கொட்டியது. சகதேவன் அவன் தேர்ப்பாகனின் தலையை அறுத்தான். தேர் தள்ளாடிச் சரிந்து சென்று மறுபக்கமாகக் கவிழ உலூகனின் உடல் மேலெழுந்து அவன் தலையின் வெட்டுவாய் அருகிலெனத் தெரிந்தது. அவன் கைகள் அப்போதும் காற்றை பிசைந்துகொண்டிருந்தன.
சகுனி வெறிகொண்டு கூச்சலிட்டபடி சகதேவனை அம்புகளால் அறைந்தபடி அணுகிச்சென்றார். சகதேவன் தோளிலும் நெஞ்சிலும் தைத்த அம்புகளுடன் பின்னால் செல்ல கொலைச்சீற்றத்துடன் அவர் துரத்திச்சென்றார். அப்பிழையால் அவர் மைந்தர்களை நகுலன் முன் நிறுத்தினார். ரக்தாக்ஷன் நகுலனின் அம்புகள் பட்டு துள்ளித்துள்ளி அலறிச் சரிந்தான். அவன் அலறலைக் கேட்டு திரும்பிய சகுனி ஸ்ரீகரனின் பாகன் கழுத்தறுந்து விழ அவன் தேரிலிருந்து பிணங்கள் மேல் குதித்து ஓடுவதைக் கண்டார். அது பிழை. அவன் தன்னை உலைந்தாடும் தேரிலிருந்து விசையழியச்செய்யும் தரைமேல் கொண்டுசெல்கிறான். அவர் தன்னுள் கூவிக்கொண்டிருக்க அவன் ஓடிச்சென்று தேருக்கடியில் பதுங்குவதற்குள் பின்னிருந்தே அவன் தலையை அறுத்து இட்டான் நகுலன்.
சகுனி நகுலனை அம்பால் அறைந்தார். சகதேவன் மறுபுறம் அவரைத் தாக்க திரும்பி சகதேவனை அம்புகளால் தாக்கினார். அவனை வெறிகொண்டு அம்பால் அறைந்தபடியே விரட்டிச்சென்றார். அவன் தேரிலிருந்து பின்னால் குதித்து மறைந்துகொண்டான். கூச்சலிட்டபடி சகதேவனின் தேர்ப்பாகனை சகுனி கொன்றார். அவன் தேர்ப்புரவிகள் அனைத்தையும் கழுத்தரிந்தார். என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே மேலும் மேலும் அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்தார். சகதேவன் தேருக்கு அடியில் முழுமையாகவே ஒளிந்துகொள்ள அம்புகளால் எப்பயனும் இல்லை என உணர்ந்தாலும் அவரால் அம்புகளை நிறுத்த இயலவில்லை.
அவருக்கு வலப்பக்கம் எழுந்த நகுலன் அவரை அம்புகளால் தாக்க அவனை நோக்கி திரும்பினார். புஷ்கரனும் புஷ்பனும் விந்தனும் உத்பவனும் தங்களை தொகுத்துக்கொண்டு அவருக்கு இருபுறமும் துணைவகுத்தனர். நகுலன் அக்கணம் போருக்குள் நுழைந்தவன்போல் தோன்றினான். அவனுடைய வில் மேலும் மேலும் விசைகொண்டது. அவனை அம்புகளால் தாக்கியபோது சகுனி தன் ஆற்றல் பெருகுவதை உணர்ந்தார். கை தொட்ட இடத்தில் விழைந்த அம்பு இருந்தது. வில் அவர் கைபட்டதுமே துள்ளி இறுகி அம்பை பெற்றுக்கொண்டது. எழுந்த அம்பு நோக்கிய இடத்தை சென்றடைந்தது. நகுலன் அவரை அம்புகளால் செறுத்தபடி பின்னடைய அவர் அவனை மேலும் மேலும் அழுத்தி பின்னடையச் செய்தார்.
அவருடைய அம்புகளின் எல்லைக்கு அப்பால் அவன் சென்றதும் அவர் சகதேவனை நோக்கி திரும்பினார். அக்கணத்தில் நாணொலியுடன் முன்னெழுந்த நகுலன் விசையுடன் பாய்ந்து அருகணைந்து புஷ்கரனை கொன்றான். அந்த கணத்தின் திகைப்புபோல அகலத் திறந்த வழி பிறிதில்லை. உடன்பிறந்தான் விழக்கண்ட புஷ்பன் எண்ணம் மீள்வதற்குள் தேரிலில் இருந்து அம்புகளால் அறைந்து வீழ்த்தப்பட்டான். அவன் உடல்மேல் மொய்த்துப் புரட்டின அம்புகள். அவன் சேற்றில் துடித்துத் துடித்து அமிழ்வதை சகுனி அரைக்கண்ணால் நோக்கினார். ஓர் அலை என அப்புரிதல் வந்து அவரை அறைந்து விக்கித்து நிற்கச்செய்தது. நாற்களமாடலில் மிகமிகத் தொடக்கத்தில் கற்றுக்கொள்ளும் வழிமுறை அது. ஒன்றில் எதிரியை குவியவைத்து உள்ளிழுத்து அவன் பின்னணித் துணைவரை வீழ்த்துவது.
தன்னை மீட்டுக்கொண்டு “தொடர்க!” என கைகாட்டியபடி அவர் நகுலனை நோக்கி சென்றார். விந்தனும் உத்பவனும் அவரை தொடர்ந்தனர். சகதேவன் எழுந்து வந்து தன்னை தாக்குவான் என்று அவர் எதிர்பார்த்தார். நகுலனை எந்நிலையிலும் விடுவதில்லை. மைந்தரே விழுந்தாலும் சரி. அவன் வீழ்ந்தாகவேண்டும். குரங்குக்கொடி பறக்கும் தேரில் அர்ஜுனன் எழுந்தாகவேண்டும். அம்புகளால் அவர் நகுலனை அறைந்து அறைந்து பின்னடையச் செய்தார். அவன் பின்னடைவதற்கு ஓர் எல்லை உண்டு. அங்கே தேர் நின்றாகவேண்டும். இளைய யாதவரே தேர் செலுத்தினாலும் சரி. அவருடைய அம்புகளின் விசை எழுந்துகொண்டே இருந்தது.
அலறியபடி விந்தன் தேரிலிருந்து தெறிப்பதை அவர் கண்டார். சகதேவன் தேரிலேறிக்கொண்டு பக்கவாட்டில் வந்து தாக்கினான். அவனுடைய அம்புகள் தன்னை அணுகாமல் முன்னெழுந்து நகுலனையே தொடர்ந்து தாக்கினார். சாத்யகியும் சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் அணுகிவிட்டிருந்தனர். அவர்களின் தேர்களின் கொடிகளை அவர் கண்டார். அவர்களின் வழிகளில் குவிந்திருந்த உடல்களை ஏறிக்கடந்தும் ஒழிந்தும் அவர்கள் அணுகுவதற்கு இன்னமும் சற்றே பொழுது. இன்னும் சற்று… இன்னும் சில அம்புகள். நகுலனின் கைகள் தளர்ந்தன. அவன் விழிகள் மங்குவதை அவரால் உணரமுடிந்தது. அவருடைய அம்புகள் அவன் கவசங்களின் இடுக்குகள் அனைத்திலும் தைத்திருந்தன. கவசங்கள் உடைந்து தோளிலும் விலாவிலும் புதைந்திருந்தன.
உத்பவனின் அலறலைக் கேட்டகணம் அவர் உள்ளம் உறைந்தது. எடுத்த அம்பு கையில் நிலைக்க அவர் சற்றுநேரம் உடலற்றவராக, வெற்றுச் சித்தமாகவே இருப்பு கொண்டவராக, உணர்ந்தார். பின்னர் மீண்டபோது உள்ளம் ஆழ்ந்த அமைதியை அடைந்திருந்தது. சுகிர்தை தன் தலைமேல் கைவைத்தபோது அடைந்த அதே நிலை. அவர் விழிதிருப்பி சூழ நோக்கினார். விழிதொடும் எல்லைவரை களத்தில் ஒற்றை படைவீரன் கூட எழுந்து நின்றிருக்கவில்லை. ஒருவர் கூடவா? முற்றாகவா? கௌரவர் தரப்பிலும் பாண்டவர் தரப்பிலும் வீரர் என எவரும் எஞ்சவில்லையா? நுரை முற்றடங்கியதுபோல் அங்கு நிறைந்திருந்த படை மண்ணோடு படிந்து அசைவற்றிருந்தது.
அவர் இளைய யாதவரின் விழிகளை நோக்கினார். அங்கிருந்த புன்னகையைக் கண்டதும் அவரை கீழிருந்து எழுந்து வயிற்றைத் தாக்கும் கடுங்குளிர் என அச்சம் ஆட்கொண்டது. உயிரச்சம் அல்ல அது. இன்மையின் அச்சமும் அல்ல. வெறும் அச்சம் மட்டுமேயான ஒன்று. ஆகவே கடுவெளியென முடிவிலாது எழுந்தது.
சாத்யகியும் சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் அவர்களைச் சூழ்ந்து அணுகிவிட்டனர். சகுனி வில்லை தழைத்தார். “யாதவரே, இக்களத்தில் முற்றிலும் தனித்து நின்றுள்ளேன். நான் விழைவதென்ன என்று நீங்கள் அறிவீர்கள்” என்றார். இளைய யாதவர் அவர் விழிகளை நோக்கி “அது நிகழப்போவதில்லை, காந்தாரரே” என்றார். “ஆம், இனி அதை நான் எண்ணமுடியாது” என்றார் சகுனி. அப்பால் வந்துகொண்டிருந்த திருஷ்டத்யும்னனையும் சாத்யகியையும் நோக்கியபடி “அதைக் கருதியே நீங்கள் தேர்தெளித்தீர்கள் என நான் உணர்கிறேன். இதை முடித்துவிடுங்கள்… இந்தப் பொழுது கணம் நீளுவதும் எனக்குப் பெருந்துயரே” என்றார். நகுலன் வில்லில் அம்பு பொருத்தி செவி வரை இழுத்தான்.
“யாதவரே, என்றும் நான் உணர்ந்தது, இக்கணத்தில் தெளிவுறுவது, நீங்கள் எவர் என்றே” என்றார் சகுனி. உதடுகள் கோணலாகி இழுபட்ட புன்னகையுடன் “நீங்கள் ஓட்டும் தேரில் அமர்ந்திருப்பவன் ஏந்துவதே காண்டீபம்” என்றார். இரு கைகளையும் விரித்து “நிகழ்க!” என்றார். இளைய யாதவர் புன்னகை மேலும் விரிய “காந்தாரரே, சூதுக்களத்தில் நீங்கள் இடக்கையின் இரு விரலுக்குப் பின்னிருந்து எடுத்த கள்ளப்பகடையை நினைவுறுகிறீர்களா?” என்றார். சகுனி திகைத்து நோக்க “அந்தப் பகடையே அந்த வேல்” என்றார். அக்கணம் சகதேவன் எறிந்த நீள்வேல் சகுனியின் நெஞ்சக்கவசத்தை உடைத்து ஆழப்புகுந்து முதுகைக் கடந்து நீண்டது. இரு கைகளும் விரிந்திருக்க அவர் மல்லாந்து தேர்த்தட்டில் விழுந்தார். உடல் ஒரே ஒருமுறைதான் இழுத்துக்கொண்டது.
அணுகிவந்த சாத்யகி “இனி எவரும் எஞ்சவில்லை, யாதவரே” என்றான். “எங்கே துரியோதனன்?” என்று இளைய யாதவர் கேட்டார். “அவரும் பீமசேனனும் போரிட்டபடியே களத்தின் எல்லையைக் கடந்து காட்டுக்குள் சென்றுவிட்டார்கள்… இப்போது நம்மைத் தவிர இக்களத்தில் உயிருடன் எவருமில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். சகதேவன் தளர்ந்து நிலத்தில் கால்நீட்டி அமர்ந்தான். நகுலன் தேரிலிருந்து பாய்ந்து சகுனியின் தேரிலேறிக்கொண்டு தேர்த்தட்டில் விழுந்து கிடந்த அவரை குனிந்து நோக்கினான். சகுனியின் முகம் திகைப்பு கொண்டிருந்தது.