தீயின் எடை - 20
யுதிஷ்டிரன் அந்தப் போரை தனக்கும் தன் வில்லுக்கும் இடையேயான முரண்பாடாகவே உணர்ந்தார். தயை மிக மெல்லியதாக இருந்தாலும் உறுதியானதாக இருந்தது. அதன் நாண் இறுகக்கட்டிய யாழின் தந்திபோல் விரலுக்கு வாள்முனையென்றே தன்னை காட்டியது. அதில் ஏற்றப்பட்டதும் அம்புகள் அதிலிருந்தே ஆணையை பெற்றுக்கொண்டன. அதில் உறைந்த விசையை தங்களுக்குள் நிறைத்துக்கொண்டன. இலக்கை மட்டுமே அவர் தெரிவுசெய்ய வேண்டியிருந்தது. அம்புகள் ஒற்றைச்சொல்லை உரைத்தபடி வானிலெழுந்தன.
அது போர்க்களத்திற்கு பயனற்றது என அவர் உணர்ந்திருந்தார். அஸ்தினபுரிக்கு அவர் அந்த வில்லுடன் வந்தபோது அதன் கதையை அறிந்து அதை நோக்க படைவீரர்களும் குடிகளும் கோட்டைமுகப்புக்கே திரளாக வந்தனர். அவர் தேரில் இருந்து அவ்வில்லுடன் இறங்கியதும் அஸ்தினபுரியின் குடிகள் “அறச்செல்வர் வாழ்க! அஸ்தினபுரியைக் காக்கும் நிகரில்லா வில் வெல்க!” என வாழ்த்தொலி எழுப்பினர். அந்நகரை தேவர்களும் வெல்லமுடியாததாக ஆக்கும் அந்த வில்லைப்பற்றி அதற்குள் சூதர்கள் கவிதைகள் பாடிவிட்டிருந்தனர். அவர் அந்த வில்லுடன் திறந்த தேரில் நின்றவராக நகர்வலம் வந்தார்.
துரியோதனனின் அரசவையில் துரோணர் அந்த வில்லை முதலில் கையில் வாங்கினார். அவர் முகத்தில் ஒரு மெல்லிய கோணல்புன்னகை இருந்ததோ என யுதிஷ்டிரன் எண்ணினான். “எங்கே அந்த வில்? வில்லுக்கு தயை என்று பெயரா? அறிந்ததே இல்லை” என கைநீட்டினார். அதை அவர் கையில் அளிக்க யுதிஷ்டிரன் தயங்கினான். “கைபட்டு வில் கரைவதில்லை… அதற்கென்று கற்பும் இல்லை” என்று சொன்ன துரோணர் அதை வாங்கி திருப்பித்திருப்பி நோக்கி “எளிமையான மூங்கில் வில். அக்காலத்தில் இத்தகைய விற்களை சற்று முயன்று தேடி உரிய மூங்கில்களை கண்டடைந்து அமைத்தார்கள். நாமறியாத பதப்படுத்தும் முறைமையும் அன்று இருந்துள்ளது” என்றார்.
அதன் நாணை இருமுறை சுண்டி ஒலியெழுப்பி “ஆனால் இது இன்றைய அம்புகளை செலுத்துமா என்று ஐயுறுகிறேன்” என்றார். “இன்று நாம் உலோகம் மிகுதியாக உள்ள அம்புகளை பயன்படுத்துகிறோம். அவற்றின் நீளமும் மிகுதி. இது கையளவே உள்ள மூங்கில் அம்புகளை மட்டுமே செலுத்துமென எண்ணுகிறேன்.” சகுனி அதை வாங்கிப் பார்த்துவிட்டு “சில குறிப்பிட்ட பணிகளுக்கு இது பயன்படக்கூடும்” என்றார். ஒவ்வொருவராக அதை வாங்கிப் பார்த்தனர். கிருபர் “பூசைப்பொருள்போல் தோன்றுகிறது, படைக்கலமா என ஐயம் எழுகிறது” என்றார். பீஷ்மர் மட்டும் அதை கையால் தொடத் தயங்கி வெறுமனே விழிகளால் நோக்கினார்.
திருதராஷ்டிரர் “மைந்தா, அதைக்கொண்டு அம்பு தொடுத்துக் காட்டு” என்றார். யுதிஷ்டிரன் அதை அங்கு வருவதற்குள் நன்கு பழகியிருந்தான். மத்ரநாட்டின் குறுங்காட்டில் அவன் மர உச்சியிலிருந்த இலைகளைக்கூட அம்புகளால் அடித்து வீழ்த்தியிருந்தான். ஆகவே தன்னம்பிக்கையுடன் அதை எடுத்துக் குலைத்து அம்பு தொடுத்தான். “அந்தத் திரைமுடிச்சை இலக்காக்குக!” என்றார் திருதராஷ்டிரர். யுதிஷ்டிரன் அம்புதொடுக்க அது பக்கவாட்டில் துள்ளி அகன்றது. அவையில் ஒரு மெல்லிய ஓசை மட்டும் எழுந்தது. “தாழ்வில்லை, மறுமுறை முயல்க!” என்றார் திருதராஷ்டிரர். ஏழுமுறை யுதிஷ்டிரன் அம்புகளை தொடுத்தான். எவையுமே இலக்கடையவில்லை. திருதராஷ்டிரர் “இன்று பயணக்களைப்பில் இருக்கிறாய் போலும்” என்றார்.
ஆனால் அவை நகைக்கத் தொடங்கியிருந்தது. துரோணர் தாடியை கைகளால் நீவியபடி உரக்கவே சிரித்துக்கொண்டிருந்தார். பீஷ்மர் மட்டும் சினம் கொண்டவர்போல விழிகள் உறுத்து நோக்கிக்கொண்டிருந்தார். அர்ஜுனன் சீற்றத்துடன் அவையை நோக்கி “அது அவைகளுக்குரிய களிப்பாவை அல்ல. அதன் ஆற்றல் என்ன என்று நான் அறிவேன்” என்றான். துரோணர் “ஆம், அது தவச்சாலைகளுக்குரியது. அங்கே முனிவர்கள் பிற எவரும் அறியாமல் அதில் அம்பு பழகுவார்கள். அந்த அம்புகள் பருவடிவு கொண்ட எந்த இலக்கையும் தொடுவதில்லை” என்றார். மேலும் நகைத்தபடி “உண்மையில் அவை எங்கு தொடுகின்றனவோ அவையே அவற்றின் இலக்குகள்” என்றார்.
யுதிஷ்டிரன் அந்நகைப்புகளை நோக்கியபடி விழிகளில் நீருடன் நின்றான். நெஞ்சு விம்மிக்கொண்டிருந்தது. ஒருகணத்தில் தன்னை மீறி எழுந்த விசையுடன் அதை நிலத்தில் வீசிவிட்டு அவையை விட்டு வெளியே செல்ல திரும்பினான். துரியோதனன் முன்னால் வந்து தயையை கீழிருந்து எடுத்து அக்கணமே அம்பு தொடுத்து மேலிருந்த திரைமுடிச்சை அவிழ்த்தான். அச்சரடு உதிர்வதற்குள் அதை மேலும் அடித்துத் தூக்கி சேர்த்து மரச்சட்டத்தில் அறைந்து திரை சரியாமல் காத்தான். ஏழு அம்புகளால் திரைகளை அவிழ்த்து மீண்டும் அறைந்து நிறுத்தினான். அவை அமைதிகொண்டது.
“போர்க்களத்திற்கும் இது உதவும், ஆசிரியரே” என்று துரியோதனன் துரோணரிடம் சொன்னான். “இத்தகைய ஆற்றல்கொண்ட வில்லை நான் இதுவரை தொட்டதே இல்லை. ஒவ்வொன்றையும் அது முன்னரே அறிந்திருப்பதாகத் தோன்றுகிறது” என்றான். திருதராஷ்டிரர் “ஆம், நானும் அவ்வாறே எண்ணினேன்” என்றபடி கைநீட்டினார். துரியோதனன் அதை அவரிடம் அளிக்க அவர் அதை தன் மடியில் யாழ் என வைத்து அதன் நாணில் கையோட்டினார். பின்னர் மெல்ல சுண்டி மீட்டினார். யாழ் எனவே அது இசைக்கத் தொடங்கியது. அதிலிருந்து காயத்ரியின் சந்தம் ஒலிக்கத் தொடங்கியது. ஆழ்ந்த கார்வைகொண்ட பேரியாழிலிருந்து எழுவதுபோல்.
விழிகள் உருள பற்கள் ஒளிர புன்னகைத்தபடி “துரோணரே, உயர்ந்த வில் நல்லிசை எழுப்புவது என தனுர்வேதம் உரைக்கிறது. தெய்வத்தன்மை கொண்ட வில்லில் வேதச் சந்தம் எழும் என்கிறது. உங்கள் வில்லில் வேதம் ஒலித்ததுண்டா?” என்றார். துரோணர் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். “இது காயத்ரி” என்றார் திருதராஷ்டிரர். பீஷ்மர் பெருமூச்சுடன் எழுந்து அவையிலிருந்து வெளியே நடந்தார். திகைப்புடன் அமர்ந்திருந்த அவை அவரை திரும்பி நோக்கியது. அதை செவிகூர்ந்தபின் திரும்பி யுதிஷ்டிரனை நோக்கிய திருதராஷ்டிரர் “மைந்தா, இது உனக்குரிய வில். ஆசிரியர் கூற்றே உண்மை, இது தெய்வத்தன்மை கொண்டது. ஆகவே வழிபாட்டுக்குரியது. வேள்விக்கரண்டியை அடுமனைக்கு கொண்டுசெல்லலாகாது. எங்கு போரே வழிபாடென ஆகிறதோ அங்கே மட்டுமே இது நாணொலி எழுப்பும்போலும்” என்றார்.
அவர் அதை அளிக்க யுதிஷ்டிரன் பணிந்து பெற்றுக்கொண்டான். அதை தன் தோளில் இட்டபடி அவையை வணங்கினான். அதைப்பற்றிய பெருமிதம் அவனில் நிறைந்திருந்தது. ஆனால் அன்று அவனை தனியறையில் சந்தித்த குந்தி “அதை ஏன் தோளில் இட்டுத் திரிகிறாய்? கொண்டுசென்று கருவூலத்தில் வை” என்றாள். அவன் “அன்னையே…” என தொடங்க “அது பயனற்றது. அவையில் உன்னை சிறுமைசெய்யவேண்டாம் என உன் பெரிய தந்தையும் அவர் மைந்தரும் நடத்திய நாடகம் அது. அதனால் உனக்கு உண்மையான பெருமை ஏதும் இல்லை” என்று குந்தி சொன்னாள். “களத்திலோ போட்டியிலோ வெல்லமுடியாத வில்லால் என்ன பயன்? அது ஒரு வெறும் அணிகலன். தேவையானபோது எடுக்கலாம். நீ அரியணை அமர்கையில் குடிகளை நம்பவைக்க பயன்படும்” என்றாள்.
அவன் உளம்சோர்ந்து அதை கீழே வைத்தான். அது கருவூலத்திற்கே சென்றது. அதன்பின் அந்த வில்லை அவன் பார்த்தது குறைவான தருணங்களிலேயே. அதை சென்று எடுத்து பயில அவன் விரும்பினான். ஆனால் அது கேலிக்குரியதாகக்கூடும் என்றும் அஞ்சினான். ஆண்டுக்கொருமுறை மணிமுடிநாளில் உடன்பிறந்தாருடன் கொலுவமர்கையில் மட்டுமே அதை வெளியே எடுத்தார்கள். அதை மலரிட்டு வணங்கி குங்குமம் தொட்டு அவனிடம் அளித்தனர். அதை தோளிலிட்டபடி அவன் அரியணை அருகே நின்றான். குடிகள் அதை பார்க்கையில் அவர்களிடமிருப்பது என்ன உணர்வு என அவனால் உய்த்துணர இயலவில்லை. பெண்கள் அதை மெய்யாகவே அஞ்சி வணங்கினர். படைவில்லவர்களின் விழிகளில் ஏளனம் தெரிந்தது.
யுதிஷ்டிரன் எப்போதும் தன் வில் என அதையே எண்ணிக்கொண்டிருந்தான். பிற மூங்கில்விற்களை ஏந்தும்போதெல்லாம் தன் கையில் தயை இருப்பதாகவே எண்ணிக்கொண்டான். கண்களை மூடிக்கொண்டு உளம்கூர்ந்தால் மெல்லமெல்ல அந்த மூங்கில் வில் தயை என உருமாறுவதை அவனால் உணரமுடிந்தது. அது தன் கையில் எழுந்ததுமே உடல் முழுக்க அதை உணர்வான். தன்னை அது ஆள்வதற்கு ஒப்புக்கொடுப்பான். அது எப்போதும் அவனுடைய தனிமையிலேயே முழுதுருக்கொண்டது. அதிலிருந்து அம்புகள் தொடுத்து அவனால் மரக்கிளையில் கூண்டில் இருக்கும் குருவிக்குஞ்சு தவறி விழுந்து மண்ணை அடைவதற்குள் தாங்கிப்பிடித்து மெல்ல இறக்க முடிந்தது. அதன் மெல்லிறகு நலுங்காமல் மேலே கொண்டு சென்று வைக்க முடிந்தது. மலரை உதிர்த்து அது நிலம் தொடுவதற்குள் இன்னொரு அம்பால் தொட்டு எடுக்க முடிந்தது.
அதை அவன் எவரிடமும் சொன்னதில்லை. சொல்வது கேலிக்குரியதாகும் என அவன் நன்கறிந்திருந்தான். ஆனால் அர்ஜுனன் அதை அறிந்திருந்தான். ஒருமுறை அம்புகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது “வேள்விப்புகையை பிளக்க அம்புகளால் முடியும். எந்த அம்பாலாவது பிரிந்த புகைச்சுருள்களை சேர்த்து இணைக்க முடியுமா?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். “ஆம், முடியும். மூத்தவரின் வில்லில் இருந்து எழும் அம்புகளுக்கு அத்திறன் இருக்கக்கூடும்” என்று அர்ஜுனன் சொன்னான். பிற மாணவர்களின் விழிகளில் ஏளனம் எழுந்தது. அஸ்வத்தாமன் அர்ஜுனனின் விழிகளில் இருந்த உறுதியை கண்டபின் யுதிஷ்டிரனை திரும்பி நோக்கினான்.
குருக்ஷேத்ரத்திற்கு போருக்கு எழும்போது அந்த வில்லை அவர் எடுத்துக்கொள்ளவேண்டும் என விழைந்தார். அவர்கள் அஸ்தினபுரியில் இருந்து சென்று இந்திரப்பிரஸ்தம் அமைத்தபோது அவர் அதை அங்கே கொண்டுசென்று மூதாதையருக்கான அறையில் வழிபாட்டுக்கு வைத்திருந்தார். இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து அதை எடுத்துவரவேண்டும் என அவர் சொன்னபோது அர்ஜுனன் “அதை அவர்கள் ஒப்பமாட்டார்கள். அதன் ஆற்றல் என்ன என்று துரியோதனனுக்குத் தெரியும்” என்றான். யுதிஷ்டிரன் “விதுரரிடம் கோருவோம்” என்றார். பீமன் “அவர்கள் மறுப்பார்கள். காவலும் போடுவார்கள். இன்று அது காவலின்றிக் கிடக்கிறது. உகந்த வழி ஒற்றர்கள் வழியாக திருடிக்கொண்டு வருவதே” என்றான். “என் உடைமை அது. நானே அதை திருடுவதா?” என்று சீற்றத்துடன் யுதிஷ்டிரன் சொன்னார்.
“அதை கேட்போம்… வேறு வழியில்லை” என்றான் அர்ஜுனன். சகதேவன் “அது இப்போது தேவைப்படாதென்று படுகிறது. போருக்குப் பின் மூத்தவர் அரசமரும்போது தேவைப்படும். அப்போது அது நம்மிடமே இருக்கும்” என்றான். இளைய யாதவர் “அது போரில் தேவையாகும்” என்றார். அர்ஜுனன் அவரை சில கணங்கள் நோக்கியபின் “நன்று, தூது செல்லலாம்” என்றான். யுயுத்ஸுவையே தூதனுப்பலாம் என முடிவுசெய்தார்கள். “அந்த வில்லுக்கு யுதிஷ்டிரருக்கே உரிமை உள்ளது என்று அஸ்தினபுரியின் அரசரிடம் சொல். அவரை வென்றபின் அஸ்தினபுரியின் அரண்மனையில் அந்த வில்லுடன் அவர் அமர்வார் என்று அவையில் கூறுக!” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் திகைப்புடன் இளைய யாதவரை நோக்கினான், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.
யுயுத்ஸு தூதுப்படையுடன் அஸ்தினபுரிக்கு கிளம்பினான். “அவர் ஒருபோதும் வில்லை அளிக்கமாட்டார்” என்று சகதேவன் சொன்னான். அர்ஜுனனும் “அவ்வண்ணமே நானும் எண்ணுகிறேன்” என்றான். யுதிஷ்டிரன் “நாம் கோரவேண்டும். அவன் அளிக்காவிட்டால் அது அவனுக்கே தீது. அந்த தெய்வவில்லின் தீச்சொல் அவன்மேல் எழும்” என்றார். பீமன் மட்டும் “அவன் அளிக்கக்கூடும்” என்று சொன்னான். “ஏன்?” என்று சகதேவன் கேட்டான். பீமன் “தெரியவில்லை. நான் அவன் என்றால் அளித்துவிடுவேன்” என்றான். யுதிஷ்டிரன் புன்னகைத்து “நீ அவனேதான், மந்தா” என்றார். “அதை அவர் அஞ்சுவார்” என்றான் நகுலன். பீமன் “அந்த வில்லை அவன் அஞ்சுவான் என நான் நினைக்கவில்லை” என்றான். “ஏனென்றால் உள்ளூர அவன் அதை நன்கறிந்திருப்பான். அறிந்தவற்றை மானுடர் அஞ்சுவதில்லை.”
யுயுத்ஸு திரும்ப வந்தபோது தயை அவனுடன் இருந்தது. “அவையில் என்ன சொன்னாய்?” என்று அர்ஜுனன் கேட்டான். “மூத்த பாண்டவரின் வில்லாகிய தயை இந்திரப்பிரஸ்தத்தில் உள்ளது, அதை அவர் கோருகிறார். போரில் அவருடைய படைக்கலம் அது என்று சொன்னேன்” என்றான் யுயுத்ஸு. “இளைய யாதவர் என்னிடம் உரைத்த சொற்களை அவையில் கூறியபோது அவை சீற்றம்கொள்வதைப்போல் உணர்ந்தேன். பலர் முரலலோசை எழுப்பினர். பீஷ்மர் கைகளை கோத்துக்கொண்டு உடலைத் திருப்பி அமர்ந்திருந்தார்.” யுதிஷ்டிரன் “அங்கே நிகழ்ந்ததை முழுமையாகச் சொல்க!” என்றார்.
யுயுத்ஸு சொன்னான். சகுனி என் கூற்றை முதன்மையாக எதிர்த்தார். “இந்திரப்பிரஸ்தம் அஸ்தினபுரியின் உடைமை. நாற்களப் போரில் தோற்று பாண்டவர் நாடிழந்தபோதே அனைத்து உடைமைகளும் அஸ்தினபுரியின் அரசருக்கு உரிமையானவை ஆகிவிட்டன. ஆகவே அதிலுள்ள எப்பொருளையும் யுதிஷ்டிரன் எவ்வகையிலும் உரிமை கோரமுடியாது” என்று சொன்னார். “அந்த வில் அவருக்கு தெய்வ உரிமையாக வந்தது. மானுடமாக வந்த உரிமைகளையே மானுடர் மறுக்க முடியும்” என்று நான் சொன்னேன்.
சகுனி ஏளனமாக நகைத்தார். “மருகனே, அது தெய்வ உரிமை என்பது ஒரு பொய். அஸ்தினபுரியின் அரசனாக ஆவதற்குரிய அறத்தகுதி யுதிஷ்டிரனுக்கே உண்டு என்பதற்காக மத்ரர் சமைத்தது. குந்தியால் நிலைநிறுத்தப்பட்டது. இப்போரே அவர்கள் சமைத்த அந்தப் பொய்க்குவைக்கு எதிராகத்தான் நிகழ்கிறது” என்று அவர் சொன்னார். “அது மெய்யாகவே தெய்வ உரிமை என்றால் அதை மானுடர் தடுக்கவும் முடியாது என்று அவரிடம் சொல்க!”
அவையமர்ந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார் துரியோதனன். அவர் என்ன எண்ணுகிறார் என என்னால் உய்த்துணர இயலவில்லை. அவர் விழிகள் மங்கலடைந்தவை போலிருந்தன. அறுதி முடிவுக்காக அனைவரும் அவரை நோக்கினர். துரியோதனன் “அதை அவருக்கே அளிப்போம், மாதுலரே. அவர் உடைமை அது” என்றபின் என்னிடம் “கொடுக்கச் சொல்கிறேன், கொண்டுசெல்க!” என்றார். சகுனி திகைப்புடன் “அரசே” என்றார். “இங்கிருக்கையில் அது பொருளற்றது. வெறும் மூங்கில்” என்றார் அரசர். “அவர் கையில் அது எவ்வகையிலேனும் பொருள்கொள்ளும் என்றால் அதை மறுப்பதே நமக்கு நல்லது” என்று சகுனி சொன்னார். “வீணாக இளைய யாதவர் இவனை இத்தனை தொலைவு அனுப்பியிருக்கமாட்டார் என்று உணர்க!”
“நான் அதை எப்போதும் ஆர்வத்துடன் நோக்கி வந்திருக்கிறேன்” என்று அரசர் சொன்னார். “பலமுறை கருவூலத்திலிருந்து அதை எடுத்துப் பயின்றிருக்கிறேன். முன்பு அது என் கையில் பழகிய பறவை என அமர்ந்திருந்தது. பின்னர் இந்திரப்பிரஸ்தத்தின் கருவூலத்திலிருந்து கொண்டுவரப்பட்டபோது என் ஆவல் மேலும் கூடியது. என் கையை அது மறுக்கும் என எண்ணினேன்.” அவருடைய புன்னகையை அவை வியப்புடன் நோக்கியது. “அது இப்போதும் என் கைக்கு உகந்ததாகவே உள்ளது. என் இலக்குகள் பிழைப்பதில்லை. ஆனால் அது எனக்கு உதவாது என தெளிந்தேன். ஆகவே அதை நான் கையில் எடுக்கவில்லை” என்று அவர் சொன்னார்.
சகுனி “ஆனால் அதை அவருக்கு அளிப்பதென்பது…” எனத் தொடங்க “பார்ப்போம், அது செய்யப்போவது என்ன என்று. அது அவர் கையில் எப்படி உருமாறுகிறது என்று” என்று அரசர் புன்னகைத்தார். “அவருக்கு அது தன்னைக் கண்டடைதலாக அமையும். எனக்கும் அவ்வண்ணமே ஒரு கண்டடைதலை அளிக்கும்.” சகுனி “அரசே, ஓர் அரசர் இன்னொருவருக்கு படைக்கலத்தை அளிப்பதென்பது வெற்றியை அளிப்பதாகவே பொருள்படும். அதிலும் வில்லையும் உடைவாளையும் அளிப்பது முடியளிப்பதற்கு நிகர்” என்றார். “ஆம், அறிவேன். முடி அவ்வில்லைத் தொடர்ந்து செல்கிறதா என்று பார்க்கிறேன்” என்று அரசர் சொன்னார். சகுனி பின்னர் ஒன்றும் சொல்லவில்லை.
இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து அந்த வில் ஏற்கெனவே அஸ்தினபுரிக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. அது அங்கிருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. போருக்குக் கிளம்புவதற்கு முன் கொற்றவை அன்னைக்கு பலிபூசனை செய்கையில் அந்த வில்லும் அன்னை முன் படைக்கப்படவேண்டும் என அன்னை காந்தாரி ஆணையிட்டதாக சொன்னார்கள். அந்த வில் பூசனைக்கு வைக்கப்பட்ட பின்னர் அரசரின் தெய்வமாகிய கலிதேவனின் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே வைக்கப்பட்டு பூசனை செய்யப்பட்டது.
அதை அவைக்குக் கொண்டுவர அரசர் ஆணையிட்டபோது அவையில் எழுந்த உணர்வுகளையே நான் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தேன். பலர் அந்த வில்லை முற்றாக மறந்துவிட்டிருந்தார்கள் என்பதை அது ஏவலரால் செம்பட்டில் பொதியப்பட்டு அவைக்குக் கொண்டுவரப்பட்டபோது எழுந்த ஒலிகளிலிருந்து உணர்ந்தேன். அது அவைக்கு வந்து அறுபதாண்டுகள் கடந்துவிட்டிருந்தன. சொல்லிச் சொல்லி பெருக்கியமையால் அது பேருருக் கொண்டுவிட்டிருந்தது. பேராலயங்களின் கருவறைத்தெய்வங்கள் நமக்கு மிகச் சிறிதாகவே தோன்றுகின்றன. அதன் ஆற்றல்களும் மிகைப்படுத்தப்பட்டிருந்தன. பட்டை விலக்கியதும் மிக எளிய மூங்கில் வில் தோன்றியபோது அவையில் நகைப்பொலியே எழுந்தது.
அது அத்தனை சிறியதாக இருக்கும் என அவர்கள் எண்ணியிருக்கவில்லை. துரோணர் வெளிப்படையாகவே “இதுதானா? மிகச் சிறிதாக இருக்கிறதே?” என்றார். அரசர் சிரித்தபடி “விற்களில் இது முனிவர். முனிவர் சிற்றுடலர் ஆவதே நெறி” என்றார். அவையினர் அதற்கு சிரித்தபோது பீஷ்மர் மட்டும் கசப்புடன் முகம்சுளித்தார். அந்த வில் அத்தனை எளியதாக இருப்பதைக் கண்டபோது அவையினர் நிறைவடைந்தனர். அதை அரசர் என்னிடம் அளிக்க முடிவெடுத்ததை ஒட்டி அவர்களில் எழுந்த அச்சம் மறைந்தது.
ஆனால் அந்த வில்லைக் கண்டதுமே நான் மெய்ப்படைந்தேன். அரசே, நான் அதை முன்னர் கண்டதே இல்லை. எப்போதும் கொலுபீடத்தில் மலர்களால் மறைக்கப்பட்டே அது தோன்றியிருக்கிறது. அதனுடன் வைக்கப்படும் மாபெரும் விற்களின் நடுவே சிறுத்து பொருளிழந்து ஓரமாக அமைந்திருக்கும். அங்கே அது தவத்தின் உறுதியென தெரிந்தது. அரசர் கூறியதை விட சிறந்த சொல் ஒன்றுமில்லை, அது விற்களில் முனிவர். வீரர்களில் மாவீரர்கள் முனிவர்களே என நாம் அறிந்திருக்கிறோம்.
அரசர் அதை தொடவில்லை. விதுரரிடம் “அமைச்சரே, அதை எடுத்து இளையோனிடம் அளியுங்கள்” என்றார். விதுரர் அவையில் ஒரு சொல் உரைக்காமல் அமர்ந்திருந்தார். அரசரின் ஆணை எழுந்ததும் வந்து அதை எடுத்து என்னிடம் அளித்தார். அவர் அதை என்னிடம் அளித்தபோது சற்றுநேரம் கைநீட்டி வாங்கமுடியாமல் தவித்து நின்றிருந்தேன். விதுரர் புன்னகைத்து “பெற்றுக்கொள்க!” என்றார். நான் அதை வாங்கிக்கொண்டேன். என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அரசர் என்னிடம் “அவரிடமிருந்து அதை பெறும் தகுதியும் உனக்குண்டு, இளையோனே. இது உனக்கும் சேர்த்தே நான் அளிப்பது” என்றார். நான் தலைவணங்கினேன்.
“நான் இவ்வில்லுடன் அஸ்தினபுரியிலிருந்து கிளம்பியபோது அந்நகரத்தின் மக்கள் என்னுடன் வாயில் வரை வந்தனர். பலர் வாழ்த்தொலி கூவினர். ஒரு முதுசூதன் அதோ செல்கிறது அஸ்தினபுரியின் வெற்றி. ஆன்றோர் அருளிய அறம் என்று கூச்சலிட்டார். அச்சொற்கள் என்னை மெய்சிலிர்க்கச் செய்தன” என்று யுயுத்ஸு சொன்னான்.
யுதிஷ்டிரன் தயையை எடுத்து கையில் வைத்துக்கொண்டு “நெடுநாட்களாகின்றன இதைத் தொட்டு. ஆனால் எப்போதும் இதனுடன் இருப்பதாகவே உணர்கிறேன். நான் ஏந்திய பலநூறு விற்கள் அனைத்தும் இந்த வில்லின் நிழலுருக்களே” என்றார். அம்பை எடுத்து அதில் தொடுத்தபின் சற்று தயங்கி “ஆனால் அந்த நூறுநூறு அம்புகள் வழியாக நெடுந்தொலைவுக்கு விலகி வந்துவிட்டிருக்கிறேன்…” என்றார்.
குருக்ஷேத்ரத்திற்கு அவர் தயையுடன் வந்தார். முதல்நாள் களமெழுவதுவரை அதில் அம்பு தொடுத்துப் பயிலவில்லை. பலமுறை கையில் எடுத்தும் தவிர்க்கவே தோன்றியது. முதல்நாள் போர் தொடங்கிய பின்னரும்கூட அவர் தன் வில்லில் இருந்து ஓர் அம்பைக்கூட செலுத்தவில்லை. ஆனால் சகதேவனை நோக்கி ஓர் அம்பு எழக் கண்டதும் அவரை அறியாமலேயே அந்த வில் எழுந்து அம்பு தொடுத்து அதை முறித்தது. இருமுறை அதைக்கொண்டு எதிர்ப்படையினரை கொல்ல முயன்றார். அவருடைய போர்முயற்சிகள் எல்லாமே அவருக்கே அவரை கேலிப்பொருளாக்கின.
அந்த வில்லுடன் அவர் களத்தில் தனித்து நின்றிருந்தார். அவர் குறிநோக்கி செலுத்திய அம்புகள் எவையும் இலக்கடையவில்லை. அவரால் அதை ஆளமுடியவில்லை. அந்த வில் அப்போரை மறுத்து பிறிதொரு போருக்காகக் காத்திருப்பதுபோலத் தோன்றியது. பின்னர் அதை தேர்த்தூணில் பொருத்திவிட்டு இன்னொரு வில்லை எடுத்துக்கொண்டார். அதுவும் தயையே என்று தோன்றியது. ஆனால் அல்ல என்று அந்த வில் அறிந்திருந்தது.
சல்யரை எதிர்கொள்ள அவர் எழுந்ததும் கைகளால் துழாவி இயல்பாகவே அவர் தயையை எடுத்துக்கொண்டார். அவரிடம் இருந்த வில் சேறு தெறித்து வழுக்கிக்கொண்டிருந்ததனால் அவ்வாறு செய்தார். ஆனால் அது களமெழுந்து போரிடத் தொடங்கியபோதுதான் அதுவே அவ்வாறு ஆணையிட்டதுபோலும் என எண்ணிக்கொண்டார். அது அக்களத்தில் ஆற்றவிருப்பதை அது அறிந்திருக்கிறது. அவர் அந்த வில்லின் எளிய கருவிமட்டுமே.