தீயின் எடை - 2
காவல்மாடத்தின் அடியில் தூண்களில் புரவி உரசிக்கொண்ட பின்னரே அங்கு காவல்மாடம் இருப்பது அஸ்வத்தாமனுக்கு தெரிந்தது. அவன் புரவிமேல் இருப்பதையே அதன்பின்னர்தான் உணர்ந்தான். புரவி முனகியபடி உடலை விலக்கிக்கொண்டது. மழைத்திரை அதன் விழிக்கூரையும் மோப்பத்திறனையும் மறைத்திருக்க அவன் உள்ளத்தை எண்ணங்கள் மறைத்திருந்தன. கையால் மூங்கில் கழையைப் பற்றியபடி நின்று மேலே குழறலாக ஒலித்துக்கொண்டிருந்த குரல்களை செவி மடுத்தான். சிரிப்பும் உதிரிச் சொற்களாலான பேச்சும் கேட்டன. முதற்கணம் அந்த ஓசை பக்கவாட்டில் எங்கோ இருளுக்குள் ஒடுங்கியிருந்த படைகளிலிருந்து எழுவதாகத் தோன்றி பின் மேலே சென்றமைந்தது. அது விண்ணிலிருந்து எனத் தோன்றியதுமே வானை நிறைத்திருந்த இருள் பரப்புக்கு அப்பாலிருந்து எழுவதாக உளமயக்கு எழுந்தது.
அவர்கள் உணவுண்டுகொண்டிருப்பதாக ஒலிகள் காட்டின. சிலகணங்களிலேயே ஓசைகள் வழியாக உணவு பரிமாறப்படுவதை, உண்ணப்படுவதை அவன் கண்டான். அங்கிருப்பவர்களின் எண்ணிக்கையை, பின்னர் கலங்களின் அளவைக்கூட. ஒலிகளை காட்சிகளாக்கும் அவனுடைய விற்கல்வி அந்த மாயத்தை உருவாக்க உடனே சித்தம் அதை அணைத்தது. நிகழ்வதென்ன என்று உணர்ந்ததும் புன்னகைத்தான். மேலேறிச்சென்று அங்கு நிகழ்வதை பார்க்க வேண்டுமென்று தோன்றியது. ஆனால் படிகளில் ஏறிச்சென்று பார்க்கையில் அங்கு எவருமில்லாமல் இருக்கவும் கூடும் என்னும் எண்ணம் எழுந்து மேலும் அவனை உள்நடுங்கச் செய்தது. இந்த இருள் இயல்பானதல்ல. நன்கு புலர்ந்த பின்னரும் இத்தனை குற்றிருள் நீடிப்பது வழக்கமே அல்ல.
தன்னுள் ஓடிய உதிரி எண்ணங்களை நாய் உடலீரத்தை உதறுவதுபோல் உதறி முதுகை நிமிர்த்தி கைகளை விரித்து தசைகளை எளிதாக்கியபின் சூழ்ந்திருந்த இருள் பரப்புக்குள் மெல்லிய இருள் வடிவங்களாகத் தெரிந்த கௌரவப் படையை பார்த்துக்கொண்டு அவன் நின்றான். மேலிருந்து மேலும் சிரிப்பொலிகள் கேட்டன. குளிர்ந்த வழுவழுப்பான பாம்புக்குட்டியொன்று உடல் மேல் விழுந்ததுபோல் அவன் விதிர்த்து சற்று விலகிக்கொண்டான். எதற்காக சிரிக்கிறார்கள்? இவ்விருளில் இக்களத்தில் எவ்வண்ணமும் எழ வாய்ப்பில்லாத ஒலி அதுதான். சித்தம் கலங்கியிருப்பார்களா? மேலேறிச்சென்று அவர்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் எழுந்தது. ஆனால் அவன் கடிவாளத்தை இழுத்து குதிகாலால் புரவியை அணைத்து முன் செல்லவிட்டான்.
சித்தம் சிதறுவதைப் பற்றியே எண்ணங்கள் ஓடின. ஐயமில்லை, மேலிருப்பவர்களுக்கு சித்தம் முற்றாகவே சிதறிவிட்டிருக்கிறது. அவர்கள்தான் பொழுது கணித்து முரசறைந்து போர்க்களத்தை தொடங்கிவைக்க வேண்டும். ஆனால் அதில் பிழையொன்றுமில்லை. இக்களத்தில் நிலையுணர்வுடன் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சித்தத்தை ஏதேனும் ஒரு வகையில் கலைத்துக்கொண்டு இத்தருணத்தை எதிர்கொள்பவர்களே. கரும்பாறையில் ஊன்றப்படும் பச்சைக்கழை என பிளந்து விரிகிறது உள்ளம். கரும்பாறை என இந்த இருள். இதன் பொருள் என்ன? இங்கே இது இவ்வண்ணம் நிறைந்து செறிந்திருப்பது எதன் பொருட்டு?
இதோ நான் அனைத்து ஒழுங்குகளையும் இழந்து ஒன்றுடன் ஒன்று பட்டுக்கொள்ளாத எண்ணங்களின் தொடரொன்றை உளமெனக் கொண்டிருக்கிறேன். கிருதவர்மன் வஞ்சமும் வெறுப்பும் கொண்டவனாக உருமாறி கீழுலகத் தெய்வமொன்று எழுந்து வந்ததுபோல் தெரிகிறான். நகைத்துக் கூத்தாடுகிறான். சல்யர் இருண்ட காட்டுக்குள் முட்டிமுட்டி அலைந்துகொண்டிருக்கிறார். சகுனி தனக்குத்தானே பேசியபடி சுட்டுவிரலால் இருளுக்குள் நாற்களக் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார். கிருபர் தன் முந்தைய பாடிவீடு இருந்த அதே இடத்தில் கரிப்படலத்தின் மீது, கரியாலான மஞ்சத்தின் வடுவில், மஞ்சத்திலென கால் மடித்து ஊழ்கத்தில் அமர்ந்திருக்கிறார். ஊழ்கத்தால் கரியிலிருந்து ஒவ்வொரு பொருளையும் மீட்டெடுப்பதுபோல.
அவன் அந்தியில் பார்த்த சில கூடாரங்களை நினைவுகூர்ந்தான். பற்றி எரியாமல் கனன்று அணைந்துவிட்ட அக்கரிவடிவை அப்படியே தக்க வைத்திருந்தன அவை. அவற்றை நோக்கி நிற்கையில் மேலும் சற்று பொழுதுக்கு காலத்தை பின் திருப்பிக்கொண்டு செல்ல முடிந்தால் அவற்றை பழைய வடிவில் எழுப்பி விடலாம் என்று தோன்றியது. இன்னும் காலத்தை பின்னகர்த்தி அவை கட்டப்படுவதற்கு முன்பிருந்த வடிவத்தை சென்றடைந்தான். இவை ஒவ்வொன்றும் காலத்தில் நகர்ந்து அக்கரி நோக்கி வந்துகொண்டிருந்தனவா? மழைத்தூறலில் நனைந்து மண்ணில் ஊறி கரிய மை தொட்டு வரைந்த ஓவியம்போல் அவை மாறிக்கொண்டிருக்கின்றன. முப்பட்டை தோற்றம் கலைந்து மண்ணில் வரைந்த கரிவடிவங்களாக அவை மாறிவிட்டன. எனில் மண் எனும் ஏட்டில் அவை இருபட்டை கரிக்கோட்டு ஓவியங்களாகத்தான் முதலில் அச்சிற்பியால் வரையப்பட்டனவா? அங்கிருந்து அவற்றை கட்டி எழுப்பி பருவடிவென நிறுத்தியவன் அச்சிற்பியா?
மாலையில் அக்கரி வடிவுகளை நோக்கியபடி சென்றுகொண்டிருக்கையில் அஸ்வத்தாமன் துரியோதனனின் எஞ்சிய யானைகளாலான சிறிய படையை பார்த்தான். ஒருகணம் அவையும் கரிக்கோட்டுருக்களே என்று தோன்ற உள்ளம் அதிர்வுற்று கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். அவை இன்னமும் பருவுருக்கொள்ளாதவையா? அன்றி காலத்தால் நம்மைவிட சற்று முன்னகர்ந்து விட்டவையா? தனது எண்ணங்களின் பொருளற்ற தாவலை அப்போதுதான் முதன்முறையாக உணர்ந்தான். புரவியைத் தட்டி புகையின் அலைகளினூடாக சென்றுகொண்டிருக்கையில் மழையில் அந்த யானைகள் கரைந்து மண்ணில் படிந்து தரையில் கருமை வடிவாக மாறிக்கொண்டிருப்பதாக தோன்றிய எண்ணத்தை தலையில் ஓங்கி ஓங்கி தட்டிக்கொண்ட பின்னரும் மாற்றமுடியவில்லை.
அவன் காவல்மாடத்தைக் கடந்து குறுங்காட்டின் எல்லைக்குள் வந்துவிட்டிருந்தான். புரவி அவன் எண்ணத்தை உணர்ந்ததுபோல் சீர் நடையிட்டு சென்றது. தென்னெரிக்காடு இளமழை நனைந்து தோகையோசை எழுப்பியபடி இருளுக்குள் படிந்திருந்தது. மழைக்குள் தொலைவில் ஏதோ ஒரு பறவை குறுகும் ஒலி கேட்டது. ஓசையாலேயே அந்தக் குஞ்சு அன்னையின் மென்மயிர் வெம்மைக்குள் உடல்சுருட்டி ஒண்டிக்கொள்வதை காணமுடிந்தது. அவன் காட்டின் உள்ளே புகுந்தபோது பல்லாயிரம் ஈர மூக்குகளால் நாய்க்கூட்டங்கள் அவனைத் தொடுவதுபோல் தளிர்முனைகள் சூழ்ந்தன. பல்லாயிரம் பசு நாவுகளென ஈர இலைகள் அவனை வருடின. முற்றிலும் விழிகளால் காணப்படாத ஒன்றின் தொடுகையும் உருமாறிவிட்டிருப்பதை உணர்ந்தான்.
நடுக்கு கொண்டபடியே சென்று புரவியை நிறுத்தி இறங்கி இடுகாட்டுக்குச் செல்லும் சாலையில் நடந்தான். மழையில் தரை குழைந்து சேறாக மாறிவிட்டிருந்தது. அவன் கால்குறடுகள் புதைந்து புதைந்து எழுந்தன. பேருருவ விலங்கொன்று நா சுழற்றி உணவை நக்கும் ஒலிபோல் அது கேட்டது. காட்டுக்குள் ஒளி நின்றிருப்பதை கண்டான். முதற்கணம் அங்கே ஒரு வெண்ணிறக் கட்டடம் இருப்பதாகவே தோன்றியது. பின்னர் மறுபுறம் பெரும் பள்ளமொன்றிருக்க வானம் இலைகளுக்கு அப்பாலென நிறைந்திருப்பதுபோல் தோன்றியது. ஒவ்வொரு உளச்சித்திரத்தையாக திரைபோல் இழுத்து இழுத்து விலக்கி அறுதியாகவே அங்கு விண்ணிலிருந்து முகில்பிளவினூடாக ஒளி சரிந்திறங்கியிருப்பதை அகம் உள்வாங்கிக்கொண்டது.
அதன் பின்னரும் அது வெறும் உளமயக்கென எண்ணவே அவன் விழைந்தான். அவ்வாறெனில் அவன் வாழ்த்து கொண்டிருக்கும் உலகில் அடிப்படை நெறிகள் எதுவும் மீறப்படவில்லை. அங்கு அறியவொண்ணாதவை எதுவும் நிகழவில்லை. அறிந்து பழகிய எவற்றினுள்ளும் தெய்வங்கள் ஊடுருவி நிலைகுலைக்கவில்லை. ஆனால் செல்லும்தோறும் அவ்வொளியை அவன் பருப்பொருள் என கண்டான். பெரிய ஒளிப்பட்டைகளாக அவை சரிந்திருந்தன. அதனுள் மழைத்துளிகள் சரிவாக பெய்திறங்கிக்கொண்டிருந்தன. மிகக் கூரிய அம்புகள்போல். அருமணிகள்போல்.
அருமணிகளின் கூர்மை பிறிதெவற்றுக்கும் இல்லை என்பார்கள். ஒரு வைரத்துகள் உடலுக்குள் சென்றால் உடல் வகுத்துள்ள இரைப்பையின் ஈரல்களின் குருதியின் வழியை அது மேற்கொள்ளாது. அருமணி உள்ளுடலின் அனைத்து உறுப்புகளையும் ஊடுருவுகிறது. தனக்கான வழியை தானே அமைத்துக் கொள்கிறது. ஏனெனில் அது கதிரவனின் துளி. அனைத்தையும் வெட்டி ஊடுருவி கடந்து செல்கிறது கதிரொளி. கதிரொளியே புவியறியும் படைக்கலங்களில் கூரியது. வாள்களை விட. வேல்களை விட. வில்லவர்களின் அரிய அம்புகளை விட. படிகமறியாது படிகத்தை வெட்டிச்செல்கிறது. பளிங்குப்பாறைகளை கடந்து செல்கிறது. விழிகடந்து சென்று எண்ணங்களைத் தொட அதனால் இயல்கிறது.
இதோ எத்தனை பெரிய இருளை குத்திக் கிழித்து அது நின்றிருக்கிறது! ஊன்றிய ஒரு செங்கோல் என. கடுவெளியின் இருளை, ககனம் முழுக்க நிறைந்திருக்கும் களிம்பை. அவன் அருகணைந்து விசையழிந்து தயங்கி நின்றான். சிதை பெரும்பாலும் அணைந்துவிட்டிருந்தது. அரசச் சிதைகள் மிக விரைவில் எரிந்தணைவது போலவே அமைக்கப்படுவது வழக்கம். சிதையிலெரியும் உடல் அடையும் கொந்தளிப்புகளை அரசர்கள் கொள்ளலாகாது. அரசர்களை எரி சருகென பற்றி மெழுகென உருக்கி நெய்யென உண்டு சென்றுவிடுகிறது. ஒரு சொல்லில் எரிதல் என அதைச் சொல்வார்கள். அச்சொல் உருகி நீண்டு வழிந்து நெளிந்தோட விடுவதில்லை. அது தன்னைப் பெருக்கி அவ்வுடலை தன் கைகளில் ஏந்திக்கொள்ள ஒப்புவதில்லை.
சிறிய சிதைகளில் எரியேறும் உடல் கிடந்து துள்ளும். எழுந்தமர்ந்துவிட முயலும். முகத்தசைகள் உருக உருக வான் நோக்கி நகைக்கும். உடலுக்குள் உறையும் தெய்வங்கள் ஒவ்வொன்றாக விலகிச்செல்வது அது என்பார்கள். மண்ணாலானது உடல். அதை மிருண்மயம் என்கிறார்கள். மண்ணில் வாழ்கின்றன பாதாள தெய்வங்கள். அனைத்தையும் முளைக்க வைப்பவை, எடை எடையென தங்களை உணர வைப்பவை, எழுந்த மண்ணையே எப்போதும் நாடிக்கொண்டிருப்பவை, மண்ணில் முழுதமையப் படுக்கும்போது எளிதென இனிதென உணர வைப்பவை, சுவையறிபவை, உப்பு என உதிரத்தில் தசைகளில் தளர்ந்திருப்பவை.
பெற்ற அனைத்தையும் முளைக்க வைக்கும் உடல் மண்ணின் ஒரு தளிர் வடிவம். சொற்களை எண்ணங்களை கனவுகளை முளைக்க வைக்கிறது. உடலில் ஓடும் குருதி புல்விதைகள் செறிந்த களஞ்சியம் போன்றது. அதன் ஒவ்வொரு அணுவிலிருந்தும் புல்வெளிகள் எழலாகும். பிறிதொரு உடல் நிலத்தில் மீளமீள முளைத்தெழுகிறது. தன்னுள் நுழையும் நோய்களை அது முளைத்து பெருகச்செய்கிறது. ஐயங்களை, ஆணவத்தை, அச்சத்தை பன்மடங்கெனப் பெருகி எழ வைக்கிறது. மண்ணாகி விடவேண்டுமென்றும், மண்மேல் நிறைய வேண்டுமென்றும், மண்ணுக்கு உரிமை கொள்ளவேண்டுமென்றும் உடல் கொண்டு வந்த எவரேனும் விழையாமல் இருக்கக் கூடுமா?
வயல் வரப்பில் ஒரு கைப்பிடி மண்ணுக்காக போரிட்டு உயிர் துறக்கும் வேளாண் குடிகளை அவன் தன் அவையில் அமர்ந்து ஒவ்வொரு நாளும் மீளமீள கண்டுகொண்டிருந்தான். அந்தணர்களுக்கு அந்த உளஎழுச்சி புரிபடுவதில்லை. அவர்கள் அதை விழைவென்றும் ஆணவம் என்றும் எடுத்துக்கொள்வார்கள். ஒவ்வொரு முறையும், அமைச்சர்களிடம் அவன் சொல்வதுண்டு, அது மானுடனை ஆக்கிய விசை என. உடலென்று உருக்கொண்டு அவனுடன் இருக்கின்ற தெய்வங்களின் வழி என. உலகு துறந்து அருங்காடு சென்று தனக்கென்று ஒரு சிறுகுடிலமைத்து தங்கும் முனிவனும் தான் எடுத்துக்கொண்ட அக்கைப்பிடி நிலத்திற்கு பொறுப்பேற்கிறான். அதன் பொருட்டு போரிடுகிறான். சின்னாட்களிலேயே தன்னை தான் வாழும் அந்நிலத்துடன் பொருத்தியே அவனால் பார்க்க இயல்கிறது. எங்குளாய் எனும் கேள்விக்கு மண்ணின் ஒருபகுதியை சொல்லாது மானுடர் இங்கு வாழ இயலுமா?
மானுடன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை மாயை என அவனை சூழ்ந்துள்ளது. அன்னை என்று அளி காட்டி கொற்றவை என கொன்று உண்டு ஆட்டிப் படைக்கும் கொடுந்தெய்வம். எல்லைகளிலிருந்து எல்லைகளுக்கு அலைக்கழிக்கும் முதல் பெரும் விசையே மண். உடலிலிருந்து மண்ணின் தெய்வங்கள் எழுந்து செல்கையில் இன்னும் இன்னும் என்கிறது உடல். இங்கிருப்பேன் என வான் நோக்கி நகைக்கிறது. தசை உருகி வழிகையில் வெள்ளெலும்பாகி கைவிரித்து இதை அழிக்க உன்னால் இயலாதென்று விண்ணிடம் கூறுகிறது.
அஸ்வத்தாமன் கனல் வெளியாக மாறிவிட்டிருந்த சிதையினருகே சென்று அங்கு கைகட்டி நின்றிருந்த துரியோதனனின் நிழல் தன்மீது படாது சற்று விலகி தானும் கைகட்டி நின்றான். துரியோதனனின் நிழல் நீண்டு அனலின் அதிர்வுக்கேற்ப நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் ஆழ நிறுத்தப்பட்ட தொல்குடிகளின் பெருநடுகல்போல் நிகர்நிலை கொண்டு ஓங்கி நின்றிருந்தான். அவன் உடலை விழி நன்கறிந்திருந்தும்கூட உள்ளம் அவனை ஒரு கற்சிலை என்றே உணர முயன்றுகொண்டிருந்தது. சிதையில் அங்கிங்காக எழுந்து செந்நிறப் புகை போலவும் நெளியும் பட்டு போலவும் விந்தையான பட்டுப்பூச்சி சிறகு போலவும் எரிந்து கொண்டிருந்த சிறு தழல்கள் ஒவ்வொன்றாக எழுந்து மேலே பறந்தகல செங்கனல் வெளி பூனைபோல் மூளல் ஒலியெழுப்பி பரவிக் கிடந்தது.
விண்ணிலிருந்து வந்துகொண்டிருந்த ஒளிச்சரிவு மெல்ல குறையத் தொடங்கியிருந்தது. அஸ்வத்தாமன் விண்வாயில் ஒன்று பேரெடையுடன் ஓசையிலாது சென்று மறுவிளிம்பில் பொருத்திக்கொள்வதுபோல் உணர்ந்தான். மதகு முற்றாக மூட ஒளிச்சட்டங்கள் மறைந்தன. அதுவரை இருந்த ஒளிக்கோணம் மாற துரியோதனனின் நிழல் செந்நிறமாகி இடம் மாறி சரிந்து அஸ்வத்தாமனை நோக்கி வந்தது. அது தன்னை விரல் என நீட்டி தொட வருவதுபோல் உணர்ந்து அவன் விலகிக்கொண்டான். அவ்வசைவை உணர்ந்து கலைந்து துரியோதனன் திரும்பிப் பார்த்தான். விழிகளில் ஒரு சொல்லும் இருக்கவில்லை.
அஸ்வத்தாமன் தலைவணங்கி “கணியர் நூலின்படி பொழுது விடிந்துவிட்டது, அரசே” என்றான். துரியோதனன் வெற்று விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உதடுகள் உலர்ந்து பல்லில் ஒட்டியிருந்தன. முகம் துயரின்றி ஊழ்கத்திலிருப்பதுபோல் தோன்றியது. அஸ்வத்தாமன் மேலும் உரக்க “நூற்கணிப்புகளின்படி பொழுது விடிந்துவிட்டது. ஆனால் விந்தையானதோர் கருக்கிருள் களம் மீது நிறைந்திருக்கிறது. நாம் போருக்கு எழுகிறோமா இல்லையா என்று முடிவெடுக்க வேண்டிய தருணம் இது” என்றான். துரியோதனன் விழித்து “என்ன?” என்றான். மீண்டும் அதைக் கூறியதும் அதை உள்வாங்கிக்கொண்டு “ஆம், அவை கூடட்டும்” என்றான்.
“அவையென இனி எதுவுமில்லை. கிருதவர்மனும் நானும் கிருபரும் காந்தாரரும் மட்டுமே எஞ்சியுள்ளோம்” என்றான் அஸ்வத்தாமன். “சல்யர் குருக்ஷேத்ரக்காட்டுக்குள் எங்கோ சென்றுவிட்டிருக்கிறார். அவரை அழைத்துவர காவலரை அனுப்பியிருக்கிறேன். எஞ்சிய நால்வரும் தங்களுக்காக காத்திருக்கிறோம்” என்றான். துரியோதனன் செல்வோம் என கைகாட்டிவிட்டு நடந்தான். அவனுக்காகக் காத்திருந்த இரு ஏவலர்கள் அருகே வந்து தலை வணங்க அவன் கையசைவாலேயே புரவி என காட்டினான். அவர்கள் விரைந்து சென்று அரசனுக்குரிய புரவியை ஒருக்கி கொண்டுவந்தனர். பின்னால் தேரும் வந்தது. துரியோதனன் தேர் வேண்டியதில்லை என விலக்கி புரவி மேல் ஏறிக்கொண்டான். அஸ்வத்தாமனும் புரவியில் ஏறி அவனைத் தொடர்ந்தான்.
சேற்றுப் பரப்பில் குளம்படிகள் விழும் ஓசை எழ அவர்கள் இருண்ட காட்டினூடாக சென்றனர். சிதையின் வெளிச்சம் முற்றாக மறைந்தபோது சற்று நேரம் விழி என்பதே இல்லாததுபோல் வெறுமை நிறைந்திருந்தது. நெடும்பொழுதுக்குப் பின்னரே காட்டின் நிழலுருக்கள் எழுந்து வந்தன. அஸ்வத்தாமன் “அங்கரின் உடல்…” என ஏதோ தொடங்க அதை இனிமேல் பேச வேண்டியதில்லை என்பதுபோல் துரியோதனன் கையசைத்து அவனை தடுத்தான். அஸ்வத்தாமன் தலை தாழ்த்தி அதை ஏற்றுக்கொண்டான். துரியோதனன் சொடுக்கி நிமிர்ந்த தலையுடன், நிகர்நிலைகொண்ட உடலுடன், நேர்கொண்ட நோக்குடன் புரவிமேல் அமர்ந்திருந்தான்.
படைகளுக்குள் புகுந்து சித்தத்தடம் என எஞ்சியிருந்த பாதையினூடாகச் சென்றபோது இருபுறமும் களம் முற்றொழிந்ததுபோல் கிடப்பதை இருளுக்குள் உணர முடிந்தது. அதை உணர்ந்த துரியோதனன் புரவியின் விசை குறைத்து “எஞ்சியிருப்பவர் எத்தனை பேர்?” என்றான். “மிகக் குறைவு. சில நூறுகள்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “உண்மையை சொல்வதாக இருந்தால் ஒரு நாழிகைக்குள் முழுதாக எண்ணி கணக்கிட்டுவிடலாம். ஆனால் எண்ணி கணக்கிட வேண்டாம் என்று படைத்தலைவர்களுக்கு ஆணையிட்டேன். நாம் விழியறியும் அளவைக்கூட முழுதாக உள்ளத்தில் எண்ணிக்கொள்ள வேண்டாம். அது நம் அகத்தை மாற்றிவிடும். நாம் உணரும் ஒரு படை உண்டு. அது நம்முடன் களத்துக்கு வருகிறது என்று எண்ணிக்கொள்வோம்.”
துரியோதனன் ஆம் என தலையசைத்தான். தொலைவில் தெரிந்த நான்கு அகல்சுடர்களை தனக்கான அரசவை என தெளிந்து “அங்கா?” என்றான். “ஆம்” என்றான் அஸ்வத்தாமன். அவர்கள் குளம்படியோசையால் கொண்டுசெல்லப்படுவதுபோல இருளில் மிதந்து அதை நோக்கி சென்றனர். புரவியை நிறுத்தி இறங்கி எதிர்கொண்ட ஏவலனிடம் கடிவாளங்களை ஒப்படைத்துவிட்டு அச்சுடர்களை நோக்கி சென்றான். நான்கு சுடர்களுக்கு நடுவே இளமழைச்சாரலில் கிருபரும் கிருதவர்மனும் சகுனியும் அமர்ந்திருந்தனர். சகுனியின் மைந்தர்கள் இருவர் அப்பால் நின்றிருந்தனர். நான்கு அகல் சுடர்களும் அணையாதிருக்கும் பொருட்டு உடைந்த தலைக்கவசங்களோ கேடயத்துண்டுகளோ கவிழ்க்கப்பட்டிருந்தன. செவ்வொளி மழையில் கரைந்து அசைந்தது.
அமர்வதற்கு அடுமனைக் கலங்களை கவிழ்த்து அமைத்திருந்தனர். துரியோதனனைக் கண்டபோது சகுனியும் கிருபரும் தலைவணங்கினர். கிருதவர்மன் எழுந்து “அரசருக்கு நல்வணக்கம்” என்று முகமன் உரைத்தான். துரியோதனன் வணங்கியபின் அடுமனைக் கலம் ஒன்றில் அமர்ந்தான். அஸ்வத்தாமன் அருகே ஒரு சிறு கல்லில் அமர்ந்தான். சில கணங்கள் அமைதி நிலவ அஸ்வத்தாமன் “நாம் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது” என்றான். “நமது படைகள் காத்துள்ளன. களம் ஒருங்கியிருக்கிறது. அறுதி முடிவெடுக்க வேண்டியவர் அரசரே” என்று கிருதவர்மன் சொன்னான்.
சகுனி முனகலான குரலில் “இதில் முடிவெடுக்க என்ன இருக்கிறது? நமக்கு எதிரே நிற்போரிடம் எஞ்சும் படையென்ன என்ற கணிப்பை சற்று முன்னர்தான் எடுத்தோம்” என்றார். கிருதவர்மன் “இங்கிருந்து அவர்களின் படையை நோக்கவே இயலவில்லை. நமது படைகளை நோக்கி கணக்கிடுவதே இவ்விருளில் இயல்வது அல்ல. ஒற்றர் வலைகளும் முற்றாகவே அழிந்துவிட்டன. இப்போதிருக்கும் கணிப்பு ஓர் உய்த்தறிதல் மட்டுமே. வடஎல்லை காவல்மாடத்தின் மீதேறி அவர்களின் படைகளிலிருக்கும் விளக்குகளை பார்த்தேன். எல்லை விளக்குகளைக் கொண்டு அவை நிரப்பும் வெளியை கணக்கிட்டேன். பொதுவாகப் பார்த்தால் நம்மிடம் எஞ்சும் படைகளில் பாதி கூட அவர்களிடம் இல்லை” என்றான். “ஆம், பிற கணக்குகளும் ஒத்துப்போகின்றன” என்றார் சகுனி.
“இன்றைய போர் நிகழ்ந்தாகவேண்டும். இப்போதும் நாம் அவர்களைவிட இருமடங்கு உள்ளோம். இன்று நாம் வென்றே ஆகவேண்டும், வேறு வழியில்லை. நம் தரப்பில் இப்போது சல்யரும் அரசரும் கிருபரும் அஸ்வத்தாமனும் காந்தாரரும் வில்லுடன் எஞ்சியிருக்கிறோம். எந்நெறிகளின்படியும் வெற்றி நமக்கே” என்றான் கிருதவர்மன். கிருபர் “அவர்களிடம் ஐவரும் எஞ்சுகிறார்கள்” என்றார். “ஐவர் அல்ல, அவர்களில் இருவர் மட்டுமே பொருட்படுத்தத் தக்கவர்கள்” என்றான் கிருதவர்மன். “சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் சிகண்டியும் எஞ்சியிருக்கிறார்கள்” என்று கிருபர் சொல்ல “அஸ்வத்தாமனின் வில்லுக்கு நிகர் அல்ல அவர்கள்” என்றான்.
துரியோதனன் இரு கைகளையும் விரல்களைக் கோத்து தலைகுனிந்து அமர்ந்திருந்தான். கிருபர் “இனிமேலும் போரிடுவதில் பொருளில்லை. இப்போரில் வென்றால்கூட நம்மிடம் படையென எதுவும் எஞ்சப்போவதில்லை” என்றார். சகுனி “இது முதுமைப்பேச்சு. இதோ நமது வெற்றிவரை நாம் வந்துசேர்ந்துள்ளோம். வெற்றியை கண்முன் பார்த்துவிட்டோம். ஒருவேளை இவ்வுச்சம் வரை வந்தும் நாம் உளம் தளராமல் இறுதிப் படியில் கால் வைக்கிறோமா என்று தெய்வங்கள் பார்ப்பதற்கு இவ்வாறு நிகழ்ந்தது போலும், மற்றொன்றில்லை” என்றார். எரிச்சலுடன் “அதை அரசர் முடிவெடுக்கட்டும்” என்றார் கிருபர்.
“ஆம், முடிவெடுக்க வேண்டியவர் அரசரே. ஆனால் இப்போர் என் விழைவிலிருந்தும் வஞ்சத்திலிருந்தும் உறுதிப்பாட்டிலிருந்தும் தொடங்கியது. அவ்விழைவும் வஞ்சமும் உறுதிப்பாடும் அணுவிடை குறையாது அவ்வண்ணமே எஞ்சுகின்றன. மெய்யாக உரைக்கின் வெற்றியை அணுகிவிட்டோம் என்னும் எக்களிப்பையே சற்று முன்னர் அடைந்தேன். பொழுதெழுந்து போர் தொடங்கினால் ஒரு நாழிகைக்குள் பாண்டவப் படையில் படைவீரர்கள் என எவரும் எஞ்சப்போவதில்லை என உறுதிகொண்டேன்” என்றார் சகுனி. “அஸ்வத்தாமன் இன்று அர்ஜுனனை கொல்வாரெனில் பாண்டவர்கள் வந்து நம் பாதம் பணிவது தவிர்க்க இயலாதது.”
கிருபர் “நம் படைகளை நாம் கண்களால் காணவுமில்லை. அவர்கள் எந்நிலையில் இருக்கிறார்கள் என்றே நாம் அறியோம்…” என்றார். சகுனி “அரசனின் உளவிசையின் வெளிப்பாடே படை… நம் படைகள் அரசரின் சொல்லுக்கு பொங்கி எழும்… ஐயம் வேண்டாம்” என்றார். கிருபர் மீண்டும் “அரசர் முடிவெடுக்கட்டும்” என்றார். சகுனி கைகளை விரித்தார். கிருபர் “கூறுக, அரசே!” என்றார். அனைவரும் துரியோதனனை நோக்கினர். அவன் முகம் உறைந்து சிலை போலிருந்தது. அங்கு நிகழ்ந்தவற்றை கேட்டானா என்றே ஐயமெழுந்தது. அஸ்வத்தாமன் ஏதேனும் சொல்லலாம் என உளமெழுந்த பின் அடக்கிக்கொண்டான். அதற்குள் துரியோதனன் “முடிவு பிறிதொன்றில்லை. போர்தான்… போர் நிகழட்டும்” என்றான்.