தீயின் எடை - 15

போர்க்களத்தில் கிருபர் முட்டிச்சுழலும் தெப்பமொன்றில் நின்றிருப்பதுபோல் தேரில் நிலையழிந்தார். அங்கு என்ன நிகழ்கிறது என்பதை அவரால் உணர இயலவில்லை. போர் தொடங்கிய சில கணங்களுக்குள்ளேயே படைசூழ்கையும் படையின் அடையாளங்களும் முற்றாக அழிந்து பெரும் உடற்கொப்பளிப்பாக, கருமையின் அலைகளாக களம் மாறிவிட்டிருப்பதை அவர் கண்டார். இடைவிடாது கைகளை அசைத்து தன் பின்படையினருக்கு ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தார். பின்னர் உணர்ந்தார் அவருடைய ஆணைகளை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவை கொம்பொலியாகவோ கொடியசைவாகவோ மாறவில்லை.

தேர்த்தட்டிலிருந்து விழியோட்டி நோக்கியபோது படைகளுக்குள் எங்கும் எந்தத் தொடர்புறுத்தல் முறையும் செயல்படவில்லை என்பதை கண்டார். கொம்பூதிகளும் கொடிகாட்டிகளும் பறைஒலிப்பவர்களும் அந்த போர்க்கொப்பளிப்புக்குள் தாங்களும் சிக்கி முற்றாக மறைந்துவிட்டிருந்தனர். ஆனால் அந்த அறிதல் அவரை மேலும் சீற்றம்கொள்ளத்தான் செய்தது. வெறியுடன் கைவீசி “ஒருங்கிணைக! அடையாளம் கொள்க!” என்று ஆணைகளை கூவினார். “அறிவிலிகளே, தன் படை வெட்டிச் சாகிறீர்கள். ஒருங்கிணையுங்கள். அன்றி பின்னடையுங்கள்.” ஒரு கட்டத்தில் அவர் சொல்லிழந்து உளம்திகைத்து தூக்கிய கையும் அசைவழிந்த உதடுகளுமாக நின்றார்.

முன்பொருமுறை அவர் யானை மீதேறி கங்கைக்கரைக் காட்டில் வேட்டைக்குச் சென்றபோது முன்னால் விரைந்தோடிக்கொண்டிருந்த மான் ஒன்றை நோக்கி அம்புகளைத் தொடுத்து அதை வீழ்த்தி அடுத்த அம்புக்காக கை சுழற்றிய கணம் அவர் அமர்ந்திருந்த யானை ஆணைகளை கடந்து சென்றுவிட்டிருப்பதை உணர்ந்தார். முன்பு ஒருபோதும் அப்படி ஒரு அறிதல் இருந்ததில்லை. எனினும்கூட யானை அவ்வாறு ஆகிவிட்டது என்பது எவ்வாறு தனக்குப் புரிந்தது என்பதை பின்னர் அவர் நெடுநாள் எண்ணி வியந்ததுண்டு. ஒரு அகத் திடுக்கிடலாக அவர் அறிந்த அதை உறுதி செய்துகொள்ளத் தயங்கி அவ்வாறல்ல அவ்வாறல்ல என்று மேலும் தனக்குள் பின்னடைந்தார். சொல்கேட்கும், பழகிய யானை இது, ஒரு தலைமுறைக்காலம் மானுடருடன் வாழ்ந்தது, அவரை நன்கறிந்தது, அவருடன் இணைந்தே எண்ணவும் கற்றது.

ஆனால் யானை செல்ல வேண்டிய வழியை உதறி பக்கவாட்டில் இறங்கி கங்கை வரை சரிந்து செல்லும் சதுப்புக்குள் புகுந்து நாணல்களினூடாக செல்லத்தொடங்கியது. அது தன்னை சரித்து வீழ்த்திவிடும் என்று தோன்றியதுமே அவர் பற்றி விலகிவிட உகந்த மரக்கிளைகள் ஏதும் அருகே உள்ளனவா என்று விழிதுழாவினார். அவ்வெட்டவெளியில் உயரமற்ற நாணல்கள் மட்டுமே இருந்தன. யானை தன்மேல் அவர் இருப்பதை உணர்கிறதா? அது அஞ்சியது போலவோ களிவெறி கொண்டது போலவோ தோன்றியது. துதிக்கையை சுழற்றி தலைக்கு மேல் தூக்கி சின்னம் விளித்தது. உளைசேற்றுப் பரப்பில் சரிந்திறங்கிச் சென்று நின்று சுழன்று தன்னைத்தானே பலமுறை வட்டமிட்டு மீண்டும் ஓடியது.

அது குழவியாகிவிட்டதுபோல் தோன்றியது. முதுகளிறென நடித்து சலிப்புற்றதுபோல. ஆழ்கனவில் விழைந்த ஒன்றை நிகழ்த்திப்பார்ப்பதுபோல. நின்று செவி கோட்டி முன்னால் நோக்கி தாக்கச் செல்வதுபோல் பிளிறியபடி பாய்ந்து அருகணைந்ததும் அவ்வாறே அதை விட்டுவிட்டு மீண்டும் திரும்பி பிறிதொன்றை நோக்கி சென்றது. சித்தம் ஒழுங்கிழக்கையில் உடலில் குடியேறும் பொருளின்மையை அப்போது அவர் உணர்ந்தார். எக்கணமும் கவிழப்போகும் படகொன்றில் கொந்தளிக்கும் கடலில் அமர்ந்திருப்பதுபோல் எண்ணினார். நிலைத்த மண்ணில் படிந்தமைந்திருக்கிறது அகத்துறையும் சித்தம். நிலையாத ஒன்றின்மேல் அது பதறிக்கொண்டே இருக்கிறது.

தன் குரலை ஒருவேளை ஆழத்தில் யானை கேட்கக்கூடும் என்று எண்ணி “சம்புகா, நில்! சம்புகா, நில்! சம்புகா, சொல்வதை கேள்!” என்று அதை கூவியழைத்தார். கரும்பாறையை நோக்கி குரலெழுப்புவது போலவே தோன்றியது. யானை தன் குரலை கேட்கவில்லை என்பது ஒரு வகையில் நன்று என்ற எண்ணம் அவருக்கு பின்னர் ஏற்பட்டது. தன் மத்தகத்தின் மேல் தொற்றி அமர்ந்திருக்கும் ஒரு சிற்றுயிரை அது முற்றிலும் அறியவில்லை என்றுதான் அதற்குப் பொருள். ஆனால் அக்குரலை அது கேட்டிருக்கும். எங்கோ ஆழத்தில். அது பிறிதொன்றாகிவிட்டிருந்தது. முற்றிலும் தனித்ததாக. அதுவரை அதை உலகுடன் பிணைத்த அனைத்திலிருந்தும் விடுபட்டதாக.

யானை சேற்றில் உழன்று புரண்டெழுந்தது. துதிக்கையால் கரிய சேற்றை அள்ளிஅள்ளி தன் முதுகின்மேல் வீசிக்கொண்டது. நொதிக்கும் மென்சேறு மழையென தன்மேல் பொழிய சில கணங்களிலேயே அவரும் சேற்றுருவாகி யானையின் உடலின் ஒரு பகுதியென்றானார். யானை சரிவிலிறங்கியபோது அதன் மத்தகம் நோக்கி குனிந்து ஒட்டிக்கொண்டார். இந்நிலையில் அது தன் உருவை நீரில் கண்டால்கூட அவரை அறியப்போவதில்லை. தன் உடலின் ஒரு பகுதியென்றே அவரை எண்ணக்கூடும். யானைக்கு தன் உடல்குறித்து தெரியுமா? தெரியாத உயிர் உண்டா? எந்த உயிரும் தன்னால் நுழைய முடியாத இடைவெளிகளில் நுழைவதில்லை. தன் எடை தாளா ஒன்றன்மேல் கால் வைப்பதில்லை. அதற்குள்ளும் அதன் உடலுருவாகவே குடிகொள்கிறதா அது?

யானை குறுவாலை சுழற்றியபடியும் உடலுக்குள் பிளிறியபடியும் குறுக்கும் நெடுக்குமாக சேற்றில் ஓடியது. அப்பாலிருந்து பிளிறியபடி பிறிதொரு யானை வந்து அதனுடன் இணைந்தது. மீண்டும் சின்னம்விளிகள் கேட்க அப்பால் குறுங்காட்டுக்குள்ளிருந்து ஏழு யானைகள் சேற்று வெளி நோக்கி அசைந்து உலைந்து விரைவுகொண்டு வருவதை கண்டார். அவை செவி முன்கோட்டி துதிக்கை சுழற்றின. சேற்றை அள்ளி தன் மேலும் முன்னாலும் வீசிக்கொண்டன. அவை அனைத்துமே இந்த யானையின் களிவெறியை தாங்களும் கொண்டுவிட்டிருந்தன.

அவை இணைந்ததுமே ஒன்றையொன்று மத்தகங்களால் மோதின. சேற்றில் விழுந்து புரண்டெழுந்து சேற்றை அள்ளி ஒன்றின்மேல் ஒன்று வீசி சேற்று உருளைகள் என்றாகி கொம்புகளால் முட்டிக்கொண்டு உடல்களால் உரசிக்கொண்டு விளையாடின. ஒன்றையொன்று அவை முட்டுகையில் மேலிருந்த அவர் உடலுக்குள் திரவங்கள் நலுங்கின. அவற்றின் பிளிறலோசை கேட்டு வயிறு முரசுத்தோலென அசைவு கொண்டு அதிர்ந்தது. அத்தருணத்தில் மிகப் பாதுகாப்பான இடம் தான் அமர்ந்திருக்கும் யானையின் மத்தகமே என்று உணர்ந்து கட்டுக் கயிற்றை இரு கைகளாலும் பற்றி கால்களை அதில் கோத்துக்கொண்டு உடலை நன்கு மத்தகத்தின்மேல் படியவைத்து அட்டையென ஒட்டி அவர் அமர்ந்திருந்தார்.

யானைகளின் வெறி ஏறி ஏறி வந்தது. ஆடல் நீளும்தோறும் அவை களிவெறி கொண்டன. எங்கோ ஓரிடத்தில் அவை சலிப்படையக்கூடும். களைப்புகொள்ளக்கூடும். மெல்லமெல்ல அவர் சலிப்புற்று உளம் ஓய்ந்து அந்தப் பெருங்களியாட்டை நோக்கியபடி அதன்மேல் அமர்ந்திருந்தார். ஓரிடத்தில் அவர் அமர்ந்திருந்த யானை கால்சறுக்கி சிறு குழியொன்றில் விழுந்தது. பிளிறியபடி அது எழ முயல மீண்டும் சறுக்கி பக்கவாட்டில் விழுந்தது. அத்தருணத்தில் அவர் அதிலிருந்து பாய்ந்து சேற்றில் விழுந்து புரண்டு அப்பால் சென்றார். அவரை நோக்கி இரண்டு யானைகள் துதிக்கை நீட்டியபடி ஓடிவந்தன. சேற்றுடன் உடலை பொருத்தியபடி அசைவிலாது அவர் கிடந்தார். அவற்றின் துதிக்கைகள் அவருக்காக துழாவின. குழிக்குள் சிக்கிக்கொண்ட யானை பிளிறலோசை எழுப்ப அவை எண்ணம் மாற்றி அந்த யானையை நோக்கி சென்றன.

அவர் சேற்றில் படுத்தபடியே நீந்திச் சறுக்கி இறங்கி கங்கை நோக்கி சென்றார். நீர்விளிம்பை அடைந்ததும் பாய்ந்து நீருக்குள் இறங்கி மூச்சடக்கி மூழ்கி ஒழுக்கினூடாகவே சென்று நெடுந்தொலைவில் மேலெழுந்து தலைமயிரை நீவிப் பின்னாலிட்டபடி நோக்கியபோது யானைகள் ஒன்றையொன்று முட்டியபடி சேற்றில் களியாடிக்கொண்டிருப்பதை பார்த்தார். அங்கிருந்து நோக்கியபோது யானைகளை விழுங்கிய வயிற்றுக்குள் அவை எழுந்து போரிடுவதுபோல சேறு தனக்குத்தானே கொப்பளித்துக் குமிழ்த்து எழுந்து போரிட்டுக்கொண்டிருந்தது. கங்கை அவரை விசைகொண்டு தூக்கிச் சென்று அவற்றிலிருந்து அகற்றியது. அவை சேற்றில் சிறு கொப்புளங்கள் என்றாயின.

“என்ன நிகழ்கிறது? இங்கு என்ன நிகழ்கிறது?” என்று அவர் கூவினார். அவர் அருகே வந்த படைத்தலைவன் ஒருவன் “அனைத்து நெறிகளும் அழிந்துவிட்டன, ஆசிரியரே. வீரர்கள் ஒருவரையொருவர் கொன்று குவிக்கிறார்கள்” என்றான். கைகளை விரித்து “இங்கிருப்பவர்கள் பல்லாயிரம் பித்தர்கள். இனி இங்கு எந்த ஆணைக்கும் மதிப்பில்லை. எந்தச் சொல்லும் பொருள் கொள்ளப்போவதில்லை” என்றான். “முரசுகள் முழங்கட்டும்! ஆணைகள் எழுந்தபடியே இருக்கட்டும்! ஆணைகள் ஒருபோதும் நிலைக்க வேண்டியதில்லை!” என்று கிருபர் கூவினார். படைத்தலைவன் உரக்க நகைத்து “ஆனால் இங்கே குருதி கருமையாக இருக்கிறது அல்லவா?” என்றான்.

“என்ன சொல்கிறீர்?” என்று அவர் கேட்டார். அவனுடைய கண்கள் வெறித்திருக்க முகம் நகைப்பில் விரிந்தது. “பெரிய எருமை… அது கருமை கொண்டிருக்கிறது. ஆனால் மிகச் சுவையானது” என்றான். பின்னர் வெறிக்கூச்சலிட்டபடி திரும்பி தன் எதிரே வந்த இருவரை நோக்கி வாளை சுழற்றியபடி சென்றான். “என்ன சொல்கிறாய்? என்ன சொல்கிறாய்?” என்று கிருபர் கூவினார். வாளை வீசி இருவரையும் வெட்டி வீழ்த்தியபடி உடலெங்கும் குருதி வழிய அவன் “தின்போம்! அனைத்தையும் தின்போம்!” என்றான். “என்ன சொல்கிறாய்?” என்று கிருபர் உடைந்த குரலில் கூச்சலிட்டார். “தின்போம்! தின்போம்! தின்போம்!” என்று கூவியபடி அவன் கிருபரை நோக்கி வந்தான். அவன் கையில் இருந்த வாள் சுழன்றது. “தின்போம்! தின்போம்!”

“அறிவிலி, என்ன செய்கிறாய்?” என்று அவர் கூவிக்கொண்டிருக்க அவன் பாய்ந்து கீழே விழுந்துகிடந்த உடல்கள்மேல் புரவியை ஏற்றி அணுகிவந்து வாளை வீசி அவரை தாக்கினான். கிருபர் தலை குனிந்தும் உடல் வளைத்தும் அவனை ஒழிந்தார். அவனுடைய வெட்டுகள் தேர்த்தூண்களில் பட்டன. “என்ன செய்கிறாய்? பித்து எழுந்துவிட்டதா உனக்கு? என்ன செய்கிறாய்?” என்று கேட்டார். அவன் “யானை! கரிய யானை!” என்றபடி மீண்டும் அவரை வெட்டினான். அவனுடைய வெட்டு தேர்த்தூணில் பதிந்து ஒருகணம் செயலிழக்க கிருபர் தன் கையிலிருந்த அம்பால் அவன் கழுத்தைக் கிழித்து காலால் அவன் நெஞ்சை ஓங்கி உதைத்து வீழ்த்தினார். புரவியிலிருந்து சரிந்து அவன் கீழே நெளிந்துகொண்டிருந்த உடல்களின் நடுவே விழுந்தான். இருமுறை புரண்டதும் சேற்றுக்கருமையில் மறைந்தான்.

புரவி திகைத்து நின்று தன்னைத்தானே சுழன்று பின் வெறிகொண்டு பாய்ந்து ஓடத்தொடங்கியது. கிருபர் திகைத்து தன்னைச் சுற்றி அலைகொண்டிருந்த மனித உடல்களைப் பார்த்தபடி தேர்த்தட்டில் நின்றார். பின்திரும்பிச் சென்றுவிடலாமென எண்ணியபோது தன் முன் சிகண்டியை பார்த்தார். ஒருகணம் அவர் உள்ளம் ஆறுதலை அடைந்தது. இருண்ட சிறையொன்றுக்குள் சிறு வெளிச்சமென வாயில் திறப்பதுபோல். இந்தக் கரிய உடல்வெளியில், பித்துப்பெருக்கில் சற்றேனும் சித்தம் பிறழாதவர் சிலரே. சிகண்டியுடன் போரிடலாம். அச்செயலினூடாக மீளலாம். இங்கிருந்து அப்பால் சென்றுவிடலாம்.

சித்தம் பிறழ்ந்தவருடன் போரிடுவதைப்போல் பொருளற்றது பிறிதில்லை. அது நம்மையும் சித்தம் பிறழவைக்கிறது. எவ்வகையிலேனும் நம் உள்ளம் பொருள் அளிக்கும் ஒரு செயலை மட்டுமே நம்மால் செய்ய இயல்கிறது. பொருளற்ற ஒன்றை செய்கையில் அகம் திடுக்கிடுகிறது. பொருளிலாத ஒரு செயலை மீள மீள செய்பவன் தன்னுள் திரண்டிருக்கும் பொருளை இழக்கிறான். புவியென்பது அவ்வாறு உள்ளே திரட்டி வைத்திருக்கும் பொருள்களின் தொகை மட்டுமா? புவியென்பது வெறும் சொற்களின் படலம் மட்டுமா? இக்களத்தில் தனக்கென சற்றேனும் அடையாளம் உடையவர்கள் மட்டுமே சித்தம் எஞ்சியிருக்கிறார்கள். எல்லோரும் அடையாளங்களை இழந்து, ஆடைகளை இழந்து வெற்றுடல்களாக கொன்றும் செத்தும் விழுந்துகொண்டிருக்கிறார்கள்.

கிருபர் அம்புகளைத் தொடுத்தபடி சிகண்டியை நோக்கி சென்றார். அப்போதுதான் சிகண்டியும் அவரை நேரில் கண்டார். சிகண்டியின் கண்களிலும் முதலில் வந்து மறைந்தது ஓர் ஆறுதல்தான் என்பதை கிருபர் கண்டார். இருவரும் அம்புகளால் கோத்துக்கொண்டபோது தோள் வளைத்து ஆரத்தழுவிக்கொண்ட உணர்வு ஏற்பட்டது. அம்புகளைத் தொடுத்து தேர்த்தூண்களையும் முகடுகளையும் அறைந்தனர். கவசங்களைத் தாக்கி அதிரச்செய்தனர். ஒருவரையொருவர் அம்புகளால் அறைந்தபடி சுற்றிவந்தனர். ஆனால் அது ஓர் உரையாடலாக இருந்தது. சொற்களுக்குச் சொற்கள் வைப்பதுபோல அம்புகளால் ஒருவரை ஒருவர் அணுகினர்.

கிருபர் “என்ன நிகழ்கிறது இங்கே?” என்று கேட்டார். சிகண்டி “பித்து! வெறும் பித்து! போர் தொடங்கிய நாளில் இருந்த பித்துதான் இது. இப்போது பிற அனைத்தும் உதிர்ந்து அது மட்டுமே எஞ்சியிருக்கிறது” என்றார். “இதை இங்கு நிறுத்திக்கொள்வோம். இங்கிருந்து ஒருவர்கூட உயிரோடு திரும்பப்போவதில்லை” என்று கிருபர் சொன்னார். “இதை இனி நம்மால் நிறுத்தமுடியாது. இப்படைகளை நம்மால் இனி ஆள இயலாது. நோக்குக, இந்தப் பெருந்திரளுக்கு ஒரு சொல்லைக்கூட எவரும் அளிக்க இயலாது” என்றார் சிகண்டி.

“இதற்கு புரிவது பித்தின் மொழி எனில் அந்த மொழியில் இவர்களிடம் எவராவது பேசுக! இக்கணமே இதை நிறுத்தவில்லையெனில் இறுதி உடல் வரை வெட்டி வீழ்த்தி தாங்களும் வீழ்வார்கள்” என்றார் கிருபர். “இது ஒற்றைப்பித்து அல்ல. பல்லாயிரம் மானுடர்களின் உள்ளங்கள் இணைந்தெழும் பெரும்பித்து. இதனுடன் உரையாட பித்தரில் பெரியோனாகிய முக்கண்ணன் கயிலை மலையிலிருந்து இறங்கி வரவேண்டும்” என்று சிகண்டி கூறினார். சிரித்தபடி சுழன்று நோக்கி “சிறுதுளைக்குள் சென்றுமறையும் நீர்ப்பெருக்கின் இறுதிச் சுழலல்போல் இருக்கிறது” என்றார்.

“நிறுத்துக! இதை நிறுத்துவோம்! பாஞ்சாலரே, இங்கு என்னால் நின்றிருக்க இயலவில்லை. என் தன்னிலையின் ஒவ்வொரு விளிம்பும் உடைந்து அகல்கிறது. எக்கணமும் நானும் பித்து கொண்டு இக்கொந்தளிப்பில் கலந்துவிடக்கூடும்” என்றார் கிருபர். “ஆம், நானும் பித்துக்கு எதிராக என்னை தக்க வைத்துக்கொள்ளவே போரிட்டுக்கொண்டிருக்கிறேன். ஆசிரியரே, இந்த ஒவ்வொரு அம்பும் நதிப்பெருக்கில் செல்பவன் கரை நோக்கி வீசும் சரடுகளை போலத்தான். வழுக்குப்பாறைகளில் தொற்றி கைநழுவி பள்ளத்தில் விழுந்துகொண்டிருப்பதைப்போல் உணர்கிறேன்.”

“இதை எவ்வண்ணமேனும் நிறுத்தியாகவேண்டும்!” என்று கிருபர் வெறிகொண்டு கூவினார். “இதை நிறுத்த இன்று இயல்பவர் இளைய யாதவர் மட்டுமே. அவர் நிறுத்த முயலவில்லை. அங்கு நோக்குக, இக்களத்தில் இன்னும் அதே இனிய புன்னகையுடன் திகழ்கிறது அவர் முகம்!” என்றார் சிகண்டி. கிருபர் திகைத்து திரும்பிப் பார்த்தார். அஸ்வத்தாமனும் அர்ஜுனனும் போர் புரிந்துகொண்டிருந்தனர். அஸ்வத்தாமனின் முகம் நேரெதிரில் வந்த கதிரொளி பட்டு சுடர் கொண்டிருந்தது. அர்ஜுனன் தள்ர்ந்தவன்போல் வெற்று அம்புகளால் போர் புரிந்துகொண்டிருந்தான். ஊழ்கத்திலென நிறை நகையுடன் முகம் கனிந்திருக்க தேர் முகப்பில் இளைய யாதவர் அமர்ந்திருந்தார்.

“அந்தப் பெரும்பழியன் பாரதவர்ஷத்தை சூறையாடிவிட்டான், பாஞ்சாலரே!” என்றார் கிருபர். “இந்நிலம் மீது அவனுக்கு என்ன வஞ்சம்! இத்தனை பலிகொண்டு அவனுள் நிறையப்போவதுதான் என்ன?” சிகண்டி “இவ்வனைத்தையும் படைத்தவன் தானே என்பதுபோல் அத்தனை உரிமையுடன் இவை அனைத்தையும் அழிக்கிறான். ஆக்கமும் அழிவும் ஒன்றே என்பதுபோல் நிலைமாறாதிருக்கிறான். கிருபரே, அவன் யார்? என்றேனும் உங்கள் உள்ளம் உணர்ந்திருக்கிறதா அவன் எவன் என்று?” என்றார். கிருபர் திகைத்து சொல்லவிந்து மீண்டும் இளைய யாதவரை நோக்கினார். குரல் தாழ்ந்து “ஆம், என்றும் உணர்ந்திருக்கிறேன். அவன் உடல் அவனை மறைத்துக்கொண்டிருக்கிறது. அவ்வுடல் கொண்ட இளமையும் மூப்பும் அழகும் அசைவுமே இப்புவியில் இன்றிருக்கும் மாபெரும் மாயை” என்றார்.

கிருபர் அவ்வுரையாடல் வெறும் அம்புகளால் நிகழ்ந்துகொண்டிருப்பதை உணர்ந்தார். சிகண்டியின் விழிகளை சந்தித்தபோது அவை நோயுற்ற பன்றியின் கண்கள்போல் சிவந்து வெம்மை கொண்டிருந்தன. இத்தனை பொழுது தன்னுடன் உரையாடிக்கொண்டிருந்தது அவன்தானா? அம்புகளினூடாக அவரை வந்தடைந்தவன் பிறிதொருவனா? விழிநோக்கி அறிபவன் மிக அப்பால் இருந்தான். நெடுங்காலத்துக்கு முன்னரே இறந்துவிட்டவன்போல. நூறு அடி மண்ணை அகற்றி புதைந்திருக்கும் அவன் உடலை நோக்குவது போலிருந்தது.

கிருபர் சிகண்டியின் ஆற்றல் கூடவோ குறையவோ செய்யாது அவ்வாறே நீடிப்பதுபோல் உணர்ந்தார். அம்புகள் எதையும் அவர் நோக்கவில்லை. ஆனால் அவர் கையிலிருந்து எழுந்த அம்புகள் கிருபர் செலுத்திய ஒவ்வொரு அம்பையும் அறைந்து வீழ்த்தின. ஒருகணத்தில் கிருபர் சலித்து வில்லை தாழ்த்தினார். “இதனால் எப்பொருளும் இல்லை பாஞ்சாலனே, கொல்க என்னை!” என்றார். மிகச் சரியாக அக்கணத்தில் சிகண்டியும் தன் வில்லை தாழ்த்தினார். “ஆம், இத்தருணத்தில் இங்கு போரிடுபவர்கள் பித்தர்கள். இங்கு இயற்ற வேண்டிய பொருளுள்ள செயல் ஒன்றே. அம்பெடுத்து கழுத்தில் வைத்துக்கொள்வது. இக்களத்திலிருந்து உயிருடன் எஞ்சுவதுபோல் கீழ்மையும் பொருளின்மையும் பிறிதொன்றில்லை” என்றார்.

கிருபர் சிகண்டியுடன் கங்கைக்கரையில் தனித்து நடந்துகொண்டிருந்தார். அவ்வண்ணம் ஒரு போர் முன்பு நிகழ்ந்திருக்கக் கூடுமா என வியந்தார். அது போரல்ல, போருக்கு பருப்பொருளின் எல்லைகள் உள்ளன. குருக்ஷேத்ரத்தில் நிகழ்ந்தது வெறும் கற்பனை. மண்ணிலும் விண்ணிலும் பெருகிப் பரந்து வஞ்சமும் துயரமும் அறவீழ்ச்சியும் பழியும் கீழ்மையுமென அது பெருகி நின்றது. அது போரல்ல, இப்புவியில் எது மானுடனின் எல்லை என்பதை அவன் எண்ணம் நீட்டிநீட்டிச் சென்று தொட்டு அறிந்த ஒரு தருணம் மட்டுமே. எவ்வண்ணம் செல்ல இயலும், எதுவரை அடைய இயலும் என்று அறிந்து திகைத்து நின்ற உச்சகணம் மட்டுமே.

கிருபர் “இவ்வனைத்திலிருந்தும் விடுபட்டு எங்கேனும் சென்று அமர விழைகிறேன். எல்லை எனும் ஒரு சொல்லை இக்களத்திலிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறேன். அந்த ஊழ்கநுண்சொல்லை வாளென்றாக்கி இறந்தகாலச் சரடுகள் அனைத்தையும் வெட்டி வீழ்த்துவேன். அதை ஒரு குடம் நீரென்றாக்கி என் உடலை கழுவுவேன். ஒரு கலம் அமுதென்றாக்கி என் உயிரை மீட்டுக்கொள்வேன்” என்றார். சிகண்டி “எவருக்கேனும் இங்கிருந்து எதையேனும் கொண்டு செல்வது இயல்வதா என்ன?” என்றார்.

கிருபர் நெடுந்தொலைவில் குருக்ஷேத்ரத்தைக் கண்டு நெட்டுயிர்த்தார். “அங்கு அழிந்த ஒவ்வொரு உயிரும் ஒரு சொல்லென்று உணர்கிறேன். பொருளேற்றம் கொண்ட சொற்கள் முதலில் விழுந்தன. கொன்று கொன்று தங்களை அழித்துக்கொண்டு மறைந்தன. வெற்றுச் சொற்கள் எஞ்சி இன்று கொன்று களியாகின்றன. இறுதிச் சொல்லும் மறைந்து வெறும் சித்தம் எஞ்சுகையில் இக்களம் நிறைவடையும்” என்றார். ஓசையிலாது கங்கை ஒழுகிக்கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் அதை பார்த்தபடி அமர்ந்திருந்தனர். “ஓசையிலாத நதியைப்போல் உள்ளத்தை அச்சுறுத்துவது பிறிதில்லை. ஏனெனில் ஓசையிலா ஒழுக்கு என உள்ளத்தை அது மாற்றுகிறது” என்றார் கிருபர்.

கிருபர் தேர்த்தட்டில் தான் கால் தளர்ந்து அமர்ந்திருப்பதை கண்டார். அப்பால் சிகண்டியும் தேர்த்தட்டில் அமர்ந்திருக்க இரு தேர்களுக்கும் நடுவே புகுந்து அவர்களை விலக்கிய வெளியில் உடல்கள் நுரையென குமிழிவெடித்து அடங்கிக்கொண்டிருந்தன.