சொல்வளர்காடு - 7
[ 9 ]
நள்ளிரவில்தான் சௌனகர் பாண்டவர்களின் மாளிகைக்கு திரும்பிவந்தார். விதுரரின் அமைச்சு மாளிகைக்குச் சென்று அவருடன் நெடுநேரம் அமர்ந்திருந்தார். அங்கே சுரேசரை வரச்சொல்லி நடந்தவற்றைப்பற்றி தருமன் கேட்டால் மட்டும் சொல்லும்படி சொல்லி அனுப்பினார். சுரேசர் திரும்பி வந்து பாண்டவர்கள் ஐவருமே துயின்றுவிட்டதாக சொன்னார். சௌனகர் நம்பமுடியாமல் சிலகணங்கள் நோக்கி நின்றார். “ஐவருமேவா?” என்றார்.
“ஆம், அமைச்சரே. முதலில் துயிலறைக்குச் சென்றவர் அரசர்தான். அவர் சென்றதுமே இளைய பாண்டவர் பீமன் உணவறைக்குச் சென்றார். பார்த்தன் வழக்கமான விற்பயிற்சிக்குச் சென்றார். சிறிய பாண்டவர் நகுலன் புரவிச்சாலைக்குச் சென்றார். சகதேவன் சற்றுநேரம் சுவடி ஆராய்ந்துகொண்டிருப்பதைக் கண்டேன். நீராடி உணவருந்திவிட்டு அரசர் உடனே படுத்துக்கொண்டார். அவர் உண்மையிலேயே துயில்கிறாரா என நான் ஏவலனிடம் கேட்டேன். அவர் படுத்ததுமே நீள்மூச்சுகள் விட்டார். சற்றுநேரத்திலேயே ஆழமான குறட்டையொலி எழத்தொடங்கிவிட்டது என்றான். திரும்பிவரும்போது பயிற்சிமுடித்து பார்த்தன் நீராடச்செல்வதை கண்டேன். அவர் முகம் அமைதியுடன் இருந்தது.”
“நான் சுவடியறையில் அமர்ந்து ஓலைகளை சீரமைத்தேன். பதினெட்டு செய்திகள் அனுப்பவேண்டியிருந்தது. இரவு ஒலிமாறுபாடு கொள்ளத்தொடங்கிய நேரத்தில் இளையோர் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டு பேரரசியின் தூதன் வந்தான். நான் எழுந்துசென்று நோக்கியபோது இளவரசர் நகுலன் முற்றத்தில் ஒரு புரவிக்குட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அவர் சிரிக்கும் ஒலி கேட்டது. பீமன் உணவுண்டு கைகளைக்கூட கழுவாமல் அப்படியே உணவறைக்குள் படுத்திருந்தார். நிறைவுடன் உணவுண்டால் அவர் முகம் தெய்வச்சிலைகளுக்குரிய அழகை கொண்டுவிடும். அருகே ஒழிந்த பெருங்கலங்கள் கிடந்தன. அவற்றை ஓசையில்லாது எடுத்து அகற்றிக்கொண்டிருந்தனர்.”
“ஐவரும் துயில்வதற்காக காத்திருந்தேன். அவர்கள் துயில்வதைக் கண்டபின் அவர்கள் ஆழ்ந்து துயின்றுவிட்டார்கள் என்று குந்திதேவிக்கு செய்தியனுப்பினேன்” என்றார் சுரேசர். சௌனகர் “பேரரசி துயிலமாட்டார்” என்றார். சுரேசர் புன்னகை செய்தார். சௌனகர் “எப்படி துயில்கிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது!” என்றார். விதுரர் “அவர்கள் எதிலிருந்தோ விடுதலைகொண்டிருப்பார்கள்…” என்றார். சௌனகர் அவரை ஒருகணம் அசைவிலா விழிகளுடன் நோக்கினார். “எத்தனை உருமாற்றுகளில் இன்று புகுந்து நடித்திருக்கிறார்கள். அனைத்து வண்ணங்களையும் அகற்றிவிட்டு ஆன்மா ஓய்வெடுக்க விழையும் அல்லவா?” என்றார் விதுரர். அவர் சொல்வதை புரிந்துகொள்ளாமல் “ஆம்” என்றார் சௌனகர்.
விதுரர் நிலையழிந்தவராக அனைத்துச் சுவடிகளையும் தன் முன் போட்டு கையால் அளைந்துகொண்டிருந்தார். எந்தச் சுவடியையும் அவர் வாசிக்கவில்லை என்று தெரிந்தது. சிற்றமைச்சர் பார்க்கவர் வந்து தலைவணங்கியபோதுதான் சௌனகர் துரியோதனனை நினைத்துக்கொண்டார். அரசனைப் பற்றிய எண்ணங்களை விலக்கிக்கொள்ளத்தான் விதுரரும் தானும் வேறுபேச்சுகளில் ஈடுபட்டோமா என எண்ணினார்.
பார்க்கவர் “அரசரை ஆதுரசாலைக்கு கொண்டுசென்றிருக்கிறார்கள்” என்றார். விதுரர் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து ஒரு ஓலையை கையால் சுண்டிக்கொண்டிருந்தார். “எலும்புகள் பல முறிந்துள்ளன. அரசர் நெடுநாட்கள் ஆதுரசாலையிலேயே இருக்கவேண்டியிருக்கும்…” என்றார் பார்க்கவர். விதுரர் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. “பேரரசருக்கு செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் சொன்னபோது விதுரர் நிமிர்ந்து நோக்கினார்.
“செய்தியுடன் சென்றவர் பால்ஹிகநாட்டு இளவரசர் பூரிசிரவஸ்” என்று பார்க்கவர் சொன்னார். “ஆம், அவர் வந்திருப்பதாக சொன்னார்கள்” என்றார் விதுரர். “படைக்கூட்டு குறித்து பேசுவதற்காக அங்கர் அவரை அழைத்திருந்தார். சொல்தேர்ந்தவர் என்பதனால் அவரையே பேரரசரிடம் அனுப்பியிருக்கிறார்கள். அரசருக்கு நிகழ்ந்தவற்றை அவர் சொல்வதைக்கேட்டு பேரரசர் வெறுமனே அமர்ந்திருந்தார். பின்னர் ஒரு சொல்லும் பேசாமல் சூதர்களிடம் இசையைத் தொடரும்படி ஆணையிட்டுவிட்டு பால்ஹிகர் செல்லலாம் என்று கையசைத்தார். பால்ஹிகர் தலைவணங்கி வெளியேறினார். அரசர் இப்போதும் இசைகேட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.”
விதுரர் ஓலைச்சுவடியை சுழற்றிக்கொண்டு சிலகணங்கள் இருந்துவிட்டு “இந்திரப்பிரஸ்தத்தின் அரசி என்ன செய்கிறார் என்று பார்த்து வாரும்” என ஒற்றர் கைவல்யரை அனுப்பினார். அவர் திரும்பி வந்து “அரசி அந்தியிலேயே காந்தார அரசியர்மாளிகையில் துயில்கொண்டுவிட்டார். அங்கே பிற பெண்களெல்லாம் விழித்திருக்கின்றனர்” என்றார். விதுரர் “பேரரசிக்கும் நிகழ்ந்தவை தெரியுமல்லவா?” என்றார். “அங்கே அனைவருக்கும் தெரியும்” என்றார் கைவல்யர். “பேரரசி அதை செவிகொடுத்துக் கேட்கவில்லை. அரசரின் இரு தேவியர் மட்டும் கிளம்பி ஆதுரசாலைக்கு சென்றுள்ளனர். அங்குள்ள பெண்கள் எவரும் அரசர் புண்பட்டிருப்பதை ஒரு பொருட்டாக எண்ணுவதாகத் தெரியவில்லை.”
“என்ன நிகழ்கிறது அங்கே?” என்றார் விதுரர். “நாளை காலை கொற்றவை ஆலயத்தில் ஏழு எருமைகளை பலிகொடுக்கவேண்டுமென பேரரசி ஆணையிட்டிருக்கிறார்களாம். எருமைகள் வந்துவிட்டன. அவற்றுக்கான பூசனைகள் நிகழ்கின்றன. அவற்றுக்கு பூசைசெய்ய தென்னாட்டுப் பூசகிகள் பதினெட்டுபேர் அங்கே வந்துள்ளனர்.” “ஏழு எருமைகளா?” என்றார் விதுரர். “ஏழா?” திரும்பி சௌனகரை நோக்கிவிட்டு “அது பெருங்குருதிக்கொடை அல்லவா?” என்றார்.
சௌனகர் “நான் கேள்விப்பட்டதே இல்லை” என்றார். “கொற்றவை நம் குலம் மீது பெருஞ்சினம் கொண்டிருந்தால் பழியீடாக அளிக்கப்படும் பலி அது. ஏழு எருமைக்கடாக்களின் குருதியால் அன்னையை நீராட்டுவார்கள். அவள் காலடியில் அக்கடாக்களின் தலைகள் வைக்கப்படும். பின்னர் அவற்றின் கொம்புகள் வெட்டப்பட்டு ஊதுகருவிகளாக்கப்படும். அவை காலம்தோறும் அன்னையிடம் பொறுத்தருள்க தேவி என்று முறையிட்டபடி இருக்கும்” என்றார் விதுரர். பின்பு தலையை அசைத்தபடி “முன்பெல்லாம் இட்டெண்ணித் தன்தலை கொடுக்கும் வழக்கம் இருந்தது. இப்போதுகூட தென்னாட்டில் அவ்வழக்கம் உள்ளது” என்றார்.
அச்சொற்கள் சௌனகரின் உள்ளத்தில் மெல்லிய நடுக்கத்தை உருவாக்கின. “தென்னாட்டில் இளம்பெண் ஒருத்தியை கொற்றவையென மாற்றுரு அணிவிப்பார்கள். அவளுக்குப் புலித்தோலாடை அணிவித்து கையில் முப்புரிவேல் அளிப்பார்கள். நுதல்விழி வரைந்து நெற்றியில் பன்றிப்பல்லை பிறையெனச் சூட்டுவார்கள். வேங்கைப்புலியின் குருளைமேல் அவளை அமரச்செய்து மன்றுநிறுத்தி அவள் காலடியில் தலைவெட்டி இட்டுவிழுவார்கள்.” சௌனகர் “குலப்பழிக்காகவா?” என்றார். “ஆம், பெண்பழியே பெரும்குலப்பழி என்பது தென்னாட்டவர் நம்பிக்கை.” சௌனகர் “இவர்கள் காந்தாரர்கள்” என்றார். “வேதம்பிறக்காத காலத்திலேயே காந்தாரத்து மக்கள் தென்னகம் புகுந்துவிட்டனர் என்பது நூல்கூற்று. அவர்களின் முறைமைகள் நிகரானவை” என்றார் விதுரர்.
“அங்கே விறலியர் அமர்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று கைவல்யர் சொன்னார். “கொற்றவையைப் பற்றிய பாடல்கள். வேட்டுவவரி என்று அதை சொன்னார்கள். கற்பாறைகள் உருள்வதுபோன்ற தாளம். வெடித்தெழுவதுபோன்ற சொற்கள்… அதைக் கேட்டுநிற்பதே கடினமாக இருந்தது.” விதுரர் “பேரரசியின் உள்ளம் கொதித்துக்கொண்டிருக்கிறது” என்றார். “ஆறிவிடும். ஏனென்றால் அவர் அன்னை” என்றார் சௌனகர். “இல்லை, அமைச்சரே. பேரரசரின் உள்ளம் ஆறும். அவர் தன் மைந்தரை ஒருபோதும் துறக்கமாட்டார். அதை இப்போது தெளிவுறவே காண்கிறேன். ஆனால் பேரரசி அமைதியுறவே போவதில்லை… இனி அரசருக்கு அன்னையென ஒருவர் இல்லை.”
சௌனகர் நெஞ்சுக்குள் திடுக்கிட்டார். “ஏன்?” என்ற கேள்வி பொருளற்றது என அவரே உணர்ந்திருந்தார். “பெண்கள் இங்கு அணியும் அனைத்து உருவங்களையும் களைந்துவிட்டுச் சென்றடையும் இடம் ஒன்றுண்டு” என்றார் விதுரர். மெல்ல அங்கே ஆழ்ந்த அமைதி உருவாகியது. சௌனகர் எழுந்து “நான் அரண்மனைக்குச் செல்கிறேன். நானும் துயில்கொள்ளவேண்டும்” என்றார். விதுரர் “என்னால் துயிலமுடியுமென தோன்றவில்லை. இவையனைத்தும் முடிவுக்கு வரும்வரை என் நரம்புகள் இழுபட்டு நின்றிருக்கும்” என்றார்.
தளர்ந்த காலடிகளுடன் சௌனகர் அரண்மனைக்கு வந்தார். அரசரும் தம்பியரும் முழுமையான துயிலில் இருப்பதாக ஏவலன் சொன்னான். ஒற்றர்களை வரவழைத்து துரியோதனன் எப்படி இருக்கிறான் என்று தெரிந்துகொண்டார். அவன் எலும்புகள் சேர்த்துக்கட்டப்பட்டு உடல்முழுக்க தேன்மெழுகும் வெண்களிமண்ணும் கலந்து பற்று போடப்பட்டிருப்பதாகவும் நெஞ்சுக்குள் நுரையீரல் கிழிந்திருப்பதனால் மூச்சுவழியாக குருதி தெறிக்கிறது என்றும் அகிபீனா மயக்கில் துயில்கொண்டிருப்பதாகவும் ஒற்றர்கள் சொன்னார்கள். கௌரவர்கள் அனைவரும் ஜயத்ரதனும் பூரிசிரவஸும் ஆதுரசாலையில்தான் அப்போதும் இருந்தார்கள்.
களைப்புடன் அவர் படுக்கைக்கு சென்றார். கண்களுக்குமேல் மெழுகை அழுந்தப் பூசியதுபோல துயிலை உணர்ந்தார். படுத்துக்கொண்டதும் மெல்லிய ரீங்காரமென அன்று நிகழ்ந்த அத்தனை பேச்சுக்களும் கலந்து அவர் தலைக்குள் ஒலித்தன. மயங்கி மயங்கிச் சென்றுகொண்டிருக்கையில் அவர் ஒரு துணுக்குறலை அடைந்து உடல் அதிர எழுந்து அமர்ந்தார். அன்று நிகழ்ந்தவை உண்மையிலேயே நிகழ்ந்தனவா? உளமயக்கு அல்லவா? கனவுகண்டு விழித்துக்கொண்டது போலிருந்தது. ஆனால் கனவென ஆறுதல்கொள்ளமுடியாதது அது. அது உண்மையில் நிகழ்ந்தது.
உண்மையில் நிகழ்ந்திருக்கிறது! உண்மைநிகழ்வு என்பது தெய்வங்களால்கூட மாற்றிவிடமுடியாதது. கற்பாறைகளைப்போல அழுத்தமாக நிகழுலகில் ஊன்றி அமைவது. எத்திசையில் எப்படி அணுகினாலும் அது அங்கே அப்படித்தான் இருக்கும். அவர் பெருமூச்சுவிட்டார். மீண்டும் படுத்துக்கொண்டபோது உள்ளம் எதிர்திசையில் திரும்பியது. கனவுகளும் கற்பனைகளும்தான் மேலும் அஞ்சத்தக்கவை. அவை வளர்ந்து பெருகுகின்றன. அவை விதைகள். உண்மைநிகழ்வென்பது கூழாங்கல். அது முடிவுற்றது. அதன்மேல் ஆயிரம் எண்ணங்களையும் சொற்களையும் ஏற்றலாம். அவை ஆடைகள்போல. மலைமேல் முகில்கள் போல. அடியில் அவை மாறாமல் அப்படித்தான் இருக்கும். அந்நிகழ்வு இனிமேல் எவராலும் எவ்வகையிலும் மாற்றத்தக்கதல்ல. ஆகவே அதை இனிமேல் முழுநம்பிக்கையுடன் கையாளமுடியும். எண்ணங்கள் கரைந்துகொண்டே இருக்கையில் ஏன் அந்த ஆறுதலை அடைகிறோம் என அவரே வியந்துகொண்டார்.
[ 10 ]
காலையில் வழக்கம்போல முதற்பறவைக்குரல் கேட்டு எழுந்துகொண்டு கைகளை விரித்து அங்கு குடிகொள்ளும் தேவர்களை வழுத்திக்கொண்டிருக்கையிலேயே வாயிலில் சுரேசர் நின்றிருப்பதை சௌனகர் கண்டார். அது நற்செய்தி அல்ல என்று உடனே உணர்ந்துகொண்டார். “ம்” என்றார். “நேற்று பின்னிரவே பீஷ்மபிதாமகர் தன் முடிவை அறிவித்துவிட்டிருக்கிறார். பேரரசரிடம் விடிகாலையில் அது தெரிவிக்கப்பட்டுவிட்டது” என்றார் சுரேசர். “ம்” என்றார் சௌனகர். “பிதாமகர் அரசரையே ஆதரிக்கிறார்.” அதை எதிர்பார்த்திருந்தாலும் சௌனகர் உடலில் ஒரு துணுக்குறல் அசைவு நிகழ்ந்தது. “ம்” என்றபின் கண்மூடி குருவணக்கத்தை முடித்துக்கொண்டு மெல்ல முனகியபடி எழுந்தார்.
சுரேசர் அங்கேயே நின்றிருந்தார். “அரசரிடம் தெரிவித்துவிட்டீர்களா?” என்றார் சௌனகர். “இல்லை, அவர் இன்னும் விழித்தெழவில்லை.” “நான் சென்றபின் தெரிவியுங்கள்…” என்றபின் சௌனகர் பெருமூச்சுடன் நீர்த்தூய்மைக்குச் சென்றார். சித்தமாகி திரும்பிவந்து ஒற்றர்களின் ஓலைகளை விரைந்து நோக்கிவிட்டு இந்திரப்பிரஸ்தத்திற்கு ஒரு செய்தியை அனுப்பினார். குந்தியிடமிருந்து வந்த செய்தியில் அவள் திருதராஷ்டிரரை நம்பாமல் பீஷ்மர்மேல் நம்பிக்கை வைத்து எழுதியிருந்தாள். அதற்கு மறுமொழியாக பீஷ்மரின் முடிவைப்பற்றி ஒருவரி அனுப்பினார்.
அவர் தருமனின் அரண்மனையை அடைந்தபோது கூடத்தின் வாயிலில் சுரேசர் நின்றிருந்தார். “எழுந்துவிட்டாரா?” என்றார் சௌனகர். “சித்தமாக இருக்கிறார்” என்றார் சுரேசர். “அவருக்குச் செய்தி சென்றுவிட்டதா?” என்றார் சௌனகர். “இல்லை, ஓலைகள் அனைத்தும் என்னிடமே உள்ளன.” சௌனகர் “நன்று” என உள்ளே சென்றார். அவரைக் கண்டதும் தருமன் புன்னகையுடன் எழுந்து “ஆசிரியருக்கு வணக்கம்” என்றார். நற்றுயிலில் அவரது முகம் மிகவும் தெளிந்திருந்தது. கண்களுக்குக் கீழிருந்த வளையங்கள் மறைந்திருந்தன. நீர்வற்றிய தசைகள் மீண்டும் குருதியொளி அடைந்திருந்தன.
அவரை வாழ்த்தியபின் சௌனகர் அமர்ந்துகொண்டு “நேற்று நாங்கள் பிதாமகரை பார்த்தோம். அச்செய்தியை அறிவிக்க சுரேசரை அனுப்பினேன். தாங்கள் துயின்றுவிட்டீர்கள்” என்றார். “ஆம்” என்ற தருமன் “என்ன நிகழ்ந்தது? பிதாமகர் என்ன சொன்னார்?” என்றார். சௌனகர் ஒரு கணம் தயங்கிவிட்டு நிகழ்ந்ததைச் சொல்லி முடித்தார். தருமன் முதலில் இயல்பான மலர்ச்சியுடன் கேட்கத்தொடங்கி மெல்லமெல்ல பதற்றம் அடைந்து இறுதியில் கொந்தளிப்புடன் பீடத்தின் கைப்பிடியை தன் கைகளால் பற்றிக்கொண்டார். அவர் சொல்லத்தொடங்கியபோது உள்ளே வந்த நகுலனும் சகதேவனும் மெல்ல அருகே வந்து உடல் விரைக்க நின்றனர். முடித்ததும் நகுலன் தருமனின் பீடத்தின் மேல்வளைவை நடுங்கும் கைகளால் பற்றிக்கொண்டான்.
“அவர் அதைச் செய்வார் என்று எண்ணினேன்” என்றார் தருமன். “துச்சாதனனை அழைத்துச்செல்லும் எண்ணம் அவர்களுக்கு வராதிருந்ததை நல்லூழ் என்றே சொல்வேன்.” “ஆம்” என்றார் சௌனகர். தருமன் “நானும் அவர் முன் செல்லவேண்டும். அவர் என்னையும் அவ்வாறு அடித்து தூக்கிப்போடவேண்டும். உயிர்பிரியுமென்றாலும் அது நல்லூழே. வலித்தும் விழிநீர் உகுத்தும் அவரது தண்டனையைக் கடந்துவருகையில் தூயவனாக இருப்பேன்” என்றார். சௌனகர் பெருமூச்சுடன் நகுலனை நோக்க அவன் உடனே புரிந்துகொண்டு “பிதாமகர் அரசாணை குறித்து என்ன சொன்னார்?” என்றான்.
“அதைத்தான் நான் புரிந்துகொள்ளமாட்டாது தவிக்கிறேன். சொல்லவந்ததும் அதுவே” என சௌனகர் தொடங்கினார். “இன்று காலையில் செய்தி வந்தது, பீஷ்மபிதாமகர் துரியோதனனை ஆதரிக்கிறார் என்று.” தருமன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை என விழிகள் ஒருகணம் அதிர்ந்தது காட்டியது. உடனே அவர் மீண்டு “அது அவரது ஆணை என்றால் அவ்வாறே ஆகுக!” என்றார். “பிதாமகரின் ஆணையை ஓலையால் அரசருக்கு அறிவித்திருக்கிறார்கள்…” என்றார் சௌனகர். “அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்று எண்ணக்கூடவில்லை… ஆனால் அதை நான் ஓரளவு உணர்ந்திருந்தேன். அவ்வாறு தாக்கியபோதே அவர் உள்ளம் உருகியிருக்கும். அவர் இக்குடியின் முதற்றாதை.”
“இல்லை, அதற்கப்பால் அவர் ஏதோ எண்ணியிருப்பார்” என வாயிலில் வந்து நின்றிருந்த அர்ஜுனன் சொன்னான். அவன் வந்ததை உணர்ந்திராத சௌனகர் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தார். “எதுவானாலும் இந்தச் சிறிய நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது. நாம் அடிமைகளாவோம். சற்றுகழித்து அந்த ஆயிரத்தவன் சவுக்குடன் திரும்ப வருவான்.” சௌனகர் நிலையழிந்தவராக “அவ்வாறல்ல… அது அத்தனை எளிதல்ல. பிதாமகர் அதையெல்லாம் எண்ணியிருக்கமாட்டார்” என்றார். “எண்ணினாலும் அன்றேலும் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. இனி அதைப்பற்றிய சொல்லாடல் தேவையில்லை” என்றார் தருமன்.
தருமன் முகம் மீண்டும் மலர்ந்துவிட்டதை சௌனகர் கண்டார். “அது பிதாமகர் நமக்கு அளித்த தண்டனை. தந்தையரின் தண்டனைகளிலும் அவர்களின் அருளே உள்ளது” என்றார். அர்ஜுனன் உரக்க “தாங்கள் அடிமைப்பணி செய்வதென்றால்…” என்று தொடங்க “நான் இயற்றிய பிழைக்கு அதுகூட ஈடாகாது” என்றார் தருமன். “ஆம், அதை செய்வோம். ஆனால் இங்கே நம் அரசியும் தொழும்பியாகியிருக்கிறாள்” என்றான் அர்ஜுனன். “அந்த இழிமக்களின் அரண்மனையில் அவள் ஏன் ஏவற்பணி செய்யவேண்டும்?” தருமன் தலையை அசைத்து “ஆம், ஆனால் அவள் நம் மனைவி. அதன்பொருட்டு அவள் அடையும் துயர்கள் அனைத்தும் அவளுடைய ஊழே” என்றார்.
“மடமை” என்றபின் அர்ஜுனன் “நான் இதில் ஒன்றும் சொல்வதற்கில்லை. எது நிகழ்கிறதோ அதுவே அமைக!” என்று கூறி வெளியே சென்றான். தருமன் “மடமை என்பதில் ஐயமில்லை. ஆனால் மடமையில் திளைப்பதாகவே எப்போதும் இதெல்லாம் அமைகிறது” என்றார். சௌனகர் “ஆம்” என்றபின் எழுந்து “நான் விதுரரை பார்த்துவிட்டு வருகிறேன்” என்றார். தருமன் “இனி அரசுசூழ்தல்கள் தேவையில்லை, அமைச்சரே. அஸ்தினபுரியின் குடியாக நீங்கள் இப்போது மாறிவிட்டீர்கள். இனி நீங்கள் ஆற்றும் எச்செயலும் அரசவஞ்சனையாக கொள்ளப்படும்” என்றார். சௌனகர் “ஆம்” என்றபின் எழுந்து தலையசைவால் விடைபெற்றார்.
வெளியே நின்றிருந்த சுரேசரிடம் “இளையவர் எங்கே?” என்றார். “உணவுச்சாலையில் இருக்கிறார்” என்றார் சுரேசர். “அவர் தொழும்பராக இருந்தாலும் மகிழ்ந்திருப்பார். அடுமனைப்பணியோ யானைக்கொட்டில் ஊழியமோ அமைந்தால் போதும்” என்றார் சௌனகர். சுரேசர் புன்னகை செய்தார். அவர்கள் நடக்கும்போது சுரேசர் “தொழும்பர் பணிக்கு இப்போதே அரசர் ஒருங்கிவிட்டார் எனத் தோன்றுகிறதே?” என்றார். “அவர் துயரத்தை தேடுகிறார். எங்காவது தன்னை ஓங்கி அறைந்து குருதியும் நிணமுமாக விழாமல் அவர் உள்ளம் அடங்காது” என்றார் சௌனகர்.
விதுரரின் அமைச்சுநிலையில் அவர் முந்தையநாள் இருந்த அதே பீடத்தில் அதே ஆடையுடன் இருந்தார். விழிகள் துயில்நீப்பினால் வீங்கிச்சிவந்திருந்தன. உதடுகள் கருகியவை போல் தெரிந்தன. அவர் வருவதை காய்ச்சல் படிந்த கண்களுடன் நோக்கி எழுந்து வணங்கிவிட்டு திரும்பி கனகரிடம் “என் சொற்கள் அவை என்று சொல்க!” என ஆணையிட்டார். சௌனகர் அமர்ந்ததும் “செய்தி அறிந்திருப்பீர்கள்” என்றார். “ஆம்” என்றார் சௌனகர். “இப்போது அனைத்தையும் நேரடியாக காந்தாரரே ஆடத்தொடங்கிவிட்டார்.”
“எவருக்காக?” என்று கசப்புடன் சௌனகர் கேட்டார். “அவரது தமக்கைக்காகவா? அவரை தமக்கை முகம்நோக்கி ஒரு சொல் எடுப்பார்களா இன்று?” விதுரர் கசப்புப் புன்னகையுடன் “அதெல்லாம் இனி எதற்கு? தொடங்கிய ஆடல், அதில் இனி வெற்றிதோல்வி மட்டுமே இலக்கு” என்றார். “என்ன சொல்கிறார் அரசர்? இன்னும்கூட எதுவும் முடியவில்லை. அவரது படைகள் எழுந்தால் அஸ்தினபுரி பணிந்தே ஆகவேண்டும். இளைய யாதவர் ஒரு சொல் சொன்னால் போதும்.” சௌனகர் பெருமூச்சுடன் “அமைச்சரே, பிதாமகரின் சொல்லே இறுதியானது என்று முன்னரே அரசர் சொல்லிவிட்டார்” என்றார்.
“இன்னமும் பேரரசரின் ஆணை மாறவில்லை… அவர் பிதாமகருக்காக தன் ஆணையை திரும்ப எடுத்துக்கொள்ளவில்லை” என்றார் விதுரர். “பேரரசரின் ஆணைப்படி இந்திரப்பிரஸ்தம் திருப்பி அளிக்கப்பட்டுவிட்டது. பாண்டவர்கள் அதன் அரசகுலம். அஸ்தினபுரியின் அரசர் அவர்களை தொழும்பராகக் கொள்ளமுயன்றால் அது படையெடுப்பேதான்…” சௌனகர் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் கொடையாக அளிக்கப்பட்ட நாட்டை மறுத்துவிட்டு தானே தொழும்பனாக வந்து நின்றால் என்ன செய்யமுடியும்?” என்றார். “என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சித்தம்பிறழ்ந்தவர்களின் உலகு போலிருக்கிறது” என்றார் விதுரர்.
“அவர் பிழையீடு செய்ய எண்ணுகிறார். பிதாமகரின் கைகளால் அடிபட்டு விழுந்திருக்கவேண்டும் என உண்மையான உள எழுச்சியுடன் சொன்னார்” என்றார் சௌனகர். போகட்டும் என்று விதுரர் கையசைத்தார். சௌனகர் “பிதாமகர் எங்கே?” என்றார். “நாளைமாலை அவர் கிளம்பவிருக்கிறார் என்றார்கள்” என்று விதுரர் சொன்னார். “அவரைச் சந்தித்து அவரது முடிவின் விளைவென்ன என்று தெரியுமா என கேட்கலாமென்று எண்ணினேன். என்னால் என்னை தொகுத்துக் கொள்ளமுடியவில்லை.” சௌனகர் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசி தொழும்பியாக வேண்டுமா?” என்றார். “அதை தன் தாயிடம் சென்று சொல்லட்டும் அரசர்” என சிவந்த முகத்துடன் விதுரர் சொன்னார்.
சௌனகர் “உண்மையில் இனி நாம் என்ன செய்யவிருக்கிறோம்?” என்று கேட்டார். “இன்னமும் பேரரசர் தன் ஆணையை மாற்றிக்கொள்ளவில்லை. அவர் அதை செய்யப்போவதுமில்லை” என்றார் விதுரர். “இன்றே துரியோதனனின் மணிமுடியை விலக்கி அரசாணை வரும். ஆதுரசாலையையே சிறைச்சாலையாக ஆக்கிக்கொள்ளலாம். அங்கனோ காந்தாரனோ எதிர்த்தால் அவர்கள் பேரரசரின் படைகளுடன் போரிட வரட்டும். குருதியால் இது முடிவாகுமென்றால் குருதியே பெருகட்டும்.” சௌனகர் “ஆனால் இந்திரப்பிரஸ்தம் போருக்கு எழாது” என்றார். “ஆம், ஆகவேதான் துவாரகைக்கு செய்தியறிவித்திருக்கிறேன்” என்றார் விதுரர். “இளைய யாதவர் எங்களுடன் நின்றால் மட்டும் போதும்…”
சுருங்கிய கண்களுடன் சௌனகர் நோக்கிக்கொண்டிருந்தார். மெல்ல இறங்கி தழைந்த குரலில் “வேறுவழியில்லை, அமைச்சரே. இல்லையேல் தருமனும் இளையோரும் தொழும்பராக நிற்பதை நான் காணவேண்டியிருக்கும். ஆயிரத்தவன் ஒருவன் அவனை சவுக்காலடித்தான் என்று கேட்டபோது நான் அக்கணம் இறந்துமீண்டேன்…” சௌனகர் “அவன் என்ன ஆனான்?” என்றார். “நான் உயிருடனிருக்கையில் அது நிகழாது…” என்றார் விதுரர். “அந்த ஆயிரத்தவன் தண்டிக்கப்பட்டானா?” என்றார் சௌனகர்.
“விலங்கு… இழிந்த விலங்கு” என்று சொன்ன விதுரர் “நான் இக்கணம் அஞ்சுவதெல்லாம் அவரைத்தான். கணிகரை வென்றாட இளைய யாதவரால் மட்டுமே முடியும். அதைத்தான் செய்தியாக அனுப்பினேன். அவர் ஏன் விலகி நிற்கிறார் என்பதே எனக்குப் புரியவில்லை” என்றார். “அவர் துவாரகையில் இல்லை என்றார்கள். அவரது சாந்தீபனி கல்விநிலைக்குச் சென்றிருப்பதாக அறிந்தேன்” என்றார் சௌனகர். “எங்கிருந்தாலும் என்ன நிகழ்கிறதென்றறியாமல் இருப்பவர் அல்ல அவர். வேண்டுமென்றே விலகி நிற்கிறார்.”
கைகளை விரித்து “உளச்சோர்வின் ஒரு தருணத்தில் இது அவர் ஆடும் ஆடலே என்றுகூடத் தோன்றுகிறது. இங்கே என்ன நிகழவேண்டுமென்பதை அவர் கணித்து காய்நகர்த்துகிறார் என்று… ஆனால் உளம் மீளும்போது தலை வெம்மைகொண்டு கொதிக்கிறது. நேற்றிலிருந்து ஒருகணமும் துயில் கொள்ளவில்லை நான்…” என்றவர் பெருமூச்சுடன் எழுந்து தொடர்ந்தார் “நாம் பேரரசரைச் சென்று பார்ப்போம். யுதிஷ்டிரன் சொன்னதை நீரே பேரரசரிடம் சொல்லும். அவரது ஆணை இன்று வந்ததென்றால் அனைத்தும் நன்றே முடிந்துவிடும்.”
சௌனகர் “என்ன நிகழும்? பீஷ்மர் அவர்களுக்காக படை நடத்துவாரா?” என்றார். “நடத்தட்டும்…. பிதாமகரைக் கொன்றால்தான் இங்கே அறம் திகழமுடியும் என்றால் அதுவும் நிகழட்டும்” என விதுரர் கூவினார். மெல்ல உடல் நடுங்கி பின்பு சற்றே தன்னை குளிர்வித்து “துவாரகையிலிருந்து ஒரு செய்தி வந்தால் போதும். பீஷ்மருக்கு நிகராக நாம் மறுபக்கம் வைக்கவேண்டிய கரு அது மட்டுமே… அதை இன்றுமாலைக்குள் எதிர்பார்க்கிறேன்” என்றார். “நீங்கள் சற்று ஓய்வெடுக்கலாம், அமைச்சரே” என்றார் சௌனகர். “இல்லை, ஓய்வுகொள்ள இயலாது என்னால். முகம்கழுவி வருகிறேன்” என்று சொல்லி எழுந்த விதுரர் சற்று தள்ளாடினார். பீடத்தின் விளிம்பைப் பற்றியபடி நிலைகொண்டுவிட்டு நடந்தார்.
கனகரிடம் மெல்லிய குரலில் “அந்த ஆயிரத்தவன் என்ன ஆனான்?” என்றார் சௌனகர். “அவனை கழுவிலேற்றிவிட்டார் அமைச்சர்” என்றார் கனகர். சௌனகர் மெல்லிய உளநடுக்குடன் “எப்போது?” என்றார். “இன்றுகாலை. நானே சென்று அந்த ஆணையை நிறைவேற்றினேன். கௌரவர்களின் அரண்மனைக்கு முன்னால் கோட்டைக்காவல்மேடைக்கு அருகே கழுநடப்பட்டு அவனை அமரச்செய்யவேண்டுமென எனக்கு ஆணையிடப்பட்டிருந்தது” என்றார் கனகர். “அவன் எளிதில் சாகலாகாது, உச்சகட்ட வலி அவனுக்கு உறுதிசெய்யப்படவேண்டும் என்றார் விதுரர். பெருஞ்சினத்துடன் அவன் சாகும் கணத்தில் வந்து அவனைப் பார்ப்பேன். அவன் விழிகளை நான் இறுதியாகப்பார்த்து ஒரு சொல் சொல்வேன். நான் இன்னும் இங்கு சாகாமலிருக்கிறேன் என்று என்றார்.”
“அவனை பிடிக்கச் செல்லும்போது அஞ்சி நடுங்கி தன் இல்லத்தில் ஒளிந்திருந்தான். இருண்ட உள்ளறையிலிருந்து அவனைப் பிடித்து இழுத்துவந்தபோது அவன் துணைவியும் இரு இளமைந்தரும் கதறியபடி உடன் வந்தனர். காவலர்களின் காலில் விழுந்து அந்தப் பெண் கதறினாள். மைந்தர்கள் முற்றத்தில் விழுந்து அழுதனர். அஞ்சாதே, நமக்கு இளையவர் துணையிருக்கிறார். இவர்கள் என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று அவன் சொன்னான். ஆனால் நம்பிக்கையுடன் அதைச் சொல்ல அவனால் இயலவில்லை. குரல் உடைந்து தழுதழுத்தது” என்று கனகர் தொடர்ந்தார்.
“அவனை இழுத்து கழுமுற்றத்திற்கு கொண்டுவந்தபோதுதான் நிகழப்போவதை உணர்ந்தான். என்னை இளையவரிடம் கொண்டுசெல்லுங்கள். இளையவர் உங்களை விடமாட்டார். நான் எனக்கிட்ட ஆணையைத்தான் செய்தேன் என்றெல்லாம் கூச்சலிட்டான். அவன் ஆடைகளைக் களைந்து கழுவில் அமரச்செய்ய தூக்கியபோது என்னை நோக்கி கைகளை நீட்டி கதறி அழுதான். என் ஆணையைத்தான் நான் ஆற்றினேன், அமைச்சரே என்றான். நான் அவனிடம் இழிமகனே, ஒருகணமேனும் அச்செயலுக்காக நீ மகிழ்ந்தாய் அல்லவா? அதற்காகவே நீ கழுவில் அமரவேண்டியவனே என்றேன். அவன் நான் இளையவரின் அடிமை. அறியாது செய்த பெரும்பிழை என்றான். ஆம், ஆனால் அரசர் மேல் சவுக்கு வீசிய ஒருவன் உயிர்வாழ்வதென்பது அரசக்கோலுக்கே இழிவாகும்… செல்க, உனக்குரிய பலியும் நீரும் வந்துசேரும் என்றேன்.”
“அவன் அலறல் கேட்டு கௌரவர் அரண்மனை வாயிலில் வந்து குழுமினர். அவர்களை நோக்கி இளவரசே, என்னை காப்பாற்றுங்கள். நான் எளிய அடிமை என அவன் கூச்சலிட்டு அழுதான். உப்பரிகைமுகப்பில் மீசையை முறுக்கியபடி நின்ற துச்சாதனன் ஒருகட்டத்தில் நிலையிழந்து இறங்க முயன்றபோது சுபாகு அவரைப் பற்றி நிறுத்தி உள்ளே அழைத்துச்சென்றார். மாளிகையின் வாயில்களும் சாளரங்களும் மூடப்பட்டுவிட்டன” என்றார் கனகர். “ஆயிரத்தவன் இன்னமும் சாகவில்லை. பெருங்குரலில் அலறிக்கொண்டிருக்கிறான். இன்றுமாலைக்குள் அவன் தொண்டை உடைந்துவிடும். அதன்பின்னர் ஒலியிருக்காது.”
சௌனகர் பெருமூச்சுவிட்டார். “அவன் தருமனுக்கு எதிராக சவுக்கைத் தூக்கியபோதே இது முடிவாகிவிட்டது. விதுரர் ஒருபோதும் பொறுத்தருளாதவை சில உண்டு. அதை அறியாதவர் எவரும் இங்கில்லை” என்றார் கனகர். சௌனகர் மீண்டும் பெருமூச்சுவிட்டார். கனகர் “ஐயமே வேண்டாம், அமைச்சரே. ஒருநாள் கணிகரையும் கழுவில் அமரவைப்பார் விதுரர்… அது ஊழென வகுக்கப்பட்டுவிட்டது” என்றார்.