சொல்வளர்காடு - 59

பத்தாம் காடு : கந்தமாதனம்

[ 1 ]

தளர்ந்த காலடிகளுடன் ஏறத் தொடங்கியபோது மலை நேர்முன்னாலிருந்தது. மேலே செல்லச் செல்ல பக்கவாட்டிலும் முளைத்துப் பெருகி மேலெழத் தொடங்கியது. சற்று நேரத்திலேயே பின்பக்கத்திலும் மலையடுக்குகள் மாபெரும் நுரைபோல உருளைப்பாறைகளின் குவைகளாக எழுந்தன. தருமன் மூச்சுவாங்க இடையில் கைவைத்து நின்றபோது அவரை மலைமடிப்புகள் முழுமையாகவே சூழ்ந்திருந்தன. தொலைதூரத்தில் மலையடுக்கின் வெளியிதழ்கள் நீலநிறமாகத் தெரிந்தன. அருகே ஆழ்ந்த மஞ்சள்நிறம் கொண்டு அலைவடிவாகச் சூழ்ந்திருந்தன.

மாமலர். அவ்விதழ்கள் மிக மென்மையானவை. உள்ளே தேனருந்த வந்த வண்டை மெல்ல பொதித்து சூழ்ந்துகொள்பவை. அவ்வாறு எண்ணியதுமே தொலைவிலிருந்த மலைகள் மிக மெல்ல மேலெழுந்து வருவதாகவும் சற்று நேரத்திலேயே தலைக்குமேல் கூம்பிக்கொள்ளப் போவதாகவும் உளமயக்கு எழுந்தது. மூச்சு அடங்கி உடல் குளிர்கொண்டதும் அவர் மேலும் நடக்கலானார். எதிரொலிகளை அனுப்பும் தொலைவுக்கு அப்பாலிருந்த மலையெழுச்சிகள். ஆகவே அவருடைய காலடியோசை துளிசொட்டும் ஓசையென்றே ஒலித்தது. மூச்சிரைப்பின் ஒலி அவர் உடலுக்குள்ளேயே ஓடியது.

கிளம்பும்போது எதையும் எண்ணவில்லை. நீரையோ உணவையோ இரவின் குளிரையோ செல்நெறியையோ. களைத்து நின்றபோது அவை ஒவ்வொன்றாக எண்ணத்திலெழுந்தன. அது கனவுப்பயணம் அல்ல. நனவில் நீரில்லையேல் மேலும் சில நாழிகைகளுக்குக்கூட அவரால் செல்ல முடியாதென எண்ணியதுமே உணவையும் நீரையும் வழியையும் எண்ணினால் பிறிதொன்றையும் எண்ண இயலாதென்று உணர்ந்தார். சேருமிடத்தை எண்ணினாலும்கூட அது பயணமென்றாகாது. செல்வதோ வருவதோ பயணம் அல்ல, வளர்வது மட்டுமே பயணம்.

மறுமுறை கால் ஓய்ந்து நின்றபோது விடாயை உட்கனல் என உணர்ந்தார். ஆம், விடாய். ஆனால் இங்கு நான் அதையும் அறியவே வந்துள்ளேன். இந்நிலம் நானறியாதது. இங்கு நான் கொண்ட அறிவெல்லாம் என்னுள் இருப்பதே. என் குருதி போல என்னுள் ஓடுவது அது. அதுவே நான். அதையன்றி பிறிதை நான் இங்கு அறியவும் போவதில்லை. சிலகணங்கள் கண்களை மூடி நின்று அந்த விடாயை அகம்கூர்ந்தார். விடாய் ஓர் உள்ளமாகவும் அதை நோக்கும் அவர் ஓர் உள்ளமாகவும் மாற, அச்செயலை நோக்கி அப்பாலிருந்தது பிறிதொரு உள்ளம். விடாயை அறிந்த உள்ளமும் விடாயென்றாகியது. சுடர் அருகே உலோகங்கள் போல விடாயைச் சூழ்ந்திருந்த எண்ணங்கள் ஒவ்வொன்றாக ஒளிபெற்றன.

தன் விடாய் வலப்பக்கமாகவே திரும்புவதை அவ்வெண்ணங்களின் கலவை மெல்ல ஒன்றுடனொன்று படிந்தமைந்தபோது அவர் உணர்ந்தார். அவர் அறியாமலேயே உடல் வலப்பக்கமாகத் திரும்பியிருந்தது. உடலறிந்ததை அதுவே ஆற்றட்டும் என விட்டதுமே காதில் நீரோசையும் மூக்கில் நீராவியின் மென்மணமும் வந்தணைந்தன. அவை உள்ளிருந்தே எழுகின்றனவா என வியப்பூட்டும் அளவுக்கு மிகமிக மெல்லியவை. நெடுந்தொலைவு சென்ற பின்னரே அவை வெளிச்செவிக்கும் பருவடிவ மூக்குக்கும் வந்தடைந்தன. பின்னர் நீரோடையைச் சென்றடைய நெடுநேரமாகவில்லை.

அந்நீரோடை செந்நிறப்பாறை ஒன்றின் இடுக்கிலிருந்து காளையின் சிறுநீர் போல ஊறி விழுந்து மண்ணில் குழி அமைத்து சுழன்று ததும்பி வழிந்தோடியது. நீரின் மணம் யட்சர்களின் குடிநீரோடையில் அவர் அறிந்தது என உணர்ந்தார். அள்ளி அருந்திவிட்டு அருகே அமர்ந்தார். நீர்ச்சுழிப்பை நோக்கிக்கொண்டிருந்தபோது அது எதையோ சொல்வதுபோலிருந்தது. உதடுகள் சுழித்து விரிந்து ஒலி நீண்டு. செவிகளுக்காக அன்றி சொல்லப்படும் சொல் முடிவற்றது.

நோக்கி அமர்ந்திருக்கையிலேயே குளம்போசை கேட்டது. ஒரு மான் வந்து அவரை நோக்கி தும்மலோசை எழுப்பியது. செண்பக இலைபோன்ற காதுகள் விடைத்திருக்க உடல்சிலிர்க்க மூக்கைத்தூக்கி அவரை நோக்கியது. பின்னர் அருகணைந்து குனிந்து நீரை அள்ளியது. அது திரும்பிச் செல்வதுவரை அவர் நோக்கி அமர்ந்திருந்தார். பின்னர் அதன் காலடித்தடங்களை பின்தொடர்ந்து சென்றார். சற்று நேரத்திலேயே உடலெங்கும் கனிகளுடன் ஓங்கி நின்றிருந்த மாபெரும் அத்திமரத்தை சென்றடைந்தார்.

அத்திப்பழங்களை உண்டு பசியாறியதும் அதனருகிலேயே ஒரு பாறைமேல் படுத்துத் துயின்றார். உடலில் இருந்து அனைத்து தன்னுணர்வுகளும் முழுமையாக விலக மண்ணெனப் பெருகிவிரிந்த அனைத்துடன் அது இணைந்துவிட்டிருந்த ஆழ்துயில். விழித்துக்கொண்டபோது உடல் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. விண்மீன்கள் மிக அருகிலெனத் தெரிந்தன. எழுந்து அமர்ந்து உடலை நன்றாக குறுக்கிக்கொண்டு வானை நோக்கிக்கொண்டிருந்தார்.

வானம் அத்தனை பொருளற்றதாக எப்போதுமே இருந்ததில்லை. அத்தனை அண்மையிலும் தெரிந்ததில்லை. நோக்க நோக்க விண்மீன்கள் நெருங்கி வந்து அவரை சூழ்ந்துகொண்டன என்று தோன்றியது. அவற்றின் அதிர்வுகளை தன் உடலால் உணரமுடியுமென்பதுபோல. உடலைக் குறுக்கிக்கொண்ட நிலையிலேயே மீண்டும் துயிலில் ஆழ்ந்தார். அம்முறை கனவுகள் வந்தன. அவர் குழவியாக இருந்தார். துணியால் சுருட்டப்பட்டு அன்னையின் அருகிலேயே வைக்கப்பட்டிருந்தார்.

விழித்துக்கொண்டபோது அனைத்தும் துலங்கிவிட்டிருந்தன. எழுந்தமர்ந்தபோது தன் முகத்தில் ஒரு புன்னகை இருப்பதை உணர்ந்தார். உடலில் களைப்பே இல்லை. தசைகள் புதியவை போலிருந்தன. அவர் அருகே ஒரு மான்கூட்டம் படுத்திருந்தது. அவரை அவை பொருட்படுத்தவில்லை. ஒரு குட்டிமான் மட்டும் விழிகள் மலர காதுகள் குவிய இளமூக்கை நீட்டியபடி அவரை நோக்கி வந்தது. அவர் புன்னகையுடன் கைநீட்டியதும் சுண்டப்பட்டதுபோல துள்ளி எழுந்து அப்பால் ஓடி அவருக்கு பின்பக்கம் காட்டி நின்றது.

அத்திமரத்தின் மேல் நாரைகள் அமர்ந்திருந்தன. அவற்றினூடாகவே அந்த மரங்கள் அங்கு வந்திருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டார். அவற்றை நம்பி அங்கு மான்கணங்களும் வாழ்கின்றன. மீண்டும் அத்திப்பழங்களை உண்டுவிட்டு மேலாடையில் அத்திப்பழங்களை அள்ளிச்சேர்த்து எடுத்தபடி கிளம்பினார். மான்குட்டி துள்ளி அவரை நோக்கி வந்து கால்களை சற்றுப்பரப்பி வைத்து நோக்கி நின்றது. அவர் புன்னகையுடன் அதை நோக்கிவிட்டு மேலே சென்றார்.

அன்று மாலைக்குள் அந்த மலைப்பகுதி அவருக்கு நன்கு அறிந்ததாக ஆகியது. அங்கேயே பிறந்துவளரும் மான்களைப்போல என எண்ணிக்கொண்டார். அத்திமரங்கள் நின்றிருக்கும் இடம். நீரோடையின் வழி. ஒவ்வொன்றையும் அவர் எண்ணுவதற்குள் சென்றடைந்தது உள்ளம். மறுநாளும் உணவும் நீரும் அமைந்தன. அதன்பின் ஆழத்தில் இருந்துகொண்டே இருந்த அச்சம் மறைந்தது. அச்சமாக மட்டுமே எஞ்சிய அந்தத் தன்னுணர்வும் அழிந்தது. பின்னர் அவருள்ளும் மலைகள் மட்டுமே எஞ்சின.

அமைதியின் பெருங்குவைகளாக நின்றிருந்தன மலைமுடிகள். அமைதி என வழிந்தன சரிவுகள். அசைவின்மை என, பிறிதின்மை என அமைந்த பருப்பேருரு. ஆனால் அவை அவருள் வெறும் எண்ணங்களென்றும் இருந்தன. உணரமட்டுமே படுபவை. இருப்புகள் மட்டுமே என்றானவை. ஒரு விழியிமைப்பால் சுருட்டி அகற்றப்படத்தக்க மலைகள். கணம்தோறும் பிறிதொன்றென மாறிக்கொண்டே இருப்பவை. அப்பாலிருக்கும் அப்பருவெளி அவருடையதல்ல. இது நான் வெளித்தது. இது நான் என்னைச் சூழ்ந்தது. என்னுள் அமைந்து என் இருப்பென அசைவின்மை கொண்டது. நான் எனும் பிறிதின்மையாகியது.

கிளம்பி நெடுந்தூரம்வரை அவர் தன்னுள் இளையவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். சினத்துடன், ஆற்றாமையுடன், கனவுடன், கனிவுடன். சொல்லச் சொல்லத் தீரவில்லை சொற்கள். சொற்கள் சொற்களைப் பெருக்குபவை. அவர் பின்னர் உலகுடன் உரையாடலானார். அறைகூவி ஆணையிட்டு அறிவுறுத்தி மன்றாடி சோர்ந்தமைந்து மீண்டும் ஒரு சொல்லில் இருந்து பற்றிக்கொண்டு எழுந்து சொல்பெருக்கி சொல்லடங்கி. இங்கு ஒவ்வொரு உள்ளத்துக்கும் உலகுடன் சொல்ல எவ்வளவு இருக்கிறது! அல்லது ஓரிரு சொற்களேதானா? அவற்றை உலகு செவிகொள்ள மறுப்பதனால்தான் அவை பெருகுகின்றனவா? பேருருக்கொண்டு பெருகிச்சூழும் தெய்வம் ஒன்று ஒவ்வொருவரையும் அணுகி ‘சொல்’ என செவிகொடுத்து மீளுமென்றால் உலகமே சொல்லடங்கி அமைதிகொள்ளும் போலும்.

சொல்முழக்கமாக இருந்த உள்ளம் மலையேறத் தொடங்கும்போதே அடங்கத் தொடங்கிவிட்டிருந்தது. பாலையில் மெலிந்தோடும் ஓடை போல ஒரு தனி எண்ணம் நிகழ்ந்து பொருளற்ற ஏதேதோ சொற்களில் முட்டித் தயங்கி வலுவிழந்து ஓரிரு சொற்களில் வந்து நின்றுவிடும். பின்னர் எப்போதோ அச்சொற்கள் சித்தத்தில் கைவிடப்பட்ட பொருட்கள்போல கிடப்பதை உணர்ந்ததும் அவை எங்கிருந்து வந்தன என்று வியந்தபடி நினைவுகூர்வார். அச்சொற்களிலிருந்து அவ்வெண்ணத்தைச் சென்றடைய முடிவதில்லை. அவற்றுக்கும் அவ்வெண்ணத்திற்கும் தொடர்பிருக்கவில்லை.

மெல்ல அச்சொற்கள் அங்கேயே நோக்கப்படாமல் கிடக்கலாயின. புழுதிபடிந்து அமிழ்ந்தழிந்தன. அகம் கொண்ட அச்சொல்லின்மையை எப்போதேனும் ஒரு சொல்லெழும்போதே உணரமுடிந்தது. அந்த மலையடுக்குகளுக்கு நடுவே தனித்து நடக்கும் அவரைப்போல அச்சொல் தன்னை உணர்ந்து உடனே திறந்துகொண்டது. பரவி வெளியாகி உருவழிந்தது. அமைதி என்பது அமைதியென்றும் உணரப்படாத நிலை என்பதை அறியவே அத்தனை காலம் ஆகியிருப்பதை எப்போதோ ஓர் எண்ணக்கீற்றென உணர்ந்து புன்னகைத்துக்கொண்டார். மகிழ்ச்சி என்பதும் அமைதியின்மையே என அதைத்தொடர்ந்து அறிந்தார்.

கிளம்பிய பன்னிரண்டாம் நாள் அவர் கந்தமாதன மலையின் முதல் முகத்தை சென்றடைந்தார். தொலைவிலேயே மேலே வெண்மையும் அடியில் கருமையும் கொண்ட புகைக்குவை ஆலமரம்போல எழுந்து குடைபரப்பி நிற்பது தெரிந்தது. அதை மலைமுடியில் அமர்ந்த முகிலென்று முதலில் எண்ணினார். பின்னர் அதன் அடியில் கருமை கொப்பளித்து மேலெழுவதை கண்டார். மேலும் கூர்ந்தபோது அக்கருமைக்குள் செந்நிற இறகுகள் என அனல் பறப்பது தெரிந்தது. அதுவரை இடியோசை என தொலைவில் முழங்கிக்கொண்டிருந்தது அந்த மலையின் உறுமலே என்று அப்போதுதான் சித்தம் அறிந்தது.

அங்கே நின்றபடி எரியுமிழ் மலையை நோக்கிக்கொண்டிருந்தார். சினம்கொண்ட பெருவிலங்கொன்றின் வாய். நீண்டு அதிரும் செந்நிற நாக்குகள். மீளமீள செவிகொடுத்தபோது அச்சொல்லை கேட்கமுடிந்தது. த! த! த! ஒவ்வொரு சொல்லும் நெருப்பாலாகியிருந்தது. மலையடுக்குகளை அதிரச்செய்தது. வானம் அவற்றை திருப்பிச் சொன்னது. “தம! தத்த! தய!” ஆணை ஏற்று அதிர்ந்துகொண்டிருந்தன மலைப்பாறைகள்.

நீள்மூச்சுடன் மேலும் நடக்கலானார். செல்லும்தோறும் அணுகாமல் அகலாமல் அங்கேயே நின்றிருந்தது மலையெரி. அந்தியில் வெண்புகைக்குடை அனல்வண்ணம் ஆயிற்று. கருமைகொண்டு மறைந்தது. இருளில் செந்தழல் மட்டும் தெரிந்தது. மலைச்சரிவிலிருந்த பாறையொன்றுக்கு அடியிலமர்ந்து அதை நோக்கிக்கொண்டிருந்தார். மாபெரும் வேள்வித்தீ. மேலிருந்து அதை ஓம்புபவர் யார்? தேவர்கள் என்றால் அவர்கள் அவியூட்டுவது எவருக்கு? வான்சரிவில் நிறைந்திருந்த விண்மீன்கள் தழலுடன் இணைந்து நடுங்கின. கரிய முகத்தில் அழிந்து நீண்ட குங்குமம். இருளிலமர்ந்து நோக்கும்போது அனல்தீற்றலை அன்றி பிறிதை முழுமையாக தவிர்த்தது விழி.

துயிலுக்குள்ளும் தழலெரிந்துகொண்டிருந்தது. விழித்தெழுந்தபோது வாயிலும் மூக்கிலும் மென்சாம்பல் படிந்திருந்தது. துப்பியபடியும் தும்மியபடியும் எழுந்து அமர்ந்தார். உடலெங்கும் சாம்பல் படிந்திருந்தது. காலையின் மென்னொளி சூழ்ந்திருந்தது. சூரியன் தோன்றாத கீழ்த்திசை காட்டுத்தீப்பரப்புபோல் தெரிந்தது. நீர் தேடி மலைவிளிம்பு வழியாக நடந்தபோது வானம் ஒளிகொண்டபடியே வந்தது. சூரியவிளிம்பு எழுந்தபோதிலும்கூட கண்கூசும் ஒளி எழவில்லை. கார்காலத்துக் காலை போலிருந்தது. காற்று திசைமாறி வீசியபோது எரியும் கந்தகத்தின் மணம் வந்தது.

மலைச்சரிவில் நீரோடையை கண்டார். நீரில் மெல்லிய கந்தகமணம் இருந்தாலும் குடிக்கமுடிந்தது. நீர் இளவெம்மையுடன் இருந்தது. நீர்விளிம்பில் நீட்டியிருந்த செடிகளில் உண்ணத்தகுந்த கீரைகளைப் பறித்து கழுவி பச்சையாகவே தின்றபடி ஓடை வழியாகவே மேலே செல்லத் தொடங்கினார். ஓடைக்கரைப் பாறைகள் வழுக்கவில்லை. அவை படிக்கட்டுபோல அமைந்து மேலே செல்ல உதவின. மலையேறுவதற்கு கால்கள் பழகிவிட்டிருந்தமையால் நெடுநேரம் நடந்தும் அலுப்பு தெரியவில்லை. மாலையில் மீண்டும் அனல்வாயை பார்த்தபடி பாறைமேல் அமர்ந்திருந்தார். அது அணுகவே இல்லை என்று தோன்றியது.

நான்காவதுநாள்தான் முதல்முறையாக வெம்மையை உணரமுடிந்தது. காற்றில் அவ்வப்போது வெம்மை வந்து உடல்தழுவி எரியவைத்தது. காற்றலைகளில் அவ்வெம்மை ஏறிக்கொண்டே சென்றது. வானம் சாம்பல்படலத்தால் முழுமையாகவே மூடப்பட்டிருந்தது. திசைகள் அனைத்திலிருந்தும் இடியோசை எழுந்துகொண்டிருந்தது. மூச்சில் புகுந்த சாம்பலை தும்மி வெளியேற்றிக்கொண்டே நடந்தார். உடல் கருமண்ணால் வடித்த சிலைபோல் தோன்றியது. வியர்வை வழிந்த கோடுகளில் மீண்டும் கரிபடிய சாட்டையால் அறைபட்ட வடுபோல அவை தெரிந்தன.

திசைகளை சாம்பல்திரை மூடியிருந்தமையால் அனல்முடி சரியாகத் தெரியவில்லை. காற்று வீசி புகைப்படலம் கிழிபடும்போது தொலைவானில் தழலாட்டம் மட்டும் தெரிந்து மறைந்தது. அதைநோக்கி சென்றுகொண்டிருக்கையில் எதிர்ப்பக்கமிருந்து வீசிய காற்றில் காட்டுத்தீயின் அனல்போல வெம்மை வந்து அறைந்துசென்றது. காதுகளும் இமைகளும் மூக்கும் எரியத்தொடங்கின. மீண்டுமொரு அனலலை வந்தடித்தபோது தாடிமயிர் பொசுங்கும் நாற்றத்தை உணர்ந்தார். தொட்டபோது புருவமும் பொசுங்கிச் சுருண்டிருப்பது தெரிந்தது.

உள்ளத்திலெழுந்த அச்சத்தை அறியாத ஊக்கம் ஒன்று வென்றது. அப்பாலிருப்பதை நோக்கி எப்போதும் செல்லும் விழைவு. குழவியரை இயக்கும் முதல்விசை. மேலும் மேலுமென சென்றார். இன்னொரு அனல்வீச்சில் தாடிமயிர் பொசுங்கிச்சுருண்ட ஒலி கேட்டது. காதுகள் அழன்று காந்தத் தொடங்கின. அன்றிரவு மழையென பெய்துகொண்டிருந்த சாம்பலுக்குக் கீழே உடலைக் குவித்து முட்டுகளுக்குள் மூக்கை தாழ்த்திவைத்து துயில்கொண்டார். மறுநாள் எழுந்தபோது புற்றை உடைத்து வெளிவருவதுபோல சாம்பலில் இருந்து எழவேண்டியிருந்தது. சாம்பலின் அலைகளாக காற்று சுழன்றடித்துக்கொண்டிருந்தது.

‘இதற்கு அப்பால்… ஆம், இதற்கப்பால்தான்’ என்று தன்னைத்தானே தூண்டியபடி, தனக்கே ஆணையிட்டுக்கொண்டபடி நடந்துகொண்டிருந்தார். நடக்கவே முடியாதபடி அனல் வந்து அறைந்துகொண்டிருந்தது. நிலத்தில் அத்தனை பாறைகளும் தொடமுடியாதபடி சுட்டன. நீர் ஊறிவழிந்த இடம் நோக்கி சென்றார். சேறும் ஆவியுடன் கொதித்தது. மண்ணிலிருந்து எழுந்த நீராவியால் உடல் வியர்த்து வழிந்தது. ஆனால் பாறைக்குழிவுகளில் குடிக்க சூடான நீர் இருந்தது. தரையில் வெந்த பறவை ஒன்று கிடந்தது. அதை எடுத்து உண்டு நீர் அருந்தியபின் மீண்டும் சென்றார். உறுமலுடன் தீயலை வந்து அவரை அறைந்து பின்னால் தள்ளியது. அதுவே எல்லை என்று உணர்ந்து அங்கே அமர்ந்தார்.

[ 2 ]

நாற்பத்தெட்டு நாட்கள் அவர் அவ்வெரிமுகத்தில் இருந்தார். மரவுரி சாம்பலாகி உதிர்ந்தது. உடலின் மயிர்களனைத்தும் கருகி மறைந்தன. தோல் வெந்து உரிந்தது. உடல் எலும்புபோர்த்த கரிப்படலத்தால் சுள்ளிக்கட்டுபோலாகியது. மண்டையோட்டின்மேல் விழிகள் அமைந்த முகம். நெடுந்தொலைவிலிருந்து அந்த அனல்நோக்கி வந்து சிறகு கரிந்து உதிரும் பறவைகளின் வெந்த ஊனே உணவாகியது. ஊறிச்சொட்டும் நீர் விடாய் தீர்த்தது. பின்னர் ஆற்றை உடலே கற்றுக்கொண்டது. உண்பதையும் குடிப்பதையும் அகம் அறியவில்லை. இடமும் காலமும் இருப்பும் உணரப்படவில்லை. வெறுமொரு சித்தத் துளி. பெருகாது சுழிக்காது துளித்து தயங்கி நுனியில் நின்றிருந்தது அது. அதன் முன் சீறியும் முழங்கியும் எழுந்தாடிக்கொண்டிருந்தது செவ்வனல்.

தன்னை நோக்கி முற்றிலும் திரும்பிய சித்தம் துயில்கொள்வதில்லை. தூங்காது தூங்கி விழித்திருக்கும் தன்னிலை. விழிகள் அத்தழலை நோக்கியபடி எப்போதும் திறந்திருந்தன. உதடுகளில் நிலைக்காமல் ஓடிக்கொண்டிருந்த சொல்லுச்சரிப்பின் சிற்றசைவுகளும் முகத்தில் பெருகிச்சுழித்துச் சென்றுகொண்டிருந்த உணர்ச்சிகளின் நெளிவுகளும் நின்றன. வெறித்த செவ்விழிகளில் மட்டுமே உயிர்தெரியும் வெந்த கரியமுகம் கொண்ட நிழலுரு அங்கு ஆடிய நூற்றுக்கணக்கான நிழல்களுடன் தானும் கலந்து மறைந்தது. பாறைவெடிப்புக்குள் உலர்ந்த தோல்கீற்றுபோல அவர் ஒட்டிக்கிடந்தார்.

அவர் விழிகளுக்குள்ளிருந்து என எழுந்தனர் கந்தர்வர்கள். யாழும் குழலும் இசைத்துச்சூழ இளஞ்சிவப்புநிறச் சிறகுகளுடன் அவரைச் சூழ்ந்து பறந்தனர். அவர்களின் விழிகளை அவர் அருகே என நோக்கினார். அவர்கள் எதையோ சொல்லிக்கொண்டிருந்தனர். அருகணைந்து அதைக் கூவி சலித்து விலகி மீண்டும் அருகணைந்து மீண்டும் கூச்சலிட்டனர். அவை விழியொளியாகவும் இதழசைவாகவுமே அவரை அடைந்தன. “என்ன?” என்று அவர் உடல் உடைந்து திறக்கும் விசையுடன் கூவினார். “என்ன சொல்கிறீர்கள்?” அவர்கள் துயருடன் ஆற்றாமையுடன் பதைப்புடன் மீண்டும் மீண்டும் அதையே சொன்னார்கள்.

பின்னர் அவர்களின் விழிகள் மாறுபட்டன. ஒவ்வொன்றாக ஒளியவிந்து வெறும் புள்ளிகளாக அவை மாறின. பறக்கும் விசை குன்றி சிறகுநனைந்த பூச்சிகளாக மாறி பின்வாங்கி எரிதழல்பெருங்குவை நோக்கி சென்றனர். அவர் பதைப்புடன் நோக்கிக்கொண்டிருக்க அவர்கள் அத்தீயில் சென்று விழுந்து கொதிநெய்யில் நீர்த்துளி விழுந்ததுபோல் வெடித்து மூழ்கி மறைந்தனர். ஒவ்வொருவராக செந்தழலின் அடியிலியால் உறிஞ்சப்பட்டு சென்றுகொண்டே இருந்தனர். அவர்கள் மறைந்தும் சற்று நேரம் குழலும் யாழும் மீட்டல் தொடர்ந்தன.

பொற்கொல்லனின் கிடுக்கிமுனையில் உருகிச்சொட்டும் துளி என ஒளிமுடிகள் சூடிய தேவன் ஒருவன் முகில்குவையிலிருந்து இறங்கினான். மேலும் ஒருவன் அவனைத் தொடர்ந்து இறங்கி வந்தான். ஒருவனே மீண்டும் மீண்டும் வருவதுபோல அவர்கள் வந்தபடியே இருந்தனர். பொன்முடி, பொற்கவசம், பொன்னிற ஆடை, பொன்மிதியடி. பொற்பெருக்கென அவரை சூழ்ந்துகொண்டனர். அவரில் ஒருவன் அவர் விழிகளை விழிதொட்டு நோக்கி ஒரு சொல்லை உரைத்தான். அவர் அச்சொல்லை முன்னரே அறிந்திருந்தார். ஆமென்பதற்குள் அச்சொல் அவரிடமிருந்து நழுவி உதிர்ந்தது. பதறி அதை அள்ள அவர் பாய்வதற்குள் முழுமையாகவே மறைந்தது.

அதன்பின் அவர்கள் அச்சொல்லை பந்தென வீசியபடி அவர்முன் விளையாடினர். அவர்களின் கைகளும் கால்களும் அதை தட்டிக்களியாடுவதை, அவர்களின் விழிகள் அதை நோக்கியபடி அசைவதை அவர் கண்டார். ஆனால் அதை காணக்கூடவில்லை. “இங்கே…” என்று அவர் கூவினார். “இங்கே! இங்கே!” அவர்கள் அப்பாலிருந்தனர். அவர் சென்றடைய முடியாத சேய்மையை பலகோடிச் சுருள்களாக ஆக்கி நடுவே நிறைத்திருந்தனர். அவர் கண்ணீருடன் ஆங்காரத்துடன் நெஞ்சிலறைந்து கூவினார் “இங்கே! இங்கே!”

நெருப்பின் நாக்கு நீண்டு அவர்களில் ஒருவனை சுழற்றி இழுத்துக்கொண்டது. அவன் திகைத்து கைகால்களை வீச இன்னொருவன் அவனை பற்றிக்கொண்டான். ஒரு நீண்ட பொன்மணி மாலையென அவர்கள் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு நெருப்புக்குள் நுழைந்தனர். பொன்னோடை ஒன்று வழிந்து விழுந்து உருகி எழுந்து தழலாக ஆடி கரிதுப்பி சீறியது. அவர் இறுதி தேவனின் விழிகளை நோக்கினார். அவன் நோக்கியது அச்சொல்லை என உணர்ந்தார். அதை விழிகளால் தேடித் தேடி அங்கிருந்தார். அவர் உடல் பாறையுடன் உருகி ஒட்டியிருந்தது.

சீறலோசையை கேட்டார். நெளியும் நிழல் கரிய நாகப்பாம்பென்றாகி எழுந்தது. அதன் பத்தியின் முகப்பில் இரு பிளவுண்ட நாக்குகளின் நடுவே நீலநிற மணியென அச்சொல்லை அவர் கண்டார். பொருளில்லாத ஒளித்துளி. அச்சொல்லை நோக்கி இன்னொரு நாகம் படமெடுத்தாடியது. இரு நாகங்களும் அச்சொல்லை முத்தமிட்டன. பிறிதொரு நாகம் எழுந்து இணைந்துகொண்டது. மீண்டுமொரு நாகம். நாகப்பெருங்கணம் கரிய பெருமலர்போல உடல்கள் நெளிய வட்டமாயின. அவ்வட்டத்தின் நடுவே நீலமணியென அது நின்றொளிர்ந்தது.

இடியோசையுடன் நிலம் பிளக்க உள்ளிருந்து கரிய தெய்வமொன்று எழுந்தது. ஆயிரம் கைகளும் திசைநிறைத்து ததும்பின. விழியற்ற பெருமுகத்தில் வாய் கோரைப்பற்களுடன் திறந்திருந்தது. நாகங்களை கைகளால் அள்ளிச்சுருட்டி நெருப்பை நோக்கி எறிந்தது அது. அவை சீறி நெளிந்து அடங்க தழலெழுந்து ஆடியது. அத்தனை நாகங்களையும் அள்ளி வீசியபின் அந்த மணியை எடுத்து தன் நெற்றியில் பதித்துக்கொண்டது அது. மணி சுடர்ந்து செம்மைகொண்டு விழியாகியது. ஒற்றை நுதல்விழி நோக்குடன் திரும்பி அவரை நோக்கியது. கோட்டெயிர் எழுந்த கொலைவாயில் நகை தோன்றியது. உறுமியபடி அவரை நோக்கி வந்தது.

இமையா விழி. அண்மையில் அது வந்தபோது ஊன் மணத்துடன் கைகள் அவரை சூழ்ந்துகொண்டன. இனிய மணம். “மைந்தா!” அவர் அவ்வணைப்பில் மெய்மறந்தார். அவர் குழல் நீவியது ஒரு கை. அவர் தோள் தழுவியது பிறிதொன்று. அவர் அண்ணாந்து நோக்கியபோது விண்மீன் என அப்பால் தெரிந்தது விழி. மறுகணம் மிக அருகே நோக்கு கொண்டது. குனிந்தணைந்த இதழ்கள் கன்னத்தில் ஒற்றி முத்தமிட்டன. ஊன்மணம். இனிய பசுங்குருதி மணம்.

கால்களைத் தூக்கி உதைத்து அதை அகற்றி வீரிட்டலறியபடி அவர் எழுந்துகொண்டார். மண்ணில் விழுந்து உருண்டு கையூன்றி எழுந்து நின்றார். எதிரில் நின்றிருந்தது அது. அதன் தலைகள் பெருகின. பதினாறு முகங்களாயின. விழி எரியும் நீலப்பெருமுகங்கள். தழல் பறக்கும் நாக்குகள். மையமுகத்தில் இரு நீலவிழிகளுக்குமேல் நுதல்விழியெனத் திறந்திருந்தது அந்த மணி.

“இதோ!” என்றது அந்த முகம். தன் நெற்றிக்கண்ணைத் தொட்டு எடுத்து கையில் சுடரென ஏந்தி அவரை நோக்கி நீட்டியது. “இதன் பெயர் மகாருத்ரம். இதுதான்…” அவர் கைநீட்டி அதை வாங்கினார். குளிர்மலர்போலிருந்தது. பனித்துளி படிந்த நீலம். இல்லை, இது மயிற்பீலி. அந்த விழியை நோக்கியபடி நின்றபோது எதிரே எழுந்த தழலை பார்த்தார். தலையில் விண்குடை சூடி நின்றிருந்தது. அதன் உறுமல் நான்கு திசைகளிலும் முட்டி இடியோசையென சூழ்ந்திருந்தது.

அனல் உருத்திரண்டு முகம்கொண்டு பின் கலைந்து சுழன்றாடி மீண்டும் முகம்கொண்டது. மெல்ல அதன் உருவம் செம்பிழம்பிலிருந்து பிதுங்கியதுபோல எழுந்து அருகணைந்தது. உருவென்றும் மயக்கென்றும் ஒருங்கே நின்றது. அதை நோக்கிக்கொண்டிருந்த அவர் திகைத்தெழுந்து நின்றார். அறியாது பின்னெட்டு வைத்து பின்பு வெறிகொண்டு அதை நோக்கி சென்றார். எரிந்து உருகி சொட்டிய உடலைக் கழற்றி, எரிதுளியென உள்ளத்தை உதிரவிட்டு, எஞ்சிய அனைத்திலிருந்தும் எழுந்து முன்னால் சென்றார்.

SOLVALARKAADU_EPI_59

அதன் வாய் திறந்தது. பதைக்கும் நாக்குகொண்டது. அடியிலாப் பெருங்கிணறு. பசிகொண்ட பாழ்வாயில். அவர் தன் கையை உணர்ந்தார். அதிலிருந்தது ஒரு கைப்பிடி அன்னம். அருகணைந்து அதை அந்த வாயில் போட்டார். சுருங்கி மறைந்தது அனல்வாய். அலறலுடன் பேருருக்கொண்டு மீண்டும் எழுந்தது. தன் முழுவிசையையும் திரட்டி அதற்குள் தன்னை தூக்கி வீசினார்.