சொல்வளர்காடு - 55

ஒன்பதாம் காடு : யக்‌ஷவனம்

[ 1 ]

இருபக்கமும் அடர்ந்த காடு சீவிடுகளின் ரீங்காரமாகவும் காற்றோசையாகவும் குரங்கு முழக்கங்களாகவும் பறவைக் கலைவொலிகளாகவும் சூழ்ந்திருக்க நடுவே வகுந்து சென்ற காட்டுமாடுகளின் கால்களால் உருவான பாதையில் பாண்டவர்கள் சென்றனர். உச்சிப்பொழுதுவரை தருமன் ஒருசொல்லும் உரைக்காமல் தலைதூக்கி நோக்காமல் நடந்துகொண்டிருந்தார். இளையோரும் திரௌபதியும் அவரைத் தொடர்ந்து சென்றனர். அவர்களின் காலடியோசைகள் இருபக்கமும் பட்டு எதிரொலித்துவந்து சூழ்ந்தன.

உச்சிவெயில் தெரியாமல் தலைக்குமேல் தழைப்புக்கூரை மூடியிருந்தது. காலோய்ந்ததும் அவர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். பீமன் காட்டுக்குள் சென்று வலைக்கூடையில் கிழங்குகளும் ஒரு மானின் உடலுமாக திரும்பிவந்தான். அவன் உணவைச் சுட்டு சமைக்கையில் அவர்கள் விழி அயர்ந்தனர். கையில் சுனைப்பறவையின் இறகுடன் தலைகுனிந்தபடி தருமன் அமர்ந்திருந்தார். பீமன் “மூத்தவரே, உணவுண்ணலாம்” என்றபோது வெறுமனே தலையசைத்தார்.

சுட்ட மானிறைச்சியையும் கிழங்குகளையும் கனிகளையும் வாழையிலையில் பரப்பிக் கொண்டுவந்து தருமன் அருகே வைத்தான் பீமன். அதன்பின் திரௌபதிக்கு அளித்தான். அவர்கள் அவர் உண்பதற்காகக் காத்திருப்பதை அறியாமல் அவர் எங்கோ என அமர்ந்திருந்தார். சகதேவன் “உண்ணுங்கள், மூத்தவரே” என்றான். அக்குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்து “ஆம்” என்றபின் அவர் உண்ணத்தொடங்கினார். அவர்களும் உண்ணலாயினர். அவர்கள் உண்ணும் ஓசைமட்டும் அங்கே எழுந்தது.

சற்று ஓய்வெடுத்தபின் அவர்கள் மீண்டும் நடந்தனர். எதிரே ஒரு சூதன் வலத்தோளில் கழியில் கோத்த தோல்மூட்டையும் இடத்தோளில் முழவுமாக தலைசாய்த்து தனக்குள் பாடியபடி வருவதைக் கண்டதும் நகுலன் “இவர்கள் இல்லாத இடமில்லை” என்றான். சகதேவன் “அவன் வருவதைப்பார்த்தால் இங்கே எங்கோ ஊரோ குருநிலையோ உள்ளது தெரிகிறது” என்றான். அவன் அவர்களைப் பார்த்ததும் தொலைவிலேயே தலைவணங்கினான்.

அருகணைய அவன் நடை மாறுபட்டது. நெருங்கியதும் அவன் நிமிர்ந்த தலையுடன் நாடகப்பாங்கில் “காடேகும் இந்திரப்பிரஸ்தத்தின் அரசருக்கும் இளையோருக்கும் வணக்கம். உங்கள் அவையில் ஒருகாலத்தில் பந்திக்கும் பரிசிலுக்கும் மிகமிகப் பின்நிரையில் நின்றிருக்கிறேன்” என்றான். “என்மேல் சினம் கொள்ளக்கூடாது. இன்று வரிசையில் முதன்மையாக நின்றிருக்கும் பேறுபெற்றமையால் நான் சற்று தருக்கியிருக்கிறேன்”.

தருமன் “சூதரே, உங்களுக்கு பெரும்பொருள் அளிக்கும் இடத்தில் நான் இல்லை” என்றபடி திரும்பிப்பார்த்தார். பீமன் அவரிடம் ஒரு கல்லை கொடுத்தான். அதை நோக்காமலேயே வாங்கி சூதனுக்களித்து “இக்காட்டில் இதுவே என் கொடையெனக் கொள்க!” என்றார். சூதன் அதை நோக்கியதும் திகைத்து “அரசே!” என்றான். அவன் முகம் மாறியது. “இது வைரம்… உண்மையான வைரக்கல்” என்றான். பீமன் “ஆற்றங்கரையில் கிடைத்தது, சூதரே. பட்டை தீட்டப்படாதது. வணிகர்களிடம் விற்று நீர் விழைந்ததைப் பெறுக!” என்றான். “ஏழு நீரோட்டங்கள். பேரரசுகளை வாங்கும் திறன்கொண்ட வைரம் இது. இது எனக்கா?” பீமன் “ஆம், உமக்கே!” என்றான்.

சூதன் கைகூப்பி “என் சொற்களுக்காக என் மேல் பொறுத்தருள்க!” என்றான். “பழகிய நாவும் கையும் தருணமுணர்வதில்லை… நான் இளிவரல்சூதன்.” தருமன் “சூதரே, இவ்வழி சென்றால் என்னென்ன ஊர்கள் வருகின்றன?” என்றார். “இவ்வழி செல்வது எளிதல்ல. உண்மையில் இன்னும் சற்றுதொலைவில் இவ்வடர்ந்த காடு மெலிந்து மறைந்துவிடும். அதன்பின் ஏறிச்செல்லும் மொட்டைப் பாறைச்சரிவு மட்டுமே. வெண்ணிறக் கந்தகம் பூத்த பாழ்நிலம். எனவே மரங்களோ செடிகளோ இல்லை. அங்கே மக்களோ குருநிலைகளோ ஏதுமில்லை. மலைச்சரிவு மேலே சென்று கரிய மூளிப்பாறையில் முடிகிறது. அது வானில் முட்டி நிற்பதனால் அப்பால் என்னவென்று அறியக்கூடவில்லை” என்றான்.

“அதற்கப்பால் ஒருபாதை சென்று மேலும் கடந்து கந்தமாதன மலையை அடைகிறது என்கிறார்கள். திரும்பிவரத் தேவையில்லாத மெய்மைதேடிகள் செல்வதுண்டு என்று கேள்விப்பட்டேன்” என்றான் சூதன். “அப்படியென்றால் நீர் ஏன் அங்கு சென்றீர்?” என்றான் நகுலன். “இதென்ன கேள்வி? அங்கு சென்றதனால்தானே நான் இதையெல்லாம் அறிந்தேன்?” என்றான் சூதன். “சூதர்கள் வீணாக பயணம் செய்யமாட்டீர்களே?” என்றான் நகுலன். “வைரக்கல்லை கொடையாகப்பெறும் பயணம் வீண் என்று எப்படி சொல்லமுடியும்?” என்றான் சூதன். நகுலன் சிரித்து “சரி, நான் சொல்லாடவில்லை” என்றான்.

தருமன் “சூதரே, இன்று காலை இத்திசையிலிருந்து எதிர்த்திசைக்குச் சென்றது ஒரு சுனைநாரை. இது அதன் இறகு” என்று நீட்டினார். “இது எனக்கொரு செய்தி என்று நினைக்கிறேன். இந்நாரை கிளம்பிய இடத்தை சென்றடைய விரும்புகிறேன்.” அவன் அதை வாங்கிப்பார்த்து “நாரையா? இப்பகுதியில் நாரை என ஏதுமில்லையே” என்றபடி திருப்பித் திருப்பி நோக்கி “ஆ! இதுவா?” என்றான். “அரசே, இப்பறவையை நான் அறிவேன்.” தருமன் அவனை நோக்க “இது பண்டு முண்டகக்காட்டில் இருந்த பறவை அல்லவா? இதன் தோழியும் உடனிருந்தாள். அவள் பழங்களை உண்டாள், இவன் வெறுமனே பார்த்திருந்தான்” என்றான்.

தருமன் விழிகளில் சினத்துடன் “விளையாட்டு வேண்டாம்” என்றார். “இவன் ஏன் வெறுமனே பார்த்திருந்தான் என்று சொல்கிறேன். இவன் துணைவி உண்ட பழம் நஞ்சு. ஆனால் அதை அவள் அமுதென நினைத்தாள். அதை இவன் சொல்லப்போனால் இவனை தன் எதிரி என எண்ணுவாள். ஆகவே தாளாத்துயருடன் தனிமையில் அதை நோக்கியிருந்தான்.” தருமன் “வீண்சொல் தேவையில்லை” என்றபடி திரும்ப “கேளுங்கள், அரசே! அல்லது உண்மையிலேயே அது அமுதகனியாக இருக்குமோ? அழிவின்மையை தான் மட்டுமே அடையவேண்டுமென நினைத்து அவள் மட்டும் உண்டாளோ?” என்றான்.

“செல்க!” என்று சினத்துடன் கையசைத்து தருமன் நடக்க அவன் பின்னால் சென்றபடி “அப்படியென்றால் இவன் எப்படி இத்தனை காலம் வாழ்கிறான்? அமுதை உண்பதைப் பார்ப்பவனும் அழிவின்மையை அடையமுடியுமா? அமுதை உண்பவன் அழிவிலா இன்பத்தையும் அதை வெறுமனே காண்பவன் முடிவிலா மெய்மையையும் அறிகிறான் என்று வைத்துக்கொள்ளலாமா?” என்றான். தருமன் “நீர் என்ன பித்தரா?” என்று கேட்டார். “பித்தர் சொன்னதும் பேதையர் சொன்னதும் பத்தர் சொன்னதும் பன்னப் பெறுபவோ என்பார்களே?” என்றபடி அவன் பின்னால் சென்று நின்றான்.

“சொல்க!” என்று உதட்டை இறுக்கியபடி தருமன் திரும்பி நின்றார். “அந்த இறகை மீண்டும் காட்டுங்கள்…” என்றான் சூதன். அதை மீண்டும் நோக்கிவிட்டு “இதுவா? இதுதானா?” என்றான். “சொல்லும்!” என்றார் தருமன். “அந்த சாரசங்கள் ஒரு மரத்தில் சிறைதழுவி அமர்ந்திருந்தன. அலகுகளால் கொஞ்சிக்கொண்டன. இன்குரலெழுப்பின. காதல்கொண்டவருக்கு உடல் பெருந்தடை. உடலே ஊடகமும் கூட. அந்த இருமையில் நின்றுதவிப்பதே அவர்களின் பேரின்பம். அதில் இவை திளைத்துக்கொண்டிருந்தன” என்றான் சூதன்.

அப்போது அங்கு ஒரு வேடன் வந்தான். தொல்வேடன். கொன்றுண்பதால் நின்று வாழலாம் என்று கண்டுகொண்ட மூதாதை. அவ்வாறுதான் அவன் தன் நூறு குழவிகளை உயிர்புரந்தான். அவர்கள் வளர்ந்து செழித்து பெருங்குலமாக ஆயினர். அக்குலம் பெருகிப் பெருகி குமுகங்களாயிற்று. படைக்கலமும் தொழில்முறையும் கற்றது. மேழியும் துலாவும் ஏந்தியது. மொழிகற்றது. பாடல் பயின்றது. மெய்மை நாடி அவையனைத்தையும் துறந்தது. அவன் தொன்மையான வேர் போன்றவன். அவனில் முளைத்தெழுந்து அவனை உண்டு வளர்ந்தெழுந்த காடுதான் இம்மானுடம். வேர்களுக்குள் அவன் இன்னமும் இருந்துகொண்டிருக்கிறான்.

அரசே, இதோ இதேபோல ஒரு சிற்றோடை. அது வேகவதி. அதிர்ஸ்யை என்றும் அதற்கு பெயர் உண்டு. வாள் போல வளைந்தது. நாள் என ஒன்றுபோல் காட்டி உயி்ர் ஈரும் ஒளி கொண்ட வாள். அதற்கு அப்பால் நின்றிருந்தான் வேடன். வில்நாண் இழுத்து அதில் அம்புபூட்டி இழுத்து ஆண்பறவையை குறிவைத்தான். அந்தச் சிற்றோடைக்கு இப்பால் அமர்ந்து மெய்மைதேடி விழிமூடியிருந்தான் அவன் நூற்றுவர்வழிப் பெயரன். கொலைகடந்து செயல்கடந்து சொல்கடந்து தன்னைக்கடக்க எண்ணி தவமிருந்தான். வேடனின் அம்புபட்டு விழுந்தது ஆண். பெண் கதறியழுதபடி சிறகடித்தெழுந்தது. கிளைகளில் முட்டிமோதிக் கதறியபடி சுற்றிவந்தது.

அக்குரல் கேட்டு எழுந்த வேட்டுவமுனிவரிடம் சிறகால் மண்ணை அறைந்தபடி அந்தப் பறவை கேட்டது ‘எதை நோக்கி அமர்ந்திருக்கிறாய், மூடா? நீ தேடும் அமுது அணையாநெருப்பு காவலிருக்கும் ஏழுமலைகளுக்கு அப்பால் உள்ளது. அதன் கரையிலிருக்கும் நச்சுப்பொய்கையில் நீராடாமல் அங்கு செல்ல எவராலும் முடியாது. சென்று அதிலாடுக!’ அவர் ஒன்றும் புரியாமல் நோக்கினார். ‘நச்சுப்பொய்கை! அதுதான் முதல் மெய்மை. மூடா, அதுவே முதன்மையான மெய்மை! அதையறியாமல் நீ அறிந்ததுதான் என்ன?’ என்று அந்தப் பறவை கூச்சலிட்டது.

அவர் அதை நோக்கி இரங்கினார். அவர் விழியுகுத்த நீர் தாடியில் சொட்டியது. ‘பெண்ணே உன் துயர்கண்டு என் உள்ளம் இரங்குகிறது. நான் உனக்கு அளிக்கக்கூடுவதென்ன?’ என்று அவர் கேட்டார். ‘கணவனை இழந்தவள் நான். அவனை அன்றி பிறிது எதையும் என்னால் ஏற்கமுடியாது’ என்றது பகப்பறவை. ‘உன் கணவனின் உடல் அந்த கண்காணா ஆற்றுக்கு அப்பால் விழுந்துள்ளது. அதை ஒரு மலைவேடன் எடுத்துச் சென்றுள்ளான். அங்கு சென்றவை இங்கு மீளமுடியாது’ என்றார் முனிவர். ‘அதை நானும் அறிவேன். அந்த அடையமுடியாமையில் முட்டித்தான் தவித்துக்கொண்டிருக்கிறேன். தலையுடைந்து இப்பால் செத்து உதிர்வேன், நான் செய்யக்கூடுவது அதையே’ என்றாள் அவள்.

‘உன் குரல் கேட்பதற்கு முந்தைய கணம் நான் அமுதத்தை அடைந்தேன். என் நெஞ்சு கலமாக அதைப் பெற்று நிறைந்து உடலெங்கும் ததும்பிக்கொண்டிருந்தேன். அதை முழுமையாகவே உனக்களிக்கிறேன். நீ உன் துணைவனுடன் அழிவின்மையை அடைவாய்’ என்றார் முனிவர். அவர் அருகே வாக்தேவி தோன்றினாள். ‘என்ன செய்கிறாய், மூடா? நீ இத்தனைநாள் கணுக்கணுவாய் ஏறிவந்த உச்சம் இது? ஒற்றைக்கணத்தில் இதை அறியாத சிறுபறவை ஒன்றுக்கு அளிக்கிறாயா? மீண்டும் இதை நீ எண்ணவும் இயலாது’ என்றாள். ‘இக்கணம் என் நெஞ்சு நெகிழ்கிறது. இவ்விழிநீரைப் பார்த்தபின் நான் வீணே என் அமுதைச் சுமந்து அமர்ந்திருந்தேன் என்றால் அது திரிந்து நஞ்சாகிவிடும். விலகுக!’ என்று அவர் வாக்தேவியிடம் சொன்னார்.

அந்த வெண்ணிறப் பறவையை நோக்கி கைநீட்டி ‘வருக, சிறுமகளே! உனக்கு நான் அழிவற்றவளின் பெயரை சூட்டுகிறேன். உன் பெயர் சீதை. உன் கணவன் உன்னை மகிழ்விப்பவன். ரமிக்கச்செய்யும் ராமன். ஆம், அவ்வாறே ஆகுக!’ என்று அதன் தலையில் மெல்ல தொட்டார். அப்பறவையின் சிறகுகள் பொன்னொளி கொண்டன. சுடரென அது மகிழ்ச்சிக்குரல் எழுப்பியபடி வானிலெழுந்தது. அதன் துணைப்பறவை பொற்சிறைகளுடன் காற்றில் நின்றிருந்தது. அவர்கள் கூவியபடி இணைந்துகொண்டனர். சிறகு தழுவியும் அலகு உரசியும் சிறகடித்துப்பறந்து சுழன்றும் மகிழ்ந்தனர். முனிவர் நோக்கியபோது வாக்தேவி தன் இருகைகளிலும் அவற்றை ஏந்தி சுழற்றி விளையாடுவதைக் கண்டார். புன்னகைத்துவிட்டு அவர் எழுந்து சென்றார்.

“அரசே, அந்தப் பறவையின் இறகல்லவா இது? இதை எப்படி நீங்கள் பெற்றீர்கள்?” என்றான் சூதன். அவனது விழிகளை நோக்கியபடி தருமன் வெறுமனே நின்றார். சூதன் சிரித்துக்கொண்டு “பாருங்கள், அழிவின்மையை அடைந்தபின்னரும் இந்த அழியும் களத்தில் ஓர் இறகுபொழித்துச் சென்றிருக்கிறாள். அரசே, நீங்கள் கற்ற சொல் சிறந்தது என்றால் சொல்க, இந்தச் சிறகின் பெயர் என்ன?” என்றான். தருமன் பெருமூச்சுடன் தலையசைத்தார். “சொல்க, இச்சிறகு என்ன சொல்?” தருமன் “ராமா” என்றார்.

சூதன் முகம் மலர்ந்து “ஆ!” என்று கூச்சலிட்டான். “ஆம், ராமா. சீதை என்று சொல்லியிருந்தீர்கள் என்றால் நீங்கள் காதலை அறிந்ததே இல்லை. காதலை அறியாமல் காட்டை எவர் அறியக்கூடும்? காட்டை அறியாமல் கடந்துசெல்வது எப்படி? காதல்கொண்டவளுக்கு பெயரே இல்லை. காதலனையே அவள் சூடிக்கொள்கிறாள். சீதா… இக்காட்டில் அக்குரலை கேட்கிறீர்களா?” தருமன் “ஆம்” என்றார். “ஆம், இக்காட்டின் பெயர் தசரதவனம். பண்டு இங்கேதான் தசரதன் நீரள்ளப்படும் ஒலி கேட்டு யானை நீர் குடிக்கிறது என்றெண்ணி அம்புவிட்டு சிரவணனை கொன்றார். அவர் தந்தையரின் பழிச்சொல்லை சூடினார். அவர்களின் துயரக்குரலின் எதிரொலிக்கு எதிரொலி என இங்கே ராமனின் துயரக்குரல் அழியாமல் நிலைகொள்கிறது.”

“சூதரே, நாங்கள் கோருவதொன்றே. இக்காட்டில் எங்கேனும் சுனைநாரைகள் வாழும் பொய்கைகள் உள்ளனவா?” என்றான் பீமன். “அதைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்? இதோ, இந்தக் கையில் இருக்கும் இறகு நச்சு இறகு. நச்சுப்பொய்கையில் நாரை அது” என்றான் சூதன். “இக்காட்டுக்கு அப்பாலுள்ளது கந்தகப் பெருவெளி. அதை யட்சர்கள் காக்கிறார்கள். ஆகவே யட்சவனம் என்றும் அதற்குப் பெயருண்டு. அங்கும் அதற்கப்பாலும் யட்சர்களன்றி வேறு உயிர்களே இல்லை. அப்படியென்றால் அங்கே வேதச்சொல் உண்டா?” தருமன் “உண்டு” என்றார்.

“ஆ! மறுபடியும் சரியான மறுமொழி. உண்டு. பாலையிலும் தரிசிலும் நின்றிருக்கும் செடிகளே உயிர்வல்லமை மிக்கவை” என்றான் சூதன். “ஆகவே பிறிதொரு கேள்வி. அமுதத்தை முழுமையாகவே பறவைகளுக்கு அளித்தபின் முனிவரின் உள்ளே நிறைந்தது எது?” தருமன் “அமுதே” என்றார். “அமுதென்றால் அது அழிவற்றது. குறையாத கலத்திலேயே அமுது அமைந்திருக்கும்.” சூதன் கைகொட்டி துள்ளிக் குதித்து “வேதச்சொல்லை நன்கு கற்றுவிட்டீர்கள். இனி நச்சுப்பொய்கைதான் உங்களுக்கு” என்று சிரித்தான். “நன்று, நன்று, செல்க!” என்றான்.

அவன் ஒரு சரடில் அந்த வைரத்தை சுற்றிக்கட்டி தன் நெற்றியில் அணிந்துகொள்வதைக் கண்டு பீமன் “என்ன செய்கிறீர்?” என்றான். “நான் இந்த வைரத்தை விற்கப்போவதில்லை, இளவரசே. இதன் மதிப்பு நாள்தோறும் ஏறிக்கொண்டே செல்லும். விற்றுவிட்டேன் என்றால் இதன் ஏறும் மதிப்பை முழுக்க நான் இழந்தவன் ஆவேன் அல்லவா? அவ்விழப்பை எண்ணி என்னால் எப்படி துயில் கொள்ளமுடியும்? ஆனால் இந்த வைரத்தின் உரிமையாளன் என்பதை நான் எப்படி கொண்டாடுவது? ஆகவேதான் வைரத்தைச் சூடி அலையப்போகிறேன்.”

பீமன் எரிச்சலுடன் “கள்வர்கள் திருடிச்செல்வார்கள்” என்றான். “ஆம், அப்படியென்றால் இழந்த வைரத்தின் உரிமையாளன் ஆவேன். அதன் மதிப்பு முடிவற்றது” என்றான் சூதன். “மந்தா, அவரை போகவிடு… அவர் விரும்பியதை செய்யட்டும்” என்றார் தருமன். “ஆம், நான் விரும்புவதும் அதுவே. ஆனால் நினைவறிந்த நாள்முதல் நான் இந்த முழவு விரும்புவதைத்தான் செய்துவருகிறேன்” என்றபடி அவன் தலைவணங்கி நடந்து சென்றான்.

பீமன் “பித்தன்!” என்றான். “நேரத்தை வீணடித்துச்செல்கிறார்.” தருமன் “இல்லை மந்தா, பித்தராயினும் அவர் சொன்னவற்றில் நாம் தேடும் அனைத்தும் உள்ளன” என்றார். பீமன் அவரை சிலகணங்கள் கூர்ந்து நோக்கிவிட்டு திரும்பி சகதேவனின் சிரிக்கும் கண்களை பார்த்தான்.

[ 2 ]

காடு மெலியத்தொடங்கியபோது அவர்கள் மலைச்சரிவில் கற்களால் ஒழுங்கற்று கட்டப்பட்டிருந்த அடித்தளத்தின்மேல் தடித்த மரக்கட்டைகளைக்கொண்டு கட்டப்பட்டிருந்த குடில் ஒன்றை கண்டனர். பீமன் “அது ஒரு அந்தணருக்குரியது” என்றான். அவர்கள் அதை நோக்கி சென்றார்கள். அந்தி நெருங்கிக்கொண்டிருந்தது. “அந்திக்குள் ஒரு கூரையைக் கண்டடைந்தது நல்லூழே. அங்கு வாழ்பவர் இந்நிலத்தைப்பற்றி பித்தில்லாதவர்கள் புரிந்துகொள்ளும்படி ஏதேனும் சொல்லவும் கூடும்” என்று பீமன் சொன்னான். நகுலன் அறியாது சிரித்துவிட்டு சகதேவனை நோக்கி முகம் திருப்பிக்கொண்டான்

அவர்கள் குடிலின் முற்றத்தை அடைந்தபோது உள்ளிருந்து இளைய அந்தணன் ஒருவன் இறங்கிவந்தான். “வருக, அரசே! வருக, இளையோரே!” என்றான். பீமன் “நீர் காட்டில் வாழ்ந்தாலும் அரசியலையும் அறிந்திருக்கிறீர்” என்றான். “நான் மாளவத்தைச் சேர்ந்தவன். என் ஆசிரியரும் அவந்தியில் வாழ்பவரே. இங்கு ஒரு வேள்விச்செயலுக்காக வந்துள்ளோம்” என்றான். “வருக, உங்கள் வருகையும் நல்லூழ் என்றே நினைக்கிறேன். வேள்விச்செயல் நாளை நிறைவடைகிறது.” அவன் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான். “என் பெயர் மித்ரன். இங்கு என் ஆசிரியர் சுஃப்ர கௌசிகர் இருக்கிறார்” என்றான். அப்பால் வேதச்சொல் ஒலித்துக்கொண்டிருப்பதை அவர்கள் கேட்டனர்.

“ஐவருக்கும் அளிக்க ஒரேஅறை மட்டுமே இங்குள்ளது. அரசி ஓர் அறைக்குள் தங்கிக்கொள்ளட்டும்” என்று மித்ரன் சொன்னான். “இங்கே அருகிலேயே ஓர் ஊற்று உள்ளது. நீராடி வருக! ஆசிரியரை சந்திக்கலாம்.” அவன் சென்றபின் அவர்கள் அழுக்கான ஆடைகளுடன் கிளம்பி நீராடச் சென்றனர். மலைச்சரிவில் சற்று இறங்கிச் சென்றபோது நீர் விழும் ஒலி கேட்டது. பாறையிடுக்கிலிருந்து ஊறி வழிந்த நீர் ஒரு சிறு சுனையில் கொட்டியது. அதில் இறங்கி அள்ளி முகர்ந்த பீமன் “கந்தக நீர்… நீராடலாம். ஆனால் மீன்களோ பிற உயிர்களோ இங்கு வாழமுடியாது” என்றான்.

“அப்படியென்றால் நாரைகள் எப்படி வாழும்?” என்றான் நகுலன். “மெய்மையை உண்டு வாழும் நாரைகள் உள்ளனபோலும்” என்றான் பீமன் நீரை நோக்கியபடி. நகுலன் சிரித்தான். சகதேவன் அவனை கண்களால் விலக்கினான். பீமன் நீராடத்தொடங்க பிறர் மெல்ல நீரிலிறங்கினர். நீர் மிகுந்த எடைகொண்டதுபோலிருந்தது. மூழ்கியபோது எரிமணம் மூக்கை நிறைத்தது. ஆனால் நீராடி எழுந்து மரவுரி மாற்றிக்கொண்டபோது புத்துணர்ச்சி ஏற்பட்டது. மேலே குடிலைநோக்கி சரிவுப்பாதையில் சென்றபோது அவர்கள் களைப்பை மறந்து உவகைகொண்டிருந்தனர். “இதற்கப்பால் ஒரு குன்று உள்ளது. அங்கே எரி நீர்மணம் கொண்டிருக்கும். ஏனென்றால் மெய்மை இருமுகம் கொண்டது” என்றான் பீமன். நகுலன் சிரிக்க “மூத்தவரே, பகடி வேண்டாம்” என்றான் சகதேவன்.

அங்கிருந்து பார்த்தபோது மேலே வேள்விப்பந்தல் தெரிந்தது. பத்துபேருக்குமேல் அமரமுடியாத சிறியபந்தல். ஆனால் அதில் நடப்பட்டிருந்த வேள்விமரமாகிய அத்தி முளைத்து தளிர்விட்டு கிளைகொண்டிருந்தது. தருமன் “குறைந்தது ஓராண்டாக வேள்வியை செய்துகொண்டிருக்கிறார் அந்தணர்” என்றார். “இவரை கேள்விப்பட்டதே இல்லை” என்று சகதேவன் சொன்னான். “அதனால்தான் வேள்வி செய்கிறார். முடிந்தபின் அனைவரும் கேள்விப்படுவார்கள்” என்று பீமன் சொன்னான்.

அவர்கள் வேள்விப்பந்தலுக்குச் சென்றபோது அவியளித்தல் முடிந்து சுஃப்ர கௌசிகர் எழுந்துவிட்டிருந்தார்.  சுஃப்ர கௌசிகர் வேள்வியன்னத்தை அவர்களுக்கு இரவுணவாக பகிர்ந்தளித்தார். அங்கே சுஃப்ர கௌசிகருடன் மித்ரனைத் தவிர இன்னொரு மாணவனாகிய சுஷமன் மட்டுமே இருந்தான். தருமன் சுஃப்ர கௌசிகரை வணங்கி முகமன் உரைத்தார். “நீங்கள் வந்திருப்பதை மித்ரன் சொன்னான்” என்று அவர் சொன்னார். “நான் நாளை இங்கு என் மகாருத்ர அக்னிஹோத்ர வேள்வியை நிறைவு செய்யவிருக்கிறேன். அதற்கு விழிச்சான்றாக அரசகுலத்தோர் வந்திருப்பது உகந்ததே. நாளை என் வேள்வியில் நீங்கள் எரிகாவலர்களாக அமர்ந்து அருளவேண்டும்.”

தருமன் “எரிகாவலிருப்பது அரசகுடியினருக்குக் கடமை. நாங்கள் அதை நல்லூழ் என்றே கொள்கிறோம்” என்றார். “ஆனால் இங்கு இத்தனிமையில் ஏன் இவ்வேள்வியை செய்கிறீர்கள் என்று அறியவிழைகிறேன்…” சுஃப்ர கௌசிகர் “அரசே, சில ஆண்டுகளுக்கு முன்பு மாளவத்தின் தென்பகுதியில் அறியாநோய் ஒன்று பரவியது. குழந்தைகள் மட்டும் காய்ச்சல்கண்டு ஒரேநாளில் இறந்தனர். அவர்கள் அனைவருமே இறக்கையில் விடாய் விடாய் என நீருக்குத் தவித்து தொண்டையையும் நெஞ்சையும் பற்றிக்கொண்டு துடித்து மாண்டனர். மருத்துவர்கள் தங்கள் நூல்களை முற்றாய்ந்தும் அதற்கு மாற்று காணமுடியவில்லை. நிமித்திகர் குறிகளை ஆய்ந்தபின் மலைகளில் வாழும் பதினாறு ருத்ரர்கள் நிறைவுசெய்யப்படவில்லை என்றனர். அதற்கு என்ன மீள்வழி என்று ஆராய்ந்தபோது இதைப்போன்ற ஒரு ருத்ர அக்னிஹோத்ரம் ஒன்றைச் செய்யலாம் என்று தெரியவந்தது. அதைச் செய்ய நான் ஒப்புக்கொண்டேன்” என்றார்.

“அதை ஏன் இங்கு செய்யவேண்டும்?” என்றார் தருமன். “இந்த வேள்வி தனித்துவம் கொண்டது. நோய்பரவிய தென்பகுதிக்காட்டில் தென்கிழக்கு மூலையில் நின்றிருக்கும் அரணிமரத்தில் இருந்து எரிகட்டைகள் செய்யப்பட்டன. அந்த அரணிக்கட்டைகளில் பதினாறு ருத்ரர்களும் பூசைசெய்யப்பட்டு குடியேற்றப்பட்டனர். அக்கட்டைகளை எடுத்துக்கொண்டு நான் மாளவத்திலிருந்து விலகி நடந்து இந்த வடபுலக் காட்டுக்கு வந்தேன். அந்த அரணிக்கட்டைகளை உரசி ஒவ்வொரு நாளும் ருத்ரர்களை எழுப்பி எரி கொணர்ந்து வேள்வித்தீ மூட்டுவேன். சிறிய வேள்வி என்றாலும் எவ்வகையிலும் குறைவுபடாதது இது” என்றார் சுஃப்ர கௌசிகர்.

“நான் கற்ற முழுவேதத்தையும் ஒரு சொல் மிச்சமின்றி ஓதி அவியிடுவதே இவ்வேள்வியின் நெறி. என் உள்ளத்தில் அமைந்த சொற்கள் அனைத்தையும் எரியாக்குவேன். அதன் பின் இறுதிநாளில் நான் என்னை இத்தீயில் அவியிடுகையில் வேள்வி முடிகிறது. என்னுடன் என் வேள்விக்கொடையால் நிறைவுகொண்ட ருத்ரர்களும் விண்ணிலெழுவார்கள். என் மாணவர் வேள்விச்சாம்பலை எடுத்துக்கொண்டு மாளவத்துக்குத் திரும்புவார்கள்” என்றார் சுஃப்ர கௌசிகர். “நான் கிளம்பியதுமே நோய் என்னுடன் வந்துவிட்டது. அவியாகும் பலிமிருகம் தூயதாக இருக்கவேண்டும். அதனுள் காமகுரோதமோகங்கள் நிறைந்திருக்கக்கூடாது. ஆகவே நான் இங்கு வந்தேன். ஓராண்டாக இவ்வேள்வி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நாளை முடியவிருக்கிறது.”

அவரை வணங்கி அவர்கள் திரும்பி அறைக்குச் சென்றனர். பீமன் தலைகுனிந்து நடக்க தருமன் “மந்தா, இளிவரலில் ஈடுபடுபவர்களின் இழிவு ஒன்றுண்டு. அவர்கள் அறியாமலேயே தங்களை பிறரைவிட மேலே வைத்துக்கொள்ளத் தொடங்குகிறார்கள். ஆகவே மேன்மைகளை உணராத வீணர்களாக காலப்போக்கில் மாறிவிடுகிறார்கள்” என்றார். பீமன் ஒன்றும் சொல்லவில்லை. உள்ளறையில் மித்ரன் மறுநாள் வேள்விக்கான பொருட்களை ஒருக்கிக்கொண்டிருந்தான். அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சிறிய அறைக்குள் சென்று புல்பாயில் படுத்துக்கொண்டார்கள். குறைவாகவே இடமிருந்தமையால் பீமன் வெளியே சென்று திண்ணையில் படுத்தான். சென்றதுமே அவன் குறட்டை ஒலி கேட்கத்தொடங்கியது.

“துயின்றபடியே சென்றிருக்கிறான்போலும்” என்றார் தருமன் சிரித்தபடி. நகுலன் “அவர் உண்ணும்போதும் துயிலும்போதும் ஒரு சொல்லும் ஊடாகப்புக ஒப்புவதில்லை” என்றான். தருமன் உடல்முழுக்க களைப்பை உணர்ந்தார். கண்களை மூடியபடி அந்த நாரையிறகைப்பற்றி எண்ணிக்கொண்டார். வரும்வழியெங்கும் ஒரு நாரையையோ இறகையோ அவர் பார்க்கவில்லை. நகுலன் “மூத்தவரே, வேள்வி செய்பவரும் அவியாகும் வேள்வியைப்பற்றி கேள்விப்பட்டதே இல்லை” என்றான். “இத்தகைய வேள்விகள் முற்காலத்தில் ஏராளமாக இருந்தன. இவை ஆசுரம் எனப்படுகின்றன” என்றார் தருமன். “ராவண மகாபிரபு தன் தலைகளை ஒவ்வொன்றாக அறுத்துத் தீயிலிட்டதை கேட்டிருப்பாய்.”

SOLVALAR_KAADU_EPI_55

“ஆம்” என்றான் நகுலன். “தன்னை இழந்து தன்னைவிட மேலான ஒன்றை அடைவதைப்பற்றி ஆசுரவேள்விகள் சொல்கின்றன” என்று தருமன் சொன்னார். “தனக்கென ஒன்றும் பெறாது தன்னை இழப்பது வேள்வியின் உச்சம். வேள்வி செய்யும் அந்தணன் குமுகமெனும் பெருவேள்வியில் அவியும் ஆவான் என்கின்றன நூல்கள்.” இனிய அமிழ்தலாக துயில் வந்து மூடியபோது மீண்டும் அந்தப் பறவையை நினைவுகூர்ந்தார். அதன் இறகு இருளில் வெண்ணிறத் திவலையாகச் சுழன்று மண்ணிறங்கியதை நெடுநேரம் நோக்கிக்கொண்டிருந்தார்.