சொல்வளர்காடு - 45
[ 16 ]
“ஒரு நகரத்தின் உள்ளம் இருள்வதை எப்படி கண்களால் பார்க்கமுடியும் என்று வியந்தபடியே துவாரகையின் வழியாக சென்றேன்” என்றார் இளைய யாதவர். “ஒவ்வொன்றும் இருண்டிருந்தன. வெண்மை கண்கூசவைக்கும் சுதைச்சுவர்களும் பளிங்குப்பரப்புகளும்கூட. அரண்மனைக்குள் நுழைந்ததும் அக்ரூரர் என்னருகே வந்து முகமனுரைத்தார். ‘என்ன நிகழ்ந்தது?’ என்றேன். ‘தாங்கள் ஓய்வெடுத்து வருக! மந்தண அறைக்கு வந்து நானே சொல்கிறேன்’ என்றார். ‘நன்று’ என்று மட்டும் சொன்னேன். மந்தண அறைக்குச் செல்வதற்கு முன்னரே அனைத்தையும் ஒற்றர்களின் ஓலைகள் வழியாக அறிந்துகொண்டேன்.”
அக்ரூரர் அனைத்தையும் மிகவும் எளிதாக்கி சொன்னார். ஆனால் அந்த வடிவிலேயே நிகழ்ந்தவற்றின் அனல் இருந்தது. சத்யபாமை அவள் சினத்தாலும் மூத்தவர் அவர் பொறுமையின்மையாலும் அனைத்தையும் அவற்றின் உச்சம் நோக்கி கொண்டுசென்றுவிட்டிருந்தனர். அந்த நாளுக்குப்பின் நகரில் வெளிப்பூசல்கள் முழுமையாக மறைந்து மேலோட்டமான அமைதி திரும்பியது. நோய்க்கூறு உள்ளே வளரத்தொடங்கியது. ஒவ்வொருவரும் வஞ்சம் கொண்டனர். வஞ்சத்தை சொல்லிச் சொல்லி வளர்த்தனர். அந்த அமைதியையே தங்களுக்கு எதிரான பெருவஞ்சம் ஒன்று வளர்வதற்கான சான்றாக எண்ணிக்கொண்டனர்.
ஆனால் சத்யபாமையும் மூத்தவரும் அமைதி திரும்பிவிட்டதாகவே எண்ணினர். ஆகவே அவர்கள் தங்கள் தனிப்பட்ட சினங்களை வளர்த்தெடுக்கலாயினர். தன் ஆணையை சத்யபாமை புறக்கணித்தமையால் மூத்தவர் கொதித்துக்கொண்டிருந்தார். ரேவதிதேவி அதை அவரிடம் சொல்லிச் சொல்லி வளர்த்தெடுத்தார். மறுபக்கம் தன் அரண்மனைக்குள் புகுந்து தன்னை மிரட்டினார் என்று சத்யபாமை சினம்கொண்டாள். இருசாராரும் எங்கும் சந்தித்துக்கொள்ளவில்லை. ஆகவே அவர்கள் சொல்லவேண்டிய அனைத்தையும் தங்கள் உள்ளங்களுக்குள்ளேயே சொல்லி பெருக்கிக்கொண்டனர். சொல்லப்படாத எதிர்மொழிகளை தாங்களே உருவாக்கிக்கொண்டு அதனெதிர்நின்று மேலும் வஞ்சம் கொண்டனர்.
ஒவ்வொருவருக்கும் ஓர் உளச்சிக்கல். தான் செய்தது பிழை என சத்யபாமையின் உள்ளம் அறிந்திருந்தது. அதை வெல்ல தான் சிறுமைசெய்யப்பட்டவள் என்னும் பாவனை தேவைப்பட்டது. ஆகவே மூத்தவரின் சொற்களை அவள் மிகைப்படுத்திக்கொண்டாள். அவ்வலியில் திளைத்தாள். அரசே, நாம் எத்தனை ஆவலாக நமக்கு இழைக்கப்பட்ட சிறுமதிப்புகளை வளர்த்தெடுத்துக்கொள்கிறோம் என்று எண்ணியிருக்கிறீர்களா? ஆவலுடன் அதை நினைவில் பதித்துக்கொள்கிறோம். ஒவ்வொரு சிறு விவரிப்புகளுடனும் பேணி வைத்துக்கொள்கிறோம். அதை மீண்டும் மீண்டும் நடித்து நூறுமுறை ஆயிரம் முறை சிறுமைகொள்கிறோம். அடிவிழுந்து ஆணவம் துடிதுடித்து கன்றும்தோறும் துலாவின் மறுதட்டில் பிறிதொரு ஆணவம் பெருகிப்பெருகி வானளாவுகிறது.
நான் அரசியின் மாளிகைக்குச் சென்றபோது துயர்தாளாமல் சத்யபாமை நோயுற்று படுக்கையில் கிடந்தாள். மெலிந்த உடல், புகைபடிந்த கண்கள், வெளிறி உலர்ந்த உதடுகள். மெல்லிய குரலில் என்னிடம் ‘நான் இனி உயிர்வாழவேண்டியதில்லை, அரசே. அரசியென இங்கிருந்தேன். அடிமைப்பெண் என்றானேன். இனி நான் அரியணை அமரமுடியாது. ஆணைகளை எவர் விழிநோக்கியும் சொல்லமுடியாது’ என்றாள். ‘இல்லை, நீ ஒவ்வொன்றையும் பெருக்கிக்கொள்கிறாய்’ என்றேன். ‘நானா பெருக்குகிறேன்? நான் செய்தவை எந்த அரசியும் செய்பவை. செய்தாகவேண்டுபவை. அதன்பொருட்டு இன்று நான் சிறுமைசெய்யப்பட்டுள்ளேன்’ என்று கூவினாள்.
ஒவ்வொன்றுக்கும் அவளிடம் விளக்கமிருந்தது, அவை நூறாயிரம்முறை எண்ணி சொல்லடுக்கி செய்யப்பட்டவை. ‘நாம் பேரிடர் நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம், அரசி. யாதவ ஒற்றுமை குலையும் செய்தி பரவுவதே நமக்கு தீங்கை கொண்டுவரும். பிழைமுதல்நாடி சீரமைக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம்’ என்றேன். சீற்றத்துடன் எழுந்து அமர்ந்து தன் குழலள்ளிச் சுற்றி முடிந்து ‘அனைத்தும் தொடங்கியது அவளிடமிருந்து. அவள் யார்? குக்குடர் குலத்தின் சிறுமகள். தன்னை தொல்புகழ் ஷத்ரியப் பேரரசி என்று எண்ணிக்கொள்கிறாள்…’ என்றாள்.
‘குக்குடர்களைப் பற்றி அறியாதவர்கள் யார்?’ என்று அவள் கூவினாள். ‘குங்குரர் குலத்தில் இருந்து பிரிந்து சென்ற சின்னஞ்சிறுகுலம் அது. இவர்களின் கதையை நான் சிற்றிளமையிலேயே கேட்டு வளர்ந்திருக்கிறேன். விருஷ்ணிகுலத்து சித்ரரதரின் மைந்தர் விடூரதரின் ஆட்சி இங்கே நிகழ்ந்துகொண்டிருந்தபோது அவர் இளையோன் குங்குரர் தன் தமையனின் மைந்தரைக் கொன்று அவர் மகள்கள் நால்வரை நிலம் கடத்தி மதுராவை கைப்பற்றினார். அறம்பிழைத்த குங்குரரை அன்றே பழிச்சொல்லிட்டு நகர் நீங்கினர் விருஷ்ணிகள்.’
‘பழிகொண்ட குலம் அது. ஆயிரம்வேள்விகள் செய்தாலும் கறைநீங்காத பெயர்கள் அவை’ என்று அவள் கூச்சலிட்டாள். ‘குங்குரரின் கொடிவழி வந்த வஹ்னி, புலோமன், கபோதரோமன், தும்புரு, துந்துபி, தரித்ரன், வசு, நாகுகன், ஆகுகன் ஆகியோரும் என்றும் யாதவர்களால் பழிசுமந்த இழிந்தோர் என்றே பார்க்கப்பட்டனர் என்று அறியாதவர் எவருமில்லை. ஆகுகரின் மைந்தர் உக்ரசேனரும் தேவகரும். உக்ரசேனர் மதுராபுரியின் மணிமுடி சூடினார். தேவகர் உத்தரமதுராபுரிக்கு அரசரானார். விதர்பநாட்டு வேடர்குல மன்னர் சத்யகேதுவின் மகள் பத்மாவதியை மணந்து உக்ரசேனர் ஈன்ற மைந்தனே கம்சர். பிள்ளைப்பழி கொண்ட வீணர் அவர்.’
‘கம்சரைக் கொன்று பழிதீர்த்தது விருஷ்ணிகுலம். விடூரதரின் கொடிவழி வந்த சூரசேனரின் குருதியே விருஷ்ணிகுலமாக எழுந்து வந்து இந்நகரை ஆள்கிறது. பழிகொண்ட சிறுகுலத்தில் மேலும் பழிகொண்டு கிளைத்த குக்குடரின் குருதியில் வந்தவளுக்கு இத்தனை ஆணவம் எப்படி வந்தது? நான் கேட்க விழைவது அதுவே. குங்குரகுடியின் அரசர் வஹ்னியின் ஆட்சிக்காலத்தில் அடித்து துரத்தப்பட்டு ரைவதமலைக்குச் சென்று ஒளிந்துகொண்டனர் குக்குடர். அங்கிருந்து கடலுள் அமைந்த குசபீடம் என்னும் புல்லடர்ந்த சிறுதீவுக்குச் சென்றனர். அங்கே ஏழு பசுக்களுடன் ஏழு நாட்களுக்குரிய உணவுடன் அவர்கள் சென்றனர் என்று கதைகள் சொல்கின்றன.’
‘அங்கு அவர்களுக்கு எதிரிகுடிகள் இருக்கவில்லை. கன்றுகள் பெருக புல்லும் இருந்தது. அங்கே உபரைவதம் என்னும் சிறுநகரை உருவாக்கி அரசரென முடிசூடிக் கொண்டார் குக்குடகுலத்து சாம்பர். அவரை ரைவதர் என அழைத்தனர் அவர்குடியினர். சூரியகுலத்தவர் என்றும் வைவஸ்வத மனுவின் குருதியில் இக்ஷுவாகு கொடிவழியில் பிறந்தவர் என்றும் புராணக்கதை சமைத்தனர். அக்குலத்தில் பிறந்த சிற்றரசன் கக்குடுமி பெற்ற மகள் இவள். அங்கே கன்றோட்டி வாழ்ந்த யாதவச்சிறுமி. ரேவதி என்று பெயர் கொண்டமையால் பெரும்புகழ்கொண்ட ரைவதரின் மகள் அவள் என்று இங்கே சூதர் சொல் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்…’
‘நீ சொல்வது உண்மைச் செய்திகளை. ஆனால் அவை அடுக்கப்பட்ட முறை பிழையானது. அவ்வாறு எக்குடியையும் இழிவுசெய்யலாம். பழிக்கறை இல்லாத குடி என ஏதுமில்லை’ என்றேன். ‘நான் அறிவேன், ஏன் அவளை மூத்தவர் மணக்க ஏற்பாடு செய்தீர்கள் என்று. சிந்துநாட்டுக்கும் துவாரகைக்கும் நடுவே உள்ளது குசபீடம். அந்நகர் நம்முடன் இருந்தாகவேண்டும். பழிகொண்ட வீண்குடியின் ஆணவத்தை அதன்பொருட்டு ஏற்றுக்கொண்டது நீங்கள் செய்த பிழை. இங்கு வந்தபோது அவள் காட்டிய தோரணைதான் என்ன? அவள் நகரம் ராஜகிருகத்தைவிடவும் பெரிது என்று சொன்னாள் என்று ஒருமுறை அறிந்தேன். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. சிறுமையே இயல்பெனக்கொண்டவள் என பின்னர் அவளை புறக்கணிக்கலானேன்’ என்றாள்.
சத்யபாமை ‘இங்கு வந்தநாள் முதல் அவள் நெஞ்சு வஞ்சத்தால் எரிந்துகொண்டிருக்கிறது என நான் அறிவேன். மதுராவை ஆள்வது வசுதேவர். மதுவனத்தை சூரசேனர். துவாரகைக்கு அரசர் இளையவர் என்றால் இவர் யார்? இவரை துவாரகையின் அரசர் என்று எங்களிடம் சொன்னதனால்தான் நான் இங்கு மங்கலநாண் சூடி வந்தேன். இவர் இங்கு படைத்தலைவர்கூட இல்லை. இளையோனின் மெய்க்காவலர். அப்பொறுப்பும்கூட இல்லாமல் காடுகளில் வேட்டையாடி அலைகிறார். அவர் சிறுமையை ஏழுமடங்கு எடையுடன் நான் சூடிக்கொண்டிருக்கிறேன் என்று அவள் சொன்னதாக அறிந்தேன்’ என்றாள்.
அவள் உணர்வென்ன என நான் அறிவேன். அவள் கன்றோட்டி வாழ்ந்த யாதவப்பெண் என்பதை பிறர் மறந்தாலும் அவள் மறப்பதில்லை. அரசி என்று தன்னை ஆடிமுன் நின்று சொல்லிச் சொல்லி உருவேற்றிக்கொள்பவள் அவள். ஆணைகள் அனைத்தையும் மும்முறை அழுத்திச் சொல்வாள். அவை அக்கணமே தலைசூடப்படுகின்றனவா என்று நோக்குவாள். சற்றே மீறப்பட்டாலும் சினம்கொண்டு நிலைமறப்பாள். அவள் உள்ளம் எப்போதும் அவளுக்கான மதிப்பையே எண்ணிக் கணக்கிட்டுக்கொண்டிருக்கிறது. தாழ்வுணர்ச்சி கொண்ட பெண்கள் சிறுமையின் படிகளில் இறங்கத்தொடங்குகையில் அதுவே அவர்களின் இடமென்பதுபோல அத்தனை இயல்பாக, அத்தனை உவகையுடன் பாய்ந்து இறங்கிச்செல்கிறார்கள்.
சற்றே சினத்துடன் ‘உன் சிறுமையை அவர்கள் மேல் சுமத்தவேண்டியதில்லை’ என்றேன். அவள் அதைத்தான் எதிர்பார்த்திருந்தாள். என் சொற்களைக்கொண்டு தன்னை மேலும் சினம்கொள்ளச் செய்தாள். ‘என் சிறுமையா? என் சிறுமை என்றா சொல்கிறீர்கள்? நான் சொல்கிறேன் சிறுமை எவருடையது என்று. ஒருமுறை அவளே என்னிடம் சொன்னாள். மூத்தவர் நாடாளவேண்டுமென்பது அரசமுறை. மூத்தவர் இருக்க இளையவர் அரசாள்வதை துவாரகையின் மூத்தோர் எப்படி ஒப்பினர் என்று. நான் சொன்னேன், இவ்வரசை அமைத்தவர் இளையவர். அமைத்தவருக்குரியது அரசு. மூத்தவருக்குரிய அரசு மதுராபுரி. வசுதேவர் மறைவது வரை உன் கொழுநர் அங்கு சென்று இளவரசாக அமையட்டும், அதுவே நெறி என்று. வாயை மூடிக்கொண்டு சென்றாள்’ என்றாள்.
மேலே சொல்லின்றி அவளை வியப்புடன் நோக்கிக்கொண்டிருந்தேன். அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் நெடுங்காலம் புடம் போடப்பட்டது என அறிந்திருந்தேன். ‘ஒவ்வொரு அரசமுறைச் சடங்கிலும் அவளை மூத்தவரின் அரசி என்பதனால் முதன்மைப்படுத்தி அரியணை அமரச்செய்கிறோம். இங்குள்ள ஒவ்வொரு குடித்தலைவரும் அவளுக்கே முதலரசிக்கான முறைமைகளை செய்கிறார்கள். ஆயினும் அவள் நிறைவுகொள்ளவில்லை. இந்நகரை அரசியென அமர்ந்து ஆள விழைகிறாள். அவளுக்குச் சேடியென நான் நின்றிருக்க வேண்டுமென எண்ணம் கொண்டிருக்கிறாள்’ என்றாள்.
உரியதருணத்தில் வந்தமைகிறது பெண்களின் தன்னிரக்கம். கண்ணீருடன் ‘நான் எதையும் இதுவரை சொன்னதில்லை. எத்தனைமுறை நான் இட்ட ஆணைகள் இங்கு அவளால் நிறுத்தப்பட்டிருக்கின்றன என்று அறியமாட்டீர்கள். நான் குங்குரர்களிடம் எளிய ஆணையொன்றை இட்டால்கூட இவள் யார் என்குடிக்கு ஆணையிட? என்குடி இங்கே என் கோல்கீழ் வாழ்வது என்று அவள் சினம்கொள்கிறாள். என் ஆணைகளை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று குங்குரர்களுக்கு அவள் சொல்லிக்கொண்டே இருக்கிறாள். அவர்கள் அவளுக்கு கட்டுப்பட்டவர்கள் என தங்களை எண்ணத் தொடங்கிவிட்டனர்’ என்றாள்.
‘அனைத்தும் தொடங்கியது அங்கிருந்தே. அவளுடைய வஞ்சத்திலும் பெருவிழைவிலும் இருந்தே. ஆம், அதை நான் உறுதியாகவே அறிவேன். நான் அந்தகர்களின் அரசி நீங்கள் விருஷ்ணிகளின் தலைவர் என அவள் போஜர்களுக்கும் ஹேகயர்களுக்கும் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறாள். அவர்கள் இந்நகர்மேல் காழ்ப்பு கொண்டதும் காவல்பணிகளை உதறிச் சென்றதும் அதனால்தான்.’ கண்ணீரைத் துடைத்துவிட்டு மீண்டும் சீற்றம் கொண்டு கேட்டாள் ‘நான் செய்தபிழை என்ன? இந்நகரின் அரசி நான். காவல்பணிகளை உதறிச்செல்ல எந்த வீரனுக்கும் எதன்பொருட்டும் உரிமை இல்லை. அது பெற்றதாயை பாலையில் விட்டுவிட்டுச் செல்வதுபோல. நாளை இவ்வாறு ஒவ்வொன்றுக்காகவும் படைப்பொறுப்பை வீரர் கைவிடுவாரென்றால் இந்நகர் என்னாகும்? போர்க்களத்தில் பின்வாங்கினார்கள் என்றால் நம் குடி என்ன ஆகும்? சொல்க!’
‘நான் அரசமுறைப்படி எது தண்டனையோ அதையே வழங்கினேன். தண்டனைக்களத்தில் என் குடியை இழிவு செய்தவனுக்கு எது அரசவழக்கமோ அதை தண்டனையாக அளித்தேன். அந்தத் தருணத்தைத்தான் அவள் பயன்படுத்திக்கொண்டாள். அவள் தன் அறிவிலாக் கணவனை எனக்கெதிராக கிளப்பிவிட்டாள். அவர் சினந்து வந்து என்னைக் கொல்வேன் என அறைகூவினார். நான் இட்ட ஆணைகளை அவரே நிறுத்தம் செய்தார். என்னை இழுத்துச்சென்று குக்குடர்களின் முன் நிறுத்துவேன் என அவர்களிடம் வஞ்சினம் உரைத்துவந்திருந்தார். அரசே, அவர் உள்ளமும் இன்று திரிந்துவிட்டது. இந்நகரின் உரிமை தன்னைச் சார்ந்தது என அவரும் எண்ணத் தலைப்பட்டுவிட்டார். அவள் அதை அவர் சித்தத்திற்குள் நுழைத்துவிட்டாள். நீங்கள் இல்லாதபோது இவ்வரசின் பொறுப்பு என்னுடையது. என் வாயிலில் வந்து நின்று என்னை இழுத்துச் செல்ல ஆணையிடுகிறார் என்றால் அவர் அறைகூவுவது எவருடைய ஆட்சியை?’
என்னால் ஒரு சொல்லும் எடுக்க முடியவில்லை. அவள் அரங்குநிறைந்து ஆடிக்கொண்டிருந்தாள். நான் ‘நீ உடல்நிலையை பேணிக்கொள். நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லி எழுந்துகொண்டேன். என் அரண்மனைக்கு மீண்டபோது அங்கே குசபீடத்தின் அரசியின் அழைப்புடன் சேடிப்பெண் காத்திருந்தாள். அவர்களை கொடிமண்டபத்தில் சந்தித்தேன். என்னைக் கண்டதும் கண்ணீருடன் எழுந்து கைகளை நீட்டியபடி ‘இவ்வரசில் நான் யார்? அதை நான் அறிந்தாகவேண்டும். இன்றே அதை உங்கள் வாயால் சொல்லுங்கள். நான் சேடிப்பெண் என்றால் இன்றே நான் என் தந்தையிடம் மீள்கிறேன், அதற்கு நான் பழகியவள் அல்ல’ என்றார்.
‘என்ன நிகழ்ந்தது? சொல்லுங்கள், அரசி’ என்றேன். ‘நான் உங்கள் மூத்தவரின் அரசி. குடிமுறைப்படி அவரே துவாரகையின் அரசர். ஆகவே இந்நகர் எனக்குக் கட்டுப்பட்டது. அவள் இந்நகரை ஆள விழைகிறாள் என்றால் ஆகட்டும் என அதை ஏற்றது என் பெருந்தன்மை. அவளுடைய துடுக்கையும் ஆணவத்தையும் ஆயிரம்முறை தாங்கியிருப்பேன். ஒவ்வொரு முறை சிறுமை செய்யப்படும்போதும் என் கொழுநரின் நாட்டுக்கென அதை பொறுத்துக்கொண்டேன்’ என்றதுமே விழிநீர் உகுக்கத்தொடங்கினார். அதை வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தேன். ‘ஆனால் என் கண்முன் எளிய குடியினர் அழிக்கப்படுவதை காண என்னால் இயலவில்லை. என்குடியினர் வந்து என்முன் எங்களுக்கு எவருமில்லை என்று இரந்து நிற்கையில் விழிதிருப்பும் அளவுக்கு நான் கோழையோ தன்னலம் கொண்டவளோ அல்ல…’
‘தாங்கள் செய்ததில் பிழையேதுமில்லை’ என்றேன். ‘அதை அவையில் சொல்லுங்கள். அவள் அறியட்டும் நீங்கள் எண்ணுவதென்ன என்று…’ என்று அவர் சீறினார். ‘நான் உங்கள் தமையனிடம் சொன்னது ஒன்றே, இது அவர் அரசு அல்ல என்றால் அவர் இங்கிருக்கவேண்டியதில்லை. அவர் அந்தகர்களால் சிறுமைப்படுத்தப்பட்டு அதை தாங்கிக்கொண்டு இங்கே தொடரவேண்டிய தேவையே இல்லை. அவருக்கு குக்குடர்களின் படை இருக்கிறது. விருஷ்ணிகளில் எவர் அவருடன் எழுவார்கள் என்று பார்க்கட்டும் அவர். போஜர்களும் ஹேகயர்களும் குங்குரர்களும் அவருடன் இன்று வருவார்கள். தன் நிலத்தைத் தேடிச்செல்வது யாதவர்களுக்கு இழுக்கொன்றுமில்லை, அவர்களின் தொன்றுதொட்டுவரும் வழக்கமே.’
நான் ‘இது என் மூத்தவரின் நிலம். இங்கு அவர் ஆணையை மீற எவருக்கும் உரிமை இல்லை’ என்றேன். ‘இச்சொற்களின் பொருளின்மையைத்தான் இருபதாண்டுகளுக்கும் மேலாக காண்கிறேன். இந்நகரம் அந்த அந்தகக்குலத்து கன்றோட்டும் பெண்ணுக்குரியது. அவளுக்குத் தெரியும், அவள் அரசகுடி அல்ல என்று. அதன் உளநோயால் அவள் ஆட்டுவிக்கப்படுகிறாள்.’ நான் அங்கும் சொல்லிழந்தே கிளம்பினேன். என் மூத்தவரைச் சென்று சந்திக்கவே இல்லை. அவர் அனைத்தையும் மறந்து வேட்டைக்குச் சென்றுவிட்டார் என அறிந்தேன். அது அவரது இயல்பு. அவர் உள்ளத்தால் அள்ளிக்கொள்ள முடியாதவை நிகழும்போது முழுமையாகத் தவிர்த்து ஒதுங்கிவிடுவார்.
ஒவ்வொரு நாளும் ஓரிரு குடி என ஹேகயர்களும் போஜர்களும் துவராகையைவிட்டு நீங்கினர். அனைத்து குடித்தலைவர்களையும் ஒரு பொதுமன்றுகூடலுக்கு அழைத்தேன். அனைவரும் வந்திருந்தனர். அவர்கள் அங்கே கொந்தளித்துப் பூசலிட்டிருந்தார்கள் என்றால் அதை எளிதில் கடந்திருப்பேன். ஆனால் அவர்கள் ஆழ்ந்த அமைதியுடன் தனிக்குழுக்களாக வந்தனர். ஒருவரை ஒருவர் அறியாதவர் போல இருந்தனர். ஒருசொல்லும் உரைக்காமல் அவையில் அமர்ந்திருந்தனர்.
நான் விழியுருக துவாரகையின் நிலைகொள்ளல் எத்தனை இன்றியமையாதது என்று பேசினேன். யாதவகுலங்கள் சிதறினால் முற்றாகவே அழிக்கப்படுவோம் என்று அச்சுறுத்தினேன். வாழப்போகும் மைந்தருக்காக ஒற்றுமை கொள்வோம் என மன்றாடினேன். அவர்களின் உளக்குறைகளை உரைக்கும்படி கேட்டேன். அவர்கள் அசையாதிருந்தனர். அவர்களை நேரிடையாக நோக்கி அக்ரூரர் பேசும்படி கோரினார். பெயர் சொல்லி அழைத்து வேண்டினார். எவரும் எதுவும் சொல்லவில்லை. சலித்துப்போய் நான் அவைவிட்டுச்சென்றேன். அதே வெற்றுவிழிகளுடன் அவர்கள் திரும்பிச்சென்றார்கள்.
பின்னர் அவர்களின் குடிகள்தோறும் சென்றேன். குடித்தலைவர்கள் மீண்டும் மீண்டும் தாங்கள் ஒன்றும் சொல்லப்போவதில்லை என்றனர். தங்கள் குடி சினம்கொண்டிருக்கிறது என்றும், குடியின் உள்ளத்திற்கு தாங்கள் கட்டுப்பட்டவர்கள் என்றும் சொன்னார்கள். குடிகளையே நேரில் சந்திப்போம் என்று நான் அவர்கள் சிற்றூர்கள்தோறும் சென்றேன். அந்தகர்களும் விருஷ்ணிகளும் என்னை அவர்களின் குடிக்கு வஞ்சகம் செய்தவனாகவே எண்ணினர். ‘நீ ஒரு விருஷ்ணி என சொல்லிக்கொள்ள நாணுகிறாய், யாதவனே’ என என் தந்தையின் அணுக்கரான அஜபாலர் சொன்னார்.
‘உன் தந்தைபெயரை நாணுவதற்கு நிகர் அது என நீ எண்ணியிருக்கவில்லை. ஷத்ரிய குடிகளில் பெண் தேடி நீ அலைந்தபோதே அதை உணர்ந்தோம். இன்று உன்னை பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி என நிறுவும்பொருட்டு முயல்கிறாய். குடிப்பெருமையையும் குலமரபையும் கைவிட்டு உனக்கு அந்த பீடத்தை அமைத்துக்கொடுத்து விருஷ்ணிகள் அடைவதுதான் என்ன? போதும். எங்களுக்கு உன் நகர் தேவையில்லை. நாங்கள் இங்கே காடுகளில் கன்றோட்டியே வாழ்கிறோம். விருஷ்ணிகள் எங்கும் பணியவேண்டியதில்லை.’
அவர் நான் சொன்ன எதையும் கேட்கவில்லை. ‘ஆகநிறைவாக நீ சொல்லவருவதுதான் என்ன? நாங்கள் உன் அரசுக்கு அடித்தளமாக அமையவேண்டும். எங்கள் மேல் நீ ஏற்றிவைக்கும் அத்தனை குப்பைகளையும் சுமக்கவேண்டும். அவர்களின் கழிவுகளையும் ஏந்திக்கொள்ளவேண்டும் இல்லையா? செல்க, விருஷ்ணிகளுக்கு பேரரசுகள் தேவையில்லை. காடுதான் அவர்களின் அரசு.’ உண்மையில் அவர் சொன்ன இறுதிச்சொல்தான் அனைத்துக்கும் அடியிலுள்ளதா? அவர்கள் பேரரசின் மக்களாக இருந்து சலித்துவிட்டார்களா? காட்டின் அரைவிலங்கு வாழ்க்கை நோக்கி இழுக்கப்படுகிறார்களா?
நேர் எதிர்த்திசையிலிருந்தனர் ஹேகயரும் போஜர்களும். ‘அறிக யாதவனே, நாங்கள் கன்றோட்டும் குலம் அல்ல. விருஷ்ணிகளாகிய நீங்கள் கன்றுகளுடன் காட்டில் குடில்களை தலையில் சுமந்தலைந்த ஒரு காலமிருந்தது. அன்று மாகிஷ்மதியைத் தலைநகராக்கி ஆண்டவர் எங்கள் பேரரசர் கார்த்தவீரியர். நீ எத்தனை பெரிய அரசனானாலும் கார்த்தவீரியனின் நிழலின் துளிகூட ஆவதில்லை என்று உணர்க. மாகிஷ்மதிப்பேரரசின் எச்சமென இன்றுள்ளது போஜர்களின் மார்த்திகாவதிதான், துவராகை அல்ல’ என்றார் ஹேகயர்குலத்தலைவர் பிரபவர்.
‘நாங்கள் எங்கள் வாள்வல்லமையால் வென்றமைத்தது அப்பேரரசு. இன்றும் அவ்வாள்வல்லமையை நம்பியே நீ எங்களிடம் வந்து பணிந்து நிற்கிறாய். இல்லை என்றால் செல். சென்று அந்தகர்களையும் விருஷ்ணிகளையும் வைத்து உன் நகரை அமைத்துப்பார்… அறைகூவுகிறோம், அரைநாழிகைநேரம் அவர்களால் உன் நகரை காக்கமுடியாது’ என்று அவர் சொன்னபோது சூழ்ந்திருந்தவர்கள் ‘ஆம்! ஆம்!’ என்று கூச்சலிட்டனர். ‘கன்றோட்டிகளைக் காக்க நாங்கள் வாளேந்தி நிற்கவேண்டும். அக்கன்றோட்டிகள் எங்கள் அரசகுடி என்று முடிசூடி அமரவேண்டும். இதற்காகவா நீ வந்தாய்? செல். எங்களுக்குரிய அரசை அமைக்க நாங்களே அறிவோம்.’
‘நீ எப்படி அரசமைத்தாய் என்று அறிவேன்’ என்றார் போஜர்குலத்தலைவர் சுப்ரர். ‘இந்திரப்பிரஸ்தத்தின் ஆதரவை அடைந்தாய். அவர்களை அஞ்சி உன்னை விட்டுவைத்தனர் அரசர். இன்று இந்திரப்பிரஸ்தம் அஸ்தினபுரிக்கு அடிமையாகிவிட்டது. அதன் அரசகுலம் மீளமுடியாதபடி காடேகிவிட்டது. உன் கோபுரம் விழப்போகிறது. நீ அதை அஞ்சியே வந்து எங்கள் வாயிலில் நின்றிருக்கிறாய்.’ நான் அவர்களிடம் ஒற்றுமையின் வல்லமை குறித்து சொன்னதெல்லாம் என் அச்சமென்றே அவர்களால் புரிந்துகொள்ளப்பட்டது.
‘இன்று ஒருவேளை எங்களுக்கான வாய்ப்பு வந்திருக்கலாம். நாங்கள் எங்களை உணர்ந்துகொள்ளவும் எங்களை திரட்டிக்கொள்ளவும் இப்போது தருணம் வந்துள்ளது. ஆகவே இந்தப் பூசல்கூட நன்மைக்கே’ என்றார் குங்குரர் குடித்தலைவர் ஒருவர். ‘நாங்கள் துவாரகையை அமைத்தோம், காத்துநின்றோம். அதை பாரதவர்ஷம் இன்று அறியும். எங்கள் ஆற்றலை நாங்கள் எங்கும் இனி நிறுவவேண்டியதில்லை. எங்களுக்கே அது இன்று தெளிவுபட்டுள்ளது, எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. குங்குரரும் போஜரும் ஹேகயரும் பண்டைப்பகை மறந்து ஒன்றாக அந்தகர்களும் விருஷ்ணிகளும் காட்டிய சிறுமை வழிவகுத்தது.’
‘இது நற்தருணம். நாங்கள் இன்று எந்த ஷத்ரியரிடமும் பேரம் பேசமுடியும். நாங்கள் யாரென்று இன்று அஸ்தினபுரிக்கும் தெரியும்’ என்றார் பிரபவர். அச்சொற்களை அவர் வாய்தவறி வெளியிட்டதுமே அவர்கள் அனைவரின் விழிகளும் மாறியதைக் கண்டேன். அக்கணமே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று புரிந்துகொண்டேன். அதற்குமேல் அங்கே பேசுவதற்கொன்றுமில்லை, ஆணவமும் பேராசையும் தூண்டிவிடப்பட்டவர்கள் தங்களைச் சுற்றி அணுகமுடியாத கோட்டையை அமைத்துக்கொள்வார்கள். நெறியோ முறைமையோ உண்மையோ அவர்களிடம் சொல்லப்பட்டால் அதை தங்களுக்கெதிரான போரென்றே எடுத்துக்கொள்வார்கள்.
நான் செய்வதற்கொன்றே இருந்தது, அவர்களின் கனவுகள் எளிதல்ல என்று ஆக்குவது. அக்ரூரர் சொன்னார், போஜர்களுக்கும் ஹேகயர்களுக்கும் இடையே பூசலூட்டலாமென்று. அது மிக எளிது. மூச்சுக்கொருமுறை கார்த்தவீரியன் பெயரை ஹேகயர் சொல்வதே அவர்கள் ஒன்றுதிரள முடியாதென்பதற்கான சான்று. அவர்கள் ஓர் அரசு அமைத்தால் அது கார்த்தவீரியனின் அரசாகவே இருக்கும், ஹேகயர்களே அதை ஆள்வார்கள். அதை போஜர்களும் குங்குரர்களும் ஏற்கப்போவதில்லை. ஆனால் அப்பிளவை நான் உருவாக்க விரும்பவில்லை. யாதவர்களின் பூசல்களைப் பெருக்குவது எளிது, நான் அதன்பொருட்டு வரவில்லை.
ஆகவே அவர்களின் பெண்களிடம் சென்றேன். குங்குரர்களின் கன்றுபூட்டுத் திருவிழா வந்தது. என் தோழர்களுடன் சென்று அதில் கலந்துகொண்டு கன்றோட்டினேன். ஆற்றுவெள்ளப் புதுநீராட்டில் கன்னியருடன் ஆடினேன். ஹேகயர்களின் உண்டாட்டில் சென்றமர்ந்தேன். அவர்களின் ஊர்கள்தோறும் சென்று அன்னையருடன் அமர்ந்தேன். அன்னையர் அறியப்படாத ஆற்றல் மையங்கள் என மதிசூழ் அரசர்களில்கூட மிகச்சிலரே தெரிந்திருக்கிறார்கள். அன்னையர் பரிவு எனும் ஒரே உணர்வுகொண்டவர்கள். எவராயினும் ஒற்றை உணர்வுகொண்டோர் சலிப்பூட்டுவர். அதனால் அவர்கள் தவிர்க்கப்படுகிறார்கள். தவிர்க்கப்படும்போது அவர்களின் பரிவு மேலும் விசைகொள்கிறது. மேலும் சலிப்பூட்டுவதாக ஆகிறது. தவிர்க்கப்படும் அன்னையரைச் சென்று காண்பதே போதும், அவர்கள் நம் மேல் அன்புகொண்டவர்களாக ஆவதற்கு. அவர்களுக்கு செவிகொடுத்தால் போதும் நம் செய்தி என ஒன்றை அவர்கள் உள்ளத்தில் நட்டுவருவதற்கு.
அன்னையருக்கு அத்தனை குடிகளிலும் அறியப்படாத மைய இடம் உண்டு. யாதவக்குடிகளில் அவர்கள் தெய்வங்கள், விழிதிறந்து நோக்கி சொல்லின்றி அமர்ந்திருப்பவர்கள். நாளில் ஒருமுறையேனும் நினைக்கப்படாதவர்கள், கனவுகளில் பேருருக்கொண்டு ஆணையிடுபவர்கள். அன்னையர் எனக்காக பேசத்தொடங்கினர். அவர்களைப் புறக்கணிப்பதனாலேயே அவர்களின் கணவரும் மைந்தரும் குற்றவுணர்வுடன் அவர்களின் சொற்களை செவிகொடுக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் சொற்கள் மீளமீள சொல்லப்படுபவை. ஏனென்றால் தந்தையரைப்போல அவர்களிடம் வாழ்வு மீதான விலக்கம் இல்லை. கேட்கப்படாதபோது அவர்கள் புண்படுவதுமில்லை. சொல்லிச் சொல்லி நிறுத்தப்படும் எதுவும் பருப்பொருள்போல மறுக்கமுடியாத இருப்புகொண்டவை.
எனக்கு எதிராக சொல்லப்படும் எதையும் யாதவ அன்னையர் ஏற்கப்போவதில்லை என்று அவர்களின் குடிமூத்தார் புரிந்துகொண்டனர். துவாரகைக்கு எதிரான உணர்வுகள் மெல்ல அணையத்தொடங்கின. நெருப்பு அணையத்தொடங்கும்போதே நமக்குத் தெரிந்துவிடும். தன்னைத்தானே அணைத்துக்கொள்ள அனைத்தையும் அதுவே செய்யும். நிறைவுடன் நான் துவாரகைக்கு திரும்பிவந்தேன். நான் யாதவச் சிற்றூர்களில் அலைந்துகொண்டிருந்தபோதுதான் அஸ்தினபுரியில் சூதுக்களம் நிகழ்ந்தது.
துவாரகைக்குத் திரும்பி அதன் காவல்படைகளை மீளமைவு செய்வதைப்பற்றி எண்ணத்தொடங்கினேன். அதை ஒற்றர்வழியாக அறிந்தனர் ஷத்ரியர். அதற்குமேல் தருணம் காத்திருந்தால் துவாரகை மீண்டுவிடும் என அவர்கள் உணர்ந்தனர். முழுப்பிளவு நடந்து துவாரகையின் படைகளிலிருந்து போஜர்களும் குங்குரர்களும் ஹேகயர்களும் விலகிச் செல்வதற்காக காத்திருந்தனர் அவர்கள். பெண்களின் வல்லமையை அவர்களின் ஒற்றர்கள் மதிப்பிடவில்லை. ஷத்ரியகுடிகளில் பெண்களின் குரல் யாதவர்போல் வல்லமை வாய்ந்ததும் அல்ல. அவர்கள் தங்களை வைத்து எங்களை புரிந்துகொண்டனர். அனலடங்குவதை அனல்நோக்கி அஞ்சுபவன் எளிதில் புரிந்துகொள்வான். அகலே நின்றிருப்பவன் தழலாட்டத்தையே நோக்கியிருப்பான். அனல் ஒருநாளில் ஒருகணத்தில் அணைந்து மறைவதையே அவன் காண்பான்.
யாதவரின் எழுச்சி அடங்கியமை ஷத்ரியரை சினம்கொள்ளச் செய்தது. யாதவப்படை மீள்வதற்குள் ஒரு பெருந்தாக்குதலைத் தொடுக்க அவர்கள் எண்ணினர். ஆனால் அது முதன்மை ஷத்ரிய அரசுகளால் செய்யப்பட்டதாகத் தெரியலாகாதென்றும் கருதினர். அப்போரில் யாதவர் வெல்வார்கள் என்றால் அது சால்வன் என்னும் சிறுமன்னனின் தோல்வி. வென்றால் ஷத்ரியரின் சுட்டுவிரலின் வெற்றி. ஆனால் சால்வனுடன் பெருவல்லமை கொண்ட எட்டு ஷத்ரிய அரசுகள் படைத்துணை கொண்டு நின்றன. நான் துவாரகையின் படைகளை மறுதொகுப்பு செய்ய பெருந்திட்டம் ஒன்றை முழுமைசெய்து அவையில் வைத்த அன்று துவாரகையின் எல்லையை சால்வனின் படைகள் தாக்கிய செய்தி வந்தது.