சொல்வளர்காடு - 39
[ 6 ]
“என்ன நிகழ்ந்தது என்று நான் இளைய யாதவனிடம் மூன்றுமுறை கேட்டிருக்கிறேன்” என்றார் சாந்தீபனி முனிவர். “முதல்முறை தவிர்க்கும் புன்னகையுடன் அதை பிறிதொரு தருணத்தில் சொல்கிறேன் ஆசிரியரே என்றான். அப்போது மூத்தவர் உடனிருந்தார். அவர் உரத்த குரலில் இவன் என்ன சொன்னான் ஆசிரியரிடம் என நானும் அறியேன். நான் பலமுறை அதை கேட்டுவிட்டேன். என்னிடமும் சொன்னதில்லை என்றார்.”
இரண்டாம் முறை நாங்கள் இருவரும் துவாரகையில் அவன் அறையில் தனித்திருக்கையில் கேட்டேன். என்ன நிகழ்ந்தது என சொல்லிவிடலாம் ஆசிரியரே. ஆனால் வெளியே நிகழ்ந்தவற்றை மட்டுமே சொல்லமுடியும். அதனால் பயன் என்ன? என்றான். அவன் முகத்தில் எப்போதுமுள்ள மாறாபுன்னகை அப்போதுமிருந்தது. ஆனால் விழிகளில் வலியை கண்டேன். ‘அப்படியென்றால் உனக்கும் வலி உண்டா? நீயும் துயர்கொள்வதுண்டா? நன்று’ என என் உள்ளம் சொல்லிக்கொண்டது. அதை உணர்ந்ததுபோல அவன் உரக்க நகைத்து “லீலை!” என்றான். மேலும் ஓசையெழச் சிரித்துக்கொண்டு “ஆம், லீலை… அரிய சொல்” என்றான்.
மூன்றாம் முறை நான் அவனிடம் கேட்டது எந்தை கிளம்பிச்சென்று பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தபோது. முதியோர் இல்லம்விட்டு சென்றால் ஒரு வியாழவட்டம் நிறைவுகொண்டபின் விழிமறைந்தவர் மண்மறைந்துவிட்டார் என்று கணித்து நீர்க்கடன்கள் செய்வது வைதிகமுறைமை. மூன்றுவியாழவட்டம் காப்பது நடுஅகவையருக்கும் ஐந்து வியாழவட்டம் காப்பது இளமைந்தருக்கும் வழக்கம் என்று நிமித்திகர் என்னிடம் சொன்னார்கள். அதுவரை நான் அதை எண்ணியதில்லை. அதை அவர்கள் நாவிலிருந்து கேட்ட அன்றுதான் எந்தையை முற்றாக இழந்தேன்.
கங்கையில் நீர்க்கடன்களை முறைப்படி செய்து எந்தையை விண்ணேற்றினேன். அதன் பின் எனக்குள் சூழ்ந்த வெறுமையை தாளாமல் துயில் முற்றழிந்தேன். இந்த சாந்தீபனி குருநிலையின் வாயிலில் ஒருநாள் எந்தை வந்து நிற்கப்போகும் தருணத்தை நான் ஒவ்வொருநாளும் எதிர்பார்த்திருந்தேன் என அப்போது உணர்ந்தேன். அவருக்காகவே நான் இங்கு வேதச்சொல் பயின்றேன். அவர் இருந்த காலத்தைவிட இருமடங்கு பெரிதாக இதை வளர்த்தெடுத்தேன். என்னருகே அவர் எப்போதுமிருந்தார். மீண்டுவந்து அவர் சொல்லப்போகும் சொல்லை எத்தனை முறை நான் கருக்கொண்டு உருத்திரட்டியிருப்பேன்!
அவர் வரப்போவதில்லை என்று தெளிந்ததும் ஒருகணத்தில் அனைத்தும் பொருளிழந்தன. அதெப்படி என்று வியந்தபடி எண்ணியெண்ணி மருகியபடி இருந்தது என் அகம். அவர் மீண்டுவரவில்லை என்றால், நான் என்னவானேன் என அவர் அறியவே இல்லை என்றால், நான் அடைந்தவற்றைக்கொண்டு என்ன செய்வது? லீலை என்கிறோம், ஊழின் பெரும்பொருளின்மை என விளக்குகிறோம்… அச்சொல்லை வாழ்ந்தறிய நேர்வது நம் உடலும் நம் நகரும் நாமறிந்த அனைத்தும் துண்டுகளாக துகள்களாக பொடிபடலமாக உடைந்து சிதறிப் பரந்தழிவதற்கு நிகர்.
தாளாமலானபோது கிளம்பி துவாரகைக்கு சென்றேன். அங்கே அவன் தன் மனைவியருடன், கவிஞரின் பாடல்களிலும் சூதர் கலைகளிலும் போர்க் களியாட்டுகளிலும் மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்தான். அவனை அவ்வண்ணம் கண்டதும் எழுந்த பெருஞ்சினத்தை என்னால் அடக்கமுடியவில்லை. அவன் அவைநின்று “மூடா! உன் ஆசிரியர் மறைந்து வியாழவட்ட நிறைவாகிறது. அதை அறிவாயா?” என்று கூவினேன். “ஆம், நிமித்திகர் சொன்னார்கள். அவருக்கு நான் ஆற்றவேண்டிய சடங்குகள் ஏதுமில்லை என்றனர்” என்றான்.
“அவரைக் கொன்றவன் நீ” என்று கூவினேன். “பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் உன் சொற்களால்தான் அவர் துரத்தப்பட்டார். அப்பழியை நீ சுமந்தாகவேண்டும்” என்றேன். “ஆசிரியரே, அப்பறவை கிளையிலிருந்து விண்ணுக்கு எழுந்ததா இல்லை சிறகோய்ந்து மண்ணில் விழுந்ததா?” என்றான். “அது விண்ணேகியது என்றுதான் உங்கள் குருநிலையில் சொல்கிறீர்கள்.” நான் “ஆம், துறவிக்கு துறத்தல் எல்லாம் மெய்யறிதலே. அவர் வென்று சென்றார்” என்றேன். “அவரை வெல்லச்செய்தவன் எப்படி பழி சுமக்கவேண்டும் என்கிறீர்கள்?” என்று அவன் சிரித்தான்.
“நீ அவரை துயர்கொள்ளச் செய்யவில்லை என இந்த அவையில் உன்னால் உறுதிசொல்ல முடியுமா? அவர் செல்கையில் உன்னை வாழ்த்தினார் என்று ஆணையிட்டு உரைப்பாயா? ஆசிரியரின் இறுதிவாழ்த்தைப் பெறாதவன் கல்வி நிறைவடைந்தவனா என்ன?” என்றேன். “அவர் என்னை வாழ்த்தவில்லை. பழிச்சொல்லே அளித்துச் சென்றார்” என்று அவன் மாறாசிரிப்பிருந்த விழிகளுடன் சொன்னான். “ஆகவேதான் அவரது மெய்யறிதலின் ஒரு துளியையும் நான் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என உறுதிகொண்டிருக்கிறேன்” என்றான். “சாந்தீபனி குருநிலையுடன் எனக்கு இனி உறவில்லை. அங்கு நான் கற்றேன். ஆசிரியருக்குரிய கொடையையும் அளித்தேன்.”
“அவரிடம் நீ சொன்னதென்ன?” என்றேன். என் குரல் தணிந்திருந்தது. “அதை நான் ஒருபோதும் சொல்லப்போவதில்லை” என்றான். “ஏனென்றால் நான் சொல்வது என் தரப்பே ஆகும்.” நான் உரக்க “நீ நாணுகிறாய். நீ அஞ்சுகிறாய். உன் சிரிப்புக்குப் பின் அது இருப்பதை அவை அறிக!” என்றேன். அவன் நகைத்து “ஆசிரியரே, நான் எண்ணிக்கொண்டிருப்பது லீலையைப் பற்றி மட்டும்தான்” என்றான். நான் திகைத்து நோக்க சிரித்துக்கொண்டே “பெரும்பொருளின்மை” என்றான். நான் திரும்பி நடந்தேன்.
அங்கே ஒருகணமும் இருக்கமுடியாமல் நான் அன்றே கிளம்பிவிட்டேன். துவாரகையிலிருந்து பாலைநிலம் வழியாக உஜ்ஜயினிக்கு சென்றேன். செல்லும்வழியில் ஒரு பாலைச்சோலையில் முள்மரத்தடியில் இளைப்பாறிக்கொண்டிருந்தேன். அப்போது தொலைவில் புரவியில் அவன் தனியாக வருவதை கண்டேன். பாலையின் காற்றும் ஒளியும் கலந்த அலைமேல் அவன் உருவம் நெளிந்துகொண்டிருந்தது. அது என் விழிமயக்கா என ஐயம் கொண்டேன். அவனாகிய அலைகள் இணைந்து மெல்ல திரண்டு அவனேயாக மாற அருகணைந்தான். புரவிக்குளம்புகள் மணலில் அழுந்தி ஒலித்தன.
நான் நோக்கியபடியே இருந்தேன். அவன் இறங்கி அருகே வந்தான். முகமன் சொல்லாமல் “தங்களிடம் பேசவே வந்தேன், ஆசிரியரே” என்றான். “சொல்!” என்றேன். “சொல்லற்குரிய தருணம் அல்ல அது. ஆசிரியனைப் பழித்தல் என்பது இந்த ஆடலின் ஒரு தருணம்போலும். அதை இன்னமும் என்னால் கடக்க முடியவில்லை” என்றான். முதல்முறையாக அவன் முகம் கலங்குவதை நான் கண்டேன். “நான் கடக்கவே இயலாத ஒன்று அது” என்றபடி அமர்ந்தான். பெருமூச்சுவிட்டபடி மணலை அளைந்துகொண்டிருந்தான். “சொல்!” என்றேன்.
“நான் இதை உங்களுக்காகவே சொல்ல வந்தேன்” என்றான். “சொல்வதனூடாக நான் இதிலிருந்து விடுபடப்போவதில்லை. இதன் பொறி அத்தனை எளிதில் அறுபடுவதல்ல.” நான் அவனை நோக்கிக்கொண்டிருந்தேன். அதுவும் அவன் ஆடும் நாடகமா என எண்ணும் உள்ளத்தை என்னால் வெல்லமுடியவில்லை. “ஆனால் நீங்கள் இதில் சிக்கிக்கொண்டீர்கள் என இன்று அவையில் நீங்கள் கொண்ட சினம் கண்டு அறிந்தேன். இதிலிருந்து நீங்கள் மீண்டாகவேண்டும். இல்லையேல் உங்கள் கல்வியும் அறிவும் தெளிவும் இதனால் அழிந்துவிடக்கூடும். குருதியெல்லாம் நஞ்சாகக்கூடும்” என்றான்.
நான் அவன் சொன்ன சொற்களை விழிகளால் கேட்பவன் போல் அமர்ந்திருந்தேன். அவன் சொன்னது முற்றிலும் உண்மை என நான் அப்போது அறிந்தேன். அவ்வினாவுடன் நான் வாழ முடியாது. “ஆசிரியரே, எந்தை நந்தகோபரின் கை பற்றி நானும் என் தமையனும் கல்விச்சாலைக்குள் நுழைந்தபோது மையக்குடிலில் இருந்து ஆசிரியர் கைகளை விரித்தபடி பாய்ந்து என்னை பற்றிக்கொண்டார். ‘வந்தாயா, வந்துவிட்டாயா’ என்று கூவினார். திரும்பி ‘பிருகதரே, இவன்தான், இவனேதான்’ என்றார். ‘வந்துவிட்டான், இதோ என் முன் வந்து நின்றிருக்கிறான்’ என்று கண்ணீர் ஒலித்த குரலில் கூவினார்” என்றான் இளைய யாதவன்.
அவர் கொண்ட அக்கொந்தளிப்பைக் கண்டு எந்தை திகைத்தார். ‘ஆசிரியரே, இவர்களை நீங்கள் பிறிதெவரோ என எண்ணியிருக்கக்கூடும். இவர்கள் அரசிளங்குமரர்கள் அல்ல, யாதவர்கள். என் மைந்தர், கோகுலமென்னும் ஆயர்ச்சிறுகுடியினர்’ என்றார். ‘ஆம், இவர்களைப் பார்த்தாலே தெரிகிறதே, ஆயர்ச்சிறுவர். ஆனால் இவர்கள்தான் நான் தேடியவர்கள். இவர்களுக்காகவே இங்கு இக்கல்விநிலை எழுந்தது’ என்றார் அவர். என்னைத் தூக்கி தோளிலேற்றிக்கொண்டு அறைக்குள் சென்றார். அங்கிருந்த இன்னுணவை எடுத்து என்னிடம் தந்து ‘உண்க! இது என் முதல் இனிப்பு’ என்றார்.
அன்றுமுதல் நான் உஜ்ஜயினியின் சாந்தீபனி குருநிலையின் மாணவனாக அன்றி இளமைந்தனாகவே கருதப்படலானேன். இரவும் பகலும் நான் ஆசிரியருடன் இருந்தேன். பயிற்றமர்வுகள் முடிந்து மாணவர்கள் சென்றபின் அவர் மடிமேல் ஏறியமர்ந்து சொல்கேட்கத் தொடங்குவேன். என் ஐயங்கள் ரக்தபீஜனைப்போல துளியிலிருந்து ஒன்றென முளைப்பவை. அவர் ஒவ்வொரு வினாவுக்கும் மேலும் மேலும் மலர்ந்தபடியே செல்வார். விடைபெறாத வினா ஒன்று உதடுகளில் எஞ்ச அவர் அருகே படுத்து துயில்வேன். அவ்வினாவுடன் விழித்தெழுவேன். அவருடன் காலையில் நீராடுவேன். அனலோம்புகையில் அருகமர்வேன். அவர் உடலின் ஓர் உறுப்பென அவர் குருதி என்னில் ஓட என் துடிப்பு அவர் எண்ணமென்றாக வாழ்ந்த நாட்கள் அவை.
அந்நாளில்தான் என்னை அக்ரூரர் காணவந்தார். ‘இளையோனே, உனக்கான நாள் வந்துவிட்டது’ என்றார். கல்விநிலையின் சாலமரத்தடியில் அமரச்செய்து என்னிடமும் மூத்தவரிடமும் மதுராவில் என்ன நிகழ்கிறது என்று சொன்னார். இளமைந்தர்கள் கொன்றுவீழ்த்தப்பட்ட செய்திகேட்டு நான் உடல் விதிர்த்து எழுந்து நின்றுவிட்டேன். ‘இன்னுமா அவன் நெஞ்சு பிளக்கப்படவில்லை?’ என்றேன். ‘அதை நீ செய்யவேண்டுமென்பது ஊழ் போலும்’ என்றார் அக்ரூரர். ‘உன் ஆசிரியரின் வாழ்த்துபெற்று நாளை கிளம்புவோம்!’
நடுங்கும் உடலுடன் நான் ஆசிரியரை தேடிச்சென்றேன். அவர் தொலைவில் அமர்ந்து நூலாய்ந்துகொண்டிருந்தார். அவர் முகம் கொண்ட ஒளி என்னை எரிந்தெழச் செய்தது. ஓடிச்சென்று அந்தச் சுவடிகளைப் பிடுங்கி வீசிவிட்டு கூவினேன். ‘இந்நெறிகளுக்கு என்ன பொருள்? இங்கு நாம் ஆராயும் மெய்ச்சொல்லால் என்ன பயன்? சொல்திருந்தா இளமைந்தர் கொன்று குவிக்கப்படுகையில் அவன் நெஞ்சு கிழிக்க வாளென எழாத வேதங்கள் போல் இழிந்தவை எவை?’ என்றேன். தரையை காலால் உதைத்து ‘நம்மை கட்டிவைப்பதுதான் இச்சொற்களால் ஆவதென்றால் இவற்றை மிதித்துத் தள்ளுகிறேன்’ என்று கூவினேன்.
புன்னகையுடன் ஆசிரியர் ‘மைந்தா, அவர்கள் மானுட மைந்தர்கள் என்பதனால் நீ கொதித்தெழுகிறாய். ஏனென்றால் நீயும் மானுடன்’ என்றார். ‘திரும்பிப்பார், அதோ அக்கிளையில் சிறு கிளிக்குஞ்சை கவ்வி வந்து கூருகிரால் பற்றி அமர்ந்து கொத்திக் கிழித்து உண்ணுகிறது காகம். இப்போதும் கிளிக்குஞ்சின் கதறல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.’ திரும்பி நோக்கி நான் உடல் தளர்ந்தேன். ‘ஆம்’ என்றேன். ‘ஒருகணம் திரும்பி கீழே நோக்கு. துடிக்கத் துடிக்க அந்தப் புழுக்குழவியை கவ்வி கொண்டுசெல்கின்றன எறும்புகள்’ என்றார். நான் அக்கணத்திறப்பில் புவியென விரிந்த மாபெரும் கொலைக்களத்தைக் கண்டு குளிர்ந்துறைந்து நின்றேன்.
ஆசிரியர் ‘அலகிலா பேரின்பவடிவம் இப்புவி. அலகிலா துயரவெளியும்கூட. நெறி, அறம், அன்பு, இரக்கம், அழகு என நின்றுளது நம்முன். மீறல், மறம், வெறுப்பு, கொடுமை, இருள் என அதுவே மறுகணம் தன்னை காட்டுகிறது. மைந்தா, அதையே லீலை என்றேன்’ என்றார். ‘இருநிலைகளுக்கு நடுவே அசையா நிகர்நிலை கொண்டவன் அந்த லீலையை காண்கிறான். இன்பத்திலும் துன்பத்திலும், இருளிலும் ஒளியிலும், அறத்திலும் மறத்திலும் அசையாத சித்தம் கொண்டவனே யோகி.’ அவர் சொற்கள் என்னுள் இன்றும் ஒலிக்கின்றன.
ஆசிரியர் என் தோளில் கைவைத்து சொன்னார் ‘மைந்தா கேள், துயரத்தில் துவளாமல் இன்பத்தை நாடாமல் பற்றும் அச்சமும் சினமும் எழா உள்ளம் கொண்டவனே இப்பெருவிளையாடலை காணும் விழிப்புள்ளவன். அவனையே யோகி என்கின்றனர். பற்றின்றி இன்பத்தை நாடாமல் துயரை வெறுக்காமல் நின்றிருப்பவனின் சித்தமே நிலைபெற்றது. இங்கு அனைத்தும் புயலொன்றால் அலைக்கழிக்கப்பட்டு சுழன்று ஆடிக்கொண்டிருக்கின்றன. தானும் அதில் ஆடுபவன் ஆடலை அறிவதில்லை. சித்தம் அசைவற்றவன் அந்தப் பெருஞ்சுழற்காற்றை கண்டுகொள்கிறான்.’
நான் அதை கேட்டுக்கொண்டு சிலகணங்கள் நின்றேன். பின் என் உள்ளிருந்து ஒரு சீறல் எழுந்தது. அவர் கையை தட்டிவிட்டுவிட்டு வெளியே ஓடினேன். நேராக சென்று அக்ரூரரிடம் ‘கிளம்புக! இப்போதே…’ என்றேன். ‘ஆசிரியரின் வாழ்த்துரை பெற்றுவிட்டாயா?’ என்றார் அக்ரூரர். ‘நான் என் உள்ளுறைபவனின் வாழ்த்தை பெற்றுவிட்டேன்’ என்றேன். அவருடன் கிளம்பிச்சென்றேன். மதுரா நகர்புகுந்து என் மாமனை களத்தில் கொன்றேன். அந்தப் பாழ்பட்ட நிலத்தை குருதியால் மும்முறை கழுவினேன். அறம் மீறக்கண்டும் அஞ்சி அமர்ந்திருந்த மாக்கள் உயிர்வாழவும் தகுதியற்றோர் என அறிவித்து அவர்களை தேடித்தேடி வேட்டையாடினேன்.
குருதியைப்போல புரிந்துகொள்ள முடியாத ஒன்று இப்புவியில் இல்லை, ஆசிரியரே. அருந்த அருந்த விடாய்பெருக்கும் இனிய மது அது. எரியென்று கொழுந்துவிடும் நீர். கோடானுகோடி விதைகள் கலந்த ஓடை. நான் அதில் மிதந்துசென்றேன். எங்கோ ஓர் இடத்தில் என்னை நிறுத்திக்கொள்ள வேண்டுமென அறிந்திருந்தேன். ஆனால் குருதி குருதியை பெருக்கியது. ஒருநாள் மதுராவில் தெருவில் நடந்தபோது எதிரே வந்த இளமைந்தன் ஒருவனை நோக்கி புன்னகையுடன் குனிந்தேன். அவன் விழிகளில் எழுந்த அச்சத்தை, அவன் உடல் அறியாது குன்றிச் சிலிர்ப்பதை கண்டேன்.
என்னை உணர்ந்தவனாக நான் திரும்பி ஓடினேன். அங்கிருந்தே புரவியேறி சாந்தீபனி குருநிலைக்கு வந்தேன். தன் அறையில் அமர்ந்து அதைப்போலவே சொல்லாய்ந்துகொண்டிருந்த ஆசிரியரின் முன் சென்று கண்ணீருடன் நின்றேன். ‘ஆசிரியரே, நான் சொல்லாய்ந்த ஒருவன் செய்தற்கு அஞ்சும் அனைத்தையும் செய்துவிட்டு வந்துள்ளேன்’ என்றேன். கால்மடித்து அவர் முன் விழுந்து ‘என்மேல் தீச்சொல்லிடுக! என்னை எரியால் பொசுக்குக! நான் குருதியாடிய கொடுந்தெய்வம் இன்று’ என்றேன்.
ஆசிரியர் மாறாபுன்னகையுடன் ‘மைந்தா, நீ செல்லும்போது சொன்னதையே இன்றும் சொல்கிறேன், இது லீலை. இப்புவி என்றும் குருதியால் நனைந்தபடிதான் உள்ளது’ என்றார். நான் கடும் சினம் கொண்டேன். ‘அங்கு இறந்துவிழுந்த இளமைந்தரின் குருதியும் இவ்வீணரின் குருதியும் ஒன்றா?’ என்றேன். ‘என்ன ஐயம்? அனைத்துக் குருதியும் ஒன்றே. அம்மைந்தர் வளர்ந்து படைவீரர்களாகி களம்பட்டால் மட்டும் அது அறமென்றாகிவிடுமா?’ என்றார். ‘இவை பொருளற்ற இறப்புகள்’ என்றேன். ‘அனைத்து இறப்பும் பொருளற்றதே. ஏனென்றால் அனைத்து வாழ்வுகளும் பொருளற்றவையே’ என்றார் ஆசிரியர்.
அவர் என்னிடம் ‘பொருளின்மை எனும் கரிய யானையின் மத்தகத்தின்மேல் அமர்ந்தவனே யோகி. அவ்விருளில் வெண்தந்தங்கள் என இரு நிலவுகள் எழும். அதுவே மெய்மை’ என்று சொன்னார். அச்சொற்களை தாளமுடியாதவனாக நான் அங்கே அமர்ந்தேன். அவர் சொல்வனவற்றை வெறுமே பார்த்துக்கொண்டிருந்தேன். ‘நீ விழைந்ததை ஆற்றி மீண்டுவிட்டாய். இனி உனக்குக் கடமைகள் இல்லை. இங்கேயே இருந்து எஞ்சியதை கற்றுச்செல்க! ஒருவேளை இனிமேல் உனக்கு லீலை என்னும் சொல் பசுங்குருதி மணம் கொண்ட கருக்குழவி போல பொருள் அளிக்கக்கூடும்’ என்றார்.
நான் மீண்டும் சில ஆண்டுகள் குருநிலையில் கற்றேன். என்னுள் எழுந்த எரித்துளி மேல் மேலும்மேலும் சொற்களைப் போட்டு மூடிக்கொண்டே இருந்தேன். என்னை அங்குள்ள அனைவருமே அச்சத்துடனும் அருவருப்புடனும்தான் பார்த்தனர். ஆசிரியர் மட்டுமே என்னை அவருக்கு உகந்தவனாக கொண்டிருந்தார். ‘ஆம், அவனே என் முதல்மாணவன். சொல்லுக்கு அப்பால் சென்று சொல் எழுந்த ஊற்றைக் காணும்வரை செல்லத்துணிபவன்’ என்றார். அவரை எதிர்த்துப் பேச அவர்கள் அஞ்சினர்.
ஆனால் ஒருநாள் நான் வேள்விக்கு தர்ப்பைமேல் அமர்ந்த ஆசிரியரின் வலப்பக்கம் அமர்ந்திருந்தேன். அவர் கையின் பொருளுணர்ந்து அன்னத்தை எடுத்து அவியாக அளித்தேன். அன்று வேள்வி முடிந்ததும் மூத்தமாணவர் எழுவர் என் கைதொட்ட அவிமிச்சத்தை உண்ணமாட்டோம் என்று மறுத்தனர். என்னை சுட்டிக்காட்டி வெறுப்பு எழுந்த குரலில் ‘குருதிபடிந்த அன்னம் அது. தெய்வங்கள் ஏற்காதது’ என்றார் சம்யுக்தர். ‘ஷத்ரியன் போர்க்களத்தில் சிந்தும் குருதியன்றி பிற அனைத்தும் கொலையே. இவன் கன்றோட்டும் குலத்தின் நெறிமீறி தாய்மாமனைக் கொன்றவன். பழி சூழ்ந்தவன்.’
அக்கணத்தில் எழுந்த பெருஞ்சினத்தால் நான் கூவினேன் ‘ஆம், இங்கு நீர் ஆற்றும் இது பொருளற்ற வேள்வி. அங்கு மதுராவில் நான் ஆற்றிய குருதி வேள்வியே தெய்வங்களுக்கு உகந்தது. அங்கு எழுந்த நாணொலியும் வஞ்சினமுமே வேதம். அந்தணரே, பசித்தவனுக்கு அன்னமும் நோயுற்றவனுக்கு மருந்தும் தனித்தவனுக்குத் துணையும் வஞ்சிக்கப்பட்டவனுக்கு வாளுமென எழுவதே மெய்வேதம்.’ என் சினமே சொற்களை கொண்டுவந்து சேர்த்தது. ‘இங்கு இதைப்போல ஆயிரம் மடங்கு பெரிய குருதிவேள்வி ஒன்றை நிகழ்த்துவேன். அத்தனை தேவர்களையும் வரவழைத்து மெய்வேதம் எதுவென்று காட்டுவேன். இது என் ஆணை! அறிக தெய்வங்கள்!’
அதன்பின் அங்கு தங்க விரும்பாமல் கிளம்பிச் சென்றுவிட்டேன். மகதத்தை வென்று என் நிலத்தை மீட்டேன். கடலோரம் சென்று துவாரகையை அமைத்தேன். என் வினா என்னைத் துரத்த வெவ்வேறு மெய்நூல்கள்தோறும் சென்றுகொண்டிருந்தேன். வேதமெய்மையை வைரத்தின் பட்டைகள் என திருப்பித்திருப்பி முடிவிலா வெளியாகக் காட்டின அவை. பஞ்சுப்பொதிகளை எரிதுளி என அவற்றை என் வினா கடந்து சென்றது. நாள் செல்லச்செல்ல நாகத்தின் தலைக்குள் நஞ்சு முதிர்ந்து குளிர்நீல மணி ஆவதுபோல அவ்வினா என்னுள் எஞ்சியது. அதை பிற எவரிடமும் கேட்டறிய வேண்டியதில்லை என்று தெளிவுகொண்டேன். என்னுள் இருந்து ஓர் ஆசிரியன் எழுந்து அவ்விடையை எனக்கு அருளவேண்டும். அவனுக்காக காத்திருக்கலானேன்.
அப்போதுதான் ஆசிரியர் என்னை அழைத்து பிரபாச தீர்த்தத்திற்கு அழைத்துச்செல்லும்படி கோரினார். அவர் மைந்தர் முன்னரே மறைந்துவிட்டார் என நான் அறிந்திருந்தேன். அவர் புன்னகையுடன் ஒருநாள் அதை என்னிடம் சொன்னார். ‘என்னை வெல்ல அவன் கிளம்பிச்சென்றான்.’ மேலும் சிரித்தபடி ‘மைந்தர் தந்தையிடமிருந்து அகன்று அகன்று அவரை வெல்ல முயல்கிறார்கள். வெல்லுந்தோறும் அணுகி வந்தமைகிறார்கள். ஆனால் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை, செல்வதை மட்டுமே அவனால் திட்டமிடமுடியும் என்று’ என்றார். ‘அவர் எங்கே?’ என்றேன். ‘பிரபாச தீர்த்தமாடச் சென்றான். அங்கு சென்றவர்களில் சிலரே மீள்கிறார்கள்’ என்றார்.
ஆனால் அன்று நான் பிறிதொரு ஆசிரியரை கண்டேன். அவர் நடுங்கிக்கொண்டே இருந்தார். ஒரேநாளில் பல்லாண்டுகால முதுமை வந்து கூடியதுபோல. அவர் கைபற்றி மலைப்பாதையில் அழைத்துச்சென்றபோது விட்டில் ஒன்றை பற்றியிருப்பதுபோலவே உணர்ந்தேன். அவர் மைந்தன் உயிருடனிருப்பதாக நிமித்திகர் சொன்னபோது கூண்டைத் திறந்து நான் முற்றிலும் அறியாத ஒருவர் வெளிவந்தார். அங்கு அலறிவிழுந்து நினைவுமீண்டு எழுந்ததுமே என் கைகளை பற்றிக்கொண்டு ‘என் மைந்தன்! என் மைந்தன்!’ என அரற்றத் தொடங்கினார்.
என்னிடம் அவர் மைந்தனை மீட்டுக்கொண்டு வரவேண்டும் என்று ஆசிரியக்கொடை கோரியபோது என் கைகளைப் பற்றி நெரித்துக்கொண்டிருந்த கைகளில், கலங்கி வழிந்த விழிகளில் நான் கண்டது பேதைமையையே ஆற்றலாகக் கொண்ட அன்னை ஒருத்தியைத்தான். என் நெஞ்சுக்குள் மிக ஆழத்தில் ஒன்று நலுங்கியது. நான் அவரிடம் அவர் மைந்தனுடன் மீள்வதாக உறுதியளித்தேன். ‘என் மைந்தனை ஒருநோக்கு காட்டு. அவன் கால்களை தோள்களை நான் ஒருமுறை விழிகொண்டால் போதும். மானுடன் என வந்தமைக்கு பிறிதொன்றும் எனக்குத் தேவையில்லை’ என்று அவர் அழுதார்.
நான் பஞ்சஜனத்தை வென்று அச்செய்தியுடன் அவரை காணச்சென்றேன். அவர் நான் வருவதை அறிந்து கண்ணீருடன் எனக்காகக் காத்திருந்தார். நான் அவர் தனியறைக்குள் சென்றதுமே ‘எங்கே என் மைந்தன்? எப்போது வருகிறான்?’ என்றார். ‘அவர் அங்கு ஆற்றிய பணிகளை முடித்துவிட்டு நாளை இங்கு வந்துசேர்வார். நான் துவாரகை வழியாக வந்தேன்’ என்றேன். அங்கு நிகழ்ந்ததை நான் சொல்வதைக் கேட்கும் பொறுமை அவருக்கு இருக்கவில்லை. ‘எப்போது கிளம்புவான்? இன்று கிளம்பியிருப்பானா? அவந்திக்கு அருகேதானே பஞ்சஜனம்? அவன் அங்கிருந்து இங்கு வர தேர் அளிக்கப்பட்டுள்ளதா?’
நான் அவர் விழிகளை நோக்கி என் நெஞ்சில் அதுவரை கொண்டுவந்த வினாவை கேட்டேன் ‘ஆசிரியரே, இந்த மைந்தனுக்கும் மதுராவில் கம்சனால் கொல்லப்பட்ட ஆயிரம் மைந்தருக்கும் வேறுபாடு ஏதேனும் உள்ளதா?’ நான் கேட்டதென்ன என்று அவர் அக்கணமே புரிந்துகொண்டார். நெஞ்சில் உதைபட்டவர்போல பின்னடைந்து நடுங்கும் இரு கைகளையும் நெஞ்சோடு கோத்து ‘என்ன சொல்கிறாய்?’ என்று அடைத்த குரலில் கேட்டார். ‘லீலை என்றால் என்னவென்று தாங்கள் சொன்னது இதுவா? இல்லை இது மாயை என்பதுவா?’ என்றேன்.
ஆசிரியரே, அப்போது என்னுள் எழுந்த இன்பத்தை எண்ணி இன்று கூசுகிறேன். அச்சொற்களை கேட்டவன் அறிதலின் வேட்கையால் அலைக்கழிக்கப்பட்ட மாணவன் அல்ல. அவன் பிறிதொருவன். அவனை நான் நன்கறிவேன். மிக எளியவன், ஆனால் அவனைத் தவிர எவரையும் ஒரு பொருட்டாக எண்ணாதவன். ஆசிரியனென்று வந்த ஒருவருக்கு மாணவனென்று பணிந்தமைய நேரிட்டமையாலேயே சினம் கொண்டவன். அவ்வஞ்சத்தை ஆயிரம் பட்டுத்துணிகளால் பொற்பேழைகளால் நறுமணங்களால் மூடிக்கரந்தவன். அத்தருணம் அவன் வணங்கியமைந்த அத்தனை தருணங்களுக்கும் மறுதுலா. அவன் வென்று பேருருவம் கொண்டெழுந்த கணம் அது.
ஆசிரியர் உடல்குன்றிச் சிறுப்பதை அப்போது நான் கண்டதைவிட பலமடங்கு தெளிவாக பின்னர் வந்த ஒவ்வொரு நாளிலும் கண்டேன். நுரைக்குமிழிகள் உடைந்துடைந்து அமைவதுபோல அவர் தான் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் எண்ணி மீட்டு உடைந்து அவிந்துகொண்டே சென்றார். உண்மையிலேயே அவர் உடல் சிறுத்து கூன்கொண்டது. ‘ஆம்!’ என்றார். தனக்குத்தானே என ‘ஆம்! ஆம்!’ என தலையசைத்தார். ‘லீலை!’ என முனகி ‘நஞ்சு… ஆலகால நஞ்சு’ என்றார். பின்னர் சீறல் ஒலி எழுப்பி அழுதபடி கால் தளர்ந்து அப்படியே தன் பீடத்தில் அமர்ந்தார். தோள்குறுக்கி தலைகவிழ்ந்து உடல் அதிர விசும்பினார்.
நான் அவரை நோக்கிக்கொண்டு நின்றேன். என்னுள் அப்பேருருவனும் படம்சுருக்கும் பாம்பென சிறுத்து சுருளத்தொடங்கினான். நான் பெருமூச்சுவிட்டு தோள் தளர்ந்தேன். அங்கிருந்து விலகிச் சென்றுவிட வேண்டுமென்று மட்டுமே அப்போது விரும்பினேன். ஒரு சொல்லேனும் சொல்லவேண்டும். ஆனால் எச்சொல் எடுத்தாலும் அது மேலும் கூரிய படைக்கலமாகவே ஆகும் தருணம் அது. நான் திரும்பிச்செல்ல உடலசைந்தபோது என் உடலுடன் பிணைக்கப்பட்டவர் போல அவர் உடல் விதிர்த்தது. ‘ம்’ என்று முனகியபடி அவர் நிமிர்ந்தார்.
என் விழிகளை அவர் விழிகள் சந்தித்தபோது அவற்றில் கூரிய நகைப்பு ஒன்றைக் கண்டு திகைத்தேன். ‘சரியான அம்பு, இளையோனே. சரியான இலக்கும்கூட’ என்றார். அவர் விழிகள் நாகக்கண்கள் போலிருந்தன. ‘ஆசிரியனைக் கொன்று உண்டு எழுகிறாய். நன்று!’ என் உடல் குளிர்ந்து நடுங்கத்தொடங்கியது. அவர் சொல்லப்போவதை நான் முழுதுணர்ந்துவிட்டேன். ‘இவ்வூழே உனக்குமென்றுணர்க! உன் முதல்மாணவன் உன்னை மறுப்பான். நீ வாழ்ந்தது எவருக்காகவோ அவர்களே உன்னை அழிப்பர்!’
நான் அது ஒரு நல்வாழ்த்து என்பதுபோல் கைகூப்பி தலைவணங்கினேன். ‘தன்னந்தனிமையில் நீயும் உணர்வாய், லீலை என்றால் என்னவென்று!’ பித்தனைப்போல உரக்க நகைத்து ‘நச்சுப் பாம்பை வளர்ப்பவன் அதனால் கடிபட்டாகவேண்டும் அல்லவா? உன்னிடமும் வளர்கிறது அச்சொல்’ என்றார். அவர் வெறிகொண்டு நகைத்து என்னை நோக்கி கைசுட்டி ‘லீலை! ஆம் லீலை!’ என்றார். நான் குனிந்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினேன். அவர் ‘வெல்க!’ என என்னை வாழ்த்தினார். நான் திரும்பி மறுபக்க வாயிலினூடாக வெளியே சென்றேன். புரவியில் ஏறி அதை சவுக்கால் அடித்து விரையச்செய்து புழுதிபறக்க பாலைவெளியில் பாய்ந்து துவாரகை நோக்கி சென்றேன்.
“மறுநாளே உங்கள் தந்தை உஜ்ஜயினி நீங்கியதாகவும் நீங்கள் வந்தபோது அவர் அங்கு இல்லை என்றும் அறிந்தேன். நான் அவர் மீளமாட்டார் என அறிந்திருந்தேன் என்று என்னிடம் இளைய யாதவன் சொன்னான்” என்றார் சாந்தீபனி முனிவர். “நான் அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை. கண்களில் துயருடன் உரக்க நகைத்தபடி நாகம் என்னிடம் வளர்ந்துகொண்டே இருக்கிறது ஆசிரியரே என்றான். எழுந்து புரவிமேல் ஏறிக்கொண்டு பாலையில் புழுதி பறக்க திரும்பிச்சென்றான்.”
தருமன் “சில சொற்கள் கொலைவாள் போன்றவை” என்றார். “ஒருவர் தன் வாழ்நாளெல்லாம் எதை தன்னிடமிருந்தே மறைத்துவருகிறாரோ அதை அவரிடம் சுட்டும் சொற்கள். அவற்றை ஒருபோதும் நாம் சொல்லக்கூடாது. ஏனென்றால் கொல்லும் சொற்கள் எல்லாம் கொன்றபின் மேலும் குருதிப்பசி கொண்டு திரும்பிவருபவை.”