சொல்வளர்காடு - 37

[ 4 ]

அந்திவேளை வேள்வியும் சொல்லாடலும் முடிந்தபின் முன்னிரவில் சாந்தீபனி குருநிலையின் முதன்மை ஆசிரியரின் தனியறைக்குள் தருமன் அவர் முன் அமர்ந்திருந்தார். அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் முறுகிச்சென்று முறிந்திருந்ததன் அமைதி அங்கே நிலவியது. “பிருகதர் எந்தையின் அணுக்கர். இனியவர். எளிய பற்றுக்களால் ஆனவர். அவருக்கு எந்தைமேல் உள்ள அன்பு இப்போது இளைய யாதவன் மீதான வஞ்சமாக மாறிவிட்டது” என்றார் சாந்தீபனி முனிவர். அவர் முகம் மெல்லிய சிரிப்பில் வளைந்தது. “அது எளியதென்பதனாலேயே கடினமானதும்கூட.”

“அரசே, எளியமானுடர் இனியோர் என்று அறிவுடையோர் இரங்கிச் சொல்வதை கேட்டிருப்பீர். அது கற்றவரின் ஆணவத்தால் சொல்லப்படுவதன்றி வேறில்லை. கல்வியே ஒருவனை தன்னைத் தான் காணச்செய்கிறது. தன்னை அறியாதவனின் உணர்வுகள் அனைத்தும் விலங்கியல்பு போல தன்பெருக்காக எழுபவை. அது அன்பென வெளிப்படுகையில் அதிலிருக்கும் கட்டின்மை நம்மை வியக்கச்செய்கிறது. எண்ணத்தெரிந்தவனின் தடைகளேதும் அதில் இருப்பதில்லை என்பதனால் அது இறைவடிவமென்றே நம்மால் எண்ணப்படுகிறது.”

“ஆனால் வெறுப்பும் சினமும் ஐயமுமாக அது மாறும்போது அந்தக் கட்டின்மையும் விளக்கமின்மையும் நம்மை அச்சுறுத்துகின்றன. நம் சொற்களும் நெறிகளுமெல்லாம் முழுமையாகவே தோற்று நின்றிருக்கும் இடம் அது” என்றார் சாந்தீபனி முனிவர். “கட்டற்ற பேரன்பு மட்டுமே அவ்வண்ணம் ஒருவனில் வெளிப்படும் என்றால் அவன் கல்லாத எளியோன் அல்ல, கடந்துசென்ற மெய்யறிவன். ஆனால் பேரன்புக்கும் பெருவஞ்சத்திற்கும் அணுவிடையே வேறுபாடு. பாலே திரிவதற்கு எளியது.”

“ஆம்” என்று தருமன் சொன்னார். “அதை நெறியவைகளில் பலமுறை பார்த்திருக்கிறேன். நெறிகளுக்கு அப்பாற்பட்ட பெருவஞ்சமும், ஆறாச் சினமும், விழிமூடிய தன்னலப்போக்கும் எளிய மக்களில்தான் பெரும்பாலும் வெளிப்படுகின்றன.” சாந்தீபனி முனிவர் “எந்தைக்கும் இளைய யாதவனுக்கும் இடையே நிகழ்ந்த பூசல் என்னவென்று என்னால் ஒருசொல் மாறாது சொல்லிவிடமுடியும். ஏனென்றால் அவர் நானே” என்றார். “நான் உஜ்ஜயினி சாந்தீபனி குருநிலைக்குத் திரும்பி வந்தபோது எந்தை அங்கில்லை. கதறியபடி ஓடிவந்த பிருகதர் அவர் அன்று காலையிலேயே கிளம்பிச்சென்றதை என் காலடியில் விழுந்து நெஞ்சிலறைந்தபடி சொன்னார். அக்கணமே அனைத்தையும் நான் தெளிவுறக்கண்டேன். பின்பு ஒவ்வொருவரிடமாக கேட்டு அறிந்துகொண்டேன். துவாரகையில் சென்று தங்கிய நாட்களில் இரு யாதவர்களிடமும் நிகழ்ந்தவை குறித்து பேசியிருக்கிறேன்.”

எந்தைக்கு மலைமகள் ஒருத்தியில் பிறந்தவன் நான். நீர் எளிதில் துளியாகிறது. உலோகம் மிகுவெப்பத்தில் உருகி அனலென்று சொட்டுகிறது. எந்தை துறவுபூணவே எண்ணியிருந்தார். ஐம்புலன்களையும் வெல்வது அவருக்கு எளிதாகவே இருந்தது. ஆனால் கனிவு என்னும் ஆறாவது புலனை வெல்ல அவரால் இயலவில்லை. காட்டில் நீராடச்செல்லும்போது ஒர் அன்னைநாய் தன் மைந்தனை நாவால் உடலெங்கும் நக்குவதை கண்டார். அன்னையின் கண்களிலிருந்த மயக்கம் அவரை மெய்விதிர்ப்பு கொள்ளச்செய்தது. எளிய நாய் ஒன்று தெய்வவடிவாக அங்கிருப்பதை கண்டார். அக்கணத்தில் அவர் ஒரு மைந்தனுக்காக விழைந்தார்.

அவ்விழைவே நான். அரிதில் பிறந்தவனாகிய என்னை தன் வடிவாகவே அவர் கண்டார். தன் மடியிலமர்த்தி வேதச்சொல் கற்பிப்பார். தானறிந்த அனைத்தையும் ஒரேநாளில் எனக்கு கற்பிக்க முயல்வார். என் இளமையின் சிறிய கலத்தை உணர்ந்ததும் சினந்து என்னை உலுக்குவார். உடனே கனிந்து தழுவி கண்ணீர்மல்குவார். எப்போதும் என்னைச் சூழ்ந்தே இருந்தது அவருடைய சித்தம். அதை நான் ஒரு மாறாத்துணை என என்னுடன் எப்போதுமே உணர்ந்துகொண்டிருந்தேன். மழைக்காலப் பேரருவியென என்மேல் கொட்டிக்கொண்டே இருந்தார்.

அவரிடமிருந்து தப்புவதற்காக இளமையிலேயே எங்காவது கிளம்பிச்செல்லத் தொடங்கினேன். ஆனால் ஓரிரு நாட்களிலேயே நான் அவருக்காக தவிக்கத் தொடங்குவேன். மீண்டு வந்தால் படுத்தபடுக்கையாக இருக்கும் அவரைத்தான் காணவேண்டியிருக்கும். ஒரு சொல் எழாமல் என்னைத் தழுவி கண்ணீர்விடுவார். அரசே, தாயுமான தந்தை இரண்டுக்கும் அப்பால் சென்று பலிகொள்ளும் தெய்வமாக ஆகிவிடுகிறார்.

பின்னர் என்னையே நான் நுணுகி ஆராயத்தொடங்கினேன். ஏன் அவரை விட்டுப்போக என்னால் இயலவில்லை? அது பேரன்பினால் என்றால் அவருடனிருக்கையில் நான் ஏன் விட்டுச்செல்லத் தவிக்கிறேன்? அவர் என்னை முற்றிலும் சூழ்ந்துகொண்டிருந்தார். என் காற்றும் வானும் பொருள்வயப் பேருலகும் அனைத்தும் அவரே என்பதுபோல. அவர் சொல்லாகவே இருந்தது என் சித்தம். நானே எதையேனும் எண்ணிக் கண்டடைந்து மகிழ்ந்த மறுகணமே அது அவரது சொற்களே என்று உணரும் தருணத்தின் சோர்வு ஒவ்வொன்றும் ஓர் இறப்பாக இருந்தது எனக்கு.

அப்படியென்றால் அது அன்பல்ல. ஏன் நான் மீண்டு வருகிறேன் என்றால் பிறிதொரு உலகில் வாழ எனக்குப் பழக்கமில்லை என்பதனால்தான். அந்த மெய்யுலகங்களில் நான் அயலவனாகத் தவிக்கிறேன் என்பதனால்தான். நான் என்னை மீட்டுக்கொள்ளாவிட்டால் வெறும் நிழலென எஞ்சுவேன். உயிர்வாழும் ஏட்டுச்சுவடி. மெய் பிதற்றும் கிளிப்பிள்ளை. நான் என்னை அவ்வாறு எண்ணவே நடுங்கினேன். நான் எனும் சொல்லாக எனக்குள் எழுந்த தெய்வம் விழிசீற ஆயிரம் கைகள் கொண்டு எழுந்தது அப்போது. பின்பு தெளிந்த நிலையிலும் அதுவே உறுதியாகப் பட்டது. எந்தைக்கு நல்மைந்தனாக நானிருப்பதென்பதேகூட அவரிலிருந்து பிரிந்து நான் என என்னை வளர்த்துக்கொள்வதே.

வேறு வழியே இல்லை, குருதி வழிய அறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். உடைந்து விழுந்த பிஞ்சிலிருந்தும் பால் வடியும். அது தாய்மரத்தின் பால்தான். ஆயினும் அப்பிஞ்சின் குருதியும் கூட. கிளம்பிச்சென்றாகவேண்டும், இன்றே, இல்லை நாளை. இனி பிந்தலாகாது, இனியில்லை பொழுது… இவ்வாறு நாட்களை செலுத்திக்கொண்டிருந்தேன். என் குழப்பங்களை அறியாது தந்தை மேலும் மேலும் கைகள் பெற்று என்னை தழுவிக்கொண்டிருந்தார். ஒரு கை எனக்கு ஊட்டியது. ஒரு கை என்னை நீராட்டியது. ஒரு கை எனக்கு கற்பித்தது. ஒரு கை இரவில் என்னை கால்தழுவி ஆற்றியது. ஆசிரியர், நண்பர், ஏவலர் அனைவரும் அவரே.

பொறுக்கமுடியாமல் ஒருநாள் கிளம்பிச்சென்றேன். அது இயல்பான உதிர்வே என கிளம்பியபின் கொண்ட விடுதலையால் உணர்ந்தேன். அவ்விடுதலை நாள் செல்லச்செல்ல வளர்வதிலிருந்து உறுதி செய்துகொண்டேன். சாந்தீபனி காட்டிலிருந்து தெற்கே உஜ்ஜயினி வந்தேன். அங்கிருந்து மேலும் சென்றேன். அங்கிருந்து கிளம்புவதற்கு முன் பிருகதரை அழைத்து நான் பிரபாச நீரில் ஆடிவிட்டு திரும்பிவருவதாகச் சொன்னேன். ஆனால் நான் சென்றது மேற்குமலைகளின் உச்சியில் சௌராஷ்டிர நாட்டுக்குள் அஷ்டசிரஸ் முடிமேல் இருக்கும் பிரபாசத் தீர்த்தத்துக்கு அல்ல. மாளவத்திற்கு வடக்கே இன்றைய துவாரகைக்கு தென்னெல்லையாக அமைந்த பிரபாசக் கடல்துறைக்கு. அனைவரும் அறிந்த இடம் யாதவர்களின் தூநீராட்டுத் தலமான பிரபாச தீர்த்தம்தான். அப்படித்தான் பிருகதர் எடுத்துக்கொண்டார்.

எந்தை என்னைப் பின் தொடர்ந்து வந்து நாளும் என்னைப் பற்றிய செய்திகளை அவருக்கு அனுப்ப தன் மாணவர்களையோ ஒற்றர்களையோ அமைப்பார் என அறிந்திருந்தேன். ஓரிரு நாட்களுக்குள்ளாகவே என்னை திரும்பிச்செல்லும்படி கோரி மன்றாட்டு வந்துவிடும். தந்தையிடம் பொய் சொல்லக்கூடாது என்பதனால் பிராபச ஜலம் என்று பிருகதரிடம் சொன்னேன். அவர் தான் எண்ணியதையே கேட்கும் எளிய உள்ளத்தவர் என அறிந்திருந்தேன். அவ்வண்ணமே நிகழ்ந்தது. எந்தை பிரபாச தீர்த்தம் வரை ஒற்றர்களை அனுப்பி நான் அங்கே சென்றடையவில்லை என்று கண்டடைந்தார்.

பிரபாசத் துறை குறித்து நான் வியாசரின் காவியத்தில்தான் படித்தேன். அது கடல் நிலத்திற்குள் பீரிட்டு வந்து உருவாக்கிக்கொண்ட ஒரு பெருஞ்சுழி. அதன் விளிம்பில் இறங்கினால் நீர் நம்மை அள்ளி நெடுந்தொலைவுக்கு சுழற்றிக் கொண்டுசென்று மறு எல்லையிலுள்ள சிறிய குகைவாயிலுக்கு முன் விட்டுவிடும். அக்குகை அதனுள் உள்ள இயற்கையான அருமணிகளால் ஒளிகொண்டது. அதனுள் அமர்ந்தால் ஊழ்கம் எளிதில் வயப்படும் என்றது வியாசமாலிகை. ஆனால் அங்கு செல்லும் தகுதி நமக்கு உண்டா என்பதை கடலே முடிவு செய்யும். தகுதியற்றவர்களை அது தன் சுழிமையத்திற்கு கொண்டுசென்று விழுங்கிவிடும்.

“அங்கு சென்று என்னை நானே நோக்கி அறியவேண்டுமென விழைந்தேன். ஓராண்டில் திரும்பி வரலாமென்று எண்ணித்தான் சென்றேன். ஆனால் அங்கே நான் எண்ணாதவை அனைத்தும் நிகழ்ந்தன” என்று சாந்தீபனி முனிவர் தொடர்ந்தார். “பிரபாசத் துறைக்கு நெடுங்காலமாக எவரும் செல்வதில்லை என்று அவந்திக்குச் சென்ற பின்னரே அறிந்தேன். மாளவத்தின் ஆட்சிக்கு அப்பாற்பட்ட நிலம் அது. அங்கு முனிவர்கள் செல்வதற்கான பாதை ஒன்று முன்பிருந்தது. ஆனால் சிலநூறாண்டுகளாக அப்பகுதியில் வாழ்ந்த ஐந்து தொல்குடிகள் ஒற்றைக் குமுகமாக இணைந்து அரசு ஒன்றை அமைத்துக்கொண்டிருந்தனர். அதற்கு பஞ்சஜனம் என்று பெயர். மாளவமும் பிற அரசுகளும் அதை அஞ்சின.”

ஐந்து வெவ்வேறு குடிகள் கலந்துருவானது பஞ்சஜனம். அந்நிலம் முற்றிலும் வேறுபட்ட ஒன்று. அடர்காடு சூழ்ந்த மலைப்பிரிவு ஒன்று நீண்டு கடலுக்குள் இறங்கி நின்றிருக்கும். அது சங்கு வடிவமானது. அதை இன்று சங்ககிரி என்றே சொல்கிறார்கள். மலைத்தெய்வமான தாரையை வழிபடும் தாராபுத்ரர்களும், பறக்கும் நாகத்தை வழிபடும் சிரோநாகர்களும், முகில்வடிவ யானையை வழிபடும் கஜமேகர்களும் அந்த மலைக்காட்டில் வேட்டையாடி வாழ்ந்தனர். கடலாமையை வழிபடும் மகாஜலர்களும் அலைத்தெய்வத்தை வழிபடும் தரங்கர்களும் கடலோரமாக மீன்பிடித்து வாழ்ந்தனர். அவர்களுக்குள் பல்லாயிரமாண்டுகளாக ஓயாது போர் நிகழ்ந்துவந்தது.

சிலநூறாண்டுகளுக்கு முன்பு பெருங்கடல்கொந்தளிப்பு ஒன்று நிகழ்ந்தது. கடலலைகள் எழுந்து சங்ககிரியை முழுமையாகவே மூடின. கடலை அறிந்திருந்த தரங்கர்ளும் மகாஜலர்களும் நீருக்குமேல் படகுகளில் ஏறி தப்பினர். அலைகள் மலைவிலாவை ஓங்கி அறைந்து நுரை எழுப்பின. நீர் வடிந்து கடல் நிலைமீண்டபோது பாறையிடுக்குகளில் எல்லாம் சிப்பிகளும் சங்குகளும் சோழிகளும் நிறைந்திருப்பதை மலைமக்கள் கண்டனர். அவர்கள் அதை ஆர்வத்துடன் பொறுக்கி சேர்த்தனர். ஏனென்றால் கடல்குடிகளை அஞ்சி அவர்கள் கடலருகே செல்லும் வழக்கமே இருக்கவில்லை.

இரு பாறைகளுக்கு நடுவே கிடந்த பெரிய சங்கு ஒன்றை கஜமேகர்குலத்தைச்சேர்ந்த இளைஞன் ஒருவன் கண்டான். முதலில் அதை அவன் ஒரு வெண்பன்றிக்குட்டி என்றே எண்ணினான். பின்னர் அது பளிங்குப்பாறை என நினைத்தான். வழுக்குப் பாறைகளில் தொற்றி ஏறி அவன் மேலே சென்று அதை கையில் எடுத்தான். வெண்ணை உறைந்து கல்லானதுபோல குளிர்ந்து போயிருந்த அது ஒரு பெரிய சங்கு என தெரிந்தது. பிற சங்குகளிலிருந்து அது வேறுபட்டிருப்பதை அவன் கண்டான். அது வலம்புரியாக சுழன்றிருந்தது.

அதை அவன் எடுத்துக்கொண்டு சென்று துளையிட்டு ஊதினான். சிம்மம்போல அது ஒலியெழுப்பக் கேட்டு மலைச்சரிவில் வாழ்ந்த மதயானைகள்கூட மத்தகம் தாழ்த்தின. அதை கையிலேந்தியதனாலேயே அவன் குடியில் அவன் அனைவராலும் பணியப்பட்டான். அவனை அக்குடி தங்கள் அரசனாக்கியது. ஒருநாள் கஜமேகர்கள் தங்கள் படைக்கலங்களுடன் திரண்டு அவன் தலைமையில் மலையிறங்கி தரங்கர்களின் சிற்றூர்களுக்கு சென்றார்கள். அவர்கள் வருவதைக்கண்டு சினந்து தங்கள் மீனெறி வேல்களுடனும் தூண்டில்முட்களுடனும் தரங்கர்கள் எதிர்த்துவந்தனர். கஜமேகர்களின் தலைமுகப்பில் அவர்களின் தலைவன் மிகப்பெரிய வலம்புரிச் சங்குடன் வருவதைக் கண்டனர். அவன் அதை மும்முறை ஊதியதும் அவர்கள் படைக்கலங்களை விட்டுவிட்டு முழங்கால் ஊன்றி பணிந்தனர்.

அவன் அவர்களை வென்று அவர்களை தன் மக்கள் என அறிவித்தான். அவர்களின் குலத்தலைவி அமரும் பாறைப்பீடத்தில் அந்த சங்கை தன் தலையில் வைத்தபடி அரசன் என அமர்ந்தான். அவர்கள் அவனுக்கு மீனும் சிப்பியும் முத்துக்களும் அளித்து வணங்கினர். அவன் பெருஞ்சங்கத்தின் கதை அனைத்து குலங்களுக்கும் பரவியது. எந்த எதிர்ப்பும் இன்றி ஐந்து குலங்களும் அவனை தங்கள் அரசனாக ஏற்றுக்கொண்டன. அவன் தன் தலையில் அந்த வெண்சங்கை முடியெனச்சூடி அமர்ந்து ஆட்சி செய்தான். அவனை அவன்குடி சங்கன் என்று அழைத்தது. மாளவர்களும் பிறரும் அவனை சங்காசுரன் என்றனர்.

சங்கனின் வழிவந்த அரசர்கள் மாளவம், விதர்ப்பம், கூர்ஜரம் போன்ற பிற அரசுகளின் எல்லைகளைத் தாக்கி கருவூலங்களைக் கொள்ளையிடுவதை தங்கள் பொருள்வளர்க்கும் வழியாகக் கொண்டிருந்தனர். வணிகப்பாதைகளில் வண்டிகளை மறித்து சூறையாடினர். பயணிகளில் பெண்களையும் அரசகுடியினரையும் அந்தணரையும் பிணையாகப் பிடித்துக்கொண்டுசென்று சிறையிட்டு பெரும்பொருளுக்கு விலைபேசினர். செல்வம் சேரச்சேர அவர்கள் கோட்டையையும் அரண்மனையையும் கட்டிக்கொண்டனர். அவர்களின் அரசன் சங்குவடிவமான பொன்முடியை சூடிக்கொண்டான். அவர்களின் குலக்குறியான அந்த வலம்புரிச் சங்கு அரண்மனையின் மையத்தில் ஒரு பொற்பீடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அதை பாஞ்சஜன்யம் என்றனர்.

சங்கனின் படைகள் முன்னரே ஒருமுறை துவாரகைக்கு வந்த யாதவப்பெண்களை கவர்ந்து கொண்டுசெல்ல முயன்றன. செய்தி அறிந்த கிருஷ்ணனும் பலராமனும் ஒருசிறு புரவிப் படையுடன் குறுக்குவழியாகச் சென்று அவர்களை மறித்து போரிட்டு தங்கள் பெண்களை மீட்டனர். சங்கனின் மைந்தன் ஒருவன் அப்போரில் கொல்லப்பட்டான். துவாரகை உருவாகி வந்தமை பஞ்சஜனர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. துவாரகைக்கு வரும் கலங்களை பஞ்சஜனர் தாக்கி கொள்ளையடித்தனர். அவர்களை சென்று தாக்கி வெல்லும் அளவுக்கு துவாரகைக்கு படைவல்லமையும் இருக்கவில்லை. எனவே ஒவ்வொருநாளுமென அங்கே கரையிலும் கடலிலும் போர்களும் பூசல்களும் நிகழ்ந்துகொண்டிருந்தன.

இவை எதையும் அறியாமல் நான் பிரபாசத் துறைக்கு சென்றேன். நான் எங்கு செல்கிறேன் என்பதை எவரிடமும் சொல்லவில்லை. மாளவத்தின் எல்லையைக் கடந்ததுமே என்னை எவரோ தொடர்வதுபோல உணர்ந்தேன். சற்றுநேரத்திலேயே என்னை வளைத்துக் கொண்டார்கள். என்னை அறைந்து வீழ்த்தி கைகளை பின்னால் கட்டி இழுத்துச்சென்றனர். அவ்விளமையில் அதையும் ஒரு காவிய நிகழ்வாகவே எண்ணிக்கொண்டேன். என்னை கொண்டுசென்று சங்கன் முன் நிறுத்தினர். முதற்சங்கரசரின் பன்னிரண்டவது கொடிவழியினன் அவன். என்னிடம் என் கொடிவழியையும் குருமுறைமையையும் கேட்டான்.

நான் வேண்டுமென்றே பொய் சொன்னேன். என் குருமுறை கௌதமநெறி என்றும் என் தந்தை பெயர் விபாசர் என்றும் சொன்னேன். ஏன் அப்படி சொன்னேன் என்று இன்றும் தெரியாது. அந்த இளமையையே சுட்டுவேன். ஏதோ ஒன்று நிகழவேண்டுமென எண்ணினேன். முனிவர்களை கொல்லமாட்டார்கள் என எண்ணியிருக்கலாம். அல்லது பிணைத்தொகைக்காக அவர்கள் என் தந்தையை அணுகக்கூடாது என்பதனாலாக இருக்கலாம். என் ஆணவம் நிமிர்வதற்கான ஒரு தருணமல்லவா அது?

அவர்கள் என்னைப்பற்றி தூதுக்களை அனுப்பினர். மாளவர் என்மேல் ஆர்வம் காட்டவில்லை. கௌதமர்கள் தங்களில் எவரும் காணாமலாகவில்லை என்று சொல்லிவிட்டனர். ஓராண்டுகாலம் என்னை அவர்கள் சிறை வைத்திருந்தனர். பின்னர் என்னை அவர்களின் படகுகளில் அடிமைப்பணிக்காக சேர்த்துக்கொண்டனர். உண்மையில் எனக்கு அவ்வுலகம் புத்தம்புதியதாக இருந்தது. ஒவ்வொருநாளும் புதிய அறிதலுடன் விடிந்தது. கடுமையான உடலுழைப்புக்குப்பின் பெரும்பசியுடன் உண்பதும் உடல் சோர்ந்து தன்னைமறந்து துயில்வதுமே பேரின்பம் என்று கண்டுகொண்டேன். படகோட்டவும் கடல்புகுந்து மீன்கொள்ளவும் பயின்றேன். அவர்கள் மொழியை நன்கு கற்றேன். நாளடைவில் அவர்களில் ஒருவனாக ஆனேன். அவர்களால் விரும்பப்பட்டேன்.

என் கல்விப்புலம் எனக்கு உதவியமையால் அவர்களில் கற்றோன் என முதன்மை பெற்றேன். எங்கும் எக்குலத்திலும் அந்தணனுக்கான இடமொன்று உள்ளது. செந்தண்மை என்பதே அந்தண்மை என்பதனால். அவர்களின் மொழிக்கு நான் இலக்கணம் அமைத்தேன். அவர்களிடமில்லாத சொற்களை செம்மொழியிலிருந்து எடுத்து அளித்தேன். அவர்களின் கடற்குறிகளைத் தொகுத்து சமுத்ரலக்‌ஷணகாரிகை என்னும் நூலை இயற்றினேன். அந்நூலை அவர்கள் அனைவரும் மனப்பாடம் செய்யவைத்தேன். அவர்களின் குமுகநெறிகளை தொகுத்து சங்க ஸ்மிருதி ஒன்றை அமைத்தேன். அவை புதிய தலைமுறைகளுக்கு எளிதாக கற்பிக்கப்பட்டன. அவர்களின் தொழிலும் குமுகமும் சொற்களால் உறுதியாக கட்டி நிறுத்தப்பட்டன.

என்னை அங்கே எவரும் சிறையிட்டிருக்கவில்லை. விரும்பியிருந்தால் நான் கிளம்பி வந்திருக்கமுடியும். ஆனால் மீண்டு வந்து நான் ஆற்றும் செயற்களங்கள் ஏதுமிருக்கவில்லை. எந்தை நான் இறந்துவிட்டதாக எண்ணி இறுதிச்சடங்குகளைச் செய்தார் என சூதன் ஒருவனிடமிருந்து அறிந்தபோது பெரும் விடுதலையையே அடைந்தேன். அங்கே மூன்று சங்ககுலக் கன்னியரை மணந்தேன். அவர்களில் எனக்கு ஏழு மைந்தர் பிறந்தனர். ஏழு விழுதுகளால் மண்ணுடன் அசையாது பிணைக்கப்பட்டேன். நான் இயற்றிய உலகில் அதன் மைய அறிஞனாக என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன். சிலந்திக்கு தன் வலையே சிறை.

ஒருமுறை என் தந்தை எனக்கான நீர்க்கடனை இயற்றும்பொருட்டு சௌராஷ்டிரத்தில் அஷ்டசிரசுக்குமேல் அமைந்திருந்த பிரபாசதீர்த்தம் சென்றிருந்தார். அவருடன் துவாரகையிலிருந்து வந்த இரு யாதவர்களும் துணைசென்றனர். நான் அங்குதான் உயிர்துறந்ததாக அவர் எண்ணிக்கொண்டிருந்தார். அங்கு சென்று எனக்கான கடன்களை முற்றும் செய்து தான் துறவுபூண்டு உலகியல் கடன்களில் இருந்து விடுபடவேண்டுமென விழைந்தார். இப்பிறவியில் தனக்கு எஞ்சியிருப்பது அது என்றே அவர் எண்ணினார்.

அவர் உள்ளத்தில் நான் கொண்டிருந்த இடமென்ன என்று யாதவர்களுக்கோ பிற மாணவர்களுக்கோ தெரியாது. நான் இறந்ததாக செய்தி கேட்டதுமே எந்தை அதை தெய்வங்களின் அடி என்றே எடுத்துக்கொண்டார். தீபட்ட யானைபோல அலறித்துடித்தபடி அவர் தன் ஆசிரியரிடம் ஓடினார். அனைத்தையும் துறந்து மலைக்குகை ஒன்றில் தவம் செய்திருந்த அவர் “அரியதே பறிக்கப்படும் என்னும் ஊழின் நெறியை காவியங்களை நோக்கினாலே அறியலாம். அது உனக்கு அரியதென்று தோன்றியதேகூட அது பறிக்கப்படும் என நீ அறிந்ததனால்தானோ?” என்றார்.

“அத்தனை இரக்கமற்றதா அது? அத்தனை நெறியின்மையா நம்மை ஆள்கிறது?” என்றார் எந்தை நெஞ்சில் ஓங்கி அறைந்தபடி. “அதன்மேல் கேள்விகளால் மோதாதே, மூடா! கேட்கக்கேட்க விடையின்மை கொள்வதன் பெயரே ஊழ் என்பது. அதைவிட்டு விலகிச் செல். உன் ஊழுக்கு உன்னை ஒப்படை” என்றார். “என் மைந்தன்! நான் அவனை விழியால் பிறிதொருமுறை பார்ப்பேனா? பிறிதொன்றையும் நான் வேண்டேன்” என்று எந்தை நெஞ்சுடைந்து கதறினார். “இறப்பைக் கண்ட அனைவரும் சொல்பவை இவை. சொற்களைக் கருதி வை. ஒருவேளை நீ அவனை மீண்டும் காண நேர்ந்தால் அத்தனை சொல்லும் பொருளின்றிப்போகும்” என்றார் ஆசிரியர்.

எந்தை அவர் சொல்வன எதையும் செவிகொள்ள முடியாதவராக இருந்தார். நாற்பது நாட்கள் தன் குருநிலையின் இருளுக்குள் ஒடுங்கிக் கிடந்தார். தன்னை இறுக்கிச் சுருட்டி ஓசையே இன்றி அத்துயரை முழுக்க பெற்றுக்கொண்டார். ஒரு சொல்கூட மிச்சமின்றி என்னை தன் உள்ளத்திற்குள் செலுத்திப் புதைத்தார். என்னைப்பற்றி அவர் எவரிடமும் பேசுவதில்லை. என்னை அவர் முற்றிலும் மறந்துவிட்டதாகவே பிருகதர் போன்றவர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் அவருக்குள் ஆறாத புண் என நான் குருதி கசிந்துகொண்டிருந்தேன். என்னை அவர் எண்ணுவதே இல்லை. ஆனால் அவர் கனவில் மாறா இளமையுடன் நான் வந்துகொண்டிருந்தேன்.

அந்த இருளிலிருந்து அவரை மீட்டது இளைய யாதவனைப் பற்றிய கனவு. அனைத்திலும் நம்பிக்கையிழந்து இருண்டு சென்றுகொண்டிருந்த அவருக்கு மீண்டும் வாழ்விருப்பதாக அறிவித்தது. மலையடிவாரத்து சாந்தீபனி குருநிலையை உதறி உஜ்ஜயினிக்கு வந்து அவனுக்காகக் காத்திருக்க முடிவெடுத்ததே அவரை மீட்டது. தன் மாணவர்கள் சென்று துவாரகையை அமைத்து படைவல்லமை கொண்டதும் எந்தை அவர்களிடம் கோரியது தன்னை மைந்தன் இறந்த பிரபாச தீர்த்தத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் என்றுதான்.

உண்மையில் மூத்த யாதவர் அவருக்கு ஒரு மைந்தன் இருந்ததையே அப்போதுதான் அறிந்தார். “ஆசிரியரே, உங்களுக்கு மைந்தன் ஒருவன் இருந்தானா? நான் இன்றுவரை அறியவில்லையே? உங்கள் மைந்தனே இவன்தான் என்றல்லவா எண்ணினேன்?” என்றார். “ஆம், இவனும் என் மைந்தனே. இவனுக்கு எப்படி கற்பிப்பது என அவனிடமிருந்தே கற்றேன். என் மைந்தன் மேல் கற்பாறை விதைமுளைமேல் என அமர்ந்திருந்தேன். அவன் என்னை உதறிச்சென்று விடுதலைகொண்டான்” என்றார் எந்தை. இளையவன் அதைக் கேட்டு புன்னகையுடன் வேறெங்கோ நோக்கி நின்றிருந்தான்.

யாதவர்களுடன் கிளம்பி பன்னிரு நாட்கள் பயணம் செய்து அரிய மலைவளைவுகளைக் கடந்து பிரபாச தீர்த்தத்தை அணுகி நீர்க்கடனுக்காக அமர்ந்தார் எந்தை. இலைமேல் அன்னமும் மலரும் படைக்கப்பட்டு என் வடிவாக அங்கிருந்து எடுக்கப்பட்ட சிறிய கூழாங்கல் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. சடங்குகள் செய்வதற்காக அமர்ந்த முதிய அந்தணர் விழியறியாதவர். அவர் அக்கூழாங்கல்லைத் தொட்டதுமே “இது உயிருள்ளதாயிற்றே!” என்றார். “என்ன சொல்கிறீர்கள்?” என்றார் எந்தை. “இம்மைந்தன் இறக்கவில்லை. உயிருடன் எங்கோ இருக்கிறான். இவனுக்களிக்கப்பட்ட அன்னத்தையும் நீரையும் இவன் மூதாதையரே இதுவரை பெற்றுக்கொண்டனர்… ஐயமே இல்லை” என்றார் அந்தணர். எந்தை “மைந்தா! என் உயிரே!” என அலறியபடி மயங்கி விழுந்துவிட்டார்.

திரும்பிவரும் வழியெங்கும் எந்தை கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் இளைய யாதவன் ஒருசொல்லும் கேட்கவில்லை. சாந்தீபனி குருநிலையை அடைந்ததும் எந்தை இரு யாதவர்களையும் அருகழைத்தார். “நான் உங்களுக்கு ஆசிரியனாக அமைந்து இதுகாறும் கற்பித்தேன். ஆசிரியக்கொடை இன்றி கல்வி முழுமையாவதில்லை. இன்று உங்களிடம் ஆசிரியக்கொடை கோருகிறேன், என் மைந்தன் எங்கிருந்தாலும் மீட்டுக் கொண்டுவருக! அவனை கண்டபின்னரே நான் அனலவிந்து உயிர்துறக்க முடியும். பிறிதொன்றும் இப்புவியில் எனக்குத் தேவையில்லை” என்றார். மூத்த யாதவர் “எட்டாண்டுகாலம் ஆகிவிட்டது. அவர் விழைந்திருந்தால் மீண்டு வந்திருக்கக்கூடுமே” என்றார். “எதையும் நான் கேட்க விழையவில்லை. என் மைந்தனை எனக்கு கொண்டுவந்து கொடுங்கள்… அது ஒன்றே எனக்குரிய ஆசிரியக்கொடை” என்றார் எந்தை. “அவ்வண்ணமே ஆகுக!” என்றான் இளைய யாதவன்.

நான் விடைபெற்றுச் சென்றதை பிருகதரிடமிருந்து மீண்டும் கேட்டறிந்தான். ஒவ்வொரு சொற்துளியையும் ஒவ்வொரு முகக்குறியையும் அவரிடமிருந்து மீட்டெடுத்தான். ஏழுநாட்கள் பன்னிருமுறை அவரிடம் அவன் உரையாடினான் என்கிறார்கள். இறுதியில் அவன் அவராக மாறி என் முன் அத்தருணத்தில் நின்றிருந்தான். என் விழிகளின் கரவை கண்டடைந்தான். பிரபாச தீர்த்தம் என்னும் சொல்லை நான் தவிர்த்ததை, பிரபாச நீர் என்றே சொன்னதை உணர்ந்தான். மூத்தவரிடம் “ஐயமே இல்லை மூத்தவரே, அவர் சங்கனின் சிறையில் இருக்கிறார்” என்றான்.

“ஆனால் அவர்கள் பிணையர்களைப் பற்றி செய்தி அறிவிப்பார்கள். பிணைமீட்புச் செல்வம் கோருவார்கள்” என்றார் மூத்தவர். “ஆம், அது நிகழவில்லை. ஆசிரியரின் மைந்தர் தன் பெயரையும் குலத்தையும் மறைத்திருக்கலாம். அவர்கள் அந்தணரை கொல்வதில்லை” என்றான். “ஆனால் அவர் இத்தனை நாள் எங்கிருக்கிறார்? அவர்களுடன் அவர் வாழ்கிறாரா?” என்றார் மூத்தவர். “அறியேன். அவரை தேடிச் செல்வோம். அவரை மீட்காமல் திரும்பமாட்டோம் என உறுதிகொள்வோம்” என்றான் இளைய யாதவன்.

நான் வந்த வழியை அவர்கள் அவ்வாறே மீண்டும் நடித்தனர். என்னைப் போலவே உஜ்ஜயினிக்கு வந்து அங்கிருந்து பஞ்சஜனத்தின் எல்லைவரை வந்தனர். அங்கே ஒரு வணிகச்சாவடியில் அவர்களிடம் பஞ்சஜனத்தின் கஜமேக குலத்தைச் சேர்ந்த வணிகன் ஒருவன் அறிமுகமானான். அவன் துவாரகைக்குச் சென்று வணிகம்செய்ய விரும்பினான். அவன் அவர்களிடம் துவாரகைபற்றி கேட்டுக்கொண்டிருந்தான். அவர்கள் துவாரகை பற்றி அவனிடம் பேசிக்கொண்டே பஞ்சஜனம் குறித்து கேட்டறிந்தனர். அவன் நான் இயற்றிய கடல்நூலில் இருந்து ஒரு செய்யுளை பாடினான். அதைக் கேட்டதுமே இளைய யாதவன் சொல்லிவிட்டான் “ஐயமே இல்லை, இது சாந்தீபனி குருநிலையில் பயின்றவரால் யாக்கப்பட்டது. இதை இயற்றியவர்தான் நாம் தேடுபவர்.”

SOLVALAR_KAADU_EPI_37

“நான் என் பெயரை கிரிஜன் என்று அங்கே சொல்லியிருந்தேன். அவர்கள் மீட்டுச் செல்ல விரும்புவது என்னைத்தான் என அன்றே அவர்கள் முடிவு செய்தனர்” என்றார் சாந்தீபனி முனிவர். “அன்று அவர்களால் பஞ்சஜனரை வெல்லமுடியாத நிலை இருந்தது. படைகொண்டு சென்றால் என்ன என்று மூத்தவர் கேட்டபோது இளைய யாதவன் சிரித்தபடி “மூத்தவரே, நாம் படைகொண்டுசென்றால் பஞ்சஜனரின் படைகளுடன் மட்டுமல்ல அதை நடத்திவரும் சாந்தீபனி குருநிலையின் பேரறிவுடனும் போரிட வேண்டியிருக்கும். நாம் வெல்லமுடியாது” என்றான். “அப்படியென்றால் என்னதான் செய்வது?” என்றார் மூத்தவர். “வென்றாகவேண்டும் என்றால் அதற்கான வழி ஒன்று இருப்பதை கண்டுகொள்ளலாம்” என்றான் இளையவன்.