சொல்வளர்காடு - 36

[ 3 ]

தருமன் சாந்தீபனிக்காட்டின் நடுவே ஓடிய அஸ்வினி என்னும் சிற்றாற்றின் கரையில் நீராடுவதற்குச் சென்றபோது அங்கே நீராடிக்கொண்டிருந்த ஒரு முனிவரைக் கண்டு தலைவணங்கினார். பிறிதொரு இடம்தேடி அவர் விலக முயல அவர் “வணங்குகிறேன், அரசே. இங்குள்ள ஆறுகளும் ஓடைகளுமெல்லாம் சேறு மண்டியவை. சில இடங்களில் மட்டுமே நீராடமுடியும். தாங்கள் இங்கேயே நீராடலாம்” என்றார். “ஆம், நான் ஆற்றின் கரைவழியாக நோக்கியபடியே வருகிறேன்” என்றபடி தருமன் அந்தப் பாறைநீட்சியை அடைந்தார்.

“இந்தப் பாறை நீண்டு பெரும்பெருக்கு வரை வந்துள்ளது. எனவே கரையோரச் சேற்றை மிதிக்காமல் தெளிநீரில் இறங்கமுடியும். இப்படி சில இடங்களே உள்ளன” என்றார். “என் பெயர் பிருகதன். இங்கு வேதம் பயிற்றுவிக்கிறேன்.” தலைதாழ்த்தி “வணங்குகிறேன், உத்தமரே” என்றார் தருமன். அவர் தன் ஆடைகளை கழற்றிவிட்டு நீரில் இறங்குவதைப் பார்த்தபடி பிருகதர் நீருக்குள் நின்றார். “இங்கே ஒழுக்கு இல்லை. இப்பகுதியில் நிலம் முற்றிலும் நிகர்பரப்பாக உள்ளது. ஓடைகளும் இங்கே தவழத்தான் செய்கின்றன. முன்பு இது பெரும்சதுப்பு. இப்போதுகூட உள்காடுகள் சதுப்பாகத்தான் உள்ளன. மானுடர் வரத்தொடங்கியதும் சதுப்பு குறைந்தது” என்றார் பிருகதர்.

“நூறாண்டுகளுக்கு முன்பு அஸ்வினி சற்று தேங்கிச்சென்ற ஓர் இடத்தை உடைத்து நீர் பக்கவாட்டில் ஊறிப் பரவாமலாக்கினர். அதன்பின் சதுப்பு பாதியாக குறைந்துவிட்டது” என்றபடி அவர் நீரில் மூழ்கி தாடிசொட்டிப் பெருக எழுந்தார். தருமன் நீரில் இறங்கி மூழ்கி எழுந்து நடுக்கத்துடன் உடலை உலுக்கிக்கொண்டார். “தங்கள் இளையோர் வரவில்லையா?” என்றார் பிருகதர். “அவர்கள் தமையனுடன் காட்டுக்குள் சென்றுவிட்டனர். இன்று நான் தனியன்” என்றார் தருமன். “நன்று, அவ்வப்போது தனிமையும் தேவையே” என பிருகதர் நகைத்தார். தருமன் புன்னகைத்து மீண்டும் மூழ்கினார். “இங்கு இக்குருநிலை அமைந்து எத்தனை காலமாகிறது?” என்றார் தருமன்.

“நாநூறாண்டுகள் என்கிறார்கள். இன்றுள்ள குடில்கள் அமைந்து நூறாண்டுகள் கடந்துவிட்டன. இவை மாளவத்தின் அரசன் பிரபாவர்மனின் கொடை” என்றார் பிருகதர். “பிரபாவர்மன் மாளவ அரசர்களில் முதலில் பெருவேள்வியைச் செய்தவன் என்னும் பெருமைகொண்டவன். அவன் பெயர் நூல்களில் அதிராத்ரம்வேட்ட பிரபாவர்மன் என்றுதான் பதிவாகியிருக்கிறது. அறிந்திருப்பீர்கள், மாளவர்கள் தூயஷத்ரியர்களாக கருதப்படுவதில்லை. தொன்மையான ஜனபதங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல அவர்கள்.” தருமன் “ஆம், அவர்கள் மத்ரநாட்டு அரசர் அஸ்வபதியின் மைந்தர். அவர் நைமிசாரண்யக் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றபோது அவர்களின் அன்னை மாளவியைக் கண்டு மணம்கொண்டார். அவர்களுக்குப் பிறந்த ஏழு மைந்தர்களே மாளவர்” என்றார்.

நகைத்தபடி பிருகதர் “அக்கதையை அவர்கள் இன்று சொல்லவிழைகிறார்கள். பழைய நூல்களில் அவர்கள் வெறுமனே படைக்கலமேந்திய தொல்குடியினர் என்றுதான் சொல்லப்படுகிறார்கள். மாளவர்களின் நாடு நைமிசாரண்யத்தின் விளிம்பில் அமைந்துள்ளது. விந்தியமலையைக் கடந்து தண்டகாரண்யத்திற்கும் தெற்கே செல்வதற்கான வழி அது. வணிகவழிகளில் சுங்கம் கொள்ளத் தொடங்கியதும் மலைமக்களான மாளவர் அரசொன்றை அமைத்தனர். நெடுங்காலம் அன்னையரால் ஆளப்பட்டது அவ்வரசு. பிரபாவர்மனின் மூதாதையான மகாகாலர் சிம்மவக்ரர் என்னும் பேரில் அரசராக முடிசூட்டிக்கொண்டார். கலிங்கத்திலிருந்து சிற்பிகளை வரவழைத்து கோட்டையும் அரண்மனையும் கட்டினார்” என்றார்.

“ஆயினும் மாளவர்கள் பிற ஷத்ரியர்களால் அரசர்களென ஏற்கப்படவில்லை. ஷத்ரிய அவைகளில் அவர்களுக்கு அழைப்பும் இருக்கவில்லை. எனவே மாளவர்கள் வேள்விகளை நிகழ்த்த விரும்பினர். இல்லறத்தாருக்குரிய சிறிய வேள்விகளையே அவர்களால் நிகழ்த்தமுடிந்தது. அரசர்களுக்குரிய பெரிய வேள்விகளை நிகழ்த்த அவர்களுக்கு எந்த வேதநிலையிலிருந்தும் அந்தணர் செல்லவில்லை. அனைத்து வேதநிலைகளுக்கும் அவர்கள் செய்தியனுப்பினர். இறுதியில் அவர்கள் இங்கு வந்துசேர்ந்தனர். இங்கிருந்து நூற்றெட்டு அந்தணர் சென்று பிரபாவர்மன் விரும்பிய அதிராத்ர வேள்வியைச் செய்து அளித்தனர்.”

“அதற்கு மாற்றுதவியாக பிரபாவர்மன் பாரதவர்ஷம் முழுக்க பன்னிரண்டு கல்விநிலைகளை சாந்தீபனி குருநிலைக்கு அமைத்து அளித்தான். தலைமையிடமாகிய இங்கே சேற்றுப்பரப்பை மேடுறுத்தி குடில்களை அமைத்தான்” என்றார் பிருகதர். “அவ்வாறு உஜ்ஜயினியில் அவன் அமைத்த குருநிலையில்தான் உங்கள் இளைய யாதவர் பயின்றார்.” அச்சொற்களில் இருந்த அழுத்தம் தருமனை அவர் விழிகளை நோக்கவைத்தது. அந்த வெறுப்பு அவர் அத்தனை சொற்களை ஏன் பேசுகிறார் என்பதை காட்டியது. தருமன் ஒன்றும் சொல்லவில்லை.

“அவரைப்பற்றி நான் சொல்வது உங்களுக்கு உவப்பாக இராது என நான் அறிவேன்” என்றார் பிருகதர். “ஆனால் நான் சொல்ல விழைவனவற்றை எங்கும் சொல்வேன். அதுவே என் இயல்பு.” தருமன் ஒளியின்றி புன்னகை செய்தார். “உஜ்ஜயினியில் ஷிப்ரை ஆற்றின் கரையில் இருக்கிறது அந்த குருநிலை. நான் அங்கே பன்னிரண்டு ஆண்டுகாலம் இருந்தேன். அப்போதுதான் இளைய யாதவன் அங்கே கல்வி பயில வந்தான். என்னைவிட இருபதாண்டுகள் இளையவன்.” அவர் நீரில் மூழ்கி சற்றுநேரம் கழித்து எழுந்தார். தாடியின் நீரை கையால் தெறிக்கச்செய்துவிட்டு “இங்கிருந்து அவனுக்காகவே முதலாசிரியர் கிளம்பி அங்கே சென்றார் என்றால் நம்பமாட்டீர்கள்” என்றார்.

“இன்றிருப்பவரின் தந்தை அவர். சாந்தீபனி குருநிலை கீழே அரசர்களிடமும் அறிஞர்களிடமும் புகழ்பெறுவது அவரது அறிவுத்திறனால்தான். பாரதவர்ஷத்திற்கு வெளியிலும் உள்ள அனைத்து மெய்யறிதல்களையும் அறிந்தவர் அவர் காலத்தில் அவர் ஒருவரே. இளமையில் குருநிலைகள்தோறும் சென்று தங்கி வேதமெய்மைகளை கற்றார். ஆறு நோக்குகளையும் ஆறு வழிபடுமுறைகளையும் அறிந்தார். சமணர்களிடம் சென்று அமர்ந்து அவர்களின் மெய்மையில் தேர்ச்சிபெற்றார். நாகர்களின் வேதங்களும் நிஷாதர்களின் வேதங்களும்கூட அவருக்குத் தெரிந்திருந்தன. அவர் பெரும்பயணி. கிழக்கே தாம்ரலிப்தியிலும் மேற்கே சிந்துவின் கரையிலும் சென்று தங்கி யவனரும் பீதரும் காப்பிரியும் சோனகரும் கொண்டுள்ள மெய்மைகளைக் கற்று அறிந்தார்” என்றார் பிருகதர்.

பின்னர் இங்கு வந்தமர்ந்து இருபதாண்டுகாலம் அனைத்தையும் உட்கொண்டு உணர்ந்தார். அனைத்து நோக்குகளையும் ஒற்றைப்பெரும்பரப்பென ஆக்கும் சாந்தீபனியின் சமன்வயக் கொள்கையை அவையனைத்தையும் கொண்டு அவரே நிறுவினார். சாந்தீபனி மெய்மரபின் முதன்மைப் பேரறிஞர் அவரே” என்றார் பிருகதர். “ஆனால் அவர் நாளும் துயர்கொண்டிருந்தார். ஒருநாள் அதை அவரது அணுக்கமாணவனாகிய எனக்கு சொன்னார். இங்கு வந்து அவர் காலடியில் அமர்ந்து மெய்ச்சொல் கற்ற ஒவ்வொருவரும் ஒன்றைத்தேடி வந்திருந்தனர். பலவற்றை அவர்களால் ஏற்கமுடியவில்லை. அவர்கள் ஒருவர் என்பதனால் அவர்களுக்குரிய மெய்மையும் ஒன்றே என அவர்கள் எண்ணினர். அதற்குச் செல்லும் வழியும் ஒன்றே என நம்பினர்.

அவர்களுக்கு அவர் பன்முகம் கொண்ட மெய்மையை கற்பித்தார். அவர்கள் அதில் நெஞ்சளைந்து சலித்து ஒன்றைமட்டும் எடுத்துக்கொண்டனர். அதை ஏற்று பிறவற்றை மறுத்தனர். ஏற்பது உறுதியாக அமையவேண்டும் என்பதனால் மறுப்பை பன்மடங்கு வலுவாக்கிக்கொண்டனர். மறுப்பே அவர்களின் ஏற்பை நிலைநிறுத்தியது. நாளடைவில் அவர்களின் தத்துவமென்பது வலுவான மறுப்புகளின் தொகை என்றாயிற்று. அரசே, நீங்களே அதை காணலாம், அனைத்து தத்துவமாணவர்களும் மறுப்புகளால் ஆனவர்கள். எனவே எதிர்நிலையே அவர்களின் ஆளுமை.

ஒன்றின் எதிர்நிலையும் அந்நிலை அளவே உண்மையானது என்று சாந்தீபனி கல்விநிலை சொன்னது. எதிர்நிலையை பொறுத்துக்கொள்ளவேண்டும் என சிலர் அதை புரிந்துகொண்டனர். எதிர்நிலையைக் கொண்டு தன்னிலையை வலிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என பிறர் விளங்கிக்கொண்டனர். எதிர்நிலையால் நிரப்பப்படும் ஒன்றில்லையேல் தன்னிலை வலுவற்றதாகிவிடும் என்று அவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை

அதைவிட கருத்துக்களின் லீலை என்பதை அவர்களால் உள்வாங்கிக்கொள்ளவே முடியவில்லை. கருத்துக்கள் என்பவை அம்புகள் என்றே அவர்களின் உள்ளத்தில் பதிவாகியிருக்கின்றன. அவை வில்நிற்பதற்கு முன்னரே இலக்கமைந்துவிட்டவை, வெல்பவையும் தோற்பவையும் என அவை இருபாற்பட்டவை என்று அவர்களின் உள்ளம் எண்ணுகிறது. விளையாடுதல் என்றால் இலக்கை விட்டுவிடுதல் என்றே அதில் பொருள் அமைகிறது. வானிலாடும் பறவைக்குலங்கள் போன்றவை அவை என அவர் சொன்னார். அவர்கள் அப்பறவைகளில் எது வல்லூறு என்றே நோக்கினர்.

பலநூறுமுறை தோற்றபின் முதலாசிரியர் சொன்னார் ‘ஒருவேளை இது மானுடருக்குப் புரியும் மெய்யறிதலே அல்ல என்றிருக்கலாம். இது தெய்வங்களுக்குரியது என்றிருக்கலாம். என் மெய்யறிதல் என்னுடன் மண்புகலாம். அவ்வாறென்றால் அதுவே ஆகுக!’ பெருமூச்சுடன் அவர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார் ‘பயனும் வெற்றியும் நாடும் வரை கருத்துக்களை எவரும் அறிவதேயில்லை

அரசே ,சோர்ந்துபோய் அவர் பலநாட்கள் சொல்லவைக்கு வருவதையே தவிர்த்தார். இருண்ட அறைக்குள் நாட்கணக்கில்  ஊழ்கத்திலாழ்ந்து தன்சொற்களை தானே அளைந்தபடி அமர்ந்திருப்பதையே விரும்பினார். தன் ஒளியை முற்றிலும் தானே விழுங்கிக்கொண்ட கரிய வைரம் போல் அவர் இருப்பதாக அன்று ஒரு கவிஞன் எழுதினான்.”

அப்போதுதான் அவர் ஒரு கனவுகண்டார். ஒருநாள் காலை தன் அறைக்குள் துயிலெழுந்து நான் அரணிக்கட்டை கடைந்துகொண்டிருந்த அறைக்கு வந்தபோது முகம் மலர்ந்து பரபரப்பு கொண்டிருந்தார். என்னிடம் ‘நான் அவனைக் கண்டேன்’ என்றார். ‘யாரை?’ என்றேன். ‘இளையவனை. என் சொல்லை வளர்த்தெடுக்கும் மாணவனை’ என்றார். ‘எங்கு?’ என்றேன். ‘என் கனவில்… சற்றுமுன். அவன் குழந்தை விழிகளும் விளையாட்டுச்சிரிப்பும் கொண்டிருந்தான். லீலை என என் முதலாசிரியர் சொன்னதை அவனால் மட்டுமே தெளிவுறப் புரிந்துகொள்ள முடியும்’ என்றார்.

நான் குழப்பத்துடன் ‘ஆசிரியரே, அவர் எங்கிருக்கிறார்?’ என்று கேட்டேன். ‘தெற்கே, உஜ்ஜயினியின் குருநிலையில் அவனைப் பார்ப்பதாகத்தான் என் கனவு சொன்னது. நான் அங்கே செல்லவிரும்புகிறேன்’ என்றார். ‘அங்கு யாதவர்களின் மைந்தர் மட்டுமே வருகிறார்கள் என்று அறிந்தேன்’ என்றேன். ‘நன்று. அவன் யாதவன் அல்ல என்று எப்படி எண்ணுகிறாய்?’ என்றார். இங்கிருந்து கிளம்பி அங்கு சென்றோம். அங்கு ஆசிரியர் ஒவ்வொரு மைந்தனிலும் அவனை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். ‘கனவில் நான் கண்டது முகமல்ல, கண்கள் மட்டுமே’ என்றார். ஒருநாள் தன் மூத்தவனாகிய பலராமனுடன் வந்த இளையவனைக் கண்டதுமே சொல்லிவிட்டார் ‘இவனேதான்’ என்று.

”வெறும் நான்காண்டுகாலம்தான் அவர்கள் அங்கே கற்றனர்” என்றார் பிருகதர். “வரும்போது அவர்களுக்கு செம்மொழியின் எழுத்துக்கள்கூடத் தெரிந்திருக்கவில்லை. அவன் எங்கோ கோகுலத்தில் கன்றோட்டிக் கொண்டிருந்தான். எப்போதும் குழலிசைத்து தனிமையிலிருக்க விழைந்தான். அவன் மூத்தவனோ எதற்கும் இருப்பதிலேயே பெரிய தடியை எடுத்து அடிக்க முனையும் பெருஞ்சினம் கொண்டிருந்தான். ஆசிரியர் அவர்களைச் சுட்டியதும் நான் வியந்தேன். நானும் அவர்களை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தேன். ஓரிரு நாட்களிலேயே ஒன்று தெரிந்துகொண்டேன், இளையவன் நிகரற்ற அறிவுகொண்டவன். எதையும் பிறிதொருமுறை சொல்லவேண்டியதில்லை அவனுக்கு. எதிலும் தொடக்கத்துக்கு அப்பால் கற்பிக்கவேண்டியதில்லை.”

அவனுக்கு எழுத்தறிவித்தவன் நான். ஆசிரியரின் ஆணைக்கேற்ப ஒவ்வொருநாளும் அவனை எழுப்பி நீராடக் கூட்டிச்செல்வேன். நானே என் கைகளால் வேம்பும் மஞ்சளும் பயிறும் கலந்த பொடியால் அவனை நீராட்டுவேன். அவன் உடலில் இருந்து சாணிமணத்தை அகற்றியவன் நான். மொழித்தூய்மை வரும்பொருட்டு நாளெல்லாம் அவனுக்கு சொற்களை பாடக் கற்றுக்கொடுத்தேன். ஆசிரியர் அவனுக்கென்றே அமர்ந்து வேதம் பயிற்றுவித்தார். முதிர்ந்த மாணவர்கள்கூட அமரமுடியாத மெய்யவைகளில் அவன் எழுந்து சொல்லாடினான். எவரும் அவனுக்கு நிகர்நின்று பேசமுடிந்ததில்லை. சொல்லில் இருந்து அவன் செல்லும் தொலைவை நூறாண்டுகாலம் வேதப்பெருங்காடுகளில் சொற்தவம் செய்த தொல்முனிவரே சென்றுள்ளனர் என்று ஆசிரியர் சொல்வார்.

மலர்ந்த முகமும் கனிந்த குரலும் இன்றி ஆசிரியர் அவனிடம் பேசியதில்லை. ‘வேதச்சொற்களில் அவன் தீர்க்கதமஸ். வேத நூலமைவில் அவன் வியாசன். வேதமெய்மையில் அவன் யாக்ஞவல்கியன். வேதநுண்மையில் அவன் தத்தாத்ரேயன்’ என்று அவர் சொல்வார். கல்விச்சாலைகளிலேயே அவனை நோக்கி ‘நீ எதையும் கற்றுக்கொள்ளவில்லை, மைந்தா. உனக்கு நான் அனைத்தையும் நினைவூட்டுகிறேன்’ என்பார். ஒவ்வொரு முறையும் அவனிடம் பேசும்போது அவர் தன்னுள் கைகூப்பிக்கொள்கிறார் என நான் உணர்வதுண்டு

அவன் கற்றமுறையை இப்போதும் நினைவுகூர்கிறேன். பிறர் வேதங்களை கைகூப்பியபடி அணுகினர். நம் அகலில் சுடரென அமைகையிலும் எரியின் கட்டற்ற பேராற்றலை நாம் அறிவோம். அவனோ அன்னை முந்தானையைப் பற்றி இழுக்கும் மைந்தன் என அதை அணுகினான். ‘முதல்முறையாக நான் காண்கிறேன், மெய்யறிவுடன் விளையாட வந்த ஒருவனை’ என ஆசிரியர் பேருவகையுடன் சொன்னார். சொல் மாறாமல், சந்தம் பிழைக்காமல் வேதமோத வேண்டுமென்பதே நெறி. வேதத்தை அது பிழைக்கலாகாது என்னும் அச்சமில்லாமல் ஓத எவராலும் இயல்வதில்லை. வேதத்தை இருமுனையும் கூர்கொண்ட வாளை என கையிலேந்துகிறோம். அச்சமே வேதம் அளிக்கும் உணர்வு.

அவ்வச்சம் அழியும்போது கால்நடைகளின் கால்களில் வழி என வேதம் மாறிவிட்டிருக்கும், அதை ஓதுபவன் அதை அறியாமலாவான். அவன் வேதங்களை விளையாட்டுச் சொற்களாக்கினான். வேதச்சொற்களைக் கொண்டு காட்டில் தோழருடன் வட்டாடினான். பசுக்களை அழைக்கும் ஒலியாக அதை மாற்றிக்கொண்டான். பூசல்களில் தோழரை வசைபாடவும், கேலிசெய்யவும்கூட வேதமே உருமாறி அவன் நாவிலெழுந்தது. அதைப்பற்றி ஆசிரியரிடம் முறையிட்டவர்களிடம் ஆசிரியர் சொன்னார் ‘கங்கையை நீ எதற்கெல்லாம் பயன்படுத்துகிறாய் என்று பார். அன்னை தன் மைந்தனுக்கு மலம்கழுவி விடமாட்டாளா என்ன?’ அவர் அவனை ஏனோ தலைமேல் தூக்கி வைத்துக்கொள்கிறார் என்றே அவர்கள் எண்ணினர். தன் மாயப்பேச்சுக்களால் அவரை அவன் கவர்ந்துவிட்டான் என்றனர்.

உஜ்ஜயினியின் சாந்தீபனிக் கல்விநிலையில் அவனை பிற மாணவர் அனைவருமே வெறுத்தனர். சுதாமன் என்னும் ஏழைப்பிராமணன் அன்றி அவனுக்கு நண்பர்களே இருக்கவில்லை. அவனை ஏன் வெறுக்கிறீர்கள் என்று நான் மாணவர்களிடம் கேட்டிருக்கிறேன். ‘ஆசிரியரே, மறுகணம் என்ன செய்வான் என முற்றிலும் அறிந்துகொள்ள முடியாத ஒருவனிடம் எப்படி நண்பராக இருக்கமுடியும்?’ என்று சொன்னார்கள். கல்விநிலையிலிருந்தே ஒருநாள் கிளம்பிச்சென்றார்கள். கம்சனைக் கொன்று மதுராவை அவர்களிருவரும் வென்றதாக அறிந்தோம்.

அவன் தன் தாய்மாமனைக் கொன்றது எங்கள் கல்விநிலை முழுக்க பலமாதங்கள் கொந்தளிப்பை உருவாக்கியது. தாய்மாமன் யாதவர்களுக்கு தந்தைக்கு நிகரானவர். அவனை சாந்தீபனி குருநிலை மறுத்துரைக்கவேண்டும் என்று பல யாதவர்குழுக்கள் கோரினர். அவன் அரசை கைப்பற்றியமை மகதத்தை சினம்கொள்ளச் செய்துள்ளது என்றும், சாந்தீபனிக் கல்விநிலைகள் மீது மகதச்சார்புள்ள ஷத்ரியர் முனியக்கூடும் என்றும் சொல்லப்பட்டது.

நானேகூட ஆசிரியரிடம் ‘நாம் நம்மை இளைய யாதவனுடன் முழுமையாக அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டியதில்லை, ஆசிரியரே’ என்று சொன்னேன். ஏனென்றால் நான் ஷத்ரியரின் சினத்தை அஞ்சினேன். அதைவிட அவன் கட்டின்மையை அஞ்சினேன் ‘இது அவனுடைய கல்விநிலை. இங்கு முதன்மைமாணவன் அவனே. மாற்று எண்ணம் உள்ளவர்கள் இதிலிருந்து விலகலாம்’ என்றார். நான் தலைகுனிந்து விலகிச்சென்றேன்.

உண்மையில் நான்கூட அவன்மேல் மயங்கிக்கிடந்த காலம் அது. அவன் பேரறிவுத்திறம், அச்சுமை சற்றுமில்லாத இளமைக்களியாட்டம் இரண்டும் மாறிமாறி என்னை அலைக்கழித்தன. புலன்கடந்த யோகியாகவும் உலகின்பங்களில் திளைப்பவனாகவும் ஒருவன் எப்படி ஒரேநாளில் தோற்றமளிக்கமுடியுமென்ற விந்தையை என் எளிய சித்தம் கடந்ததே இல்லை. அவனிடம் பூசலிடுவதுகூட அவனுடன் களியாடுவதன் ஒரு பகுதியே என்றாகியது.

அவன் சொன்னால் என் உள்ளம் மிக எளிதில் வேதப்பொருள் தொட்டறிந்தது. அத்தகைய நானே அவனை சினந்து வெறுக்கும் தருணமொன்று வந்தது. நான் உஜ்ஜயினி சாந்தீபனி குருநிலைக்கு நீண்டகாலத்துக்குப்பின் சென்றிருந்தேன். அன்று அவன் ஆசிரியரை பார்க்க வந்தான். குருநிலை விட்டுச்சென்று துவாரகையின் அரசனாக மணிமுடிசூடியபின் முதல்முறையாக அங்கே வருகிறான் என்றனர். அவனைப் பார்க்கும் ஆவலில் நானும் எரிந்துகொண்டிருந்தேன்.

அவன் வருவதையொட்டி குருநிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு செய்யும் மரபு எங்கள் வேதக்கல்விநிலைகளில் இல்லை என்பதை அறிந்திருப்பீர்கள். ஆகவே பலர் அதையொட்டி சினம் கொண்டிருந்தனர். ஆனால் நான் உளமகிழ்ந்தேன். மாவிலைத் தோரணங்களையும் மலர்மாலைகளையும் சுற்றிச்சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் தன் கொடியுடனும் அணிப்படையுடனும் அரசமுடிசூடி வருவான் என நான் எதிர்பார்த்தேன். தொலைவில் அரசமுரசு ஒலிக்கக் கேட்டதும் முகப்புக்கட்டடத்தின் உப்பரிகைமேல் ஏறி நின்றுகொண்டேன். என் உள்ளம் துள்ளி விழுந்துகொண்டிருந்தது.

கருடக்கொடி தொலைவில் தெரிந்தது. தனிப்புரவியில் ஒருவன் அக்கொடியுடன் புழுதிச்சிறகு சூடியவனாக வந்தான். புழுதிக்கு அப்பால் நான்கு புரவிகள் தெரிந்தன. ஒன்றில் அவன் கரிய உடலை நான் கண்டேன். எளிய வெண்ணிற ஆடை. அணித்தோற்றமென ஏதுமில்லை. பிறிதொன்றில் பலராமன் அமர்ந்திருந்தான். சற்று அப்பால் வந்த இருபுரவிகளில் ஒன்றில் அக்ரூரரும் மற்றொன்றில் கிருதவர்மனும் இருந்தனர். நான் கைகளை வீசி மகிழ்ச்சியொலி எழுப்பிக்கொண்டே இருந்தேன். ஆனால் அவர்கள் என்னைப் பார்க்காமல் கடந்து உள்ளே சென்றனர்.

SOLVALAR_KAADU_EPI_36

அவன் அவ்வண்ணம் எளிய தோற்றத்தில் வந்தது என்னை ஏமாற்றம் கொள்ளச்செய்தது. ஆனால் அங்கிருந்த பிற யாதவர் அதில் மகிழ்ச்சி அடைந்தனர். சேதிநாட்டு யாதவன் ஒருவன்  “நோக்குக, அவன் இன்னமும் கன்றுமேய்ப்பவனே. அவன் தந்தை மதுராவில் இன்னும் உறுதியாக அரியணை அமரவில்லை. ஜராசந்தர் எண்ணுவதுவரை மட்டுமே அது நீடிக்கும். மகதப்படைகளை அஞ்சி பாலைநிலத்தைக் கடந்துசென்று கடற்பாறைகளுக்கு மேல் ஒரு சிறு ஊரை அமைத்து அங்கே ஒளிந்திருக்கிறான். சிந்துவில் செல்லும் படகுகளை கொள்ளையடிக்கிறான். கூர்ஜரன் சினப்பதுவரை அவன் ஆடல் நீடிக்கும்’ என்றான்.

அவன் முழு அரசனாகவில்லை என்று முன்னரே பலர் சொல்லி கேட்டிருந்தேன். அவனுக்கு அஸ்தினபுரியில் அவன் அத்தையின் ஆதரவு இருக்கக்கூடும் என்ற ஐயத்தாலேயே அவனை ஷத்ரிய மன்னர் விட்டுவைத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். எனக்கு அவ்வரசியல்கள் புரியவில்லை. ஆனால் அவனையே எண்ணிக்கொண்டிருந்தேன். அவன் தோற்கக்கூடுமென என்னால் எண்ணமுடியவில்லை.

நான் குருநிலைக்குச் சென்றேன். அப்போது அவன் மட்டுமே ஆசிரியருடன் இருந்தான். அவன் தமையனும் பிற யாதவரும் வெளிக்கூடத்தில் இருந்தனர். அவர்கள் என்னைக்கண்டு எழுந்து தலைவணங்கினர். அவர்களின் முகங்கள் கவலையுடன் இருந்ததைக் கண்டேன். அவர்கள் உடலெங்கும் புழுதி வியர்வையில் ஊறி வழிந்தது.  பலராமனிடம் நான் ‘ஏன் புழுதியுடனேயே வந்தீர்கள்? நீராடி உடைமாற்றிவிட்டு ஆசிரியரை சந்திக்கலாமே?’ என்றேன். அவன் ‘இளையோனின் விருப்பம்’ என்றான். உள்ளே செல்லலாமா என அறியாமல் நான் நின்றேன்.

வெளியே ஏதோ ஒலி கேட்டது. நான் நோக்கியபோது இளைய யாதவன் மறுவாயில் வழியாக வெளியேறி புரவியில் ஏறிக்கொள்வதை கண்டேன். ‘இளையோன் கிளம்பிவிட்டான்’ என்று பலராமன் கூவியபடி வெளியே ஓடினான். பிறரும் அவனுடன் சேர்ந்து வெளியே ஓடினர். அவர்கள் முற்றத்தில் நின்ற புரவிகளில் ஏறிக்கொண்டனர். நான் வெளியே சென்று இளைய யாதவனை நோக்கியபோது அவன் பின்பக்கத்தை மட்டுமே கண்டேன். அவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். குருநிலையின் மாணவர்கள் கூடி அவர்கள் செல்வதை பார்த்தனர். எவருக்கும் ஏதும் புரியவில்லை.

நான் ஆசிரியரின் அறைக்குள் சென்றேன். அவர் புலித்தோலில் கைகளைக் கட்டியபடி அமர்ந்திருந்தார். அருகே சென்று பணிந்தேன். அவரே ஏதேனும் சொல்வார் என எதிர்பார்த்தேன். அவர் துயர்கொண்டவராக தலைகுனிந்து அமர்ந்திருந்தார். நான் மெல்ல ‘என்ன நடந்தது? இளையோனைப் பார்க்க நானும் ஆவல்கொண்டிருந்தேன்’ என்றேன்.

ஆசிரியர் ‘நான் அவனிடம் ஒரு ஆசிரியக் காணிக்கையை கோரியிருந்தேன். அதை அளித்துவிட்டுச் செல்கிறான்’ என்றார். நான் புரியாமல் ‘அவன் ஏதும் கொண்டுவரவில்லையே?’ என்றேன். ‘அதை செய்தியாகக் கொண்டுவந்து அளித்தான்’ என்றார். ‘ஆசிரியரே, அதன்பொருட்டு நீங்கள் ஏன் துயர்கொள்ளவேண்டும்?’ என்றேன். அவர் பெருமூச்சுவிட்டபின் எழவிரும்புபவராக கைநீட்டினார்.

நான் அவரை தூக்கினேன். என் தோள்பற்றி நின்றபோது அவர் தள்ளாடுவதை உணர்ந்தேன். ‘ஆசிரியரே, உங்களுக்கு என்ன ஆயிற்று?’ என்றேன். ‘என் மைந்தன் சிலநாட்களில் இங்கு வருவான். அவனே இனி இக்குருநிலையை தலைமைதாங்கி நடத்தட்டும்’ என்றார். நான் ‘ஆம், அது அனைவரும் எதிர்பார்த்ததுதானே?’ என்றேன். ‘நான் நாளை காலையே கிளம்பிச்செல்கிறேன்’ என்று அவர் எங்கோ நோக்கியபடி சொன்னார். நான் திடுக்கிட்டு ‘ஏன்?’ என்றேன். ‘எங்கு செல்கிறீர்கள், ஆசிரியரே?’ என்று மேலும் பதறிக் கூவினேன். ‘நான் கிளம்பியாகவேண்டும். இனி இங்கிருந்து சொல்லாடுவது கேலிக்குரியது’ என்றார்

அக்குரலில் இருந்த தளர்வை ஒருநாளும் மறக்கமுடியாது என்னால். ‘நானும் வருகிறேன், ஆசிரியரே’ என்றேன். ‘இல்லை, இப்பயணத்தை நான் தனியாகவே நிகழ்த்தவேண்டும். மீண்டும் திரும்பிவரப்போவதில்லை. எய்தினேன் என்றால் நன்று. இல்லையேல் அப்படியே உதிர்கிறேன் என்றுபொருள். அதுவே ஊழ்’ என்றார். நான் துயரத்துடன் ‘வேண்டாம், ஆசிரியரே. தாங்கள் எழுப்பிய அமைப்பு இது. நாங்கள் உங்கள் மைந்தர். எங்களை கைவிட்டுவிட்டுச் செல்லவேண்டாம். அது எவ்வகையிலும் முறையல்ல. நாங்கள் ஏதிலிகளாகிவிடுவோம்’ என்றேன். சொல்லும்போதே அழத்தொடங்கினேன்.”

ஆனால் அவர் உறுதியுடனிருந்தார். மேற்கொண்டு ஒரு சொல்லும் உரைக்கவில்லை. ‘என்ன நிகழ்ந்தது?’ என்று நான் கேட்டேன். அவர் மறுமொழி சொல்லவுமில்லை. அன்றிரவு நான் ஆசிரியரின் குடிலுக்கு வெளியே அமர்ந்திருந்தேன். அவர் என்னை அழைத்து ஏதேனும் சொல்வார் என எண்ணி காத்திருந்தேன். அவர் இரவெல்லாம் துயிலாமல் குடிலுக்குள் இருளில் அமர்ந்திருந்தார். இரவெல்லாம் அவர் மூச்சொலியை நான் கேட்டேன்.

அரைத்துயிலில் அவரைத் தொடர்ந்து எங்கோ சென்றுகொண்டிருந்தேன் அவர் எழுந்த ஒலிகேட்டு நான் எழுந்தேன். வெள்ளி முளைத்திருந்தது அப்போது. நான் வாயிலில் சென்று நின்றேன். அவர் கையில் ஒரு கோலுடன் வெளியே வந்தார். என்னைப் பார்க்கவில்லை என்பதுபோல கடந்து சென்று இருளுக்குள் நடந்தார். அவரைத் தொடரவேண்டுமென என் கால் தவித்தது. ஆனால் நான் அங்கேயே நின்றிருந்தேன்.

 “அவர் சென்றது ஏன் என்று ஓரிரு மாதங்களிலேயே தெரியவந்தது” என்று சினத்துடன் பிருகதர் சொன்னார். “சாந்தீபனி குருநிலையின் தலைமாணாக்கனாகிய இளைய யாதவன் சென்று துவைத குருநிலையில் மாணவனாகச் சேர்ந்த செய்தியை காடே பேசிக்கொண்டது. அங்கிருந்து அவன் சாந்தோக்ய குருநிலைக்குச் சென்றான். குருநிலைகள்தோறும் அவன் தாவிக்கொண்டிருந்தான். வேதக்குரங்கு என அவனை எள்ளிநகையாடினர் வைதிகர். அதை வளர்த்த குறவனின் காதைக் கடித்துவிட்டு கிளைக்குத் தாவியது அது என்றனர்.”

“ஆம், உண்மையில் நடந்தது அதுவே. சாந்தீபனி குருநிலையின் மெய்மையை முழுமையாக மறுத்துரைத்தான். ஆசிரியரின் முகத்தை நோக்கி அதை சொன்னான் என நான் உய்த்துணர்ந்தேன். அவர் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையையே பொருளில்லாததாக ஆக்கினான். அவர் நின்றிருந்த நிலம் புகையென ஆகியது. அவர் அனைத்தையும் உதறிவிட்டுச் சென்றது அதனால்தான்” என்றார் பிருகதர்.

“அன்று அவனை நான் வெறுக்கத் தொடங்கினேன். வேம்பென நஞ்சென அவனை எண்ணிக்கொள்கிறேன் இன்று.” அவர் மூச்சிரைத்தார். பின்பு பற்களைக் கடித்தபடி பாறைமேல் ஏறிச்சென்று தன் மரவுரியை எடுத்து அணிந்தார். மேலாடையை படீர் படீர் என உதறினார். சுழற்றி தன்மேல் அதை அணிந்துகொண்டு தலைமயிரை கைகளால் தட்டி நீரைத்தெறிக்கவிட்டார்.

நீரில் தருமன் அவரையே நோக்கியபடி நின்றார். “அவன் அதன்பின் இங்கு வந்ததே இல்லை. நானும் அவனை சந்தித்ததில்லை. அவன் வெற்றிகளை அறிந்துகொண்டே இருந்தேன். துவாரகை பாரதத்தின் முதன்மைப்பெருநகராக வளர்ந்ததையும் சூதர்வழி கேட்டேன். அவன் குடி அவனை தெய்வமென வழிபடுகிறது என்றார்கள். வேதம் புதிது செய்யவந்த வித்தகன் என அவனை சில இளவைதிகர் போற்றுவதையும் கேட்டேன்.” வெறுப்பில் முகம் சுளிக்க “இப்போது இங்கு வரப்போகிறான் என்று செய்தி வந்துள்ளது. அவனைச் சந்திக்கும் நல்லூழ் எனக்கு அமைகிறது. நன்று!” என்றார்.

அவர் விழிகளின் ஒளியையே நோக்கிக்கொண்டிருந்தார் தருமன். வெறுப்பு உருவாக்கும் ஆற்றலை எண்ணிக்கொண்டார். எளிய மனிதர் இவர். இவருள் ஊறித் தேங்கிய வெறுப்பின் விசையால் பல மடங்கு பேருருக் கொண்டிருக்கிறார். “இங்கு வருவதாக அவன் எழுதிய ஓலையை வாசித்தேன். அதில் ஒரு வரி… என்னை கொந்தளிக்க வைத்தது அது. குருவசை புரிந்தமையின் விளைவை அவன் அறிகிறானாம் இன்று. ஆகவே இங்கு குருவை எண்ணி ஒரு விளக்கேற்றிவிட்டுச் செல்ல விழைகிறானாம்.”

“மூடன்! மாமூடன்!” என அவர் கூவினார். “தன் ஆசிரியரை அவன் வசைபாடவில்லை, கொன்றான். ஆம், கொன்றான். எங்கள் ஆசிரியர் சென்ற வழிகூட எவருக்கும் தெரியாது. காட்டுப்பறவைபோல எங்கோ உதிர்ந்திருப்பார். இவன் இத்தனை காலம் கழித்துத்தான் செய்தவற்றை உணர்கிறானா?” மேலாடையை தோளிலிட்டுவிட்டு திரும்பி தருமனிடம் “அவனிடம் சொல்லுங்கள், நான் இங்கு இருக்கிறேன் என்று! அவன் முகத்தில் நான் காறி உமிழ்ந்தேன் என்று! நாற்பதாண்டுகளாக நான் என் குருவின் கால்களையே எண்ணிக் கொண்டிருப்பவன். என் முகத்தை ஏறிட்டு நோக்கும் தகுதி அவனுக்கில்லை என்று அவனிடம் சொல்லுங்கள்!” என்றார்.

அவர் திரும்பி நடந்து செல்வதை தருமன் நோக்கிக்கொண்டிருந்தார். தளர்ந்த காலடிகளுடன் நீரில் நின்றமையால் அதன் இழுவிசையை அறிந்தார். மும்முறை மூழ்கி எழுந்து கரைவந்து தலைதுவட்டிக்கொண்டார். தன் உடல் எடைகொண்டு கால்களை அழுத்துவதாக உணர்ந்தார்.