சொல்வளர்காடு - 29

ஆறாம் காடு: பிருஹதாரண்யகம்

[ 1 ]

வேதம் செழித்த காடுகளில் அதுவே பெரிது. நெடுங்காலம் அதற்குப் பெயரே இல்லாமலிருந்தது, ஏனென்றால் அதை மானுடர் பார்த்ததே இல்லை. அங்கே முதன்முதலாகச் சென்று குடியேறியவர் கௌஷீதக மரபிலிருந்து விலகிச்சென்ற சூரியர் என்னும் வேதமுனிவர். கௌஷீதகத்தில் இருபதாண்டுகாலம் வேதம் பயின்று வேள்வியை அறிந்து முதிர்ந்த சூரியர் ஒருநாள் அம்மரபின் முதன்மை ஆசிரியர் அஸ்வாலாயனரிடம் “ஆசிரியரே, இவ்வேதங்கள் அனைவருக்கும் உரியவையா?” என்றார். “ஆம், வேதங்கள் மானுடத்திற்குரியவை” என்றார் அஸ்வாலாயனர்.

“நான் மானுடன் அல்ல” என்று சூரியர் சொன்னார்.  “அன்னத்தாலான இந்தக் கூடு மானுடத்தில் இருந்து பெறப்பட்டது. இதற்குள் வாழ்வது எங்குமுள பிறிதொன்று. நான் வேதமோதும்போது அது அச்சொற்களுக்குச் செவிகொடுக்காமல் அகன்று தனித்து நிற்பதை காண்கிறேன். நான் தொட்டு எழுவதை மட்டுமே நான் காண்கிறேன். என் உலகு நான் படைப்பதே. எனவே எனக்குரிய வேதம் என ஒன்றுண்டு, அதை என் நா இன்னமும் கண்டுகொள்ளவில்லை என்று உணர்கிறேன்.”

அஸ்வாலாயனர் சினந்து “இது வெறும் ஆணவம் மட்டுமே. உன்னை நீ பிறிதில்லா ஒன்று என உயரத்தில் நிறுத்திக்கொள்கிறாய்” என்றார். “நான் உயரத்தில் நிறுத்திக்கொள்ளவில்லை, ஆசிரியரே. ஆனால் நான் பிறிதில்லாத ஒன்றே” என்றார் சூரியர். அஸ்வாலாயனர் “மைந்தா, நான் சொல்வதை கேள்.  நீ அறியக்கூடுவது உன்னை மட்டுமே. நீ உள்நோக்கி அறிந்தமையாலேயே நீ உனக்கு அணுக்கமானவன். நீ அறிந்தமையால்தான் நீ பிறிதில்லாதவன் என உணர்கிறாய். இங்குள்ள புல்லும் புழுவும் உனக்கு முற்றிலும் நிகரே” என்றார்.

“ஆம், அவை எனக்கு முற்றிலும் நிகர் என்றும் உணர்கிறேன். ஆனால் அவை மகிழும் வேதம் அல்ல என்னுடையது. ஆசிரியரே, பிறிதில்லாத ஒன்று மேம்பட்டது என்று ஏன் சொல்லவேண்டும்? இது பிறஎதுவும் போன்றது அல்ல. இங்குள்ள ஒவ்வொன்றையும்போலவே” என்றார் சூரியர். “ஒவ்வொருவருக்கும் ஒரு வேதம் என்பது எப்படி இருக்கமுடியும்?” என்று ஆசிரியர் கேட்டார். “ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் இருக்கமுடியும்போது வேதம் ஏன் இருக்கமுடியாது?” என்றார் மாணவர். அச்சொல்லாடல் எழுந்து அனல்கொண்டு மெல்ல தணிந்தது.

“இளையோனே, இவ்வெண்ணத்தை மட்டும் சூழ்ந்து நோக்கியபடி மேலும் ஓராண்டுகாலம் இங்கிரு. உன்னுள் இருந்து நான் வேறு என உணர்த்தும் அது நானும் அதுவே என உணர்வதற்கு ஒரு வாய்ப்பு கொடு. ஓராண்டு நீடிக்காத எச்சிந்தனையும் வெறும் உணர்ச்சி மட்டுமே. அதன்பின்னரும் அவ்வண்ணமே தோன்றும் என்றால் நீ உன் சொல்லைத்தேடி கிளம்பலாம்” என்றார் அஸ்வாலயனர்.

அதை தலைவணங்கி ஏற்ற சூரியர் ஒராண்டுகாலம் கழித்து வந்து ஆசிரியரை வணங்கி சொன்னார் “இப்போது விளாம்பழம் முற்றிலும் கனிந்துவிட்டது.” ஆசிரியர் தலையசைத்து “ஆம், தொடங்கப்படுவது எவ்வண்ணமோ முடியும். நன்று சூழ்க!” என்றார். ஆசிரியரின் கால்களைத் தொட்டுவணங்கி “வாழ்த்துக!” என்றார் மாணவர். “நான் கற்பித்தவை வழித்துணையாகுக, கைவிளக்காகுக!” என்றார் ஆசிரியர்.

கௌஷீதகத்தின் சோலையில் இருந்து கிளம்பிய சூரியர் பன்னிரு நாட்கள் இளங்காடுகளினூடாக பயணம் செய்தார். எங்கும் மானுடரே விழிகளுக்கு தென்பட்டனர். எவரும் அறியாத ஓர் இடத்தில் தன்னுள் அமைந்த அது மட்டுமே தன்னை உணரும்தருணம் வேண்டுமென அவர் விழைந்தார்.  முற்றிலும் தனித்திருக்கையிலேயே அதன் குரலை கேட்கமுடியும் என எண்ணினார். ஒவ்வொரு காட்டையும் அடைந்து ‘இதுவல்ல! இதுவல்ல!’ எனத் தவிர்த்து கடந்து சென்றார்.

பல காடுகளில் வேதநிலைகள் இருந்தன. பலவற்றில் முனிவர்கள் தவம்செய்தனர். அனைத்துக் காடுகளிலும் மலைக்குடிகள் வாழ்ந்தனர். மானுடரில்லாக் காடு அவர் கண்களுக்கு தெரியவேயில்லை. “மானுடரில்லா இடமென்று ஒன்றில்லை, முனிவரே. ஏனென்றால் சூரியன் மானுட விழிகளை தீட்டுகிறது. மானுட விழிகளால் இப்புடவிச்சித்திரம் தீட்டப்படுகிறது” என்றார் சௌனகக் கல்விநிலையின் ஆசிரியர். “மானுடர் அறியாத நிலம் என ஒன்றுண்டு என்றால் அது உருவாகவில்லை என்றே பொருள்.” சூரியர் “ஆம், நான் உருவாக்கி எடுக்கும் காடு எனக்குத் தேவை” என்றார்.

அந்நாளில் அவரைச் சந்தித்த மலைமகன் ஒருவனிடம் “மானுடர் அறியாத காடு எங்கேனும் உண்டா?” என்று கேட்டார். “முடியில் பேன் போல காடெங்கும் மலைமக்கள் வாழ்வார்கள். அவர்களில்லாத காடு எங்குமில்லை” என்றான் அவன். “இல்லை, இத்தேடல் எனக்குள் எழுந்தமையாலேயே எங்கோ ஒரு பெருங்காடு அவ்வண்ணம் எனக்காகக் காத்திருக்கிறது என்று உணர்கிறேன்” என்றார் சூரியர். அவன் எண்ணி பின் தெளிந்து “என்னுடன் வந்து எங்கள் முதுபூசகரை பாருங்கள். அவருக்குள் ஆயிரம் மலைத்தெய்வங்கள் குடிகொள்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்று அதை அறிந்திருக்கக்கூடும்” என்றான்.

மலைமகனுடன் சென்று அவர்களின் குன்றுசூழ் குறுங்குடியை அடைந்து அங்கே முதியமரப்பொந்தில் ஏழு தெய்வக்கற்களுடன் தனித்துவாழ்ந்த  முதுபூசகர் அருகே அமர்ந்து உசாவினார். அவருக்குள் வாழ்ந்த ஆயிரம் மலைத்தெய்வங்களில் ஒன்று பெருங்கூச்சலுடனும் நடுக்குடனும்  எழுந்து விடைசொன்னது. “வடக்காக செல்க! எங்கிருந்து வெண்ணிறமான நீர் வழியும் ஓடைகள் வருகின்றனவோ அப்பெரும்காடு இன்னமும் மானுடரால் கண்டடையப்படவில்லை. ஆகவே அதற்கு மானுட மொழியில் பெயருமில்லை. சூரியன் மட்டுமே அறிந்த அந்நிலத்தில் மலைத்தெய்வங்கள் மட்டுமே வாழ்கின்றன. அவற்றை நிறைவுசெய்தவன் அங்கே வாழமுடியும்…”

வணங்கி விடைபெற்று சூரியர் கிளம்பிச்சென்றார். வெண்ணிறமான ஓடை என்றால் அதில் சுண்ணமும் கந்தகமும் கலந்திருக்கக்கூடும் என அவர் உய்த்துணர்ந்தார். காட்டில் ஓடிவரும் ஓடைகளின் நீரை அள்ளி ஒரு வாய் அருந்திப்பார்த்து  அவற்றில் சுண்ணமும் கந்தகமும் மணக்கும் ஓடையை தெரிவுசெய்து அத்திசை நோக்கிச் செல்வதையே தன் வழியாகக் கொண்டு ஓராண்டுகாலம் காட்டுக்குள் சென்றார். ஓடைநீரின் நாற்றமும் வெண்மையும் மிகுந்தபடியே வந்தன. பின்னர் அவர் பாலென நுரைக்கும் ஓடைகளை கண்டுகொண்டார். அணுகமுடியாத அளவுக்கு அவற்றிலிருந்து கந்தகவாடை எழுந்தது.

அதன்பின் காட்டின் நீரெல்லாமே கந்தகமாக இருந்தது. ஓடைக்கரைகளில் மஞ்சள்சேறு கனிந்திருந்தது. காய்களிலும் கனிச்சாறுகளிலும் கந்தகமே மணத்தது. சூரியர்  மலைக்கற்றாழைச் செடிகளின் இலைக்குவைக்குள் தேங்கிய மழைநீரையும் மாலையில் இலைத்தளிர்களில் துளித்துநின்ற பனியையும் தொகுத்து அருந்திக்கொண்டும் துவர்க்கும் கனிகளை மட்டும் தேர்வுசெய்து உண்டபடியும் மேலும் சென்று பெயரற்ற பெருங்கானகத்தை கண்டுகொண்டார்.

அங்கே மண்ணில் ஆயிரம் புண்கள் இருந்தன. அவை வெம்மைநிறைந்த வெண்ணிற ஆவியுடன் புண்ணுமிழ் சலம் என சேற்றை உமிழ்ந்து கொதித்துக்கொண்டிருந்தன. விம்மி அழும் நிலத்துக்குமேல்  வெண்புகை காளான்குடை என வானில் எழுந்து நின்றது. அங்கு பெரிய விலங்குகள் எவையும் வாழவில்லை. நீர் உண்ணும் வழக்கமில்லாத கீரிகளும் முயல்களும் எலிகளும் மட்டுமே வாழ்ந்தன. பறவைகளின் ஒலியே அங்கே உயிரொலியாக இருந்தது.

எவராலும் அறியப்படாத, எப்பெயரும் சுட்டாத மரங்களும் உயிர்களும் நிறைந்த காட்டில் சூரியர் வாழ்ந்தார். தன் பெயரை இழந்தார். கண்டடையப்படாதவராக அதில் தொலைந்து மறைந்தார்.  அங்குள்ள ஒளிபுகா மலைக்குகை ஒன்றுக்குள் புகுந்து விழிகளை மூடிக்கொண்டார். இருளுக்குள் எழுந்து நான் என உணர்ந்த ஒன்று ஒளியின்றி தவித்ததை கண்டார். மின்மினி போல அது நான் நான் என அதிர்ந்து மெல்ல சுடர்கொண்டது. தன்னொளியால் அது அவ்விருளை அகற்றியது. ஒவ்வொன்றின் மேலும் சென்று அமர்ந்து ஒளிர்ந்து எழுந்து அப்பொருளை ஆக்கி நிறுத்தியது. ஒவ்வொரு கணமும் ஒரு பொருள் பிறந்து வந்தது. பின்னர் அவர் அப்பேருலகில் முழுமையாக வாழலானார்.

இருபதாண்டுகாலம் அவர் அங்கே தன்னந்தனிமையில் வாழ்ந்தார். அன்னமென எழுந்த ஒன்று உண்ணப்படாது வீணாவதில்லை. அறிவு வளராமல் மறைவதுமில்லை.  மண்ணுக்குள் செல்லும் பிலத்திற்குள் அமர்ந்து ஒருவர் மெய்யறிதலை அடைந்தால்கூட மாணவர்கள் தேடிவருகிறார்கள். அவரைத் தேடி ஓர் இளைஞன் வந்தான். அவர் அவன் காலடிகள் காலத்தின் மறுமுனையிலிருந்து அணுகிவருவதை கேட்டார். அவன் விழிகள் இருளில் இருமின்மினிகள் என இணையாகப் பறந்து வந்தன.  அவர் இருந்த இருட்குகைக்குள் நுழைந்து தாள்பணிந்து மெய்யறிதலை தனக்கு அளிக்கும்படி கேட்டான்.

SOLVALAR_KAADU_EPI_29

“நீ யார்?” என்று சூரியர் கேட்டார். “நான் கிளம்புவதற்கு முன்பிருந்த பெயரையும் மரபையும் துறந்துவிட்டேன்” என்றான் அவன். “முன்பிருந்த எதுவும் பின்னிற்காத மெய்யறிதல் ஒன்றைத் தேடி நான் இவ்வேதக்காடுகளில் அலைந்தேன். நேதி நேதி எனத் துறந்து இக்காட்டை கண்டுகொண்டேன்.” சூரியர் “எவ்வண்ணம் இதை கண்டாய்?” என்றார். “நான் பறவைகளை பார்த்துக்கொண்டே வந்தேன். இத்திசையிலிருந்து எப்பறவையும் வெளிவரவில்லை. இத்திசை நோக்கி பிறநிலத்துப் பறவைகள் செல்லவுமில்லை. இங்குள்ள காடு தனித்தது என்று உணர்ந்தேன்.”

சூரியர் “நீ வேண்டுவதென்ன?” என்றார். “பிறிதொன்றில்லாத மெய்மை” என்றான் இளைஞன். “மானுடர் தங்களில் பாதியை பெயரெனக் கொண்டவர்கள், இளையோனே. நான் சூரியன் என்றே என்றும் என்னை உணர்ந்திருந்தேன். விழிமறையும் இக்காரிருளில் இருபதாண்டுகாலம் தன்னந்தனிமையில் நான் அமர்ந்திருக்கையில் என்னுள் எழுந்த சுடரால் அனைத்தும் துலங்குவதை கண்டேன்.” அவர் அவனை தன் கையால் தலைவளைத்து நெற்றிப்பொட்டை தன் சுட்டுவிரலால் தொட்டு  தானறிந்த வேதவரியை சொன்னார் “நானே பிரம்மம்.”

அவனை ஆசிரியர் யாக்ஞவல்கியர் என்று அழைத்தார். அகம்பிரம்மாஸ்மி என்னும் அவ்வரியில் தொடங்கிய அவன் கல்வி பதினெட்டு ஆண்டுகாலம் நீண்டது. சூரியர் வீடுபேறடைந்து ஒன்பதாண்டுகள் கழித்து அந்த வரியில் வந்து முடிந்தது. அப்போது அது ஒலியாக, பொருளாக, உள்ளோவியமாக இருக்கவில்லை. மொழியென மாறுவதற்கு முன் எப்படி இருந்ததோ அப்படி திரும்பிச்சென்றமைந்திருந்தது.

[ 2 ]

வேதமறிந்த வைசம்பாயனர்கள் எழுவர். முதல் வைசம்பாயனர் கௌஷீதக மரபின் ஆசிரியரான அஸ்வாலாயனரின் முதன்மை மாணவர். அவர் தன் ஆசிரியரிடம் முரண்பட்டுச் சென்று தன் வேதமரபை தானே உருவாக்கினார். கௌஷீதகத்திலிருந்து கிளம்பிச்சென்று வேதவியாசரை சென்றடைந்தார். வியாசரின் மாணவராக நாற்பதாண்டுக்காலம் அமைந்து வேதங்களை காவியவடிவில் கற்றறிந்தார். சொல்பெருகும் வேதமரபு ஒன்றை உருவாக்கினார். அது கிருஷ்ண யஜுர்வேதம் என்றழைக்கப்பட்டது. கரியவேதம் கட்டற்றதாக இருந்தது. அதைக் கற்க அவர் உருவாக்கிய முறைமை கிருஷ்ணாரண்யம் என அழைக்கப்பட்டது.

கௌஷீதக ஆரண்யகங்களில் ஒன்றில் அவர் கிளம்பிச்சென்ற தருணம் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது. அஸ்வாலாயனர் தன் மாணவர்களுக்கு  வேதமெய்மையை கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கையில் வைசம்பாயனர்  எழுந்து  “ஆசிரியரே, பெருவல்லமை கொண்டது எது?” என்றார். “செல்லும்தோறும் மேலும் பெருகும் ஆறு” என்றார் அஸ்வாலாயனர். “துணை கொண்ட ஒன்றே விசைமிக்கது.”

வைசம்பாயனர் “ஆசிரியரே, முளைப்பதில் உயிர்த்திறன் மிக்கது எது?” என்றார். “முருங்கை. அது தடியிலும் கிளையிலும் தளிரிலும் முளைப்பது. உடல்முழுக்க விதைகளால் ஆனது” என்றார் அஸ்வாலாயனர்.  அவர் என்ன கேட்கப்போகிறார் என்பதை அவரது முந்தைய தனிச்சொல்லாடல்களிலிருந்து அறிந்திருந்த பிற மாணவர்கள் திகைப்பும் எதிர்பார்ப்புமாக காத்து நின்றனர்.

வைசம்பாயனர்  “ஆசிரியரே, அழியாத காட்டுயிர் எது?” என்றார். “எலி. காட்டரசர்களாகிய யானைகள் அளவுக்கே அவை மண்ணுக்குள் வாழ்கின்றன. யானைகள் அஞ்சும் எதையும் எலி அஞ்சுவதில்லை” என்றார் அஸ்வாலாயனர். “ஏனென்றால் அவை ஒன்றிலிருந்து ஆறென பெருகிக்கொண்டே இருக்கின்றன. மாணவனே, எது விரைந்து பெருகுகிறதோ அதுவே அழியாதது.”

“ஆசிரியரே, அவ்வண்ணமென்றால் வேதம் மட்டும் ஏன் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கவேண்டும்? அதன் சொல்லும் பொருளும் ஏன் வரையறுக்கப்படவேண்டும்? மலையிறங்கி நிலம்பெருகும் நதிகளைப்போல அது செல்லட்டுமே. முருங்கைபோல முளைக்கட்டும். எலிகளைப்போல பெருகட்டும்” என்றார் வைசம்பாயனர். உரத்த குரலில் “வேதங்களால் தவிர்க்கப்பட்டவை என மும்மடங்கு தொல்வேதப்பாடல்கள் உள்ளன. வேதம் முளைத்தெழுந்து உருவான பன்மடங்குப் பாடல்கள் உள்ளன. அவற்றில் சிறந்தவையும் இணைந்து வேதம் சிறக்குமென்றால் என்ன தடை?” என்றார்.

“மைந்தா, வரையறுக்கப்படாத ஒன்றுக்கு இருப்பென்பதே இல்லை” என்றார் அஸ்வாலாயனர். “அவ்வரையறையை அவை இணைதலின் வழியாக இயல்பாக உருவாக்கிக் கொள்ளட்டும். நாம் அவற்றை முன்னரே அணையிட்டு நிறுத்தினால் காலப்பெருக்கில் சொல்லை கட்டிப்போடுகிறோம்” என்றார் வைசம்பாயனர். “என் மரபு மாறாச்சொல் என்பதையே வேதமெனக்கொண்டது. மாறுமென்றால் அது வேதமே அல்ல” என்றார் அஸ்வாலாயனர். “நால்வேதங்களும் வரையறை செய்யப்பட்டதே மாற்றம் அல்லவா?” என்றார் வைசம்பாயனர். “மைந்தா, நீ அதை வேதம் வகுத்த வியாசரிடமே கேட்கலாம். நூற்றி எட்டாவது மகாவியாசர் இன்று வியாசவனத்தில் அமர்ந்திருக்கிறார். அவரிடம் செல்க!” என்று சொல்லி அஸ்வாலாயனர் முடித்துக்கொண்டார்.

கௌஷீதகம் நீங்கி வியாசவனம் சென்று ஆசிரியரென அமர்ந்திருந்த வேதவியாசரின் தாள்பணிந்தார் வைசம்பாயனர். வளர்வதே அழியாச்சொல் என்று தான் எண்ணுவதை  அவர்முன் வைத்தார். “வேதங்களை உருத்திரமணி என கோத்து கழுத்தில் அணிய நான் விரும்பவில்லை, ஆசிரியரே. விதைக்கூடை என எடுத்துக்கொண்டு வளம் நிறைந்த இம்மண்ணில் உலவ விழைகிறேன்.”

“மைந்தா, தத்துவம் அருமணிகளைப்போல. பிறிதொன்றிலாத தன்மையாலேயே அது மதிப்பு பெறுகிறது. இலக்கியம் விதைகளைப்போல. முளைத்துக் காடாவதனால் அது மதிப்பு கொள்கிறது. வேதம் தத்துவமே” என்றார் வியாசர். “அது ஏன் இலக்கியமும் ஆகக்கூடாது?” என்றார் வைசம்பாயனர். “ஏனென்றால் வேதம் அடித்தளம். அது உறுதியாக அமைந்தாகவேண்டும். வேதம் படைக்கலம், அது நெகிழலாகாது. வேதம் துலாமுள், அது நிலைநின்றாகவேண்டும்.”

“வேதம் தத்துவமாக இருந்ததில்லை. அதை வகுத்து தத்துவமாக ஆக்கியவர்கள் உங்கள் முன்னோடிகளே” என்றார் வைசம்பாயனர். “மைந்தா, இலக்கியம் கண்டடையும், ஆனால் பயனளிக்கவேண்டும் என்றால் அது மந்தரமலையால் கடையப்பட்டாகவேண்டும். அமுதும் நஞ்சும் பிரிக்கப்பட்டாகவேண்டும். தத்துவமென மாறாத இலக்கியம் வெறும் களியாட்டு மட்டுமே” என்றார் வியாசர்.

“ஆசிரியரே, குவிவதன் வழியாக கடந்துசென்று எய்துவது ஒருவழி. அகன்று உலகை அணைப்பதனூடாக எய்தும் வழியை ஏன் ஒடுக்கவேண்டும்?” என்றார் வைசம்பாயனர். “ஏனென்றால் வேதம் அழியாத முன்னறிவென அனைத்து அறிதல்முறைகளுக்கும் பின்னால் நின்றுகொண்டிருக்கிறது. அதை திருத்தமுடியும் என்றால் அது சான்றென எங்கும் நிற்கமுடியாது” என்றார் வியாசர். “வேதமென அமைந்தது அதை நாம் வெளியே நின்று வகுத்தளிக்கும் இலக்கணம் வழியாக தன்னை ஒருங்கமைத்துக்கொள்ள வேண்டுமா என்ன? அதன் தன்னியல்பாலேயே அது ஒருங்கிணைய முடியாதா? அன்னப்பறவைகள் நடுவே வாத்துக்கள் கலந்துவிடும் என்று நாம் அஞ்சுகிறோமா?” என்றார் வைசம்பாயனர்.

“இங்கு இவ்விருக்கையில் அமர்ந்து நான் நீ சொல்வதை ஏற்கமுடியாது. வகுத்து எண்ணி ஒலியமைத்து உளம்கொண்டு நாவிலமைந்த சொல்லென்றே இங்கு வேதம் திகழமுடியும். ஆயினும் உன்னை விலக்க நான் விழையவில்லை. இவ்வனத்தின் தென்மேற்கு மூலையில் பிறன் என நீ தங்குக!” என்றார் வியாசர்.  “அவ்வண்ணமே” என தலைவணங்கி அகன்றார் மாணவர்.

பின்னொருநாளில் கானுலா சென்ற வியாசர் அனைத்து விலங்குகளும் அசைவிழந்து விழிமின்ன நின்று வேதச்சொல் கேட்பதை கண்டார். மரங்களில் பறவைகள் பூக்களைப்போல வண்ணம் மட்டுமென நிறைந்திருந்தன. புலியருகே மான் நின்றிருந்தது. மலைப்பாம்பின் வளைவின்மேல் முயல் அமர்ந்திருந்தது. வியந்து அருகணைந்தபோது அங்கே ஒரு சுனைக்கரையில் அமர்ந்து வைசம்பாயனர் வேதமோதுவதை கண்டார்.

வேதச்சொல் முழுதமைந்ததும் அவர் முன் சென்று “இது நான் கேட்டறியாத வேதம். எங்கிருந்தது இது?” என்றார். “இது தொல்வேதச் சொல். மலைநாகர்களிடம் புழங்கியது. அவர்களின் தெய்வங்களால் மீட்டி வளர்க்கப்பட்டது” என்றார் வைசம்பாயனர். வியாசர் திகைத்து நின்றபின் பெருமூச்சுடன் “ஆம், வகுக்கையில் வெளியேறுவது மேலும் வளர்ந்து முன்னால் வந்து நிற்கிறது. தொகுப்பவர்களை முடிவின்மை வந்து சந்திப்பது அப்படித்தான்” என்றார்.

வியாசரின் ஆணைப்படி முறைப்படுத்தப்படாத பாடல்களைச் சேர்த்து வைசம்பாயனர் அமைத்த அவ்வேதம் கிருஷ்ணயஜுர்வேதம் எனப்பட்டது. அம்முறை ஏற்கப்பட்டதும் விரைவிலேயே நால்வேதங்களுக்கும் கிருஷ்ண, சுக்ல சாகைகள் உருவாயின. கரியவேதம் மலரொடு சருகும் கொண்டு வெள்ளம் பெருகும் கங்கை போலிருந்தது. நிலம்பரவி உலகூட்டியது. வெண்ணிற வேதமோ மலையுச்சியின் மானசரோவரம் போல நின்றிருந்தது. வேதத்தை முற்றறிபவர்கள் அவற்றை கிருஷ்ண சுக்ல சாகைகளுடன் சேர்த்து கற்றுணரவேண்டுமென நெறி அமைந்தது.

வைசம்பாயனரின் வேதநிலைக்கு இளமாணவனாக வந்து சேர்ந்த அந்தணச் சிறுவனை அவர் யக்ஞன் என அழைத்தார். மாணவர்களில் அவர் பேரன்புக்குரியவனாக அவனே இருந்தான். ஒளிவிடும் சிறிய கண்களும் கொழுத்த வெண்ணிற உடலும் மணிக்குரலும் கொண்டிருந்தான். வேதமோதுவதில் இருந்த அதே ஒன்றலுடனும் உவகையுடனும் உணவுண்டான். அவனை பறவைகள் தங்களைப்போலவே விடுதலையானவன் என அடையாளம் கண்டுகொண்டன. ஆசிரியர் தன்னருகே அவனிருக்கையில் உவகையும் புரியாத அச்சமும் ஒருங்கே எழக்கண்டார்.

ஒருநாள் கானுலா செல்கையில் காட்டுப்பறவை ஒன்று வேதவரி ஒன்றை சொல்வதைக் கேட்டு வியந்து நின்ற வைசம்பாயனர் அது எவ்வண்ணம் கற்றது என மாணவர்களிடம் கேட்டபோது யக்ஞன் இரவு முழுக்க காட்டுக்குள் அமர்ந்து வேதமோதிப் பயில்கிறான் என்று சொன்னார்கள். வேதங்களின் கிருஷ்ணசாகைகளை கற்றுத்தேர பன்னிரண்டு ஆண்டுகளாகும் என்பது அனைத்துக் கல்விநிலைகளும் கொண்டுள்ள வகுநெறி. மூன்றாண்டுகளில் அதை கற்றுத்தேர்ந்தவர் வைசம்பாயனர் என அனைத்து கதைகளும் வியந்தன. யக்ஞன் அதை ஒரே ஆண்டில் கற்று முடித்துவிட்டான் என்றனர் மாணாக்கர். நால்வகைச் சொல்முறையிலும் அவன் வேதங்களைச் சொல்லி விளையாடுவதுண்டு என்றனர்.

வைசம்பாயனர் அதைக் கேட்டு இறும்பூது எய்தினார். எட்டு கானகங்களில் இருந்து வந்த வேத ஆசிரியர்களின் முன்னிலையில் அவனை நிறுத்தி ஒரு தேர்வு நிகழ்த்தினார். அவன் ஒரு சொல் பிழைக்காமல், ஒரு சந்தம் மாறாமல் வேதங்களை முற்றோதியதைக் கண்டதும் அவர்கள் எழுந்து நின்று கைதூக்கி  “நீள்புகழ் கொள்க! நீடு வாழ்க!” என்று வாழ்த்தினர். “இனி வேதமரபின் முதன்மை அறிஞன் என இவ்விளைஞனே அறியப்படட்டும்” என்றார் வியாசர்.  அன்று ஆசிரியர் உள்ளத்தில் மாணவனைப் பற்றிய முதல் முள் குடியேறியது. பின்னர் அது நாளும் வளரலாயிற்று.

பிறிதொருநாள் சொல்லவையில் வைசம்பாயனர் தொல்வேத வரியொன்றை வேதத்துடன் இணைத்துப் பாடியபோது யக்ஞன் எழுந்து அதை மறுத்தான். “வேதமெய்மைக்கு எதிரான வரி வேதத்தில் அமையலாகாது” என்றான். “மானுடப்பலியை வேதம் கடந்து வந்துவிட்டது. இவ்வரியில்  நோன்புகொண்டவனின் தூய ஊனை தெய்வங்கள் விரும்புகின்றன என்று ஒரு வரி வந்துள்ளது.”

சினத்துடன் “மூடா, இது கட்டற்றது என்பதனாலேயே கிருஷ்ணசாகை” என்றார் வைசம்பாயனர். “ஆம், ஆனால் அப்போதும் அது வேதமென்றே அறியப்படுகிறது. நீங்கள் இணைத்த வரி வேதங்களுக்கு மாறானது. அது வேதம் அல்ல” என்றான் யக்ஞன். வென்று அடக்கியிருந்த அனைத்துச் சினமும் ஒன்றாகக்கூடி முகத்தில் கனல “அதை முடிவுசெய்யவேண்டியன் நான்” என்று வைசம்பாயனர் சீறினார். “இல்லை, முடிவுசெய்யவேண்டியவர்கள் நாங்கள். இது கங்கை. உங்கள் படித்துறையில் நீங்கள் எதை கலக்கிறீர்கள் என்பதை அடுத்த படித்துறையில் நீராடுபவர்களே முடிவுசெய்யவேண்டும்” என்றான் யக்ஞன்.

“இந்தக் கல்விநிலை என்னுடையது. இங்கு விளங்குவது என் ஆணை” என்றார் வைசம்பாயனர். “இல்லை ஆசிரியரே, எங்கும் திகழ்வது வேதத்தின் ஆணை மட்டுமே” என்றான் யக்ஞன். அவர்கள் சொல்மோதிக்கொள்வதை மாணவர்கள் திகைப்புடன் நோக்கி நின்றனர். அது எங்கு சென்று முடியும் என அவர்கள் அறிந்திருந்தனர். உடல்நடுங்க எழுந்த வைசம்பாயனர் கைவீசி பெருங்குரலில் “மூடா, வேதம் கற்றமையால் நீ ஆசிரியனை விஞ்சிவிடுவாயா என்ன? நானறியாத வேதவரி ஒன்றைச் சொல்ல முடியுமா உன்னால்? சொல். நீ என்னிலும் மேலோன் என ஒப்புகிறேன்” என்றார். “ஆணை” என்று தலைவணங்கிய யக்ஞன் நூறு யஜுர்வேத வரிகளை சொன்னான்.

கிருஷ்ணயஜுர்வேதத்தின் தொகைக்காரரான வைசம்பாயனர் அவ்வரிகளைக் கேட்டு திகைத்து நின்றார். அவை வேதமென அவர் உணர்ந்தார், ஆனால் அவற்றை முன்பு அறிந்திருக்கவில்லை. திகைப்புடன் “இதை எங்கு கற்றாய்?” என்றார். “ஆசிரியரே, நீங்கள் கற்பித்த அதே வேதச்சொற்கள்தான். சொல்கூட்டும் முறைகளினூடாக வேதத்தினுள்ளேயே இதை நான் அடைந்தேன்” என்றான் யக்ஞன். “அவ்வாறு எல்லைகடந்து சொற்கூட்ட நான் உனக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது ஆசிரியனாகிய என்னை சிறுமை செய்வது. இதன்பொருட்டு உன்மேல் நான் தீச்சொல்லிடுவேன்” என்றார்.

“கற்றவற்றினூடாக விரிவதே கிருஷ்ணசாகைகளின் வழி என்றிருக்க இதற்கு நான் ஏன் ஒப்புதல் பெறவேண்டும்?” என்றான் யக்ஞன். “ஒப்புதல்பெற வேண்டும். நான் கற்பித்தது என்று சொல்லி நீ ஒரு பிழைவேதத்தை இங்கு நிறுவிச் செல்லலாகாது. நான் கற்பித்தது அது என பின்னர் அனற்சான்றாக ஆகும். என் ஒப்புதல் அதற்கில்லை என உலகோர் அறியவும் மாட்டார்கள்” என்று வைசம்பாயனர் கூவினார். “நீ என்னை மீறியமையால் இனி எனக்கு மாணவன் அல்ல. இதோ, உன் ஆசிரியராக நின்று நான் ஆணையிடுகிறேன். நான் கற்பித்தவை அனைத்தையும், அவற்றிலிருந்து நீ பெற்றவை முழுமையும் இங்கே கூறிவிட்டு இக்குருகுலம் விட்டு அகல்க!”

“ஆணை” என வணங்கிய யக்ஞன் கைகூப்பி அமர்ந்து தான் கற்றவேதத்தை முழுமையாக உரைத்து முடித்தான். கற்றவற்றிலிருந்து தான் சென்றடைந்தவற்றையும் ஒரு சொல் மாறாது உரைத்து முழுமை செய்தான். வைசம்பாயனர் “இவற்றில் ஒரு சொல்லேனும் உன்னில் எஞ்சவில்லை என ஆணையிடுக!” என்றார். யக்ஞன் “ஆணை” என்று நிலம்தொட்டு உறுதியளித்தான். ஆசிரியரை வணங்கி அன்றே விலகிச்சென்றான்.

வேதத்தை மீண்டும் புதிதாக முதற்சொல்லில் இருந்து கற்றுமீள யக்ஞன் விழைந்தான். அவன் சென்ற அத்தனை குருநிலைகளுக்கும் முன்னரே அவனை வைசம்பாயனர் பழிச்சொல்லிட்டு புறந்தள்ளிய கதை தெரிந்திருந்தது. தேடி நெடுந்தொலைவு சென்று, சென்ற இடங்களில் சிறுமைகொண்டு, ஒருகணமும் சோர்வுறாமல்  பயணம்செய்து இறுதியாக சூரியர் வாழ்ந்த கந்தகப் பெருங்காட்டை கண்டடைந்தான். அவர் முன் வணங்கும்போது அவனுள்ளும் அவன்  வாழ்ந்த சொல்வளர்காடுகள் சுருங்கி மறைந்துவிட்டிருந்தன. அவர் முன் அமர்ந்து வேதமெய்ப்பொருளை கற்றறிந்தான். அவனை ஆசிரியர் யாக்ஞவல்கியர் என்றழைத்தார்.