சொல்வளர்காடு - 27

[ 7 ]

விதுரர் நோயுற்றிருப்பதாக காலன் வந்து சொன்னபோது தருமன் ஆற்றங்கரையிலிருந்த ஆலமரத்தடியில் நகுலனுடனும் சகதேவனுடனும் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் காலையின் வழிபாட்டுச்சடங்குகள் முடிந்தபின்னர் ஆற்றங்கரைக்கு உடல்முகம் கழுவும்பொருட்டு வந்தனர். எதிரே கிருதன் வருவதை தருமன் கண்டார். “நேற்று நாம் பேசிக்கொண்டிருந்த இளையோன். நாம் சொன்ன சொற்கள் அவனை இரவு கண்துயில விட்டிருக்காது” என்று தருமன் புன்னகைத்தார். ஆனால் அவர்களைக் கண்டதும் கிருதன் மறுபக்கம் வழியாக விலகிச்சென்றுவிட்டான்.

அது தருமனை திகைக்க வைத்தது. “அவன் நம்மை தவிர்க்கிறானா?” என்றார். “அவன் உள்ளம் வருந்தும்வண்ணம் எதையேனும் சொல்லிவிட்டோமா? இல்லை நம்முடன் பேசிக்கொண்டிருந்தமையால் அவனுக்கு இங்கே தீங்கேதும் நிகழ்ந்தனவா? இளையவனே, அவனை சந்தித்து அதை அறிந்துவா” என்றார். சகதேவன் “தேவையில்லை, மூத்தவரே. நேற்று இளையவர் சொன்னவை அவனை கொந்தளிக்கச் செய்துவிட்டன. அவன் உள்ளமும் எண்ணமும் அச்சொற்களைத் தாளாது தவிக்கின்றன. இப்போது பெருமழையில் இளஞ்செடி என தளர்ந்து சரிந்திருக்கிறான்” என்றான்.

“அந்த வலியே அவன் நம்மை தவிர்க்கச்செய்கிறது. நம்மைப்பற்றி எண்ணவே கூடாதென உறுதிகொள்வான். ஆனால் எண்ணிக்கொண்டேதான் இருப்பான். செல்லவேண்டிய தொலைவனைத்தையும் முழு உடலால் மண்புழு போல சென்று சேரவேண்டிய ஒன்றே தத்துவத்தின் பாதை, மூத்தவரே. பெருமழையை அவன் இலைகள் அஞ்சலாம். வேர்கள் மண்ணுக்குள் உவகைகொண்டு கிளர்ந்திருக்கும். அந்த முரண்பாட்டுக்குள் அலைக்கழிகிறான்” என்று சகதேவன் தொடர்ந்தான். “மானுடன் மிக எளிய உயிர். இத்தனை பெரியவற்றை இச்சிறுபறவை எதன்பொருட்டு கவ்விக்கொள்கிறது?” என்று தருமன் பெருமூச்சுவிட்டார்.

“கழுகு என சிறகுவிரிக்காத பறவைக்குஞ்சுகளே இல்லை. அவற்றில் சில கழுகுகளாகவும் ஆகின்றன. பறக்கத் துடிக்கும்போதே மயிர்கொண்ட கைகள் சிறகுகள் என்றாகின்றன” என்று சகதேவன் சொன்னான். “சப்ததந்திர நீதியின் வரிகள் இவை.” தருமன் எண்ணங்கள் வேறெங்கோ செல்ல தலையை அசைத்தார். பின்பு “எல்லாம் வீண் என்று தோன்றும் கணங்களே தத்துவமாணவனின் நரகுலகு” என்றார். கைகளை விரித்து “எல்லாம் எண்ணும் வேளையில் பசிதீர உண்ணுவதும் உறங்குவதுமாய் முடியும். என்புத்தசையென எழுந்த உடலின் இன்பத்திலன்றி எதிலும் நிறைவென்பதே இல்லை. அடைந்த கணமே கடத்தல் என ஆனது தத்துவம். எனவே அதை மயிர்சுட்டுக் கரியெடுத்தல் என்றனர் முன்னோர்” என்றார்.

பேசியபடியே அவர்கள் ஆலமரத்தடிக்கு வந்ததும் அங்கே அமர்ந்துகொண்டனர். “இந்த ஆலமரத்தின் பெயர் நிதாந்தம்” என்று நகுலன் சொன்னான். “ஆலமரங்களின் பெயர்களைக்கொண்டே ஒரு குருநிலையின் எண்ணங்களை உய்த்துக்கொள்ளலாம் போலும்.” தருமன் “அனைத்து வேதநிலைகளையும் தவிர்த்துவிட்டுச் சென்று எங்காவது எளிய ஆற்றங்கரையில் ஒரு குடிலமைத்து தங்கவேண்டுமெனத் தோன்றுகிறது, இளையோனே. எவரும் நாமிருப்பதை அறியலாகாது, எவரையும் நாமும் அறியலாகாது” என்றார். “அவ்வாறு அமைந்தவைதான் இவையனைத்தும். மானுடர் அவற்றைத் தேடிக்கண்டடைந்து கொடைப்பொருட்களுடன் வந்து குழுமுகிறார்கள்.”

காலன் வருவதை அவர்கள் பார்த்தனர். “அவன் உடலில் விரைவு உள்ளது” என்றான் நகுலன். அருகே வந்த காலன் வணங்கி சுருக்கமாக “அமைச்சர் விதுரர் நோயுற்றிருக்கிறார். நேற்று பகல் முதலே உணவுண்ணவில்லை. இரவு கடும் வெப்பநோயால் நடுங்கிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கின்றார்கள். இன்றுகாலை முதல் தன்னினைவே இல்லை. தங்கள் பெயரை சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்றான். தருமன் எழுந்து “வருக!” என்று தன் தம்பியரிடம் சொல்லிவிட்டு விரைந்து நடந்தார். “அவர் உண்ணாநோன்பிருந்தாரா?” என நகுலன் காலனிடம் கேட்டான். “இல்லை, முன்நாள் சற்று உணவுண்டிருக்கிறார்” என்று அவன் சொன்னான்.

அவர்கள் விதுரரின் குடிலை அடைந்தபோது உள்ளே மருத்துவர்கள் இருந்தனர். கைகளைக் கட்டியபடி தருமன் அவர்கள் வெளியே வருவதற்காக காத்து நின்றிருந்தார். காலன் மெல்லிய குரலில் “காலையிலேயே முதன்மையாசிரியருக்கு தெரிவித்துவிட்டார்கள். தங்களைத்தேடி குடில்களுக்குச் சென்றபின்னரே என்னிடம் சொன்னார்கள்” என்றான். உள்ளே மருத்துவர்கள் மெல்லிய குரலில் பேசுவதும் செம்புக்கலங்கள் முட்டிக்கொள்ளும் ஒலியும் கேட்டது. நடுவே மிகப்பெரிய இருமல்தொடர் எழுந்தமைந்தது. அது விதுரர் என தருமனால் எண்ண முடியவில்லை. மெலிந்தவர் என்றாலும் அவர் எப்போதுமே உறுதியான உடல்கொண்டவராகவே தென்பட்டிருக்கிறார்.

மருத்துவர்கள் எழுந்து வெளிவருவதை கேட்டார்கள். முதலில் வெளிவந்த முதுமருத்துவர் சக்ரர் “வணங்குகிறேன், அரசே. காய்ச்சல் சற்று மிகையாகவே உள்ளது. நெஞ்சு மட்டுமல்லாது வயிறும் பழுத்துவிட்டிருக்கிறது. மூக்குவழியாகவும் வாய் வழியாகவும் மருந்து அளிக்கவேண்டியிருக்கிறது” என்றார். தருமன் “உயிருக்கு இடர்…?” என்றார். “உள்ளது, உடல் மிக நொய்ந்துள்ளது. உள்ளம் அதைவிட நொய்ந்துள்ளது. இக்கூட்டில் தங்கிவாழ ஆத்மன் விரும்பவில்லை. ஆகவே…”

தருமன் “என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டபோது குரலே எழவில்லை. “அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவருள் வாழ்வது விழையவேண்டும், ஆற்றுவதற்கு எஞ்சியுள்ளது என்று” என்றபின் சக்ரர் திரும்பி தன் துணைவர்களைப் பார்த்துவிட்டு நடந்தார். தயங்கிய காலடிகளுடன் தருமன் படிகளில் ஏறி குடிலுக்குள் சென்றார். அவர்கள் உள்ளே சென்றபோது அச்சிறு அறை நிறைந்தது. மழையில்தளிர்த்த காட்டுத்தழைப்பு இளவெயிலில் வாடிய மணத்துடன் காற்று உள்ளே வந்தது. அதிலிருந்த நீராவி பிறிதொரு மழையை சொன்னது.

விதுரரை அந்த வெக்கை மூச்சுத்திணறச் செய்வது போலிருந்தது. மெலிந்து எலும்புநிரை எழுந்த மார்பு மேலெழுந்து நின்றது. குரல்வளை புடைத்து அசைந்தது. மூச்சொலியுடன் உரசல் போல இழுபடல் போல முனகல் போல பலவித ஒலிகள் கலந்து வந்தன. அவ்வப்போது எழுந்த இருமலில் அவர் உடலே அதிர்ந்து எழுந்து துடித்து மீண்டும் மஞ்சத்தில் விழுந்தது. அருகே அமர்ந்திருந்த மருத்துவ உதவியாளன் அவர் இருமியமைந்ததும் வாயை துடைத்தான்.

தருமன் சென்று அவர் அருகே போடப்பட்ட காட்டுக்கொடிபின்னியமைந்த சிறுபீடத்தில் அமர்ந்தார். அவர் அருகே நகுலனும் சகதேவனும் நின்றனர். அவரை அழைக்க மருத்துவ உதவியாளன் கைநீட்ட வேண்டியதில்லை என தருமன் தலையசைத்து மறுத்தார். கைகளை மார்பில் கட்டியபடி அவரையே நோக்கிக்கொண்டிருந்தார். இருமி அதிர்ந்து தளரும் மெல்லிய கரிய உடல். அவர் கிருஷ்ணதுவைபாயன மகாவியாசரின் வடிவில் வந்தவர் என்பார்கள். பிதாமகர் தென்னகக் காட்டுக்குள் எங்கோ உயிருடன் இருக்கிறார் என்று சூதர் சொல்வழியாக அறிந்திருந்தார். அப்படியென்றால் அவர் இவரைப்போல் இருப்பாரா? ஆனால் அவர் கவியோகி. இவர் உலகியலில் ஆடி உயிர் கரைந்துகொண்டிருப்பவர்.

அவருடைய அருகமைவை விதுரர் உணர்ந்துகொண்டு விழிகளை திறந்தார். தேர்ச்சகடம் ஏறி உடைந்த நாகத்தின் தலை எழுவதுபோல அவர் கைமட்டும் நீண்டு வந்தது. தருமன் கை நீட்டி அதை பற்றிக்கொண்டார். “உண்பதும் உறங்குவதும் காமமும் இறப்பும்” என அவர் மெல்லிய குரலில் சொன்னார். “பிறிதொன்றுமில்லை.” அச்சொற்களை அவர் சொன்னாரா, தன் உள்ளம் உரத்ததா என தருமன் திகைத்தார். அவருள் ஓடிக்கொண்டிருந்தது அவ்வெண்ணம். “ஆம், வேறொன்றுமில்லை. அனைத்தும் வீண்.” அவர் குரல் அவ்வுடலில் அமைந்த பிறிதொன்றின் ஒலியென கேட்டது. மிகமிக ஆழத்திலுள்ள ஏதோ உலகில் வாழும் ஒன்று.

“அரசியை நான் பார்க்கவேண்டும்” என்றார் விதுரர். “அழைக்கிறேன்” என்று தருமன் சொன்னார். “இப்போதே. ஒருவேளை நான்…” என்றபின் “நான் சொல்லிக்கொள்ளவேண்டியது அவளிடம் மட்டுமே. அது மட்டுமே எஞ்சியிருக்கிறது” என்றார் விதுரர். இருமல் எழுந்து அவரை தூக்கிப்போட்டது. சரள்கல்பாதையில் துள்ளிச்செல்லும் தேர்த்தட்டின்மேல் படுத்திருப்பவர்போல அவர் அதிர்ந்து உலுக்கிக்கொண்டு பின் மெல்ல தளர்ந்தார். கை பக்கவாட்டில் விழுந்து விரல்கள் ஒவ்வொன்றாக விரிந்தன. இமைச்சுருக்கம் அதிர்ந்து பின்பு மெல்ல விரிந்து முகம் துயில்கொண்டது. வாய் விழுந்து பற்கள் தெரிய உலைவாய்நீராவி என மூச்சு வெடித்து வெடித்து வெளிவரத்தொடங்கியது.

தருமன் எழுந்து வெளியே வந்தபோது காலன் அருகே வந்தான். “அரசியை உடனே வரும்படி சொல். இது என் ஆணை!” என்றார். அவன் கிளம்பியதும் “இளையோனே, நீயும் உடன்செல்” என்று சகதேவனிடம் சொன்னார். அவர்கள் இருவரும் செல்வதைப்பார்த்தபடி முற்றத்தில் நின்றிருந்த மகிழமரத்தின் அடியில் காத்திருந்தனர். அதன் மெல்லிய சருகுகள் காற்றில் மிதந்து இறங்கிக்கொண்டிருந்தன. சிலந்திவலையின் கண்காணா நுண்சரடில் சிக்கி ஒரு இலை வெளியில் நடனமிட்டுக்கொண்டிருந்தது.

“இத்தனை காற்றடிக்கிறது. இவ்வலைகள் அறுந்துவிடுவதே இல்லை” என்று அவர் விழியோட்டல் கண்டு நகுலன் சொன்னான். தருமன் “அறுந்துவிடுகின்றன. ஆனால் மறுநாளே முன்பிருந்ததுபோல அவை உருவாகிவிடுகின்றன” என்றார். அந்தச் சிறிய வெண்ணிறச் சிலந்தியை அப்போதுதான் கண்டார். “திசைக்கையன் என்று இதை சொல்கிறார்கள். தன்னுள் இருந்து எடுத்து தன்னைச்சுற்றி வலைபின்னி அதன் நடுவே திசைகளையே கைகளென்றாக்கி அமர்ந்திருக்கிறது, தான் எதன் ஒப்புமை என அறியாமல்.” நகுலன் அந்தப் பேச்சு தத்துவமாக மாறுவதை அப்போது விரும்பவில்லை. திரௌபதி வரும்வரை வெறும் சொல்லோட்டம் நிகழ்ந்தால் போதுமென நினைத்தான். “சலிக்காமல் பின்னுகிறது. அதற்கு என்ன நிகழ்கிறதென்றே தெரிவதில்லை. அதன் உயிர்க்கடமை அது, அவ்வளவுதான்.”

வியப்பூட்டும்படி அந்தப் பேச்சு அப்படியே அறுந்து நின்றது. அவர்கள் வெயில்பொழிவை நோக்கியபடி நின்றிருந்தனர். உள்ளே விதுரர் உரக்க இருமும் ஒலி கேட்டது. நகுலன் “உண்மையில் இருமுவது ஒரு நற்குறி. உடலில் ஆற்றல் எஞ்சியிருக்கிறது, நெஞ்சச்சளியை அது வெளியேற்ற முயல்கிறது என்பதை காட்டுகிறது” என்றான். தருமன் அதை மேலும் பேசிச்செல்ல விரும்பவில்லை. மீண்டும் ஆழ்ந்த அமைதி உருவானது. வெண்சிலந்தி அவர்களுக்கு முன்னால் வந்தது. ஒளியில் நீந்திச்சென்று ஒரு கணத்தில் அது மறைந்தது. முழு ஒளியையும் தன் உடல்வழியாக கடக்கச்செய்து தன்னை அது பெருவெளியில் புதைத்துக்கொண்டது.

சகதேவனும் காலனும் வர தொடர்ந்து  திரௌபதி வருவதை அவர்கள் கண்டனர். தருமன் மெல்லிய பதற்றம் கொண்டு ஓர் அடி முன்னால் எடுத்துவைத்து பின் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார். திரௌபதி எப்போதும்போல சீரான காலடிகளுடன் நிகர்கொண்ட தோள்களுடன் பெரும் அணிவகுப்பில் முதன்மைகொண்டு செல்பவள்போல வந்தாள். அவர்கள் அருகே வந்ததும் நகுலன் சென்று “வருக, அரசி!” என்றான். “நோயுற்றிருக்கிறார். எதிர்பார்க்கவேண்டியதில்லை என்றார் மருத்துவர். உன்னிடம் சில சொற்கள் பேசவிழைகிறார்.”

அவள் அனைத்தையும் சகதேவனிடம் கேட்டிருந்தாள். எனவே மெல்ல படியேறி மேலே சென்றாள். பிறர் நின்றுகொள்ள தருமன் அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றார். மருத்துவ உதவியாளன் எழுந்து “இருமுறை விழித்துக்கொண்டு வந்துவிட்டார்களா என்று கேட்டார், அரசி” என்றான். அவள் அவர் அருகே சென்று நின்றாள். தருமன் கைகாட்ட மருத்துவ உதவியாளன் அவர் தோளை மெல்லத் தொட்டு “அமைச்சரே” என்றான். அவர் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு வாய் மெல்ல திறக்க நாக்கு அதன் பொந்துக்குள் தவிக்க பழுத்த விழிகளால் அவளை பார்த்தார்.

“வந்துவிட்டார்கள், அமைச்சரே” என்று மருத்துவ உதவியாளன் சொன்னான். அவர் ஆம் என தலையசைத்தார். அவர் முகம் மிக மெலிந்திருந்தமையால் மூக்கு புடைத்து எழுந்திருப்பதாகத் தோன்றியது. அதன் மேல்வளைவு மெழுகுபோல உயிரற்ற ஒளி கொண்டிருந்தது. விழிகளுக்குக் கீழே வீங்கியிருந்த இமைத்தசைகள் இழுபட்டு துடித்தன. மூச்சொலி எழுந்தடங்கியது. தருமன் அவள் ஏதாவது சொல்வாள் என எதிர்பார்த்தார். மண்டியிட்டு அமர்ந்து அவர் கைகளை தொடலாம், கனிந்த குரலில் என்ன செய்கிறது என்று கேட்கலாம். அவள் அப்படி செய்யக்கூடியவளே அல்ல. ஆனால்…

விதுரரின் கைகள் மஞ்சத்தின் மேல் தவித்தன. ஒரு கையை மெல்ல தூக்கி தன் வயிற்றின்மேல் வைத்துக்கொண்டார். அவர் வயிறு சற்று வீங்கியிருப்பதுபோல் தோன்றியது. மறு கை தவித்தது. மார்பின்மேல் கிடந்த ஆடையைப் பற்றியது. சிலந்திபோல தொற்றி மேலேறி மார்புக்கு வந்தது. இருகைகளும் ஒன்றை ஒன்று தொட்டன. விரல்கள் கோத்துக்கொண்டன. அவர் வணங்குகிறார் என்று அப்போதுதான் புரிந்தது. “எளியவன்… பொறுத்தருளவேண்டும்” என்று அவர் சொன்னார். கண்கள் சரிந்து இமைப்பீலிகளைக் கடந்து நீர் ஊறி கன்னங்களில் வழிந்தது. “பொறுத்தருளவேண்டும்… மூடன். சிறுமைகொண்டவன் நான்…”

அவள் அசையாமல் நின்றிருந்தாள். தருமன் தன் நெஞ்சின் ஒலியை கேட்டார். அவள் ஏதேனும் சொல்லவேண்டும். ஒரு சொல்லேனும். உள்ளத்தால் அந்தப் பொழுதை தள்ளி முன்னே செலுத்தினார். ஆனால் இரும்புச்சுவர் என நின்றிருந்தது அந்தத் தருணம். இறுகி அமைதிகொண்டு. “நான்… பொறுத்தருளவேண்டும், தேவி” என்றார் விதுரர். கண்களை மூடிக்கொண்டு வலிகொண்டவர் போல தலையை அசைத்தார். பற்கள் வெளிவந்து உலர்ந்த இதழ்களைக் கவ்வி தடம்பதித்தன. கைகளில் ஒன்று தவித்து சறுக்கி விலாவருகே மஞ்சத்தில் விழுந்தது. தொண்டைமுழை ஏறியிறங்கித் தவித்தது.

முன்னால் பாய்ந்து அவள் தோள்களைப் பற்றி உலுக்கவேண்டுமெனத் தோன்றியது. நெஞ்சுடைய வீரிடவேண்டுமென உடல் தவிப்புகொண்டது. அவள் அசையா உடலுடன் நிலைவிழிகளுடன் நின்றிருந்தாள். “ம்” என்று விதுரர் சொன்னார். இருமல் வந்து உலுக்கிய உடல் மெல்ல அமைந்ததும் “ம்ம்” என மீண்டும் முனகினார். அவளை நோக்க தருமனால் முடியவில்லை. கால்கள் தளர்வதுபோலிருந்தது. பலமுறை திரும்பி வெளியே செல்லும் உடலசைவுகள் எழுந்தபோதும் கால்கள் அசைவுகொள்ளவில்லை.

விதுரர் மெல்ல துயிலத் தொடங்கினார். அடித்தொண்டை ஒலி எழுந்தது. இன்னொரு கையும் நழுவி மஞ்சத்தில் விழ இரு கால்களும் விடுபட்டு விரிந்தன. அவள் அப்போதும் விதுரரையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவர் திரும்பி அவளைப் பார்த்தார். கருங்கல்முகம். உணர்வுகள் நிகழவே முடியாதது.

அறியாமலேயே அவர் கால்கள் திரும்பின. வெளியே வந்தபோது முற்றத்தின் வெளிச்சம் விழிகளை குருடாக்கி இமைகளுக்குள் குருதிக்குமிழிகளை சிதறடித்தது. கண்களை மூடிக்கொண்டு சிலகணங்கள் நின்றார். தலைசுற்றி விழுந்துவிடுவோம் என ஐயுற்றார். கைநீட்டி வாயில்தூணை பற்றிக்கொண்டார். குளிர்காற்று வந்து பட்டபோதுதான் உடல் வியர்வைகொண்டிருப்பது தெரிந்தது. காது அடைக்கும் ஒரு ரீங்காரம். வெண்கல மூடி தட்டப்பட்டதுபோல.

தருமன் முற்றத்தில் இறங்கி மகிழமரத்தடி நோக்கி சென்றார். நகுலன் “பேசிவிட்டாரா?” என்றான். அவருக்குப் பின்னாலேயே திரௌபதியும் வந்து படியிறங்கி நின்றாள். நகுலன் “நான் சென்று அவளை குடிலில் விட்டுவிட்டு வருகிறேன், மூத்தவரே” என்றான். அவன் அருகே சென்று “செல்வோம்” என்றபோது திரௌபதி மறுமொழி சொல்லாமல் தலையசைத்தாள். அவர்கள் சென்று மறைவதை தருமன் நோக்கி நின்றார். மழைகழுவிய காற்றை நிறைத்திருந்த பகல் ஒளி கண்களை கலங்கி வழியச்செய்தது.

[ 8 ]

அர்ஜுனன் ஒன்றும் சொல்லாமல் அவன் புதியதாக அமைத்த வில்லை வளைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். “இன்று நான் அடைந்த உளச்சோர்வு எதனால் என்று பின்னரே எனக்குப் புரிந்தது, இளையோனே” என்று தருமன் சொன்னார். “அவள் நம்மை மன்னிக்கவில்லை. பன்னிரு படைக்களத்திலிருந்து வெளிவந்த அக்கணத்தின் உளநிலையிலேயே இப்போதும் இருக்கிறாள்.”

“அவள் மூத்தவரை முழுமையாகவே மன்னித்துவிட்டாள்” என்று அர்ஜுனன் சொன்னான். “அவருடன் கானாடுகையில் அவள் முகம் கொள்ளும் மலர்வு அதையே காட்டுகிறது. இளையோரிடம்கூட அவளுக்கு பெருஞ்சினமென ஏதுமில்லை.” தருமன் “ஆம், அவள் பெருஞ்சினம் கொண்டிருப்பது என்னிடம் மட்டுமே” என்றார். “அது முற்றிலும் சரியானது.” அர்ஜுனன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை.

அவன் ஏதாவது சொல்வான் என தருமன் எதிர்பார்த்தார். அவன் மீண்டும் தன் வில்லில் மூழ்கிவிட்டமை கண்டு தன் கையிலிருந்த சருகை வீசிவிட்டு தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தார். அவர் குழற்சுருள்கள் முகத்தின் மேல் நிழலாட விழுந்து கிடந்தன. அருகே கிடந்த குச்சி ஒன்றை எடுத்து மண்ணை தோண்டிக் கொண்டிருந்தார். அப்பால் நகுலன் வருவதைக் கண்டதும் நிமிர்ந்து பார்த்தார்.

“உடல் எளிதாக இருக்கிறது. நற்செய்தி என எண்ணுகிறேன்” என்றான் அர்ஜுனன். நகுலன் அருகே வந்து தலைவணங்கி “அமைச்சர் தேறிவருகிறார் என்கிறார்கள் மருத்துவர்கள். காய்ச்சல் மிகவும் குறைந்திருக்கிறது. இன்று பால்கஞ்சியும் பழச்சாறும் அருந்தியிருக்கிறார். ஓரிருநாளில் முற்றிலும் நலமடைந்துவிடுவார் என்கிறார்கள்” என்றான். தருமன் பெருமூச்சுடன் “நன்று” என்றார்.

“இன்று காலையில் நினைவு மீண்டிருக்கிறது. தன் அணுக்கன் ஒருவனுக்கு ஓர் ஓலை அனுப்பும்படி சொல்லியிருக்கிறார். இப்பகுதிக்குரிய அவரது ஒற்றன் என எண்ணுகிறேன்” என்றான் நகுலன் அருகே அமர்ந்தபடி. “நாம் சென்று பார்ப்பதை விரும்புவாரா?” என்று தருமன் கேட்டார். “ஆம் என்றே எண்ணுகிறேன். அவர் மீண்டும் முந்தைய உளநிலைக்கே மீண்டுவிட்டார் எனப் படுகிறது” என்று நகுலன் சொன்னான்.

ஆனால் அவர் உடல்நிலை மீண்டது தனக்கு ஏன் பேருவகையென எதையும் அளிக்கவில்லை என தருமன் எண்ணிக்கொண்டார். அது ஆறுதலை அளித்தது, கூடவே ஓர் ஏமாற்றத்தையும். விதுரர் இறந்துபோவதற்குரிய மிகச்சரியான தருணம் இதுவன்றி வேறேது? அறத்தின்பொருட்டு மூத்தோனையும் நகரையும் துறந்து அறியாக்காடொன்றின் கல்விநிலையில் அவர் நோன்பிருந்து இறந்தார் என்றால் அது சூதர்களால் பாடப்படும். காவியங்கள் எழுதப்படும். தலைமுறைகள் அதைக் கேட்டு கண்ணீர் மல்குவார்கள்.

எதுவாக அவர் அறியப்பட்டாரோ அதை நிறுவிவிட்டு இறப்பதென்பது பெரும்பேறு. அந்த வாய்ப்பு வந்தது, அதை அவர் கடந்து செல்கிறார். அவர் பிழைதான் அது. இன்னும் அவர் ஆத்மா விடைபெற விரும்பவில்லை. அந்த மெலிந்த கரிய கூட்டை கவ்விக்கொண்டு இன்னமும் இங்கு எஞ்ச விரும்புகிறது.

இனி அவர் என்ன செய்யப்போகிறார்? இங்கே நோன்பிருந்தால் எத்தனை காலம்? காலம் செல்லச்செல்ல அனைத்துப் பெருமைகளும் அன்றாட வாழ்வாகிவிடுகின்றன. பெரும் இழப்புகளும் பலிகளும் மறக்கப்படுகின்றன. இங்கிருந்தால் ஒரு முதியவயது மாணவனாக அவர் மாறக்கூடும். அவரது பெயர்கூட காலப்போக்கில் மறக்கப்படும். மாணவர்கள் சூட்டிய பெயரே எஞ்சும். பன்னிரண்டு ஆண்டுகள் ஒரு முழுவாழ்க்கை. அதன்பின் அவர் முன்பு ஓர் அமைச்சராக இருந்தார் என்பது அவருக்கே பழையநினைவு.

விடைபெற்று மீண்டும் அஸ்தினபுரிக்குச் செல்லலாம். அங்கே அவரை திருதராஷ்டிரர் ஆரத்தழுவி வரவேற்பார். இவர் கிளம்பியதுமே அவர் நோயுற்று படுத்துவிட்டார் என்றார்கள். தமையனின் அவையில் இளையோன் என இருக்கலாம். ஆனால் துரியோதனனின் அரசவையில் இனி அவர் அமைச்சர் அல்ல. உரிய இடத்தில் உரிய முறையில் இறக்காதவர்களுக்கு பெருமை இல்லை.

அவ்வெண்ணங்களில் இருந்த இரக்கமின்மையைக் கண்டு அவரே அஞ்சினார். எழுந்து காட்டுக்குள் புகுந்து பின்னியும்பிரிந்தும் சென்ற ஒற்றையடிப்பாதைகள் வழியாக நடந்தார். வழிதவறி மீண்டார். வழிகளைக் கண்டடைந்ததும் உவகை கொண்டார். அவரை மேலிருந்து ஒரு குட்டிக்குரங்கு உற்றுப் பார்த்தது. ஆர்வம் மிகுந்து கிளைவழியாக அவருடனேயே வந்தது. அவருக்கு இளமையில் இடும்பவனத்தில் உடன் வந்த குட்டிக்குரங்கு நினைவுக்கு வந்தது. அது மூத்து முதற்குரங்காகி முதுமைகொண்டு மறைந்திருக்கும். அதன் மைந்தரும் பெயர்மைந்தரும் காடுகளுக்குள் நிறைந்திருப்பார்கள்.

அவர் அந்தக் குட்டிக்குரங்கை நோக்கி புன்னகைத்தார். அவர் கையை தூக்கியதும் அது அஞ்சி ஓசையிட்டபடி மேலே சென்றது. மீண்டும் தயங்கி இறங்கிவந்தது. மெல்லமெல்ல அவரை அணுகியது. அவர் அதை நோக்காதபோது அவர் ஆடையைத் தொட்டு இழுத்துவிட்டு கிளைகளில் ஏறிச்சென்றது. அவர் அதையும் பொருட்படுத்தவில்லை என்று கண்டுகொண்டதும் அவருக்கு இணையாகவே நடக்கத் தொடங்கியது.

அவருக்கு அது தன் திறனையும் தன் காட்டின் சிறப்பையும் காட்டத் தொடங்கியது. பாய்ந்து கிளைகளில் ஏறி காற்றில் வால் விடைக்கத் தாவியது. ஒரு மரத்தில் ஏறி சில்லைக்கிளை வழியாக பிறிதொன்றுக்குச் சென்றது. தலைகீழாக வாலால் சுருட்டிப்பிடித்து கிளைகளில் தொங்கி ஊசலாடியது. எதிரே வந்த மான் ஒன்றின் தலைக்குமேல் சென்று அதன் கொம்பைப்பிடித்து ஆட்டிவிட்டு மேலேறிக்கொண்டது.

அவர் சிரிக்கத் தொடங்கியதும் அதன் துள்ளல் கூடியது. கிளைகளை உலுக்கி சிறிய பழங்களை உதிரச்செய்தது. நாவல் பழங்களை அவர் குனிந்து பொறுக்கிக்கொண்டார். அதுவும் வந்து பழங்களை பொறுக்கிக்கொண்டது. பின்னர் ஒரே தாவலில் அவர் தோள்மேல் ஏறி அமர்ந்து பழங்களை நீட்டியது. அதன் நகங்களின் தொடுகை அவரை கூசிச்சிரிக்க வைத்தது.

IMG-20160815-WA0000

காட்டின் எல்லைவரை உடன்வந்த குரங்கு அங்கே அதிர்ச்சியுடன் நின்றது. “எதற்காகப் போகிறாய்?” என்று பார்த்தது. கிளைகளிலும் தரையிலுமாகத் தாவி “போகத்தான் வேண்டுமா?” என்று கேட்டது. சினம்கொண்டு இரு கைகளையும் ஊன்றி சிவந்த குதத்தைக் காட்டி கூச்சலிட்டபடி உடலை ஊசலாட்டியது. அவர் அதை நோக்கிச் சிரித்து கையசைத்தபின் குடில்களை நோக்கி சென்றார்.

அவர் செல்வதைப் பார்த்தபடி அது அங்கேயே நின்றது. குடில்முற்றத்தை அடைந்தபின் அவர் திரும்பிப் பார்த்தார். அது அங்கேயே ஒரு கிளையில் அமர்ந்து அவரை பார்த்துக் கொண்டிருப்பதை கண்டார். தன் குடிலை அணுகும்போது நகுலன் அவருக்காகக் காத்திருப்பதைக் கண்டார். அவர் முகம் மலர்ந்திருப்பதைக் கண்டு அவன் குழம்புவது தெரிந்தது. “மூத்தவரே, அமைச்சர் உங்களைப் பார்க்க விழைந்தார் என்று செய்தி வந்தது” என்றான். “ஆம்” என்று அதே மலர்வுடன் அவர் மறுமொழி சொன்னார். “அவரது உடல்நிலை மிகவும் சீரடைந்துவிட்டிருக்கிறது… ஒருநாளுக்குள் அத்தனை மாறுதலென்பது விந்தை என்று சொன்னார் மருத்துவர்.”

“இப்போது மருத்துவர்கள் அவருக்கு நஸ்யம் அளித்துக்கொண்டிருக்கிறார்கள். காத்திருப்போம். அவர்கள் செய்தியனுப்பியதும் சென்று சந்திப்போம்” என்றான் நகுலன். தருமன் வாயிற்படியில் அமர்ந்தார். “தெளிந்திருக்கிறீர்கள், மூத்தவரே” என்றான். “ஆம், காடு அளிக்கும் தெளிவுகளுக்கு முடிவேயில்லை. சத்யகாம ஜாபாலர் அடைந்த மெய்மை காட்டிலிருந்தே என இப்போது புரிகிறது” என்றார் தருமன். அப்பால் நிழலாடியது. அவர் திரும்பிப்பார்க்க அந்த குட்டிக்குரங்கு முற்றத்தின் எல்லையில் நின்றிருந்த அசோகமரத்தின் அடியில் அமர்ந்திருந்தது.

நகுலன் அதை நோக்கியதும் அது உளிதீட்டும் ஒலியை எழுப்பியபடி மரத்தில் ஏறிக்கொண்டது. “என்னுடன் காட்டில் உலா வந்தது. என்னைப் பிரிய உளமில்லாமல் தொடர்கிறது” என்றார் தருமன். “அன்பிலிருந்து விலங்குகளுக்கு விடுதலையே இல்லை என்பார்கள். அன்பை அறுக்கத் தெரிந்த ஒரே உயிர் மானுடனே” என்றான் நகுலன். குட்டிக்குரங்கு மெல்ல நடந்து தருமனின் அருகே வந்து நின்றது. அதன் வால் நெளிந்தது, கண்கள் சிமிட்டி சிமிட்டி மூடின. அவர் கைநீட்ட பாய்ந்து அருகே வந்து அவர் மடிமேல் ஏறி அமர்ந்து தன் கைகளை விரித்தது. அதில் அது நாகப்பழங்களை கொண்டுவந்திருந்தது.

“இத்தனை தொலைவுக்கு நசுங்காமல் கொண்டுவந்திருக்கிறது” என்றான் நகுலன். தருமன் அதன் பிடரியையும் முதுகையும் வருடிக்கொண்டிருந்தார். அது மல்லாந்து அடிவயிற்றைக் காட்டியது. வெளிர்சாம்பல் நிற மயிர்மென்மையை அவர் வருடியதும் அப்படியே துயிலத்தொடங்கியது.