சொல்வளர்காடு - 20

[ 7 ]

மைத்ரேயர் தன் மாணவர்களுடன் கிளம்பிக்கொண்டிருந்தபோது குடிலுக்குள் யுயுத்ஸு பாய்ந்து நுழைந்து “தந்தை வந்துகொண்டிருக்கிறார்” என்றார். நான் திகைத்து “எங்கே?” என்றேன். “இங்குதான்… சஞ்சயன் அழைத்துவருகிறான். இடைநாழியை கடந்துவிட்டார்” என்றார். நான் உள்ளே சென்று அங்கே வழித்துணைக்காவலர்களிடம் பேசிக்கொண்டிருந்த கனகரிடம் “அமைச்சரே…” என்று மூச்சிரைத்தேன். அவர் திகைத்து “என்ன?” என்றார். “பேரரசர் வந்துகொண்டிருக்கிறார். இடைநாழியை கடந்துவிட்டார்” என்றேன்.

இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. மைத்ரேயரிடம் பேரரசர் அவரைப் பார்க்க வருகிறார் என்று எப்படி சொல்வது என கனகர் தயங்கியபோது அவரது முதல்மாணவன் மறு அறைக்குள் சென்று அதை அவருக்கு அறிவித்தான். அவர் மெல்லிய குரலில் ஏதோ சொல்வது கேட்டது. கனகர் வெளியே ஓடினார். அதற்குள் பேரரசர் உள்ளே நுழைந்துவிட்டிருந்தார். அவர் கைபற்றி உடன்வந்த சஞ்சயன் “இவ்வழி” என்றான். அவர் “ம்” என முரசுபோல உறுமினார். கனகர் சென்று பணிந்து முகமன் சொன்னார். “நான் முனிவரை பார்க்கவேண்டும்” என்றார் பேரரசர்.

அதற்குள் மைத்ரேயரின் மாணவர் வெளிவந்து வணங்கி முகமன் உரைத்து “ஆசிரியர் தங்களை அழைத்துவரும்படி சொன்னார், பேரரசே” என்றார். “ம்” என முனகியபடி சஞ்சயன் கைபற்றி பேரரசர் உள்ளே சென்றார். நானும் கனகருக்குப் பின்னால் மெல்ல உள்ளே நுழைந்தேன். அறைக்குள் மரவுரி விரித்த சேக்கையில் அமர்ந்திருந்த மைத்ரேயர் எழுந்து இருகைகளையும் விரித்து “பேரரசருக்கு நல்வரவு” என்றார். பீடத்தை சுட்டி “வருக!” என்றார். பேரரசர் விழியிழந்தவர் என்பதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பேரரசர் அருகே சென்று தலைதாழ்த்தி வணங்கினார். “என் அரசுக்கு வந்திருக்கும் எந்தையர் வடிவம் நீங்கள். நானும் என் மைந்தரும் அடிமேல் முடிபடிய வணங்குகிறோம், முனிவரே” என்றார். “நல்லூழ் தொடர்க!” என்றார் மைத்ரேயர். அமர்ந்து தன் கைகளை கைப்பிடிமேல் வைத்து மெல்ல முன்சரிந்து “மைந்தனை சென்று பார்த்தீர்கள் என்று அறிந்தேன்” என்றார். “ஆம், அவனுக்கு அறவுரை சொல்லவேண்டியது என் கடமை. அதை செய்தேன்.” பேரரசர் சிலகணங்கள் விழிகள் உருள அசைவற்றிருந்தபின் “அவன் எளிய உள்ளம் கொண்டவன். இனியவன். இன்று ஊழ் அவன் விழிகளை மறைக்கிறது” என்றார்.

“அனைவரும் ஏதேனும் வகையில் விழியிழந்தவர்களே” என்றார் மைத்ரேயர். அம்மறுமொழியால் சற்று சினம் கொண்ட பேரரசர் “தாங்கள் அவனை கடுமையான சொற்களால் ஆற்றுப்படுத்தியதாக அறிந்தேன்” என்றார். “ஆம், மிகக்கடுமையான சொற்கள். ஏனென்றால் அவன் நெகிழ்வற்றவனாக இருந்தான். பாறைபோல. என் தலையை அப்பாறையில் முட்டிக்கொண்டதாக உணர்ந்தேன். அத்துடன் அவன் ஆணவம்…” தன் நாவில் எழுந்த அச்சொல்லாலேயே அதை உணர்ந்து கடும் சினம்கொண்டார் மைத்ரேயர். “என் முன் தொடைதட்டினான்… ஆம், தொடையை. அவனுடைய அதே தொடையை.”

பேரரசர் “அவன் தங்கள் சிறுமைந்தனைப் போல. கொடிவழியில் நீங்கள் வியாசபிதாமகருக்கு நிகரானவர்” என்றார். “அவன் பிழைகளை பிள்ளைவிளையாட்டெனக் கொள்ளவேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள் நீங்கள்.” மைத்ரேயர் சினம் மீதூற இருக்கை விட்டு எழுந்து “பிள்ளைவிளையாட்டா? எது? அவன் எவரென நூல்தேர்ந்து நோக்கினேன். அவன் கலிவடிவம். இப்புவியை குருதியில் ஆழ்த்தவந்தவன். அவன் வெல்லப்படுவான். அழிக்கப்படுவான். ஆனால் அவன் இங்கு நிறுவிவிட்டுச்செல்பவை என்றுமிருக்கும்…” என்றார்.

“ஆம், அதை அவன் பிறந்தபோதே நிமித்திகர் சொன்னார்” என்றார் பேரரசர். “அவன் வளர்ந்தது பிறப்பிலேயே சுமத்தப்பட்ட அந்த அடையாளத்துடன்தான். அனைத்துத் தகுதிகளுமிருந்தும் என் மைந்தன் அவைகள்தோறும் சிறுமைகொண்டது அந்த அடையாளத்தால்தான். இன்று நீங்களும் அவன்மேல் சினம்கொள்வது அதனாலேயே.” மைத்ரேயர் “அவன் எச்சொல்லிலும் அமையப்போவதில்லை. அழிவை அன்றி எதையும் அவனிடம் நாம் இனி எதிர்பார்க்கவேண்டியதில்லை. அரசே, அவன் இறுதியை நான் பார்த்துவிட்டேன்…” என்றார்.

“நானும் அதை கனவுகளில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்நகரின் அவைநடுவே பாண்டவர் தங்கள் வாயால் அதை அறைகூவிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்நகரே அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறது இப்போது” என்றார் பேரரசர். “ஆனால் நீங்கள் முனிவர். உங்கள் சொல் எழுந்துவிட்டதென்றால் மக்கள் இனி அதையே ஆதாரமாகக் கொள்வார்கள். அச்சொல் அவனைச் சூழ்ந்து அழிக்கும்.” மைத்ரேயர் “ஆம், அழிக்கும். அதை நான் அறிவேன். அழிக கலி!” என்றார். “மூதாதையே, நீங்கள் அவன் மேல் தீச்சொல்லிடுவது உங்கள் கால்களை நீங்களே அனல்கொண்டு சுடுவதைப்போல. அவன் உங்கள் கொடிவழியினன்.” மைத்ரேயர் “இல்லை, அவன் அழியவேண்டியவன். அழியப்போகிறவன்” என்றார்.

“நான் மன்றாட வந்திருக்கிறேன். உங்கள் கால்கள்மேல் என் தலை அமர்கிறது. எளிய தந்தையாக வந்து உங்கள் முன் கைநீட்டி இரக்கிறேன். என் மைந்தர் செய்த பிழைகளை அவர்களின் பிதாமகருக்கு நிகரான நீங்கள் பொறுத்தருளவேண்டும். அவர்கள்மேல் உங்கள் தீச்சொல் விழலாகாது” என்று சொல்லி பேரரசர் தன் கைகளை நீட்டினார். “அது தீச்சொல் அல்ல, மைந்தா. அது ஊழ். நான் அதை கண்டுசொன்னேன்” என்று அக்கைகளைப் பற்றியபடி மைத்ரேயர் சொன்னார். “இல்லை, அது உங்கள் வாயிலிருந்து வந்தது என்பதனாலேயே தீச்சொல்தான். அதற்கு நீங்களே மாற்றுச்சொல் உரைக்கவேண்டும்.” என்றார் பேரரசர்.

“ஊழுக்கு நான் மாற்று உரைப்பதா?” என்றார் மைத்ரேயர். “அவர்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டால் ஆணவத்தையும் பெருவிழைவையும் கடந்து தங்கள் எல்லைக்குள் அமைந்தால் அவ்வூழில் இருந்து அவர்கள் விடுபடக்கூடும்.” பேரரசர் கைகளைக்கூப்பி கண்ணீர் வழிந்து தாடிமயிரிழைகள் மேல் வழிய “கனிவுகொள்ளுங்கள். அருள்புரியுங்கள். அவர்கள் வாழ்வார்கள் என ஒரு சொல் சொல்லுங்கள்” என்றார். “என் சொல் அதுவே. அவர்கள் வழிதேரட்டும். பிறிதொன்றும் நான் சொல்வதற்கில்லை” என்றபடி மைத்ரேயர் எழுந்துகொண்டார். திரும்பி தன் மாணவனிடம் “அனைத்தும் சித்தமல்லவா? நாம் இப்போதே கிளம்பவேண்டும்” என்றார்.

பேரரசர் அப்படியே கூப்பிய கைகளுடன் கண்ணீருடன் அமர்ந்திருந்தார். ஒளியிழந்த விழிகளிலிருந்து நீர்வழியக்காண்பது நெஞ்சுலையச்செய்தது. நான் பின்னடைந்தேன். மைத்ரேயர் “பேரரசே, நான் இன்றே கிளம்புகிறேன். எங்கும் எதையும் ஒருங்கிணைக்கும் வல்லமைகொண்டவன் என்பதனால் எனக்கு இப்பெயரை என் ஆசிரியர் இட்டார். இன்று என் எல்லையை கண்டேன். எனக்கும் இது ஆணவக்குலைவே. நன்று” என்றபின் மாணவர்களை நோக்கி கைகளால் ஆணையிட்டுக்கொண்டு விலகிச்சென்றார்.

சஞ்சயன் குனிந்து அரசரின் காதில் “விலகிச்செல்கிறார். அவர் கொண்டிருக்கும் கசப்பு அவர் வலக்கை விரல்கள் இறுகக்குவிந்திருப்பதில் தெரிகிறது. இடக்கையால் தாடியை நீவிச்சுருட்டிக் கசக்குகிறார். நிலையழிந்திருக்கிறார்” என்றான். யுயுத்ஸு “கிளம்புவோம், தந்தையே” என்று அவர் கைகளை பற்றினார். பேரரசர் எழுந்து உரத்த குரலில் “மூத்தவரே, நான் விடைகொள்கிறேன். என் கண்ணீர் மட்டும் இங்கு விழுந்துகிடக்கிறது. என்மேல் கனிந்து பிறிதொருமுறை எண்ணிப்பாருங்கள்… என் மைந்தர் மேல் உங்கள் சொல்பழி விழலாகாது” என்றபின் யுயுத்ஸுவின் கைகளைப்பற்றிக்கொண்டு நடந்தார்.

கனகரும் நானும் உடன் நடந்தோம். அவர் தலையை உருட்டியபடி அவ்வப்போது நின்று யானைபோல் உடலுக்குள் உறுமியபடி சென்றார். யானை யானை என்றே தோன்றிக்கொண்டிருக்கிறது. யானைபோல அளியது பிறிதுண்டா? உடல் பெரிது, தலையும் கொம்புகளும் செவிகளும் மூக்கும் அனைத்துமே பெரியவை. ஆகவே உவகையும் அச்சமும் ஐயமும் துயரமும் மிகப்பெரியவை. குழந்தைபோல களிகூர்வது யானை. சிறுபூச்சிகளைக் கண்டு அது அச்சம்கொள்வதை கண்டிருக்கிறேன். கிளைத்த மண்ணைக்கண்டு ஐயுற்று விலகுவதைக் கண்டிருக்கிறேன்.

அரசே, துயர்கொண்ட யானைகளை பலமுறை பார்த்திருக்கிறேன். அவை இருள் திரண்டு குளிர்ந்து பாறையென்றாகிவிட்டதுபோல் நின்றிருக்கும். அவை நின்றிருக்கும் இடமே கருமைகொண்டுவிடும். அவற்றை அணுகிவரும் பறவைகள்கூட அத்துயரையே சிறகால் அளையும். துயர்கொண்ட யானை பெரும்பாலும் உயிர்வாழ்வதில்லை. உண்ணாது அருந்தாது நின்று அத்துயரையே உயிர்த்து உடல்விம்மி துதிக்கை தளர்ந்து செவிநிலைத்து விழுந்து இறக்கும். அத்தனைபெரிய துயரை காற்று தாளாது. அது மண்ணுக்கே உரியது. மண் இன்றுவரை இங்கு வாழ்ந்து இறந்த பல்லாயிரம்கோடி உயிர்களின் துயர் விழுந்து மட்கி உப்பாகி விரிந்து கிடப்பது.

அந்த எண்ணங்களின் எடை என் கால்களையும் அழுத்தியது. பேரரசர் அரண்மனைக்குள் சென்றதுமே “விதுரனை வரச்சொல்!” என்றார். நான் “அவ்வண்ணமே” என்றபின் விரைந்தேன். அமைச்சுநிலைக்குச் சென்று விதுரரிடம் நடந்தவற்றைச் சொல்லி அரசர் அழைக்கிறார் என தெரிவித்தேன். அவர் ஒன்றும் சொல்லாமல் கச்சையை இறுக்கிக்கொண்டு எழுந்தார். அதற்குள் அஸ்வதந்தம் இருக்கிறதா என நான் எண்ணிக்கொண்டேன். இங்கு உயிர்கொண்டு வரும் பொருட்களிலேயே கடினமானது குதிரையின்பல். ஒருகணமும் ஓயாது அசைபோடுவது. சினம்கொண்ட குதிரை கடிவாளத்து இரும்பை மெல்வதை கண்டிருக்கிறேன்.

விதுரர் சீரான நடையில் என் முன் சென்றார். அவர் கைகள் இயல்பாக இருந்தன. உடல் நிலைகொண்ட தோள்களுடன் நிமிர்ந்த கழுத்துடன் நேர்கோடென சென்றது. ஆனால் அவர் இயல்பாகத் திரும்பி அருகே திறந்திருந்த வாயிலை நோக்கவில்லை. சாளரத்திரைச்சீலை ஒன்று அவரைத் தொட எம்பியபோதும் விழிதிருப்பவில்லை. அவர் அந்த நிகர்நிலையை நடிக்கிறார் என உணர்ந்தேன். தன்னை முழுமையாகத் திரட்டி கூர்கொண்டிருக்கிறார். கூர் என்பது இயல்புநிலை அல்ல. பரவுதலே உள்ளம். இருக்கும் இடமெல்லாம் வழிந்து நிறைவதே மானுடனின் இருப்பு. கூர்கொள்பவர்கள் அரசுசூழ்பவர்கள், போர்வீரர்கள், வணிகர்கள். கூர்கொண்ட அனைத்தும் படைக்கலங்களே. அவர்கள் அறியாத்தெய்வங்களின் போருக்கு கருவியாகிறார்கள். அரசே, உச்சநிலைகளில் என்னைப்போன்ற எளியவர்கள்கூட கூரிய எண்ணங்களை அடைகிறோம். அவற்றிலேயே நாம் முழுமையாக வாழ்கிறோம்.

இசையவையில் பேரரசர் தன் பீடத்தில் செதுக்கி வைக்கப்பட்ட சிலை என நிமிர்ந்து இறுகி அமர்ந்திருப்பதை தொலைவிலேயே கண்டேன். விதுரர் உள்ளே நுழைந்ததும் ஒரு சிறிய அசைவு உருவாகியதா அது என் விழிமயக்கா என ஐயுற்றேன். சஞ்சயனின் இதழ்கள் அசைந்துகொண்டே இருந்தன. அவன் சொல்லில் நானும் வருவேனா? வராமலிருக்கமாட்டேன், ஏனென்றால் அவன் காற்று போல அனைத்தின்மீதும் பரவுபவன். அவனுக்கென சித்தமே இல்லை. அவன் விழிகளுக்குப்பின் அவரது சித்தமே நின்றிருந்தது.

விதுரர் சென்று வணங்கியதும் பேரரசரின் கைகள் பீடத்தின் கைப்பிடிமேல் இறுகுவதைக் கண்டேன். என் நெஞ்சு அதிரத்தொடங்கியது. “மைத்ரேயர் ஏன் இங்கு வந்தார்?” என்றார். “நான் தங்களிடம் சொன்னேன். அவர் பராசரகுலத்துப் பெருமுனிவர். முனிவர்கள் அரசரைப் பார்க்க வருவது வழக்கமே” என்றார் விதுரர். “ஆம், ஆனால் இங்கு என்ன நிகழ்ந்தது என உலகமே அறியும். இன்று சூதர்கூட அஸ்தினபுரியை தேடிவருவதில்லை. அவர் எப்படி வந்தார்?” என்றார் பேரரசர். “பேரரசே, மைத்ரேயர் மிக எளியவர். அவருக்கு அரசியல்நிலைமைகள் தெரியாது” என்றார். “இல்லை, அவர் வந்தது திட்டத்துடன்தான். அவரது திட்டம் இல்லையென்றால் பிறிதொருவரின் திட்டம்” என்றார் பேரரசர்.

“அவர் வந்தபின் தெரிந்திருக்கும் அரசன் நோய்ப்படுக்கையில் இருக்கிறான் என. அவன் உள்ளமும் உடலும் நிலையிலில்லை என்று தெரிந்தபின்னரும் ஏன் அவர் அங்கே சென்றார்? எவர் அவரை அங்கு கொண்டுசென்றது?” விதுரர் “பேரரசே, நான் உங்களிடம் சொன்னேன். உங்கள் ஆணைப்படியே அவர் அரசரை பார்க்கச் சென்றார்” என்றார். பேரரசர் “ஆம், நீ என்னிடம் சொன்னாய். உண்மை. ஆனால் நீ சொல்வதற்கு முன்னரே அனைத்தையும் முடிவுசெய்துவிட்டாய். அச்சூழ்ச்சியில் நான் விழுந்தேன்…” என்றார். விதுரர் “அவ்வண்ணமெனில் அவ்வாறே. அவர் அரசருக்கு நெறியுரைக்கவேண்டுமென்பதே என் விழைவு. அதற்காகவே அச்சூழ்ச்சி” என்றார்.

“இல்லை, நீ அறிவாய். மைந்தன் என்ன உளநிலையில் இருக்கிறான் என. நோய்ப்படுக்கையில் வலியில் துடிக்கும் ஒருவன் நன்றுதீதென ஏதறிவான்? அவன் முனிவரை சிறுமைசெய்வான் என நீ அறிந்திருந்தாய். ஆகவேதான் அவரை அங்கே கொண்டுசென்றாய். அவர் வாயால் அரசன் தீச்சொல்பெறும்படி செய்தாய். அதை இந்நேரம் இந்நகரே அறிந்திருக்கும். அந்தணர் கொதிக்கத் தொடங்கிவிட்டிருப்பார்கள். குடிகளில் அச்சம் பரவிக்கொண்டிருக்கும். அதுவே உன் விழைவு” என்று பேரரசர் கூவினார். “நீ என் மைந்தனை அவர் முன் இழுத்துவிட்டாய். அவரிடமிருந்து பழிபெறும்படி களம் அமைத்தாய்.”

“மூத்தவரே, இப்பழிச்சொற்களை உங்களிடமிருந்து எக்கணமும் எதிர்பார்த்திருந்தேன். இப்போது பேசுவது அஸ்தினபுரியின் அறச்செல்வர் அல்ல. விழியிழந்த வெறும்தந்தை” என்றார் விதுரர். “ஆம், நான் வெறும் தந்தைதான். இனி அதை மறுக்கவேண்டியதில்லை. இப்புவியில் தெய்வங்களைவிட மூதாதையரைவிட அறத்தைவிட எனக்கு என் மைந்தனே மேலானவன். அரசும் குடிகளும் உறவும் நட்பும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. போதுமா? இனி எதையாவது நான் தெளிவாக்கவேண்டுமா?” என்று கூவினார் பேரரசர். உணர்வெழுச்சி கொண்டு எழுந்து இருகைகளையும் விரித்து கழுத்து நரம்புகள் புடைக்க கூவினார்.

“ஆம், என் மைந்தனை முதலில் இக்கைகளில் எடுத்த கணம்முதல் அவன் நலனன்றி எதையும் நான் எண்ணியதில்லை. அவனே நான். என்னிலிருந்து நான் அள்ளி எடுத்த பழுதற்ற நான் அவனே. அவன் ஆற்றியவை நான் விழைந்தவையே. அவன் நிலைகொள்வது என் அலைகளுக்கு மேலேயே. ஒரு தருணத்திலும் அவனை விட்டுக்கொடுக்கமாட்டேன். ஒருகணமும் அவனிடமிருந்து என் உள்ளம் விலகாது… சென்று சொல் உன் அவையோரிடம். அறமுரைக்கவரும் அந்தணரிடம் சொல். முனிவர்களும் தெய்வங்களும் அறிக, நான் என் மைந்தன் அமர்ந்திருக்கும் பீடம் மட்டுமே.”

“அதை நான் முன்னரே அறிவேன்” என்றார் விதுரர். மூச்சிரைக்க கையசைத்து ஏதோ சொல்லவந்த பேரரசரை நோக்கி “நீங்கள் இட்ட அணைத்தடுப்புகளையெல்லாம் பெருவெள்ளம் அடித்துச்சென்றுவிட்டதை அறிந்து நிறைவையே அடைகிறேன். இனி எந்தத் தயக்கமும் இல்லை எனக்கு…” என்றார். பேரரசர் வெறுப்பால் இழுபட்ட உதடுகளுடன் “உன் அகம் விழைவதென்ன என்றும் எனக்குத் தெரியும். நீ நாடுவது அவர்களின் நலனை மட்டுமே” என்றார். அவர் முகம் மாறிக்கொண்டே செல்வதைக் கண்டு நான் அஞ்சி பின்னடைந்தேன். அரசே, மானுடர் கீழிறங்குவதை எத்தனை பேருவகையுடன் செய்கிறார்கள். “ஏனென்றால் அவர்கள் உன் மைந்தர். ஓர் இருண்ட வெளியில் நீ அவர்களின் தந்தை.”

“மூத்தவரே…” என உடைந்த குரலில் அழைத்தபடி விதுரர் அறியாது பின்னடைந்தார். அவர் இடக்கை துழாவி பீடத்தின் மேல்விளிம்பை பற்றிக்கொண்டது. “இல்லை என்று சொல், மூடா! இல்லை என்றால் உன் இடைக்கச்சையில் இருக்கும் அஸ்வதந்தம் ஏன் ஒளிவிடுகிறது என்று சொல்!” என்று உறுமியபடி பேரரசர் அருகே வந்தார். “மூத்தவரே!” என அழுகைபோல அழைத்த விதுரர் அவரை நிறுத்தும்படி சஞ்சயனையும் யுயுத்ஸுவையும் மாறிமாறி நோக்கினார். “சென்று சொல் உன் மைந்தரிடம். அவர்கள் என் மைந்தனுக்கு எதிரிகள், ஆகவே அவர்கள் எனக்கும் எதிரிகளே. அவர்கள் காடுவிட்டு மீள்வதை நான் விரும்பவில்லை. மண்புழு மண்ணுக்குள் செத்துமறைவதுபோல அவர்கள் அங்கேயே அறியப்படாது அழிவார்கள் எனச்சொல்… போ!”

“செல்கிறேன், இனி எனக்கு இங்கு இடமில்லை” என்று விதுரர் சொன்னார். “இதுநாள்வரை உங்களை மூத்தவர் என்றழைத்து இங்கு வாழ்ந்தமைக்காக நாணுகிறேன். இனி இந்நகர் என்னுடையதல்ல.” நழுவி கீழே கிடந்த சால்வையை குனிந்து எடுத்துக்கொண்டு விதுரர் வெளியே ஓடினார். “செல், நீ இறந்துவிட்டதாகவே எண்ணிக்கொள்கிறேன். ஒவ்வொருவராக இறந்தால் மட்டுமே எனக்கு விடுதலை” என்று பேரரசர் கூவினார். யுயுத்ஸு “போதும் தந்தையே, போதிய நஞ்சை கக்கிவிட்டீர்கள்” என்றார். “என்ன சொன்னாய், மூடா?” என பேரரசர் கைகளைத் தூக்கியபின் மூச்சிரைக்க நிறுத்தி “விலகிச்செல்… என் கைகளால் இறக்காதே” என்றார்.

“விதுரரைத் தொடர்ந்து நானும் கனகரும் சென்றோம். அவர் நேராக தன் இல்லம் நோக்கி சென்றார். ஆனால் பாதிவழியிலேயே நின்றுவிட்டார். திரும்பி எங்களிடம் தன்னை எவரும் தொடரவேண்டியதில்லை என்று ஆணையிட்டார். நாங்கள் அங்கேயே நின்றோம். அவர் தன் தலைப்பாகையையும் பட்டுக் கச்சையையும் மேலாடையையும் களைந்து நிலத்தில் இட்டார். மார்பணியையும் குண்டலங்களையும் கைவளைகளையும் உருவி அதன்மேல் வீசினார். எங்களை நோக்காமல் நடந்து அரண்மனைமுற்றத்தை அடைந்து அங்கிருந்து சாலையை அடைந்து கிழக்குக் கோட்டைவாயில் நோக்கி சென்றார்” என்றான் காலன்.

“அவர் செல்லும்போதே ஒரு இரவலனிடம் இடையாடையை அளித்துவிட்டு மரவுரியை வாங்கிக்கொண்டது பின்னர் தெரியவந்தது. அவர் கிழக்குக்கோட்டை முகப்புக்குச் செல்லக்கூடுமென நாங்கள் எண்ணினோம். கனகர் அங்கே அவரை சந்தித்து செல்லவேண்டாமென மன்றாடும்படி அமைச்சர்கள் சிலரை அனுப்பினார். கோட்டையை அவர் கடந்தாரென்றால் அங்கே அவரைக்கண்டு தங்கள் தவச்சாலைக்கு அவரை அழைத்துச்செல்லும்படி வேதமுனிவர் நால்வரை நிறுத்தினார். துரோணருக்கும் கிருபருக்கும் செய்தியனுப்பி அவரை செல்லும்வழியிலேயே இடைமறித்து தங்கள் கல்விநிலைகளுக்கு அழைத்துச்செல்லக் கோரினார்.”

“ஆனால் விதுரர் அப்படியே மறைந்துவிட்டார். எவருமறியாமல் கோட்டையை விட்டு நீங்கும் பிறர் அறியா கரவுப்பாதைகளை அவர் அறிந்திருந்தார். அவர் கிழக்குவாயிலை அடையவே இல்லை. கங்கைக்கரைப்பாதைகள் எதிலும் தென்படவில்லை. படகோட்டிகளும் சுமைதூக்கிகளும் விடுதிக்காப்பாளர்களும் சாலைவணிகர்களும் கரந்தலையும் ஒற்றர்களும் அவரை காணவில்லை” என்று காலன் சொன்னான். “அச்செய்தியை அரசருக்கு அறிவிக்கும்படி யுயுத்ஸுவுக்கு சொன்னோம். அவர் பேரரசர் சொல்லவிந்த இறுக்கத்துடன் இருப்பதாகவும் செவிகள் உணர்வுகொண்டிருப்பதகாவும் தெரியவில்லை என்றும் சொன்னார். நான் அனைத்தையும் பேரரசிக்கு சொன்னேன்.”

அதைக்கேட்டு அமர்ந்திருந்த பாண்டவர்கள் மெல்ல இயல்புநிலைக்கு மீண்டனர். நகுலன் சிறிய கற்களை எடுத்து வீசிக்கொண்டிருந்தான். அங்கில்லாதவன்போல மரக்கிளைகளின் மேல்நுனியை நோக்கிக்கொண்டிருந்தான் அர்ஜுனன். தருமன் “அன்னை என்ன சொன்னார்?” என்றார். “அரசிக்கு அங்கு நிகழ்ந்தவை மட்டுமே முழுமையானவை என்று தோன்றவில்லை” என்றான் காலன். “விதுரருக்கும் பேரரசருக்கும் இடையே மேலும் ஓர் உரையாடல் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று பேரரசி சொன்னார். அதை அறியவிழைவதாக ஆணையிட்டார். ஆனால் அப்படி ஒரு மந்தணச்சொல்லாடல் நிகழ்ந்திருந்தால் அதை சஞ்சயனும் யுயுத்ஸுவும் மட்டுமே அறிந்திருப்பார்கள். அதை அவர்களிடமிருந்து அறியமுடியாது என்று நான் சொன்னேன். பேரரசி நிறைவுறவில்லை.”

“பேரரசியின் ஒற்றர்களும் விதுரரை தேடிக்கொண்டிருந்தனர். அவர் சௌனகக்காட்டில் தென்பட்டதாக ஒரு செய்தி வந்தது. அதன்பின் அவர் காம்யகம் சென்றிருக்கக்கூடுமென்றனர். ஆனால் அவரை நேரில்பார்த்தோம் என எவரும் சொல்லவில்லை. அவர் உங்களை வந்து பார்ப்பார் என எண்ணி பேரரசி காத்திருந்தார். நீங்களிருக்கும் இடத்தை பிறர் அறியும்படி ஒற்றர்கள்மூலம் பரப்பியதும் அதற்காகவே. இத்தனை நாட்களாகியும் அவர் உங்களை வந்து பார்க்காததனால்தான் அவர் வடக்கிருக்கக்கூடும் என்னும் ஐயத்தை அடைந்தார். அதன்பின்னரே என்னிடம் உங்களை சந்தித்து இவற்றை எடுத்துரைக்கும்படி ஆணையிட்டார்.”

தருமன் “ஆம், அவர் உண்ணாநோன்பிருக்கக்கூடும். அவர் உள்ளத்தில் பேரரசர் இறையுருவாக மூதாதையாக வீற்றிருந்தார். அந்தப்பெரும் சரிவுக்குப்பின் உயிர்வாழ்தலுக்கான அடிப்படையையே அவர் இழந்திருப்பார்” என்றார். “இந்நேரம் எங்கோ அவர் உண்ணாநோன்பில் இருப்பார். நாம் கண்டடைவதற்குள் உயிர்விட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.” சகதேவன் “அன்னை துயருற்றிருக்கிறாரா?” என்றான். “ஆம் இளையோரே, அன்னையை இத்தனை துயர்மிக்கவராக மிக அரிதாகவே நான் கண்டிருக்கிறேன்” என்றான் காலன். “நாம் என்ன செய்வது? பேரரசரின் ஒற்றர்களும் அன்னையின் ஒற்றர்களும் கண்டடையாத ஒன்றை நாம் எப்படி அறிவது?” என்றார் தருமன். “அவர் இறுதியாக எதையேனும் சொல்லவிழைந்தால் உங்களிடமே சொல்வார். ஆகவே உங்களுக்கு அவரது அழைப்பு வரும் என பேரரசி எண்ணுகிறார்” என்றான் காலன்.

அர்ஜுனன் “காலரே, விதுரர் கிளம்பிச்சென்ற அன்று அச்செய்தியை அன்னையிடம் நீர் சென்று உரைத்தீர் அல்லவா? அன்று அன்னை என்னென்ன சொன்னார்?” என்றான். காலன் “எப்போதும்போல வினாக்களை தொடுத்துக்கொண்டிருந்தார்” என்றான். “அவர் முகம் எப்படி இருந்தது? என்னென்ன வினவினார்? நீர் மானுட உள்ளங்களை நுண்மையாகத் தொடரும் திறன் கொண்டவர். உமது நுண்விழிகளால் கண்டவற்றுடன் சேர்த்தே சொல்லும்” என்றான் அர்ஜுனன்.

“செய்தியை நான் செல்வதற்கு முன்னரே அறிந்திருந்தார். அவரிடம் அப்போது துயர் வெளிப்பட்டதென்றாலும் அதைவிட ஆழத்தில் ஒரு அகநிறைவு வெளிப்பட்டதோ என்று நான் ஐயம் கொண்டேன். என் எண்ணத்திற்காக பொறுத்தருள்க! காதலனைப் பற்றிய செய்தியை எதிர்நோக்கும் இளங்காதலியின் பரபரப்பே அவரிடமிருந்தது. இளவரசே, நிறைவூட்டும் செய்தி என முன்னரே நம் ஆழம் உய்த்துணர்ந்துகொண்டதென்றால் மட்டுமே நாம் பரபரப்படைகிறோம். நம் விழிகள் ஒளிவிடுகின்றன. நம் உதடுகள் கேளாச்சொற்களை உச்சரிப்பவை போல அசைகின்றன. நம் கைவிரல்கள் நெளிகின்றன, பின்னுகின்றன. தீயசெய்தி என்றால் நாம் முன்னரே தளர்ந்துவிட்டிருப்போம். பதற்றம் மட்டுமே விழிகளிலும் குரலிலும் வெளிப்படும். கைகள் இறந்த பாம்புகள் போல தோள்முனையில் தொங்கிக்கிடக்கும்” என்றான் காலன்.

“அவர் என்னிடம் அனைத்தையும் சொல்லும்படி சொன்னார். நான் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் சொல்லெண்ணிச் சொன்னேன். நீ எண்ணியவற்றையும் சொல் என்றார். எண்ணியவை அறிவின்மைகளே அரசி என்றேன். அவை எவையானாலும் அவ்வாறு உன்னை எண்ணவைத்தது எது என்பது எனக்குத் தேவையானதே என்றார். சொல்லி முடித்ததும் மேலும் மேலும் வினாக்களை கேட்டார். மைத்ரேயரிடம் பேச வரும்போது பேரரசர் சஞ்சயனிடம் உரையாடிக்கொண்டு வந்தாரா என்றார். விதுரரிடம் பேரரசர் கொந்தளித்தபோது சஞ்சயனும் யுயுத்ஸுவும் விழிகளால் சந்தித்துக்கொண்டார்களா என்று கேட்டார். பேரரசர் தன் நச்சுச்சொற்களை முற்றுமிழ்ந்தபின்னரே யுயுத்ஸு அவரைத் தடுத்தார் என நான் அவரிடம் அதைச் சொன்னபோதே உணர்ந்தேன். அவ்வண்ணமெனில் அச்சொற்களை அவர் முன்னரே சொல்லியிருக்கவேண்டும், அவற்றை அவர் சொல்லாமல் அடங்கமாட்டார் என்பதனால்தான் யுயுத்ஸு தடுக்கவில்லை என்றார் பேரரசி.”

அர்ஜுனன் மெல்லிய பெருமூச்சுடன் “ஆம், அன்னையை அணுக்கமாக நின்று பார்க்கமுடிகிறது” என்றான். “நான் சொல்லி முடித்ததும் தளர்ந்தவராக அவர் பீடத்தில் அமர்ந்து விரல்களால் பீடத்தின் கைப்பிடியில் தாளமிட்டபடி எண்ணங்களில் ஆழ்ந்தார். அவர் மெல்லமெல்ல அமைதியடைந்து குளிர்ந்து வெண்பளிங்குச் சிலையென ஆனார். அவரது அந்த அமைதிக்கு அருகே அலைபாய்ந்த சாளரத்திரைச்சீலைகள் என்னை தொல்லைப்படுத்தின. அவற்றைச் சென்று நிறுத்தவேண்டுமென விழைந்தேன்” என்றான் காலன். “சற்றுநேரம் கழித்து பேரரசி என்னிடம் அவரது ஒற்றர்படைத்தலைவர் வக்த்ரரை வரச்சொல்லும்படி ஆணையிட்டார். நான் அறைநீங்கினேன்.”

“இறுதியாக ஒன்றை கேட்டிருப்பார்” என்றான் அர்ஜுனன். “அவரது அமைதி அதற்காகத்தான். நீர் அதைச் சொல்லலாமா என எண்ணுகிறீர்.” காலன் “ஆம்” என்றான். “சொல்லும்” என்றான் அர்ஜுனன். “அஸ்வதந்தத்தை அவர் வீசிவிட்டுச் சென்றாரா என்றார். இல்லை என்றேன். சரி நீ போகலாம் என்றார். நான் கதவைமூடிவிட்டு வெளியே சென்றேன்” என்றான் காலன். “இறுதியாக நீர் கண்ட அரசியின் முகம் துயர்கொண்டிருந்ததா?” என்று அர்ஜுனன் கேட்டான். காலன் தயங்கினான். “சொல்க!” என்றான் அர்ஜுனன்.

காலன் மெல்லிய குரலில் “நான் எப்போதுமே கதவுமூடுவதற்கு முந்தைய கணத்தை கூர்ந்து நோக்குவேன். சந்திப்பு முடிந்து கதவுமூடி தனிமைகொண்டுவிட்டோம் என்னும் உணர்வு அறியாமலேயே எழுந்து அவர்களின் முகம் அதை காட்டும்தருணம் அது. அதுவரை அவர்கள் காத்தவை அப்போது விலகிவிட்டிருக்கும். முகம் எப்போதுமே பிறிதொன்றைக் காட்டும்” என்றான். “ஆம், நீர் அப்படிப் பார்ப்பவர் என நான் அறிந்தேன். சொல்க! அன்னையின் முகம் எப்படி இருந்தது?” என்றான் அர்ஜுனன். “பேரரசி முகத்தில் நற்செய்தியை அறிந்த மலர்வு எஞ்சியிருந்தது.”

20

“நன்று” என்றான் அர்ஜுனன். அவன் கைகாட்ட காலன் தலைவணங்கி விலகிச்சென்றான். “மூத்தவரே, நாம் அஞ்சவேண்டியதில்லை. விதுரர் உண்ணாநோன்பு இருக்கமாட்டார்” என்று அர்ஜுனன் சொன்னான். “அவரது செய்தி நம்மைத் தேடிவரும். காத்திருப்போம்.”