சொல்வளர்காடு - 16

[ 6 ]

நெடுந்தொலைவிலேயே திரௌபதியின் வருகையை பீமன் பார்த்துவிட்டான். அத்தனை தொலைவில், அத்தனை சிறிய அசைவுகளிலிருந்தே அவள் சினத்தை புரிந்துகொள்ளமுடிவதை எண்ணி வியந்தான். அவள் தங்கள் குடிலைக் கடந்து செல்வதைக் கண்டு நகுலனும் சகதேவனும் வெளியே வந்து நோக்கி நின்றனர். அப்பால் தாழ்ந்த கிளைகளுடன் நின்றிருந்த வேப்பமரத்தின் அடியில் மரவுரியை விரித்துப் படுத்திருந்த அர்ஜுனன் எழுந்து அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டு அவளை நோக்கினான்.

அடுமனைக்காக கொண்டுவந்து கொட்டப்பட்டிருந்த விறகுக்குவியலருகே கோடரியுடன் நின்றிருந்த பீமன் அரைக்கண்ணால் அர்ஜுனனை நோக்கிவிட்டு அவள் அருகே வருவதற்காக பொறுத்தான். திரௌபதி அவனருகே வந்தபோது அவள் மூச்சிளைப்பின் ஒலியும் புதுவியர்வையின் மணமும் அவனை வந்தடைய விழிவிலக்கி கோடரியின் கூரை நோக்கிக்கொண்டிருந்தான். எப்போதுமே அது ஒரு கரிய கனி என அவனுக்குத் தோன்றுவதுண்டு. அதன் முனை கனிந்தபகுதி என்று.

அவன் விழிதிருப்புவதற்காக ஒருகணம் காத்தபின் திரௌபதி “இனியும் என்னால் இதை பொறுத்துக்கொள்ளமுடியாது, இளையவரே. அதை அந்த மூடரிடம் சொல்லிவிட்டு வந்தேன்” என்றாள். “சிறுமையை செரித்துக்கொள்வதைப்போல பெருஞ்சிறுமை வேறில்லை. பொறுத்துக் கடந்து போகமுடியாவிட்டால் சென்று தலையை மோதி உடைத்துச் சாவதே மேல். இங்கு வரும்போது நான் எண்ணவில்லை, இது இப்படி நம் செயலின்மையை சொல்லாக்கிக் கொண்டாடும் இழிவு என. பாரதவர்ஷமே நம்மை நோக்கி அமர்ந்திருக்கையில் இங்கு இவ்வண்ணம் சொல்லாடிக்கொண்டிருப்பதை எண்ணினால் என் உள்ளம் கூசிச் சிறுக்கிறது” என்றாள்.

பீமன் “ஆம்” என்றான். “அங்கு அவையில் நீங்கள் சொன்ன சொற்களில் சற்றேனும் உண்மை இருந்தால் எழுக! சென்று உங்கள் மூத்தவரிடம் சொல்க, இனி அவரது கயமைக்கும் அச்சத்திற்கும் கட்டுப்பட்டவரல்ல நீங்கள் என்று. அவர் முடிதுறக்கட்டும். சடைசூடி காட்டில் முனிவராக வாழட்டும். அவர் விழைவதும் அதுவே” என்றாள். பீமன் திடுக்கிட்டு அவளை நோக்க “அது ஒன்றும் இங்கு நடக்காதது அல்ல. மூத்தவர் காடேகிய எத்தனை தருணங்கள் இங்குள்ளன? மாமன்னர் சந்தனுவின் மூத்தவர் காடேகியதால் அல்லவா அவர் மணிமுடியை அடைந்தார்?” என்றாள்.

பீமன் திணறலுடன் கோடரியை கீழே வைத்தான். நெஞ்சுதளர்ந்த கணத்திலேயே அது எடைகொண்டது எப்படி என அவன் உள்ளத்தின் ஆழம் வியந்தது. “அரசி, நீ சொல்வதைப்போல அது எளிதல்ல. தமையன் அவரே விரும்பி துறவுபூண்டார் என்றால் வேறென்ன செய்வதென்று எண்ணலாம்” என்றான். திரௌபதி உரக்க “அவர் விரும்பித் துறவுபூணுவார் என எண்ணுகிறீர்களா? மண்ணாசையால் கட்டிப்போடப்பட்டிருக்கிறது அவர் ஆன்மா. ஒருகணமும் அவரால் எதையும் கைவிட முடியாது. தன் எடைக்குமேல் தூக்கிக்கொண்டு தவிப்பவர் அவர். கைவிட விழைவது அவரது இயலாமையால் மட்டுமே” என்றாள்.

“அவரே கைவிடாத வரை அவர் அரசரென இருப்பார்” என்றான் பீமன். “ஆம், ஆனால் நான் பேசவந்திருப்பது அத்தமையனின் இளையவனிடம் அல்ல. என் கொழுநனிடம். ஆண்மகன் என நான் எண்ணியிருப்பவரிடம். தன் சொல்லுக்கு கட்டுப்பட்ட வீரனிடம்…” என்று அவள் பல்லைக்கடித்தபடி சொன்னாள். “அவை உண்மை என்றால் சென்று சொல்லுங்கள் அவரிடம், அவர் இனி அரசர் அல்ல என்று. அவர் ஆணையிட்டு நடத்தாவிட்டால் காடேகலாம் என்று. இனியும் இங்கு என்னால் பொறுத்திருந்து வாழமுடியாது” என திரௌபதி சொன்னாள். அவள் கழுத்து நரம்பு புடைத்து தோளெலும்பு மேல் இழுபட்டு நின்றது. அதன் முடிச்சுகள் அதிர்ந்தன. சொற்களுக்கேற்ப அவள் கைகள் பதைபதைத்து அசைந்தன.

“அரசி, என்ன ஆயிற்று? இங்கு வருகையில் நீ இப்படி இருக்கவில்லை, காட்டின் புதுக்காற்றை ஏற்று என்னுடன் மகிழ்ந்தாய்” என்றான் பீமன். “ஆம், ஆனால் இங்குவந்து இத்தனை முனிவர்களும் சொல்வதை கேட்டபின் அறிந்தேன், உங்கள் தமையனுக்கிருப்பது அறக்குழப்பம் அல்ல, அச்சம் மட்டுமே என்று. அறவோர் சொல்லென்ன என்று ஐயம்கொள்கிறார் என்று எண்ணி இங்கே வந்தேன். அறவோர் போருக்கெழச் சொல்லியும் இவர் அஞ்சி தன் வளைக்குள் தலையை இழுத்துக்கொள்கிறார் என்றால் என்ன பொருள்? போருக்குச் செல்லாதே, சொல்லுடன் விழிமூடி அமை, உனக்கு விடுதலை உண்டு என்று சொல்லும் ஒரு மூடமுனிவரை இவர் தேடிக்கொண்டிருக்கிறார். அவரைக் கண்டடையும்வரை இக்காட்டில் அலைவார். கண்டடைந்தபின் அதுவே இறுதி உண்மை என்பார். அவருடன் நானும் சடைவளர்த்து சருகுமேல் அமர்ந்து தவம் செய்யவேண்டும்.”

இகழ்ச்சியுடன் இதழ் வளைய “என்ன தவம்? இழந்தவற்றை எண்ணி ஏங்காமல் ஓர் இரவுகூடத் துயிலமுடியாத பேதைக்கு தவமா? இளையோரே, ஒருநாள் ஓர் இரவு அம்மூடர் தன்னைமறந்து துயில்கொண்டார் என்றால் நான் அவரால் விடுதலையை நாடமுடியும் என நம்புகிறேன்…” என்றாள். பீமன் “மூத்தவரை நானும் அறிவேன். அவர் உள்ளம் விடுபட்டது என்றால் பிறகு ஒருகணமும் இங்கிருக்கமாட்டார். அவர் தந்தைக்கும் துறவிக்கும் நடுவே ஊசலாடுபவர்…” என்றான். “இல்லை, விழைவுக்கும் விழைவற்றவரென்ற தோற்றத்துக்கும் நடுவே” என்றாள் திரௌபதி.

“ஆனால் அவர் என் மூத்தவர். நான் அறிந்த தந்தை. அவருக்கு இளையோனாக இருந்து மறைவதே இப்பிறவியில் என் கடன்” என்று சொல்லி கோடரியை தூக்கி ஓங்கி வெட்டினான். மரத்துண்டு பிளந்து இருபக்கமும் தெறித்தது. திரௌபதி சிலகணங்கள் சொல்லிழந்து அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள். அடுத்த விறகை எடுத்து வைத்து அவன் கோடரியை தூக்கியதும் “ஆண்மையுள்ளவன் தன் வஞ்சினத்தை தெய்வ ஆணையென எண்ணுவான். மண்ணில் பிற எதையும்விட அதை முதன்மையென்று கொள்வான்” என்றாள். “இப்போதும் அவ்வண்ணமே” என்று சொல்லி பீமன் ஓங்கி வெட்டி பிளந்த துண்டுகளை காலால் தள்ளி விலக்கிவிட்டுத் திரும்பினான்.

“துருபதன் மகளே, நான் செய்யவேண்டியதென்ன? சொல். உனக்கு ஒப்புதலென்றால் இக்கணமே கிளம்பிச்செல்கிறேன். அஸ்தினபுரிக்குள் நுழைந்து துரியோதனனையும் கௌரவர்களையும் ஒற்றைப்போருக்கு அழைக்கிறேன். அவர்கள் நெஞ்சு பிளந்து குருதியை ஒருகலத்தில் கொண்டுவருகிறேன். அதை மூத்தவர் தடுக்கமுடியாது” என்றான். அவள் இதழ்கள் வளைந்தன. “அது நடவாதென்று உங்களுக்கே தெரியும். அரசனுக்குத் தோழர் என்று அங்கர் களமிறங்கக்கூடும். சூரியன் அமைந்த தோள்கள். பத்துநொடியளவுக்குக் கூட நீங்கள் அவர் முன் நிற்கமுடியாது.”

பீமனின் கோடரி கை சரிந்தது. முழங்காலில் அதன் கூர்முனை பதிய அவன் காலை உதறிக் குனிந்தான். அவளும் அந்தப் புண்ணை நோக்கினாள். ஆனால் ஒருகணமும் அதை பொருட்டென எண்ணாதவளாக திரும்பி கைகளைத் தூக்கி உரக்க “இளையவர்களே, இங்கு வருக… நான் உங்களிடம் பேசியாகவேண்டும்” என்றாள். நகுலனும் சகதேவனும் தங்கள் குடில்முற்றத்திலிருந்து அருகே நடந்து வந்தனர். “இளையவரே, உங்களிடமும்தான்…” என அவள் அர்ஜுனனை நோக்கி அழைத்தாள். அவன் எழுந்து சலிப்புற்ற நடையுடன் அணுகிவந்தான்.

பீமன் பெருமூச்சுடன் அருகே நின்றிருந்த முட்செடி ஒன்றின் தண்டை ஒடித்து கசிந்த பாலை அந்தக் காயத்தின்மேல் விட்டான். அதன் இலையை காயத்தின்மேல் ஒட்டிவிட்டு இறுகப்பற்றி குருதிப்பெருக்கை நிறுத்தினான். அவளுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்று ஓடியது அவன் எண்ணம். எங்கிருக்கிறது நரம்புமுடிச்சு என எண்ணாமலேயே கைவைக்கக்கூடிய மருத்துவர்களைப் போன்றவள். அவன் பெருமூச்சுவிட்டான். பின்னர் புன்னகையுடன் திருதராஷ்டிரரை அவனால் எதிர்கொள்ளமுடியாது என்று சொல்வதைத் தவிர்த்து கர்ணனைத் தெரிந்துசொன்ன அவள் கூர்மையை எண்ணிக்கொண்டான்.

அவன் புன்னகைப்பதை அவள் திரும்பாமலேயே கண்டாள். அது அவளை மேலும் சினம் கொள்ளவைப்பதை அவன் உணர்ந்தான். அர்ஜுனன் அருகே வந்து “மூத்தவரிடம் பேசியவை அனைத்தையும் கேட்டேன். அரசி, நெடுந்தொலைவு கேட்கும்படிதான் இருந்தது உன் குரல்” என்றான். திரௌபதி குன்றாச்சீற்றத்துடன் திரும்பிப்பார்த்து “இப்போதே எனக்கு விடை தெரிந்தாகவேண்டும். என் சொல்காக்க எழுபவர் உங்களில் எவர்?” என்றாள். “அரசி, உன் சொல்லுக்கென உயிர்வைத்துக் களம்நிற்கப் போகிறவர்கள்தான் நாங்கள் ஐவரும். ஆனால் எங்கள் மூத்தவருக்கு எதிராக என்றால் அது நிகழப்போவதில்லை” என்றான் அர்ஜுனன்.

“இது வெறும் அச்சம்… கீழ்மை” என்று அவள் கூவினாள். “எதுவென்றாலும் இப்பிறப்பில் இதுவே எங்கள் நெறி” என்றான் அர்ஜுனன். “உங்கள் துணைவியை அவைநடுவே சிறுமைசெய்தார்கள். அதற்குப் பழிதீர்க்காமல் காட்டில் மடிந்தீர்கள் என்னும் பழிகூடவா உங்களுக்குப் பொருட்டில்லை?” என்று அவள் கேட்டாள். “ஆம், அவ்விழிவு வழிவழியாக எங்கள் குருதிச்சரடில் நீடிக்கும். வஞ்சம் தணிக்காது இறந்தோம் என்றால் சூதர்பாடல்களில் புழுவென நெளிவோம். ஆயினும் எங்கள் கடன் எந்தைவடிவமான மூத்தவருடன் இருப்பதே. பிறிதொன்று எண்ணப்போவதில்லை.”

“உங்கள் ஒவ்வொருவரின் உள்ளையும் கருவென்று கொண்டு மைந்தரென்று ஈன்றவள் நான். என்னிடம் வேண்டியதில்லை இந்த நாடகங்கள்” என்று திரௌபதி கூவினாள். “என்ன சொன்னீர்கள், பிறிதிலாத பணிவா? ஆணவத்தை வேரறுக்க முயலும் முனிவர்களுக்கே அரியது அது. ஆசிரியர் நெஞ்சில் எட்டி உதைத்துவிட்டு விலகிச்செல்லும் மாணவர்களால் ஆனவை இக்கல்விநிலைகள். நீங்கள் ஆணவம் நிறைந்த வீரர்கள். எத்தனை முறை உங்கள் தமையன் முகத்தில் காறி உமிழ்ந்தீர்கள் என நான் தொட்டெண்ணிச் சொல்ல முடியும். எத்தனை முறை அவர் அமர்ந்த அரியணையில் அமர்ந்தெழுந்தது உங்கள் அகம் என நான் அறிவேன். என்னை அணையும்போது தமையனை வெல்லும் உவகையை அடையாதவர் உங்களில் எவர்?”

“தேவி!” என உரக்கக் கூவியபடி அர்ஜுனன் முன்னால் வந்தான். கடும்சினத்தால் அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. நீட்டிய அவன் கை அதிர்ந்தது. “போதும், இனி ஒரு சொல்லும் தேவையில்லை. இயலாது, மூத்தோன் சொல்லே எங்கள் வழி. அது எங்கள் குலநெறி.” பல்லைக் கடித்து “பாஞ்சாலன் மகள் அதைத் தடுக்க எண்ணவேண்டியதில்லை. செல்க!” என்றான்.

“நான் சிதையேறுகிறேன்!” என்று அவள் உடைந்த குரலில் கூவினாள். அக்குரலின் விசையால் அவள் உடலே முன்வளைந்தது. இருகைகளும் விரல்சுருட்டி இழுபட்டு நீலநரம்புகள் எழ வளைந்தன. “இக்காட்டில் விறகடுக்கி எரிபுகுகிறேன். எரியில் தோன்றினேன், அதற்கே மீள்கிறேன். இங்கு பெண்மையிழிவு செய்யப்பட்டேன். என்னைக் காக்கவேண்டிய கொழுநர் பேடிகளாக கைகட்டி நின்றனர். பொய்வஞ்சினம் உரைத்து அவையை ஏமாற்றினர். அஞ்சி காடுகளுக்குள் பதுங்கி உயிர்பேணினர். என் வஞ்சத்தை இம்மண்ணின்மேல் காறி உமிழ்ந்தபடி விண்புகுகிறேன்.”

அர்ஜுனன் அதைக்கேட்டு நடுங்கிவிட்டான். அவள் தோளைத் தொடவிழைபவன் போல கைநீட்டி காலடி எடுத்துவைத்து தளர்ந்த குரலில் “தேவி!” என்றான். அவனை தன் வலக்கை நீட்டித்தடுத்த சகதேவன் “அரசி, உன் தீச்சொல்லால் எங்கள் குலமும் கொடிவழியும் நீறாகும். மண்ணிலும் விண்ணிலும் எங்களுக்கு மாண்பென்றோ இனிதென்றோ ஏதும் எஞ்சாது. ஆயினும் மூத்தவருக்கு மைந்தராகவே நாங்கள் நீடிக்கமுடியும்” என்றான். “எரியேறுவது உன் எண்ணமென்றால் அதை உன்னுள் உறையும் தெய்வம் முடிவுசெய்யட்டும். அதுவும் குருகுலத்தின் ஊழ் என்றே கொள்கிறோம்.”

அவள் இதழ்கள் சற்று திறந்து அசைவற்றன. நீர்த்திவலைகள் நின்ற கரிய இமைப்பீலிகள் பின்பு அசைந்தன. தலையை அசைத்து குழல்கற்றையை காதுக்குப்பின் அள்ளி இட்டாள். அந்தச்சிறு அசைவில் அவளுக்கு ஐவர்மீதுமிருந்த உச்சநிலை ஏளனம் வெளிப்படுவதை எண்ணி பீமன் வியந்தான். அத்தனை சொற்களுக்கும் அப்பால் காலங்கடந்து அதுதான் நினைவில் நீடிக்கப்போகிறதென்று தெரிந்தது. அவள் ஏதோ சொல்லவந்தபின் வலக்கன்னம் குழிய உதட்டைச் சுழித்து கையை வீசி எழுந்த சொல்லை அகற்றி செல்வதற்காகத் திரும்பினாள்.

நகுலன் மெல்லிய குரலில் “தேவி, நீ அஞ்சுவது எதை?” என்றான். அவள் திரும்பி அவனை நோக்கினாள். விழிகள் செவ்வரியோடிக் கலங்கியிருந்தன. “உன்னை நான் நன்கறிவேன். இன்று எங்களுக்குள் புகுந்து நோக்க உன் பெருஞ்சினம் எப்படி உனக்கு உதவுகிறதோ அதைப்போல உனக்குள் நான் என் பேரன்பால் ஊடுருவுகிறேன். இத்தனை சினமும் எதை தவிர்ப்பதற்காக?” உறுமல்போல “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள் திரௌபதி. “நீ அவர்களை மன்னிக்கத்தொடங்கிவிட்டாய். உன்னுள் ஊறும் பெருங்கருணையையே நீ அஞ்சுகிறாய்” என்றான் நகுலன்.

“அறிவின்மை!” என கையை அசைத்தபின் அவள் திரும்பிச்சென்றாள். அவன் உரக்க அவள் முதுகை நோக்கி “ஆம், அதுவே உண்மை. அரியணையோ நூல்புகழோ அல்ல நீ விழைவது. இங்கு அறிஞர் நடுவே நூலாய்ந்து அமர்ந்திருக்கையிலேயே உன்னை முழுதுணர்கிறாய். இக்காட்டில் உன்னை ஒரு முனிவரென அறிகிறாய். இக்காற்றில் கரைந்துவிடலாகாதென்று எண்ணி உன்னை மீட்டுக்கொள்கிறாய்” என்றான். அவள் திரும்பிப்பார்க்கவே இல்லை. ஆனால் அவள் அச்சொற்களால் மிகவும் தளர்ந்துவிட்டாள் என்பதை அவள் நடையே காட்டியது.

நகுலன் மேலும் உரக்க “உன்னுள் எழும் வஞ்சத்தை ஒவ்வொரு நாளும் சொல்லை அவியாக்கி வளர்த்துப் பேணியாக வேண்டும் நீ. ஏனென்றால் இவ்வெளிய மனிதர்களின் சூதுக்கும் சிரிப்புக்கும் அப்பால் நீ தனிமைகொண்டிருக்கிறாய். விசைதளர்ந்தால் இயல்பாகவே அங்குதான் மீள்வாய்” என்றான். அவள் திரும்பிநோக்காமல் நடந்து மறைவதை அவர்கள் நோக்கி நின்றனர். அவள் தோற்றம் மறைந்ததும் அர்ஜுனன் நீள்மூச்சுடன் தளர்ந்தான். அவர்கள் நால்வரும் மெல்ல உடல்மீண்டனர்.

மெல்ல அவர்களைச் சூழ்ந்தது அமைதி. ஒவ்வொருவரும் தங்கள் எண்ணங்களுக்குள் புகுந்து வாயில் மூடிக்கொண்டனர். தொலைவிலிருந்து அவர்களைப் பார்த்த துவைதகுருகுலத்தின் மாணவன் ஒருவன் அவர்களை நான்கு சிறுபாறைகள் என்றே உணர்ந்தான். அருகருகே அமர்ந்திருந்தும் ஒன்றையொன்று சற்றும் அறியாதவை. அவற்றுக்கிடையே இருந்த இடைவெளி காலத்தில் நிலைத்தது என்பதனால் பெருவெளியென்றே ஆனது. அவர்கள் கலைந்து மீண்டாலும் ஒருவரோடொருவர் ஒன்றும் சொல்லிவிடமுடியாதென்று அவன் எண்ணிக்கொண்டான்.

[ 7 ]

துவைதக் கல்விநிலையில் அந்தியின் சொல்லாய்வும் பொருளெதிர்நிற்றலும் முடிந்தபின்பு இரவுக்கான சங்கு ஊதியது. மாணவர்கள் ஒவ்வொருவராக தங்கள் குடில்களுக்கு மீண்டனர். விளக்குகள் அணையத்தொடங்கின. இறுதி விளக்கும் அணைந்ததும் செறிந்த இருள் வந்து நோக்கை மூடியது. பின்னர் மெல்ல இருளுக்குள் இருந்து குறுமரங்கள் புடைத்தெழுந்து வந்தன. அவற்றின் காற்றுலைவை காணமுடிந்தது. பின்னர் மெல்லிய இலைவிளிம்புகளை. பின்னர் அவற்றின் இலையசைவை.

மரவுரியை எடுத்து சுழற்றிச் சுற்றியபடி தன் குடிலில் இருந்து தருமன் வெளியே இறங்கினார். தன் காலடிகள் நிலத்தில் இழுபடுவதுபோல் ஒலிக்க வேட்டைக்கு இறங்கிய நாகம் போல இருளுக்குள் நடந்தார். ஒவ்வொரு காலடிக்கும் அவர் உடல் மெல்ல நடுங்கியது. கால்தளர்ந்து நின்று திரும்பிச்செல்வதைப்பற்றி எண்ணினார். திரும்பிச்செல்வதுபோல ஓர் அசைவு அவர் உடலில் கூடியது. அதை உள்ளத்தால் இறுக்கிக்கொண்டு கண்களைமூடி சிலகணங்கள் நின்றார். பின்பு மேலும் நடந்து சென்று திரௌபதியின் குடில்முற்றத்தை அடைந்து மூடிய மூங்கில்படல் கதவை மெல்ல அசைத்து “அரசி” என்றார்.

அவர் அச்சொல் உள்ளிருந்து எழுவதைத்தான் உணர்ந்தார். நா அறிந்ததா என்றே ஐயமாக இருந்தது. ஆனால் உள்ளே அவள் அதைக் கேட்டதை மிகமெல்லிய உடல் ஒலி உணர்த்தியது. எழுந்துகொள்ளும் ஒலி அல்ல. ஆடைகளின் அணிகளின் ஒலி அல்ல. மூச்சொலியும் அல்ல. அசைவற்ற உடல் அசைவுகொள்வதன் ஒலி. அதை செவிகள் கேட்கவில்லை, உள்ளம் அறிந்தது எனத் தோன்றியது. “யார்?” என்று அவள் கேட்டாள். யாரென்று அவள் அறிந்திருப்பதை அக்குரல் காட்டியது. கடுமையை வரவழைக்க அவள் முயல்கிறாள். “நான்” என்றார்.

அவள் எழுந்து அகலைத் தூண்டி எழுப்புவது தெரிந்தது. முளைப்படல் சுவர்களின் இடுக்குகள் செவ்வொளி கொண்டன. அவர் உடல்மேல் எரிசரடுகளாலான ஆடையொன்றை அணிவித்ததுபோல. அவள் அணுகிவர அவ்வொளி இழுபட்டு விலகியது. மிகச்சீராக காலடி வைத்து இயல்பாக என படலை விலக்கி “உள்ளே வருக!” என்றாள். அவள் கையிலிருந்த சிறிய விளக்கில் சுடர் சினம் கொண்ட விழிபோலிருந்தது. கீழ் ஒளியில் அவள் கருவறையமர்ந்த தேவிபோலிருந்தாள். விளக்கை தூணிலிருந்த கொக்கியில் பொருத்தி மரவுரியை சீரமைத்தபடி அவள் தூண்சாய்ந்து நின்றாள்.

அவ்வறைக்குள் அமர்வதற்கு என ஒரு பீடம் மட்டுமே இருந்தது. காட்டுக்கொடிகளை தீயில் சுட்டு வளைத்துப் பின்னப்பட்டது. “அமர்க!” என்றாள். அவர் அமர்ந்ததும் அது முனகியபடி உருமாறியது. முழங்கால்மேல் கைகளை வைத்துக்கொண்டார். அவள் அவரை நோக்கியபடி நின்றிருந்தாள். அவர் எண்ணிவந்த முதற்சொற்றொடர் அப்போது பொருளற்றதாகத் தோன்றியது. எங்கிருந்து தொடங்குவதென்றறியாமல் அவர் உள்ளம் உடைந்த எண்ணங்களை தொட்டுத் தொட்டுத் தவித்தது.

அவள் மெல்லிய உடலசைவுகூட அவரை கலைக்கும் என எண்ணியவள் போல நிழலென நின்றிருந்தாள். நெடுநேரமாகியதா என அஞ்சி அவர் தலைதூக்கியபோது அவ்வசைவாலும் அவள் விழியசையவில்லை. சரிந்த இமைகளுடன் விளக்கின் அசையாச்சுடரை நோக்கிக்கொண்டிருந்தாள். அந்த அசைவின்மையில் இருந்த உறுதி அவரை சினம் கொள்ளச்செய்தது. பின்னர் அது தன்னிரக்கமாக ஆகியது. அவர் உடைந்து விழவேண்டுமென விழைகிறாள் போலும். உடைந்து விழுந்து கிடந்தால் என்ன செய்வாள்? தலைமேல் மிதித்துச் செல்லட்டும். அந்த குற்றவுணர்வை சுமக்கட்டும்.

“நீ கோரியதை நிறைவேற்றலாமென எண்ணுகிறேன், அரசி” என்றார் தருமன். சொல்லவந்ததே அவ்வளவுதான் என்னும் திகைப்பு ஏற்பட்டது. நிமிர்ந்து அவள் விழிகளை நோக்கினார். அதில் இருந்த மெல்லிய திகைப்பு அவரை உவகைகொள்ளச் செய்தது. மேலே சொல்லாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். கேள், உன் ஆவல் வெளித்தெரியட்டும், நீ நின்றிருக்கும் அவ்வுறுதியின் உச்சியிலிருந்து இறங்கு, எப்போதும் வென்றுநின்றிருப்பது எவருக்கும் ஆகாது. ஆம், இதோ இறங்கப்போகிறாய். இன்னும் சிலகணங்களில்….

அவள் “என்ன?” என்றபோது அவர் உள்ளம் துள்ளியது. தலைகுனிந்தபடியே “உன் உணர்வுகளைக்குறித்து எண்ணினேன். நானோ இளையோனோ உன் நெஞ்சை கருத்தில் கொள்ளவில்லை. பதின்மூன்று ஆண்டுகாலம் இவ்வஞ்சத்துடன் நீ துயில்நீப்பாய் என்றால் அது பெரும்துன்பம். நீ அடைந்த சிறுமைக்குமேல் அத்துயரையும் அளிப்பது அறமல்ல” என்றார். அவள் முகம் என்னவாக இருக்கிறது என்பதை கற்பனையில் அவர் வரைந்துகொண்டே சென்றார். “நான் சொன்னவை அனைத்தும் நெறிகளே. ஆனால் உன் அழல் முன் அவை பொருளற்றவை.”

அவள் ஒன்றும் சொல்லாமல் நிற்பதைக்கண்டு அவர் தலைதூக்கி நோக்கினார். அவள் விழிகளில் மெல்லிய ஐயம்போல ஒன்று தெரிந்தது. அவள் உவகைகொள்ளவில்லையா? இல்லை, அதை மறைக்கும் அளவுக்கு நடிப்புதேர்ந்தவளா? “நாளையே இளையோர் நால்வரும் என் செய்தியுடன் செல்லட்டும். அர்ஜுனன் துவாரகைக்கும் நகுலன் பாஞ்சாலத்திற்கும் சகதேவன் நம் மணவுறவு அரசுகளுக்கும் பீமன் நிஷாத, அசுர, அரக்கர் நாடுகளுக்கும் செல்வார்கள். படைகள் இன்னும் இரண்டுமாதங்களுக்குள் திரளும். அஸ்தினபுரியை வென்று அக்குருதியில் உன்னை நீராட்டுகிறேன். குழல்முடிந்தபின் நீ துயிலலாம்.”

அவள் பெருமூச்சுவிட்டாள். “இல்லை” என்றாள். பேசாததனால் அவள் தொண்டை அடைத்திருந்தது. “நான் இப்போது அதை விரும்பவில்லை” என்றாள். “ஏன்?” என்று அவர் சினத்துடன் கேட்டார். மெல்ல பதற்றம்போல, மூச்சுத்திணறல்போல சினம் மூண்டு எழுந்தது. என்ன எண்ணுகிறாள்? இன்னும் பணிந்து இவள் காலடியில் விழவேண்டுமென எதிர்பார்க்கிறாளா? அடுத்து ஒரு சொல் எழுமென்றால் எழுந்து அவள் கழுத்தை வெட்டிவிடவேண்டும். ஆம். அது ஒன்றே ஆண்மகனுக்குரியது…

“இருளில் படுத்தபின் எண்ணிப்பார்த்தேன். ஒன்று தெளிவாகத் தெரிந்தது. நாம் எந்த முடிவையும் எடுக்கமுடியாது. அதை எடுக்கவேண்டியவர் இளைய யாதவர் மட்டுமே. ஏனென்றால் இது அவரது போர்” என்றாள் திரௌபதி. அக்கணமே அச்சொற்கள் ஒவ்வொன்றும் உண்மை என்று உணர்ந்து அவர் உளஎழுச்சிகள் முழுமையாக அணைந்தன. ஒரு சில கணங்கள் கைகளை விரல்பின்னி மடியில் வைத்து கட்டைவிரல்களை ஆட்டியபடி அதை நோக்கிக் கொண்டிருந்தார். பின்பு நிமிர்ந்து “ஆம்” என்றார்.

“பிறிதெல்லாம் வீண்பேச்சுக்கள். அவர்களுடன் ஷத்ரிய அரசர்கள் அணிதிரள்வார்கள் என்றால் நமக்கு யாதவப்படைகளின் முழுமையான ஆதரவு தேவை. அதை அளிக்குமிடத்தில் இளைய யாதவர் இருந்தார் என்றால் இதற்குள் அவர் நம்மை தேடிவந்திருப்பார்” என்று திரௌபதி சொன்னாள். “ஆகவே நாம் பொறுத்திருப்பதொன்றே வழி.” தருமன் சட்டென்று எழுந்து நழுவிய மேலாடையை அணிந்தபின் “நன்று, இதைப்பற்றி இனிமேல் நாம் பேசவேண்டியதில்லை” என்றார்.

“ஆம், ஆனால் இன்று சிறியவர் சொன்ன சொல் ஒன்றையே எண்ணிக்கொண்டிருந்தேன்” என்று திரௌபதி சொன்னாள். “நான் கனிந்துவிடுவேனோ என்று நான் அச்சம் கொண்டிருப்பது உண்மை. ஏனென்றால் அத்தனைக்கு அப்பாலும் நான் பெண், அன்னை. அது நிகழலாகாது. என் அழல் ஒருகணமும் அணையலாகாது. அம்பையைப்போல அதை அழியாது நிறுத்தவேண்டுமென்றால் நான் அனல்புகவேண்டும்.” அவள் அகலொளி அலைபட செந்தழல் என்றே தோன்றினாள். “நான் என்னை உயிருடன் எரியச்செய்கிறேன். இந்த உடலே என் சிதை. ஒவ்வொரு கணமும் பொழுதும் நாளும் என பதின்மூன்றாண்டுகாலம் எரிகிறேன்.”

“தேவி…” என்றார் தருமன். ஆனால் அத்தருணத்திலெழும் எந்த முறைமைச்சொல்லும் அவளுக்கு ஒரு பொருட்டாகத் தெரியாதென்று உணர்ந்தார். “நான் இனி எவருக்கும் துணைவி அல்ல. ஐந்து புரவிகளை பூட்டிய தேர் ஏறிய போர்த்தெய்வம் மட்டுமே. இனி என் புன்னகையை நீங்கள் காணப்போவதில்லை. இனி இவ்வுலகின் இனியவை எதையும் நான் சுவைக்கமாட்டேன். புற்றுறையும் படிவர் என என் வஞ்சினத்திற்குள் வாழ்வேன்” மிகத்தணிந்த குரலில் அவருக்கு மட்டுமே கேட்கும்படியாக அவள் அதை சொன்னாள்.

அவர் விழிசரித்து அவள் கால்களை நோக்கிக்கொண்டிருந்தார். சிறகுகூப்பி நிரையாகநின்று பொன்னிற அலகு தாழ்த்தி நீர் அருந்தும் பத்து சிறுகுருவிகள் போல கரியவிரல்கள். அவர் எழுந்து “நான் வருகிறேன். உன் எண்ணம் அதுவென்றால் அவ்வாறே ஆகட்டும்” என்றார். அவர் வாயில் நோக்கி நடக்க அவள் அவரைத் தொடர்ந்து வந்தாள். அவர் படியிறங்கியதும் அவள் ஒரு சொல்லும் உரைக்காமல் வாயிலை மூடினாள்.

SOLVALAR_KAADU_EPI_16

அவர் தன் உள்ளத்தில் அவள் கைவிளக்குடன் அவ்வாயிலை நிறைத்து நிற்பதை கண்டார். “தேவி, நீ விழைவதுதான் என்ன? முடியா, நிலமா, வெற்றியா, புகழா?” என்றார். “ஏதுமில்லை, என் கடன்முடித்தபின் எளியவளாக காடேகவே எண்ணுகிறேன்” என்று அவள் சொன்னாள். “அப்படியென்றால் ஏன் இந்த வஞ்சம்? இது பாரதவர்ஷத்தை குருதிக்களமாக்கும், தேவி” என்றார். “அதற்காகவே நான் வந்தேன்…” என்று அவள் சொன்னாள்.