சொல்வளர்காடு - 10

[ 15 ]

காடேகவேண்டுமென்ற ஆணை யுதிஷ்டிரரை முகம் மலரச்செய்தது. அதை சௌனகர் எதிர்பார்த்திருந்தார். அவர் சொல்லி முடித்ததுமே மகிழ்ச்சியுடன் “ஆம், அதுதான் உகந்த தீர்வு. அமைச்சரே, உண்மையில் நான் மீண்டும் மீண்டும் விழைந்தது இதுதான். இங்கிருந்து கிளம்பி எங்காவது விழிதொடா கானகம் சென்று அங்கே அறச்சொல் ஆயும் முனிவர்களின் காலடியில் அமர்ந்துகொள்ளவேண்டும். நான் எண்ணியதையே அளித்திருக்கிறார் தந்தையார்” என்றார்.

அர்ஜுனனும் “ஆம், அமைச்சரே. இந்த இடத்திலிருந்து எவ்வகையில் நாம் விலகிச்சென்றாலும் அது நன்றே. வெறுப்பு சூழ்ந்துள்ள இந்தக் காற்று நஞ்சூட்டப்பட்டதுபோல் உள்ளது. போர்க்களத்தில் நிற்கலாம், நம்மை வெறுப்பவர்களின் விழிமுன் வாழ்வது பெரும் கொடுமை” என்றான். சௌனகர் பீமனை நோக்க “நான் எப்போதுமே விழைவது காடுதான். காட்டில் வாழ்ந்த நாட்களில்தான் நான் மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறேன்” என்றான் அவன். சௌனகர் புன்னகையுடன் “ஏதாவது நிகழ்ந்து நீங்கள் காடேகவேண்டாம் என்று சொல்லப்பட்டால் வில்லெடுப்பீர்கள் என்றல்லவா தோன்றுகிறது” என்றார். அர்ஜுனன் சிரித்துவிட்டான்.

யுதிஷ்டிரர் புன்னகைத்தபடி “என்ன நிகழும் என எண்ணுகிறீர்கள்?” என்றார். “அமைச்சர் உளக்கொந்தளிப்புடனிருக்கிறார். அவரால் இதை தன் தோல்வி என்றே எடுத்துக் கொள்ளமுடிகிறது” என்றார். பீமன் “அதைவிட தன் சொல்லுக்குள் இல்லை பேரரசர் என்று உணர்வதன் சிறுமையுணர்ச்சியே அவரை வதைக்கிறது” என்றான். யுதிஷ்டிரர் “இல்லை மந்தா, அவர் நம் மீது பேரன்பு கொண்டவர். அறம் என தான் நினைப்பதற்காக வாழ்பவர்” என்றார்.  “அவரது பணி இங்கே முடிந்துவிட்டது. பெரியதந்தையார் வெறும் தந்தையென்று ஆகிவிட்டார். அதை அவர் உணர்ந்தால் மீளமுடியும்” என்றான் அர்ஜுனன்.

பீமன் “பேரரசர் என்றுமே தந்தைதான். அவருக்கு தன் முதல் மைந்தனில் இருக்கும் அன்பு நிகரற்றது. தன் மறுவடிவம் என எண்ணும் மைந்தன் மீது தந்தையர் கொண்டிருப்பது  அன்பு மட்டும் அல்ல. அது இங்கே நீடித்துவாழ விரும்பும் உயிரின் பெருவிழைவும்கூட. தெய்வங்களும் அதற்கு எதிர்நிற்க முடியாது. அறம் என்ன செய்யும்?” என்றான். யுதிஷ்டிரர் “மந்தா, நெறியிலாதவனாக பேசாதே. இங்கு நிகழ்ந்தவற்றுக்கு எதிராக நின்றிருந்த முதல் நெஞ்சு அவருடையது. அறத்தில் நின்றமையால்தான் நம் அரசையும் திருப்பி அளித்தார். நாம் எவரும் அவரது அறநெஞ்சை குறைசொல்லும் தகுதி கொண்டவர்கள் அல்ல” என்றார்.

பீமன் ஒன்றும் சொல்லவில்லை. யுதிஷ்டிரர் “முறைப்படி தூதுசென்று பேரரசரிடம் தெரிவியுங்கள் அமைச்சரே, அவரது ஆணையை நோயாளி அமுதைப்போல இருளிலிருப்பவன் ஒளியைப்போல நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என்று. அவரது தாள்பணிந்து இன்றே கானேகிறோம் என்று. அவர் விழைந்தால் செல்வதற்கு முன் அவரை கண்டு வாழ்த்துபெற விழைகிறோம்” என்றார். சௌனகர் தலைவணங்கினார். பீமன் “முறைப்படி தொழும்பர் மட்டுமே கானேகவேண்டும். ஆகவே நாங்கள் ஐவரும் நாங்கள் வைத்திழந்த அரசியும் சென்றால் போதும். பிற அரசியரும் அன்னையாரும் இந்திரப்பிரஸ்தத்தில் இருக்கலாம் அல்லவா?” என்றான்.

“வேண்டாம் மந்தா, எது முறையோ அதை செய்வோம். அரசியர் தங்கள் தந்தையர் நாடுகளுக்கு செல்லட்டும். அன்னை அவர் விழையும் இடத்திலேயே வாழட்டும். நம்முடன் திரௌபதி மட்டும் வந்தால் போதும்” என்றார் யுதிஷ்டிரர். “அரசே, நானும் தங்களுடன் வரவேண்டும். அதுவே முறை” என்றார் சௌனகர். “அந்தணனாகிய எனக்கு நானே ஏற்றுக்கொண்ட பொறுப்புகள் மட்டுமே உண்டு. எனக்கு எந்தக் கடமையையும் எவரும் ஆணையிடமுடியாது.” யுதிஷ்டிரர் “அது தங்கள் விருப்பம், அமைச்சரே” என்றார்.

“காடேகும் செய்தியை குடிகள் கேட்டால் என்ன நினைப்பார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் கொந்தளிப்பார்கள்” என்றார் சௌனகர். பீமன் வெடித்து நகைத்து “ஆம், கொந்தளிப்பார்கள். கண்ணீர்விடுவார்கள். ஏனென்றால் அவர்களால் கூட்டாக செய்யத்தக்க எளிய செயல் அது மட்டுமே. வாளாவிருக்கவில்லை, உகந்ததை செய்துவிட்டோம் என்று நிறைவுகொண்டு தங்கள் அன்றாடச் சிறுமைகளுக்கு மீளவும் முடியும்” என்றான். “மந்தா, ஏன் இத்தனை நஞ்சு உன் உள்ளத்தில்?” என்றார் யுதிஷ்டிரர். “நான் காலகண்டனைப்போல காலஜிஹ்வன், மூத்தவரே. பாதாளத்தில் வாசுகி அளித்த நஞ்சு என் நாவில் குடிகொள்கிறது என்கிறார்கள் சூதர்கள்.”

தருமன் “போதும், நாம் செல்வதற்குரியவற்றை செய்வோம்” என்றார். “மக்களுக்கு அவர்கள் செய்யவேண்டியவற்றுக்கு முன்நிகழ்வு ஒன்று தேவை. அரசர்கள் காடேகிய கதைகள் பல உள்ளன. தசரதன் மைந்தனாகிய ராகவராமன் காடேகியபோது அயோத்தியின் குடிகள் பெருந்திரளாக உடன்சென்றனர் என்றும் கங்கைக்கரையில் அவனே அவர்களை வணங்கி திரும்பிச்செல்லும்படி ஆணையிட்டான் என்றும் புற்றுறைமுனிவரின் தொல்காவியம் சொல்கிறது.  நாம் வாரணவதம் செல்லும்போது தாங்களும் அவ்வாறு கண்ணீருடன் ஆணையிடுவீர்கள் என நம்பி அவர்கள் நம்மைத் தொடர்ந்து வந்ததை நினைவுகூர்கிறேன். நீங்கள் எதற்கும் அக்காவியத்திலிருந்து அந்தப் பகுதியை நினைவுப்பதிவு செய்துகொள்ளலாம். பயன்படும்…”

நகுலன் புன்னகைத்தான். யுதிஷ்டிரர் “மந்தா, வேண்டாம்” என்றார். “நான் தங்களை சொல்லவில்லை, மூத்தவரே. மக்களுக்கு புதியவற்றை பழையவற்றின் துணையில்லாமல் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லை என்றுமட்டுமே சொல்லவந்தேன்…” என்றான் பீமன். “மந்தா, மக்களை வெறுப்பவன் காலப்போக்கில் அவர்களால் வெறுக்கப்படுவான்” என்றார் யுதிஷ்டிரர். “இல்லை மூத்தவரே, மக்களை புரிந்துகொண்டவன் அவர்களை வெறுப்பான். அவன் மட்டுமே அவர்களை கட்டுப்படுத்தவும் முடியும். கட்டுப்பாடான ஆட்சியை அளிப்பதனால் அவனை அவர்கள் விரும்புவார்கள்” என்றான் பீமன்.

“உன்னுடன் சொல்லாடுவதில் எனக்கு ஆர்வமில்லை. சௌனகரே, நாங்கள் இன்னும் இரண்டு நாழிகைக்குள் சித்தமாகிவிடுவோம். அதை முறைப்படி அறிவியுங்கள்” என்று யுதிஷ்டிரர் எழுந்துகொண்டார். சௌனகர் “ஆணை” என்றார். யுதிஷ்டிரர் “அன்னைக்கும் அரசியருக்கும் என் ஆணை இதுவே, அவர்கள் நம்முடன் உறவுகொள்வதற்கு முன் இருந்த நிலைக்கே திரும்பிச்செல்லட்டும். பதின்மூன்றாண்டுகாலம் நாம் இல்லை என்றே நினைத்து அவர்கள் இங்கே வாழட்டும். நமது மைந்தர் துரியோதனனையும் கர்ணனையும் கௌரவரையும் தந்தையர் என்றே வணங்கி ஒழுகட்டும். குருதியுறவுகள் விண்ணில் ஆணையிடப்பட்டவை. அவற்றை எதன்பொருட்டும் மண்வாழும் மானுடர் மறுக்கமுடியாதென்று என் மைந்தரிடமும் குடிகளிடமும் சொல்லுங்கள்” என்றார்.

சௌனகர் தயக்கத்துடன் “அரசே, தாங்கள் சொல்வது அறநூல்களின் நெறி. ஆனால் கௌரவர்களை நம்பி நம் மைந்தரை ஒப்படைத்துச் செல்வதென்பது… நான் அது கூடாதென்று சொல்லவில்லை. ஆனால் அவர்களை நம் இளவரசர் தந்தையரென்று எண்ணவேண்டும் என்ற ஆணை அவர்களுக்கு பெருஞ்சிறையாக ஆகக்கூடும்…” என்றார். பீமன் கையசைத்து “அதில் ஐயம் வேண்டியதில்லை, அமைச்சரே. ஆற்றல்மிக்கவர்கள் எதிரிகளின் மைந்தர்களிடம் பேரன்புடன் இருப்பது வழக்கம். அது ஒரு பிழைநிகர். நம் மைந்தருக்கு நம்மைவிடவும் அணுக்கமான தந்தையாகவே துரியோதனன் இருப்பான். அவன் உள்ளியல்பு அதுவே. பெருந்தந்தையின் மாற்றுரு அவன்” என்றான். கசப்புடன் புன்னகைத்து “நம் மைந்தரை தோளிலும் மார்பிலும் வைத்திருப்பான். திரும்பி வரும்போது நம் மைந்தர் அவரை நம்பி நம்மைவிட்டு அகன்றிருப்பார்கள்” என்றான்.

அச்சொற்களைக் கேட்காதவர் போல “என் ஆணைகள் அறிவிக்கப்படட்டும்” என்றபின் யுதிஷ்டிரர் மறுபக்க வாயிலினூடாக வெளியே சென்றார். நகுலன் அவர் அருகே செல்ல அவன் தோளை தன் கையால் பற்றிக்கொண்டார். அவர் உடல் தளர்ந்திருக்கவில்லை என்பதையும் நடை இயல்பாகவே உள்ளது என்பதையும் சௌனகர் நோக்கினார். ஆனாலும் அவருக்கு தம்பியரில் ஒருவனின் தோள் தேவைப்பட்டது. அவர் விழிதிருப்ப “அவர் உறுதி தேடுகிறார். தம்பியர் இன்னமும் தன்னுடன் உள்ளனரா என்று” என்றான் பீமன். “மூத்தவரே…” என்று அர்ஜுனன் மன்றாடும் குரலில் அழைத்தான். “தம்பியர் அதை அவருக்கு உறுதியளித்துக்கொண்டே இருக்கிறோம். ஒரு பூசலுக்குப்பின் உறவுகள் சீரடைகின்றன. இரு சாராரும் தேடும் உறுதிகள் முழுமையாக அளிக்கப்படுவதனால்” என்றான் பீமன்.

“நாம் எந்தக் காட்டுக்கு செல்கிறோம்?” என்றான் அர்ஜுனன் பேச்சை மாற்றும்பொருட்டு. “எந்தக் காடாக இருந்தாலும் மிக அருகே இருப்பது… விரைவில் சென்று நுழைந்துகொள்ளக்கூடியது. காடுகள் எல்லாம் ஒன்றே” என்றான் பீமன்.  “அறவோர் வாழும் காடு தேவை என்றார்” என்று அர்ஜுனன் சொன்னான். “எல்லா காடுகளிலும் அவர்கள் இருக்கிறார்கள். பாரதவர்ஷத்தின் இடரே இதுதான். நாட்டின் நெறிகள் காடுறைவோரால் அமைக்கப்படுகின்றன” என்றபின் பீமன் திரும்பிச்சென்றான்.

அவனை நோக்கியபின் அர்ஜுனன் திரும்பி “தங்கள் எண்ணம் என்ன, அமைச்சரே?” என்றான். “நான் சௌனகக்காட்டுக்கு மட்டுமே கொண்டுசெல்வேன். ஏனென்றால் அது என் ஆசிரியரின் காடு” என்றார் சௌனகர். “நான் கௌஷீதகத்திற்குச் செல்லலாம் என எண்ணினேன். சாந்தோக்ய மரபில்தான் இளைய யாதவரின் சாந்தீபனி குருகுலமும் அமைந்துள்ளது” என்றான் அர்ஜுனன். “ஆம், அங்கும் செல்வோம். முதலில் சௌனகம். அதுவே அண்மையிலும் உள்ளது” என்றார் சௌனகர். “அவ்வண்ணமே ஆகுக… நமக்குத்தான் எல்லா காடுகளிலும் வாழ்ந்துமீளும் அளவுக்கு காலம் உள்ளதே” என அர்ஜுனன் புன்னகையுடன் சொன்னான்.

[ 16 ]

அஸ்தினபுரிக்கு வெளியே தெற்குக்கோட்டைவாயிலுக்கு அருகே இருந்த வேனில்மாளிகையில் குந்தி தங்கியிருந்தாள். சௌனகர் அதன் முற்றத்தில் பல்லக்கிலிருந்து இறங்கியதும் கோல்காரர் வந்து வணங்கி “சினம் கொண்டிருக்கிறார்” என்று மெல்லிய குரலில் சொன்னார். சௌனகர் தலையசைத்துவிட்டு கல்லால் ஆன நீண்டபடிகளில் ஏறி கூடத்திற்குள் நுழைந்தார். அவரது வருகை முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தமையால் பணிப்பெண் அவருக்காக காத்து நின்றிருந்தாள். தலைவணங்கி அழைத்துச்சென்று குந்தியின் அறைக்கதவருகே விட்டாள்.

கதவைத் திறந்து அவர் உள்ளே நுழைந்ததுமே குந்தி கடுஞ்சினத்துடன் எழுந்து அவரை  நோக்கி வந்தாள். “நன்று! எதற்காக வந்தீர்கள்? எல்லாவற்றையும் முடித்துவிட்டேன், இனி அன்னையின் நற்சொல் ஒன்றுமட்டுமே மிச்சம் என்று சொல்லத்தான், இல்லையா? சௌனகரே, அந்தணரும் அறம் மறந்து அரசுக்கு வஞ்சமிழைத்தால் தெய்வங்கள் என்ன செய்யும்?” என்று கூவினாள். சௌனகர் சினத்தை அடக்கியபடி “ஆம், நான் அந்தணனே. என் ஆசிரியர்களிடமிருந்தன்றி எவரிடமிருந்தும் நான் அறம் கற்கவேண்டியதில்லை” என்றார்.

“நீங்கள் அங்கே என்ன செய்தீர்கள் என்று நான் அறிவேன். என் விழியும் செவியும் இல்லாத இடமே இல்லை” என்று குந்தி மேலும் உரத்தமையால் இசைவழிந்து இழுபட்ட குரலில் கூவினாள். அவள் முகம் சிவந்து மூக்குமுனை புண்போலிருந்தது. நீர்ப்படலம் நின்ற கண்களிலும் வெண்பற்களால் குருதியெழக் கடிக்கப்பட்டு துடித்த உதடுகளிலும் இழுபட்டு அசைந்த கழுத்துத் தசைத்தளர்வுகளிலும் வெறி நிறைந்திருந்தது. தலையிலிருந்து நழுவிய வெண்பட்டாடை நிலத்தில் இழுபட அவரை அணுகி வந்தாள். சௌனகர் அறியாது சற்று பின்னடைந்தார்.

மூச்சிரைப்பில் தோள்களும் முலைகளும் எழுந்ததிர “நீங்கள் அதை செய்வீர்கள் என நான் எண்ணியிருக்கவே இல்லை, சௌனகரே. விழைவதை ஆற்ற துணிவும் விதி பிழைத்தால் தலைவெட்டி வீழ கையில் வாளும் இல்லாத கோழையின் செய்கை நீர் செய்தது. நாக்கு எப்படியும் தடம்புரளும். தோளுக்குள் எலும்பு என ஒன்றுள்ளது. நிலைபெறும் ஆற்றலை அந்தணரிடம் எதிர்பார்த்தது என் பிழை” என்று குந்தி கூவினாள். அவள் கைகள் வலிப்புவந்தவை போல ஆடின. சௌனகர் அந்தக் கட்டற்ற சினத்தை விரிந்த விழிகளுடன் நோக்கி நின்றார். அவள் முதிய உடலில் இருந்து அந்தச் சினம் மட்டும் அகன்றுசென்றதென்றால் நெற்றுபோல மண்ணில் உதிர்ந்துவிடுவாள் என்று தோன்றியது.

“அவ்விழியிழந்தோன் என் மைந்தரை காடேகச் சொன்னபோது விதுரர் எதிர்த்தார். இதோ இக்கணம் வரை அவர் ஏற்கவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. பேரரசரின் தூதர்கள் அவரை தேடியலைகிறார்கள். ஆனால் நீர் என்ன செய்தீர்? சொல்லும், நீர் செய்தது என்ன? அது சிறந்த வழியே என்றீர். அதை என் மைந்தருக்குச் சொல்லும் தூதராக உம்மை ஆக்கிக்கொண்டீர். நீர் எவருடைய தூதர்? எவருடைய முத்திரையை ஏற்றிருக்கிறீர்?” என்று அவள் கூச்சலிட்டாள். தொண்டை அடைத்து ஒலியெழாமல் அவள் மந்தணம் பேசுவதுபோல் தோன்றியது.

அவளுடைய உணர்வுகளை முழுமையாகப் புறந்தள்ளி “நான் இப்போது அரசரின் ஆணையுடன் வந்துள்ளேன்” என்று சௌனகர் சொன்னார். “அவர் இன்னும் ஒருநாழிகையில் நாடுநீங்கி காடேகுகிறார். இங்குவந்து உங்கள் சொல்பெற்றுச் செல்ல விழைகிறார்.” “நான் ஒப்பமாட்டேன். என் சொல்பெற்று அவர்கள் செல்லமாட்டார்கள்…” என்றாள் குந்தி. “உங்கள் ஒப்புதலும் நற்சொல்லும் தேவை என்பது அரசாணை” என்றார் சௌனகர். “உங்கள் மைந்தரை நீங்கள் அறிவீர்கள். அவர் சொல்மாறிப் பேசுபவர் அல்ல.” குந்தி “ஆம், ஆனால் அவன் அறிவிலி. தன்னை அறச்செல்வன் என எண்ணிக்கொண்டிருக்கிறவன் அறிவிலியாக மட்டுமே இருக்கமுடியும்… தன் தேவியை வைத்திழந்த பேடிக்கு என்ன சொல் வேண்டியிருக்கிறது?” என்றாள்.

“அவர் பேடியின் மைந்தர் அல்லவா?” என்றார் சௌனகர். குந்தி திடுக்கிட்டாள். அவள் விழிகளை நேருக்குநேர் சந்தித்து அவர் சொன்னார் “ஆனால் குலமிலி அல்ல. ஆகவே எந்நிலையிலும் அந்தணரிடம் அறமில பேசுமளவுக்கு அவர் துணிவதில்லை.” குந்தி உடல் துடிக்க சிலகணங்கள் நின்றுவிட்டு தளர்ந்த கால்களுடன் சென்று பீடத்தில் அமர்ந்தாள். “அவ்வண்ணமே குடிப்பிறந்தவர்தான் நம் அரசியும். அவரிடம் கானேகும் செய்தியை என் துணையமைச்சர் சுரேசர் சென்று சொன்னார். ஒரு சொல்மாறு எழவில்லை. எப்போது கிளம்புகிறோம் என்று மட்டுமே கேட்டார்.”

குந்தி “ஆம், நான் அரசியல்ல. நான் கன்றோட்டிய யாதவப்பெண். கன்றுமேல் புள்குத்தினாலும் சினந்து வெறிகொண்டு கொம்புலைக்கும் பசுக்களைக் கண்டு வளர்ந்தவள். என் மைந்தர் காடேக நான் ஒப்பமாட்டேன்” என்றாள். மேலும் குரல்தளர்ந்து “அவர்கள் காடேகுவதென்றால் என்ன பொருள் என நான் அறிவேன்… அவர்கள் இறந்துபோவதற்கு நிகர் அது. காட்டில் அவர்கள் தனித்திருப்பார்கள். இவ்வீணர்கள் பாரதவர்ஷத்தையே படைகொண்டு ஆள்வார்கள். என் மைந்தர் காட்டிலிருந்து உயிருடன் மீளப்போவதில்லை. ஆம், அதுவே நிகழவிருக்கிறது” என்றாள்.

“நான் அவர்களின் வில்லையும் தோளையும் நம்புபவன்” என்றார் சௌனகர். “அரசாணையை சொல்லிவிட்டுச் செல்லவே வந்தேன். நீங்கள் எண்ணுவதோ ஏங்குவதோ எதுவானாலும் ஆகட்டும். அரசர் இங்கு வருகையில் வாழ்த்துரைத்தாகவேண்டும். அரசர் தன்விருப்பால் காடேகுவதாகவே அன்னை காந்தாரி அறியவேண்டும் என சொல்லியிருக்கிறார். அரசியிடமும் அவ்வாறே சொல்லப்பட்டுள்ளது…” குந்தி மீண்டும் உரத்த குரலில் “நானும் அவ்வாறே சொல்லவேண்டுமா? இயலாது. அது நிகழப்போவதில்லை” என்றாள். “அரசாணை…” என்று சௌனகர்  உறுதியான மென்குரலில் சொன்னார்.

அவள் மெல்லத்தளர்ந்து “தெய்வங்களே! நான் என்ன செய்வேன்…? நோன்பிருந்து வேண்டிப்பெற்ற அனைத்தையும் இழந்து நிற்கிறேன். நான் செய்த பிழைதான் என்ன?” என்றாள். அவள் வெறிமுழுக்க உருவழிந்து தன்னிரக்கமாக மாறியது. தலையாடையை இழுத்திட்டு முகம் மறைத்து ஏங்கி அழுதாள். விம்மல்கள் அவள் தோளைக் குலுக்குவதை சௌனகர் உணர்ச்சியற்றவராக நோக்கி நின்றார். அவள் சற்று அடங்கி தேம்பல்களுடன் உடல் உலையத்தொடங்கியதும் அவர் பெருமூச்சுடன் “நான் வாயிலில்தான் இருப்பேன், பேரரசி. அரசரும் இளையோரும் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றார்.

“நானும் அவர்களுடன் வருகிறேன்” என அவள் முகம் தூக்கி சொன்னாள். வெறியும் சினமும் பின்பு எழுந்த தன்னிரக்கமும் விலகி அவள் சிறுமிபோல் ஆகிவிட்டிருந்தாள். “அவர்களை விட்டு விலகி நான் இங்கே இருக்கமாட்டேன். நானும் உடன் வருவேன்.” முதுமையிலும்கூட பெண்களில் குழந்தைத்தன்மை வெளிப்படுவதை சௌனகரின் உள்ளம் வியந்தது. அவர் கனிந்து “இது நெடுங்காலப் பயணம், அரசி. தாங்களும் முன்பிருந்த இளையவர் அல்ல. முதுமையில் நீங்கள் அவர்களுடன் சென்றால் அவர்களுக்கே அது பெருஞ்சுமையாக ஆகக்கூடும்” என்றார்.

“நான் எங்கிருக்கவேண்டும்?” என்று அவள் கேட்டாள்.  “அரசியரும் அன்னையும் பாண்டவர்களை அடைவதற்கு முன் எப்படி இருந்தார்களோ அப்படி திரும்பிச் செல்லவேண்டும் என்பது அரசாணை. தாங்கள் மார்த்திகாவதிக்கு செல்லலாம்.” குந்தி மீண்டும் சினத்துடன் எழுந்து “பாண்டவர்களைப் பெற்றெடுப்பதற்கு முன் நான் மார்த்திகாவதியில் இருக்கவில்லை. பாண்டுவின் அரசியாக இங்கிருந்தேன். இந்த மணிமுடிக்கு உரியவளாக இருந்தேன். இந்நகர் என் கணவருக்குரியது. நான் இங்குதான் இருப்பேன்” என்றாள். “எளிய யாதவச்சிற்றரசியாக நான் மார்த்திகாவதிக்குச் செல்வதா? ஒருபோதும் நடக்காது. நான் பேரரசி. அவளல்ல, நானே இந்நகரின் பேரரசி. இல்லை என்று சொல்லட்டும் குலப்பேரவை… அல்லது இவர்களின் பிதாமகர் அதை சொல்லட்டும்… பார்க்கிறேன்.”

மூச்சிரைக்க “நான் இங்கிருந்தால் அவர்கள் பாண்டவர்களை மறந்து ஒருகணமும் வாழமுடியாது” என குந்தி தொடர்ந்தாள். “இங்கு பேரரசி ஆற்றவேண்டிய அனைத்து நாளறங்களையும் நானும் ஆற்றுவேன். என் மைந்தரின் நாடு இது என பதின்மூன்றாண்டுகாலம் இங்குள்ள மக்களுக்கு உணர்த்திக்கொண்டிருப்பேன். எழுந்துவரும் தலைமுறைகளுக்கு முன் நின்றிருப்பேன். என்ன நினைத்தார்கள்? என் மண்ணை இவர்கள் முழுதாக வென்றுவிட்டார்கள் என்றா? நானிருக்கும் வரை இந்த மண்ணை ஒரு கணமேனும் விட்டுக்கொடுக்கமாட்டேன்… அவ்வுரிமை இல்லாமலாகவேண்டும் என்றால் நானும் என் மைந்தரும் எங்கள் கொடிவழியினரும் ஒரு துளிக்குருதிகூட இல்லாமல் அழியவேண்டும்.”

“தாங்கள் இங்கிருக்கலாம், பேரரசி” என்றார் சௌனகர். “வெறுமனே இருக்கமாட்டேன். ஒவ்வொருநாளும் தெற்குவாயிலில் அமைந்துள்ள நிதம்பசூதனியின் ஆலயத்திற்குச் சென்று என் மைந்தரின் சினம் அணையாதிருக்கவேண்டும் என்று பூசனை செய்வேன். ஒவ்வொரு இருள்நிலவுநாளிலும் போர்த்தெய்வமான பிரத்யங்கரைக்கு குருதிகொடுத்து என் மைந்தரின் எதிரிகள் குலம் எஞ்சாது முற்றழியவேண்டும் என்று வேண்டுதல் செய்வேன். விழித்திருக்கும் நேரமெல்லாம் இவர்களை அழிக்கவேண்டுமென தெய்வங்களிடம் இறைஞ்சுவேன். கனவில் நானே தெய்வமாக எழுந்து இவர்களின் தலைகொய்து குருதிநீராடுவேன். ஒருகணமும் என் வஞ்சம் அணையாது.”

“அங்கே அவையில் என் மைந்தரும் மருகியும் வஞ்சினம் உரைத்ததைத்தான் நீங்கள் அறிவீர்கள். நான் உரைத்த வஞ்சினத்தை தெய்வங்கள் அறியும். இவர்களின் குடியில் ஒரு மைந்தன், ஒரு உயிர் எஞ்சாது அழியவேண்டும்… விழியிழந்தோனும் அவன் தேவியும் நீர்க்கடன் செய்யவும் கொடிவழியினர் இல்லாது தனித்துவிடப்படவேண்டும். அப்போது என் மைந்தனிடம் சொல்வேன். கைப்பிடி நீரையும் அன்னத்தையும் அவ்விழிமக்களுக்குப் பிச்சையிடுக என்று. இன்று என் மைந்தருக்கு அடிமைவிலக்கு அளித்து காடேக ஆணையிட்டார்கள் அல்லவா? அந்தப் பெருங்கருணைக்கு நான் செய்யும் ஈடு அது.”

அஞ்சியவர் போல சௌனகர் நோக்கி நின்றார்.  தொண்டைநரம்புகள் புடைக்க “என்ன? ஐயமிருக்கிறதா? ஐயமிருக்கிறதா உங்களுக்கு?” என்றாள் குந்தி. “இல்லை, அன்னையே. நான் எண்ணியது பிறிதொன்று” என்றார் சௌனகர். “இவையனைத்தும் தொடங்கிய முளைப்புள்ளியை இப்போது கண்டுகொண்டேன்.” குந்தி கைகளால் நெஞ்சைத்தட்டி  “ஆம், நான். நானேதான் அனைத்துக்கும் தொடக்கம்…” என்று கூவினாள். “நன்று பேரரசி, இச்சொற்களை என்றோ ஒருநாள் உங்களிடம் நானே நினைவுகூரப்போகிறேன் எனத் தோன்றுகிறது” என்றார்.

“அறவுரையா?” என குந்தியின் இதழ்கள் வளைந்தன. “அந்தணர் சொல்கேட்டு நான் அறமுணரவேண்டியதில்லை.” சௌனகர் புன்னகையுடன் அவள் கண்களை நோக்கி “இல்லை, அரசி. அந்தணரிடமிருந்தே அறமறியவேண்டும். ஏனென்றால் அந்தணருக்கு உங்கள் வெற்றிதோல்விகளில் பங்கில்லை. நீங்கள் ஈட்டுவதும் இழப்பதும் அவர்களின் செல்வம் அல்ல. இந்திரப்பிரஸ்தத்தின் தலைமை அமைச்சனாகிய நானும் என் துணைவியும் இன்னும் என் நகர்மக்கள் காலையில் என் புற்குடில் முற்றத்தில் கொண்டுவந்து வைக்கும் பன்னிரு கைப்பிடி அரிசியை உண்டு வாழ்பவர்கள். அப்பன்னிரு கைப்பிடி அரிசியை நான் இந்த விரிமண்ணில் எங்கும் ஈட்டிக்கொள்ள முடியும். மானுடரில்லா காட்டில் எனக்கு புள்நிரை அதை கொண்டுவந்து அளிக்கும்” என்றார்.

“அரசி, அந்தணன் பூமிதேவன் என்கின்றது சதபதப் பிராமணம். அந்தணன் இல்லையேல் பாரதவர்ஷம்  இல்லை. ஏனென்றால் இது நாங்கள் உருவாக்கி எடுத்த மண். ஆம், என்ன ஐயம்? அறமுரைக்க அந்தணன் மட்டுமே தகுதியானவன். ஏனென்றால் அவன் சொற்கள் உங்கள் ஆட்டக்களத்திற்கு அப்பாலிருந்து எழுபவை. தேவர்களைப்போல நாங்கள் உங்கள் முட்டிமோதல்களுக்கு நடுவே காற்றென கண்படாது உலவுகிறோம். ஒளியென விழியுடையோருக்கு மட்டும் காட்சியாகிறோம். அதை உங்கள் மைந்தர் நன்குணர்ந்திருக்கிறார். ஆகவேதான் நான் அமைச்சன் என இங்கிருக்கிறேன்.” அவள் மேலே பேசுவதற்குள் அவர் தலைவணங்கி வெளியே சென்றார்.

முற்றத்தில் சுரேசர்  அவருக்காக காத்திருந்தார். “அரசரும் இளையோரும் கிளம்பிவிட்டனர், அமைச்சரே. நடந்தே வருகிறார்கள்.” சௌனகர் “எவ்வழியாக?” என்றார்.  “அரசமகளிர் கொற்றவை ஆலயத்திற்குச் செல்லும் ஊடுவழியினூடாக… எவரும் அறியவில்லை. இங்கு வந்துவிட்டு பேரரசரிடமும் பேரரசியிடமும் வாழ்த்துரை கொண்டு கிளம்புகிறார்கள்.” சௌனகர் தலையசைத்தார். “எப்படி இருக்கிறார்கள்?” என்றார் சுரேசர். சௌனகர் ஒன்றும் சொல்லவில்லை. “மானுடரில் பெரும்தெய்வங்கள் ஏறியமர்வது எப்போதாவதுதான். உரியவற்றை கொள்ளாமல் அவை விலகுவதில்லை” என்றார் சுரேசர்.

மரவுரியாடை அணிந்த தருமனும் தம்பியரும் பன்னிரு படைவீரர்களுடன் எதிர்ப்பக்கத்தின் சிறிய ஊடுவழியில் தோன்றினர். புற்றில் இருந்து எறும்புகள் எழுவதுபோல என சௌனகர் எண்ணினார். பெருமூச்சுடன் திரும்பி சுரேசரிடம் “இன்றுமுதல் ஏழுநாட்கள் நான் உண்ணாநோன்பு” என்றார். “ஏன்?” என்றார் சுரேசர் திகைப்புடன். “நாக்கு மிகுதியாக உணவுண்டுவிட்டது. அது சற்று மெலிவது நன்று.” சுரேசர் விழிசுருக்க சௌனகர் மேலும் புன்னகையுடன் “அந்தணனின் நாக்கு கல்லுக்குள் நெருப்பென உறையவேண்டும், கல்மட்டுமே அதை எழுப்பவேண்டும்” என்றார்.

தருமனும் தம்பியரும் உள்ளே வந்தபோது குந்தியை அழைத்துவர சுரேசரை அனுப்பிவிட்டு சௌனகர் சென்று அவர்களை வரவேற்றார். “அன்னை எங்கே?” என்றார் தருமன். “வந்துகொண்டிருக்கிறார்” என்று சௌனகர் சொன்னார். யுதிஷ்டிரர் கைகூப்பியபடி மாடிப்படியை நோக்கி நின்றார். நகுலனும் சகதேவனும் விழிநீர் பளபளக்க நோக்கினர். அர்ஜுனன் அங்கில்லாததுபோலிருக்க பீமன் கைகளைக் கட்டியபடி சற்றே ஏளனம் தெரிந்த கண்களுடன் அவர்களை நோக்கிக்கொண்டிருந்தான்.

படிக்கட்டின் மேல் குந்தி தோன்றியதும் யுதிஷ்டிரர் கைகளை தலைக்குமேல் தூக்கினார். குந்தி தளர்ந்து விழப்போனாள். முதியசேடியர் இருவர் அவளை பிடித்துக்கொண்டனர். முகத்தை மேலாடையால் மூடி தோள்கள் அதிர அழுதபடி குந்தி கீழிறங்கி வந்தாள். கைப்பிடிவிளிம்பில் இருந்த துதிதூக்கிய யானையைப் பற்றியபடி நின்றாள். “வாழ்த்துக, அன்னையே!” என்றபடி யுதிஷ்டிரர் குனிந்து அவள் கால்களை தொட்டார். அவள் அழுகையால் குலுக்கப்பட்டவளாக செயலற்று நின்றாள். “வாழ்த்துங்கள், அரசி” என்றார் சுரேசர். “அரசி, வாழ்த்துங்கள்!” என்றாள் முதியசேடி.

.

10

நோயுற்றது போல நடுநடுங்கிக்கொண்டிருந்த நரம்புகள் புடைத்த மெல்லிய கையை யுதிஷ்டிரர் தலைமேல் வைத்த குந்தி பெருத்த விம்மலுடன் அதை விலக்கிக்கொண்டாள். பாண்டவர்கள் ஒவ்வொருவராக அவள் தாள்பணிய அவள் ஒருசொல்லும் உரைக்காமல் அழுதுகொண்டே இருந்தாள். அவர்கள் திரும்பி நடந்து வெளியே சென்றபோது கால்தளர்ந்து தரையில் அமர்ந்துவிட்டாள். சௌனகர் அவளை ஒருகணம் நோக்கி நின்றபின் ‘செல்வோம்’ என சுரேசருக்கு விழிகாட்டிவிட்டு பாண்டவர்களைத் தொடர்ந்தார்