செந்நா வேங்கை - 81
“திரும்புக, பின் திரும்புக… எதிர்கொள்ளல் ஒழிக! நிலைக்கோள்! நிலைக்கோள்” என பாண்டவப் படையின் முரசுகள் முழங்கிக்கொண்டிருந்தன. திருஷ்டத்யும்னன் தன் படைகளுக்கு “நிலைகொள்ளுங்கள்… எவரையும் பின்நகர விடாதிருங்கள்” என்று ஆணையிட்டபடி தேரிலிருந்து தாவி புரவியிலேறிக்கொண்டு படைகளினூடாக விரைந்தான். அவனைச் சூழ்ந்து அம்புபட்டு பாண்டவப் படையின் வீரர்கள் விழுந்துகொண்டிருந்தனர். ஒன்றுமேல் ஒன்றென விழுந்து குவியல்களாக துடித்துக்கொண்டிருந்தன சாகும் பிணங்கள். அவன் புரவி பல இடங்களில் தயங்கி கனைத்தபடி மறுபக்கம் தாவிச்சென்றது.
யுதிஷ்டிரரின் தேரை அணுகியதும் அவன் விரைவை குறைத்தான். மறுபக்கம் தேரில் வந்த சாத்யகி புரவியில் வந்து யுதிஷ்டிரரின் தேரின் அருகே நின்றான். யுதிஷ்டிரர் தேர்த்தட்டில் அமர்ந்திருந்தார். அவருடைய புண்களுக்கு மருத்துவன் வெதுப்புமருந்து வைத்து ஒட்டிக்கொண்டிருந்தான் “என்ன நடந்தது?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். “சல்யருக்கும் அரசருக்குமான தனிப்போர்… அரசரை மீட்கும்படி ஆகிவிட்டது” என்றான் சாத்யகி. அவனும் பதற்றம் கொண்ட நிலையில்தான் இருந்தான். நெடுந்தொலைவுவரை அலைக்கொந்தளிப்பின் சருகுப்படலம் என நெளிந்தமைந்த பாண்டவப் படை முழுக்க பதற்றம் நிறைந்திருந்தது. “அரசே” என்றான் திருஷ்டத்யும்னன்.
யுதிஷ்டிரர் விழிதிறந்து பதறியபடி எழுந்தார். “என்ன நிகழ்கிறது? நம் தரப்பின் இளையோர் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். பீஷ்மர் இரக்கமே இன்றி சிறுவர்களை கொன்று குவிக்கிறார். உங்கள் சூழ்கைக் கணக்குகள் அனைத்தும் பிழைத்துவிட்டன. சிறுவரை முன்னே அனுப்பினால் பிதாமகரின் வில் தயங்கும் என எண்ணினீர்கள். சிறுவர்களைக் கொன்று வீசி தான் எதனாலும் தயங்கப்போவதில்லை என அவர் தன் படைகளுக்கு காட்டிவிட்டார். அவருடைய தயங்காமை கண்டு கௌரவர் வெறிகொள்ள நம்மவர் சோர்ந்துவிட்டனர்… பேரழிவு… முதல்நாளே நம் படைகளில் ஐந்திலொன்று அழிந்துவிட்டது…” என்று கூவினார். மூச்சுவாங்காமல் “போதும், இனி இளையோர் அழியக்கூடாது… பின்வாங்கும்படி சொல்க… இளையோர் எவரும் படைமுகம் செல்லக்கூடாது” என்றார்.
திருஷ்டத்யும்னன் “அரசே, பீஷ்மர் எண்ணியிராதபடி கொலைவெறி கொண்டிருக்கிறார். நிகழ்ந்தது பேரழிவு. இரண்டுமே உண்மை. ஆனால் இத்தருணத்தில் நாம் பின்வாங்குவோம் என்றால் நாளை நம்மால் எழவே முடியாது. இன்று மாலை வரை எதிர்த்து நிற்போம்… இப்போதே வெயில் மங்கலடைந்து வருகிறது. இன்னும் சற்றுநேரம்தான்…” என்றான். பற்களைக் கடித்து விழிகளில் ஈரத்துடன் “நிறுத்து… இது போரே அல்ல. இது வெறும் படுகொலை. பலியாடுகள் என சென்று நின்றிருக்கிறோம்…” என்று யுதிஷ்டிரர் கூவினார். “அரசே, நீங்கள் உளம்சோர வேண்டியதில்லை. அர்ஜுனர் பீஷ்மரை நிறுத்தினார். அதைவிட இளையவர் அபிமன்யூவால் பீஷ்மர் வெல்லப்பட்டார். நாம் வெல்வோம்…” என்றான் திருஷ்டத்யும்னன். “அது பிதாமகரின் விளையாட்டு… வெல்லமுடியும் என விருப்பு காட்டி நம் மைந்தரை களத்திற்கு ஈர்க்கிறார். அவர்களை இன்றே அவர் கொன்று கூட்டுவார்… வேண்டாம்! இக்கணமே அவர்கள் திரும்பியாகவேண்டும்.”
சாத்யகி “நாம் பொருதிநிற்கவேண்டும் என்றே எண்ணுகிறேன், அரசே” என்றான். மேலும் உரக்க “போரில் தோற்பவர்கள் தோல்வியை முன்னரே ஏற்றுக்கொண்டவர்கள்தான். நாம் தோற்கக்கூடும் என்ற ஐயமே எழக்கூடாது. நம்மால் வெல்லமுடியும்” என்றான். யுதிஷ்டிரர் சினத்துடன் “எப்படி? கொன்றுகுவித்துக்கொண்டிருக்கிறார் முதியவர். நச்சு கலக்கப்பட்ட குளத்தில் மீன்கள்போல கிடக்கிறார்கள் நம் வீரர்கள். இனிமேலும் நாம் நம் இளையோரை பலிகொடுக்க வேண்டியதில்லை” என்றார். சாத்யகி “இளையோர் செல்லவேண்டியதில்லை. நாம் செல்வோம். அரசே, பாண்டவ மைந்தர் அபிமன்யூ முதியவரை ஒரு நாழிகைப்பொழுது திணறச்செய்தார். நாம் இளைய பாண்டவர் அர்ஜுனரையும் அபிமன்யூவையும் சுருதகீர்த்தியையும் சேர்த்து அனுப்பி அவரை தடுத்து நிறுத்துவோம்” என்றான்.
“இளையோர் செல்லவேண்டாம்… இது என் ஆணை! பார்த்தனும் திருஷ்டத்யும்னனும் நீயும் சென்று அவரை செறுத்து நிறுத்துங்கள்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். அப்போது படைகளிலிருந்து பெருங்குரலில் வாழ்த்தொலிகள் எழுந்தன. “என்ன? என்ன நிகழ்கிறது அங்கே?” என்றார் யுதிஷ்டிரர். ஒரு வீரன் புரவியில் விரைந்து வந்து திரும்பி “அரசே, தன் தந்தையையும் உடன்பிறந்தாரையும் கொன்ற துரோணருக்கும் சல்யருக்கும் பீஷ்மருக்கும் எதிராக மண்ணில் கையறைந்து வஞ்சினம் உரைத்து சங்கன் எழுந்துள்ளார்” என்றான். யுதிஷ்டிரர் “அறிவிலி… அறிவிலி… உடனே செல்க! அவனை தடுத்து நிறுத்துக!” என்றார்.
“அரசே, அவர்களை கொல்வேன் என அவர் மண்ணறைந்துள்ளார்” என்றான் வீரன். “அவன் சொன்ன சொற்களை சொல்” என்றார் யுதிஷ்டிரர். “தமையன் கொல்லப்பட்டதைக் கேட்டதும் அவர் தேரிலிருந்து பாய்ந்திறங்கினார். வானை நோக்கி கைநீட்டி தெய்வங்களே மூதாதையரே என்று கூவினார். நாங்கள் அவரை சூழ்ந்தோம். மண்ணில் மும்முறை அறைந்து வஞ்சினம் வஞ்சினம் என்றார். கண்ணீர் வழிய என் மூத்தோரை, என் படைத்துணைவரைக் கொன்றழித்த துரோணர், சல்யர், பீஷ்மர் எனும் மூவரையும் களத்தில் எதிர்த்து நின்று கொல்வேன். குருதிப்பழி கொள்வேன். ஆணை என்றார். நாங்கள் தெய்வங்கள் அறிக, வானோர் அறிக, மூத்தோர் அறிக, வஞ்சம் நிகழ்க, வெற்றிவேல் வீரவேல் என வாழ்த்து கூவினோம்” என்றான் வீரன்.
“வஞ்சினம் உரைத்தவனை அதை ஒழியச்செய்வது மாண்பல்ல” என்றான் சாத்யகி. “நன்று, அவ்வஞ்சம் நடக்கட்டும். ஆனால் அதில் இன்று மாலைக்குள் என்னும் சொல் இல்லை. ஆகவே இன்றல்ல, வரும்நாளில் அவன் தன் வஞ்சத்தை நிறைவேற்றட்டும். இது என் ஆணை!” என்றார் யுதிஷ்டிரர். திருஷ்டத்யும்னனை நோக்கி “முதியவர்களை பின்னர் பார்த்தன் எதிர்கொள்வான். குலாடகுடியின் இளையோனின் வஞ்சம் நம்மால் முடிக்கப்படும். இப்போது அவனை தடுத்து நிறுத்துக! அவன் பிதாமகரின் முன் சென்றுவிடலாகாது” என்றார்.
திருஷ்டத்யும்னன் தலைவணங்கி புரவியைத் திருப்பி படையணிகளின் நடுவே பாய்ந்துசென்றான். அம்புகள் படாமலிருக்க அவன் புரவிமேல் முதுகு வானுக்குக் காட்டி நன்கு குனிந்திருந்தான். அவன் புறக்கவசம்மீது அம்புகள் கூழாங்கல் மழை என உதிர்ந்துகொண்டிருந்தன. அலறி விழுந்துகொண்டிருந்த வீரர்களின் உடல்கள் மேல் பாய்ந்து சென்றுகொண்டிருக்கையில் அவன் உள்ளம் சொல்லின்றி திகைத்திருந்தது. முதல்நாள் முதல்நாள் என்று அது துடித்து விழித்துக்கொண்டது.
அவன் சங்கனை தொலைவிலேயே பார்த்துவிட்டான். கைகளைத் தூக்கி “சங்கனை சூழ்ந்துகொள்க!” என ஆணையிட்டான். அவன் உதடுகளில் இருந்தும் கையசைவிலிருந்தும் ஆணையைப் பெற்ற கேட்டுச்சொல்லி அதை உரையாக்க முரசுகள் அதை இடியோசையாக்கின. கவசவீரர்களும் வில்லவர்களும் சங்கனை சூழ்ந்தனர். கேடயத் தேர்கள் சங்கனை மறித்து கோட்டை அமைத்தன. அவன் அவர்களை நோக்கி “வழிவிடுக… வழிவிடுக!” என்று கூவினான். அவனை அணுகிய திருஷ்டத்யும்னன் “இளையோனே, இது அரசாணை. இன்று நம் போர் முடிந்துவிட்டது. குறைந்த இழப்புகளுடன் காப்புப்பூசல் நிகழ்த்தி அந்தியை அணைவதே இனி நம் போர்முறை. போதும், பின்வாங்குக! உன் படைகளைத் தொகுத்து மீண்டும் வேல்முனைச் சூழ்கை அமைத்துக்கொள்க! குறைந்த இறப்புகளுடன் பின்நகர்ந்து மையப்படையுடன இணைக!” என்றான்.
சங்கன் வெறிகொண்டிருந்தான். “இல்லை பாஞ்சாலரே, இனி இக்களத்திலிருந்து நான் குருதிப்பழி கொள்ளாது மீள்வேன் என்றால் எனக்கும் என் குலத்திற்கும் இழிவு… நான் வஞ்சினம் உரைத்துவிட்டேன்” என்றான். “வஞ்சினம் அவ்வாறே இருக்கட்டும். இன்று மட்டும்தான் பின்னடைகிறோம். அந்தியில் அமர்ந்து புதிய படைசூழ்கைகளை அமைப்போம். ஆற்றலை தொகுத்துக்கொண்டு நாளை வந்து திருப்பி அடிப்போம். அதுவே அறிவுடைமை. இன்று முந்துவது பொருளிலாச் செயல். நாம் செல்லவேண்டிய தொலைவு மிகுதி” என்றான் திருஷ்டத்யும்னன். “இல்லை, உரைத்த வஞ்சினத்திற்கே வீரன் கடன்பட்டவன். தெய்வங்களைவிட, மூதாதையரைவிட, அரசனையும் தந்தையையும்விட” என்றான் சங்கன்.
“ஆம், உன் வஞ்சினம் நிலைகொள்ளட்டும். இன்று மாலைக்குள் குருதிப்பழி கொள்வேன் என நீ சொல்லவில்லை அல்லவா?” என்றான் திருஷ்டத்யும்னன். “இன்று மாலைக்கு இன்னும் மிகைப்பொழுதில்லை. நோக்கியிருக்கவே கதிரிறக்கம் நிகழும்.” வெறியுடன் சிரித்தபடி சங்கன் “நீங்கள் சொல்வது புரிகிறது, பாஞ்சாலரே. அது நான் என்னையே ஏமாற்றிக்கொள்வதன்றி வேறல்ல. நான் வஞ்சினம் உரைக்கையில் இன்று இக்கணம் என எண்ணியே சொன்னேன். அதுவே நான் கொள்ளும் பொருள்” என்றான். “இது முதன்மை படைத்தலைவனாக என் ஆணை!” என்றான் திருஷ்டத்யும்னன். “அதை நான் மீறுகிறேன். விழைந்தால் என்னைக் கொல்ல ஆணையிடுக!” என்றபடி சங்கன் தன் தேரைச் செலுத்தும்படி பாகனுக்கு ஆணையிட்டான்.
தேர் விசைகொண்டு சென்று கேடயத்தேர் ஒன்றை முட்டியது. அது உருவாக்கிய இடைவெளியினூடாக சங்கன் அப்பால் சென்றான். “அவரை சூழ்ந்துகொள்க! எக்கணமும் அவர் உதவிக்கு இரும்புத்திரை எழவேண்டும்” என்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான். “அரசே, துரோணரின் தாக்குதல் மிகுந்து வருகிறது. நெடுந்தொலைவு உள்ளே வந்துவிட்டார்” என்றான் தூதன். “இதோ” என்று அவன் புரவியைத் திருப்பி விரைந்து தன்னை நோக்கி வந்த தேரில் ஏறிக்கொண்டான். துரோணருடன் அபிமன்யூ வில்கோத்திருந்தான். “அபிமன்யூவை காத்து நில்லுங்கள். சுருதகீர்த்தி சல்யரை எதிர்கொள்ளட்டும். பாண்டவ மைந்தர் பின்னடைக! அபிமன்யூவின் பின்னால் சாத்யகி செல்க!” என அவன் ஆணையிட்டான்.
சங்கன் கைகளைத் தூக்கி கூச்சலிட்டபடி பீஷ்மரை நோக்கி செல்வதை திருஷ்டத்யும்னன் கண்டான். தேரைத் திருப்பி சங்கனின் பின்னால் செல்ல ஆணையிட்டான். “ஆலிலை, பன்னிரண்டாவது பிரிவு இரண்டாக உடைந்துள்ளது. நடுவே துரியோதனரின் படை உட்புகுந்துள்ளது” என செய்தி வந்தது. “ஆணை, அர்ஜுனன் அங்கே சென்று அப்படைப்பிரிவை இணைக்கவேண்டும். கௌரவர் பின்னுக்குத் தள்ளப்படவேண்டும்” என்றான். அலறியபடி துதிக்கை வெட்டுண்ட யானை ஒன்று ஓடி வந்தது. எதிர்ப்பட்டவர்களை மிதித்துத் தள்ளியபடி தேர்களைச் சரித்தபடி வந்து முழங்கால் மடித்து விழுந்து கொம்புகள் நிலத்தில் குத்தியிறங்க உடல்துடித்து பக்கவாட்டில் சரிந்தது.
அந்த யானை உருவாக்கிய வழியில் பூரிசிரவஸ் தோன்றினான். உடலெங்கும் யானையின் கொழுங்குருதி உருகிய செவ்வரக்கென விழுதுகளாக வழிய அவன் தன் வழுக்கும் வில்லை ஏந்தி அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்தான். சங்கனும் பூரிசிரவஸும் விற்களால் எதிர்கொண்டார்கள். அம்புகள் பறந்து முட்டி உதிர நோக்கை மறைக்கும் குருதிவழிவை தலையை உதறித் தெறிக்கவைத்தபடி சங்கன் போரிட்டான். இரு தேர்களும் ஒரு சுழலும் சகடத்தின் இருமுனைகளில் அமைந்த ஆணிப்புள்ளிகள் என ஒன்றையொன்று சுற்றிவந்தன. கீழே கிடந்த குதிரை ஒன்றின்மேல் ஏறிய பூரிசிரவஸின் தேர் சற்றே சரிய அவன் தலையை அறைந்து கவசத்தை உடைத்தது சங்கனின் அம்பு. மீண்டுமொரு அம்பு பூரிசிரவஸின் தலைக்குச் செல்ல அவன் திரும்பி அதை ஒழிந்தபோது கன்னத்தை கீறிச்சென்றது. அவன் விட்ட அம்பு சங்கனின் தோளிலையை உடைத்தது.
திருஷ்டத்யும்னன் மேலே நோக்கினான். கதிரவன் மேற்கே சரியத் தொடங்கிவிட்டிருந்தான். பாண்டவப் படையின் நீள்நிழல்கள் கௌரவப் படைகள் மேல் விழுந்து சுழன்றாடின. கௌரவர்கள் அனைவருமே அனல் பற்றி எரிவதுபோல் ஒளிகொண்டிருந்தார்கள். கவசங்களிலிருந்து தழலெழுந்தாடுவதுபோல தோன்றியது. இன்னும் சற்று பொழுது. பூரிசிரவஸின் புரவி ஒன்று சங்கனின் அம்பில் கழுத்து அரிபட்டு தலைதாழ்ந்துவிட அவன் தேர் சரிந்தது. அவன் தன் வாளை உருவியபடி தேரிலிருந்து பாய்ந்து நிலத்தில் நின்று அறைகூவினான். திருஷ்டத்யும்னன் “சங்கனை காக்க!” என ஆணையிட்டபடி தன் புரவியில் பிணக்குவியல்களைக் கடந்து தாவி “பால்ஹிகரே, என்னுடன் பொருதுக! இளையோனுடன் ஆற்றல்காட்டி தருக்கவேண்டாம்” என்றான்.
பூரிசிரவஸ் நகைத்து “நீர் அங்கநாட்டரசர் அல்ல என்றால் இன்று என் வாளுக்கு பலியாவீர். இந்நிலத்தில் வேறெவரும் எதிர்நிற்கவியலாது என்று அறிந்திருப்பீர்” என்று கூவினான். சங்கனை கேடயப்படை சூழ்ந்து அப்பால் தள்ளிக்கொண்டு சென்றது. திருஷ்டத்யும்னன் நிறைவுணர்வுடன் பூரிசிரவஸை வாளெதிர்கொண்டான். “நோக்குவோம்… போரில் திறனல்ல, தெய்வங்களே ஊழாடுகின்றன” என்றான் திருஷ்டத்யும்னன். தன் வாளால் அவன் பூரிசிரவஸின் வாளை சந்தித்தான். அவன் வாள் எடைமிக்கது, நீண்டது. அதன் ஓர் அடியை பூரிசிரவஸின் வாள் எதிர்கொள்ளவியலாது. ஆனால் விழிநோக்கவியலா விரைவுகொண்டது பூரிசிரவஸின் வாள் என அவன் அறிந்திருந்தான். அவன் தன் வாளைச் சுழற்றி வீச கைகளால் காற்றை உந்தி மெல்ல எழுந்து பின் விலகி அந்த வீச்சை ஒழிந்தான் பூரிசிரவஸ்.
அவன் முழு விசையுடன் வாளை சுழற்றிக்கொண்டிருந்தான். வண்ணத்துப்பூச்சியை வாளால் வெட்ட முயல்வதுபோல தோன்றியது. எதிர்பாராத கணத்தில் பூரிசிரவஸ் பாய்ந்து முன்னால் வந்தான். அவன் கண்கள் இரு கரிய வண்டுகள் என நேருக்குநேர் பறந்து வரக் கண்டு அவன் உள்ளம் திகைத்தது. அவன் வாள் அப்போது ஒரு வீச்சின் சுழற்சியில் வளைந்து அப்பால் சென்றிருக்க அவன் நெஞ்சு காப்பற்றிருந்தது. அவன் கவசத்தின் இடைவெளியில் புகுந்தது பூரிசிரவஸின் வாள். அவன் தன் உடலை உந்தி பின் தள்ளி மல்லாந்து விழுந்தான். வாள் தன் நெஞ்சை ஊடுருவிவிட்டதென்றே தோன்றியது. வலக்கை தனியாக துடித்தது. அதிலிருந்த வாள் கீழே விழுந்தது.
கேடயங்களுடன் காப்புப்படை வந்து அவனை சூழ்ந்துகொண்டது. இரண்டு வீரர்கள் தூண்டில்கொக்கிகளை அவனை நோக்கி வீசி அவன் கச்சையில் கோத்து இழுத்து தூக்கிக்கொண்டனர். கேடய வீரர்கள் இருவரை வீழ்த்திவிட்டு பாய்ந்து புரவியொன்றின்மேல் ஏறிய பூரிசிரவஸ் அதன் விலாவில் தொங்கிய வில்லை எடுத்து அவன் மேல் அம்புகளை எய்தான். திருஷ்டத்யும்னனை தேரிலேற்றிக்கொண்டு பின்னகர்ந்தனர் பாஞ்சாலர். பூரிசிரவஸுடன் வந்து சேர்ந்துகொண்ட சலனும் தார்விக நாட்டரசன் சசாங்கனும் திரிகர்த்த நாட்டரசன் ஷேமங்கரனும் சௌவீர நாட்டரசன் சுமித்ரனும் அம்புகளால் பாண்டவப் படைகளை தாக்கி பின்னடையச் செய்தனர். எடை மிகுந்தோறும் தாழும் தூளி என பாண்டவப் படை தழைந்து வளைந்து பின்னடைந்தது. தேரில் படுத்தபடி திருஷ்டத்யும்னன் “மேலும் படைகள் இம்முகப்புக்கு வருக! அவர்களை தடுத்து நிறுத்துக” என ஆணையிட்டான்.
அணுக்கன் தேரிலேறி அவன் தோள் கவசத்தை கழற்றினான். புண்மேல் மெழுகுச்சீலையை வைத்து இறுகக் கட்டினான். குருதி நின்றாலும் தீப்புண் என காந்தியது தோள். “கழுத்துநரம்புக்கு வந்த வெட்டு இளவரசே, திறம்படத் தப்பிவிட்டீர்கள்” என்றான் அணுக்கன். “திறமையால் அல்ல, கால்தடுக்கி பின்னால் விழுந்தேன். மூத்தோர் அருளால். நாம் செல்ல இன்னும் நெடுந்தொலைவுள்ளது. ஆற்றவேண்டிய கடமைகள் பல உள்ளன” என்றான் திருஷ்டத்யும்னன். அவனிடம் ஓடிவந்த படைத்தூதன் “நூற்றுவர்தலைவர் எழுபதுபேர் இறந்தனர் இளவரசே, ஆயிரத்தவர் அறுவர் பூரிசிரவஸால் கொல்லப்பட்டுவிட்டனர்” என்றான். “கழையர் நோக்குக!” என்று அவன் சொன்னான். ஏறி இறங்கிய கழையன் “இளவரசே, நமது படைகள் மிகவும் பின்வாங்கிவிட்டிருக்கின்றன. செருகளத்தின் எல்லைவரை நம்மை செலுத்திவிட்டனர் கௌரவர்” என்றான். “சொல்க!” என அவன் கூவினான். “அர்ஜுனர் துரோணருடன் பூசலிடுகிறார். துரியோதனருக்கும் பீமனுக்கும் போர் நிகழ்கிறது. சகுனியை சாத்யகி எதிர்கொள்கிறார். அப்பால் ஜயத்ரதரிடம் அபிமன்யூ போரிட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்குத் துணையாக சர்வதனும் சுதசோமனும் இருபுறமும் நின்றிருக்கிறார்கள்.”
திருஷ்டத்யும்னன் “சங்கன் எங்கே? சங்கன் என்ன ஆனான்?” என்றான். “அரசே, அவர் பீஷ்மரை எதிர்கொள்கிறார்.” திருஷ்டத்யும்னன் தேரில் கையூன்றி எழுந்தமர்ந்து “எங்கே?” என்றான். “எத்தனை பொழுதாக?” வீரன் “அரைநாழிகைப்பொழுதாக. அவர் துரியோதனரை எதிர்கொண்டார். அங்கிருந்து பீஷ்மரிடம் சென்றார்” என்றான். தேர்த்தூணைப் பற்றி எழுந்து நின்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான் “செல்க! படைமுகப்புக்கு… பீஷ்மரின் முன்னிலைக்கு!” தேர்ப்பாகன் “அரசே…” என “செல்க!” என அவன் கூவினான். தேர்ப்பாகன் புரவியை தட்டியதுமே அது கிளம்பி பாய்ந்தது. தேரின் ஒவ்வொரு அசைவுக்கும் அவன் உடல் அதிர்ந்து புண் வலிகொண்டது. “விரைக! விரைக!” என கூவினான். தேர் சென்றுகொண்டிருக்கையிலேயே “சங்கனை காத்துகொள்க!” என ஆணையிட்டான். “கேடயப் படை அவனை சூழ்க!”
திருஷ்டத்யும்னன் வானை பார்த்தான். முகில்கள் ஒளியிழந்து வெண்பஞ்சுகளாகிவிட்டிருந்தன. “இன்னும் எத்தனை பொழுது?” என்றான். “இளவரசே, ஒரு நாழிகை… மிஞ்சினால் ஒன்றேகால்” என்றான் பாகன். “நிமித்திகர் அதை முடிவெடுக்கவேண்டும். நாம் அவர்களை நம்பியுள்ளோம்.” அவன் சங்கனை பார்த்துவிட்டான். சங்கன் அருகே ஒருபுறம் பாஞ்சாலத்தின் சத்ருஞ்ஜயனும் விரிகனும் நின்றிருக்க மறுபக்கம் மத்ஸ்யநாட்டு சதானீகன் நின்றிருந்தான். அவர்கள் இணைந்து பீஷ்மரை எதிர்கொண்டனர். அம்புத்திரைக்கு அப்பால் உதடுகளை உள்மடித்து அரைவிழி மூடி ஊழ்கத்திலென பீஷ்மரின் முகம் தெரிந்தது. அவனை நோக்கி ஓடிவந்த பாஞ்சால இளவரசன் யுதாமன்யு “இளையோனே, இங்கு நிகழ்ந்துகொண்டிருப்பது வெறும் படுகொலை. பீஷ்மரின் உடலில் ஒரு கீறலைக்கூட எம்மவரால் அளிக்கமுடியவில்லை. அவர் அறுவடைசெய்வதுபோல் கதிரும் தளிருமாக சீவி அடுக்கிக் கொண்டிருக்கிறார்” என்றான்.
திருஷ்டத்யும்னன் “இன்னும் ஒரு நாழிகை… அதுவரை எதிர்த்து நில்லுங்கள். நாளை என்ன செய்வதென்று எண்ணுவோம்…” என்றான். அவனை நோக்கி புரவியில் வந்த உத்தமௌஜன் “இளையோனே, உபமல்லநாட்டு இளவரசர்கள் கார்த்தன், கடம்பன், கருணன், கும்பிகன் ஆகியோர் கொல்லப்பட்டுவிட்டனர். இன்று இறந்த இளவரசர்களின் எண்ணிக்கை எண்பதை கடந்துவிட்டது” என்றான். “ஒரு நாழிகைப்பொழுது…” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். “ஒரு நாழிகைப் பொழுது மட்டும் நிலைகொள்ளுங்கள்.” அவன் உடல் வலியால் சோர்ந்தது. தேரின் தூணை பற்றிக்கொண்டு நின்றான். தலைசுழல கண்களை மூடிக்கொண்டான். “உபநிஷாத நாட்டு இளவரசர்கள் சுந்தரனும் சுதீரனும் காமிகனும் கொல்லப்பட்டார்கள்” என குரல் எழுந்தது. “நூறு… இன்று அணைவதற்குள் நூறு இளையோரின் உயிர் உண்பார் பிதாமகர்” என்று பாகன் சொன்னான். “அவரை சூழ்ந்துகொள்க!” என்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான்.
எதிரில் சங்கன் வெறிகொண்டவனாக பீஷ்மரிடம் பொருதிக்கொண்டிருப்பதை அவன் கண்டான். அவன் தேர்மாடமும் கொடியும் சிதைந்திருந்தன. தேர்த்தூண்கள் சிம்புகளாக உடைந்து நின்றிருந்தன. வலத்தோளின் தோளிலை உடைந்திருக்க அங்கே ஓர் அம்பு தைத்து நின்றது. தொடைக்கவசத்தை உடைத்து ஓர் அம்பு பாய்ந்திருந்தது. “ஒரு நாழிகை பிதாமகர் முன் நின்றுவிட்டார். இன்று உயிருடன் மீண்டார் எனில் இவரே இன்றைய நாளின் வீரர்” என்று பாகன் சொன்னான். சங்கனின் தோள்களின் விசை வியப்புறச் செய்தவாக இருந்தது. அவன் அம்புகளில் அவ்விசை இருந்தது. அவன் அம்புபட்டு பீஷ்மரின் குதிரை ஒன்று கழுத்தறுந்து மூச்சு சீறி குருதி தெறிக்க முகம் தாழ்த்தி முன்னால் விழுந்தது. பீஷ்மரின் தேர் நிலைகுலைய அசைந்து அலைக்கழிந்த தேர்மேல் அவர் விளக்குச்சுடர் என நிலையழியாமல் நின்றார்.
“விலகுக!” என்று கூவியபடி திருஷ்டத்யும்னன் அச்சூழ்கை நடுவே புகுந்தான். “என்னை தொடர்க!” என்று கேடயவீரர்களுக்கு ஆணையிட்டு சங்கனை நோக்கி சென்றான். கேடயத் திரையால் மறைக்கப்பட்ட சங்கன் அவனை நோக்கிய அம்புகள் இரும்புப்பலகைகள் மேல் அறைபடுவதைக் கேட்டு திரும்பிநோக்கி “விலகுக பாஞ்சலரே, இது என் பகைமுடிக்கும் பொழுது” என்று கூவினான். “நீ வென்று நின்றுவிட்டாய், இளையோனே… போதும்” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். “இதோ பொழுதணைகிறது. இன்று நீ அவரை எவ்வண்ணமும் கொல்லவியலாது. திரும்பு!” சங்கன் “என்னை தடுக்கவேண்டாம், பாஞ்சாலரே” என்று கூவ “அவனை அழைத்துச்செல்லுங்கள்” என்றான் திருஷ்டத்யும்னன்.
கேடயப்படை சங்கனை தள்ளிக்கொண்டு சென்றது. கைதூக்கி “சூழ்ந்துகொள்க… பிதாமகர் இந்த வட்டத்தைவிட்டு மீறலாகாது” என்று ஆணையிட்டு திரும்பிய திருஷ்டத்யும்னன் தன் எதிரே துரோணரை கண்டான். தாடிமயிர் குருதி உலர்ந்து சடையென கருமைகொண்டு தொங்க தேரில் அமர்ந்து அணுகிய துரோணர் நகைத்து “இன்று என்னுடன் பொருதுக, பாஞ்சாலனே! உன் தந்தையின் கடனை நீ முடி, அல்லது நான் முடிக்கிறேன்” என்றார். “இதோ… இதுவே அத்தருணம்” என்றபடி திருஷ்டத்யும்னன் தன் நாணை ஒலிக்கவிட்டுக்கொண்டு அவரை நோக்கி சென்றான். ஆனால் பின்னால் விராடரின் குரல் கேட்டது. “விலகுக பாஞ்சாலரே, இது என் மைந்தனின் சாவுக்கு என் வஞ்சம்… விலகுக!” அவன் “செல்க, விராடரே! இது உங்களுக்குரிய போர் அல்ல” என்று சொன்னான். அதற்குள் விராடர் தன் தேருடன் துரோணரின் அம்புவளையத்திற்குள் புகுந்து வெறிகொண்டு தொடுக்கத் தொடங்கிவிட்டிருந்தார்.
விராடர் அழுதுகொண்டும் பொருளிலாது கூச்சலிட்டுக்கொண்டும் அம்புகளை எய்தார். அவருடைய பயிலா கைகளால் ஒற்றை அம்பைக்கூட துரோணரை அணுகச்செய்ய முடியவில்லை. துரோணரின் அம்புகள் அவரை அறைந்து அறைந்து கவசங்களை உடைத்தன. அவர் வில் ஒடிந்தது. தோளில் பாய்ந்த அம்புடன் அவர் தேர்த்தட்டில் அமர்ந்தார். துரோணரின் அம்புகளால் அவர் தேர்ப்புரவிகள் வெட்டுண்டு சரிந்தன. தேர் அவரைச் சரித்து கீழே தள்ளி சகடங்கள் உருள இழுத்துச்சென்றது. திருஷ்டத்யும்னன் “துரோணரே, இது நமது போர்” என்று கூவியபடி அவரை நோக்கி பாய்ந்து அம்புகளால் அவர் தோளிலைகளை உடைத்தான். அவர் உடலின் கவசங்களை அணுக்கன் அகற்றிக்கொண்டிருக்க அதை அறியாதவர்போல் அவர் வில்தொடுத்துக்கொண்டிருந்தார்.
பின்னாலிருந்து சங்கன் “தந்தையே…” என்று கூவியபடி வந்தான். விராடர் மண்ணில் உருண்டு எழுந்து ஓடிச்சென்று மைந்தனின் தேரில் ஏறிக்கொண்டார். சங்கனைத் தழுவியபடி அவர் “நம் குடியை முற்றழித்தவர் இவர்… மைந்தா, நம் குடியை முற்றழித்தவர்கள் இவரும் பீஷ்மரும்” என்று கூவியபடி நடுங்கினார். “அமைதிகொள்க, தந்தையே!” என்று சொன்னபடி சங்கன் தேரை முகப்புக்கு செலுத்தினான். “விலகுக… விலகிச்செல்க!” என்றான் திருஷ்டத்யும்னன். “இன்னும் பொழுதில்லை… இதோ முடிகிறது இந்நாள். நீ களம்நின்று காட்டிவிட்டாய், மைந்தா. செல்க!” என்று கூவிக்கொண்டே துரோணரை எதிர்த்தான்.
சங்கன் “என் குலத்தோரின் குருதிக்கு இன்றே பழிநிகர் செய்கிறேன்” என்றபடி அம்புகளை ஏவிக்கொண்டு துரோணர் முன் சென்றான். அவன் தலைக்கவசம் ஓசையுடன் உடைந்தது. அவன் திரும்புவதற்குள் பிறையம்பு அவன் தலையை வெட்டி வீழ்த்தியது. தலையற்ற உடல் விராடரின் மடியில் விழுந்து துள்ளியது. கவிழ்த்த குடத்தில் இருந்து என குருதி அவர் மேல் கொப்பளித்துக் கொட்டியது. விலங்கொலியில் “மைந்தா! என் மைந்தா!” என்று கூவியபடி விராடர் உடல் வலிப்புகொள்ள நினைவிழந்து பின்னால் சரிந்தார். அவரை கேடயப்படை சூழ்ந்துகொண்டது.
தொலைவில் பொழுதணைந்துவிட்டதை அறிவித்தபடி எரியம்புகள் எழுந்தன. முரசுகள் தொடர்ந்து முழங்கலாயின. படைவீரர்கள் காற்று ஓயும் காடு என மெல்ல அசைவிழந்தனர். வெட்டுண்டவர்கள் இறுதியாகச் சரிய வெட்டியவர்கள் அவர்களை என்ன நிகழ்ந்தது என்று அறியாதவர்கள்போல் திகைத்து நோக்கி நின்றனர். “போர் முடிவு! போர் முடிவு!” என அறிவித்தபடி கொம்புகள் ஒலித்தன. படைகளின் பின்னிரையில் இருந்து ஆர்ப்பொலிகளும் கூச்சல்களும் எழுந்தன. முன்னிரையில் நின்றவர்கள் கால்கள் தாளாமல் உடல் எடைகொண்டவர்கள்போல் வாளையும் கதையையும் ஊன்றி நின்றனர். சிலர் கால்தளர்ந்து அமர்ந்தனர். சிலர் புண்களில் இருந்து குருதி வழிய நிலத்தில் படுத்தனர்.
“கூடுக! கூடுக! கூடுக!” என முரசு முழங்கியது. படைவீரர்கள் ஒருவரோடொருவர் தழுவியபடி சிறு தொகைகளாக மெல்ல நடந்தார்கள். ஒவ்வொருவரும் முற்றிலும் எண்ணமொழிந்து தெய்வமொழிந்த வெறியாட்டன்போல உடல்மட்டுமாக எஞ்சினார்கள். கௌரவப் படைகளில் இருந்து “வெற்றி! வெற்றி! வெற்றி!” என முரசு முழங்கத் தொடங்கியது. அங்கே பின்நிரையில் இருந்த வீரர்கள் படைக்கலங்களைத் தூக்கி “வெற்றிவேல்! வீரவேல்! கௌரவர் தலைவருக்கு வெற்றி! அஸ்தினபுரிக்கு வெற்றி!” என முழக்கமிட்டனர்.