செந்நா வேங்கை - 78
ஆடிப்பீடத்தில் முகவாயை அழுத்தி ஒரு கண் மூடி ஒரு கண்ணால் கூர்ந்து நோக்கி வலக்கையால் இரு ஆடிகளையும் விலக்கியும் இணைத்தும் பார்வையை முழுப் படை நோக்கி விரித்தும் தனிவீரன் விழியளவு நோக்கி குவித்தும் குருக்ஷேத்ரப் போர்க்களத்தை நோக்கிக்கொண்டிருந்த சஞ்சயன் ஆடிக்குழிவால் சூரியன் இரண்டாக தெரிவதைக் கண்டான். ஒன்றையொன்று காய்ந்தன இரு எரிவட்டங்களும். ஆடியை விலக்கி இணைத்து ஒரு கணம் சேய்மை பிறிதொரு கணம் அண்மையென்றாக்கி நோக்கினான். தன் விழிதொட்ட அனைத்தையும் அக்கணமே சொல்லாக்கினான். மிக விரைவிலேயே அச்செயல்கள் அனைத்தும் முற்றிலும் ஒத்திசைவு கொள்ள அவனிடமிருந்து இடைமுறியாது எழுந்த சொற்பெருக்கில் திருதராஷ்டிரர் அங்கு அமர்ந்திருப்பதை முற்றிலும் மறந்து இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடிகளை பற்றிக்கொண்டு உடல் முன்சரித்து தலையை சற்றே திருப்பி தசைகள் விதிர்க்க உதடுகள் குவித்தும், மீண்டும் பற்களைக் கடித்தும், அவ்வப்போது முனகியும், ஊடே கூச்சலிட்டலறியும் மெய்ப்பாடுகளை காட்டியபடி களத்தை கண்முன் பார்த்துக்கொண்டிருந்தார்.
பருந்தென அகன்றும் சிறுபுள்ளென களத்திற்குள் தோளிலிருந்து தோள்பாய்ந்தும் சஞ்சயன் அனைத்தையும் பார்த்தான். “பேரரசே, இரு கண்ணீர்த்துளிகளுக்கு நடுவே என இந்த ஆடிகளுக்குள் காலமும் வெளியும் மடிந்து மடிந்து செறிந்துள்ளன. என் சித்தத்தால் ஒவ்வொரு அடுக்காகப் பிரித்துக்கொண்டிருக்கிறேன்” என்றான். “இதோ இரு படைகளும் ஒன்றுடன் ஒன்று ஊடுருவி நெடுந்தொலைவுக்கு சென்றுவிட்டிருக்கின்றன. இங்கிருந்து பார்க்கையில் இரு படைகளுக்கும் நடுவே அச்சந்திப்புக்கோடு பாறைவெளியில் சரிந்திறங்கி வரும் வெண்நுரை ஆற்றுவழிவுபோல கொந்தளிக்கும் நீண்ட பெருக்கென்று தோன்றுகிறது. அதில் நுரைக்குமிழிகள் என தேர்முகடுகளும் தலைக்கவசங்களும். இரு படைகளின் வண்ணங்களும் ஒன்றுடனொன்று கலக்கின்றன. செம்மஞ்சள் நிறமும் செந்நீலமும் கலந்து உருவான புதிய வண்ணம் சொல்லற்கரியது” என்றான்.
நமது படைகள் மான்கொம்பின் வடிவை தக்கவைத்துக்கொண்டே போரிடுகின்றன. மான்கொம்பு விரிந்தும் ஒவ்வொரு கணுவும் ஒரு விழுதுபோல் நீண்டும் சென்று பாண்டவர்களின் படைப்பிரிவுகளை வளைத்துக்கொள்கின்றன. பீஷ்மரும் அஸ்வத்தாமரும் நடத்தும் படைகளால் ஆன இரு கணுக்களின் நடுவே விராட மைந்தனாகிய உத்தரன் சிக்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கு வலப்பக்கம் ஜயத்ரதரும் இடப்பக்கம் சல்யரும் இப்போது நின்றிருக்கிறார்கள். ஆயினும் அவர் அஞ்சியதுபோல் தெரியவில்லை. போர்க்களம் அவரை மேலும் மேலும் ஆற்றல்கொள்ளச் செய்கிறது.
பீஷ்மர் மான்கொம்பின் முனையிலிருந்து சருகுப்பரப்பை எரித்து ஊடுருவும் அனல்துளிபோல பாண்டவர்களின் படைப்பிரிவுக்குள் நுழைந்திருக்கிறார். பீஷ்மரின் அம்புகளால் அவரைச் சூழ்ந்துள்ள பரப்பு நாம் நோக்கியிருக்கவே ஆளொழிந்து வெட்டவெளியென்றாகிறது. இங்கிருந்து பார்க்கையில் அவருடைய தேர்முகடு காலைஒளியில் வெண்சுடர்விடுகிறது. இதோ அணுகிச்சென்று அவர் முகத்தை பார்க்கிறேன். கண்கள் நன்கு இடுங்கி இருப்பதனால் அவரது உணர்வை கண்டுபிடிக்க இயலவில்லை. காற்றில் தாடி பறந்துகொண்டிருக்கிறது. அதில் குருதி வழிந்து மயிர்முனைகளில் செம்மணிகளெனத் திரண்டு காற்றில் பறக்கிறது. அவர் கொன்ற வீரர்கள் அலறிச் சரிகையில் தெறிக்கும் குருதிச்சாரல் பட்டு அவரது வில் கையில் வழுக்குகிறது.
அரசே, இத்தனை தொலைவில் இருந்தும், ஒவ்வொன்றும் அசைவின்மை கொள்ளும் தேவர் நோக்கிலும், என்னால் அவருடைய கையசைவை பார்க்க இயலவில்லை. அவருடைய அம்புகள் மிகச் சிறியவை. அவை எழும் கணத்தை வில்லதிர்வால் நோக்குகிறேன். தொடும் கணத்தை வீழ்பவனில் பார்க்கிறேன். அவை எழுந்து காற்றிலேறிச் செல்வதைக் காண இங்கிருந்து மேலும் பின்னகர்ந்து விண் விளிம்பில் நின்றிருக்க வேண்டும் போலும். படைகள் நீள்வாக்கில் சிறு அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆகவே பெரிய பல்கொண்ட சீப்பால் சீவி நிறுத்தப்பட்ட கூந்தலென அவை இங்கே தெரிகின்றன. ஒரு படையென முன்னெழுகையிலும் அவர்கள் தனிநிரைகளென்றே செல்கிறார்கள். இது நிரைகள் விலகிப் பரக்கவும் மீண்டும் இணைந்து இறுகவும் உதவுகிறது. ஒரு சரடு சற்றே விலக அவ்விடைவெளியில் பிறிதொன்று புகுந்துகொள்கிறது. வீழ்பவர்களை வருபவர்கள் இடைவெளியின்றி நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். படைமுகப்பில் குவிந்த பிணங்களைக் கடந்து தேர்களும் புரவிகளும் செல்கின்றன. இப்போரில் இதுவரை யானைகள் களமிறக்கப்படவில்லை.
இதோ அர்ஜுனரை பீஷ்மர் எதிர்கொள்கிறார். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துவிட்டதுமே சூழ்ந்திருக்கும் இரு தரப்புப் படைகளும் விற்களையும் வேல்களையும் தூக்கி கூச்சலிடுகின்றன. அவ்வசைவை ஒரு சிற்றலையென இங்கிருந்து பார்க்க முடிகிறது. அனைவரும் விலகி உருவான வட்டத்திற்குள் அவர்கள் இருவரின் தேர்களும் ஒன்றையொன்று சந்திக்கின்றன. அர்ஜுனர் பீஷ்மரை நோக்கி வணங்கி முதல் அம்பை அவர் காலடி நோக்கி எய்கிறார். அடுத்த அம்பு அவருடைய நெஞ்சுக்குச் செல்ல அதை அவர் தடுக்கிறார். அவர் கையிலிருந்த அம்பு அர்ஜுனர் தலையிலிருந்த செம்பருந்தின் இறகை சீவிச்செல்கிறது. இரு வீரர்களுக்கும் நடுவே புகைக்கீற்று ஒன்று இருப்பதுபோல் ஒளிரும் அம்புகள் படலமாகி அலைகொண்டு தெரிகின்றன. ஒளிவிடும் அம்புகளால் ஆன வளைந்த பாலம். இந்தத் தொலைவில் அது ஓர் இறகுக்கீற்று.
அரசே, அதோ இரு படைகளும் எல்லைக்கு வெளியிலிருந்து நிரைநிரையாக அம்புகளை ஒற்றைப்புரவிகள் இழுக்கும் சிறுவண்டிகளில் படைமுகப்புக்கு கொண்டுசென்று கொண்டிருக்கிறார்கள். எரியனலில் அவியூற்றுவதுபோல அம்புகள் அப்பொருதுமுனை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. செருகளத்தை அடியிலி நோக்கி திறக்கும் பெரும் பிலம் என்று எண்ணுகிறேன். இருபுறத்திலிருந்தும் நீர்ப்பரப்பு பெருகிவந்து மடிந்து அதிலிறங்கி மறைந்துகொண்டிருக்கிறது. மானுட உயிர்கொள்ளத் திறந்த கவந்தனின் வாய். சுவைத்து உண்டு மேலும் பசிகொண்டு உறுமி அதிர்ந்துகொண்டிருக்கிறது அது.
அரசே, அஸ்வத்தாமரை திருஷ்டத்யும்னர் எதிர்கொள்கிறார். அப்பால் பீமன் ஜயத்ரதரை சந்திக்கிறார். இருபுறமும் அம்புகளால் வெறிகொண்டு தாக்கிக்கொள்கிறார்கள். பீமன் தன் தேரிலிருந்து பாய்ந்திறங்கி கதையைச் சுழற்றியபடி முன்னகர்கிறார். தேரிலிருந்து ஜயத்ரதரும் இறங்கி நிற்கிறார். இருவரும் கதைகளால் ஒருவரை ஒருவர் குறிநோக்கியபடி மண்டிலக் கால்வைத்து மெல்ல சுழன்றுவருகிறார்கள். ஒருகணம் மறுகணம் என காலம் செல்ல சூழ்ந்து நின்றிருக்கும் படைவீரர்கள் மூச்சடக்கி காத்திருக்கிறார்கள். இரு குமிழிகளென கதையுருளைகள் தாக்கிக்கொள்கின்றன. சூழ்ந்திருக்கும் வீரர்கள் படைக்கலங்களைத் தூக்கி கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கிறார்கள். இருபுறமும் கதைகள் பறக்கும் வட்டம் ஒரு நீர்ச்சுழி. அல்ல, ஒரு வெள்ளி நாகம். அவர்கள் அதன் நடுவே நின்று நடனமிடுகிறார்கள்.
பீமனின் அறைபட்டு ஜயத்ரதரின் கவசம் உடைந்து தெறிக்கிறது. பீமன் கதையைச் சுழற்றி அவர் தலையை அறைந்துடைக்கச் செல்கிறார். பின்னிருந்து பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தரும் உத்தரகலிங்க நாட்டு சூரியதேவரும் இரு கைகளென நீண்டு வந்து ஜயத்ரதருக்கும் பீமனுக்கும் நடுவே நுழைகிறார்கள். அவர்கள் ஜயத்ரதரை அள்ளி விலக்கி கொண்டுசெல்ல கௌரவர்களின் தேர்ப்படையினர் இடைபுகுந்து அவர்களை பீமனிடமிருந்து விலக்கி கொண்டுசெல்கிறார்கள். பீமன் தன் கதையை வானில் தூக்கி வெறிக்கூச்சலிட்டு நகைக்கிறார். ஜயத்ரதரை வீரர்கள் தேரிலிட்டு கொண்டுசெல்ல அணுக்கர் தேரிலேறி அவர் புண்களை பார்க்கிறார்கள். அவர் கலம்நிறைய மதுவாங்கி அருந்தி ஓய்வெடுக்கிறார். அவர் உயிர்ப்புண்பட்டிருக்கவில்லை என்று தேர்த்தட்டில் எழுந்து நிற்பதிலிருந்து தெரிகிறது.
“ஆம், கதைப்போரில் என் மைந்தனன்றி எவர் பீமனை எதிர்க்கவியலும்?” என்று திருதராஷ்டிரர் சொன்னார். சஞ்சயன் தொடர்ந்தான். “இங்கிருந்தே குருதிச்செம்மையை பார்க்க இயல்கிறது. பொருதுகளமே சிவந்து நீண்ட சாட்டைப் புண்போல் தெரிகிறது. செந்நிறக் கரையிட்ட பெருந்துகில் என குருக்ஷேத்ரத்தை பார்க்கிறேன். முன் முகப்பில் விழுந்த வீரர்களை ஈடு செய்ய பின்னிருந்து படைகளை அனுப்பும் கொடிகள் அசைகின்றன. இரு படைகளும் பின்னிரையிலிருந்து பெரிய ஒழுக்குகளாக மழைநீர் ஓடைகளெனப் பெருகி ஆறு நோக்கி செல்வதுபோல பொருதுமுனை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். அரசே, பொருதுமுனை மிக மெல்ல பாண்டவர் படைகளை பின்னுக்குத் தள்ளி முன்னேறுவதை பார்க்கிறேன்.
இரு கைகளாலும் தொடையை அறைந்தபடி “ஆம்! பீஷ்ம பிதாமகர் வெல்வார்! அவருக்கு நிகர் எங்கும் இல்லை! அவரை எதிர்கொள்ள அவர்களால் இயலாது!” என்று திருதராஷ்டிரர் கூவினார். “ஆம் அரசே, பீஷ்மர் நெடுந்தொலைவு உள்ளே சென்றுவிட்டார். அவர் உருவாக்கிச் சென்ற பாதையினூடாக பூரிசிரவஸும் அஸ்வத்தாமரும் பின்தொடர்ந்து அவ்விரிசலை அகற்றி பெரிதுபடுத்துகிறார்கள். இரு எல்லையில் கிருபரும் துரோணரும் பாண்டவப் படைகள் தங்கள் பிறை வட்டத்தை முழுமை செய்து கௌரவப்படைகளை வளைத்துக்கொள்ளாமல் காக்கிறார்கள். அரவொன்றின் தலையை துரோணர் அம்புகளால் அறைந்தறைந்து பின்னுக்கு தள்ளுகிறார். அதன் வாலை கிருபர் அறைந்து பின்செலுத்துகிறார். எதிரியை சுற்றிவளைத்து கவ்வ முயன்ற நாகம் உயிர்வலி கொண்டு நெளிகிறது. எனினும் இழந்த வஞ்சத்தை மீட்டுக்கொண்டு மீண்டும் மீண்டும் நெளிந்து வருகிறது.
பாண்டவப் படைகள் அடிவைத்து அடிவைத்து பின்னகர்கின்றன. நமது படைகள் ஒவ்வொரு முன்னகர்வுக்கும் களிகொள்கின்றன. நான் கௌரவ அரசரை பார்க்கிறேன். யானையிலிருந்து இறங்கி தேரிலேறிக்கொண்டு முன்னால் செல்கிறார். தனது தேர்த்தட்டில் களிவெறிகொண்டு கூச்சலிட்டபடி தோளிலும் தொடையிலும் ஓங்கி அறைந்து அவர் நடனமிடுகிறார். அவருக்கு வலப்பக்கம் துச்சாதனர் கூச்சலிட்டபடி தேர்த்தட்டில் நின்று சுழல்கிறார். துர்மதர் முன் நோக்கி அம்பு செலுத்தி பின்நோக்கி ஆணைகளை கூவுகிறார். இதோ இதோ அவர் உதடுகளை நான் பார்க்கிறேன். அவர் சொல்வதென்ன? வென்றுவிட்டோம்! வெல்கிறோம்! இதோ சரிகிறது அந்த மாளிகை. அடித்தளம் விரிசலிட்டுவிட்டது. தூண்கள் நிலையழிகின்றன. செல்லுங்கள் இன்னும் ஒரு முட்டு. இன்னும் ஓர் உந்தல். முற்றிலும் நிலைசரிந்து விழும் அது. எழவிடாதீர்கள். ஒருவரையும் எஞ்சவிடாதீர்கள்.
வெறிகொண்டு தேரிலிருந்து தன் கதையுடன் இரு புரவிகளின்மேல் கால்வைத்து பாய்ந்து முன்னால் மண்ணில் இறங்கி தன் முன்வந்து நின்ற படைவீரர்களின் தலைகளை அறைந்து உடைத்து மூளையும் குருதியும் சிதறி தன்மேலேயே விழுந்து உடல் நனைத்து வழுக்கிச் சொட்ட முன்னகர்கிறார் அரசர். அவரை எதிர்கொள்ள வருகிறார்கள் கிராத மன்னர் கார்த்தரும் ஏழு இளவரசர்களும். அவர்களின் தலைகள் சிறுகுமிழிகள் என உடைந்து தெறிக்கின்றன. மல்ல நாட்டு இளவரசர்கள் பிரதக்ஷிணரும் உபபிரதக்ஷிணரும் சிதைந்தனர். கீழமச்ச நாட்டு சம்ப்ரதனும் சௌகிருதனும் சௌமூர்த்தனும் இதோ இறந்தனர். யானை சேற்றுவயலை மிதித்து குழப்பி முன்செல்வதுபோல் சென்றுகொண்டிருக்கிறார் அரசர். அரசே, விராட நாட்டு அரசர் இப்போது உங்கள் மைந்தரை எதிர்கொள்கிறார். தன் கதையை எடுத்தபடி தேரிலிருந்து இறங்கி அவர் ஓடி வருகிறார். வெறிநகைப்புடன் துரியோதனர் அவரை நோக்கி செல்கிறார். அவர்களை சுற்றி படைகள் விலகி அமைந்த சிறுகளத்தின் நடுவே இருவரும் கதைகளால் முட்டிக்கொள்கிறார்கள்.
முதல் அறையிலேயே விராடரின் நெஞ்சை அறைந்து பிளக்கிறார் துரியோதனர். வாயிலும் மூக்கிலும் குருதி வழிய மல்லாந்து விழுந்த விராடரின் தலையை பிறிதொரு அறையால் உடைக்க முன்னெழுகிறார். கொக்கிச்சரடை வீசி விராடரின் கால்தளையில் கொளுத்தி இழுத்து பின்னால் எடுத்துக்கொள்கிறார்கள் விராடப் படையினர். தரையில் விழுந்து கிடந்த விராடரின் கொழுங்குருதியை ஓங்கி காலால் மிதித்து சிதறடிக்கிறார் அரசர். சூழ்ந்திருந்த நமது வீரர்கள் பெருங்கூச்சலெழுப்பி ஆர்ப்பரிக்கிறார்கள். விராடர்கள் அஞ்சி நடுங்கியபடி பின்னகர்கிறார்கள். துச்சாதனர் “தொடருங்கள்! ஒரு அணுவும் இடைவிடாது தொடருங்கள்” என்று கூச்சலிட்டபடி தன் படைத்திரளை குவித்து முன்னகர்கிறார்.
விராட இளவரசர் உத்தரன் தன் தந்தை கொல்லப்பட்டதாக எண்ணி பெருஞ்சினம் கொண்டு கைகளால் தொடையிலும் நெஞ்சிலும் அறைந்தபடி வில்லுடன் படைகளைப் பிளந்தோடி வருகிறார். அவரைத் தொடர்ந்து வரும் விரைவுப் புரவிப்படையின் அம்புகளால் நமது புரவி வீரர்கள் மடிந்து உதிர்கிறார்கள். நிலையழிந்த புரவிகள் சுற்றிச் சுற்றி வர அவற்றை தன் கதையால் அறைந்து விலக்கியபடி உத்தரனை நோக்கி செல்கிறார் துரியோதனர். தன் தேரிலேறிக்கொண்டு வில்லெடுக்கிறார். இருவரும் அம்புகளால் சந்தித்துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு அம்பும் இலக்கு தேடி மயிரிழையில் தவறவிட்டு உதிர்கின்றன. ஒன்றுடன் ஒன்று மோதி முறிகின்றன. நம் அரசரின் தேர் முள்ளம்பன்றியின் உடலென தைத்த அம்புகளால் நிறைந்திருக்கிறது. உத்தரனின் வெறிகண்டு நம் அரசரே சற்று உளம் திகைத்தவர் போலிருக்கிறார். அவரது கை சோர்ந்துவிட்டது.
உத்தரனின் அம்பொன்று அரசரின் மணிக்கட்டை தாக்குகிறது. கையை உதறி அவர் பின்நகர வலப்பக்கத்திலிருந்து பூரிசிரவஸ் தன் அம்புகளை ஒன்றன்பின் ஒன்றென ஏவி ஒரு முள்வேலியை ஏற்படுத்தியபடி உதவிக்கு வருகிறார். மறுபக்கத்திலிருந்து அஸ்வத்தாமரும் வருகிறார். அரசரை மீட்டு பின்னால் கொண்டுசெல்கிறார்கள். இருவருக்கும் நடுவே கேடயங்கள் சுமந்த படையொன்று திரையென இழுத்துவிடப்படுகிறது. தேர்த்தட்டிலிருந்து நின்று தலையை அறைந்தபடி வெறிக்கூச்சலிடுகிறார் உத்தரன். விராடர் இறக்கவில்லை என அவரிடம் சொல்கிறார் திருஷ்டத்யும்னர். உத்தரனை சினமடங்கச்செய்து அழைத்துச்செல்கிறார்.
நான் குலாடகுடியின் ஸ்வேதனை பார்க்கிறேன். அரசே, அவர் இப்போது பகதத்தரை எதிர்க்கிறார். இளையவனென்று எண்ணி சற்றே இயல்பு நிலையுடன் அவரை எதிர்கொண்ட பகதத்தர் தொடர்ந்து வந்த அம்புகளால் நிலையழிந்து பலமுறை தேர்த்தட்டில் பின்வாங்கினார். அவரது கவசங்கள் உடைந்தன. காலின் உருளைக்கவசம் உடைய தொடையில் அம்பொன்று தைத்தது. முழந்தாளிட்டு அமர்ந்தபோது அவர் கொல்லும் வெறியுடன் தன் தலைக்கு மேல் சென்ற மூன்று அம்புகளை பார்த்தார். மீண்டும் அம்பெடுத்தபோது வில் உடைந்து தெறித்தது. அடுத்த அம்பில் தலைக்கவசம் உடைந்து விழுந்தது. தேர்த்தட்டிலேயே அவர் உடல் பதிக்க அவர் பாகன் தேரைத் திருப்ப பின்னணியில் வந்துகொண்டிருந்த நூறு தேர்களுக்கு நடுவே சென்று மறைந்துகொண்டார்.
நூறு தேர் வீரர்களும் அம்பெடுத்து எய்ய அந்த அம்பு மழையிலிருந்து தப்பும்பொருட்டு உடல் வளைத்து தலைகுனிந்து தேர்ப்பாகனிடம் பின்னால் நகர ஆணையிட்டார் ஸ்வேதன். அவரது தேர்ப்படையினர் இருபுறத்திலிருந்தும் வந்து அவரை காத்தனர். இரு தேர்ப்படைகளும் அம்புகளால் ஒன்றையொன்று தாக்கிக்கொண்டன. தேர்த்தட்டிலிருந்து வில்லவர்கள் அலறிவிழுகிறார்கள். ஆளற்ற தேர்கள் விசையழியாது ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்கின்றன. கவிழ்ந்த தேரின் சகடமொன்று பித்தெடுத்ததுபோல் சுழன்றுகொண்டிருக்கிறது. எழமுயன்ற புரவிகள் மேல் மீண்டும் மீண்டும் அம்புகள் விழுந்து இறங்குகின்றன. அவற்றின் விழித்த கண்ணுருளைகளை, வெறித்த சோழிப்பல்நிரைகளை காண்கிறேன். அவை சென்ற பிறவியில் களம்படாது இறந்தவர்களின் மறுபிறவிகள். துடித்துத் துடித்து தங்கள் கடன் முடிப்பவை.
துரோணரை யுதிஷ்டிரர் எதிர்கொள்கிறார். அவரது அம்புகளை மிக எளிதில் அறைந்தொடுக்கி அவர் நெஞ்சு நோக்கி பேரம்பு ஒன்றைத் தொடுத்து உரக்க நகைக்கிறார் துரோணர். திகைத்து ஒரு கையில் அம்பும் ஒரு கையில் வில்லுமென நின்றிருக்கும் யுதிஷ்டிரரை பார்த்து “செல்க! எனது அம்பு இலக்கு பிழைப்பதில்லை” என்றபின் துரோணர் திரும்பி மறுபக்கம் சென்றார். நான் யுதிஷ்டிரர் கண்களை பார்க்கிறேன். சிறுமைகொண்டு துயருற்று தேரில் நிற்கிறார். அவர் உதடுகளை பார்க்கிறேன். “போதும், திரும்புக!” என்று அவர் தன் பாகனிடம் சொல்கிறார். அவரை காக்கும்பொருட்டு இரு மைந்தர்கள் தேர்களில் அம்பு தொடுத்தபடி வருகிறார்கள்.
ஒருபுறம் சுருதசேனனும் மறுபுறம் சுருதகீர்த்தியும் வந்து அவருக்கு அரணமைக்க தொலைவில் இருந்து அபிமன்யூ தன் பெருந்தேரில் ஊடே சென்ற வில்லவர் புரவிகளை விலக்கி முன்னால் வருகிறார். “நில்லுங்கள், ஆசிரியரே! நில்லுங்கள்!” என்று அவர் துரோணரை அழைக்கிறார். துரோணரும் அவரும் அம்புகளால் சந்தித்துக்கொள்கின்றனர். துரோணரின் அம்புகள் முறிந்து தெறிக்கின்றன. அவரது நெஞ்சுக்கவசம் உடைந்து தெறிக்கிறது. இதோ தலைக்கவசம் சரிகிறது. துரோணரின் விலாவிலும் நெஞ்சிலும் அவர் அம்புகள் தைக்கின்றன. ஒரு அம்பைக்கூட அவரால் அபிமன்யூ உடலில் செலுத்த முடியவில்லை. இளையோன் காற்றில் தாவும் சிறு புள் போலிருக்கிறார். வில்லை நாணேற்றி அம்பு தொடுத்தபடியே தேரிலிருந்து புரவிகளில் தாவுகிறார். புரவித்தலைமேல் கால் வைத்து பிறிதொரு தேர் மேல் ஏறிக்கொள்கிறார். தேரிலிருந்து தேர் முகடுக்குச் சென்று அம்பு விடுகிறார். அங்கிருந்து விரையும் புரவிகள் மீதும் நின்றிருக்கும் அறிவிப்புமாடத்தின் விளிம்பிலும் தொற்றிகொள்கிறார். அரசே, அவர் ஊர்வதற்கு காற்றே போதுமென்று தோன்றுகிறது.
நச்சை உமிழ்ந்து காட்டுப்பறவைகள் அனைத்தையும் கொன்று சருகுகள் என உதிர்க்கும் பெருநாகம்போல் சென்ற வழியெங்கும் அவர் வீரர்களை அழிக்கிறார். துரோணர் இப்போது அம்புகளால் தன்னை தற்காத்துக்கொள்கிறார். அம்புகளை எய்தபடியே தன் தேரை பின்னெடுத்துச் செல்கிறார். அவர் பின்னகர்வதைக் கண்டு உதவிக்கு இருபுறமும் மாளவ மன்னர் இந்திரசேனரும் பால்ஹிக இளவரசன் சலனும் வருகிறார்கள். அவர்களும் கவசமுடைந்து அம்புபட்டு தேர்த்தட்டில் விழுகிறார்கள். கூர்ஜர இளவரசன் மஹிபாலன் நெஞ்சுக்கவசம் உடைய கழுத்தில் அம்பு பாய்ந்து தேர்த்தட்டில் கைவிரித்து மல்லாந்து விழுகிறார். மேலும் மேலுமென பின்னகர்ந்து துரோணர் தன் வில் குலைத்து அம்புவிட்டுக்கொண்டே மறைகிறார்.
உரக்க நகைத்து “செல்க ஆசிரியரே, பிறிதொரு முறை நாம் எதிர்கொண்டால் உங்கள் உயிருடன் திரும்பிச் செல்வேன்” என்று அபிமன்யூ கூச்சலிடுகிறார். சுருதகீர்த்தி ஜயத்ரதரை எதிர்கொள்கிறார். புண்பட்டிருப்பதனால் ஜயத்ரதர் சுருதகீர்த்தியை எதிர்கொள்ளத் திணறுகிறார். அதோ சுதசோமனும் துச்சாதனரும் கதையுடன் சந்தித்துக்கொள்கிறார்கள். அப்பால் சர்வதனும் லட்சுமணனும் கதையுடன் போர்புரிகிறார்கள். நான் பார்ப்பது ஒவ்வொருவரும் தங்களுக்கு நிகரானவருடன் செய்துகொண்டிருக்கும் போரை.
இதோ இந்த தனிவீரனை பார்க்கிறேன். பாஞ்சாலத்தின் முத்திரை கொண்டவன். இன்னமும் அவனுக்கு மீசை முளைக்கவில்லை. பற்களைக் கடித்து வெறிகொண்டு அம்புகளை தொடுத்தபடி புரவியை பாயச்செய்கிறான். மேலும் மேலும் புரவியை விரையச் செய்து கௌரவப் படைகளுக்குள் தாவுகிறான். அரசே, பிறையம்பு ஒன்று அவன் தலையை வெட்டி அப்பாலிட உடல் மட்டும் புரவியூர்ந்து பாய்ந்து செல்கிறது. உடல் உதிர்ந்த பின்னரும் விசையழியாத புரவி முன்னால் சென்று வீழ்ந்து கிடப்பவனின் தூக்கிய வேல்மேல் பாய்ந்து அடிவயிற்றில் செருகிய வேலுடன் நின்று குளம்பு காற்றில் உதைத்துக்கொள்ள சடலங்கள் மேல் புரண்டு அப்பால் உருண்டு செல்கிறது.
அவனுக்கு நேர் பின்னால் ஒரு கௌரவ வீரன் சற்றுமுன்னர்தான் கைவெட்டப்பட்டான். பிறிதொரு கையில் வாளுடன் முன் செல்கிறான். அவனை எதிர்கொண்ட இன்னொருவன் தலையை வெட்டி அவன் உடலை சரித்து விழச்செய்கிறான். ஓங்கிய கையிலிருந்து வாள் விசை குறையாமல் காற்றை வெட்டுவதை காண்கிறேன். இதோ பிறிதொரு இளைஞன் கதை சுழற்றியபடி முன்னால் பாய்கிறான். கௌரவ மைந்தனான குஜநாசன் அவனை எதிர்கொள்கிறார். இளவரசர் விந்தரின் மைந்தன். அவர்கள் கதைகள் சுழன்று தாக்குகின்றன. மூன்றாவது சுழற்சியில் தலையுடைந்து அவ்வீரன் விழுகிறான். குஜநாசன் தன் கதையை வானில் தூக்கிப்போட்டு பிடித்து வெறிக்கூச்சல் எழுப்புகிறார். அவர் தசைகள் வெறிகொண்டு கொப்பளிப்பதை காண்கிறேன்.
இங்கு நிகழ்வது போரெனில் நாம் நூல்களில் கற்ற எதுவும் போரல்ல. இது வெறும் கொலை வெறியாட்டென்றால் இங்கு இனி போரென்பது இதுதான். நமது கௌரவ மைந்தர் ஆயிரத்தவரும் இதோ களத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கதைகொண்டு போரிடுகிறார்கள். சுருதசேனனின் அம்புகளுக்கு முன் நமது ஆயிரத்தவர் மைந்தர் இருவர் இதோ அலறி மண்ணில் விழுகிறார்கள். சர்வதன் கதை வீசி மூவரின் தலைகளை அறைந்து உடைக்கிறார். சுதசோமனை சூழ்ந்திருக்கிறார்கள் கௌரவ மைந்தர் எழுவர். ஒருவனை ஒருவன் எதிர்கொள்ளவேண்டுமென்பதை அவர்கள் வெறியில் மறந்துவிட்டார்கள் போலும். ஏழு கதைகளை தனி கதையால் எதிர்கொள்கிறார் சுதசோமன். அரசே, ஒவ்வொருவராக எழுவரும் தலையுடைந்து விழ தன் கதையை சுழற்றியபடி வெறிகொண்டு கூச்சலிட்டு ஓடிச்சென்று தேரிலேறி முன்னால் செல்க என்று கைவீசி கூச்சலிடுகிறார்.
போர் நிகழும் மண்ணை வேட்டை முடித்த வேங்கையின் செந்நா என்கின்றன நூல்கள். வானளாவிய வேங்கையொன்றை நான் பார்க்கிறேன். விண்ணிலெழுந்துள்ளன இரு பெருவிழிகள். பேரரசே, அதோ அக்களத்தின் தெற்கு மூலையில் களிமண்ணால் எழுப்பிய பெருமேடைக்குமேல் அரவானின் தலை வெறித்த விழிகளுடன் அங்கு நிகழ்வன அனைத்தையும் நோக்கி அமர்ந்திருக்கிறது. அத்திறந்த வாயில் பற்களில் நான் ஒரு பெருஞ்சிரிப்பை பார்க்கிறேன்.