செந்நா வேங்கை - 65

tigதுணைப்படைத்தலைவனாகிய கஜன் குனிந்து கூடாரத்திற்குள் நுழைந்து முழந்தாளிட்டு அமர்ந்து தலைவணங்கி “மாமன்னர் யுதிஷ்டிரரின் அவைக்கு தங்களுக்கு அழைப்பு வந்துள்ளது, இளவரசே” என்றான். தரையிலிட்ட மரவுரிக்கு மேல் அமர்ந்து சிறுபீடத்தில் ஓலைகளை வைத்து படித்துக்கொண்டிருந்த உத்தரன் நிமிர்ந்து உள்ளத்தில் எஞ்சிய சொற்கள் விழிகளில் நிற்க “எப்போது?” என்றான். “முடிந்த விரைவில்” என்று கஜன் சொன்னான். “புரவிகளை சீர்செய்க!” என்றபின் அருகே கிடந்த மேலாடையை எடுத்தபடி உத்தரன் எழுந்தான். யானைத்தோல் இழுத்துக் கட்டப்பட்ட அந்தச் சிறிய கூடாரத்திற்குள் தலைநிமிர்ந்து நிற்க இயலாது. ஆனால் விரிந்தகன்ற போர்க்களத்தில் அதன் சிறிய உட்பரப்பு அணைப்புபோல் விருப்புக்குரியதாக இருந்தது.

அவன் வெளிவந்து கைகளை விரித்து முதுகை வளைத்து சோம்பல் முறித்தான் மெல்லிய பொறுமையின்மை ஒன்று முந்தைய நாளே அவனுக்குள் எழத்தொடங்கியிருந்தது. குருக்ஷேத்ரத்திற்குள் வந்து ஒருநாள் கடந்ததுமே அப்பொறுமையின்மையின் விதையை அவன் தன்னுள் உணர்ந்தான். குருக்ஷேத்ரம் போருக்கு அன்றி வேறு எதற்குமான இடம் அல்ல என்று உள்ளம் கருதியிருந்தது. அங்கு போரில்லாது தங்குவதென்பது அந்த இடத்தில் துருத்தி நிற்பதுபோல. அங்கு வந்ததுமே படைவீரர்களின் உள்ளங்களும் மாறத்தொடங்கியிருப்பதை அணிகளின் நடுவே வெறுமனே பார்த்துச் செல்லும்போதே அவன் உணர்ந்திருந்தான். அதுவரை ஒழுங்கும் முனைப்பும் கொண்ட படைகளாக வந்தவர்கள் அங்கே அவற்றை மெல்ல இழக்கத் தொடங்கினர். செயற்கையான களியாட்டு உளநிலை ஒன்றை அவர்கள் உருவாக்கிக்கொண்டார்கள். பின்னர் அது அவர்கள் உள்ளத்திற்கே கடந்து சென்றது.

அவர்கள் சிறிய குழுக்களாக அமர்ந்து தாயமும் பகடையும் ஆடினர். ஆங்காங்கே ஒருவரையொருவர் உடல்தழுவி மல்லிட்டனர். அவர்களைச் சூழ்ந்திருந்த பிறர் கைதட்டியும் கூச்சலிட்டும் அவர்களை ஊக்கினர். படைபயிற்றும் வில்தேர்வும் விளையாட்டுகளாக மாறின. பின்னர் வெறும் விளையாட்டுகளே தொடங்கின. தலைக்கவசங்களை, குடுக்கைகளை பந்துகளாக்கி விளையாடினர். ஓடியும் துரத்தியும் விளையாடுவதற்கான இடம் குறைவாக இருப்பதனால் அதற்குரிய முறைமைகளை அவர்கள் வகுத்துக்கொண்டனர். ஒருபொருளை உயர தூக்கிப் போட்டு அது மண்ணில் வந்தடைவதற்குள் முதலில் பிடிப்பது யார் என்ற விளையாட்டே பெரும்பாலும் நிகழ்ந்தது.

கூடாரத்தைவிட்டு வெளியே வந்து வெறுமனே செவிகூர்ந்து கேட்கையிலேயே எங்கும் எழுந்துகொண்டிருந்த களியாட்டோசைகளை அறிய முடிந்தது. அது நன்றா தீதா என்று அவனுக்கு தெரியவில்லை. துயரடையாமல் வீரர்கள் நாள்கழிப்பதே நன்று என்று முதலில் தோன்றியது. படைவீரர்கள் அவ்வாறு களியாடுவதே போருக்கு எதிரானதுதான் என்றும் பிறகு தோன்றத் தொடங்கியது. படைகளில் காமமும் உணவின்பமும் உடல் மகிழ்வுகளும் மறுக்கப்படுவதற்கு நிகராகவே இத்தகைய களியாட்டுகளும் மறுக்கப்பட வேண்டுமோ என்று அவன் எண்ணினான். ஆனால் தன் எண்ணங்களை அவையிலெழுந்து சொல்ல அவனால் இயலவில்லை. யுதிஷ்டிரர் அவையில் அவன் எப்போதும் சொல்லற்றவனாகவே இருந்தான்.

அவையில் ஒவ்வொரு நாளும் பலநாழிகை நேரம் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் இளைய பாண்டவர்களும் அமர்ந்து படைக்கான செய்திகளை ஓலைகளில் எழுதினார்கள். அவை புறாக்களின் கால்கள் வழியாக படைகளில் சென்று சேர்ந்துகொண்டிருந்தன. அங்கு ஒரு புதிய நகரம் உருவாகி முற்றிலும் புதிய ஆட்சிமுறையொன்று எழுவதைப்போல. படையை போருக்கென முன்னகர்த்தி கொண்டுசெல்லும் எண்ணமே யுதிஷ்டிரருக்கும் இளைய யாதவருக்கும் இல்லையோ என்ற எண்ணத்தை உத்தரன் அவைகளில் இருக்கும்போது அடைந்தான். ஆனால் தான் எந்தப் பெரும்போரையும் கண்டவனல்ல என்பதனால் எதையும் சொல்லலாகாது என்று அவனுக்கு தோன்றியது. படைகளுக்குள் முறைமைச் சொற்களையும் அவை அடங்கல்களையும் முற்றாக தவிர்க்கவேண்டுமென்ற நெறி இருந்தது. கூடுமானவரை குறைந்த சொற்களில் நேரடியான செய்தியை சொல்ல வேண்டுமென்றும் உரைக்கும் முதற்சொல்லே மையச் செய்தியாக இருக்கவேண்டும் என்றும் படைத்தலைவர் கூறினார். ஆனால் அப்போதும் அரசகுடியினர் தங்கள் நாபயின்ற முறைமைச் சொற்களை உரைத்தபடித்தான் இருந்தார்கள்.

முறைமைச் சொற்கள்தான் உத்தரனுக்கு எப்போதும் கடினமாக இருந்தன. விராடபுரியில் முறைமைச் சொற்கள் மிகக் குறைவு. தங்களை ஷத்ரியர்களாக்கிக் கொள்ளும் பொருட்டு சூதர்களையும் கவிஞர்களையும் வரவழைத்து அவர்கள் முறைமைச் சொற்களை கற்றுக்கொண்டார்கள். அவைகளில் முன்னரே பயிற்சி எடுத்துக்கொண்டு பேசும்போது மட்டுமே அவற்றை கையாள முடிந்தது. பிற தருணங்களில் அவை இயல்பாக மறந்து போய்விடும். ஆகவே பாண்டவர்களின் அவைக்கு வந்தபிறகு அங்கு மீள மீள இயல்பாக நிகழ்ந்த முறைமைச் சொல்லாடல் உத்தரனை அஞ்சவைத்தது. அதுவே பெரும்பாலும் நாவை அடக்கியே வைக்கச் செய்தது. முறைமைச் சொற்களிலிருந்து விடுதலை என்பதே படைக்கு வந்தபின் அவன் அடைந்த முதல் அறிதல்.

ஆனால் முறைமைச் சொற்கள் என்பவை ஒருதருணத்தை முன்னரே வகுத்து வைத்திருக்கும் இயல்புக்குள் கொண்டு சென்று சேர்ப்பவை. ஒவ்வொரு புது தருணத்தையும் அவை பழகிய நடிப்பு என்றாக்கி கையாள்வதற்கு எளிதாகவும் சிக்கலற்றதாகவும் மாற்றிவிடுகின்றன. முறைமைச் சொற்கள் இல்லாதபோது புதிய எண்ணங்களையும் முன்பிலாத் தருணங்களையும் மொழியில் எதிர்கொள்வது கடினமாக இருந்தது. ஒவ்வொன்றுக்கும் உரிய சரியான சொற்றொடர்களைத் தேடி அமைத்துக்கொள்வதற்குள் அத்தருணம் நிகழ்ந்து கடந்தது. உத்தரன் படைகளுக்குள் வந்தபின் உள்ளூர சொற்களுக்கு தவித்தவனாகவே இருந்தான். அந்தத் தவிப்பு அவன் முகத்திலும் உடல் அசைவுகளிலும் எப்போதும் வெளிப்பட்டது. பலமுறை சகதேவன் அவன் தோளில் கைவைத்து “பதற்றம் கொள்ளாதீர், விராடரே. இது ஒன்றும் மணத்தன்னேற்பு அல்ல, வெறும் போர்தான்” என்று சொன்னான். உத்தரன் பிற அனைத்தையும்விட நகையாடலுக்கே மேலும் பதற்றமடைந்தான். ஒருவர் நகையாடுகிறார் என்று புரிந்துகொள்ளவே சற்று பிந்தியது. அதற்கு நகைக்கலாமா, எதிர்நகைச்சொல் எடுக்கலாமா அன்றி பணிவை மட்டுமே காட்டவேண்டுமா என்று குழம்பி அத்தருணத்தில் அவன் உறைந்த முகத்துடன் நின்றான்.

கஜன் புரவிகளை கொண்டுவந்து நிறுத்தினான் அவற்றில் ஏறிக்கொண்டதும் இருவரும் படையணிகளினிடையே இருந்த பாதையினூடாக விரைந்த அடிகளில் சென்றனர். படைப்பிரிவுகள் அணிமாறாமலேயே கலைந்திருப்பதை அவன் கண்டான். நிரையாக நட்ட நாற்றுகள் காற்றில் கலைந்து கொந்தளிப்பதுபோல என்று அவனுக்கு தோன்றியது. கஜனிடம் “எங்கும் இக்கொண்டாட்டம்தானா?” என்றான். “ஆம், இளவரசே. மிகச் செறிவாகவும் முற்றொழுங்குடனும் வகுக்கப்பட்டுள்ள பாஞ்சாலப் படைகளிலேயே வாட்களை தூக்கி வீசி கீழே நின்று நெஞ்சுகாட்டி விளையாடும் போட்டிதான் நடந்துகொண்டிருக்கிறது” என்றான் கஜன். உத்தரன் திரும்பி நோக்க “ஆம். வாள் மிகச் சரியாக இரு கைகளுக்கும் நடுவே வரவேண்டும். அக்குளால் அழுத்தி பற்றிக்கொள்ள வேண்டும். சற்று பிந்தினாலும் அது நெஞ்சில் பாய்ந்து உயிர்குடிக்கும். இரண்டு நாட்களில் எண்பதுபேருக்கு மேல் உயிர் துறந்துவிட்டார்கள்” என்றான்.

“திருஷ்டத்யும்னர் அவ்வாடலை தடைசெய்து ஏதும் சொல்லவில்லையா?” என்று உத்தரன் கேட்டான். “இத்தருணத்தில் படைகளுக்கு எந்த முற்றாணையையும் அளிக்க இயலாது என்கிறார்கள். இவ்விளையாட்டு அரசாணையால் தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் அவ்வாணையை கீழ்நிலை வரை கொண்டுசெல்லமுடியாது” என்றான் கஜன். “மெய்தான். ஆணையிடும் உரிமையை அவை நமக்கு அளிக்கின்றன. அதற்கு மாறாக நாம் சில உரிமைகளை அளிக்கிறோம். தொடர்ந்து ஒரு சொல்லொப்பு மொழியிலாது இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதன் அடிப்படையிலேயே நாம் தலைவர்களாகவும் அவர்கள் படைகளாகவும் நீடிக்கின்றோம்” என்று உத்தரன் சொன்னான். படைகளை நோக்கியபடியே சென்ற உத்தரன் “விந்தைதான், படை என திரண்டு வந்தவர்கள் ஏன் இதை செய்கிறார்கள்? பயின்றவர்கள். தன் குடிக்கு புகழும் தன் நாட்டுக்கு பெருமையும் தனக்கு வெற்றிச்சிறப்பும் விழைந்து எழுந்தவர்கள்” என்றான். “நான் அதை மூத்த வீரர் ஒருவரிடம் பேசினேன். இங்கு இறப்பு பொருளற்றதாக ஆகிவிடுகிறது என்று அவர் சொன்னார். பிறந்த கணம் முதல் இறப்பு பொருளற்றதாகும் தருணம் இது ஒன்றே. அது பெரும் விடுதலை. அதை கொண்டாடுகிறார்கள் என்றார்” என்றான் கஜன்.

அவர்கள் யுதிஷ்டிரரின் மையப்படையை சென்றடைந்தனர். யௌதேயன் தலைவணங்கி “ஏற்கெனவே அவை கூடியிருக்கிறது, விராடரே. தாங்களும் இருப்பது நன்று என்று தந்தை விரும்பினார். ஆகவேதான் செய்தியனுப்பினோம்” என்றான். உத்தரன் விழிகளில் தெரிந்த வினாவை கண்டு “அரசர்கள் மட்டும் கலந்துகொள்ளும் அவை இது. தங்கள் தந்தைக்கு செய்தி அனுப்பினோம். அவர் எழுந்து நடக்கும் நிலையில் இல்லை” என்றான். உத்தரன் விழிகளை திருப்பிக்கொண்டான். “விராடபுரிக்கு அரசராக தாங்கள் இத்தருணத்தில் அவையில் கலந்துகொள்ளலாம் என்று அமைச்சர் சொன்னார்” என்று யௌதேயன் சொன்னான். உத்தரன் தலையசைத்தான். நிர்மித்ரன் “வருக, இளவரசே” என்று அவனை அழைத்துச் சென்றான்.

கஜன் “நான் தங்களிடம் இதை கூறலாகாதென்று எண்ணினேன், இளவரசே. அரசர் கள்மயக்கில் பலமுறை கீழே விழுந்துவிட்டார். நேற்று விழுந்ததில் நெற்றியிலும் உதட்டிலும் புண்ணாகிவிட்டது” என்றான். உத்தரன் மறுமொழி சொல்லவில்லை. “இத்தருணத்தில் இச்செயல் மிகப் பிழையானது. இங்ஙனம் அரசர் இருக்கும் செய்தி படைமுழுக்க தெரிந்துள்ளது” என்றான் கஜன். “ஆம், படையில் நின்று ஒன்றை செய்வது குன்றின்மேல் ஆடையின்றி நிற்பதுபோல” என்றான் உத்தரன். “நான் பலமுறை அரசரின் அணுக்கர்களிடம் சொன்னேன். ஆனால் அரசரை அவர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை” என்றான் கஜன். உத்தரன் மறுமொழி சொல்லவில்லை.

“இது கோழைமை என்றும் இறப்புக்கான அச்சம் என்றும்தான் கொள்ளப்படும். அரசர் அப்படிப்பட்டவரல்ல என்றும் அவர் கொள்ளும் துயர் பிறிதொன்றினால் என்றும் நாம் அறிவோம். ஆனால் இங்குள பிற நாட்டு அரசர்களுக்கும் படையினருக்கும் அதை நாம் எப்படி தெரிவிக்க முடியும்?” என்றான் கஜன். “நாம் இதைப்பற்றி இனிமேல் பேசிக்கொள்ள வேண்டியதில்லை” என்றான் உத்தரன். “ஒன்றுமட்டும் சொல்லத் தோன்றுகிறது, இளவரசே. அரசரின் துயர் குலாடகுடியின் இளவரசர்களை சார்ந்தது. அவர்களை அழைத்துச் சென்று அரசர் முன் நிற்கவைத்தால் போதும். அவர் உளம் கனிந்து அவர்களை தன் உடலுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு ஓரிரு விழிநீர்த்துளி உகுத்தால் மீண்டுவிடுவார்” என்றான் கஜன். “இல்லை, இன்று அவருக்குள் நிறைந்திருப்பது நாம் உணர முடியாத ஒரு நஞ்சு” என்றான் உத்தரன்.

நிர்மித்ரன் அவை வாயிலை சென்றடைந்து வருக என்று கைகாட்டினான். உத்தரன் திரும்பி கஜனிடம் தலையாட்டிவிட்டு அவைக்குள் பின் வாயிலினூடாக நுழைந்தான். அங்கு மையபீடத்தில் யுதிஷ்டிரர் அமர்ந்திருந்தார் அவருக்கு இருபுறமும் தம்பியர் இருந்தனர். இளைய யாதவரையும் திருஷ்டத்யும்னனையும் துருபதரையும் பிற அரசர்களையும் ஒருமுறை பார்த்துவிட்டு முகமனோ முறைமையோ உரைக்காமல் தலைவணங்கி உத்தரன் தன் பீடத்தில் அமர்ந்தான். அவர்கள் அவனுக்காக ஒருகணம் மட்டும் பேச்சை நிறுத்தியபின் மீண்டும் தொடர்ந்தார்கள். அவன் முதலில் கலைந்த சொற்களாகவே அதை கேட்டான். பின்பு சொல் துலங்கலாயிற்று. அதன் முன்தொடர்ச்சியை உள்ளம் உய்த்தறிந்தபோது சொற்கள் சொற்றொடர்களென்றாயின.

“சில முறைமைகள் உள்ளன. அவற்றை நாம் கைவிடமுடியாது. அவை ஒரு நோக்கில் பொருளற்றவையென்று தோன்றலாம். பொழுதுகடத்துவது என்றும் ஆகலாம். ஆயினும் அவற்றை வகுத்த மூதாதையர் தங்களுக்குரிய நோக்கங்களை கொண்டிருந்தார்கள் என்றே கொள்ளவேண்டும்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “நான் ஒருமுறைமையைக்கூட இந்தப் போரில் தவிர்க்க விரும்பவில்லை. போருக்கு முன் இறுதியாக மீண்டும் ஒருமுறை பேச்சுக்கு எதிரியை அழைக்கவேண்டும். போரை முறையாக அறிவிக்கவிருக்கும் பொழுதையும் படைகளின் எண்ணிக்கையையும் தலைமை தாங்குபவர்களையும் எதிரிக்கு தெரிவிக்கவேண்டும். போருக்குப்பின் நாம் இயற்றப்போவதென்ன என்பது அவர்களுக்கு தெளிவுறுத்தப்படவேண்டும். போரை தொடர்ந்து நிகழ்த்தி அழிவையும் இழப்பையும் உருவாக்குவதற்கான முழுப்பொறுப்பையும் இதன் வழியாக நாம் எதிரிக்கு அளிக்கிறோம். அதன் பின்னரே நாம் போர் புரியும் உரிமையை பெறுகிறோம். போருக்குப்பின் எதிரிநாடுகளிடமிருந்து போருக்கான இழப்புகளையும் கப்பங்களையும் பெறுவதற்கு தகுதிகொள்கிறோம்.”

“இங்கு அவையிலிருப்பவர்களின் உணர்வுகள் எனக்கு தெரியும்” என்று யுதிஷ்டிரர் தொடர்ந்தார். “படைகள் உளவிசை அழிந்துவிட்டன, விளையாடுகின்றன என்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைகொள்ளவில்லை. அதை எண்ணவேண்டியவர் எனது இளையோரும் இங்கிருக்கும் படைத்தலைவர்களும். அனைத்து முறைமைகளும் முடிந்துவிட்டன. முறைப்படி அனுப்பப்பட்ட அனைத்து ஓலைகளுக்கும் கௌரவரின் தரப்பிலிருந்து மாற்றோலை வந்துள்ளது. எந்நிலையிலும் நமது எச்சொல்லையும் செவிகொள்ளப்போவதில்லை என்று அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இப்போரிலிருந்து நாம் ஒழிவதற்கு இறுதியாக ஏதேனும் ஒரு வழியை நம் எதிரிகளாகிய அவர்கள் நமக்கு காட்டுவார்களா என்று நேற்று நான் அனுப்பிய ஓலையில் கேட்டிருந்தேன். அதற்கு நமது முடியுரிமையை முற்றாக கைவிட்டு நாம் படைதிரண்டுள்ளமைக்கு பொறுத்தருள்கை கோரி பாரதவர்ஷத்தின் மும்முடி அரசராகிய திருதராஷ்டிரர் மைந்தர் துரியோதனரை சந்தித்து அடிபணிந்து அவர் அருளை பெறுவதொன்றே போரை தவிர்க்கும் வழி என்று ஓலை வந்துள்ளது.”

சிலகணங்கள் அவையை நோக்கியபின் “ஆகவே இத்துடன் நமது முறைமைகள் அனைத்தும் முடிவடைகின்றன. எப்போது வேண்டுமானாலும் போரை தொடங்குவதற்கான உரிமையை நாம் பெறுகிறோம்” என்றார். பீமன் “படைகள் உளத்தளர்வடைந்துள்ளன என்றோ விசை குன்றியுள்ளன என்றோ எண்ணவேண்டியதில்லை. இதுவரை வந்தது ஆறு. இப்போது ஏரியென தேங்கியுள்ளது. ஆற்றின் விசைமுழுக்க ஏரியின் கரைமுழுக்க முட்டிக்கொண்டிருக்கிறது என்பார்கள். இப்போது படைகள் கொண்டுள்ள விளையாட்டும் நகையாட்டும் ஓர் நடிப்பே. அவர்கள் அச்சமின்மையை பழகுகிறார்கள்” என்றான். சகதேவன் “ஆம், இந்த பின்னடிவைத்தல் முழுவிசையுடன் முன் எழுவதற்கு அவர்களுக்கு தேவையாகிறது” என்றான்.

யுதிஷ்டிரர் “நன்று” என்றபின் “இறுதியாக ஒரு முறைமை உள்ளது. அதன்பொருட்டு நான் இன்று பின்னுச்சிப்பொழுதில் இங்கிருந்து கிளம்பி கௌரவர் கொண்டுவந்துள்ள படைகளுக்கு செல்லவிருக்கிறேன்” என்றார். திகைப்புடன் திருஷ்டத்யும்னன் “அவர்களின் படைப்பிரிவுக்கா? அவ்வாறு முறைமையுள்ளதை நான் இதுவரை அறிந்ததில்லை” என்றான். “அவையோரே, எந்தப் போரும் மூத்தோர், ஆசிரியர் ஒப்புதலும் வாழ்த்தும் இன்றி தொடங்கப்பட இயலாது. நம் குடிக்கு மூத்தோர் பால்ஹிகரும் பீஷ்மரும் சல்யரும். நம் அனைவருக்கும் ஆசிரியர் துரோணரும் கிருபரும். அவ்விருவரின் சொல்பெறாது படையெழுகைக்கு நான் ஆணையிடமாட்டேன்” என்றார்.

சினத்துடன் எழுந்த பீமன் “என்ன சொல்கிறீர், மூத்தவரே? அவர்கள் இன்று நமக்கெதிராக படைகொண்டு நின்றிருக்கிறார்கள்” என்றான். “மெய். ஆனால் அதனால் அவர்கள் நமது பிதாமகரும் ஆசிரியரும் அல்லாமல் ஆவதில்லை” என்றார் யுதிஷ்டிரர். “மிக எளிதாக அவர்கள் உங்களை தோற்கடிக்க முடியும். வாழ்த்துரைக்க அவர்கள் மறுத்துவிட்டார்கள் என்றால் என்ன செய்வீர்கள்?” என்றான் பீமன். “அதை செய்யமாட்டார்கள் என நான் அறிவேன். செய்வார்கள் என்றால் அங்கேயே உயிர்துறப்பேன். பிறிதொன்றும் செய்வதற்கில்லை” என்றார் யுதிஷ்டிரர்.

“அறிவின்மை! அறிவின்மையன்றி வேறொன்றும் இல்லை இது!” என்று பீமன் உரக்க கூவினான். சகதேவன் “மூத்தவரே, இது அரசவை. தாங்கள் அரசரின் குடிமட்டுமே” என்று கூரிய குரலில் கூற பீமன் கையசைத்து அவனை விலக்கி அவையிலிருந்து வெளியே செல்லும்பொருட்டு திரும்பினான். “நாம் ஐவரும் சேர்ந்தே செல்கிறோம், மந்தா” என்றார் யுதிஷ்டிரர். “நானா?” என்று பீமன் திரும்ப “நீயும்தான். நீயும் உன் தம்பியரும் என்னுடன் வருகிறீர்கள். நம்முடன் விராடரும் வரட்டும். உடனிருக்கும் மாற்று குடிஅரசர்களின் சார்பாக” என்று யுதிஷ்டிரர் சொன்னார். உத்தரன் எழுந்து தலைவணங்கினான். பீமன் உடைந்த குரலில் “இது என்ன வழக்கம், இளைய யாதவரே? இத்தகையதொரு வழக்கத்தை இதுவரை கேள்விப்பட்டதில்லை. எதிரியிடம் வாழ்த்து பெற்று தொடங்கும் போரென்று ஒன்று உண்டா? இது போரா அன்றி போர் விளையாட்டா?” என்றான்.

இளைய யாதவர் புன்னகையுடன் “எந்தப் போரும் போர் விளையாட்டே. எந்த விளையாட்டும் போரே” என்றார். “தாங்கள் என்ன எண்ணுகிறீர்கள்? நாங்கள் தனியாக எதிரியின் படைப்பிரிவுக்குள் செல்வது முறையாகுமா? அவர்கள் இதுவரை இழைத்தவை அனைத்துமே அறமீறல்கள். எந்தத் தயக்கமுமின்றி அனைத்து குடியறங்களையும் மீறி நின்றிருப்பவர்கள் அவர்கள். அவர்களிடம் தன்னந்தனியாக நாம் செல்கிறோம். அவர்கள் நம்மை கொன்றுவிட்டால் என்ன செய்ய முடியும்? அன்றி சிறையிட்டுவிட்டு நம் படைகளிடம் அடிபணியும்படி ஆணையிட்டால் நாம் என்ன செய்வது? போருக்கு முன் தன் குடுமியை எதிரி மல்லனின் கைகளுக்கு அளிப்பதற்கு நிகர் இது” என்றான் பீமன். “அறப்போர் புரிவதாக அவர்கள் ஏற்று முத்திரைச்சாத்திட்ட ஓலை வந்துள்ளது, மந்தா” என்றார் யுதிஷ்டிரர். “அந்த ஓலைக்கு என்ன பொருள் என எனக்கு தெரியும்…” என்று பீமன் கூவினான். “அது தூண்டில். அதை நம்பி நீங்கள் அடுத்த அடி எடுத்துவைக்கிறீர்கள்.”

“அவ்வாறு செய்யமாட்டார்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். “அது அவர்களின் நல்லியல்பாலோ அறச்சார்பாலோ அல்ல. போர்சூழ்கை என்றவகையில் அது பிழையானது. பிதாமகரை முன்னிறுத்தி இப்போரை முன்னெடுக்கிறார்கள். தங்கள் தரப்பில் குடியறம் நின்றுள்ளது என்றும் நம் தரப்பில் இருப்பது வெறும் மண்விருப்பே என்றும் தங்கள் படைவீரர்களுக்கு காட்டியே அவர்கள் உணர்வெழுச்சி கொள்ளச் செய்திருக்கிறார்கள். இத்தருணத்தில் பிதாமகரின் சொல்லை மீறி அப்படி ஒரு சிறுமையை அவர்கள் செய்தால் தங்களை தோற்கடித்துக் கொள்கிறார்கள். பிதாமகர் பீஷ்மரோ மைந்தர் தன்னை வந்து வணங்குவதை ஒருபோதும் தவிர்ப்பவரல்ல” என்றார்.

பீமன் சலிப்புடன் கையசைத்து “ஒருவேளை அவர்கள் நம்மை வாழ்த்தி திருப்பியனுப்பினாலும் அவர்களுக்கே நற்பெயர் ஆகும். அவர்கள் செய்த அறப்பிழைகளை சுட்டித்தான் நாம் நம் படைகளை வஞ்சினம் கொள்ளச்செய்து திரட்டிவந்துள்ளோம். அச்செயல் வழியாக அவர்கள் மேலெழுந்தால் நம் வீரர்கள் சினம் அழிவார்கள். அதைவிட நாம் மெய்யாகவே போரிடப்போகிறோமா என ஐயமும் கொள்வார்கள்” என்றான் பீமன். “அதன்பொருட்டு நான் என் அறத்தை கைவிடமுடியாது. என் மூத்தாரும் ஆசிரியரும் வாழ்த்தாமல் இப்போர் நிகழாது” என்றார் யுதிஷ்டிரர். “அத்துடன் நாம் நமக்கே ஒரு ஆணையை பிறப்பித்துக்கொள்கிறோம். இங்கு நாம் போர்புரிவது அறத்துக்காக. குடியறமும் பேரறமும் நம்முடன் நின்றிருக்கவேண்டும். சிறு அறமீறலை இயற்றி நாம் அவற்றை நம்மிடமிருந்து அகற்றிவிடலாகாது.”

பீமன் பெருமூச்சுவிட்டு “அவையின் முடிவு அதுவென்றால் நான் ஒன்றும் கூறுவதற்கில்லை” என்றான். யுதிஷ்டிரர் “நாம் ஒரு நாழிகைக்குள் கிளம்பவேண்டும். ஆவன செய்க!” என்றார். சுரேசர் “அவ்வண்ணமே, அரசே” என தலைவணங்கினார்.

tigகொம்போசை எழுந்து அரசர் வருவதை அறிவிக்க யுதிஷ்டிரர் எளிய வெண்ணிற ஆடை அணிந்து, அணியேதும் இல்லாமல் தன் பாடிவீட்டிலிருந்து வெளியே வந்தார். வெளியே காத்துநின்றிருந்த இளையோரும் உத்தரனும் தலைவணங்கினர். அவருடன் வந்த சுரேசர் அளித்த மலர்க்குடலையை மட்டும் கையில் வாங்கிக்கொண்டார். அவரது வலப்புறம் பீமனும் இடப்புறம் அர்ஜுனனும் பின்னால் நகுலனும் சகதேவனும் நடந்தனர். நகுலன் திரும்பிப்பார்த்து “வருக, விராடரே!” என்றழைத்து தன்னருகே சேர்த்துக்கொண்டான். உத்தரன் அவர்களைப்போல் சீரடி வைத்து நடந்தான்.

அவர்கள் பாடிவீட்டிலிருந்து நடந்து அணிகளின் நடுவே இருந்த பாதையினூடாக சென்றபோது இருபுறமும் இருந்த படைகள் கல்லென உறைந்த ஏரிப்பரப்புபோல் அசைவிலா அலையுடன் நின்றிருந்தனர். பல்லாயிரம் விழிகள் தங்கள் மேல் தொட்டுத் தொடர்வதை உத்தரன் உணர்ந்தான். முதலில் அவன் கால்களில் தயக்கம் இருந்தது. ஆனால் சற்று நேரத்திற்குப்பின் மெல்லிய பெருமிதமொன்று தோன்றியது. அத்தனை நோக்குகளும் தன்மேல் படிந்திருப்பது அத்தருணத்தின் முதன்மை என உணர்ந்தான். வரலாறென பின்னர் சொல்லுலகில் திகழப்போகும் ஒரு நிகழ்வில் அவனும் இருப்பதை ஒவ்வொரு அடியிலும் மேலும் மேலுமென உணர்ந்தான்.

திரும்பி அவ்விழிகளை சந்தித்து அங்கிருந்த உணர்ச்சிகளை அறிய விரும்பினான். ஆனால் அப்போது எவரையும் விழிநோக்கலாகாது என்றும் அறிந்திருந்தான். அவன் உள்ளம் அவ்விழிகளை ஒவ்வொன்றாக சென்று தொட்டு திரும்பி வந்தது. கண்முன் நிறுத்திய நோக்குடன் அவன் சீராக அடிவைத்து நடந்து சென்றான். இரு படைகளுக்கும் நடுவே இருந்த தொலைவை கடப்பதற்குரிய இரண்டு தேர்கள் ஒருக்கி நிறுத்தப்பட்டிருந்தன. படைகளில் அனைத்துத் தேர்களுமே போருக்குரியவை என்பதனால் அணிகளின்றி பெரிய சகடங்களுடன் உறுதியான பீடத்துடன் அமைந்திருந்தன அவை. முதலில் நின்ற மூன்று புரவிகள் இழுத்த தேரில் யுதிஷ்டிரரும் பீமனும் அர்ஜுனனும் ஏறிக்கொண்டனர். சற்று சிறிய இரண்டாவது தேரில் நகுலனும் சகதேவனும் உத்தரனும் ஏறினர்.

சுரேசர் கையசைக்க பாகன் வெறுமனே சவுக்கைச் சுழற்றி ஓசையெழுப்பியதும் புரவிகள் காலெடுத்து வைத்து பெருநடையில் செல்லத்தொடங்கின. அக்கணம் எங்கிருந்தோ முதிய குரலொன்று எழுந்தது “பேரறச்செல்வர் யுதிஷ்டிரர் வாழ்க! குருகுல முதல்வர் வாழ்க! இந்திரப்பிரஸ்தமும் அஸ்தினபுரியும் ஆண்டருளும் அறச்செல்வர் வாழ்க!” அங்கிருந்த படை மறுகணமே வெடித்தெழுந்த பேரோசையுடன் அம்மொழிகளை உரக்கக் கூவியது. “அறத்தோன் வாழ்க! குடிமுதல்வோன் வாழ்க! பாண்டுவின் மைந்தன் வாழ்க! அவன் கொண்ட பேரறம் வாழ்க!” உத்தரன் மெய்ப்பு கொண்டு விழிகசிந்தான். அவனுக்குப் பின்னால் அந்த ஓசை மெல்ல அடங்கி அமிழ்ந்தது.

அங்கிருந்து அவர்கள் கிளம்புவதை மறு எல்லையில் கௌரவப் படையினரின் காவல்மாடத்திலிருந்து பார்த்துவிட்டிருந்தனர். செய்தி முன்னரே துரியோதனனின் அவைக்கு சென்றிருக்கும் என்று உத்தரன் அறிந்திருந்தான். அவர்கள் நெருங்குந்தோறும் மறுபக்கப் படைப்பிரிவிலிருந்து எழுந்த அதிர்வை தொலைவிலேயே காணமுடிந்தது. தாலத்தில் வைத்த நீரில் தாலத்தை தட்டும்போது எழும் அலைகள்போல என்று உத்தரன் எண்ணிக்கொண்டான். படைவிளிம்பு பெரிதாகி அணுகிவருந்தோறும் அவ்வதிர்வு மேலும் பெரிய அலைகளாக தென்பட்டது. பின்னர் முகங்கள் தெரியலாயின. வியப்பும் விளக்க இயலா உவகையும் கொண்ட முகங்கள். பின்னர் அஸ்தினபுரியின் படைகளிலிருந்து அரசரை வரவேற்பதற்குரிய முரசுகள் முழங்கத் தொடங்கின.