செந்நா வேங்கை - 42

tigகுண்டாசி முகவாய் மார்பில் படிந்திருக்க தாழ்வான பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டி மஞ்சத்தின் சேக்கைமேல் வைத்திருந்தான். இரு கைகளும் தொங்கி நிலத்தை உரசியபடி கிடந்தன. மெல்லிய காலடிகளுடன் அறைக்குள் வந்த தீர்க்கன் “இளவரசே…” என்றான். இருமுறை அவன் அழைத்த பின்னரே குண்டாசி விழிப்புகொண்டு தலைதூக்கி வெற்று நோக்குடன் அவனை பார்த்தான். “தாங்கள் உணவருந்தவில்லை” என்று அவன் சொன்னான். “ஆம்” என்று குண்டாசி முனகல்போல சொன்னான். “தாங்கள் விரும்பினால் இங்கே உணவை கொண்டுவரச் சொல்வேன்” என்றான் தீர்க்கன். குண்டாசி வேண்டாமென்று கையசைத்தான். தீர்க்கன் சிலகணங்கள் தயங்கி நின்றபின் “தாங்கள் மது அருந்தும் விடாய் கொண்டிருப்பின்…” என்று தொடங்க “வேண்டாம்” என்று குண்டாசி சொன்னான்.

ஆழ்ந்த அமைதியுடன் ஒருவரை ஒருவர் உணர்ந்தபடி அந்த அறையில் இருவரும் காலத்தை கடந்தனர். பின்னர் குண்டாசி தலைதூக்கி புன்னகைத்து “முதன்முறையாக மது வேண்டாம் என்று சொல்கிறேன் அல்லவா?” என்றான். ஆம் என்று தீர்க்கன் தலையசைத்தான். “நன்று! ஒருநாள் அவ்வாறு சொன்னேன் என்பது உமது நினைவில் இருக்கட்டும். நாளை காலைப்பொழுதுக்குப் பிறகு நாம் பார்க்கப்போவதில்லை” என்றான் குண்டாசி. தீர்க்கன் “சூதர்கள் ஏவலர்களாக களத்திற்கு வருவதற்கு நூல் ஒப்புதல் உள்ளது” என்றான். குண்டாசி “ஆனால் அரசர்கள் மட்டுமே ஏவலரை அழைத்துச்செல்லவேண்டும் என்பது வழக்கம்” என்றவன் புன்னகைத்து “நான் அரசரின் உடலில் ஒரு சிறு பகுதியாக செல்கிறேன்… சுண்டுவிரலாக, காலின் சுண்டுவிரலாக, அதன் நகமாக” என்றபின் “நோயுற்று உடைந்த நகம்” என்றான்.

பின்னர் முகம் மாறி “எனது போர்க்கச்சையும் படைக்கலங்களும் ஒருங்கியிருக்கட்டும். நாளை காலை விடிவதற்குள் நான் படைப்பிரிவுகளை சென்றடையவேண்டும்” என்றான். தீர்க்கன் “நாளை முதற்காலையில் இங்கு விடைகொளல் சடங்கு நிகழ்கிறது. கௌரவர்களும் உபகௌரவர்களும் சென்றாகவேண்டும்” என்றான். “நான் அவர்களில் ஒருவனல்ல” என்றான் குண்டாசி. “இன்றிரவு மது அருந்தாமல் துயில முடியுமா என்று பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் சென்று அணையும் அந்த இருண்ட ஆழம் இன்று எனக்கு தேவையில்லை என்று தோன்றுகிறது.” ஆனால் தீர்க்கனின் முகத்தில் கவலை நீடித்தது. சொல்லின்றி தலைவணங்கி வெளியே சென்றான்.

குண்டாசி மார்பில் கைகளை கட்டிக்கொண்டு இலைகள் அசைந்த சாளரத்தை நோக்கிக்கொண்டிருந்தான். பின்னுச்சிப்பொழுது வெயில் உருகியதுபோல் வெளியே தேங்கி நின்றது. இலைகளில் அசைவே இல்லை. பறவைக்குரல் ஏதும் எழவில்லை. மிக அரிதாக அவன் உச்சிப்பொழுதுக்குப்பின் விழித்தெழுவதுண்டு. மது அளவோடு அருந்தி துயின்றிருந்தால் அவ்விழிப்பு மிக இனிய பிறிதொரு காலத்தில் சென்று கண் விழித்தது போலிருக்கும். உயிருடனிருப்பதே தித்திப்பானதென்றும், சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு பொருளும் இனிதென்றும் தோன்றும். சற்றே அசைந்தால்கூட அவ்வினிமை கலைந்துவிடும் என்று அஞ்சியவன்போல அவன் படுத்திருப்பான். அதே இனிமை அப்போது ஒரு பழைய நினைவுபோல தோன்றியது. மறுகணமே வந்து சூழ்ந்துகொண்டது. ஆனால் இருத்தலின் தித்திப்பாக அது இல்லை. இழந்த ஒன்றை நினைவுகூர்வதன் துயர் கலந்த இனிமை. அது உவகைதானா? கொப்பளித்து எழாது அசையாக் குமிழியென்று நிற்கும் உவகை ஒன்று உண்டா என்ன? அவன் உளம் கரைந்து விழிநீர் வடிக்கத் தொடங்கினான். ஏன் அழுகிறோம் என்று உள்ளூர ஒரு தன்னிலை வியந்தது. அவ்வாறு அழுவதே இனிதாக இருந்தது.

தீர்க்கனின் காலடிகளைக் கேட்டு அவன் திரும்பிப்பார்த்தான். தலைவணங்கி “இளவரசர் விகர்ணன்” என்றான் தீர்க்கன். “என்னை பார்க்கவா?” என்றபடி எழுந்துகொண்ட குண்டாசி மேலாடையை எடுத்து அணிந்துகொண்டு “வரச்சொல்க!” என்றான். தீர்க்கன் சென்று சில கணங்களிலேயே விகர்ணன் உள்ளே வந்தான். குண்டாசி கைகூப்பி “வருக, மூத்தவரே! என் அறைக்கு தாங்கள் வருவது ஒரு வாழ்த்து” என்றான். “இங்கு வர எண்ணியதுண்டு” என்று விகர்ணன் சொன்னான். “நெடுநாள் வரை நீ ஒருவன் இருப்பதையே என் உள்ளம் உணராதிருந்ததுண்டு. உன் அணுக்கத்தை உணர்ந்த பின்னர் உன்னை எனக்குரிய வடிவில் மாற்றி புனைந்துகொண்டேன். உன்னை உன் இயல்பில் அறிந்துகொள்வதை முற்றிலும் தவிர்த்தேன்” என்றபின் “இன்று இங்கு வரத் தோன்றியது. இத்தருணத்தில் இங்கு எவரும் என்னுடன் இருக்க இயலாதென்று எண்ணினேன்” என்றான்.

அமரும்படி குண்டாசி கைகாட்டினான். பீடத்தில் அமர்ந்த பின் விகர்ணன் “அஸ்தினபுரியெங்கும் இப்போது பல்லாயிரக்கணக்கில் விடைகொளல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இவ்வரண்மனையில் ஒவ்வொருவரும் பிறரை சந்தித்து விடைபெற்றுக்கொண்டிருக்கிறார்கள். நான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை”  என்றான். குண்டாசி “அல்லது நீங்கள் என்னிடம் கொற்றவையின் ஆலயத்தில் பேசியவற்றில் ஏதேனும் எஞ்சியுள்ளது என்று எண்ணுகிறீர்களா?” என்றான். விகர்ணன் அந்த நேரடி வினாவால் ஒரு கணம் திகைத்து பின் கசப்புடன் நகைத்து “இதனால்தான் கௌரவர் உன்னை அஞ்சுகிறார்கள். உன் நாவில் நஞ்சிருக்கிறது. காமரூபத்தில் மண்புழுவைப்போன்ற பாம்பொன்று உண்டு என்கிறார்கள். மிகச் சிறிது, மண்ணோடு மண்ணாக நெளிவது. பாம்பிற்குரிய விரைவோ அழகோ இல்லாதது. துயிலும் விலங்குகளை அணுகி அவற்றின் செவிக்குள் அவையறியாமல் மெல்ல நெளிந்து நுழைந்துகொள்ளும். அங்கு நச்சு கக்கி அவற்றை பித்தெழச் செய்து கொல்லும். அவை மட்கி மறைவதுவரை உள்ளேயே வாழும். நஞ்சினால் அது நாகம், மெய்யில் ஒரு புழு” என்றான். “பாம்பே ஒருவகை புழுதான், தன்னை புழுவென்று உணர்ந்ததனால்தான் அது நச்சை ஈட்டிக்கொண்டது” என்று குண்டாசி சொன்னான்.

“இங்கு வருவதற்கு முன் உன்னிடம் சொல்வதற்கென சில சொற்கள் சேர்த்துவைத்திருந்தேன். இப்போது அவற்றை நீ எப்படி எதிர்கொள்வாய் என்று எண்ணி தயங்கத் தொடங்கிவிட்டேன்” என்றான் விகர்ணன். பின்னர் “சொற்களை விடு. நான் சொல்லாட வரவில்லை. உன்னுடன் அமர்ந்து மதுவருந்தலாம் என்று வந்தேன்” என்றான். குண்டாசி சிரித்து “மதுவா? தாங்கள் அருந்துவதில்லையே?” என்றான். விகர்ணன் “எப்போதாவது தமையன் அளிக்கும் உண்டாட்டில் மூத்தவருடன் அமர்ந்து மட்டுமே அருந்துவேன். அதில் எனக்கு எந்த ஆர்வமும் இருந்ததில்லை. ஏனெனில் என்னை அழுத்தி மண்ணோடு நிறுத்தும் தன்னுணர்வால் ஆனது என் உள்ளம். மது அருந்தினால் அது நனைந்து மேலும் எடைகொண்டதாகிறது. பிறர் மது அருந்தி தங்களை மறந்து தாங்கள் எதையெல்லாம் ஒளித்தும் திரித்தும் அகற்றியும் வைத்திருந்தார்களோ அவையனைத்துமாகி நின்றிருப்பதை பார்க்கையில் பொறாமை கொள்வேன்” என்றான்.

குண்டாசி “அவ்வாறு எவரும் தன்னிலை அழிவதில்லை. தன்னிலை ஒரு நடிப்பு, தன்னிலை மறப்பது பிறிதொரு நடிப்பு” என்றான். விகர்ணன் “தனிமையில் நான் ஒருபோதும் மது அருந்தியதில்லை. இன்று என் அறையில் அமர்ந்து மதுவருந்தலாம் என்று தோன்றியது. ஆனால் மது வந்தபோது அதை திரும்பக்கொண்டுபோகச் சொல்லிவிட்டு எழுந்து இங்கு வந்தேன்” என்றான். சிரித்தபடி “விந்தை என்னவென்றால் நான் மதுவருந்தாமல் அமர்ந்திருக்கிறேன்” என்று குண்டாசி சொன்னான். “நீயா?” என்று விகர்ணன் வியந்து பார்த்தான். “மது அருந்துபவர்கள் அருந்தாதபோதும் அதே கள்மயக்கு கொண்டவர்கள்போல் இருப்பார்கள். நீங்கள் மது அருந்திய பின்னும் தன்னிலை கொண்டிருப்பதுபோல” என்று சொன்ன குண்டாசி “எதன் பொருட்டாயினும் நீங்கள் என்னைத் தேடி வந்தது நன்று” என்றபின் “தீர்க்கரே” என்றான்.

வாயிலருகே தீர்க்கன் தோன்றினான். “எனக்கு பீதர்நாட்டு மது. மூத்தவருக்கு யவனமது” என்றான் குண்டாசி. “இல்லை, எனக்கும் பீதர்நாட்டு மது” என்றான் விகர்ணன். “அது அனல், உள் எரிப்பது” என்றான் குண்டாசி. “எனக்கு அதுதான் வேண்டும். யவன மது என்னை மயக்குற வைப்பதில்லை” என்றான் விகர்ணன். குண்டாசி “அனல் அனலால் அணையும் என்பதுபோல உள்ளே அனலிருந்தால் மட்டுமே பீதர்நாட்டு மது அருந்தவேண்டும், மூத்தவரே” என்றான். “ஆம். அதுவே கொணர்க!” என்றான் விகர்ணன்.

தீர்க்கன் சென்ற பின்னர் மது குறித்த எண்ணம் இருவரையும் எளிதாக்க கைகால்களை நீட்டிக்கொண்டு அமர்ந்தனர். விகர்ணன் ஏதோ முனகிக்கொண்டான். “தாங்கள் சற்று நிலையழிந்திருக்கிறீர்கள்” என்றான் குண்டாசி. “ஆம்” என்றான் விகர்ணன். “ஏனென்று உன்னால் சொல்ல முடிகிறதா? நீதான் அறியாது அகம்நுழையும் மண்ணுளியாயிற்றே?” குண்டாசி கோணலாக நகைத்து “மிக எளிதாக சொல்ல முடியும். தாங்கள் யுயுத்ஸுவை பார்த்துவிட்டு வருகிறீர்கள்” என்றான். விகர்ணன் “விந்தைதான்! உண்மை அது” என்றபடி சற்றே முன்னால் நகர்ந்தான். “எப்படி இதை நீ சொல்கிறாய்?” குண்டாசி “எளிது” என்று மேலும் நகைத்தான். “கௌரவ நூற்றுவர்களிலேயே உளக்கூர்மை மிக்கவன் நீதான் என்று சொல்வார்கள். அனைவரையும் கசந்து நகையாடுவதனூடாக அப்பெயரை நீ ஈட்டியிருக்கிறாய் என்றுதான் எண்ணியிருந்தேன். மெய்யாகவே உளம் புகுந்து எண்ண உன்னால் இயல்கிறது” என்றான் விகர்ணன்.

“இதில் உளம்புக என்ன உள்ளது? இன்று இவ்வரண்மனையில் அனைவருமே அவனைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருப்பார்கள். அவனை சந்திக்காமல் தவிர்க்க எண்ணுவார்கள். சந்தித்தே ஆகவேண்டும் என்ற அழுத்தம் இருப்பது உங்களுக்குத்தான்” என்றான் குண்டாசி. “ஏன்?” என்று விகர்ணன் புருவம் சுளித்து கேட்டான். “அவன் உங்கள் இன்னொரு நிகழ்வாய்ப்பு அல்லவா?” என்றான் குண்டாசி. “அவனா?” என்று விகர்ணன் கேட்டான். “ஆம், அவனாகி நீங்கள் நடித்துச் சலிக்கிறீர்கள்” என்று குண்டாசி சொன்னான். “அல்ல!” என்று விகர்ணன் எதிர்பாராமல் கூச்சலிட்டான். “பிறகு ஏன் அவனை சந்தித்தீர்கள்?” என்றான் குண்டாசி. “அவன் கிளம்புகிறான் என்று அறிந்தேன். மூத்தவரிடம் ஒப்பும் வாழ்த்தும் பெற்றான் என்று அறிந்தபோது முதலில் நம்ப இயலவில்லை. பின்னர் அதுவன்றி பிறிதெதையும் ஆற்ற மூத்தவரால் இயலாதென்று தெளிந்தேன். ஏனோ அது என்னை எரிச்சலடையச் செய்தது. எண்ண எண்ண உளம் கொதித்தது. அவனிடம் சென்று சில வினாக்கள் கேட்க வேண்டுமென்று தோன்றியது” என்றான்.

குண்டாசி புன்னகைத்து “செஞ்சோற்றுக்கடன் குறித்து அல்லவா?” என்றான். “சொல், உன் நஞ்சு எவ்வளவு தொலைவு செல்கிறதென்று பார்க்கிறேன்” என்றான் விகர்ணன். குண்டாசி “நஞ்சென ஏதுமில்லை, மூத்தவரே. இதுவரை பிறர் உள்ளங்களின் கரவுகளுக்குள் எவ்வாறு கடந்துசென்று தொட்டறிந்தேன் என்று சற்று முன்னர் மூத்தவர் எனக்கு சொன்னார். என் உள்ளத்துக் கரவால்” என்றான். பற்களைக் கடித்தபோது அவன் வஞ்சத்துடன் சிரிப்பதுபோலிருந்தது. அவன் தாடை அசைந்தது. “அதன் பின் என்னில் எழும் ஒவ்வொரு எண்ணத்தையும் நான் ஐயுறுகிறேன். தன் வாயிலூறும் எச்சிலை ஒருவன் மலமென எண்ணத்தொடங்கினால் என்ன ஆவான்? அதுதான் என் நிலை” என்றான். “என்ன சொன்னார்?” என்று விகர்ணன் கேட்டான். அவன் முகம் கொண்ட மாறுதல் குண்டாசியை சினம்கொள்ளச் செய்தது. “அதை விடுங்கள். நீங்கள் யுயுத்ஸுவிடம் என்ன சொன்னீர்கள்?” என்றான்.

“நான் அவன் அறைக்குச் சென்றபோது அவன் கிளம்பும் பணியிலிருந்தான். கனகரை வரவழைத்து அவனுக்களிக்கப்பட்ட இறுதிப் பொறுப்புகளின் செய்திகளை அளித்துக்கொண்டிருந்தான். அனைத்தையும் முன்னரே ஓலைகளில் எழுதியிருந்தான். அவற்றை கனகருக்கு அளித்து முறைமைச் சொல் உரைத்து விடைகொண்டான்” என்று விகர்ணன் சொன்னான். “நான் உள்ளே நுழைந்தபோது அவர்களின் இறுதிச் சொல்லளிக்கை நிகழ்ந்துகொண்டிருந்தது. என்னைக் கண்டதும் சற்றுபொறுங்கள் மூத்தவரே இப்பணியை முடித்துவிடுகிறேன் என்று அவன் இயல்பாக சொன்னான். அன்றாட அரசியல் பணி ஒன்றை செய்வதுபோலிருந்தான்.” குண்டாசி “ஆம், அது அவன் இயல்பு. அவன் யுதிஷ்டிரரின் பிறிதுவடிவம்” என்றான். “மெய், அதை அங்கே கண்டேன்” என்று விகர்ணன் சொன்னான்.

நான் அவன் சொல்வதைக் கேட்டு நின்றிருந்தேன். அவன் தொன்மையான சடங்குக்குரிய நுண்சொல் என சீராக சொல்லடுக்கினான். “இந்தக் கணம் நிறைவுறுக, இதற்குப் பின் நான் இந்நகருக்கும் குடிக்கும் எந்தத் தொடர்பும் அற்றவன் ஆகுக! இதன் தெய்வங்கள் என்னை விட்டு ஒழிக! மூதாதையர் என்னை கைவிடுக! அஸ்தினபுரியின் அரசப்பணிகள், படைசூழ்கை, குடிமுறைமைகள் குறித்த ஒரு சொல்லும் நினைவென என்னில் எஞ்சாது ஒழிக! என் நினைவு அஸ்தினபுரியின் குடிகளிலும் அரசிலும் ஒரு துளியும் மிஞ்சாமல் அழிக! நான் இங்கு பிறந்ததற்கு முந்தைய கணம் இனி அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான். கனகர் ஓலைகளை வாங்கிக்கொண்டு தடுமாறிய குரலில் “ஆம், அதுவே ஆகுக!” என்றார். அவன் என்னை நோக்கி தலைவணங்கி “இதோ வருகிறேன், மூத்தவரே” என்று சொல்லி அருகிலிருந்த அறைக்குள் சென்றான்.

நான் கனகரிடம் “இத்தனை பொறுப்புகளையா இவன் நடத்தி வந்தான்?” என்று கேட்டேன். அவர் கையில் நூற்றுக்கு மேல் ஓலைகள் அடங்கிய கட்டு இருந்தது. அவர் புன்னகைத்து “இங்குள்ள ஒவ்வொருவரும் தாங்கள் ஆற்றும் பணியை இதேபோல நூறுநூறு ஓலைகளாக எழுதலாம். ஒற்றைச் சொற்றொடரில் உரைக்கவும் ஆகும்” என்றபின் “இதனால் எப்பொருளுமில்லை. தான் ஆற்றிவந்த அனைத்தையும் இவ்வாறு எழுத்தில் பதிவு செய்வதென்பது அவற்றை தொகுத்துக்கொள்ள அவருக்கு உதவுகிறது. துறப்பதற்கு துறப்பது எது என்று தெரிந்திருக்கவேண்டும் அல்லவா? ஆற்றிலும் அளந்தே வீசவேண்டும் என்பர் வணிகர்” என்றார். “இவற்றை இன்னொருவர் படித்தறியவே நீணாளாகுமே?” என்றேன். “இளவரசே, இங்கு எவரும் எந்த ஓலையையும் படித்து உள்வாங்கும் நிலையை இழந்து சில நாட்களாகின்றன. பிறர் சொல்லும் சொற்களையே எவரும் உளம் வாங்குவதில்லை. ஒவ்வொரு அகமும் அதன் உச்சத்தில் தன்னுள் இருப்பவற்றைச் சுழற்றி விசை கொண்டிருக்கிறது” என்றபின் “வருகிறேன்” என்று தலைவணங்கி வெளியே சென்றார்.

அவன் என்னிடம் எதையோ அளிக்கவிருக்கிறான் என்று எண்ணி நான் காத்திருந்தேன். ஆனால் மரவுரி அணிந்து, அணிகளேதும் இன்றி வெறும் கைகளுடன் அவன் என் முன் வந்தான். “இந்த ஆடை முன்னரே இங்கிருந்ததா?” என்றேன். அந்தக் கோலம் என்னை எரிச்சலடையச் செய்தது. “ஆம் மூத்தவரே, இந்த ஓலைகளை எழுதத் தொடங்கியபோதே மரவுரியையும் வாங்கி வைத்துவிட்டேன்” என்றான். “எப்போதிருந்து?” என்று நான் கேட்டேன். “மூன்றாவது தூது முடிந்து தன் கால்பொடியைத் தட்டி இங்கிருந்து இளைய யாதவர் கிளம்பிச் சென்ற அன்று முதல்” என்று அவன் சொன்னான். அறத்தான் என தன்னை நம்புபவனின் நடத்தையில் ஏன் அத்தனை பொய்மை குடியேறுகிறது என்று எண்ணிக்கொண்டேன். அவனை ஓங்கி அறையவேண்டும் என்று என் உள்ளம் எழுந்தது. அவன் உள்ளம் சிதறும்படி எதையேனும் சொல்லவேண்டும். ஆனால் அவன் அனைத்தையும் கடந்தவன் என்னும் தோற்றத்தினூடாக அனைத்தையும் கடந்துசெல்வான் என்றும் அறிந்திருந்தேன்.

“நீ மூத்தவருக்கோ தந்தைக்கோ எந்த எடுத்துரைப்பும் அளித்ததில்லையே? இவையனைத்தும் உன்னுள் நிகழ்ந்திருந்தன என்பதற்கான சான்றே இல்லையே?” என்றேன். ஆனால் அது நான் எண்ணியதுபோல் குற்றச்சாட்டாக அன்றி மன்றாட்டாக ஒலித்தது. “ஆம், இவை என்னுள் நிகழ்ந்துகொண்டிருந்தன. ஆனால் பிறருக்கு உரைக்கும் அளவுக்கு தெளிவில்லை. நான் உரைத்துக் கேட்கும் அளவுக்கு எனக்கு செவிகொடுப்பார் எவரும் இங்கு இல்லை” என்று அவன் சொன்னான். அது உண்மை என நானும் உணர்ந்தேன். அவனை சொல்திருந்தா இளையோன் என்றே தந்தையும் மூத்தவரும் நடத்தினார்கள். “அனைத்தையும் இளைய யாதவர் பொருட்டு துறக்கிறாய். அப்படி ஒரு முற்றளிக்கையை எவ்வண்ணம் அடைந்தாய்?” என்றேன். பேசப்பேச என் சினம் தணிவதையும் உணர்ந்தேன்.

“மூத்தவரே, பிறந்த நாள் முதலே நான் இளைய யாதவரின் பெருமைகளையே கேட்டு வளர்ந்திருக்கிறேன். வழிபடு தெய்வத்திற்கு நிகரென என்னுள்ளத்தில் அவர் அமர்ந்திருந்தார். ஆயினும் அவரை நான் அணுகினேன் என்று உரைக்க இயலாது. முதன்முறை அரச அவையில் அவர் வந்து தூதுரைத்தபோது பக்தி நிறைந்த நெஞ்சுடன் கைகளைக் கூப்பியபடி அவர் முகத்தை நோக்கி அமர்ந்திருந்தேன். விண்ணில் தோன்றும் பொன்னிற முகில்போல நாமறியா நம் சிற்றுள்ளத்தை பித்துற வைக்கும் கனவு அவர் முகம். நெடுநாள் அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் என்னுள் மீளமீள நிகழ்த்தியபடி இருந்தேன். என்னுள் அழியாது நிலைகொண்டன அவர் விழிகள்” என்று அவன் சொன்னான், கள்மயக்கு கொண்டவன்போல் இமைகள் சரிய, முகம் உவகையில் விரிய. அவனை வியப்புடன் நோக்கி அமர்ந்திருந்தேன்.

“மீண்டும் ஷத்ரியர்களின் பேரவைக்கு வந்து தூதுரைத்தபோது அவருடைய நெஞ்சை பார்த்தேன். பிறிதொன்றையும் அன்று பார்க்கவில்லை. மணியொளி கொண்டது. அதன் நடுவே பெருஞ்சுழி ஒன்றின் கருமை. உலகளந்த பெருமானின் கௌஸ்துப மயிர்ச்சுழியை தானும் கொண்டவர் அவர் என்று சூதர்கள் சொல்லி கேட்டிருந்தேன். அது மெய் என்று கண்டேன். மூத்தவரே, அன்று அவை முடிந்து வெளியே வந்தபோது நான் அழுதுகொண்டிருந்தேன்” என்று அவன் சொன்னான். அப்போதும் அவன் அழுபவன்போல் குரல் தழைந்து உதடுகள் விதும்ப தெரிந்தான்.

“அஸ்தினபுரியில் என் உள்ளத்தைப் பகிர எவருமில்லை. நானறிவேன், இங்குள அத்தனை பெண்டிரும் கோபிகைகள் என. அவருக்காக என்று உளம் கனிந்தவர்கள். நானோ ஆண், அடியான் என்று உணர்பவன். அவர்களிடமும் என்னால் அணுக இயலாது. அஸ்தினபுரி போர்வெறி கொண்டு கொப்பளித்துக்கொண்டிருந்தது. படைவீரர்களின் கண்களில் பித்தின் களிப்பு. குடிகள் தங்கள் தலைமுறைகள் திளைத்த பெருஞ்சலிப்பிலிருந்து எழுந்து பறந்து சுழன்றுகொண்டிருந்தார்கள். குருதி குருதி என்று ஒவ்வொரு சொல்லும் பொருள்கொண்டிருந்தது. அவர்கள் நடுவே முற்றிலும் அயலவனாக, ஒருவராலும் நோக்கப்படாதவனாக நெஞ்சோடு கைசேர்த்து விழிநீர் உதிர்த்தபடி நான் சுற்றிவந்தேன்.”

“மூத்தவரே, மூன்றாம் முறை அவர் வேள்வி நிலையில் தூதுவந்தபோது நான் அவர் கால்களை மட்டுமே பார்த்தேன். அதற்கு மேல் விழிதூக்க என் உள்ளம் துணியவில்லை. அவர் சொற்கள்தவிர வேறொன்றும் என் செவியில் விழவுமில்லை. கைகூப்பியபடி நோக்கியிருந்தபோது நானே அனைத்தும் என்று ஒரு மொழி விண்ணை நிரப்பும் இடியோசைபோல் எனக்கு கேட்டது. திடுக்கிட்டவனாக ஒருகணம் விழிதூக்கியபோது அவர் பேருருவை பார்த்தேன். ஆம், விண்பேருருவை. கோள்களையும் விண்மீன் பெருக்கையும் கடுவெளியையும் அலகிலியையும் அணையா வெறுமையையும்கூட தானெனக் கொண்டு நின்றிருந்த பரம்பொருளை நான் பார்த்தேன். அவர் அதை எனக்கு அங்கு காட்டினார். ஆம், நான் பார்த்தேன், ஐயமே இல்லை. நான் பார்த்தேன்” என்று அவன் கூவினான்.

அவன் விழிகளை என்னால் நேருக்குநேர் நோக்கமுடியவில்லை. அவற்றிலிருந்த பித்து என்னை அச்சுறுத்தியது. அவன் “இக்கணம் வரை இதை நான் எவருக்கும் சொன்னதில்லை. ஆனால் அவர் விண்ணளந்தோன் கொண்ட மண்வடிவம். ஐயமே இல்லை. என்னை ஆட்கொள்ளவே அன்று இங்கு எழுந்தருளினார். வேதம் ஓதித் தெளிந்த அந்தணரும், வேதமுடிபு கற்ற அறிவரும், ஊழ்கத்திலமர்ந்து உயர்ந்த படிவரும் நிறைந்திருந்த அவ்வவையில் வேறெவரும் அவ்விண் பேருருவை காணவில்லை. நான் மட்டுமே கண்டேன். அதன் பின் எனக்கு மாற்றெண்ணம் என ஒன்றில்லை” என்றான்.

பித்தர்கள் நம்மை ஏன் அச்சுறுத்துகிறார்கள்? கூடவே நம்மை ஒருகணமும் உளவிலக்கம் கொள்ள இயலாதபடி கவரவும் செய்கிறார்கள். பித்து என்பது ஒரு திறந்த பெருவாயில். அப்பாலிருப்பது வெளி. பித்தன் தரையில் கால்படியாது காற்றில் எழுந்துநிற்பவன்போல் நமக்கு திகைப்பூட்டுகிறான். பித்தை விரும்பாத எவர் இருக்கிறார்கள்? நீ கள்ளிலும் சிலர் கவியிலும் ஞானியர் மெய்மையிலும் எளியோர் உறவுகளிலும் தேடித் தேடி சிறு துளியென அடைந்து களிப்பது பித்தை அல்லவா? பெரும்பித்து சிலருக்கு அருளப்படுகிறது. அதன்பிறகு அவர்களுக்கு இங்குள்ள எதுவும் ஒரு பொருட்டல்லாமலாகிறது.

பித்திலாது புழங்குவதற்குரியது இவ்வுலகு. இல்லங்களுக்குள் வந்துவிட்டால் பறவைகள் எப்படி நிலைகுலைகின்றன என்று பார்த்திருக்கிறேன். ஏனென்றால் மனிதர்களும் விலங்குகளும் புழங்கும் எல்லையுள்ள வெளியில் பறவைகள் வாழ முடியாது. விண்ணிலேயே அவை நிறைவுற்றிருக்கின்றன. பித்தர்கள் இங்குள்ள அனைத்தையும் உதறிவிடுகிறார்கள். என் உளஎழுச்சியை வன்மையான வினா ஒன்றினூடாக கடந்தேன். “நீ எந்தைக்கும் என் தமையனுக்கும் செஞ்சோற்றுக்கடன் பட்டவனல்லவா?” என்று கேட்டேன். கேட்டதுமே அவ்வினா எத்தனை சிறியதென்றும் உணர்ந்தேன். அவன் “இப்புவியிலுள்ள அனைவருமே என் தலைவனுக்கு செஞ்சோற்றுக்கடன் பட்டவர்கள்தான். நான் உண்டது அவர் உணவு, வாழ்ந்தது அவர் நிழலில், உறவென்றும் காவலென்றும் எனக்கு பிறிதெவரும் இல்லை” என்றான்.

அதன் பின்னர் என்னால் ஒன்றும் சொல்ல இயலவில்லை. “நன்று! நலம் சூழ்க!” என்று எழுந்துகொண்டேன். “நான் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டேன், மூத்தவரே. செல்லும்போது எவரிடமும் சொல்லக்கூடாதென்று எண்ணினேன். தங்களிடம் சொல்லிவிட்டுச் செல்லவேண்டுமென்பது என் தலைவரின் ஆணை போலும். அவர்தான் தங்களை இங்கு வரவைத்திருக்கிறார். எனக்கு விடைகொடுங்கள்” என்றான். “சென்று வருக!” என்று நான் சொன்னேன். அவன் வெறுங்கைகளுடன் வெளியே இறங்கி இடைநாழியில் நடந்து படிகளில் இறங்கி முற்றத்தின் வெயிலில் ஒளிகொண்டு அப்பால் சென்று அகன்றான்.

“அங்கு நின்றிருக்கையில் அறியா உளநடுக்கொன்று எனக்கு ஏற்பட்டது. அங்கிருந்து உடனடியாக இங்கு வரவேண்டுமென்று தோன்றியது. அதைக் கடந்தே என் அறைக்குச் சென்றேன். அங்கு அமரவியலாது இங்கு வந்தேன். வழியிலேயே ஓர் எண்ணம் வந்தது. ஒருவேளை நீயும் கிளம்பியிருப்பாய் என்று” என்றான் விகர்ணன். “நானா? நான் எங்கு கிளம்புவது?” என்றான் குண்டாசி. “தார்த்தராஷ்டிரர்களில் நாம் மூவரும் ஒன்றின் மூன்று முனைகளல்லவா?” என்று விகர்ணன் சொன்னான். “சற்றுமுன் யுயுத்ஸுவை நான் சென்று கண்டது அதனால்தான் என்றுதான் நீயும் சொன்னாய்.” குண்டாசி “அப்படியென்றால் தாங்களும் கிளம்பியிருக்கக்கூடுமோ?” என்றான். நெடுநேரம் ஒன்றும் சொல்லாமல் விகர்ணன் அமர்ந்திருந்தான். பின்னர் “இளையோனே, அவன் கிளம்பிச் சென்றபோது அவனுடன் எனது ஒரு பகுதியும் செல்வதை உணர்ந்தேன். நான் கொண்ட உள நடுக்கு அதனால்தான்” என்றான்.