செந்நா வேங்கை - 4

tigஅறையிலிருந்து அனைவரும் வெளியே சென்றதும் சாத்யகி திரும்பி அசங்கனிடம் “இங்கு நிகழ்ந்த எதையுமே அவ்வண்ணமே பொருள்கொள்ள வேண்டியதில்லை. அரசுசூழ்தலின் கணக்குகள் நம்மால் புரிந்துகொள்ள முடியாதவை. இங்கு ஏன் இளைய யாதவர் இந்தத் திருமணப் பேச்சை எடுத்தார் என்று ஒருபோதும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது” என்றதும் சாந்தன் “புரிந்துகொள்ள முடிகிறது, தந்தையே. அவையில் பேரரசி கடுமையாக பேசிவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் உளம் மலரும் ஓர் இனிய செய்தியை தொடங்கிவைக்கிறார். இங்கு வரும்போது பேரரசியின் முகம் கடுமை கொண்டிருந்தது. செல்லும்போது மலர்ந்து உதடுகளில் இளநகைகூட இருந்தது” என்றான்.

ஆனால் அதை கேட்டு சாத்யகி மேலும் சினங்கொண்டான். “இதைத்தான் நான் தவிர்க்கும்படி சொல்கிறேன். அவர்களின் செய்கைகளுக்கு பொருள் கற்பிப்பதையும் அவற்றை புரிந்துகொண்டோம் என்று நம்புவதையும்விட மடமை வேறொன்றுமில்லை. நம்மால் ஒருபோதும் அவற்றை புரிந்துகொள்ள முடியாது. இன்று மாலையே இளைய யாதவர் அழைத்து இந்தச் செய்தியை முற்றாக மறுக்கும் பிறிதொன்றை சொன்னால் இதுவரை நீ புழங்கிய சொற்கள் அனைத்தும் வெற்றுச் சருகுகள் என்றாகும்” என்றான். அசங்கன் “இல்லை தந்தையே, அவர் எதன்பொருட்டு உரைத்தாலும் பேரரசி அதை மெய்யாகவே சொன்னார்கள்” என்றான்.

மேலும் சினத்துடன் சாத்யகி “அப்படி சொல்லவேண்டாம் என்றுதான் உன்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். மூடா, இதற்குள் நீ துருபதரின் பெயர்மகளை மணம்செய்வதைப் பற்றிய கனவுகளை வளர்த்துக்கொண்டுவிட்டாய். பாஞ்சாலப் பெரும்படையின் உதவியுடன் யாதவர்களை வென்று பேரரசு அமைக்க எண்ணுகிறாய். உன் கொடிவழியினர் பெறும் வெற்றிகளை கணக்கிடத் தொடங்கிவிட்டாய். இந்தப் பகற்கனவுகளுக்குத்தான் அரசியலில் இடமே இல்லை. மிகை விழைவும் அதன் இன்றியமையா விளைவான ஏமாற்றமும் நம்மை அலைக்கழித்து வீணர்களாகவும் மூடர்களாகவும் மாற்றிவிடும். அதை முதலில் புரிந்துகொள்” என்றான்.

சாத்யகியின் உணர்வுகளை புரிந்துகொண்ட அசங்கன் “ஆணை, தந்தையே” என்றான். “சொல்லி வை உன் இளையோரிடம், அவர்கள் இன்னும் இங்கு ஏவலருக்கும் கீழ்தான்” என்றான். அவர்கள் தலையசைத்தனர். “அரசர்களின் அவைச்சொல்லாடலில் அருகே நின்றார்கள் என்பதனால் அவர்கள் அரசகுடியும் ஆவதில்லை, அரசு சூழ்தலை கற்றுக்கொள்ளவும் இல்லை. புரிகிறதல்லவா?” என்றான் சாத்யகி. “புரிகிறது” என்றான் அசங்கன். “வருக!” என்றபின் சாத்யகி முன்னால் சென்றான். அசங்கன் கண்களில் மட்டும் புன்னகையுடன் தன் இளையோரைப் பார்த்து “செல்வோம்” என்று உதடசைய ஓசையின்றி சொன்னான்.

சாத்யகி முன்னால் செல்ல மைந்தர்கள் பின்னால் நடந்தனர். சாத்யகி கிராதர்களுக்குரிய மூன்றாவது வாயிலினூடாக உள்ளே சென்றான். அங்கு நின்றிருந்த சிற்றமைச்சர் பத்ரசேனர் “தங்களுக்கும் இளவரசர்களுக்கும் நான்காம் நிரையில் இருக்கைகள் உள்ளன, அரசே” என்றார். “நன்று” என்றபின் அவையில் அமர்ந்திருந்த அரசர்களை ஒருமுறை பார்த்துவிட்டு சாத்யகி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை நோக்கி சென்றான். விழிகளைத் தாழ்த்தி குரலெழாமல் “அவையில் அமரும்போது ஒரு சொல்கூட பேசக்கூடாது. அகவை முறைப்படி அமரவேண்டும். எவரேனும் திரும்பி உங்கள் விழிகளை பார்த்தால் தலைவணங்கி வாழ்த்து சொல்லவேண்டும், ஆனால் குரலெழலாகாது” என்று சொன்னான். “ஆணை” என்றான் அசங்கன்.

அது அரசர்களும் அரசகுடியினரும் மட்டுமே அமரும் சிற்றவை. உபப்பிலாவ்யத்தில் பாண்டவர்கள் வந்தமைந்த பின்னர் அங்கிருந்த கூடத்தை இரு பக்கமும் உடைத்து தூண்நட்டு விரிவாக்கியிருந்தனர். பிறைவடிவில் அமைந்த அவைக்கு நடுவே உயரமற்ற அரசமேடை அமைந்திருந்தது. எட்டு வாயில்கள் வழியாகவும் அவையினர் உள்ளே புகுந்து அமர்ந்திருந்தனர். உள்ளே நுழைந்த முதற்கணம் சாத்யகி ஏமாற்றம் அடைந்தான். பாரதவர்ஷத்தை முழுமையாக தோற்கடித்தாலன்றி முடிவடையாத பெரும்போரை அறிவிக்கும் அவை அது என எண்ணியபோது விந்தையாகவே தோன்றியது. ஆனால் தன் விழிகள் துவாரகையின் பெருவிரிவுகளுக்குப் பழகியவை ஆகையால் அந்த உளமயக்கு உருவாகிறது என அவன் சொல்மேவிக்கொண்டான்.

அவர்கள் அமர்ந்து கைகளையும் கால்களையும் எளிதாக்கிக்கொண்டதும் சாத்யகியும் பெருமூச்சுவிட்டு கண்களை மூடிக்கொண்டான். அதுவரை நிகழ்ந்தவற்றை எண்ணிப்பார்த்தபோது பிழையென எதுவும் உளத்திற்கு படவில்லை. “நன்று” என அகத்தே சொல்லிக்கொண்டு சுற்றி அமர்ந்திருந்த அரசர்களை பார்த்தான். இந்திரப்பிரஸ்தத்தின் ஆதரவாளர்களான அரசர்கள் அனைவருமே அங்கிருந்தனர். முன்நிரையில் விராடரும் குந்திபோஜரும் துருபதரும் அமர்ந்திருக்க அகவை நிரைப்படி ஷத்ரியர்களுக்கு இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. அசங்கன் “ஒன்பது ஷத்ரிய குடிகள் மட்டுமே இங்குள்ளனவா?” என்றான். சாத்யகி திரும்பி சினத்துடன் பற்களைக் கடித்து “நாம் பிறகு யார்? நாமும் ஷத்ரியர்கள்தான்” என்றான். “ஆம்” என்றபின் அசங்கன் தலைதாழ்த்தி விழிகளை திருப்பிக்கொண்டான்.

சாத்யகியால் அமரமுடியவில்லை. அவை முழுமையடைந்ததை அறிவிக்க நிமித்திகன் வலம்புரிச் சங்கை மும்முறை ஊதினான். வெளியே அதை ஏற்று கொம்புகள் நாரைகளைப்போல குரலெழுப்பி அமைந்தன. அவையின் வாயில்கள் மூடப்பட்டு திரைகள் தாழ்த்தப்பட்டன. அவைக்கூரைக்கு மேலிருந்த துளைகளினூடாக உள்ளே நுழைந்த காற்று பெரிய கயிறுகளால் இழுக்கப்பட்ட தூக்கு விசிறிகளால் கீழே செலுத்தப்பட்டது. நெய்விளக்குகளின் மெல்லிய செவ்வொளி ஆடிகளால் அவைக்குள் பரப்பப்பட்டது. மூச்சுத்திணறுவது போலவும் வியர்ப்பது போலவும் தோன்ற சாத்யகி மெல்ல உதடுகளை ஊதிக்கொண்டான்.

“அவர் சேதிநாட்டு அரசர் திருஷ்டகேது. மறைந்த சிசுபாலரின் மைந்தர்” என்று சந்திரபானு சொன்னான். “இளைய யாதவரால் சிசுபாலர் கொல்லப்பட்டார் அல்லவா?” என்று சாந்தன் கேட்க சந்திரபானு “ஆம், ஆனால் திருஷ்டகேதுவை அரசராக்கியவர் இளைய யாதவர்” என்றான். சாத்யகி சினத்துடன் திரும்பி நோக்கினான். சினி தயக்கமில்லாமல் “சேதிநாடு கௌரவர்களுடன் உள்ளது என்று சொன்னார்களே?” என்றான். சாந்தன் “அது தமகோஷரின் தட்சிண சேதிநாடு. இது உத்தரசேதி. சிசுபாலரின் மைந்தரை யாதவகுடியைச் சேர்ந்தவர்கள் ஆதரிக்கிறார்கள். சிசுபாலரின் அன்னை சுருதகீர்த்தியின் ஆதரவு அவருக்கு உள்ளது” என்றான். சாத்யகி பற்களைக் கடித்து “உம்” என்றான். அவன் விழிகளை நோக்கியபின் அவர்கள அமைதியடைந்தனர். அவன் திரும்பியதும் “அப்படி நோக்கினால் ஜராசந்தரின் மைந்தர் சகதேவர் வந்துள்ளாரே? பீமசேனரால் அவர் தந்தை கொல்லப்பட்டார் அல்லவா?” என்றான் சபரன். “அவருடைய மைந்தர் கௌரவர் தரப்புக்கு சென்றுவிட்டார்கள் என்று சொன்னார்களே?” என்று முக்தன் கேட்டான். “அவர்கள் வேறு மைந்தர்கள். இப்போது ஜராசந்தரின் மைந்தர்கள் என ஏராளமானவர்கள் கிளம்பியிருக்கிறார்கள்” என்றான் உத்ஃபுதன். “இவர் ஒரு அக்ஷௌகிணி படையுடன் வந்துள்ளார்.”

சாத்யகி திரும்பி நோக்கி “அமைதி” என பல்லை கடித்தபடி சொன்னான். சினி அவன் கண்களை நோக்கி “தந்தையே, அந்த நீலஇறகு சூடிய மணிமுடி அணிந்தவர் கேகயர் அல்லவா?” என்று கேட்டான். அசங்கன் விழிகளில் நகைப்பு தெரிந்தது. சாத்யகி என்ன பேசுவது என தெரியாமல் திரும்பிக்கொண்டான். அசங்கன் “பேசவேண்டாம்” என தம்பியரை விலக்கினான். சாத்யகி அபிமன்யூவை பார்த்தான். தன் பீடத்தில் சற்று கோணலாக அமர்ந்து வேறெங்கோ நோக்கிக்கொண்டிருந்தான். ஏதோ காட்டில் மரக்கிளையில் அமர்ந்திருப்பவனைப்போல. அவனருகே பிரதிவிந்தியனும் சதானீகனும் சுதசோமனும் சுருதசேனனும் சுருதகீர்த்தியும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்குப் பின்நிரையில் யௌதேயனும் சர்வதனும் நிர்மித்ரனும் இருந்தனர்.

சாத்யகி “நீங்கள் இன்னும் உபபாண்டவர்களிடம் அறிமுகம் செய்துகொள்ளவில்லை அல்லவா?” என்று கேட்டான். “இல்லை தந்தையே, அவர்கள் வடக்குக் காட்டிலிருக்கும் இந்திரப்பிரஸ்தத்தின் படைகளுடன் தங்கியிருக்கிறார்கள்” என்றான் அசங்கன். உத்ஃபுதன் எட்டி நோக்கி “அவர்களில் இளையவராகிய அபிமன்யூ அப்படைகளுக்கு தலைமை தாங்குகிறார் என்றார்கள்” என்றான். “நான் உன்னிடம் அதை கேட்கவில்லை” என்றான் சாத்யகி. அசங்கனிடம் “பின்னர் தம்பியருடன் சென்று அவர்களை வணங்கு. அவர்களுடனான உறவே நம் குடியின் எதிர்காலம்” என்றான். அசங்கன் புன்னகைபுரிந்தான். விழிதிருப்பிக்கொண்ட பின் அப்புன்னகைக்கு என்ன பொருள் என சாத்யகி எண்ணினான். எதிர்காலம் என்னும் சொல்லால்தான் எனத் தோன்றியதும் சினத்துடன் “எவ்வளவு நேரம்தான் சடங்குகளை செய்வார்கள்… மூடர்கள்” என முணுமுணுத்துக்கொண்டான்.

வெளியே மங்கல ஓசை எழுந்தது. அவைமுறைமைப்படி யுதிஷ்டிரரும் திரௌபதியும் வணங்கியபடி வந்து அவையில் அமர்ந்தனர். பாண்டவர்கள் நால்வரும் அவர்களுக்கு இருபுறமும் இடப்பட்ட தங்கள் இருக்கைகளுக்கு வந்தமர்ந்தனர். பட்டுத்திரைக்கப்பால் குந்தியும் பிற அரசியரும் வந்தமர்வதை சாத்யகி கண்டான். இளைய யாதவர் வணங்கியபடி வந்து அவருக்கென இடப்பட்ட தனி இருக்கையில் அமர்ந்ததும் சுரேசர் கைகாட்ட மூத்த குடிகளால் அரசருக்கு செங்கோல் அளிக்கப்பட்டு மணிமுடி சூட்டப்பட்டது. வேதியர் வேதமோதி கங்கை தூவி வாழ்த்தி விலகினர். அவையிலிருந்து கலைவோசை எழுந்தபடியே இருந்தது. சாத்யகி உத்தரனின் அருகே அமர்ந்திருந்த, தாடியும் சடையும் மண்டிய, மெலிந்த உருவினரை சற்றுநேரம் கூர்ந்து நோக்கிய பின்னரே சிகண்டி என தெளிந்தான். அவர் வாயை மெல்லுவதுபோல அசைத்துக்கொண்டிருந்தார். தனக்குள் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறாரா? உத்தரன் நேர்விழிகளுடன் யுதிஷ்டிரரை பார்த்துக்கொண்டிருந்தான்.

சுரேசர் கைகாட்ட முதுநிமித்திகர் மேலே ஏறி வெள்ளிக்கோலை மும்முறை சுழற்றி வணங்கி அவை தொடங்கவிருப்பதை அறிவித்தார். யுதிஷ்டிரரின் குலவரிசையையும் அவைச்சிறப்பையும் சொல்லி, அந்தப் பேரவை அஸ்தினபுரியை அறம்மீறி ஆளும் தார்த்தராஷ்டிரர்கள் மீதும் அவர்களுடன் படைநிற்கும் அனைவர் மீதும் இறுதிவெற்றிவரை நீளும் போர்க்கூவலை விடுப்பதன் பொருட்டு கூடியிருப்பதாக அறிவித்தார். அவையினர் தங்கள் கோல்களைத் தூக்கி “வெற்றிவேல்! வீரவேல்! வெல்க குருகுலம்! வெல்க பேரறம்! வெல்க அறத்தில் நிற்கும் அவை!” என குரலெழுப்பினர். நிமித்திகர் பேரமைச்சர் சௌனகர் முறையான அறிவிப்புகளை விடுப்பார் என்று சொல்லி வணங்கி கோல்தாழ்த்தி பின்னடி வைத்து மேடையிலிருந்து இறங்கினார்.

சௌனகர் வெண்ணிற ஆடையும் வெண்தலைப்பாகையும் அணிந்திருந்தார். நீர்மணிமாலை நெஞ்சில் கிடந்தது. அசங்கன் “அந்தணர் போர் அறிவிப்பதுண்டா, தந்தையே?” என்றான். “அவர் உலகியல் நெறியினர். சௌனகநீதி நூலை நீ கேட்டதில்லையா?” என்றான் சாத்யகி. சாந்தன் “நான் கற்றிருக்கிறேன். அரசன் மண்ணை வெல்லும்பொருட்டு விண்ணை வளைக்கவே வேள்வி செய்யவேண்டும் என அது தொடங்கும்” என்றான். சாத்யகி “அவர் சம்பத்நீதி என்னும் நூலையும் எழுதியிருக்கிறார். பாரதவர்ஷத்தின் பல நாடுகளில் வரி அதன் அடிப்படையிலேயே முடிவுசெய்யப்படுகிறது” என்றான்.

சௌனகர் அவையை வணங்கி யுதிஷ்டிரரையும் திரௌபதியையும் வாழ்த்தி முறைமைச்சொற்கள் கூறி முடித்து அவையின் நோக்கத்தை சொல்லத் தொடங்கினார். “அவையோர் அறிந்த செய்தியே இது. பாரதவர்ஷத்தில் செவிகொண்ட அனைவரும் கேட்ட கதை.” அஸ்தினபுரியின் கொடிவழியில் யுதிஷ்டிரருக்கு இருந்த முடியுரிமையை, அதை எவ்வாறு தார்த்தராஷ்டிரரான துரியோதனன் மறுத்தார் என்பதை, உடன்பிறந்தாரான பாண்டவர்களை கௌரவர்கள் வாரணவதத்தில் மாளிகைக்கு தீயிட்டுக் கொல்ல முயன்றதை, பன்னிரு படைக்களத்தில் நிகழ்ந்த சூதை, பாஞ்சாலத்து அரசி அவைச்சிறுமை செய்யப்பட்டதை, பாண்டவர்களின் கான்புகுதலை, மீண்டு வந்து அவர்கள் நிலம் கோரியபோது மறுக்கப்பட்டதை, ஒவ்வொரு முறையும் போரைத் தவிர்க்கும்பொருட்டு யுதிஷ்டிரர் எடுத்த முயற்சிகளை, இளைய யாதவரின் தூது மறுக்கப்பட்டதை விரித்துரைத்தார்.

சாத்யகி அவையனைத்தையும் அப்போதுதான் கேட்பதுபோல விழிநட்டு மெல்லிய பதற்றத்துடன் கேட்டுக்கொண்டிருந்தான். அவை நிகழ்ந்தபோது அவன் நிகழ்வுகளுடன் இருந்தான். அப்போது ஒவ்வொரு தருணத்திலும் ஒன்றுக்கு மீறிய தரப்புகளும், ஒன்றையொன்று ஊடறுக்கும் ஐயங்களும், இலக்கடையாச் சினங்களுமாக அவை கலங்கிக்கொண்டே இருந்தன. அந்தத் தெளிவின்மையாலேயே அவற்றை கூர்ந்துநோக்கி அறிய முடியவில்லை. அவை காலத்தில் கடந்து கதையென்று திரண்டு நிற்கக் கண்டபோது ஒவ்வொன்றும் அவனை உலுக்கின. பாஞ்சாலத்து அரசி அவைநடுவே சிறுமைகொண்டு நின்றதை அவனால் எண்ணமென்றுகூட திரட்டிக்கொள்ள முடியவில்லை. பற்கள் உரசிக்கொள்ள உடலை அதிரச்செய்தபடி ஒரு விதிர்ப்பு அவனில் ஓடியது. கைகளை இறுகப்பற்றி ஒவ்வொரு விரலாக மெல்ல விட்டு அந்த இறுக்கத்தை கடந்தான்.

பெருமூச்சுடன் மீண்டுவந்தபோது மைந்தர் நடுவே மெல்லிய ஓசை கேட்க திரும்பிப் பார்த்தான். அவர்கள் கைகளால் தொட்டும் விழிகளால் உரசிக்கொண்டும் ஓசையில்லா உரையாடலில் இருப்பதைக் கண்டு “என்ன?” என்றான். “ஒன்றுமில்லை” என்றான் சாந்தன். அனைத்தும் அவர்கள் அறிந்த கதைகள் என்பதனால் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதை உணர்ந்த சாத்யகி மீண்டும் சினம்கொண்டான். அவர்களுக்கு அவை கதைகள். கதைக்கும் நிகழ்வுக்குமான வேறுபாடு ஒன்றே, கதை பல்லாயிரம் நிகழ்தகவுகளில் ஒன்று. ஆகவே பிறிதொன்றென்றும் மாற்றிக்கொள்ளத்தக்கது. நிகழ்வு மாற்றமில்லாதது. இரக்கமற்ற ஒருமை கொண்டது. இவர்கள் இந்தக் கதையை ஒரு விளையாட்டாகவே எண்ண இயலும். ஏனென்றால் இவர்கள் இதற்குள் இல்லை. அவ்வண்ணமென்றால் இவர்கள் எதன்பொருட்டு போருக்கு எழுகிறார்கள்? போரும் இவர்களுக்கு வெறும் விளையாட்டா என்ன?

இவை ஒவ்வொன்றினூடாகவும் நான் வாழ்ந்து கடந்து வந்திருக்கிறேன் என சாத்யகி மீண்டும் எண்ணினான். ஒவ்வொரு முறை கேட்கையிலும் அவை மீண்டும் ஒரு வாழ்வு என அலையலையாக உணர்வுகொண்டு எழுகின்றன. ஆனால் நோக்கியிருக்கவே அது வெறும் கதையாக மாறிவிட்டது. ஒரு கற்பனைமிக்க சூதன் அதை மாற்றிவிடமுடியும் இன்று. முதுமையிலென இங்கு அமர்ந்து அதை மீளமீள எண்ணிக்கொண்டிருக்கிறேன். எழும் தலைமுறை இக்கதைகளை ஒருமுறைக்கு மேல் செவிகொள்ளாது. பிறிதொருமுறை சொல்லக்கேட்டால் உதடு சுழித்து கண்களில் இளநகைப்புடன் பொய்ப்பணிவு காட்டி முடிவதற்காக காத்திருக்கும். சாத்யகி மேலும் சினம்கொண்டான். அவர்களை கண்டிக்க வேண்டுமென்றும் கடுஞ்சொற்கள் உரைக்கவேண்டுமென்றும் விழைந்தான். ஆனால் எதன்பொருட்டென்று தெரியவில்லை.

சௌனகர் அப்போரை ஏன் தவிர்க்க முடியாது என்று சொல்லி நிறுத்தினார். பின்னர் பாரதவர்ஷத்தின் அரசர்கள் அந்த அவையில் அறத்தின் பொருட்டு கூடியிருப்பதற்காக அனைவருக்கும் நன்றியும் வரவேற்பும் உரைத்தார். “அரசர்களே, குடித்தலைவர்களே, வீரர்களே, போருக்கென எழுந்த அனைவருக்கும் மாறாத மெய்யறத்தை ஆளும் தெய்வங்களின் நற்கொடைகள் பொழிக! இத்தருணம் தெய்வங்களால் மும்முறை வாழ்த்தப்படுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி தலைவணங்கி அவர் அவையிறங்கியதும் அவையினர் தங்கள் கோல்களையும் கொடிக்குறிகளையும் தூக்கி வாழ்த்துரைத்தனர். நிமித்திகர் மேடையேறி அவையில் இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரர் போர்வஞ்சினம் உரைக்கப்போவதாக அறிவித்தார். அதைக் கேட்டதும் அவையினர் தங்கள் கோல்களையும் வாள்களையும் தூக்கி பெருங்குரலெழுப்பினர். ஆனால் அவர்கள் அனைவரின் முகங்களிலும் ஒரு தயக்கமும் இருப்பதாக அவனுக்குப் பட்டது. அந்தத் தயக்கத்தை தாண்டிச்செல்லத்தான் மிகையாகக் கூச்சலிடுகிறார்களா?

யுதிஷ்டிரர் கைகூப்பியபடி எழுந்தார். அவையின் நான்கு மூலைகளிலும் சங்குகள் ஓசையிட்டமைந்தன. அவர் குரல் அவையெங்கும் ஒலிக்கும்படி முற்றமைதி நிலவியது. யுதிஷ்டிரர் அவைமேடையில் சற்றே முன்னால் வந்து நின்று தணிந்த குரலில் தொடங்கினார். “இன்று இந்த அவையில் நுண்ணுருவில் நின்றிருக்கும் எங்கள் குடித்தெய்வங்களை வாழ்த்துகிறேன். தோன்றாத் தெய்வங்களென அருள்புரிந்து சூழ்ந்திருக்கும் என் குலத்து மூதாதையரை பணிகிறேன். என் முன் அறம்விளையும் நெஞ்சுடன் அமர்ந்திருக்கும் அரசர்கள், குடித்தலைவர் அனைவரையும் வணங்குகிறேன். இத்தருணம் பாரதவர்ஷத்தின் வரலாற்றில் ஒளிமணியென என்றும் திகழ்க! இதை பெருங்கவிஞர் சொல்லில் நிலைநிறுத்துக! நம் கொடிவழியினர் எந்நிலையிலும் தோற்காது அறம் என்ற மெய்மையின் விளக்கமாக இதை பயில்க! ஆம், அவ்வாறே ஆகுக!”

அவையினர் “ஆம்! ஆம்! ஆம்!” என்று வாழ்த்துக்குரல் எழுப்ப யுதிஷ்டிரர் தொடர்ந்தார். “அவையோரே, நீங்கள் அனைவரும் அறிந்தது இது. இந்தப் போர் மண்ணின்பொருட்டு மட்டுமல்ல. நான் ஷத்ரியனாக மண்ணை விழைகிறேன். முடிசூடியமர எண்ணுகிறேன். ஆனால் அது எந்த நுகர்வின்பொருட்டும் அல்ல. புகழின்பொருட்டும் அல்ல. நெஞ்சில் கைவைத்து விண்நோக்கி ஒரு சொல்லும் தயங்காமல் என்னால் உரைக்கவியலும். ஆம், அறத்தின்பொருட்டே நான் மண்ணை விரும்புகிறேன்.” அவை தன் ஐயங்களைக் கடந்து மெய்யாகவே உணர்வெழுச்சி கொள்வதை சாத்யகி உணர்ந்தான். “மாமன்னர் யுதிஷ்டிரர் வெல்க! பேரறத்தார் வெல்க! குருகுலமுதல்வர் வெல்க!” என்று வாழ்த்தொலி எழுந்தது. அவர் கையசைத்ததும் அது அமைந்தது.

“அவையீரே, மெய்யாகவே நான் இதை சொல்கிறேன். மண்ணின்பொருட்டு மாய்வதில் எனக்கு எவ்வகையிலும் உடன்பாடில்லை. ஆகவே இந்த அவைக்கு வந்து அரியணை அமரும் இக்கணம் வரை நான் இப்போரில் ஐயமும் தயக்கமுமே கொண்டிருக்கிறேன்” என யுதிஷ்டிரர் தொடர்ந்தார். அவையில் மெல்லிய கலைவோசை எழுவதை சாத்யகி உணர்ந்து திரும்பிப்பார்த்தான். யுதிஷ்டிரர் பிழையாக ஏதோ சொல்லவிருக்கிறார் என்ற அச்சம் அவனுக்கு ஏற்பட்டது. அவன் இளைய யாதவரை பார்த்தான். அவர் ஊழ்கத்திலென விழிசரிய, மடியில் கைகள் படிந்திருக்க அமர்ந்திருந்தார். துருபதர் ஒவ்வாமை தெரியும் முகச்சுளிப்புடன் அமர்ந்திருந்தார். யுதிஷ்டிரரின் குரல் ஓங்கியது. “ஷத்ரிய அரசர்களே, பாரதவர்ஷத்தின் தொல்குடிகளே, நாம் நமக்காக குருதி சிந்தினால் அது வீண். மூதாதையரின்பொருட்டு குருதி சிந்தினால் அது நம் கடன். வரும் தலைமுறைகளுக்காக குருதி சிந்துவோமெனில் அது தெய்வங்களுக்கு நாம் அளிக்கும் கொடை.” அக்கணமே அவை நெய்த்தழல் என பற்றிக்கொண்டது. அனைவரும் கோல்களையும் படைக்கலங்களையும் தூக்கி “போர்! போர்! போர்!” என்று கூவினர்.

கைகளை விரித்து உரத்த குரலில் யுதிஷ்டிரர் சொன்னார் “இந்தப் போரே இப்பாரதவர்ஷத்தில் நிகழ்ந்தவற்றில் மாபெரும் வேள்வி. இது ஆயிரம் அஸ்வமேதம், பல்லாயிரம் ராஜசூயம்! இங்கு நாம் அளிப்பது நமது குருதியை, நமது கண்ணீரை, நமது உயிரை. அவையோரே, நாம் அளிக்கவிருப்பது நாம் கொண்டுள்ள அனைத்தையுமேதான். எச்சமின்றி நம்மை அளித்து நாம் கோருவது ஒன்றே. வெற்றியை. அது இங்கு நமது செல்வம் செழிக்கவேண்டுமென்பதற்காக மட்டுமல்ல. நமது கொடிவழிகள் வளமிக்க வாழ்வை அடையவேண்டுமென்பதற்காக மட்டுமல்ல. எது மானுட குலமனைத்துக்கும் மாறாத உண்மையோ அது நிலைநாட்டப்பட வேண்டுமென்பதற்காக. இந்நிலம் இன்று எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல, என்றும் இது எவ்வாறு அமையவேண்டும் என்பதற்காக! எவ்வாறு இவ்வுலகு இனி புலரவேண்டும் என்பதற்காக. அவையோரே, எதன்பொருட்டு இப்புவியையே மும்முறை அழிக்கத் தகுமோ அது நிலைகொள்ள வேண்டுமென்பதற்காக.”

“அது என்ன என்பதை இங்குள்ள அனைவரும் உணர்ந்திருப்போம். சொல்லென அதை முன்வைக்க நம்மில் அனைவராலும் இயலாது போகலாம். அவையில் வகுத்துரைக்கும் திறன் நம்மில் மிகச் சிலருக்கன்றி பிறருக்கு இல்லை என்று எவரும் அறிவார். ஆனால் அதை அறியாத எவரும் இங்கில்லை. வேதமுடிபு என்னும் மெய்மையின் பொருட்டே நாம் படைகொண்டு எழுந்திருக்கிறோம். உண்மையென்பது ஒன்றை ஏற்று பிறிதனைத்தையும் மறுப்பதாக அமையாது என்றும், மெய்மையென்பது ஒருவருக்கு ஒரு வண்ணமே தன்னை வெளிப்படுத்துவது அல்ல என்றும், ஒன்றே மற்றொன்று என்றும், இங்கிருப்பதனைத்தும் அதுவே என்றும், அதுவன்றி பிறிதொன்று எங்குமில்லை என்றும், அறிவதெல்லாம் அதையே என்றும் நமக்குரைக்கிறது. அந்த அழியா மெய்மைக்கென எழுந்தவர்கள் நாம்.”

“வேதமுடிபு பிரிவின் பாதையல்ல. வேதம் தன் சாறென, ஒளியெனக் கொண்டுள்ளது ஒருங்கிணையும் பாதையையே. வேதத்தில் விளைவது விலக்கலின் பாதையல்ல, ஒருமையின் வழியே. இங்கு கொல்வேலும் கூர்வில்லும் ஏந்தி நின்று, திசை திசையென விரியும் எதிர்காலத்தின் மானுடத்திடம் நாம் சொல்கிறோம். ஒருங்கிணைக, அதுவே வெற்றி. ஒன்றாகுக, அதுவே மெய்மை. இப்புவியில் எதுவும் பிறிதில்லை என்று எண்ணுக, அதுவே நிறைவு. விலக்கி விலக்கி இதுகாறும் வந்தோம். வென்றும் அழித்தும் இவ்வண்ணம் நிலைகொண்டோம். இனி இணைத்து இணைத்து முன்செல்வோம். அணைத்து செழித்து இனி என்றும் இங்கு வாழ்வோம்” என்றார் யுதிஷ்டிரர். அவை முழுமையாகவே உணர்ச்சிக்குரல்களால் நிறைந்து அலையடித்தது. சாத்யகி மெய்ப்புகொண்டு கைகூப்பினான். நெஞ்சு விம்மியது. விழிநீர் வழிந்து நிறைக்க அவன் மூக்கை உறிஞ்சியபடி தலைகுனிந்தான்.

யுதிஷ்டிரரும் உணர்வெழுச்சியால் நிலையழிந்திருந்தார். நிற்கமுடியாதவர்போல கால்கள் தளர்ந்தார். குரல் உடைந்து தழுதழுக்க கூவினார். “இளைய யாதவரின் சொற்கள் பாரதவர்ஷத்தை இனி வழிநடத்துக! இப்பெருநிலத்தை தன் நெஞ்சின் அருமணியாக அணிந்திருக்கும் நிலத்திருமடந்தையை இனி பல்லாயிரம் காலம் அவையே ஆள்க! அதன்பொருட்டே இங்கு போருக்கெழுகிறோம். அவையோரே, இது நமது போரல்ல. இது இளைய யாதவரின் போரும் அல்ல. நாம் பெரும்புயலில் சிறு சருகுகள் மட்டுமே. அவர் இப்புயலில் சுருளவிழும் ஒளிரும் கொடி. புயலெழுவது வளிமண்டலத்தை ஆளும் தெய்வங்களின் விழைவால். அவை முடிவு செய்கின்றன எங்கு புயல், எங்கு சுழல் என்று. எவை நிலைகொள்ளும், எவை வளையும், எவை உடையும், எவை புழுதியென தூக்கிவீசப்படும் என்று.”

“மானுடத்தை ஆளும் எண்ணங்களில் எழுந்த புயல் இது. இது வென்று மேற்செல்லும் என்பதில் ஐயமே இல்லை. நாம் இதை கொண்டுசெல்லவில்லை, இது நம்மை கொண்டுசெல்கிறது. நாம் இப்போரை இயற்றவில்லை, நம்மிலூடாக அது தன்னை இயற்றிக்கொள்கிறது. பெருஞ்செயல்கள் செய்பவர்களே பிறப்பை பொருள்கொள்ளச் செய்பவர்கள். பெருஞ்செயல்கள் ஆற்றும் வாய்ப்பு நூறு தலைமுறைக்கு ஒருமுறையே மானுடருக்கு வாய்க்கிறது. நாம் செய்த நல்லூழால் இன்று நமக்கு அது அமைந்துள்ளது. நம் போர்மறத்தால், தலைக்கொடையால், பிறிதென ஏதும் எஞ்சா முழுதளிப்பால் அதை இயற்றுவோம். புகழ் நமக்கும், குன்றாப்பெருவாழ்வு நம் கொடிவழிகளுக்கும் அமையட்டும். ஆம் அவ்வாறே ஆகுக!”

கூறி முடித்ததும் அச்சொற்களால் ஏந்தி நிறுத்தப்பட்டு விடப்பட்டவர்போல யுதிஷ்டிரர் தளர்ந்து பின்னால் விழப்போனார். இயல்பாக கைநீட்டி சகதேவன் அவரை பற்றிக்கொண்டான். யுதிஷ்டிரர் நடுங்கும் கைகளால் அரியணையைப் பற்றி மெல்ல அமர்ந்தார். கைகளை மடிமேல் கோத்துக்கொண்டு உதடுகளை இறுக்கியபடி வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தார். பெருஞ்சொற்கள் மானுடரை மிக மேலே கொண்டுசென்றுவிடுகின்றன. புவியும் மானுடமும் மிகச் சிறிதென சுருங்கித் தாழும் உயரத்திற்கு. சாத்யகி கைகளைக் கூப்பி நெஞ்சோடு அணைத்தபடி அமர்ந்திருந்தான். அவன் கண்களிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது.