செந்நா வேங்கை - 33

tigதுரோணர் பீஷ்மர் கைமேல் தன் கையை வைத்து மெல்ல உலுக்கினார். திடுக்கிட்டவர்போல் அவர் திரும்பிப்பார்க்க தாழ்ந்த குரலில் அவர் ஏதோ சொன்னார். முற்றிலும் புதியவர்களை பார்ப்பதுபோல் பீஷ்மர் தன்னைச் சூழ்ந்து எழுந்து நின்றிருந்த அரசர்களை பார்த்தார். “என்ன? என்ன?” என்று கேட்டார். அவருடைய தலை மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது. தாடை இறங்கி வாய் நீள்வட்டமாக திறந்திருந்தது. பீஷ்மர் எதையும் உணரவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டபோது ஒருகணம் அவர் மறுத்துவிடக்கூடும் என்ற ஐயத்தை பூரிசிரவஸ் அடைந்தான். அவர் மறுத்துவிட்டால் ஒவ்வொன்றும் அடுத்த சிக்கலை நோக்கி செல்லும்.

துரோணர் தலையை நன்றாகச் சரித்து அங்கு நிகழ்ந்ததை அவருக்கு சொன்னார். அவர் உதடுகள் அசைந்த விசையிலிருந்து விரைந்த சொற்களில் அவர் பேசுவதை பூரிசிரவஸ் உணரமுடிந்தது. அது அவருக்கு புரிகிறதா என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. போதுமென்று துரோணரை கைகாட்டி நிறுத்திவிட்டு பீஷ்மர் எழுந்து நின்றார். அவருடைய உயரம் அப்போதுதான் புதிதாகப் பார்ப்பதுபோல் அவனை திகைப்புறச் செய்தது. நின்றவர்கள் அனைவரின் தலைக்கும்மேல் இருந்தது அவருடைய தலை. இரு கைகளையும் அவர் விரித்தபோது இறகுதிர்ந்த முதுகழுகு சிறகு விரிப்பதுபோல் தோன்றியது. “அமர்க! அமர்க!” என்று அவர் சொன்னார். அரசர்கள் அனைவரும் அமர்ந்தனர். வாய்க்குள் எதையோ மெல்வதுபோல் தாடையை அசைத்தபடி அவர் துரியோதனனையும் பின்னர் சகுனியையும் பார்த்தார். அறியாது மேலெழுந்த இடக்கை தாடியைப்பற்றி கசக்கி சுருட்டியது.

அவ்வசைவுகளை பூரிசிரவஸ் மிக அணுக்கத்திலென நோக்கினான். அக்கையில் சிறு நடுக்கமிருப்பதை, உதடுகள் பலமுறை சொல் கூட்டி தயங்குவதை கண்டான். மறுத்துவிடக்கூடுமோ என்ற ஐயம் மீண்டுமெழ பதற்றத்தால் அவன் கால்கள் தரையை நெருடத்தொடங்கின. பதற்றத்துடன் அமர்ந்திருப்பதுதான் கடினமென்றுணர்ந்தான். எழுந்து நிற்கவேண்டுமென தோன்றியது. ஆங்காங்கே அரசர்கள் எழுந்து நோக்க கனகர் கைவிரித்து அமரும்படி கோரினார். அவர்கள் அமர மேலும் சிலர் எழுந்தனர். சல்யர் எழுந்து அமரும்படி கைகாட்ட அனைவரும் அமர்ந்தார்கள்.

பிதாமகர் “ஆம்” என்றார். தன்னுள் எழுந்த ஏதோ எண்ணத்தை ஒப்புவது அது என தோன்றியது. பிறகு தனக்கேயென “இந்த அவையில்” என்றார். குரலைத் தீட்டி கைதூக்கி “அவையோரே, இங்கு சொல்லப்பட்டதை கேட்டேன். தொல்நெறிகள்…” என்று திணறி கையை மேலும் அசைத்து “ஆம், தொல்நெறிகள் முதன்மையானவை. ஆனால்…” என்றார். பின்னர் கைதூக்கி “எனக்கு தெரியவில்லை. இந்த நீண்ட வாழ்க்கையில் நானறிந்ததெல்லாம் எது மெய், எது மாறாநெறி என்பதை உலகியலுக்குள் வாழ்பவன் ஒருபோதும் சொல்லிவிடமுடியாதென்பதுதான். அலைகளில் ஆடுபவன் அலைகளின் அமைப்பை ஒருபோதும் பார்க்கமுடியாது என்பதுபோல்” என்றார்.

அவருக்குள் எண்ணம் திரளத் தொடங்கியது. மெல்வதுபோல வாய் அசைய தாடி ஆடியது. “ஒவ்வொரு கணமும் நன்று தீதுகளை நாடுகிறோம். விழைந்ததை, உரியதை, அமைவதை தெரிவுசெய்து முன்செல்கிறோம். தெரிவுசெய்தவற்றை பேசிப் பேசி சரியென்றாக்கிக் கொள்கிறோம். கையகன்றவற்றை இழிந்தததென்றும், எதிர்ப்பவற்றை தீதென்றும் விலக்கிக்கொள்கிறோம். ஆம், இங்கிருக்கும் எவராலும் நன்று தீதை சொல்லிவிடமுடியாது. ஆகவே…” என்றபின் மீண்டும் கையை மேலே தூக்கினார். அவருடைய சுட்டுவிரல் காற்றில் அசையாது நின்றது. மீண்டும் சொல்லெடுக்க பலமுறை முயன்றார். அந்தக் கை தாழ்ந்து உடலை ஒட்டி விழுந்தது. இல்லையென்பதுபோல் தலையை அசைத்து “ஆகவே எந்தப் போரும் அறத்திற்கும் அறமின்மைக்குமான போரல்ல” என்றார்.

அவர் என்ன சொல்லப்போகிறார் என அவை குழம்பி அமைய “எந்தப் போரும் நன்று தீதுக்குமான போருமல்ல” என்று அவர் தொடர்ந்தார். “போர் என்பது போர் மட்டுமே. ஆற்றல்களுக்கு நடுவேயான சமர். அன்றி வேறெதுவும் இல்லை. ஆம்! அல்லது…” சொற்களினூடாக அவர் வேறெங்கோ சென்றுவிட்டதை உணர்ந்து நின்று திரும்பி தன்னைச் சூழ்ந்து நின்ற அனைவரையும் பார்த்தபின் “நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்?” என்றார். துரோணர் “எந்தப் போரும் அறத்திற்கானதல்ல என்று” என்றார். “ஆம், ஆகவே எந்த அறத்தின்படியும் நான் இந்தப் போருக்கு வரவில்லை. இங்கு என்ன நிகழ்ந்தாலும் தோற்றவன் நானே. ஏனெனில்…” பெருமூச்சுவிட்டு மூச்சுவாங்கி நின்று மீண்டும் குரலெழ “ஏனெனில் களம்படுபவர் என் மைந்தர். எவர் இறந்தாலும் இழப்பு முதன்மையாக எனக்கே” என்றார்.

“மெய்யாகவே இத்தருணத்தில் துறவு பூண்டு கானேகவேண்டுமென்பதே என் எண்ணமாக உள்ளது. பலமுறை அதை எண்ணினேன். ஆனால் என்னால் துறவு பூண முடியாது என்று தெளிந்தேன். பலநூறு முறை மீள்வதில்லை என்று முடிவுகொண்டு இங்கிருந்து கிளம்பிச் சென்றவன் நான். ஒவ்வொருமுறையும் உரிய பணியும் அழைப்பும் கிடைத்து திரும்பி வந்திருக்கிறேன். ஏனென்றால் உலகியலான் இல்லம்விட்டுச் செல்லும் ஒவ்வொரு அடிக்கும் துறந்தவை பெருகும். என் மைந்தர், என் குடி, என் நாடு என்றே உள்ளம் இயங்கும். இப்பிறவியில் பெயர்த்தெடுக்க முடியாத நங்கூரத்தால் இங்கு கட்டப்பட்டிருக்கிறேன். அஸ்தினபுரியிலிருந்து எனக்கு விடுதலை இல்லை.”

“ஆம்!” என்று அவர் சொன்னார். பெருமூச்சுடன் தலைகுனிந்து அங்கே பேசிக்கொண்டிருப்பதையே மறந்து நின்றார். அவை காத்திருந்தது. அவர் வாய் மெல்வதுபோல அசைய விரல்கள் காற்றில் சுழித்தன. “ஆம்!” என நிமிர்ந்து அவையை நோக்கி “இத்தருணத்தில் துறவு பூணாது இங்கிருக்கையில் போர்வலனாகிய நான் அரண்மனையில் அமைய இயலாது. ஆனால் படைக்கலம் கொண்டு எழுந்தால் என் குடிகளை, என் மைந்தரையேகூட என் கைகளால் கொல்ல வேண்டியிருக்கும். ஆகவே நான் என்ன செய்வது? நீங்களெல்லாம் இளையோர். குருதியில் வெம்மை நிறைந்திருப்பவர்கள். கனவுகளில் எதிர்காலம் இன்னமும் வந்துகொண்டிருப்பவர்கள். நான் அவ்வாறல்ல. எனது காலங்கள் எங்கோ இருக்கின்றன. நேற்று அந்திவரை இப்போரில் நான் கலந்துகொள்ள வேண்டுமா வேண்டாமா என்று என்னால் முடிவு செய்ய இயலவில்லை. என்னால் கலந்து கொள்ள இயலாதென்ற எண்ணமே எனக்கிருந்தது” என்றார்.

“இந்நாட்களில் பலமுறை என் கனவில் அன்னை சத்தியவதி வந்தார். இக்குடிக்குக் காவலென இறுதிவரை நின்றிருப்பேன் என்ற சொல்லை இளமையில் அவருக்கு அளித்தேன். சொல்லளித்தவர்கள் மறந்தாலும் அதை பெற்றவர்கள் மறப்பதில்லை. வாழ்பவர்கள் மறந்தாலும் இறப்பவர்கள் விடுவதில்லை. ஆம், நான் வாளேந்தியாகவேண்டும். ஆனால் யாருக்காக? இந்த அவையில் என் மைந்தன் யுதிஷ்டிரனை மறுத்து ஒரு சொல்கூட நான் சொல்லப்போவதில்லை. பேரறத்தான் அவன். அவன் தம்பியரோ வெல்ல முடியா பெருவீரர். அவர்களுடன் இருப்பவனோ இந்த யுகத்தை கடந்தவன்.”

அவர் நடுங்கியபடி நெஞ்சோடு கைசேர்த்து நின்றார். அவை அவரை புரிந்துகொள்வதை முற்றாகவே தவிர்த்து வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தது. “அவையோரே, மைந்தர்களே, தான் வாழும் காலத்தை கடப்பவர் பல்லாயிரவரில் ஒருவர். தான் வாழும் யுகத்தை கடப்பவர் கோடியில் ஒருவர். அவர்கள் காண்பதை நாம் காண்பதில்லை. அவர்கள் சென்ற தொலைவு நம்மால் எட்டக்கூடியதல்ல. அவர்களின் சொற்களிலிருந்து நாம் பெறுவது இந்தக் காலகட்டத்துக்குரிய பொருளை மட்டுமே. அவர்கள் நம்மை எறும்பென, அணுவென சிறுக்கவைக்கும் பேருடலர்கள். மலைமலையென அறைந்து இடிமுழக்கமென ஒலிக்கும் பெருங்குரல் கொண்டவர்கள்” என்றார். “அவன் அத்தகையவன். அவனை நான் எதிர்த்து நிற்கவேண்டுமா? நின்று என்ன பயன் கொள்ளவிருக்கிறேன்? நான் கண்டதை எவரிடம் எச்சொல்லில் விளக்கவியலும் என்னால்?”

தளர்ந்த குரலில் தனக்குத்தானே என கையசைத்து தலையை ஆட்டியபடி சொன்னார். “எந்த முடிவை எடுப்பதென்று எனக்கு தெரியவில்லை. அசையா உறுதி கொண்டவன் என்று என்னை சொல்கிறார்கள். அது மெய். நான் துறவியல்ல, எனினும் கொண்ட நோன்புகள் எதையும் ஒருகணமும் விட்டுவிட்டவனல்ல. வாழ்வையே ஒரு பெருநோன்பெனக் கொண்டவன். ஆதலால் என்னை தேவவிரதன் என்கிறார்கள். ஆனால் அம்முடிவுகள் எதையும் நானே எடுத்ததில்லை. பிறர் எடுத்த முடிவுகளுக்காக நோன்பு கொண்டவன் நான். ஆகவேதான் என் புறமும் அகமும் நோன்பில் நிலைகொண்டிருக்கையில் ஒருபோதும் என் ஆழம் நோன்பில் அமைந்திருந்ததில்லை.” கையை சற்றே தூக்கி ஏதோ சொல்லவந்தவர் அசைவிலாது அப்படியே நின்றார். அவர் உள்ளில் இருந்து சொல்லனைத்தும் ஒழுகி அகல அவர்மேல் அமைதி படிந்தது.

பூரிசிரவஸ் அவர் என்ன எண்ணுகிறார் என எண்ணி எதையும் சென்று தொடாமல் திரும்பினான். அங்கிருந்த அவர் உரு கலைந்து மறைந்துவிட்டவர்போல் தோன்றினார். வேறெங்கோ அப்போது இருந்துகொண்டிருக்கிறார். அல்லது இன்மையென்றே ஆகிவிட்டார். மீண்டும் அவர் அசைந்தபோது பாறையில் உயிரசைவு தோன்றியதுபோல் இருந்தது. “நான் எம்முடிவையும் எடுக்கவில்லை. நேற்றுவரை ஒவ்வொரு கணமும் நிலைகொள்ளாது அலைந்தேன். பொழுதை அளைந்துகொண்டிருந்தேன். இன்று காலையே அம்முடிவை எடுத்தேன். இன்றல்ல, சற்றுமுன் இங்கு வந்து கொண்டிருந்தபோது” என்றார்.

“தேரில் ஏறி அமர்ந்தால் சற்றுநேரம் நான் துயில்கொள்வதுண்டு. அது துயிலல்ல. உள்ளம் அழிவது மட்டுமே. கனவா நினைவிலிருந்து எழுந்த தோற்றமா என்று அறியாது சில அப்போது நிகழும். இன்றென் அருகே இளையோன் விசித்திரவீரியன் அமர்ந்திருந்தான். இயல்பாக எப்போதும் அவன் என்னுடன் இருப்பதுபோல் உணர்ந்து சாலையை நோக்கிக்கொண்டு வந்தேன். அவனிடமிருந்து மெல்லிய விசும்பலோசை கேட்டபோது திரும்பிப்பார்த்து என்ன என்றேன். அவன் கண்களில் நீரை பார்த்தேன். ஏனோ எனக்கு எரிச்சலும் ஒவ்வாமையும்தான் எழுந்தன. எப்போதும் அவன் நோயை நான் வெறுத்துவந்தேன். மெலிந்த தோள்களை, பசலை படிந்த தோலை, உயிரற்றவை என வெளிறிய உதடுகளை, உந்திய பற்களை. ஆனால் அவன் விழிகள் என்னை நிலையழியச் செய்தன. அவை நோயாளிகளுக்குரிய கூரிய ஒளிகொண்டவை. உரத்த குரலில் என்ன என்றேன். ஒன்றுமில்லை என்று அவன் சொன்னான். என்ன என்று மீண்டும் கேட்டேன். அச்சொல்லை நான் உரைத்தமையால் நான் விழித்துக்கொண்டேன். தேர் அணுகிக்கொண்டிருந்தது. அக்கனவுக்கு என்ன பொருள் என்று மீண்டும் மீண்டும் எனக்குள் துழாவிக்கொண்டிருந்தேன்.”

“இங்கு இந்த அவையில் வந்தமர்ந்து உங்கள் சொல்லாடல்களை செவிமடுத்தேன். அவையில் வந்தமர்வதுவரை இங்கு பிதாமகர் வந்தமரப்போகிறார் என்று எனக்கு தெரியாது. சிறிய தந்தை பால்ஹிகர் அன்று கண்ட அதே தோற்றத்தில் என் முன் வந்து நின்றபோது மீண்டும் என் உள்ளம் ஆழ்ந்த அசைவொன்றை அடைந்தது. நானும் இம்முதிய உடலை உதிர்த்து நெடுங்காலத்துக்கு முன்பே விண்சென்றுவிட்டவன் என்று உணர்ந்தேன். நிலைகொள்ளாமல் இங்கு அமர்ந்திருந்தேன். மெய்யாகவே அனைத்தும் விலகி புதிய ஒரு ஒளி தோன்றிவிட்டது என்று தோன்றியது. ஆம், சிறிய தந்தை முடிசூடி அமர்வார் என்றும் அவருக்குக் கீழே நானும் என் பெயர் மைந்தரும் வாளேந்தி நின்று பாரதவர்ஷத்தை ஆள்வோம் என்றும் சற்று நேரம் நானும் கனவு கண்டேன்.”

கசப்புடன் சிரித்து தாடியை மேலும் கசக்கி நீவிவிட்டு பீஷ்மர் தொடர்ந்தார் “அரசுசூழ்தல் அவைகளில் மூன்று தலைமுறைக்காலம் அமர்ந்த நான் காணத்தகுந்ததல்ல கனவு. இப்போது நினைக்கையில் அதன் சிறுமையும் இளிவரலும் எனக்கே கசப்பூட்டுகின்றன. ஆனால் நோயில் இறப்பவன் இறுதியாக சஞ்சீவி மருந்துடன் வரும் மருத்துவன் ஒருவனை கனவு காணாது இருக்க இயலாது. ஒன்று நிகழுமென்று என் ஆழத்தில் ஒரு தவிப்பிருந்தது போலும். நான் எத்தனை எளியவன், எத்தனை சிறியவன் என்று அதன்பின் என்னை உணர்ந்தேன். என் ஆற்றல், என் அறிவு அனைத்திற்கும் அப்பால் அறிய முடியாப் பெருவெளியை நோக்கி ஒரு சிறு நல்லூழின் துளி விழலாகாதா என்று ஏங்கி இரவலனாகவே இருந்திருக்கிறேன். பின்னர் அனைத்து நம்பிக்கைகளையும் இழந்தபோது ஏமாற்றம் எழவில்லை. ஆம், எளியவன் சிறியவன் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டபோது ஆறுதலும் விடுதலையும் மட்டுமே உருவாகியது. மீண்டும் கண்மூடி அமர்ந்தபோது மிக அருகிலென என் இளையவனை பார்த்தேன். இம்முறை அவன் கண்மூடி உடல் குறுக்கி அமர்ந்திருந்தான். என் அருகில் அல்ல நேர் முன்னால் என் மைந்தன் திருதராஷ்டிரனின் அருகே.”

“அவையோரே, இப்போது எனக்கு எந்த ஐயமும் இல்லை. அறமோ குலநெறியோ கொள்கைகளோ எதுவாயினும் ஆகுக! எவர் நிலம்கொண்டாலும் எவர் களம்பட்டாலும் நான் இயற்றுவதற்கு ஒன்றுமில்லை. என் கடன் நெடுங்காலத்துக்கு முன் என் குடில் வாயிலில் வந்து நின்று உரத்த குரலில் நான் விழியிழந்தோன் தந்தையே என்னை ஏற்றருள்க என்று கைநீட்டி இரந்த அச்சிறுமைந்தனிடம்தான். திருதராஷ்டிரனின் குருதிக்கும் குடிக்கும் மட்டுமே நான் கடன்பட்டவன். அவனுடன் நின்று பொருதி தேவையென்றால் மடிந்து என் சொல்காக்க உறுதி கொண்டுள்ளேன். இது நான் கொண்ட பிற நோன்புகளைப்போல் அல்ல, நானே எனக்கென கொண்டது. என் சொல் இது.”

சகுனி எழுந்து கைகூப்பி “இடைமறித்தலுக்கு பொறுத்தருள்க, பிதாமகரே! தாங்கள் இப்போரில் முன்னின்று பொருதியாகவேண்டும். தங்களுக்கு நான் உரைப்பதல்ல இது. எது மூத்தோர் வகுத்த குலநெறியோ அதுவே பாரதவர்ஷமெங்கும் நிலைகொள்ள வேண்டுமென்பது நீங்களே பலமுறை அவையில் முன்வைத்ததுதான். குலநெறி பிறழுமென்றால் குடிகள் ஒவ்வொன்றும் மணிமுடியை கனவு காணமுடியும். அதன்பின் அரசென்று ஒன்றில்லை என்று நீங்கள் சொன்ன சொற்களையே இங்கு மீண்டும் சொல்லத் தலைப்படுகிறேன்” என்றார்.

பீஷ்மர் சினமோ கசப்போ கொண்டவர்போல முகம் சுளித்து கைவீசினார். “அச்சொற்கள் எதையும் நான் நினைவுகூர விரும்பவில்லை. என் மைந்தன் பொருட்டு வில்லெடுக்கிறேன், படை நடத்துகிறேன், அவனை எதிர்த்து வரும் எவராயினும் எதிர்த்து வெல்கிறேன். இதற்குமேல் நான் சொல்வதற்கொன்றுமில்லை” என்றபின் கைகூப்பி அமர்ந்தார். அவர் அவ்வாறு முடித்துக்கொள்வார் என எவரும் எதிர்பார்க்கவில்லை என்பதனால் அவை சொல்லின்றி அமைந்திருந்தது. சகுனி இடைமறிக்காவிட்டால் அவர் முடிவிலாது சொல்லிக்கொண்டு சென்றிருப்பார் என்று பூரிசிரவஸ் எண்ணினான். முதியவர்களின் உள்ளம் நேரடியாக நாவிலெழுவதை அவன் நிறையவே கண்டிருந்தான்.

துரியோதனன் “பிதாமகர் படைநடத்த ஒப்புக்கொண்ட பின்னர் நாம் பேசுவதற்கு ஏதுமில்லை. அவருடைய வில் எனக்கென எழுந்தது முக்கண் முதல்வன் தன் முப்புரி வேலுடன் எழுந்ததற்கு நிகர். பாரதவர்ஷத்தில் அவரை வெல்ல எவருமில்லை என்பதை அறியாதவர் எவருமில்லை. இது போதும் எனக்கு. நான் போர் வென்றுவிட்டேன்” என்றான். இரு கைகளையும் விரித்து “பிதாமகர் தலைமையில் நாம் படைகொள்வோம், வெல்வோம்!” என்றான். அவையினர் “வெற்றிவேல்! வீரவேல்! படைத்தலைவர் பீஷ்ம பிதாமகர் வெல்க! காங்கேயர் வெல்க! மாவிரதர் வெல்க! வெல்க குருகுலம்! வெல்க அஸ்தினபுரி!” என்று வாழ்த்தொலி எழுப்பினர்.

அதற்குத் தொடர்பே அற்றவர்போல் உதடுகளை உள்மடித்து முகம் சற்று வளைய பீஷ்மர் அமர்ந்திருந்தார். துரோணர் பீஷ்மரிடம் குனிந்து ஏதோ சொல்ல அதை வலக்கை வீசி அப்பால் என காட்டினார். துரியோதனன் “அவையீரே, நமது படைகளுக்கு அடுத்த கட்டத் தலைவர்களாக பெருவில்லவரை இப்போதே வகுத்தமைக்க வேண்டியுள்ளது. சிற்றவை கூடி எடுத்த முடிவின்படி பீஷ்மருக்குப் பின் குருகுலத்து வில்லவர் அனைவருக்கும் ஆசிரியரும் பாரதவர்ஷத்தின் தனுர்வேத ஞானியுமாகிய துரோணர் படைத்தலைமை கொள்ளட்டும். அவருடன் ஆசிரியராகிய கிருபர் இணை நிற்கட்டும். எங்கள் படைத்தலைமை கொண்டு போர் வெற்றியை ஈட்டி அளிக்கும்படி ஆசிரியர் துரோணரை அடிபணிந்து கோருகிறேன்” என்று சொன்னான்.

துரோணர் எழுந்து இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பி அவையை வணங்கினார். “ஆசிரியர் துரோணர் வெல்க! பரத்வாஜரின் மாணவர் வெல்க! வெல்க வில்ஞானி! வெல்க வெற்றி மறம் கொண்ட அந்தணர்!” என்று வாழ்த்தொலிகள் சூழ்ந்தன. துரோணர் மீண்டும் அவையை வணங்கி அமர்ந்தார். “மூன்றாம் நிலை படைத்தலைவராக மத்ர நாட்டரசரும் எங்கள் குடிக்காவலருமாகிய சல்யரை அழைக்கிறேன்” என்றான் துரியோதனன். சல்யர் எழுந்து அவையை வணங்க அரசர்களும் குடித்தலைவர்களும் அவரை வாழ்த்தி குரலெழுப்பினர். “மலைக்குடித் தலைவர் வாழ்க! மத்ர நாட்டரசர் வெல்க! சல்யர் வெல்க!”

தொடர்ந்து துரியோதனன் அஸ்வத்தாமனையும் ஜயத்ரதனையும் கிருதவர்மனையும் அடுத்த நிலை படைத்தலைவர்களாக அறிவித்தான். அவர்களுக்கு அவை வாழ்த்து கூவியது. கனகர் மேடையேறி “அவையோரே, நம்முடைய படைவல்லமையை தொகுத்து இவ்வாறு அறிவிக்கிறோம். காந்தாரத்தின் சுபலரின் தலைமையில் ஓர் அக்ஷௌகிணி படைகள் வந்துள்ளன. சைந்தவராகிய ஜயத்ரதரும் கூர்ஜரரும் சாரஸ்வதரான உலூகருடன் இணைந்து ஓர் அக்ஷௌகிணி படைகொண்டு வந்துள்ளனர். காம்போஜத்தின் சுதக்ஷிணரின் தலைமையில் சால்வநாட்டு த்யுமந்தசேனரும் ஆஃபிரநாட்டின் உக்ரதர்சனரும் இணைந்த வடமேற்கு அரசகுடியினர் அரை அக்ஷௌகிணியும், மகதத்தின் ஜயசேனரும்  கோசலத்தின் பிருஹத்பலரும் இணைந்து அரை அக்ஷௌகிணியும் வந்துள்ளன. பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தரின் தலைமையில் வங்கத்தின் சமுத்ரசேனரும் சந்திரசேனரும் இணைந்து அரை அக்ஷௌகிணியும் கிழக்கு நிலத்து உத்கலமும், ஒட்டரமும் காமரூபமும் பிற கிழக்குநாடுகளும் இணைந்து அரை அக்ஷௌகிணிப் படையுடன் வந்துள்ளனர். மத்ரநாட்டு சல்யரால் நடத்தப்படும் படையில் சௌவீரர்களும் பால்ஹிகர்களும் பிற இமையமலைக் குடியினரும் இணைந்த ஓர் அக்ஷௌகிணி வந்தணைந்துள்ளது” என்றார்.

ஒவ்வொரு படைப்பிரிவு குறிப்பிடப்படுகையிலும் அந்த அரசர்கள் எழுந்து “வெற்றிவேல்! வீரவேல்!” என குரலெழுப்பினர். “அவையோரே, மாகிஷ்மதியின் நீலரின் தலைமையில் விந்தியனுக்குத் தெற்கிலுள்ள அரசர்களால் ஆன அரை அக்ஷௌகிணி படையும், கிருதவர்மரின் தலைமையில் பன்னிருகுடி யாதவர்களின் அரை அக்ஷௌகிணியும் வந்து சேர்ந்துள்ளன. உத்தர, தட்சிண, மத்ய கலிங்கநாடுகள் இணைந்து வேசர நாடுகளின் படைகளை சேர்த்துக்கொண்டு ஓர் அக்ஷௌகிணியாகத் திரண்டு நிரைகொண்டுள்ளன. அவந்தியும் மாளவமும் இணைந்து அரை அக்ஷௌகிணியும், திரிகர்த்தமும் உசிநாரமும் இணைந்து அரை அக்ஷௌகிணியும், அஸ்வத்தாமரின் உத்தரபாஞ்சாலமும் குருநாடும் இணைந்து அரை அக்ஷௌகிணியும் சகர்களும் யவனர்களும் இணைந்து அரை அக்ஷௌகிணியும் வந்துள்ளன. சௌராஷ்டிர நாட்டின் ருஷார்திகரும் திருவிடத்தின் படைகளும் தென்னிலப்படைகளும் இணைந்து ஓர் அக்ஷௌகிணி வந்துள்ளது. அஸ்தினபுரியின் படைகள் ஒரு அக்ஷௌகிணி அளவிற்கு பெருகியுள்ளன. நம்மிடம் உள்ளது பதினொரு அக்ஷௌகிணி படைப்பெருக்கு.”

அவை மேலும் மேலும் என கிளர்ந்தெழுந்து போர்க்குரல் எழுப்பிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு அரசராக எழுந்து வாள் தூக்கி துரியோதனனுக்கும் அஸ்தினபுரியின் கொடிக்கும் ஷத்ரிய கூட்டமைப்புக்கும் தங்கள் சொல்லுறுதியை உரைத்து வஞ்சினம் கூவினர். ஒன்றே மீண்டும் மீண்டும் நிகழ்வதாயினும் ஒவ்வொரு முறையும் மேலும் மேலுமென வெறி எழுந்துகொண்டிருந்தது. முதலில் அது சினமும் வெறியும் கொண்டதாக இருந்தது. பின்னர் அது களியாட்டும் கள்மயக்கும் நிறைந்ததாக மாறியது. பித்தெடுத்த முகங்கள் தன்னைச் சுற்றி கொந்தளிப்பதை பூரிசிரவஸ் பார்த்தான். நெஞ்சில் கைகளைக் கட்டியபடி வெறித்து நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

வஞ்சின உரைகள் முடிந்ததும் துரியோதனன் எழுந்து “அவையோரே, நாளை கொற்றவை அன்னைக்கு பூசனை முடித்து மறுநாள் புலரியில் நாம் கிளம்புகிறோம். அஸ்தினபுரிக்குச் சுற்றும் அறுபத்திஏழு இடங்களிலாக நிலைகொண்டுள்ள ஷத்ரியப் படைகள் அனைத்தும் திரண்டு குருக்ஷேத்திரத்திற்கு செல்லட்டும். அது நம் அறப்பெருங்களம். அங்கு நம் உயிரை வைத்தாடுவோம். நம் உடனாடுக குலதெய்வங்கள்! அங்கிருந்தெழுக என்றும் இந்நிலத்தில் திகழவிருக்கும் பெருநெறிகள்! அருள்க தெய்வங்கள்!” என்றான்.

“ஆம்! ஆம்!” என்று கூடியிருந்த அனைவரும் தங்கள் படைக்கலங்களைத் தூக்கி வாழ்த்துரைத்தனர். கொம்பொலி எழ அவைக்கு வெளியே இடைநாழியில் நிறைந்திருந்த இசைச்சூதர்கள் தங்கள் கலங்களை முழக்கத் தொடங்கினர். பாய்ந்தோடும் புரவியின் குளம்புகளின் விசையுடன் எழுந்த தாளம் அனைவரின் நரம்புகளையும் புடைக்க வைத்தது. மலைச்சரிவொன்றில் வாளை வீசியபடி வெற்றிவேல் வீரவேல் என்று பாய்ந்து எதிரியை நோக்கிச் செல்லும் உணர்வை பூரிசிரவஸ் அடைந்தான்.

அவைமுற்றத்தில் மாடத்தில் அமர்ந்திருந்த பெருமுரசு முழங்கியது. அதைக் கேட்டு அஸ்தினபுரியெங்கும் முரசுகள் முழங்கலாயின. முரசொலிகள் ஒன்றிலொன்று தொடுத்துக்கொண்டு நெடுந்தொலைவுக்கு அகன்று செல்வதை அவன் செவிகளால் கேட்டான். பின் கற்பனையில் அறுபத்திஏழு படைநிலைகளிலும் போர் முரசு ஒலிப்பதை அறிந்தான். அலையிலிருந்து அலையென கொந்தளிப்பு படைப்பிரிவுகள் வழியாக கடந்து சென்றது. முரசொலியினூடாக அப்படைப்பிரிவுகள் அனைத்தும் ஒரு சரடில் மணிகளென கோக்கப்பட்டன. பதினொரு அக்ஷௌகிணி படைகள்! பாரதவர்ஷத்தில் அதற்கிணையான பெரும்படை எழுந்ததில்லை. பல லட்சம் தொண்டைகளிலிருந்து “வெற்றிவேல்! வீரவேல்!” என்ற போர்க்குரல் எழுந்தது. வாள்களையும் கேடயங்களையும் தூக்கி வீசி போர்க்குரல் எழுப்பினர் வீரர். விண்ணில் எழுந்து நிறைந்திருந்தது குருதியாலன்றி பிறிதொன்றாலும் அடங்காத வெறி.