செந்நா வேங்கை - 30
பூரிசிரவஸ் இடைநாழியினூடாக செல்கையில் சிற்றமைச்சர் மனோதரர் எதிர்பட்டார். “கனகர் எங்கே?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “பெருவைதிகர்களை அழைப்பதற்காக சென்றிருக்கிறார். பேரவையில் தென்னெரி எழுப்பப்படவேண்டும் என்றும், சிறு வேள்வி ஒன்று நடத்தப்பட வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறார்” என்றார் மனோதரர். அது எதற்கு என பூரிசிரவஸ் சொல்வதிலிருந்து உய்த்தறிய அவர் விழைவது தெரிந்தது. பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லாமல் நின்றிருக்க “இங்கிருப்பவர்கள் அவைமுறைமைப்படி வாழ்த்துரைக்கும் எளிய வைதிகர்கள். வேள்விக்குரிய வைதிகர்கள் அல்ல. அவர்களை முறைப்படி அரிசியும் மலரும் பொன்னுடன் அளித்து அரசகுடியினர் ஒருவர் அழைக்கவேண்டும். அமைச்சர் கனகர் இளவரசர் துச்சகருடன் சென்றிருக்கிறார்” என்றார்.
பூரிசிரவஸ் அதற்குள் முடிவெடுத்தான், அத்தருணத்தில் நகருக்குள் சென்று பால்ஹிகரை திரும்ப அழைத்து வருவது வீண். அதற்கு படைத்தலைவரிடமே ஆணை அனுப்பிவிட்டு மீண்டும் அவைக்குச் செல்வதே நன்று. இது வரலாற்றுத் தருணம். அதில் தான் உடன் இருக்க வேண்டுமென்ற விழைவே தன்னுள் முதன்மையாக இருக்கிறது என்பதை உணர்ந்தபோது அவன் உள்ளத்தில் அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்தது. இயல்பாக நடந்து களிற்று முற்றத்தை அடைந்தான். அங்கிருந்த துணைப்படைத்தலைவன் சக்ரநாபன் விரைந்து அருகே வந்து பணிந்தான். “பேரரசரின் ஆணை இது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக பால்ஹிக மூதாதை அரண்மனைக்கு திரும்ப வேண்டும். அவர் அவைக்கு முன் தோன்றவேண்டும் என்பது பேரரசரின் விழைவு. செல்க!” என்றான். அவன் தலைவணங்கினான். “அவர் களிற்று முற்றத்திற்கு வந்ததும் என்னிடம் வந்து கூறுக! நான் வந்து அழைத்துச் செல்கிறேன். அவரிடம் இங்கு வருவதாக சொல்லவேண்டாம், மறுக்கக்கூடும். மேலும் எங்கோ செல்வதாகச் சொல்லி சுழன்று அவைமுகப்புக்கே வந்தால் போதும்” என்றபின் மீண்டும் இடைநாழியினூடாக நடந்தான்.
அனைத்துச் சிற்றமைச்சர்களும் பரபரப்புடனும் பதற்றத்துடனும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. சிறுவாயிலினூடாக அவைக்குள் நுழைந்தான். எதிரே வந்த அவையமைச்சர் சுநீதரிடம் “பால்ஹிக மூதாதையிடம் அவைக்குத் திரும்பும்படி தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று மட்டும் பேரரசரிடம் சொல்க!” என்றபின் அரசர்கள் நடுவே குனிந்து சென்று சலனின் அருகே அமர்ந்தான். சலன் திரும்பிப்பார்த்து “எங்கிருந்தாய்?” என்றான். “பேரரசர் சிறிய பணியொன்றை அளித்தார்” என்றான். “இப்போது அவையின் உளநிலையே மாறிவிட்டது” என்று சலன் சொன்னான். “இங்கு போர் அறைகூவல் விடுக்கப்படும்போது பெரும்பாலானவர்களின் உள்ளம் ஆழத்தில் எங்கோ சற்று நிலையின்மை கொண்டிருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் அந்த நிறைவின்மை எனக்கும் இருந்தது. இது எப்படி நோக்கினாலும் ஒரு எளிய குடிப்போர். உளந்திறந்து பேசி முடித்திருக்கப்படவேண்டிய முடிப்பூசல். இருபுறமும் பாரதவர்ஷத்தின் அனைத்து அரசகுடிகளும் தொல்குடிகளும் திரண்டு நின்று போரிட்டு முற்றழிவை நிகழ்த்தி எய்தவேண்டியது ஏதுமில்லை.”
“போருக்குப் பின் எவர் வென்றாலும் தோற்றாலும் இங்குள்ள அரசுச் சூழல் எப்படியிருக்குமென்று எவராலும் இன்று சொல்ல முடியாது. மெய்யாக சொல்லப்போனால் இப்போரில் ஈடுபடும் அனைவருமே ஆற்றல் குன்றி அழிய, இப்போருக்கு அப்பாலிருக்கும் அறியா தொல்குடியினர் படைகொண்டுவந்து பாரதவர்ஷம் முழுமையும் கைபற்றி ஆளக்கூடுமென்று நான் அஞ்சுகிறேன். நேற்று மாலை ஊட்டறையில் ஷத்ரியர்களிடமும் சிற்றரசர்களிடமும் பேசியபோது அனைவருமே அந்த அச்சத்தை விரைந்து பகிர்ந்துகொண்டனர். ஏனெனில் ஏதோ ஒருவகையில் அனைவருமே அதை எண்ணிக்கொண்டிருந்தனர். போருக்குப் பின் எவருமே முந்தைய ஆற்றலுடன் எழப்போவதில்லை. ஆகவே இன்று போருக்கான அரச வஞ்சினம் உரைக்கப்படுகையில் செயற்கையாக உந்தி ஊதி எழுப்பி நிறுத்தப்படும் உளவிசையே இங்கு வெளிப்படும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் பிதாமகர் தோன்றியதுமே அனைத்தும் மாறிவிட்டது. அவர் பொருட்டு உயிர்துறப்பதும் பெருமை என்று அனைவருமே எண்ணத்தலைப்பட்டுள்ளனர்” என்றான் சலன்.
பூரிசிரவஸ் பெருமூச்சுவிட்டான். “என்ன?” என்று சலன் கேட்டான். “ஒன்றுமில்லை” என்று பூரிசிரவஸ் சொன்னான். “நீ பெருமூச்சுவிட்டதைப் பார்த்தால் அரசரின் மணிமுடியுரிமை மேல் ஏதோ இடர் எழுகிறது என்று தோன்றுகிறது” என்றான் சலன். பூரிசிரவஸ் திரும்பிப் பார்த்தான். சலன் எத்தனை கூர்மையாக தன் உள்ளத்தை தொடர்கிறான் என்று எண்ணியதும் பிறிதெங்கிருந்தோ ஓர் குரலென தனியொரு எண்ணம் தோன்றியது. குருக்ஷேத்திரப் போரில் தான் இறந்தால்கூட பால்ஹிக நகரிக்கு பேரரசனாக சலன் திகழமுடியும். போருக்குப் பிந்தைய சூழல் எதுவாக இருந்தாலும் அதில் பால்ஹிகபுரியை அவன் நடத்திக்கொண்டு செல்ல முடியும். அது நிறைவையும் ஏக்கத்தையும் அளித்தது.
“மூத்தவரே, பேரரசர் திருதராஷ்டிரர் இம்மணிமுடிக்குரியவர் பால்ஹிகரே என்று எண்ணுகிறார். முடியை அவருக்கே திருப்பி அளித்தால் பாரதவர்ஷத்தில் போர் நின்றுவிடுமென்று திட்டமிடுகிறார்” என்றான். சலன் புன்னகைத்து “ஆம், சிறந்த எண்ணம். எனக்குக்கூட அவ்வாறு தோன்றவில்லை. குலமுறைப்படி மணிமுடிக்குரியவர் பால்ஹிகரே. அவர் மணிமுடிசூடுவதை எவர் எதிர்க்கப்போகிறார்கள்?” என்றான். பூரிசிரவஸ் “ஒருபோதும் முடிதுறப்பதை துரியோதனர் ஏற்கமாட்டார்” என்றான்.
“ஏற்காமலிருக்க அவரால் இயலாது. முரண்பட்டால் தனது அணுக்கச் சிறுபடையினருடன் பிரிந்து சென்று ஒரு சிறு பூசலை மட்டும் இவரால் நிகழ்த்த முடியும். பார்த்தாயல்லவா இங்கிருக்கும் அரசர்கள் அனைவரும் பால்ஹிகர் காலடியில் தங்கள் தலைகளை வைத்துவிட்டார்கள்?” என்றான் சலன். “நன்று நிகழ்ந்தது. நீ அவரை மலைமீதிருந்து அழைத்து வந்தபோது ஏன் இந்த வீண் வேலை என்று எண்ணினேன். இங்கு இவ்வாறு ஒரு நன்று நிகழ்வதன் பொருட்டுதான் அது நிகழ்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது. விண்ணில் நிலைகொண்டிருந்த மூதாதையர்கள்தான் மலையுச்சியிலிருந்த அவரை கீழிறக்கியிருக்கிறார்கள்.”
“அதையேதான் திருதராஷ்டிரப் பேரரசரும் சொன்னார்” என்றான் பூரிசிரவஸ். “என் உள்ளத்திலிருந்து எடையொன்று அகன்றது, இளையோனே. வெறும் அரசியல் நலனுக்காக பொருந்தாப் போர் ஒன்றில் படையுடன் வந்து சேர்ந்துகொண்டிருக்கிறோம் என்ற உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. இப்போர் தவிர்க்கப்படுமெனில் அதில் பேருவகை கொள்பவர்களில் ஒருவனாக நானும் இருப்பேன்” என்றான் சலன். பூரிசிரவஸ் “தவிர்க்கப்படுமெனில் நன்று” என்றான். “ஏன்?” என்று சலன் கேட்டான். “தெரியவில்லை. தவிர்க்கப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளுமே எண்ணி நோக்குகையில் கண்ணில் படுகின்றன. ஆனால் பிறிதொரு நோக்கில் சென்ற பல ஆண்டுகளாக நிகழ்வன ஒவ்வொன்றும் ஒவ்வொருவரையும் அப்போரை நோக்கியே செலுத்திக்கொண்டிருந்தது. அது முன்னரே தெய்வங்களால் முடிவெடுக்கப்பட்டுவிட்டது. அதுவன்றி பிறிதேதும் நிகழ வாய்ப்பே இல்லை. தீட்டப்பட்ட வாள் குருதியை அடையும் என்பார்கள்” என்றான்.
சலன் சோர்வுடன் “ஆம், நீ சொல்லும்போது அதுவும் சரிதான் என்றே எனக்குத் தோன்றுகிறது” என்றான். பூரிசிரவஸ் “மூத்தவரே, பெருநிகழ்வுகள் மலையுச்சிப் பெரும்பாறை உருண்டு கீழிறங்குவதுபோல. தொடங்கிய பின் அனைத்துத் தடைகளையும் நொறுக்கியபடி சென்று கொண்டேதான் இருக்கும்” என்றான். சலன் மறுமொழி சொல்லாமல் தலையசைத்த பின் கைகளை மார்பில் கோட்டியபடி அவையை நோக்கிக்கொண்டிருந்தான். பூரிசிரவஸும் பெருமூச்சுடன் உடலை எளிதாக்கி அவையில் விழிசெலுத்தினான்.
அவையில் அரசர்களும் குடித்தலைவர்களும் நிரந்து அமர்ந்துவிட்டிருந்தனர். பீஷ்மரும் கிருபரும் துரோணரும் ஒன்றாக அவைக்குள் நுழைந்தனர். ஒவ்வொரு முகமும் மலர்ந்திருப்பதை பூரிசிரவஸ் பார்த்தான். துரோணர் ஏதோ சொன்னதற்கு பீஷ்மர் புன்னகைத்து தலையசைக்க கிருபர் வெடித்து நகைத்தார். ஜலகந்தன் அவர்களை அழைத்துச் சென்று பீடத்தில் அமரவைத்தான். சகுனி வந்து தன் இடத்தில் அமர இரண்டு ஏவலர்கள் மூங்கில் தூளியில் கணிகரை தூக்கிவந்து அவருடைய மெத்தைமேல் இறக்கி படுக்க வைத்தனர். கௌரவர்கள் வெளியே அரசர்கள் எவரும் எஞ்சவில்லை என்பதை உறுதி செய்த பின் தாங்களும் வந்து அவைக்குள் அமர்ந்தனர்.
மேடையில் துரியோதனன் வந்து அமர்ந்த பின் சிற்றமைச்சர் வெளியே சென்று சொல்ல திருதராஷ்டிரர் அவைபுகுந்து தன் பீடத்தில் அமர்ந்தார். பூரிசிரவஸ் திருதராஷ்டிரரின் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அப்போதுதான் ஒன்றை அவன் உணர்ந்தான். அவரருகே இருக்கும்போது உடலசைவுகளினூடாகவே அவரது எண்ணத்தை புரிந்துகொண்டிருந்தான். தொலைவிலிருந்து நோக்குகையில் முகம் எவ்வுணர்வையும் வெளிக்காட்டாததாக இருந்தது. விழியின்மையே அம்முகத்தில் உணர்வுகளை அறியமுடியாததாக ஆக்கியது. சற்றே தலை திருப்பி, விழி என அமைந்த தசைக்குமிழிகள் உருள, வாயை இறுக்கி தாடையை முன் நீட்டியிருந்தார். எதையோ கவ்விப் பற்றியிருப்பதுபோல் இருந்தது.
சிம்மவக்த்ரரால் அழைத்துவரப்பட்டவராக பால்ஹிகர் உள்ளே நுழைந்தபோது பூரிசிரவஸ் திகைப்புடன் சலனிடம் “நான் அவரை அழைத்துவரும்படி சொல்லவில்லை” என்றான். “அது கனகரின் செயல் என நினைக்கிறேன். அவர் பதற்றத்தில் அனைத்தையும் முந்தியே செய்கிறார்” என்றான் சலன். பால்ஹிகர் அவருக்கென இடப்பட்டிருந்த ஹஸ்தியின் அரியணையில் அமர்ந்து தன் இடையிலிருந்து குத்துவாள் ஒன்றை எடுத்து அதன் செதுக்கு வேலைகளை கூர்ந்து நோக்கினார். துரியோதனனிடம் கனகர் ஏதோ சொன்னபோது ஏறிட்டு கூர்ந்து நோக்கிவிட்டு மீண்டும் குறுவாளை வெவ்வேறு கோணத்தில் திருப்பி நோக்கலானார்.
நிமித்திகன் மேடையேறி அவை மீண்டும் தொடங்கவிருப்பதை அறிவித்தான். அவை முழுமையான உளக்கிளர்ச்சியுடன் இருந்ததை உணரமுடிந்தது. அரசரின் வெறிகொப்பளிக்கும் போர்வஞ்சினத்தை, அதைத் தொடர்ந்து படைத்தலைமை அறிவிப்பை மட்டுமே அது எதிர்பார்த்திருந்தது. அக்கணமே அனைத்துத் திசைகளிலும் கரையுடைக்கும் ஏரியெனக் கிளம்ப சித்தமாக இருந்தது. அதன் உள்ளத்தை செவிகளாலேயே உணரமுடிந்தது. பலமுறை நிமித்திகன் கைவீசி அமைதி கோரினாலும்கூட அவை அடங்கவில்லை. அலைகளென வந்து தன்னைச் சூழ்ந்துகொண்டிருந்த ஓசையில் மீண்டும் மீண்டும் பிதாமகரென்ற சொல்லே ஒலிப்பதை பூரிசிரவஸ் கேட்டான். அல்லது அது உளமயக்கா என வியந்தான்.
நிமித்திகன் உரத்த குரலில் “அவையீரே, இன்று இந்த அவையில் அஸ்தினபுரியின் தொல்குடி மரபின் அடையாளமாக விண்வாழும் மூதாதைநிரைகளில் ஒருவராக விளங்கும் பால்ஹிக பிதாமகர் மலையிறங்கி வந்து அரியணை அமர்ந்து நம்மை வாழ்த்தினார். இந்த மண்ணும் முடியும் கொடியும் கோலும் நம் அரசருக்குரியதென ஐயம் திரிபற அறிவித்தார். இதற்கு எதிராக எழும் ஒவ்வொரு சொல்லும் மூதாதை மீதான வசை, தெய்வப்பிழை. அதற்கெதிராக வாள் கொண்டெழுவது நம் கடமை. மீறுபவர்களின் குருதிமேல் நின்றாடுவது நம் உரிமை. வெல்க அஸ்தினபுரி! வெல்க குருகுலம்! வெல்க குடியறம் பேண எழுந்த படைப்பிரிவுகள்! வெல்க அவற்றை ஆளும் அரசர்கள்! வெல்க அறத்தின் கொடி!” என்று சொல்லி தலைவணங்கி விலகினான்.
துரியோதனன் தான் சொன்னதை சகுனியிடம் கூறியிருப்பானா என்று பூரிசிரவஸ் ஐயம் கொண்டான். சகுனியின் முகத்தை பார்த்தபோது எந்த மாற்றமும் தெரியவில்லை. எத்தனை திறமையுடன் முகத்தை வைத்துக்கொண்டிருந்தாலும்கூட அதை மறைக்க முடியாது என்று அவனுக்குத் தோன்றியது. அத்துடன் சகுனி முன்பிருந்த உளமசையா நிலையில் இப்போதில்லை என்றும் அவன் அறிந்திருந்தான். போர் அணுகுந்தோறும் அவர் பதற்றமும் நடுக்கமும் கொண்டவராக மாறிவிட்டிருந்தார். ஒவ்வொரு நாளுமென முதுமை அணுகி அவரை சூழ்ந்துகொண்டிருந்தது. துரியோதனன் நிகர் நிலையும் அழகும் கொண்டு தெய்வ உருவென மாறுந்தோறும் சகுனி வெளிறி தேய்ந்து மறைந்துகொண்டிருந்தார்.
துரியோதனன் எழுந்து வஞ்சினம் உரைக்கும் பொருட்டு அவை காத்து நின்றது. கைகூப்பியபடி அவன் எழுந்ததுமே அவனையும் குருகுலத்தையும் வாழ்த்தி அவை பேரோசையிட்டு கொந்தளித்தது. “குருகுலத்தோன் வெல்க! மண்வந்த ஹஸ்தி வாழ்க! அஸ்தினபுரி வெல்க! அமுதகலம் வெல்க! ஷத்ரியப்பெருங்கூட்டு வெல்க!” தலைக்குமேல் கைகூப்பி அவன் வணங்கியதும் கொம்புகள் முழங்க அவை அமைதியடைந்தது. அவன் வஞ்சினம் உரைப்பதற்குள் திருதராஷ்டிரர் எழுந்து மாற்றுச் சொல் உரைப்பார் என்று பூரிசிரவஸ் எதிர்பார்த்தான். ஆனால் திருதராஷ்டிரர் தலையை உருட்டியபடி தன் இருக்கையில் நிலையற்றவர்போல் அமர்ந்திருந்தார்.
துரியோதனன் “அவையீரே, ஷத்ரியகுடியின் பெருமைமிக்க அரசர்களே, தொல்நிலம் ஆளும் குடித்தலைவர்களே, படைக்கலம் ஏந்தி இங்கமர்ந்திருக்கும் என் போர்த்துணைவர்களே, என் குருதி பெருகி விரிந்த உடன்பிறந்தவர்களே, இது தெய்வங்களும் மூதாதையரும் அருளிய பொற்தருணம். புகழும் பெருமையும் நமக்கென கனிந்து விண்ணில் திரண்டு நின்றிருக்கும் பொழுது. இத்தருணத்தில் நான் உரைப்பது ஒன்றே. நான் இங்கு போர்க்கோலம் பூண்டு நின்றிருப்பது நிலத்தின் பொருட்டோ முடியின் பொருட்டோ என் கொடிவழியினரின் பொருட்டோ அல்ல என்று பசப்புரைக்கப்போவதில்லை. ஆம், அவற்றின் பொருட்டே! நாம் அனைவரும் போர்கொண்டெழுவது அவற்றின் பொருட்டே! ஏனெனில் நான் அரசன், ஷத்ரிய குலத்தவன்” என்றான். அவையினர் “ஆம்! ஆம்!” என்று கூவினர்.
“மண்ணும் முடியும் கொடிவழியுமே மெய்யான ஷத்ரியர்களின் இலக்கென்று அமையவேண்டும். அரசர்களே, சிறந்த ஷத்ரியன் என்பவன் யார்? தன் ஆற்றலால் நிலம் வெல்பவன். தன் திறமையால் அந்நிலத்தை காப்பவன். தந்தையென்றமைந்து ஐவகைக்குடியினரையும் பேணி வளம்பெறச் செய்பவன். ஆபுரப்பவன், அந்தணர் பணிபவன். முனிவர் சொல் கொள்பவன். மூதாதையர் வாழ்த்தும் தெய்வங்களின் அருளும் பெற்று கோலேந்தி நின்றிருப்பவன். இங்கிருக்கும் அவையினரில் எவரேனும் ஒருவர் எழுந்து இந்த ஷத்ரிய அறங்களில் ஒன்றிலேனும் ஓர் அணுவேனும் நான் பிழை செய்துள்ளேன் என்று உரைப்பீரெனில் எந்தைமேல், தாய்மேல், என் குடிவழியினரின்மேல் ஆணையிட்டுரைக்கிறேன்; இக்கணமே இச்செங்கோலை இங்கு வைத்துவிட்டு அவை நீங்குகிறேன்.”
அவை அமைதியாக விழிகள் விரிந்திருக்க சூழ்ந்து அமர்ந்திருந்தது. துரியோதனன் தொடர்ந்தான் “பிறகு எதன் பொருட்டு என்னை இவ்வரியணையிலிருந்து நீங்கச் சொல்கிறார்கள்? பாரதவர்ஷத்தில் எந்த ஷத்ரியக் குடியிலும் இல்லாத ஒரு நெறியின் பொருட்டு. என்னைவிட ஓரிரு மாதங்கள் முன்னரே பாண்டுவின் மைந்தன் பிறந்திருக்கிறான் என்பதனால் எந்தை பதினெட்டாண்டுகளுக்கு மட்டுமென கடன் கொடுத்த நாட்டை தங்களுக்கும் தங்கள் கொடிவழியினருக்கும் என வைத்துக்கொள்ள வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்.” அவை வெறுப்பும் ஏளனமுமாக கூச்சலிட ஒப்பி காத்திருந்து அதன் அலை அடங்கியதும் துரியோதனன் தொடர்ந்தான்.
“பாதி மண் கேட்டனர். ஐந்து ஊர் கேட்டனர். ஐந்து இல்லம் கேட்டனர். ஷத்ரியனாகிய நான் எனது நாட்டின் ஒருதுளி மண்ணைக்கூட அளிக்கமுடியாது என்றேன். ஏனென்றால் ஒரு பிடி மண்ணை அளிப்பதுகூட அவர்களுக்குரிய மண்ணுரிமையை ஏற்பதுதான். அந்த மண்ணில் அவர்கள் வேள்விக்காவலர் என்றமர்ந்து எரி எழுப்பி அவியிட்டு தேவர்களை வரவழைத்தால் அவர்களை அரசரென்றே விண்ணகம் கருதும். அவர்களின் கொடிவழியினருக்கு மண்ணும் முடியும் கொடியும் அமையவேண்டுமென்று அவர்கள் வேள்வி இயற்றினால் அதற்கு தேவர்கள் அருளியாகவேண்டும். அரசர்களே, நீங்கள் அறியாதது அல்ல. அரசன் தன் நிலத்தில் பிறர் அரியணையிட்டு முடிசூடுவதையோ வேள்விக்காவலனாக கோல்கொண்டமர்வதையோ அனுமதிக்கலாகாதென்றே வேதநெறி ஆணையிடுகிறது. தன் நிலத்தில் ஒரு சிறு பகுதியை அளிப்பவன் அந்நிலத்தின் மீதுள்ள முழுதுரிமையை விட்டுக்கொடுப்பவன். உங்கள் அன்னையின் கையை வெட்டி வளர்ப்பு விலங்கிற்கு உணவூட்ட ஒப்புவீர்களா? நிலத்தை அன்னையென்கின்றன நூல்கள். தன் துணைவியில் பிறன் காமம் கொண்டாட ஒப்புவோன் எவன்? அரசுரிமையை துணைவி என்கின்றனர் கவிஞர்.”
அவையின் கொந்தளிப்பையும் அமைவையும் மீளெழுகையையும் பூரிசிரவஸ் நோக்கிக்கொண்டிருந்தான். ஒற்றைப்பேருரு என எழுந்து கூச்சலிட்ட அவையுடன் தனிப்பட்ட உரையாடலில் நின்றிருப்பவன் போலிருந்தான் துரியோதனன். அதன் முழக்கத்தின் எழுச்சியமைவுகளில் அவன் எழுந்தமைந்து சென்றான். “அஸ்தினபுரியை நான் என் மண்ணெனக் கருதுவது உடைமையாக அல்ல, உறவாக அல்ல, என் மூதாதை தெய்வமாக. இது எனக்கு முற்றுரிமைகொண்ட நிலம். அதில் ஒருபிடி மண்ணைக்கூட எவரிடமும் என்னால் பகிர்ந்துகொள்ள முடியாது. அவ்வாறு பிறருக்களிப்பேனெனில் ஒவ்வொரு நாளும் இவ்வரியணையில் அமர்ந்து வருந்தி உயிர் துறப்பேன். என் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளாத அரசர்கள் எவரேனும் இங்குள்ளனரா? சொல்க, இவ்வாறு எண்ணாத ஷத்ரியர் எவரேனும் உள்ளனரா இங்கு?”
அரசர்கள் அனைவரும் தங்கள் கைக்கோல்களையும் படைக்கலங்களையும் தூக்கி “இல்லை! இல்லை!” என்று முழக்கமிட்டனர். “மண்ணுக்குப் பொருதுவோம்! மண்ணுக்கென வீழ்வோம்!” என்று திரிகர்த்த நாட்டரசர் சுசர்மர் கூவினார். “ஆம்! ஆம்!” என்று அவை கொந்தளித்தது. துரியோதனன் மேலும் உரத்த குரலில் “நான் சிறந்த ஆட்சியாளன் என்பது என் செங்கோலால் புரக்கப்படும் ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு உயிருக்கும் தெரியும். என் பலியேற்கும் ஒவ்வொரு தெய்வமும் அதை ஏற்கும். இதிலொரு பகுதியை பகுத்து பிறிதொருவருக்கு அளிப்பேனெனில் அவர்களுக்கு நான் அறப்பிழை செய்தவனாவேன். நாளை கோழையும் அறக்குழப்பம் மிகுந்தவனுமாகிய யுதிஷ்டிரனால் இந்நிலம் துயர்படுமெனில் என் குடிகளின் பொருட்டு நான் துயர் கொள்வேன். தன் மைந்தரில் ஒருவரை பிறருக்களிக்கும் எவரேனும் இங்குள்ளனரா என்று கேட்க விழைகிறேன்” என்றான்.
“இல்லை! இல்லை!” என்று அவை கூச்சலிட்டது. உசிநார மன்னர் சிபி எழுந்து தன் கோலைத் தூக்கி வீசிப்பிடித்து “ஒரு பரு மண் அளிப்பவன் அரசன் அல்ல, பாங்கன்! அவன் மூச்சுக்காற்றும் ஷத்ரியருக்கு இழிந்தது” என்று கூச்சலிட்டார். “ஆம், அஸ்தினபுரி எனக்குரியது. உயிர் வாழும் காலம் வரைக்கும் அது எனக்குரியதே. அதை தனக்குரியதென எண்ணுவோன் என் எதிரி. அவன் குருதிகாண்பதே என் கடமை!” அவையினர் வெறிகொண்டு கூச்சலிட்டனர். கைகளை விரித்து நடமிட்டனர். உச்சகட்ட உணர்ச்சிகளை நிலைகொண்ட உடலால் வெளிப்படுத்த முடிவதில்லை. பேச்சென கூறமுடிவதில்லை. துரியோதனன் பேச்சு வெறியாட்டெழும் பூசகனின் பாடல்போல இசைமை கொண்டிருந்தது. தசைத்திரள் அலைபுரள கைகளை வீசி அவன் அவைமேடையில் முன்னும்பின்னும் ஆடியும் திரும்பியும் சொன்னது நடனமெனத் தோன்றியது.
பூரிசிரவஸ் பால்ஹிகரை நோக்கிக்கொண்டிருந்தான். அவர் தனது பெரிய கைகளை மொத்த மடிமேலும் வைத்து அவையிலிருந்தவர்களை மாறி மாறி சிறுவனுக்குரிய விந்தை நிறைந்த விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தார். எவராவது எழுந்து உரக்க பேசினால் ஆர்வத்துடன் உடலை முன்னகர்த்தி அவனை பார்த்தார். அவர்கள் விந்தையான தலையணியோ மாறுபட்ட உடைகளோ கொண்டிருந்தால் அவரை அறியாமலேயே வலக்கை சுட்டுவிரலால் அவர்களை சுட்டிக்காட்டி புன்னகைத்தார்.
“எழுக போர்! ஆம், இது மண்ணுக்கான போர். ஏனென்றால் மண்ணாள்வதே அரசர்களின் முதலறம். பிற சொற்களனைத்தும் பசப்பே. ஷத்ரியர்களே, இப்பாரதவர்ஷம் நமக்குரியது. ஏனென்றால் இதை உழுதுபண்படுத்தி விதைத்துப் புரந்தவர் நாம். அறுவடை செய்யவேண்டியதும் நாமே. கதிர்க்களத்தில் வந்துகுவியும் பறவைகளை நம் கவண்கல்லால் ஓட்டுவோம். நம் முரசொலி கேட்டு அவை சிதறிப்பறக்கட்டும். நாம் எந்தக் கொள்கையும் பேசவேண்டியதில்லை. இந்த மண்ணை வென்று முழுதாளவும் நம் கொடிவழிகளுக்கு அளித்துச்செல்லவும்தான் நாம் படைக்கலம் கொள்கிறோம். நம் உரிமையைப் பழிக்கும் பொய்வேதங்களை சொல்லொடு சொல் நில்லாது அழிப்போம். அதை ஏந்திவருவோர் புரங்களை கல்லொடு கல் நில்லாது சிதைப்போம். அதைச் சொல்லி எழுவோர் தலைகொய்து குருதியாடுவோம்! வெற்றிவேல்! வீரவேல்!”
அவை “வெற்றிவேல்! வீரவேல்!” என்று வெறிக்கூத்தாடியது. பூரிசிரவஸ் திகைத்தவனைப்போல தன்னைச் சூழ்ந்து அலையடித்த உடல்களை கண்டான். அரசர்களும் குடித்தலைவர்களும் வெறும் துள்ளும் உடல்களாக, வெறித்த விழிகளாக, புடைத்த தொண்டைகளாக, பற்களாக மாறிவிட்டிருந்தனர். கைகளை விரித்து வீசி மூன்று புறமும் திரும்பி துரியோதனன் அந்த வெறியை மீட்டினான். “எழுக அனல்! அனலென எழுக நம் குருதி! எழுக நம் படைக்கலங்கள்! நாகநாக்கென, சிம்மவாயென, பருந்துகிர் என எழுக நம் கொலைக்கலங்கள்! குருதியாடுவோம். இனி நம் நீராட்டு கொழுங்குருதியில். குருதி! குருதியன்றி பிறிதெதிலும் அமையமாட்டோம்! வெற்றிவேல்! வீரவேல்!”
துரியோதனன் படைவஞ்சினம் உரைத்து அமர்ந்ததும்தான் பூரிசிரவஸ் திருதராஷ்டிரரை நினைவுகூர்ந்தான். திகைப்புடன் திரும்பி அவரை நோக்கினான். சூழ்ந்தொலிக்கும் போர்க்கூச்சலுக்கேற்ப அவரும் கைகளை வீசியபடி தெய்வமெழுந்தவர்போல ஆடிக்கொண்டிருந்தார். பீஷ்மரும் துரோணரும் கிருபரும்கூட விழிகள் ஒளிர முகம் உணர்வெழுச்சியால் அலைவுகொள்ள கைகளை வீசி ஆடிக்கொண்டிருந்தனர். அந்த அவையில் கணிகர் மட்டுமே முற்றாக பிறன் என எங்கோ விழிநட்டு அமர்ந்திருந்தார். அந்த அசைவுகளினூடாகச் சென்று அவருடைய அசைவின்மையை தொட்ட விழிகள் திடுக்கிட்டன. பூரிசிரவஸ் நோக்கை விலக்கிக்கொண்டான்.
நிமித்திகன் அறிவிப்பு மேடையில் எழுந்து “அவையோரே, படைகொண்டெழுந்த அரசர்களே, பெருங்குடியினரே” என்று கூவினான். பலமுறை கூவி கொம்புகளும் மீள மீள முழங்கிய பின்னரே அவை அமைதியாயிற்று. “அவையோரே, இனி நம் படைநகர்வுகளையும் படைத்தலைமையையும் குறித்து எண்ணுவோம். போர்விரும்பும் விண்ணகத் தெய்வங்களும் குருதிவிடாய்கொண்ட ஆழுலகத் தெய்வங்களும் இங்கு சூழ்க!” என்றான். பூரிசிரவஸ் பெருமூச்சுடன் மெல்ல கைகளை நீட்டினான். சலன் “ஒரு பெரும்பித்துக்குள் சென்று மீண்டது போலுள்ளது, இளையோனே” என்றான். பூரிசிரவஸ் விழிகளை மூடிக்கொண்டான். குருதி நுரைத்தடங்க, உடல் வியர்வைகொண்டு குளிர, மெல்ல நனைந்த நிலத்தில் விழும் துணி என படிந்துகொண்டிருந்தான்.
அவையில் ஒவ்வொருவராக எழுந்து படைநகர்வு குறித்த தங்கள் கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தனர். பெரும்பாலான எண்ணங்கள் முன்னரே விரிவாக பேசப்பட்டுவிட்டிருந்தன. முற்றுமுடிவு எடுக்கப்பட்டு ஓலை வழியாக அறிவிக்கவும் பட்டுவிட்டிருந்தன. ஆயினும் ஒரு போர் புறப்பாட்டுக்கான அவையில் தாங்களும் எழுந்து ஏதேனும் சொல்ல வேண்டுமென அவர்கள் விழைந்தனர். அனைத்து கருத்துக்களும் ஒரே உணர்வு கொண்டிருந்தன. “எழுந்து சென்று முழுவிசையுடன் தாக்குவோம், முதல் அடியிலேயே வெல்வோம். தயங்குவதில் பொருளில்லை” என்றே அவை முடிந்தன. முன்னரே பலமுறை கேட்டிருந்தும்கூட ஒவ்வொருவரும் அதை கேட்டு கொந்தளித்தனர். கைகளையும் படைக்கலங்களையும் குடிக்கோல்களையும் தூக்கி ஆரவாரம் செய்தனர்.
அவர்களுக்கு அச்சொற்கள் மேலும் மேலும் இனிதாக இருந்தன. அவர்கள் தங்களுக்குள் சொல்லிச் சொல்லி பெருக்கிக்கொண்டவை அவை. மாளவ அரசர் இந்திரசேனர் எழுந்து வலக்கை சுட்டுவிரலை தலைக்குமேல் தூக்கி “நான் சொல்வது ஒன்றே. நாம் முதல் நாள், முதல் தாக்குதலிலேயே வெல்லவிருப்பது நாமே என நிறுவியாகவேண்டும். சற்றே தாக்கி விளைவு நோக்கி சூழ்கை வகுத்து மிகுந்து தாக்கும் முறையொன்றுண்டு. அதுவே போருக்குரியதென்று நூலோர் வகுத்துள்ளனர். இப்போரில் அவ்வழி நமக்குரியதல்ல. ஏனெனில் நாம் மும்மடங்கு படைகொண்டு, நூறுமடங்கு உளவிசை கொண்டு ஆயிரம் மடங்கு நம்பிக்கை கொண்டு களத்தில் இறங்குகிறோம். நமது படைவீரர்கள் வெற்றியன்றி பிறிதெதையும் எவ்வகையிலும் எண்ணாதவர்களாக இருக்கிறார்கள். முதல் அடியிலேயே பாண்டவர்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டோம் என்றால் அது மாளிகையின் அடித்தளத்தை விரிசலிட்டுவிடும். மாளிகை ஓர் உந்துதலுக்கே சரிந்து விழும்” என்றார்.
ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு கோணத்தில் புரிந்துகொண்டனர். அவந்தியின் விந்தர் எழுந்து “நாம் மிகுந்து தாக்குவது நன்று. ஆனால் ஒருவேளை அதற்கடுத்த தாக்குதல் செய்வோமெனில் அது முந்தையதைவிட விசைமிகுந்ததாக இருக்கவேண்டும். இரண்டாவது தாக்குதல் விசை குறைந்ததாக அமையுமெனில் நாம் தணிகிறோம் எனும் எண்ணம் எதிரிகளிடையே உருவாகிவிடக்கூடும். அது அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். ஏனென்றால் வெல்கிறோம் என்ற எண்ணத்தைப்போல களத்தில் கைநீட்டி உதவ வரும் தெய்வம் வேறில்லை என்பார்கள். அதைவிட தோற்கிறோம் என்ற எண்ணம்போல கணம் ஆயிரமெனப் பெருகும் நஞ்சும் பிறிதில்லை” என்றார்.
அவந்தி நாட்டுக்கும் மாளவத்துக்குமான தொன்மையான பூசல்களை உணர்ந்த சகுனி எழுந்து கையமர்த்தி அவர்களை சொல் தடுத்து “ஆம், முதல் விசையிலேயே அவர்களின் அடித்தளத்தை நொறுக்குவோம். மேலும் மேலும் எழுந்து தாக்குவோம். நமது விசை ஒவ்வொரு தாக்குதலுக்கும் மிகுந்தே வரும். ஐயம் தேவையில்லை” என்றார். அவர்கள் மேலும் பேசவிழைய சகுனி அவர்களின் சொற்களை வாழ்த்துவது போன்ற முகத்துடன் அவர்களை அமரவைக்கும் கையசைவை காட்டினார். அவர்கள் வெவ்வேறு குரல்களில் பேசிக்கொண்டே செல்ல அவர் அந்தக் கையசைவை விடாமல் தொடர்ந்து அவர்கள் அமர்ந்ததும் “இந்தப் போரில் படைசூழ்கைகள் முன்னரே வகுக்கப்பட்டிருக்கின்றன. படைசூழ்கை வகுக்கப்படாமல் போருக்கு செல்லமுடியாது. ஆனால் வகுத்த படைசூழ்கையை அவ்வாறே நிறைவேற்றி எப்போரும் நிகழ்த்தப்படுவதும் இல்லை. போர் அங்கு சென்ற பின்னர் ஒவ்வொரு தருணத்தையும் எதிர்கொண்டு தானாகவே உருமாறும் படைசூழ்கைகளால்தான் வெற்றி நோக்கி செல்கிறது. வில் உருகி வாளென்றும் வாள் பெருகி கதையென்றாகும் ஓர் ஆடலே போர் என்று நூல்கள் சொல்கின்றன. நாம் வகுத்த இப்படைசூழ்கை அங்கு சென்று எதிரே நிற்கும் பாண்டவர்களின் படைசூழ்கையை கண்ட பின்னரே இறுதி வடிவத்தை அடையமுடியும். எனவே இங்கு மிகையாக சொல்லெடுப்பதில் பொருளில்லை” என்றார்.
“ஆம், அதைத்தான் நான் கூறவருகிறேன்” என்று கூறியபடி கலிங்க மன்னர் ஸ்ருதாயுஷ் எழுந்தார். “நான் கூறுவது பிறிதில்லை. நாம் பெருகிச் செல்கையில் எண்ணுவதும் இயல்வதும் நாம் நமது மூதாதையர் சொல்லுக்கென்று படைகொண்டு செல்கிறோமென்றே ஆகும். எவருடைய முடியுரிமைக்காகவும் அல்ல. எவரும் நிலம் வென்றமைய வேண்டும், புகழ் ஓங்க வேண்டும் என்பதற்காகவும் அல்ல. நம் ஒவ்வொருவருடைய மூதாதையரும் நம்மை மண்ணில் அமர்த்தியது தங்கள் சொல்லின் ஆற்றலாலேயே” என்றார். அச்சொல் செல்லும் திசை உணர்ந்த சகுனி “ஆம், அச்சொல்லுக்காகவே நாம் படைகொண்டு செல்கிறோம். ஐயம் தேவையில்லை” என்று கைகூப்பி அடுத்த சொல்லை எடுக்க முயன்றார்.
கலிங்கர் “ஆகவே எது குலமென்றும் எது நெறியென்றும் முடிவுசெய்யப்படும் போர் இது. அதை நாம் ஒவ்வொருவரிடமும் சொல்லியாகவேண்டும். வென்றபின் கொள்வதற்கு ஏதேனும் உண்டு என்றெண்ணி போர் செய்பவர்கள் வெற்றியின் விலையை ஒவ்வொரு கணமும் கணக்கிட்டபடி இருப்பார்கள். இது மிகுவிலை என்று தோன்றிய அக்கணமே களத்திலிருந்து பின்வாங்குவார்கள். அவ்வாறு நிகழலாகாது. பல்வேறு நாட்டங்களுடன் போருக்கு வந்திருக்கும் சிறு நாடுகளின் படைகளை படைப்பெருக்குக்கு நடுவே அமைப்போம். ஆற்றல் மிக்க பெரும் படை கொண்ட நாடுகள் சில பின்னாலும் இருக்கவேண்டும். எவரேனும் பின்னடி எடுத்து வைப்பார்கள் என்றால் அவர்களே நமது எதிரிகள். முன்னாலிருப்பதைவிட பெரிய கொலைக்களத்தை அவர்கள் பின்னால் சந்திக்கவேண்டும்” என்றார்.
சீற்றத்துடன் எழுந்த மல்ல நாட்டு அரசர் ஆகுகர் “இது வீண்பேச்சு! கலிங்கம் இதுவரை சந்தித்த அனைத்துப் போர்களிலும் ஒன்று பின்னடைந்துள்ளது அல்லது போர்முறி செய்துள்ளது. ஆகவே அது சிறுநாடென்று பொருளல்ல. சிறிய நாடாகிய நாங்கள் இன்றுவரை எப்போரிலும் பின்னடி எடுத்துவைத்ததில்லை” என்றார். அவையிலிருந்த சிறுநாட்டரசர்கள் அனைவரும் தங்கள் கோல்களை எழுப்பி நகைத்து ஏளனக் கூச்சலிட்டனர். துஷார நாட்டு அரசர் வீரசேனர் “கலிங்கத்துக்குப் பின்னால் என் நாட்டுப் படைவீரர்கள் நிலைகொள்ளவேண்டும்” என்றார்.
சொல்லாடல்கள் எல்லை மீறிப்போவதை கண்ட சகுனி கனகரை நோக்கி மெல்ல தலையசைத்தார். கனகர் கைவீசி ஓசையமையச் செய்து “அவையோரே, எப்படைகளுக்கு எவர் தலைமை தாங்குவதென்று முன்னரே முடிவெடுத்திருக்கிறோம். அவை ஓலை வழியாக அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கே அரசர் முறையாக அறிவிப்பார்” என்றார். அத்தருணத்தில் சஞ்சயன் திருதராஷ்டிரரின் அருகிலிருந்து எழுந்து கைகளைத் தூக்கி “அவையீரே, பேரரசர் திருதராஷ்டிரர் இந்த அவையிடம் சில சொற்களை உரைக்க விழைகிறார்” என்றான்.