செந்நா வேங்கை - 3
யுதிஷ்டிரர் சலிப்புடன் நகுலனிடம் “எங்கே சென்றாள்? இன்னும் வந்தணையவில்லையே?” என்றார். நகுலன் “அரசியின் இயல்பே மாறிவிட்டது. எதிர்ப்படும் அனைவரிடமும் நலம்பேசாமல் வரமுடிவதில்லை. இளையோர் என்றால் முகம் மலர்ந்துவிடுகிறது” என்றான். யுதிஷ்டிரர் இளைய யாதவரிடம் “அரசி போரில் என்னைவிட தயக்கமும் சலிப்பும் கொண்டிருக்கிறாள். சின்னாட்களுக்கு முன் போரவையில் இந்தப் போர் தன் பொருட்டல்ல என்று சொல்லப்போகிறேன் என்றாள். நான் அது முறையல்ல என்று சொன்னேன். அவள் ஒப்பவில்லை. அவளுடைய உளப்போக்கு என்னால் புரிந்துகொள்ள முடிவதாக இல்லை” என்றார்.
இளைய யாதவர் “அதை இங்கே சொல்லத்தான் வருகிறார்கள் போலும்” என்றார். யுதிஷ்டிரர் “இத்தனை படைவீரர்கள் நம்பொருட்டு திரண்டிருக்கிறார்கள் என்றால் அதற்குரிய அடியுணர்வு என அமைந்திருப்பது நம் அரசிக்கு நிகழ்ந்த அவைச்சிறுமைதான். சொல்லிச் சொல்லிப் பரவி இன்று பாரதவர்ஷம் முழுக்க அறியப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. பெண்ணுக்கு இழைக்கப்பட்ட சிறுமைக்கு பழிநிகர் செய்ய உயிர்கொடுப்பதென்பது பாரதவர்ஷத்தின் தொல்குடிகள் அனைத்திற்கும் மாறா விழுமியமென உள்ளது. தொலைநிலங்களிலிருந்து நாமறியாத கிராதரும் நிஷாதரும் கிளம்பி நம்மிடம் படைகொண்டு சேர்ந்திருப்பது அதன் பொருட்டே. அவர்கள் நம்மிடமிருந்து பெற எதுவுமில்லை. நிலமோ கப்பமோ நாடுபவர்கள் அல்ல அவர்கள்” என்றார்.
“அரசி அவையில் அவ்வாறு அறிவித்தாள் என்றால் நமக்கு அது பேரிழப்பு” என்றான் நகுலன். இளைய யாதவர் “ஆம்” என்றார். பீமன் “அதை அவள் அறிவித்தாலும் அந்தப் பழி அங்குதான் இருக்கும் என்றும், குருதியாலன்றி வேறெதாலும் அதை நிகர் செய்ய இயலாதென்றும் அறியாதவர்கள் இங்கு எவருமில்லை” என்றான். சகதேவன் “ஆம். ஆனால் எந்தப் போரிலும் படைவஞ்சினமே அனைத்து உணர்வுகளையும் ஒருங்கு திரட்டுகிறது. நம் படைவஞ்சினத்தில் முதன்மையாக ஒலிக்க வேண்டியது அரசிக்கு இழைக்கப்பட்ட அவைச்சிறுமைதான்” என்றான்.
யுதிஷ்டிரர் “அவர்கள் அறியாத எதை சொல்லப்போகிறோம்?” என்றார். சகதேவன் “மெய்யாகவே அவர்கள் முன்னர் அறியாத எதையும் வஞ்சினமென்று உரைக்க இயலாது, மூத்தவரே. அவர்களிடம் இல்லாத எவ்வுணர்வையும் எழுப்பவும் முடியாது. நீங்கள் எழுந்து உரைக்கும் ஒவ்வொரு சொல்லும் பலநூறுமுறை அவர்களுக்குள் எழுந்ததாகவே இருக்கும். அவர்கள் கேட்க விழைவதையே சொல்லவேண்டும். அது சொல்லப்படுகிறது என்பதே முதன்மையானது. சொல்லும் உணர்வுதான் அத்தருணத்தின் கூர்முனை” என்றான்.
“பல்லாயிரம் படைவீரர்களிடமிருந்து அவ்வுணர்வு உங்களுக்கு வருகிறது. நீங்கள் அதன் சுழிமையம். உங்களில் குவிவதனால் அவ்வுணர்வு பெருகிப் பெருகி பலமடங்கென அவர்களிடம் திரும்பிச் செல்கிறது” என்று சகதேவன் சொன்னான். “மூத்தவரே, முன்பு இங்கே கூறப்பட்ட போர்வஞ்சினங்கள் அனைத்தும் சூதர்களால் பாடல்களாக எழுதப்பட்டு பாடப்படுகின்றன. அனைத்துமே உணர்வு மட்டுமேயான வெறுஞ்சொற்கள், காதலுரைகளைப்போல. ஆனால் அழியாதவை, மானுட வாழ்க்கையை திசை திருப்பியவை.”
பீமன் “அரசி ஒருபோதும் அவையில் தன்னிடம் வஞ்சமில்லை என்று சொல்லமாட்டாள்” என்றான். யுதிஷ்டிரர் அமைதியின்றி தலையை அசைத்து “போர் நெருங்குந்தோறும் நாம் அறுவரும் ஆறு திசைகளிலாக விலகிச் செல்கிறோம். ஒரு சொல்லிலும் நம்மால் ஒருங்கிணைய இயலவில்லை” என்றார். சகதேவன் கவலையுடன் “அரசி ஒருபோதும் அவையில் அவளிடம் வஞ்சமில்லை என்று சொல்லக்கூடாது” என்றான். நகுலன் “அரசி தங்களிடம் இந்த அவையில் அவ்வாறு கூறப்போவதாக சொன்னாளா, மூத்தவரே?” என்றான். “ஆம், நேற்று மாலை நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது” என்றார் யுதிஷ்டிரர்.
அவர் மேலும் விளக்குவதற்காக அவர்கள் காத்து நிற்க யுதிஷ்டிரர் “நெடுநாட்களுக்குப்பின் பார்த்துக்கொண்ட அந்தி. நான் சுவடிகளை நோக்கிக்கொண்டிருந்தேன். அனைத்தும் போர் ஆணைகள். இயல்பாக பேச்சு தொடங்கி போர் ஒருங்குகூடி வருவதைப்பற்றி நான் சொல்லலானேன். என் சொற்கள் எதற்கும் அவள் செவிகுவிக்கவில்லை. தனக்குத் தொடர்புறாத எதையோ கேட்பவள்போல வெளியே நோக்கிக்கொண்டிருந்தாள். அவளை ஊக்கும் பொருட்டு நான் இன்னும் பதினைந்து நாட்கள்தான் தேவி, உனது வஞ்சம் நிறைவேறும் என்றேன். நீ அடைந்த சிறுமைக்கு நாங்கள் செய்த நிகரை ஆயிரம் ஆண்டுகள் இப்பாரதவர்ஷம் பேசும் என்றேன்” என்றார்.
அச்சொல் எங்கோ அவளை தைத்திருக்கக்கூடும், சீற்றத்துடன் திரும்பி “இது எனது போர் அல்ல! இப்புவியில் எவர் மீதும் எனக்கு வஞ்சமில்லை. இங்கு படைக்கலம் ஏந்திச்செல்லும் அனைவரும் எனது மைந்தர்களே. மைந்தரை களப்பலியிட்டு அன்னை அடையக்கூடியது ஒன்றுமில்லை” என்றாள். நான் திகைத்து “என்ன சொல்கிறாய்?” என்றேன். “இப்போர் என்னுடையதல்ல. என் பொருட்டென்று சொல்லி ஆண்களாகிய நீங்கள் போருக்கெழுகிறீர்கள். காலந்தோறும் இது இவ்வாறுதான் நிகழ்கிறது. மிதிலையின் அரசியின் பொருட்டு நிகழ்ந்தது இலங்கைப்போர் என்கிறார்கள் சூதர்கள். அது அரக்கர்கோனுக்கும் அயோத்தியின் அரசனுக்கும் நிகழ்ந்த பூசல். அதில் ஜனகர் மகள் ஆற்றுவதற்கென்ன இருந்தது?” என்றாள்.
நானும் சீற்றம்கொண்டு “இப்போது நீ உன் பொறுப்பிலிருந்து விலக எண்ணுகிறாய். அவைச்சிறுமை அடைந்தது நீ. அதற்கு பழிகொள்ள வேண்டுமென்று எங்களிடம் ஆணையிட்டதும் நீ. ஆண்மையிலாதோராய் அஞ்சி ஒதுங்குகிறோம் என்று கைநீட்டி எங்களை இகழ்ந்ததும் நீ” என்று கூவினேன். “ஆம், உன் பொருட்டே இப்போர் நிகழ்கிறது. இரு தரப்பிலும் குருக்ஷேத்திரத்தில் குருதி சிந்தி வீழும் ஒவ்வொருவரும் உன் பொருட்டே மடிகிறார்கள்” என்றேன்.
அவள் முகம் அனல்கொண்டு விழிகள் நீர்மைபடிந்தன. பற்களைக் கடித்தபடி “அவ்வாறல்ல என்று ஆவதற்கு நான் செய்யவேண்டியதென்ன? அவையெழுந்து சொல்கிறேன், இப்போர் என்னுடையதல்ல என்று. எவரிடமும் எனக்கு வஞ்சமில்லை, நான் தீர்க்க வேண்டிய கணக்கென்று இப்புவியில் ஏதுமில்லை என்று. ஆம், அரசர் கூடிய அவையில் சொல்கிறேன். உங்களுக்கு நிலம், உங்கள் தம்பியருக்கு புகழ், அவையமர்ந்திருக்கும் அத்தனை அரசர்களுக்கும் முடிநலனும் குடிநலனும். இழப்பவர்கள் பெண்கள். மைந்தரை, கணவரை, தந்தையரை. பழி கொள்ளப்போவதும் பெண்ணாகிய நானே” என்றாள்.
அவள் குரல் நானறியாத நடுக்கமும் விசையும் கொண்டிருந்தது. “அவையெழுந்து கூவி உரைக்கிறேன், அரசர்களே உங்கள் பொருட்டு போரிடுங்கள். இழந்தபின் சுட்டுவதற்கென்று பெண்களை அங்கு கொண்டு நிறுத்தாதீர்கள். உங்கள் ஆணவத்தின், பெருவிழைவின் விளைவுகள் அனைத்தையும் குருதியென்றும் கண்ணீரென்றும் சுமக்க வேண்டியது எங்கள் பொறுப்பென்றால் அதை செய்கிறோம். பழிமட்டும் கொள்ளமாட்டோம். ஆம், இது அன்னையென என் ஆணை!” என்றாள். என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “சரி சொல், உனக்கு அத்தனை உறுதியிருந்தால் நாளையே அவையிலெழுந்து அதை சொல்” என்றேன்.
“அவள் சொல்லத்தான் போகிறேன் என்றாள். சரி சொல் என்று சொல்லி நான் கிளம்பிவிட்டேன்” என்றார் யுதிஷ்டிரர். நகுலன் “அவையெழுந்து ஒருபோதும் அரசி அதை சொல்லமாட்டாள்” என்றான். “ஏனெனில் பெண்ணென்று நின்று உங்கள் முன் அதை சொல்லியிருக்கிறாள். மூத்தவர் மூவர் முன்பும் பெண்ணென்று வெளிப்படுபவள் எங்கள் முன் ஆணென்றும் தோன்றுவதுண்டு. அவையில் எப்போதுமே அவள் அரசி. இகழ்ச்சியும் பழியும் கொண்டு எதிர்காலக் கொடிவழியினர் முன்னால் நிற்க அரசிக்குள் வாழும் அந்த ஆண்மகன் ஒப்பான். மும்முடி சூடி அமர்ந்தவள் அவள். அகத்தளத்தில் அன்னையென்றோ துணைவியென்றோ பேசலாம். அவையிலெழுந்தால் அரசியென்றே அவள் குரலெழும்” என்றான்.
“நீ என்ன எண்ணுகிறாய், இளையோனே?” என்று யுதிஷ்டிரர் அர்ஜுனனிடம் கேட்டார். அர்ஜுனன் அப்போதுதான் அச்சொற்களை கேட்பவன்போல மெல்லிய உடலசைவு கொண்டு இருமுறை உதடுகளை அசைத்தபின் “அரசி சொல்லக்கூடும்” என்றான். யுதிஷ்டிரர் புருவம் சுளிக்க அவனை நோக்கினார். “ஏனெனில் மெய்யாகவே அரசிக்குள் எந்த வஞ்சமும் இல்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “அதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. முற்றிலும் இவை அனைத்திலிருந்தும் விலகி இருக்கிறாள். அத்தனை தொலைவிலிருந்து பார்க்கையில் இந்தப் படைக்குவிப்பும் அணிவகுப்பும் உணர்வெழுச்சிகளும் சொல்லடுக்குகளும் கேலிக்குரியதாகவே தோன்றும்.”
“ஆம்” என்றான் சகதேவன். அர்ஜுனன் “அரசி உங்களிடம் பேசியதுபோல உணர்வு எழுச்சியுடனோ கசப்புடனோ அவையில் பேசுவாளென்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் இகழ்ச்சியும் விலக்கமுமாக அதை சொல்லக்கூடும்” என்றான். சகதேவன் “ஒருபோதும் அவ்வாறு சொல்லலாகாது. அரசிக்கு உங்கள் ஆணை இங்கு எழவேண்டும், மூத்தவரே” என்றான். யுதிஷ்டிரர் “ஏன், சொன்னால் படைதிரண்டு போருக்கு விம்மி நின்றிருக்கும் வீரர்கள் அனைவரும் தலைதாழ்த்தி திரும்பிச் செல்வார்களா என்ன?” என்றார்.
சகதேவன் “அரசே, உச்சங்களில் மானுடர் ஒருநிலை கொண்டிருப்பதில்லை. போர் என்று வெறிகொண்டு இவர்கள் கிளம்புவது எத்தனை மெய்யோ அதற்கிணையான மெய் இதன் இழப்புகளையும் பொருளின்மையையும் உள்ளுணர்ந்து அவர்களின் ஆழம் ஒன்று தயங்குவது. அந்தப் பின்னகர்வை வெல்லும்பொருட்டே மேலும் மேலுமென முன்னோக்கி பாய்கிறார்கள். களமறிந்த எவரும் உணர்ந்த ஒன்றுண்டு, வெற்றிவேல் வீரவேல் என்று பொங்கி முன்னெழும் படை அவர்களில் மிகச் சிலரிடம் எழும் அச்சத்தையும் ஐயத்தையும் ஒருசொல்கூட உரைக்காமலேயே தான் வாங்கிக்கொள்ளும். வென்று எழுந்த படை அவ்வண்ணமே சுருண்டு பின்வாங்கி சிதறி அழிவதை நாம் கண்டிருக்கிறோம்” என்றான்.
யுதிஷ்டிரர் “ஆம், படைகள் அவர்களின் தெய்வங்களால் ஆளப்படுகின்றன” என்றார். “மூத்தவரே, அரசி அவையெழுந்து அவள் வஞ்சம் ஒழிந்திருப்பதாக சொன்னால் அச்சொற்களைக் கேட்டு அவையமர்ந்த அரசர்களும் அவர்களுக்குப்பின் திரண்ட வீரர்களும் மேலும் சினந்தெழுவார்கள். போர் வேண்டுமென்று வெறிக்கூச்சலிடுவார்கள். ஆனால் திரள்விட்டு தனியர்களாக அவர்கள் தங்களை உணரும்போது அலையடங்கி ஆழம் தெளிவதுபோல் அந்த அச்சமும் ஐயமுமே மேலெழும். அதன்மேல் மேலும் மேலும் சொற்களையும் உணர்வுகளையும் கொட்டி தங்களை அவர்கள் எழுப்பிக்கொள்ளக்கூடும். ஆனால் ஒருவரிடமிருந்து பிறிதொருவருக்கென படையினர் அனைவருக்கும், முதல்முரசறைவோன் முதல் அடுமனையாளன் வரைக்கும் அந்த அச்சமும் ஐயமும் ஆழத்து உணர்வென வாழும்” என்றான் சகதேவன்.
“போர்க்களத்தில் எதிரி விழிகொண்டும் செவிகொண்டும் காண்பது அவர்களின் எழுச்சியையும் வெறியையும்தான். அவன் தன் ஆழத்தைக் கொண்டு நோக்குவான் என்றால் அந்த அச்சத்தையும் ஐயத்தையும் உணர்வான். கோடி அம்புகளால் நமது வெறியையும் சினத்தையும் அவன் எதிர்கொள்ளும் அதே நேரத்தில் ஒற்றை அம்பு நம் ஆழத்தைக் கடந்து வந்து தொட்டதென்றால் அக்கணமே நாம் வீழ்வோம். கொல்லும் நஞ்சை உடலுக்குள் செலுத்தி களம் புகுவதுபோல அது.”
“ஐயமே தேவையில்லை, அவையெழுந்து அரசி அறைகூவியாக வேண்டும். தனக்கிழைக்கப்பட்ட சிறுமைக்கு அரசர்கள் பழிநிகர் செய்யவேண்டுமென்று அன்னையாக, அரசியாக, ஆதரவில்லாத பெண்ணாக நின்று அவள் கோரவேண்டும். ஆணையும் அடைக்கலம் கோரலுமாக அவளது சொற்கள் நமது படையினர் அனைவர் முன்னும் எழவேண்டும். அழியாது அவர்களிடம் நிலைகொள்ளவேண்டும். எதன்பொருட்டு இப்போர் என்று அவர்களிடம் கேட்கப்படுமெனில் இது ஒரு பெண்ணின் விழிநீர் துடைப்பதற்காக என்று ஐயமின்றி அவர்கள் சொல்ல வேண்டும்.”
“ஆழத்தின் இருளில் அவர்கள் அறிந்திருப்பார்கள், எப்போரையும் போலவே இப்போரும் விழைவையும் ஆணவத்தையும் நிறைவு செய்துகொள்வதற்காக மட்டுமே என்று. மானுடன் போரிடும் விலங்கு என்பதனால் மட்டுமே இது நிகழ்கிறது என்று. ஆனால் அவ்விடையை அவன் தன் தெய்வங்களிடம் சொல்ல முடியாது. அவற்றிடம் சொல்வதற்கு என அவனுக்கு ஒரு மறுமொழி அளிக்கப்படவேண்டும் நம்மால்” என்றான் சகதேவன்.
பீமன் பெருமூச்சுடன் உடலை அசைத்தபோது அவனுடைய பெரிய கைகள் சரிந்து தொடையை உரசும் ஓசை கேட்டது. இயல்பாக விழிதிருப்பி அவனை பார்த்தபின் யுதிஷ்டிரர் தாடியைப் பற்றி மெல்ல கசக்கியபடி “ஒவ்வொரு சிறு செயலையும் எத்தனை முரண்பட்ட உள நாடகங்களுடன் நிகழ்த்துகிறோம். இது ஏன் என்றும் எவ்வாறென்றும் எதைப்பற்றி நம்மிடம் கேட்கப்பட்டாலும் கேட்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடையையே நம்மால் சொல்லமுடிகிறது” என்றார். “இளையோனே, இப்போரை அணுகும்தோறும் முற்றிலும் செயலற்றவனாகவும் சிந்தையற்றவனாகவும் உணர்கிறேன்.”
சகதேவன் “நான் எப்பொழுதும் மண்ணிலிருந்து என் கால்களை எடுத்ததில்லை, மூத்தவரே. ஆகவே எனக்கு ஐயங்களேதுமில்லை” என்றான். அர்ஜுனன் “அரசி அவ்வாறு படைகளை நோக்கி அறைகூவுவாளென்று எண்ணவேண்டியதில்லை. இங்கிருக்கும் நாம் அனைவருமே ஒவ்வொருவகையில் இப்போரிலிருந்து ஏற்கெனவே சற்று விலகியிருக்கிறோம். எனது விலக்கத்தால் நான் மேலும் ஆற்றல் கொண்டவனாக ஆகியிருக்கிறேன். சகதேவன் மேலும் அறிந்தவனாக மாறியிருக்கிறான். நகுலன் மேலும் கனிந்தவனாக. மூத்தவர் பீமன் மேலும் சினம் கொண்டவராக. ஆனால் முற்றாக விலகி இவையனைத்திலும் ஒரு சொல்லால்கூட தொடர்புறாது இன்றிருப்பவள் பாஞ்சாலத்தரசிதான்” என்றான்.
யுதிஷ்டிரர் குழப்பத்துடன் திரும்பி இளைய யாதவரிடம் “சொல்க இளைய யாதவனே, இது உனது போர். இத்தருணத்தை எப்படி கடப்பது? இது இத்தனை பெரிதென்று நான் எண்ணவில்லை. இவர்கள் சொல்லச் சொல்ல பேருருக்கொண்டு வழியற்ற கோட்டையென வழி மூடி நின்றிருக்கிறது” என்றார். இளைய யாதவர் “இங்கு பேசப்பட்ட அனைத்தும் ஒன்று நிகழ்வதற்கு முன்பு அதைப்பற்றி நாம் எண்ணும் முடிவிலாத வழிகளைப்பற்றி மட்டுமே. அது நிகழட்டும், அதன்பின் எண்ணுவோம்” என்றார்.
யுதிஷ்டிரர் “ஆனால்…” என்று சொல்ல அவரை கையமர்த்தி இளைய யாதவர் “அது நிகழ்கையிலேயே அதன் எல்லைகள் தெளிவாகிவிடுகின்றன. ஒன்று நிகழ்வதற்கு பல்லாயிரம் வாய்ப்புகள். அவற்றில் ஒரு வாய்ப்பையே அது நிகழ்வதற்கு தெரிவுசெய்ய முடியும். நிகழ்ந்தபின் பிற வழிகள் அனைத்தும் இல்லாமலாகிவிடுகின்றன. அந்நிகழ்வு வரையறுக்கப்பட்டுவிடுகிறது. அதன்பின் அதை எதிர்கொள்வது மிக எளிது. அது நிகழ்ந்த அவ்வெல்லைக்கு அப்பால் நாம் செயல்படுவதற்கு பல நூறு இடைவெளிகள் இருக்கும். நாம் செல்வதற்கான வழிகள் முடிவிலாது திறக்கும்” என்றார்.
“என்ன சொல்கிறாய் என்றே புரியவில்லை” என்ற யுதிஷ்டிரர் புன்னகைத்து “இந்த இக்கட்டை எதிர்கொள்ள முடியவில்லை என்பதனால் நிகழவிட்டு என்ன ஆகிறது என்று பார்க்கலாம் என்று எண்ணுகிறாய், இல்லையா?” என்றார். இளைய யாதவர் நகைத்து “ஆம், அவ்வாறும் சொல்லலாம்” என்றார். பீமன் “எதையானாலும் அப்படியே விட்டுவிடுவது ஒரு நல்ல வழி. எதுவும் எவ்வண்ணமேனும் முடிந்துதானே ஆகவேண்டும்?” என்றான்.
ஏவலன் அறைக்குள் வந்து தலைவணங்கி “பாஞ்சால அரசி திரௌபதி எழுந்தருள்கை” என்று அறிவித்தான். “வரச்சொல்” என்றார் யுதிஷ்டிரர். பின்னர் எழுந்து தன் மேலாடையை சீரமைத்து, தோளில் கலைந்து பரவியிருந்த குழல்களை தள்ளிவிட்டுக்கொண்டார். ஏவலன் கதவைத் திறந்து “பாஞ்சாலத்து அரசி! துருபதன் புதல்வி! ஐங்குழலன்னை! திரௌபதி எழுந்தருள்கை!” என்று அறிவித்தான். மங்கலத்தாலமேந்திய சேடி முன்னால் வந்து அதை அங்கிருந்த சிறுபீடத்தில் வைத்து தலைவணங்கி புறங்காட்டாது வெளியேற அவளைத் தொடர்ந்து அவையில் தோன்றுவதற்குரிய முழுதணிக்கோலத்தில் திரௌபதி உள்ளே வந்தாள்.
திரௌபதி இளைய யாதவரை நோக்கி தலைவணங்கிவிட்டு யுதிஷ்டிரரிடம் “பொழுது அணுகிவிட்டது. அவை கூடி அனைவரும் காத்திருக்கிறார்கள் என்று சுரேசர் சொன்னார்” என்றாள். “ஆம், நாம் உடனே கிளம்பவேண்டும். நான் முன்னரே கிளம்பியிருப்பேன். நீ இங்கு என்னைப் பார்க்க வரப்போவதாக சொன்னார்கள். ஆகவேதான்…” என்று யுதிஷ்டிரர் சொல்லி இளைய யாதவரை பார்த்தார். இளைய யாதவர் “அமருங்கள், அரசி. தாங்கள் இங்கு ஆற்றவேண்டிய சிறுபணி ஒன்றுள்ளது” என்றார்.
திரௌபதி பீடத்தில் அமர்ந்து தன் நீண்ட கருங்குழல் பொழிவை வலக்கையால் அள்ளி ஓரமாக ஒதுக்கி வைத்தாள். மேலாடையை இடக்கையால் பற்றி மடிமீது வைத்துவிட்டு “இங்கு போர்சூழ்கை நிகழ்ந்ததுபோல் உள்ளது. ஒவ்வொரு முகத்திலும் மறுகணம் படைக்கலம் ஏந்தும் விசை தெரிகிறது” என்றாள். அவளுடைய புன்னகை அனைவரையும் குழப்பியது. “ஆம், போர் அணுகி வருகிறது” என்று சொன்ன இளைய யாதவர் திரும்பி சாத்யகியை காட்டி “ரிஷபவனத்தின் யாதவ அரசர் சத்யகரின் மைந்தர் யுயுதானன் இவர். சாத்யகியாகிய இவருடைய மைந்தர்கள் பதின்மர் வந்துள்ளனர்” என்றார்.
“ஆம், மைந்தர்கள் வந்திருப்பதாக சொன்னார்களே?” என்று திரௌபதி முகம்மலர்ந்தாள். இளைய யாதவர் சாத்யகியிடம் “யுயுதானரே, மைந்தர்களை வரச்சொல்க! அவர்கள் தங்கள் அன்னையிடம் அருள் பெறட்டும்” என்றார். சாத்யகி உடல் பதறி நான்கு திசைகளிலும் ஒரே கணத்தில் பாயமுயன்று மைந்தர்கள் இருந்த அறையை உளம்கொண்டு பாய்ந்து அதன் கதவைத்தட்டி தாழ்ந்த குரலில் “அசங்கா, என்ன செய்கிறீர்கள்? அசங்கா!” என்றான்.
உள்ளிருந்து கதவைத் திறந்து அசங்கன் வெளியே வந்தான். திரௌபதியைப் பார்த்ததும் தலைவணங்கி “இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசியை வணங்குகிறேன். எட்டு திருமகள்கள் ஓருடலில் எழுந்தருளிய தோற்றம் தாங்கள் என்று சூதர்கள் பாடிக்கேட்டிருக்கிறேன். பிழையல்ல என்று இப்போது அறிந்தேன்” என்றான். சாத்யகி அந்தத் தெளிந்த குரலாலும் முறையான மரபு உரையாலும் நிறைவடையாமல் அதில் ஏதேனும் பிழையிருக்கிறதா என்று எண்ணி உடல் பதறி பின்னர் எண்ணம் சென்றடையாமல் அதை உதறி “முன்னால் போ, மூடா! சென்று வணங்கு!” என்றான். திரௌபதி நகைத்து “பதற வேண்டாம் யுயுதானரே, உங்கள் மைந்தர் உங்களைவிட சிறப்பாகவே முறைமைச்சொல் எடுக்கிறார்” என்றாள்.
அசங்கன் அருகே சென்று திரௌபதியின் கால்களைத் தொட்டு தலையில் வைத்து வணங்கினான். அவனை தோளில் தொட்டு “தந்தையைவிட சற்றே உயரமாக வருவார் என்று நினைக்கிறேன்” என்றுசொல்லி திரும்பி பீமனை பார்த்தாள். பீமன் “இதற்குமேல் கதை பயில முடியாது இவர்களால். வில் பயின்று தோள்கள் பழகிவிட்டிருக்கின்றன” என்றான். “கதை பயிலாதவர்களும் வீரர்களாக இருக்கமுடியுமென்பதை தாங்கள் ஒருபோதும் புரிந்துகொள்ள முடிந்ததில்லை” என்று சிரித்த திரௌபதி பிற மைந்தரைப் பார்த்து “ஆடியிலிருந்து யுயுதானரே கிளம்பிவருவதைப்போலிருக்கிறது… வருக!” என்று கைவிரித்தாள்.
சினி அவள் சிரிப்பால் தன்னை மறந்து அருகே வந்து அவள் ஆடையை பற்றிக்கொண்டு அருகே சேர்ந்து நின்றான். மைந்தர்கள் ஒவ்வொருவராக அணுகி வாழ்த்து பெற்றனர். அவர்கள் எவரிடமும் தயக்கமிருக்கவில்லை. அவள் அவர்கள் தலையிலும் தோள்களிலும் கைவைத்து “நலம் சிறக்க! வெற்றியும் புகழும் விளைக!” என்று வாழ்த்தினாள். சினியை கழுத்தை சுற்றிப்பிடித்து இழுத்து தன் உடலோடு அணைத்து அவன் கன்னத்தை கையால் வருடி பீமனிடம் “தாடி! மெல்லிய தாடி முளைக்கிறது இவனுக்கு” என்றாள்.
பீமன் “அவனுக்கு பன்னிரு அகவைதான் ஆகிறது. அதற்குள் படைக்கலமும் குண்டலமும் அணிந்திருக்கிறான்” என்றான். “ஆம்” என்று அவன் குண்டலத்தை தொட்டுப் பார்த்த திரௌபதி சாத்யகியிடம் “யாதவரில் இத்தனை இள அகவையிலேயே பயிற்சி நிறைவு பெறுவதுண்டா? சிற்றகவையில் குண்டலம் அணிந்த பெருமை பாண்டவர்களுக்கும் அவர்களின் மைந்தர்களுக்கும் மட்டுமே உரியது என்பார்கள்” என்றாள். சாத்யகி தத்தளித்து இடறிய குரலை இருமுறை செருமி சீர்படுத்தி “நான் இங்கிருந்து செல்வதற்கு முன் ஆணையிட்டிருந்தேன், அரசி. பத்து மைந்தரும் படைக்கலமேந்தும் நிலையிலிருக்க வேண்டுமென்று சொன்னேன். என் இறுதித் துளிவரை துவாரகையின் அரசருக்கு படைக்கப்படவேண்டும் என்பதனால்…” என்று சொன்னான்.
திரௌபதி முகம் சுளித்து “என்ன சொல்கிறார்?” என்றாள். இளைய யாதவர் “உங்களுக்கு ஒரு பணி இங்கு எஞ்சியுள்ளது, அரசி. மூத்தவனுக்கு நாம் ஓரிரு நாட்களுக்குள் இங்கு மணம்புரிந்து வைத்தாக வேண்டும்” என்றார். “மணமா? இவனுக்கா?” என்று திரும்பி அசங்கனை பார்த்தாள் திரௌபதி. “இவனுக்கு என்ன அகவை ஆகிறது?” என்று சாத்யகியிடம் கேட்டாள். “பதினேழு நிறைகிறது” என்றான் சாத்யகி. “என் முதலரசி பார்கவியின் மகன் இவன். எனக்கு நான்கு அரசியர்.”
திரௌபதி “பதினேழாம் அகவையில் மணம்புரிந்துகொள்வதுண்டா யாதவர்கள்?” என்று கேட்டாள். “நான் என் இருபத்தி நான்காவது அகவையில்தான் மணம்புரிந்துகொண்டேன்” என்றான் சாத்யகி. இளைய யாதவர் “அப்போது போர் அணுகிவரவில்லை” என்றார். அவர் என்ன சொல்கிறார் என்பதை புரிந்துகொண்டு திரௌபதி விழிமாறினாள். “பத்து மைந்தரும் போருக்குச் செல்கிறார்கள்” என்று சகதேவன் சொன்னான். பீமன் உரக்க “ஆகவே போர் தொடங்குவதற்குள் அரசி ஒருத்தி யுயுதானரின் குருதியை கருவுற வேண்டியுள்ளது அல்லவா?” என்றான்.
அத்தனை நேரடியாக அவன் சொன்னது அவர்கள் அனைவரையும் சற்றே குன்ற வைக்க இளைய யாதவர் உரத்த நகைப்பால் அதை கடந்து “போர் தலைமுறைகள்தோறும் தொடர்ந்து நிகழவேண்டுமல்லவா?” என்றார். திரௌபதி “என்ன சொல்கிறீர்கள்?” என்று சினந்தாள். “அவ்வாறு மணம்புரிந்து மைந்தரை போருக்கனுப்பும் வழக்கம் எங்குமுள்ளதே” என்ற இளைய யாதவர் “அரசி, தங்கள் அகத்தளத்தில் யாதவப்பெண்களில் தகுதியான எவரும் உள்ளனரா?” என்றார்.
“இங்கிருப்பவர்களெல்லாம் பணிப்பெண்கள்…” என்ற திரௌபதி “அரசகுலத்துப் பெண்டிர் என்றால்…” என உள்ளத்தால் தேடினாள். சாத்யகி “அரசகுடியினர் மணக்கொடைக்கு ஒப்பவேண்டுமே?” என்றான். “இன்று யாதவர்களும் அரசகுடியினரே” என்று திரௌபதி சொன்னாள். இளைய யாதவர் “முன்பு துவாரகையில் இவரும் திருஷ்டத்யும்னரும் இணையாக புரவியில் செல்வதைப் பார்த்த சூதன் ஒருவன் பாடியது நினைவு வருகிறது. குதிரைகள் யாதவர்களை ஷத்ரியர்கள் என எண்ணும் காலம் அணுகிவிட்டது என்று பாடினான்” என்றபின் சாத்யகியிடம் “திருஷ்டத்யும்னரை சந்தித்தீரா? உமது அணுக்கத்தோழர் அல்லவா அவர்?” என்றார். சாத்யகி “உபப்பிலாவ்யத்திற்கு வந்தபின் சந்திக்கவில்லை” என்றான்.
திரௌபதி முகம்மலர்ந்து “திருஷ்டத்யும்னனின் மகள் சௌம்யை இங்கு வந்திருக்கிறாள். அவளுக்கு பதினேழு அகவை நிறைந்துவிட்டது. இந்தப் போர் முடிந்தபின் மணத்தன்னேற்புக்கு ஒருங்கு செய்யலாம் என்று ஓரிரு நாட்களுக்கு முன் இளவரசர் சொன்னார். அவள் இவனுக்கு பொருத்தமானவள்” என்றாள்.
சாத்யகி திகைத்து “பாஞ்சாலத்து அரசகுலத்துடன் உறவென்றால்…” என்றான். “தங்கள் குடியில் எதிர்ப்பிருக்குமா?” என்று திரௌபதி கேட்டாள். “அரசி, எனது கொடிவழியில் பதினான்கு தலைமுறையாகச் செய்த நல்லூழின் விளைவென்றே இதை கொள்வார்கள். என் தந்தை தன் வாழ்வின் நிறைவென்றெண்ணி விழிநீர் சிந்துவார்” என்றான் சாத்யகி. “பிறகென்ன? அவள் என் மருமகள். அவள் பொருட்டு முடிவெடுக்கும் உரிமை எனக்குண்டு. என் சொல்லை திருஷ்டத்யும்னனோ துருபதரோ மறுக்கப்போவதில்லை” என்ற திரௌபதி “என் குலமகள் உங்கள் குடிக்கு அரசியாக வருவாள், யுயுதானரே” என்றாள்.
சாத்யகி மெல்லிய நடுக்கம் உடலெங்கும் பரவியிருக்க கண்கள் ஈரமாகி மின்ன கைகூப்பினான். திரௌபதி திரும்பி அசங்கனிடம் “மணப்பெண்ணை நீ பார்க்க வேண்டுமல்லவா? இன்று அவை முடிந்த பின்னர் அகத்தளத்திற்கு வா. அவளையும் வரச்சொல்கிறேன். நீங்கள் சந்தித்துக்கொள்ளலாம். அதற்கு முன் தந்தையிடமும் திருஷ்டத்யும்னனிடமும் இவ்வெண்ணத்தை சொல்லிவிடுகிறேன்” என்றாள். அசங்கன் முகம் சிவந்து உதடுகளைக் கடித்து பார்வையை தாழ்த்திக்கொண்டான். திரௌபதி சிரித்தபடி “நாணுகிறான், பார்த்தீர்களா?” என்றாள்.
பீமன் அவன் தோள்களைப்பற்றி உலுக்கி “ஆம், நாணம் சற்று மிகையென்று தோன்றுகிறது” என்று சிரித்தான். யுதிஷ்டிரர் அப்போதும் உளக்குழப்பம் நீங்காதவர்போல் முகம் கொண்டிருந்தார். ஓரக்கண்ணால் பலமுறை இளைய யாதவரை பார்த்தார். “நாம் கிளம்புவோம், அவை நிறைவுற்றிருக்கும்” என்று சகதேவன் சொன்னான். “ஆம், பொழுதாகிறது” என்றபடி யுதிஷ்டிரர் எழுந்துகொண்டார். திரௌபதி சினியின் தலையை வருடி “இரவில் பார்ப்போம்” என்றபின் யுதிஷ்டிரருடன் கிளம்பினாள். ஏவலன் வெளியே சென்று ஆணையிட அரசரும் அரசியும் கிளம்புவதை அறிவிக்கும் மங்கலச்சங்கு முழங்கியது.
அவர்கள் வெளியே சென்றதும் பீமன் “அரசி தான் சொல்லவந்ததை சொல்லாமலாக்கிவிட்டீர்கள்” என்றான். “ஆம், அவர் இன்று வெறும் அன்னை. அவர் உளம் எதில் எளிதில் சென்று படியும் என அறிவேன்” என்றார் இளைய யாதவர். “இதே இனிமை அவள் நெஞ்சில் எஞ்சினால் அவையில் சினந்துரைக்க வாய்ப்பில்லை” என்றான் அர்ஜுனன். “சௌம்யையை உளங்கொண்டுதான் இப்பேச்சை தொடங்கினீர்களா, யாதவரே?” என்று பீமன் கேட்டான். இளைய யாதவர் “இல்லை, ஆனால் பேச்சு தொடங்கியவுடனே அவளைத்தான் நினைவுகூர்ந்தேன். இன்று காலைதான் அவளை ஆலயத்தில் பார்த்தேன்” என்றார்.