செந்நா வேங்கை - 28
பூரிசிரவஸ் அஸ்தினபுரியின் அரசவையிலிருந்து வெளியே வந்து இடைநாழியினூடாக விரைந்தபடி தன்னை நோக்கி ஓடிவந்த பால்ஹிகபுரியின் காவலர்தலைவன் நிகும்பனிடம் “என்ன செய்கிறார்?” என்றான். அவன் மூச்சிரைக்க அணுகிவந்து “அணி செய்துகொண்டிருக்கிறார்” என்றான். சென்றபடியே “ஒத்துழைத்தாரா?” என்றான் பூரிசிரவஸ். அவனுக்குப் பின்னால் குறடுகள் ஒலிக்க வந்த நிகும்பன் “இல்லை. அவருக்கு என்ன நிகழ்கிறது என்று புரியவில்லை. யானை மேல் ஏற்றி நகருலா கொண்டுசெல்லப் போகிறோம் என்று சொன்னதனால்தான் வந்தார். யானை மேல் அமரவேண்டுமென்றால் இவற்றை அணிக என்று சொன்னதனால் ஆடையணிகளை சூடியிருக்கிறார். அவருக்கு முன் ஆடி எதையும் காட்ட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன்” என்றான்.
“நன்று” என்று சொன்னபடி பூரிசிரவஸ் அணிச்சிற்றறைக்குள் நுழைந்தான். அங்கே ஏழு சமையர்கள் அவர்களின் தோள்களுக்குமேல் தலையெழ அமர்ந்திருந்த பால்ஹிகருக்கு ஒப்பனை செய்துகொண்டிருந்தார்கள். பூரிசிரவஸை கண்டதும் அவர்கள் திரும்பி வணங்கினார்கள். பால்ஹிகர் பூரிசிரவஸை திரும்பிப்பார்த்து “யானை ஒருங்கிவிட்டதா?” என்றார். “வெளியே நின்றிருக்கிறது. தங்களுக்காக காத்திருக்கிறது. இன்னமும் இவையெல்லாம் முடியவில்லையா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “ஆம், முடிந்துவிட்டது” என்று அவர் எழுந்தார். “இல்லை, இல்லை. இன்னும் சற்று எஞ்சியிருக்கிறது. அமருங்கள், பிதாமகரே” என்றான் மூத்த சமையன்.
“இவன் என்னை ஏதோ செய்கிறான். என்மேல் சேற்றை பூசுகிறான்” என்றார் பால்ஹிகர். “இவன் தலையை அறைந்து உடைத்து மூளைக்குழம்பு வழிவதை பார்க்கவேண்டும் என்று சற்றுமுன் நினைத்தேன்.” சமையர் திகைத்து பின்னகர்ந்து மூச்சை இழுத்துப்பிடித்தனர். அவர்களை நோக்கி ஆறுதலாக புன்னகைத்தபின் “அது சேறல்ல பிதாமகரே, செங்குழம்பு” என்றான் பூரிசிரவஸ். “அது எதற்காக? ஏன் அதற்கு அவ்வளவு கெடுமணம்?” என்றார் பால்ஹிகர். பூரிசிரவஸ் “அது கெடுமணமல்ல, நறுமணம் பிதாமகரே” என்றான். “இல்லையே, இது குட்டிபோட்ட ஓநாயின் அடிவயிறுபோல மணம் கொண்டிருக்கிறது” என்று அவர் சொன்னார். பூரிசிரவஸ் அதில் சற்று புனுகு உள்ளது என்பதை உணர்ந்து “அந்த மணம் ஏதென்று நீங்கள் இன்னுமா உணரவில்லை? யானைத்துதிக்கையின் குழாய்க்குள் உள்ள மணம் இது. யானைக்கு இது பிடிக்கும்” என்றான். பால்ஹிகர் முகம் மலர்ந்து “ஆம், நான் எண்ணினேன். நறுமணம்” என்று தன் கையைத் தூக்கி முகர்ந்தார். “சற்று பொறுங்கள்! இதோ முடிந்துவிடும்” என்று அவன் சமையர்களுக்கு கண் காட்டினான்.
பூரிசிரவஸிடம் அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே சமையர்கள் அவரை அணிந்தொருக்கினர். அவர் இடையில் வெண்ணிறப் பட்டாடை அணிந்து பொற்பட்டுக் கச்சை கட்டியிருந்தார். மேலாடையாக பொன்னூல் பின்னல்கள் செய்த சீனப்பட்டுச் சால்வையை அவருக்கு போர்த்தினார்கள். அவர் அதை எடுத்து பிரித்துப் பார்த்து “இது எதற்காக?” என்றார். “பிதாமகரே, தாங்கள் இதை அணிந்துகொள்ள வேண்டும். மேலாடையின்றி நாம் யானைமேல் அமரக்கூடாது” என்றான். “யானைக்கு அது எப்படி தெரியும்? அதன் கண்கள் கீழே அல்லவா உள்ளன?” என்று அவர் கேட்டார். பூரிசிரவஸ் “அதன் கண்கள் மேலேயும் பார்க்கமுடியும்” என்றவுடன் அவர் எழுந்து “நான் உடனே அந்த யானையை பார்க்க வேண்டும்” என்றார். “சற்று பொறுங்கள், ஒருசில கணங்கள்” என்று அவன் மீண்டும் அவரை அமரவைத்தான்.
அவர் எழுவதையும் அமர்வதையும் பொருட்படுத்தாமலேயே சமையர்கள் அவருக்கு கைவளையையும் கச்சைமுறியையும் அணிவித்தனர். கழுத்தில் மணியாரமும் சரப்பொளி ஆரமும் அணிவிக்கப்பட்டபோது அவர் குனிந்து பார்த்து புன்னகைத்து பூரிசிரவஸிடம் “இவை நன்று. இவற்றை எனக்கே கொடுத்துவிடச் சொல்” என்றார். “தங்களுக்குத்தான்” என்றான். “எனக்கு இவற்றை ஒரு பொதியில் கட்டி கொடுக்கச் சொல். நான் மலைக்கு கொண்டுசெல்கிறேன்” என்றார். “உங்கள் இல்லத்து மறுமகள்களுக்கு இதை அளிக்கவிருக்கிறீர்களா?” என்றான். “எந்த மறுமகள்கள்?” என்று அவர் ஆர்வமாக கேட்டார். “பனிமலைமேல் இருப்பவர்கள். ஏழு மைந்தரின் மனைவியர்” என்றான். “எந்தப் பனிமலை? ஏழு மைந்தர் எவருக்கு?”
பூரிசிரவஸ் புன்னகைத்து “நீங்கள் செல்லவிருக்கும் மலை எது?” என்றான். அவர் குழம்பி சுட்டுவிரல் அசைவிலாது நிற்க புன்னகையுடன் சிலகணங்கள் எண்ணி நோக்கி “தெற்கே… பெரிய மலை ஒன்று… யானைதான் அதன்மேல் ஏறும்” என்றார். பின்னர் தன் மணியாரத்தை அசைத்து “யானை இதைப்போலத்தான் ஆரம் அணிந்துள்ளது. ஆனால் அதில் நல்ல ஓசை எழுகிறது” என்றார். “இதிலும் ஓசை எழும்” என்றான் பூரிசிரவஸ். “அது இன்னும் பெரியது” என்றார் பால்ஹிகர். “இது எனக்குரியதுதானே?” என்று சமையர்களை ஐயமாக நோக்கியபடி கேட்டார். “தாங்கள் யானையிலிருந்து இறங்கியதுமே கழற்றிக் கொடுத்துவிடச் சொல்கிறேன்” என்றான் பூரிசிரவஸ்.
அவர் இரு கால்களையும் விரித்து கைகளை நீட்டியபடி “யானைமேல் படுக்கமுடியுமா?” என்றார். “தாங்கள் யானைமேல் நின்றிருக்கக்கூட முடியும்” என்றான் பூரிசிரவஸ். பால்ஹிகர் “நிற்க முடியுமா?” என்று ஆவலுடன் திருப்பி கேட்டார். பூரிசிரவஸ் “முடியும். நான் நிற்கச் செய்கிறேன்” என்றான். மென்மையாக “அந்தப் பொன்முடியை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்” என்றான். “இது எதற்காக?” என்று அதை கையிலே வாங்கி பார்த்தார். அதை தலைகீழாகத் திருப்பி “உணவுண்ணும் கலம் போலிருக்கிறது” என்றார்.
“நீங்கள் இதை தலையில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் யானை ஒப்புக்கொள்வதில்லை” என்றான் பூரிசிரவஸ். “யானைக்கு இதெல்லாம் எப்படி தெரியும்?” என்று அவர் கேட்டார். “யானை பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது, பிதாமகரே. அது அரசர்களை மட்டுமே தன் மேலேற்றும். தாங்கள் அரசர்போல் தோற்றமளிக்க வேண்டுமல்லவா?” என்றான் பூரிசிரவஸ். பால்ஹிகர் அதை புரிந்துகொண்டு “ஆம்” என்றபின் கண்சிமிட்டி “நாம் யானையை ஏமாற்றிவிடலாம் இல்லையா?” என்றார். பின்னர் கண்களை மூடிக்கொண்டு “நான் யானைமேல் ஏறி மலையுச்சிக்கு செல்லமுடியுமா?” என்றார்.
அவர் தலையில் சமையர் பொன்முடியை பொருத்தினார். காதுகளில் குண்டலங்களை இருவர் சீரமைத்தனர். தோள்வளைகளை இருவர் கட்டினர். “ஆம் பிதாமகரே, யானை மலைமேல் ஏறும்” என்றான் பூரிசிரவஸ். “அது முகில்மேல் நடக்குமா?” என்று அவர் கேட்டார். “ஆம், அதன் கால்கள் பெரியவைதானே?” என்று அவன் சொன்னான். “ஆம், எனக்கும் தெரியும்” என்ற பின் அவர் கண் திறந்து அவனை நோக்கி புன்னகைத்தார். “ஆம், மிகப் பெரிய கால்கள்” என்றார். கண்களைத் திறந்து அவனை நோக்கி “நான் அதில் ஏறி முகில்கள்மேல் சென்று…” என்றபின் கையை தூக்கி “பார்த்திபன் எங்கே?” என்றார். பின்னர் தலையை அசைத்தபடி “நான் என் நான்கு உடன்பிறந்தாரையும் அன்னையையும் சுமந்துகொண்டு மலைமேல் ஏறினேன். ஆனால்…” என்றபின் அவனிடம் “யானை இருந்தால் தேவைப்படாது” என்றார்.
பூரிசிரவஸ் விந்தையானதோர் உளஎழுச்சியை அடைந்தான். அவர் மூன்று வயது சிறுவனுக்குரிய புன்னகையையும் கண்களையும் கொண்டிருந்தார். அகவை என்பது ஒரு வட்டச்சுழற்சி போலும். கைக்குழந்தை ஆகிவிடுவாரா என்ற எண்ணம் எழுந்ததும் அவனுக்கு புன்னகை எழுந்தது. ஆனால் ஒருகணம் கழித்து அந்த உள எழுச்சி ஏன் என்று புரிந்தது. “பிதாமகரே, என்ன சொன்னீர்கள்? நான்கு உடன்பிறந்தாரும் அன்னையுமா? நீங்கள் சுமந்தீர்களா?” பால்ஹிகர் அதை செவிகொள்ளாமல் “யானையின் பெயரென்ன?” என்று கேட்டார். பூரிசிரவஸ் பெருமூச்சுடன் இயல்பாகி “அங்காரகன்” என்று சொன்னான். “அங்காரகனா? அது திசையானை அல்லவா?” என்றார். “ஆம், செவ்வாயும்கூட. முப்புரமெரித்தவனின் மூன்றாம் விழியான வீரபத்ரரே செந்தழலாக எரிந்து அங்காரகன் ஆனார். செவ்வாய் என்று அவரை வழிபடுகின்றனர்” என்றான் பூரிசிரவஸ். ஆர்வத்துடன் எழுந்து “இந்த யானை என்ன வண்ணம்?” என்று பால்ஹிகர் கேட்டார். பூரிசிரவஸ் புன்னகையுடன் “கருமைதான்” என்றான்.
“அதைப்பற்றி சொல்” என்றார் பால்ஹிகர். “அங்காரகன் பாரத்வாஜ கோத்திரத்திற்குரியவர். அவந்திநாட்டுக்கு முழுமுதல் தெய்வம். கதை, முப்புரிவேல், வாள், வேல் கொண்ட நான்கு கையர். அனலாடை தழல்ஆடை எரிமணிமாலை சூடியவர். செங்கொன்றை மலர் அவருக்குரியது. எட்டு செவ்வாடுகள் பூட்டிய தேரில் மேருமலையை வலம் வருகிறார். கதிர்மண்டலத்திற்கு தெற்கே இவருடைய இடம்” என்றான் பூரிசிரவஸ். “அந்தப் பெயரை ஏன் யானைக்கு இட்டார்கள்?” என்றார் பால்ஹிகர். “பிதாமகரே, முப்பதாண்டுகளுக்கு முன் அரசருக்கு பிறவிநூல்கணித்த நிமித்திகர் ராசிமண்டலத்தில் செவ்வாய்க்குறை உள்ளது என்றனர். அதன்பொருட்டு அஸ்தினபுரிக்குத் தெற்கே அங்காரகன் ஆலயம் அமைக்கப்பட்டு அழல்வேள்வியும் பலிகொடையும் நிகழ்ந்தது. அரசர் அந்நோன்பிலிருக்கையில் அங்காரகனை சிறுமகவாக இங்கே கொண்டுவந்தனர். நிமித்திகர் அந்த நற்பொழுதை கணித்து அதற்கு அங்காரகன் என்று பெயரிட்டனர்.” பால்ஹிகர் கண்களை மூடிக்கொண்டு “ஆம்” என்றார். மெல்லிய குறட்டை ஒலி அவரிடமிருந்து எழ தலை சற்றே அசைந்தது.
சமையர் “முடிந்தது” என்றார்கள். பூரிசிரவஸ் அவர் தோளை தொட்டான். பால்ஹிகர் எழுந்து நிற்க பொன்பூச்சுள்ள குறடுகளை சமையர் எடுத்து முன்னால் இட்டார்கள். “இதை அணிந்து கொள்ளுங்கள்” என்றான் பூரிசிரவஸ். “இது எதற்காக?” என்றபின் பூரிசிரவஸை பார்த்து “யானை இதை விரும்பும் அல்லவா?” என்றார். “ஆம், யானை குறடுகளை விரும்புகிறது. வருக!” என்று அவர் கைகளை பற்றிக்கொண்டான். அவர் காலெடுத்துவைத்து நடந்தபடி “நல்ல ஓசை. ஆனால் இரும்புக் குறடுகள் இன்னும் ஓசையெழுப்புபவை” என்றார்.
இடைநாழியில் அவர் அவனுடன் நடக்கையில் எதிர்நின்ற வீரர்கள் அனைவரும் திகைத்து வாய்திறந்து விழிமலைக்க அசைவிழப்பதை அவன் பார்த்தான். பதற்றத்தில் தான் அவரை சரியாக பார்க்கவில்லையோ என்ற எண்ணம் வந்து திரும்பி நோக்கியபோது அவனுக்கும் உளநடுக்கு ஏற்பட்டது. பால்ஹிகர் மானுடர் எவருக்கும் இயலாத பேருரு கொண்டிருந்தார். அவரது தலை அவனுடைய நோக்குக்கு மிக அப்பால் எங்கோ இருந்தது. மெல்லிய பனித்துகள்தொகை போன்ற வெண்தாடியின் கீழ்ப்பகுதியைத்தான் அவனால் அண்ணாந்து பார்க்கமுடிந்தது. மூக்குத்துளைகள் கீழிருந்து நோக்க அகன்று தெரிந்தன. வெண்ணிறத் தோள்கள், நீலநரம்போடிய புயங்கள், தசையிறுகி தோல்வார்களென இழுத்துக்கட்டப்பட்ட முழங்கைகள். ஒவ்வொரு கையும் ஒரு தனி விலங்குபோல் பெரிதாக இருந்தது. அவர் மலைமேல் சென்றபின்னர் மேலும் உயரமும் பருமனும் ஆற்றலும் கொண்டுவிட்டிருந்தார் என்று அப்போதுதான் புரிந்தது.
அவரை கண்ணெதிரில் நோக்கி, கையால் தொட்டு அழைத்துச்சென்றபோதுகூட உள்ளம் மானுடன் என்று நம்ப மறுத்தது. விண்ணிறங்கி வந்த கந்தர்வன். இறப்பே அற்றவன். அவன் நோக்கின் முன் பெருநகரங்கள் உருவாகி வந்திருக்கும். பேரரசுகள் அழிந்து மறைந்திருக்கும். தலைமுறைகள் அலையடித்துக் கொண்டிருக்க அனைத்துக்கும் அப்பால் இளமைந்தனுக்குரிய தாவிச்செல்லும் விழிகளும் கள்ளமற்ற புன்னகையுமாக அவர் நின்றிருந்தார். அனைவரும் சொல்லிழந்து நிற்க அவருடைய குறடோசை சுவர்கள் எதிர்கூற ஒலித்தது.
எதிரே வந்த கனகர் பால்ஹிகரை பார்த்ததும் திகைத்து ஓரடி பின்னால் எடுத்து வைத்து நின்றார். பூரிசிரவஸ் “பிதாமகரை அவைக்கு கொண்டுசெல்வோம்” என்றான். “யானை எங்கே?” என்று கனகரிடம் பால்ஹிகர் கேட்டார். கனகரின் வாய்மட்டும் திறந்தமைந்தது. பூரிசிரவஸ் “நாம் யானையை நோக்கித்தான் செல்கிறோம், பிதாமகரே. அதற்கு முன் இங்கொரு சிறு பணி உள்ளது. இங்கு ஓர் அவையில் அரசர்கள் அனைவரும் கூடியிருக்கிறார்கள். அவர்கள் நடுவே நீங்கள் சென்று ஒரு பீடத்தில் அமரவேண்டும்” என்றான். “எதற்காக?” என்றார் பால்ஹிகர். “அது நல்ல பீடம். இந்த ஆடையுடன் தாங்கள் அந்த பீடத்தில் அமர்வது மிக அழகாக இருக்கும்” என்றான்.
பால்ஹிகர் குனிந்து தன் கச்சையையும் இடையாடையையும் பார்த்து “ஆம், இவை நல்ல ஆடைகள்” என்றபின் மேலாடையை கையால் தூக்கி “ஆனால் இது எனக்கு பிடிக்கவில்லை” என்றார். “என் மேல் எதுவோ விழுந்துகிடப்பதுபோல் இருக்கிறது.” பூரிசிரவஸ் “அது அவ்வாறே இருக்கட்டும். சற்று நேரம்தானே?” என்றான். “யானைக்கும் இது பிடிக்காது” என்று அவர் சொன்னார். “யானை பெயர் செவ்வாய்தானே?” பூரிசிரவஸ் “இல்லை, அங்காரகன்” என்றான். “ஆம், அங்காரகன். செந்நிறமான யானை.” அவர் திரும்பி கனகரிடம் “செந்நிறமான யானை. காந்தள் மலர்போல!” என்றார்.
அவை வாயிலில் நின்றதும் “பிதாமகரே, இந்த அவையில் தங்களை அனைவரும் வணங்குவார்கள்” என்றான் பூரிசிரவஸ். “ஏன்?” என்று அவர் நின்றார். “தாங்கள் மூத்தவர் என்பதனால்” என்றான். பால்ஹிகர் “யார்?” என்று கேட்டார். “மூத்தவரே, தாங்கள் யானைமேல் ஏறப்போகிறீர்கள் அல்லவா?” பால்ஹிகர் “ஆம், ஏறுவேன்” என்றார். “அந்த யானைமேல் வேறு எவரும் ஏறமுடியாது. பேருருவர் என்பதனாலும், அச்சமற்றவர் என்பதனாலும்தான் அந்த யானைமேல் தாங்கள் மட்டும் ஏறமுடிகிறது.” பால்ஹிகர் தலையாட்டி புன்னகைத்து “ஆம், எனக்கு அச்சமில்லை” என்றார். தலையை ஆட்டி “நான் யானையை அஞ்சுவதே இல்லை” என்றார். “ஆகவே தங்களை அனைவரும் வணங்குவார்கள். அவர்களிடம் நீங்கள் தலைதொட்டு நீடுழி வாழ்க வெற்றி கொள்க என்று வாழ்த்த வேண்டும். அதன் பின்னர்தான் நாம் யானைமேல் ஏறப்போகிறோம்” என்றான் பூரிசிரவஸ்.
பால்ஹிகர் “நன்று” என்றபின் “இவன் யார்?” என்று கனகரைச் சுட்டி கேட்டார். “இவர் அமைச்சர்” என்றான் பூரிசிரவஸ். “இவன் உடம்பு ஏன் இவ்வாறு வெளிறியிருக்கிறது? உடும்பின் அடிப்பகுதியை போலிருக்கிறான்” என்றார். பூரிசிரவஸ் “அதனால்தான் அவரை யானை ஒத்துக்கொள்வதில்லை” என்றான். “ஆம்” என்றபின் பால்ஹிகர் தன் பெரிய கைகளை நீட்டி கனகரின் தோளை பிடித்தார். “அழுத்தி கசக்கினால் இவன் எலும்புகள் முறிந்துவிடும். யானை துதிக்கையால் மெல்ல தட்டினாலே போதும், இவன் விழுந்துவிடுவான்” என்றார். கனகர் குளிர் கொண்டவரைப்போல் நின்று நடுங்கினார். பூரிசிரவஸ் அவரை கண்களால் பார்த்து ஒன்றுமில்லை என்றபின் “வருக, பிதாமகரே!” என்று அவையை ஒட்டிய நுழைவறைக்குள் அழைத்துச்சென்றான்.
அவனைத் தொடர்ந்து வந்த கனகர் தாழ்ந்த குரலில் “இவர் மானுடரா என மெய்யாகவே ஐயம்கொள்கிறேன், பால்ஹிகரே” என்றார். “மானுடரேதான்” என்றான் பூரிசிரவஸ். “நாம்தான் முழுமானுடரல்ல.” கனகர் “சற்று முன்னர் பார்த்தபோதுகூட திகைப்பெழவில்லை. இப்போது இவர் மானுடரல்ல என்றே தோன்றுகிறது. இவர் பிறிதொருவர்” என்றார் கனகர். “அஞ்சவேண்டியதில்லை, அமைச்சரே. சென்று அலுவல்களை பாருங்கள். அவையில் அழைப்பு வரும்போது சொல்லுங்கள்” என்றான். “அழைப்பு பலமுறை வந்துவிட்டது” என்று கனகர் சொன்னார்.
பூரிசிரவஸ் “பிதாமகரே வருக, நாம் அவை நுழைவோம்” என்றான். பால்ஹிகர் அங்கிருந்த பெரும்பீடத்தை தன் இடக்கையால் தூக்கிக்கொண்டு வந்தார். “இதை அங்கு வையுங்கள், இது எதற்கு?” என்றான். “நமக்கு அங்கு அமர பீடம் வேண்டுமல்லவா?” என்றார் பால்ஹிகர். “நான் எங்கு சென்றாலும் எனக்கான பீடத்தை எடுத்துச் செல்வேன். நானே மரத்தால் பீடம் செய்து வைத்திருந்தேன். பாறையில் அமர்ந்தால் குளிருமல்லவா?” பூரிசிரவஸ் “அங்கு வேறு பீடம் இருக்கிறது” என்று அதை வைக்கும்படி கையால் அழுத்தினான். அதை வைத்துவிட்டு “இது நல்ல பீடம். இதை நான் மலைக்கு கொண்டு செல்கிறேன்” என்றார்.
“கொண்டு செல்வோம். தாங்கள் யானைமேல் ஏறிய பிறகு இந்த பீடத்தை தங்களுக்கு அளிக்கச் சொல்கிறேன். வருக!” என்று கைபற்றி வாயிலின் அருகே சென்று நின்றான். கனகர் வெளியே சென்று எதையோ பார்த்தபின் விரைந்து அவைக்குள் ஓடினார். அவருடைய உடல்தசைகள் குலுங்கின. மேலாடையை சீர்செய்து அரசவைக்குள் நுழைந்து நிமித்திகனிடம் ஓரிரு சொற்கள் பேசியபின் திரும்பி பூரிசிரவஸை பார்த்து கைகாட்டினார். “வருக, பிதாமகரே! கைகூப்பியபடி நுழைக!” என்றான். பூரிசிரவஸின் தோள்களில் கையை வைத்து “எனக்கு உண்மையில் இந்த அவை பிடிக்கவில்லை. அங்கே ஏராளமான ஓநாய்கள் கூடியிருப்பதுபோல் ஓசை எழுகிறது” என்றார். “அது அரசர்களின் ஓசை. அந்த ஓசையை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை” என்றான் பூரிசிரவஸ்.
பால்ஹிகர் இரு கைகளையும் கூப்பியபடி சீர்நடையிட்டு முகப்பு வாயிலினூடாக அவைக்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து சென்ற பூரிசிரவஸ் அவருடைய உடலால் அவை முற்றிலும் மறைக்கப்பட்டிருந்த போதிலும்கூட ஆயிரம் பெருமுரசுகள்மீது ஒன்றாக கோல் விழுந்ததுபோல் எழுந்த பெரும் கார்வையோசையை கேட்டான். கூடியிருந்த அவையினர் அனைவரும் தங்களை அறியாமலேயே கைகூப்பியபடி எழுந்து நின்றனர். திருதராஷ்டிரரும், பீஷ்மரும், துரோணரும், கிருபரும், சல்யரும் எழுந்து கைகூப்பினர். அவர்களின் விழிகளில் தெரிந்த மலைப்பை பூரிசிரவஸ் கண்டான்.
முன்னரே எழுந்து நின்றிருந்த துரியோதனனும் துச்சாதனனும் கைகளைக் கூப்பியபடி பால்ஹிகரை நோக்கி வந்து அவர்முன் குனிந்து கால்தொட்டு வணங்கி சென்னி சூடினர். அவர் அவர்கள் தலைமேல் கைவைத்து “வெற்றி சூழ்க! புகழ் நிறைக!” என்று வாழ்த்தினார். பின்னர் துச்சாதனனைப் பார்த்து “இவன் தோள்கள் பெரியவை. இவனிடம் நான் மற்போரிட விரும்புகிறேன்” என்றபின் பூரிசிரவஸ் எங்கே என்று திரும்பிப் பார்த்தார். பூரிசிரவஸ் “இவர்கள் தங்கள் பெயர் மைந்தர்கள். இவர்கள் அனைவரிடமும் தாங்கள் போர்புரிய முடியும். வருக!” என்று அவரை பீடம் நோக்கி அழைத்துச் சென்றான்.
பால்ஹிகருக்கான அரியணை அரசஅரியணைக்கு நிகராக போடப்பட்டிருந்தது. மாமன்னர் ஹஸ்தியின் அரியணை அது. கைப்பிடியில் சிம்மங்கள் வாய்திறந்து செவ்வைர விழிகள் சுடர நின்றிருந்தாலும் தலைக்குமேல் மத்தகம் தூக்கிய இரு யானைகள் துதிக்கை பின்னி உருவாக்கிய மலர் மேல் தாமரைக்குடை கொண்டிருந்தது. துரியோதனனின் அரியணையைவிட இருமடங்கு பெரியதாக இருந்த அதில் ஹஸ்திக்குப் பின் எவரும் அமர்ந்ததில்லை. ஆண்டுக்கொருமுறை மூதாதை ஹஸ்திக்குரிய மீன்நாளில் பலிகொடையும் பூசனையும் அளிக்கப்படும்போது மட்டும் கருவூலத்தில் இருந்து அதை கொண்டுவந்து அரசவையில் அமைப்பார்கள். ஹஸ்தியின் மாபெரும் வாளையும் பேருருக்கொண்ட கவசங்களையும் அதில் வைத்து அரசரும் குடிகளும் வணங்கினர். அந்த அரியணையும் கவசமுமே ஹஸ்தியின் பேருருவை அவர்களின் கனவில் வளர்ந்தெழச் செய்தது.
அஸ்தினபுரியின் துணையரசர்கள் அதை முன்னர் பார்த்திருக்கவில்லை. அதன் அளவைப் பார்த்து அவர்கள் குழம்பியிருந்தனர். அஸ்தினபுரியின் வெற்றிச்சிறப்பை காட்டும்பொருட்டு உருவாக்கி கொண்டுவந்து போடப்பட்ட ஒரு சிறப்பு அடையாளம் அது என சிலர் உய்த்துக்கொண்டனர். “ஹஸ்தியின் பீடம் அது என்கின்றனர்” என்றார் கலிங்கர். “குலப்பெருமையை அவைக்கு காட்டும்பொருட்டு கொண்டுவந்து போட்டிருக்கின்றனர்.” அவர் அருகே அமர்ந்திருந்த மாளவர் “ஹஸ்தி மானுடன் அல்லவா? இது மானுடர்க்குரியதல்ல” என்றார். ஆனால் பால்ஹிகர் அதில் அமர்ந்ததும் அவருடைய உடலுக்கு அது பொருந்துவதைக் கண்டு அனைவரும் சொல்லவிந்தனர். அவையினரின் விழிகள் சூழ அவர் அதில் அமர்ந்து கைகளை கைப்பிடியில் வைத்து அவையை கூர்ந்து நோக்கியபின் பூரிசிரவஸை பார்த்தார்.
வாழ்த்தொலிகள் எழாமல் அவை பெருமுரசின் உட்பக்கம் போன்ற அழுத்தமான முழக்கத்தையே எழுப்பிக்கொண்டிருந்தது. கனகர் அவை மேடையிலேறி கைகளை விரித்து “குருகுல பிதாமகர் வாழ்க! ஹஸ்தியின் பெயர்மைந்தர் வாழ்க! மண்ணிறங்கி வந்த விண்ணுருவர் வாழ்க!” என்று கூவியதும் அவையினர் அனைவரும் வெறிகொண்டவர்போல் கைகளை வீசி வாழ்த்தொலி எழுப்பினர். பலர் வெறியாட்டெழுந்திருப்பதைப்போல் தன்னிலை மறந்திருப்பதை பூரிசிரவஸ் கண்டான். சிலர் அழுதுகொண்டிருப்பதுபோல் தோன்றியது. “பிதாமகரே! பிதாமகரே!” என்று பலர் பொருளற்று கூவினர். தெய்வக்கருவறை முன் நின்றிருக்கும் நிலைமறந்த அடியார் போலிருந்தனர்.
முன் நிரையிலிருந்து பல அரசர்கள் உணர்வெழுச்சியுடன் கைகளை விரித்தபடி அவை மேடை நோக்கி வர பிதாமகர் பீஷ்மர் எழுந்து கைகளை விரித்து அவர்களை அவையமரச் சொன்னார். “பிதாமகரை வணங்கியாக வேண்டும்! பிதாமகர் அருகே சென்றாக வேண்டும்!” என்று கூவினர். பீஷ்மர் “இங்கிருக்கும் அனைவருக்கும் அவர் பிதாமகரே. இவ்வவையினர் அனைவரும் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவோம். ஒருவர்பின் ஒருவராக அவை மேடைக்கு செல்வோம். அமைக! அமைக!” என்று கூவினார். துரோணர் “அவை அடங்குக! அனைவரும் அவரை அடிபணிய வாய்ப்பமையும்” என்றார்.
பால்ஹிகர் பூரிசிரவஸை தன் சுட்டுவிரலை நீட்டி அழைத்து “நான் யானைமேல் ஏறவேண்டுமே?” என்றார். “பொறுங்கள் பிதாமகரே, இந்த அவையினர் தங்களிடம் வாழ்த்து பெற்ற பின்னர் யானைமேல் ஏறலாம். யானை இப்போது உணவுண்டு கொண்டிருக்கிறது” என்றான். “உணவா?” என்று அவர் கேட்டார். “ஆம், நாம் நெடுந்தொலைவு செல்லவேண்டியிருக்கிறது. மலைமேல் ஏறவேண்டுமென்றால் அதற்கு உணவு தேவையல்லவா?” என்றான் பூரிசிரவஸ். பால்ஹிகர் “ஆம், உணவு கொடுக்கச் சொல்” என்றபின் அவையை நோக்கி திரும்பி “பெருங்கூச்சலிடுகிறார்கள். யானையைக் கண்டு அஞ்சியிருப்பார்கள் என்று எண்ணுகிறேன்” என்றார்.
நிமித்திகன் அறிவிப்புமேடையேறி “பிதாமகர் பீஷ்மர் பேசுவார். அவையோர் அமைக! பீஷ்மர் பேசவிருக்கிறார்” என்று கூவ பீஷ்மர் படியேறி மேலே வந்தார். பூரிசிரவஸ் அவரை வணங்க அவர் தாழ்ந்த குரலில் “அவ்வாறே இருக்கிறாரா?” என்றார். “ஆம், பிதாமகரே” என்றான் பூரிசிரவஸ். “உளம் அழிந்துவிட்டிருக்கிறது. அவையில் அமர்வாரா?” என்றார். “ஆம்” என்ற பூரிசிரவஸ் மேலும் தாழ்ந்த குரலில் “ஆனால் எவரையும் தெரியவில்லை அவருக்கு” என்றான். “எண்ணினேன்” என்றார் பீஷ்மர். பின்னர் கைகளை கூப்பியபடி முன்னால் சென்று பால்ஹிகரின் கால்களைத் தொட்டு சென்னி சூடி வணங்கினார். பால்ஹிகர் அவர் தலைமேல் கைவைத்து “புகழ் சேர்க!” என்றார்.
பீஷ்மர் எழுந்து பூரிசிரவஸிடம் “தன்னை அறியாமல் சொல்கிறார். எனினும் சரியாகவே அவர் நாவில் வருகிறது. மூதாதையரும் அன்னையரும் நாமறந்தும்கூட நாம் வெற்றி பெறுவோம் என்று வாழ்த்துவதில்லை” என்றார். எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்று பூரிசிரவஸுக்கு தெரியவில்லை. அவன் புன்னகைப்பதுபோல் உதடுகளை நீட்டினான். “இங்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். படை ஒருக்குவதற்காக எல்லையிலிருந்ததனால் உடனே இங்கு வரமுடியவில்லை. முன்னரே வந்து பிதாமகரை சந்தித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது” என்றார் பீஷ்மர்.
“அவர் தங்களை அடையாளம் காணவில்லை” என்றான் பூரிசிரவஸ். “நான் அவரை அடையாளம் காண்கிறேன். உண்மையில் என் தோள்களிலிருந்து பெருஞ்சுமையொன்று எழுந்தகன்றது போலிருக்கிறது. இக்குடியின் மூத்தவரென்ற நிலையில் இருந்தேன். இன்று அதை இவருக்கு அளித்துவிட்டேன்” என்றார். பீஷ்மரைத் தொடர்ந்து வந்த கிருபரும் துரோணரும் பிதாமகரை வணங்கி வாழ்த்துகொண்டு பீஷ்மர் அருகே வந்து நின்றனர். துரோணர் “என்னை வாழ்த்தினார், அழியா புகழ் கொள்க என்றார்” என்று சொல்ல கிருபர் “அவர் அனைவரிடமும் அச்சொல்லையே உரைக்கிறார்” என்றார்.
திருதராஷ்டிரர் சங்குலன் தாங்க, சஞ்சயன் தொடர, மேடையேறி வந்து பால்ஹிகரை வணங்கினார். பீடத்திலிருந்து எழும்போதே அவர் விழிநீர் வழிய நடுங்கிக்கொண்டிருந்தார். பலமுறை தள்ளாடியபடி நிற்க சங்குலன் அவரை நிலைப்படுத்தினான். பால்ஹிகரை வணங்கும்போது திருதராஷ்டிரர் மெல்ல விசும்பினார். பால்ஹிகர் அவர் தலையைத் தொட்டதும் கேவியபடி தரையில் அவர் காலடியில் அமர்ந்துவிட்டார். சங்குலன் அவரை தூக்க சஞ்சயன் “அரசே, எழுக… மேலும் அரசர் வணங்க வருகிறார்கள்” என்றான்.
அவர் தன் கைகளால் துழாவி பால்ஹிகரின் கால்களை தொட்டார். பெரிய பாதங்களை அவர் விரல்கள் வருடி வருடி பதைத்து அலைந்தன. சஞ்சயன் “அரசே, எழுக!” என்றான். சங்குலன் அவரை தூக்க அவர் அவனுடைய கைகளில் தொய்ந்து கிடந்தவராக மேடையிலிருந்து கீழிறங்கினார். பீடத்தை அடைந்தபோது தோள்கள் குலுங்க அழுதுகொண்டிருந்தார். பீடத்திலமர்ந்து இரு கைகளாலும் தலையைத் தாங்கி விம்மி விம்மி அழுதார். சல்யரும் சகுனியும் ஜயத்ரதனும் மேடையேறி பால்ஹிகரை வணங்கினர்.
கனகர் “அஸ்தினபுரியின் துணை அரசர்கள் அனைவரும் பிதாமகரை வணங்கலாம்” என்று அறிவித்தார். ஒவ்வொருவராக மேடையேறி வந்து அவர் காலடி தொட்டு சென்னிசூடி வணங்கினர். பல மன்னர்கள் கைகூப்பி உடல் நடுங்க விழிநீர் வழிந்து மார்பிலும் ஆடைகளிலும் சொட்ட நடந்து வந்தனர். சிலர் அவர் கால்களைத் தொட குனிந்தபோது நிலைதடுமாறி முன்னால் விழப்பார்த்தனர். உடன் வந்த இளவரசர்கள் அவர்களை பற்றிக்கொண்டனர். சிலர் அவர் கைகளைத் தொட்டு தங்கள் தலைமேல் வைத்து கண்களில் ஒற்றினர். சிலர் முழந்தாளிட்டு அவர் முன் அமர்ந்து அவர் தொடைமேல் தலைவைத்துக்கொண்டனர்.
மெல்ல மெல்ல அவ்வுணர்ச்சிகள் எழுந்து பெருகி அவையை ஆட்கொண்டன. அங்கிருந்த அனைவருமே அழுதுகொண்டிருப்பதை பூரிசிரவஸ் பார்த்தான். மெல்லிய விசும்பலோசையுடன் அவன் திரும்பிப் பார்த்தபோது மேடையில் அவனருகே நின்றிருந்த பீஷ்மரின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அவன் பார்ப்பதை பார்த்ததும் புன்னகைத்து “பொருளற்ற உணர்ச்சிதான், ஆனால் இப்புவியில் இதைவிடப் பொருளுள்ளது எதுவுமில்லை என்றும் படுகிறது” என்றார். பூரிசிரவஸ் புன்னகைத்தான்.
பீஷ்மர் “அகவை மூத்தவர் மட்டுமல்ல, அனைவருக்கும் மூதாதையாக இருக்கும் தகுதியும் கொண்டவர்” என்றார். பூரிசிரவஸ் “ஆம் பிதாமகரே, இப்போதுகூட இங்கிருக்கும் எவரும் அவருடன் நிகர்நின்று தோள்பொருத முடியாது” என்றான். பீஷ்மர் நெடுமூச்சுவிட்டு “மனிதர்கள் இறப்பதில்லை. இப்புவியெங்கும் பரவியுள்ள உலகியலெனும் கரையானால் அரிக்கப்படுகிறார்கள். அவை சென்று எட்டாத உயரத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார். இங்கு உயிர்துறப்பதற்காக வந்திருக்கிறார்” என்றார். பூரிசிரவஸ் “ஆம்” என்றான்.
பீஷ்மர் தனக்குத்தானே என “அதுவும் ஒருவகையில் சரிதான். ஷத்ரிய மரபின்படி நோயுற்றிறப்பது ஓர் இழிவு. படைக்களத்தில் இறப்பவரே விண்ணுக்குரியவர்” என்றார். பின்னர் இடறிய தாழ்ந்த குரலில் “தன் குருதியினன் ஒருவன் கையால் இறப்பதென்பது மேலும் சிறப்பு. அது தன்னால் தான் தோற்கடிக்கப்படுதல். மண்ணில் பிற குருதியர் எவர் முன்னாலும் தோற்றதில்லை என்ற புகழுடன் விண்ணேக இயலும்” என்றார்.