செந்நா வேங்கை - 12

tigபணிதன் காரி கையசைத்ததும் அனைத்து ஓசைகளும் நின்றன. சூழ்ந்திருந்த அத்தனை பொருட்களும் தேனீக்கூட்டம்போல் ரீங்கரிக்கத் தொடங்கின. அதுவரை இசையிலாடியவை எனத் தோன்றிய தழல்கள் பொருளிழந்து துவண்டு காற்றில் தெறித்து துணிகளை உதறுவதுபோல் ஓசையிட்டன. பொருட்கள் ஒவ்வொன்றாக கொண்டுவரப்பட்டு அன்னையின் முன் படைக்கப்பட்டன. சலங்கை கட்டப்பட்ட மாபெரும் பள்ளிவாட்கள். குருதி மொள்ளும் குடுவைகள். நிறைக்கவேண்டிய புதிய மண்கலங்கள். யுதிஷ்டிரரின் உடைவாளை ஒரு பூசகர் வந்து வாங்கிச்சென்றார். அதை மரத்தாலத்தில் வைத்து அன்னையின் முன் படைத்தார்.

பணிதன் காரி அன்னையின் முன் கரிய திரையை இழுத்துவிட்டு மந்தணவழிபாட்டை செய்யத் தொடங்கினார். கருமையை நோக்கியபடி கூடியிருந்தவர்கள் கைகூப்பி நின்றனர். கரிய திரைக்கு அப்பால் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. இருளுக்குள் பூசகனும் அன்னையும் மட்டுமே அறியும் வழிபாட்டுச் சடங்குகள் நிகழ்ந்தன. அனல் வெடித்து உலையும் ஓசையும் மூச்சொலிகளும் காற்றில் இலையுலைவதும் அன்றி எந்த ஒலியும் எழவில்லை.

உள்ளே மணியோசை கேட்டதும் பூசகர் சூக்தன் காரி கைகாட்ட அனைத்து இசைக்கலங்களும் ஒரே விசையில் பொங்கி எழுந்தன. “பலி நிகழ்க!” என்று பணிதன் காரி கையசைத்தார். சாத்யகி அந்த இசையின் ஏறுவிசையில் தன் கால்கள் நிலமூன்றாமல் எழுவதை உணர்ந்தான். மாயை தலைக்குமேல் இரு கைகளையும் கூப்பி, ஓசையின்றி  நடுங்கினாள். பின்னர் எங்கிருந்தோ ஊளையோசை ஒன்று எழுந்தது. ஒருகணம் கழித்தே அது மாயையிடமிருந்து எழுந்தது என்று சாத்யகி உணர்ந்தான். அப்பேரொலியை அச்சிறிய உடலிலிருந்து கேட்க முடியுமென்பதே விந்தையாக இருந்தது. அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்ததை உணர்ந்தான்.

அவள் தன் இரு கைகளையும் வெடிப்போசை எழ தொடைகளில் ஓங்கி அறைந்தபடி தலையை அண்ணாந்து குரல்வளை புடைக்க தொண்டை நரம்புகள் இழுபட்டு அதிர ஊளையிட்டாள். அறியா காட்டுவிலங்கொன்றின் உடல்பிளந்தெழும் கொலைவிளி. பெரும்பசியோ தாளவியலாத வலியோ கொண்டாலொழிய எவ்விலங்கும் அவ்வோசையை எழுப்புவதில்லை. அல்லது அணங்கெழுந்த விலங்குகளின் ஓசை. யானையும் சிம்மமும் புலியும் பன்றியும்கூட அவ்வப்போது அணங்கு கொள்வதுண்டு. அவற்றின் தலைக்குமேல் ஏறியமரும் காட்டுத் தெய்வங்கள் அவற்றை வெறிகொள்ளச் செய்கின்றன. கொம்புகளால் பெருமரங்களைக் குத்திப் புரட்டி தும்பிக்கை சுழற்றி தலை குலுக்கி மதங்கொண்ட யானைகள் பிளிறும். சிங்கங்கள் இரு கைகளாலும் மாறி மாறி தலையை அறைந்து பிடரி குலுக்கி ஓசையிடும். பன்றிகள் மண் கிளறி புரளும். கரடிகள் மரப்பட்டைகளை கிழித்து வீசும்.

அச்சிற்றுடலில் கூடிய தெய்வம் எது? கொற்றவை தன் கருவறைவிட்டு அவளை தன் பீடமாகக் கொண்டாள் என்று சாத்யகிக்கு தோன்றியது. திரும்பி தன் மைந்தரை பார்த்தான். அவர்களனைவரும் கைகளைக் கூப்பியபடி விழித்த கண்களுடன் அவளைப் பார்த்து நின்றிருந்தனர். அவர்கள் அச்சம் கொள்வதைப்போல தோன்றவில்லை. விழிகள் மலைத்து திறந்திருக்க வாய் சற்றே அகன்று பற்கள் தெரிய சமைந்து நின்றிருந்தனர். அவர்களுக்குள் அப்போது சொற்களேதும் இருக்காதென்று அவன் எண்ணினான். அங்கிருப்பவர்களில் தான் மட்டுமே நிலைகுலைந்து தத்தளித்துக்கொண்டிருப்பதாக தோன்றியது.

மாயை எவரென்று அங்கு கூடியிருந்த அரசர்கள் அனைவரும் நன்குணர்ந்திருந்தார்கள் என்று சாத்யகி அறிந்தான். அவள் அங்கு வரப்போவதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் அவளுடைய முதற்தோற்றம் அனைவரையுமே திகைப்புறச் செய்தது. திரௌபதியின் மாற்றுருவாகவே மாயையை அவர்கள் தங்கள் உளஉருவாக வடித்திருக்க வேண்டும். ஐந்துபுரிக் குழலுடன், கரிய திரண்ட தோள்களும், நிகர் கொண்ட உடலும், நிமிர்ந்த தலையும், பித்து நிறைந்த நீள்விழிகளுமாக வரும் ஒருத்தியை அவர்கள் எதிர்பார்த்திருக்கக்கூடும். ஆனால் அவளைக் கண்ட சில கணங்களுக்குள்ளேயே அவ்வுருவால் அவர்கள் மேலும் உள எழுச்சி கொண்டனர். அவளிலிருந்து பேருரு ஒன்று எழுந்து வான்தொட நின்றாடுவதை எதிர்பார்த்திருந்தனர். அவர்கள் கொண்ட உளஎழுச்சியை விழிகள் காட்டின.

காய்ந்த மலைப்பாம்பின் உடல்கள்போல தலையிலிருந்து பிரிந்து தொங்கிய ஐம்புரிச்சடை நிலம்தொட நீண்டிருந்தது. கைகளில் நீண்டு சுருண்டிருந்த நகங்கள். சுள்ளியை எரி என ஆட்கொண்ட, உள்ளிருந்து எழுந்த வெறி. அது அவர்கள் அனைவரையும் அச்சுறுத்தியது. அச்சம்போல் எச்சம் இலாது உள்ளத்தை நிறைக்கும் பிறிதொரு உணர்வில்லை. அவளில் எழுந்த தெய்வம் பசியும் வஞ்சமும் கொண்டு ஆர்ப்பரித்தது. அவள் உடலில் எரிந்த கண்ணுக்குத் தெரியா தழல் அங்கிருந்த அனைவர் உடலிலும் பற்றி எழுந்து கொழுந்துவிடக்கூடுமெனத் தோன்றியது.

மாயை பலிபீடத்தருகே சென்று நின்று ஆடினாள். இளம்பூசகர்கள் கொற்றவை ஆலயத்தின் வலப்பக்கமிருந்து உள்ளே நுழைந்த சிறுவழியினூடாக கொம்பு வளைந்து, மத்தகமென தலைபெருத்து, மின்னும் இரு விழிகளுக்குப் பின்னால் இருள் திரண்டதுபோல் உடல் கொண்டு நடந்துவந்த எருமைகளை அழைத்து வந்தனர். அவை எடைமிக்க குளம்புகளை நீரில் நீந்துவதுபோல் எடுத்துவைத்து, நெஞ்சுநடுப்பந்துகள் மெல்ல உலைய, மூச்செறிந்து தலைகுனிந்து நடந்துவந்தன. முதல் எருமை களமுற்றத்தைப் பார்த்ததும் நின்று பின்காலெடுத்து வைத்து தலை தாழ்த்தி முக்காரமிட்டது. அதற்குப் பின்னால் நின்ற பூசகர் மெல்ல தட்டி அதை ஊக்க முன்னால் நிற்பவர் அதற்கு முன்னால் கைகளைச் சொடுக்கி அதை அழைத்தார்.

பூசகரின் வாயிலிருந்து எழுந்த கூரிய சிற்றொலிக்கு செவி முன்கோட்டி விழியுருட்டி தூண்டிலில் சிக்கிய பெருமீன் என அவர் சுட்டுவிரலால் இழுக்கப்பட்டு முதலெருமை பலிபீடத்தை நோக்கி வந்தது. பலிபீடத்தைக் கடந்து அவர் கையை நீட்ட அதன் தலை பலிபீடத்தின் மேல் அமைந்தது. மறுபக்கம் சலங்கை மணிகள் பொருத்தப்பட்ட பெரிய பள்ளிவாளுடன் நின்றிருந்த பேருடல்கொண்ட பூசகர் வாளைச் சுழற்றித் தூக்கி மேலெடுத்து செந்நிற ஒளி இருளில் வளைந்து அணைய வாளை வீசி அதன் கழுத்தை துண்டித்தார். வாள் பீடத்தின்மேல் பட்டு விண்ணொலி எழுப்பி அதிர்ந்து நிற்க, வெட்டுண்ட தலை மறுபக்கம் உருண்டு கொம்புகள் மண்ணிலூன்ற நின்று மெல்ல சரிந்தது.

கால்கள் மண்ணில் ஊன்றி நின்று நடுங்க, பின்பு மெல்ல சரிந்து பக்கவாட்டில் விழுந்து, வயிறு பெருத்து உப்பி அதிர, குறுவால் சுழல, கால்களை உதறித்துடித்தது பலி எருமை. வெட்டுவாயில் பீறிட்ட எஞ்சிய மூச்சில் கொழுங்குருதித் துளிகள் தெறித்தன. விழுந்த தலையின் திறந்த வாய்க்குள்ளிருந்து நாக்கு வெளியே வழிந்து துடித்தது. கண்கள் உருண்டுகொண்டிருந்தன. மூச்சு அடங்கி வயிறு தழைந்ததும் குருதி குமிழியிட்டு கொப்புளங்களை ஏந்தியபடி வெளியே பாய்ந்து மண்ணில் பரவியது. அதன் பின்னங்காலை பிடித்திழுத்து அப்பாலிட்டார்கள் பூசகர்கள். அடுத்த எருமை அவர்களின் கைச்சொடுக்கில் உளம் சிக்கி வந்து பலிபீடத்தில் கழுத்தை நீட்டியது. இருளில் எழுந்த செவ்வொளிகொண்ட நாக்கு என அதை துணித்தது பலிவாள்.

மலையிறங்கும் கருங்கற்பாறைகள் என ஒன்று பிறிதால் உந்தப்பட்டு எருமைகள் பலிபீடம் நோக்கி வந்துகொண்டே இருந்தன. குருதிப் பொழிவு பெருகி முற்றம் முற்றிலுமாக நனைந்து சேறாகியது. அதில் நடந்த பூசகர்களின் கால்கள் குருதியுடன் மிதிபட்டு சகதி தெறித்தது. மீண்டும் மீண்டும் சுழன்றெழுந்த பலிவாளிலிருந்து தெறித்த குருதித்துளிகள் சூழ்ந்திருந்த அனைவர் மேலும் மழைத்தூவானம்போல் விழுந்தன. யுதிஷ்டிரர் அறியாது முகத்தில் விழுந்த குருதியை துடைக்கக் கையெடுத்து பின் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார். திரௌபதியின் நெற்றியிலும் கன்னத்திலும் குருதி கொழுந்துளியாக நின்று தயங்கி வழிந்தது. தன் கையில் விழுந்த குருதியை மெல்ல தூக்கி நெற்றியில் ஒற்றி பதித்துக்கொண்டாள் குந்தி.

பள்ளிவாள் சுழன்று வீசும்தோறும் குருதி மழையென அனைவர் மீதும் சொட்டியது. தன் முகத்திலும் தோளிலும் குருதி வழிவதை சாத்யகி உணர்ந்தான். விழுகையில் குளிரென்றும் வழிகையில் வெம்மை என்றும் தோன்றியது. மைந்தர் முகங்களும் உடல்களும் குருதியில் நனைந்திருந்தன. கூடிநின்றிருந்த முன்நிரை அரசர்கள் அனைவருமே குருதித்துளி பட்டு மெய்ப்பு கொண்டிருந்தனர். குருதி வழிய வழிய அனைவர் முகங்களும் மாறுபட்டன. அனைத்து விழிகளிலும் உள்ளுறையும் விடாய்கொண்ட பலித்தெய்வம் தோன்றியது.

வெட்டுவாய்களில் ஊற்றெனப் பெருகிய குருதியை கொப்பரைகளில் பிடித்து கலங்களில் ஊற்றி எடுத்துக்கொண்டு சென்று அன்னை முன்னால் வைத்தனர். நூற்றெட்டு எருமைகள் பலியிடப்பட்டதும் அவற்றின் குருதி நூற்றெட்டு கலங்களில் அன்னைமுன் களத்தில் படைக்கப்பட்டது. உடல்கள் இழுத்து அகற்றப்பட்ட முற்றம் விரிக்கப்பட்ட தசைப்பரப்பு என குருதியில் பந்த ஒளி மின்ன மிதித்தடங்கள் பரவிக் கிடந்தது. பூசகர்கள் பன்னிருவர் வந்து செங்கற்களை அக்குருதிக்களத்தில் அடுக்கி எரிகுளம் அமைத்தனர். வேதவேள்விக்கான எரிகுளம்போலவே அதுவும் அமைந்திருந்தது.

அவர்கள் அதன் மூன்றுபுறமும் அமர்ந்து அதனுள் விறகும் அரக்கும் நிறைத்தனர். மலைப்பாறைகளை உரசி எரியெழுப்பி அதை மூட்டினர். மான்செவிகள்போல கைகளை வைத்துக்கொண்டு தங்கள் தொல்பாடல்களை ஓதத் தொடங்கினர். கைகள் மான்களாகவும் சிம்மங்களாகவும் நாகங்களாகவும் கழுகுகளாகவும் மாறிக்கொண்டே இருந்தன. ஓசை வெவ்வேறு விலங்குகளுக்குரியதாக இருந்தது. ஒவ்வொரு எருமையிலிருந்தும் வெட்டி எடுக்கப்பட்ட ஒரு துண்டு ஊன் நூற்றெட்டு சிறு மண்தாலங்களில் அவ்வேள்விக்குளத்தைச் சுற்றி பரப்பப்பட்டிருந்தது. எரிகுளத்தில் நெய்யூற்றி விலங்கு ஊன் பெய்து தழலெழுப்பி அதில் அவ்வூனை இட்டு அவியளித்தனர். எழுந்து துடித்து கிழிந்து பறந்து அமைந்து தழைந்து மீண்டும் எழுந்து கூத்தாடியது சுடர்.

பணிதன் காரி கருவறைக்குள் ஒவ்வொரு கலமாக எடுத்து அன்னை மேல் ஊற்றி குருதியாட்டு நிகழ்த்தினார். நூற்றெட்டு குருதிக் கலங்களும் ஒழிந்தன. அன்னையின் முன் இருந்த சிறுகலத்திலிருந்து குருதியை எடுத்துக்கொண்டுவந்து அதில் கமுகுபூக்குலையை முக்கி தழல்போல் நின்று ஆடிக்கொண்டிருந்த மாயைமேல் வீசினார். நெய்த்துளிகளை எரி என அதை ஏற்று அவள் எழுந்தாடினாள். சூழ்ந்திருந்த அனைவர் மேலும் சுழற்றிச் சுழற்றி விசிறியடித்தார். குருதி உலரத் தொடங்கிய உடல்மேல் மேலும் குருதித் துளிகள் விழுந்து விதிர்க்க வைத்தன. ஓங்கிய குரலில் முழங்கியபடி குருதியை அள்ளி வீசிக்கொண்டிருந்தார் பூசகர்.

சாத்யகி தன்னுடல் முழுக்க குருதியால் நனைந்திருப்பதை உணர்ந்தான். ஆடை நனைந்து உடலுடன் ஒட்டியது. மீசையிலிருந்தும் கொழுவிய குருதித் துளிகள் திரண்டு சொட்டின. முகத்தை கைகளால் துடைக்கலாமா என்று எண்ணி பின்பு அதை தவிர்த்தான். ஒரு கணத்தில் அது ஒரு போர்க்களம் என்று பட்டது. ஆனால் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டிருந்தனர். தங்கள் குருதியுடல்களில் இருந்து எழுந்து குருதிவழியும் நுண்ணுடல்களுடன் களத்தை நோக்கிக்கொண்டிருந்தனர்.

மாயை வேள்வி நெருப்பின் அருகே நின்று உலைந்தாடினாள். அவள் உடல் நிமிர்ந்தது. நுனிக்காலில் எழுந்தபோது அங்கிருந்த அனைவரைவிடவும் உயரம் கொண்டாள். தோள்திரண்டு தலைதருக்கி எழுந்த அவளுடைய பழைய உடல் மீண்டுவிட்டதா என உளமயக்கு ஏற்பட்டது. சுழன்று ஆடியபோது ஐந்து சடைப்புரிகளும் பறந்து வட்டமிட்டன. அவையே சிறகுகளாகி அவளை அள்ளிச்சுழற்றுவதாகத் தோன்றியது. கொடுந்தாளம் அவளுடன் இணைந்துகொண்டது.

எண்ணியிராக் கணம் ஒன்றில் மாயை எழுந்து பாய்ந்து அந்த எரிகுளத்துத் தழலில் விழுந்தாள். பூசகர்கள் அதை எதிர்பாராதபோதும்கூட தாங்கள் ஓதிவந்த பாடலை நிறுத்தவில்லை. கூடிநின்ற அரசர்களிடமிருந்து ஆர்ப்பொலிகளும் கூச்சல்களும் எழுந்தன. ஊன் மெழுக்குப்பட்டு உலர்ந்திருந்த மாயையின் கூந்தல் சருகென பற்றிக்கொண்டது. நீலநிறமாகக் கொழுந்தாடி நுண்ணிதின் வெடியோசைகள் எழ தழல்விட்டு மேலெழுந்தது. அவள் உடலில் படிந்திருந்த குருதிக்கொழுப்பும் சேர்ந்துகொள்ள எரிகுளத்தில் அவள் மும்முறை எழுந்து கைவீசிக்குதித்து பின் மடிந்து விழுந்து தழலத் தொடங்கினாள்.

எரிதழலுக்குள் அவள் திறந்த வாயையும் விரித்த கண்களையும் சாத்யகி பார்த்தான். பின்னர் அது தழலின் தோற்றமயக்கம்தானோ என்று எண்ணினான். மயிரும் பின்பு ஊனும் பொசுங்கும் வாடை அடிவயிற்றை அதிரச் செய்தது. குமட்டலெழுந்து வாயை அடைய உதடுகளை இறுக்கி தன்னை அடக்கிக்கொண்டான். சற்று நேரத்திலேயே மாயை முழுமையாக எரிந்து எரிகுளத்திற்குள் ஒடுங்கினாள். அவள் ஒரு காலும் ஒரு கையும் மட்டும் எரிகுளத்திற்கு வெளியே பொசுங்கிக்கொண்டு நீண்டிருக்க பூசகர்கள் கழியால் அதைத் தூக்கி உள்ளே செலுத்தி மேலும் மேலும் ஊன் நெய்யை பொழிந்து தங்கள் பாடலை தொடர்ந்தனர்.

நோக்கி நிற்கையிலேயே அங்கு அவ்வாறொன்று நிகழ்ந்ததன் தடயமே இல்லாமலாயிற்று. எரிகுளத்து நெருப்பு ஊன்நெய் வாங்கி நீலமும் சிவப்பும் கருமையுமென உருக்காட்டி எழுந்து படபடத்தாடியது. பணிதன் காரி கருவறைக்குள் கைவிரித்து செய்கைகாட்டி பலி ஏற்கும்படி அன்னையை வேண்டினார். பின்னர் கருவறையிலிருந்து வெளியே வந்து கைதூக்க முழவும் கொம்புகளும் அமைந்தன. பூசகர்கள் தங்கள் பாடலை முடித்து கைகூப்பி அமைந்தனர்.

பணிதன் காரி அன்னையின் முன் படைக்கப்பட்டிருந்த யுதிஷ்டிரரின் உடைவாளை அதிருந்த தாலத்துடன் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். “அரசே, போருக்கு அன்னையின் ஆணை எழுந்துள்ளது. மண்ணில் எழும் சாறுகளில் தூயது குருதி. விண்ணிலிருந்து பொழியும் சாறான மழைக்கு நிகர் அது. அனைத்து நீர்களிலும் வேள்வி செய்ய மூதாதையர் ஆணையிடுகின்றனர். ஆயின் குருதியில் செய்யப்படும் வேள்வியே அவற்றில் முதன்மையானது. இக்குருதிவேள்வி உங்கள் குடியை வெல்லச் செய்யட்டும். உங்கள் சொல் இங்கு நிலைகொள்க!” என்றார். யுதிஷ்டிரரிடம் அவர் அந்த உடைவாளை நீட்டினார்.

யுதிஷ்டிரர் அதை கைநீட்டி வாங்கப்போனபோது அவரது மறுபக்கம் நின்றிருந்த திரௌபதி மூன்று எட்டு எடுத்து வைத்து கைநீட்டி “பூசகரே, அதை இங்கே அளியுங்கள்” என்றாள். பணிதன் காரி “ஆம், பேரரசி” என்றபடி தாலத்தை திரௌபதியின் அருகே கொண்டுவந்தார். திரௌபதி அந்த வாளை கையிலெடுத்தபோது கூடிநின்றவர்களிடமிருந்து அறியமுடியாத முழக்கொலி எழுந்தது. உடல் மறைந்து வெற்றுவிசையென காற்றில் நின்றிருப்பதுபோல் ஓர் உள எழுச்சியை சாத்யகி உணர்ந்தான்.

திரௌபதி அந்த வாளை நோக்கிக்கொண்டிருந்தாள். அதில் குருதிச்செம்மைமேல் பந்தங்களின் செவ்வொளி அலையடித்தது. அவள் அதை சற்றே திருப்பியபோது முகத்தில் ஒளிவிழுந்து சென்றது. அவள் உடலும் விழிகளும் முழுமையாக மாறிவிட்டிருந்தன. உடல்வாயில் திறந்து உள்ளிருந்து பிறிதொருத்தி வந்து நின்றிருப்பதுபோல். அவள் அந்த வாளைச் சுழற்றி தலைக்குமேல் மும்முறை தூக்கி ஆட்டி வேங்கைபோல் குரலெழுப்பினாள். அவளில் தெய்வம் வெறியாட்டுக்கொண்டதுபோலிருந்தது.

“அரசர்களே! தொல்குடியினரே! வீரர்களே! எழுக! இப்போர் பெண்பழி தீர்ப்பதற்கென்று நிகழ்க! அவை நின்று என் பழி கொண்டவர்களின் நெஞ்சு பிளந்து குருதி கொண்டு குழல் முடியாமல் இது முடியாது! இப்புவியே அளிக்கப்படினும் அவ்வெம்பழி அடங்கிய பின்னரே இப்போர் முற்றொழியும். இது எனது போர்! இங்கெழுந்த அனைவரும் எனது மைந்தர்கள். மூதன்னை ஆணையிடுகிறேன். என் பொருட்டு போர்வஞ்சம் கொண்டு எழுக! என் பொருட்டு குருதியிலாடுக! என் பொருட்டு உயிர் விடுக! என் பொருட்டு களம் வெல்க! உங்கள் கொடிவழியினரில் என்றும் என் சொல் நிலைகொள்ளட்டும். பெண்பழி கொண்ட மண்ணில் பிறிதொரு அறமும் இல்லையென்று உங்கள் நூல்கள் அறைகூவட்டும். எழுக! இப்போர் வெற்றியிலன்றி பிறிதொன்றிலும் நிலை கொள்ளாதாகுக!” என்று அவள் கூவினாள்.

அங்கு கூடியிருந்த அனைத்து அரசர்களும் தங்கள் உடைவாட்களை உருவி தலைக்குமேல் தூக்கி “வெற்றிவேல்! வீரவேல்!” என்று கூவினர். நிஷாதரும் கிராதரும் அரக்கரும் அசுரருமென திரண்டு நின்றிருந்த குடித்தலைவர்கள் அனைவரும் தங்கள் கோல்களையும் வாள்களையும் தூக்கி வெறிகொண்டு கூச்சலிட்டனர். “வெற்றிவேல்! வீரவேல்! பழி வெல்வோம்! குருதிகொண்டு நிகர் செய்வோம்! அன்னையின் பணியில் எங்கள் குடி வாழ்க!” என்று கூவினர். அங்கு எழுந்த அந்த வெறியை அவர்கள் அனைவர் உடல்களையும் திரைச்சீலையென கிழித்துத் திறந்து எழுந்த தெய்வங்களின் வெறியாட்டு என்று சாத்யகி உணர்ந்தான் இளைய யாதவரை நோக்கினான். அவர் இமைகள் மட்டுமே தெரிய நிலம்நோக்கி விழிசரித்திருந்தார்.

பூசகர்கள் தங்கள் பாடல்களை தொடர்ந்தனர். திரௌபதியை சேடியர் சூழ்ந்து பற்றிக்கொண்டனர். அவள் தன் கைநகங்கள் உள்ளங்கையில் பதிந்திறுக, வெண்பற்கள் தெரிய பற்களைக் கடித்து தலையை அசைத்துக்கொண்டிருந்தாள். சேடியர் திரைச்சீலைகளுடன் ஓடிச்சென்று அவளை சூழ்ந்துகொண்டனர். அவளை அதன் நடுவே நிற்கவைத்து வெளியே கொண்டுசென்றனர். சூழ போர்க்குரல்களும் வஞ்சினங்களும் ஒலிக்க, படைக்கலங்கள் அலையலையாக எழுந்தமைய அவள் வெளியே சென்றாள். அவள் மறைந்ததும் கூச்சல்கள் மேலும் பெருகின. படைக்கலங்களைத் தூக்கி அசைத்தபடி அரசர்களும் குடித்தலைவர்களும் ஆலயத்திலிருந்து வெளியே சென்றனர். அங்கே கூடி நின்றிருந்த அவர்களின் படைத்துணைவர்களை நோக்கி அவர்கள் போர்க்கூச்சலிட அவர்களும் இணைந்துகொண்டனர். போர்முழக்கம் ஆலயத்திலிருந்து கிளம்பி வழியெங்கும் நிறைந்திருந்த வீரர்களினூடாக பரவிச்சென்று நகரெங்கும் நிறைந்தது.

நகரத்தின் ஓசை பெருமழைபோல கேட்டுக்கொண்டிருந்தது. யுதிஷ்டிரரும் பாண்டவர்களும் வெளியே சென்றனர். அவர்களைக் கண்டதும் ஆலயத்திற்கு வெளியே மேலும் ஆர்ப்பரிப்பு எழுந்தது. இளைய யாதவரும் வெளியே சென்றார். சாத்யகி மெல்ல உடல் நெகிழ்ந்து பெருமூச்செறிந்தான். சேடியர் இளவரசியை அழைத்துச்சென்றனர். சுரேசர் சாத்யகியிடம் வந்து “தாங்கள் கிளம்பலாம், யாதவரே” என்றார். ஆம் என தலையசைத்த சாத்யகி அசங்கனிடம் “நீ இளையோரை அழைத்துக்கொண்டு மாளிகைக்கு செல். நான் நகரின் படைநிலைகளை பார்த்த பின்னரே வருவேன்” என்றான். அசங்கன் தலையசைத்தான்.

அவர்கள் வெளியேறிச் செல்ல சாத்யகி அசுரவேள்வியை நோக்கியபடி நின்றான். அவர்களின் தொல்வேதம் மெல்ல விசையழிந்து ஓய்ந்தது. அவியென மலர் சொரிந்து தவளை ஓசையுடன் இசைக்கத் தொடங்கினர். மெல்ல சொற்கள் இல்லாமலாகி வெறும் தவளையோசையே எஞ்சியது. பின்னர் தன்னைச் சூழ்ந்து தவளையோசையை சாத்யகி கேட்கத் தொடங்கினான். அது உளமயக்கா என செவிகூர்ந்தான். மெய்யாகவே தவளைக்குரல்கள்தான். அவன் அதன் பின்னரே தன் உடலில் நீராவியின் வெக்கையை உணர்ந்தான். மழையிறங்கப்போகிறது என தோன்றியது. அண்ணாந்து வானைப் பார்த்தான். கீழ்வான் சரிவில் மெல்லிய மின்கிழிசல் துடித்தமைந்தது. மேற்குவான் சிம்மம்போல் உறுமியமைந்தது.

அப்பூசகர்கள் எதையும் விழிகொடுக்காமல் எழுதழலையே நோக்கியபடி அவியிட்டு ஓதிக்கொண்டிருந்தனர். மீண்டுமொரு மின்னலில் அனைத்தும் மெல்ல துலங்கியமைந்தன. இடியோசை அண்மையிலிருந்து உருண்டு அகன்றது. அடுத்த மின்னலுக்காக அவன் விழி எதிர்பார்த்துக்கொண்டிருக்க அனைத்தையும் வெண்மையாக்கும்படி பெருமின்னல் எழுந்து அணைந்தது. கண்களுக்குள் குருதிக்குமிழிகள் பறக்கும் செம்மை எஞ்சியது. சூழ்ந்திருந்தவர்களின் அச்சக்குரல்கள். இடி தலைக்குமேல் ஒலித்தது. புவி இரண்டாகப் பிளப்பதுபோல. அவ்வோசை அணைவதற்குள் அடுத்த மின்னல். மீண்டுமொரு இடி.

சாத்யகி மைந்தர் சென்றுசேர்ந்திருப்பார்களா என எண்ணிக்கொண்டான். சாலை முழுக்க படைவீரர்களும் நகர்மக்களும் தோளோடுதோள்தொட்டு நிறைந்திருக்கையில் தேர்கள் எளிதில் செல்லமுடியாது. இடியோசை எழுந்தமைந்ததும் பல்லாயிரம் தொண்டைகள் எழுப்பிய களிப்போசை மேலெழுந்தது. போர்க்கூச்சல் அலையலையாக எழுந்து அமைந்துகொண்டிருந்தது. எத்தனை நேரம்தான் போர்வெறிகொண்டு கொந்தளிப்பார்கள்? எப்போது உளம் அமைவார்கள்? இன்னும் சற்றுபொழுதுதான், விடிந்துவிடும். நாளை அந்தியிலேயே படைப்புறப்பாடு அறிவிக்கப்பட்டுவிடும்.

மேலும் மேலும் மின்னலும் இடியும் நிகழ்ந்துகொண்டிருந்தன. முதல் துளி மழை அம்புபோல தன் தோளில் விழுவதை உணர்ந்தான். எண்ணம் சிலிர்ப்பதற்குள் மேலும் மேலும் துளிகள் வந்து விழுந்தன. வணங்கி நின்றவர்கள் “அன்னையே, தேவியே!” என கூவினர். மழை பெரிய துளிகளாக பெய்யத்தொடங்கியது. எரிகுளம் நனைந்து புகையெழுப்பியது. பூசகர்கள் தவளைக்குரலை எழுப்பியபடியே இருந்தனர். எரிகுளம் முழுமையாக நனைந்து அணைந்தது. அதில் மழைநீர் தேங்கியது. அவர்கள் ஒரேபொழுதில் கைகூப்பி “ஆம்! ஆம்! ஆம்!” என்று கூறி வணங்கினர். எரிசாம்பலை அள்ளி தங்கள் நெற்றியில் இட்டுக்கொண்டு எழுந்தார்கள்.

மழை பெருகி உடைகள் ஒட்டி நீர் வழிந்துகொண்டிருந்தது. ஊடே வீசிய காற்றில் குழல்கற்றைகள் எழுந்து பறந்தன. அனைத்துப் பந்தங்களும் அணைந்த இருளுக்குள் கொற்றவையின் கருவறை அகல்கள் மட்டும் எரிய அவள் விழிகள் சுடர்ந்துகொண்டிருந்தன. சாத்யகி கையை உதறி நீரை விலக்கியபின் வெளியே சென்றான். மழையில் ஊறிய உடைகளுடன் அவனை நோக்கி ஓடிவந்த சுரேசர் “உங்கள் புரவி முற்றத்தில் நிற்கிறது, யாதவரே” என்றார். மழை உச்சம்கொண்டு அனைத்து மரங்களும் ஓலமிட்டுச் சுழன்றன. நீர்ச்சரடுகளுக்குள் மின்னல் ஒளியுடன் அதிர்ந்து அணைய வானம் முழங்கியது.

அவன் புரவி நீருக்கு உடலை விதிர்த்தபடி நின்றிருந்தது. அவன் சென்று அதன் கடிவாளத்தை பெற்றுக்கொண்டு கழுத்தை தட்டினான். ஏறி அமர்ந்து மெல்ல காலால் தொட்டதுமே அது செல்லத் தொடங்கியது. சாலைக்குச் சென்றதும்தான் அவன் உணர்ந்தான், நகரம் அமைதியடைந்துவிட்டிருந்தது. மழையின் ஓலம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. மழைக்கு அனைவரும் ஒதுங்கிவிட்டிருந்தார்கள் என நினைத்தான். ஆனால் சாலை முழுவதும் படைவீரர்களும் மக்களும் செறிந்திருந்தனர். அனைவரும் இருளாக பெய்த மழைக்குள் நிழலுருக்களாக செறிந்து நின்றிருந்தனர்.

அவன் அந்த மானுடத்திரளினூடாக நகரம் நோக்கி சென்றான். மின்னொளியில் அவர்கள் அனைவரும் விழிதிறந்து மலைத்தவர்களாகத் தெரிந்து அணைந்தனர். நகருக்குள் நுழைந்து தெருக்களினூடாகச் செல்கையில் உபப்பிலாவ்யமே மழையில் நின்றிருப்பதை கண்டான். எழுந்து அணைந்த முழு மின்னலில் தெரிந்த முகங்களெல்லாம் துயர்கொண்டிருப்பவைபோல் தோன்றின.