செந்நா வேங்கை - 11
கருவறைக்குள் கரடித்தோல் பீடத்தில் மெலிந்த கால்களை மடித்து அமர்ந்திருந்த தலைமைப்பூசகர் செங்கர் காரி தன் மெலிந்த கைகளைத் தூக்கி வளைந்து உருக்குலைந்த சுட்டுவிரலை நீட்டி சுரேசரை அழைத்தார். அவருடைய முழங்கையிலும் கையிலும் நைந்த தசை தொங்கி கையின் நடுக்கத்துடன் சேர்ந்து அசைந்தது. சுரேசர் அருகே அணுகி வாய்பொத்தி உடல்வளைத்து பணிந்து கேட்க அவர் வெளியே சுட்டி ஏதோ ஆணையிட்டார். சுரேசர் விரைந்து சென்று யுதிஷ்டிரரிடமும் பின்னர் திரௌபதியிடமும் ஓரிரு சொற்கள் பேசிவிட்டு பாய்ந்த நடையுடன் வெளியே சென்றார். திரௌபதி கையை சற்றே தூக்க சிற்றமைச்சர் இருவர் கையசைத்து ஐம்மங்கல இசையையும் வெளியே ஒலித்த பெருமுரசுகளையும் நிறுத்தினர். இசை நின்றதும் அப்பகுதி செவி துளைக்கும் அமைதி கொண்டதாக மாறியது. பின்னர் அதன் ஆழத்திலிருந்து கலங்களும் அணிகளும் குலுங்கும் ஓசையும் ஆடைகள் காற்றில் சரசரக்கும் ஒலியும் எழுந்து வந்தன.
திரௌபதி சிற்றமைச்சரிடம் “பலிகொடை பிறகு நடக்கட்டும், அதற்குமுன் பூசெய்கையும் வழிபாடும் மங்கலச் சடங்குகளும் முடியட்டும்” என்றாள். அவர் ஆமென்று தலையசைத்து ஓடிச்சென்று செங்கரிடம் அதை சொன்னார். செங்கர் தலையசைத்து ஆணையளித்ததும் பூசகர்கள் ஒருவருக்கொருவர் பேசியபடி அங்குமிங்கும் பரவ சிலகணங்களில் அப்பகுதி மெல்ல உருமாறியது. அதுவரை அங்கு எழுந்துகொண்டிருந்த விசை ஒன்று அவிழ்ந்து தளர்ந்து பின்னகர ஒவ்வொருவரும் இயல்பான உடல்நிலைக்கு சென்றனர். முகங்கள் புன்னகையும் இயல்பொழுக்கும் கொண்டன. அந்தத் தாளம்தான் ஒவ்வொருவரையும் இறுக முறுக்கிக்கொண்டிருந்ததாகத் தோன்றியது.
பூசகர்கள் ஈச்சஓலைகளில் கட்டப்பட்ட மலர்ப்பொதிகளையும், தோல்பைகளில் அடைக்கப்பட்ட நறுமணப்பொருட்களையும் சுமந்துகொண்டுவந்து கொற்றவையின் ஆலயமுகப்பில் பரப்பினர். ஏழு உருளிகளில் வெண்ணிற அன்னமும், பன்னிரு நிலவாய்களில் கள்ளும், பதினெட்டு கலங்களில் தேனும் பாலும் பழச்சாறும்கொண்ட இன்னமுதும் கொண்டுவந்து அன்னையின் முன் நிரத்தப்பட்டன. நறுமணப்பொருட்களை பொதிகளிலிருந்து திறந்து எடுத்து அன்னையின் சிறு ஆலயமுகப்பில் பரப்பியபோது வெவ்வேறு மணங்கள் சிறிய காற்றலைகள் என எழுந்து ஒன்றுடன் ஒன்று கலந்து புதிய நறுமணங்களை உருவாக்கிக்கொண்டே இருந்தன. மலர்மணங்களுடன் கஸ்தூரியும் சவ்வாதும் புனுகும் கற்பூரமும் கலந்தபோது ஆழுள்ளத்தில் அறியா மலர்கள் இதழ் விரித்தன.
திரௌபதி திரும்பி யுதிஷ்டிரரிடம் “பூசனை முடிந்ததும் மங்கலச் சடங்குகளை நிகழ்த்துவோம். சாத்யகியின் மைந்தரை அழையுங்கள்” என்றாள். யுதிஷ்டிரர் புரிந்துகொண்டு “ஆம், அது இன்றே நிகழட்டும். இனி பொழுதில்லை” என்றபின் சிற்றமைச்சர் சந்திரசூடரிடம் கைகாட்டி அழைத்து ஆணையிட்டார். உதட்டசைவிலிருந்து தன் பெயரை அவள் சொன்னதை அறிந்து சாத்யகி விதிர்ப்பு கொண்டான். அவனது இடதுகால் துடிக்கத்தொடங்கியது. சந்திரசூடர் பதற்றமான காலடிகளுடன் அவனிடம் வந்து “யாதவ அரசே, தங்களையும் மைந்தர்களையும் பேரரசி அழைக்கிறார். மங்கலச் சடங்கை இங்கே இப்போதே நிகழ்த்திவிடலாம் என்று எண்ணுகிறார்” என்றார். “ஆணை!” என்று நடுங்கிய குரலில் சாத்யகி சொன்னான்.
கூப்பிய கைகள் இறுகி நடுங்கிக்கொண்டிருக்க திரும்பி அருகே நின்ற அசங்கனிடம் “அரசியின் ஆணை, மைந்தா” என்றான். “ஆம்” என்று அவன் சொன்னான். சாத்யகி கைகளைக் கூப்பியபடி முன்னால் செல்ல மைந்தர் தொடர்ந்தனர். அவர்கள் சென்று திரௌபதியின் அருகே நின்றதும் திரௌபதியின் அணுக்கச்சேடி சலஃபை மகளிர்நிரைக்குப் பின்னால் சென்று அங்கிருந்து பாஞ்சாலத்து இளவரசி சௌம்யையை அழைத்து முன்னால் கொண்டுவந்தாள். அவள் தன் இரு சேடிகள் இரு பக்கமும் வர தன் அன்னை விப்ரையுடன் திருஷ்டத்யும்னனின் அருகே வந்துநின்றாள். கொற்றவைபூசனைக்குரிய எளிய ஆடையையே அவள் அணிந்திருந்தாள். சலஃபை சேடியருடன் ஏதோ பேச அவர்கள் ஓடிச்சென்று கொண்டுவந்த மலர்மாலையை சௌம்யையின் கூந்தலில் சூட்டினாள்.
யுதிஷ்டிரர் கையசைத்ததும் ஆலயத்தின் மங்கலப்பூசை முறைமைகள் தொடங்கின. ஐம்மங்கல ஒலிகள் சூழ அன்னைக்கு நூற்றெட்டு மலர்களால் மலராட்டு செய்யப்பட்டது. அதன்பின் கங்கை, கோமதி, சாரதா, சர்மாவதி, யமுனை, வாக்மதி, கண்டகி என்னும் ஏழு ஆறுகளின் நீரால் நீராட்டும் கஸ்தூரி, கோரோசனை, புனுகு, சவ்வாது, கல்மத்தம், மரமஞ்சள், கொம்பரக்கு என்னும் ஏழு நறுமணப்பொருட்களால் நறுமணமாட்டும் அகில், சந்தனம், குந்திரிக்கம், சாதிக்காய், கற்பூரம் என்னும் ஐந்து புகைகளால் புகையாட்டும் நிகழ்ந்தன. பூசகர் அனைத்துக் கலங்களிலிருந்தும் ஒரு கரண்டி அன்னம் எடுத்துச்சென்று இலையில் விளம்பி அன்னை முன் வைத்தனர். அதன்மேல் மலரிட்டு நீர்தெளித்து தூய்மைசெய்தபின் அன்னப்பலி ஏற்குமாறு பூசகர் கைகளால் செய்கை காட்டினார். அது இனிதென்றும், தங்கள் உடலே அதுவென்றும் சொன்னார்.
தொன்மையான அசுரமுறைப்படி அப்பூசனைகள் அனைத்தும் சொல்லற்ற நுண்ணொலிகளும் விரல்முத்திரைகளும் கையசைவுகளும் மட்டுமே கொண்டவை. சாத்யகி கைகளைக் கூப்பியபடி கொற்றவையின் சிறிய கல்வடிவை பார்த்துக்கொண்டிருந்தான். இரண்டு முழம் உயரமுள்ள உருவற்ற நீளக்கல். அதில் வெள்ளியாலான இரு கண்கள் பொருத்தப்பட்டிருந்தன. பவளத்தால் செதுக்கப்பட்ட நீண்ட நாக்கு குருதிசொட்டுவதுபோல தெரிந்தது. கண்களும் நாக்கும் மட்டுமேயாகி அக்கல் முகமென்றாகியது. அதைச் சூழ்ந்து கருங்குழல் விரிவும் கரிய உடல்திரள்வும் எழுந்து வந்தன. முகமென்பது நோக்கும் திறந்த வாயின் பசியும் மட்டுமே. வாய் ஒன்று சொல்ல கண் பிறிதொன்று காட்டியது. சில கணங்களுக்குள் அன்னையின் நோக்கன்றி பிறிது எதுவும் அவனை வந்தடையவில்லை.
எங்கிருக்கிறோம் என்றறியாமல் கூப்பிய கைகள் நடுங்கிக்கொண்டிருக்க சாத்யகி நின்றுகொண்டிருந்தான். ஐம்மங்கல ஓசைகள் நிலைக்க பூசகர்கள் சங்கொலித்தமைந்த பின் கைகளில் ஏந்திய வட்டமணியை மட்டும் நீள்தாளத்தில் முழக்கத் தொடங்கினர். இரு பூசகர்கள் ஆலயவாயிலில் இருந்த செம்பட்டுத் திரையை கீழே தாழ்த்தினர். உள்ளே முதுபூசகர் கொற்றவையுடன் தான் மட்டுமே அமர்ந்து செய்யும் மந்தணப் பூசைச் சடங்குகளை செய்யத் தொடங்கினார். உள்ளே திரைக்கப்பால் சுடர் சுழல்வதும் கைமணியோசை எழுவதும் தெரிந்தது. பின்னர் கருவறைக்குள் அமைந்த நூற்றெட்டு சிறு அகல்களை ஒவ்வொன்றாக பூசகர் ஏற்றினர். சுடர் பெருகி அங்கே நெருப்பெழுந்து தழல் ஆடுவதுபோல் தோன்றியது. செம்பட்டுத் திரைச்சீலையே ஒரு பெரும் தழல்பரப்புபோல ஆகியது.
பூசகர் கைகாட்ட ஐம்மங்கல இசையுடன் அனைத்து இசைக்கலங்களும் ஒற்றை அலையெனப் பொங்கி எழுந்திசை நிரப்பின. திரை மேலெழ கொந்தளிக்கும் செவ்வொளியில் கொற்றவை தெரிந்தாள். முன்னால் நின்றிருந்த முதுசூதர் “அன்னையே! மாமாயையே! உலகாள்பவளே! வானிலும் காலத்திலும் நின்றவளே! எங்கும் நிலைபெறாதவளே! ஈன்றவளே! இயற்றுபவளே! இவ்வனைத்தும் ஆனவளே! விண்ணுருவே! மண்முதலே!” என்று கூவி வாழ்த்தினார். அங்கிருந்தோரின் உள்ளம் அக்குரலென்றாகியது. பெண்டிர் கைகளைக் கூப்பியபடி உடல்நடுக்குற்று குரவையிட்டனர். அத்தனை ஒலிகளுக்கும் எதிர்முனையென விழித்திருந்தன கொற்றவையின் கண்கள்.
அன்னைக்கு சுடராட்டு தொடங்கியது. நூற்றெட்டு திரிகளிட்ட கொத்துவிளக்கு கொன்றை மலர்ச்செண்டு என சுழன்று வந்தமைந்தது. பின்னர் எழுபத்திநான்கு திரியிட்ட கொத்துவிளக்கு. நாற்பத்தெட்டு திரியிட்ட விளக்கு. அதன்பின்னர் ஏழு, ஐந்து என சுடர் குறைந்து இறுதியாக ஒற்றைச் சுடர் அகல் சுழன்று அன்னையின் காலடியில் வைக்கப்பட்டது. அச்சுடரிலிருந்து ஒரு திரியைக் கொளுத்தி எடுத்துக்கொண்டு வந்து பலிபீடத்தில் எரிந்த கலவிளக்கில் இட்டனர். கொழுந்தெழுந்து அது எரிய அக்கலத்தை இரு பூசகர்கள் கைகளில் ஏந்தியபடி அரசர்கள் அருகே அணைந்தனர். யுதிஷ்டிரரும் பாஞ்சாலத்து அரசியும் இளையவரும் அதைத் தொட்டு விழியில் வைத்து வணங்கியபின் குந்தியும் அரசியரும் தொட்டு வணங்கினர். பின்னர் அது அரசர் நிரைகளில் சுழன்று வந்தது. அனைவரும் தொட்டு வணங்கியபின் மீண்டும் அன்னையின் காலடிக்கே சென்று சேர்ந்தது.
திரௌபதி “மணநிகழ்வு தொடங்கட்டும்” என்றாள். அவள் உதடசைவே அச்சொல் என்று தெரிந்தது. அதை கேட்டோமா பார்த்தோமா என உளம் மயங்கியது. பூசகர் பணிதன் காரி “இங்கு அன்னைமுன் வைதிக மணம் ஒப்பப்படுவதில்லை. இங்கு வேதநுண்சொற்கள் எதற்கும் ஒப்புதல் இல்லை, அரசி” என்றார். “இங்குள்ள தொல்முறைப்படியே மணம் நிகழட்டும்” என்றாள் அரசி. திருஷ்டத்யும்னன் தன்னருகே நின்ற பாஞ்சால இளவரசியை தோளில் தொட்டு “முன்னால் செல்க!” என்றான். அவள் கைகூப்பியபடி ஓரடி முன்னால் சென்றாள். திரௌபதி சாத்யகியை நோக்கியதும் சாத்யகி அசங்கனை தோளில் தொட்டு “முன்னால் செல்க!” என்றான். அவனும் தயங்கிய காலடிகளுடன் முன்னால் நகர்ந்து நின்றான்.
சாத்யகி அப்போதுதான் சௌம்யையை முதல்முறையாக பார்த்தான். அசங்கனைவிட மிகவும் மூத்தவள்போல தோன்றினாள். பெண்டிருக்கு உடலில் அகவை மிகுதிகாட்டும் என அவன் சொல்லிக்கொண்டாலும் உள்ளம் அமையவில்லை. அவள் வெண்ணிறமான உருண்ட பெரிய முகமும் தடித்த தோள்களும் கொண்டிருந்தாள். சுருண்ட நுரைபோன்ற கூந்தல். சிறிய கரிய விழிகள். கன்னங்களில் செந்நிறப் பருக்கள். சிவந்த சிறு உதடுகள். அவள் தன் அன்னையைப்போல என எண்ணிக்கொண்டான்.
அவள் அன்னை பாஞ்சாலத்தின் தொல்குடியாகிய துர்வாச மரபை சேர்ந்தவள். அவர்கள் யவனர்களின் குருதிகொண்டவர்கள் என்பதுண்டு. இமையமலைக்கு அப்பாலிருக்கும் வடமேற்குப் பாலையிலிருந்து குடியேறியவர்கள். எங்கிருந்தோ ஒரு குருதி. வேறெங்கிருந்தோ வந்த இன்னொரு குருதி. தெய்வங்கள் கனிந்தால் இந்தப் பெண்ணின் வயிற்றில் என் குருதிவழி பிறக்கும். பிறக்கும் மைந்தன் இவளைப்போல யவனச்சாயலுடன் இருந்தால் அதில் என் குருதி எங்கிருக்கும்? இங்கு பத்து வடிவில் பெருகிப்பரந்திருக்கும் என் முகம் எஞ்சியிருக்குமா என்ன? என்ன வீண் எண்ணங்கள்? ஆனால் இத்தகைய சிறிய தன்மைய விழைவுகளினூடாகவே மானுடம் முன்னகர்கிறது.
இருவர் முகங்களிலும் உவகையோ நாணமோ இல்லை என்பதை சாத்யகி கண்டான். அவள் முகம் செதுக்குப்பாவை போலிருந்தது. அசங்கன் குளிரில் என மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தான். துயர்கொண்டவன்போல் இமைசரிந்து விழிகள் மறைந்திருந்தன. அவன் தன் மைந்தனின் கையை பற்றிக்கொள்ள விழைந்தான். மீண்டும் அவனைத் தொட தன்னால் இயலாது என்ற எண்ணம் எழுந்ததும் உள்ளதிர்ந்தான். திரும்பி அருகே நின்ற சந்திரபானுவை நோக்கியபின் கையை அவன் தோள்மேல் வைத்தான்.
பூசகர் மூவர் அன்னையின் காலடியிலிருந்து சுண்ணமும் மஞ்சளும் கலந்த செங்குருதிநீரை மூன்று கலங்களில் கொண்டுவந்தனர். முதுபூசகியர் அக்கலங்களை வாங்கி குரவையிட்டபடி அச்செந்நீரை பாஞ்சால இளவரசியின் தலையில் மூன்று முறை கவிழ்த்தனர். பூசகர் மூவர் கொண்டுவந்த செங்குருதியை அசங்கனின் தலையில் மூன்று பூசகர் கவிழ்த்தனர். சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் இருபுறமும் நின்று மணமக்களை வழிநடத்தி கொண்டுசென்று அன்னையின் ஆலய முகப்பில் நிறுத்தினர். பூசகர் பணிதன் காரி வழிகாட்ட சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் மைந்தனையும் மகளையும் பூசகர்களிடம் ஒப்படைத்துவிட்டு மும்முறை நிலத்தில் விழுந்து அன்னையை வணங்கி கைதொழுதபடி கூட்டத்தில் சென்று பின்னால் நின்றனர். தன் பிற மைந்தரும் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை சாத்யகி உணர்ந்தான்.
முதுபூசகர் செங்கர் காரி உள்ளிருந்து மெல்ல எழுந்து வந்து அன்னையின் காலடியில் வைத்து எடுத்த கரிய சரடு ஒன்றை பணிதனிடம் அளித்தார். அதில் மூதன்னையர் மூவர் ஏழு கல்மணிகளைக் கோத்து அசங்கனிடம் அளித்தார்கள். செங்கர் காரி கைவீசி ஆணையிட அசங்கன் அதை பாஞ்சால இளவரசியின் கழுத்தில் கட்டினான். “மூன்று முறை முடிச்சு இடுக!” என்றார் பணிதன். மங்கல வாத்தியங்கள் முழங்கின. மகளிர் குரவையிட்டனர். “வலக்கை சிறுவிரலை பற்றிக்கொள்க! தென்மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஏழு அடியெடுத்து வைத்து நின்று நிலம் தொட்டு வணங்குக!” என்றார். அவர்களிருவரும் நிலம்தொட்டு வணங்கியதும் “திரும்பாமல் மீள்க! அன்னை முன் வந்து வணங்கி குருதித்துளி கொண்டு மீள்க!” என்றார் பூசகர்.
இருவரும் முன்னால் சென்று பலிபீடத்தருகே நின்று அன்னையை குனிந்து வணங்கினர். செங்கர் உள்ளிருந்து செங்குருதிப்பொடி அள்ளி அவர்களுக்கு அளித்தார். அதை அசங்கன் பெற்றுக்கொண்டு அதில் ஒரு துளியை எடுத்து அவள் நெற்றியிலிட்டான். அவள் ஒரு துளியை எடுத்து அவன் நெற்றியிலிட இருவரும் கைகூப்பி புறம்காட்டாது நகர்ந்து மீண்டும் அரசநிரைக்கே வந்தனர். பணிதன் “அன்னைமுன் உளமிணைந்த இருவரும் இனி துணைவரென்று திகழ்க! மைந்தரையும் கொடிவழிகளையும் காக்கும் தெய்வங்கள் அனைத்தும் இச்செய்தியை அறிக!” என்றார். கூட்டத்திலிருந்த மகளிர் குரவையிட்டனர்.
திரௌபதி கைகளால் இளவரசியை வளைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டாள். அவள் தலையை திரௌபதியின் தோளில் மெல்ல சாய்த்தாள். அவளுக்கு தன் அத்தையே அன்னைக்கும் மேலான இடத்திலிருந்தாள் என அந்தச் சிறு அசைவில் சாத்யகி உணர்ந்தான். அவன் உள்ளம் பொங்கிக்கொண்டிருந்தது. சிறு உள அசைவில் தான் அழுதுவிடக்கூடும் என்று தோன்றியது. ஏதேனும் செய்து அத்தருணத்தை கடந்துசெல்ல விரும்பினான். அசங்கனிடம் “அரசியையும் அரசரையும் வணங்கி வாழ்த்து கொள்க! இளைய யாதவரை வணங்குக!” என்று காதில் சொன்னான். அருகே நின்றிருந்த சகதேவன் திரும்பிநோக்கி “அல்ல, இது ஆலய வளாகம். இங்கு எவரையும் எவரும் வணங்கலாகாது” என்றான். “ஆம்” என்று சாத்யகி சொன்னான். நீண்ட பெருமூச்சுடன் உடலை அசைத்து கால்மாற்றி நின்றான். திரும்பி தன் மைந்தனை நோக்கவேண்டுமென எண்ணினான். ஆனால் திரும்பமுடியாதபடி அகம் தடுத்தது.
கருவறைக்குள் செங்கர் காரி ஆசுரமுறையில் அமைந்த சிறுபூசனைகளை தொடர்ந்து செய்துகொண்டிருக்க அங்கிருந்த ஒவ்வொருவரும் மெல்ல பிறிதொரு உளநிலை கொள்வதை சாத்யகி கண்டான். பூசகர்கள் படையல் முற்றத்திலிருந்த அன்னக்கலங்களையும் மலர்க்குவைகளையும் நறுமணப்பொருட்களையும் எடுத்து அகற்றினர். கருவறைக்குள்ளிருந்து அனைத்து மங்கலப்பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டன. செங்கர் எழுந்து மும்முறை முழந்தாள் பணிந்து வணங்கியதும் இருவர் அவரை கைபற்றி வெளியே கொணர்ந்தனர்.
நடுங்கும் காலடிகளுடன் செங்கர் காரி அன்னையை மும்முறை வணங்கி புறம்காட்டாமல் சென்று மறைந்தார். ஆலயத்தின் கருவறை முகப்பில் இருந்த செம்பட்டுத் திரைச்சீலை கீழிறக்கப்பட்டது. ஐந்து இளைய பூசகர்கள் வந்து அரசர்கள் அனைவரிடமும் பணிந்து சற்றே பின்னகர்ந்து நிற்கும்படி சொல்ல களமுற்றம் அகன்றுகொண்டே இருந்தது. மங்கல இசை இயற்றிய சூதர்கள் நிரை மாறி ஒழுகியவர்களாக பின்னால் செல்ல, கொடுமுழவும் பெருமுழவும் எருமைக்கொம்புகளும் பேரிலைத்தாளங்களும் ஏந்திய காடவர் குலத்து இசைஞர் நூற்றெண்மர் நிரைவகுத்து அவ்விடத்தில் வந்து நின்றனர்.
நிகழவிருக்கும் ஒன்றுக்காக அங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் தன்னை தீட்டிக்கொள்வதை சாத்யகி உணர்ந்தான். தன் மைந்தர் அங்கு நிற்கத்தான் வேண்டுமா என்று எண்ணம் எழுந்தது. யாதவர்கள் குருதிபலி கொடுப்பதை நிறுத்தி நெடுங்காலமாகிறது. இளைய யாதவர் சிறுவனாக இருந்தபோது குருதிபலியை நிறுத்தி இனிய அன்னங்களுடன் மந்தரமலையை வழிபட்டால் போதும் என்று அறிவித்ததாகவும் அதை யாதவகுலங்கள் அனைத்தும் ஏற்று குருதிபலியை முற்றாக நிறுத்திக்கொண்டதாகவும் அவன் இளமையிலேயே கேட்டிருந்தான். தன் மைந்தர் அக்குருதிபலியால் அஞ்சி உளங்கலங்கிவிடக்கூடுமென்று தோன்றியது. ஆனால் அதை எப்படி அங்கே சொல்வது என்று அவனுக்கு தோன்றவில்லை.
என்ன செய்வதென்று குழம்பியபடி அவன் திரும்பி இளைய யாதவரை பார்த்தான். அவரது கண்கள் நிலம் நோக்கி தழைந்திருந்தன. அங்குள்ள பிற எவரிடமும் ஒரு சொல்கூட உரைக்குமிடத்தில் தானில்லை என்பதை உணர்ந்த பின் சாத்யகி நெடுமூச்சுடன் அமைதியடைந்தான். வெளியே இருந்து சுரேசர் உள்ளே வந்ததும் அனைவரும் அவரையே நோக்கி திரும்பினர். மன்னர் நிரையிலிருந்தே மெல்லிய பேச்சொலி எழுந்தது. சுரேசர் வந்து யுதிஷ்டிரரிடமும் திரௌபதியிடமும் ஓரிரு சொற்கள் சொல்லி தலைவணங்கிய பின் பூசகர் தலைவர் பணிதன் காரியிடம் சென்று கையால் வாய்மூடி ஓரிரு சொற்கள் உரைத்தார். காரி கைதூக்கி தலையை அசைத்ததும் வெளியே முரசுகள் முழங்கத் தொடங்கின.
அப்பெருமுழக்கத்திற்கு நடுவே ஆற்றுப்பெருக்கில் ஊடுருவும் செங்கலங்கல் நீர் என உடுக்கும் சிறுகொம்பும் மட்டும் கலந்த துடிக்கும் இசை கேட்டது. அனைவரும் வாயிலையே நோக்கிக்கொண்டிருந்தனர். வெளியேயிருந்து செம்பட்டுத் திரைச்சீலையைப் பிடித்தபடி இரு சேடியர் வந்தனர். பக்கவாட்டிலும் நான்கு சேடியர் திரைவிரித்திருந்தனர். திரைச்சீலை செம்மண் கலங்கிய ஆற்றுப்பெருக்கென அலைகொண்டது. அதற்குள் மாயை நடந்து வருகிறாள் என்பதை சாத்யகி அறிந்தான். அவன் அவள் கால்களை பார்த்தான். அவன் பலமுறை நோக்கியவை என்றாலும் மெலிந்து வற்றிச் சுருங்கி பறவைக் கால்கள் என்றான அவை அவனை நடுக்குறச் செய்தன.
நான்கு புறமும் பிடிக்கப்பட்ட திரைச்சீலைக்குள் வந்த மாயை அன்னையின் ஆலயத்து முகப்பில் நின்றாள். கிராததாளம் கொடும்பிரி கொண்டது. ஒவ்வொரு ஒளித்துளியும் அதிர்ந்தது. திரைச்சீலைகளை பிடித்திருந்த சேடியர்களின் கைகள் நடுங்க அத்திரைச்சீலை நான்கு பக்கமும் எரிந்த பந்தங்களின் ஒளியில் மெல்ல அலையடித்து தழல்போல் ஆடியது. மறுபக்கப் பந்தங்களின் ஊடொளியில் பட்டுப் பரப்புக்குள் நிழலுருவென மாயையின் கூனிய சிற்றுடல் தெரிந்தது. அவன் அதை முன்னரே கண்டிருந்தமையால் அவளென உணரமுடிந்தது. பிறருக்கு அவ்வுரு என்ன என்றே புரியவில்லை என்பது மூச்சொலிகள், வியப்பு முனகல்களிலிருந்து தெரிந்தது.
மாயை கைகளைக் கூப்பி மெல்ல ஆடியபடி நின்றிருந்தாள். காற்று பந்த ஒளியை அசைத்தபோது அவள் நிழலுருவம் கரைந்து கோணலாக நீண்டு நண்டு போலாகி பின் தேள்போல் மாறி மீண்டும் அவளுருக்கொண்டது. மீண்டும் ஒருமுறை காற்று எழுந்தபோது இரண்டாகப் பிளந்து சிறகுகளாக அலைந்து மீண்டும் உருமீண்டாள். சாத்யகி திரௌபதியை நோக்கினான். அவள் இமையா விழிகளுடன் மாயையை நோக்கிக்கொண்டு அசையாமல் நின்றிருந்தாள். மாயை நகருக்குள் நுழைந்த பின்னர் அரசி சென்று தன் பெருந்தோழியை சந்தித்தாளா என அவன் வினவிக்கொண்டான். மீண்டும் அவள் விழிகளை நோக்கினான். இரு அசையாத கரிய ஒளிகள் மட்டுமே என அவை அவள் முகத்தில் அமைந்திருந்தன. அவள் மாயையை அப்போதுதான் பார்க்கிறாள் என சாத்யகி தெளிந்தான். ஆனால் அவள் அனைத்தையும் அறிந்திருக்கிறாள். அவள் உரு எந்த அதிர்ச்சியையும் அளிக்கவில்லை.
முழவுகளும் கொம்புகளும் ஓய்ந்த அமைதியில் பந்தங்களின் சுடர் படபடக்கும் ஓசை மட்டுமே அங்கே எஞ்சியிருந்தது. பணிதன் காரி மும்முறை தலை நிலம்தொட அன்னையை வணங்கி பட்டுத்திரைச்சீலையை விலக்கி கருவறைக்குள் நுழைந்தார். துணைப்பூசகர் சூக்தன் காரி கைகாட்ட இசை எழத்தொடங்கியது. சிம்மங்கள் போரிடுவதுபோல என்று அந்த ஓசையை சாத்யகி எண்ணினான். கொம்புகள் யானைத்திரளின் பிளிறல்கள். மணிகள் மலைக்கழுகுப்பூசல். உள்ளமைந்திருந்த கொடுவிசை அனைத்தையும் ஓசையென்று வெளியே உமிழும் வெறி திகழ்ந்த இசை.
திரையைப் பிடித்திருந்த சேடியர் அதை மெல்ல விலக்கி அப்பால் சென்றனர். மாயையை பார்த்ததும் சூழ்ந்திருந்த அனைவரும் அறியாது எழுப்பிய வியப்பொலி ஒன்றாகத் திரண்டு செவியில் முரலுதலாக கேட்டது. மாயை சிறுவிலங்கென தரை நோக்கி நன்றாகக் குனிந்த முதுகுடன் கைகூப்பி நின்றிருந்தாள். ஆடை விலக அவளுடைய முதுகெலும்பு வில்லின் நடுவளைவென எழுந்து தெரிந்தது. கரிய ஆடை அணிந்து இடையில் செம்பட்டுக் கச்சை கட்டியிருந்தாள். கழுத்திலிட்ட கல்மணி மாலைகள் தாழ்ந்து தொங்கின. அவள் அங்கே அத்தனை பெருந்திரள் இருப்பதை உணரவில்லை என்று தெரிந்தது.
சாத்யகி மீண்டும் திரௌபதியை நோக்கினான். அவளும் அங்கே பிறர் இருப்பதை உணரவில்லை என்று தெரிந்தது. இருவரையும் மாறி மாறி நோக்கிக்கொண்டிருந்தவன் விழிதிருப்பியபோது அனைவருமே அவ்வாறுதான் பார்க்கிறார்கள் என்று கண்டான். பாஞ்சால மண்ணில் அரசிக்கும் மாயைக்கும் இருந்த உறவைப்பற்றி அதற்குள் பல பாடல்கள் உருவாகி சூதர் நாவில் திகழ்ந்தன. “நீல நிழல் மாயை, எழுந்த செஞ்சுடர் பாஞ்சாலத்து அரசி. சிம்மம் பெருந்தோழி, ஊரும் விரிகுழல்கொற்றவையே எரிமகள்” என்ற வரி அவன் நினைவில் எழுந்தது.