செந்நா வேங்கை - 10
உபப்பிலாவ்யத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்திருந்த சிறிய ஆலயத்தின் கொற்றவை ரக்தஃபோஜி என்று அழைக்கப்பட்டாள். மக்கள் நாவில் ரக்தை என்று. அந்நகரைவிட மிகத் தொன்மையானது அவ்வாலயம். முன்பு அப்பகுதி அடர்காடாக இருந்தபோது அதனூடாக கோடைகாலங்களில் மட்டுமே உருவாகி முதல் மழை விழுந்ததுமே செடியும்கொடியும் படர்ந்து மறையும் ஒற்றையடிப்பாதை ஒன்று இருந்தது. விராடபுரிக்கு அவந்தியிலிருந்து செல்லும் அப்பாதையை மலைப்பொருட்களை கொண்டுசென்று விற்கும் வேட்டுவ வணிகர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். வணிகர் செலவு தொடங்கும் இளவேனிலில் அத்திரிகளும் கழுதைகளும் நடந்து நடந்து உருவாகும் அப்பாதை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்தில் அமைந்தது. பெருமரங்கள் கடைபுழங்கி விழுவதும், மழையில் மலைப்பாறைகள் உருண்டு வந்து அமைவதும், உருள் பொட்டி மண் மலைகள் சரிவதும் திரும்பத் திரும்ப அப்பாதையை மாற்றியமைத்தது.
ஒருமுறை பல இடங்களில் வளைவமைந்தமையால் மிகவும் சுற்றி மட்டுமே அப்பாதையில் செல்ல முடிந்தது. அன்று புதிதென உள்காட்டுக்குள் சென்று மீண்ட அப்பாதையில் நின்றிருந்த காஞ்சிர மரத்தின் அடியில் தன் குழுவுடன் இளைப்பாறும்பொருட்டு வந்தமர்ந்தான் வேட்டுவ வணிகனாகிய காரி. பதப்படுத்தப்படாத தோல்களும், கஸ்தூரியும், கோரோசனையும், கொம்பரக்கும் பொதிகளாகக் கட்டப்பட்டு அவன் அத்திரிகளில் ஏற்றப்பட்டிருந்தன. பொதிகளை இறக்கிவைத்து அவற்றுக்கு ஓய்வளித்தனர் ஏவலர். கோபுரம்போல் எழுந்து கூரை என விரிந்து நின்ற அந்த மரத்தை அண்ணாந்து பார்த்த காரி “இதென்ன, காஞ்சிரமா இத்தனை பேருருக்கொண்டு நின்றிருக்கிறது? காஞ்சிரம் இவ்வளவு வளருமா என்ன?” என்றான். அவன் கேட்ட பின்னரே மரத்தை நோக்கிய பிறர் அருகே வந்துநின்று மேலே நோக்கினர்.
அவர்களுடன் வந்த முதிய சூதன் “கதைகளில் இந்த மரம் இவ்வாறு வளருமென்று கேட்டிருக்கிறேன். நான் நேரில் கண்ட எட்டி எல்லாம் குறுமரங்களே” என்றான். அவனுடன் வந்த கணக்கன் குசகன் “எட்டிமரமேதானா?” என்றான். “ஐயமில்லை, அதுவே” என்றான் சூதன். காரி தரையெங்கும் புடைத்திருந்த வேர்களினூடாக நடந்து அந்த மரத்தை சுற்றிவந்தான். “முதுமரம்! இந்த அடிச்சுற்றை அடைவதற்கு இருநூறு ஆண்டுகளேனும் இது இங்கு நின்றிருக்கவேண்டும்” என்றான் கணக்கன் குசகன். அவர்களுடன் வந்த முதிய வேட்டுவன் ஒருவனை கைகாட்டி அழைத்து “இது காஞ்சிரமல்லவா?” என்றான் காரி. அவனும் அப்போதுதான் அந்த மரத்தை ஏறிட்டுப் பார்த்தான். “உருளைப்பந்து போன்ற காய்களும் குற்றிலைகளும் காஞ்சிர மரத்தையே காட்டுகின்றன. ஆனால் காஞ்சிரம் இப்படி திமிர்த்து எழுந்து வளர்வதற்கு வாய்ப்பே இல்லை” என்றான் வேட்டுவன்.
பின் பிறிதொரு முதுவேட்டுவனை அருகழைத்து “குலப்பாடகரே, இது காஞ்சிரம்தானா?” என்று கேட்டான். அவனும் பார்த்துவிட்டு “காஞ்சிரமேதான்” என்றான். “காஞ்சிரத்தில் ஏதேனும் புதிய வகையாக இருக்குமோ?” என்று காரி கேட்க குலப்பாடகன் “காஞ்சிரத்தில் அணங்கோ தெய்வமோ குடியேறுமென்றால் மட்டுமே அது பேருருக் கொள்ளும் என்பார்கள். மரங்கள் அனைத்திலும் தெய்வங்கள் வாழ்கின்றன. அடங்கும் தெய்வங்கள், அன்னை தெய்வங்கள், எளிய தெய்வங்கள் என அவை கொண்ட இயல்பே மரமென்றாகிறது” என்றான். “ஐயமில்லை, இந்த மரத்தில் பேராற்றல்கொண்டு எழும் காட்டுத் தெய்வமொன்று வாழ்கிறது. இதன் திமிர்ப்பும் எழுச்சியும் அதையே காட்டுகின்றன.”
அச்செய்தி அனைவரிடமும் பரக்க ஏவலர்கள் பதற்றமடைந்தனர். “நாம் இங்கு தங்கவேண்டியதில்லை. இது தெய்வத்தின் நிலம் போலும்” என்று ஒருவன் சொன்னான். “இப்போதே மேலிருந்து எவரோ நோக்கும் உணர்வு எழுகிறது. என் முதுகு பதைபதைத்துக்கொண்டிருக்கிறது” என்றான் இன்னொருவன். அவன் சொன்னதுமே அங்கிருந்த அனைவருமே நோக்குணர்வை அடைந்தனர். காரி “நாம் அஞ்சவேண்டியது மானுடருக்கும் குருதிவிடாய் கொண்ட விலங்குகளுக்கும் மட்டுமே, தெய்வங்களுக்கல்ல. காட்டுத் தெய்வங்களை நம்பி வாழ்பவர்கள் நாம். இப்பெருமரத்தில் வாழும் தெய்வம் எதுவென்றாலும் எனக்கு காட்சியளித்தமையால் அதுவே என் குடிக்கும் என் கொடிவழியினருக்கும் காப்பென்றமைக!” என்றபின் சுற்றுமுற்றும் பார்த்தான். அப்பால் கிடந்த நீள்கல் ஒன்றை மண்ணிலிருந்து பெயர்த்து தூக்கி எடுத்தான்.
“என்ன செய்கிறீர், வணிகரே?” என்றான் முதுமகன். “இங்கு தெய்வமிருந்தால் அது என்னால் இக்கல்லில் நிறுவப்படட்டும். என்றும் என் குடிகள் வழிபடும் இடமாக இது அமையட்டும்” என்றபடி அவன் அக்கல்லை காஞ்சிர மரத்தடியில் வைத்தான். குலப்பாடகன் “வெறுமனே தெய்வங்களை நிறுவ இயலாது, வணிகரே. ஏழு வகை பதிட்டைகள் உள்ளன என்பார்கள் வைதிகர். பூசகர் சொல்பதிட்டையும் நீர்ப்பதிட்டையும் செய்வர். தொல்முனிவர் மூச்சுப்பதிட்டை இயற்றுவர். முதுபூசகர்களின் பொறிப்பதிட்டையும் மூதன்னையர் அன்னப் பதிட்டையும் உண்டு. பெருந்தெய்வங்களுக்கு உயிர்ப்பதிட்டை செய்வது தொல்வழக்கம். குருதிப்பதிட்டை கொடுந்தெய்வங்களுக்குரியது. எந்த வகையில் பதிட்டை செய்யப்படவேண்டும் என அத்தெய்வமே ஆணையிடவேண்டும்” என்றான்.
காரி அந்தக் காஞ்சிர மரத்தை அண்ணாந்து பார்த்து சிலகணங்கள் நின்றுவிட்டு “இங்கு வாழும் தெய்வம் தனக்கென கோருவது எந்தப் பதிட்டை?” என்றான். “தெய்வமே சொல்க, நான் செய்யவேண்டுவது என்ன? நான் எதையும் அளிப்பேன், சொல்க!” என்று கூவினான். நிலைகொள்ளாதவனாக அந்தக் காஞ்சிர மரத்தை சுற்றிவந்தான். மீண்டும் சிலையருகே அவன் வரும்போது விண்ணிலிருந்து விழுந்ததுபோல் ஒரு குருதித் துளி அக்கல்மேல் சொட்டியது. அது ஏதோ பறவையின் எச்சமென்று எண்ணி முகம் சுளித்து குனிந்து பார்த்த காரி கல்லின் பரப்புகளில் பிரிந்து தயங்கி வழிவது செங்கொழுங்குருதியென்று கண்டு மேலே பார்த்தான். கிளையிலமர்ந்து, உகிர்களால் கவ்விய தன் இரையை கொத்திக்கிழித்து உண்டுகொண்டிருந்த செம்பருந்து தலைதூக்கி ஓசையிட்டது. அவனுக்குப் பின்னாலிருந்த குலப்பாடகன் “தெய்வம் சொல்லிவிட்டது, இது குருதியால் நிறுவப்படவேண்டிய ஆலயம்!” என்று கூவினான்.
“பலிவிலங்கைத் தேடி கொண்டுவருக!” என்று வேட்டுவன் ஒருவன் கூவ காரி “இதை என் குருதியால் நிறுவுவேன்” என்றபடி இடையிலிருந்து வாளை எடுத்து தன் இடக்கை மணிக்கட்டை கிழித்து ஊறிப்பெருகிய குருதியில் நூற்றியெட்டு சொட்டுக்களை அக்கல்மேல் உதிர்த்து வணங்கினான். அன்னமும் மலரும் படைத்து அவர்கள் அத்தெய்வத்தை வணங்கி அதை அங்கே நிறுவினர். அப்போது சிம்மக்குரல் என ஓசையெழ அவர்கள் திரும்பி நோக்கினர். உடல் நடுங்க கைகளைத் தூக்கி வீசி துள்ளியபடி குலப்பாடகன் வெறியாட்டு கொண்டிருந்தான். “அன்னையே! கான்பெருமகளே! விண்ணுருவே!” என அவர்கள் கூவினர்.
மலைக்குடிகளின் பாடகன் அலறியபடி வந்து அக்கல் முன் நின்று தாவிச்சுழன்று குதித்தான். “ஏழு யுகம் துயின்றேன். இன்றெழுந்தேன். கொல்வேல் கொடுந்தெய்வம் நான். பெருங்கசப்பின் தேவி நான். குருதிகொள்வேன். கடல் என குருதி கொள்வேன். தலை கொள்வேன். ஆற்றுமணற்பருக்கள் என தலை கொண்டமைவேன். ஆயிரம் பல்லாயிரம் குருதித் தெய்வங்களை துயில்விட்டெழுப்புவேன். அவர்கள் அனைவரும் கொள்ளும் குருதியை நானே பெறுவேன். ஆம் ! ஆம்! ஆம்!” என்று கூவினான். காரி அஞ்சி கைகூப்பி நின்றான். அனைவரும் நடுங்கியபடி நின்றனர். “நீ என் மைந்தன். இது உன் குடிக்கு என் ஆணை! ஒருபோதும் இப்பலிபீடத்தில் குருதி காயலாகாது… குருதி! பசுங்குருதி!” என்று அலறி உடற்தசைகள் வலிப்புகொள்ள துடித்து மல்லாந்து விழுந்தான்.
அவர்கள் அந்த ஆலயத்தின் முன் ஒரு தட்டைக்கல்லை பலிபீடமாக நிறுவினர். ஒரு காட்டு ஆட்டைப் பிடித்து அதன் கழுத்தை அறுத்து அப்பலிபீடம் மீது குருதி சொட்டும்படி அதை மேலே மரக்கிளையில் கட்டித் தொங்கவிட்டுவிட்டு கிளம்பிச் சென்றனர். அந்தியில் அவ்வழி வந்த இன்னொரு வணிகக்குழு அந்த ஆட்டின் குருதியால் நனைந்த பலிபீடத்தை கண்டது. அவர்கள் இன்னொரு ஆட்டை அங்கே கழுத்தறுத்து கட்டித்தொங்கவிட்டனர். வந்தவர் அனைவரும் அவ்வாறே செய்ய பலிபீடக் குருதி காயவே இல்லை. வணிகம் முடித்து திரும்பி வந்த காரி அப்பலிபீடம் அப்போது வெட்டி வைக்கப்பட்ட தசைத்துண்டுபோல உயிருடன் குருதி வழிய அதிர்வதைக் கண்டான். அவன் அங்கேயே தங்கிவிட்டான்.
காரியும் அவன் இளையோர் இருவரும் பூசகர்களாக அங்கேயே குடிலமைத்துத் தங்கி அப்பலிபீடம் காயாமல் பலியும் பூசையும் செய்ய முற்பட்டனர். அவர்களுக்குரிய கொடைகளை அவ்வழி செல்லும் வணிகர்கள் அளித்தனர். குருதிகாயா பலிபீடம் என்ற சொல் புகழ்பெற்றது. அந்த இடம் அனைவரும் வந்து வணங்கி கொடையளித்துச் சென்றாகவேண்டிய ஆலயம் ஆகியது. அதன் வழியாக அமைந்த வணிகப்பாதை நிலைகொண்டது. அதனூடாக பெருவணிகக் குழுக்கள் செல்லத் தொடங்கின. அது பின்னர் வண்டிப்பாதையாக ஆகியது.
பெயரிலாத தெய்வமாக நெடுங்காலம் அது அங்கிருந்தது. குருதியன்னை என்று பின்னர் அதை வணிகர்கள் அழைக்கலாயினர். ரக்தஃபோஜி என்று அவ்வழிச் சென்ற பாடகனாகிய சூதன் ஒருவன் அதற்கு பெயரிட்டான். மேலும் நெடுங்காலம் கழித்து வணிகர் குழுவுடன் வந்த வேதியர் அது கொற்றவை என்றார். அன்னைக்கு அங்கு ஓர் ஆலயம் அமையவேண்டுமென்று வணிகர்களுக்கு அவர் ஆணையிட்டார். வணிகர்களின் கொடையால் சிறிய கற்கோயிலொன்று அங்கு அமைந்தது. ரக்தையன்னையின் ஆலயம் நெடுந்தொலைவிலிருந்துகூட ஷத்ரியர்களும் வணிகர்களும் வந்து வணங்கிச்செல்லும் மையமாக ஆயிற்று. குலப்பழி தீர்க்கவும், சூழ்வினை அகற்றவும், எதிரிகளை வெல்லவும் அங்கு வந்து குருதிபலி கொடுத்து வணங்கிச் சென்றனர்.
அக்கொற்றவை ஆலயத்தை ஒட்டி விராடர்கள் காவலர் குடியிருப்பொன்றை அமைத்தனர். பூசகர் குடியிருப்புகளுக்கான இல்லங்கள் அமைந்தன. அங்கு வணிகர்கள் தங்கிச்செல்லத் தொடங்கியதும் அவர்களின் பொருட்காப்பு மனைகளும் விடுதிகளும் உருவாயின. நெடுந்தொலைவில் மகாப்பிலாவ்யம் என்னும் வணிகநகரம் இருந்தமையால் புதிய ஊர் உபப்பிலாவ்யம் என்று பெயர் பெற்றது. விராடபுரியின் வடமேற்கு எல்லையென்றாகியது. ஒவ்வொரு ஆண்டும் விராடர் தன் துணைவியுடனும் மகளுடனும் வந்து உபப்பிலாவ்யத்தின் அரண்மனையில் தங்கி ரக்தை அன்னைக்கு உயிர்ப்பலியிட்டு வணங்கிமீளும் வழக்கம் உருவாகியது. பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை அன்னைக்கு மானுடப்பலி அளிக்கப்பட்டது. வடக்கிலிருந்து ஷத்ரியர்களும் அரக்கர்களும் பிற மலைக்குடியினரும் விராடபுரிக்குள் நுழையாமல் காக்கும் காவல் தெய்வமாகவே ரக்தை அன்னை விராடர்களால் வணங்கப்பட்டாள்.
அதை நிறுவிய காரியின் குடியைச் சேர்ந்தவர்களே அவ்வாலயத்தின் முதன்மைப்பூசகர்களாக அமைந்தனர். காரி இறக்கும் முன் தன் மைந்தனுக்குச் சொன்ன மந்தணச்செய்தியை அவர்கள் வழிவழியாக செவியினூடாகப் பேணினர். அன்னைக்கு பெருங்குருதிக்கொடை ஒன்று நிகழும், அன்று ஆற்றுமணற்பரு என அவள் முன் தலைகள் விழுந்து பரவும். பெருவெள்ளம்போல் அவள் குருதி உண்டு விடாய் தணிவாள். அதன் பின்னர் அவள் மீண்டும் மண்மறைவாள். அதுவரை பலிபீடம் உலராது காப்பதே அவர்களின் குடியின் கடன். அவர்கள் அன்னை பலிகொள்ள எழும் தருணத்திற்காக காத்திருந்தனர். அந்த மந்தணத்தை ஆயிரமாண்டுகளாக பிறர் எவரும் அறிந்திருக்கவில்லை.
சாத்யகி தன் மைந்தர்களுடன் ரக்தை அன்னையின் ஆலயத்திற்குச் சென்றபோது அந்தி இருளத்தொடங்கியிருந்தது. தென்மேற்குத் திசை நோக்கிச்சென்ற மூன்று சாலைகளிலுமே படைவீரர்களும் தேர்களும் புரவிகளும் ஒன்றுடனொன்று முட்டி, தேங்கி, பிரிந்து, சுழித்துச் சென்றுகொண்டிருந்தன. தனக்கு முன் சென்றுகொண்டிருந்த தேரில் கிராத மன்னர் கூர்மரின் எருமைக் கொடி பறப்பதை சாத்யகி கண்டான். அருகிலிருந்த அசங்கனிடம் “கிராதர்கள், நிஷாதர்கள் அனைவருமே இப்பூசனைக்கு வருவார்கள் என்று எண்ணுகின்றேன். ஏனெனில் இது அவர்களின் தொல்தெய்வம். அன்னையிடம் பலிகொடுத்து விடைபெற்றே அவர்கள் நகர்நீங்குவார்கள் என்று சொன்னார்கள்” என்றான். அசங்கன் “அவர்கள் நகர்நீங்கப்போவதில்லை, தந்தையே” என்றான். “எப்படி சொல்கிறாய்?” என்று சாத்யகி கேட்டான். “சற்று முன்பு வரை அத்தனை உறுதியாகத் தோன்றவில்லை. ஆனால் இப்போது திரண்டு சென்றுகொண்டிருக்கும் இந்தப் படைகளைப் பார்க்கையில் அந்த உறுதி ஏற்படுகிறது. ஏனெனில் இவர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் நிகழவேண்டுமென்று விரும்புகிறார்கள். அவர்கள் ஏற்கெனவே உளமெழுந்து போருக்கு ஒருங்கிவிட்டார்கள். ஒரு சிறு தெய்வக்குறிப்பு போதும், மீண்டும் கிளர்ந்தெழுவார்கள்” என்றான்.
சாத்யகி தலையசைத்தபின் அவன் முகத்தை இன்னொருமுறை பார்த்தான். பின்பு முகத்தை திருப்பிக்கொண்டு வெளியே சென்றுகொண்டிருந்த திரளை வெறித்தான். அணுக்கத்தால் தன் மைந்தர்களை சரியாக புரிந்துகொள்ளவில்லையோ என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. வெறும் விளையாட்டுச் சிறுவர்களாகவும், பொறுப்பற்றவர்களாகவும், அரசமுறை அறியாதவர்களாகவும், முறையான போர்ப்பயிற்சி அற்றவர்களாகவுமே அவன் அவர்களை நடத்தினான். அவ்வாறு அவன் நடத்துகையில் அவர்கள் அதற்குரிய நடத்தையை தாங்களும் கொண்டார்கள். தந்தையருக்கும் மைந்தர்களுக்குமான உறவே அவ்வாறு இருவரும் சூடிக்கொள்ளும் உருவங்களும் நடிப்புகளும்தாம் போலும்.
அவன் அசங்கனிடம் மேலும் மேலும் ஏதோ சொல்ல விரும்பினான். அவர்கள் தன்னைப்பற்றி என்ன எண்ணுகிறார்களோ அதுவல்ல தான் என்று. அதற்கும் அப்பால் தனக்குள் சில உள்ளன என்று. ஆனால் உடனே அத்தனை தந்தையரும் மைந்தரிடம் சொல்வது அதைத்தானே என்று தோன்றியது. அதை சொல்லத் தொடங்கியதுமே செயற்கையான சொற்றொடர்களாகவோ, மிகையுணர்வுகளாகவோ ஆகிவிடக்கூடும். அவன் அசங்கனை தொடவிரும்பினான். அவன் மிக அரிதாகவே அவன் மைந்தர்களை தொடுவான். இளையவன் சினியை மட்டுமே தயக்கமின்றி தொடவோ உடலுடன் இணைத்துக்கொள்ளவோ அவனால் இயன்றிருக்கிறது. கைகளால் தொடாமல் இருப்பதனாலேயே ஒவ்வொரு சொல்லுக்கும் அவன் உள்ளம் சென்று அவர்களைத் தொட்டு வருடிக்கொண்டிருந்தது. அவர்களின் தோள்களை, குழல் சுருள்களை, நெற்றியை, மென்மயிர் படிந்த முகத்தை விழிகளால் தொட்டுத் தழுவாமல் அவர்களிடம் அவனால் பேசமுடிந்ததே இல்லை.
அசங்கனை முந்தையநாள் அணைத்த தொடுவுணர்வு அவன் தோள்களில் எஞ்சியிருந்தது. அது அவன் அடக்கிவைத்த விழைவனைத்தையும் எழுப்பிவிட்டிருந்தது. அவன் கையை தேரின் இருக்கையில் வைத்தான். பின்னர் அதை மெல்ல நகர்த்தி அசங்கனின் முழங்கால்முட்டில் படுமாறு வைத்துக்கொண்டான். கண்களை கூட்ட நெரிசலில் நிறுத்தியபடி மேலும் நன்றாகவே அசங்கனின் முழங்காலை தொட்டான். அவன் உள்ளம் நெகிழ்ந்தது. முகத்தசைகள் மென்மையடைய, புன்னகைபோல் இதழ்கள் நீண்டன. மறந்துபோன இனிய நினைவொன்று என்ன ஏதென்று தெரியாமல் உள்ளத்திலெழுந்து உவகை அளிப்பதுபோல் தோன்றியது.
தென்மேற்கு மூலையை நெருங்கும்போது முழவோசை கேட்கத் தொடங்கியது. நாய் ஒன்று உரக்கக் குரைப்பதுபோல. ஒருசில கணங்களுக்குப் பின்னரே அது முழவோசை என்று அவன் உணர்ந்தான். உபப்பிலாவ்யத்தின் கொற்றவை ஆலயத்தில் மட்டுமே விந்தையானதோர் தொல்முழவு மீட்டப்படுகிறது என்று எவரோ சொன்னது நினைவுக்கு வந்தது. உடும்புத்தோலால்தான் முழவும் உடுக்கும் அமைப்பது வழக்கம். ரக்தை அன்னையின் முழவு மேலும் ஒருமடங்கு பெரிய வட்டம் கொண்டது. முதலைத்தோலை விரித்து அதன் செதில்களை வெப்பத்தால் பதப்படுத்தி அமைக்கப்படுவது அதன் பரப்பு. சிறிய பிரம்புக்குச்சிகளால் அதை மீட்டுகையில் பசிகொண்ட பெண் ஓநாயின் குரலெழும் என்று ஒரு முறை மது அருந்திக்கொண்டிருந்தபோது அங்கே பாடிய சூதன் சொன்னான். அவ்வோசையை செவிகொள்ளக்கொள்ள ரக்தஹ ரக்தஹ என்று அது ஒலிக்கும் என்றான் அவன்.
அவ்வெண்ணம் தோன்றியதுமே அவ்வோசை மிகத் தெளிவாக சொல்லென்று மாறியது. குருதி குருதி குருதி என அது காற்றில் அதிர்ந்தது. அவ்வோசையை ஏற்று அனைத்து சுவர்ப் பரப்புகளும் குருதி குருதி என்றன. அங்கிருக்கும் அனைத்து பொருட்களும் அச்சொல்லை ஊழ்க நுண்சொல்லென ஏற்று தங்களுக்குள் ஒலித்துக்கொண்டிருப்பதாக அவன் எண்ணினான். அசங்கன் “அம்முழவு எதையோ சொல்வதுபோல் ஒலிக்கிறது, தந்தையே” என்றான். திடுக்கிட்டவன்போல் திரும்பிப்பார்த்து “என்ன?” என்றான் சாத்யகி. “குருதி குருதி குருதி என்று அது சொல்வதுபோல் தோன்றுகிறது” என்றான் அசங்கன். “வீண் உளமயக்கு. இதெல்லாம் சூதர்கள் சொல்லலாம், வணிகர்கள் கேட்டு நாணயங்களை வீசலாம், வீரர்கள் மண்ணில் காலூன்றி நிற்கவும் படைக்கலத்தால் மட்டுமே உளமோட்டவும் பயின்றவர்கள்” என்றான் சாத்யகி. “ஆம்” என்றபின் அசங்கன் தலைதாழ்த்தினான்.
கொற்றவை ஆலயத்தின் முன்பு தேர் சென்றுநின்றது. சாத்யகி திரும்பி தன் பிற மைந்தர்கள் ஏறிய தேர்கள் தொடர்ந்து வருகின்றனவா என்று பார்த்தான். நெரித்த கூட்டத்தில் அங்குமிங்குமாக உந்தப்பட்டு அவை சற்று தள்ளி தனித்தனியாக வந்துகொண்டிருந்தன. ஆலயத்தின் முற்றம் மிகச் சிறிதாகையால் உள்ளே சென்ற தேர்களிலிருந்து அரசர்களும் குடித்தலைவர்களும் இறங்கியதுமே தேர்களை ஓட்டி மறுபக்கம் வழியாக வெளியே கொண்டுசென்றுகொண்டிருந்தனர். தங்கள் குடிக்கோல்களுடனும் தலையணிகளுடனும் பல வண்ண ஆடைகளுடனும் இறங்கிய கிராதரும் நிஷாதருமான குடித்தலைவர்கள் இந்திரப்பிரஸ்தத்தின் துணைப்படைத்தலைவர்களாலும் சிற்றமைச்சர்களாலும் வரவேற்கப்பட்டு ஆலயத்திற்குள் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களின் காவலர்கள் தனியாக நிரைவகுத்துச் சென்று ஏற்கெனவே நின்றிருந்த காவலர்களுடன் சேர்ந்துகொண்டனர்.
தன் தேர் நின்றதும் சாத்யகி “மைந்தர்கள் பிரிந்து போய்விடக்கூடாது. இறங்கி ஆலயமுற்றத்தில் சற்று நேரம் நிற்போம்” என்றான். அசங்கன் “அவர்கள் ஓரிரு தேர்களுக்குப் பின்னால்தான் இருக்கிறார்கள். வந்துவிடுவார்கள்” என்றான். சாத்யகியை எதிர்கொண்ட படைத்தலைவனாகிய வக்ரதந்தன் தலைவணங்கி முகமன் உரைத்தான். சாத்யகி “இளைய யாதவர் வந்துவிட்டாரா?” என்றான். “அரசரும் இளையோரும் வரும்போது அவர்களுடன் வருகிறார் என்றார்கள்” என்று வக்ரதந்தன் சொன்னான். அவர்கள் இறங்கி நடந்து கொற்றவை ஆலயத்தின் முன்னால் நின்ற இலஞ்சி மரத்துக்குக் கீழே கூடிநின்றனர்.
பிற தேர்களிலிருந்து மைந்தர்கள் இறங்கியதும் சாத்யகி “இங்கே கட்டுக்கடங்காமல் கூட்டம் நெரிபடுகிறது. ஒருவருடன் ஒருவர் அணுகி நின்றுகொள்ளுங்கள். பிரிந்தால் மீண்டும் ஒன்று கூடுவதற்கு பொழுது விடியவேண்டியிருக்கும்” என்றான். துணைப்படைத்தலைவன் கட்ககீர்த்தி அருகே வந்து “உள்ளே செல்லலாமே, அரசே” என்று சொல்ல சாத்யகி திரும்பி அசங்கனிடம் “இளையோரை ஒற்றைத் திரளாக அழைத்து வா” என்று ஆணையிட்டுவிட்டு உள்ளே சென்றான். அவர்கள் அவனை தொடர்ந்தனர்.
கொற்றவை ஆலயம் தொன்மையான சின்னஞ்சிறு கல்ஆலயம் ஒன்றை உள்ளே அமைத்து கட்டப்பட்ட பெரிய சுவர்வளைப்பு. அங்கே முன்பு நின்றிருந்த காஞ்சிரமரம் காலப்போக்கில் பட்டுப்போனபின் அதன் மிகப்பெரிய அடிமரத்தை மட்டும் மூன்று இடங்களிலாக பீடமமைத்து நட்டு நிறுத்தியிருந்தனர். அந்த மரத்தில் வெள்ளியாலான கொற்றவை முகம் பதிக்கப்பட்டு அதற்கும் தனியாக பூசனைகள் செய்யப்பட்டன. பழைய மரமிருந்த இடத்திற்கருகே நடப்பட்டிருந்த புதிய காஞ்சிர மரம் இரண்டு ஆள் சுற்றி பற்ற முடியாத அளவுக்கு பேருருத் திரட்டி, கிளைகள் திமிறி, விரிந்து வானில் பரந்து நின்றிருந்தது.
காஞ்சிர மரத்தின் வேர்கள்மேல் கட்டப்பட்ட சிறிய ஆலயம் வேர்கள் தடிக்க கற்கள் வெடித்து வெவ்வேறு வகையில் விரிசலிட்டு சற்று சரிந்ததுபோல் அமர்ந்திருந்தது. ஆனால் வேர்கள் அதை கவ்வி இணைத்திருந்தன. உள்ளே ரக்தை அன்னையின் மையப்பதிட்டை உருவற்ற கல் என்பதை சாத்யகி அறிந்திருந்தான். அன்னை முன் அமைக்கப்பட்டிருந்த பலிபீடம்தான் மிகப் பெரியது. கவிழ்ந்த தாமரை வடிவில் இடையளவு உயரமாக அமைக்கப்பட்டிருந்தது. அதை ஆமை தாங்கியது. நாகங்கள் அதன் விலாவெங்கும் பின்னியிருக்க விடாய் கொண்ட தெய்வங்கள் வாய்திறந்தும் கைவிரித்தும் குருதி ஏற்பதாக செதுக்கப்பட்டிருந்தன.
ஆலயத்தைச் சுற்றி மூங்கில்கள் நடப்பட்டு அவற்றில் ஊன்நெய்ப் பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. ஆலயமுகப்பின் பெரிய அரைவட்ட முற்றத்தை வளைத்து பிறைவடிவில் அரசர்களும் குடித்தலைவர்களும் நின்றிருந்தனர். அவையிலிருக்கும் முதன்மை, முறைமை எதுவும் அங்கு பேணப்படவில்லை. எனவே கிராதரும் நிஷாதரும் ஷத்ரியரும் கலந்து தோள்தொட்டு நெரித்து நின்றிருந்தனர். அவர்களின் கோல்கள் மீதும் கவசங்கள் மேலும் தலையணிகள் மேலும் பந்தங்களின் செவ்வொளி அலையடித்துக்கொண்டிருந்தது. ஆலயவளைப்புக்குள் அரசர்களும் சிற்றரசர்களும் குடித்தலைவர்களும் ஒவ்வொருவராக உள்ளே வந்துகொண்டிருந்தனர்.
தெய்வத்தின் முன் மனிதர்கள் வாழ்த்தப்படுவதில்லை என்பதனால் அவர்களை வரவேற்கும் ஒலிகளோ வாழ்த்தொலிகளோ எழவில்லை. அரசர்களன்றி பிறர் உள்ளே அனுப்பப்படவில்லை என்பதனால் அவர்கள் வந்ததை பிறர் விழிதிருப்பி நோக்கவும் இல்லை. ஓசையின்றி நீர் பெய்து சுனை நிறைவதுபோல் அவர்கள் வந்து அந்த தலைச்செறிவை மேலும் விரித்து அழுத்திக்கொண்டிருந்தனர். ஆலயத்தின் இடப்பக்கமாக நின்றிருந்த நூற்றெட்டு இசைச்சூதர்கள் ஐம்மங்கல இசைக்கருவிகளை ஒலித்துக்கொண்டிருந்தனர். முழவும் உடுக்கும் மணியும் சங்கும் கொம்பும் இணைந்த தாளம் கடல் அலையென சுருண்டெழுந்து அறைந்து சிதறி வழிந்தோடி மீண்டும் எழுந்து வந்தது. சுரேசரும் சிற்றமைச்சர்களும் அங்குமிங்குமாக ஓடி பூசகர்களையும் பிறரையும் ஏவிக்கொண்டிருந்தனர்.
உபப்பிலாவ்யத்தின் பூசகர்கள் அங்கேயே தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த தொல்குடியினர். ஆகவே அவர்களின் முகங்கள் அனைத்தும் ஒன்றுபோலிருந்தன. வலப்பக்கமாக சரித்த கொண்டையும், காதளவோடிய பெரிய மீசையும், கரிய திரண்ட உடலும், கைகளிலும் உடலிலும் இரும்பு அணிகளும் கொண்டு அவர்கள் அசுரகுடியினர் என்றே தோன்றினர். முதுபூசகர் நூறு அகவை கண்ட செங்கர் காரி. அவர் கொற்றவை சிலைக்கு அருகே போடப்பட்ட கரடித்தோல் விரித்த மணை மீது மெலிந்த கால்களை மடித்து அமர்ந்திருந்தார். பூசகர்கள் அனைவருமே கரடித்தோலாடை அணிந்திருந்தனர். இடுப்பில் சிவந்த பட்டாலான கச்சை. கழுத்தில் வயிறு வரை வரும் கல்மணிமாலை. அந்த மாலைகள் மிகத் தொன்மையானவை என்பது தொலைவிலேயே தெரிந்தது. எளிய கூழாங்கற்களை கைகளாலேயே உரசி மணிகளாக்கி உருவாக்கப்பட்ட அத்தகைய மாலைகளை ஆழ்காடுகளில் வாழும் அசுர குடிகள் மட்டுமே அணிவது வழக்கம்.
வெளியே முரசுகளும் முழவுகளும் கொம்புகளும் ஒலித்து அமைய சுரேசரால் அழைத்து வரப்பட்டு யுதிஷ்டிரரும் தம்பியரும் கைகளைக் கூப்பியபடி நடந்து வந்தனர். கொற்றவை பூசனைக்குரிய கரிய இடையாடையும் செம்பட்டுக் கச்சையும் அணிந்திருந்தனர். உடலில் பிற அணிகளேதும் கொண்டிருக்கவில்லை. குழலை அவிழ்த்து முதுகிலும் தோளிலுமாக புரளவிட்டிருந்தனர். வரவேற்புரையின்றி யுதிஷ்டிரர் வந்து முன்நிரையில் நின்றார். அங்கு முன்னரே கூடிநின்ற எவரையும் அவர் பார்க்கவில்லை. அவருக்கு இருபுறமும் நகுலனும் சகதேவனும் நின்றனர். பீமன் சற்று அப்பால் கைகளை மார்பில் கட்டியபடி சிறிய விழிகளைத் தாழ்த்தி நிலம் நோக்கி நின்றான். இப்பாலிருந்து சாத்யகி நோக்கியபோது அவன் விழிமூடித் துயில்வதுபோல் தோன்றியது.
இளைய யாதவர் நேமிதரன் தொடர உள்ளே வந்தார். எவரையும் நோக்காமல் கைகளைக் கூப்பியபடி வந்து அரசர் நிரையில் தானும் நின்றுகொண்டார். சாத்யகி தன் உள்ளத்தில் பதற்றமெழுவதை உணர்ந்தான். கொற்றவைப் பூசனைக்கு திரௌபதி வரமாட்டேனென்று சொல்லிவிடக்கூடுமென்று எண்ணமெழுந்தது. மறுகணமே அதெப்படி என்று உள்ளம் மறுத்தது. ஆனால் முற்றிலும் எதிர்பாராத ஒன்று நிகழும் என்றே அவன் உள்ளம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. மீண்டும் சங்குகளும் முரசுகளும் கொம்புகளும் முழவுகளும் முழங்க திரௌபதி தன் அணுக்கச் சேடி தொடர கைகூப்பியபடி உள்ளே நுழைந்தாள். முதன்முறையாக ஆலயத்தை வளைத்து நின்றிருந்த அரசர்கள் அனைவரிலும் ஓர் அசைவு மெல்லிய அலைபோல கடந்து சென்றது. அனைவரும் தலைதிருப்பி அவர்களை பார்த்தனர். எவரும் வாய்திறந்து பேசவில்லையென்றாலும் தேனீ ரீங்காரம் போலொரு முழக்கம் அவர்களில் எழுந்தது.
திரௌபதி செம்பட்டு ஆடை அணிந்திருந்தாள். வேறு அணிகளோ பூண்களோ சூடியிருக்கவில்லை. கைகளைக் கூப்பியபடி கண்களை நிலம் நோக்கி தாழ்த்தி சீராக அடிவைத்து நடந்து வந்தாள். நல்லொழுக்கில் அனைத்துப் பாய்களையும் தணித்து மெல்ல செல்லும் பெருங்கலம்போல் என்று சாத்யகி நினைத்துக்கொண்டான். அவள் கால்கள் மண்ணில் படுவதுபோல் தோன்றவில்லை. நிகர்கொண்ட தோள்கள், அரவென எழுந்த தலை. இழுத்துக்கட்டிய சரடில் நடப்பதுபோன்று முற்றிலும் ஒழுங்கமைந்த உடலசைவு. மிதந்து வருபவள்போல் அணுகி யுதிஷ்டிரருக்கு மறுபக்கம் மகளிர் நிரை நடுவே சென்று நின்றாள். அவளைத் தொடர்ந்து குந்தியும் பாண்டவர்களின் துணைவியரும் உள்ளே வந்தனர். அவர்கள் கைகூப்பியபடி வந்து திரௌபதியின் இருபக்கமும் நின்றனர்.