பிரயாகை - 88

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 1

புலரியின் முதல் முரசொலி கேட்டு எழுந்தபோது விதுரர் அதுவரைக்கும் இரவு முழுக்க தனக்குள் முரசொலி கேட்டுக்கொண்டிருந்ததைப்போல் உணர்ந்தார். எழுந்து மஞ்சத்திலேயே சப்பணமிட்டு அமர்ந்து கைகளை சின் முத்திரை பிடித்து வைத்துக்கொண்டு கண்களை மூடி எண்ணங்களின் ஒழுக்கை நோக்கி அமர்ந்திருந்தார். முரசொலி அப்போதும் கேட்டுக்கொண்டிருந்தது. வரும் வரும் வரும் என அது சொல்வதுபோல. உடைந்து சிதறிப்பெருகும் எண்ணங்கள். அவை மீளமீள ஒன்றையே சென்று தொட்டுக்கொண்டிருந்தன.

அவர் தன்னை கலைத்துக்கொண்டு கண்களைத் திறந்தபோது முரசொலி இது இது இது என சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டார். காவல்மாட முரசுகள் எப்போதோ ஒலித்து ஓய்ந்துவிட்டிருந்தன. அஸ்தினபுரியின் வெவ்வேறு முனைகளில் ஆலயங்களில் மணிகள் முழங்கிக்கொண்டிருந்தன. அரண்மனையின் பல இடங்களில் திரைச்சீலைகள் விடிகாலைக் காற்றில் அலையடித்தன. ஓரிரு சாளரக்கதவுகள் முனகியபடி அசைந்தன. எங்கோ எவரோ ஏதோ கூவ குதிரைக்குளம்பொலி ஒன்று துடிதாளமென கடந்துசென்றது.

அவர் எழுந்துகொண்டு ஓலைப்பெட்டியைத் திறந்து முந்தையநாள் வரை பறவைகள் வழியாக வந்திருந்த ஓலைகளை சீர்ப்படுத்தி வாசித்தார். எட்டு வெவ்வேறு ஒற்றர்கள் அளித்த செய்திகள். பின்னர் அவற்றை அடுக்கிக் கட்டி பெட்டிக்குள் வைத்து பூட்டியபின் எழுந்து வெளியேவந்தார். அவரது காலடிகளுக்காக காத்து வெளியே நின்றிருந்த சேவகன் தலைவணங்கினான். “நீராட்டறை சித்தமாகிவிட்டதா?” என்று அவர் கேட்டார். அவன் தலையசைத்தான்.

அவர் இடைநாழியில் நடக்கையில் சேவகன் “சிசிரர் தங்களைச் சந்திக்க விழைகிறார்” என்றான். பாஞ்சாலத்தின் தலைமை ஒற்றன். விதுரர் தலையசைத்து சில அடிகள் வைத்தபின் ”நீராட்டறைக்கு வரச்சொல்” என்றார். சேவகன் முகத்தில் சற்று தயக்கமும் பின் ஒப்புதலும் தெரிந்தன. அவர் பெருமூச்சுடன் இடைநாழியில் அறைவாயில்கள் வழியாக விழுந்துகிடந்த செவ்வொளிப்பட்டைகள் வழியாக கனன்று கனன்று நடந்தார். அவரது காலடியோசைகளை அரண்மனையின் தொலைதூரச்சுவர்கள் திருப்பி உச்சரித்தன.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

நீராட்டறைச்சேவகன் அவரை வணங்கி வரவேற்று அழைத்துச்சென்றான். வெந்நீர்க்கலங்கள் ஆவி எழ ஒருங்கியிருந்தன. மரத்தாலத்தில் லேபனங்களும் தைலங்களும் நறுமணப்பொடிகளும் சித்தமாக இருந்தன. நீராட்டறைச்சேவகன் அவர் ஆடைகளைக் களைந்தான். அவர் பீடத்தில் அமர்ந்ததும் தலையில் சிரோசூர்ணத்தைப் பரப்பி விரல்களால் பிசைந்து ஒரு மெல்லிய துணியால் சுருட்டிக் கட்டி கொண்டை போல ஆக்கினான்.

அவன் அவரது காலடியில் அமர்ந்து தைலத்தை உடலெங்கும் பூசத்தொடங்கியபோது வாசலில் சிசிரன் வந்து நின்றான். சேவகன் தலைவணங்கி வெளியேறினான். நீராட்டறைச் சேவகன் தைலத்தை தேய்த்துக்கொண்டு குனிந்திருக்க சிசிரன் அருகே வந்து நின்று “அனைத்துச்செய்திகளையும் தொகுத்து அறிந்துவந்திருக்கிறேன் அமைச்சரே” என்றான். விதுரர் தலையசைத்தார்.

“அவையில் நிகழ்ந்ததை முன்னரே கனகரே வந்து சொல்லியிருப்பார்” என்று சிசிரன் சொன்னான். “அவையில் யாதவகிருஷ்ணன் ஒரு சிறிய நாடகத்தை நிகழ்த்தினார். மணமண்டபப் பூசல் வழியாக அவர்கள் பாண்டவர்கள் என்பது அனைத்து ஷத்ரியர்களுக்கும் ஐயமில்லாமல் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே அது ஜராசந்தருக்கும் சல்லியருக்கும் தெரிந்திருந்தது. அவையிலிருந்த தொலைதூர தேசத்து அரசர்கள் பாண்டவர்களை பார்த்தவர்கள் அல்ல. அவையில் அர்ஜுனனின் வில்திறத்தையும் பீமனின் தோள்திறத்தையும் அவர்கள் நேரில் கண்டனர். பாண்டவர்களின் ஒற்றுமையும் அங்கே வெளிப்பட்டது.”

“அது பாரதவர்ஷத்தின் அரசர்களனைவருக்கும் தெளிவான செய்தியாக வெளிப்பட்டது. அஸ்தினபுரியின் மாவீரர்களான பாண்டவர்கள் பாஞ்சால இளவரசியை மணந்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது கங்காவர்த்தத்தின் பழைமையான ஷத்ரியகுலத்தின் உறவினர். அவர்களுடன் பன்னிரு தளபதிகள் தலைமை ஏற்கும் பெரும்படை இன்று உள்ளது. ஷத்ரியர் உண்மையிலேயே திகைப்பும் அச்சமும் அடைந்துவிட்டனர். அவைக்களம் நீங்கியபோது அவர்கள் கூச்சலிட்டு பேசிக்கொண்டும் கிளர்ச்சிகொண்ட உடலசைவுகளுடனும் சென்றார்கள்” சிசிரன் தொடர்ந்தான்.

வைதிகர்கள் பாண்டவர்களை சூழ்ந்துகொண்டனர். அவர்கள் பாண்டவர்களை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தங்களில் ஒருவனின் வெற்றி என்றே அதை கருதினர். திரௌபதியை கைபற்றி அழைத்துக்கொண்டு பாண்டவர்கள் அவர்கள் நடுவே நின்றபோது முதியவைதிகர் மஞ்சளரிசியும் மலருமிட்டு வாழ்த்தினர். வேள்வியன்னம் கொண்டுவந்து ஊட்டினர். அவர்கள் வைதிகர்களின் வாயில் வழியாக வெளியேறி அகன்றனர்.

துருபதனின் ஒற்றர்கள் அவர்களை தொடர்ந்தனர். அவர்கள் ஐவரும் வைதிகர் சூழ காம்பில்யத்தின் எல்லைக்கு அப்பால் கங்கைக் கரையோரமாக இருந்த அவர்களின் குடிலுக்கு சென்றனர். அது புறவைதிகர்களின் சேரி. சேரியின் எல்லையில் இருந்து குயவர்களின் குடில்கள் தொடங்கி கங்கைக்கரைச் சதுப்பை நோக்கி இறங்குகின்றன. குயவர் வரிசையில்தான் அவர்கள் தங்களுக்கென கட்டிக்கொண்ட சிறிய குடில் இருந்தது.

வைதிகர்களின் மூன்று சிற்றாலயங்களில் பூசனை முடித்து அவர்கள் அளித்த அன்னவிருந்தை அருந்தி அவர்கள் சேரியை அணுகும்போது இருட்டிவிட்டது. தேர்ப்பெருஞ்சாலையிலேயே வைதிகரிடமிருந்து பிரிந்து அவர்கள் கிளைச்சாலைக்குள் நுழைந்துவிட்டனர். அந்நேரம் வைதிகர்தெருவில் எவருமில்லை. கங்கைக்கரையின் வேள்விச்சடங்குகளுக்கும் ஆலயப்பூசனைகளுக்கும் கொடைபெறுவதற்கும் சென்றிருந்தனர். குயவர் தெருக்களில் மாலையில் எவரும் மதுமயக்கில்லாமல் இருப்பதில்லை.

அவர்கள் வருவதை முன்னரே குந்திதேவி அறிந்திருந்தாள் என்று தோன்றுகிறது. குடிலை அவர்கள் நெருங்கியதுமே கையில் ஐந்து மங்கலங்கள் கொண்ட மண்தாலத்துடன் அவள் வெளியே வந்து திரௌபதியை எதிர்கொண்டாள். அகல்சுடர் கங்கைக்காற்றில் அணையாமலிருக்க தன்னை நிறுத்தி மறைத்துக்கொண்டு உடலை கோணலாக்கி அருகே வந்து அவள் நின்றபோது அர்ஜுனனிடம் திரௌபதியின் கையைப்பற்றிக்கொண்டு முன்னால் சென்று அன்னையை வணங்கும்படி தருமன் சொன்னான்.

”ஆனால் குந்திதேவி அவர்கள் ஐவரும் சேர்ந்து நின்று நடுவே திரௌபதியை நிறுத்தி தன்னை வணங்கும்படி சொன்னார்கள்” என்று சிசிரன் சொன்னதும் தலைகுனிந்து லேபனப் பூச்சை ஏற்றுக்கொண்டிருந்த விதுரர் நிமிர்ந்தார். “ஆம், அமைச்சரே. அது தருமனை திகைக்கச்செய்தது. அவர் ஏதோ சொல்ல முயல குந்திதேவி ஒற்றைச் சொல்லால் அடக்கினார். நடுவே திரௌபதி நின்றுகொள்ள அவரது வலப்பக்கம் தருமனும் இடப்பக்கம் அர்ஜுனனும் நின்றனர்.”

விதுரர் ”தருமனுக்கு இடப்பக்கம் திரௌபதி நின்றாளா?” என்றார். “ஆம், அமைச்சரே” என்றான் சிசிரன். “ம்ம்” என விதுரர் தலையை அசைத்தார். “திரௌபதியின் இருபக்கங்களிலாக பீமனும் நகுலனும் சகதேவனும் நின்றனர். ஐவருக்கும் சேர்த்து குந்திதேவி சுடராட்டு செய்து மங்கலம் தந்து வரவேற்றார்கள். அறுவரிடமும் தன்னை ஒருமித்து கால்தொட்டு வணங்கும்படி ஆணையிட்டார்கள். அவர்கள் அவ்வண்னமே செய்தபோது மஞ்சள்நீரையும் அவர்கள் சென்னியில் தெளித்து மஞ்சளரிசியும் மலரும் தூவி வாழ்த்தினார்கள்.”

“அவர்கள் உள்ளே சென்றனர். சற்று நேரம் கழித்து நமது ஒற்றர்களால் அமர்த்தப்பட்டிருந்த முதுபார்ப்பனியை குடிலுக்குள் அனுப்பினோம். ஆனால் அப்போது அவர்கள் பேசிமுடித்துவிட்டிருந்தனர். அவளைக் கண்டதும் குந்திதேவி உணவை சற்று கழித்து கொண்டுவந்தால் போதும் என்று சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்கள்” என்றான் சிசிரன். “தருமனின் முகம் சிவந்து கண்கள் கலங்கி குரல் உடைந்திருந்ததாக முதுபார்ப்பனி சொன்னாள். பீமன் தலைகுனிந்து அப்பால் அமர்ந்திருக்க அர்ஜுனன் கைகளை கட்டிக்கொண்டு கூரியவிழிகளால் நோக்கியபடி சுவரில் சாய்ந்து நின்றிருந்தார். சகதேவனும் நகுலனும் சற்று அப்பால் தரையில் அமர்ந்திருந்தனர்.”

“அவள்?” என்றார் விதுரர். “பாஞ்சால இளவரசி அங்கே நிகழ்வனவற்றுக்கும் அவருக்கும் தொடர்பே இல்லாதது போல் நின்றிருந்தார்கள். அவரது முகத்திலோ இதழ்களிலோ இல்லாவிட்டாலும் விழிகளுக்குள் ஒரு மென்புன்னகை இருந்தது என்று முதுபார்ப்பனி சொன்னாள்.” விதுரர் தலையசைத்து பின் பெருமூச்சுடன் எழுந்துகொண்டார். அவர் உடலை நீவிக்கொண்டிருந்த நீராட்டறைச் சேவகன் எழுந்து சென்று வெந்நீரை அளாவினான்.

வெந்நீராட்டுக்கான வெண்கல இருக்கையில் அமர்ந்தபடி விதுரர் “அவள் ஏதேனும் சொன்னாளா?” என்று கேட்டார். சிசிரன் “அதை முதுபார்ப்பனி கேட்க முடியவில்லை” என்றான். ‘நான் அதை கேட்கவில்லை. அவள் பேசிய ஒலியாவது காதில் விழுந்ததா என்றேன்” என்றார் விதுரர். சிசிரன் “இல்லை, அவர் ஒரு சொல்லும் சொல்லவில்லை, அவர் உதடுகள் பிரிந்ததாகவே தெரியவில்லை என்றே முதுபார்ப்பனி சொன்னாள்” என்றான்.

விதுரரின் உள்ளங்கால் மேல் வெந்நீரை மெல்ல ஊற்றி அவரது கால்விரல்களை மெல்ல நீவி இழுத்தான் நீராட்டறைச் சேவகன். உள்ளங்கால் குழிவில் கைகளால் அழுத்தினான். குதிகாலுக்குப்பின் அழுத்திக்குவித்தான். விதுரர் நினைத்துக்கொண்டு நகைத்தார். நீராட்டறைச் சேவகன் அவரது குதிகால்களில் வெந்நீரை விட்டுக் கொண்டிருப்பதை கூர்ந்து நோக்குபவர் போல விழியசையாமலிருந்தார். பின்னர் திரும்பாமலேயே “குந்தி முன்னதாக எவரையேனும் சந்தித்தார்களா?” என்றார்.

“ஆம், பாண்டவர்கள் காம்பில்யத்தின் அரண்மனைக்குச் சென்றபோது அவர்கள் அருகே இருந்த சப்தவனம் என்னும் சோலைக்கு சென்றார்கள். அது பாஞ்சாலத்தின் ஐங்குலங்களில் ஒன்றான துர்வாசகுலத்திற்கு உரியது. அங்கே மாமுனிவர் துர்வாசர் வந்து தங்கியிருந்தார். துர்வாசரிடம் குந்திதேவி நீண்ட உரையாடலில் ஈடுபட்டார். பேசியதென்ன என்று அறிய முடியவில்லை. ஆனால் அப்பேச்சு மைந்தர்களைப்பற்றியதாக இருக்கலாமென்று அவரது விழிகளில் இருந்து தெரிந்தது என நம் ஒற்றன் சொன்னான்.”

விதுரர் அவன் மேலே சொல்வதற்காக காத்திருந்தார். “அன்றிரவு முழுக்க அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அந்தச் சிறுகுடிலில் மரவுரிப்படுக்கையில் திரௌபதி நன்றாகத் துயின்றார். நகுலனும் சகதேவனும் வெளியே சென்று அருகே இருந்த இன்னொரு வைதிகனின் இல்லத்துத் திண்ணையில் படுத்துக்கொண்டனர். பீமன் சற்று நேரத்தில் வெளியே வந்து கங்கைக்கரையில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த அன்னசாலைக்குச் சென்று எஞ்சிய உணவை முழுக்க கேட்டு வாங்கி உண்டுவிட்டு அங்கேயே படுத்துத் துயின்றார்” சிசிரன் தொடர்ந்தான்.

அர்ஜுனன் வெளியே வந்து குடிலின் திண்ணையில் துயிலாது இரவெல்லாம் காவலிருக்க உள்ளே அகல்விளக்கொளியில் தருமனும் குந்திதேவியும் மட்டும் பேசிக்கொண்டிருந்தனர். இரவெல்லாம் அப்பேச்சு நீண்டது. அவ்வப்போது தருமனின் குரல் துயரத்துடனும் சினத்துடனும் எழுந்தும் உடைந்தும் வெளிப்பட்டது. குந்திதேவி மெல்லிய குரலில் பேசினாலும் சிலசமயங்களில் அவர்களின் குரலும் மேலெழுந்து ஒலித்தது. இடையே நீண்ட சொல்லின்மை இருவரிலும் குடியேற அவர்கள் சுடரையோ இருளையோ நோக்கியபடி அசைவழிந்து அமர்ந்திருந்தனர். மெல்லிய இயல்பான உடலசைவு ஒருவரில் நிகழ்கையில் மற்றவர் கலைந்து ஏறிட்டு நோக்க அந்நோக்கில் இருந்து சொல்பிறக்க மீண்டும் பேசத் தொடங்கினர்.

காலையில் குந்தியும் திரௌபதியும் அர்ஜுனன் துணையுடன் கங்கையில் நீராடி மீண்டனர். நகுலனும் சகதேவனும் பீமனும் நீராடிவிட்டு தனித்தனியாக வந்து சேர்ந்தனர். அவர்கள் ஒருவரோடொருவர் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. நன்கு விடிந்ததும் தனிப்புரவியில் திருஷ்டத்யும்னன் குடில்முற்றத்தில் வந்திறங்கினார். அர்ஜுனன் எழுந்து அவரை வரவேற்றார். அவர் அர்ஜுனனுக்கு முகமன் சொன்னபின் திண்ணையில் அமர்ந்துகொள்ள உள்ளிருந்து திரௌபதி வந்து திருஷ்டத்யும்னனுக்கு முகமன் சொன்னார். அவர் ஓரிரு சொற்களில் ஏதோ கேட்க திரௌபதி புன்னகையுடன் மறுமொழி சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

உள்ளிருந்து குந்திதேவி வந்தபோது திருஷ்டத்யும்னன் எழுந்து வணங்கினார். அவர்கள் முறையான முகமனுக்கும் வணக்கத்திற்கும்பின் திண்ணையின் வலதுமேட்டில் ஈச்சம்பாய் மேல் அமர்ந்துகொண்டார்கள். அவர்களுக்குப் பின்னால் தருமன் அமர அர்ஜுனன் சுவரில் சாய்ந்து நின்றார். பிற மூவரும் ஓரிரு சொற்களில் விடைபெற்று விலகிச் சென்றனர். பீமன் தலைகுனிந்து கங்கைக் கரையோரமாகச் செல்ல இளையோர் இருவரும் தங்களுக்குள் பேசியபடி சென்று ஒரு ஆலமரத்தடியில் நின்றுகொண்டனர். ஆலமரத்தின் உலர்ந்த பிசினை எடுத்து இருவரும் வாயிலிட்டு மென்றனர்.

விதுரர் புன்னகைசெய்தார். சிசிரன் அதை நோக்கி தானும் புன்னகைசெய்து “அவர்களின் பேச்சை கேட்க முடியவில்லை. அங்கே நானே ஒரு குயவனாக தொலைவில் நின்று நோக்கினேன். அவர்கள் பேசிக்கொண்டதை வைத்துப் பார்த்தால் அவர்கள் பேசிக்கொண்டவை திருஷ்டத்யும்னனுக்கு முன்னரே தெரியும் என்று தோன்றியது. அவர் முகவாயை கையால் வருடியபடி தலையை அசைத்து கேட்டுக்கொண்டிருந்தார். மாற்றுச் சொல் எதையும் கேட்க விழையாத உறுதியுடன் குந்திதேவி பேச அப்பால் தருமன் தன் தலையை கையால் ஏந்தியபடி குனிந்து அமர்ந்திருந்தார்” என்று தொடர்ந்தான்.

திருஷ்டத்யும்னன் நெடுநேரம் கழித்து எழுந்து தலைவணங்கினார். குந்திதேவி எழுந்து மீண்டும் இறுதியாக ஏதோ சொன்னபடி உள்ளே செல்ல திருஷ்டத்யும்னன் திரும்ப அமர்ந்துகொண்டு தருமனை நோக்கினார். அவர் தலைதிருப்பவில்லை. திருஷ்டத்யும்னன் அர்ஜுனனை நோக்கி ஏதோ கேட்க அவர் தமையனை நோக்கி கைசுட்டினார். திருஷ்டத்யும்னன் தருமனிடம் ஏதோ கேட்க தருமன் தன் தலையை கைகளால் வருடிக்கொண்டு எழுந்து நடந்து விலகினார். திருஷ்டத்யும்னன் அர்ஜுனனிடம் திரௌபதியை சந்திக்க விழைவதாக சொல்லியிருக்கலாம். அர்ஜுனன் உள்ளே சென்றதும் திரௌபதி வந்து குந்தி அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்துகொண்டார்.

இருவரும் முகத்தோடு முகம் நோக்காமல் பேசிக்கொண்டனர். திருஷ்டத்யும்னன் தயக்கத்துடன் விழிகளை அப்பால் இருந்த குடிலையும் அதனருகே நின்ற சாலமரத்தையும் நோக்கியபடி பேச தலைகுனிந்து திரௌபதி மறுமொழி சொன்னார். ஏதோ சொன்னபோது திருஷ்டத்யும்னன் விரைந்து திரும்ப இருவர் விழிகளும் தொட்டுக்கொண்டன. திரௌபதி புன்னகைத்தார். திருஷ்டத்யும்னன் திரும்பிக்கொண்டு ஓரிரு சொற்களை சொன்னபின் எழுந்துகொண்டார். விடைபெற்றுச்செல்ல விழைவதாக சொல்லியிருக்கலாம். அர்ஜுனன் வெளியே வந்து கைதட்டி தன் உடன்பிறந்தவர்களை அழைத்தார். அவர்கள் வந்தபோது குந்திதேவியும் உள்ளிருந்து வந்தார்கள். அவர் அவர்களை வணங்கி விடைபெற்று குதிரையில் ஏறிக்கொண்டார்.

அவர் சென்றதும் மீண்டும் பாண்டவர்கள் கலைந்து நான்குபக்கமும் செல்லத் திரும்பியபோது திரௌபதி இளையபாண்டவர்களிடம் அவர்கள் வாயிலிட்டு மென்றுகொண்டிருந்ததை சுட்டிக்காட்டி துப்பும்படி ஆணையிட்டாள். இருவரும் துப்பிவிட்டு நாணி தலைகுனிந்தார்கள். அவள் புன்னகையுடன் அவர்களிடம் உள்ளே செல்லும்படி சொல்லிவிட்டு அவர்களுடன் தானும் சென்றாள். குந்தி தேவி புன்னகையுடன் அவள் சென்ற திசையை நோக்கினாள். தருமனும் அவள் சென்றதை நோக்கிவிட்டு அன்னையை நோக்காமல் திரும்பி அகன்றார். பீமன் அர்ஜுனனை நோக்கி புன்னகைசெய்வதையும் அர்ஜுனன் திரும்ப புன்னகைசெய்வதையும் கண்டேன்.

விதுரர் சிரித்துக்கொண்டு தன் தலைமேல் இருந்து முகத்தில் வழிந்த நீரை கையால் துடைத்தபின் “பாஞ்சால இளவரசர் எங்கே சென்றார்?” என்றார். “அவர் நேராக சென்றதே துர்வாசரை காண்பதற்குத்தான்.” விதுரர் தலையசைத்தார். நீராட்டறைச் சேவகன் அவர் மேல் வெந்நீரை ஊற்றி தலையை விரல்விட்டு நீவி கழுவினான். சிசிரன் காத்திருந்தான். விதுரர் போதும் என்று கைகாட்டினார். அவர் குழலை நீராட்டறைச் சேவகன் மரவுரியால் துடைக்கத் தொடங்கியதும் சிசிரன் “அரண்மனை ஒற்றர்கள் அளித்த செய்திகள் நேராகவே வந்திருக்கும்” என்றான். ஆம் என தலையசைத்து அவன் செல்லலாம் என்று விதுரர் கைகாட்டினார்.

உடல் துவட்டி நறுமணத்தைலப்பூச்சும் சுண்ணப்பூச்சும் முடித்து வெளிவரும் வரை அவர் ஏதும் பேசவில்லை. ஆடைமாற்றிக் கொண்டிருக்கையில் அறைக்குள் வந்த சுருதை கதவருகே நின்று “உணவருந்திவிட்டுத்தானே?” என்றாள். “ஆம்” என்றார் விதுரர். அவள் ஓரிரு கணங்கள் தயங்கிவிட்டு “அரசரை சந்திக்கவிருக்கிறீர்களா?” என்றாள். விதுரர் “ஆம்” என்றார். அவள் ஒரு அடி முன்னால் வந்து “இளவரசர்கள் இன்று மீள்கிறார்களோ?” என்றாள்.

விதுரர் தன்னை அறியாமலேயே “எந்த இளவரசர்கள்?” என்று கேட்டுவிட்டு சிரித்துவிட்டார். “பேசவைத்துவிடுவாய்… நான் தவறிவிட்டேன்” என்றார். “நான் ஏதும் கேட்கவில்லை. வெறுமனே பேசலாமே என்று கேட்டேன். எனக்கென்ன?” என்று அவள் திரும்ப அவர் பாய்ந்து அவள் கைகளை பிடித்துக்கொண்டார். “என்ன இது? நான் உன்னிடம் கெஞ்சவேண்டுமா என்ன?” சுருதை “பின் என்ன? நான் உங்களிடம் அரசியல் பேசவா வந்தேன்?” என்றாள்.

விதுரர் அவளை இடைவளைத்து அணைத்து முகத்தை நோக்கி “அரசியல் பேசத்தான் வந்தாய்… இல்லை என்று சொல்!” என்றார். அவள் தன் விழிகளைச் சரித்து புன்னகையில் கன்னங்கள் ஒளிபெற “ஆமாம், அதற்குத்தான் வந்தேன்… என்ன அதற்கு?” என்றாள். “ஒன்றும் இல்லை யாதவ அரசி. தாங்கள் அரசியல் செய்திகளை அறியாமலிருந்தால்தான் வியப்பேன்” என்றார். “கேலி தேவையில்லை. விருப்பமிருந்தால் சொல்லுங்கள்” என அவள் திமிற அவர் அவளை இறுக்கி அவள் கன்னங்களில் முத்தமிட்டார்.

அவள் மெல்ல அவருடன் இயைந்தபடி “பாண்டவர்கள் இறக்கவில்லை என்பது இப்போது அரசருக்கு தெரிந்திருக்கும் அல்லவா?” என்றாள். “ஆம், அது நேற்றே தெரிந்துவிட்டது. அவர் ஐயங்களில் தவிக்கிறார் என்று சொன்னார்கள். நான் செய்திகளை முழுதறிந்தபின் சென்று சந்திக்கலாமென்று எண்ணினேன்” என்றார் விதுரர். “எப்படியென்றாலும் எதிர்கொள்ளவேண்டிய நிலை அல்லவா அது?” என்றாள் சுருதை. ”அரக்குமாளிகையை கௌரவர்கள் அமைத்ததை இனிமேல் எப்படி மறைக்கமுடியும்?”

“மறைத்தாகவேண்டும்” என்றார் விதுரர். “முடிந்தவரை மறைக்காமல் எனக்கு வேறுவழி இல்லை. அரசர் அது எரிநிகழ்வு என்றே எண்ணியிருக்கிறார். அதில் அவர்கள் எப்படியோ பிழைத்து இத்தனைநாள் எங்கோ ஒளிந்திருக்கிறார்கள் என நினைக்கிறார். அப்படி அவர்கள் ஒளிந்து வாழ்ந்தமைக்கு கௌரவர் வழிவகுத்திருப்பார்களோ என்றே ஐயப்படுகிறார். அதற்கே அவர் கொதித்துக்கொண்டிருக்கிறார் என்றார்கள்.”

சுருதை அவரை தழுவி இறுக்கி உடனே விலகி “உணவருந்த வாருங்கள்” என்றாள். அவர் சால்வையை எடுத்து தோளிலிட்டபடி “அவர் அறிந்ததைக்கூட காந்தாரி அறிந்திருக்க மாட்டார். அவர் அறிந்தால் குருகுலத்தையே தீச்சொல்லால் பொசுக்குவார்” என்றபடி அவள் பின் நடந்தார். சுருதை சில கணங்கள் சிந்தனைசெய்துவிட்டு “அவர்கள் இருவரும் அறிவதே நல்லது” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்று விதுரர் சினந்தார்.

சுருதை “ஆம், இது எளியசெய்தி அல்ல. அஸ்தினபுரியில் இப்படி ஒரு வஞ்சம் இதுவரை நிகழ்ந்ததில்லை. நீங்கள் அதைச் சொன்ன நாள் முதல் ஒருநாள்கூட அதை எண்ணாமல் நான் துயின்றதில்லை. ஒவ்வொரு முறை அதை எண்ணும் போதும் என் உடல் துடிக்கிறது. சூதில் உடன்பிறந்தவரைக் கொல்வதென்பது கீழ்மை. அதிலும் அன்னையைக் கொல்ல அனல் ஏந்துவதென்பது கீழோர் நாணும் கீழ்மை. அதைச்செய்தவர்களை தண்டிக்காமல் விடக்கூடாது” என்றாள்.

“எளிய முறையில் நீ சொல்வதெல்லாம் உண்மை. ஆனால் அது எளிதாக முடியாது. மைந்தர் நூற்றுவரையும் சகுனியையும் கணிகரையும் கழுவிலேற்றவே அரசர் முடிவெடுப்பார். ஐயமே இல்லை. அவரது பெருஞ்சினத்தையும் நான் அறிவேன். அதற்குப்பின் அவரும் காந்தார அரசியரும் உயிர்சுமக்க மாட்டார்கள். உறுதி” என்றார் விதுரர். சுருதை “ஆம், அதையும் நான் சிந்தித்தேன். ஆனால் அப்படி நிகழுமென்றால் அதுவும் இயல்பென்றே கொள்ளவேண்டும். இங்கே நீதி திகழ்கிறது என பாரதவர்ஷம் உணரட்டுமே” என்றாள்.

விதுரர் “இல்லை, நான் மக்களை அறிவேன். மக்கள் கருத்து என்பது காற்றுக்கேற்ப திசைமாறும் மழை. அரக்குமாளிகைச் செய்தி அறியவருமென்றால் பாண்டவர்கள் மேல் கனிவும் கௌரவர்மேல் பெரும்சினமும் கொள்ளும் இந்நாட்டு மக்கள் கௌரவர்கள் கழுவேற்றப்பட்டால் உளம் மாறிவிடுவார்கள். சிலநாட்களிலேயே கௌரவர்கள் மூதாதைதெய்வங்களாக பலிபெற்று கங்கைக்கரையோரம் கோயில் கொள்வார்கள். அவர்களைக் கொன்ற பழி பாண்டவர்களை வந்தடையும். இழிசொல் படிந்த நாடும் முடியும்தான் பாண்டவர்களிடம் வந்துசேரும்” என்றார்.

“அதற்காக அவர்களை விட்டுவிடுவதா?” என்றாள் சுருதை சினத்தில் சிவந்த முகத்துடன். “வேறு வழியே இல்லை” என்றார் விதுரர். “என்ன செய்யவிருக்கிறீர்கள்?” விதுரர் பெருமூச்சு விட்டு “அறியேன். இரவெல்லாம் என் நெஞ்சு அதை எண்ணியே உழன்றது. இன்னும் எந்த வழியும் திறக்கவில்லை” என்றார். சுருதை “பாவத்தை ஒளிப்பவர்களும் பாவமே செய்கிறார்கள்” என சீறும் குரலில் சொன்னாள்.

அவர் உணவருந்த அமர்ந்தபோது பணிப்பெண்ணிடமிருந்து உணவைப் பெற்று அவளே பரிமாற வந்தாள். அவர் அவளை நிமிர்ந்து நோக்கி “சரி, என்ன சினம்? போதும்” என்றார். அவள் உதட்டை இறுக்கியபடி அக்காரமிட்டு அவித்த கிழங்குகளையும் தேன்கலந்த தினையுருண்டைகளையும் எடுத்து வைத்தாள். “சரி, விடு அதை” என்றார் விதுரர். அவள் சற்றே புன்னகை செய்து “சரி” என்றாள்.

விதுரர் “இனி உன் நெஞ்சில் துடித்துக்கொண்டிருக்கும் அடுத்த வினாவை எழுப்பு” என்றார். “என்ன வினா?” என்றாள் சுருதை. “திரௌபதியைப் பற்றி” என்று அவள் கண்களை நோக்கி புன்னகைத்தபடி அவர் சொன்னார். அவள் பார்வையை விலக்கியபடி “அவளைப்பற்றி எனக்கென்ன?” என்றாள். “ஒன்றுமில்லையா?” என்றார் விதுரர். சுருதை “ஏன்? நான் என்ன கேட்பேன்?” என்றாள். “நீ கேட்க விழைகிறாய்” என்றார் விதுரர். அவள் சினத்துடன் “இல்லை” என்றாள். “சரி, கேட்கமாட்டாய் அல்லவா? உறுதியாக கேட்கமாட்டாய் அல்லவா?”

சுருதை மேலும் சினத்துடன் “கேட்பேன். ஏன் கேட்டால் என்ன?” என்றாள். விதுரர் சிரித்து, ‘சரி கேள்” என்றார். அவளும் அடக்கமாட்டாமல் சிரித்து வாயை கைகளால் பொத்திக்கொண்டு அருகே பீடத்தில் அமர்ந்துவிட்டாள். “ஆம், கேட்கவேண்டும். நேற்றுதான் எனக்கு செய்தி வந்தது. அதுமுதல் உள்ளம் நிலைகொள்ளவில்லை.” விதுரர் நகைத்து “இந்த அரண்மனையில் செய்தியறிந்த எந்தப்பெண்ணுக்கும் அகம் நிலைகொள்ளப்போவதில்லை” என்றார்.

“ஏன்?” என்று அவள் முகத்தில் சிரிப்பு இருக்க கண்களைச் சுருக்கியபடி கேட்டாள். ”தாங்கள் தவறவிட்ட எஞ்சிய நால்வர் எவரென எல்லா பெண்களும் பட்டியலிடுகிறார்கள் என்று அறிந்தேன்.” சுருதை சினந்து “என்ன பேச்சு இது… மூடர்களைப்போல” என்று சொல்ல விதுரர் உரக்கச்சிரித்தார். “போதும்… மூடத்தனமாகப் பேசி கீழிறங்கவேண்டாம்” என்றாள் சுருதை. “சரி,சொல்” என்றார் விதுரர்.

“ஐவரையும் மணக்க விரும்புவதாக அவளே சொன்னாளாமே” என்றாள் சுருதை. விதுரர் சிரித்தபடி “சரிதான் அதற்குள் பெண்கள் இப்படி வந்துவிட்டீர்களா?” என்றாள். சுருதை சற்றே சினந்து “நான் சொல்லவில்லை. செய்திகள் அப்படி சொல்கின்றன. அவர்களின் பாஞ்சாலக்குடிகளில் அரசியர் ஐந்துகுலங்களில் இருந்து ஐந்து கணவரை மணக்கும் முறை இருந்ததாமே?” என்றாள். ”ஆம், ஆனால் உனது யாதவர்குடிகளிலும் அவ்வழக்கம் இருந்ததே!”

சுருதை சீற்றத்துடன் “யார் சொன்னது? ஐந்துபேரை எல்லாம் மணப்பதில்லை” என்றாள். “ஆம், ஆனால் ஒன்றுக்கு மேற்பட்டவரை மணப்பதுண்டு…” என்றார் விதுரர். சுருதை “அது இப்போது எதற்கு? இப்போது எவரும் அதை செய்வதில்லை. நெடுங்காலம் முன்பு நடந்தவை அவை. இவர்களின் நிலத்தில் இப்போதும் பெண்கள் பல ஆடவரை மணக்கிறார்கள். உடன்பிறந்தார் அனைவருக்கும் ஒரே மனைவி என்பது அங்கே எல்லா முறைமைகளாலும் ஏற்கப்பட்டிருக்கிறது” என்றாள்.

“சரி” என்றார் விதுரர் சுருதையின் சினத்தை சற்று வியப்புடன் நோக்கியபடி. “ஆகவே அவளே கோரியிருக்கிறாள் என்கிறார்கள். ஏனென்றால் அவள் விரும்புவது தேவயானியின் மணிமுடியை, அஸ்தினபுரியின் அரியணையை. வென்றவன் இளையோன். அவன் மனைவியாக இங்கே வந்தால் அவள் அரசி அல்ல. தருமனின் துணைவியே அஸ்தினபுரிக்கு பட்டத்தரசியாக ஆகமுடியும். அதை அறிந்துதான் இதை செய்திருக்கிறாள்.” விதுரர் மெல்லிய புன்னகையுடன் “சரி, அப்படியென்றால்கூட அவள் தருமனையும் அர்ஜுனனையும் மட்டும் மணந்தால் போதுமே. எதற்கு ஐவர்?” என்றார்.

“அங்கேதான் அவளுடைய மதியூகம் உள்ளது. மூத்தவரையும் மூன்றாமவரையும் மட்டும் எப்படி மணக்க முடியும்? நடுவே இருப்பவர் பீமசேனர். அவரது பெருவல்லமை இல்லாமல் பாண்டவர்கள் எங்கும் வெல்லமுடியாது. மேலும் அவளுக்கு பீமசேனரை முன்னதாகவே தெரியும். அவர்கள் நடுவே உறவும் இருந்திருக்கிறது.”

விதுரர் கண்களில் சிரிப்புடன் “அப்படியா?” என்றார். “சிரிக்கவேண்டாம். உங்கள் ஒற்றர்கள்தான் என்னிடமும் சொன்னார்கள். மணநிகழ்வுக்கு முந்தையநாள் காம்பில்யத்தின் தெருக்களில் அவளை வைத்து அவர் ரதத்தை தன் கைகளாலேயே இழுத்துச் சென்றிருக்கிறார். அதை நகரமே கண்டிருக்கிறது.” விதுரர் “சரி அப்படியென்றால்கூட ஏன் ஐந்துபேர்?” என்றார். ”இதென்ன மூடக்கேள்வி. மூன்றுபேரை எப்படி அவள் மணக்க முடியும்? ஐந்துபேரை மணக்க அவளுடைய குலமுறை வழிகாட்டல் உள்ளது. ஆகவே அதை சொல்லியிருப்பாள்.”

“அவள் சொல்வதை இவர்கள் ஏன் ஏற்கவேண்டும்?” என்றார் விதுரர் எழுந்தபடி. சுருதை பின்னால் வந்துகொண்டே “வேறுவழி இருக்கிறதா இவர்களுக்கு? அவளிடமல்லவா படையும் நாடும் இருக்கிறது இன்று? அவளை அழைத்துக்கொண்டு நகர்புகுந்தால் மட்டுமே அவர்கள் இங்கே ஆற்றல் கொண்டவர்களாக ஆகமுடியும்…” விதுரர் கைகளைத் துடைத்தபடி “அனைத்தையும் சிந்தித்துவிட்டாய்” என்றார்.

“அப்படியென்றால் உண்மையில் நடந்ததுதான் என்ன?” என்றாள் சுருதை. “சற்றுமுன் சிசிரன் அனைத்தையும் விரிவாக சொன்னான். பாண்டவர்கள் மணநிகழ்வுக்குச் சென்றபோது குந்தி துர்வாசரைச் சென்று பார்த்திருக்கிறார். பாஞ்சாலத்தின் ஐங்குலங்களில் மூத்தது துர்வாசபெருங்குலம். அதன் மூத்தஞானி இன்று அவர்தான். அவர் அந்த வழிமுறையைச் சொல்லியிருக்கிறார். குந்தி அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.”

“ஏன், அதனால் என்ன நன்மை?” என்றாள் சுருதை. “தன் மகள் பாரதவர்ஷத்தை ஆளவேண்டும் என்பதே துருபதனின் கனவு. ஐவரையும் அவள் மணக்கும்போது அது உறுதிப்படுகிறது. ஒரு போர் நிகழாமல் அஸ்தினபுரியின் மணிமுடியை அடையமுடியாதென்று துருபதன் எண்ணுகிறார். அப்படி மணிமுடி எய்தப்படும்போது பாண்டவர் ஐவரில் எவர் எஞ்சியிருந்தாலும் திரௌபதியே பேரரசி. இந்த ஐந்துமணம் மூலம் அந்த முழுமுற்றான வாக்குறுதி அவருக்கு அளிக்கப்படுகிறது.”

சுருதை “ஆம்” என்றாள். விதுரர் “நாளையே மேலும் ஷத்ரிய அரசர்களிடமிருந்து பாண்டவர்கள் அரசிகளை கொள்வார்கள். வலுவான புதிய உறவுகள் உருவாகும். அப்படி எது உருவானாலும் திரௌபதியின் இடம் மாறாது என்று உறுதியாகிவிட்டது” என்றார். ”அந்த ஐயம் துருபதனுக்கு மட்டுமல்லாது பாஞ்சாலப்பெருங்குடிகளுக்கும் இருப்பது இயல்பே. ஏனென்றால் ஐந்து மைந்தர்களில் சிலருக்கு தன் யாதவகுலத்திலேயே குந்தி பெண் கொள்வாள். அவ்வரசியே குந்திக்கு அண்மையானவளாகவும் இருப்பாள். அது நிகழும்போது திரௌபதி இரண்டாமிடத்திற்கு செல்லக்கூடும். அவ்வாறு நிகழமுடியாதென்பதற்கான வெளிப்படையான ஒப்புதலே இந்த மணம்.”

”இதன்மூலம் குந்தி பாஞ்சாலத்தின் அனைத்துக்குடிகளுக்கும் ஓர் அறிவிப்பை அளிக்கிறார். பாண்டவர்களின் குலமே திரௌபதியின் காலடியில் வைக்கப்பட்டிருக்கிறது என்று. அவளே இனி அஸ்தினபுரி என்று. பாரதவர்ஷத்தின் அரசர்களுக்கும் அது ஒரு பெரும் செய்தியே” என்றார் விதுரர். “குந்தியின் இச்செய்தி பெரும் வெற்றியையே அளித்திருக்கிறது. துருபதனும் பாஞ்சாலத்தின் ஐம்பெருங்குலங்களும் அதை தங்கள் வெற்றி என்று கொள்கிறார்கள். அங்கே காம்பில்யத்தில் கொண்டாட்டமும் களியாட்டமும்தான் நிகழ்கின்றன. ஐந்து மாவீரர்கள் தங்கள் அரசுடன் அவள் காலடியில் கிடக்கிறார்கள்!”

சுருதை பெருமூச்சுடன் “ஆனால் இங்கே அஸ்தினபுரியில் அது அதிர்ச்சியையும் ஒவ்வாமையையும்தான் உருவாக்கும்” என்றாள். விதுரர் நகைத்து “இல்லை… எளியமக்களின் அகம் முதலில் அதிர்ச்சிகொள்ளும். பின்னர் அவளை அவர்கள் வியப்புடன்தான் நோக்குவார்கள். அவள் செய்கைக்கான பின்புலத்தை தேடி அடைவார்கள். பேசிப்பேசி நிறுவிக்கொள்வார்கள். தாங்கள் செய்யமுடியாத ஒன்றை செய்தவள் என்றே பெண்கள் எண்ணுவார்கள். தங்கள் இல்லத்துப் பெண்களைப்போன்றவள் அல்ல அவள், பேருருவம் கொண்டவள் என்று ஆண்கள் எண்ணுவார்கள் ” என்றார்.

“இந்த ஒரு செயலாலேயே திரௌபதி பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினிகள் எவரைவிடவும் உயர்ந்தவளாக எண்ணப்படுவாள். வரலாறெங்கும் அவள் பெயர் சக்ரவர்த்திகளும் பணிவுடன் உச்சரிக்கும் ஒன்றாகத் திகழும். அவளை காவியங்கள் வாழ்த்தும். தலைமுறைகள் வணங்கும்” என்றார் விதுரர். “ஏனென்றால் இது நிகரற்ற அதிகாரத்தை ஐயத்திற்கிடமில்லாமல் வெளிக்காட்டுகிறது. வரலாற்றுநாயகர்களும் நாயகிகளும் அதிகாரத்தால் உருவாக்கப்படுபவர்கள்.”

சுருதை உதட்டை இழுத்துக் கடித்து பார்வையைத் தழைத்தபின் “அவள் வென்றிருக்கலாம், ஆனால்…” என்றாள். சிரித்துக்கொண்டு “விடமாட்டீர்களே” என்றபடி விதுரர் திரும்பி “நான் இன்று அரசரை சந்திக்கவிருக்கிறேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று நிகழுமென உள்ளம் சொல்கிறது” என்றபின் அவள் முன்நெற்றியின் நரை கலந்த மயிர்ச்சுருளை வருடிவிட்டு “வருகிறேன்” என்றார்.

அவர் பின்னால் வந்த சுருதை “அவள் எப்படி இதை ஏற்றுக்கொண்டாள் என்றுதான் என் நெஞ்சு வினவிக்கொள்கிறது” என்றாள். விதுரர் “ஆகவேதான் அவளை கொற்றவையின் வடிவம் என்கிறார்கள்” என்றபடி வெளியே சென்றார்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்