பிரயாகை - 85
பகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 5
மேலும் இரு மன்னர்கள் தோற்று விலகியபின் எவரும் எழவில்லை. கிந்தூரத்தை சேவகர்கள் எடுத்து மீண்டும் அதன் பீடத்தில் வைத்துவிட்டு விலகிச்சென்றனர். மண்ணை அறைந்து அமைந்த மாபெரும் சவுக்கு போல அது அங்கே கிடந்தது. அவையினர் அனைவரும் கர்ணனை நோக்கிக்கொண்டிருக்க அவன் அப்பார்வைகளை முழுதுணர்ந்து முற்றிலும் விலக்கி நிமிர்ந்த தலையுடன் கனவில் என மூடிய விழிகளுடன் அமர்ந்திருந்தான். அர்ஜுனன் திரும்பி திரௌபதியை பார்த்தான். அவளும் அதேபோல எதையும் நோக்காமல் எங்கோ அகம்நிலைக்க அமர்ந்திருந்தாள்.
“உனக்காகக் காத்திருக்கிறான் பார்த்தா” என்றான் பீமன். அர்ஜுனன் ஆமென தலையை அசைத்தான். “நீ எதற்காகக் காத்திருக்கிறாய்?” என்று பீமன் மேலும் குனிந்து கேட்டான். “அவன் எழுவதற்காக.” பீமன் சிலகணங்கள் விழிசரித்து சிந்தித்துவிட்டு “அவன் நீ எழுவதை எதிர்பார்க்கிறான்” என்றான். அர்ஜுனன் விழிகளை திரௌபதியில் நிறுத்தி “அவன் அந்த வில் தன்னை அழைப்பதற்காக காத்திருக்கிறான் மூத்தவரே” என்றான். பீமன் திரும்பி நோக்கினான். ஏதோ சொல்ல விழைபவன் என மெல்ல உதடுகள் பிரிந்தன. பின் தலையை அசைத்தபடி திரும்பிக்கொண்டான்.
நேரம் செல்லச்செல்ல அங்கிருந்த அமைதி எடைகொண்டு குளிர்ந்தபடியே வந்தது. அவை அசைவற்ற மாபெரும் திரைச்சீலைச்சித்திரம் போல ஆகியது. எங்கோ சில செருமல்கள் ஒலித்தன. அணிபடாம் ஒன்று காற்றில் திரும்பும்போது அதைப்பிணைத்திருந்த வண்ணவடம் எழுப்பிய முறுகல் ஒலி எழுந்தது. துருபதனும் அவன் மைந்தர்களும் கர்ணனை நோக்காமல் இருக்க சித்தத்தை இறுக்கிக்கொண்டு முகத்தையும் உடலையும் இயல்பாக வைத்திருந்தனர். பிருஷதி பாஞ்சாலியை நோக்கிவிட்டு அரங்கிலிருந்த கூட்டத்தில் விழி ஓட்டி தேடினாள். ஒரு கட்டத்தில் அவள் தன்னை கண்டுவிட்டாள் என்றுகூட அர்ஜுனன் எண்ணினான்.
திரௌபதியின் ஆடையின் கீழ்நுனி மட்டும் காற்றில் படபடத்தது. அவள் கால்களில் சிறகுகள் கொண்ட யக்ஷி என்பதுபோல. அவள் உடலெங்கும் வைரங்கள் நூறு விழிகள் என திறந்து பேரவை நோக்கி இமைத்துக்கொண்டிருக்க அவள் முகவிழிகள் முற்றிலும் நோக்கிழந்திருந்தன. தருமன் அர்ஜுனனை நோக்கி தழைந்து “பார்த்தா, அவள் ஒருபோதும் அவனை அழைக்கமாட்டாள்…” என்றான். “அழைப்பதென்றால் முன்னரே அழைத்திருப்பாள்.” அர்ஜுனன் திரௌபதியை நோக்கியபடி தலையை ஆட்டினான்.
கர்ணன் மெல்ல அசைந்ததும் அவ்வசைவு அவைமுழுக்க நிகழ்ந்தது. அவையில் எழுந்த அவ்வசைவை ஓரக்கண்ணால் கண்டு அவன் திகைத்து சுற்றிலும் நோக்கினான். திரும்பி துரியோதனனை நோக்கினான். மீண்டும் கிந்தூரத்தை நோக்கிவிட்டு அரைக்கணம் விழிகளால் அர்ஜுனனை நோக்கினான். அவன் நோக்கு திரௌபதியைத் தொடும்போது உள்ளம் கொண்ட அதிர்வை அர்ஜுனனால் காணமுடிந்தது. கர்ணன் மீசையை நீவிவிட்டு விழிகளை விலக்கி கிழக்கு வாயிலில் முற்றத்து ஒளி வெள்ளித்திரைச்சீலை என தொங்கிக்கிடப்பதை நோக்கினான். அவன் முகத்திலும் விழிகளிலும் அவ்வொளி அலையடித்தது.
அவன் தன் முழு அக ஆற்றலாலும் திரௌபதியை நோக்குவதைத் தவிர்க்கிறான் என்று அர்ஜுனன் உணர்ந்தான். இருவர் மேலும் அவன் சிந்தை ஊன்றி நின்றிருந்தது. கணங்கள். கணங்களே இழுபட்டு நீண்டன. ஒரு கணத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை மெதுவாக செல்ல முடிந்தது. இதோ அவன் கழுத்து அசைகிறது. இதோ விழிகள் திரும்புகின்றன. அவ்விருப்பை அவன் உடலெங்கும் உணரமுடிந்தது. அவன் விரல்கள் அதிர்ந்துகொண்டிருக்கின்றனவா? இன்னொரு நீள்கணம். மேலும் ஒரு நீள்கணம். அடுத்த கணத்தின் தொடக்கத்தில் அர்ஜுனன் உணர்ந்துகொண்டான், அவன் திரும்பப்போகிறான் என. அதை எப்படி உணர்ந்தேன் என அவன் எண்ணி வியந்துகொண்டிருக்கும்போதே கர்ணனின் தலை திரும்பியது.
அந்தக் காட்சிக்கணத்தை நெடுநேரம் அவன் நோக்கிக்கொண்டிருந்தான். ஊழின் ஆயிரம் கரங்கள் எழுந்து முகவாயைப்பற்றி, தலையைக் கவ்வி, அழுத்தி, இழுத்துத் திருப்புவதுபோல. அவன் இமைகள் மேலெழுந்தன. கரிய சிறுமணி விழிகள் அவளை நோக்கின. அவன் மாந்தளிர் நிறமான உதடுகள் மெல்ல பிரிந்தன. அர்ஜுனன் விழி மட்டும் திருப்பி திரௌபதியை நோக்கினான். அவளில் எதுவுமே நிகழவில்லை. ஒரு கணம் உலகம் இல்லாமலிருந்தது. மறுகணம் அவனுள் பல்லாயிரம் பறவைகள் சிறகடித்து வானிலெழுந்தன. வண்டின் சிறகு போல காலம் அதிரத்தொடங்கியது.
கர்ணனின் கண்கள் வந்து அர்ஜுனனை சந்தித்தபோது அவன் மிகமெல்ல புன்னகை புரிந்தான். சவுக்கடிபட்ட கன்னிப்பெண்குதிரை என கர்ணன் அதிர்வதை, அவன் கை எழுந்து மீசையை தொடுவதை அர்ஜுனன் கண்டான். கர்ணன் எழுந்து சால்வையைச் சுழற்றி தோளிலிட்டபோது பேரவையில் இருந்து முரசுக்கார்வை போல ஒலி எழுந்தது. துருபதனும் மைந்தர்களும் கர்ணனை திகைத்தவர்கள் போல நோக்க பிருஷதி இரு கைகளையும் நெஞ்சைப்பற்றுவது போல வைத்துக்கொண்டாள்.
கர்ணனின் கால்கள் எத்தனை நீளமானவை என அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். சில எட்டுக்கள்தான் வைப்பதுபோலிருந்தது, அவன் பறந்துசெல்பவன் போல மணமுற்றத்தை அணுகினான். ஒரு கணம் விழிதிருப்பி திரௌபதியை நோக்கிவிட்டு மீண்டும் கர்ணனிலேயே விழிபதித்திருந்தான் அர்ஜுனன். அவன் உடலை முழுமுற்றாக விழிகளால் அள்ள விழைபவன் போல. நீண்ட பெரிய கைகள் காற்றை துழாவுகின்றன. நிமிர்ந்த நெஞ்சில் ஆரம் சரிகிறது. தோள்களில் இருந்து கருங்குழல் புரிகள் காற்றில் அலைபாய்ந்து பின்னால் விழுகின்றன. அவையை நெருங்கிக்கொண்டே இருந்தான். அவையும் அங்கிருந்த அனைவரும் திரைச்சீலை ஓவியங்களாகி மங்கலாகி இல்லாமலாயினர். அவனும் அர்ஜுனனும் மட்டும் எஞ்சினர். பின் அர்ஜுனனும் இல்லாமலானான். கர்ணன் மட்டுமே அங்கே சென்றுகொண்டிருந்தான்.
கர்ணன் திரௌபதியையே நோக்கிக்கொண்டு நடந்து வில்லை நோக்கி சென்றான். அவள் பெரிய விழிகளின் இமைகள் சரிந்திருந்தமையால் அவனுடைய உயரத்தில் இருந்து நோக்கியபோது துயில்வதுபோலிருந்தாள். சிறிய கருஞ்சிவப்பு உதடுகள் குமிழென இணைந்து ஒட்டியிருந்தன. நெடுநேரம் அவற்றை நாவு தொடாததனால் உலர்ந்து சுருங்கிய மென்மலரிதழ்கள் போலிருந்தன. சிறியமூக்கின் நுனிவளைவுக்கு மேல் வியர்வை பனித்திருந்தது.
தன் ஒவ்வொரு அடியும் அவளில் அதிர்வாக நிகழ்வதை கர்ணன் உணர்ந்தான். மூடிய தனியறைக்குள் மூச்சால் அசைக்கப்படும் சுடர். திடீரென அவன் ஓர் மாறுபட்ட உணர்வை அடைந்தான். அவளை நோக்கி நடக்க நடக்க அவளில் இருந்து விலகிச்செல்வதாகத் தோன்றியது. அமர்ந்திருந்தபோது அவளுக்கு மிக அண்மையில் இருந்தான். அவள் கழுத்துக்குழியில் இதயத்தின் துடிப்பை பார்க்க முடிந்தது. மெல்லிய கன்னத்தில் நேற்று அரும்பியிருந்த சிறுமுத்தை காணமுடிந்தது. மார்பின் சரிவில் மணியாரம் அழுந்திய தடத்தை விழிதொடமுடிந்தது. அவன் எடுத்து முன்வைத்த ஒவ்வொரு எட்டும் அவனை விலக்கியது.
அந்த விந்தையை மறுகணம் அச்சமாக உணர்ந்தான். இல்லை அவளை நெருங்குவேன், நெருங்கியாகவேண்டும், எவ்வண்ணமேனும் அவளருகே சென்றாகவேண்டும், இதோ சென்று கொண்டிருக்கிறேன், இதோ என் முன் அமர்ந்திருக்கிறாள், இதோ அவளை தொட்டுவிடுவேன், இதோ என அவன் விலகிக்கொண்டே இருந்தான். பின் ஒரு தருணத்தில் அவன் உடலில் அத்தனை தசைகளும் தளர்ந்தன. கால்கள் உயிரற்று குளிர பாதம் வியர்த்து வழுக்குவதுபோல் தோன்றியதும் தன்னை சிந்தையால் இறுக்கிக்கொண்டு திரும்பி அப்பால் அமர்ந்திருந்த அர்ஜுனனை நோக்கினான்.
அங்கே அவன் விழிகளில் எழுந்த கூர்சுடருடன் சற்றே விரிந்த மீசையற்ற இதழ்களுடன் நோக்கி அமர்ந்திருந்தான். அவனருகே வலப்பக்கம் இரு பெருங்கைகளையும் பிணைத்து சற்று முன்குனிந்து பீமன். இடப்பக்கம் என்ன நிகழ்கிறது என்ற வியப்பு மட்டுமே தெரியும் விழிகளுடன் தருமன். அப்பால் நகுல சகதேவர்கள். அவர்களன்றி அந்தப் பேரவையில் எவரும் இருக்கவில்லை. ஐந்து விழிகள். ஐந்தும் பின் ஒன்றாயின. அர்ஜுனன் மட்டும் அங்கே அமர்ந்திருந்தான். அவன் விழிகள் மட்டும். விழிகளில் எழுந்த கூரொளி மட்டும். கூர்சுடராக திகழ்ந்த ஒரு புன்னகை மட்டும்.
ஒரு புன்னகை. யாருடையது அது? தெய்வங்களே, என்னை இன்னமும் தொட்டு வாழ்த்தாத என் மூதாதையரே, எவரது புன்னகை அது? ஊழே, பெருவெளியே, காலப்பெருநதியே எவர் புன்னகை அது? நான் நாளும் காண்பது. தெருவில் களத்தில் அவையில் என்னுள் எழும் கனவுகளில் என்றும் திகழ்வது. அப்புன்னகையிலிருந்து ஒரு கணம் நான் விலகுவேன் என்றால் அக்கணம் இன்னொருவனாக வாழத்தொடங்குகிறேன். ஒளிபோல, பின்னர் புகை போல, பின்னர் மென் திரைச்சீலைகள் போல, அதன்பின் பளிங்குப்பாறைகள் போல அவனைச்சூழ்ந்தது அப்புன்னகை. ஓடி அதில் தலையை முட்டி கபாலத்தை உடைத்துக்கொள்ளமுடியும். குருதி வழிய நிணத்துண்டாக அதன் அருகே விழுந்து துடிதுடிக்கமுடியும்…
என்னென்ன உளமயக்குகள்! எண்ணங்கள். அவை பெருகிப் பெருகிச்செல்கின்றன. கங்கை, கிளை பிரிவதையே பயணமாகக் கொண்டு திசைதேராது எழும் பெருக்கு. இதோ வந்தடைந்துவிட்டேன். இந்த மணமுற்றத்தில் மிகச்சிறிய ஒர் எறும்பு வந்து நிற்கிறது. அதன் தலைக்குமேல் பேருருவ மரங்களின் அடித்தூர்கள் என கால்கள். அப்பால் வான் நிறைத்து குனிந்து நிற்கும் முகங்கள். வங்கன், கலிங்கன், மகதன், மாளவன்… துரியோதனா என் தோள்களை பற்றிக்கொள். என்னை உன் நெஞ்சில் சாய்த்துக்கொள். தனியன். கைவிடப்பட்டவன். ஒருவிழியாலும் பார்க்கப்படாதவன். இப்புவியில் நீயன்றி ஏதுமற்ற பேதை. எந்தையே, என் இறையே, உன் கைவெம்மையிலன்றி கருணையை அறியாத உன் மைந்தனை நெஞ்சோடு சேர்த்துக்கொள்…
மிக அருகே அவன் திரௌபதியின் முகத்தை நோக்கினான். சரித்த விழிகளுடன் ஒட்டிய உதடுகளுடன் காற்றில் அலையும் தனிக்குழல் சுருள்களுடன் அது சிலைத்திருந்தது. மிக அண்மை. அதன் மென்மயிர்பரவலை காணமுடிந்தது. இதழ்களின் இரு முனைகளிலும் கீழிறங்கிய மயிர்தீற்றல். கண்களுக்குக் கீழே சுருங்கிய மென்தோலின் ஈரம். கீழிதழ் வளைவுக்கு அடியில் சிறிய நிழல். அவன் கிந்தூரத்தை நோக்கினான். அதில் புன்னகை என ஓர் ஒளி திகழ்ந்தது. அவன் நிழல் அதில் நீரோடையிலென தெரிந்தது. அணுகியபோது காலடியோசை கேட்ட நாகம் போல அது மெல்ல நெளிந்தது. உயிர்கொண்டு ஒருங்குவதுபோல். அந்தப்புன்னகை மேலும் ஒளிகொண்டது.
அவன் கிந்தூரத்தை நோக்கியபடி ஒரு கணம் நின்றான். பின்கழுத்தில் ஒரு விழிதிறந்துகொண்டதுபோல திரௌபதியை நோக்க முடிந்தது. அவள் உடலில் ஓர் அசைவு நிகழ்ந்தது. தொடுகையை உதறும் குழந்தையின் அசைவு. அவன் நெஞ்சில் முரசுக்கோல் விழுந்தது. பேரொலியை செவிகளில் கேட்க முடிந்தது. விழிகளில் காட்சியாகிய அனைத்தும் அந்தத் தாளத்தில் அதிர்ந்தன. குருதி அந்தத் தாளத்தில் உடலெங்கும் நுரைத்தோடியது. பின்னர் காதுமடல்களில், கழுத்தில், குளிர்வியர்வையை உணர்ந்தபடி காலத்தை மீட்டுக்கொண்டபோது கடும் சினம் எழுந்து அவனை தழலாக்கியது. சிலகணங்களில் அவனை முழுக்கத் தழுவி எரித்துக்கொண்டு எழுந்து நின்று கூத்தாடியது.
அவன் தன் கைகளை ஓங்கித் தட்டிய ஒலி கேட்டு திரைச்சீலை ஓவியம் என சமைந்திருந்த அவை திடுக்கிட்டு உயிர்கொண்டு விழிகளாகியது. அவன் குனிந்து கிந்தூரத்தின் இடதுநுனியை தன் வலக்காலால் ஓங்கி மிதித்து விம்மி எழுந்த அதன் வளைவின் நடுவே இடக்கையால் பற்றி தூக்கி நீட்டியபோது அவை குரல்கள் கரைந்த பெருமுழக்கமாக ஒலித்தது. அவன் உடலில் மானுட உடலை இயற்கையின் முதல்வல்லமையாக சமைத்துவிளையாடும் போர்த்தெய்வங்கள் எழுந்தன.
கிந்தூரத்தை தூக்கியபடி அவன் மேலே தொங்கிய கிளிக்கூண்டின் கீழே வந்து நின்றான். முதல் ஆண்தொடுகையை அடைந்த கன்னியென கிந்தூரம் கூசி சிலிர்த்து தன்னை ஒடுக்கியது. பின்னர் திமிறி அவன் பிடியை விடமுயன்று துள்ளியது. பிடியின் வன்மையை உணர்ந்து அடங்கிக் குழைந்தது. அவ்வன்மையை அது அஞ்சியது. அதை விரும்பியது. அதை உதற விரும்பி திமிறியது. அவ்வசைவுகள் வழியாக அவனுக்கு அடிமைப்பட்டு அவன் கையிலொரு குளிர்மலர் ஆரம் போல நெளிந்தது.
ஆனால் அதற்குள் எங்கோ ஒன்று கரந்திருந்தது. எவருமறியமுடியாத ஒன்று. எவர் தொட்டாலும் அவர் அறியக்கூடிய ஒன்றை அளித்து எவருக்குமறியாமல் தன்னை நிகழ்த்திக்கொண்டிருக்கும் மந்தணப்பொறி. தன்னை நிகழ்த்தும்போதே தன் ஆற்றலை அறிந்து மேலும் ஆற்றல் கொள்வது. தன் ஆற்றலில் முடிவிலாது மகிழ்வது. அந்த மாயப்பொறி வில்லின் உள்ளே திகைப்பதை, அதிர்வதை அவன் உணர்ந்தான். கிந்தூரம் அஞ்சிய இளம்புரவிபோல நடுங்கிக்கொண்டிருந்தது.
கர்ணன் தன் இடக்கையால் கிந்தூரத்தின் மையத்தைப்பற்றி தோளின் முழுவல்லமையையும் அதன் கீழ் விளிம்புக்கு அளித்து சற்றே உடலை எழுந்தமரச்செய்தபோது பறவையை சிறுமலர்க்கிளை போல அவனை அது ஏற்றுக்கொண்டது. அவன் அதை பட்டு மேலாடை போல தன் தோளிலணிந்துகொள்ளமுடியும் என்று தோன்றியது. அவையினருக்கு அவன் மலர்கொய்வதுபோல அதை நாணேற்றியதாகத் தோன்றியது. ஆனால் பெருந்தோளாற்றல் அதில் நிகழ்ந்திருப்பதை படைக்கலப்பயிற்சி கொண்ட அனைவரும் உணர்ந்தனர். ஓசையின்றி சிலைத்து அமர்ந்திருந்தது சூழ்ந்த பேரவை .
கிந்தூரத்தின் நடுக்கம் அணைவதற்காக கர்ணன் காத்து நின்றான். அவனுக்கு முன்னால் சிறுகுளத்தில் நீர் பசுவின் விழி என தெரிந்தது. அதன் சூழ்ச்சி என்ன என்று அப்போது அவன் உணர்ந்தான். கிந்தூரத்தை ஊன்றும் தரை மரத்தாலானது. அதன் மேல் அந்த பெரிய மரத்தொட்டியில் நீர் வைக்கப்பட்டிருந்தது. கிந்தூரத்தின் ஒவ்வொரு அசைவும் அந்த நீரில் அலைகளைக் கிளப்பியது. வில் முற்றிலும் அதிர்வழிந்தாலொழிய நீராடியில் அலையடங்கி படிமம் தெளியாது.
கர்ணன் வில்லின் இடைவளைவைப்பற்றி அதன் கால்நுனியை மிதித்து விழிகளை தொலைவில் ஆடிய ஒரு திரைச்சீலையை நோக்கி நிறுத்திக்கொண்டு நின்றான். அவன் மூச்சு அவிந்தது. நெஞ்சில் எழுந்த ஓசை தேய்ந்தழிந்தது. எண்ணங்கள் மட்டும் பாம்புக்குஞ்சுகள் போல ஒன்றை ஒன்று தழுவி வழுக்கி நெளிந்தன. ஒரு பாம்பு இன்னொன்றை விழுங்கியது. அதை இன்னொன்று விழுங்கியது. எஞ்சிய இறுதிப்பாம்பு தன் எடையாலேயே அசைவிழந்து தன்னை தானே முடிச்சிட்டுக்கொண்டது. சுருண்டு அதன் நடுவே தன் தலையை வைத்து மூடாத விழிகளுடன் உறைந்தது. ஓம் ஓம் ஓம்.
கர்ணன் பரசுராமரின் பாதங்களை கண்டான். புலிக்குட்டிகளின் விழிகள் போல வெண்ணிற ஒளி கொண்ட நகங்கள். நீலநரம்பு இறங்கிக் கிளைவிட்ட மேல் பாதம். அவன் முகத்தில் புன்னகை விரிந்தது. நீராடியில் மேலே தொங்கிய கிளிக்கூண்டுக்குள் இருந்து முதற்கிளி வெளியே தலைநீட்டி ’வெல் என்னை’ என்று விழிஉருட்டியது. “முதற்கிளி, சோமகம்” என்றான் கோல்நிமித்திகன். அவன் கை சாட்டைச்சொடுக்கல் போல பின்னால் சென்று அம்பை எடுத்ததையும், நாணொலிக்க வில் சற்று அமைந்து மீண்டதையும், அடிபட்டு உடைந்த பாவைக்கிளியின் மரச்சிம்புகள் சிதறி காற்றில் பரவி சுழன்று இறங்கியதையும் அவையினர் ஒருகணமெனக் கண்டனர். மேலுமொரு கணம் கடந்தபின்னர் அவை ஒரே குரலில் ஆரவாரம் செய்தது.
இரண்டாவது கிளியை நோக்கியபோது கர்ணன் தன் உடற்புலனால் அர்ஜுனனைக் கண்டான். அவன் விழிகள் திகைத்திருப்பதை நெற்றியின் இருபக்கமும் நீலநரம்புகள் புடைத்திருப்பதை. அர்ஜுனன் அருகே சரிந்த பீமன் மெல்லியகுரலில் “பார்த்தா, இவன் வெல்வான்” என்றான். அர்ஜுனன் “அவன் வெல்வதே முறை மூத்தவரே. வில்லுக்குரிய தெய்வங்களின் அன்புக்குரியவன் அவன் மட்டுமே” என்றான். பீமன் “அவனிடம் அச்சமில்லை…” என்று சொல்லி தன் கைகளை மீண்டும் இறுக்கிக்கொண்டான் தருமன் பெருமூச்சுடன் “பார்த்தா, நாடும் முடியும் கைவிட்டுபோகின்றன. ஆனால் இச்சபையில் மானுடர் தோற்று வித்தை வெல்கிறது. நாமனைவருமே எழுந்துகூத்தடவேண்டிய தருணம் இது” என்றான்.
அர்ஜுனன் கர்ணனை நோக்கி விரிந்த விழிகளாக அமர்ந்திருந்தான். காதுகளில் எரியும் இரு விழிகள் போல குண்டலங்கள் சுடர்ந்தன. பெரிய தோள்களின் நடுவே புலர்கதிர் என பொன்னொளி கொண்ட கவசம். தன் விழிகளுக்கு மட்டுமே அவை தெரிகின்றன என அர்ஜுனன் அறிந்தான். அவள் காண்கிறாளா? ஒருகணம் அவள் அதைக் கண்டாள் என்றால் அனைத்தும் முடிவாகிவிடும். அவள் விழிதூக்கவேண்டும். அவனை பார்க்கவேண்டும். அவள் விழிகள் ஏன் சரிந்திருக்கின்றன. எடைகொண்டவை போல. எங்கிருக்கிறாள் அவள்?
கர்ணன் தலைக்குமேல் வளைந்த பெரிய கருங்கால் வேங்கை மரம்போல நின்ற கிந்தூரத்துடன் நின்றான். கெண்டைக்கால் பந்தில், பின்தொடை இறுக்கத்தில், தோளிலேறிய நாணில், கழுத்தில் சுண்டி நின்ற நரம்புத்தந்திகளில் மிகமெல்ல நிகழ்ந்த அசைவு விரலை நோக்கிச் செல்வதை அர்ஜுனன் கண்டான். மீண்டும் வலக்கரம் மின்னலென துடித்தணைய அம்பு எழுந்து கிருவிகுலக் கிளியை உடைத்துச் சிதறடித்து அவன்மேல் மலரிதழ்களாக பொழிந்தது. சூதர்களின் அவையில் இருந்து வாழ்த்தொலிகள் எழுந்தன. ஓரிரு ஒலிகளுக்குப்பின் மொத்த குடிகளவையும் வாழ்த்தொலியுடன் வெடித்துக்கிளம்பியது.
கைகளும் வண்ணத்தலைப்பாகைகளும் சால்வைகளும் சூழ அலையடிக்க நின்று கர்ணன் துரியோதனனை நோக்கினான். துரியோதனனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து தாடையில் சொட்டிக்கொண்டிருந்தது. கைகளைக் கூப்பி நெஞ்சில் வைத்து எதையும் நோக்காதவன் போல அமர்ந்திருந்தான். புன்னகையுடன் இன்னொரு அம்பை எடுத்து சிருஞ்சயக் கிளியை வீழ்த்தி விட்டு வில்லை தாழ்த்தி அரசரவையை நோக்கினான். கங்கனும் கலிங்கனும் மாளவனும் மண்சிலைகள் போலிருந்தனர். ஜராசந்தன் இரு பெருந்தோள்களும் புடைக்க கைகளை பீடத்தின் இருபக்கமும் ஊன்றி மறுகணம் எழப்போகிறவன் போல் அமர்ந்திருந்தான்.
அவையில் சுழன்ற கர்ணனின் விழிகள் கிருஷ்ணனை நோக்கி உரசி மீண்டன. அவையில் அவன் நுழைந்தபோது பிறரைப்போல அவனை திரும்பி நோக்கி ‘இவனா’ என எண்ணியபின் ஒரு கணம்கூட அதுவரை அவனை தான் உணரவில்லை என அப்போது அறிந்தான். எந்த தனித்தன்மையும் இல்லாதவன், ஒரு பசு அருகே இருக்குமென்றால், ஒரு வளைதடி கையில் வைத்திருந்தானென்றால் கன்றுமேய்த்து மலையிறங்கிய யாதவன் என்றே தோன்றுபவன். எளியவரின் கூட்டத்தில் முழுமையாக மறைந்துவிடக்கூடியவன். இல்லாமலிருக்கக் கற்றவன் என்று எண்ணம் தோன்றியதுமே சித்தம் பல்லாயிரம் காதம், பல்லாயிரம் ஆண்டுக்காலம் கடந்து பின்னால் விரைந்தோடி அந்த விழிச்சந்திப்பை மீண்டும் அடைந்து திகைத்து நின்றது.
யாதவனின் விழிகளின் ஆழத்தில் ஒரு புன்னகை இருந்தது. இருண்ட குளிர்ச்சுனையின் அடியில் கிடக்கும் நாணயம்போல. என்ன சொல்கிறான்? எதையும் சொல்லவில்லை. சொல்லுமளவுக்கு நெருங்கவில்லை. ஒரு சொல்லுக்கு அப்பால்தான் நின்றிருக்கிறான். எதையோ அறிந்திருக்கிறான். எதை? இங்கிருக்கும் எவரும் அறியாத ஒன்றை. நிகழும் கணத்தில் நின்று நிகழவிருக்கும் கணத்தை கண்டவனின் விழியொளி. கர்ணனின் இடத்தோள் தன்னிச்சையாகத் துடிக்கத் தொடங்கியது. இன்னொரு முறை அவன் விழிகளை நோக்கவேண்டும் என எழுந்த நெஞ்சை முழுவிசையாலும் அழுத்தி வென்றான். வில் விம்மியதை அம்பு சீறியதை துர்வாசகுலக் கிளி உடைந்து காற்றில் அதன் பொய்யிறகு சுழன்று சுழன்று எழுதி எழுதி இறங்கியதைக் கண்டான்.
ஓவியம்: ஷண்முகவேல்
பெருமூச்சுடன் உடலை எளிதாக்கிக்கொண்டான். கிந்தூரம் அவன் கைகளின் வெம்மையில் உருகிக்கொண்டிருந்தது. அதன் உடல்வளைவு அவன் எண்ணத்தின் வளைவுடன் பொருந்திவிட்டதுபோல. அவன் இன்றி அது முழுமையாகாதென்பது போல. அவன் விழவுகளின் கருவி மட்டுமே என்பதுபோல. கோல்காரன் உரக்க “ஐந்தாவது கிளி. கேசினி” என்றான். அச்சொல் அவன் மேல் இரும்புருளை என விழுந்தது. கேசினி கேசினி கேசினி… அவள் துள்ளும் துவளும் அலையிளகும் அமைந்தெழும் சுருள்கூந்தல். இத்தனை நீள்கூந்தல் பெண்ணுக்கு எதற்கு? அவளுடன் இரவிலும் நீங்கா நிழல் என. அவளைச் சுமந்தலையும் கரிய தெய்வம் என…
அவன் அறியாமலேயே திரும்பி திரௌபதியை நோக்கிவிட்டான். அவள் அப்படியே சரிந்த இமைகளும் இணைந்து ஒன்றான இதழ்களும் சிலைக்கருமுகமுமாக அமர்ந்திருந்தாள். மானுடர் மறந்த பெரும்பாலையின் இருண்ட கருவறைக்குள் அமர்ந்த கொல்வேல் கொற்றவை. இன்னும் எவருக்கும் அருள்புரியாதவள். பலிகொள்வதன்றி மானுடத்தை அறியாதவள். ஒரு சொல். சொல்லென்றாகும் ஒரு அசைவு. அசைவென உணரச்செய்யும் ஒரு முகபாவனை. அகம் தொட்டு அகம் அறியும் ஒன்று… ஏதுமில்லை. கற்சிலை. வெறும் கற்சிலை. கருங்கற்சிலை. கன்னங்கரிய சிலை. குளிர்சிலை. குளிர்ந்துறைந்த காலப்பெரும்சிலை…
கர்ணன் தலைக்குமேல் வளைந்த துதிக்கை கொண்ட மதவேழம் என நின்றது கிந்தூரம். அம்பை எடுத்தபோது தன் உடலெங்கும் ஏதோ ஒன்று துடிப்பதை உணர்ந்தான். அச்சமில்லை. இல்லை, அது பதற்றம் இல்லை. சினம். ஆம், கடும் சினம். உடலின் ஒவ்வொரு நரம்பிலும் நின்று அதிர்ந்தது அது. எவர் மீது இச்சினம்? பெருஞ்சினமென்பது மானுடர் மீதாக இருக்கவியலாது. எண்ணத்தின் நுனியில் பற்றி எரிந்து தசைகளில் தழலாகியது. அனலில் தளிர்ச்சுருள்கள் சுருண்டு நெளிந்தன. விரல்களில் எழுந்து கிந்தூரத்தை நடுங்கச்செய்தது சினம். நீராடி நெளிந்தது. மேலே தொங்கிய கிளிக்கூடு புகைச்சித்திரமாகக் கலைந்தது.
கர்ணன் கண்களை மூடிக்கொண்டு மீண்டும் பரசுராமரின் பாதங்களை நினைத்தான். நீரில் இறங்கி நிற்கிறார். மெல்லிய அலைகளில் வந்து அவர் கால்களை தொட்டுத் தயங்கி தொட்டுத் தயங்கி செல்கிறது ஒரு சிறுமலர். நீலமலர். கோதை. ஒளிபெருகி நிறைந்தோடும் காலைநதி. அமைதியில் மெல்ல உதிர்ந்தது ஓர் இலை. கண்காணாத சிலந்திவலையில் சிக்கி ஒளிவெளியில் நின்று அதிர்ந்து அதிர்ந்து ஓசையின்றி கூவியது ஒற்றைநாக்கென ஒரு சிறு செவ்விலைசருகு.
குனிந்து நோக்கியபோது நீர்ப்பரப்பில் கேசினி தெளிந்த விழிகளுடன் மிக அருகே தெரிந்தது. அவன் அதை நோக்கிப்புன்னகை செய்தான். இரைநோக்கிச் செல்லும் புலியின் முன்கால் என அவன் கை ஓசையின்றி அம்பு நோக்கிச் சென்றது. அம்பைத் தொட்ட கணம் அவன் தன் தொடைக்குள் வண்டின் மெல்லிய நெருடலை அறிந்தான். ஒரு கணத்தின் தொடக்கத்தில் ஓர் எண்ணமாகத் தோன்றிய அது உடனே தசைக்குறுகுறுப்பாக மாறி வலியாகியது. சிறகுவிரித்து அதிர்ந்து ரீங்கரித்தபடி மெல்லச் சுழன்றது வலி. வெல், வெல் அதை, வெல் என அவன் சித்தம்கூவியது. விழிகளே, கைகளே, வெல்லுங்கள் அதை.
கேசினிமீது படர்ந்த நீரலை அதை இழுபடச்செய்து இரண்டாக்கி ஒன்றாக்கியது. அவன் கையில் இருந்த கிந்தூரம் வன்மத்துடன் முனகியபடி இறுகி முற்றிலும் எதிர்பாராதபடி நெளிந்து விலகியது. அதிலிருந்து எழுந்த அம்பு விலகிச்சென்று கிளியை விரலிடை அகலத்தில் கடந்து சென்று காற்றில் வளைந்து சிறகு குலையச் சுழன்றபடி கீழே இறங்கி தரையாக அமைந்தபலகையில் குத்தி நின்றது. மூன்றும் ஒரே கணத்தில் நிகழ்ந்து முடிந்தன. அதற்கு முந்தைய கணத்திலேயே அந்நிகழ்வை தன் அகம் முற்றிலும் அறிந்துகொண்டதை அறிந்து அவன் திகைத்து நின்றான்.
கிந்தூரம் அவன் கையை உதறிவிட்டு துள்ளி நிலத்தில் விழுந்து சினத்துடன் நாண் அதிர துள்ளி அடங்கியது. அதை பொருளற்ற விழிகளுடன் வெறித்தபடி கர்ணன் நின்றான். அவன் விழிகள் திரும்பி இறுதியாக அவளை நோக்கின. அவள் அவ்வண்ணமே அங்கிருந்தாள். அவனைச்சூழ்ந்து ஆழ்ந்த அமைதியில் இருந்து ‘சூதன்!’ என்று ஒரு குரல் ஒலித்தது. எவரோ நகைத்தனர். “சூதனுக்கு வில்வசப்படும். ஷத்ரியர்களின் தெய்வம் வசப்படாது” என்றது இன்னொரு குரல். கர்ணன் தளர்ந்த கால்களுடன் திரும்பி நோக்காமல் ஷத்ரிய அவை நோக்கிச் சென்றான். அவனுக்கு மேல் விண்ணில் முகில் உப்பரிகை மேல் அமர்ந்து கீழ்நோக்கிய முகங்களில் எல்லாம் சிரிப்பு தெரிந்தது.
அவன் அணுகியதும் ஷத்ரிய அவை சிரிக்கத் தொடங்கியது. தன்னிச்சையாக எழுந்த சிரிப்பை அவர்கள் வேண்டுமென்றே பெருக்கிக் கொண்டனர். மேலும் மேலும் சிரித்து ஒரு கட்டத்தில் கண்களில் வன்மம் நிறைந்திருக்க வெறும் கொக்கரிப்பாகவே ஒலித்தனர். அவன் ஒவ்வொரு விழியாகக் கடந்து சென்றான். அவை நடுவே இருந்து எழுந்து வந்த துரியோதனன் தன் பெரிய கைகளை விரித்து அவனை அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டான். கண்ணீரில் ஈரமான கன்னங்களை அவன் தோளில் வைத்து ”தெய்வங்களை தவிர அனைத்தையும் வென்றுவிட்டாய் கர்ணா” என்றான். துச்சாதனன் அருகே வந்து கர்ணனின் தோள்மேல் கைகளை வைத்தான்.
அப்பாலிருந்து ஜராசந்தன் பீடம் ஒலிக்க எழுந்து விரித்த பெருங்கைகளுடன் கர்ணனை நெருங்கினான். அவை சிரிப்பை மறந்து திகைப்புடன் அவனை நோக்கியது. ஜராசந்தனைக் கண்டதும் துரியோதனன் சற்றே பின்னடைய அவன் கர்ணனை அள்ளி அணைத்துக்கொண்டு உணர்வெழுந்து குழைந்த குரலில் “வில் என்பது என்ன என்று இன்று அறிந்தேன். அங்கநாட்டரசனே, மகதத்தின் முதல் எதிரியாகிய உன் முன் இதோ எளிய வீரனாக நான் தலைவணங்குகிறேன். வில்தொட்டு எழுந்த என் மூதாதையரின் அத்தனை வாழ்த்துக்களையும் இதோ உனக்களிக்கிறேன்” என்றான். தன் மணியாரம் ஒன்றை கழற்றி கர்ணனின் கழுத்தில் அணிவித்தான்.
ஷத்ரிய அவையில் நிறைந்திருந்த அமைதிக்கு அப்பால் குடிமக்கள் அவையில் இருந்து முதுசூதன் ஒருவனின் வாழ்த்தொலி வெடித்தெழுந்தது. பின்னர் நாற்புறமும் சூழ்ந்திருந்த பேரவையே வாழ்த்தொலிகளால் பொங்கிக் கொந்தளித்தது. கர்ணன் திரும்பி அப்பால் தெரிந்த இளைய யாதவனின் முகத்தை பார்த்தான். அந்தப்புன்னகை அங்கிருந்தது. அறிந்தது. அன்னையின் கனிவென குளிர்ந்தது.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்