பிரயாகை - 82
பகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 2
ஒவ்வொரு அரசராக வந்து அமர்வதை பீமன் பார்த்துக்கொண்டிருந்தான். ஒவ்வொருவரையும் அவர்களின் பெயர், நாடு, குலம் மற்றும் புகழ்களுடன் கோல்காரன் கூவியறிவித்துக்கொண்டிருந்தான். பிருகநந்தன், மணிமான், தண்டாதராஜன், சகதேவன், ஜயசேனன்… பலருடைய பெயர்களைக்கூட அவன் அறிந்திருக்கவில்லை. அவர்கள் இந்த மணத்தன்னேற்பில் பங்கெடுத்து வெல்லப்போவதுமில்லை. ஆனால் தொன்மையான ஒரு ஷத்ரியகுலத்தின் இளவரசிக்கான மணநிகழ்வுக்கு அழைக்கப்படுவதே ஓர் அடையாளம்.
அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை சக்ரவர்த்திகள் போல பட்டாலும் பொன்னாலும் வைரங்களாலும் அலங்கரித்துக்கொண்டிருந்தனர். ஆயினும் அவர்களின் குல அடையாளம்தான் அவற்றில் அணிவடிவில் வெளிப்பட்டது. மச்சநாட்டரசனாகிய கீசகன் அவன் மணிமுடியிலேயே மீன் அடையாளம் கொண்டிருந்தான். வேடர்குலத்து அரசனாகிய நீலன் அவன் தோளணிகளை இலைவடிவிலும் மணிமுடியை மலர் வடிவிலும் அமைத்திருந்தான். அவர்களின் செங்கோல்களிலும் அந்த தனித்துவம் இருந்தது. காரூஷதேசத்து கிருதவர்மனின் செங்கோலின் மேல் உண்மையான மனித மண்டையோடு இருந்தது.
இருக்கைகளை அமைப்பதில் ஓர் திண்மையான ஒழுங்குமுறை இருந்தது. அது அப்போதுள்ள அரசர்களின் படைவல்லமை அல்லது நாட்டின் விரிவை அடிப்படையாகக் கொண்டு அமையவில்லை. தொன்மையான வேதகாலத்து நிலப்பிரிவினையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. முதல் மூன்றுவரிசைகளிலும் தைத்ரியம், சௌனகம், கண்வம், கௌசிகம் ஆகிய நிலங்களைச் சேர்ந்த அரசர்கள் அமர்ந்திருந்தனர். பின் வரிசையில் ஜைமின்யம், பைப்பாதம், சாண்டில்யம், கபித்தலம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மன்னர்கள் அமர்ந்திருந்தனர். காம்போஜம், வேசரம், ஆசுரம், வாருணம், காமரூபம், திருவிடம் போன்ற நிலங்களைச் சேர்ந்தவர்கள் அடுத்த வரிசையில் அமர்ந்திருந்தனர்.
சகுனியுடன் கணிகரும் உள்ளே நுழைவதைக் கண்டு தருமன் திரும்பி பீமனைப் பார்த்தான். முதலில் கௌரவ இளவரசர்கள் ஒவ்வொருவராக அறிவிக்கப்பட்டு உள்ளே வந்தனர். துர்விகாகன், துர்முகன், துஷ்பிரதர்ஷணன், விகர்ணன், சலன், பீமவேகன், உக்ராயுதன், பாசி, சாருசித்ரன், சராசனன், விவித்சு, சித்ரவர்மன், அயோபாகு, சித்ராங்கன், வாலகி, சுஷேணன், மகாதரன், சித்ராயுதன் என அவர்கள் ஆடிப்பாவைகள் போல பேருடலுடன் வந்துகொண்டே இருந்தனர். அனைவரும் அஸ்தினபுரியின் அமுதகலச இலச்சினையையும் காந்தாரத்தின் ஈச்சை இலை இலச்சினையையும் அணிந்திருந்தனர்.
“படைபோல இளவரசர்களை திரட்டிக்கொண்டுவந்திருக்கிறார்கள் மந்தா” என்றான் தருமன். பீமன் தலையசைத்தான். “ஏன் என்று தெரிகிறதா? அஸ்தினபுரியின் கௌரவர்களின் எண்ணிக்கை வல்லமையைக் காட்ட நினைக்கிறார்கள். மிகச்சிறந்த வழிதான். உண்மையிலேயே இங்குள்ள ஒவ்வொருவர் முகத்திலும் அந்த திகைப்பும் அச்சமும் தெரிகிறது.” தருமன் அவர்களை மீண்டும் நோக்கி “காந்தார இலச்சினையையும் அணியச்செய்ததும் மிகச்சிறப்பான சூது. மந்தா, ஒரு பெரிய அவையில் சொற்கள் எவராலும் கேட்கப்படுவதில்லை. இலச்சினைகளும் செய்கைகளும் மட்டுமே பொருளை அளிக்கின்றன” என்றான்.
பீமன் புன்னகை செய்தான். தருமன் “மரவுரி அணியாமல் பட்டு அணிந்து வந்தமைக்காக உனக்குத்தான் வாழ்த்துரைக்க வேண்டும்” என்றான். “கணிகர் உடனிருக்கிறார். ஆயினும் மாதுலர் சகுனி நிலைகொள்ளாமலிருக்கிறார். அவர் தன் தாடியை நீவுவதிலிருந்தே அது தெரிகிறது.” பீமன் “ஆம் மூத்தவரே, அவரது விழிகள் நம்மைத் தேடுகின்றன” என்றான். “அவர் வில்லாளி. விரைவிலேயே நம்மை அறிந்துவிடுவார்” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலே தருமன் “பார்த்துவிட்டார்” என்றான். “ஆம்” என்றான் பீமன்.
சகுனி காந்தார முறைப்படி இளவரசருக்குரிய பட்டுமுடியும் பின்பக்கம் முடிச்சிடப்பட்ட மேலாடையும் அணிந்திருந்தார். ஈச்ச இலை இலச்சினைகொண்ட பொன்னணிகளை இருதோள்களிலும் சூடி செந்நிறமான தாடியும் ஓநாயின் செம்மணி விழிகளுமாக பீடத்தில் சற்று வளைந்து அமர்ந்திருந்தார். அந்த அவையில் அமர்ந்திருந்தவர்களிலேயே அவரும் கணிகரும் மட்டும்தான் கோணலாக அமர்ந்திருந்தனர் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்களின் உடலில் இருந்த வலி அந்தக் கோணலில் தெரிந்தது. பீமன் சகுனிக்காக இரக்கம் கொண்டான். அவரது வலி அந்த பெருமண்டபத்தின் தரைவழியாகவே அவனை வந்தடைவதுபோலிருந்தது.
துரியோதனன் உள்ளே வந்தபோது பல்லாயிரம்பேர் கூடியிருந்த அந்த அரங்கில் குகைக்குள் காற்று கடந்துசெல்வதுபோன்ற உருவற்ற முழக்கம் ஒன்று எழுந்தது. அத்தனை தலைகளும் அவனை நோக்கி திரும்பின. ஒருகணம் கடந்ததும் மரக்கூட்டத்தில் மழை இறங்குவதுபோல ஒரு பேரொலி பிறந்துவந்து சூழ்ந்துகொண்டது. அஸ்தினபுரியின் அமுதகலச முத்திரைகொண்ட மணிமுடியும் இளம்செம்பட்டு மேலாடையும் கழுத்தில் செவ்வைரங்கள் ஒளிவிட்ட ஆரமும் காதுகளில் மணிக்குண்டலங்களும் மணிகள் பதிக்கப்பட்ட பொற்கச்சையுமாக எவரையும் பார்க்காத விரைவற்ற நடையுடன் அவன் வந்தான்.
அவனுக்குப்பின்னால் நிமித்திகன் மீண்டும் அறிவிப்பு செய்ய கர்ணன் அங்கநாட்டின் துதிக்கை கோர்த்த இரட்டையானை முத்திரை கொண்ட மணிமுடி சூடி இளநீலப்பட்டு மேலாடை அணிந்து நிமிர்ந்த தலையுடன் நடந்துவந்தான். அவன் தோளுக்குக் கீழேதான் துரியோதனன் தெரிந்தான். துரியோதனனைக் கண்டு எழுந்த ஓசைகள் மெல்ல அடங்கி அந்தப் பெருங்கூட்டமே பாலைமணல் வெளிபோல ஓசையற்று அமைவதை பீமன் கண்டான். கர்ணனின் உயரமே அவனை அவையில் வேறொருவனாகக் காட்டியது. அவன் கௌசிகநாட்டின் அரசர்களின் அருகே சென்று அமர்ந்துகொண்டான். அமர்ந்தபோதுகூட அருகே நின்றிருந்த பிரத்யும்னன் அளவுக்கு உயரமிருந்தான்.
பீமனின் அருகே இருந்த இளம்வைதிகன் “அவனா கர்ணன்?” என்று இன்னொருவனிடம் கேட்டான். ”மூடா, கர்ணனுக்கு அறிமுகம் தேவையா? இப்புவியில் அவனைப்போல் பிறிதொருவன் இல்லை” என்றான் முதுவைதிகன். “பரசுராமரிடம் கற்றிருக்கிறானாமே?” என்றான் ஒரு பிராமணன். “ஆக்னேய ஷத்ரியனாக அவனை அவர் முழுக்காட்டு செய்திருக்கிறார் என்றார்கள்” என்றார் ஒரு கிழவர். “இல்லை, அப்படிச்செய்தால் அவன் அங்கநாட்டை ஆளமுடியாது. அஸ்தினபுரிக்கும் துணையாக இருக்கமுடியாது. பரசுராமரின் மழு ஷத்ரியர் அனைவருக்கும் எதிரானது. அவர்களை எதிர்ப்பேன், ஒருபோதும் கப்பம் கட்டமாட்டேன் என்று எரிதொட்டு ஆணையிடாமல் பரசுராமர் முழுக்காட்டுவதில்லை” என்றார் பெரிய தலைப்பாகை அணிந்திருந்த ஒருவர். அவர் ஒரு பண்டிதர் என பீமன் நினைத்தான்.
”யாரவன்? ஆண் வேடமிட்ட பெண் போலிருக்கிறான்?” என்றான் ஒரு வைதிகன். “அவன் விராட மன்னனின் மைந்தன் உத்தரன். அருகே இருப்பவன் அவன் தமையன் சங்கன்” என்றான் இன்னொருவன். “உத்தரனுக்கும் பாண்டுவைப்போல காட்டில் மைந்தர்கள் பிறப்பார்களோ?” என ஒரு இளம் வைதிகன் கேட்க அத்தனைபேரும் நகைத்தனர். பீமன் சினத்துடன் தன் தோள்களை இறுக்கி பின் தளர்த்தினான். தருமனின் விழிகள் வந்து அவனைத் தொட்டு எச்சரித்து மீண்டன.
”மஞ்சள்நிற பாகை அணிந்தவன் சந்திரசேனன். சமுத்ரசேனனின் மைந்தன்” என்று ஒருவன் சொன்னான். “காம்போஜ மன்னர் சுதட்சிணர் எங்கே?” குரல்கள் கலைந்து கொண்டே இருந்தன. “சிந்து தேசத்து அரசன் ஜயத்ரதன். அவனும் பாஞ்சால இளவரசர் திருஷ்டத்யும்னனும் துரோணரின் சாலைமாணாக்கர்கள்.” “சேதிநாட்டரசன் சிசுபாலன் ஏன் மச்சர்களுடன் அமர்ந்திருக்கிறான்?” ”அஸ்வத்தாமா இன்னும் வரவில்லை.” “அவருக்கு அழைப்பு இல்லை போலிருக்கிறது.” “அழைப்பு அனுப்பாமல் இருக்கமுடியுமா என்ன?”
பீமன் அஸ்வத்தாமனை எதிர்நோக்கி இருந்தான். ஆனால் சங்கொலி எழ இளைய யாதவனாகிய கிருஷ்ணன் தேவாலன் தொடர உள்ளே வந்தான். அவையில் மீண்டும் ஆழ்ந்த அமைதி நிலவியது. கிருஷ்ணனை துருபதனின் மைந்தன் சுமித்திரன் எதிர்கொண்டு அழைத்துச்சென்று பீடத்தில் அமரச்செய்தான். அந்தச் செயல்கள் மிக மெல்ல அசையும் திரைச்சீலையில் தெரிவதுபோல அவைக்குள் அமைதி ஆழம் கொண்டிருந்தது.
அந்த அமைதி சற்று வேறுவகையில் இருப்பதாக பீமன் எண்ணினான். அது அகஎழுச்சியின் விளைவான அமைதி அல்ல. ஒருவிதமான ஒவ்வாமை அதிலிருந்தது. அது தன்னிச்சையான மெல்லிய உடலசைவுகளிலும் சிறிய தொண்டைக்கனைப்புகளிலும் வெளிப்பட்டது. சப்த சிந்துவின் மன்னர்களின் வரிசையில் கிருஷ்ணன் சென்று அமர்ந்தான். அவனருகே இருந்த ஜயத்ரதன் ஒருகணம் ஏறிட்டு நோக்கிவிட்டு பார்வையை திருப்பிக்கொண்டான். அப்பால் இருந்த சேதிநாட்டு சிசுபாலன் கைநீட்டி தன் சேவகனை அழைத்து கடுமையாக ஏதோ சொல்லி தன் கையில் இருந்த தாம்பூலத்தை அவன் மேல் எறிந்தான். கிருஷ்ணன் மேலிருந்து அரசர்களின் நோக்கு சிசுபாலன் மீது திரும்பியது. சேவகன் தலைவணங்கி அகல சிசுபாலன் ஏதோ சொன்னான். அரசர்கள் பலர் புன்னகை செய்தனர்.
அஸ்வத்தாமனுக்காகவே அவை காத்திருந்தது என்று தோன்றியது. சங்கொலியுடன் அவன் உள்ளே நுழைந்தபோது அவை எளிதாக ஆகும் உடலசைவுகள் பரவின. பச்சைநிறப் பட்டின் மேல் மணியாரங்கள் சுற்றப்பட்ட முடியும் பொன்பட்டு சால்வையும் அணிந்து அஸ்வத்தாமன் கைகூப்பியபடி நடந்துவந்தான். அவனை துருபதனே அழைத்துவந்து அவையில் அமரச்செய்தார். அரசர்களின் நுழைவாயிலில் நின்றிருந்த வீரன் அதைமூடினான்.
துருபதன் நடந்து சிறியவாயில் வழியாக உள்ளே செல்ல அரங்குக்கு வெளியே முரசமேடையில் அமர்ந்த இரட்டைப் பெருமுரசங்கள் முழங்க கொம்புகள் பிளிறியபடி சேர்ந்துகொண்டன. கோல்நிமித்திகன் அரைவட்ட மணமுற்றத்தின் நடுவே வந்து நின்று தன் கோலைத்தூக்கியதும் பெருமுரசங்கள் ஓய்ந்து காற்று ரீங்காரமிட்டது. அவன் தன் கைக்கோலை தலைமேல் ஆட்டி உரக்கக் கூவியதை அவையின் ஒன்பது நிலைகளில் நின்றிருந்த பிற நிமித்திகர் கேட்டு திரும்பக்கூவினர்.
“பாற்கடல் அமைந்த பரந்தாமனின் மைந்தர் பிரம்மன். அவர் மைந்தரான அத்ரி பிரஜாபதியை வாழ்த்துவோம். அவரது மைந்தர் சந்திரன். சந்திரகுலத்து உதித்த புதன், புரூரவஸ், ஆயுஷ், நகுஷன், யயாதி, பூரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்ஷத்ரன், ஹஸ்தி, அஜமீடன், நீலன், சாந்தி, சுசாந்தி, புருஜன், அர்க்கன், பர்ம்யாஸ்வன் என நீளும் குலமுறையில் வந்த பாஞ்சால மூதாதையை வணங்குவோம். பாஞ்சாலன் குருதியில் உதித்த முத்கலன், திவோதாசன், மித்ரேயு, பிருஷதன், சுதாசன், சகதேவன் கொடிவழியில் பிறந்த மாமன்னர் சோமகரின் புகழ் நிலைக்கட்டும். சோமகரின் மைந்தர் யக்ஞசேனராகிய துருபதர் என்றும் வாழ்க! அவர் செங்கோல் வெல்க!”
”அவையினரே, இங்கு காம்பில்யத்தை தலைநகராக்கி பாஞ்சாலப்பெருநிலத்தை ஆளும் அரசர் துருபதரின் இளைய பிராட்டி பிருஷதியின் கருவில் பிறந்த மகள் கிருஷ்ணையின் மணத்தன்னேற்பு நிகழ்வு தொடங்கவுள்ளது. காம்பில்யத்தை பெருமைகொள்ளச்செய்யும் மாமன்னர்கள் அனைவரையும் இவ்வரசகுலம் வணங்கி வரவேற்கிறது. உங்கள் ஒவ்வொருவரின் முன்னும் துருபதரின் மணிமுடி தாழ்கிறது.”
அவன் கோல்தாழ்த்தி விலகியதும் வைதிகர்கள் உபவேள்வியை தொடங்கினர். சத்யஜித் இளமூங்கிலால் ஆன அரசரின் செங்கோலை எந்தி வேள்விக்காவலனாக நின்றிருந்தார். மூன்று எரிகுளங்களில் மூன்று தூயநெருப்புகள் தோன்றின. வைதிக ஆசிரியர் தௌம்யரின் ஆணைப்படி ஆஜ்யாகுதி தொடங்கியதும் நெருப்புகள் நாநீட்டி எழுந்து பறக்கத் தொடங்கின. ஸ்வஸ்திவாசனம் தொடங்கியது. வேதநாதம் கேட்டு அவை கைகூப்பி அமர்ந்திருந்தது.
வேள்வி முடிந்ததும் முதுநிமித்திகர் பத்ரர் கைகாட்ட சூதர்களின் மங்கலப்பேரிசை தொடங்கியது. முழவுகளும் கிணைகளும் பெரும்பறைகளும் கொம்புகளும் சங்கும் மணியும் இணைந்து ஒரு மொழியாக மாறி அகச்செவி மட்டுமே அறியும்படி பேசத்தொடங்கின. பொன்மஞ்சள்திரைகளுக்கு அப்பால் வாழ்த்தொலிகள் எழுந்தன. அவை முழுக்க காற்று போல அசைவு கடந்துசென்றது.
மங்கலத்தாலம் ஏந்திய நூற்றெட்டு அணிப்பரத்தையர் பட்டாடையும் பொலனணிகளும் பொலிய ஏழு நிரைகளாக வந்தனர். கனிகள், தானியங்கள், பொன், சங்கு, மணி, விளக்கு, ஆடி, மலர் என எட்டு மங்கலங்கள் பரப்பபப்ட்ட தாலங்களை ஏந்தி இருபக்கமும் நின்றனர். அவர்களைத் தொடர்ந்து பாஞ்சாலத்தின் ஐந்து பெருங்குலங்களையும் சேர்ந்த ஐந்து மூத்தவர்கள் நடந்து வந்தனர். சோமக குலத்து முதியவர் தன் கையில் இருந்த செண்பக மலர்க்கிளையை தூக்கியபடி வந்து நின்றார். தொடர்ந்து கொன்றைமரக் கிளையுடன் கிருவிகுலத்தலைவரும் வேங்கைக்கிளையுடன் துர்வாச குலத்தலைவரும் மருதக்கிளையுடன் சிருஞ்சயகுலத்தலைவரும் பாலைக்கிளையுடன் கேசினிகுலத்தலைவரும் வந்து நின்றனர்.
தொடர்ந்து காம்பில்யத்தின் விற்கொடி ஏந்திய கொடிக்காரன் நடந்து வந்தான். தொடர்ந்து வெண்தலைப்பாகை அணிந்த முதுநிமித்திகர் பத்ரர் வலம்புரிச்சங்கு ஊதியபடி அரங்குக்கு வர அவருக்குப்பின்னால் அகல்யையும் பிருஷதியும் இருபக்கமும் நடக்க துருபதன் கையில் செங்கோல் ஏந்தி மணிமுடி சூடி நடந்துவந்தார். அவருக்குப்பின்னால் நெறிநூல் சுவடிக்கட்டுடன் பேரமைச்சர் கருணர் நடந்து வந்தார்.பாஞ்சாலர்களின் மணிமுடி ஐந்து மலர்களால் ஆனதுபோல பொன்னில் செய்யப்பட்டு மணிகள் பதிக்கப்பட்டிருந்தது. துருபதனைக் கண்டதும் அவையிலிருந்தோர் கைதூக்கி உரக்க வாழ்த்தொலி எழுப்பினர். வாழ்த்தொலி எழுந்து மங்கல இசையை முழுமையாகவே விழுங்கிக்கொண்டது.
ஐந்து பெருங்குலத்தலைவர்களும் சேர்ந்து அரசனையும் அரசியரையும் இட்டுச்சென்று அரியணைகளில் அமரச்செய்தனர். செங்கோல் ஏந்தி அரியணையில் அமர்ந்த துருபதனின் இருபக்கமும் சத்யஜித்தும் சித்ரகேதுவும் வாளேந்தி நிற்க பின்னால் அவரது மைந்தர்களான சுமித்ரன். ரிஷபன், யுதாமன்யு, விரிகன், பாஞ்சால்யன், சுரதன், உத்தமௌஜன், சத்ருஞ்ஜயன், ஜனமேஜயன், துவஜசேனன் ஆகியோர் நின்றனர். இடப்பக்கம் பின்னால் கருணர் நின்றார். வலப்பக்கம் பின்னால் படைத்தளபதியான ரிஷபன் நின்றான். வாழ்த்தொலிகள் எழுந்து அலையலையாக மாளிகைச் சுவர்களை அறைந்து மீண்டுவந்தன.
பீமனிடம் அர்ஜுனன் “சிகண்டி எங்கே?” என்றான். தருமன் திரும்பி “மங்கலநிகழ்வில் அவனைப்போன்றவர்களுக்கு இடமில்லை என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் கங்காவர்த்ததுக்கு அப்பால் பலகுலங்களில் ஹிஜடைகளே மங்கலவடிவங்கள்” என்றான்.
வைதிகர் வேள்வியன்னத்தை மூன்றாகப் பகிர்ந்து அரசனுக்கு ஒரு பங்கையும் குலத்தலைவர்களுக்கு ஒருபங்கையும் அளித்து ஒரு பங்கை தங்களுக்கு எடுத்துக்கொண்டார்கள். அரசனின் பங்கை தௌம்யர் துருபதனிடம் அளிக்க அவர் அதை இரண்டாகப் பகிர்ந்து ஒன்றை தன் மைந்தர்களிடம் அளித்தார். தன் பங்கை மூன்றாகப் பகிர்ந்து மனைவியருக்கு அளித்து தான் உண்டார்.
நிமித்திகன் சங்கை ஊதியதும் அவை மீண்டும் அமைதிகொண்டது. அவன் தன் கோலை எடுத்து வீசி உரத்தகுரலில் அறிவித்தான் “பாஞ்சால மன்னர் துருபதருக்கும் அரசி பிருஷதிக்கும் பிறந்த இளவரசி கிருஷ்ணையின் திருமணத்தன்னேற்பு விழா நிகழவிருக்கிறது. அவை அறிக!” அவன் விலகியதும் துருபதன் தன் கோலை ரிஷபரிடம் அளித்துவிட்டு எழுந்து வந்து நின்று கைகூப்பி சொன்னார். அவர் குரலை கேட்டுச்சொல்லிகள் எதிரொலித்தனர்.
“அவையோரே, பெருங்குடியினரே, அயல்மன்னர்களே, உங்கள் அனைவரையும் பாஞ்சாலத்தின் ஐங்குல மூதாதையர் வணங்குகிறார்கள். அதிதிவடிவாக வந்து என்னை அருள்செய்தமைக்கு நான் தலை வணங்குகிறேன். இது என் அரசமகளின் மணத்தன்னேற்பு நிகழ்வு. அவள் யாஜ உபயாஜ மகாவைதிகர்கள் சௌத்ராமணி வேள்வியை இயற்றி எரியில் இருந்து எழுப்பி என் துணைவியின் கருப்பைக்குள் குடிவைத்த தெய்வம். கொற்றவையின் வடிவம் அவள் என்றனர் நிமித்திகர். வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் கொண்டு பிறந்தவள் என்பதனால் பாரதவர்ஷத்தையே அவள் ஆள்வது உறுதி என்றனர்.”
“பிறந்ததே மெய்யறிவுடன் என என் மகளை சொல்வேன். இந்நாட்டை விளையாட்டென அவளே ஆண்டு வருகிறாள். அவளறியா நெறிநூல் எதுவும் என் சபைவந்த எவரும் கற்றதில்லை. காவியமும் வேதாந்தமும் கற்றுணர்ந்தவள். வாளெடுத்தும் வில்லெடுத்தும் போர் புரியத் தேர்ந்தவள். எனக்கும் என் மைந்தருக்கும் அன்னையாகி என் குடியை நிறைப்பவள்.” துருபதன் அச்சொற்களில் சற்றே அகம் விம்மி நிறுத்தினார்.
“ஆகவே அவளுக்குகந்த மணமகனைக் கண்டடைய விழைந்தேன். எங்கள் ஐங்குலத்தில் ஒன்றாகிய துர்வாசகுலத்தின் முதல்வர் மாமுனிவர் துர்வாசர் இங்கே மலைக்குகை ஒன்றில் வந்து தங்கியிருக்கிறார். அவரிடம் பேசி அவராணைப்படி இந்த மணத்தன்னேற்பு ஒழுங்கமைவு செய்யப்பட்டுள்ளது.” துருபதன் கைகாட்ட ஒரு சேவகன் சென்று நீண்டு தொங்கிய வடம் ஒன்றை இழுத்தான். மேலே தொங்கிய பொன்னிறத் திரைச்சுருள் ஒன்று அகன்றது. அங்கே செந்நிறம் பூசப்பட்ட இரும்புக்கூண்டு ஒன்று தெரிந்தது.
பீமன் திரும்பி அர்ஜுனனை நோக்கிவிட்டு மேலே பார்த்தான். ஐந்து வாயில்கள் கொண்ட கிளிக்கூண்டு போலிருந்தது அது. பன்னிரு சேவகர்கள் பெரிய மரத்தொட்டி ஒன்றை கொண்டுவந்து அந்தக் கூண்டுக்கு நேர்கீழே அமைத்தனர். அதில் குடங்களில் கொண்டுவந்த நீரை ஊற்றினர். போட்டி என்ன என்று பீமனுக்குப் புரிந்தது. அர்ஜுனனை நோக்கி அவன் புன்னகைசெய்தான். அர்ஜுனன் “அந்த வில்லில்தான் சூது இருக்கும் மூத்தவரே” என்றான்.
ஏழு வீரர்கள் செந்நிறப்பட்டால் மூடப்பட்டிருந்த மிகப்பெரிய நுகம்போன்ற ஒன்றை எடுத்துவந்தனர். சிலகணங்கள் கடந்தே அது ஒரு வில் என பீமன் உணர்ந்தான். அவை நடுவே இருந்த நீண்ட மரமேடைமேல் அதை வைத்தனர். செந்நிற பட்டு உறை நீக்கப்பட்டதும் கரு நிறமாக மின்னிய பெரிய வில் வளைந்து செல்லும் நீரோடை போல அங்கே தெரிந்தது. அதைப்பார்ப்பதற்காக பலர் எழுந்தனர். பிறர் அவர்களை கூச்சலிட்டு அடக்கினர். ஓசையை கட்டுப்படுத்த வீரர்களும் முதியவர்களும் கைவீசினர். சிலகணங்களுக்குப்பின் அவையே சொல்லிழந்து அந்தப் பெருவில்லை நோக்கிக்கொண்டிருந்தது.
ஓவியம்: ஷண்முகவேல்
துருபதன் “அவையினரே, மாமுனிவர் வியாஹ்ரபாதரின் மைந்தர் சிருஞ்சயரில் இருந்து எங்கள் ஐங்குலங்களில் ஒன்றான சிருஞ்சய குலம் தோன்றியது. தோள்முதிரும் இளமையை அடைந்தபோது அன்னையிடமிருந்து தன் தந்தையைப்பற்றி அறிந்த சிருஞ்சயர் அவரைத் தேடி வாழ்த்து பெறும்பொருட்டு ஏழு காடுகளையும் ஏழு நதிகளையும் ஏழு மலைமுடிகளையும் கடந்து வியாஹ்ரவனத்தை அடைந்தார். அங்கே மண்ணில் பதிந்த இரண்டு புலிப்பாதத் தடங்களைக் கண்டு அவற்றை பின்தொடர்ந்து சென்று உச்சிமலைக்குகை ஒன்றில் தனிமையில் வாழ்ந்த புலிப்பாதம் கொண்ட முனிவரை சந்தித்தார்” என்றார்.
புலியென உறுமியபடி எழுந்து வந்த வியாஹ்ரபாதர் சிருஞ்சயரைக் கண்டு “இங்கே மானுடர் வரக்கூடாது ஓடிவிடு, இல்லையேல் கொல்வேன்” என்றார். “தந்தையே, நான் உங்கள் மைந்தன், என்பெயர் சிருஞ்சயன்” என்றார் அவர். “நீ என் மைந்தனாக இருந்தால் ஒரே அம்பில் அதோ தெரியும் அந்த மலைமுடியை உடைத்து வீசு, அதன்பின் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்” என்று வியாஹ்ரபாதர் சொன்னார். “என் அன்னைக்காக அதை நான் செய்தாகவேண்டும்” என்று சொல்லி சிருஞ்சயர் மீண்டார்.
வியாஹ்ரவனத்தில் ஏழு சண்டிகைதேவியர் குடிகொண்ட கடம்பமரம் ஒன்றிருந்தது. காட்டில் வருகையில் காற்றில்லாதபோதும் அம்மரம் கூத்தாடுவதைக் கண்டு அதில் காட்டன்னையர் குடியிருப்பதை உணர்ந்து அதன் கீழே அமர்ந்து தவமியற்றினார் சிருஞ்சயர். அன்னையர் பேருருக்கொண்டு வந்து அவரை அச்சுறுத்தினர். மரக்கிளைகளாக நீண்டு அடித்துக் கொல்ல முயன்றனர். கொடிகளாக எழுந்து பின்னி நெரித்தனர். வேர்களாகி கவ்வி உண்ண முயன்றனர்.
அஞ்சாமல் ஒருகணமும் சித்தம் பிறழாமல் அமர்ந்து மூன்றாண்டுகாலம் ஊழ்கமியற்றினார் சிருஞ்சயர். அன்னையர் அவரது பெருந்தவம் கண்டு கனிந்து அவர் முன் ஏழு தளிர்மரங்களாக முளைத்து எழுந்து வந்து நின்று அவருக்கு என்னவேண்டும் என்று கேட்டனர். அவர் தன் தந்தையின் ஆணையை சொன்னதும் அன்னையர் அருகே உள்ள வியாஹ்ரநாதம் என்னும் சிற்றாற்றின் கரைக்கு செல்லும்படி சொன்னார்கள். “ராகவராமன் முன்பு ஜனகசபையில் ஒடித்த கிந்தூரம் என்னும் வில்லை இந்திரன் வான்வழியே கொண்டு செல்லும்போது அதன் நிழல் அங்குள்ள குளிர்நீர்ச்சுழி ஒன்றுக்குள் விழுந்தது. அந்நிழல் அங்கே ஒரு நிகர்வில்லாக இன்றும் கிடக்கிறது. அதை நீ எடுத்துச்செல்” என்றார்கள்.
ஜனகனுக்கு சிவன் அளித்த வில் அது. ஆகவே மூன்றுமாதகாலம் சிவனை எண்ணி பூசனைசெய்து தவமியற்றி கருணை பெற்றபின் நீருக்குள் குனிந்து நோக்கிய சிருஞ்சயர் அந்த வில்லை கண்டுகொண்டார். பாறைகளில் நீர் வழிந்த தடமாக அது தெரிந்தது. அருகே நீர்த்தடங்களாக அதன் அம்புகள் தெரிந்தன. அவற்றை மெல்ல பிரித்து எடுத்தார். அது மிகப்பெரிய எடைகொண்டதாகையால் நீர்வழியாகவே அதை இழுத்துக்கொண்டு வியாஹ்ரபாதர் தங்கிய குகை வாயிலுக்குச் சென்றார். தன் அன்னையை எண்ணி ஒரே மூச்சில் அதைத் தூக்கி அம்பைச் செலுத்தினார். மலைமுடி உடைந்து நான்கு துண்டுகளாக குகை வாயிலில் விழுந்தது.
வெளியே வந்த வியாஹ்ரபாதர் மைந்தனை ஏற்று தன்னுடன் அணைத்துக்கொண்டார். அவர் தலையைத் தொட்டு நன்மக்கள் பேறும் நாடும் அமைய வாழ்த்தினார். அவர் அருளால் மாமன்னராகிய சிருஞ்சயர் நாடுதிரும்பியபின் வீரர்களை அனுப்பி இந்த வில்லைக் கொண்டுவந்து தன் குலதெய்வமாக கோயில் ஒன்றில் நிறுவினார். இந்த வில்லுக்கு தினமும் பூசையும் வருடத்தில் ஒருமுறை பலிக்கொடையும் அளிக்கப்படுகிறது.
“சிருஞ்சய குலத்தின் அடையாளமான கிந்தூரம் என்ற இந்த வில்லே பாஞ்சாலத்தின் கொடியிலும் அமைந்துள்ளது. இதை எடுத்து நாணேற்றும் வீரனையே என் மகள் மணக்கவேண்டும் என்பது துர்வாச மாமுனிவரின் ஆணை. அதன்படியே இது இங்கே உள்ளது.” மக்களிடமிருந்து சிறிய நகைப்பு கிளம்பி வலுத்து அரங்கம் முழங்கத் தொடங்கியது. ஒவ்வொருவரும் ஒன்றை சொல்ல பேச்சொலிகள் எழுந்து கூரையை மோதின.
“இன்று ஒருநாளிலேயே அடுத்த ஐம்பதுவருடத்திற்கான ரத்தபலியை பெற்றுவிடும் போல் இருக்கிறதே” என்றான் ஒரு பிராமணன். “இதை பீமன் தூக்க முடியும். அர்ஜுனன் நாணை இழுத்தால் கர்ணன் அம்பை எய்யலாம்…” என்றார் ஒரு முதியவர். “இளவரசி மூவரை மணக்கவேண்டுமா என்ன?” என்றான் ஒருவன். “மூடா, அம்புகளை யாதவன் எடுத்துக்கொடுக்கவேண்டாமா?” என்றான் இன்னொருவன். “நால்வரா?” என்று இன்னொரு வைதிகன் சிரிக்க “நால்வரையும் ஒருங்கமைக்க நாம் தருமனை கொண்டுவரலாம்… ஐந்து கணவர்கள் பாஞ்சாலத்தில் வழக்கம்தானே!” என்றான் மற்றொருவன்.
எங்கும் பற்களும் சிரிக்கும் விழிகளும் தெரிந்தன. துருபதன் “அவையோரே, மேலே தெரியும் அந்த கிளிக்கூண்டின் பெயர் கன்யாமானசம். பெண்ணின் மனம் போன்றது அது என்று அதைச்செய்த கலிங்கச்சிற்பி சொன்னார். அதனுள் ஐந்து இயந்திரக்கிளிகள் உள்ளன. எங்கள் ஐந்து குலங்களை அவை குறிக்கின்றன. கிளிகள் மாறிமாறி கூண்டிலிருந்து வெளியே தலை நீட்டும். போட்டிக்கு வரும் வீரன் மேலே கிளிக்கூண்டை நோக்கலாகாது. குனிந்து நீரில் நோக்கி மேலே அம்பெய்து தொடர்ச்சியான ஐந்து அம்புகளால் ஐந்து கிளிகளையும் வீழ்த்தவேண்டும். அவனுக்கே என் மகள் என்று அறிக. ஐந்தில் ஒன்று பிழைத்தாலும் அவள் கரம்பிடிக்க மாட்டாள்” என்றார்.
அவை முழுக்க அமைதியாகியது. அதுவரை சிரித்துக்கொண்டிருந்தவர்கள் அந்தப்போட்டியில் இருந்த அறைகூவலின் முழுமையை உணர்ந்து இறுக்கமாயினர். “பாஞ்சாலன் அரண்மனையில் அழியாத கன்னி ஒருத்தி வாழப்போகிறாள்” என்றார் ஒருவர். “அவளை குலதெய்வமாக்கி படையலிட்டு பூசனைசெய்யலாம். எந்த வீரன் இதை செய்யமுடியும்?” என்றான் இன்னொருவன். “அப்படியல்ல, யாரோ ஒருவனால் மட்டும் இதைச்செய்ய முடியும். அவனை எண்ணி அமைக்கப்பட்ட பொறி இது…” என்றார் ஒரு முதியவர்.
பீமன் அர்ஜுனனை நோக்கினான். அர்ஜுனன் விழிகள் அந்தக் கூண்டிலேயே அமைந்திருந்தன. தருமன் “பார்த்தா, உன்னால் முடியுமா?” என்றான். “முடியாவிட்டால் நான் மீள்வதில்லை மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்