பிரயாகை - 8

பகுதி இரண்டு :சொற்கனல்  – 4

தன் சிறியபடையுடன் புல்வெளியினூடாகச் செல்லும்போது அர்ஜுனன் முன்னால் நெடுந்தூரம் புகை எழுவதைக் கண்டான். “தீ வைத்திருக்கிறார்கள்” என்றான் தருமன். “ஆம், அதுவே சிறந்த வழி. நம்மிடம் யானைகள் இல்லாதபோது நம்மால் காம்பில்யத்தின் கோட்டையை தாக்கமுடியாது. குறுங்காட்டைக் கடந்துசெல்வதும் ஆபத்து. அவர்களை நம்மை நோக்கி வரச்செய்வதே நாம் செய்யக்கூடுவது” என்றான் அர்ஜுனன். “அவர்கள் வராவிட்டால்?” என்றான் தருமன். “இந்தச் சிறுபடையைக் கண்டு வராமலிருந்தால் அவர்கள் ஆண்களே அல்ல. வருவார்கள்” என்றான் அர்ஜுனன்.

கௌரவர்கள் செல்லுமிடமெல்லாம் வைக்கோல் போர்களையும் கூரைகளையும் காய்ந்த புல்வெளியையும் எரித்துக்கொண்டே சென்றிருந்தனர். தீ செந்நிறமாக தலைக்குமேல் எழுந்து வானை நக்குவதுபோல அசைந்தாடியது. நாய்கள் வெறிகொண்டவை போல குரைத்தபடியும் ஊளையிட்டபடியும் எரியும் வீடுகளைச் சுற்றிவந்தன. அவிழ்த்துவிடப்பட்ட பசுக்கள் உள்ளுணர்வால் நெருப்புக்கு எதிர்திசையில் வயிறுகுலுங்க ஓடிக்கொண்டிருந்தன.

காம்பில்யத்தின் மக்கள் நெடுங்காலமாக போரை அறியாதவர்கள் என்பதனால் நடப்பது எதையும் அவர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. எரியும் வீடுகளை அணைக்கமுயன்றவர்கள் அத்தனை வீடுகளும் எரிவதனால் சேர்ந்து அணைப்பது நடவாதது என உணர்ந்து உள்ளே புகுந்து தேவையான பொருட்களை மட்டும் அள்ளி வெளியே வீசிக்கொண்டிருந்தனர். பெண்களும் கிழவிகளும் மார்பில் அறைந்து ஒப்பாரியிட்டு கதற சிறு குழந்தைகள் அஞ்சி கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர்.

புகையும் அழுகையும் கலந்து நிறைந்த கிராமங்கள் வழியாக அவர்களின் படை சென்றபோது இருபக்கமும் பெண்கள் ஓடிவந்து மண்ணை அள்ளி வீசி பழித்துக் கூவினர். பாஞ்சாலத்தின் மொழி சிறிதளவே புரிந்தமையால் தருமன் “என்ன சொல்கிறார்கள்?” என்று கேட்டான். “நாம் அறியவேண்டுபவற்றை அல்ல” என்று அர்ஜுனன் பதில் சொன்னான். “பார்த்தா, போர் என்றால் வீரர்களுக்குள் நிகழ்வது அல்லவா? இந்த எளிய மக்களை நாம் ஏன் வதைக்கிறோம்?” என்றான் தருமன். “எந்தப்போரும் நாடுகளுக்குள் நடப்பதே. நாடு என்றால் மக்கள்” என்றான் அர்ஜுனன்.

கையில் மண்வெட்டியை எடுத்து ஆவேசத்துடன் ஓங்கியபடி ஓடிவந்த ஒரு முதியவரை வாளின் பின்பக்கத்தால் அறைந்து உதைத்து அப்பால் தள்ளினான் பிரதீபன். “அய்யோ” என்றான் தருமன். அர்ஜுனன் “மூத்தவரே, போரும் காட்டுத்தீயும் ஒன்று. அழிவு உண்டு. ஆனால் போர் நிகழ்ந்தால்தான் நாடு துடிப்பாக இருக்கும். காட்டுத்தீ எழாவிட்டால் காடு நோயுற்று அழியும்” என்றான். “நாம் அழிக்கிறோம். நம்முடைய படைவல்லமை இந்த எளிய மக்களைச் சூறையாடவே உதவுகிறது” என்றான் தருமன். “ஓநாய்கள் வாழவேண்டுமல்லவா? இறைவன் அதற்கும் சேர்த்துத்தான் ஆடுகளைப்படைத்திருக்கிறான் அரசே” என்றான் தருமனின் தேரை ஓட்டிய கார்க்கன்.

செல்லும்வழியெங்கும் கிராமங்கள் எரிந்துகொண்டிருந்தன. எரியம்புகளை நான்குபக்கமும் வீசிக்கொண்டே சென்றிருந்தனர். சில இடங்களில் தைலப்புல் எரிந்து மூச்சடைக்கவைக்கும் நெடி எழுந்தது. சிறிய மரங்கள் தளிர்பொசுங்கும் வாசனையுடன் எரிந்து அணைந்துகொண்டிருந்தன. “புகையை இந்நேரம் பார்த்திருப்பார்கள்” என்றான் அர்ஜுனன். ”அவர்களின் படைகள் வெளியே இறங்கி குறுங்காட்டை விட்டு வெளியே வர அதிகம்போனால் ஒருநாழிகை நேரமாகும்.” பீமன் “பார்த்தா, காம்பில்யத்தின் மொத்த படைபலமே ஐந்தாயிரம்பேர்தான் என்கிறார்கள். நகரத்தின் படையில் மூவாயிரம்பேருக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை” என்றான்.

அவர்கள் ஒரு மேட்டின் விளிம்பை அடைந்தபோது அப்பால் இன்னொரு மேட்டின்மேல் காம்பில்யத்தின் கோட்டை தெரிந்தது. அரக்குபூசப்பட்ட மரத்தாலான கூரைமுகடுகள் பின்காலையின் பளிச்சிடும் வெயிலில் கருமையாக மின்னிக்கொண்டிருந்தன. அவற்றின் மேல் கொடிகள் கங்கைக்காற்றில் துவண்டன. கோட்டை மழைக்கறையில் கருமைகொண்டு நாகம்போல வளைந்து நகரைச் சுற்றியிருந்தது. அவர்கள் நகரின்வடக்கு வாயிலை நோக்கி வந்திருந்தனர். மேற்குப்பக்கம்தான் மையவாயில் கங்கையை நோக்கித் திறந்திருந்தது. அங்கே துறைமுகப்பில் நின்றிருந்த பெரிய நாவாய்களின் கொடிகள் வண்ணப்பறவைகள் போல கூட்டமாகப் பறப்பது தெரிந்தது.

கௌரவர்களின் படை ஈராயிரம் கால்கள் கொண்ட ஒற்றை மிருகம்போல பாய்ந்து கோட்டையை நோக்கிச் செல்வது தெரிந்தது. நண்டின் கொடுக்குகள் இருபக்கமும் விரிந்து கோட்டையைக் கவ்வ எழுந்தவை போல சென்றன. “கௌரவர்களின் மிகப்பெரிய குறைபாடு நண்டின் உடல் வலுவற்றது என்பதே” என்று பீமன் உரக்கச் சொன்னான். “இரு கொடுக்குகளையும் மீறி எவர் உள்ளே வந்தாலும் பின்னாலிருக்கும் காலாள்படையை சிதறடித்துவிட முடியும்.” அர்ஜுனன் ‘ஆம்’ என தலையசைத்தான். அந்த வியூகமே கர்ணனிடமும் துரியோதனனிடமும் இருந்த மிகுந்த தன்னம்பிக்கையைக் காட்டியது. அவர்களை மீறி எவரும் வந்துவிடமுடியாதென்று அவர்கள் எண்ணுவது தெரிந்தது.

எச்சரிக்கை அடைந்த யானை போல கோட்டை உறுமத் தொடங்கியது. வடகிழக்கிலும் வடமேற்கிலும் இருந்த மரத்தாலான காவல்மாடங்களில் பெருமுரசுகள் முழங்க எரியம்புகள் எழுந்து வானில் வெடித்து பொலிந்தன. கிழக்கே துறைமுகப்பின் நாவாய்கள் பாய்களை கீழிறக்கத் தொடங்கின. கோட்டைக்குள் பல இடங்களில் ஒலித்த முரசுகளும் கொம்புகளும் கலந்து ஒற்றைப்பேரிரைச்சலாக ஒலித்தன. அத்துடன் மக்களின் ஆரவாரமும் கலந்துகொண்டது.

கோட்டைக்குள் இருந்து கொம்பொலிகள் எழுவதை அர்ஜுனன் கேட்டான். ஒரு எரியம்பு வானில் வெடித்தது. “கதவு திறக்கிறது!” என்றான் தருமன். குறுங்காட்டின் இலைத்தழைப்புக்குள் படை நுழைந்த அசைவு மேலே தெரிந்தது. நாணல்பரப்புக்குள் நாகம் செல்வதுபோல அந்தப்படை வருவதைக் காணமுடிந்தது. “நமது படை பின்வாங்கட்டும்” என்று அர்ஜுனன் சொன்னான். “இந்த மேட்டுக்குக் கீழே நின்றால் நம்மை அவர்கள் பார்க்கமுடியாது.” கொடிகள் அசைந்ததும் பாண்டவர்களின் படைகள் பின்வாங்கி மேட்டின் மறுபக்கச் சரிவில் இறங்கி நின்றன. பின்னால் எழுந்த புகையை காற்று கொண்டுவந்து அவர்கள்மேல் பரப்பி திரையிட்டு மூடியது.

அர்ஜுனன் ரதத்தின் தூண்மேல் தொற்றி மேலேறி ரதமுகட்டில் நின்றுகொண்டு நோக்கினான். குறுங்காட்டைக் கடந்து பாஞ்சாலத்தின் படையின் முகப்பு வெளிவரத் தொடங்கியது. கர்ணன் அவர்கள் முழுமையாக வெளிவருவதற்கான இடத்தை விட்டு மிகவிலகி தன் படைகளை நிறுத்தியிருந்தான். பாஞ்சாலத்தின் படையின் அளவு தெரியாமல் அவன் போரைத் தொடங்கமாட்டான் என்று அர்ஜுனன் எண்ணினான். கர்ணன் செய்யப்போகும் ஒவ்வொன்றும் தனக்கு முன்னரே தெரிவதுபோல தான் செய்யப்போவது அனைத்தும் கர்ணனுக்கும் முன்னதாகவே தெரியுமா என்று நினைத்துக்கொண்டான்.

செந்நிற மழைநீர் ஊறி வருவதுபோல காட்டிலிருந்து பாஞ்சாலப்படை வெளியே வந்துகொண்டிருந்தது. கிராமங்களிலிருந்து கோட்டைக்குச் செய்தியனுப்பும் ஏதோ முறைமை இருக்கிறதென அர்ஜுனன் எண்ணினான். வந்திருப்பது எந்தப்படை என்றும் எத்தனைபேர் என்றும் அறிந்திருக்கிறார்கள். தலைமைவகித்து வருவது அவர்களில் முக்கியமான தளபதியாகவே இருக்கவேண்டும். படைகளின் முகப்பில் வெண்கொடி பறக்கும் செந்நிறமான ரதத்துடன் அவன் வந்து நின்றான்.

தன் ரதத்தின் முடிமீது நின்றிருந்த பீமன் “இளையவனே, அவன் கொடியில் தெரிவது என்ன இலச்சினை?” என்றான். அர்ஜுனன் நோக்கி “விருச்சிகம்” என்றான். “அப்படியென்றால் அவன் சத்யஜித். துருபதனின் தம்பி” என்றான் பீமன். “அவனும் அக்னிவேசரின் மாணவன்தான். சத்ராவதியை அவன் ஆண்டுகொண்டிருக்கிறான். இங்கு அவன் இருப்பது துருபதனுக்கு உதவியானதே” என்றான். “ஆம் அவனுடைய தோரணையில் தன்னம்பிக்கை நிறைந்துள்ளது” என்றான் அர்ஜுனன்.

பீமன் நகைத்தபடி “துரியோதனனுக்கு சத்யஜித்தைத் தெரியாது. ஆகவே சற்று அதிக நம்பிக்கையுடன் போருக்குச் செல்வான். அவனுக்கு சிறிய அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன” என்றான். தருமன் முன்னால் வந்து “இளையோனே, அவன் துருபதனைப் போலிருக்கிறானே?” என்றான். “துருபதனின் இளையோன், பெயர் சத்யஜித்” என்றான் அர்ஜுனன். “அவரை நாம் கொல்லவேண்டியதில்லை மூத்தவரே. நல்லவரெனத் தெரிகிறார்” என்றான் பின்பக்கம் சக்கரக்காவலனாக நின்ற நகுலன். “நம்மை அவர் கொல்லலாமா?” என்றான் அர்ஜுனன் நகைத்தபடி.

சத்யஜித்தின் படைகள் மெல்ல ஒருங்கிணைந்து ஒரு கழுகுவடிவில் வியூகமிட்டன. கழுகின் இரு சிறகுகளிலும் ரதங்கள் நின்றன. அவற்றில் பறந்தகொடிகளிலிருந்து துருபதன் முதன்மையான வீரர்களையே அனுப்பியிருக்கிறான் என்று தெரிந்தது. நடுவே சத்யஜித் கழுகின் அலகு என நின்றிருந்தான். பாஞ்சாலப்படை கொடிகளை வீசி முரசுகளையும் கொம்புகளையும் முழக்கியது. தங்கள் நாட்டைவிட்டு வெளியேறும்படி சொல்லும் எச்சரிக்கை அது என அர்ஜுனன் உணர்ந்தான். நூற்றுக்கணக்கான முறை பயிற்சிக்களத்தில் கேட்ட ஒலி. ஆனால் களத்தில் கேட்கையில் அது உடலை சிலிர்க்கச்செய்தது. கொம்புகுலுக்கி எச்சரிக்கும் மதயானையுடன் பேச முடிவதுபோல.

கௌரவர்களின் படை திரும்ப முரசொலி எழுப்பி கொடிகளை ஆட்டியது. அந்த அறைகூவல் எழுந்ததுமே சத்யஜித்தின் கொடிவீரன் விண்ணில் கொடியை ஆட்டினான். பாஞ்சாலப்படை பாய்ந்து முன்னால் வந்தது. கழுகின் இருசிறகுகளும் வீசி முன்னால் வர இணையான விரைவுடன் அதன் அலகு பாய்ந்துவந்தது. நண்டின் கொடுக்குகள் எழுந்து முன்னோக்கி விரைந்தன. இருபடைகளும் நெருங்கும் கணத்தை அர்ஜுனன் உடலெங்கும் பரவிய எழுச்சியுடன் பார்த்து நின்றான். கணம் கணமாக உணர முடிந்தது. ஒவ்வொரு தேரையும் குதிரையையும் பார்க்கமுடிந்தது. மௌனமாக மிகமெல்ல நிகழ்வதுபோல, இரு வெள்ளங்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பதுபோல, இருபடைகளும் கலந்தன.

ஓங்கி அறைந்து நுரைக்கும் அலைகளிலிருந்து துமி தெறிப்பதுபோல அம்புகள் விண்ணிலெழுந்து வளைந்து சரிந்தன. எரியம்புகள் சீறிச் சுழன்று விழுந்தன. சத்யஜித்தை துரியோதனன் எதிர்கொண்டான். அவர்களின் குதிரைகள் ஒன்றையொன்று நோக்கி உறுமுவதை அவற்றின் கால்கள் மண்ணில் அறைவதை இங்கிருந்தே காணமுடிந்தது. விகர்ணனும் கர்ணனும் இருபக்கங்களிலும் எழுந்து வந்த கழுகின் சிறகுகளை எதிர்கொண்டனர். உச்சகட்ட அழுத்தத்தில் இருபடைகளும் ஒன்றையொன்று மோதி அழுத்தின. மெல்ல ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவின.

துரியோதனன் சத்யஜித்தை நோக்கி செலுத்திய அம்புகளை அவனுடைய சாரதி மிக எளிதாக ரதத்தைத் திருப்பி தவிர்த்தான். அதேசமயம் சத்யஜித் வலுவான அம்புகளால் துரியோதனனை இடைவெளியில்லாமல் தாக்கிக்கொண்டே இருந்தான். துரியோதனனின் வில் தளர்வதை அர்ஜுனனால் காணமுடிந்தது. கர்ணன் எதிர்கொண்டு சென்ற கழுகின் வலச்சிறகு மெல்ல பின்னடைந்தது. ஒடிந்ததுபோல சிதறியது. அவனுடைய அம்புகள் பட்டு அங்கே வீரர்கள் அலறி மண்ணில் விழுவதை அர்ஜுனன் கண்டான். அம்புகள் மீன்கொத்திகள் போல எழுந்து குப்புற விழுந்து இறங்கி நின்றன. அம்புபட்ட குதிரைகள் விரைவழியாமலேயே சரிய ரதங்கள் மண்ணில் விழுந்து மேல் சக்கரம் காற்றில் சுழல கீழ்ச்சக்கரம் மண்ணில் உருள சற்றுதூரம் ஓடின. அவற்றிலிருந்த வீரர்கள் சிதறிவிழுந்து எழுவதற்குள் கர்ணனின் அம்புகள் அவர்களை துளைத்தன.

துரியோதனனின் கொடியை சத்யஜித் உடைத்தான். மேலே நோக்கிய துரியோதனன் சினத்துடன் கூச்சலிட்டு தன் வில்லால் ரதமோட்டியை அறைந்தான். துரியோதனன் சத்யஜித்தை வெல்லமுடியாதென்று அர்ஜுனன் அறிந்துகொண்டான். அவனை சத்யஜித் சினமூட்டிவிட்டான். கதாயுதப்போரில் மட்டுமே சினம் ஓர் ஆற்றலாக ஆகும். வில்வித்தையில் அது அத்தனை இலக்குகளையும் தவறச்செய்யும். “சினம்கொள்ளச் செய்துவிட்டான்… அவ்வளவுதான். இனி அவன் சத்யஜித்தை வெல்லமுடியாது” என்றான் பீமன். உரக்க நகைத்து தன் தோளில் தட்டியபடி “சர்ப்பக்கொடியை மிக விரும்பி அமைத்தான்… அவனுடைய இலச்சினையில் கார்க்கோடகன் இருக்கவேண்டும் என்று நிமித்திகன் சொன்னானாம்.”

பச்சைக்குருதியின் வாசனையை அர்ஜுனன் கற்பனை செய்துகொண்டான். இது போர். இங்கே குருதி உண்மை. கதறல் உண்மை. மரணமும் உண்மை. அவனுக்கு கர்ணனை நினைத்து சிறிய அச்சம் எழுந்தது. கர்ணனுக்கும் இது முதல் போரே. சற்றும் தயக்கமில்லாமல் கொன்று வீழ்த்துகிறான். அவன் அம்புகள் ஒவ்வொன்றிலும் அவனுடைய அகத்தின் உறுதி தெரிந்தது. குருதிச்சுவை அறிந்த கொலைப்பறவைகள்போல அவன் அம்புகள் எழுந்து விழுந்தன. கழுகின் சிறகுகளை உடைத்து சிதறடித்துக்கொண்டு அவன் நெடுந்தொலைவுக்குச் சென்றுவிட்டான். அவனுடைய யானைச்சங்கிலி சுருள் கொண்ட கொடி பாஞ்சாலர்களின் நடுவே தெரிந்தது.

மறுபக்கம் விகர்ணனின் ரதம் கழுகின் இன்னொரு சிறகுடன் இணைப்போரில் இருந்தது. கௌரவர்களின் வீரர்கள் அம்புகள் பட்டு விழுந்தனர். அவர்கள் விழுந்த இடங்களில் நெருப்பில் கல் விழுந்த தடம் போல படை சற்று விலகி மீண்டும் இணைந்துகொண்டது. படை முன்னகர்ந்து செல்ல பின்பக்கம் அம்புபட்டு விழுந்து துடித்துக்கொண்டிருந்த வீரர்களை காணமுடிந்தது. தைத்த அம்புகளுடன் சிலர் எழுந்தும் விழுந்தும் ஓடி விலகினர். அத்தனை தொலைவிலேயே அலறல் ஒலிகள் கேட்டன. குதிரைகள் கனைப்பதும் ரதச்சகடங்கள் அதிர்வதும் அதனுடன் இணைந்துகொண்டன.

கர்ணனால் சிதறடிக்கப்பட்ட கழுகின் சிறகிலிருந்து கொம்பின் ஓசை அழுகை போல எழுந்தது. துரியோதனனுடன் போர் புரிந்துகொண்டே சத்யஜித் இடக்கையை காட்டினான். அவனருகே நின்ற பெருமுரசு அதிர கழுகின் உடலில் இருந்து புதுச்சிறகு ஒன்று முளைத்து நீண்டு சிதறிய சிறகின் எச்சங்களை அணைத்துக்கொண்டு இணைந்து வலுவாகி கர்ணனை நோக்கி வந்தது. கர்ணன் கை தூக்க அவனுக்குப்பின்னால் கொடியசைந்து கொம்புகள் கூவின. கௌரவப்படையில் ஒருபகுதி கிளம்பி கர்ணனுடன் சென்று சேர்ந்தது.

மிகவும் பின்வாங்கிச்சென்றிருந்த பாஞ்சாலப்படையின் வலச்சிறகு வலிமைபெற்று முழுவீச்சுடன் தாக்கியபடி முன்னால் வந்தது. கௌரவ வீரர்கள் அம்புகள் பட்டு சரிந்தார்கள். வீரர்கள் விழ விழ நண்டின் இடக்கொடுக்கு விரைவிழந்தது. மெல்ல அது சிதறி பின்வாங்கியது. நண்டுக்கொடுக்கில் இருந்த கௌரவப் படைகளுக்கும் கர்ணனுக்குமான தொடர்பு முற்றிலுமாக அறுபட கர்ணன் கழுகின் சிறகால் அள்ளி எடுக்கப்பட்டு பின்னால் கொண்டுசெல்லப்பட்டான். “பிடித்துவிட்டனர்!” என்று தருமன் கூவினான். “அது சிலந்தி வலையில் வண்டு சிக்கியதுபோல. வலையை அறுத்து அதை அவர்களே அனுப்பிவிடுவார்கள்” என்றான் பீமன்.

சத்யஜித் துரியோதனனின் ரதத்தின் தூணை உடைத்தான். ரதமுகடு துரியோதனன் மேல் சரிந்தது. அவன் சினம் கொண்டு அதை தன் காலால் ஓங்கி அறைந்தான். அதற்குள் அவனுடைய கவசங்களின் இடைவெளிகளைத் தாக்கிய சத்யஜித் சில அம்புகளில் அதை உடைத்துப் பெயர்த்து விழச்செய்தான். கடும் சினத்தால் நிலைமறந்த துரியோதனன் நெஞ்சில் ஓங்கி அறைந்து கூவியபடி வில்லைத் தூக்கியபடி ரதத்தட்டின் முன்னால் வந்தான். அந்தத் தருணத்தை அறிந்த சத்யஜித் அவன் புரவியை அம்பால் அடித்தான். அது அலறியபடி சுழன்று விலா மண்ணிலறைய விழுந்தது. ரதம் நிலைகுலைந்து அதன் முன் தட்டில் நின்றிருந்த துரியோதனன் சமநிலை இழந்தான். அதே விரைவில் சத்யஜித் துரியோதனனின் வில்லை உடைத்தான்.

உடைந்த வில்லை வீசிவிட்டு சரிந்த தேரிலிருந்து மண்ணில் குதித்தான் துரியோதனன். திகைத்து வெறும்கையுடன் நின்ற அவனுடைய தலைக்கவசத்தை அம்பால் அடித்துச் சிதறடித்தான் சத்யஜித். துச்சாதனன் தன் ரதத்தைத் திருப்பிக்கொண்டு துரியோதனன் அருகே வந்து கூவ துரியோதனன் ஓடிப்போய் அதில் பாய்ந்தேறிக்கொண்டு அதிலிருந்த வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டான். அதற்குள் அவனையும் பாஞ்சாலப்படைகள் முழுமையாகவே சுற்றிவளைத்துக்கொண்டன. “அவன் கொன்றிருக்கலாம். ஆனால் அஸ்தினபுரியின் இளவரசனைக் கொன்றால் எழும் விளைவுகளை அஞ்சுகிறான்” என்றான் பீமன்.

பார்த்துக்கொண்டிருக்கையில் சிலகணங்கள் போரே முடிந்துவிட்டதுபோல தோன்றியது. நண்டின் இருகொடுக்குகளையுமே கழுகு உடைத்து சிறகுகளுக்குள் கொண்டுசென்றுவிட்டிருந்தது. “பார்த்தா, நாம் செல்லவேண்டிய நேரமா இது?” என்று தருமன் கூவினான். இல்லை என்று அர்ஜுனன் கைகாட்டினான். அவன் எதிர்பார்த்ததுபோலவே கழுகின் வலச்சிறகின் நடுவே ஒரு சுழி எழுவதுபோல கர்ணனைக் காணமுடிந்தது. நான்குபக்கமும் அம்புகளைவிட்டுக்கொண்டு அவன் தன்னந்தனியாக ரதத்தில் நின்றான். அவனுடைய சாரதி தன் முதுகின் மேல் கனத்த ஆமையோட்டுக்கவசத்தை போட்டுக்கொண்டு முழங்கால்மேல் முகம்வைத்து வளைந்து அமர்ந்து ரதத்தைத் திருப்பினான். குதிரைகள் அந்த உச்சகட்டப்போரில் ஊக்கமடைந்தவைபோல சுழன்றுவந்தன.

முன்காலை ஒளியில் கர்ணன் அணிந்திருந்த இரும்புக்கவசம் பொன்னாலானதுபோல ஒளிவிட்டது. அவன் திரும்புகையில் அவன் காதுகளில் இரு நீலவைரங்கள் மின்னுவதை அர்ஜுனன் அங்கிருந்தே கண்டான். அந்தக்கவசமும் குண்டலமும் அவனிடம் எப்போது வந்தன என்று அவன் சித்தம் பிரமித்தது. கர்ணனின் அம்புபட்டு அவனைச்சூழ்ந்திருந்த பாஞ்சாலவீரர்கள் விழவிழ அவனைச்சூழ்ந்த வலை விலகியபடியே வந்தது. அவன் அம்பால் அடிபட்ட புரவி ஒன்று துள்ளி காலுதைத்து அலறி மறிந்துவிழ அதன் ரதம் காலாள்படையினரின் தலைமேல் விழுந்து உருண்டோடியது. கர்ணன் அம்புகளை விட்டுக்கொண்டே பாஞ்சாலர்களின் வளையத்தை உடைத்து துரியோதனனைச் சூழ்ந்திருந்த பாஞ்சாலர்களுக்குப்பின்னால் வந்துவிட்டான். “காப்பாற்றிவிட்டான்!” என்றான் தருமன். “ஆனால் சத்யஜித்துடன் சற்று போர்புரியநேரும் அவர்கள்” என்றான் பீமன்.

சத்யஜித் துரியோதனனிடமும் கர்ணனிடமும் மாறிமாறி போர் செய்தான். கர்ணனின் அம்புகள் அவன் கொடியையும் தேர்முடியையும் உடைத்தன. அவன் இடையில் அம்பு பாய்ந்து சமநிலை இழந்து தூணில் சாய்ந்துகொண்டான். தனக்கும் அவனுக்கும் நடுவே வந்தவர்களை அம்புகளால் சாய்த்தபடி கர்ணன் நெருங்கிவந்தான். சத்யஜித் கையை தூக்கிக்காட்ட அவனுடைய கொடிக்காரன் கொடியை அசைத்தான். பாஞ்சாலத்தின் பெருமுரசு கூகை போல விட்டுவிட்டு ஒலிக்கத் தொடங்கியது. பாஞ்சாலப்படைகள் போரை அப்படியே விட்டுவிட்டு ஒருங்கிணைந்து பின்வாங்கின.

சத்யஜித் தன் ரதத்தைத் திருப்பி பின்வாங்கி காட்டுக்குள் விரைந்தான். முன்னரே சிதைவுற்றிருந்த கழுகின் உடல் ஒன்றுடன் ஒன்று இணைந்து பலவாறாக உருவம் கொண்டு பின்வாங்கிச்சென்றது. ஒவ்வொரு பாஞ்சாலவீரனும் அருகே நின்ற பாஞ்சாலவீரனுடன் இணைய அக்குழுக்கள் மேலும் இணைய ஒரு வலை பின்னுக்கு இழுபட்டு குறுகுவதைப்போல அவர்கள் குறுங்காட்டை நோக்கிச் சென்றனர். துரியோதனன் தன் வில்லைத் தூக்கி கூவியபடி ரதத்தில் கர்ணனை நோக்கி வந்தான். கைசுட்டி அவன் கூவுவதைப்பார்த்தபோது பாஞ்சாலப்படையை பின் தொடரும்படி சொல்கிறான் என்று தெரிந்தது. ஆனால் கர்ணன் கைகளை விரித்து அவனை அமைதிப்படுத்தினான்.

சிலகணங்களுக்குப்பின் கர்ணன் கைகளை அசைத்தான். அதற்கேற்ப கொடிக்காரன் கொடிகளை ஆட்ட முரசும் கொம்புகளும் முழங்கின. கௌரவப்படை பின்வாங்கி பதின்மர் குழுக்களாக இணைந்து மீண்டும் நண்டுவடிவை அடைந்தது. எட்டு ரதங்கள் உடைந்து விழுந்திருந்தன. எஞ்சியவர்கள் அணிவகுத்துக்கொண்டிருக்கையிலேயே ஏன் கர்ணன் சத்யஜித்தை பின் தொடரவேண்டாமென்று சொன்னான் என்று புரிந்தது. குறுங்காட்டுக்குள் இருந்து துருபதன் தன் விற்கொடி பறக்கும் தேரில் எழுந்துவந்தான். அவனுக்குப்பின்னால் நூற்றுக்கணக்கான தேர்களும் தனிப்புரவிகளும் வில்லேந்திய காலாள்படையினரும் வந்தனர். சத்யஜித்தின் படை அதனுடன் இணைந்திருந்தது.

கழுகின் வலச்சிறகில் சத்யஜித்தும் துருபதனின் மைந்தன் சித்திரகேதுவும் வந்தனர். இடப்பக்கச் சிறகில் துருபதனின் மைந்தர்கள் சுமித்திரனும் பிரியதர்சனும் வந்தனர். இருபக்கமும் மைந்தர்கள் காவல்காக்க பின்பக்கம் இளையமைந்தன் துவஜசேனன் சக்கரம் காக்க துருபதன் கழுகின் அலகாக வந்தான். கழுகு சிறகுகளை வீசி பேருருவம் கொண்டு கௌரவர்களை நோக்கி வந்தது. பீமன் தொடையில் அடித்து நகைத்து “போர் இப்போதுதான் தொடங்குகிறது பார்த்தா” என்றான். “ஓசையின்றி வந்திருக்கிறான்” என்றான் தருமன். “கழுகு ஓசையிடாது. வியூகத்தில் அந்த உயிரினத்தின் அமைப்பு மட்டும் அல்ல இயல்பும் கருத்தில்கொள்ளப்படும்” என்றான் அர்ஜுனன்.

கர்ணன் தன் சங்கை எடுத்து ஊதியபடி வில்லுடன் பாய்ந்து நண்டின் நடுப்பகுதியை நோக்கிச் சென்றான். அவனுடைய சைகைக்கு ஏற்ப அசைந்த கொடிகளைக் கண்டு அவனுடைய இடத்துக்கு விகர்ணனும் துச்சலனும் ரதத்தில் பாய்ந்துசென்றனர். நண்டுவியூகம் மெல்லக்கலைந்து ராஜாளியாகியது. ராஜாளியின் அலகாக கர்ணன் நின்றிருந்தான். துருபதனின் படை சரிவிறங்கிவந்தது. கொடிகள் கொழுந்தாட புரவிக்கால்கள் நிலத்தில் அறைய அலையலையாக எழுந்தமைந்து நெருங்கியது. கர்ணனின் அம்பில் முதல் பாஞ்சால வீரன் விழுந்ததும் துருபதன் அம்பில் முதல் கௌரவ வீரன் விழுந்ததும் ஒரே கணத்தில் நிகழ்ந்தது.

சிலகணங்களில் இருபடைகளும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. “வெல்வார்களா பார்த்தா?” என்றான் தருமன். “ஒரே ஒருவன்… அவன் இல்லையேல் சிலநொடிகளில் போர் முடிந்திருக்கும்” என்றான் அர்ஜுனன். “அவன் இப்போரை வெல்வான்…” தருமன் பெருமூச்சுவிட்டான். “என்றோ ஒருநாள் அவன் நமக்கு எதிராக வில்லுடன் நிற்கப்போகிறான்” என்றான். அர்ஜுனன் உத்வேகத்தில் சற்று உடலைக் குனித்து போரைப்பார்த்தான். இருபடைகளும் இரு யானைமத்தகங்கள் போல அறைந்துகொண்டன. அலறல்களும் போர்க்கூச்சல்களும் எழுந்து காற்றில் மிதந்துவந்தன.

கர்ணனின் கையிலிருப்பது வில்லா சக்கரமா என்ற ஐயமெழும்படி இருந்தது அவனுடைய போர். அம்புகள் பட்டு பாஞ்சாலர்கள் விழுந்துகொண்டே இருந்தனர். துருபதனின் மகன் சுகேது அம்புபட்டு தேர்த்தட்டில் இருந்து அலறியபடி விழுந்தான். அரைக்கணம் திரும்பி நோக்கிய துருபதனின் வில்லில் இருந்து வந்த அம்புகள் பட்டு கௌரவர்கள் விந்தனும் சுபாகுவும் தேரில் இருந்து விழுந்தனர். “கர்ணன் எளிதில் துருபதனை வெல்லமுடியாது பார்த்தா. அவனை நிலையழியச் செய்யத்தான் அவன் மைந்தனைத் தாக்கினான். ஆனால் அவன் ஒருகணமும் சமநிலை இழக்கவில்லை” என்றான் பீமன்.

துருபதனும் கர்ணனும் நேருக்குநேர் போர்புரியத்தொடங்கினர். அர்ஜுனன் அதற்கிணையான ஒரு நேர்ப்போரை அதுவரை கண்டதில்லை. இருவரையும் சூழ்ந்து சிறுபறவைகள் பறந்து நடமிடுவதாகத் தோன்றியது. பொங்கும் அருவிக்குக் கீழே துள்ளிக்குதித்து நீராடுவதாகத் தோன்றியது. நூற்றுக்கணக்கான மெல்லிய சரடுகளால் கட்டப்பட்டு வேறேதோ கரங்களால் பாவைகளென ஆட்டுவிக்கப்படுவதாகத் தோன்றியது. ஒவ்வொருகணமாக நீடித்த நடனம் முடிவற்றது என்ற பிரமை எழுந்தது.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

கழுகின் இடப்பக்கச் சிறகை துரியோதனனும் துச்சாதனனும் தாக்கி முன்னால்சென்றனர். கழுகின் வலச்சிறகு சத்யஜித்தின் தலைமையில் கௌரவர்படைகளை அறைந்து அழுத்திக்கொண்டு வந்தது. அங்கே விகர்ணனும் துச்சலனும் சத்யஜித்தின் அம்புகளுக்கு முன் நிற்கமுடியாமல் பின்வாங்கிக்கொண்டே இருந்தனர். விகர்ணன் சட்டென்று அம்புபட்டு தேர்த்தட்டில் விழ அவனுடைய சாரதி ரதத்தைத் திருப்பினான். அந்த இடைவெளியை ஜலகந்தனின் ரதம் உடனே நிறைத்தது.

போரை தொலைவில் நின்று பார்க்கும்போது அது ஓர் ஒற்றை நிகழ்வாக மாறிவிடும் அற்புதத்தை அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். ஆயிரக்கணக்கானவர்கள் தனித்தனியாக செய்யும் போர். அவர்கள் ஒவ்வொருவரும் அப்போது முழுமையான தனிமையில் தங்கள் எதிரிகளுடனும் ஆயுதங்களுடனும் இருந்துகொண்டிருப்பார்கள். ஆனால் அவை இணைந்து ஒற்றை நிகழ்வாகிவிடுகின்றன. இப்புடவியின் அத்தனைகோடி நிகழ்ச்சிகளும் இணைந்து விண்ணில் நின்று நோக்கும் தெய்வங்களுக்கு ஒற்றை நிகழ்வாகத் தெரியுமோ?

கௌரவர்களின் காலாள்படையினர் நிலத்தில் மண்டியிட்டமர்ந்து விற்களை நிலத்தில் ஊன்றி அம்புகளைத் தொடுத்தனர். ரதங்கள் முன்னேறும் வழியில் அந்த அம்புகள் சென்று விழுந்து அங்குள்ள வீரர்களை விலகச்செய்தன. ரதங்கள் அங்கே ஓடிச்சென்றதும் ரதங்களுக்குப்பின்னால் அவற்றையே மறைவாகக் கொண்டு காலாள்படையினர் முன்னேறினர். எங்கு அம்புகள் செல்லவேண்டுமென்பதை கொடிகளும் முரசுகளும் சைகைகளாலும் ஒலியாலும் சொல்லிக்கொண்டே இருந்தன. தன் உடலுக்கு தானே ஆணையிட்டுக்கொண்டு போர் புரிந்தது ஆயிரம் கால்கள்கொண்ட விலங்கு.

படைக்குப்பின்பக்கம் உடைந்த சக்கரங்களும் கைவிடப்பட்ட விற்களும் மண்ணில் தைத்தும் விழுந்தும் கிடந்த ஆயிரக்கணக்கான அம்புகளும் சடலங்களும் துடிக்கும் உடல்களும் தவழ்ந்து எழுந்து ஒதுங்கும் காயம்பட்ட வீரர்களுமாக புயல்கடந்த நிலம்போலிருந்தது புல்வெளி. எரியம்புகள் விட்ட புகையின் திரையை காற்று அள்ளி விலக்க அப்பால் பல்லாயிரம் அசைவுகள் கொந்தளிக்க குமிழிகளும் பாசிகளும் அசையும் நீர்ப்பரப்பு போலவோ காற்றிலாடும் திரைச்சீலை போலவோ போர்க்காட்சி தெரிந்தது.

துருபதனின் கைத்திறன் வியக்கச்செய்வதாக இருந்தது. அவனுடைய தளர்ந்த கனத்த உடலைக்கொண்டு போர்புரியமுடியுமென்பதே வியப்பூட்டியது. அவன் கைகளும் கண்களுமே அசைந்தன. கண்பட்ட இடத்தை மறுகணமே அம்பு சென்று தொட்டது. அவனுக்குப்பின் இரண்டு வீரர்கள் நின்றுகொண்டு அம்புகளை மாறிமாறிக்கொடுத்தனர். அவன் அம்புபட்டு கௌரவர்கள் நந்தனும் சுநாபனும் விழுந்தனர். அடுத்தகணமே மகாபாகுவும் சுஷேணனும் விழுந்தனர். ஓர் இளவரசன் விழுந்த அதிர்ச்சியை படைகள் எண்ணுவதற்குள் இன்னொருவன் அம்புபட்டு அலறி வீழ்ந்தான். பீமவேகனும் அயோபாகுவும் துர்மதனும் சித்ராக்‌ஷனும் விழுந்தனர்.

கர்ணனின் அம்புபட்டு சுமித்ரன் விழுந்தான். அதை அரைக்கணம்கூட திரும்பி நோக்காமல் துருபதன் போரிட்டான். துருபதனின் ஆற்றல் கர்ணனை மேலும் மேலும் ஊக்கமடையச்செய்வதுபோலிருந்தது. அதை அவன் எண்ணியதுமே தருமன் சொன்னான் “நெருப்பை காற்று ஊதிப்பெருக்குவதுபோலிருக்கிறது பார்த்தா… அவன் வீரியம் இவனை மேலும் ஆற்றல்கொண்டவனாக்குகிறது.” கர்ணனின் கரங்களை பார்க்கவே முடியவில்லை. அம்புகளால் துருபதனின் தேர் முற்றிலும் சூழப்பட்டிருந்தது. கவசமெங்கும் துளைத்து நின்று அதிர்ந்த அம்புகளுடன் துருபதன் முள்ளம்பன்றிபோல சிலிர்த்தான்.

போரில் தலைவனின் இடமென்ன என்பதை அர்ஜுனன் கண்கூடாகக் கண்டான். ஒரு மனிதன்தான் அவனும். ஆனால் அவனுடைய ஒவ்வொரு அகநிகழ்வையும் அசைவுகள் வழியாக அந்தப்படை அறிந்தது. அவர்கள் எவரும் அவனை நோக்கவில்லை. தங்கள் போர்க்கணத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்தனர். உடல்கள் வழியாக அவர்கள் அனைத்தையும் பார்த்தனர். அவனுடைய உடலே அந்தப்படையாக விரிந்ததுபோலிருந்தது. அத்தனை உடல்களுக்கும் சேர்த்து ஒற்றைமனம் தலைவன் உடலில் இயங்குவதாகத் தோன்றியது.

கர்ணன் வீரியம் கொள்ளக்கொள்ள கௌரவப்படை வீறுகொண்டது. ராஜாளியின் சிறகுகள் கழுகுச்சிறகுகளை தள்ளிச்சிதைத்துக்கொண்டு முன்னால் சென்றன. துருபதன் அகத்தில் குடியேறிய மெல்லிய திகைப்பை அவன் படை உடனே அடைந்தது. அவன் ஒருகணம் சலித்து வில்தாழ்த்தியபோதே அந்தச் சலிப்பை மொத்தப்படையும் அடைந்தது. அவன் அகம் கொண்ட களைப்பை உணர்ந்ததுபோல அவன் ரதம் மெல்ல பின்னடையத் தொடங்கியது.

ஒரு படை எங்கே பின்வாங்க முடிவுசெய்கிறது என்பதை அர்ஜுனன் கண் முன் கண்டான். அது அந்தத் தலைவனின் கண்ணில் கையில் அவன் படைக்கலத்தில் அவன் தேர்ச்சக்கரத்தில் என படர்ந்து கண்ணெதிரே ஓர் அலைபோல படைகளை முழுக்க தழுவிச்சென்றது. மொத்தப் பாஞ்சாலப்படைகளும் மெல்ல பின்வாங்கத்தொடங்கின.


வெண்முரசு அனைத்து விவாதங்களும்