பிரயாகை - 78

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 7

திரௌபதி சரஸ்வதி ஆலயத்தில் இருந்து வெளியே வந்து தேரில் ஏறிக்கொண்டதும் பின்னால் ஏறிய மாயை குனிந்து தேரோட்டியிடம் “சாவித்ரி தேவியின் ஆலயம்” என்றாள். தேர் கிளம்பியதும் திரௌபதியின் அருகே அமர்ந்து மேலாடையை சீரமைத்துக்கொண்டு வெளியே கேட்ட ஒலிகளை செவிகூர்ந்து “அவர்கள் மையத்தேர்ச்சாலையை அடைந்துவிட்டார்கள் இளவரசி” என்றாள். திரௌபதி எண்ணங்களால் எடைகொண்டவள் போல இருக்கையில் சாய்ந்து அகம் குவியா நேர்நோக்குடன் அமர்ந்திருந்தாள்.

பின்னர் கலைந்து திரும்பி நோக்கி “இவரைப்பற்றி என்ன நினைக்கிறாய் மாயை?” என்றாள். “யாரைப்பற்றி?” என்றதுமே மாயை புரிந்துகொண்டு “தூயவர்” என்றாள். “அவர் யாரென எண்ணுகிறாய்?” என்றாள் திரௌபதி. மாயை அவ்வினா வழியாகவே அதை தன்னுள் உசாவத் தலைப்பட்டு உடனே உணர்ந்துகொண்டு திகைத்து தலைதிருப்பி “அவரா?” என்றாள். “ஆம்” என்றாள் திரௌபதி. “தூயவர் இளவரசி” என்றாள் மாயை. திரௌபதி “ஏன் சொல்கிறாய்?” என்றாள். “தங்களை நோக்கிய அதேவிழிகளுடன் அதே நிறைநகையுடன் என்னையும் நோக்கினார்” என்றாள் மாயை.

உடனே அவளுக்கு அச்சொற்றொடர் அமைந்தது. “அரசி, மானுடரில் உயர்வும்தாழ்வும் காணாதவர்கள்கூட பெண்களில் அழகையும் அழகின்மையையும் அளவிடாமலிருக்க முடியாது. முனிவர்கள் கூடவிதிவிலக்கல்ல தேவி. ஏனென்றால் அது மானுட ஆழத்தை ஆளும் பாதாளநாகங்களின் ஆணை. உங்களைக் காணும் விழிகள் அனைத்தும் என்னைக் கண்டு கணத்துளிநேரம் சுருங்கி பின் விரிந்து இயல்பாவதை இளமைமுதலே கண்டுவருகிறேன். நான் பெண்ணென்று வளர்ந்ததே அப்பார்வைகள் முன்னால்தான். இன்றுதான் இருவரையும் இரு ஆன்மாக்களாக மட்டுமே நோக்கும் ஓர் ஆண்மகனின் விழிகளைக் கண்டேன்.”

திரௌபதி புன்னகையுடன் திரும்பி நோக்கி “அது ஏன் என்று சொல்லவா?” என்றாள். மாயை ஏறிட்டு நோக்கினாள். “முற்றிலும் காமம் அற்ற நோக்கு அவருடையது. அது ஆண்மகனின் நோக்கே அல்ல என்று தோன்றியது எனக்கு” என்றாள் திரௌபதி. “ஆண்கள் இருவகை. பெண்ணைக்கண்டதும் தன்னை விலங்குக்கு ஒப்புக்கொடுத்து விழிகளால் உறுப்புகளை வருடுபவர்கள். அவ்விழிகளை அகத்தின் ஆயிரம் கைகளால் பற்றி அடக்கி பெண்ணின் முகத்தில் மட்டுமே நிறுத்துவதில் வெற்றிபெற்றவர்கள்.” புன்னகையுடன் இதழ்களைக் கடித்து “விழி அலைச்சல் குறைந்தவன் நிறைய பெண்களை பார்த்தவன்” என்றாள்.

மாயை தலையசைத்தாள். திரௌபதி “இவர் விழிகள் உடலையும் நோக்கின. தன்னியல்பாக வந்து நம் விழிகளில் அமைந்தன. பெண்களையே பார்க்காதவர் என்பது தெரிந்தது. ஆயினும் விழிகளில் காமம் இல்லை” என்றபின் விழிசரிய ஒரு கணம் சிந்தித்து “அப்பார்வை நம்மை ஏன் துணுக்குறச் செய்கிறது? காமம் நிறைந்த பார்வைகளை மட்டுமே கண்டு அதற்கு பழகிவிட்டிருக்கிறோமா? பிற நோக்குகளை எதிர்கொள்ள நாம் கற்றிருக்கவில்லையா?” என்றாள். புன்னகையுடன் தலைசரித்து “நான் சந்திக்கும் முதல் உடல்நோக்கா விழிகள் இவை மாயை” என்றாள்.

“ஆம், இளவரசி. என் அன்னை நோக்குவதைப்போல் உணர்ந்தேன்” என்றாள் மாயை. திரௌபதி வியந்து திரும்பியதில் குழலைக் கட்டிய மணிச்சரம் சரிந்து காதோரம் ஆடியது. “அன்னையா?” என்றாள். “ஆம், அதை நானே பலமுறை வினவிக்கொண்டேன். தந்தை அல்ல. அன்னை.” திரௌபதி தலையை அசைத்தபின் திரும்பிக்கொண்டு கையால் தேரின் திரைச்சீலையை விரித்து வெளியே நோக்கியபடி சற்று நேரம் அமர்ந்திருந்தபின் தனக்குத்தானே என “உண்மைதான்” என்றாள்.

பின்னர் திரும்பி கண்களின் கீழ் ஒரு விந்தையான சுருக்கம் விழ “அவர் தந்தை ஆண்மையற்றவர் என்கிறார்கள்” என்றாள். அவள் அகம் செல்லும் தொலைவு முழுக்க அப்பார்வையிலேயே தெரிய மாயை அமைதியாக நோக்கினாள். “சொல்!” என்றாள் திரௌபதி. “சொல்லுங்கள் இளவரசி” என்றாள் மாயை. “அந்த காமமற்ற நோக்கு அதனால்தானா?” மாயை அதற்கும் வெற்றுநோக்கையே அளித்தாள். “சொல்லடி, இப்போது என்னுள் அவர் மேல் பொங்கி எழும் வெறுப்பு எதன் பொருட்டு?” என்றாள் திரௌபதி மீண்டும்.

மாயை தன் உதட்டை இறுக்கிய சிறு அசைவைக் கண்டு கண்களில் சினம் மின்ன, புருவம் குவிந்து எழ “சொல்லடி” என்றாள் திரௌபதி. “நான் அறியேன்” என்றாள் மாயை. “என்ன?” என்றாள் திரௌபதி. மெல்லியகுரலில் “உங்களிடம் அப்படி ஒரு வெறுப்பு உள்ளதா என்று…” என்றாள் மாயை. மேலும் சிலகணங்கள் கூர்ந்து நோக்கிவிட்டு தலையைத் திருப்பிக்கொண்டு வெளியே நோக்கினாள் திரௌபதி. பின்னர் மீறி எழுந்த சினத்துடன் திரும்பி “காமம் அறவே இல்லாமல் ஒரு பெண்ணை நோக்குபவன் அவளை அவமதிக்கிறான்” என்றாள். அவள் உதடுகளில் இருந்த சுழிப்பை மாயை அப்போதுதான் முதல்முறையாக பார்த்தாள்.

“ஏனென்றால் பெண் காமத்தால் ஆக்கப்பட்டவள்” என்றாள் திரௌபதி. “பல்லாயிரம் ஆண்டுகளாக ஆணின் காமம் அவள் மேல் பொழிந்து அவளை வடிவமைத்திருக்கிறது. அருவிக்குக் கீழிருக்கும் பாறையின் வளைவும் மென்மையும் அவள் உடலில் நிகழ்ந்திருக்கின்றன. ஆண் காமத்துடன் நோக்காவிட்டால் அவள் உடல் பொருளிழந்துவிடுகிறது. ஆண்மகன் உடலுக்கு எந்நிலையிலும் வலிமை என்னும் பொருள் உள்ளது. காமம் இல்லையேல் பெண்ணின் இந்த மெல்லிய தசைத்திரள் போல இழிந்தது பிறிதென்ன?”

மாயை தன்னுள் ஒரு மெல்லிய நடுக்கத்தை உணர்ந்தாள். ”என்னடி நோக்குகிறாய்? சொல், நீ என்ன நினைக்கிறாய்?” என்று உரத்தகுரலில் திரௌபதி கேட்டாள். அவள் விழிகள் ஈரப்படலம் கொண்டிருந்தன. மாயை என்ன சொல்வதென்று அறியாமல் திகைக்க “சொல்லடி, காமம் இன்றி உன்னை நோக்குபவன் உன்னை சிறுமைசெய்கிறான் அல்லவா? அவன் காண்பது ஆற்றல் அற்ற நெளியும் வெற்றுடலை அல்லவா? வெறும் ஒரு புழுவை அல்லவா?” என்றாள்.

“இளவரசி, அவர் என்னை நோக்கியபோது அதில் சற்றும் காமம் இல்லை என்பது எனக்கு உவகையையே அளித்தது” என்றாள் மாயை. “நான் இந்த உடலில் இருந்து விடுபட்டுவிட்டதாக உணர்ந்தேன். இன்னொரு பெண்ணிடம் பேசும்போது அவள் உடலை உணர்ந்துகொண்டே இருப்பேன். ஆணிடம் பேசும்போது என் உடலை உணர்ந்து கொண்டிருப்பேன். எங்கிருந்தாலும் அங்கு என் உடல் எனக்களிக்கும் படிநிலை என்ன என்றுதான் கணித்துக்கொண்டிருப்பேன். பிறர் என்னை வைக்கும் படிக்கு மேல் நான் இருக்கிறேன் என்ற உணர்வுடன் என் அகம் தவித்துக்கொண்டிருக்கும். அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் கண்காணித்துக்கொண்டிருக்கும். உடல்திரண்ட நாள் முதல் என் எண்ணமெல்லாம் என் உடலை எங்கு வைப்பதென்பதைப்பற்றியே.”

”உடலின்றி அவர் முன் நிற்க முடியும் என எண்ணுகையில் எடையற்று காற்றில் எழுவதுபோல் தோன்றியது. எவரிடமாவது என் அகத்தைத் திறந்து பேசுவேன் என்றால் அவரிடம்தான்” என்று மாயை தொடர்ந்தாள். “கல்வியாலோ தவத்தாலோ அடைந்த நிறைநிலை அல்ல அது இளவரசி. கல்வியும் தவமும் எவரையும் தன்னை ஒருபடி மேலாக எண்ணச்செய்கிறது. அஸ்தினபுரியின் பட்டத்து இளவரசரின் மேன்மை என்பது ஒன்றில்தான். அவர் தன்னை எளியவரில் ஒருவராக இயல்பாகவே உணர்கிறார். என்னை நோக்கி அவர் செய்த ஒரு புன்னகையே அதற்குச் சான்று.”

நோவுபோல ஈரம் பரவிய விழிகளுடன் திரௌபதி அவளை உற்று நோக்கிக்கொண்டிருந்தாள். தொலைவில் எழும் காற்றை மெல்லிய அசைவாகக் காட்டும் தளிரிலைகளாக அவள் இதழ்கள் துடித்தன. தாழ்ந்த கூர் குரலில் “நீ அடைந்த விடுதலையை என்னால் உணர முடிகிறது. ஏனென்றால் நீ உன்னை அழகற்றவள் என எண்ணுகிறாய்…” என்றாள். மாயை முதல் கணம் உளம் அதிர்ந்தாலும் உடனே மீண்டுவிட்டாள். “நீ உன் உடலை வெறுப்பதனால் உன் உடலை உணராத நோக்கு உவகையளிக்கிறது” என்று மீண்டும் அவள் விழிகளை நோக்கி திரௌபதி சொன்னாள்.

மாயை விழிகளை அசையாமல் திரௌபதி மேல் நாட்டி “அவ்வாறே இருக்கட்டும் இளவரசி… “ என்றாள். அந்த நிறைநிலை கண்டு மேலும் சினம் கொண்ட திரௌபதி உரக்க “உன்னை எனக்கு நிகராக நோக்கியதன் வழியாக அவர் என்னை அவமதித்தார். உன்னுள் ஒளிந்திருக்கும் எளிய சேடி அதைக்கண்டு உவகை கொள்கிறாள். அவ்வளவுதான்” என்றாள். கூந்தலை நீவி பின்னால் செருகி சற்றே நிமிர்ந்து அமர்ந்து “அதுவும் உண்மையென்றே கொள்வோம். அதனாலென்ன?” என்றாள் மாயை.

மூச்சு சீறியதில் முலைகள் எழுந்தமர திரௌபதி “இல்லை, நீ என்னிடம் ஒன்றை ஒளிக்கிறாய். நீ அவரை பற்றி சொன்ன சொற்களில் இருப்பது அதுவே. அவர் உன்னை நோக்கிய கண்களில் எங்கோ நுண்ணிய காமம் இருந்தது. என்னை நோக்கியபோது எழாத காமம் அது. அவரது தன்னிழிவு கொண்ட அகம் என் நிமிர்வின் முன் குன்றுகிறது. உன்னைப்போன்ற சேடியிடமே அது இயல்பாக காமம் கொள்கிறது. ஏனென்றால் அவர் ஷத்ரியமகன் அல்ல. யாதவ அரசியின் எளிய மைந்தர். தன்னை யாதவனாக, சூதர்களுக்கு நிகராக எண்ணுகிறார்.”

“நீ அக்காமத்தை உள்ளூர சுவைக்கிறாய். அதைத்தான் இச்சொற்களாக மாற்றி உனக்கே சொல்லிக்கொள்கிறாய்” என்று திரௌபதி பல்லிறுகிய உச்சரிப்புடன் சொன்னாள். “அவர் காமக்கனவுகள் முழுக்க சூதப்பெண்கள் நிறைந்திருக்கலாம். மணிமுடிசூடிய பட்டத்து இளவரசன் என்ற சுமை அவரை அழுத்தி கட்டுப்படுத்தியிருக்கலாம். நீ ஒரு அடி முன்னால் எடுத்து வை. இலை நுனியில் தேங்கிய துளி. சற்றே தொட்டால் போதும்.”

மாயை மேலும் விரிந்த புன்னகையுடன் “இதெல்லாம் பொய் என நீங்களே அறிவீர்கள் இளவரசி. இச்சொற்கள் என்னைப் புண்படுத்துமென எண்ணுகிறீர்கள். புண்படுத்தவில்லை என்றும் இப்போது அறிந்திருப்பீர்கள்” என்றாள். மேலும் ஏதேனும் சொல்லவேண்டும் என்று அவள் அகம் எழுந்தது. அதை வென்று உடைத்து சொற்களாக்கி அதில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கோர்த்தாள். “எதற்காகவோ உங்களுக்கு ஒரு தன்வதை இப்போது தேவைப்படுகிறது… அதைக்கொண்டு நீங்கள் நிகர்செய்துகொள்ள ஏதோ உள்ளது உங்களுக்குள்.”

கசப்புடன் “உளறாதே” என்று சொல்லி மீண்டும் திரையைப்பற்றி விலக்கி வெளியே நோக்கினாள் திரௌபதி. முகத்தில் கடந்து செல்லும் சாலையின் வண்ண வேறுபாடுகள் ஒளியடிக்க ”அல்லது அவர் பெரிய நடிகர். சில குருகுலங்களில் விரும்பியபடி விழியை அமைத்துக்கொள்ள கற்றுக்கொடுக்கிறார்கள். அத்தனை திறம்பட ஒளித்துக்கொள்கிறார் என்றால் உள்ளே வேறேதோ உள்ளது. அழுகியது, இருண்டது. இன்றே என் ஒற்றர்களை அனுப்பி அவர் எங்கு செல்கிறார் என்பதை நோக்கி எனக்கு அறிவிக்க ஆணையிடுகிறேன். ஆலயங்களெல்லாம் அணிப்பரத்தையரால் சூழப்பட்டவை. அவரை ஒரு இழிந்த பரத்தையுடன் சேர்த்துப் பிடித்து இழுத்து என்முன் கொண்டுவந்து நிறுத்தச் சொல்கிறேன்… பார்க்கிறாயா?”  என்றாள்.

“அப்படி அவரை பிடித்துக்கொண்டு வந்து உங்கள் முன் விட்டார்கள் என்றால் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள் இளவரசி” என்றாள் மாயை. “சீ, வாயை மூடு. நான் ஏன் ஏமாற்றமடையவேண்டும்?” என்றாள் திரௌபதி. ”ஏனென்றால் இதுவரை உங்கள் அகத்தை இப்படி ஓர் ஆண்மகன் கலைத்ததில்லை.” திரௌபதி “உளறாதே” என்றாள். “கர்ணன் முன்னும் அர்ஜுனன் முன்னும் அசையாத உங்கள் ஆணவம் இங்கே நிலையழிந்திருக்கிறது.” திரௌபதி சீற்றத்துடன் “போதும்” என்றாள். மாயை ஆம் என தலையைத் தாழ்த்த அவள் திரும்பி வெளியே நோக்கத் தொடங்கினாள்.

மாயை திரௌபதியின் மின்னும் கன்னங்களை நோக்கி அமர்ந்திருந்தாள். கரிய தோலைப்போல மின்னுவது பிறிதில்லை. கரிய இரவில் வளையும் நீர்ப்பரப்புகள் கொள்ளும் விண்ணொளி. ஐயமே அற்ற கோடுகளால் பிரம்மன் வரைந்த ஓவியம். வடிவத்தை அன்றி பிறிது எதையும் மானுடன் உணரலாகாது என்றே அவளை இருண்டவளாக்கிவிட்டான் போலும். நீள் கழுத்தில் மெல்லிய மடிப்புகளில் ஈரத்தின் பளபளப்பு. மார்பின் கதுப்பில் சரப்பொளியின் இதழ் ஒன்று குத்திய மெல்லிய அழுத்தம். அதிகாலை கங்கைக்கரைச் சதுப்பில் காலூன்றிச் சென்ற சிறு குருவியின் உகிர்த்தடம்.

மெல்ல திரௌபதியின் தோள்கள் தளர்ந்தன. திரையைப்பற்றிய கைகளை விட்டுவிட்டு மார்பின் மேல் கட்டிக்கொண்டாள். நிமிர்ந்து அமர்ந்து தலையைத் தருக்கி “இவர் இங்கிருக்கிறார் என்றால் இளையோன் பீமனும் இங்கே எங்காவதுதான் இருப்பார்” என்றாள். மாயை தலையசைத்தாள். திரௌபதி “நான் அவரை பார்க்க விழைகிறேன். இப்போதே” என்றாள். மாயையை நோக்கி அவள் விழிகளில் தன் விழிகளை வீம்புடன் கோர்த்துக்கொண்டு ”வெறும் உடலான ஒருவன்… வெறும் தசைத்திரள்” என்றாள்.

“வெறும் தசைத்திரளென இப்புவியில் ஏதும் இல்லை இளவரசி” என்றாள் மாயை. ”அப்படியென்றால் அவரை நான் அப்படி ஆக்குகிறேன். அங்கே துர்க்கை ஏறி அமர்ந்திருக்கும் சிம்மம் போன்று… என் காலடியில் அவர் கிடக்கவேண்டும்.” அவளுடைய குவிந்த மெல்லிய உதடுகளுக்குமேல் நீராவிபட்டதுபோல் வியர்த்திருந்தது. கன்னத்தில் ஈரவியர்வையில் மயிரிழைகள் ஒட்டியிருந்தன. மாயை “இக்கூட்டத்தில் அவர் எங்கிருக்கிறார் என்று எப்படி அறிவது?” என்றாள்.

“அவர் பேருடல் கொண்டவர் என்கிறார்கள். ஆகவே கூட்டத்தில் அவர் ஒளிய முடியாது… பார்த்துக்கொண்டே வா. இந்தத்தெருவில் எங்கோதான் அவர் இருப்பார்.” மாயை ஏதோ சொல்வதற்குள் “அவர் இளையோன் அங்கே ஆலயத்தில் இருக்கிறார். அவர்களின் மூத்தவரை சிலகணங்களில் சென்று காக்கும் தொலைவில்தான் எப்போதும் தம்பியரில் ஒருவர் இருப்பார்… பார்” என்றாள் திரௌபதி. மாயை தலையசைத்தாள். திரௌபதி மெல்ல அசைந்து அமர்ந்து “அதை விட அவரை இன்றே நான் காண்பதில்தான் காவியத்தின் வடிவஅமைதி உள்ளது. இது ஒரு காவியம். இத்தனை உச்சங்களால் காவியம் மட்டுமே நிகழமுடியும்” என்றாள்.

மாயை திரும்பி அவள் விழிகளை நோக்கிவிட்டு மீண்டும் விழிதிருப்பினாள். என்ன சொல்கிறாள்? ஆனால் அவள் அதை நம்பித்தான் சொல்கிறாள் என்றன அவள் விழிகள். தன்னை ஏற்கனவே ஒரு பெருங்காவியத்திற்குள் வாழ்பவளாக எண்ணத் தொடங்கிவிட்டாளா என்ன? காவியத்தை நிகழ்த்தி முடிப்பதற்காகத்தான் அவள் காலத்தில் கடந்துசெல்கிறாளா? அவளுடைய நேர்நடையும் நிமிர்நோக்கும் நினைவில் எழுந்தன. அவை அவள் கொண்ட காவியத் தோரணைகளா என்ன? புன்னகை எழ உதடுகளை கடித்துக்கொண்டு தலையைத் தாழ்த்தி வெளியே தெரிந்த மக்கள் திரளை நோக்கினாள்.

அவன் தெரியக்கூடாது என்று வேண்டிக்கொண்டாள். இது மூச்சடைக்கவைக்கும் பொருட்செறிவு கொண்ட காவியமல்ல, எளிய மாந்தர் வாழும் பொருளற்ற வாழ்க்கைவெளி என ஆகட்டும். அவன் வரக்கூடாது. தெய்வங்களே, இந்தப் பெருங்காவியத்தின் இரக்கமற்ற ஒருமையை உங்கள் படைக்கலங்களால் உடைத்துச் சிதறடித்து என்னை விடுவியுங்கள். இதை ஒழுங்கற்றதாக்குங்கள். காவியத்திற்குள் இப்படி உடல்கள் முட்டி மோதி சாலையோரங்களில் சுழிக்குமா என்ன? குதிரைகளும் வண்டிகளும் முட்டிக்கொண்டு விலகமுடியாது தத்தளிக்குமா என்ன? இதோ எதையோ தின்றுகொண்டிருக்கும் பேதைக்கு காவியத்தில் என்ன இடம்? இப்பேதைமுகங்களுக்கும் கள்வெறிச்சிரிப்புகளுக்கும் காவியத்தில் என்ன பொருள்?

இன்னும் சற்று தொலைவில் சாவித்ரிதேவியின் பேராலயம். இருண்ட வானில் அதன் கோபுரவிளக்கு செவ்விண்மீன் என சுடர்திகழ்கிறது. அங்கே ஒலிக்கும் பெருமுரசும் கண்டாமணியும் கலந்த நாதம் காற்றில் எழுகிறது. இன்னும் சற்று தூரம் மட்டுமே. அவன் விழிகளில்படக்கூடாது. படுவானென்றால் என் வாழ்க்கை என்னுடையதல்ல. என்னால் சற்றும் புரிந்துகொள்ள முடியாத பெருங்காவியமொன்றின் ஒற்றை அசைச் சொல் மட்டுமே நான். என்னைப்போன்றவர்கள் அக்காவியத்தின் ரதசக்கரத்தில் நசுங்கும் கூழாங்கற்கள். உதிரப்பெருக்கின் ஊற்றுகள். பெரிய கணக்குகளின் எண்கள்.

அதற்குள் அவள் அவனை பார்த்துவிட்டாள். சாலையோரத்தில் கூடி நின்று எதையோ நோக்கிக்கொண்டிருந்த கூட்டத்தில் பெரிய மஞ்சள்நிற உடலுடன் கைகளை பின்னால் கட்டி குனிந்து நோக்கி நின்றிருந்தான். தோளில் சுருளற்ற நீள்குழல் கற்றைகள் கிடந்தன. இடையில் தோலாடை. அவனேதான், பிறிதொருவன் அவனைப்போல் இருக்க இயலாது. ஊன்மலை. கைகள், கால்கள், பெருந்தோள் என எழுந்த தூய ஆற்றல். மரங்களைத் தூக்கிச் சுழற்றும் பெருங்காற்று. அவன் உடலின் உப்புவாசத்தை அவள் அகம்வாழ்ந்த பெண்மிருகம் அறிவதுபோல் தோன்றியது.

அவனைக் கண்டதைச் சொல்லாமல் கடந்துவிடலாம் என்று ஒருகணம் மாயை எண்ணினாள். அதுவும் அக்காவியத்தை சிதறடிக்குமல்லவா என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே அவளே “இளவரசி அதோ” என சொல்லிவிட்டாள். திரௌபதி திடுக்கிட்டு “யார்?” என்றாள். மாயை தயங்கி “பீமசேனர்…” என்றாள். திரௌபதி அதை விளங்கிக்கொள்ளாதவள் போல சிலகணங்கள் நோக்கிவிட்டு “ரதம் முன் செல்லட்டும்” என்றாள்.

மாயையின் அகத்தின் நாண் தளர்ந்தது. உடலில் பரவியிருந்த குளிர்வியர்வையை உணர்ந்தாள். கூடவே தன் அகம் ஏமாற்றம் கொள்வதையும் அறிந்தாள். இது மிக எளிய வாழ்க்கைதான். மானுடருக்கு எந்தப் பங்கும் இல்லாத தற்செயல்களின் பெருவெளி. உடல்களில் பற்றி எரிந்து உண்டுசெல்லும் உயிரெனும் காடெரியின் நடனம். வேறொன்றுமில்லை.

ஆயினும் தெய்வங்களே, தொலைந்துபோய் கண்டெடுக்கப்படாவிட்டாலும் காவியத்தில் வாழ்வதற்கல்லவா ஏதேனும் பொருள் உள்ளது. ஏதும் நிகழாத எளிய வாழ்க்கை ஆன்மாவை சிறுமைசெய்கிறது. தற்செயல்களை மானுடர் அஞ்சுவது அது அவர்களை வெறும் கிருமிகளாக சிறுத்துப்போக வைக்கிறது என்பதற்காகவா? ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு எளியோனின் உள்ளமும் ஏங்கிக்கொண்டிருப்பது காவியம் வந்து தீண்டும் பெருவாழ்க்கை கணங்களுக்காகத்தானா?

மறுகணம் அவள் புன்னகைத்தாள். எத்தனை நேரமாகியிருக்கும்? கால்நாழிகைகூட கடந்திருக்காது. அதற்குள் எத்தனை எண்ணங்கள். காவியத்தில் வாழ்வதா? மானுடருக்கு அது இயல்வதுதானா? அது ஓர் கனவு. ஓர் ஆணவ எழுச்சி. வேறேதுமில்லை. எளியமானுடர் தற்செயலின் பொருளின்மையில் முட்டித் திகைத்துச் சுழன்று புண்பட்டு குருதிவழிய வீழ்ந்தும் எழுந்தும் மடியும் எளிய வாழ்க்கை. அதை சொல் வந்து தொடுகிறது. ஒவ்வொன்றையும் எடுத்துக்கோர்த்து பொருள் கொடுத்து காவியமாக்குகிறது. வாழ்க்கையை நோக்கி மானுடன் பழிப்புகாட்டுவதற்குப் பெயர்தான் காவியம்.

ஆம், அதுதான் உண்மை. நான் பன்னிரண்டு ஆண்டுகாலம் அமர்ந்து கற்ற காவியங்களுக்கெல்லாம் ஒரே நோக்கம்தான். எளிய மானுடரை அமானுடராக உணரச்செய்வது. முகில்மீதேறிப் பறப்பதை கனவுகாண்கின்றன குழந்தைகள். தேவர்களும் அசுரர்களும் பறக்கிறார்கள். தெய்வங்கள் பறக்கின்றன. மண்ணில் எவருக்கும் ஆர்வமில்லை. விரிந்த வானம், ஒளிமிக்க வானம், நிலையற்ற வானம், அதுவே கனவு. அவள் புன்னகைசெய்தாள். அக்காவியக்கல்வியால்தான் அவள் இளவரசியின் சேடியாக இருக்கிறாள். இல்லையேல் அரண்மனைப் புறத்தளத்தில் பணிப்பெண்ணாக இருந்திருப்பாள். ஆம். காவியத்தை உண்ணமுடியும், உடுக்க முடியும்…

திடமான மென்குரலில் “நிறுத்து” என்றாள் திரௌபதி. வெளியே எட்டிப்பார்த்து தேருடன் புரவியில் வந்த வீரனிடம் “அங்கே நின்றிருக்கும் பேருடல்கொண்டவனை பார்த்தீரா?” என்றாள். “ஆம் இளவரசி. பால்ஹிகநாட்டவன் என்று தோன்றியது. பீதர்களின் நிறம் கொண்டவன்” என்றான் அவன். “அவனை இங்கே அழைத்துவாரும்” என்றபின் திரையை மூடிவிட்டு திரும்பி அவளை நோக்கி புன்னகை செய்தாள். “வெறும் மூடத்தனம் என்று தோன்றியது. ஆனால் இதைக் கடந்துசென்றால் நான் உணரும் வெறுமையை என்னால் இரவெல்லாம் தாளமுடியாது என்று பின்னர் எண்ணிக்கொண்டேன்” என்றாள்.

மாயை புன்னகைத்தாள். ”காவியம் என்று சொன்னதும் நீ எண்ணியதையெல்லாம் நான் வாசித்தறிந்தேன்” என்றாள் திரௌபதி. “ஆனால் நீயும் உன் குலமுறையினரும் காண்பீர்கள். நான் கால்தொட்டு நடந்த மண்ணிலிருந்து காவியங்கள் முளைத்தெழும். அவற்றில் பெருங்காவியம் பிறவற்றை உண்டு வளரும்.” அவள் விழிகளை நோக்கி ஒரு கணம் நெஞ்சு அதிர்ந்து விழிவிலக்கினாள் மாயை. அப்பால் குதிரை வீரன் பீமனுடன் வருவது தெரிந்ததும் அவள் அகம் படபடத்தது. திரும்பி “இளவரசி, இதை எதற்காகச் செய்கிறீர்கள்?” என்றாள்.

திரௌபதி கன்னங்களில் சிறிய குழிகள் மலர சிரித்தபடி “வெறும் உடல் ஒன்றைக் காண்பதற்காக” என்றாள். ”கண்டு?” என்றாள் மாயை. திரௌபதி “தெரியவில்லையடி. ஏதோ செய்யவேண்டுமென்று தோன்றியது. இச்செயல் நெஞ்சில் எழுந்தது. ஆனால் இது எனக்குள் பிறிது எதையோ எடை நிகர்க்கிறது.” மாயை மீண்டும் அணுகிவந்த பீமனை நோக்கியபடி “அரக்க வடிவினன்…” என்றாள். பின்பு “இளவரசி, அவர் வெறும் ஊன்குன்று அல்ல” என்றாள்.

“எப்படி சொல்கிறாய்?” என்ற திரௌபதி வெளியே நோக்க “ஆம், அறிவில் தன் மூத்தவருக்கும் இளையவருக்கும் நிகரானவர்… இதற்குள் தாங்கள் யாரென்று அறிந்துவிட்டார். அத்துடன் அவர் உடலுடன் நீங்கள் விளையாட விழைவதையும் தெரிந்துகொண்டுவிட்டார்” என்றாள் மாயை. அவள் விழிகள் அவனை நோக்கிக்கொண்டு மலர்ந்திருக்க இதழ்கள் மெல்ல பிரிந்தன. மாயை அவ்விழிகளை நோக்கினாள். காட்டு விலங்கின் விழிகள் என எண்ணிக்கொண்டாள்.

அக்கணம் திரௌபதி நீள்மூச்சொலிக்க பின்னால் சாய்ந்துகொண்டு “ஆனால் அவருள் எளிய விலங்கு ஒன்று வாழ்கிறது” என்றாள். மாயை அச்சொல்லால் சற்று அதிர்ந்து உதடுகளை அழுத்திக்கொண்டபின் அவள் விழிகளை நோக்கினாள். “எத்தனை ஆற்றல் மிக்க விலங்கும் அன்பின் தளையை அறுக்கவியலாது” என்றாள் திரௌபதி. மாயை புன்னகை செய்தாள்.

வெளியே வீரன் “இளவரசி, அவனை அழைத்துவந்துவிட்டேன்” என்றான். திரௌபதி திரையை விலக்கி வெளியே பாதியுடலைக் காட்டிச் சரிந்து பீமனை நோக்க அவன் தலைவணங்கி “பாஞ்சால இளவரசியை வணங்குகிறேன்” என்றான். திரௌபதி “உன்னை அங்கே கூட்டத்தில் பார்த்தேன். நீ யார்?” என்றாள்.

பீமன் “என் பெயர் ஹடன். பால்ஹிக நாட்டவன். பிறப்பால் சாரஸ்வத அந்தணன். அங்கே சரஸ்வதி ஆலயத்தின் மடைப்பள்ளியில் பணிபுரிகிறேன்” என்றான். “வேதமோ நூலோ கற்றிருக்கிறாயா?” என்றாள் திரௌபதி. “இல்லை இளவரசி. நான் சமையல்காரன்” என்றான் பீமன். “உகந்த தொழில்.” திரௌபதி திரும்பி மாயையை நோக்கி சிரித்தபடி “வைக்கோல்போரில் கட்டப்பட்ட எருது என்பார்கள்” என்றாள்.

மாயை பீமனின் பெருந்தோள்களை நோக்கிக் கொண்டிருந்தாள். திரௌபதி “நான் இவளுக்கு ஒரு கதை சொல்லிக்கொண்டிருந்தேன். சிபிநாட்டு பால்ஹிகரைப்பற்றி… அவர் தன் தமையன் தேவாபியை தோளில் ஏற்றிக்கொண்டு வேட்டைக்குச் செல்வார் என்றும் குதிரைகளை ஒற்றைக்கையாலேயே துரத்திப்பிடிப்பார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. அத்தகைய உடல்வலுவுள்ள எவரும் மண்ணில் இல்லை என்றாள் இவள். அப்போதுதான் உன்னை நோக்கினோம்” என்றாள்.

பீமன் தலையைத் தாழ்த்தி வணங்கினான். ஒரு கணம் அவன் விழிகள் வந்து தன்னை தொட்டுச்சென்றபோது இரு கைகள் வந்து இருமுலைகளையும் அள்ளிப்பற்றிச் சென்றதுபோல் மாயை உணர்ந்தாள். விழிகளை விலக்கிக்கொண்டு திரையால் உடலை மூடிக்கொண்டாள். அவன் கைகளை நோக்கினாள். வெண்ணிற வேர்களுடன் பிடுங்கிய அடிமரம் போன்ற கைகள். அறியாமலேயே தன் கைகள் திரையை விலக்கிவிட்டிருப்பதைக் கண்டு மீண்டும் திரையை மூடிக்கொண்டாள்.

திரௌபதி “இவ்விரு புரவிகளையும் அகற்றிவிட்டு ரதத்தை நீயே இழுத்துச்செல்ல முடியுமா?” என்றாள். “சாவித்ரியின் ஆலயம் வரை செல்லவேண்டும். குதிரைகளுக்கு நிகரான விரைவு வேண்டும்” என்றாள். பீமன் விழிகளில் ஒரு சிறிய நகை வந்து சென்றதைக் கண்டு அதை உணராத நடிப்புடன் “உனக்கு பத்துகழஞ்சு பொன்னை பரிசாக அளிக்கிறேன்” என்றாள்.

பீமன் தலைவணங்கி “அந்தப்பொன் எனக்கு மூன்றுநாட்களுக்கு நிறையுணவாகும். நான் சித்தமே இளவரசி” என்றான். திரும்பி மாயையை ஒருகணம் நோக்கிவிட்டு தேரோட்டிக்கு விழிகளால் ஆணையிட்டு திரௌபதி படிகளில் கால்வைத்து கீழிறங்கினாள். அவள் என்னசெய்யப்போகிறாள் என்று மாயை திகைத்த விழிகளுடன் நோக்க “காவியத்தில் நம்பமுடியாதவை நிகழவேண்டும் மாயை” என்று மெல்லிய குரலில் சொல்லி இதழ்கோட்டி திரௌபதி புன்னகை செய்தாள்.

திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்த தேரோட்டி இறங்கி விலகிக்கொள்ள பீமன் குதிரைகளை அவிழ்த்து கடிவாளத்தை அவன் கையில் கொடுத்தான். குனிந்து தன் பெரிய கைப்பத்திகளை மண்ணில் உரசி ஒன்றுடன் ஒன்று அடித்துவிட்டு தேரின் இரு நுகங்கள் நடுவே வந்து நின்றான். அவன் அங்கே நின்றபின்னர்தான் பின்னால் வந்த காவலர்கள் அவனிடம் ஆணையிடப்பட்டதென்ன என்று உணர்ந்தனர். அனைவர் விழிகளும் எண்ணங்கள் வெளிப்படாமல் இறுகிக்கொண்டன.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

பீமன் நுகத்தடியை பற்றித்தூக்கியதும் திரௌபதி தேரோட்டியின் கையிலிருந்த கரிய குதிரைச் சவுக்கை வாங்கிக்கொண்டு படியில் கால்வைத்து ஏறி நுகமேடையில் அமர்ந்துகொண்டாள். மாயை சிறுசாளரம் வழியாக எட்டிப்பார்த்து திகைப்புடன் “இளவரசி!” என்றாள். “அங்கேயே இரு” என்றபின் திரௌபதி தன் சவுக்கை காற்றில் சுழற்றி ஓசையெழுப்பினாள்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்