பிரயாகை - 75
பகுதி பதினைந்து : அன்னைவிழி – 4
கர்ணன் திரும்பி தன் ஆடையை விலக்கி தொடையில் இருந்த வடுவை காட்டினான். உலோகநாணயம் ஒன்றை ஒட்டிவைத்தது போல கருமையாக பளபளத்தது. “இன்றும் இந்த வடுவை நான் கையால் தொட்டு அவ்வலியின் பேரின்பத்தை அறிவதுண்டு. ஓர் அழகிய நகை போல இதை அணிந்திருக்கிறேன்.”
“தனித்த இரவுகளில் எண்ணங்களால் துயில்மறந்து போகும்போது இது மெல்ல உயிர்கொள்வதை அறிந்திருக்கிறேன். இதன் மீது கையால் தொட்டுக்கொண்டு கண்களை மூடிக்கொண்டால் கோதையின் ஒளிமிக்க கரையை, அன்று வீசிய காற்றை, நீர்ப்பாசி வாசனையை அறியமுடியும். மிகத்தொலைவில் கேட்கும் முணுமுணுப்பு போல வலி எழத்தொடங்கும். பின் மூண்டு எழுந்து துடித்து பற்றி எரிந்து என் தசைகளில் படர்ந்து ஏறும்.”
பின்பு புன்னகையுடன் “எத்தனை பெரிய வரம். ஒருபோதும் சொல்லாக மாற்றி அணைத்துவிடமுடியாத இன்பம் ஒன்றை அடைவது. ஒவ்வொரு கணமும் அதனுடன் வாழ்வது” என்றான். துரியோதனன் “நீ சொல்வதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த வடு நன்கு ஆறியதுபோலத்தான் தெரிகிறது. மருத்துவரிடம் வேண்டுமென்றால் காட்டலாம்” என்றான்.
கர்ணன் புன்னகையுடன் கையை வீசி மறுத்துவிட்டு மீண்டும் கங்கையை நோக்கி திரும்பினான். துரியோதனன் “பின் என்ன நிகழ்ந்தது?” என்றான். கர்ணன் புன்னகையுடன் திரும்பி நோக்கிவிட்டு ”ஒரு நல்ல கதை” என்றான். “சூதர்கள் பாட விரும்புவார்கள்.”
தொடையில் எழுந்த வலியுடன் பரசுராமர் விழித்தெழும்வரை நான் அசையாமல் அமர்ந்திருந்தேன். திடுக்கிட்டு இமைகள் சுருங்கி அசைய அவர் முனகினார். குனிந்து நோக்கியபோது விழித்து என் விழிகளை நோக்கி திகைத்தார். எழுந்து அமர்ந்து தாடியை நீவியபடி விழி சுருக்கி என்னை நோக்கினார். பின் தன் கை விரல்களை நோக்கினார். நான் “ஆசிரியரே, என்ன பார்க்கிறீர்கள்?” என்றேன். “ஒருகனவு” என மெல்ல முணுமுணுத்தார். “குரூரமான கனவு” என்று மேலும் மெல்ல சொல்லிக்கொண்டார்.
நான் அவர் சொல்வதைக் கேட்க காத்திருந்தேன். அவர் அனிச்சையாகத் திரும்பி தன் தோளில் கையால் தொட்டு முன்னால்கொண்டுவந்து நோக்கினார். சூடான கொழுங்குருதியை பார்த்தபின் திகைத்து என் தொடையைப்பார்த்தார். திடுக்கிட்டு எழுந்துவிட்டார்.
தசைக்குள் இருந்து கருக்குழந்தை வெளிவருவதுபோல குருதியைத்துழாவியபடி வண்டு வெளியே வந்தது. பொன்னிறச்சிறகுகள் கொண்ட கருவண்டு. வழியும் குருதியில் வழுக்கி வந்து நின்று சிறகுகளை உதறி சிலிர்த்துக்கொண்டபின் எழுந்து மெல்லிய ரீங்காரத்துடன் பறந்து சென்று சிறகுகள் கனத்து சரிந்து வேரில் விழுந்தது. புரண்டு எழுந்து வேர்முனையில் நின்று சிறகுகளை அதிரச்செய்தபின் மீண்டும் எழுந்து பறந்தது.
“வண்டு!” என்றபின் “அது உன் தொடையை துளைத்திருக்கிறது” என்றார். “ஆம்” என்றேன். “நான் கனவில் கண்டது அதைத்தான்… நீ ஒரு வண்டாக என் விலாவைத் துளைத்து நுழைந்தாய். என் இதயத்தை குத்திக்குடைந்தாய். நான் அந்தப்புண்ணைத் தொட்டு பசுங்குருதியை முகர்ந்தேன்.”
அவர் என் விழிகளை உற்று நோக்கினார். “வலியில் மகிழாமல் எவராலும் இத்தனை நேரம் அதில் ஈடுபட்டிருக்க முடியாது” என்றார். நான் விழிதாழ்த்தினேன். சிலகணங்கள் கழித்து தலைதூக்கியபோதும் அவர் என்னை நோக்கி தாடியை நீவியபடி இருப்பதைக் கண்டேன். “சொல்!” என்றார். நான் “ஆசிரியரே!” என்றேன். உரக்க “சொல்!” என்றார். நான் “ஆசிரியரே, நான் எதைச் சொல்வது?” என்றேன்.
“வலியில் திளைக்க எப்படி கற்றாய்?” என்றார். நான் பெருமூச்சு விட்டேன். “எளிய சூதனல்ல நீ” என்றார். நான் “நான் சூதரின் மைந்தன்…” என்று சொல்லத் தொடங்க “நீ வீழ்ந்தவன்…” என்றார். ”துரோகத்தை வஞ்சத்தை பழியை அவமதிப்பை அடைந்தவன். சூதர்களுக்குரியதல்ல அத்தகைய பெருந்துயர்கள்.”
நான் பதில் சொல்லவில்லை. குரல் உரத்து எழ “ஷத்ரியனின் குருதியா நீ?” என்றார் ஆசிரியர். “ஆம்” என்றேன். “ஆம், அதை நான் முன்னரே எப்படியோ அறிந்திருந்தேன். நீ துயருடன் ஒவ்வொரு கணமும் வாழ்பவன்…” நான் “ஆசிரியரே, என்னை மன்னியுங்கள்” என்று சொல்லி கைகூப்பினேன். “பொய்யனே, இக்கணமே உன்னை கொல்கிறேன்” என்று கூவியபடி திரும்பி அருகே நின்ற நாணல் ஒன்றை பறித்தெடுத்தார்.
“அவ்வண்ணமே ஆகுக!” என்று சொல்லி நான் கைகூப்பி நின்றேன். அவர் ஓங்கிய கையுடன் “இழிமகனே, நீ அறிந்திருப்பாய். என் குருமரபின் கடமையே ஷத்ரியர்களை வெல்வதே என்று. ஷத்ரியக் குருதியுடன் நீ என்னிடம் பயில்வது எத்தனை பெரிய பிழை என்று” என்றபோது அவரது உடல் நடுங்கியது. கண்களில் நீர் கட்டி குரல் இடறியது.
“ஆசிரியரே, நான் ஷத்ரியனல்ல. ஷத்ரியனாகவும் போவதில்லை” என்றேன். அவர் “நிறுத்து மூடா! மானுடர் குருதியால் இயக்கப்படுகிறார்கள். சித்தத்தால் அல்ல…” என்றார். ”எவரும் வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதில்லை. எண்ணியபடி ஆடுவதுமில்லை.”
“ஆசிரியரே, என் குருதியை ஒரு போதும் ஏற்க மாட்டேன் என்று உறுதி சொல்கிறேன்” என்றேன். அவர் கையில் இருந்த நாணலைத் தூக்கி “பேசாதே… உன் சொற்களைக் கேட்க நான் விழையவில்லை” என்றபின் சிலகணங்கள் அசைவிழந்து நின்றார். பின் பெருமூச்சுடன் தோள் தளர்ந்து “உன்னைக் கொல்ல என்னால் ஆகாது. மாணவன் மைந்தனைவிட மேலானவன். உனக்காக என் குருமரபின் பழிச்சொல்லை நானே ஏற்கிறேன்” என்றார்.
மெல்ல அவரது உடல் குமிழிகள் உடைந்து நுரை அடங்குவதுபோல எளிதானது. என்னை நோக்காமல் “நீ ஒரு சொல்லை எனக்களிக்கவேண்டும். அதுவே நான் கோரும் குருகாணிக்கை. ஒருபோதும் ஷத்ரியர்களுக்காக உன் வில் எழக்கூடாது” என்றார்.
நான் கைகூப்பி “ஆசிரியரே, அச்சொல்லை அளிக்க என்னால் இயலாது. நான் இங்கு வந்ததே என் தோழருக்காக படைநின்று பொருதும்பொருட்டே. என் வாழ்வை அவருக்கும் அவர் குலத்திற்கும் அளித்துள்ளேன். அச்சொல்லில் இருந்து இப்பிறவியில் வழுவமாட்டேன்” என்றேன்.
சினத்துடன் திரும்பி “மாணவனின் உயிரும் உள்ளமும் ஆசிரியருக்கு உரிமையானவை. முழுப்படையலின்றி மாணவன் உள்ளத்தை ஆசிரியர் ஏற்கலாகாது” என்றார் பரசுராமர். “அதை தாங்கள் முன்னரே கேட்டுக்கொள்ளவில்லை ஆசிரியரே. கேட்டிருந்தால் நான் இக்கல்விக்கே ஒப்பியிருக்க மாட்டேன். என் வில் தார்த்தராஷ்டிரருக்கு உரியது” என்றேன்.
பரசுராமர் “நான் கோருவது குருகாணிக்கை. கல்விக்குக் காணிக்கையில்லை என்றால் அவ்வித்தை பயன் தராது போகும்” என்றார். “என்னை வாழ்த்துங்கள் ஆசிரியரே, அதுவன்றி எந்தக் காணிக்கையையும் அளிக்கிறேன்” என்றேன். “ஷத்ரியர்களுக்காக நீ வில்லெடுப்பாய் என்றால் எதுவும் எனக்குரியதல்ல… விலகிச் செல். உன்னை நான் வாழ்த்தவில்லை. நீ கற்ற வித்தை உனக்கு கைகொடுக்காது” என்றார். “ஆசிரியரே” என நான் கைகூப்பி பணிந்து நின்றேன். ”செல்… விலகிச்செல்” என்று கூவினார்.
“ஆசிரியரே, நான் வித்தையை இழப்பேன் என்றால் அது உங்களுக்கல்லவா இழிவு?” என்றேன். ”நீ என்னை ஏமாற்றி கற்றுக்கொண்டாய் என்ற இழிவைவிட பெரியதல்ல அது. மூடா, நீ ஷத்ரியனும் அல்ல. ஷத்ரியனுக்கு வெற்றியும் புகழுமே முதன்மையானது. எளிய உணர்ச்சிகளை பெரிதென எண்ணுவதனாலேயே நீ ஷத்ரியன் அல்லாதானாய். என்றோ ஒருநாள் உன் இறுதி சமர்களத்தில் உன் ஷாத்ரம் உன்னை கைவிடுவதாக!” என்றபின் அந்த நாணலை நீர் நோக்கி வீசி விட்டு திரும்பி நடந்தார்.
நான் அங்கேயே நின்றிருந்தேன். அவர் திரும்பிப் பார்ப்பார் என்று எதிர்பார்ப்பவன் போல. அவரைத் தொடர்ந்து ஓடி அவர் கால்களில் விழுந்து கதறவேண்டுமென எண்ணினேன். ஆனால் அவரை நான் நன்கறிவேன், ஒருபோதும் சொற்களை மீட்டுக்கொள்பவரல்ல அவர். அவரது உருவம் இலைத்தழைப்புகளுக்கு அப்பால் மறைந்தது.
பெருமூச்சுடன் திரும்பினேன். என் காலில் இருந்து குருதி வழிந்து மண் நனைந்திருந்தது. மேலாடையை உருவி அப்புண்ணை கட்டிக்கொண்டிருக்கையில் அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது. என்னை சூதன் என்று இழிவுசெய்தது அஸ்தினபுரி. இதோ ஷத்ரியன் என்று ஆசிரியர் பழிக்கிறார். வாய்விட்டு நகைத்தபடி அங்கே அமர்ந்துவிட்டேன்.
கர்ணன் சிரித்துக்கொண்டு “பின்னர் எண்ணும்போதெல்லாம் அதற்காக சிரித்தேன். அங்கிருந்து மீளும் வழி முழுக்க தனிமையில் நகைத்துக்கொண்டே இருந்தேன்” என்றான். துரியோதனன் உள்ளக்கொதிப்புடன் கைகளை நீட்டியபடி முன்னால் வந்து “நீ அந்த வாக்குறுதியை அளித்திருக்கவேண்டும். உனக்கு தென்னகத்தில் ஒரு பேரரசை உன் ஆசிரியர் அமைத்துத் தந்திருப்பார். கர்ணா, நீ அடைந்த அனைத்து இழிவுக்கும் அதுவல்லவா விடை? என்ன மூடத்தனம் செய்துவிட்டாய்? இனிமேல் உன் ஆசிரியரை சந்திக்க முடியுமா? அவ்வாக்குறுதியை அளிக்கமுடியுமா?” என்றான்.
“அது முடிந்து விட்டது” என்றான் கர்ணன். “என்ன மூடத்தனம் இது. சிந்தித்துப்பார், அங்கநாட்டை நான் உனக்களித்ததே நீ அடைந்த குல இழிவை சற்றேனும் போக்கத்தான். அதற்குக் கைமாறாக அவ்விழிவை முற்றிலும் அகற்றும் ஒரு பெருவாய்ப்பை தவறவிட்டாய் என்றால்… ஒருபோதும் நீ செய்திருக்கக் கூடாது” என்றான் துரியோதனன்.
“இளவரசே, என் சொல் நானிருக்க இறக்கலாகாது” என்றான் கர்ணன். “அச்சொல்லை நான் உனக்கு திரும்ப அளிக்கமாட்டேனா? இதோ…” என்றான் துரியோதனன். கர்ணன் இடைமறித்து “இளவரசே, எளிய சூதன் என்றாலும் கர்ணன் ஒருபோதும் கொடுத்ததை திரும்ப வாங்குவதில்லை” என்றான். “உங்கள் பொருட்டு களத்தில் நிற்பது என் கடன். எதிரே பரசுராமரே வில்லேந்தி வந்து நின்றாலும்கூட.”
பின்னர் மேலும் ஏதோ சொல்ல விழைபவன் போல கைகளை விரித்தான். எவரிடமோ சரணடைவதுபோல அக்கைகளை மலர்த்தினான். தோள்கள் தொய்ய விலகிச் சென்று சில அடிகள் வைத்து சேற்றுப்பரப்பை நக்கி அலையடித்துக்கொண்டிருந்த நீர்விளிம்பில் கால்வைத்தான். குனிந்து நீரை அள்ளி விட்டு முகத்தைக் கழுவினான்.
துரியோதனன் அவன் செய்வதை நோக்கியபடி அசையாமல் நின்றான். முகத்தின் ஈரத்தை விரல்களால் வழித்து விட்டு கர்ணன் திரும்பியதும் துரியோதனன் “நீ ஷத்ரிய மைந்தனா?” என்றான். “ஒருபோதும் அதை நீங்கள் என்னிடம் கேட்கலாகாது அரசே” என்றான் கர்ணன். “இது நான் உங்களிடம் கோரும் அருள்.” அவன் விழிகளை கூர்ந்து சிலகணங்கள் நோக்கியபின் துரியோதனன் ”ஆகுக” என்றான்.
கர்ணன் திரும்ப ரதம் நோக்கி நடக்கத் தொடங்க துரியோதனன் தொடர்ந்து சென்றான். இருவரும் ரதத்தட்டில் ஏறி நின்றுகொண்டனர். குதிரைகளின் குளம்படித்தடம் பக்கவாட்டில் வந்துகொண்டிருந்த சோலைகளின் இருளுக்குள் எதிரொலித்து அங்கே பறவைகள் கலைந்து ஒலியெழுப்பின. அவர்களின் ரதங்களை தொலைவிலேயே காவல்மாடத்து வீரர்கள் கண்டுவிட்டிருந்தனர். பந்தங்கள் சுழன்று அடையாளம் காட்ட முரசு ஒன்று முழங்கியது. வேல்களுடன் காவலர்கள் முகப்பு நோக்கி ஓடிவந்தனர்.
”பாண்டவர்கள் இந்நகரில்தான் இருக்கிறார்கள்…” என்றான் கர்ணன். “அர்ஜுனன் வந்திருப்பான்.” துரியோதனன் ”ஆம், ஆனால் அவர்கள் இன்னமும் கூட தங்களை துருபதனுக்கு அறிவித்துக்கொள்ளவில்லை“ என்றான். “அவர்கள் காத்திருக்கிறார்கள்…” என்றான் கர்ணன். துரியோதனன் “யாதவனும் காத்திருக்கிறான். அவர்கள் இன்னமும் யாதவனிடமும் தங்களை காட்டிக்கொள்ளவில்லை” என்றான். கர்ணன் “எப்படியென்றாலும் நாளை பின்னிரவு வரை” என்றான்.
அச்சொற்களை கர்ணன் முன்னரே சொன்னதை துரியோதனன் நினைவுகூர்ந்தான். ஒன்றிலிருந்து ஒன்றாக தொடர்கண்ணிகள் விரிந்து அனைத்தும் அவனுக்கு தெளிவாகியது. அதற்குள் ரதங்கள் மாளிகை முற்றத்தைச் சென்றடைந்து நின்றன. வீரர்கள் வந்து கடிவாளங்களை பற்றிக்கொண்டனர். கர்ணன் இறங்கி “நான் சற்று ஓய்வெடுக்கிறேன்… நீண்டபயணத்தின் களைப்பு” என்றபடி தலைவணங்கிவிட்டு விலகிச்சென்றான். அவன் செல்வதை துரியோதனன் நோக்கிக் கொண்டு நின்றான்.
துச்சாதனனை நோக்கி தலையசைத்துவிட்டு துரியோதனன் மாளிகைக்குள் சென்று தன் அறையை அடைந்தான். ஆடைச்சேவகனும் அணுக்கச்சேவகனும் காத்து நின்றிருந்தனர். அணிகளைக் கழற்றி உடலை இளநீராட்டச்செய்து மாற்றாடை அணிந்து தன் மஞ்சத்து அறைக்கு வந்தான். கட்டிலில் அமர்ந்துகொண்டு இருண்ட மரக்கூட்டங்கள் தெரிந்த சாளரத்தையே நோக்கிக் கொண்டிருந்தான்.
வெளியே தொலைவானில் விண்மீன்குவைகள் தெரிந்தன. அவன் எழுந்து சென்று சாளரத்தருகே நின்று விண்மீன்களை நோக்கினான். எத்தனை லட்சம், கோடி, கோடானுகோடி… இத்தனை விண்மீன்களும் மண்ணில் வாழ்ந்து மறைந்த மாமனிதர்கள். ரிஷிகள், மாவீரர்கள், பத்தினிகள். இங்கே முட்டி மோதி அடைந்தும் துறந்தும் வாழ்வதெல்லாம் இப்பெருவெளியில் நின்று ஒளிரும் ஒரு ஒளிப்புள்ளியாக ஆவதற்காகத்தானா?
கூட்டம் கூட்டமாக செறிந்துகிடந்தன விண்மீன்கள். ஆனால் ஒவ்வொன்றும் தன்னந்தனிமையில் நின்று மின்னிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. அவற்றில் ஏதோ ஒன்று துருவவிண்மீன். பிற அனைத்தும் திசையும் இடமும் மாறுகையிலும் மாறாதது. அவன் அதை நோக்குவதற்காக வடதிசையை விழிகளால் துழாவினான். ஒரே விண்மீன்களை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.
சலித்துப்போய் திரும்ப வந்து அமர்ந்துகொண்டான். சற்று நேரம் மஞ்சத்தையே நோக்கிக் கொண்டிருந்துவிட்டு சேவகனை அழைத்து சதுரங்கப்பலகையை விரிக்கச்சொன்னான். அதில் காய்களை விரித்து ஒரு சூழ்கையை அமைத்துவிட்டு கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். எதிரே இருட்டு அமர்ந்திருந்தது. அது தன் கைகளை நீட்டி காய்களை நகர்த்தும் என்பது போல, அதன் ஆடலென்ன என்று உய்த்துணர விழைபவன் போல அவன் அமர்ந்திருந்தான்.
ரீங்காரத்துடன் ஒரு சிறிய பூச்சி விளக்கை நோக்கிச் சென்றது. அவ்வொலி கேட்டு அவன் திடுக்கிட்டு எழுந்து நின்றான். சிலகணங்கள் கழித்துத்தான் அதற்காக தன் அகம் ஏன் திடுக்கிட்டது என்று புரிந்தது. விரைந்து சென்று கதவருகே ஒரு கணம் தயங்கிவிட்டு திறந்து வெளியே சென்றான். காவல்வீரன் தலைவணங்கி பின்னால் வந்தான். அவனை கையசைத்து அனுப்பிவிட்டு இடைநாழி வழியாக நடந்து சென்று கர்ணனின் அறைவாயிலில் நின்றான்.
குரலெடுப்பதற்குள் கர்ணனே கதவைத் திறந்தான். ”துயிலவில்லையா?” என்றான் துரியோதனன். கர்ணன் புன்னகையுடன் “வாருங்கள் இளவரசே” என உள்ளே அழைத்தான். உள்ளே சென்றதும் அவனும் சதுரங்கப்பலகையை விரித்திருப்பதை, ஒரு காய்கூட நகர்த்தப்படாமலிருப்பதை துரியோதனன் கண்டான். அவனுடைய புன்னகையைக் கண்ட கர்ணன் “ஆம், நானும்தான்” என்றான்.
“அந்த வலியை சற்று முன் உணர்ந்தேன்” என்றான் துரியோதனன். “அதை நான் சொல்லியிருக்கக் கூடாது” என்றான் கர்ணன். “இல்லை, நீ சொன்னது ஏன் என்றும் எனக்குப்புரிந்தது…” சிரித்தபடி “சற்றுப் பிந்தியேனும் அனைத்தையும் புரிந்துகொள்ளும் திருதராஷ்டிரரின் மைந்தன் நான்” என்றான். கர்ணன் புன்னகைசெய்தான். “நான் வந்தது அதைப்பற்றிப் பேசத்தான்.”
கர்ணன் “அதில் பேசுவதற்கென்ன இருக்கிறது?” என்றான். துரியோதனன் தன் கைகளை நோக்கியபடி சிலகணங்கள் அமர்ந்துவிட்டு “அல்லது என்னைப்பற்றிப் பேச…” என்றான். “வலியைப்பற்றி சொன்னாய் அல்லவா? நான் என்னைப்பற்றி எண்ணிக்கொண்டேன். இனி என் வாழ்நாளில் நான் எப்போதேனும் மகிழ்ச்சியை அறிவேனா என வியந்தேன்.” கர்ணன் புன்னகை செய்தான்.
“கர்ணா, எனக்கு ஒருநாளும் இயல்பாக துயில் வந்ததில்லை” என்றான் துரியோதனன். “இப்போது இடைநாழியில் வருகையில் எண்ணிக்கொண்டேன். நான் இறுதியாக மகிழ்ச்சியுடன் இருந்தது எப்போது என்று. முன்பு, இளமையில், நானும் பீமனும் தோள்தழுவி வாழ்ந்த நாட்களில். அன்று உவகையன்றி வேறேதும் இருக்கவில்லை. கனவென சென்றுவிட்டன அந்நாட்கள்.”
”அன்றெல்லாம் ஒவ்வொருநாளும் பிரியமுடியாமல் பேசிக்கொண்டிருப்போம். பேசிய இறுதி நகைச்சுவை நெஞ்சில் சுவைக்க முகமெல்லாம் சிரிப்புடன் படுக்கையில் விழுவேன். காலையில் எழும்போது துயிலுக்குமுன் இருந்த சிரிப்பு தாவி வந்து இதழ்களில் திகழும். ஏன் சிரிக்கிறேன் என்று எழுந்தபின் ஒருகணம் சிந்தித்து அதன்பின்னர்தான் அறிவேன்” துரியோதனன் சொன்னான்.
“பீமனிடம் நல்லுறவு கொள்ள இன்னும் தருணமிருக்கிறது” என்றான் கர்ணன். “ஆம், அவன் இன்னமும் கூட என்னை நோக்கி தன் தோள்களை விரிக்கக்கூடும். ஆனால் நான் விலகி நெடுந்தொலைவுக்கு வந்துவிட்டேன்” என்றான் துரியோதனன். “ஆனால்…” என கர்ணன் சொல்லத் தொடங்க “அதைப்பற்றிப் பேசிப்பயனில்லை. அது முடிந்துவிட்டது” என்றான். “நீ சொன்னாயே போர் என. ஆம். ஒருபோர் நிகழும். நான் அதில் அவனை கதையுடன் சந்திப்பேன். எங்களில் ஒருவர் எஞ்சுவோம். ஊழின் பாதை அது மட்டுமே.”
கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. துரியோதனன் பெருமூச்சுடன் “ஆனால் ஏன் இந்த வாழ்க்கை? உன்னிடமே நான் சொல்லமுடியும் கர்ணா. என் நாட்டை மணிமுடியை அடைந்தால் நான் மகிழ்வேனா? இல்லை. பாரதவர்ஷத்தையே அடைந்தாலும் எனக்கு நிறைவிருக்காது. ஓரிரு கணங்களுக்குமேல் என் உவகை நீடிக்காது. ஏன் ஹிரண்யனைப்போல விண்ணையே வென்றாலும் நான் மகிழப்போவதில்லை” என்றான். “மணிமுடி நெருங்கும்போது நான் உவகையை இழக்கிறேன். அதை இழந்த சிலநாட்களிலேயே மீண்டும் வஞ்சம் கொள்கிறேன்… ”
“உயிர்களுக்கெல்லாம் வாழ்க்கையின் இலக்காக இருப்பது ஆனந்தமே என்கின்றன நூல்கள். புழுவும் பூச்சியும் விழைவது இன்பத்தை. என் வாழ்க்கையில் இன்பமே இல்லை என்றால் நான் ஏன் வாழவேண்டும்?” என்ற துரியோதனன் கசப்புடன் நகைத்து “வீண்வினா என்று அறிவேன். என் தமையன் தருமன் இதைக்கேட்பதில் பொருளுண்டு… ஆனால் என்னாலும் கேட்காமலிருக்க முடியவில்லை. வாழ்நாள் முழுக்க துயரை மட்டுமே அடைவேன் என உறுதியாக உணர்பவன் ஏன் உயிர்வாழவேண்டும்?” என்றான்.
“இளவரசே, இன்பத்தை நாடுபவர்கள் இன்பத்தை அடைகிறார்கள். புகழை நாடுபவர்களே அதை அடைகிறார்கள்” என்றான் கர்ணன். “அது ஊழின் வழி. இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை என்பது மிகச்சிலரால் மட்டுமே ஆடப்படுவது. அவர்களின் கடன் என்பது ஊழின் ஆடலை தான் நடிப்பது மட்டுமே. இங்கு நூறுநூறு இல்லங்களில் துணிகள் உள்ளன. ஆமாடப்பெட்டிகளுக்குள் மடித்தும் சுருட்டியும் வைக்கப்பட்டு வாசத்துடன் துயில்கின்றன. மாடமுகட்டில் பறக்கும் கொடியின் துணி அவ்வாழ்க்கையை விழைய முடியாது. காற்றில் அது துடிதுடித்தாகவேண்டும்.”
துரியோதனன் “நல்ல உவமை” என்று சிரித்தான். கர்ணன் “ஆம், அதுவே உண்மை. ஒரே வினாவை உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். உலக இன்பம் உங்களுக்குக் கிடைக்கிறது. அதன்பொருட்டு இங்குள்ள முகமற்ற பல்லாயிரம் பேரில் ஒருவராக நீங்கள் வாழமுடியுமா? அப்படியென்றால் இக்கணமே கிளம்புங்கள். உங்கள் இன்பங்கள் இவ்வறைக்கு வெளியே காத்திருக்கின்றன” என்றான்.
துரியோதனன் பெருமூச்சுடன் “ஆம், உண்மைதான். என்னால் முடியாது” என்றான். “நீங்கள் வரலாற்றின் மேல் பிறந்து விழுந்தவர். உங்களால் வரலாற்றின் மீது மட்டுமே வாழமுடியும்” என்றான் கர்ணன். “வரலாறென்பது கோடானுகோடி மக்களின் கனவுகளும் விழைவுகளும் சமர்களும் சரிவுகளும் கலந்து உருவான நிகழ்வுப்பெருவெள்ளம். அதன் முதல் அலையெழுச்சி நீங்கள். உங்கள் வழியாகவே துவாபர யுகம் தன்னை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.”
“அதற்கு நான் என்னை ஒப்புக்கொடுக்கவேண்டுமா என்ன?” என்றான் துரியோதனன். “ஆம், போராடுவதும்கூட அதன் இச்சையை நிகழ்த்துவதேயாகும். அது நம்மை மீறியது. நாம் அறியமுடியாதது. அது மும்மூர்த்திகளும் ஆடும் சதுரங்கம்” என்று கர்ணன் சொன்னான். துரியோதனன் பெருமூச்சுடன் “சொற்கள் எத்தனை எளிதாக இருக்கின்றன. துயர்களை சொல்லாக மாற்றிக்கொள்ள முடியும் என்றால் சொற்களாலேயே தீர்வையும் கண்டுகொள்ளமுடியும் போலும்” என்றான்.
கர்ணன் புன்னகைத்து “உண்மையை நெருங்குகையில் எவரும் அழகிய சொல்லாட்சிகளை சொல்லி விடுகிறார்கள்” என்றான். துரியோதனன் உரக்க நகைத்து “அவ்வப்போது வரலாற்றுக்கு நானும் சில சொற்றொடர்களை விட்டுச்செல்கிறேனே. வரலாற்றுநாயகர்களின் கடமையல்லவா அது?” என்றான். இருவரும் உரக்க நகைத்தனர்.
துரியோதனன் எழுந்துகொண்டு “நான் ஒரு சொல்லை சொல்லிவிட்டுச் செல்லவே வந்தேன்” என்றான். கர்ணன் சிரிப்புடன் “வரலாற்றிடமா?” என்றான். “உன்னிடம்…” என்றபின் துரியோதனன் வெளிப்பக்கமாகத் திரும்பிக்கொண்டு “நாளை துருபதன் போட்டிக்காக அமைத்திருப்பது விற்பொறி” என்றான்.
கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் நெஞ்சின் துடிப்பை கேட்கமுடியும் என்று தோன்றியது. “அதை வெல்லப்போவது நீதான்” என்றான் துரியோதனன். “அது என் கடன்” என்றான் கர்ணன். ”எப்படியென்றாலும் பாஞ்சால இளவரசியை வெல்லாமல் நாம் இந்நகர் நீங்குவதில்லை. அதை பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லிவிட்டே வந்தேன்.”
“அவளை வென்று துணை கொள்ளப்போவதும் நீயே” என்றான் துரியோதனன். கர்ணன் திகைத்து எழுந்து “என்ன சொல்கிறீர்கள்? நாம் இங்கு வந்தது…” என்று தொடங்க கையமர்த்திய துரியோதனன் “அரசியல் கணிப்புகளை நான் பேசவரவில்லை. ஆணும் பெண்ணும் கண்டுகொள்வதை கந்தர்வ கணம் என்கின்றன நூல்கள். அது நிகழ்ந்ததை நான் கண்டேன்” என்றான்.
“இளவரசே, தாங்கள் சொல்வது…” என்று குழறியபடி கர்ணன் பின்னால் நகர்ந்தான். “உன் விழிகளை நான் நோக்கினேன். அவை கந்தர்வனின் விழிகள். அவள் விழிகளும்தான். அங்கே உங்கள் இருவரையும் அணுகி நோக்கியது நான் மட்டுமே.” கர்ணன் தவிப்புடன் “இளவரசே, வீண் சொற்களாகப் போகின்றன இவை. அவள் ஷத்ரியகுலத்து இளவரசி. பாரதவர்ஷத்தின் பேரரசி என்கின்றனர் நிமித்திகர். பேரரசர்கள் அவளை எண்ணி இங்கு வந்துள்ளனர்” என்றான்.
“ஆம், நீ நாளைய பேரரசன். இன்று உன் பின்னால் பாரதவர்ஷத்தின் முதன்மைப் பேரரசு ஒன்றின் பெரும்படை நின்றிருக்கிறது” என்றான் துரியோதனன். “நாளை அவை எழுந்து வில் சூடி அவளை வெல்! அவள் கை பற்றி மேடையேறுகையில் ஷத்ரியர் வரிசையில் ஒரு சொல் எழுந்தாலும் அஸ்தினபுரியின் படையுடன் நான் உன்னுடன் நின்றிருப்பேன்.”
பதைப்புடன் கைகள் அசைய கர்ணன் “இல்லை இளவரசே, நான்…” என மீண்டும் தொடங்கினான். புன்னகையுடன் அருகே வந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டு துரியோதனன் “பரசுராமனின் வில்லுடன் நீ அவையெழுந்தால் எவரும் முன்னிற்க முடியாது” என்றான். “இத்தருணம் இதற்கெனவே அமைந்தது என்று அறிக!”
ஓவியம்: ஷண்முகவேல்
கர்ணன் கண்களில் நீர் பரவியது. அவன் தலைகுனிந்து உதடுகளை இறுக்கிக்கொண்டான். “அங்கநாட்டுக்கு அரசன் ஆனதல்ல இழிவுபடுத்தியவர்களுக்கான விடை. பாஞ்சால இளவரசியின் கைபற்றி அஸ்தினபுரியின் அவை புகுவதுதான். அது நிகழட்டும்!” கர்ணன் நெஞ்சு ஏறியிறங்கியது. புன்னகையுடன் அவன் கைகளை இறுக்கி “இது திருதராஷ்டிரரின் மைந்தனின் வார்த்தை” என்றான் துரியோதனன்.
அவன் திரும்பி வாயிலை நோக்கி சென்றபோது கர்ணன் அவன் உடலில் எழுந்த வழக்கமற்ற விரைவுடன் இரு எட்டில் அவனை நெருங்கி வந்து “இளவரசே, நீங்கள் சொன்னது உண்மையா?” என்றான். “என்ன?” என்று துரியோதனன் அவன் பதற்றத்தை நோக்கி புன்னகைத்தபடி கேட்டான். “அவள் என்னை… என் மேல்…” என்றான் கர்ணன். துரியோதனன் ”ஆம், நான் கண்டேன். அவள் விழிகளில் நிறைந்திருந்த காதலை தெய்வங்களும் கண்டிருக்கும். கர்ணா, மணஏற்பு முடிந்து விட்டது. அவள் உன்னையன்றி எவரையும் ஏற்கமாட்டாள்” என்றான்.
கர்ணன் புன்னகைத்தபோது ஒளிமிக்க பல்வரிசையுடன் அவன் பேரழகனாகத் தெரிந்தான். அவன் தோள்களைத் தொட்டபடி “எனக்கு மட்டும் அல்ல, அங்கு நின்றிருந்த அத்தனை பெண்களுக்கும் அது தெரிந்துவிட்டது. அவர்களில் எவரோ மணஏற்பு முடிந்துவிட்டது என்று மெல்ல சொன்னதையே நான் கேட்டேன்” என்றான். கர்ணன் முகத்தில் நாணம் வந்து விழிகள் சரிந்தன. பற்களைக் கடித்து நாணத்தை அடக்கியபின் திரும்பி அறைக்குள் சாளரத்தை நோக்கி திரும்பி விட்டான்.
உரக்கச்சிரித்து “இரவை தேன் ஊறி நிரப்பட்டும்” என்றபின் துரியோதனன் வெளியேசென்றான். கால்களை வழக்கத்தை மீறி வீசி வைப்பதாகத் தெரிந்தபோது ஒன்று தோன்றியது, அவன் உவகையுடன் இருந்தான். இடைநாழியில் காற்றில் செல்லும் மெல்லிய சால்வையென ஒழுகினான். “ஆம், இது உவகையே. உவகையேதான்” என்று தன்னுள் சொல்லி புன்னகைத்துக் கொண்டான்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்