பிரயாகை - 69

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 5

அவையினர் கண்டிராத நரம்பிசைக்கருவியை நெஞ்சோடு அணைத்து நீலநிறமான தலைப்பாகையும் சூதர்களுக்குரிய வளையக்குண்டலமும் அணிந்து வந்த சூதன் மிக இளையவனாக இருந்தான். அவையை நோக்கிய அவன் அகன்ற விழிகளில் தயக்கமேதும் இருக்கவில்லை. விதுரர் எழுந்து “வருக சூதரே, இங்கே அவை மையத்தில் அமர்க” என்றார். சூதன் தயங்கி “இது அரசுசூழ் மன்று என்று தோன்றுகிறதே” என்றான். “ஆம், நாங்கள் பகன் வெல்லப்பட்ட கதையை கேட்க விழைகிறோம்” என்றார் விதுரர்.

“நான் அதை நேரில் பார்க்கவில்லை. அகிசத்ரத்தில் ஒரு முதுசூதரிடமிருந்து அப்பாடலை முழுமையாகக் கற்றேன். அதையே நானறிவேன்.” விதுரர் “நெருப்பு என்பது பற்றிக்கொண்டு பரவுவதுதானே?” என்றார். “நான் அப்பாடலை முழுமையாக பாடலாமா?” என்றான் சூதன். “ஆம், அதையே எதிர்நோக்குகிறோம். உமது பெயரென்ன?” சூதன் தலைவணங்கி ”உரகபுரியைச் சேர்ந்த என் பெயர் பிரமதன்” என்றான். “அமர்ந்துகொள்ளும்” என்றார் விதுரர்.

பிரமதன் அமர்ந்துகொண்டு அந்தக் கருவியை தன் மடியில் வைத்து மெல்ல ஆணியை இழுத்து சுதிசேர்த்ததும் திருதராஷ்டிரர் “பிரமதரே, அது என்ன கருவி?” என்றார். “அது யாழோ வீணையோ அல்ல. ஓசை மாறுபட்டிருக்கிறது.” பிரமதன் “இதன் பெயர் மதுகரம். ஒற்றைத்தந்தி மட்டுமே கொண்டது. ஆனால் இதன் நீளத்தை விரலால் மீட்டி ஏழு ஒலிநிலைகளுக்கும் செல்லமுடியும்” என்றான். ஒருமுறை அவன் விரலோட்ட அந்த ஒற்றைத்தந்தி யாழ் ”இங்கிருக்கிறேனய்யா” என்றது.

திருதராஷ்டிரர் ஆர்வத்துடன் “இதில் அலையொலி நிற்குமா?” என்றார். “மானுடக் குரல் பேசாது. வண்டின் குரல் எழும். ஆகவேதான் இதற்கு மதுகரம் என்று பெயர். திரிகர்த்தர்களின் இசைக்கருவி இது. மரக்குடத்தின்மேல் கட்டப்பட்டுள்ள இது பட்டுநூல் நரம்பு” என்றான் பிரமதன். “மானுடக்குரலின் அடிக்கார்வையுடன் மட்டுமே இது இணைந்துகொள்ளும். இதன் சுருதியில் பாடுவதென்பது மிகச்சிலராலேயே இயலும். பெண்களால் இயலாது.”

“பாடும்” என்றார் திருதராஷ்டிரர் புன்னகையுடன். “புதிய ஒலியைக் கேட்டு நெடுநாளாகிறது.” பிரமதன் அதை மெல்ல மீட்டத்தொடங்கியதும் மெல்லிய வண்டின் இசை எழுந்தது. வண்டு சுழன்று சுழன்று பறந்தது. பின் அந்த ஒலியில் செம்பாலைப்பண் எழுந்தது. துடித்தும் அதிர்ந்தும் தொய்ந்தும் எழுந்தும் பண் தன் உருவைக்காட்டத் தொடங்கியதும் திருதராஷ்டிரர் முகம் மலர்ந்து “சிறப்பு! மிகச்சிறப்பு!” என்றார். சூதன் பண்ணுடன் தன் குரலை இழையவிட்டு மெல்ல பாடத்தொடங்கினான்.

“விண்படைத்த பெரியோன் வாழ்க! அவன் உந்திமலர் எழுந்த பிரம்மன் வாழ்க! பிரம்மன் மடியிலமர்ந்து சொல்சுரக்கும் அன்னை வாழ்க! சொல்லில் மலர்ந்த சூதர் குலம் வாழ்க! சூதர் பாடும் மாமன்னர்கள் வாழ்க! அம்மன்னர்கள் ஆளும் நிலம் வாழ்க! அந்நிலத்தைப் புரக்கும் பெருநதிகள் வாழ்க! நதிகளை பிறப்பிக்கும் மழை வாழ்க! மழை எழும் கடல் வாழ்க! கடலை உண்ட கமண்டலத்தோன் வாழ்க! அவன் வணங்கும் முக்கண்ணோன் வாழ்க!”

சான்றோரே கேளுங்கள்! வடக்கே உசிநாரர்களின் சிறுநகரமான சிருங்கபுரிக்கு அருகேயிருந்த கிருஷ்ணசிலை மலைச்சாரலில் ஊஷரர்கள் என்னும் நூறு அரக்கர்குடியினர் வாழ்ந்தனர். கரிய சிற்றுடலும் ஆற்றலற்ற கால்களும் சடைமுடிக்கற்றைகளும் கொண்டிருந்த அவர்கள் காடுகளில் சிறு விலங்குகளை வேட்டையாடியும், பறவைகளை பொறிவைத்துப்பிடித்தும், காடுகளில் கிழங்கும் கனிகளும் தேடிச்சேர்த்தும் உண்டு வாழ்ந்தனர். முயல்தோலையும் பெருச்சாளித்தோலையும் ஆடையாக அணிந்திருந்தனர். மரக்கிளைகளுக்குமேல் நாணலால் குடில்கள் கட்டி வாழ்ந்தனர். கூராக வெட்டிய மூங்கில்களை அவர்கள் படைக்கலமாகக் கொண்டிருந்தனர்.

கிருஷ்ணசிலை மலைச்சாரலை ஒவ்வொரு வருடமும் உசிநார நாட்டு யாதவர்கள் தீவைத்து எரித்து புல்வெளியாக்கினர். உழவர்கள் புல்வெளிகளை அவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கி கழனிகளாக்கினர். கழனிகள் நடுவே சேவல்களும் நாய்களும் காக்கும் ஊர்கள் அமைந்தன. ஊர்கள் நடுவே வணிகர்களின் சந்தைகள் எழுந்தன. சந்தைகளில் சுங்கம் கொள்ள ஷத்ரியர்கள் வந்தனர். ஷத்ரியர்களிடம் நிதிபெற்று பிராமணர்கள் அங்கே வந்து வேள்வி எழுப்பினர். யாதவர்களின் நெருப்பு ஒவ்வொன்றும் வேள்வி நெருப்பாக மாறிக்கொண்டிருந்தது. வெம்மைகொண்ட உலோகப்பரப்பின் ஈரம் போல காடு கண்காணவே வற்றி மறைந்துகொண்டிருந்தது.

அரக்கர் வாழும் புதர்க்காடுகளை யாதவர்கள் தீவைத்து அழித்தனர். யாதவர்களிடம் வரி கொண்ட ஷத்ரியர்கள் புரவிகளிலேறி வந்து அவர்களைச் சூழ்ந்து வேட்டையாடி கொன்றனர். தங்கள் மூங்கில் வேல்களைக்கொண்டு அவர்களை எதிர்க்கமுடியாமல் புல்வெளிகளில் ஆண்கள் செத்து விழ அரக்கர் குலப்பெண்கள் மேலும் மேலும் மலையேறிச்சென்று காடுகளுக்குள் ஒடுங்கிக் கொண்டனர். நாடு சூழ்ந்த காட்டுக்குள் இருந்து விலங்குகள் மறைந்தன. உணவில்லாமலானபோது அரக்கர்கள் மேயவந்த கன்றுகளை கண்ணியிட்டுப் பிடித்து கொண்டுசென்று உரித்து சுட்டு உண்டனர். கன்றுகளைக் கொல்லும் அரக்கர்களைக் கொல்லும்படி யாதவர்கள் உசிநார அரசனிடம் கோரினர். அரசாணைப்படி புரவிப்படைகள் காடுகளுக்குள் ஊடுருவி அரக்கர்களை எங்கு கண்டாலும் கொன்று போட்டன.

பகலெல்லாம் காட்டில் புதர்களுக்குள் ஒளிந்து உறங்கியபின் இரவில் எழுந்து இருளின் மறைவில் ஊர்களுக்குள் இறங்கி கன்றுகளைக் கொன்று தூக்கிச் சென்று உச்சிமலையின் குகைகளுக்குள் புகையெழாது சுட்டு உண்டு வாழ்ந்தனர் அரக்கர்கள். பலநாட்களுக்கொருமுறை மட்டுமே உணவுண்டு மெலிந்து கருகிய முட்புதர்கள் போலாயினர். காடுகளுக்குள் அவர்கள் செல்லும்போது நிழல்கள் செல்வதுபோல ஓசையெழாதாயிற்று. அவர்களின் குரல்கள் முணுமுணுப்புகளாயின. அவர்களின் விழிகள் ஒளியிழந்து உடும்புகளைப்போல அருகிருப்பதை மட்டுமே பார்த்தன.

ஊஷரர்குலத்துத் தலைவனாகிய தூமன் என்னும் அரக்கனுக்கும் யமி என்ற அரக்கிக்கும் பன்னிரண்டு மைந்தர்கள் பிறந்தனர். பதினொரு குழந்தைகளும் பசித்து அழுது நோய்கொண்டு இறந்தன. யமி பன்னிரண்டாவதாகக் கருவுற்றபோது அரக்கர்கள் மலையுச்சியின் குகை ஒன்றுக்குள் பதுங்கி இருந்தனர். அவர்களைக் கொல்வதற்காக குதிரைகளில் வில்லும் அம்புமாக ஷத்ரியர்கள் காடெங்கும் குளம்படி எதிரொலிக்க அலைந்துகொண்டிருந்தனர். யமியின் வயிறு மலைச்சுனையின் பாறைபோல கரிய பளபளப்புடனிருந்தது. அவள் கைகளும் கால்களும் மெலிந்து அப்பாறை இடுக்கில் முளைத்த கொடியும் வேரும்போலிருந்தன. அவளால் எழுந்து நடக்க முடியவில்லை. இருளை நோக்கியபடி குகைக்குள் அசையாது படுத்திருந்தாள்.

நாட்கணக்காக உணவில்லாமலிருந்த யமி குகைக்குள் குழியானைப்பூச்சி அள்ளிக்குவித்த பொடிமண்ணை அள்ளி உண்டு பசியடக்கக் கற்றிருந்தாள். மண் அவள் வயிற்றையும் நெஞ்சையும் சிந்தையையும் அணைத்தது. நாளெல்லாம் காற்றை உணராத அடிமரம் போல அசைவிழந்து அமர்ந்திருந்தாள். பத்துமாதமானபோது அவளே அறியாமல் மடியிலிருந்து நழுவி விழுந்த பாக்கு போல சின்னஞ்சிறு குழந்தை பிறந்தது. தவளைக்குஞ்சு போல மெல்லிய கைகால்களும் சிறிய தலையும் கொண்டிருந்த அக்குழந்தை உருண்ட பெருவயிறுடன் இருந்தது. வாயருகே காதுகொண்டு வைத்துத்தான் அப்பேற்றை எடுத்த அரக்கர்குல முதியவள் மண்டரி அது அழுவதை கேட்டாள்.

யமியின் உடலில் இருந்து குருதியே வரவில்லை என்றாள் முதியவள் மண்டரி. விழித்த கண்களுடன் உலர்ந்த உதடுகளுடன் அவள் குகையின் மேல்வளைவை நோக்கி கிடந்தாள். அவளை பெயர் சொல்லி அழைத்தபோது ஏற்கனவே இறந்திருந்த அவள் மூதாதையர் உலகில் இருந்து மெல்ல “ம்” என்று மறுமொழி அளித்தாள். மீண்டும் அழைத்தபோது மேலும் மூழ்கி கடந்து சென்றிருந்தாள். அவள் கைகால்கள் இறந்துவிட்டிருந்தன. வெயிலில் நெளிந்து காய்ந்து மடியும் மண்புழு என நாக்கு அசைந்து இறந்தது. இறுதியாக கண்களும் இறந்து இரு கரிய வடுக்களாக எஞ்சின. அவள் குழந்தையை பார்க்கவேயில்லை.

மெல்லிய வெண்ணிறப்பூச்சுடன் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த குழந்தையை ஏறிட்டு நோக்கவும் அதன் தந்தை தூமன் மறுத்துவிட்டான். அதை மலைச்சரிவில் வீசி எறியும்படி அவன் சொன்னான். பசியில் வெறித்த விழிகளுடன் அவனைச் சூழ்ந்திருந்தது அவன் குடி. முதியவள் “அவனிடம் மூதாதையர் சொல்லியனுப்பியதென்ன என்று நாமறியோம் அல்லவா?” என்றாள். அச்சொற்கள் அங்கே காற்றில் சுழன்று மறைந்தன. தூமன் திரும்பி நோக்கவேயில்லை.

உரித்து பாறைகளில் காயப்போடப்பட்ட தோல் போல அவர்கள் அங்கே ஒட்டிச்சுருங்கி அமர்ந்திருந்தனர். அவர்கள் கண்ணெதிரே முயல்கள் சென்றன. எழுந்து அவற்றைப்பிடிக்கும் உடல் விசை அவர்களிடம் எஞ்சவில்லை. தொலைவில் அவர்களைக் கொல்லும் புகை வெண்ணிற வலையென சூழ்ந்து வந்துகொண்டிருந்தது. எழுந்து ஓடவும் அவர்களின் கால்களில் ஆற்றலிருக்கவில்லை. “இங்கே இறப்பதே மூதாதையர் ஆணை என்றால் அவ்வாறே ஆகட்டும்” என்றான் தூமன்.

முதியவள் மைந்தனை தன் வறுமுலையுடன் சேர்த்துக்கொண்டாள். அவள் அகம் கனிந்துருகியும் முலைகள் கருணையற்றிருந்தன. காம்புகளைக் கவ்வி உறிஞ்சிய குழந்தை ஓசையின்றி நடுங்கிக்கொண்டிருந்தது. அன்றே அது இறந்துவிடும் என்று அவள் எண்ணினாள். ஆனால் மதியம் பாறைக்கவைக்குள் இருந்து அசைந்து வழிந்து வெளிவந்த பெரும் மலைப்பாம்பு ஒன்றை அவர்கள் கண்டனர். வெடித்தெழுந்த உவகைக்கூச்சலுடன் ஓடிச்சென்று அதைச்சூழ்ந்துகொண்டனர். தூமன் அதை கவைக்கழியால் பிடித்துக் கொள்ள பிறர் கல்லால் அடித்துக் கொன்றனர்.

அதன் உடலின் குருதியும் கொழுப்பும் அவர்களை இறப்பிலிருந்து காப்பாற்றிய அருமருந்தாயின. முதியவள் பாம்பின் கொழுப்பைத் தொட்டு மைந்தனின் வாயில் வைத்தாள். சிறுசுடர் நெய்யை வாங்குவது போல அவன் அதை வாங்கிக்கொண்டான். மைந்தன் பிழைத்துக்கொள்வான் என்று அவள் எண்ணினாள். அதன்பின்னரே அவனுக்கு அவள் பெயரிட்டாள். அவன் வீங்கிய வயிற்றை வருடி “பகன்” என அவனை அழைத்தாள்.

தூமன் அதன்பின்னரே அம்மைந்தனை திரும்பிப் பார்த்தான். ஒரு கணம் அதன் பெருவயிற்றை நோக்கியபின் திரும்பிக்கொண்டான். பிறகெப்போதும் அவன் மைந்தனை நோக்கவிலல்லை. ஒருசொல்லேனும் பேசவும் இல்லை. குழந்தையை கையிலெடுத்து முதியவள் “நீ வாழவேண்டுமென்பது நாகங்களின் ஆணை” என்றாள். பாம்புக்கொழுப்பை அவன் கைகால்களில் பூசினாள்.

பாம்பின் இறைச்சியை கையில் ஏந்தியபடி அவர்கள் மலை ஏறி மறுபக்கம் சென்றனர். கீழே மூன்று பக்கமும் தீயிட்டு எரிக்கப்பட்ட காட்டின் பாம்புகளும் எலிகளும் மழை நீர் போல காட்டுப்புதர்களின் அடியில் அவர்களை நோக்கி வந்தன. புகை பெருவெள்ளமென சூழ்ந்தது. புரவிகள் பொறுமையிழந்து துள்ள வில்லேந்திய வீரர்கள் அனல் உண்டு விரித்திட்ட கரிந்த நிலம் வழியாக வந்துகொண்டிருந்தனர்.

“இம்மைந்தன் பிறந்த வேளை நம்மைக் காத்தது” என்றாள் முதியவள். “அப்பால் நமக்கு நல்லூழ் காத்திருக்கலாகும்” என்று அவள் சொன்னபோது தூமன் அவனை திரும்பி நோக்கினான். பெருமூச்சுடன் ஏதோ சொல்லவந்தபின் உதடுகளை இறுக்கிக்கொண்டான். அவர்கள் மலைகளைக் கடந்து காளகூடம் என்னும் காட்டை அடைந்தனர். உசிநாரர்களின் எல்லைக்கு அப்பாலிருந்த அது எவருக்கும் உரியகாடாக இருக்கவில்லை. அங்கே யாதவர்களோ ஷத்ரியர்களோ வரத்தொடங்கவில்லை.

அடர்ந்த புதர்களுக்குள் முயல்களும் பெருச்சாளிகளும் செறிந்திருந்தன. மான்களும் காட்டுஆடுகளும் அவர்களுக்குக் கிடைத்தன. மரங்கள் மேல் குடில்கட்டி அவர்கள் குடியேறினர். அங்கு அவர்களின் உடல் வலுக்கொண்டது. முகங்களில் புன்னகை விரியத் தொடங்கியது. ஆனால் தூமன் கவலை கொண்டிருந்தான். அங்கு ஏன் பிறர் வந்து குடியேறவில்லை என்பது சிலமாதங்களில் தெரிந்தது. குளிர்காலத்தில் அங்கே வடக்கே இருந்து பெருக்கெடுத்துவந்த கடும் குளிர்காற்றில் மரங்கள் இலைகளை உதிர்த்து வெறுமை கொண்டன. உயிர்களெல்லாம் வளைகளுக்குள் சென்று ஒண்டின. இலைகளில் இருந்து காலையில் பனிக்கட்டிகள் ஒளிரும் கற்களாக உதிர்ந்தன.

ஆனால் அவ்விடம் விட்டுச் செல்வதில்லை என்று தூமன் முடிவெடுத்தான். அங்கேயே மலைக்குகைகளுக்குள் நெருப்பை அமைத்துக்கொண்டு அவர்கள் வாழ்ந்தனர். மலையில் இருந்து தவறிவிழுந்து இறந்த யானையின் ஊன் அவர்கள் அக்குளிர்காலத்தைக் கடக்க உதவியது. அதன் தோலை உரித்து மலைக்குகைக்குத் திரையாக்கினர். கடும்குளிரில் மூதாதையரை எண்ணியபடி அந்தக்குகைக்குள் வாழ்ந்தனர். அவர்களில் சிலரே அடுத்த சூரியனைக் கண்டனர். ஆனால் அவர்களுக்கு அங்கே வாழும் கலை தெரிந்திருந்தது.

அக்குடியின் மிகச்சிறிய குழந்தையாக பகன் வளர்ந்தான். அவன் கால்கள் தவளைக்கால்கள் போல வலுவிழந்து வளைந்திருந்தன. மூன்று வயதாகியும் அவன் கையூன்றி கால்களை முதலை வாலை என இழுத்துவைத்து மண்ணில் தவழ்ந்தான். விலாவெலும்புகள் தெரியும் ஒடுங்கிய மார்பும் மெலிந்த தோள்களும் கூம்பிய சிறுமுகமும் கொண்டிருந்தான். உலர்ந்த பெரிய புண்போன்ற வாயும் எலிகளுக்குரிய சிறுவிழிகளுமாக காலடியில் இழைந்து வந்த அவனை அவன் குடியினர் குனிந்து நோக்கினர். சினம் கொண்டபோது காலால் எற்றி அப்பால் தள்ளினர். அடிவயிறு தெரிய புழுதியில் மல்லாந்த பின் ஓசையின்றி கைகளால் நிலத்தை அள்ளி புரண்டு எழுந்து மீண்டும் அவன் அவர்களைத் தொடர்ந்தான்.

அவனை அவர்கள் புழு என்றனர். ஏனென்றால் வீங்கிய பெருவயிற்றை சுமந்தலைய முடியாதவனாக அவன் எப்போதும் எங்கேனும் அமர்ந்து பிறரை நோக்கிக் கொண்டிருந்தான். அவன் விழிகள் மட்டும் அசைந்துகொண்டிருந்தன. அவனுக்கு பசியே இருக்கவில்லை. அவன் உணவைக் கோருவதை எவரும் கண்டதில்லை. ஆகவே அவன் இருப்பதே அவன் உடல் காலில் தட்டுப்படும்போது மட்டும்தான் அவர்களுக்குத் தெரிந்தது. முதியவள் அவளுடைய உணவின் துண்டுகளைக் கொடுத்து அவனை வளர்த்தாள்.

தூமன் தன் குடியுடன் மலைமாடு ஒன்றை வலைக்கண்ணி வைத்துப் பிடித்தபோது அதன் கொம்புகள் மார்பில் நுழைய குருதி கக்கி உயிர்விட்டான். அவனை மலையுச்சிக்குக் கொண்டுசென்று பெரும்பள்ளத்தில் வீசுவதற்கு முன் மண்ணில் கிடத்தி வெற்றுடலாக்கினர். அவன் கச்சையை அவிழ்த்தபோது அதற்குள் ஒரு பொன்மோதிரம் இருப்பதைக் கண்டு அவன் குடியினர் திகைத்தனர். சிறுகுழந்தைகள் கைவளையாக அணியத்தக்க பெரிய வளையம் கொண்ட அது அழகிய நுண்செதுக்குகளுடன் ஒளிவிடும் செவ்வைரம் பதிக்கப்பட்டதாக இருந்தது. வெளியே எடுத்ததும் செங்குருதியின் ஒரு துளி எனத் தெரிந்தது. மெல்ல செங்கனல் போல எரியத் தொடங்கி சிற்றகல் சுடர் போல அலையடித்து ஒளிவிட்டது.

தூமனின் மைந்தனாக எஞ்சியவன் பகன் மட்டுமே. அந்த மோதிரத்தை அவனுக்கு அளித்தனர் மூத்தவர்கள். அவர்கள் கையில் இருந்து ஒளிவிட்ட வைரத்தைக் கண்டு அஞ்சி அவன் பின்னடைந்து முதியவளின் தோலாடையைப் பற்றி அவள் முழங்காலில் முகம் புதைத்துக்கொண்டான். “இது என்ன? அனல் போலிருக்கிறது. ஆனால் சுடவில்லையே?” என்று கேட்ட இளம்அரக்கனிடம் முதியவள் “இது ஒரு கல். வைரம் என்று பெயர்” என்றாள். “கல்லா? கல்லுக்கு எப்படி இந்த ஒளி வந்தது?” என்றார்கள் அவர்கள்.

முதியவள் புன்னகைத்து “நம் முன்னோர் சொல்லிவந்த கதையையே நான் அறிவேன். மண்ணுக்கு வெளியே தெரியும் பாறைகளெல்லாம் உள்ளே எரிந்துகொண்டிருக்கும் கனலின் கரியே. நம் காலுக்குக் கீழே அணையாத அனல் கொழுந்துவிட்டுக்கொண்டிருக்கிறது. அந்தச் செந்தழல்கடலின் சிறு துளி இது. தழலுருவான மண்ணின் ஆழம் ன்ன நிகழ்கிறது என்பதை பார்ப்பதற்காக வைத்திருக்கும் விழி. இது பூமியின் சினம்” என்றாள். அவர்கள் அதைச் சூழ்ந்து நோக்கிக் கொண்டிருந்தனர். சிறுவனாகிய பகன் அவர்களின் கால்களுக்குள் தன் தலையைச் செலுத்தி எவருமறியாமல் அதை நோக்கினான்.

அக்கணம் அதுவும் அவனை நோக்கியது. அவன் அஞ்சி பார்வையை விலக்கியபோதிலும் காணாச்சரடால் அவன் விழிமணியுடன் அது தொடுத்துக்கொண்டது. அவன் அதையே நோக்கிக்கொண்டிருந்தான். “இது இவன் உரிமை. இவன் தந்தை இவனிடம் ஒரு சொல்லும் பேசியதில்லை. அச்சொற்களெல்லாம் இந்தக் கற்கனலில் இதோ ஒளிவிடுகின்றன. என்றாவது அவன் அதைக் கேட்கட்டும்” என்று சொல்லி அதை களிமண்ணால் மூடி இலையில் சுற்றி தன்னிடமே வைத்துக்கொண்டாள் முதியவள். குனிந்து அவள் பகனை நோக்கியபோது அவன் விழிமயங்கி நிற்பதைக் கண்டாள். “மைந்தா” என்று அழைப்பதற்குள் அவன் மல்லாந்து விழுந்து தன் கைகால்களை இழுத்துக்கொண்டு துடிக்கத் தொடங்கினான்.

அன்றிரவு குகைக்குள் விறகனலின் வெம்மையருகே முதியவளின் வறுமுலைகளின் வெம்மையில் முகம் வைத்துக் கிடக்கையில் பகன் துயிலவில்லை. தொடர்ந்து பெருமூச்சுகள் விட்டு அசைந்துகொண்டிருந்தான். அரைத்துயிலில் புரண்ட முதியவள் அவன் விழிகளின் ஒளியைக் கண்டு “மைந்தா, துயிலவில்லையா?” என்றாள். அவன் “அது எவருடையது?” என்றான். “எது?” என்று கேட்டதுமே அவள் அவன் கேட்பதென்ன என்று புரிந்துகொண்டாள். “அந்தக் கைவளை?” என்றான் அவன். “அது கைவளை அல்ல மைந்தா. கைவிரல் மோதிரம்” என்று அவள் சொன்னாள்.

அவன் சிறு நெஞ்சு விம்மி அமைய பெருமூச்சுவிட்டு “எவருடைய விரல் அது? பேருருக்கொண்ட வானத்துத் தெய்வங்களா?” என்றான். அவள் அவன் புன்தலையை மெல்ல வருடி “பிறிதொருநாள் சொல்கிறேன். இன்று நீ துயில்க!” என்றாள். “அதை அறியாமல் நான் துயிலமுடியாது மூதன்னையே” என்றான் பகன். அவள் அவன் குரலில் அந்தத் தெளிவை அதுவரை கேட்டதில்லை. திகைத்து மீண்டும் குனிந்து அவன் விழிகளுக்குள் ஒளிவிட்ட அனலை நோக்கினாள். “ஆம், அவ்வாறென்றால் சொல்லவேண்டியதுதான்” என்றாள். அதன்பின் மெல்லிய குரலில் சொல்லத் தொடங்கினாள்.

படைப்பு முடிந்து களைத்து ஓய்வெடுக்க காலத்தை இருண்ட படுக்கையாக்கி கால்நீட்டி சரிகையில் பிரம்மன் “யக்ஷாமஹ!” என்று உரைத்தார். அவரது சொல்லில் இருந்து யக்‌ஷர்களும் யக்‌ஷிகளும் உருவானார்கள். அவர் அவர்களைக் கண்டு வியந்து “ரக்ஷாமஹ!” என்று உரைத்தார். அச்சொல்லில் இருந்து ராக்ஷசர்களும் ராக்ஷசிகளும் பிறந்தனர். யக்‌ஷர்களுக்கு விண்ணையும் ராக்‌ஷசர்களுக்கு மண்ணையும் அளித்தார் பிரம்மன். “ஒளியும் இருளையும் போல ஒருவரை ஒருவர் உண்டு ஒருவரை ஒருவர் நிரப்பி என்றும் வாழ்க!” என்று அவர்களை பிரம்மன் வாழ்த்தினார்.

அரக்கர்கள் கருவண்டுகளாக மாறி விண்ணில் பறக்க முடியும். யட்சர்களோ பொன்தும்பிகளாகி மண்ணில் இறங்க முடியும். அரக்கர்களே யட்சர்களைக் காணமுடியும். யட்சர்களிடம் பேசவும் மண உறவு கொள்ளவும் மைந்தரைப்பெறவும் முடியும். யட்சர்களுடன் இணைந்து அரக்கர் குலம் பெருகியது. மண்ணில் எண்ணியதுவரை வாழவும் மடிந்தபின் கரும்பாறையாகி காலத்தைக் கடக்கவும் அரக்கர்களுக்கு வரமளித்தார் பிரம்மன். இம்மண்ணில் நிறைந்திருக்கும் பாறைகளெல்லாம் வாழ்ந்து நிறைந்த அரக்கர்களே. அவர்களின் பெரும்புகழ் வாழ்க!

காலத்தனிமையில் எண்ணங்களில் மூழ்கி இருக்கையில் பிரம்மன் நெஞ்சில் “மூலம்?” என்ற வினா எழுந்தது. “ஏது?” என அவர் சித்தம் பல்லாயிரம் முறை எண்ணி எண்ணிச் சலிக்க அறியாமல் தன் விரலால் மண்ணில் ஹேதி என்று எழுதினார். அவ்வெழுத்திலிருந்து எழுந்த அரக்கன் ஹேதி என்று தன்னை உணர்ந்தான். புன்னகையுடன் பிரம்மன் அச்சொல்லை பிரஹேதி என்றாக்கினார். அச்சொல்லில் எழுந்தவன் தன்னை பிரஹேதி என்றழைத்தான்.

ஹேதியும் பிரஹேதியும் தங்களுக்குரிய மணமக்களைத் தேடி அலைந்தனர். அம்மணமக்களை பிரம்மன் அப்போதும் படைக்கவில்லை. ஆயிரமாண்டுகாலம் மண்ணை ஆயிரம் முறை சுற்றிவந்து தேடியபின்னர் பிரஹேதி துறவியாகி காட்டுக்குள் சென்று தவம் செய்து முழுமையடைந்தான்.

ஹேதி மணமகளைத் தேடிக்கொண்டு மேலும் ஆயிரமாண்டுகாலம் அலைந்தான். காணாமல் களைத்து முதுமை எய்திய ஹேதி தனித்து தன் மயானமண்ணில் நிற்கையில் கரியபேருருவுடன் காலன் அவன் முன் தோன்றினான். காலன் கண்களில் தெரிந்த ஒளியைக் கண்டு நடுங்கிய ஹேதுவின் அச்சம் கரிய நிழலாக அவனருகே விழுந்தது. அவளை அழகிய கரிய பெண்ணாக அவன் கண்டு காமம் கொண்டான். அந்தக் காமம் அவளுக்கு உயிர்கொடுத்தது. அவளை அச்சம் என்றே அவன் அழைத்தான்.

பயா அவனுடைய வாழ்க்கையை அளிக்கும்படி தந்தையிடம் கோர யமன் திரும்பிச்சென்றான். ஹேது பயாவை மணந்தான். அச்சத்தை வென்றவன் நிகரற்ற பேரின்பத்தை அடைந்தான். அவன் அறிய ஏதுமிருக்கவில்லை. அவன் சென்றடைய இடமும் இருக்கவில்லை. அக்கணம் மட்டுமே என்றானவனே இன்பத்தை அறிகிறான்.

ஒருநாள் கூதிர்காலத்தில் இடியோசையுடன் இந்திரன் எழுந்த வானின் கீழ் அவர்கள் நின்றனர். இந்திரனின் வஜ்ராயுதத்தைக் கண்டு பயா ஆசைகொண்டு கைநீட்டினாள். துணைவியின் கோரிக்கைக்கு ஏற்ப ஹேதி வானில் எழுந்து மின்னலை கையால் பற்றி அள்ளிக்கொண்டு வந்தான். அவன் உடலில் பாய்ந்த மின்னலின் பேரொளி அவள் உடலுக்குள் புகுந்து ஒரு மைந்தனாகியது. மின்னல்களை கூந்தலாகக் கொண்ட அக்கரியகுழந்தைக்கு அவர்கள் வித்யுத்கேசன் என்று பெயரிட்டனர்.

வித்யுத்கேசன் ஆண்மகனாகியதும் அவன் தனக்குரிய மணமகளைத் தேடி பூமியை ஏழுமுறை சுற்றிவந்தான். சோர்ந்து அவன் தென்கடல் முனையில் நிற்கையில் செந்நிற ஒளியுடன் அந்தி வானில் நிறைவதைக் கண்டு அதன்மேல் காமம் கொண்டான். அந்தியில் இருந்து அவனை நோக்கி செந்நிறக் குழலும் பொன்னிற உடலும் கொண்ட அழகி ஒருத்தி கடல்மேல் நடந்து வந்தாள். சந்தியாதேவியின் மகளான சாலகடங்கை தேவி அவனை தழுவிக்கொண்டாள். அவள் தொட்டதும் அவனும் பொன்னானான்.

அவர்களுக்கு பொன்னிறமான கூந்தல் கொண்ட அழகிய குழந்தை பிறந்தது. நிகரற்ற அழகுடன் இருந்த சுகேசனை கடற்கரையில் படுக்க வைத்துவிட்டு அலைகளில் ஏறி தன் கணவனுடன் காதலாடிக்கொண்டிருந்தாள் அவன் அன்னை சாலகடங்கை. குழந்தை பசித்து தன் கையை வாயில் வைத்து சங்கொலி போல முழங்கி அழுதது.

விண்ணில் முகில்வெள்ளெருது மேலேறி செஞ்சடை கணவன் துணையிருக்க சென்றுகொண்டிருந்த அன்னை பார்வதி அவனை குனிந்து நோக்கினாள். அவன் பேரழகைக் கண்டு அவள் உள்ளம் நிறைந்தது. அவள் முலைகனிந்து பால் மழைத்துளியாக அவன் இதழ்களில் விழுந்தது. குழந்தை அதை உண்டு இன்னமும் என்றது. சிரித்தபடி தேவி ஒரு சிறு மழையானாள்.

ஆலமுண்டவனின் அருகமைந்த சிவையின் முலைகுடித்து வளர்ந்த சுகேசன் தெய்வங்களுக்கிணையான ஆற்றலும் ஒளியும் கொண்டவனாக ஆனான். அரக்கர்களின் எல்லையை மீறி விண்ணேறிப்பறந்து ஒளிமிக்க வானில் விளையாடிக்கொண்டிருந்த தேவவதி என்னும் கந்தர்வ கன்னியைக் கண்டு காதல்கொண்டான். அவள் தந்தையான கிராமணியை வென்று அவளை கைப்பிடித்தான்.

சுகேசனுக்கும் தேவவதிக்கும் மூன்று மைந்தர்கள் பிறந்தார்கள். மாலி, சுமாலி, மால்யவான் என அவர்கள் அழைக்கப்பட்டார்கள். மூன்று உடன்பிறந்தவர்களும் சிவனை எண்ணி பெருந்தவம் செய்தனர். அத்தவப்பயனைக்கொண்டு மயனை மண்ணில் இறக்கி கடல் சூழ்ந்த தீவில் அவர்கள் தங்களுக்கென அமைத்த நகரமே இலங்கை. அங்கே அவர்கள் விண்ணவரும் நாணும் பெருவாழ்க்கை வாழ்ந்தனர்.

சுமாலி கேதுமதியை மணந்தார். கேதுமதி பத்து மைந்தரையும் நான்கு அழகிய பெண்களையும் பெற்றாள். பகை, புஷ்போஷ்கடை, கைகசி, கும்பிநாசி. அதன்பின்னர் சுமாலி தாடகை என்னும் யக்‌ஷர் குலத்து அழகியை மணந்தான். தாடகையின் வயிற்றில் சுபாகுவும் மாரீசனும் பிறந்தனர். அவர்களின் இளையோளாகப் பிறந்தவள் கைகசி.

பேரழகியான கைகசியை விஸ்ரவஸ் என்னும் முனிவர் கண்டு காதல்கொண்டார். அவர்கள் ஸ்லேஷ்மாதகம் என்னும் சோலையில் நிறைவாழ்க்கை வாழ்ந்து அரக்கர் குலச் சக்ரவர்த்தியான ராவண மகாப்பிரபுவை பெற்றனர். இலங்கையின் அரசனாகப்பிறந்த அரக்கர்கோமான் திசையானைகளை வென்றான். விண்மையமான கைலாயத்தை அசைத்தான். விண்ணவரும் வந்து தொழும்வண்ணம் இலங்கையை ஆண்டான்.

அயோத்தியை ஆண்ட ரகுகுலத்து ராமன் தன் துணைவியுடன் காடேகியபோது அவளைக் கண்டு காமம் கொண்டு கவர்ந்துசென்றான் ராவணன். ராமன் கிஷ்கிந்தையின் வானரப்படையை துணைகொண்டு இலங்கையைச் சூழ்ந்து வென்று ராவணனைக் கொன்றான். வென்றவன் போலவே வீழ்ந்தவனும் தெய்வமானான்.

பகனின் தலையை வருடி முதியவள் சொன்னாள் “மைந்தா, சுமாலியின் முதல்மகளான பகாதேவியின் கொடிவழி வந்த அரக்கர் குலம் நாம். நீ அரக்கர்குல வேந்தன் ராவணனின் வழித்தோன்றல் என்றுணர்க!” பகன் மெல்லிய குரலில் முனகினான். “ராகவராமனின் அம்புபட்டு களம்பட்டார் உன் மூதாதை ராவணன். அவரது உடலை அரக்கர்கள் எடுத்துச் சென்று எரிமூட்டினர். இலங்கை எரிந்து அணைந்துகொண்டிருந்தது. மூதாதையின் இருபது கரங்களின் எண்பது விரல்களில் இருந்த மோதிரங்களைக் கழற்றி குலத்துக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டனர்.”

“இந்த மோதிரம் அவரது இடது இறுதிக்கையின் சிறுவிரலில் போடப்பட்டிருந்தது. நம் குலத்து மூதாதையரால் வழிவழியாக காக்கப்பட்டு வருவது. நாம் நாடிழந்தோம். குலமிழந்தோம். காடுகளில் வாழத்தொடங்கினோம். காடுகளில் இருந்து காடுகளுக்கென பின்வாங்கிக் கொண்டே இருக்கிறோம். உடல்வலுவிழந்தோம். சித்தவிரைவை இழந்தோம். கோடைகாலத்து இலைகள் போல உதிர்ந்து அழிந்துகொண்டிருக்கிறோம்.”

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

பகன் எழுந்து முதியவளின் இடையைப்பிடித்து இழுத்தான். “இரு இரு” என அவள் தடுப்பதற்குள் அவள் தோல்கச்சையை இழுத்து அந்த இலைப்பொதியை தன் கையில் எடுத்தான். அதை விரித்து அந்த மோதிரத்தை கையிலெடுத்து வைரத்தை அனல் சுடர்ந்த விழிகளுடன் நோக்கிக் கொண்டிருந்தான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்