பிரயாகை - 54

பகுதி பதினொன்று : காட்டின் மகள் – 7

இடும்பவனத்தின் தெற்கு எல்லையில் இருந்த மூதாதையரின் நிலத்துக்கு இடும்பன் நடந்துசெல்ல அவன் குலத்தினர் சூழ்ந்து சென்றனர். பீமனை இடும்பி அழைத்துச்சென்றாள். பின்னால் பாண்டவர்கள் சென்றனர். தருமன் “அன்னையே, தாங்கள் அங்கு வராமல் இங்கேயே இருக்கலாமே” என்றான். குந்தி மெல்லிய ஏளனத்துடன் “நான் ஷத்ரியப்பெண் அல்ல என்று எண்ணுகிறாயா?” என்றாள். பீமன் “அன்னை வரட்டும். அவர் என் போரை இதுவரை நேரில் பார்த்ததில்லை அல்லவா?” என்றான். குந்தி புன்னகை செய்தாள்.

இடும்பர்களின் மூதாதை நிலம் சிறிய குன்று. அதில் மரங்களேதும் இருக்கவில்லை. அதன்சரிவில் அடர்த்தியான வாசனைப்புல் படர்ந்து காற்றில் அலையடித்தமை அக்குன்றை ஒரு பச்சைத் திரைச்சீலை என தோன்றச்செய்தது. குன்றின் உச்சியில் திறந்த வாயின் கீழ்த்தாடைப்பற்கள் போல வரிசையாக சப்பைக்கற்கள் நின்றிருப்பது தெரிந்தது. மேலேறிச்சென்றதும்தான் அவை எத்தனை பெரியவை என்பது புரிந்தது. ஐந்து ஆள் உயரமான கனத்த பட்டைக்கற்கள் சீரான இடைவெளியுடன் செங்குத்தாக நாட்டப்பட்டிருந்தன. அவற்றின் நடுவே காற்று க்ழிபட்டு சீறி வந்துகொண்டிருந்தது.

அவர்கள் அக்கற்களின் அடியில் சென்று கூட்டமாக நின்று கைகளைத் தூக்கியபடி மெல்ல அசைந்து கனத்த தாழ்ந்தகுரலில் ஓர் ஒலியை எழுப்பத் தொடங்கினர். பீமனின் அருகே நின்றிருந்த இடும்பியும் கைகளைத் தூக்கி அவ்வொலியை எழுப்பி காற்றிலாடும் மரம் போல அசைந்தாடினாள். அவர்களின் ஆட்டம் சீராக, ஒற்றை அசைவாக இருந்தது. ஒலி மெல்ல இணைந்து ஒன்றாகி ஒரே முழக்கமாக ஒலித்தது. சிலகணங்களில் அந்த ஓசை பீமனையும் உள்ளிழுத்துக்கொண்டது. தன் இரு கைகளையும் தூக்கி மெல்ல அசைந்தாடியபடி அவனும் அவ்வொலியை எழுப்பினான்.

நீண்ட சடைகளை தோள்மேல் அணிந்திருந்த முதியவர் இரு கைகளையும் தட்டியதும் அவர்களின் ஒலி நின்றது. அவ்வொலி கண்ணுக்குத்தெரியாத சரடால் அவர்களை கட்டி அசைத்தது போல அது அறுந்ததும் அவர்கள் அனைவருமே உடல் தளர்ந்து பெருமூச்சுடன் தள்ளாடினர். முன்னால் சரிந்தனர். ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு ஒற்றைச்செடி போல அசைந்தனர்.அந்த அமைதியில் அப்பால் மரக்கூட்டங்களில் ஒலித்த பறவைகளின் ஒலிகள் மிக உரத்துக்கேட்பது போல, பெருகிச்சூழ்வதுபோலத் தோன்றியது. புல்லின் அலைகள் கொந்தளித்துக்கொண்டிருப்பது போன்ற விழிமயக்கு உருவானது. நிலையற்று அசையும் நிலத்தில் அசைவையே அறியாதவை என அக்கற்கள் நின்றன.

இடும்பன் சென்று அந்தக் கற்களை ஒவ்வொன்றாகத் தொட்டு தலையைத் தாழ்த்தி வணங்கியபடி வந்தான். இடும்பி முன்னால் சென்று அதேபோலத் தொட்டு வணங்கினாள். நாற்பத்தாறு பெருங்கற்கள் அங்கே நின்றிருந்தன. இடும்பன் வந்து நடுவே நின்றதும் முதியவர் அவன் அருகே வந்து சிறிய முள்ளால் அவன் கைவிரலில் ஆழமாக குத்தினார். விரலை அழுத்தி துளித்த குருதியை நடுவே நின்றிருந்த கல்லின் மீது பூசி மீண்டும் வணங்கிவிட்டு இடும்பன் பின்னகர்ந்தான். இடும்பியும் அதன்மேல் குருதி சொட்டி வணங்கினாள்.

அத்தனை இடும்பர்களும் சேர்ந்து கைகளைத் தூக்கி பேரொலி எழுப்பினர். இடும்பன் தன் தோள்களிலும் தொடைகளிலும் ஓங்கி அறைந்து வெடிப்பொலி எழுப்பியபடி முன்னால் வந்து கைநீட்டி நின்றான். பீமன் “இங்கே நெறிகள் ஏதாவது உள்ளனவா?” என்றான். “கொல்வதுதான்… வேறொன்றுமே இல்லை” என்றாள் இடும்பி. “நான் அவரைக் கொல்ல விழையவில்லை” என்றான் பீமன். “அப்படியென்றால் நீங்கள் கொல்லப்படுவீர்கள். வேறு வழியே இல்லை” என்று இடும்பி சொல்லி தலையை திருப்பிக்கொண்டாள்.

பீமன் தன் மேலாடையைக் களைந்து நகுலனிடம் அளித்துவிட்டு இரு கைகளையும் முன்னால் நீட்டி இடும்பனை நோக்கியபடி அசைவற்று நின்றான். இடும்பன் உரக்க உறுமியபடி தொடையையும் தோளையும் தட்டிக்கொண்டு முன்னால் வந்தான். அவன் தோள்கள் தன் தோள்களை விட இருமடங்கு பெரியவை என்பதை பீமன் கண்டான். அவன் கைகளுக்குள் அகப்பட்டுக்கொண்டால் மீளமுடியாது.

பீமன் விழிகள் இடும்பன் மேலிருந்து விலகவில்லை. உலகில் இடும்பனன்றி எதுவுமே இல்லை என்பதுபோல அவன் அசைவற்று நோக்கி நின்றான். இடும்பனின் அசைவுகளுக்கு ஏற்ப அவனையறியாமலேயே அவன் தசைகள் மட்டும் அசைந்து சிலிர்த்தன. கணங்கள் நீண்டு நீண்டு செல்ல ஒரு வெடிப்பு நிகழ்ந்ததுபோல இடும்பன் கூச்சலிட்டபடி அவன் மேல் பாய்ந்து அவனைப்பிடிக்க வந்தான். பீமன் அந்த விசையை கணித்து விலகிக்கொள்ள அவன் தடுமாறி முன்னால் சென்று காலூன்றி நின்று திரும்பி பற்களைக் காட்டி கூவினான்.

பீமன் உணர்ச்சியற்ற முகத்துடன் நிற்க இடும்பன் சினம் கொண்டு கூவியபடி மீண்டும் பிடிக்கவந்தான். மூன்றாம் முறை எளிதில் அவனைப்பிடிக்க முடியாது என்று இடும்பன் புரிந்துகொண்டான். கைகளை நீட்டி பாய்ந்து வந்த விசையில் தன்னிடமிருந்து விலகிச்சென்ற பீமனை தலையில் எட்டி அறைந்தான். அந்த அறைதல் ஓசை அனைவரையுமே திடுக்கிடச்செய்தது. பீமன் தலைக்குள் சூரியன் வெடித்ததுபோல உணர்ந்தான். நீண்ட ரீங்காரத்துடன் அவன் தலை தரையை மோத அவன் அப்பால் எங்கோ சிதறிக்கிடந்தான்.

இடும்பன் வெறிச்சிரிப்புடன் அவனை ஓங்கி மிதிக்க வந்தான். பீமனின் சித்தம் மயங்கி பரவிக்கொண்டிருக்கையிலும் அவன் உயிர் உடலை புரட்டி தன்னை காத்துக்கொண்டது. மூன்றுமுறை உதைத்தும் முடியாமல் போகவே இடும்பன் கடும் சினம் கொண்டு இருகைகளையும் ஓங்கி முட்டிக்கொண்டு கூவியபடி பாய்ந்து அவன் மேல் விழுந்தான். பீமன் புரண்டுகொண்டு கையூன்றி எழுந்து தன் வலுவான காலால் இடும்பனின் தலையை ஓங்கி அறைந்தான். இடும்பனை அந்த அடி ஏதும் செய்யவில்லை. தலையை சிலுப்பியபடி பற்கள் தெரிய சீறிகொண்டு அவன் பாய்ந்தெழுந்தான்.

புல்லில் ஊன்றி பய்ந்து வந்த இடும்பனின் கால்களைத்தான் பீமன் நோக்கினான். அவன் உடலுக்கு ஒவ்வாதபடி அவை முழங்காலுக்குக் கீழே சிறியதாக இருந்தன. பாதங்கள் சிறுவர்களுடையவைபோல தெரிந்தன. இடும்பன் மீண்டும் அடிக்க வந்தபோது கையூன்றி நிலத்தில் அமர்ந்த பீமன் தன் காலைச் சுழற்றி இடும்பனின் இடது கணுக்காலில் ஓங்கி அறைந்தான். அலறியபடி நிலம் அதிர கீழே விழுந்த இடும்பன் மேல் தாவி அவன் நெஞ்சுக்குழியை ஓங்கி மிதித்தான்.

இருமியபடி இடும்பன் எழமுயல பீமன் தன் காலால் இடும்பனின் தலையை அறைந்தான். இடும்பன் மீண்டும் மல்லாந்து விழுந்தபோது அவனுடைய வலது கணுக்காலை ஓங்கி அறைந்தான். இடும்பன் எழமுயன்றபோது காலால் அவன் கண்களை நோக்கி அடித்தான். சூழ நின்ற இடும்பர்கள் அவர்களை அறியாமலேயே அந்தப் போருக்குள் உள்ளம் வந்துவிட்டிருந்தனர். ஒவ்வொரு அடிக்கும் அவர்களிடமிருந்தும் ஒலி எழுந்தது.

இடும்பனிலிருந்து வலியின் ஒலி எழுந்தது. அவன் விரைவாகப்புரண்டு கைகளை ஊன்றி எழுந்து நின்று கால்களை ஊன்ற முடியாமல் பக்கவாட்டில் சரிந்தான். அவன் இரு கால்கணுக்களும் உடைந்துவிட்டிருந்தன. எழுந்தபோது அவன் உடலின் பெரிய எடையை தாளாமல் அவை மடிந்தன. நிலத்தில் புரண்டு சென்ற இடும்பனை துரத்திச்சென்று அவன் இடையில் உதைத்தான் பீமன்.

வலியுடன் அலறிய இடும்பன் இருகைகளையும் ஓங்கி மண்ணிலறைந்து ஊன்றி கைமேல் எழுந்து கால்களை மேலே தூக்கியபடி நின்றான். அவன் கைகள் கால்களைவிட வலுவாக மண்ணில் ஊன்றியிருந்தன. கைகளை ஊன்றி துள்ளி குன்றின் சரிவில் பாய்ந்தோடி உருண்டு கீழே இறங்கி விளிம்பில் கிளை தாழ்த்தி நின்ற மரம் ஒன்றை அணுகி அதன் கிளையில் தொற்றி மேலேறி கால்களால் கிளையைப்பற்றிக்கொண்டு அமர்ந்து நெஞ்சில் ஓங்கி அறைந்து அறைகூவினான். “மூத்தவரே, முதலைக்கு நீர் போன்றது அவனுக்கு மரக்கிளைகளின் பரப்பு” என்றான் அர்ஜுனன். “அவன் கால்கள் மட்டுமே வல்லமையற்றவை.” என்றான் தருமன். பீமன் திரும்பாமல் “ஆம்” என்றபடி சீரான கால்வைப்புகளுடன் நடந்து அணுகினான்.

பீமன் மரக்கிளைகள் மேல் ஏறியதைக் கண்ட தருமன் “இவனும் குரங்குதான் பார்த்தா” என்றான். அர்ஜுனன் விரைந்து ஓடி பீமனைத் தொடர்ந்தான். பீமன் மரக்கிளைவழியாக அடிமரத்தை அடைந்ததும் போர்க்கூச்சலுடன் இடும்பன் அவனை தாக்க வந்தான். பீமன் அவன் பிடியில் இருந்து கிளைகள் வழியாகத் தாவித் தாவி விலகிச் சென்றபடி இடும்பன் கிளைகளைப்பிடிக்கும் முறையையும் தாவும் முறையையும் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான்.

ஒரு பெரிய கிளையில் இருந்து நெடுந்தூரம் காற்றில் தாவி மறுகிளை ஒன்றைப்பற்றி வளைத்து ஆடி அருகே வந்து இடும்பன் அவனை பற்றிக்கொண்டான். மூச்சுத்திணறியபடி பீமன் அவன் பிடியில் தொங்கிக்கிடந்தான். இடதுகையால் இடும்பனை வலுவில்லாமல் அறைந்தான். பின் தன் காலைத்தூக்கி வளைத்து கிளையை மிதித்து உச்சவிசையில் உந்தி இடும்பனை விலக்கினான். பிடிவிட்டு இடும்பனும் பீமனும் கிளைகளில் முட்டி மோதி கீழே வந்தனர். விழும்போதே இடும்பன் மரக்கிளைகளைப் பற்றி தாவி விலகிச்சென்றான்.

பீமன் கீழே விழுந்து ஒரு கிளையை ஒடித்து இன்னொரு கிளையை வளைத்து அதனாலேயே விசையை இழந்து மண்ணில் விழுந்து எழுந்து ஓடி மரக்கிளைமேல் ஏறிக்கொண்டான்.இடும்பன் ஓங்கி மரத்தை அறைந்து கூவியபடி கிளைகள் வழியாகப் பாய்ந்து வந்தான். பீமன் விலகிச்செல்வதற்குள் அவன் பீமனை அறைந்தான். அடியின் விசையில் தெறித்த பீமன் மரக்கிளைகளை ஒடித்தபடி விழுந்து ஒரு கிளையை பற்றிக்கொண்டான். அர்ஜுனன் கீழே வந்து நின்று “மூத்தவரே, அவன் தோள்வல்லமை மிக அதிகம். அவன் கைகளுக்கு சிக்காதீர்” என்று கூவினான். நடுவே நின்ற சிறு கிளைகளை உடலாலேயே ஒடித்து உதிர்த்தபடி இடும்பன் பீமனை அணுகினான். பீமன் மரங்களுக்குப் பின்னால் ஒளிந்து அவனிடமிருந்து தப்பமுயல அவன் சுழன்று வந்து மீண்டும் பிடித்துக்கொண்டான்.

பீமன் தன் கழுத்தை அவன் பிடியிலிருந்து காக்க கைகளை தோளுக்குமேல் வைத்துக்கொண்டான். இடும்பன் அவனை வளைத்து நெஞ்சோடு சேர்த்து வலக்கையால் இறுக்கியபடி இடக்கையால் கிளைகளைப்பற்றி ஆடித்தாவி காற்றில் எழுந்து சென்றான். பருந்து சிறியபறவையை கவ்விப்பறப்பது போலவே தெரிந்தது. அர்ஜுனன் அருகே வந்து நின்ற தருமன் “இளையோனே! எடு வில்லை!” என்று கூவினான். அர்ஜுனன் “பார்ப்போம்” என்றான். தருமன் “அவர்களால் பறக்க முடியும் என்பது உண்மைதான். கொல் அவனை…” என்று கூவி அவன் தோளைப்பிடித்து உலுக்கினான். “மூத்தவரே, அவர் எளிதில் தோற்பவரல்ல. பார்ப்போம்” என்றான்.

“அவர்கள் மாயம் தெரிந்தவர்கள்… நான் பார்க்கும்போதே கண்ணிலிருந்து அவன் மறைந்துவிடுகிறான்… அவன் என் இளையோனை கொல்வான். அவன் இறந்தால் அதன்பின் நான் உயிருடன் இருக்கமாட்டேன்” என்றான் தருமன். அர்ஜுனன் “அவர் இறக்கமாட்டார். எனக்கு வில் தேவையில்லை. இந்த உடைந்த கிளைகளே போதும் அவனை வீழ்த்த. அஞ்சாமலிருங்கள்” என்றான். மேலிருந்து கிளைகள் உடைந்து விழுந்து கிளைகளில் சிக்கி நின்றன. மேலும் கிளைகள் வந்து விழ அவை கொத்தாக கீழே கொட்டின. இலைகளும் தளிர்களும் சிறிய கிளைகளுடன் மழையாக பொழிந்துகொண்டிருந்தன.

மேலே நோக்கியபடி அர்ஜுனனும் தருமனும் காட்டுக்குள் சென்றனர். இடும்பி அழுதுகொண்டிருப்பதை அர்ஜுனன் கண்டான். இருகைகளையும் மார்பில் அடிப்பவள் போல அசைத்தபடி உதடுகளை அசைத்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். மேலிருந்து பெரிய மரம் விழுவதுபோல கிளைகளை ஒடித்துக்கொண்டு பீமன் கீழே வந்தான். இடும்பி அவனை நோக்கி ஓடினாள். பீமன் மண்ணில் விழுந்த விசையை வளைந்தும் ஒடிந்தும் கிளைகள் குறைத்தமையால் அவன் விழுந்ததுமே வலியுடன் புரண்டு எழுந்தான். இடும்பி அவனை அணுகி அவனை எழுப்ப கைநீட்டினாள். அதற்குள் பருந்து போல மேலிருந்து இறங்கிய இடும்பன் மீண்டும் அவனை இடக்கையால் எடுத்துக்கொண்டு மேலெழுந்து சென்றான்.

மரங்களுக்குமேல் அவர்கள் இருவரும் சண்டையிடுவதைப் பார்த்தபடி அவர்கள் கீழே ஓடினார்கள். “வானில் மேகங்களுக்குள் சண்டையிடுகிறார்கள்!” என்றான் நகுலன். “இடும்பன் கண்ணுக்குத்தெரியாமல் மறைகிறான்” என்றான் சகதேவன். பீமன் இடும்பனை உதறிவிட்டு தாவி தழைத்து நின்ற மரம் ஒன்றின் மேல் விழுந்து கிளைகளில் சறுக்கி இறங்க இடும்பன் கீழே வந்து அவனை பிடிக்கப்போனான். பீமன் புரண்டுகொள்ள அடி மரத்தின்மேல் விழுந்து இலைகள் அலைபாய மரம் அதிர்ந்தது.

கீழே விழுந்து மண்ணில் நின்ற பீமனை இடும்பன் மரக்கிளையில் கால்களை பின்னி தலைகீழாகத் தொங்கியபடி சுழன்று வந்து அறைந்தான். சரடில் ஆடிப்பறக்கும் சிலந்திபோலிருந்தான்.பீமன் வேர்கள் மேல் விழுந்து புரண்டு எழுந்து ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கி இடும்பன் மேல் வீசினான். அக்கணம் அங்கே மறைந்த இடும்பன் இன்னொரு மரத்தின் மேல் தோன்றி கொடி ஒன்றில் ஆடி இறங்கி வந்து பீமனை அறைந்தான். அடி வெடிப்பொலியுடன் விழ பீமன் தெறித்து விழுந்து இடும்பனின் இரண்டாவது அடியில் இருந்து உருண்டு தப்பினான். அவன் மூக்கிலும் வாயிலும் குருதி வழிந்துகொண்டிருந்தது. நிற்கமுடியாமல் தள்ளாடி விழுந்து மீண்டும் எழுந்தான். அவன் பார்வை மங்கலடைந்திருக்கவேண்டும். இடும்பன் பின்பக்கம் வந்து அவனை அறைந்தபோது தடுக்கமுடியாதவனாக அதை வாங்கிக்கொண்டான். இடும்பன் அவனை மேலும் மேலும் அறைந்தபின் அப்படியே தூக்கி சுழற்றி வீசினான்.

இறந்தவன் போல பீமன் அங்கேயே கிடந்தான். மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கியபடி இரு பெருங்கைகளையும் விரித்து வீசிக்கொண்டு இடும்பன் காத்திருந்தான். “பார்த்தா… இதுவே நேரம்” என்றான் தருமன். “அவனை நீ போருக்கு அழை!” அர்ஜுனன் “இன்னமும் மூத்தவரின் ஆணை வரவில்லை” என்றான். “அவன் சித்தம் கலங்கியிருக்கிறது. அவனால் நிற்கவே முடியவில்லை. இதுவரை இடும்பனை அவனால் ஒரு அடிகூட அடிக்கமுடியவில்லை” என்றான் தருமன்.

நகுலன் “குரங்குகள்!” என்றான். அர்ஜுனன் நோக்கியபோது மரக்கிளைகளின் மேல் குரங்குகள் வந்திருப்பதை கண்டான். கரிய உருவும் குட்டைவாலும் உள்ள கரடிபோன்ற பெரிய குரங்குகள். கிளைகளில் அமர்ந்தபடி அவை போரை நோக்கிக்கொண்டிருந்தன. பீமன் கையூன்றி எழுந்ததும் மீண்டும் அவனை அறைந்து வீழ்த்தினான் இடும்பன். பீமன் புரண்டு எழுந்து ஓடிச்சென்று ஒரு கிளையில் ஏறிக்கொண்டான். நகைத்தபடி கிளைவழியாகச் சென்ற இடும்பன் பீமனை அறைந்து மீண்டும் மண்ணில் விழச்செய்தான்.

கரிய முதுகுரங்கு ஒன்று மண்ணில் தாவி பீமனை அணுகி இருகாலில் எழுந்து நின்று நாய்க்குட்டியின் குரைப்பு போல ஒலியெழுப்பியது. இடும்பன் கிளைவழியாக வந்து அதை அறைந்தான். ஆனால் தலையைக் கூட திருப்பாமல் அது அவன் அடியை தவிர்த்தது. சீற்றத்துடன் அவன் திருப்பித்திருப்பி அடித்தான். அது அவனை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் பீமனை நோக்கி ஒலியெழுப்பிக்கொண்டிருந்தது. பீமன் அதை நோக்கி அதே ஒலியில் ஏதோ சொன்னான். பின்னர் பின்னால் பாய்ந்து சென்று மெல்லிய மரக்கிளைகள் இரண்டை பற்றிக்கொண்டு மேலே எழுந்து சென்றான். குரங்கு திரும்பி இடும்பனை நோக்கி வெண்பற்களைக் காட்டி தலையைத் தாழ்த்தி சீறியபின் ஒரு மரத்தில் ஏறிக்கொண்டது.

பொறுமையிழந்திருந்த இடும்பன் பாய்ந்து கிளைகள் வழியாகச் சென்று பீமனை அணுக பீமன் விலகிச்சென்றான். “அந்தக்குரங்கு மிகச்சரியான திட்டத்தை அளித்துவிட்டது மூத்தவரே. இன்னும் சற்றுநேரத்தில் இடும்பன் கொல்லப்படுவான்” என்றான் அர்ஜுனன். “இன்னும் ஒரு அடிகூட பீமன் அடிக்கவில்லை” என்றான் தருமன். “அடிக்கப்போகிறார்” என்றான் அர்ஜுனன்.

பின்னால் வந்து நின்ற குந்தி பெருமூச்சுடன் “இடும்பனின் எடை மிகுதி. அவனால் நுனிக்கிளைகளை அணுக முடியாது. பீமனிடம் நாலைந்து நுனிக்கிளைகளை ஒரே சமயம் பற்றிக்கொள்ளும்படி அக்குரங்கு சொல்லியிருக்கிறது” என்றாள். தருமன் அதை அதன்பின்னரே அறிந்தான். பீமன் மெல்லிய சிறு கிளைகளையே பிடித்துக்கொண்டு சென்றான். சிலசமயம் அக்கிளைகள் உடைந்தபோது இன்னொன்றில் நின்றுகொண்டான். இடும்பன் நெஞ்சில் அறைந்து கூவியபடி பீமனை பிடிக்கத் தாவி அந்தக் கிளை ஒடியவே இன்னொன்றில் விழுந்து அதைப்பிடித்துக்கொண்ட கணம் தாவி வந்த பீமன் இடும்பனை ஓங்கி தோளில் அறைந்தான்.

வெறிக்கூச்சலுடன் இடும்பன் பீமனைப்பிடிக்கத் தாவினான். பீமன் மெல்லிய கிளைகள் வழியாகவே சென்றான். கனத்த கிளைகளைப் பற்றி வளைத்துத் தாவிய இடும்பன் அவனை அறியாமலேயே மெல்லிய கிளைகளைப் பற்றி அவை ஒடிய கீழே விழுந்து இன்னொரு கிளையைப்பற்றிக்கொண்டான். இருவரும் கிளைகள் வழியாகப் பறந்தபோது ஒரு சிறிய கிளை உடைய இடும்பன் கீழே விழுந்து கீழே பெரிய கிளைகள் இல்லாமலியால் கைகால்களை அசைத்தபடி நேராக மண்ணில் வந்து விழுந்தான். அதேகணம் மேலிருந்து இடும்பன் மேலேயே பீமன் குதித்தான். இடும்பன் பெருங்குரலில் அலறியபடி எழுவதற்குள் அவன் கழுத்தை தன் கைகளால் பற்றிக்கொண்டு ஒரே மூச்சில் வளைத்து ஒடித்தான். எலும்பு தசைக்குள் ஒடியும் ஒலி கேட்டது. இடும்பனின் கால்கள் மண்ணில் இழுபட்டு துடிதுடித்தன. பீமனின் முதுகிலும் தோளிலும் தசைகள் இறுகி அசைந்தன. இரையை இறுக்கி உண்ணும் மலைப்பாம்பு போலிருந்தான்.

அந்த கணத்தின் துடிப்பு அங்கிருந்த அனைவர் உடலிலும் குடியேறியது. அர்ஜுனன் தன் கைகளை இறுக்கிக்கொண்டான். தருமன் “உலோகங்கள் உரசிக்கொள்வதுபோல உடல் கூசுகிறது இளையவனே” என்றான். “என் கால்கள் தளர்கின்றன. என்னை பிடித்துக்கொள்!” நகுலன் தருமனை பிடித்துக்கொள்ள அவன் தள்ளாடி ஒரு வேரில் அமர்ந்தான். குந்தி புன்னகையுடன் “அவன் தோள்களில் ஜயன் விஜயன் என்னும் இரு நாகங்கள் வாழ்கின்றன என்று சூதர்கள் பாடுவதுண்டு” என்றாள்.

பீமனின் தசைகள் தளர்ந்தன. இடும்பனை விட்டுவிட்டு எழுந்து நின்று தள்ளாடி கால்களை அகற்றி வைத்து கைகளால் கண்களை மூடிக்கொண்டான். அவனைச்சுற்றி மரக்கிளைகளில் இருந்து பலாப்பழங்கள் உதிர்வதுபோல குரங்குகள் குதித்தன. அவை இரு கால்களில் எழுந்து நின்று இருகைகளாலும் நெஞ்சில் அறைந்துகொண்டு இளம்நாய்கள் குரைப்பதுபோல ஒலியெழுப்பின. இடும்பி ஓடிச்சென்று பீமனைப்பிடித்தாள். ஒரு குரங்கு அவளை நோக்கி வெண்ணிறப்பற்களைக் காட்டி சீறி திரும்ப பீமன் ஒற்றைச் சொல்லில் அதை தடுத்தான்.

இடும்பி பீமனை அழைத்துச்சென்று மரத்தடியில் படுக்கச்செய்தாள். அவன் நெஞ்சு ஏறி இறங்கியது. இருமியபோது வாய் நிறைய குருதி வந்தது. கைகால்களில் மெல்லிய வலிப்பு வந்து சென்றது. இடும்பி எழுந்து காட்டுக்குள் ஓடினாள். குந்தி ஓடி அருகே சென்று பீமனின் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டாள். தருமன் பதைப்புடன் “இளையோனே, இங்கே மருத்துவர்கள் உண்டா?” என்றான். அர்ஜுனன் “மூத்தவரின் துணைவிக்குத் தெரியும்” என்றான். இடும்பி கைநிறைய பச்சிலைகளுடன் வந்தாள். அவற்றைக் கசக்கி சாற்றை பீமனின் வாய்க்குள் பெய்தாள். கசப்பு தாளாமல் அவன் உடல் உலுக்கிக் கொண்டது.

குரங்குகள் இடும்பனைச் சுற்றிவந்தபடி கைகளை மார்பில் அறைந்து அந்த ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தன. இடும்பர் குலத்து மூத்தவர்கள் சடலத்தை அணுகியபோது அவை எழுந்து கிளைகளில் அமர்ந்து கூச்சலிட்டன. மூத்த இடும்பர் இடும்பனின் தலையைப் பிடித்து சற்று தூக்கி வைத்து அடியில் ஒரு மரக்கிளையை வைத்தார். கைகால்களை ஒழுங்காகத் தூக்கி வைத்தபின் எழுந்து நின்று தன் தலையில் மும்முறை அறைந்து வானத்தை நோக்கி மெல்ல ஓசையெழுப்பினார். அவரது குலத்தவர் அனைவரும் அதேபோல தலையை அறைந்து ஓலமிட்டனர். இடும்பியும் எழுந்து நின்று அதையே செய்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

பீமன் கண்விழித்து அவர்களை நோக்கியபின் குந்தியின் கைகளைப்பற்றி புன்னகை செய்தான். இடும்பி பீமனின் இரு கைகளையும் தன் தோளில் எடுத்து முதுகில் அவனை தூக்கிக்கொண்டு நடந்தாள். பின்னால் பாண்டவர்களும் குந்தியும் சென்றனர். பீமனை கொண்டுசென்று ஒரு வெயிலில் பாறைமேல் படுக்கச்செய்துவிட்டு அவள் மேலும் பச்சிலைகளை பறித்துக்கொண்டு வந்தாள். குடிலுக்குச் சென்று பெரிய குடுவை ஒன்றை எடுத்து வந்து அதை நகுலனிடம் கொடுத்து அப்பச்சிலைகளை அதில் சாறுபிழியும்படி கைகாட்டினாள்.

அவன் பிழிந்துகொண்டிருக்கையிலேயே காட்டுக்குள் ஓடிச்சென்று கிளைகளில் ஏறி மேலே சென்று மறைந்து பின் கைகளில் இரு உடும்புகளுடன் மீண்டு வந்தாள். உடும்புகளின் கழுத்தை பற்களால் கடித்து உடைத்து தலைகீழாக குடுவையில் பிடித்து அழுத்தி கொழுத்த குருதியை அதில் வீழ்த்தினாள். வால் சுழற்றி தவித்த உடும்புகளின் கண்கள் பிரமித்து அவர்களைப் பார்த்தன. பச்சிலைச்சாற்றையும் உடும்புச்சோரியையும் நன்றாகக் கலக்கி பீமனிடம் கொடுக்க அவன் அதை வாங்கி ஒரே மூச்சில் குடித்தான்.

“சரியாகிவிடும்… இன்னும் இருமுறை குடித்தால்போதும்” என்றாள் இடும்பி. “அசையக்கூடாது… மூன்றுநாட்கள் படுத்திருக்கவேண்டும்!” பீமனின் ரத்தம் வழிந்த வாயைப்பார்த்தபின் “இவன் இவர்களில் ஒருவன் என்பது இப்போதுதானே தெரிகிறது” என்றான் தருமன். “அவன் மாருதன். பெருங்காற்றுகளின் மைந்தன். ஆகவேதான் மாருதர்கள் வந்து அவன் வெற்றியை கொண்டாடுகிறார்கள்” என்று குந்தி சுட்டிக்காட்டினாள். அவர்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சூழ்ந்து மரக்கிளைகள் முழுக்க குரங்குகள் அமர்ந்திருந்தன. “நாம் விலகிச்செல்வோம். அவர்கள் அருகே வரட்டும்” என்றான் அர்ஜுனன்.

அவர்கள் விலகியதுமே குரங்குகள் அருகே வந்தன. பெரிய தாட்டான் குரங்கு ஒன்று பீமனின் வாயை முகர்ந்து நோக்கியபின் நெஞ்சில் தலைவைத்துப்பார்த்தது. பெண்குரங்குகள் அவன் கைகளையும் கால்களையும் பிடித்துப்பார்த்தன. ஒரு குட்டி அவன் முகத்தருகே சென்று மிக அண்மையில் மூக்கை வைத்து நோக்கி பற்களைக் காட்டியது. புன்னகையுடன் அர்ஜுனன் “என்னிடம் சண்டைக்கு வா என்கிறான்” என்றான். “அப்படியா?” என்றான் தருமன். “ஆம், அவனுக்குப்பொறாமை” என்றான் நகுலன். “அழகிய குட்டி. அவனுக்கு சுபாகு என்று பெயரிடுகிறேன்” என்றான் தருமன்.

இரு பெண்குரங்குகள் கைகளில் பச்சிலைகளுடன் வந்து பீமனுக்குக் கொடுப்பதைக் கண்ட குந்தி “இடும்பி அளித்த அதே பச்சிலை… குரங்குகளிடமிருந்து இவர்கள் கற்றுக்கொண்டிருக்கலாம்” என்றாள். பீமன் அந்தப்பச்சிலையை வாங்கி மென்றான். பச்சிலையை வாயிலிட்டு மென்ற ஒரு குரங்கு எச்சிலை அவன் புண்கள் மேல் உமிழ அவன் எரிச்சலில் முகம் சுளித்து அசைந்தான்.

“எங்கோ இவர்களின் குலமூதாதை அனுமன் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் சிரஞ்சீவி என்கிறார்கள்…” என்றான் தருமன். “ஆம் மூத்தவரே, இன்று மூத்தவர் போரிடும்போது அதை உணர்ந்தேன். அவரது காவல்தெய்வம் அவருடன் இருந்துகொண்டிருக்கிறது” என்றான் அர்ஜுன.ன் “இதோ வந்து அவரது புண்களை ஆற்றுவதும் அவரே. விரைவிலேயே மூத்தவர் நலமடைந்துவிடுவார்.”

பெரிய மரக்கிளைகளை வெட்டி படுக்கைபோல கட்டி அதன்மேல் இடும்பனின் உடலை தூக்கிவைத்தனர் இடும்பர் குலத்து மூத்தவர்கள். ஈச்சைமரத்தின் பச்சை இலைகளால் உடலை நன்கு மூடி நாராலும் கொடிகளாலும் கட்டினர். முகம் மட்டும் திறந்திருந்தது. அதை நான்கு பேர் தூக்கிக்கொள்ள பிறர் தலையை அறைந்து மெல்லிய ஒலியுடன் அழுதபடி பின்னால் வந்தனர். அவர்களின் அழுகையும் ஒரே குரலாக பிசிறின்றி சேர்ந்திருந்தது. மரக்கிளைகளில் தொங்கிய இல்லங்களில் இருந்து கொடிஏணிகள் வழியாக இறங்கி வந்த குழந்தைகள் திகைத்தவர்களாக நோக்கி நின்றனர். இடும்பியும் அவர்களுடன் அழுதபடி சென்றாள்.

பீமன் கையூன்றி எழுந்தான். அர்ஜுனனும் தருமனும் அருகே ஓடினர். “இளையவனே, நீ அசையக்கூடாது…” என்றான் தருமன். “இல்லை, நான் அங்கே அவர்களுடன் செல்லவேண்டும். அவர்களின் குலத்தில் ஒருவனாகப் போகிறேன். அவர்கள் குலம் கண்ட மாவீரர்களில் ஒருவன் அவன்” என்றான் பீமன். அவனால் நிற்கமுடியவில்லை. அர்ஜுனனும் தருமனும் அவனை இருபக்கமும் பிடித்துக்கொண்டனர்.

மெல்ல காலடி வைத்து பீமன் நடந்தான். அவன் எடையை தாளமுடியாமல் இருவரும் தள்ளாடினர். பீமன் வலப்பக்கம் காலெடுத்துவைத்தபோது முழு எடையும் தருமன் மேல் பதிய அவன் பதறி “பிடி… [பிடி பார்த்தா” என்றான். கனத்த கற்சிலை ஒன்றை கொண்டுசெல்வதுபோல் தோன்றியது அர்ஜுனனுக்கு. தருமனின் குரல் கேட்டு இடும்பி திரும்பி நோக்கினாள். ஓடி அருகே வந்து அவர்களை விலகச் சொல்லிவிட்டு பீமனை தன் வலுவான வலக்கையால் பிடித்துக்கொண்டு நடத்திசென்றாள்.

அந்த ஊர்வலம் குன்றின் சரிவை அடைந்தது. மூங்கில்தட்டு சரிந்து மேலெழுந்தபோது இடும்பனின் பச்சை ஓலை சுற்றிக்கட்டப்பட்ட உடலின் சடைகள் தொங்கிய பெருமுகம் நேர் முன்னால் தெரிந்தது. விழிகள் திறந்திருந்தன. இடும்பன் அவர்களின் தெய்வங்களின் முகத்தை அடைந்திருந்தான். “இங்கே திறந்த விழிகளுடன்தான் சடலங்களை அடக்கம்செய்கிறார்கள் என நினைக்கிறேன்” என்றான் தருமன். கூட்டம் மேலேறிச்செல்ல பீமன் நின்று “என்னைத் தூக்கு” என்றான். இடும்பி அவன் இருகைகளையும் மீண்டும் முதுகில் கொடுத்து எளிதாக தூக்கிக்கொண்டாள்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

காற்று ஒன்று கடந்துசென்றபோது குன்றின் புற்பரப்பு அலையடிக்க அது நெளிந்து பறந்து வானிலெழப்போவதுபோல் தோன்றியது. மேலே வானத்தின் புன்னகை போல நின்றிருந்த மாபெருங்கற்களின் வரிசையை அர்ஜுனன் நிமிர்ந்து நோக்கினான். “இன்னொரு பெருங்கல்…” என்றான் தருமன். “ஒருவேளை நமது பேரரசுகள் தூசுகளாக அழியும். நமது பெயர்களெல்லாம் மறக்கப்படும். அப்போதும் இந்தக் குன்றின் உச்சியில் திசைகள் சூழ இவை நின்றிருக்கும்.”

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்