பிரயாகை - 50
பகுதி பதினொன்று : காட்டின் மகள் – 3
அதிகாலையிலேயே இரண்டு கருங்குரங்குகள் வந்து பீமனை எழுப்பின. குடிலுக்கு நேர்கீழே இருந்த இரு கிளைகளில் அமர்ந்து எம்பி எம்பிக்குதித்து வாயைக்குவித்து அவை குரலெழுப்பின. பீமன் எழுந்து உடலில் ஒட்டியிருந்த மெல்லிய கரிநூல்களை தட்டியபடி அவற்றைப் பார்த்தான். அர்ஜுனன் புரண்டுபடுத்து “என்ன சொல்கிறார்கள்?” என்றான். பீமன் குடிலுக்கு வெளியே சென்று கிளைகளில் கால்வைத்து நின்று “தெரியவில்லை” என்றபின் பக்கவாட்டில் நோக்கி “இதுவா?” என்றான். அர்ஜுனனை நோக்கி திரும்பி “ஒரு மலைப்பாம்பு… நம் வாசனையை அறிந்து வந்திருக்கிறது. நம் அளவைக்கண்டு பின்வாங்கி கிளையில் சுருண்டு அமர்ந்திருக்கிறது” என்றான்.
அர்ஜுனன் “உங்கள் குலத்தவர் எப்போதும் துணையிருக்கிறார்கள் மூத்தவரே” என்றான். “அவர்கள் ஓர் அரசு. ஒற்றர்கள், காவலர்கள், மேலாளர்கள், அரசன், அரசியர் என விரிவான அமைப்பு அவர்களுக்கு உண்டு” என்றபின் “ஆனால் அன்னை நம்பும் அறம் இல்லை” என்றான். அர்ஜுனன் சிரித்தான். பீமன் நூலேணிவழியாக இறங்கத் தொடங்கினான். “இன்னும் விடியவில்லை மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் குரங்குகளுக்கு விடிந்துவிட்ட்து” என்றபடி பீமன் மண்ணிலிறங்கி நின்று கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தான். “இளையோனே, மரங்களில் இரவுறங்கும்போதுதான் தெரிகிறது, மண் எத்தனை மகத்தானது என்று” என்றான் பீமன்.
குரங்குகள் மேலே கிளைகளை உலுக்கி ஒலியெழுப்பியபடி தொடர பீமன் இலைத்தழைப்புகள் நடுவே நடந்துசென்றான். இலைகளில் இருந்து சொட்டிய நீரில் அவன் உடல் விரைவிலேயே ஈரமாகி சொட்டத் தொடங்கியது. அவன் அசைவில் இலைநுனிகளில் அமர்ந்திருந்த தவளைகள் எம்பிக் குதித்து அகன்ற ஒலி எழுந்தது. மிக அருகே சல்லிக் கிளை நீட்சியில் பச்சைப்பாம்பு ஒன்று ஐயத்துடன் தீபட்ட பட்டு நூல் போல பின்னால் வளைந்து விலகியது. மரங்களுக்குமேல் குரங்குகள் கூடி சேர்ந்து ஒலி எழுப்பின. பீமன் அவற்றின் வினாக்களுக்கு எதிர்மொழி சொல்லிக்கொண்டே நடந்தான்.
புதர்களுக்கு அப்பால் ஒரு யானை இருளுடன் கரைந்து நின்றிருந்தது. செவிகளை பின்னால் மடித்து அவன் வாசனைக்காக துதிநுனி தூக்கி நீட்டியது. முரசில் கோல் இழுபடும் ஒலியில் உறுமி யாரென்று கேட்டது. அவன் நின்று அதை நோக்கினான். அதன் பெரிய தந்தங்கள் அடிமரம் போல இருளுக்குள் தெரிந்தன. அது அருகே வராதே என்றது. பீமன் அதை நோக்கி உரக்க உறுமி தான் யாரென்று சொன்னதும் அது எதிர்மொழி எழுப்பியபின் திரும்பி ஒரு கிளையை இழுத்து வளைத்தது. அதன் அருகே இன்னொரு பிடியானை நின்றிருப்பதை பீமன் அதன்பின்னர்தான் கண்டான்.
தரையில் புதர்களுக்கு அடியில் ஊறிச்சேர்ந்து ஓடிய மெல்லிய நீரோட்டத்தைக் கண்டு அதைத் தொடர்ந்துசென்றான். சிற்றோடைகள் அதிலிணைந்து அது பெருகி உருளைப்பாறைகளை தாவிக்கடந்து நுரைத்து கொட்டி ஒலியுடன் புதர்களுக்குள் மறைந்து மெல்லிய பளபளப்புடன் மீண்டு வந்து சென்றுகொண்டிருந்தது. அது சென்று சேர்ந்த சிற்றாற்றின் உள்ளே ஏராளமான பாறைகள் இருந்தன. நீரோட்டம் அவற்றில் மோதி வெண்நுரைக்கொந்தளிப்பாக ஓலமிட்டது. பீமன் ஆற்றை நோக்கியபடி சிலகணங்கள் நின்றான். பின்னர் இரு கைகளையும் தூக்கி குரங்கு போல ஓலமெழுப்பி மெல்ல குதித்தான்.
குரங்குகள் அவன் தலைக்குமேல் நின்று கிளைகளை உலுக்கி கூச்சலிட்டன. ஓர் அன்னைக்குரங்கு அவனை நோக்கி குனிந்து உதட்டை நீட்டியது. பின் தொங்கி ஆடி இறங்கி கையூன்றி நடந்து வந்து ஒரு பாறைமேல் அமர்ந்துகொண்டது. தொடர்ந்து குரங்குகள் இறங்கி வந்து பாறைகளில் அமர்ந்துகொண்டன. குழவிகளை வயிற்றில் அணைத்துக்கொண்ட அன்னையர், கனத்த வயிறு கொண்ட சூலுற்றவர், சிவந்த முகம் கொண்ட தாட்டான்கள் இருவர், வால்தூக்கி தாவித்தாவி விளையாடிய புன்தலை சிறுவர்கள். பீமன் நீரை அள்ளி முகத்தைக் கழுவினான். நாலைந்து சிறுவர்கள் வந்து குனிந்து நீரை வாயால் குடித்தபின் அவனை நோக்கி இதழ் நீட்டி சிரித்தனர். அன்னைக்குரங்கு தன் மைந்தனை நீர் அருகே செல்லவேண்டாம் என்று எச்சரித்தது.
முதிய தாட்டான் எம்பிக்குதித்து ஓசையிட்டபடி ஓடி கரையில் நின்று பிறரை விலகி வரும்படிச் சொல்லி எச்சரித்தது. வால்களைத் தூக்கியபடி குரங்குகள் பாய்ந்து காட்டின் முகப்பை அடைந்து அடிமரங்களில் தொற்றி ஏறிக்கொண்டன. உலர்ந்த கட்டை மிதந்து வருவதுபோல பெரிய முதலை ஒன்று அலையில்லாமல் அணுகியது. தாட்டான் பீமனை கரையை விட்டு விலகும்படிச் சொல்லி கூவி எம்பி எம்பிக் குதித்த்து. அன்னைக்குரங்கு ஒன்று அழத்தொடங்கியது. பீமன் நீரில் இறங்கி முதலையை அணுகி அதன் தலைமேல் ஓங்கி அறைந்தான். நீரில் அலைகிளர அது தன் வாலைச் சுழற்றி அவனை அறைய அதை இடக்கையால் பிடித்துக்கொண்டான். வலக்கையால் அதன் கீழ் வாயைப்பிடித்து தூக்கி எடுத்தான். வில்லை வளைப்பது போல வளைத்து சுருட்டி கையில் எடுத்தபடி கரையேறினான்.
குரங்குகள் ஓசையின்றி விழித்த சிறிய கண்களும் திறந்த சிவந்த வாய்களுமாக அசைவிழந்து இருந்தன. பின்னர் குட்டிகள் கூச்சலிட்டபடி வாலைத் தூக்கி கீழே பாய்ந்து ஓடிவந்தன. அணுகியதும் அச்சம் எழ விலகி இரு கால்களில் எழுந்து வாலை ஊன்றி நின்று வாயைத் திறந்து கூச்சலிட்டன. பீமன் அந்த முதலையை தன் கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டு நடனமிட்டான். குட்டிகள் துள்ளி அவனருகே வந்து சுழன்று எம்பிக் குதித்து நடனமிட்டன. தாட்டான்கள் ஐயத்துடன் இறங்கி மரத்தடியில் அமர்ந்துகொள்ள அன்னையர் மைந்தரை வந்துவிடும்படிச் சொல்லி கூவின. இளமங்கையர் சிலர் கூவியபடி வந்து சேர்ந்துகொண்டனர்.
பீமன் முதலையை கீழே போட்டு அதன் தலையை மண்ணுடன் மிதித்து இறுக்கி இன்னொரு காலால் வாலையும் மிதித்துக்கொண்டான். ஒரு சிறுவன் ஐயத்துடன் பீமனை நோக்கி கண்சிமிட்டியபின் வாயைக்குவித்து ஓசையிட்டான். “வா” என்றான் பீமன். அவன் அஞ்சி பின்னடைந்தான். பின்னர் “உண்மையாகவா?” என்று மெல்ல அருகே வந்தான். “ஆம், வா” என்றான் பீமன். அவன் அருகே வந்து மெல்ல முதலையை தொட்டுப்பார்த்தான். பின்னர் பாய்ந்து அதன்மேல் ஏறி அமர்ந்து இரு கால்களில் எழுந்து எம்பிக்குதித்தான். இன்னும் இரு சிறுவர் பீமனை நோக்கி கண்சிமிட்டியபின் ஓடிவந்து அவனுடன் சேர்ந்துகொண்டனர்.
சற்று நேரத்தில் முதலையைச்சுற்றி குரங்குகள் குவிந்து கூச்சலிட்டு எம்பிக் குதித்தன. அதன் உடலை குனிந்து முகர்ந்தும் கடித்தும் நோக்கின. ஒரு சிறுவன் அதன் மங்கிய கண்களை குனிந்து நோக்கி கை விரல் நீட்டி தொடமுயன்றான். பின்னர் கூ என ஒலியெழுப்பி விலகி நின்று எம்பிக்குதித்து நடனமிட்டான். அத்தனை சிறுவர்களும் அதன் கண்களைத் தொட வந்து முண்டியடித்தனர். முதலையின் வால்நுனி நெளிந்துகொண்டே இருந்த்து. அதை பிடிக்கமுயன்ற குரங்குகள் அஞ்சி பின்னடைந்தும் பின்னர் நெருங்கி கைநீட்டியும் கூச்சலிட்டன.
பீமன் முதலையை விட்டான். அது திகைத்து இருகால்களை ஊன்றி தலைதூக்கி சுற்றிலும் நோக்கி திகைத்து நின்றது. குரங்குகள் ஓலமிட்டபடி விலகிச்சிதறி ஓடியபின் மெல்ல அச்சமிழந்து அருகே வந்தன. முதலில் வந்த சிறுவன் முதலையின் வாயருகே வந்து எழுந்து நின்று இரு பக்கங்களையும் சொறிந்தபடி எம்பி கூச்சலிட்டு நடனமிட்டான். முதலை திரும்பி நீரை நோக்கி ஓடி அலையில்லாமல் இறங்கி மூழ்கி மறைந்தது. கூச்சலிட்டபடி குரங்குகள் ஓடிச்சென்று நீர் விளிம்பருகே நின்று எம்பிக்குதித்து கூவின. சிறுவன் திரும்பி பீமனிடம் “சிறிய முதலை!” என்றான். பீமன் “ஆம்” என்றான். சிறுவன் “அதை நானே கொன்றிருப்பேன்” என்றான். அவன் அன்னை அவன் வாலைப்பிடித்து இழுத்து “வா” என்று அதட்டிவிட்டு பீமனை நோக்கி புன்னகைத்தாள்.
ஆற்றின் பொடிமணல் எடுத்து பல்தேய்த்தபின் நீரில் இறங்கி உடலின் கரியை கழுவிவிட்டு பீமன் கரையேறினான். ஈரம் சொட்டும் உடலுடன் அவன் காட்டுக்குள் நுழைந்தபோது ஏதோ ஒன்றை உணர்ந்து எச்சரிக்கையானான். குரங்குகள் அக்கணமே ஒலிஎழுப்பின. அவன் தன் வலக்கையை நீட்டி அருகே நின்ற சிறிய மரம் ஒன்றைப்பற்றினான். சிலகணங்கள் அசைவிழந்து நின்றான். எதிரே நின்ற பெரிய வேங்கைமரத்தின் பின்னால் ஒரு காலையும் தோளையும் கண்டான். மரத்தை அசைத்து வேருடன் பிடுங்கிக்கொண்டான். காலால் உதைத்து அதன் கிளைக்கவைக்குமேல் இலைத்தழைப்பை ஒடித்து வீசிவிட்டு வேர்க்கவையை தலையாக்கி கதைபோல பிடித்தபடி முன்னால் நகர்ந்தான்.
ஓவியம்: ஷண்முகவேல்
“யாரது?” என்றான் பீமன். மரத்தின் பின்னாலிருந்து மெல்ல விலகி முன்னால் வந்தவள் அவனளவுக்கே உயரமும் பருமனும் கொண்ட கரிய பெண். இடையில் புலித்தோலால் ஆன ஆடை மட்டும் அணிந்திருந்தாள். உடலெங்கும் வெண்சாம்பல் பூசப்பட்டிருந்தது. எருமைக்கன்றின் பெரிய கருவிழிகளும் கூரிய சிறு மூக்கும் குவிந்த சிறிய உதடுகளும் கொழுத்த கன்னங்களும் கொண்ட வட்ட முகம். மண் அணிந்த யானைமத்தகம் என எழுந்த கரிய முலைகள். குதிரைத் தொடைகள். நகர்ப்பெண்கள் போல ஒருபக்கமாக ஒசிந்து நிற்காமல் இரு கால்களையும் சற்றுப் பரப்பி வேங்கை மரமென இறுகிய இடையும் கல்லால் செதுக்கப்பட்ட்து போன்ற உறுதியான வயிறுமாக நேராக நின்றாள். அச்சமோ தயக்கமோ இல்லாமல் அவன் விழிகளை அவள் விழிகள் சந்தித்தன.
“நீர் யார்?” என்று அவள் கனத்த குரலில் கேட்டாள். நகர்ப்பெண்களின் குரலில் இருந்த மென்மையும் குழைவும் அற்ற நேர்க்குரல். குறுமுழவை கையால் மீட்டியதுபோல. ஆனால் அதில் மேலும் பெண்மையின் அழகு இருந்தது. பீமன் புன்னகையுடன் “என் கையில் படைக்கலன் இருக்கிறது. ஆகவே நீ அதைச் சொல்வதே உனக்கு நல்லது” என்றான். அவள் தூய வெண்பற்கள் ஒளிவிட புன்னகைத்து “நீ எப்படி எங்கள் மொழியை பேசுகிறாய்?” என்றாள். “பைசாசிகம் என்று சொல்லப்படும் மொழிகள் அனைத்துமே ஒரே சொல்லமைப்பு கொண்டவை… நான் அவற்றை கற்றிருக்கிறேன்” என்றான் பீமன். “பைசாசிகம் என்றால்?” என்றாள் அவள். “பேய்கள்… குருதியுண்ணும் தீய தெய்வங்கள்” என்றான் பீமன் புன்னகையுடன்.
அவள் கழுத்தைத் தூக்கி உரக்க நகைத்தபோது கண்கள் இடுங்கி முகம் பேரழகு கொண்டது. “சரியாகவே புரிந்துவைத்திருக்கிறீர்கள். நாங்கள் கண்ணுக்குத்தெரியாமல் மறையும் பேய்கள். உங்கள் குருதியை உண்ணுபவர்கள்…” என்றாள். “இங்கே அரக்கர்கள் வாழ்வதாக படகோட்டி சொன்னான்… நீ அரக்கர்குலப் பெண்ணா?” என்றான் பீமன். “ஆம், என்ன ஐயம்?” என்றாள். “அப்படியென்றால் மாயமாக மறைந்துபோ பார்ப்போம்” என்று பீமன் அவளை நெருங்கினான். அவள் மெல்ல அசைந்தாள். மறுகணம் அங்கே அவளிருக்கவில்லை. அவன் திகைத்து நின்று திரும்ப நோக்க தலைக்குமேல் மரக்கிளையில் அமர்ந்து சிரித்து “இங்கிருக்கிறேன்” என்றாள்.
பீமன் மரப்பொந்தில் காலெடுத்து வைத்து கிளையில் ஏறி நிமிர்ந்தபோது அவள் அங்கிருக்கவில்லை. அவன் சிறிய அச்சத்துடன் நோக்கியபோது இன்னொரு மரக்கிளையில் இருந்து கைகொட்டிச் சிரித்தாள். பீமன் நகைத்து “ஆம், ஒப்புக்கொள்கிறேன். நீ மாயம் அறிந்தவள். பேய்மகள்” என்றான். அவள் கீழிறங்கியது ஒரு இலை உதிர்வதுபோலிருந்தது. பீமன் ஓசையுடன் இறங்கி கைகளை விரித்து நின்றான். அவள் “என் பெயர் இடும்பி. இந்தக் காட்டின் அரசனின் தங்கை” என்றாள். பீமன் “நான் அஸ்தினபுரியில் பிறந்தவன். என் பெயர் பீமன்” என்றான்.
“இங்கே நாங்கள் அயலவரை உள்ளே விடுவதில்லை. அவர்களை உடனே கொன்றுவிடுவோம்” என்றாள் இடும்பி. “நீ என்னைக் கொல்லவில்லையே?” என்றான் பீமன். “நேற்று நீங்கள் உள்ளே நுழைந்ததுமே உங்கள் வாசம் எங்களுக்குக் கிடைத்துவிட்டது. என் தமையன் என்னிடம் உங்களைக் கொன்று மீளும்படி ஆணையிட்டார். நீங்கள் காட்டில் வரும்போது நான் பின்னால் வந்தேன்” என்றாள். பீமன் “குரங்குகள் சொல்லவில்லையே” என்றான். “குரங்குகளை ஏமாற்ற எங்களுக்குத் தெரியும்” என்றாள் அவள்.
“உங்களை நான் கண்காணித்தேன். உங்களைக் கொல்வது எளிதல்ல என்று புரிந்துகொண்டேன். உங்கள் இளையவர் மாபெரும் வில்லாளி. அவர் பறவைகளை ஒலியை மட்டும் கேட்டு அம்பெய்து வீழ்த்துகிறார். அது அம்புகூட இல்லை. வெறும் நாணல். அப்பறவையின் நரம்புமையத்தில் அம்பு பட்டால் மட்டுமே அதைக்கொல்லமுடியும். அது அவருக்கு மிக எளிதாக இருக்கிறது. அவர் காவல் காக்கும்வரை பிறரை ஒன்றும் செய்யமுடியாது என்று உணர்ந்தேன்” என்றாள் இடும்பி. “உங்களை மொத்தமாகக் கொல்ல என்னால் முடியாது என்று கணித்தேன். எங்கள் குலம் படைதிரண்டு வந்தாகவேண்டும். அதற்குமுன் ஒருவரைக் கொன்று தூக்கிக்கொண்டு சென்றால் என் ஆற்றலுக்கு இழிவில்லாமலிருக்குமே என எண்ணினேன்.”
“கொன்று உண்பதுண்டா?” என்றான் பீமன். “ஆம், உண்போம். ஏனென்றால் எந்த விலங்காக இருந்தாலும் கொல்லப்பட்டால் அது உணவு. அதை வீணடிக்கலாகாது. உண்ணும் நோக்கமில்லாது கொல்வது காட்டுத்தெய்வங்களுக்கு உவப்பானதும் அல்ல. ஆகவே பெரும்பாலும் உண்போம். அல்லது எங்கள் நாய்களுக்கும் வளர்ப்புப் புலிகளுக்கும் உணவாகக் கொடுப்போம்“ என்றாள் இடும்பி. “ஆகவே நான் காத்திருந்தேன்… உங்களுக்கு மிக அருகே… நான் அருகே இருக்கும் உணர்வு உங்கள் இளையோனுக்கு இருந்தது. ஆகவே அவர் துயிலவேயில்லை.”
“அவன் எப்போதுமே பூனைபோல உறங்குபவன்” என்றான் பீமன். “துயிலிலேயே அவனால் ஒலிகளைக் கேட்டு அம்பு தொடுக்க முடியும். அவன் துயிலவில்லை என்று நீ உணர்ந்தது நன்று. இல்லையேல் அருகே வந்த கணமே கொல்லப்பட்டிருப்பாய்.” இடும்பி “காலையில் நீங்கள் நீராட வந்தபோது பார்த்தேன். உங்களைக் கொன்றால் எனக்கு குலத்தில் மதிப்பு உயரும் என எண்ணி பின்னால் வந்தேன்” என்றாள். பீமன் “ஆகவே நாம் போரிடப்போகிறோம்… நீ என்னை கொல்லவிருக்கிறாய், இல்லையா?” என்றான்.
“இல்லை….” என்று அவள் சொன்னாள். “நீங்கள் குரங்குகளுடன் விளையாடியதைக் கண்டேன். அவற்றுடன் நீங்கள் பேசினீர்கள். அவை உங்களை ஒரு குரங்காக எண்ணின.” பீமன் “ஆம், நான் அவற்றின் முலையுண்டு வளர்ந்தவன்” என்றான். “அதைக் கண்டு வியந்தேன். நீங்கள் காட்டுக்கு அயலவர் அல்ல. காட்டுக்கு அயலவர் காட்டில் வாழலாகாது என்பதே எங்கள் குலநெறி… உங்களைக் கொல்லவேண்டாம் என்று முடிவெடுத்தேன். மேலும் நீங்கள் எனக்கு இணையான உடல் கொண்டவர். அத்தகைய ஒருவரை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். தங்களை நான் கணவனாக ஏற்றுக்கொண்டேன். அதைத் தங்களிடம் தெரிவிக்கவே நின்றேன்” என்றாள் இடும்பி.
பீமன் புன்னகையுடன் “நான் உன்னை ஏற்காவிட்டால் என்ன செய்வாய்?” என்றான். அவள் அவன் விழிகளை நோக்கி “உங்களை போருக்கு அழைப்பேன். உங்களை வென்று என் கணவனாக எடுத்துக்கொள்வேன்…” அவன் மேலும் அருகே சென்று அவள் விழிகளை நோக்கி “தோற்றால்?” என்றான். “அது உங்கள் கையால் இறப்பது அல்லவா?. அதுவும் எனக்கு உகந்ததே” என்றாள். பீமன் “எனக்கு நிகரானவள் நீ என எப்படி அறிவது?” என்றான். அவள் “என்னுடன் மற்போரிடுங்கள்… அறிவீர்கள்” என்றாள்.
பீமன் மெல்ல காலை பின்னால் வைத்து விலகி கைவிரித்து சமபதத்தில் நின்றான். இடும்பி அவனை நோக்கியபின் உரக்க ஒலியெழுப்பி ஓடிவந்து அவன்மேல் மோதினாள். அவன் நகைத்தபடி அவள் இரு கைகளையும் பற்றிக்கொண்டான். அவள் அவன் இடையில் காலைவைத்து எம்பிக் குதித்து அவனுக்குப்பின்னால் சென்று அவன் கைகளை முறுக்கிக்கொண்டாள். அவன் குப்புற குனிந்து அவளைத் தூக்கி மண்ணில் அறைந்தான். அவள் மேல் பாய்ந்து முழங்காலால் அவள் தொடைகளை மிதித்து வலக்கையின் கட்டை விரலைப் பற்றி வளைத்தான். அவள் தன் இடக்கையால் அவனை ஓங்கி அறைந்தாள். அந்த ஓசை காட்டுக்குள் நெடுந்தொலைவு எதிரொலி செய்தது.
அடியின் விசையால் பீமன் பக்கவாட்டில் சரிய அவள் எழுந்து அவன் மேல் எடையுடன் விழுந்து இரு கால்களாலும் அவன் தொடைகளை மிதித்து வலது முழங்கையால் அவன் மார்பை மண்ணுடன் அழுத்திக்கொண்டாள். ஒரு பெண்ணிடம் அத்தனை உடலாற்றல் இருக்குமென்பதை அவன் கற்பனையும் செய்திருக்கவில்லை. அவள் அழுத்தத்தால் அவன் மூச்சு இறுகியது. விலா எலும்புகள் உடைவதுபோலத் தெறித்தன. அவள் “தோற்றுவிட்டீர்கள்” என்றாள். அவன் முழு மூச்சையும் இழுத்து தலையைத் தூக்கி அவள் தலையை முட்டினான். இருவர் தலைக்குள்ளும் ஒலியும் ஒளியும் வெடிக்க ஒரு கணம் செயலிழந்தனர். அவன் அவளைத் தூக்கி பக்கவாட்டில் சரித்து அவள் கைகளை பிடித்துக்கொண்டான்.
இறுதி விசையுடன் அவள் அவனை புரட்டினாள். ஆனால் அவன் அவள் கைகளை விடவில்லை. அவள் காலை ஊன்றி எம்பி அவன் தோள்மேல் சரிந்து மறுபக்கம் சென்று அவன் முதுகுக்குப்பின்னால் கைகளை வளைத்தாள். அவன் அவளைத் தூக்கி பக்கவாட்டில் சுழற்றி வீழ்த்தினான். இருவரும் மூச்சிரைத்தனர். அவள் நெற்றியால் அவன் மூக்கை இடிக்க அவன் முகம் திருப்பி அதை தன் கன்ன எலும்பில் வாங்கிக்கொண்டான். அவள் அவன் இடையை உதைப்பதற்கு தன் கால்களை மடிக்க அவன் அந்தக்காலை இன்னொரு காலால் மிதித்தான். சிலகணங்கள் அசைவற்று விழிகள் தொட்டு அமைந்திருந்தனர். அவள் பல்லைக் கடித்துக்கொண்டு அவனைத் தூக்க முயன்றாள்.
பீமன் நகைத்து “உன்னுடையது பெண் உடல். அதன் மிக வலுக்குறைந்த பகுதியை நான் கண்டுகொண்டேன்” என்றான். “இந்த மணிக்கட்டுகள். அவை சிறியவை. என் கைகளுக்குள் முற்றிலும் அடங்கிவிடுபவை. நீ எத்தனை முயன்றாலும் அவற்றை நான் விடப்போவதில்லை.” அவள் கூச்சலிட்டபடி அவனைத் தூக்கி சுழற்றிவீசினாள். அவன் அக்கைகளை விடாததனால் அவன் மேல் அவளும் வந்து விழுந்தாள். அவர்களின் உடல்பட்டு சிறிய புதர்கள் ஒடிந்து சரிந்தன. உருளைக்கற்கள் உருண்டு விலகின. சரிவில் உருண்டு எழுந்தபோது அவன் மீண்டும் அவளை மண்ணுடன் அழுத்திக்கொண்டான். அவள் உடல் ஆண்களின் உடல் போலன்றி மென்மையுடையதாகவே இருந்தது. ஆனால் அது இறுக்கமும் உறுதியும் கொண்ட மென்மை.
இடும்பி புன்னகைத்து “ஆம்” என்றாள். “தோற்றுவிட்டாயா?” என்றான் பீமன். “ஆம், முதல்முறையாக” என்றாள் இடும்பி. பீமன் எழுந்து கைகளை விரித்து குரங்கு போல ஒலிஎழுப்ப அப்பால் மரக்கிளைகளில் ஒடுங்கி அமர்ந்து காத்திருந்த குரங்குகள் இலைகளையும் கிளைகளையும் காற்றுபோல அசைத்தபடி பாய்ந்து வந்து கீழே தடதடவெனக் குதித்து வாலைத்தூக்கி கூச்சலிட்டபடி ஓடிவந்து சூழ்ந்துகொண்டன. சிறுவர்கள் எம்பிக்குதித்தும் கிளைகளில் தொங்கிச் சுழன்றாடியும் கூவினர். “கேலி செய்கிறார்களா?” என்றாள் இடும்பி. “இல்லை, நீ என் மனைவி என அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.”
இடும்பி நகைத்து குனிந்து ஒரு குரங்குச்சிறுவனை நோக்கி கை நீட்ட அவன் பல்லி போல ஒலி எழுப்பியபின் அவள் கையை நோக்கி தன் கையை நீட்டினான். அவள் அக்கைகளை அடித்தாள். “நாங்கள் குரங்குகளை கொல்வதில்லை. அவை எங்கள் முன்னோர்களின் மறுபிறப்பு என்று நினைக்கிறோம்” என்றாள். “அவர்களும் எங்களை அஞ்சுவதில்லை.” பீமன் “அவர்களிலும் இதேபோல ஆணும் பெண்ணும் போரிட்டே ஒன்றுசேரவேண்டும் என்னும் வழக்கம் உள்ளது.” இடும்பி சிரித்து “எங்கும் அப்படித்தானே?” என்றாள். “எங்கள் அரண்மனையில் ஒன்றுசேர்ந்தபின் போரிடுவார்கள்” என்றான் பீமன்.
சில பெண்குரங்குகள் இடும்பியை அணுகி அவள் கால்களைத் தொட்டு நோக்கின. அவள் அமர்ந்ததும் அவள் கூந்தலையும் காதுகளையும் மூக்கையும் தொட்டு இழுத்தும் உதடுகளைக் குவித்து அவளை முகர்ந்தும் ஆராய்ந்தன. “எனக்கு நீ பொருத்தமானவள்தானா என்று நோக்குகின்றன” என்றான் பீமன். இடும்பி அக்கணம் நாணினாள். அவள் பெரிய விழிகளின் இமைகள் தாழ்ந்து முகம் ஒருபக்கம் திரும்பியது. “உன்னைப்போல் ஒரு பேரழகியை நான் எங்கும் கண்டதில்லை” என்றான் பீமன். “நான் பெண்களை அருவருத்தேன். என் வாழ்வில் பெண்ணே இருக்கப்போவதில்லை என்று எண்ணியிருந்தேன்.”
இடும்பி “ஏன்?” என்றாள். “அங்கே நகரத்தில் பெண்களெல்லாம் அருவருக்கத்தக்க வாசனைப்பொருட்களை உடம்பில் பூசியிருப்பார்கள். சுண்ணமும் மஞ்சளும் குங்குமும் என பலவகை வண்ணங்களை தடவியிருப்பார்கள். கண்களைக் கூசவைக்கும் வண்ணங்களை ஆடைகளாகவும் அணிகளாகவும் அணிந்திருப்பார்கள்… மெல்லிய உடல்கள். ஆடையில்லாதபோது புழுக்கள் போலிருப்பார்கள். ஆடைகள் அணிந்து பூச்சிகளாக ஆகிவிடுவார்கள்… அருவருப்பானவர்கள்” என்றான் பீமன். “அத்துடன் அவர்கள் எப்போதும் செயற்கையான பாவனைகள் கொண்டவர்கள். கூந்தலை நீவுவது, ஆடைதிருத்துவது, இமைகளை அடித்துக்கொண்டு உதடுகளை நாவால் ஈரப்படுத்துவது என பல நடிப்புகளை இளமையிலேயே கற்றிருக்கிறார்கள். உன்னைப்போல நேராக நின்று விழிநோக்கி திடமாகப் பேசுபவர்களே அங்கில்லை. ஒசிந்து நின்று ஓரக்கண்ணால் நோக்கி குழந்தைகளைப்போல மழலைபேசுவார்கள்…”
“சீ” என்று சொல்லி இடும்பி நகைத்தாள். “உன்னை தெய்வங்கள் எனக்கு அனுப்பிய துணையாக உணர்கிறேன் ஆனால் நான் உன்னை மணம்புரிந்துகொள்ளவேண்டும் என்றால் என் அன்னையின் ஆணை வேண்டும். அவள் எங்களை ஷத்ரிய குடிகளில் இருந்து பெண்தேடி மணம்புரிவதற்காக அழைத்துச்செல்கிறாள். அதற்காகவே எங்களுக்கு இதுவரை மணம்புரிந்து வைக்காமலிருக்கிறாள்… உன்னை அவள் ஏற்கமாட்டாள்” என்றான். “அவர்களை நான் மற்போருக்கு அழைக்கலாமா?” என்றாள் இடும்பி. பீமன் நகைத்து “அழைக்கலாம். அவளுக்காக நான் களமிறங்குவேன்” என்றான்.
“என்னதான் செய்வது?” என்றாள் இடும்பி. “அவளிடம் மன்றாடுவோம்… என் மூத்தவரே இன்னும் மணம் புரியவில்லை. ஆகவே அவள் பெரும்பாலும் ஒப்பமாட்டாள்” என்றான் பீமன். இடும்பி “நான் அவர்களுடன் இருப்பேன். அவர்களுக்கு பணிவிடைகள் செய்வேன். அவர்கள் என் மேல் கருணை கொள்ளச்செய்வேன்” என்றாள். பீமன் “வா பார்ப்போம்” என்றான். “அவர்களுக்கு நான் உயர்ந்த பழங்களையும் மலைத்தேனையும் எடுத்துவருகிறேன்…” என்று அவள் கொடி ஒன்றைப்பற்றி எழுந்து மறைந்தாள்.
கொடிக்கூடையில் தேனடைகளும் பழங்களும் கிழங்குகளுமாக அவள் வந்தாள். பீமன் “இவற்றைப் பார்த்தால் நான் அன்னையை மீறி உன்னை மணந்துகொள்வேன் போலுள்ளதே” என்றான். அவள் சிரித்து அவன் தோளை தன் கையால் அறைந்து “அவ்வாறு உங்களுக்கு குலமுறை இருந்தால் அன்னையை மீறி நீங்கள் என்னை மணக்க நான் ஒப்புவேனா என்ன?” என்றாள். “நீ எப்படி காற்றில் மறைகிறாய்?” என்றான் பீமன். “அது எங்கள் மாயம்” என்று அவள் சிரித்தாள். அவன் அவளைப் பிடித்து நிறுத்தி “சொல்” என்றான்.
“எளிது… நாங்கள் ஓர் உடலசைவை அளிக்கிறோம். அது ஒரு திசைநோக்கி நாங்கள் விலகப்போவதாக உங்களுக்குக் காட்ட. அறியாமல் உங்கள் விழி அத்திசைநோக்கி திரும்பும். அதேகணம் மறுதிசையில் எழுந்து மறைந்துவிடுவோம். ஒரே கணத்தில் நிகழும் ஒரு செயல். பயிற்சியால் அடையப்படுவது” என்றாள் இடும்பி. “எனக்குக் கற்றுக்கொடு” என்றான் பீமன். “குரங்குகளுடன் பேச எனக்குக் கற்றுக்கொடுங்கள்” என்றாள் அவள்.
அவர்கள் சிரித்தபடியே சென்றனர். பீமன் “அன்னை இருக்குமிடம்… சிரிக்காதே” என்றான். அவள் உதட்டை அழுத்திக்கொண்டு “ஏன்?” என்றாள். “சிரிப்பது எங்கள் குலத்தில் பெண்மையல்ல என்று கருதப்படுகிறது” என்றான் பீமன். அவள் வெடித்துச்சிரித்து நின்றுவிட்டாள். பீமனும் நகைத்து “உண்மை…” என்றான். இடும்பி “அழவேண்டும் என்பார்களா?” என்றாள். “அழும்பெண்களே அழகானவர்கள் என நாங்கள் நம்புகிறோம்” என்றான். அவள் உடல் குலுங்க சிரித்தாள். கைகளால் சிரிப்பை அடக்கமுயன்று மீண்டும் சிரித்தாள். “வா” என்றான் பீமன்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்