பிரயாகை - 47

பகுதி பத்து : மீள்பிறப்பு – 4

பீமன் கனத்த காலடிகளுடன் உள்ளே வந்து தலையை மெல்ல ஆட்டினான். குந்தி எழுந்து பெருமூச்சுடன் “கிளம்புவோம்” என்றாள். பீமன் “இரண்டாவது இறப்பு இளையவனே” என்று புன்னகைத்தான். “மறுபிறப்பு என்பது வாழ்க்கையை மீண்டும் தொடங்குவது மூத்தவரே. நாம் அறிந்தவை நம்மை எளிய காட்டுமனிதர்களாக வாழவைக்கின்றனவா என்று பார்ப்போம்” என்றான் அர்ஜுனன். “நான் குரங்கின் மைந்தன்… எனக்கு அது ஒரு பொருட்டல்ல” என்றான் பீமன்.

குந்தி தன் அறைக்குள் இருந்து “எந்த உடைமையையும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நம்முடைய சிறிய உடைமைகள் கூட நாம் எவரென்று காட்டிவிடும்” என்றாள். “ஒரு நாணயமளவுக்குக் கூட செல்வத்தை எடுத்துக் கொள்ளவேண்டாம். அஸ்தினபுரியின் நாணயங்களை மட்டும் தொடர்ந்து வந்து நம்மை பிடித்துக்கொள்ள முடியும். படைக்கலங்களைக்கூட செல்லும் வழியில் நாம் தேடிக்கொள்ளலாம். இங்குள்ள அனைத்து படைக்கலங்களிலும் அஸ்தினபுரியின் இலச்சினை உள்ளது. இங்கேயே பீமன் வாங்கிவந்த கம்பளியாடைகள் மட்டும் போதும்.”

பீமன் புன்னகையுடன் “இளையோனே, மறுபிறப்பு என்றால் அது ஆடையில்லாமலேயே நிகழவேண்டும்” என்றான். “முந்தைய முறை மீண்டும் பிறந்தபோது நான் கங்கையிலிருந்து எழுந்தோடி இலைகளை ஆடைகளாக அணிந்தேன். மானுட நாகரீகத்துக்கு மீண்டும் வந்துவிட்ட நிறைவை அடைந்தேன்.” .அர்ஜுனன் “முதல்முறை நீர், இம்முறை நெருப்பிலிருந்து பிறந்தெழப்போகிறீர்கள் மூத்தவரே” என்றான். “நான் காற்றின் மைந்தன். நீரில் அலையாவேன். நெருப்பில் தழலாவேன்…” என்றான் பீமன் நகைத்தபடி. “புராணங்களைப்போல இக்கட்டில் கைகொடுப்பவை வேறில்லை.”

ஓசையில்லாத காலடிகளுடன் அவர்கள் மெல்ல நடந்தனர். அரக்கில்லத்தில் துயில்மூச்சொலிகள் எழுந்தன. ”எத்தனை பேர்?” என்றான் தருமன். “புரோசனனும் அவன் உதவியாளனும். பின்னர் நமக்காக இறக்கப்போகும் அறுவர்” என்றான் பீமன். “அவர்களுக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம்” என்றான் பீமன். “நாம் அஸ்தினபுரியில் உயிர்துறந்த அத்தனை குடிகளுக்கும் கடன்பட்டிருக்கிறோம் மூத்தவரே. அவர்கள் அறியாத சதுரங்கத்தில் வெட்டித்தள்ளப்படும் காய்கள் அல்லவா?” என்றான். “அவர்கள் ஓர் அரசின் பாதுகாப்பையும் நன்மைகளை அனுபவிக்கிறார்க்ள். ஆகவே அவர்களின் கடமை அது” என்றான் தருமன். “அப்படி நாம் சொல்கிறோம்” என்றபின் “இவர்களின் கடமை இது…. ஏமாற்றப்படுவது” என்றான்.

“உன்னுடன் நான் பேசவிரும்பவில்லை… உன் கசப்பு என்னை உப்புபோல அரித்து உள்ளூர அழிக்கிறது” என்றான் தருமன். குந்தி தன் அறையிலிருந்து வந்து “பீமா… உன் காலடியோசைதான் இம்மர இல்லத்தில் உரக்க ஒலிக்கிறது… மெல்ல காலெடுத்து வை” என்றாள். புரோசனனின் அறைக்குள் இரு குறட்டைகளும் உரையாடல் போல ஒலித்துக்கொண்டிருந்தன. அவர்கள் அதைக்கடந்து சென்றதும் பீமன் “ஒரு நல்ல சுரங்கத்தை அமைக்கத் தோன்றியதனால் இவனும் நம் நன்றிக்குரியவனே” என்றான்.

குந்தி சிறிய ஊன்நெய் விளக்கை ஏற்றிக்கொண்டாள். “புகையில்லாதிருக்கவேண்டும். ஆகவே குறைவான ஒளியே போதுமானது. சுரங்கத்திற்குள் நாம் மூச்சுத்திணறக்கூடும்” என்றாள். “இன்னொரு ஊன்நெய் கட்டியும் கையிலுள்ளது. சுரங்கம் அத்தனை தொலைவுதான் இருக்குமென எண்ணுகிறேன்” என்றான் பீமன். “அது எங்கு சென்று சேருமென்று ஒருமுறை போய்ப் பார்த்திருக்கலாம்” என்றான் தருமன். “மூத்தவரே, சுரங்கத்தின் கருங்கல் கதவு சுண்ணம்பூசப்பட்டு மரச்சுவருடன் கலக்கப்பட்டிருந்தது. அதை நான் எடுத்து நோக்கியிருந்தால் அந்த விரிசலே காட்டிக்கொடுத்திருக்கும்” என்றான் பீமன். அர்ஜுனன் புன்னகையுடன் “மறுபிறப்பில் எங்கு செல்வோம் என்று அறியாமலிருப்பதே அழகு” என்றான்.

சுரங்கத்தின் வாய் சுண்ணம்பூசப்பட்ட கல்லால் மூடப்பட்டிருந்தது. சுண்ணம்பூசப்பட்ட சுவரில் அதை அடையாளம் காணவே முடியவில்லை. பீமன் அதை நோக்கிச் சென்று அதன் கீழ்ப்பகுதியை காலால் ஓங்கி உதைத்தான். அது கோணலாகி கீழே உள்ளடங்கி மேலே வெளித்தள்ளியது. தசைகள் இறுகிப்புடைக்க அதைப்பிடித்து அசைத்து இழுத்து வெளியே எடுத்து தூக்கி அப்பால் வைத்தான். சிறிய படிகளுடன் கூடிய சுரங்கப்பாதை தெரிந்தது.. உள்ளே இருள் இருந்தது. “உள்ளே செல்லுங்கள்… நான் இதைக் கொளுத்திவிட்டு வருகிறேன்” என்றான் பீமன்.

அர்ஜுனன் “மூத்தவரே, இங்கு நெருப்பு எத்தனை விரைவாக எழும் என நாம் அறியோம். இல்லத்தின் நான்கு முனைகளையும் கொளுத்தாமல் இருந்தால் அவர்கள் தப்பிவிடக்கூடும். நான்கையும் கொளுத்திவிட்டு நீங்கள் இங்கு வருவதற்குள் நெருப்பு எழுந்து சூழ்ந்தது என்றால் அதில் அகப்பட்டுக்கொள்வீர்கள்” என்றான். “நீங்கள் உள்ளே செல்லுங்கள். நெருப்பை வைக்கும் கலையை நான் அறிவேன்”. நகுலனும் சகதேவனும் முதலில் செல்ல குந்தியும் தருமனும் தொடர்ந்து சுரங்கத்திற்குள் நுழைந்தனர். பீமன் குனிந்து தன் உடலை மிக ஒடுக்கி உள்ளே சென்றான். “மலைப்பாம்புக்கு ஏன் வளை இருப்பதில்லை என்று இப்போது புரிகிறது மூத்தவரே” என்றான் பீமன். “நான் நகைக்கும் நிலையில் இல்லை” என்றபடி உள்ளே மறைந்தான் தருமன் அந்தக்குகை ஒரு வாய் என அவர்களை விழுங்குவதாகத் தோன்றியது. .

அர்ஜுனன் தன்னுடன் சிறிய மூங்கில் வில் ஒன்றை எடுத்து வந்திருந்தான். நாணலால் ஆன ஏழு அம்புகளை தோளில் இருந்து எடுத்தான். அவற்றின் முனையில் அரக்குக்குமிழ் ஒட்டப்பட்டிருந்தது. அதை விளக்கில் பற்றவைத்து அங்கு நின்றவாறே தொடுத்தான். தீயுடன் பறந்து சென்ற அம்பு இல்லத்தின் சுவரில் முட்டிவிழுந்ததுமே பற்றிக்கொள்ளத் தொடங்கியது. அறைகளின் வாயில்கள் வழியாக குறி நோக்கி எய்த நான்கு அம்புகளால் அந்தக் கட்டடத்தின் நான்கு சுவர்முனைகளை பற்றவைத்துவிட்டு அர்ஜுனன் குகைக்குள் நுழைந்தான்.

அதற்குள் நெருப்பு பேருருவம்கொண்டு எழுந்துவிட்டது. பற்றிக்கொண்ட சுவர்கள் உடனே வெடித்து அரக்குக் குழம்பு வழிந்து பற்றிக்கொண்டது. சுவர்களே வாய்திறந்து அனல்குழம்பை உமிழ்வது போலத் தோன்றியது. வழிந்த அரக்கு நெருப்பாக மாறி பாய்ந்து இன்னொரு சுவரைப் பற்றிக்கொண்டது. விளையாடும் குரங்குக்கூட்டம் போல நெருப்பு கைகளை நீட்டி நீட்டி ஒவ்வொன்றையும் பற்றிக்கொண்டு தாவி ஏறுவதை அர்ஜுனன் கண்டான். செந்தழலால் ஆன திரைச்சீலைகள் படபடத்துப் பறந்தன. அனல் பறவைகள் உத்தரங்களில் இருந்து சிறகடித்து எழுந்து பிற உத்தரங்களில் சென்று அமர்ந்தன. தழல் எழுந்ததும் மேலே இருந்த மூங்கில்கள் வெடித்து நெய்யை சொட்டின. சொட்டு உதிரும்போதே நெருப்பாக ஆகி விழுந்த இடத்தில் தழல் அலையென பொங்கி எழுந்தது.

சுவர்களும் உத்தரங்களும் சட்டங்களும் தரையும் எல்லாம் உருகிக் குழைந்து மடிந்தன. அரக்குமாளிகை நீர்நிழல் போல நெளிந்தது. வெம்மையில் சிவந்து நெய்வாசனை எழுந்து நெருப்பு தொடாமலேயே அவை பற்றிக்கொண்டன. சுவர்கள் சினம் கொள்வது போலிருந்தது. பின் வெறியுடன் வெடித்து அனல் உமிழ்ந்தன. தீயின் ஒலி அத்தனை பெரியதென்று அர்ஜுனன் அப்போதுதான் உணர்ந்தான். தீ சிம்மம் போல கர்ஜனை செய்தது. இடியோசை போல நகைத்தது. புயல் நுழைந்த பனங்காடு போல இரைந்தது. அதற்குள் புரோசனனும் அவன் சேவகனும் அலறும் ஒலி எழுந்து மறைந்ததா இல்லை செவிமயக்கா என்ற ஐயம் எழுந்தது.

நெருப்பு நெருங்கி வருவதைக் கண்டபோதிலும் அவனால் வெளியேறமுடியவில்லை. விழிகளை அந்தத் தழல்கொந்தளிப்பை விட்டு விலக்க முடியாதவனாக மலைத்து நின்றிருந்தான். “இளையவனே அனல் வருகிறது… வா” என்றான் பீமன். மாபெரும் மலரிதழ்கள் போல தழல்கள் கூரையை அடைந்தன. கூரையின் பெரும் மரச்சட்டங்கள் அரக்குக் கட்டிகளாக மாறி உருகி எரிந்தபடி விழுந்து நெருப்பாக சிதறிப் பரவி வெடித்தன. சினத்துடன் “இளையவனே, உள்ளே அரக்க்குக்குழம்பு நுழைந்துவிம்… நான் இதை மூடவேண்டும்” என்றான் பீமன்.

தழல் ஒன்றின் மேல் ஒன்று ஏறிக்கொண்டது. இளநீல நிறமுள்ள பீடத்தின் மீது செந்நிறமாக ஏறி நின்று கரிய குழல் விரித்து சுழன்றாடியது. புகை குறைந்தபடியே வந்து பின்னர் அனல் வெறுங்காற்றில் நின்று நெளிந்தது. நெருப்பு நீராவதை அவன் கண்டான். பீமன் “விலகு” என அவனை தோளைப்பிடித்து இழுத்து பின்னால் தள்ளிவிட்டு கனத்த கற்கதவைத் தூக்கி சுரங்கவாசலை மூடினான். ஒளியைக் கண்ட கண்களுக்குள் இருள் நிறைந்து சுவர்போலாகியது. தோளைத் தொட்டு “நட” என்றான் பீமன்.

இடியொலியுடன் அரக்குமாளிகை கதவுக்கு அப்பால் விழுவதை அர்ஜுனன் கேட்டான். அவன் கருத்துக்குள் கண்ட நெருப்பு மேலும் பேருருவம் கொண்டிருந்தது. “வேள்வி!” என்றான். “என்ன?” என்றான் பீமன். “ஒரு வேள்வி… எரிந்தது மூன்று நெருப்புகளையும் இடையில் மைந்தர்களாக ஏற்றி வைத்திருக்கும் அன்னை.” பீமன் “பேசும் நேரமல்ல. வா” என்று முன்னால் சென்றான்.

உள்ளே சென்றபின்னரும் கண்களுக்குள் நெருப்பின் ஆடலே இருந்தது. கீழே உணவறையில் அந்த அறுவரும் எரிந்துகொண்டிருப்பதை ஒருகணம் எண்ணினான். ஆறு முகங்களும் தங்கள் முகங்களாகத் தெரிந்தன. எரியும் பீமனின் தருமனின் நகுல சகதேவர்களின் முகம். குந்தியின் முகம். அவன் கண்களை கொட்டி அந்தக் காட்சியை விலக்கினான். எரிவது அவர்களேதான். சதுரங்கத்தில் அவர்களுக்கு நிகராக வைக்கப்பட்ட காய்கள். அந்த இறப்பிலிருந்து எழவேண்டும். தழலை விலக்கி சிதையிலிருந்து மண்ணிலிறங்கி நடக்கவேண்டும். ஆனால் உடலெங்கும் அழல் பற்றி எரிந்துகொண்டேதான் இருக்கும். அதை அணைக்கவே முடியாது.

மூச்சுத்திணறுவதுபோல, உடம்பு வெம்மையில் பொசுங்குவது போல உணர்ந்தான். ஆனால் குகைக்குள் நீர்த்துளிகள் சொட்டும் குளிரே நிறைந்திருந்தது. இருண்ட குளிர். அதற்குள் பன்றிகள் உணவுண்பதுபோல அவர்களின் காலடிகள் சேற்றில் விழும் ஓசை. இருளுக்கு கண் பழகி வந்தது. நீண்டு சென்ற குகைப்பாதை உயிருடன் நெளிவதுபோல மெல்லிய ஒளியின் அசைவில் தோற்றமளித்தது.

சுரங்கத்தில் முழந்தாளிட்டே முன்னகர முடிந்தது. மாளிகையைக் கட்டிய புரோசனன் அவனே பிறர் அறியாமல் ஓரிரு உதவியாளர்களுடன் அதை வெட்டியிருக்கவேண்டும் என்று தெரிந்தது. சென்று சேரும் மறு எல்லையில் இருந்து தோண்டிக்கொண்டு வரப்பட்ட சுரங்கம் அது. மண்வெட்டியின் தடங்கள் எதிர் திசையை நோக்கியவையாக இருந்தன. இமயப்பகுதியின் மண் உறுதியற்றது என்பதனால் புரோசனன் மூங்கில்களை வளைத்து நட்டு தாங்கு கொடுத்திருந்தான்.

“இது சுரங்கம் தோண்டுவதற்கான பழைய முறை இளையவனே” என்றான் பீமன். மூங்கிலை வளைத்து அதன் மேல் மரப்பட்டைகளையோ மூங்கில்தட்டியையோ அமைத்து அந்தச்சட்டத்தை மண்ணில் பதிக்கவேண்டும். அதற்குள் உள்ள மண்ணை அள்ளி வெளியே எடுத்துக்கொட்டிக்கொண்டு அதை உள்ளே தள்ளிக்கொண்டிருக்கவேண்டும். அதன்பின் அடுத்த சட்டத்தை அதற்குள் பொருத்தி உள்ளே உள்ள மண்ணைத் தோண்டத் தொடங்கவேண்டும். மண் மூங்கில் வளைவுக்கு மேல் அமர்ந்திருக்கும்.”

அர்ஜுனன் மேலே இருந்த மூங்கிலைத் தட்டி நோக்கி “தாங்குமா?” என்றான். “வளைவாக இருப்பதனால் நாம் நினைப்பதை விட மும்மடங்கு எடைதாங்கும்… மேலும் மெல்ல இந்த வடிவத்தை மண் ஏற்றுக்கொள்ளும். வேர்கள் பின்னிவிட்டால் மூங்கில்வளைவில் மண்ணின் எடையே ஏறாது” என்றான் பீமன். மேலிருந்து நீர் ஊறி சொட்டிக்கொண்டிருந்ததனால் உள்ளே சேறு குழைந்தது. அதிலிருந்த கூழாங்கற்கள் உரசி முழங்கால்களின் தோல் உரிந்தது. அதில் நீர் பட்டு தீக்காயம் போல எரியத் தொடங்கியது.

முழங்காலால் நடந்து முன்னேறிய குந்தி மூச்சிரைக்க நின்றாள். “அன்னையே… கடினமாக உள்ளதா?” என்றான் தருமன். குந்தி “அரசியாக இருந்து பழகிவிட்டேன். மீண்டும் யமுனையை நீந்திக்கடந்த யாதவப்பெண்ணாக மாறவேண்டியிருக்கிறது” என்றாள். “கருவறைப்பாதை போலிருக்கிறது…” என்றான் தருமன். “முந்தைய பிறவியின் நினைவுகளெல்லாம் கருவறை விட்டு வெளிவரும் பாதையில்தான் ஒவ்வொன்றாக நீங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது” என்றான்.

“நெடுந்தூரம் ஆகிவிட்டதே” என்று நகுலன் சொன்னான். “இல்லை இளையவனே, நாம் இடர்படுவதனால் அந்த அகமயக்கு ஏற்படுகிறது… இன்னும் செல்லவேண்டும்” என்றான் பீமன். “அரக்கு மாளிகை எரிவதைக்கண்டு அத்தனை ஊர்மக்களும் ஓடிக்கூடுவார்கள். அவர்கள் பார்வைக்குப் படும்படி மேலே வர புரோசனன் திட்டமிட்டிருக்க மாட்டான். சுரங்கம் இன்னும் நெடுந்தொலைவுக்குச் செல்லும் என்றே எண்ணுகிறேன்.” விளக்கை ஏந்திய குந்தியின் கைகள் அலைபாய்ந்தன. “இளையவனே, நீ விளக்கை வாங்கிக்கொள்” என்றான் பீமன்.

குளிர்ந்த நீர் சொட்டிக்கொண்டிருந்த போதிலும் அவர்களுக்கு வியர்வை வழிந்தது. இருளுக்குள் அவர்களின் முழங்கால்கள் சேற்றை மிதிப்பது குகையின் இருண்ட பாதையில் சென்று எங்கோ வளைவில் எதிரொலித்து திரும்பிவந்தது. அங்கிருந்து எவரோ அவர்களை நோக்கி பதுங்கி வருவதைப்போல கேட்டது. அவர்களின் மூச்சொலிகள் நாகங்களின் உரையாடல் போல ஒலித்தன. என்னென்ன கற்பனைகள் என அர்ஜுனன் புன்னகைத்துக்கொண்டான்.

குந்தி மூச்சிரைக்க அமர்ந்துகொண்டாள். “அன்னையே, என்ன செய்கிறது?” என்றான். “தலைசுற்றுகிறது” என்றாள் குந்தி. பீமன் “விளக்கு அவர்களின் அருகே இருக்கிறது. ஆகவே அவர்களால் போதிய பிராணனை அடையமுடியவில்லை” என்றான். விளக்கை கைமாற்றி பீமனிடம் கொடுத்தான் நகுலன். குந்தி குமட்டி வாயுமிழ்ந்தாள். “அது நல்லதுதான் அன்னையே… குடல் ஒழிந்திருப்பது உடலை மேலும் எளிதாக்கும்…” என்றான் பீமன்.

“கண்களை மூடிக்கொள்ளுங்கள்” என்றான் தருமன். “விழுவது போல தோன்றுகிறது” என்று குந்தி சொன்னாள். “ஆம், ஆனால் சற்று நேரத்தில் அனைத்தையும் உங்கள் உடல் புரிந்துகொள்ளும்” என்றான் பீமன். குந்தி மூச்சிரைத்தாள். “இளையவனே, நம் தலைக்குமேல் உள்ளது மானுடர் வாழும் உலகம். நாம் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கிறோம்” என்றாள். “வீண் எண்ணங்கள் வேண்டாம் அன்னையே, எழுங்கள்” என்றான் தருமன்.

குந்தி மண்சுவரைப்பிடித்தபடி எழுந்துகொண்டாள். “மெல்ல நடந்துசெல்லுங்கள். செல்லும் தொலைவைப்பற்றி எண்ணவேண்டாம். வைக்கும் காலடிகளை மட்டுமே கருத்தில் கொள்ளுங்கள். வழி திறக்கும்போது திறக்கட்டும்” என்றான் பீமன். சகதேவன் “மூத்தவரே, எங்காவது இந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்திருந்தால் என்ன ஆகும்? நாம் புதைந்து போவோம் அல்லவா?” என்றான். “ஆம். ஆனால் அப்படி இடிந்து விழுந்திருந்தால் விளக்கு எரியாது” என்றான் பீமன்.

மூன்றுமுறை அமர்ந்து ஓய்வெடுத்தபின் குந்தி “இன்னும் நெடுந்தொலைவா?” என்றாள். “அன்னையே, புரோசனன் மலையின் சரிவுக்கு அப்பால் இருந்த தேவதாருக்காட்டுக்குள் இக்குகைப்பாதை மேலெழும்படி அமைத்திருப்பான் என்பது என் கணிப்பு. அப்படியென்றால் இது இனிமேல்தான் கீழிறங்கும். அதன்பின் சற்றுத்தொலைவில் மீண்டும் மேலேறிச்செல்லவேண்டும்” என்றான் பீமன். “நம் தலைக்குமேல் தேவதாருக்கள் நிற்கின்றனவா?” என்றான் நகுலன். “ஆம்… அவற்றின் ஆணிவேர்களைத் தவிர்த்துச்செல்வதற்காகவே இப்பாதை இத்தனை வளைவுகளுடன் இருக்கிறது” என்றான் பீமன்.

சுரங்கப்பாதை கீழிறங்கத் தொடங்கியது. மண்ணில் கால்பதிக்க மரப்பட்டைகளை பதித்திருந்தார்கள். அவற்றின்மேல் சேறு கரைந்து வழிந்தோடி இறங்கியது. “சுரங்கத்தின் மேல் கையை ஊன்றிக்கொண்டு இறங்கவேண்டாம். மூங்கில் நழுவக்கூடும்” என்றான் பீமன். கால்வழுக்கிய நகுலன் விழுந்து சென்றுகொண்டே அலறினான். “அஞ்சவேண்டாம், கீழே சேறுதான்” என்றான் பீமன். எழுந்து நின்ற நகுலன் “என் கையை கல் கிழித்துவிட்டது மூத்தவரே” என்றான்.

கீழே இறங்கியபோது இருபக்கமும் சுரங்கம் மேலெழ ஒரு படுகுழிக்குள் விழுந்து கிடக்கும் உணர்வு எழுந்தது. “பாதாளம் என்பது இதுதான்” என்றான் தருமன். “இந்தச் சுரங்கம் ஒரு நாகம்… நான்ம்இதன் உடலுக்குள் சென்றுகொண்டிருக்கிறோம்” என்றான் நகுலன். “இச்சுரங்கமளவே உடலுள்ள ஒரு நாகம் எதிரே வந்தால் என்ன செய்வோம்?” என்றான் சகதேவன். நகுலன் “இந்தச் சுரங்கமே உண்மையில் ஒரு நாகத்தின் வளைதான்… நாமெல்லாம் அதற்குள் வழிதவறி வந்த எலிகள்” என்றான். தருமன் சினத்துடன் “பேசாமல் நடங்கள்… என்ன மூடப்பேச்சு இதெல்லாம்?” என்றான்.

மேலேறுவது அதுவரையிலான பயணத்தின் மிகக் கடினமான பகுதியாக இருந்தது. இருமுறை ஏறியபின் குந்தி நழுவி விழுந்தாள். பீமன் “நான் முன்னால் செல்கிறேன்” என்று சென்று ஏறி கைநீட்டி அவளை தூக்கிவிட்டான். மூங்கிலை சேற்றில் அறைந்து அதில் மரப்பலகைகளைக் கொடுத்து படி அமைத்திருந்தான் புரோசனன். “முடிவில்லாமல் ஏறிக்கொண்டிருக்கிறோம்” என்றான் தருமன். “எனக்கு இது முடியாத கனவு என்று தோன்றுகிறது” என்று சகதேவன் சொன்னான். “முன்பெல்லாம் இதைப்போன்ற கனவுகள் வரும்போது நான் சிறுநீர் கழித்தபடி விழித்துக்கொள்வேன்.”

மேலேறிச்சென்ற ஒரு தருணத்தில் பீமன் “வந்துவிட்டோம்” என்றான். “எப்படித்தெரியும்?” என்றான் நகுலன். “கேள்” என்றான் பீமன். அர்ஜுனன் காற்றின் ஒலியைக்கேட்டுவிட்டான். கேட்டதுமே காற்று வந்து தொடுவதை உணரவும் முடிந்தது. அது ஒரு புறநிகழவாகக் கூடத் தோன்றவில்லை. ஓர் எண்ணம் போல, நினைவு போல வந்தது. “வெளிக்காற்றுதானா?” என்றான். “ஆம்… அது காட்டுக்குள் இருக்கும் சிறிய குடிலாகவே இருக்கும்.” தருமன் “திறந்திருக்கிறதா?” என்றான். “ஆம் திறந்துதானே வைக்கமுடியும்? கிளம்பும் இடம் மூடப்பட்டிருக்கிறதல்லவா?” என்றான்.

ஆனால் அது மேலெழும் வாயில் அல்ல என்பதை நெருங்கியதும் உணர்ந்தனர். மேலே திறந்திருக்கும்படி நடப்பட்ட ஒரு பெரிய மூங்கில்குழாய் அது. மேலிருந்து காற்று உள்ளே பீரிட்டு வந்துகொண்டிருந்தது. “எத்தனை ஆழமிருக்கும் மந்தா?” என்றான் தருமன். ஏமாற்றத்தை மறைக்க அவன் முயல்கிறான் என்று தெரிந்தது. “நல்ல ஆழமிருக்கும்… ஆகவேதான் மூங்கில் நடப்பட்டிருக்கிறது” என்றான் பீமன். “அத்துடன் இன்னும் பாதி தொலைவாவது எஞ்சியிருக்கும். ஆகவேதான் காற்றுக்கு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.”

ஆனால் அச்செய்தி பெரும் சோர்வு எதையும் அளிக்கவில்லை. பலவகையான அக ஓட்டங்கள் வழியாக சோர்வை எதிர்கொள்ளும் ,மனநிலையே உள்ளே இருந்தது. “இது முதல் மூங்கில்… இன்னும் இதைப்போல எத்தனை இருக்குமென்று தெரியவில்லை” என்றான் அர்ஜுனன். பீமன் நகைத்தபடி “நூற்றெட்டு மூங்கில்கள்கொண்டது ஒரு அக்ஷம் எனப்படுகிறது சுரங்கவியலில். அப்படி நூற்றெட்டு அக்ஷங்கள் செல்லமுடிந்தால் நாம் ஒரு மகாஅக்ஷத்தை அடைகிறோம்” என்றான். சிரித்தபடி நகுலன் “நூற்றெட்டு மகா அக்ஷங்கள் கொண்டது?” என்றான். குந்தி நகைத்து “பேசாமல் வரமாட்டீர்களா?” என்றாள்.

ஏமாற்றத்தை மறைக்க அகம் கொண்ட பாவனை அது என்றாலும் அந்த நகைப்பு அவர்களை விடுதலை செய்தது. அதுவரை இருந்த பதற்றமும் எரிச்சலும் கலந்த அகநிலை மாறி அவர்கள் சிரிக்கத் தொடங்கினர். “வெளியே சென்றால் நான் என்னை மூஷிக வம்சம் என்று சொல்லிக்கொள்வேன்” என்றான் நகுலன். “எலிகளைப்போல ஆற்றல் கொண்டவர்கள் இல்லை. ஐயமிருந்தால் யானை இதேபோல ஒரு வளையை அகழ்ந்து காட்டட்டுமே.” சகதேவன் “எலிகள் வளைகளில் இருந்து வளைகளை உருவாக்குகின்றன. நாமும் அதேபோல அகழ்ந்து ஒரு நகரத்தை இங்கே உருவாக்கலாம்” என்றான்.

“ஆம், மண்ணுக்கு அடியில் ஒரு நகரம். மூஷிகபுரி என்று அதற்குப்பெயர். அங்கே நாம் அரசர்கள். நாம் நாடாள்வது நம்மைத்தவிர எவருக்குமே தெரியாது” என்றான் சகதேவன். “இங்கே நாம் வெளிச்சத்திற்கு சில மின்மினிகளை வளர்க்கலாம்” என்றான் நகுலன். குந்தி “உணவுக்கு என்ன செய்வது?” என்றாள். “மேலே கிழங்குகளை நடவேண்டும். உள்ளிருந்தே அவற்றை கொய்து உண்ணலாம்” என்றான் சகதேவன். நகுலன் ‘ஒரு மூஷிகப்பெண்ணை மணந்தால் நம் குலம் ஒரே வருடத்தில் ஒரு பெரும்படையை அமைக்க முடியும்” குந்தி அவன் தலையைத் தட்டி சிரித்தாள்.

அந்தச் சிரிப்பு அடுத்த மூங்கிலைப் பார்க்கையில் அவர்களை மேலும் சிரிப்பை நோக்கிக் கொண்டுசென்றது. “அக்ஷம்!” என்றான் நகுலன் சிரித்தபடி. பின்னர் அவர்கள் இயல்பாக பேசிக்கொள்ளத் தொடங்கினர். பீமன் அங்கிருந்து செல்லும் வழியைப்பற்றி சொன்னான். “நாம் வடக்கே இமயமலை நோக்கிச் சென்றால் குளிர்ந்த பகுதிகளையே அடைவோம். கீழிறங்கினால் அடிவாரத்துக் காடுகள் உள்ளன. நதிக்கரைகளில் சிறிய கிராமங்கள் உண்டு. அங்கே இப்போதுதான் மனிதர்கள் குடியேறத் தொடங்கியிருக்கிறார்கள். நாம் ஒரு ஊரைக்கூட அமைக்கலாம்.”

“அங்கே சென்றதும் நான் இருபது மனைவியரை மணக்கலாமென்றிருக்கிறேன். ஆளுக்கு இருபது மனைவியர் என்றால் நூறு வீடுகளை நாமே அமைக்க முடியும்” என்றான் நகுலன். “பேசாதே” என்றபின் குந்தி “நாம் விடிவதற்குள் அடர்காட்டுக்குள் சென்று விடவேண்டும் மந்தா” என்றாள். “சென்றுவிடலாம் அன்னையே” என்றான் பீமன்.

“மண்ணின் வழிகளெல்லாம் விண்ணில் உள்ளன என்றார் விதுரர்” என்றான் தருமன். “விண்மீன்களை நோக்கி திசைதேரும் கலையை நான் கற்றிருக்கலாம்.” பீமன் “எனக்குத்தெரியும்” என்றான். “எந்த நூலில் கற்றாய்?” என்றான் தருமன். “மூத்தவரே, விண்மீன்கள் நூலில் இல்லை, வானில் உள்ளன” என்றான் பீமன். நகுலன் உரக்க நகைத்தான். சகதேவன் அவனை தொட்டு அடக்கினான்.

அவர்கள் அப்பாதையை மறந்து உள்ளத்தை விலக்கிக் கொண்டதுமே உடலே அப்பயணத்தை நிகழ்த்தத் தொடங்கியது. அதற்குள் கற்றுக்கொண்டவை அதை வழிநடத்தின. அனிச்சையாக முழங்கால்களைத் தூக்கி வைத்து படிகளில் ஏறி வளைவுகளில் திரும்பி அவர்கள் சென்றனர். எந்த ஊருக்குச்செல்வது என்ற விவாதம் விரைவாக நடந்துகொண்டிருந்தபோது அப்பால் சுரங்கப்பாதை திறந்திருப்பது காற்று வழியாக தெரிந்தது. “இது வாயில்தான்” என்றான் பீமன். “காற்று உள்ளே பொழிந்துகொண்டிருக்கிறது.”

மேலும் சற்றுத்தொலைவு சென்றதும் “பொறுங்கள், நான் முன்னே செல்கிறேன்” என்றான் பீமன். “இப்பாதை குடிலுக்குள் திறக்கவில்லை. கிணற்றுக்குள் திறக்கிறது என்று எண்ணுகிறேன்.” அர்ஜுனன் அவன் ஏன் அவ்வாறு சொல்கிறான் என்று உடனே புரிந்துகொண்டான். ஆழமான நீருக்குள் கற்களோ காய்களோ உதிரும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் நெருங்கிச் சென்றனர். சுரங்கப்பாதை இருண்ட கிணறு ஒன்றுக்குள் சென்று முடிந்தது.

பீமன் அருகே சென்று எட்டிப்பார்த்தான். ”பாழுங்கிணறு” என்றான். “மிக ஆழமானது. கொடிகள் முளைத்து அடர்ந்திருக்கின்றன. மிக ஆழத்தில் நீர் தெரிகிறது. மேலே செல்லவும் நெடுதூரம் ஏறவேண்டும்.” அர்ஜுனன் அருகே வந்து “எப்படிச் செல்வது?” என்றான். “கயிறு கொண்டு வந்திருக்கவேண்டும்… சரி, நான் செல்கிறேன்” என்றான் பீமன். “மந்தா, வேண்டாம். உன் எடையை கிணற்றின் செடிகள் தாளாது” என்றான் தருமன். “குரங்குக்கு அதன் வழிகள் தெரியும் மூத்தவரே” என்றபடி பீமன் வெளியே சென்றான்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

வேர்களைப்பற்றியபடி அவன் தொற்றி இயல்பாக மேலே சென்றான். தலைக்குமேல் அவன் குரல் எதிரொலி சூழ கேட்டது. “அடர்காடு மூத்தவரே. கொடிகளால் நான் ஒரு வடம் செய்கிறேன்.” சற்றுநேரத்தில் ஒரு வடம் கீழிறங்கி வந்தது. அதில் தொங்கியபடி பீமன் “அன்னையே தங்களை நான் மேலே கொண்டுசெல்கிறேன்” என்றான். குந்தி கை நீட்ட அவள் இடையைப்பிடித்துத் தூக்கி தன் இடையிலிருந்த கொடியில் இறுகக் கட்டிக்கொண்டான். குந்தி அவன் தோள்களைப் பற்றிக்கொண்டாள். அவன் மிக விரைவாக மேலே ஏறி அவளை இறக்கிவிட்டான். அதன்பின் அர்ஜுனன் மேலே வந்தான். பீமன் கீழே சென்று தருமனை மேலே தூக்கி வந்தான்.

நகுலனும் சகதேவனும் சிரித்துக்கொண்டே மேலே வந்தனர். நகுலன் “மூத்தவரே நான் ஒரு பெருங்குரங்குக்கு இளையவன்” என்றான். பீமன் நகைத்து அவன் தலையை தட்டினான். குந்தி திரும்பி நோக்கி “அதோ” என்றாள். அர்ஜுனன் “ஆம், அன்னையே அது நம் சிதை” என்றான். அப்பால் மலைச்சரிவில் அரக்குமாளிகை எரிவது ஒரு குங்குமத்தீற்றல் போலத் தெரிந்தது. குந்தி அதைநோக்கியபடி நின்றபின் பெருமூச்செறிந்தாள். தருமன் “அதைவிட்டு கண்ணெடுக்கத் தோன்றவில்லை இளையோனே…. நாம் அதை ஒருபோதும் மறக்கப்போவதில்லை என்று படுகிறது” என்றான்.

பீமன் வானை நோக்கியபின் “இது வடகிழக்கு… நாம் செல்லவேண்டிய திசை” என்றபின் “ஏழுமுனிவர்களும் என்னை நோக்கி புன்னகை புரிகிறார்கள்” என்றான். குந்தி மீண்டும் திரும்பி ஜதுகிரகத்தின் நெருப்பை நோக்கியபின் “செல்வோம்” என்றாள்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்