பிரயாகை - 43
பகுதி ஒன்பது : உருகும் இல்லம் – 3
வடக்கு யானைத்தளத்தை ஒட்டியிருந்த பெருங்களமுற்றத்தில் கோட்டைவாயில் அருகே இருந்த படைக்கலக் கொட்டில் முற்றிலும் காந்தாரர்களுக்கு உரியதாக இருந்தது. கனத்த காட்டுமரத்தூண்களுக்கு மேல் மரப்பட்டைக் கூரையிடப்பட்ட கொட்டிலின் உள்ளே மெல்லிய மூங்கில்களை சேர்த்துக்கட்டி உருவாக்கப்பட்ட பெரிய முக்கோணவடிவ முகடுக்கூட்டின் மேல் கூரை அமைந்திருந்தமையால் உள்ளே நடுவில் ஒருவரியாக மட்டுமே தூண்கள் இருந்தன. மூங்கில்களால் ஆன சிலந்திவலை போல அமைந்திருந்த கூரையில் ஏராளமான பெரிய மரப்பானைகள் கட்டிவைக்கப்பட்டிருந்தமையால் எதிரொலிகள் இல்லாமல் எவர் குரலும் அங்கே துல்லியமாக ஒலிக்கும்.
வடக்குக் கோட்டைவாயிலுக்கு அப்பால் காந்தாரர்களின் ஏழு ஊர்கள் இருந்தன. அவற்றுக்கு காந்தாரத்தில் இருந்த தங்கள் ஊர்களின் பெயர்களையே அவர்கள் சூட்டியிருந்தனர். பீதபுரி என்றும் பிங்கலபதம் என்றும் பெயர்கொண்ட இடங்களில் பசுமையும் ஈரமும் எப்போதும் நிறைந்திருக்கும் முரண்பாட்டை அங்கே புதியதாக வரும் சூதர்கள்தான் முதலில் உணர்ந்தார்கள். அப்பகுதியே காந்தாரகங்கை என்று அழைக்கப்பட்டது. முன்பு அதற்கு அப்பாலிருந்த பெரும் சதுப்பும் அடர்காடும் புராணகங்கை என்று அழைக்கப்பட்டன என்று முதியோர் நினைவுகூர்ந்தனர். அங்கிருந்து யானைக்கூட்டங்கள் நகருக்குள் நுழைந்து பழகிய யானைகளுடன் போரிட்டதுண்டு என்றனர்.
அங்கே தொல்காலத்தில் கங்கை ஓடியதென்றும் அதன் தடமே அந்தப்பெரிய பள்ளம் என்றும் நிமித்திகர் சொன்னார்கள். யயாதியின் காலகட்டத்தில் அங்கிருந்த தொன்மையான நகரமான மாகேந்திரபிரஸ்தம் கங்கையின் கரையில் அமைந்திருந்த சிறிய அழகிய துறைநகரம். கங்கை விலகிச்சென்றபோது அது மறைந்தது. பின்னர் மாமன்னர் ஹஸ்தி தன் மூதாதையரின் நகர் இருந்த அவ்விடத்திலேயே தன் புதியநகரை அமைத்தார். அங்கே ஆழத்துப்பெருக்காக கங்கை ஓடிக்கொண்டிருக்கிறது என்றனர் மூத்தோர். மண்ணுக்குள் மூன்றடி ஆழத்தில் பெருகிச்செல்லும் நீரை காணமுடியும் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.
புராணகங்கை பெருகிவந்து கோட்டைக்கதவை உடைத்து நகரை மூழ்கடித்ததை மூத்தவர்கள் அவ்வப்போது சொல்வதுண்டு. அங்குதான் யானைகளைப் பயிற்றும் பெரிய வடக்குவெளி இருந்தது. அங்கிருந்த அனுமன் ஆலயத்திற்கு அருகேதான் பீஷ்மருக்கும் திருதராஷ்டிரருக்கும் இடையே மற்போர் நடந்தது என்று ஒரு முதிய வீரர் நினைவுகூர்ந்தார். அதன்பின் அங்கே நிகழ்ந்த போர்களை ஒவ்வொருவராக சொல்லத் தொடங்கினர். அதை ஒட்டி இருந்த பெரிய வெற்று நிலத்தில் சகுனி உருவாக்கிய பெரிய கொட்டிலில்தான் காந்தாரர்களின் பன்னிரு குலங்களின் குலச்சபை வருடத்திற்கு ஆறுமுறை கூடி குடிப்பூசல்களை விசாரித்துவந்தது.
கௌரவர்கள் நூற்றுவரும் ஒன்றாகவே வந்தனர். துரியோதனன் தனக்கான இருக்கையில் அமர்ந்துகொண்டு தலைகுனிந்து எண்ணங்களில் ஆழ்ந்திருந்தான். சகுனியின் ஒற்றனான சுகிர்தன் வந்து துச்சாதனனிடம் “கொட்டிலைச் சுற்றி எந்த மானுடரும் வரமுடியாதபடி காவல் அமைத்துவிட்டேன் இளவரசே” என்றான். “மாதுலர் வந்ததும் நீர் விலகிவிடும். ஆனால் தொலைவிலிருந்து கொட்டிலை ஒவ்வொரு கணமும் நோக்கிக்கொண்டிரும்” என்றான் துச்சாதனன். “ஆணை” என்று தலைவணங்கி சுகிர்தன் விலகிச் சென்றான்.
சகுனியும் கணிகரும் சகுனியின் தேரில் வந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்ததும் கௌரவர்கள் எழுந்து வணங்கினர். சகுனி கௌரவர்களை ஒவ்வொருவராக நோக்கி தலை குலுக்கியபடி சென்று அமர்ந்துகொண்டார். அவர்களின் முகங்கள் ஒன்றுபோலவே இருந்தன. முகங்களில் இருந்த உணர்வுகளும் உடலசைவுகளும்கூட ஒன்றாக தெரிந்தன. அவர் “அனைவரும் வந்துவிட்டனரா?” என்றார். துச்சாதனன் “அனைவரும் இங்கிருக்கிறார்கள் மாதுலரே” என்றான். கணிகர் “எண்ணிப்பார்க்கவேண்டும் போலிருக்கிறதே” என்று சொல்லி தன் கரிய பற்களைக்காட்டி நகைத்தார்.
“குண்டாசி உடல்நலமின்றி இருந்தான் அல்லவா?” என்றார் சகுனி. குண்டாசி முன்னால் வந்து “மாதுலரே, நலம்பெற்று வருகிறேன்” என்றான். அவன் தோளில் தோல்பட்டையால் கட்டுபோடப்பட்டிருந்தது. “தோள்முழை இறங்கிவிட்டது” என்றான் துச்சாதனன். “மருத்துவர்கள் இப்போதுதான் உள்ளே நுழைத்திருக்கிறார்கள்… வலியில் முனகிக் கொண்டிருந்தான்.” அவன் தோள்களை நோக்கியபின் கணிகர் “உடன்பிறந்தார் நூற்றுவரும் கதாயுதம்தான் பயிலவேண்டுமா என்ன? இவன் தோள்கள் மெலிந்திருக்கின்றன. கதையின் எடைதாங்கும் எலும்புகளும் இல்லை” என்றார்.
“ஓரிருவர் வில்லும் வாளும் கற்றோம் கணிகரே” என்றான் துச்சாதனன். “எவருக்கும் அவை கைகளில் அமையவில்லை. வேறுவழியின்றி கதாயுதத்துக்கே வந்தோம். சற்று முயன்றால் அது கைவருகிறது.” சகுனி நகைத்து “இளவயதிலேயே அனைவரும் மூத்தவனை நோக்கி வளர்கிறார்கள். அவனைப்போலவே நடக்கிறார்கள், அசைகிறார்கள், பேசுகிறார்கள். சிந்தனையும் அவனைப்போலவே. ஆகவே அகத்தில் அவன் ஏந்திய கதாயுதம் நிலைபெற்றுவிடுகிறது. ஆகவே உடல் அதையன்றி பிறிதை ஏற்பதில்லை. நான் சிலரை பயிற்றுவிக்க முயன்று பார்த்தேன்…” என்றார். “கதை தனக்குரிய தோள்களை தானே உருவாக்கிக்கொள்ளும் வல்லமை கொண்ட படைக்கலம்” என்றபின் நகைத்து “இன்னும் ஒரு வருடத்தில் பாருங்கள். தினம் நூறு அப்பம் உண்பான்” என்றார்.
கணிகர் “எல்லா படைக்கலங்களும் தங்களுக்குரிய உடலையும் உள்ளத்தையும் உருவாக்கிக் கொள்கின்றன. உடல்களில் ஏறி அவை செல்கின்றன” என்றார். சகுனி “அனைவரும் அமருங்கள். இந்த அவைகூடலைப்பற்றி உங்கள் தமையன் சொல்லியிருப்பார். இது கௌரவர்களின் தனிக்கூட்டம். இங்கே பேசப்படும் ஒரு சொல்கூட உங்களைவிட்டு வெளியே செல்லக் கூடாது. உங்கள் அன்னையும் தந்தையும் அறியலாகாது. அணுக்கச்சேவகர் உய்த்துணரவும் கூடாது” என்றார். கௌரவர்கள் “ஆம் ஆம்” என்றனர்.
“இன்றுகாலை அரசரை உங்கள் தமையன்கள் அவரது அறையில் சந்தித்தனர். இன்றுமாலை நிகழவிருக்கும் உண்டாட்டுக்கு அரசர் செல்லப்போவதில்லை என்று தெரியவந்தது. முன்பில்லாத வகையில் முறைமீறி யாதவ அரசி நிகழ்த்தும் பலிநிறைவுப்பூசையை அரசர் சினத்துடன் நோக்குகிறார். ஆகவே நீங்களும் அதில் கலந்துகொள்ளப்போவதில்லை” என்றார் சகுனி. “ஆம்” என்றனர் கௌரவர்.
‘இந்தப் பூசனை முடிந்ததும் நகரில் அரசகுலத்தில் உள்ள பூசல் அறியப்பட்டுவிடும். பிளவை மக்கள் பேசிப்பேசி பெருக்குவார்கள். எவர் எதைக்கேட்டாலும் அமைதியாக இருங்கள். எதையும் சொல்லவேண்டாம். அமைதி மேலும் கதைகளை உருவாக்கும். பிளவு வலுக்கும்.”
அவர்களை நோக்கியபடி சகுனி சொன்னார் “இன்று காலை உங்கள் தமையன்கள் உங்கள் தந்தையிடம் பேசியவற்றை அவர்கள் சொல்லியிருப்பார்கள்.” கௌரவர்கள் கூட்டமாக “ஆம்” என்றனர். “அரசர் முடிவில் உறுதியுடன் இருக்கிறார். உங்கள் தமையன் பாண்டவர்களின் தாசனாக இங்கே வாழ்ந்தாகவேண்டும் என்று சொல்கிறார்” என்றார் சகுனி. கௌரவர்களிடம் மெல்லிய ஓசை எழுந்தது. துராதரன் “ஒருபோதும் அது நடவாது மாதுலரே” என்றான். “ஆம், அது அழுகிய மாமிசத்தை யானை உண்ணவேண்டுமெனச் சொல்வது போன்றது. ஒருநாளும் நடக்கப்போவதில்லை. ஆனால் உங்கள் தந்தை அதில் நிலைகொள்கிறார். அவரை மீறி எதுவுமே செய்யமுடியாது” என்றார் சகுனி.
சகுனி தொடர்ந்தார் “நாட்டில் பாதியை அவர் அளிக்கப்போவதில்லை. ஒரு சிறுதுண்டு நிலம்கூட கொடுக்கப்போவதில்லை. இந்நகரை விட்டு நீங்கள் நூற்றுவரும் நீங்கி உங்களுக்கென நிலத்தை கண்டடைவதற்கும் அவரது வாழ்த்து வரப்போவதில்லை. இந்நிலையில் உங்களுக்கிருக்கும் வழி ஒன்றே.” கௌரவர்களின் முகங்களை நோக்கி போதிய இடைவெளி விட்டபின் சகுனி சொன்னார் “நாட்டைப்பிரிப்பதன்றி வேறு வழியில்லை என்று அவர் எண்ணவேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம். பாண்டவர்களும் கௌரவர்களும் ஒருவரை ஒருவர் வெறுப்பது கூடிக்கூடி வரவேண்டும். அவர் கண்ணெதிரே ஒரு குருதிப்போர் நிகழும் என்ற நிலை வரவேண்டும்… அப்போது அவருக்கு வேறுவழி இருக்காதென்று எண்ணினோம்.”
“அது நிகழாதென்று இன்று காலையுடன் புரிந்துகொண்டோம்” என்றார் கணிகர். “அரசரின் சொற்கள் அதையே காட்டின. பாண்டவர் உயிருடன் இருப்பதுவரை அவர் சுயோதனர் நாடாள ஒப்பமாட்டார்.” அந்தச்சொற்களின் உட்பொருள் புரிந்து கௌரவர்களின் உடல்களில் ஓர் அசைவு ஓடியது. துஷ்கர்ணன் மூக்கை உறிஞ்சி கையால் தேய்த்தான். கணிகர் சொன்னார் “சபரரின் அரசநீதியான சதப்பிரமாணம் கொலையை அரசனின் அறமாகவே முன்வைக்கிறது.” மிக இயல்பாக எளிய ஒன்றைச் சொல்வதுபோல அவர் அதைச் சொன்னது முற்றிலும் திட்டமிடப்பட்டது என்று துச்சாதனன் உணர்ந்தான்.
“கொலைகள் இருவகை. தார்மிகம், அநிவார்யம் என்கின்றது சதப்பிரமாணம். எட்டுவகை தார்மீகக் கொலைகளை அரசன் செய்யலாம். போரில் அவன் எதிரிகளைக் கொல்லலாம். தனக்கு இரண்டகம் செய்த குடிகளைக் கொல்லலாம். முதன்மைச் செய்திகளை அறிந்த ஒற்றர்களை அவர்களின் பயன் முடிந்ததும் கொல்லலாம். நெருக்கமான அணுக்கச் சேவகர்கள் தேவைக்குமேல் தெரிந்துகொண்டவர்கள் என்றால் கொல்லலாம். அரசனின் அவையில் அமர்ந்திருக்கும் வாய்ப்பு கொண்டவர்கள் சித்தப்பிறழ்வாலோ பிற நோய்களாலோ தங்கள் உள்ளக்கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்கள் என்றால் கொல்லலாம். தண்டனைக்குரிய குற்றவாளிகளைக் கொல்லலாம். அவையில் தன்னை அவமதித்தவர்களைக் கொல்லலாம். மல்யுத்தத்தில் எதிரியைக் கொல்லலாம்.”
“தார்மீகக் கொலைகளை செய்வதனால் அரசனுக்குப் பழியோ பாவமோ வருவதில்லை. புகழே உருவாகும்” என்றார் கணிகர். “அநிவார்யம் என்பவை தவிர்க்கமுடியாமல் அவன் செய்யும் கொலைகள். அரசனின் முதன்மை அறம் என்பது அரசனாக இருப்பதே. அரசனாக இருந்தபின் அவன் ஆற்றும் செயல்களையே தார்மிகம் என்கிறோம். அரசனாக ஆவதற்கும் அரசனாக நீடிப்பதற்கும் அவன் கொலைகள் செய்யலாம். அக்கொலைகள் அவனுக்குப் பழியையும் பாவத்தையும் சேர்க்கும். அவன் பெருங்கொடைகள் வேள்விகள் மற்றும் குடியறங்களைச் செய்து காலப்போக்கில் அந்தப் பழியிலிருந்தும் பாவங்களிலிருந்தும் விடுபடலாம்.”
“அநிவார்யம் ஒன்பது வகை என்கின்றது சதப்பிரமாணம். தன் அரசுரிமைக்குப் போட்டியாக வருபவர்களை அரசன் கொல்லலாம். தன் உடன்பிறந்தார், தந்தையின் உடன்பிறந்தார், மற்றும் தாயாதிகள் இவ்வகையில் கொல்லத்தக்கவர். தன் அதிகாரத்துக்கு எதிராக வளர்ந்துவரும் குலத்தலைவர்களைக் கொல்லலாம். தன் கருவை ஏந்தியிருக்கும் பெண்ணை அவள் பின்னாளில் உரிமையுடன் வருவாளெனத் தோன்றினால் கொல்லலாம்” கணிகர் சொன்னார்.
“அரசன் தன் தவிர்க்கமுடியாத ஆட்சிச் செயல்களுக்குத் தடையாக அமையக்கூடிய மூத்தவர்களைக் கொல்லலாம். தன் புகழை அழிக்கும் சூதர்களைக் கொல்லலாம். தன்னை வெல்லக்கூடும் என்று அரசன் அஞ்சும் எதிரிநாட்டரசர்களையும் அவர்களின் குடும்பத்தவரையும் வஞ்சனையில் கொல்லலாம். தவிர்க்கமுடியாத காரணங்களால் செல்வத்தைக் கவர்வதற்காக வணிகர்களைக் கொல்லலாம். இன்றியமையாதபடி மக்களின் நோக்கை திசைதிருப்புவதற்காக குடிகளைக் கொல்லலாம். போரை தவிர்ப்பதற்காக தன் வீரர்களைக் கொல்லலாம்.”
“அநிவார்யம் ஒருபோதும் அரசனால் நேரிடையாக செய்யப்படக்கூடாது. அவற்றைச் செய்யும் ஏவலர்களையும் சதிகாரர்களையும் அவன் தன்னுடன் வைத்திருக்கவேண்டும். அவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றால் அவர்களையே பழிசுமத்தி தண்டிக்கவேண்டும். அநிவார்யக் கொலைகளுக்கான ஆணையை அரசன் தன் வாயால் பிறப்பிக்கலாகாது. அது அவன் அமைச்சரால் உய்த்தறியப்படவேண்டும். அதற்கு அவன் சான்றுகளை விட்டுவைக்கக்கூடாது“ என்றார் கணிகர். “அநிவார்யக் கொலைகளை அரசன் பின்னர் எண்ணிப்பார்க்கக் கூடாது. அக்கொலைகளை அவன் அரசை வெல்லவும் அதன்மூலம் மக்களின் நலன் கருதியும் செய்வானென்றால் அவனுக்கு மூதாதையரின் சினம் நிகழாது. எவருடைய தீச்சொற்களும் அவனை அடையாது.”
“அநிவார்யக் கொலைக்குப்பின் அரசன் செய்யவேண்டிய கழுவாய்களையும் நூல் வகுத்துரைக்கிறது. குடிமக்கள் கொல்லப்பட்டால் கொலையின் அளவுக்கு ஏற்ப நீர்நிலைகள் வெட்டப்படவேண்டும். பெண்கள் கொல்லப்பட்டால் அன்னசத்திரங்கள் அமைக்கப்படவேண்டும். அமைச்சரோ சூதரோ கொல்லப்பட்டால் கல்விச்சாலைகள் அமைக்கப்படவேண்டும். அரசகுலத்தோர் கொல்லப்பட்டால் மக்கள் வழிபடும் ஆலயங்கள் அமைக்கப்பட்டு அதில் நாள்பூசனை முறைமைகள் செய்யப்படவேண்டும். அந்த ஆலயத்தில் கொல்லப்பட்டவர்களுக்குரிய திதி நாட்களில் அவர்களின் ஆன்மாக்கள் நிறைவுகொள்ளும்படி பூசைகள் செய்யப்படவேண்டும்.”
அச்சொற்களை கௌரவர்கள் முழுமையாக உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் அச்செயல்களுக்கு நூல்களின் பின்பலம் உள்ளது என்ற எண்ணம் அவர்களில் உருவாவது தெரிந்தது. துச்சாதனன் அதுவே கணிகரின் நோக்கம் என்றும் ஐயுற்றான். அவர் நூல்களைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது சொற்கள் தடையின்றி வரவைக்கிறார். அவை ஐயமற்ற ஒலியுடன் இருக்கும், ஆனால் நினைவில் நிற்பதுமில்லை. துச்சாதனன் புன்னகையுடன் கணிகரை நோக்கினான். என்றோ ஒருநாள் அவர் தமையனுக்கும் எதிரியாவார், அன்று அவரை தான் கொல்லவேண்டியிருக்கும் என எண்ணிக்கொண்டான்.
“நாம் செய்வதற்கு இனி ஒன்று மட்டுமே உள்ளது” என்றார் கணிகர். “பாண்டவர்களும் அவர்களின் அன்னையும் இறந்தாகவேண்டும்.” ஒவ்வொருவரின் முகத்தையும் கூர்ந்து நோக்கிவிட்டு “ஒருவர்கூட எஞ்சலாகாது. ஒருவர் எஞ்சினாலும் ஆட்சியை அவருக்கே அளிப்பார் உங்கள் தந்தை. ஆகவே நமக்கு வேறுவழியில்லை. இது அநிவார்யக் கொலை. ஆகவே இளவரசர் துரியோதனர் கொலைக்கு ஆணையிடவேண்டியதில்லை. நானே அந்த ஆணையை விடுக்கிறேன். கொலையை நிகழ்த்துபவர்களையும் நானே அமர்த்துகிறேன். அது கொலை என எவரும் அறியப்போவதில்லை. விபத்து என்றே தோன்றும். அவர்களின் இறப்புக்குப்பின் இயல்பாகவே இந்த நாடும் முடியும் சுயோதனரை வந்தடையும்.”
துரியோதனன் சற்று அசைந்தான். அவன் எதிர்ச்சொல் எழுப்பப்போகிறான் என்று துச்சாதனன் எண்ணிய கணம் சகுனி “வேறு வழியில்லை என்பதை இளவரசர் துரியோதனர் அறிவார். பாரதவர்ஷத்தை வென்று அறம்செழிக்க ஆளும்போது இந்தப்பாவம் நிகர்செய்யப்படுமென அவர் அறிந்திருப்பார்” என்றார். “இப்பழிக்கு உடனடியாகச் செய்யவேண்டிய கழுவாய் ஏது?” கணிகர் “இறப்பவர்கள் அரசகுடியினர். ஆகவே ஆறு ஆலயங்கள் அமைக்கப்படவேண்டும். யமன் மாருதன் இந்திரன் மற்றும் அஸ்வினி தேவர்களுக்கும் கொற்றவைக்கும்” என்றார். “உடன் எளியோர் இறப்பார்கள் என்றால் அதற்குரிய சத்திரங்களும் அன்னசாலைகளும் அமைக்கப்படலாம்.”
“நாம் என்ன செய்யவிருக்கிறோம்?” என்றார் சகுனி. துரியோதனன் பெருமூச்சுடன் உடலை தளர்த்திக்கொண்டான். கணிகர் துச்சலனிடம் “வெளியே சென்று அமைச்சனை வரச்சொல்க” என்றார். துச்சலனுடன் வந்தவன் புரோசனன் என்னும் சிற்றமைச்சன் என்று துரியோதனன் கண்டான். ஒற்றனாக இருந்து அமைச்சன் ஆனவன் உளவுப்பணிகளை ஒருங்கமைத்து வந்தான். ஒற்றைக்கண்ணும் வடுக்கள் நிறைந்த முகமும் கொண்ட வெண்ணிற உருவினனான புரோசனன் பெரிய பற்களைக் காட்டி இளித்துக்கொண்டே வணங்கினான். “அமரும் புரோசனரே” என்றார் கணிகர். அவன் அமர்ந்துகொண்டு மீண்டும் இளித்தான்.
“புரோசனர் ஒரு சிறந்த திட்டத்தை வைத்திருக்கிறார்” என்றார் கணிகர். “அமைச்சரே சொல்லும்!” புரோசனன் “இது முன்னாளில் சில அரசர்கள் செய்ததுதான். இதை ஜதுகிருகம் என்று சொல்கிறார்கள்” என்றான். “விருந்துக்கு வரும் நட்பரசர்களில் நமக்கு ஒவ்வாதவர்களையோ பிறநாட்டின் தூதர்களையோ கொல்வதற்குரிய வழிமுறை இது. அவர்கள் தங்குவதற்காக ஒரு அரக்குமாளிகையை அமைப்போம். மிக எளிதில் தீப்பற்றும் மெல்லியமரங்களைக்கொண்டு இது கட்டப்படும். தேவதாருமரக்கட்டைகள்தான் பெரும்பாலும். சுவர்கள் இரு பலகைகளால் ஆனவை. நடுவே அரக்கு ஊற்றி நிறைக்கப்பட்டிருக்கும்.”
“கூரையின் உத்தரங்களும் உட்குடைவானவை. உள்ளே அரக்கும் தேன்மெழுகும் நிறைக்கப்பட்டிருக்கும். மூங்கில்களுக்குள் விலங்குகளின் கொழுப்பை ஊற்றி குளிர்வித்து அவற்றை அடுக்கி கூரைச்சட்டங்கள் செய்யப்பட்டிருக்கும். தேன்மெழுகால் அவை இணைக்கப்பட்டிருக்கும். அறைகளின் அடித்தளத்தில் மண் இருக்காது. புகை எழுப்பி எரியும் குங்கிலியமும் அகிலும் நிறைக்கப்பட்டு தேன்மெழுகு பூசப்பட்டிருக்கும்” என்றான் புரோசனன். “ஒரு சிறு தீப்பொறி போதும். மொத்தவீடும் தீப்பற்றி கொழுந்துவிட்டு மேலெழுந்துவிடும். உத்தரங்களும் மூங்கில்களும் உருகி மேலே விழுவதனால் எவரும் தப்பமுடியாது.
“அதேசமயம் சுவர்கள் அனைத்துக்குள்ளும் வலுவான இரும்புக்கம்பிகள் இருக்கும். ஆகவே எரிந்துகொண்டிருக்கும் சுவர்களை உடைத்து வெளியேற முடியாது. கதவுகளும் இரும்புக் கம்பிகள் கொண்டவை. வாயிலை நோக்கிய வழிகளுக்குமேல் பெரும் அரக்குச் சட்டங்கள் இருக்கும். அவை உருகி விழுவதனால் எந்த வாயிலையும் உள்ளிருந்து நெருங்க முடியாது. அரக்குமாளிகை கால்நாழிகைக்குள் உருகி சாம்பலாகிவிடும்…” துரியோதனன் பெருமூச்சு விட்ட்டான். சகுனி “ஆம்… கூச்சலிடுவதற்குள் கூரை மேலே விழுந்து மூடிவிடவேண்டும்” என்றான்.
“இதை இங்கு நாம் அமைக்கமுடியாது. பாண்டவர்கள் இங்கே எரிந்தால் பழி எளிதாக கௌரவர்கள் மேல் விழும். நேரில் கண்டால் அரக்குமாளிகையின் தந்திரமும் வெளியாகும்” என்றார் கணிகர். “இங்கிருந்து வடக்கே கங்கையின் கரையில் வாரணவதம் என்னும் இடம் உள்ளது. அங்கே கஜாசுரனைக் கொன்று அவன் தோலை உரித்துப் போர்த்தி கோயில்கொண்டிருக்கும் சிவன் கோயில் உள்ளது. பிழைகளுக்குக் கழுவாய் தேடும் இடம் அது. பாரதவர்ஷத்தின் அனைத்துப்பகுதிகளில் இருந்தும் மக்கள் அங்கே வருகிறார்கள். அங்கே பாண்டவர்கள் செல்லட்டும். அங்கே அவர்கள் எரிந்தழிந்தால் அது மகதத்தின் சதியென்றே கொள்ளப்படும். அப்படி நாம் பரப்புவோம். அரக்குமாளிகை அது என்பதை இங்குவரை எவரும் கொண்டுவந்து சேர்க்கமுடியாது.”
“அதை எப்படிச்செய்ய முடியும்? அவர்கள் அங்கே செல்லவேண்டுமே” என்றான் துரியோதனன். “அதற்குரிய வாய்ப்பே இன்று வந்திருக்கிறது” என்றார் கணிகர். “இன்று உண்டாட்டுக்கு அரசர் செல்லாமலிருப்பது தொடக்கம். அது தருமனை துயர்கொள்ளச்செய்யும். அரசரை சந்திக்கவும் அவர் சினத்தை ஆற்றவும் முயல்வான். பிற பாண்டவர்கள் திரும்பி வந்தபின்னரும் அரசர் சினம் கொண்டிருப்பார் என்றால் அது ஒரு பெரிய இக்கட்டாகவே அவர்களுக்கு நீடிக்கும். நகரெங்கும் இந்தக் குலப்பிளவு பேசப்படும். ஒவ்வொருநாளும் அது வளரும் இப்பிளவைப்பற்றி பாண்டவர்களும் குந்தியும் அச்சமும் வருத்தமும் கொண்டிருப்பார்கள்.”
“அவர்கள் திருதராஷ்டிரரை சந்திப்பார்கள். திருதராஷ்டிரரும் தன் சினத்தை எவ்வாறேனும் கடக்கவும் தன் இளவலின் மைந்தர்களை மீண்டும் தோள்சேர்த்து அணைக்கவும் விழைபவராகவே இருப்பார். அதற்கு நாம் ஒரு வழி சொல்லிக்கொடுப்போம். பாண்டவர்கள் செய்தது பெரும்பிழை என்றும் சரண் அடைந்த ஹிரண்யபதத்தினரைக் கொன்றதும் அவர்களின் மூக்குகளை வெட்டிக்கொண்டுவந்ததும் அரசர் உள்ளத்தை வருத்தியிருக்கின்றன என்றும் அதற்குக் கழுவாயாக அவர்கள் வாரணவதம் சென்று அங்குள்ள முக்கண்ணன் ஆலயத்தில் ஒரு மண்டல காலம் நோன்பிருந்து பிழைதீர்த்து வரட்டும் என்றும் சொல்வோம். அவ்வாறு அவர்கள் கழுவாய் கொண்டு வருவார்கள் என்றால் அவர்களை ஏற்பதில் கௌரவர்களுக்கும் தயக்கமில்லை என்போம். தன் மைந்தர்கள் மீண்டும் ஒன்றாவதற்காக திருதராஷ்டிரர் அவ்வாறு அவர்களுக்கு ஆணையிடுவார்” என்றார் கணிகர்.
“ஆம், அது சிறந்தவழியே” என்றார் சகுனி. “திருதராஷ்டிரர் அத்தகைய ஒரு எளிய செயல்மூலம் அனைத்தும் சீராகிவிடுமென நம்பவே விழைவார். அது தந்தையரின் இயல்பு. அவர்கள் தனயர்களை வளர்ந்தவர்களாக எண்ணுவதே இல்லை. தனயர்களின் பகைமையை எளிய விளையாட்டாகவே எண்ணுவார்கள்.” கணிகர் “அத்தகைய மாளிகையை அமைக்க எத்தனை காலமாகும்?” என்றார். “அமைச்சரே, ஒரே மாதத்துக்குள் நான் அங்கே அவர்கள் ஐவரும் தங்கும் மாளிகையை அமைப்பேன். எனக்கு அதற்குரிய யவன சிற்பிகளைத் தெரியும்” என்றான் புரோசனன். “செல்வத்தை எண்ணிப்பார்க்கவே வேண்டியதில்லை. எவருக்கும் எத்தனை செல்வமும் அளிக்கப்படலாம். தேவையானவற்றை என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளும்” என்றார் சகுனி.
“ஆனால் அந்த மாளிகை மிகப்பெரியதாக இருக்கவேண்டும்” என்றார் கணிகர். “அரசி இன்று பெரும் நிமிர்வுடன் இருக்கிறார். சிறிய இல்லமென்றால் அவர் அங்கே தங்க ஒப்பாமல் போகலாம். ஐவரும் அன்னையுடன் ஒரே மாளிகையில் தங்கியாகவேண்டும். ஆகவே அதைப் பார்த்ததுமே ஐவருக்கேகூட மிகப் பெரியது என்று தோன்றவேண்டும். மனம் கவரும் அழகுடன் இருக்கவேண்டும்.” புரோசனன் “ஆம், நான் சூத்ராகிகள் வரைந்த வாஸ்துமண்டலத்தை காந்தார அரசரிடம் காட்டுகிறேன். நான்கு சபைமண்டபங்களும் ஐந்து கோட்டங்களும் பொதுவான உணவுக்கூடமும் படைக்கலக்கூடமும் கொண்ட அரண்மனையாக அது இருக்கும். அங்கே சமையற்கூடம் அமையமுடியாது என்பது மட்டுமே குறை” என்றான்.
“அவர்கள் ஆலயத்தில் படைக்கப்பட்ட உணவை மட்டுமே அருந்தவேண்டும் என்று அங்குள்ள வைதிகர்களைக் கொண்டு சொல்லச்செய்கிறேன்” என்றார் கணிகர். “ஆனால் அரக்குமாளிகையில் எரியின் வாசம் இருக்குமல்லவா?” புரோசனன் “இல்லை அமைச்சரே. இல்லம் முழுமையாகக் கட்டப்பட்டபின் அதன் மேல் இமயத்தின் வெண்களிமண் பூசப்படும். பார்வைக்கு சுண்ணத்தாலான இல்லம்போலிருக்கும். சுண்ணத்தின் வாசமே அங்கிருக்கும்” என்றான். கணிகர் “அவ்வாறே ஆகுக” என்றபின் புன்னகையுடன் “ஆகுதி நிகழட்டும்… ஓம் ஸ்வாகா!” என்றார்.
“இச்செய்தியை எவரும் உய்த்துவிடலாகாது. புரோசனர் அங்குசென்று இல்லத்தை அமைக்கட்டும். அவர்கள் அங்கே செல்லும்போது முன்னரே அங்கே இல்லம் கட்டப்பட்டிருப்பதாகத் தெரியவேண்டும். நாம் கட்டியதாகத் தெரியவேண்டியதில்லை” என்றார் கணிகர். “நாம் அஞ்சவேண்டியவர் விதுரரே. அவருக்கு சிறு ஐயம் எழுந்தாலும் நாம் பிடிக்கப்படுவோம். பிடிபட்டால் நம்மை கழுவேற்றுபவர் நம் தந்தையாகவே இருப்பார். அதை எவரும் மறக்கவேண்டியதில்லை” என்றான் துச்சாதனன்.
“இந்த சந்திப்பை விதுரர் ஐயப்படமாட்டாரா?” என்றான் துராதனன். “அதற்காகவே இன்றே இதை வைத்தேன். இனிமேல் நாம் கூடிப்பேசப்போவதில்லை” என்றார் கணிகர். “இன்று நாம் சந்திப்பது மாலை உண்டாட்டை புறக்கணிப்பதற்காகத்தான் என்றே விதுரர் எண்ணுவார். ஆகவேதான் வெளிப்படையாக இச்சந்திப்பை அமைத்தேன்” என்றார் சகுனி. “நாம் கிளம்புவோம்…” என்றபின் எழுந்தார். கணிகர் மெல்ல எழுந்து வலியுடன் “தெய்வங்களே!” என்று முனகினார். “என்னை தேர்வரை கொண்டுசெல்லுங்கள்” என்றார்.
கௌரவர்கள் தலைகுனிந்து ஒரு சொல்கூட பேசாமல் கலைந்துசென்றார்கள். குண்டாசியின் கண்கள் கலங்கியிருப்பதை துரியோதனன் கண்டான். இளைய கௌரவர்கள் பலரின் முகங்களும் சிறுத்திருந்தன. சகுனி அவன் நோக்குவதைக் கண்டு “அவர்களுக்கெல்லாம் பீமன் வீரநாயகன். அவர்களுக்கு இது நெடுநாட்கள் நெஞ்சில் ஆறாவடுவாகவே இருக்கும்” என்று புன்னகைத்தார். துரியோதனன் “அவர்கள் சொல்லிவிடுவார்களா?” என்றான். கணிகர் “சொல்லமாட்டார்கள். ஏனென்றால் அது அவர்கள் சிந்தித்து எடுக்கும் முடிவல்ல. சிந்தித்து எடுக்கப்படும் முடிவுகள் சிந்தனையிலேயே மாறவும் கூடும். தமையனுக்கு முழுமையாகக் கடப்படுவது என்பது அவர்களின் உடலில் உறுப்பு போல பிறவியிலேயே வந்த இயல்பு. நினைத்தாலும் மீறமுடியாது” என்றார்.
சகுனி “ஆயினும் இவர்கள் அனைவரையும் நாம் கூட்டியிருக்கவேண்டியதில்லை என்றே எண்ணுகிறேன் கணிகரே” என்றார். “இல்லை. இது முதன்மையான செயல். இதில் அவர்களனைவருக்கும் பங்கு வேண்டும். கூட்டான பாவத்தைப்போல வலுவான பிணைப்பை உருவாக்குவது வேறில்லை” என்றபின் பற்களைக் காட்டி நகைத்தார். அவரை ஒருகணம் குனிந்து நோக்கிய துரியோதனன் கண்களில் மின்னிய கடும் வெறுப்பை துச்சாதனன் கண்டான். வாளை உருவி கணிகரின் தலையை வெட்டி எறியப்போகிறான் என்றே நினைத்தான். ஆனால் துரியோதனன் உதட்டை ஒருகணம் இறுக்கிவிட்டு முன்னால் நடந்து சென்றான். துச்சாதனன் தொடர்ந்தான்.
“தான் நல்லவன் என்று நம்பவும் வேண்டும். காமகுரோதமோகங்களை பின் தொடர்ந்து ஓடவும் வேண்டும். மானுடனின் முதன்மையான இக்கட்டே இதுதான்” என கணிகரின் குரலும் மெல்லிய சிரிப்பும் கேட்டது. துரியோதனன் சென்று தன் ரதத்தில் ஏறிக்கொண்டான். பின்னால் சென்ற துச்சாதனன் சாரதியின் தட்டில் அமர்ந்து குதிரைகளை தட்டினான். குதிரைகள் காலெடுத்து வைத்தபோது ரதம் ஒருகணம் அதிர்ந்தது. அது ஏதோ சொல்லப்போவது போல துச்சாதனனுக்குத் தோன்றியது. அவன் கையில் சவுக்குடன் துரியோதனனின் சொல்லுக்காகக் காத்திருந்தான்.
“மேற்குக்கரைக்கு” என்றான் துரியோதனன். ஏரிக்கு என்று துச்சாதனன் உணர்ந்துகொண்டான். துரியோதனன் வாயில் தூசு பட்டுவிட்டது போல துப்பிக்கொண்டே வந்தான். பலமுறை அவன் துப்பியதைக் கண்டபின்னர்தான் துச்சாதனன் அதிலிருந்த விந்தையை அறிந்தான். துரியோதனனிடம் ஒருபோதும் இல்லாத பழக்கம் அது. ஒருமுறை அவன் ரதத்தை நிறுத்தினான். துரியோதனன் ஓங்கி காறித்துப்பியபின் செல்லலாம் என்பதுபோல உறுமினான்.
அப்பால் அரண்மனையின் மகுடக்குவைகள் மேல் வெயில் பொழிந்துகொண்டிருந்தது. அமுதகலசக் கொடி காற்றில் துவண்டது. துச்சாதனன் முதல்முறை நோக்குவதுபோல அந்தக்கொடியை நோக்கினான். அது துவண்டு அசைந்ததனால் இலச்சினையை பார்க்க முடியவில்லை. விழிமறையும் வரை அவன் நோக்கிக்கொண்டே சென்றான். ஏரிக்கரையில் நின்றபோது துரியோதனன் இறங்கிச்சென்று அதன் கல்லாலான கரையில் அமர்ந்துகொண்டான். சற்று அப்பால் ரதத்தை நிறுத்திவிட்டு துச்சாதனன் கைகட்டி நின்றான்.
ஓவியம்: ஷண்முகவேல்
பலமுறை அவன் தமையனுடன் அப்படி வந்ததுண்டு. ஏரிக்கரையில் இரவெல்லாம் அமர்ந்திருப்பது துரியோதனனின் வழக்கம். அலைபுரளும் நீரில் அவன் எதைப்பார்க்கிறான் என்று துச்சாதனன் எண்ணிக்கொள்வதுண்டு. அவன் நீலநீரலைகளை திரும்பி நோக்கினான். மேகம்பரவிய வானம் நெளிந்துகொண்டிருந்தது. ஒருகணம் நீருக்குள் மிகப்பெரிய ஒரு கரிய நாகத்தின் உடல் நெளிவதான விழிமயக்கு ஏற்பட்டு துச்சாதனன் மெய்சிலிர்த்தான்.