பிரயாகை - 40
பகுதி எட்டு : மழைப்பறவை – 5
அந்திசாயும் நேரத்தில் அஸ்தினபுரியில் இருந்து எண்பது காதத்துக்கு அப்பால் இருந்த இருண்ட குறுங்காட்டுக்குள் முந்நூறு சிறிய நீள்படகுகள் ஒருங்கிக்கொண்டிருந்தன. பெரும்பாலானவை கங்கையில் விரைந்தோடும் காவல்படகுகள். எஞ்சியவை மீன்பிடிப்படகுகள். அவற்றின் அடிப்பக்கத்தில் தேன்மெழுகு உருக்கி பூசப்பட்டிருந்தது. படகுகள் மீதும் பாய்களிலும் கருமைகலந்த தேன்மெழுகு பூசப்பட்டிருந்தது. தச்சர்கள் அவற்றின் சிறிய கொடிமரங்களை விலக்கிவிட்டு பெரிய கழிகளை துளையில் அறைந்து நீளமான கொடிமரங்களை அறைந்து நிறுத்தினர். அரக்கையும் களிமண்ணையும் உருக்கி அவற்றை அழுத்தமாகப் பதித்தனர். நூறு தச்சர்களும் மீனவர்களும் பணியாற்றும் ஓசை காட்டுக்குள் எதிரொலித்துக்கொண்டிருந்தது.
மூடப்பட்ட சிறிய வண்டிகளில் வில்லம்புகளும் வாள்களும் நீண்ட பிடிகொண்ட வேல்களும் வந்து கொண்டிருந்தன. கவசங்களை எடுத்து தனித்தனியாகப் பிரித்து அடுக்கிக்கொண்டிருந்தனர் வீரர்கள். போருக்கு முன் வீரர்களிடம் உருவாகும் கூரிய பார்வையும் செயல்விரைவும் அவர்களிடமிருந்தது. ஆகவே அங்கே தேவைக்குமேல் சொற்களே பேசப்படவில்லை. பீமன் மாலைமுதலே அங்கிருந்து அவர்களுடன் பணியாற்றிக்கொண்டிருந்தான். நகுலனும் சகதேவனும் சேணம்பூட்டப்பட்ட போர்க்குதிரைகளுடன் கங்கை ஓரமாக குறுங்காடுகள் வழியாக அந்தியிலேயே கிளம்பிச்சென்றிருந்தனர்.
கிருஷ்ணன் வரைந்து காட்டிய வடிவில் படகுகளில் பாய்மரங்கள் கட்டப்பட்டன. மூன்றுபாய்மரங்களும் இணைந்து காந்தள் இதழ்கள் போல குவிந்திருந்தன. ஒன்றில் பட்ட காற்று சுழன்று இன்னொன்றைத் தள்ளி மீண்டும் சுழன்று மூன்றாவது பாயில் விழும்படி அமைக்கப்பட்டிருந்தது. மூன்றும் இணைந்து ஒரே விரைவாக எப்படி ஆகும் என்று தச்சர்களுக்கு புரியவில்லை. பாய்களை கொடிமரத்தில் கட்டி கொடிமரத்தை நூற்றுக்கணக்கான சிறிய கயிறுகளால் படகின் உடலெங்கும் பிணைத்திருக்கவேண்டும் என்று கிருஷ்ணன் சொல்லியிருந்தான். ஆகவே படகுகள் விரிந்த பாய்களுடன் சிலந்திவலையில் சிக்கிய வண்ணத்துப்பூச்சிபோல இருந்தன.
கிருஷ்ணன் “பாயிலிருந்து விசை கொடிமரத்துக்குச் செல்லும். படகு கொடிமரத்துடன் நன்கு பிணைக்கப்பட்டிருக்கவேண்டும். இல்லையேல் காற்றின் விரைவில் விசைதாளாது படகு உடைந்து விலகிவிடும்” என்றான். “அவ்வண்ணமென்றால் நாம் வலுவான வடங்களால் பிணைக்கவேண்டுமல்லவா” என்றான் பெருந்தச்சன் கலிகன். “இல்லை கலிகரே, எப்போதும் ஏதேனும் ஒருசில வடங்களின்மேல்தான் கொடிமரத்தின் விசை இருக்கும். அவை மூன்றுபாய்களின் மேல் காற்று அளிக்கும் அழுத்தத்தை தாளமுடியாமல் அறுந்துவிடும். ஏராளமான சிறிய கயிறுகள் என்றால் எத்திசையிலானாலும் விசையை பகிர்ந்துகொள்ள பல கயிறுகள் இருக்கும்” என்றான் கிருஷ்ணன்.
கலிகர் “நீர் மீனவரா?” என்றான். “இல்லை” என்றான் கிருஷ்ணன். “நான் இதை முன்னரே கண்டிருக்கிறேன். இது கலிங்கமாலுமிகளின் வழி. இதை எங்கு கற்றீர்?” என்றான் கலிகன். கிருஷ்ணன் புன்னகைசெய்தான். “சிறியகயிறுகளை அமைப்பதில் ஒரு பின்னல் கணக்கு இருக்கிறது. இல்லையேல் சில கயிறுகள் அறுபட்டு அந்த அறுபடலின் விசையே அனைத்தையும் அறுத்துவிடும்” என்றான் கலிகன். “நான் கற்பிக்கிறேன்” என்று கிருஷ்ணன் நிலத்தில் அமர்ந்து வரைந்து காட்டினான்.
அந்தியில் கிருஷ்ணனும் அர்ஜுனனும் குதிரைகளில் வந்துசேர்ந்தபோது வீரர்கள் பணிகளை முடித்து காத்திருந்தனர். அங்கே பந்தங்கள் ஏதுமிருக்கவில்லை. அந்தியிருளில் விழியொளியாலேயே அனைத்தும் தெரிந்தன. கிருஷ்ணன் இறங்கி ஒவ்வொரு படகையும் சென்று பார்த்தான். கயிறுகளை இழுத்தும் கொடிமரத்தை அசைத்தும் பார்த்தபின் திரும்பி வந்தான். அர்ஜுனன் கங்கையின் நீர் கரிய ஒளிப்பெருக்காக சென்றுகொண்டிருப்பதை நோக்கினான். வானில் விண்மீன்கள் பெருகிக்கொண்டிருந்தன. கிருஷ்ணன் அருகே வந்து வானை நோக்கியபின் “இன்னும் சற்றுநேரத்தில் பனிமலைக் காற்று வீசத்தொடங்கும்” என்றான். துணைத்தளபதி நாகசேனன் “ஆம் இளவரசே” என்றான்.
அவர்கள் காத்திருந்தனர். இருளுக்குள் ஒவ்வொருவரும் நிழலுருக்களாகத் தெளிந்து தெரிவதை அர்ஜுனன் நோக்கினான். நிழலுருக்களிலேயே ஒவ்வொருவரையும் துல்லியமாக அடையாளம் காணமுடிந்தது. பீமன் எதையோ வாயிலிட்டு மெல்லத் தொடங்கியபடி கைகளை தட்டிக்கொண்டான். கிருஷ்ணன் தன் கையில் இருந்த சிறிய பெட்டிக்குள் இருந்து ஒரு அரக்குத்துண்டை எடுத்தான். அது வெளிவந்ததும் மெல்ல ஒளிவிடத் தொடங்கியது. பின்னர் மின்மினி போல குளிர்ந்த இளஞ்சிவப்பு ஒளியாக ஆகியது.
“இமயமலையில் உள்ள ஒரு கொடியின் பாலால் ஆன அரக்கு இது. அதற்கு ஜோதிர்லதை என்று பெயர். இரவில் ஒளிவிடும் உள்ளொளி கொண்டது. நீரில் நனைந்தாலும் ஒளிவிடும் நெருப்பு” என்று கிருஷ்ணன் சொன்னான். அதை அவன் அசைத்ததும் வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய படகுகளுக்கு அருகே சென்று நின்றனர். மெல்லிய மூச்சொலிகளே செடிகள் நடுவே காற்று ஓடும் ஓசைபோல ஒலித்தன. படகுகளில் படைக்கலங்களும் கவசங்களும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன.
இரண்டாம் முறை கிருஷ்ணன் கையசைத்ததும் வீரர்கள் மூங்கில் உருளைகள் மேல் வைக்கப்பட்டிருந்த சிறிய படகுகளைத் தள்ளி கங்கையில் இறக்கினார்கள். கங்கையில் அவை இறங்குவது இருளில் எருமைகள் இறங்குவதுபோல ஒலித்தது. நீரில் துடுப்புகளால் தள்ளி ஒழுக்குமையத்தை அடைந்தனர். தொடர்ந்து படகுகள் இறங்கிக்கொண்டே இருந்தன. முன்னால் சென்ற படகு அப்பால் சிறிய கட்டை நீரில் மிதப்பதுபோலத் தெரிந்தது. அர்ஜுனனும் கிருஷ்ணனும் ஒரே படகில் ஏறிக்கொண்டனர். அவர்கள் நீரில் இறங்கிய பின்னர் பீமனின் படகு நீரில் இறங்கியது.
கிருஷ்ணன் மீண்டும் ஜோதிர்லதையை ஒருமுறை சுழற்றியதும் அனைவரும் பாய்களின் கட்டுகளை அவிழ்த்தனர். கங்கைக்குமேல் இணையான வான் நதியாகச் சென்றுகொண்டிருந்த காற்றுப்பெருக்கு பாய்களை வெறியுடன் அள்ளி விரித்து எடுத்துக்கொண்டது. குழிந்து புடைத்த பாய்களின் இழுவிசையில் கொடிமரங்களின் ஆப்புகள் முனகின. கயிறுகள் உறுமியபடி விசை கொண்டன. பிரம்மாண்டமான யாழ் ஒன்றில் இருப்பதாக அர்ஜுனன் நினைத்தான். இருளில் முடிவில்லாத ஆழத்தில் குப்புற விழுந்துகொண்டே இருப்பது போல அவர்கள் கங்கையில் சென்றனர்.
படகுகளுக்கு அத்தனை விரைவு இருக்கக்கூடும் என்பதையே அர்ஜுனன் உணர்ந்ததில்லை. கண்கள் காது மூக்கு என அனைத்து உறுப்புகளும் முற்றிலும் செயலிழந்துவிட்டன என்று தோன்றியது. இருளே காற்றாக மாறி அவற்றை அடைத்துக்கொண்டுவிட்டது. மூச்சு நெஞ்சுக்குள் பெரும் எடையுடன் அடைத்து விலாவை விம்மச்செய்தது. உடலில் சுற்றிக்கட்டியிருந்த ஆடைகள் தோல் கிழிபட்டு பறக்கத் துடிப்பதுபோல அதிர்ந்தன. படகின் தீபமுனையால் கிழிபட்டுத் தெறித்த நீர்த்துளிகள் புயல்காற்றில் அள்ளி வீசப்படும் மழைத்துளிகள் போல சீறிச்சென்றன, முகத்திலும் உடலிலும் கூழாங்கற்களை வீசியதுபோல அறைந்து சிதறின.
இருபக்கமும் இருள் மெழுகுநதி போல பின்னால் சென்றுகொண்டிருந்தது. வானில் அத்தனை விண்மீன்களும் உருகி ஒன்றான மெல்லிய வெளிச்சம் தெரிந்தது. அருகே வரும் படகுகள் தெரியவில்லை. படகில் அருகே இருப்பவனையும் உணரமுடியவில்லை. தன்னந்தனிய இருள்பயணம். பாதாளத்துக்கான வழி அத்தகையது என அவன் அறிந்திருந்தான். இருளின் விரைவு மட்டுமே கொண்டுசெல்லக்கூடிய ஆழம் அது. கங்கை ஒரு மாபெரும் நாகம் என்ற எண்ணம் உடனே வந்தது. அதன் படம் நோக்கி வழுக்கிச் சென்றுகொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டான். கரையோரமாக எங்கோ ஒரு சிதைவெளிச்சம் தெரிந்தது. அதன் செம்பொட்டு எரிவிண்மீன் போல கடந்துசென்றது.
பின்னர் கங்கையில் எதிர் அலைகள் வரத்தொடங்கின. படகுகள் விரைவழிந்து பெரிய அலைகளில் எழுந்து அமைந்தன. கிருஷ்ணனிடம் “எங்கு வந்திருக்கிறோம்?” என்றான் அர்ஜுனன். “கங்கையின் முதல் வளைவு… மச்சபுரி அருகே” என்றான் கிருஷ்ணன். “அத்தனை விரைவாகவா?” என்று அர்ஜுனன் சொன்னான். “நீ நேரத்தை அறியவில்லை…” என்றான் கிருஷ்ணன். வானத்தைத்திரும்பி நோக்கி “புரவிகள் சோமவனம் வந்து சேர்ந்திருக்கும் இந்நேரம். எரியம்பு அனுப்பச் சொல்லியிருந்தேன்” என்றான். “முன்னதாக வந்துசேர்ந்திருந்தால் நாம் எரியம்பை பார்த்திருக்க முடியாதே” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆகவேதான் இந்த இடத்துக்கு நாம் வரும்போது எரியம்பு எழும்படி சொல்லியிருந்தேன்” என்றான் கிருஷ்ணன்.
பேசிக்கொண்டிருக்கையிலேயே வானில் எரியம்பு ஒன்று எழுந்து மறைந்தது. “வந்துவிட்டன… குதிரைகளை நீர் அருந்தவிட்டுவிட்டு மீண்டும் கிளம்புவார்கள்” என்றபின்னர் கிருஷ்ணன் அடுத்த எரியடையாளத்தைக் கொடுத்தான். அனைத்துப்படகுகளிலும் பாய்களைக் கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்து அவற்றின் கோணத்தை மாற்றினார்கள். பாய்கள் நடனத்தில் கைகள் அசைவதுபோல வளைந்தன. காற்று பாய்களை அறைந்து வளைத்து படகுகளைத் தூக்கி பக்கவாட்டில் தள்ளி நீர்ப்பெருக்கின் ஓரம் நோக்கி திருப்பிக் கொண்டுசென்றது.
“அடுத்த பெருக்குக்குள் நுழைகிறோமா?” என்றான் அர்ஜுனன். “ஆம், இங்கே நீரொழுக்கு குறைவு. கங்கை சமவெளியை அடைந்து விரிகிறது. ஆனால் நாம் காற்றின் விசையை பயன்படுத்திக்கொள்ள முடியும்” என்றான் கிருஷ்ணன். பாய்கள் தோள்கோர்த்துப் போரிடும் மல்லர்கள் போல ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு உச்சவிசையில் அசைந்தன. கயிறுகள் முனகின. படகுகள் கங்கையின் எதிரலைகள் மேல் எழுந்து விழுந்து மீண்டும் எழுந்து முன்னேறின.
விடிவெள்ளி எழுந்ததும் கிருஷ்ணன் கரையை நோக்கிக்கொண்டிருந்தபின் “சப்தவனம்” என்றான். அவனுடைய ஒளிச்சைகை தெரிந்ததும் வீரர்கள் படகுகளின் பாய்களைக் கட்டிய கயிறுகளை அவிழ்த்து இழுத்து திருப்பி திசைமாற்றினர். படகுகள் மீன்கூட்டம் போல ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு வளைவாக கரையோரக் காட்டை அடைந்தன. முதலில் கிருஷ்ணனின் படகு கரையை அடைந்தது. இறங்கி இடுப்பளவு நீரில் குதித்து படகை இழுத்து மணல்கரையில் வைத்துவிட்டு “படகுகளை இழுத்து கரைசேர்த்து தோளிலெடுத்துக்கொண்டு காட்டுக்குள் நுழையுங்கள். கரையிலோ நீரிலோ படகுகள் நிற்கலாகாது” என்றான்.
காட்டின் இலைச்செறிவுக்குள் படகுகளை சேர்த்துவிட்டு அவர்கள் உள்ளே சென்று மரத்தடிகளில் அமர்ந்தனர். சிலர் சென்று காய்களையும் கிழங்குகளையும் சேர்த்துக் கொண்டுவந்தனர். “பச்சையாகவே உண்ணுங்கள். புகை எழக்கூடாது” என்றான் பீமன். உண்டபின் அவர்கள் காட்டுக்குள் சருகுகளை விரித்துப்படுத்து துயின்றனர். காவல் வீரர்கள் முறைவைத்து மரங்களின் மேல் அமர்ந்து கங்கையையும் மறுபக்கம் காட்டையும் கண்காணித்தனர்.
இரவெழுந்து விண்மீன்கள் வெளிவரத்தொடங்கியதும் வீரர்கள் மீண்டும் படகுகளை சுமந்து கொண்டுசென்று நீரிலிட்டனர். படகுகள் ஒவ்வொன்றாக நீர்ப்பெருக்கை அடைந்தபோது எரியம்பு வானில் எழுந்தது. “குதிரைகள் படகுகளில் ஏறிக்கொள்கின்றன” என்றான் கிருஷ்ணன். பீமன் அர்ஜுனனிடம் “இத்தனை செயல்களை ஒருங்கிணைத்து போரை நடத்துவது எப்போதுமே நல்ல வழி அல்ல. ஒன்று தவறினாலும் அனைத்தும் பிழையாகும்” என்றான். கிருஷ்ணன் “தவறாது” என்றபின் புன்னகை செய்தான்.
அவர்களின் படகுகள் வளையும் பறவைகளின் சிறகுகள் போல பாய்களைச் சரித்து யமுனை கங்கையைத் தொடும் நீர்முனை நோக்கி சென்றன. எதிரலைகளில் படகுகள் எழுந்து எழுந்து விழுந்தன. “தழுவுமுகத்தின் பேரலைகளைக் கடந்துவிட்டால் விரைவு கொள்ளமுடியும்” என்றான் கிருஷ்ணன். அலைகளில் இருந்து சிதறிய நீர் முகத்தில் அறைந்தது. அவர்களனைவரும் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்தார்கள். யமுனையின் நீரில் மழைச்சேற்றின் வாசம் இருந்தது.
திரிவேணி முகத்திற்கு அப்பால் தொலைவில் மகதத்தின் சிறிய காவல்கோட்டையின் மீது பந்தங்களின் ஒளி தெரிந்தது. கங்கைப்பெருக்கில் ஆடியபடி நின்றிருந்த மகதத்தின் பெருங்கலங்களின் சாளரங்கள் வழியாகத்தெரிந்த வெளிச்சம் மிதக்கும் நகரம் போல தோற்றமளித்தது. இருளுக்குள் சிறிய படகுகள் செல்வதை அவர்கள் அறிய வாய்பில்லை. மேலும் பாய்களும் கருமையாக இருந்த அவற்றை கங்கையின் பனிப்புகைப்பரப்பில் சற்றுத்தொலைவிலேயே கூட காணமுடியவில்லை. ஆயினும் அனைவரும் அந்த வெளிச்சங்களை நோக்கியபடி நெஞ்சு அறைய கடந்துசென்றனர்.
யமுனையின் நீர்வெளியில் முழுமையாக நுழைந்துகொண்டதும் கிருஷ்ணன் அடுத்த எரியடையாளத்தை அளித்தான். படகுகளின் பாய்கள் மீண்டும் மாற்றிக்கட்டப்பட்டன. அதுவரை சாய்ந்து சென்றுகொண்டிருந்த படகுகள் எழுந்து நேராக விரையத் தொடங்கின. அலைகளில் அவை ஏறியமர்ந்து செல்ல அர்ஜுனன் தன் இடையை படகுடன் சேர்த்துக்கட்டியிருந்த தோல்பட்டையை விடுவித்துக்கொண்டான். இருபக்கமும் இருள் நிறைந்திருந்த கரையில் எந்த அடையாளமும் கண்களுக்கு தென்படவில்லை. அவன் எண்ணத்தை அறிந்தவன்போல கிருஷ்ணன் “நான் நன்கறிந்த நதிக்கரை… அங்கே நிற்கும் மரங்களைக்கூட என்னால் சொல்லமுடியும்” என்றான்.
அவர்கள் ஒரு வளைவை அடைந்ததும் அடுத்த எரியடையாளத்தை கிருஷ்ணன் அளித்தான். படகுகள் பாய்களை சுருக்கிக்கொண்டன. விரைவழிந்து ஒவ்வொன்றாக கரைநோக்கிச் சென்றன. செல்லச்செல்ல அவை ஒன்றுடன் ஒன்று நெருங்கி முகம் முட்டிக்கொண்டன. படகிலிருந்த வீரர்கள் மெல்லியகுரலில் பேசிக்கொண்டனர். முதல்படகு கரையோரமாகச் சென்றபோது அங்கே ஒரு எரியடையாளம் தெரிந்து மறைந்தது. அவர்கள் அணுகியபோது அங்கே நின்றிருந்த யாதவர்களின் சிறிய படை ஒன்று சிறியபடகுகளுடன் நீரில் குதித்து அணுகிவந்தது. அவர்கள் கொண்டு வந்த வடத்தை பற்றிக்கொண்டு முதல்படகு கரையணைந்தது.
சரபம் உயரமில்லாத மரங்கள் செறிவற்று அமைந்திருந்த மேட்டுநிலம். ஆனால் தொலைவிலிருந்து பார்க்க பசுமை மூடி நிலம் மறைந்திருந்தது.படகுகள் ஒவ்வொன்றாக நெருங்கி ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு நின்றன. படகுகளாலான ஒரு கரை உருவானது. அவற்றை ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் கட்டி அவற்றின்வழியாக வீரர்கள் பொருட்களை அவிழ்த்து கரைசேர்க்கத் தொடங்கினர். கவசங்களை அணிந்துகொண்டு தங்கள் படைக்கலங்களை எடுத்துக்கொண்டனர். ஓரிரு சொற்களில் பேசிக்கொண்டனர். “இங்கிருந்து நோக்கினால் மதுராவின் கோட்டை தெரியும்” என்றான் கிருஷ்ணன். “புரவிகள் கிளம்பினால் அவற்றின் குளம்போசையை அவர்கள் கேட்பதற்குள் நாம் நெருங்கிவிடுவோம்.”
அவர்கள் குறுங்காட்டுக்குள் அமர்ந்துகொண்டனர். பொங்கிசென்றுகொண்டிருந்த காற்றில் சற்றுநேரத்திலேயே தலைமுடியும் ஆடைகளும் காய்ந்துவிட்டன. இனியகளைப்பு ஒன்று அர்ஜுனனை ஆட்கொண்டது. ஒருபோதும் அத்தகைய அமைதியை அவன் உணர்ந்ததில்லை. ஒவ்வொரு கணமும் தித்திப்பதுபோல தோன்றியது. மென்மையாக, மிக இதமாக காலத்தில் வழுக்கிச் சென்றுகொண்டிருப்பதுபோல. ஒரு சொல்கூட இல்லாமல் அகம் ஒழிந்து கிடந்தது. அவன் அதையே நோக்கிக் கொண்டு வேறெங்கோ இருந்தான். எத்தனை அமைதி என்று அவன் சொல்லிக்கொண்டான். அதை வேறெவருக்கோ சுட்டிக்காட்டுவது போல. எத்தனை அமைதி என்பது ஒரு நீண்ட சொல்லாக இருந்தது. அந்தச்சொல்லின் ஒரு முனை முதல் மறுமுனை வரை அவன் சென்றுகொண்டே இருந்தான்.
அவன் மெல்லிய ஒலி ஒன்றைக்கேட்டு விழித்துக்கொண்டான். கிருஷ்ணன் அருகே நின்றுகொண்டிருந்தான். “என்ன?” என்றான் அர்ஜுனன். “எரியம்பு… குதிரைகள் நெருங்கிவிட்டன.” அர்ஜுனன் திரும்பி படைவீரர்களைப் பார்த்தான். மரத்தடிகளில் வெவ்வேறு வகையில் படுத்து அவர்களெல்லாம் துயின்றுகொண்டிருந்தனர். “எழுப்பலாமா?” என்றான். “இல்லை. புரவிகளை மிகமெல்ல கொண்டுவரச்சொல்லியிருக்கிறேன். அவை வரும் குளம்போசை கேட்கலாகாது. மேலும் மெல்ல நடப்பதே அவற்றுக்குரிய ஓய்வும் ஆகும்…”
அர்ஜுனன் மீண்டும் போர்வீரர்களை நோக்கிவிட்டு “நன்றாகத் துயில்கிறார்கள்” என்றான். “நானும் தூங்குவேன் என்று எண்ணவேயில்லை.” கிருஷ்ணன் “போர்வீரர்கள் பொதுவாக களத்தில் நன்றாக உறங்குவதுண்டு” என்றான். “ஏன்?” என்றான் அர்ஜுனன். “பிற இடங்களில் அவர்களின் அகம் சிதறிப்பரந்துகொண்டே இருக்கும். இங்கே அவர்கள் முழுமையாகக் குவிகிறார்கள். போரில் ஒருவன் தன் முழு ஆற்றலையும் அறிகிறான். முழுமையாக வெளிப்படுகிறான். ஆகவேதான் போர் ஒரு பெரும் களியாட்டமாக இருக்கிறது. எதிரிகள் இல்லாதபோது போரை விளையாட்டாக ஆக்கி தங்களுக்குள் ஆடிக்கொள்கிறார்கள்.”
அர்ஜுனன் புன்னகையுடன் “ஆனால் அவர்களின் இறப்பல்லவா அருகே இருக்கிறது?” என்றான். கிருஷ்ணன் “ஆம், அது அவர்களின் வாழும் காலத்தை இன்னும் குவிக்கிறது. இன்னும் பொருள் உடையதாகவும் அழுத்தமேறியதாகவும் ஆக்குகிறது…” என்றான். சிரித்து “இதோ இந்தப் படகுகளின் பாய்கள் போன்றது மானுடனின் உள்ளம். பிரபஞ்சம் பெருங்காற்றுகளின் வெளி. இப்போது பாய் அவிழ்க்கப்பட்டுவிட்டது. எண்ணங்கள் விலகும்போது மனிதர்கள் அடையும் ஆறுதல் எல்லையற்றது. அந்த நிறைவு அவர்களை கைக்குழந்தைகளாக்குகின்றன. கைக்குழந்தைகள் தூங்குவதை விரும்புபவை” என்றான்.
அர்ஜுனன் மீண்டும் வீரர்களை நோக்கினான். அவர்கள் கைக்குழந்தைகளைப் போலத்தான் தோன்றினார்கள். ஒருவரை ஒருவர் தழுவி ஒடுங்கி வாயால் மூச்சுவிட்டு மார்பு ஏறியிறங்க துயின்றார்கள். அத்தனை முகங்களும் தெய்வமுகங்கள் போல அமைதியால் நிறைந்திருந்தன. “இது ஒருவகை யோகம்” என்றான் கிருஷ்ணன். “யோகியர் நாடும் நிலையின் ஒருதுளி. கடும் வலிக்குப்பின்பு சற்று ஆறுதல் வரும்போதும் மனிதர் இந்த நிறைவை அறிகிறார்கள்.” அர்ஜுனன் பெருமூச்சுவிட்டு “மனிதன்! ஒரு துளித் தேனுக்காக முழுத்தேனீக்களின் கொட்டுகளையும் வாங்கிக்கொள்ளும் கரடியைப்போன்றது இந்த எளிய உயிர்… இதை எண்ணி நீ வருந்துவதுண்டா?” என்றான். கிருஷ்ணன் “புன்னகைப்பதுண்டு” என்றான்.
ஆற்றின்மீது பின்னிரவின் விண்மீன்கள் விழியறியாமல் இடம் மாறிக்கொண்டிருந்தன. குளிர்காற்று எழுந்து பாசிமணத்துடன் சூழ்ந்து கடந்துசெல்ல குறுங்காடு ஓசையிட்டது. கோட்டையில் இருந்து ஒரு சிறிய எரியம்பு எழுந்து அணைவதை கிருஷ்ணன் நோக்கி “சுவர்ணபாகு கோட்டைவாயிலைத் திறந்துவிட்டான்” என்றான். அர்ஜுனன் சிரித்து “எளியமனிதன்!” என்றான் . கிருஷ்ணன் “ஆம், ஆசை கொண்டவன். ஆட்சியும் அதிகாரமும் எளிதென்று எண்ணும் எளிய சிந்தையும் கொண்டவன். ஹிரண்யபதத்தின் ஏழுபழங்குடிகளில் இரண்டாவது குடிகளின் தலைவன் அவன்.”
“பழங்குடிகள் திரண்டு அரசுகளை அமைப்பதிலுள்ள பெரும் இடர் இதுவே” புன்னகையுடன் கிருஷ்ணன் சொன்னான். “அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை அரசர்கள் என்றே எண்ணுகிறார்கள்.” அர்ஜுனன் “ஆம், அதை நானும் அறிந்திருக்கிறேன்… அவர்களின் குடிகள் ஒருங்கு திரள்வதேயில்லை. ஒருபோதும் அவர்களிடம் குலப்போர்கள் முடிவதில்லை” என்றான்.
“அரசுகளாக திரண்டுள்ள பிறரிடம் அவர்களிடமில்லாத ஒன்று உள்ளது. அது கருத்துக்களின் அதிகாரம். அவர்களிடமிருப்பது பழக்கங்களின் அதிகாரம் மட்டுமே. அதை சடங்குகளாக்கி வைத்திருக்கிறார்கள். கருத்துக்களை உருவாக்கி நிலைநிறுத்தும் ரிஷி என்பவனை அடைந்த பின்னரே மானுடம் திரண்டு சமூகங்களாயிற்று. அறம் என்றும் நீதி என்றும் அன்பு என்றும் கருணை என்றும் ரிஷிகள் உருவாக்கிய கருத்துக்களில் ஒன்றே அரசன் என்பது” கிருஷணன் சொன்னான்.
“அதை மாற்றமுடியாததாக, அவர்கள் முன்வைத்தமையாலேயே சமூகங்கள் அரசனை மையமாக்கி நிலைகொண்டன. அரசனின் அதிகாரம் ஆதிதெய்வீகம் என்பதனால்தான் அவனுக்குக் கீழே குடிகள் பணிகின்றன. ஷத்ரிய நாடுகளுக்கும் பிறவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுவே. ஷத்ரிய நாடுகளில் அரசனை குடிகள் மாற்றமுடியாது. அரசனை மக்கள் மாற்றும் நிலை கொண்ட சமூகங்கள் ஒருபோதும் உள்பூசல்களைக் களைந்து போர்ச்சமூகங்களாக ஆக முடியாது” என்றான். “இதை காலத்தில் முன்னதாக உணர்ந்துகொண்டவைதான் ஷத்ரிய அரசுகள் என்றாயின.”
“யாதவ சமூகங்கள் இன்றும் அரசனை மாற்றும் வல்லமை கொண்டவை” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆகவேதான் நான் இங்கிருந்து செல்ல விரும்புகிறேன். மதுராவை கைப்பற்றியபின்னரும் இங்கே நான் அரசமைக்கப்போவதில்லை. அங்கே கூர்ஜரத்தின் கடற்கரையில் ஒரு அரசை அமைப்பேன். அது முழுக்கமுழுக்க என் அரசு. அதன்மேல் என் அதிகாரம் எவராலும் மாற்றக்கூடியது அல்ல. யாதவர்கள் அமைக்கப்போகும் ஷத்ரிய அரசு அது” என்றான் கிருஷ்ணன்.
“அப்படியென்றால் ஷத்ரியர்கள் பிறகுடிகள் அரசமைப்பதைத் தடுப்பது இயல்பானதல்லவா? ஏனென்றால் அவர்களின் நெறிப்படி அவர்கள் மட்டுமே நாடாளும் இறையருள் கொண்டவர்கள். நாடாளமுயலும் பிறர் இறையருளை மீறுபவர்கள், ஆகவே ‘தண்டிக்கப்படவேண்டியவர்கள்'” என்றான் அர்ஜுனன். “ஆம், அவர்கள் தங்கள் குலக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.. ஆகவே அவர்களை அழித்து அந்த அழிவின்மேல் புதிய ஷத்ரியர்கள் உருவாகி வந்தாகவேண்டியிருக்கிறது” என்றான் கிருஷ்ணன்.
“நீ ஒரு பேரழிவைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கிறாய் யாதவனே” என்றான் அர்ஜுனன். “அதை இங்குள்ள அத்தனை அரசு சூழ்பவர்களும் அறிவார்கள். பாரதவர்ஷம் என்னும் ஆலமரம் ஷத்ரியர்கள் என்ற பீடத்தில் வளர்ந்தது. இன்று அது அந்தப்பீடத்தை உடைத்து எறிந்தாகவேண்டியிருக்கிறது. அந்தப் பெரும் அழிவைத் தடுக்கவே பீஷ்மரும் விதுரரும் முயல்கிறார்கள். மாறாக நான் அவ்வழிவை நிகழ்த்த எண்ணுகிறேன்” என்றான் கிருஷ்ணன்.
வானில் மீண்டும் ஒரு எரியம்பு தெரிந்தது. “வந்துவிட்டார்கள்” என்று சொல்லி கிருஷ்ணன் கைகாட்டினான். பீமன் எழுந்து படைவீரர்களை எழுப்பத் தொடங்கினான். அவர்கள் ஆழ்ந்த துயிலுக்குபிந்தைய புத்துணர்ச்சியுடன் எழுந்து ஒருவரை ஒருவர் எழுப்பினர். முகங்களில் தெரிந்த மலர்ச்சியை அர்ஜுனன் மாறிமாறி பார்த்தான். கவசங்களுடனும் படைக்கலங்களுடனும் எழுந்து நின்றனர். குறுங்காட்டுக்குள் இருந்து முதல் குதிரை தலையை அசைத்தபடி கால்களை தாளத்துடன் எடுத்துவைத்து வெளிவந்ததும் மெல்லிய ஒலி எழுந்தது படைகளிடமிருந்து.
“நிற்கவேண்டியதில்லை… குதிரைகளில் ஏறிக்கொள்ளுங்கள்” என்று பீமன் ஆணையிட அவர்கள் பாய்ந்து ஏறிக்கொண்டனர். மிக விரைவிலேயே அவர்கள் அனைவரும் குதிரைகளில் ஏறிக்கொள்ள கண்ணெதிரே சீரான குதிரைப்படை ஒன்று உருவாகி நின்றது. கிருஷ்ணன் நெருப்புக்காக எதிர்பார்க்கிறான் என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். குதிரைகளின் மெல்லிய மூச்சொலிகளும் செருக்கடிப்பொலிகளும் சேணங்களின் உலோகங்கள் குலுங்கும் ஒலிகளும் சில இருமலோசைகளும் மட்டும் புதர்க்காட்டுக்குள் இருளில் கேட்டுக்கொண்டிருந்தன. குதிரை ஒன்று சிறுநீர் கழித்த வாசனை காற்றில் எழுந்து வந்தது. நாலைந்து குதிரைகள் அவ்வாசனைக்கு மெல்ல கனைத்தன.
படைவீரர்கள் ஒவ்வொருக்கும் மதுராநகரின் வரைபடம் முன்னதாகவே அளிக்கப்பட்டு அவர்கள் செய்யவேண்டியது தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருபதுபேர் கொண்ட பத்து குழுக்களாகப் பிரிந்து அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த இடங்களை தாக்கவேண்டும். அவை பெரும்பாலும் தூங்கும் வீரர்களின் கூடாரங்களும் குடில்களும். “இரவில் நாம் எத்தனைபேர் என்று அவர்கள் அறியமுடியாது. படைக்கலங்களை எடுக்கவோ குதிரைகளில் சேணம்பூட்டவோ அவர்களுக்கு நேரமிருக்காது. கொன்றுகொண்டே செல்லுங்கள்… அவர்கள் அச்சத்தில் இருந்து மீண்டுவிட்டால் நாம் அனைவரும் கொல்லப்படுவோம்” என்று அவர்களிடம் ஆணையிடும்போது யாதவன் சொன்னான்.
அப்போது படைவீரர்களின் விழிகளில் தெரிந்தது என்ன என்று அவனால் உணரமுடியவில்லை. “அது ஆவல்தான்” என்றான் கிருஷ்ணன். “கொல்வதற்கான ஆணை எப்போதும் வீரர்களுக்குள் இருந்து தொன்மையான வனதெய்வங்களை எழுந்துவரச்செய்கிறது. அதன்பின் அவை படைக்கலங்களை எடுத்துக்கொள்ளும்.” அர்ஜுனன் “அவர்களும் கொல்லப்படலாம் என்று சொல்வது அச்சுறுத்துவது ஆகாதா?” என்றான். “இல்லை. கொல்வதற்கான சிறிய அறத்தடை அவர்களுக்கு இருக்கக்கூடும். கொல்லாவிட்டால் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்ற வலுவான நியாயம் அதைக் கடக்க அவர்களுக்கு உதவும்…” சிரித்தபடி “பாண்டவனே, போர்கள் படைக்கலங்களால் மட்டுமல்ல… சொற்களாலும்தான் செய்யப்படுகின்றன” என்றான்.
படைவீரர்கள் சிலர் அவர்கள் வந்த படகுகளில் கொடிக்கம்பங்களில் பந்தங்களைக் கட்டி அவற்றில் மீனெண்ணையை ஊற்றத்தொடங்கினர். கிருஷ்ணன் வானை நோக்கியபின் “பந்தங்கள்” என்றதும் வீரர்கள் படகுகளில் கட்டப்பட்ட பந்தங்களைக் கொளுத்தத் தொடங்கினர். படகுகளின் பந்தங்கள் அனைத்தும் எரியத் தொடங்கியதும் தழல்வெளி நீர்ப்பிம்பங்களுடன் சேர்ந்து காட்டுத்தீபோல நெளிந்தது.
கிருஷ்ணன் தன் படைக்கலப் பையில் இருந்து தட்டு போன்ற ஒன்றை எடுத்தான். அது ஒரு சக்கரம் என்று கண்டதும் அர்ஜுனன் “இது…” என்றான். “என் படைக்கலம்…” என்றபின் புன்னகையுடன் அதனுள் இருந்து ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சக்கரங்களை பிரித்தெடுத்தான். “போர்க்களத்தில் சக்கரத்தை எவரும் கையாண்டு நான் கண்டதில்லை” என்றான் அர்ஜுனன். “பார்!” என்றபடி கிருஷ்ணன் கண் தொட முடியாத விரைவுடன் அச்சக்கரங்களை செலுத்தினான்.
ஓவியம்: ஷண்முகவேல்
முதற்சக்கரம் யாழை மீட்டிய ஒலியுடன் காற்றில் சுழன்றுசென்று ஒருபடகின் கயிற்றைவெட்டியது. அடுத்தடுத்த ஏழு சக்கரங்களும் படகுகளின் இணைப்புகளை வெட்டின. வெட்டியவை சுழன்று ரீங்கரித்தபடி மீண்டும் அவன் கைகளுக்கு வந்து மீண்டும் சென்றன. அவன் ஆணைக்குக் கட்டுப்பட்ட பறவைகள் போல அவை கைக்கும் படகுகளுக்குமாக சுழன்றுகொண்டிருந்தன. சிலகணங்களுக்குள் அனைத்துப்படகுகளும் விடுபட்டு யமுனையின் பெருக்கில் செல்லத் தொடங்கின. “ஒருபோதும் ஓயாத அம்பறாத்தூணி போல” என்றான் அர்ஜுனன் வியப்புடன். “இவை வெயிலில் அழகிய வெள்ளி மீன்கள் போலப் பறக்கும். என் தமையனார் இதற்கு சுதர்சனம் என்று பெயரிட்டிருக்கிறார்” என்றான் கிருஷ்ணன்.
படையின் முகப்புக்குச் சென்று நின்று நோக்கியபின் செல்வோம் என்று கிருஷ்ணன் கைகாட்டினான். அவன் குதிரை மெல்ல முன்னால் சென்றது. அர்ஜுனன் அவனுக்குப்பின்னால் வலப்பக்கமாக தன் குதிரைமேல் வில்லுடன் சென்றான். அவர்களுக்குப்பின்னால் குதிரைப்படை குளம்புகள் புற்கள்மேல் பதியும் ஒலியுடன் மெல்ல வந்தது. ஈரமான முரசுத்தோலில் கோல்படும் ஒலி என்று அர்ஜுனன் நினைத்தான். அந்த உவமையை அவனே வியந்துகொண்டான். குழந்தைகள்தான் அத்தனை துல்லியமாக ஒப்பிடும். அப்போது அனைத்துப் புலன்களும் துல்லியமாக இருந்தன. ஒவ்வொன்றிலும் அவற்றுக்கான தெய்வம் வந்து குடியேறியிருந்தது. செவிகள் அங்கே எழுந்த ஒவ்வொரு ஒலியையும் தனித்தனியாகக் கேட்டன. நாசி அனைத்து வாசனைகளையும் அறிந்து அப்பொருளை காட்டியது. கண் இருளில் நிழலுருக்களாக நின்ற ஒவ்வொரு மரத்தையும் அடையாளம் கண்டது.
மதுராவின் கோட்டை தெரியத் தொடங்கியது. அது எத்தனை உகந்த இடம் என்று அர்ஜுனன் வியப்புடன் எண்ணிக்கொண்டான். அங்கிருந்து மதுராவின் வடக்குக் கோட்டைவாயில் மிக அருகே என்பதுபோலத் தெரிந்தது. உயரமற்ற முட்புதர்களும் சிறிய மரங்களும் மட்டும் கொண்ட நிலம் சீராகச் சரிந்து சென்று கோட்டையை அடைந்தது. புரவிகள் கிளம்பினால் கோட்டைவரை நிற்கவே முடியாமல் பாயத்தான் முடியும். கோட்டைமேல் சில பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. நிழலுருக்களாக காவலர்களின் உருவங்கள் தெரிந்தன. மேற்குத் துறைவாயிலில் நின்றிருக்கும் பெரிய கலங்களின் வெளிச்சம் வானிலெழுந்து கோட்டைக்குமேல் தெரிந்தது.
கிழக்குக் கோட்டைவாயிலருகே ஒரு காவல்மாடம் எரியத் தொடங்கியதைக் கண்டதும் அர்ஜுனனின் உள்ளம் களிவெறிகொண்டது. அதை அக்கணமே அவன் உடல்வழியாக அறிந்து அவன் குதிரை எம்பி காலைத்தூக்கியது. காவல்மாடத்தில் நெய்பீப்பாய்கள் இருந்திருக்கவேண்டும். தீ விரைவிலேயே எழுந்து செந்நிறக் கோபுரம் போல ஆயிற்று. எரியறிவிப்புக்கான முரசுகள் ஒலிக்கத் தொடங்கின. நகரெங்கும் வீரர்கள் கலைந்து ஓசையிட்டனர். கொம்புகள் பிளிறின.
கிருஷ்ணன் புன்னகையுடன் திரும்பி நோக்கி “இதோ மதுரை” என்றான். அவன் கைகளைத் தூக்கியபோது எரியடையாளம் எழுந்தது. அஸ்தினபுரியின் குதிரைப்படை மாபெரும் கற்கோபுரம் ஒன்று இடிந்து சரிவது போல பேரொலியுடன் மதுராவின் கோட்டைவாயில் நோக்கி பெருகிச்சென்றது. குதிரைகளின் கனைப்புகளும் குளம்போசையும் வீரர்களின் போர்க்குரல்களும் பறக்கும் தலைப்பாகைகளும் மின்னிச்செல்லும் உலோகங்களுமென ஒரு பெருக்கில் தானும் சென்றுகொண்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான்.
மிகச்சரியாக அந்நேரத்தில் மறுபக்கம் நீர்ப்பெருக்கில் பந்தங்கள் எரியும் படகுகள் மிதந்து வருவதை மேலிருந்த வீரர்கள் கண்டனர். கோட்டைமேல் போர்முரசுகள் முழங்கின. கிழக்குவாயில் நோக்கி காவல்படைகள் ஓடும் ஒலிகள் கேட்டன. மதுராவின் மேற்குக் கோட்டைவாயில் உள்ளிருந்து திறக்கப்பட்டது. அதனுள் சிதறியோடும் வீரர்களின் உருவங்கள் தெரிந்தன.
ஒவ்வொன்றும் ஒன்றுடனொன்று மிகக் கச்சிதமாக இணைந்திருந்தன. நூறுமுறை ஒத்திகைபார்க்கப்பட்ட நாடகம் போல. அர்ஜுனன் திரும்பி தன்னருகே காற்றில் விரைந்துகொண்டிருந்த கிருஷ்ணனின் முகத்தை நோக்கினான். அவனை முந்தையநாள் காலையில்தான் பார்த்திருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டான். அதற்குள் அவன் நூறுமுகங்கள் கொண்டு பெருகிவிட்டிருக்கிறான். அவனுடைய அத்தனை திசைகளையும் சூழ்ந்துகொண்டிருக்கிறான். மின்னிமின்னிச் சென்ற ஒளியில் தெரியும் கரிய முகம் கருவறைக்குள் அமர்ந்த தொன்மையான கருங்கல்சிலை போலிருந்தது.