பிரயாகை - 39

பகுதி எட்டு : மழைப்பறவை – 4

இடைநாழியில் நடக்கையில் பீமன் சிரித்தபடி “இன்னும் நெடுநேரம் மருகனும் அத்தையும் கொஞ்சிக்கொள்வார்கள்” என்றான். அர்ஜுனன் “பெண்களிடம் எப்படிக் கொஞ்சவேண்டும் என்பதை ஏதோ குருகுலத்தில் முறையாகக் கற்றிருக்கிறான்” என்று சிரித்தான். பீமன் “பார்த்தா, அன்னைக்கும் கொஞ்சுவதற்கென்று ஒரு மைந்தன் தேவைதானே? நம் மூவரையும் அன்னை அயலவராகவே எண்ணுகிறார். நகுலனையும் சகதேவனையும் கைக்குழந்தைப்பருவத்தை கடக்க விட்டதுமில்லை” என்றான்.

“அன்னை எப்போதேனும் முதிரா இளம்பெண்ணாக இருந்திருப்பாரா என்றே எனக்கு ஐயமிருந்தது. அது இப்போது நீங்கியது. அவருக்கு களியாடவும் நகையாடவும்கூட தெரிந்திருக்கிறது” என்றான் அர்ஜுனன். பீமன் “அத்தனை பெண்களும் சிறுமியராக ஆகும் விழைவை அகத்தே கொண்டவர்கள்தான். சிறுமியராக மட்டுமே அவர்கள் விடுதலையை உணர்ந்திருப்பார்கள். ஆனால் எங்கே எவரிடம் சிறுமியாகவேண்டும் என்பதை அவர்கள் எளிதில் முடிவுசெய்வதில்லை” என்றான். “அன்னையை சிறுமியாகக் காண்பது உவகை அளிக்கிறது. அவர் மேலும் அண்மையானவராக ஆகிவிட்டார்” என்றான் தருமன். சிரித்தபடி “அதற்குரிய மைந்தன் அவனே” என்றான் அர்ஜுனன்.

தருமன் “ஆம், என்ன இருந்தாலும் அவன் யாதவன், அவருடைய குருதி. அவர் அன்னையின் கண்கள் அவனுக்குள்ளன என்று சொன்னபோது அதை எண்ணிக்கொண்டேன். நமது முகங்களும் கண்களும் அவருடைய குலத்துக்குரியவை அல்ல” என்றான். பீமன் “இருக்கட்டும், நம்மனைவரின் பொருட்டும் அவன் அதைப்பெற்றுக்கொள்ளட்டும்” என்றான். அர்ஜுனன் தன் முகம் மலர்ந்திருப்பதை தானே உணர்ந்து திரும்பி நோக்கினான். பீமனும் தருமனும்கூட முகம் மலர்ந்திருந்தனர். “எனக்கு அவனை நினைத்தால் வியப்பாக இருக்கிறது” என்றான் தருமன். “பீதர்களின் களிப்பெட்டிகளைப்போல அவன் ஒருவனுக்குள் இருந்து ஒருவனாக வந்துகொண்டே இருக்கிறான்.”

அவர்கள் மீண்டும் அவைக்கூடத்தில் சென்று அமர்ந்தனர். தருமன் “அந்தச்சிட்டு மீண்டும் வருகிறதா?” என்றான். சேவகன் சித்ரகன் பணிந்து “இல்லை இளவரசே. அதை கூரையின் அடியில் வைத்துவிட்டோம். அங்கே மகிழ்ந்து இருக்கிறது” என்றான். அர்ஜுனன் “அனைத்தும் அறிந்தவனாக இருக்கிறான். சமையலறையில் ஊனுணவில் உப்பு மிகுந்துவிட்டால் என்ன செய்வதென்றுகூட அவனிடம் கேட்கலாம் என்று தோன்றுகிறது” என்றான். தருமன் “யாதவர்களுக்கு பறவைகளுடன் அணுக்கமான உறவு உண்டு என அறிந்திருக்கிறேன்” என்றான்.

பீமன் “அவள் பெயர் என்ன? வஜ்ரமுகி… அவள் நம்மிடம் கப்பம் ஏதும் கேட்பாளோ என்று ஐயப்படுகிறேன்” என்றான். தருமன் புன்னகைத்து “இளையவனே, இந்த யாதவன் பேசியதை என் நெஞ்சுக்குள் ஓடவிட்டுக்கொண்டே இருக்கிறேன். மகத்தான அரசியலுரை என்றால் இதுதான். அது தர்க்கத்தால் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் உணர்ச்சிகளால் சொல்லப்படவேண்டும். அது அரசியலுரை என்று கேட்பவர் அறியவே கூடாது. வெற்றி அடைந்த பின்னரே அதன் முழு விரிவும் கேட்பவருக்கு தெரியவேண்டும்…” என்றான். “எவன் தன்னை முழுமையாக மறைத்துக்கொள்கிறானோ அவனே சிறந்த மதியூகி. ஆனால் அவன் சொற்கள் அவனை காட்டிக்கொண்டே இருக்கும். மதிசூழ் சொற்களையும் மதியூகம் தெரியாமல் அமைக்கமுடியுமென்றால் அதை வெல்ல எவராலும் இயலாது.”

பீமன் “மூத்தவரே, அதை தாங்கள் உணர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றான். “என்றும் நம்முடன் இருக்கப்போகும் பெருவல்லமை அவன். அவன் கைகளை பற்றிக்கொள்வோம். அவன் துணையால் நாம் எதிர்கொள்ளப்போகும் பெருவெள்ளங்களை கடக்கமுடியும்.” தருமன் “ஆம், அவனை என்னால் அறிய முடியவில்லை. ஆனால் அவன் எனக்களிக்கும் அண்மையை எவரும் அளித்ததில்லை” என்றபின் “அனைவரையும் ஒரு பெரும் சதுரங்கக் களத்தில் வைத்து ஆடிக்கொண்டே இருக்கிறான். இந்த ஆடல் அவனுக்கு ஒரு பொருட்டும் அல்ல” என்றான். உரக்க நகைத்தபடி “அவன் ஏகலவ்யனின் குலத்தோரின் மூக்குகளை வெட்டிக்கொண்டுவருவதற்கான கூடைகளைப் பின்ன ஆணையிட்டுவிட்டு வந்திருந்தாலும் நான் வியப்படையமாட்டேன்” என்றான்.

அவர்கள் சற்று நேரம் அங்கே நிகழ்ந்ததை எண்ணிக்கொண்டு அமர்ந்திருந்தனர். “என்னதான் பேசிக்கொள்வார்கள்?” என்றான் அர்ஜுனன். “பெண்களிடம் திறம்படப் பேசுபவர்கள் பேச ஏதுமில்லாமலேயே நாழிகைக்கணக்காக பேசக்கற்றவர்கள்” என்றான் பீமன். “ஒன்றுமே தேவையில்லை. அவன் அங்கே அன்னையின் அழகை பல வகைகளில் மறைமுகமாக புகழ்ந்துகொண்டே இருப்பான், வேறென்ன?” என்றான் அர்ஜுனன். “அழகைப் புகழ்வதை பெண்கள் விரும்பும் விதம் வியப்பூட்டுவது. பேதை முதல் பேரிளம்பெண் வரை… புகழ்ச்சி வெறும் பொய் என்றாலும் உள்நோக்கம் கொண்டது என்றாலும் அதை அவர்கள் விலக்குவதே இல்லை” என்றான் தருமன்.

“ஆடியில் நோக்காத பெண் எங்கேனும் இருந்தால் அவள் புகழ்ச்சியை விரும்பமாட்டாள்” என்று பீமன் நகைத்தான். “அதிலும் அவன் பெருவித்தகன். வேண்டுமென்றேதான் அவன் தளபதிகள் முன்னால் அதைச் சொன்னான். அவர்கள் இளையோர். அவர்கள் முன் அழகுநலம் பாராட்டப்படுவதை அன்னையின் உள்ளே வாழும் இளம்பெண் விரும்பியிருப்பாள்.” தருமன் சினத்துடன் “இளையவனே, நீ நம் அன்னையைப்பற்றிப் பேசுகிறாய்” என்றான். “ஏன், அன்னையும் பெண்ணல்லவா?” என்றான் பீமன்.

தருமன் முகம் மாறி “இளையவனே, நீ மதுராவை வென்றுவிடுவாயா?” என்றான். “வென்றாகவேண்டும்… வெல்வேன்” என்றான் அர்ஜுனன். “அரசரின் ஆணையை அன்னை மீறிவிட்டார். ஆனால் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. அதை ஓலையில் பொறிக்கச்செய்துவிட்டான். தளபதிகள் அதை அறிந்துவிட்டனர். இனி அதை மாற்றுவதென்பது அன்னைக்கு பெரும் அவமதிப்பு. அதைச்செய்ய நாம் ஒப்பவே முடியாது” என்றான். பீமன் “ஆம்… ஆனால் பெரியதந்தை அதைச் செய்யமாட்டார். ஒருபோதும் அன்னையின் மதிப்பை அவர் குறைக்கமாட்டார்” என்றான். “பார்ப்போம்” என்றான் தருமன்.

“இன்னமுமா கொஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்?” என்றான் தருமன் சற்றுநேரம் கழித்து. சாளரம் வழியாகச் சென்று தன் முட்டைகள் மேல் அமர்ந்தும் எழுந்தும் சிறகடித்துக்கொண்டிருந்த சிட்டுக்குருவியை நோக்கிக்கொண்டிருந்த அர்ஜுனன் தலை திருப்பி “அவர்கள் காலத்தை மறந்திருப்பார்கள்” என்றான். “அவர்கள் மெல்லமெல்ல அரச அடையாளங்களை இழந்திருப்பார்கள். எளிய யாதவர்களாக ஆகிவிட்டிருப்பார்கள். கன்றை பசு நக்குவதைப்போல அவனை அன்னை வருடிக்கொண்டிருப்பார். அவர் சூடிய மணிமுடியும் பட்டும் மறைந்து புல்வெளியில் அவனுடன் சென்றுகொண்டிருப்பார்” என்றான் பீமன். “மூத்தவரே, நீங்கள் சூதரைப்போல பேசுகிறீர்கள்” என்றான் அர்ஜுனன். பீமன் நகைத்தான்.

சேவகன் அறிவிப்பை சொல்வதற்குள்ளாகவே அவனைக் கடந்து கனகன் துணையுடன் விதுரர் உள்ளே வந்தார். வந்ததுமே உரத்த குரலில் “இளவரசே, என்ன நிகழ்கிறது இங்கே? படைநீக்க அரசாணையை எப்படி அரசி பிறப்பிக்கலாம்?” என்றார். “பிறப்பித்துவிட்டார்கள். ஆகவே இனி அது அரசாணைதான்” என்று பீமன் திடமான குரலில் சொன்னான். “நான் என்ன செய்வது அமைச்சரே… அது அன்னையின் ஆணை அல்லவா?” என்றான் தருமன். விதுரர் மூச்சிரைத்தபடி நின்றார். “அமருங்கள் அமைச்சரே” என்றான் தருமன். விதுரர் அமர்ந்துகொண்டு தலையைப்பற்றிக்கொண்டார். “என்ன நிகழ்கிறது என்றே தெரியவில்லை. அரசி எங்கே?” என்றார்.

“உள்ளே கிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் பீமன். “அவனை நான் அறிவேன். மாபெரும் மாயக்காரன் என்று சொன்னார்கள். ஆனால் இதை அவனால் நிகழ்த்தமுடியுமென நான் எண்ணவேயில்லை…. எத்தனை பெரிய மூடத்தனம்! அரசி இதைப்போல நிலைகுலைந்து போவார் என நினைக்கவேயில்லை” என்றபின் “அவன் பேசிக்கொண்டிருக்கையில் நீங்கள் அங்கே நின்றிருக்கவேண்டுமல்லவா?” என்றார். “அவர்கள் பேசிக்கொண்டிருக்கவில்லை அமைச்சரே. அத்தை தன் குழந்தையை கொஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் அர்ஜுனன். விதுரர் வாய் திறந்து நிமிர்ந்து நோக்கினார். சட்டென்று அவர் உடல் தளர்ந்தது.

பெருமூச்சுடன் “அரசியின் ஆணையுடன் குழம்பிப்போன தளபதிகள் அரசரைத் தேடி அவைக்கே வந்துவிட்டனர். அமைச்சர்கள் அத்தனைபேரும் கூடியிருந்த பேரவையில் வந்து நின்றனர். என்ன நிகழ்ந்திருக்கிறது என்று நான் கணிக்கவில்லை என்பதனால் அவர்களை பேசும்படி விட்டுவிட்டேன். அரசியின் ஆணையை அவர்கள் சொன்னதும் அதிர்ந்து கைகால்கள் நடுங்க நின்றேன். உண்மையில் நிகழ்ந்துவிட்ட பிழைகளை சீர்செய்வதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். மெல்லமெல்ல அரசரை இனிய மனநிலை நோக்கி கொண்டுவந்தபின் உங்களை அவைக்குக் கொண்டு செல்வதைப்பற்றி திட்டமிட்டுக்கொண்டிருந்தேன் …”

“அரசியின் ஆணையை அவர்கள் சொன்னதும் அவையே திகைத்து அமைதிகொண்டது. நேற்று இரவு அரசர் அளித்த ஆணைக்கு நேர்மாறான ஆணை…” என்றார் விதுரர். “நமது நல்லூழ் அங்கே அரியணையில் அமர்ந்திருப்பது உடலுடன் உள்ளமும் விரிந்த மாமத வேழம். ஒரு சிறிய குரல் மாற்றம்கூட இல்லாமல் அரசியின் ஆணை என்றால் அது அஸ்தினபுரியின் கடமையே என்று திருதராஷ்டிரர் சொன்னார். அஸ்தினபுரியின் படைகள் உடனே கிளம்பட்டும் என்றார். மெல்ல அவையில் ஆறுதல் பரவுவதை உணர்ந்தேன். திரும்பி சகுனியை நோக்கினேன். அவர் விழிகளில் புன்னகையைக் கண்டேன். கணிகரின் விழிகளை நோக்கவே நான் துணியவில்லை.”

“அரசர் அறைபுகுந்ததும் நான் எழுந்து ஓடிவந்தேன்” என்றார் விதுரர். “நான் என்னசெய்வதென்று எனக்குத் தெரியவில்லை. என்னால் அங்கே நிற்கமுடியவில்லை. அரசியையோ உங்களையோ பார்த்துவிட்டு மேலே சிந்திக்கலாம் என்று முடிவெடுத்தேன்…” தருமன் “அமைச்சரே. நான் அனைத்தையும் சொல்கிறேன்” என்றான். விதுரர் சாய்ந்து கைகளைக் கோர்த்து அமர்ந்துகொண்டார். தருமன் சொல்லத்தொடங்கினான். தாழ்ந்த கண்களுடன் விதுரர் கேட்டிருந்தார்

விதுரர் பெருமூச்சுடன் “அவன் சூதுநிறைந்தவன் என அறிந்திருக்கிறேன். இங்கு அந்த சூதை நாம் ஏற்கலாகாது. நம் படைகள் எழுவதை சற்றே பிந்தச்செய்யும்படி ஆணையிட்டுவிட்டு வந்தேன். இதற்கு என்ன வழி என்று நாம் சிந்திப்போம். நம் அரசியின் ஆணை மீறப்படலாகாது. ஆனால் இப்போது படைகள் எழுவது அஸ்தினபுரி தற்கொலை செய்துகொள்வதற்கு நிகர். நம்மால் மதுராவையோ கூர்ஜரத்தையோ உடனடியாக வெல்வது இயலாது” என்றார். “ஆம்” என்றான் தருமன்.

“வெல்லமுடியும் அமைச்சரே” என்றான் அர்ஜுனன். “முடியாது பார்த்தா… நம் படைபலம் மிகக்குறைவு. கணக்குகளை நான் சொல்கிறேன். நேர்பாதிப்படைகள் இப்போது நகரில் இல்லை. மகதம் நம்மைச் சூழ்ந்து எதிரிகளை அமைத்து நம் படைகளை பிரித்துவிட்டது. நம் படைகள் பதினெட்டு பிரிவுகளாக வெவ்வேறு எல்லைகளில் நின்றிருக்கின்றன. அவற்றை நாம் விலக்க முடியாது. நகரப்பாதுகாவலை கைவிடவும் முடியாது. எத்தனை கூட்டி கணக்கிட்டாலும் ஈராயிரம் பேர்கொண்ட சிறிய படை அன்றி ஒன்றை இங்கிருந்து நீ கொண்டுசெல்லமுடியாது. மதுராவில் ஏகலவ்யனின் ஐந்தாயிரம் வில்லவர்கள் இருக்கிறார்கள். கூப்பிடு தூரத்தில் திரிவேணிமுகத்தில் படகுத்துறைகளில் மகதத்தின் ஐம்பதாயிரம் பேர் காத்திருக்கிறார்கள்” என்றார் விதுரர்.

“மேலும் கூர்ஜரம்… நினைத்தே பார்க்கமுடியவில்லை” என்று தலையை ஆட்டினார் விதுரர். “அங்கே அவர்கள் ஒன்றரை லட்சம்பேர் கொண்ட படையை வைத்திருக்கிறார்கள். நீ மாவீரனாக இருக்கலாம். ஆனால் போர் என்பது படைகளால் செய்யப்படுவது… அதை மறக்காதே!” அர்ஜுனன் ஏதோ சொல்ல முற்படுவதற்குள் “உன் அன்னை ஆணையிடலாம். அவர்களுக்கு போர் பற்றி ஏதும் தெரியாது. மேலும் இந்த ஆணையை அவர்கள் அரசியாக நின்று இடவில்லை. வெறும் யாதவப்பெண்ணாக நின்று இட்டிருக்கிறார்கள். அந்த ஆணையைக் கண்டு தளகர்த்தர்கள் திகைத்துக்கொண்டிருக்கிறார்கள்…”

“இந்தப்போரில் நிகழ்வது ஒன்றே… நீ களத்தில் இறப்பாய்” என்றார் விதுரர். உரக்கக் குரலெடுத்து “ஆம், அதுவே நிகழும். அத்துடன் அஸ்தினபுரியின் நம்பிக்கைகளில் ஒன்று அழியும். இப்போர் தோல்வியில் முடிந்தால் நமது வல்லமையின்மையை பாரதவர்ஷம் அறியும். அதன்பின் நாம் நம்மை அழிக்கக் காத்திருக்கும் பெருவல்லமைகள் முன்னால் நடுங்கி ஒடுங்கி நிற்கவேண்டியிருக்கும்… மாமன்னர் ஹஸ்தி இந்நகரை உருவாக்கியபின் இன்றுவரை அஸ்தினபுரி எவருக்கும் கப்பம் கட்டியதில்லை. நாம் நம் மக்களைக் காக்க மகதத்துக்கு கப்பம் கட்ட நேரும்…” என்றார்.

வாயிலில் சேவகன் சித்ரகன் வந்து கிருஷ்ணன் வருவதை அறிவித்தான். விதுரர் பல்லைக்கடித்து தாழ்ந்த குரலில் “நான் அவனிடம் பேசிக்கொள்கிறேன்” என்றார். வெளியே மெல்லிய பேச்சுக்குரல் கேட்டது. சித்ரகனின் தோளை மெல்ல அணைத்து மெல்லிய குரலில் ஏதோ சொல்லி அவனை சிரிப்பை அடக்கவைத்தபின் அதே புன்னகை முகத்தில் நீடிக்க கிருஷ்ணன் உள்ளே வந்தான். விதுரர் அவனை வெறுமனே நோக்கியபடி அமர்ந்திருந்தார். தருமன் “கிருஷ்ணா, இவர் எங்கள் தந்தைக்கு நிகரான விதுரர்” என்றான். கிருஷ்ணன் வணங்கி “அஸ்தினபுரியின் அமைச்சருக்கு என் பாதவணக்கம்” என்றான்.

விதுரர் அவன் விழிகளை விலக்கி மெல்லியகுரலில் “அரசியின் ஆணையைப் பார்த்தேன்… அதைப்பற்றி பேசவேண்டியிருக்கிறது” என்றார். “விளக்கிப் பேசும்விதத்தில் அந்த ஓலை இல்லை அமைச்சரே. படைகள் இன்னும் சற்றுநேரத்தில் எழுந்தாகவேண்டும். நான் மாலையில் படைகளுடனும் இளையபாண்டவர்களுடனும் கிளம்புகிறேன்” என்றான் கிருஷ்ணன். அவன் குரல் மாறியிருப்பதை அர்ஜுனன் அறிந்தான். அதில் அவனிடம் எப்போதுமிருக்கும் மழலையென எண்ணச்செய்யும் சிறிய திக்கல் இருக்கவில்லை.

“அஸ்தினபுரியின் படைநகர்வை முடிவு செய்யவேண்டியவன் அமைச்சனான நான்” என்று விதுரர் சொல்லத் தொடங்கியதும் “இல்லை. எப்போதும் என் செயல்களை முடிவுசெய்பவன் நான் மட்டுமே. பிறிதொருவரை நான் ஊடாக விடுவதே இல்லை” என்று கிருஷ்ணன் மெல்லிய உறுதியான குரலில் சொன்னான். “இது அரசாணை. என் படைக்கலம் இன்று இதுவே. இதை மீறவோ விளக்கவோ எவர் முயன்றாலும் அவர்களை அழிப்பதே என் இலக்காக இருக்கும்” என்றான். விதுரர் திகைத்து “என்ன?” என்றார். அப்படி ஒரு சொல்லாட்சியை அவனிடம் அவர் எதிர்பார்த்திருக்கவேயில்லை.

அவன் குரூரம் மெல்லிய இடுங்கலை உருவாக்கிய கண்களால் விதுரரின் முகத்தை நோக்கி மெல்ல புன்னகை செய்து “விதுரரே, இங்கே உங்கள் வலுவான எதிரி கணிகர். அவரைத் துணைகொண்டு ஒரே நாளில் உங்களை அரசருக்கு எதிரானவராகக் காட்டி இந்த அஸ்தினபுரியின் மக்களால் கல்லெறிந்து கொல்லவைத்துவிட்டு படைகளைக் கொண்டுசெல்லவும் என்னால் முடியும்… பார்க்கிறீர்களா?” என்றான்.

விதுரர் குரல்வளை அசைய வாயை மெல்ல அசைத்தபின் “அநீதி வீரனின் படைக்கலம் அல்ல…” என்றார். “நீதி என்றால் உங்களுடன் அரசியல்சொற்களில் சதுரங்கமாடுவதா என்ன? நான் அதற்காக வந்தவன் அல்ல. நான் ஒரு கூர்வாள். என் இலக்குக்கு நடுவே நிற்கும் எதுவும் வெட்டுப்பட்டாகவேண்டும்…. விலகுங்கள். இல்லையேல் தீராப்பழியுடன் உங்கள் வாழ்நாள் முடியும்” என்றான் கிருஷ்ணன். அவன் விழிகள் இமைக்காமல் விதுரர் மேல் படிந்திருந்தன.

“விதுரரே, இவ்வரசில் சூதரான நீங்கள் இருக்கும் இந்த இடமே உங்களுக்கு எதிரானது. அதை எண்ணிப்புழுங்கும் ஷத்ரியர்களின் அகத்தின் ஆழத்தை உங்களுக்கு எதிராகத் திரட்டுவது என்னைப்போன்ற ஒருவனுக்கு ஓரிரு சொற்களின் பணி மட்டுமே” என்றான் கிருஷ்ணன். “அப்படி உங்களை அழித்தால் உங்கள் மைந்தர்களையும் விட்டுவைக்க மாட்டேன். உங்கள் ஒருதுளிக் குருதிகூட இப்புவியில் எஞ்சவிட மாட்டேன்.”

நடுங்கும் கைகளைக் கூப்பி “ஆம், உன்னால் அதைச் செய்யமுடியும். ஏனென்றால் நீ கம்சனின் மருகனும்கூட” என்றபடி விதுரர் மெல்ல உடல் தளர்ந்தார். “இனி நீ கொண்டுசெல்லப்போகிறாய் அனைத்தையும். என் காலம் முடிந்துவிட்டது. நான் நம்பிய அறமும் நீதியும் முறைமையும் எல்லாம் வெறும் சொற்களாக ஆகிவிட்டன….” என்று தழுதழுத்த குரலில் சொன்னார்.

“இல்லை விதுரரே, இது வேறு அறம்” என்றான் கிருஷ்ணன். விதுரர் சொல்லின்றி கைகூப்பிவிட்டு திரும்பி அறையை விட்டு வெளியே சென்றார். இயல்பாக புன்னகையுடன் திரும்பிய கிருஷ்ணன் “பார்த்தா, நாம் மூக்கு அறுவடைக்குக் கிளம்பவேண்டுமல்லவா?” என்றான். பீமன் புன்னகைசெய்து “நான் ஒன்றுகேட்கிறேன் இளையவனே, யாதவ அவையில் மார்த்திகாவதியின் அரசி தேவவதி நீ அன்னையிடம் சொன்னபடி சொன்னாளா என்ன?” என்றான். கிருஷ்ணன் “அவைச்செய்திகளை பொய்யாகச் சொல்லமுடியுமா மூத்தவரே” என்றான். “அப்படியென்றால் நீ சொன்ன பொய் என்ன?” என்றான் அர்ஜுனன்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

“அவர்கள் அச்சொற்களைச் சொல்லுமிடம் வரை நான் கொண்டுசென்றேன்” என்றான் கிருஷ்ணன் அதே புன்னகையுடன். “என்ன சொன்னாய்?” என்றான் பீமன். “வேறென்ன, அன்னையை மட்டுமீறி புகழ்ந்திருப்பான்” என்றான் அர்ஜுனன். கிருஷ்ணன் புன்னகைசெய்து “கூடவே, தேவவதியின் மார்த்திகாவதி யாதவர்களைக் காக்க முன்வராது அஸ்தினபுரிக்கு அடங்கிக்கிடந்ததையும் சுட்டிக்காட்டினேன். உன் அத்தைமட்டும் என்ன செய்தாள் என்று தேவவதி கேட்காமலிருக்க முடியாதல்லவா?” என்றான். “இத்தனை ஆண்டுகளாகியும் தேவவதிதான் அன்னையின் அக எதிரி என எப்படி அறிந்தாய்?” என்றான் பீமன். “அதை அத்தை பேர் சொல்லும்போது தேவவதியின் கண்களை நோக்கினாலே அறிந்துகொள்ளமுடியுமே” என்றான் கிருஷ்ணன்.

“எப்படியோ வென்றுவிட்டாய்… ஆனால் விதுரர் இங்கே சொன்னதைக் கேட்டால் எனக்கே தயக்கமாக இருக்கிறது” என்றான் அர்ஜுனன். “வெறும் இரண்டாயிரம் வில்வீரர்கள்…. அதற்குமேல் அஸ்தினபுரியிடமிருந்து எதிர்பார்க்கமுடியாது.” கிருஷ்ணன் “போதும்” என்றான். “என்ன சொல்கிறாய், இரண்டாயிரமா? அது ஒரு காவல்படை. போர்ப்படையே அல்ல” என்றான் தருமன். “நீ என் இளையவனை கொலைக்குக் கொண்டுசெல்கிறாய். நான் அதற்கு ஒப்ப மாட்டேன். எங்களில் ஒருவர் இறப்பினும் பிறர் இருக்கமாட்டோம்.”

“மூத்தவரே, பாண்டவர்களின் ஒருமையை பாரதவர்ஷமே அறியும்” என்றான் கிருஷ்ணன். “நானிருக்கும் வரை உங்கள் இளையவன் மேல் ஒரு சிறு அம்புகூட படாது. இதை என்றும் நிலைகொள்ளும் சொல்லாகவே கொள்ளுங்கள்.” தருமன் “ஆனால்….” என்றான். “மூத்தவரே யானையைவிட அங்குசம் மிகச்சிறியது. அங்குசம் எங்கே எப்போது குத்துகிறது என்பதே அதன் வலிமை. அது யானையை மண்டியிடச்செய்யும்… வெல்லும் வழிகளை நான் சொல்கிறேன்” என்றான் கிருஷ்ணன். தருமன் தலையசைத்தான். “அதை நான் பார்த்தனிடமும் பீமசேனரிடமும் விளக்குகிறேன். தங்களுக்கு இது புரியாது” என்றான்.

தருமன் புன்னகையுடன் “அது அறமில்லாத போர் அல்ல தானே?” என்றான். கிருஷ்ணன் “நம்புங்கள்… அது நேரடிப்போர்தான்” என்றான். தருமன் வெளியே சென்றதும் பீமன் “யாதவனே, ஒரே வினாதான் என் நெஞ்சில் உள்ளது…” என்று தொடங்க “அறிவேன். நான் அறமில்லாது விதுரரை அழித்துவிடுவேன் என்று சொன்னது மெய்யா என்பதுதானே?” என்றான். “ஆம்” என்றான் பீமன். “அச்சொற்களைக் கேட்டு என் நெஞ்சு நடுங்கிவிட்டது.”

கிருஷ்ணன் புன்னகையுடன் “மூத்தவரே, ஒன்று கொள்ளுங்கள். விதுரரைப்போன்ற ஒருவர் வாழ்வதே புகழுக்காகத்தான். அறச்செல்வர் என்ற பெயர் பெறுவதற்காகத்தான். அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டமுடியாது. இழிவடைதல் என்பதை நூறு இறப்புகளுக்கு நிகராகவே அவரது அகம் எண்ணும்” என்றான் கிருஷ்ணன். “அவை வெறும் சொற்கள் அல்ல. நான் பொய் சொல்வதில்லை. ஆனால் அது இறுதிப்படி. அதைச்செய்வதற்குமுன் நான் நூறு காலடிகள் வைப்பேன். நூறு வாய்ப்புகளை அவருக்கு அளிப்பேன்.”

அர்ஜுனன் “உன் ஆற்றல் அச்சுறுத்துகிறது யாதவனே” என்றான். பீமன் “ஆம், இருமுனையும் கைப்பிடியும்கூட கூர்மையாக உள்ள வாள் போலிருக்கிறாய்” என்றான். கிருஷ்ணன் புன்னகையுடன் “மூத்தவரே, பாலைநிலத்தின் விதைகள் நூறுமடங்கு வல்லமை கொண்டவை. ஏனென்றால் ஒரு விதைக்குப்பின்னால் வாழ்வை விரும்பி நீர் கிடைக்காமல் அழிந்த ஆயிரம்கோடி விதைகளின் துயரம் உள்ளது. துளிநீருக்குத் தவம்செய்யும் பல்லாயிரம் விதைகளின் துடிப்பு உள்ளது. நான் நூற்றாண்டுகளாக நிலம் நிலமாகத் துரத்தப்படும் யாதவர்களின் கண்ணீரில் இருந்து எழுந்து வந்திருக்கிறேன்.”

அவன் விழிகளில் மிகச்சிறிய ஒளிமாற்றம் ஒன்று நிகழ்ந்ததை அர்ஜுனன் கண்டான். “இன்று கிளைவிட்டு வான் நிரப்பி நிற்கும் முதுமரங்களால் ஆன இந்தப் பெருங்காட்டுக்குக் கீழே காத்திருக்கும் விதைகள் உள்ளன. பாலைவனத்து விதைகள் மூத்தவரே. நாளை அவை மண்பிளந்து எழுந்து வரும். அவை கோருவது நான்கு இலையளவுக்கு வானம். கையளவுக்கு வேர்மண். ஒரு காட்டுத்தீ எழுந்து இந்த முதுமரங்கள் அனைத்தும் கருகியழிந்த பின்னர்தான் அவை கிடைக்குமென்றால் அதுவே நிகழட்டும்.” அவன் சொல்வது என்ன என்று அர்ஜுனனுக்குப் புரியவில்லை. ஆனால் அவன் கால்கள் நடுங்கின. அவன் மெல்ல பீடத்தில் அமர்ந்துகொண்டான்.

புன்னகையுடன் கிருஷ்ணன் சொன்னான் “மகதத்தால் நம் மீது ஏவப்பட்டிருக்கும் இந்த மலைமக்கள் உண்மையில் நம்முடன் கைகோர்த்து நிற்கவேண்டியவர்கள். பாண்டவர்களே, எப்போதானாலும் நமக்கு இயல்பான களத்துணை இந்த காட்டுமனிதர்களே. ஆனால் இன்று அவர்களை அழிக்காமல் நாம் முன்னகர முடியாது. ஏனென்றால் அவர்கள் வலிமை ஒன்றையே இறையென எண்ணுபவர்கள். அவர்களை நம்முடன் சேர்த்துக்கொள்ளவும் நாம் நம் ஆற்றலைக் காட்டியாகவேண்டும். ஒருகையில் வாளுடன் அல்லாது அவர்களுடன் நாம் நட்புக்குக் கைநீட்ட முடியாது.”

“ஆம்” என்றான் பீமன். கிருஷ்ணன் சொன்னான் “அவர்களும் இந்தக்காட்டில் முளைவிட்டெழ விழையும் விதைகளே. ஆனால் அவர்களில் முதலில் எழுந்தவர்கள் பெருமரங்களில் கொடிகளாகச் சுற்றி மேலெழுந்துவிடலாமென நினைக்கிறார்கள். பிற விதைகளின் மேல் நிழலை நிறைக்கிறார்கள். அவர்கள் முதலில் அழிக்கப்படவேண்டும். இனி எந்த காட்டினத்தாரும் நம் மீது படைகொண்டுவரலாகாது.” அர்ஜுனன் “ஏகலவ்யன் வெறும் காட்டினத்தான் அல்ல. அவன் துரோணரின் மாணவன்” என்றான். “நாம் அவனை வெல்வோம்” என்றான் கிருஷ்ணன்.

“நாம் இச்சிறு படையுடன் செய்யப்போவது என்ன?” என்றான் பீமன். “காட்டில் சிம்மத்தை சிட்டுக்குருவி துரத்தித்துரத்தி கொத்துவதை கண்டிருக்கிறேன். நாம் சிறியவர்கள் என்பது நமக்களிக்கும் ஒரே ஆற்றல் நம் விரைவுதான்” என்றான் கிருஷ்ணன். “எந்தப்படையும் நகர்விட்டுக் கிளம்புவதற்கு சில முறைமைகளை மேற்கொள்ளும். படைகளுக்கு புதுக்கச்சைகளும் புதிய படைக்கலங்களும் அளிக்கப்பட்டு முரசுகளும் கொம்புகளும் ஒலிக்க அணிவகுப்பும் கொடியடையாளம் அளிப்பும் நிகழும். கொற்றவை ஆலயத்தில் பூசனைகள் செய்யப்படும். வீரர்கள் வஞ்சினம் உரைத்து கங்கணம் அணிந்து தங்கள் இனியவர்களிடமிருந்து விடைபெறுவார்கள். அரசர் அவரே வந்திருந்து வாழ்த்தி விடைகொடுப்பார். படைகள் கோட்டையைக் கடக்கையில் பெருமுரசுகள் அதிர நகர் மக்கள் கூடி வாழ்த்தொலி எழுப்புவார்கள்.”

“அவை தேவை இல்லை என்கிறாயா?” என்றான் அர்ஜுனன். “அவை நிகழட்டும். துரியோதனர் தலைமையில் அவை நிகழ்ந்தால் அவரது கோரிக்கையை அஸ்தினபுரி ஏற்றுக்கொண்டது என்றே மகத ஒற்றர்கள் நினைப்பார்கள். அதற்குரிய போர்முறை வகுத்தல்களும் படைதிரட்டல்களும் அங்கே நிகழும். அப்படை எப்போது நகர் விட்டு எழும் என்பதை அவர்கள் நோக்கிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அந்தப்படை கோட்டையைக் கடக்கும்போது நாம் மதுரைமேல் நம் கொடியை பறக்கவிட்டிருக்கவேண்டும்” என்றான் கிருஷ்ணன்.

“நமது படை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாயிரம் வில்லவர்கள் மட்டுமே. போர்ப்படைக்குரிய கொடிகள் முரசுகள் கழைச்செய்தியாளர்கள் எதுவும் தேவையில்லை. படைகளுக்குப் பின்னால் வரும் உணவு வண்டிகள், படைக்கலவண்டிகள் தேவை இல்லை. நாம் எங்கும் தளமடிக்கப்போவதில்லை. ஓர் இரவில் கங்கையைக் கடப்போம். அடுத்த பகலில் சப்தவனம் என்னும் அடர்காட்டில் ஒளிருந்திருந்து ஓய்வெடுப்போம். அன்று அங்குள்ள கிழங்குகளும் கனிகளுமே போதுமானவை. இரண்டாம் இரவில் யமுனையில் நுழைந்து நாம் மதுராவை பிடிப்போம். நாம் அவர்களை கொல்லத்தொடங்கியபின்னர்தான் ஹிரண்யபதத்தினரே அதை அறிவார்கள்.”

“இரண்டு இரவுகளிலா?” என்றான் அர்ஜுனன். “ஆம் பெரிய மரக்கலங்கள் தேவை இல்லை. எழுவர் மட்டுமே செல்லும் மிகச்சிறியபடகுகள் மட்டும் போதும். ஆனால் ஒவ்வொரு படகிலும் மூன்று பெரிய பாய்கள் இருந்தாகவேண்டும்.” பீமன் “மூன்று பாய்களா? ஒருபாய்க்கான கொடிமரம் மட்டுமே அவற்றில் இருக்கும்” என்றான். கிருஷ்ணன் “நான் கற்றுத்தருகிறேன். ஒரே கொடிமரத்தில் மூன்று பாய்களைக் கட்டலாம். இவ்வாறு” என்று கைகளை வைத்துக்காட்டினான் “இதை காந்தள் மலரின் இதழ்கள் என்பார்கள். அடுக்குப்பாய்கள் காற்றை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு அளிக்கும். முன்னிரவில் வடக்கிலிருந்து வழியும் இமயக்காற்று அவர்களை அம்புகளைப்போல கங்கைமேல் பறக்கச்செய்யும்.” என்றான்

“மேலும் இவை காற்றை வேண்டியவகையில் திருப்பி எதிர்க்காற்றிலும் எதிர்ஒழுக்கிலும் விரையச்செய்யும்” என்றான் கிருஷ்ணன் “இவை மூன்றையும் ஒற்றைப்பெரும்பாயின் மூன்று முறுக்குகள் என்றே கொள்ளவேண்டும். எடைமிக்க நாவாயை காற்றில் எடுத்துச்செல்லக்கூடிய ஆற்றல் கொண்டவை. அவற்றை ஊசிபோன்ற சிறிய விரைவுப்படகில் கட்டுவோம். நாரைகளுக்கு நிகரான விரைவுடன் அவை நீரில் பறந்துசெல்லும்.”

“நமக்கு ரதங்களும் தேவையில்லை. விரைவாகச் செல்லும் குதிரைகள் மட்டும் போதும். புரவிகள் மேல் எவரும் ஏறலாகாது. அவற்றை சேணங்கள் அணிவித்து ஒன்றுடன் ஒன்று கட்டி ஒரே திரளாக ஓட்டினால் அவை விடியும்போது சிரவணபதம் என்ற காட்டை அடையும். பகலில் அவற்றை அங்கே பதுங்கியமரச் செய்யவேண்டும். மறுநாள் இரவில் அங்கு வணிகர்களின் நான்கு பெரும்படகுகளை கொண்டுவரச்சொல்லியிருக்கிறேன். அவற்றை கங்கையைக் கடக்கச்செய்து கிரீஷ்மவனம் என்னும் இடத்தில் இறக்குவார்கள். அவை காடுவழியாகச் சென்று பின்னிரவில் மதுராவை அடைந்துவிடும்” என்றான் கிருஷ்ணன்.

“முதற்குதிரையை இடைவெளியில்லாமல் சவுக்கால் அடித்து ஓடவைக்கவேண்டும்… பின்னால் வருபவை அதைத் தொடர்ந்தோடும். நாம் படகுகளில் படைக்கலங்களுடன் உத்தரமதுராவுக்கு நடுவே உள்ள சரபம் என்னும் குறுங்காட்டை அடையும்போது குதிரைகளும் அங்கு வந்திருக்கும்…” பீமன் “நாம் யமுனையை அடையும்போது எதிர்நீரோட்டம் வரும்” என்றான். “ஆம் குதிரைகளும் அப்போது களைத்திருக்கும். இரு விரைவுகளும் நிகராக இருக்கும்” என்றான் கிருஷ்ணன்.

அர்ஜுனன் “ஆனால் குதிரைமேலிருந்து தேராளிகளுடன் விற்போர் செய்யமுடியாது” என்றான். ”ஆம், ஆனால் நாம் தேரில் வருபவர்களுடன் போர் செய்யப்போவதே இல்லை” என்றான் கிருஷ்ணன். “நாம் குதிரையில் நகரின் வடகிழக்குக் கோட்டைவாயிலை நெருங்குவோம். படகுகள் மேற்கு துறைமுகப்பை நெருங்கும். அப்போது கிழக்கு வாயில் அருகே என் வீரர்கள் நெய்யூற்றி மரத்தாலான காவல் மாடம் ஒன்றை எரியூட்டுவார்கள். எரியெழுந்ததும் எரியெச்சரிக்கை முரசு ஒலிக்கும். நெருப்பை அணைக்க ஹிரண்யபதத்தினர் கூட்டம் கூட்டமாக ஓடுவார்கள். துயிலெழுந்தவர்களாதலால் அவர்கள் ஒழுங்குகொள்ள சற்று நேரமாகும். அதற்குள் நாம் கோட்டைவாயில்கள் வழியாக உள்ளே நுழைவோம்” என்றான் கிருஷ்ணன்.

“கோட்டையை நீ அங்கு உருவாக்கியிருக்கும் ஐந்தாம்படையினர் திறந்து வைத்திருப்பார்கள் அல்லவா?” என்றான் பீமன் சிரித்தபடி. “ஆம், ஆசுரநாட்டவரின் வரலாற்றில் அத்தனை தோல்விகளும் அவர்களுக்குள் உருவாகி வரும் காட்டிக்கொடுப்பவன் ஒருவன் வழியாக நிகழ்வதாகவே இருந்துள்ளன. இம்முறையும் அவ்வாறே” என்றான் கிருஷ்ணன். “யார்?” என்றான் அர்ஜுனன். “ஏகலவ்யனின் படைத்தலைவன் சுவர்ணபாகு” என்றான் கிருஷ்ணன். “என்ன வாக்குறுதி அளித்திருக்கிறாய்?” என்றான் அர்ஜுனன். “வென்ற மதுராவை சிற்றரசாக அறிவித்து அவனுக்கே அளிப்பதாக…” என்றான் கிருஷ்ணன்.

“ஆனால்” என்று அர்ஜுனன் பேசத்தொடங்கியதுமே “அவன் போரில் கொல்லப்படுவான். ஆகவே அந்த வாக்குறுதி  நிறைவேறப்போவதில்லை” என்றான் கிருஷ்ணன். “நாம் அவனைக் கொல்வதும் வாக்குறுதி மீறல்தானே?” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் நாம் அவன் நமக்கு உதவியவன் என்பதை ஏகலவ்யன் அறியும்படி நடந்துகொள்வது வாக்குறுதி மீறல் அல்ல” என்று சொல்லி கிருஷ்ணன் மீண்டும் புன்னகை செய்தான். அர்ஜுனன் அவன் புன்னகையை நோக்கிவிட்டு விழிகளை திருப்பிக்கொண்டான்.

வெண்முரசு விவாதங்கள்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்