பிரயாகை - 37
பகுதி எட்டு : மழைப்பறவை – 2
அரண்மனையை அடைந்ததும் பீமன் “நான் நீராடிவிட்டு மூத்தவரின் அவைக்கூடத்துக்கு வருகிறேன். நீயும் வந்துவிடு… விரிவான நீராட்டு தேவையில்லை” என்றான். அர்ஜுனன் தலையசைத்தபின் தன் அறைக்குள் சென்றான். சேவகன் வந்து பணிந்ததும் தன் மேலாடையை அளித்தபடி “நான் உடனே கிளம்பவேண்டும்… எளிய உணவு போதும்” என்றான். சேவகன் “மூத்தவர் செய்தி அனுப்பியிருந்தார்”“ என்றான்.”ஆம், அறிவேன்” என்றான் அர்ஜுனன்.
ஆனால் நீராடி ஆடையணிந்ததும் அவனிடம் ஒரு சோர்வு வந்து குடியேறியது. அவன் அரண்மனையைவிட்டு வெளியே சென்று தோட்டத்தின் நிழல் வழியாக நடந்தான். ஒரு சாலமரத்தடியில் கட்டப்பட்டிருந்த கல்மேடையில் சென்று அமர்ந்துகொண்டான். மேலே கிளிகள் எழுப்பிய ஒலியை கண்மூடி கேட்டுக்கொண்டிருந்தான். கண்களை மூடியபோதுதான் அங்கே எத்தனை வகையான பறவைகள் இருக்கக்கூடும் என்ற வியப்பை அடைந்தான். பல்லாயிரம் பறவைகளின் விதவிதமான ஒலிகள் இணைந்து ஒற்றைப்பெருக்காக சென்றுகொண்டிருந்தன. குழறுபவை, அறைகூவுபவை, ஏங்குபவை, இசைப்பவை, தாளமிடுபவை, விம்முபவை, அழுபவை. இத்தனை உணர்ச்சிக்கொந்தளிப்புகள் சூழ நிகழ்கையில் மானுடர் அவற்றை அறியாமல் தங்கள் உலகில் வாழ்கிறார்கள்.
புவியை உண்மையில் நிறைத்திருப்பவை பறவைகள்தான் என எண்ணிக்கொண்டான். பூமியின் எண்ணங்களில் பெரும்பகுதி பறவைகளின் மொழியில்தான் இருக்கும். மானுடனின் ஒட்டுமொத்தக்குரலும் அவற்றில் ஒரு சிறுபகுதியே. உடனே புன்னகையுடன் அச்சிந்தனைகளைக் கேட்டால் தருமன் மகிழ்ச்சி அடைவார் என எண்ணிக்கொண்டான். அதை உடனே மேலும் தத்துவார்த்தமாக அவர் விரிக்கக்கூடும். பாண்டவர்கள் அனைவருமே தருமன்கள்தான். தருமனில் இருந்து விலகி ஒவ்வொன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவன் வில்லை, பீமன் கதையை, நகுலன் குதிரைநூலை சகதேவன் சோதிடநூலை விரும்பிக்கற்பதாக சொன்னார்கள். அவர்களுக்கும் தேவைதானே தாங்கள் தருமன் அல்ல என்று நம்புவதற்கான ஒரு வழி.
மறுகணம் தருமனைப்போலவே பீமனும் தன்னிடம் இருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். அந்த இறுதி எண்ணம் பீமனுடையது. அத்தனை சுவைகளுக்கும் மேல் ஒரு கைப்பிடி எட்டிச்சாறு. அப்படியென்றால் பாண்டவர்கள் யார்? ஒரே உள்ளத்தின் ஐந்து வகை எண்ணச்சரடுகளா? ஐந்து எண்ணங்கள் ஒன்றை ஒன்று கண்டுகொள்ளும் ஒற்றைப்புள்ளியா? இல்லை, நினைவறிந்த நாள் முதல் ஒருவரை ஒருவர் சார்ந்து ஒட்டியே வளர்ந்தவர்கள் என்பதனால் ஒருவரின் அகமொழி இன்னொருவருடையதுடன் கலந்துவிட்டிருக்கிறது, அவ்வளவுதான். வண்ணாத்தியின் காரப்பானையில் சேர்த்து வைத்து அவிக்கப்பட்ட பலவண்ணத் துணிகள் போல.
அவன் சற்றே கண்ணயர்ந்தபோது.பீமனின் கனத்த குரல் கேட்டது. “பார்த்தா…” அவன் எழுந்து அமர்ந்தான். “உன்னை அங்கே தேடினேன்” என்றான் பீமன். அர்ஜுனன் எழுந்து அமர்ந்து “மூத்தவரே, நான் எதற்கு அங்கே? தூது எதுவானாலும் என் குரலுக்கு அங்கே இடமில்லை. நான் செய்யக்கூடுவதாகவும் ஏதுமில்லை” என்றான். “நீங்களே என் பொருட்டு பேசிவிடுங்கள். நீங்கள் பேசாத எதையும் நான் பேசிவிடப்போவதில்லை.” பீமன் புன்னகையுடன் “ஆம், தூதில் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அந்த இளம் யாதவனைப் பார்க்கலாமே என்று எண்ணினேன்.”
“அவனைப்பற்றி சூதர்கள் கதைகளைப் புனைந்து அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இருபத்துமூன்று வயதுக்குள் அவன் ஏழுகுருகுலங்களில் மெய்ஞானங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்துவிட்டானாம். வேதவேதாந்தங்களில் அவன் அளவுக்கு கல்வி வசிட்டருக்கு மட்டுமே உள்ளதாம்… நூல்களைச் சுமந்து அலையும் இன்னொரு உயிர், வேறென்ன? நூல் கற்ற ஒருவனைத்தான் நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறோமே” என்றான் அர்ஜுனன். “ஆம், அவனைப்பற்றி கேட்டபோது சலிப்பாகவே இருந்தது. ஆனால் அவன் குழலிசைப்பான் என்று சொன்னார்கள். அப்போது சற்று ஆர்வம் வந்தது. நூலை மறக்காமல் குழலிசைக்கமுடியாது அல்லவா?” என்றான் பீமன்.
“எனக்கு ஆர்வமில்லை. அவன் வந்த வேலைமுடிந்து செல்லட்டும். அவனிடம் நான் அடைவதற்கொன்றும் இருக்க வாய்ப்பில்லை என்றே என் அகம் சொல்கிறது. இசையை அவன் ஏன் கற்றான் என்றே என்னால் சொல்லமுடியும். இப்போது நீங்கள் சொன்னீர்களே, கல்வியில் கரைகண்டவன் ஆனால் இசையறிந்தவன் என்று. அவ்வியப்பை உருவாக்குவதற்காக. மூத்தவரே, பிறரில் வியப்பை உருவாக்குவதற்காகவே வாழும் ஒருவனைப்போல அகம் ஒழிந்தவன் எவன்?” என்றான் அர்ஜுனன்.
“அவனைப்பற்றி நான் ஏதும் சொல்லமாட்டேன். ஆயினும் நீ அவனை சந்திக்கலாமென்றே நினைக்கிறேன். ஏனென்றால் அவனும் உன்னைப்போலவே பெண்களால் விரும்பப்படுபவன். பெண்களை அதைவிட விரும்புபவன்” என்றான் பீமன் நகைத்தபடி. “அவனைப்பற்றிய கதைகளைச் சொல்லும்போது விறலியரின் கச்சு அவிழ்ந்து நழுவுகிறது என்றும் அவர்களில் மதம்கொண்ட யானையின் வாசனை எழுகிறது என்றும் ஒரு சூதன் சொன்னான். அப்படி என்னதான் அவன் உன்னைவிட மேலானவன் என்று பார்க்கலாமே என்று தோன்றியது.”
அர்ஜுனன் நகைத்து எழுந்து “ஆம், அது சற்று ஆர்வத்துக்குரியதே…” என்றான். “வா, மூத்தவர் நூல்நெறிப்படி முடிவெடுக்கையில் ஐயங்களை அடைவார். அவற்றை நமக்கு விளக்கி அந்த ஐயங்களைக் களைவார். நம் உதவி அதற்காகவென்றாலும் அவருக்குத் தேவை” என்றான் பீமன். நகைத்துக்கொண்டே சால்வையை சரிசெய்தபடி அர்ஜுனன் அவனுடன் சென்றான். பீமன் “இளையவனே, மூத்தவர் பெரும் பரவசத்துடனும் பதற்றத்துடனும் இருக்கிறார். அவரே கையாளக்கூடிய முதல் அரசுசூழ்தல் நிகழ்ச்சி இது…ஏ னென்றால் இது நம் அன்னைக்கு நேரடியாக வந்த தூது. இதில் விதுரர் தலையிட விரும்பமாட்டார்” என்றான்.
தருமனின் அரண்மனைக்கு வெளியே சென்றதும் பீமன் “நீ எக்கருத்தையும் சொல்லாதே. மூத்தவர் நீ நேற்று அவரை புண்படுத்திவிட்டதாக நினைக்கிறார்” என்றான். “நானா, அவரையா?” என்றான் அர்ஜுனன். “அது ஒரு பாவனை இளையவனே. அதன் வழியாக அவர் நேற்றின் குற்றவுணர்ச்சியை வெல்கிறார்” என்றான் பீமன். அர்ஜுனன் “இந்த உளநாடகங்கள் என்னை சோர்வுறச்செய்கின்றன மூத்தவரே. நான் இப்போதுகூட திரும்பிவிடவே விழைகிறேன்” என்றான். “நீ என்னுடன் வந்தால்போதும்” என்றான் பீமன்.
அறைக்குள் நுழைந்து அங்கே பீடத்தில் அமர்ந்திருந்த தருமனை அவர்கள் வணங்கினர். அர்ஜுனன் கிருஷ்ணனை அங்கே எதிர்பார்த்தான். அவன் பார்வையை அறிந்த தருமன் “இளைய யாதவன்தானே? நீங்கள் வந்தபின் அவனுக்கு நான் முகமாடல் அளிக்கலாமென நினைத்தேன்… அதுவல்லவா முறை?” என்றான். “அவன் அன்னையை சந்தித்துவிட்டானா?” என்றான் பீமன். “இன்னும் இல்லை. அவன் நேற்றுமாலையே வந்துவிட்டான். சொல்லப்போனால் துரியோதனன் கிளம்பியதுமே அவனும் கிளம்பிவிட்டான். துரியோதனன் அஸ்தினபுரியின் குரல் அல்ல என்று அறிந்திருக்கிறான்” என்றான் தருமன்.
சேவகனிடம் “யாதவனை வரச்சொல்” என்று ஆணையிட்டுவிட்டு “அன்னை இன்னும் அவனை சந்திக்கவில்லை. அவனை அந்தப்புரத்தில் சந்திக்க அவர் மறுத்துவிட்டார். இன்று முன்மதியம் மன்றுசூழ் அறையில் முறைமைப்படி சந்திப்பதாக சொன்னார். அவர் இப்போது சூரசேனரின் மகளோ மதுவனத்தின் சிறுமியோ மார்த்திகாவதியின் இளவரசியோ அல்ல, அஸ்தினபுரியின் அரசி என்று அவனுக்குச் சொல்ல விழைகிறார். எந்த உரையாடலும் அரசமுறைமைப்படியே நிகழமுடியும் என்றும் அதற்கப்பால் எதையும் எதிர்பார்க்கவேண்டாம் என்றும் சொல்ல நினைக்கிறார்” என்றபின் தருமன் புன்னகை செய்தான். “அதுவே முறை. ஆகவே அந்த முறைமையையே நானும் கடைபிடிக்க முடிவுசெய்தேன்.”
சிறிய குருவி ஒன்று சாளரம் வழியாக அறைக்குள் புகுந்து கொடி பறப்பதுபோல சிறகடித்து சுற்றிவந்தது. “இந்தக்குருவி பலநாட்களாக என்னை வதைக்கிறது… யாரங்கே?” என்றான் தருமன். சேவகன் வந்து பணிய “இந்தக் குருவியை துரத்துங்கள் என்று சொன்னேன் அல்லவா?” என்றான். “பலமுறை துரத்திவிட்டோம் இளவரசே… அது இங்குதான்…” என்றான் சேவகன். “மூடர்கள்” என்று தருமன் தலையை அசைத்தான். சேவகன் ஒரு நீண்ட கழியால் குருவியை துரத்தினான். அது சுழன்று சுழன்று பலமுறை பறந்து சாளரம் வழியாக வெளியே சென்றது. அவன் சாளரத்தை மூடினான். “மூடா, சாளரத்தை மூடினால் இங்கே மூச்சுத்திணற அமர்ந்திருக்க முடியுமா?” என்றான் தருமன். சேவகன் திகைக்க “வெளியே சென்று அது உள்ளே வரும் வழியிலேயே துரத்துங்கள்… மூடர்கள் மாமூடர்கள்!”
ஓவியம்: ஷண்முகவேல்
அவன் பதற்றமும் எரிச்சலும் கொண்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். “மிகச்சிறிய பறவை” என்று சொல்லி பீமன் கால்களை நீட்டிக்கொண்டான். அவன் எந்தப் பொருளில் அதைச் சொன்னான் என்பதுபோல தருமன் சிலகணங்கள் பார்த்துவிட்டு “பார்த்தா… நான் சொல்வதை எவருமே புரிந்துகொள்ளவில்லை” என்றான். “நான் என் நியாயங்களுடன் தனித்துவிடப்பட்டிருக்கிறேன். ஒவ்வொருவரும் அவரவர் உலகியல் தேவைகளை நியாயங்களாக சொல்கிறார்கள். நான் என்றும் மாறாத நெறியை சொல்கிறேன்” என்றான்.
குருவி மீண்டும் வந்தது. அறைக்குள் சுவர்களில் சிறகு உரசி சுழன்று பறந்தது. தீப்பந்தத்தை சுழற்றுவதுபோல அது ஒலிப்பதாக அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். “யாரங்கே?” என்று தருமன் கூச்சலிட்டான். வந்து பணிந்த முதுசேவகனிடம் “என்ன செய்கிறீர்கள்? அத்தனைபேரையும் குதிரைக்கொட்டிலுக்கு அனுப்பிவிடுவேன்… அதை விரட்டுங்கள்” என்றான். சேவகர்கள் உள்ளே வந்து துணியைச் சுழற்றி வீசி அதை விரட்டினார்கள். “அது வரும் வழிகளில் நில்லுங்கள். மறுமுறை வந்தால் அனைவரும் தண்டிக்கப்படுவீர்கள்” என்றான் தருமன். “மூத்தவரே. அதைவிட அக்குருவியை தண்டிப்பதல்லவா எளிது” என்றான் பீமன். அவன் தன்னை நோக்கி நகைக்கிறான் என்று தருமனுக்கு புரிந்தது. “மந்தா இது விளையாடும் நேரமல்ல” என்றான்.
சேவகன் வந்து இளைய யாதவனின் வருகையை அறிவித்தான். வாயில் வழியாக உள்ளே வந்த உயரமான கரிய இளைஞனை அர்ஜுனன் மெல்லிய ஆர்வத்துடன் நோக்கினான். அந்த ஆர்வம் அவனுக்கும் பெண்களுக்குமான உறவைப்பற்றி பீமன் சொன்னதனால் உருவானது என்பதை எண்ணி அகத்தே புன்னகை செய்துகொண்டான். முதல் எண்ணமே அழகன் என்பதாகவே இருந்தது. உடனே கர்ணனுடன் ஒப்பிடத் தோன்றியது. கர்ணனைவிட சிறிய உடல். கர்ணனைவிட அழகானவனாக அவனை ஆக்கியது எது என்று அர்ஜுனன் சிந்தித்தான். அவன் உள்ளே வந்து வணங்கி முகமன் சொல்லி அமர்ந்தபோதெல்லாம் அதையே எண்ணிக்கொண்டிருந்தான்.
கிருஷ்ணன் வெண்பட்டாடை அணிந்து மஞ்சள்பட்டால் கச்சை கட்டியிருந்தான். பொன்னூல் வேலைகள் ஏதுமில்லாத எளிய செம்மஞ்சள் பட்டுமேலாடை. கைகளிலும் தோள்களிலும் கழுத்திலும் அணிகளேதுமில்லை. காதுகளில் மட்டும் எளிய கற்கள் ஒளிவிட்ட சிறிய குண்டலங்கள். குழலை தலையில் யாதவர்களுக்குரிய முறையில் சுருட்டிக் கட்டி அதில் ஒரு மயிற்பீலியை சூடியிருந்தான். சிறிய உதடுகள் அவனை குழந்தையெனக் காட்டின. அவை எப்போதும் சற்றுத் திறந்து தூய வெண்ணிறம் கொண்ட சிறிய பற்களைக் காட்டின. அவன் முகத்தில் ஓர் உறுப்பாகவே புன்னகை இருந்தது.
அவன் விழிகள் பெண்களுக்குரியவை என்ற எண்ணத்தை அர்ஜுனன் அடைந்தான். அல்லது மழலைமாறாத குழந்தைகளுக்குரியவை. அகன்று நீண்டு நீலம் கலந்து ஒளிவிடும் மான்விழிகள் அவை. அவன் தருமனிடம் முறைமைச்சொற்களை பேசிக்கொண்டிருக்கையில் அவ்விழிகளையே அர்ஜுனன் நோக்கிக்கொண்டிருந்தான். அவை சிறுகுழந்தைகளின் விழிகளைப்போல அனைத்து உரையாடல்களிலும் முழுமையாகவே பங்குகொண்டன. அனைத்து உணர்ச்சிகளையும் அவ்வப்போது வெளிப்படுத்தின. அதேசமயம் காதலில் விழுந்த கன்னியின் விழிகள் போல ஏதோ கனவில் நெடுந்தொலைவுக்கு அப்பாலும் இருந்தன.
கரிய விழிகள் அவை என்று ஒருகணம் தோன்றியது. ஆனால் ஒளிபட்டால் பசுமை மின்னும் மரகதக்கல்லின் கருமை அது என்று அசைந்தபோது தோன்றியது. சிலதருணங்களில் நீலநிறமாக அவை தெரிந்தன. பேசிக்கொண்டிருப்பதன் ஒவ்வொரு சொல்லும் அவனுக்கு பெருவியப்பையும் களிப்பையும் அளிப்பதுபோல. கூடவே அவையனைத்தையும் அவன் முன்னரே அறிந்திருப்பது போல. உடன்பிறந்த மூத்தவனின் பேச்சை பெருமிதத்துடன் கேட்கும் சிறிய தங்கையைப்போல. மைந்தனின் மழலையில் மகிழும் அன்னையையும் போல. அங்கிருப்பவன் ஒருவனல்ல, ஒவ்வொரு கணமும் உருமாறிக்கொண்டே செல்லும் நீலப்பெருநதி என்று அர்ஜுனன் எண்ணினான்.
மீண்டும் அந்தச் சிட்டுக்குருவி உள்ளே வந்தது. சிறகடித்து கிச் கிச் என்று ஒலியெழுப்பி சுற்றிவந்தது. தருமன் பற்களைக் கடித்தபடி “சித்ரகா…” என்றான். சித்ரகன் வந்து நின்றபோது அவன் உடல் குளிர்வந்தது போல நடுங்குவதை அர்ஜுனன் கண்டான். “இந்தச் சிட்டுக்குருவி இங்கே வரலாகாது என்று சொன்னேன்” என்றான் தருமன் மெல்லிய புன்னகையுடன். கண்களில் கத்திமுனையின் ஒளி தெரிந்தது. “அனைத்துச் சாளரங்களிலும் காவலுக்கு வீரர்கள் நின்றிருக்கிறார்கள் அரசே. இது பின்பக்கம் வழியாக நுழைந்து அறைகள் வழியாக வந்துவிட்டது” என்றான் சித்ரகன்.
“சிட்டுக்குருவிதானே? அது உள்ளே பறந்தால் என்ன?” என்றான் கிருஷ்ணன். “அதன் ஒலி என்னை கலைக்கிறது…” என்றான் தருமன். “நான் ஒவ்வொன்றும் அதன் இடத்தில் இருக்கவேண்டுமென விழைபவன்.” கிருஷ்ணன் புன்னகையுடன் எழுந்து “கேட்டுப்பார்க்கிறேன்” என்று கைநீட்டினான். பிச் பிச் பிச் என்று உதடுகளால் ஒலியெழுப்பினான். சிட்டு சுழன்றபடி கிச் கிச் கிச் என்றது. “இளவரசே, சிட்டுக்களில் உலகின் மாபெரும் சக்ரவர்த்தினியாகிய இவள் பெயர் வஜ்ரமுகி. இவளது அரசையும் அரண்மனையையும் இவளே வகுக்கிறாள். இவ்விடம் அவரது ஆட்சிக்குட்பட்டது என்கிறாள்” என்றான்.
அர்ஜுனன் புன்னகையை அடக்கி வேறுபக்கம் நோக்கினான். தருமன் எரிச்சல் கலந்த புன்னகையுடன் “ஓகோ” என்றான். அவனுக்கு அந்த யாதவ இளைஞன் சற்று அறிவுக்குறைவான துடுக்கன் என்ற எண்ணம் எழுந்திருப்பதை அவனால் உணரமுடிந்தது. சித்ரகன் சிட்டுக்குருவியை விரட்ட முயல அது சாளரம் வழியாக வெளியேற மறுத்தது. “மூடா, சாளரத்துக்கு அப்பால் வீரர்கள் நிற்கையில் அது எப்படி வெளியேறும்?” என்றான் தருமன். “வெளியேறினாலும் அது மீண்டும் வரும்” என்றான் கிருஷ்ணன் அறையை நோக்கியபடி. “இவ்வறைக்குள் அது எங்கோ கூடுகட்டி முட்டையிட்டிருக்கிறது.”
சித்ரகனிடம் “அப்படியே விட்டுவிடுங்கள்… அது எங்கு அமர்கிறது என்று பார்ப்போம்” என்றான். சித்ரகன் கழியை தாழ்த்தினான். சிட்டு ஒரு திரைச்சீலையில் சென்று அமர்ந்தது. “சித்ரகரே, இந்தத் திரைச்சீலையை புதிதாக அமைத்தீர்களா?” என்றான் கிருஷ்ணன். “ஆம்” என்றான் சித்ரகன். அதற்கு அப்பால் குருவியின் கூடு இருக்கக் கூடும்… பாருங்கள்!” சித்ரகன் உடனே தூணில் தொற்றி ஏறி “ஆம்… கூடு இருக்கிறது” என்றபின் “மூன்று முட்டைகள்… இல்லை நான்கு” என்றான்.
“அதை எடுத்து வெளியே கொண்டு ஏதாவது மரக்கிளையில் வை… அங்கே அது குஞ்சுபொரிக்கட்டும்” என்றான் தருமன். “அப்படி வைத்தால் அது சென்றுவிடாது… கூட்டை எடுத்து சற்று வெளியே வையுங்கள். அது கூட்டில் வந்து அமரும். உடனே மேலும் சற்று தள்ளிவையுங்கள். ஒவ்வொரு முறை அது அமர்ந்தபின்னரும் அதை தள்ளிவையுங்கள்… மெல்லமெல்ல வெளியே கூரையின் அடியில் கூட்டைப் பொருத்துங்கள்… இது மரங்களில் கூடுகட்டும் குருவி அல்ல. வீட்டுக்குருவி” என்றான். சித்ரகன் “ஆணை” என்றான்.
“நாம் வேறு அறையில் சென்று பேசலாமே” என்றான் கிருஷ்ணன். “வஜ்ரமுகியின் அரசில் நம் அரசியல் பேச்சுக்களை அவர்கள் விரும்பவில்லை.” அர்ஜுனன் புன்னகைசெய்தான். தருமன் “ஆம்…” என்றபின் எழுந்து நடந்தான். அர்ஜுனன் கிருஷ்ணன் அருகே சென்று “என் பெயர் பார்த்தன். இளையபாண்டவன்… உங்களைப்பற்றி நிறையவே அறிந்திருக்கிறேன்” என்றான். கிருஷ்ணன் “உங்களைப் பற்றியும் பெண்கள் சொல்லி அறிந்திருக்கிறேன்” என்றான். அர்ஜுனன் உரக்க நகைத்து “உங்களைப்பற்றி பிறர் சொல்லமாட்டார்கள் என்று தெளிந்திருக்கிறீர்கள்” என்றான்.
“முனிவர்கள் சொல்வார்கள்” என்றான் கிருஷ்ணன். “அவர்களின் உள்ளம் மிகப்பெரியது. இளையோரை அவர்கள் முடிவில்லாமல் மன்னிக்கிறார்கள்.” அர்ஜுனன் “நீர் பதினெட்டு குருகுலங்களில் கல்விகற்றதாக சொல்லப்படுகிறதே” என்றான். “குறைத்துவிட்டீர். மொத்தம் முப்பத்திநான்கு.” அர்ஜுனன் “அத்தனை குருகுலங்களா?” என்றான். “ஆம், ஒன்றில் நான் நுழைந்ததுமே என்னை வெளியேற்றிவிடுவார்கள். அடுத்த குருகுலத்திற்கான தொலைவை முன்னதாகவே கணக்கிட்டுத்தான் நான் ஒரு குருகுலத்தையே தேர்வு செய்வேன்.” அர்ஜுனன் சிரிப்பை அடக்கி “அடடா ஏன்?” என்றான். “நான் ஒரு குருகுலத்தில் சேர்வது குரங்கை படகில் ஏற்றுவது போல என்று கார்க்கியாயனர் சொன்னார்” என்றான். அவன் முகம் மழலைக்குழந்தை போலிருந்தது.
“அப்படி என்னதான் செய்வீர்?” என்றான் அர்ஜுனன். “கேள்விகள் கேட்பேன்” என்றான் கிருஷ்ணன். “கேள்விகள் கேட்டால் என்ன?” என்று அர்ஜுனன் வியக்க “அதையே நானும் கேட்கிறேன்… கேள்விகள் கேட்டால்தான் என்ன?” பீமன் “யாதவரே, நீர் கேட்ட ஒரு கேள்வியைச் சொல்லும்” என்றான். “பலகேள்விகள்… எல்லாமே ஆதரமானவை. உதாரணமாக கார்க்கியாயனர் ஆத்மாவுக்கும் பிரம்மத்துக்குமான உறவை ஓர் எடுத்துக்காட்டு மூலம் விளக்கினார். மூடப்பட்ட குடத்திற்குள்ளும் வானமே இருக்கிறது. வெளியே எல்லையற்ற வானம் விரிந்துகிடக்கிறது. குடத்திற்குள் இருப்பதும் எல்லையற்ற வானமே. குடத்தை உடைத்துவீசிவிட்டால் அந்த குடவானம் வெளிவானமாக ஆகிவிடுகிறது என்றார்.”
“ஆம் குடாகாசம் மடாகாசம் என்னும் உவமை. அறிந்திருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “வில்வீரர்கள் வேதாந்தம் கற்பது நல்லது. பிரம்மத்தை எடுத்து பிரம்மத்தில் வைத்து பிரம்மத்தின் மேல் தொடுக்கும் பிரம்மமாக ஆகும்போது குறிதவறினாலும் அதுவும் பிரம்மமே என்ற நிறைவை அடையமுடியும்” என்று சிந்தனை கனத்த முகத்துடன் சொன்னான். அர்ஜுனன் சிரித்து “சொல்லும்…குடாகாசத்தில் உம் ஐயம் என்ன?” என்றான். “கார்க்கியாயனர் சொன்னார் குடத்துக்குள் உள்ள வானம் உருளை வடிவில் உள்ளது. கொப்பரைக்குள் உள்ள வானம் நீளுருளையாக உள்ளது. பெட்டிக்குள் சதுரமாக உள்ளது. அவ்வடிவங்கள் அழிந்தால் அந்த வானங்கள் அழிவதில்லை. அவை எங்கும் செல்வதும் இல்லை. அவை முன்புபோலவே அங்கே அப்படியேதான் இருக்கின்றன. ஏனென்றால் அவை முடிவிலாவானம் அளிக்கும் தோற்றங்களே.”
“ஆம், அதுவே வேதாந்த மெய்ஞானம்” என்றான் அர்ஜுனன். “நான் கேட்டேன், மிக எளிய ஐயம்தான், அதைக்கேட்டேன்” என்றான் கிருஷ்ணன். “வலைக்கூடைக்குள் இருக்கும் வானம் எப்படிப்பட்டது என்று. அது வலைக்குள்ளும் இருக்கிறது. அதேசமயம் வலைக்கு வெளியேயும் பரவியிருக்கிறதே என்றேன். குருநாதர் அந்த வினாவுக்கு முன் சினந்து தன் தாடியை தானே பிடித்து இழுத்தபடி கைதூக்கி கூச்சலிட்டு என்னை வெளியே செல்லும்படி சொல்லிவிட்டார்.” அர்ஜுனன் சிரித்துவிட்டான். ஆனால் பீமன் “யாதவரே அது முதன்மையான வினா. வலைக்குள் உள்ள வானம் பல்லாயிரம் வாசல்கள் கொண்ட முடிவிலி அல்லவா?” என்றான். கிருஷ்ணன் “இந்தமெய்ஞானத்தைக் கற்பிக்க நான் ஒரு குருகுலம் தொடங்கலாமென்றிருக்கிறேன்” என்றான்.
துணைமன்றறைக்குள் நுழையும்போது யாதவனின் தோளுடன் அர்ஜுனனின் தோள் உரசிக்கொண்டது. அவன் நின்று யாதவனை உள்ளே செல்லும்படி சொன்னான். யாதவன் “இல்லை..” என்று சொல்லி அர்ஜுனனை உள்ளே செல்லும்படி கைகாட்டினான். அர்ஜுனன் உள்ளே சென்றபின் “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்றான். “தென்கூர்ஜரத்தின் அரைப்பாலை நிலத்தில் என் குடிகள் இருக்கின்றன” என்றான் கிருஷ்ணன். “உன் தமையன் உடனிருக்கிறாரோ?” என்றான் அர்ஜுனன். “ஆம்…” என்று சொன்ன கிருஷ்ணன் “உன் வில்திறத்தை அறிந்திருக்கிறேன். அதை நம்பி வந்தேன்” என்றான். “அது இனி உன் வில்”என்றான் அர்ஜுனன்.
அறைக்குள் தருமன் அமர்ந்திருந்தான். அவர்கள் அமர்ந்துகொண்டதும் “யாதவரே, அன்னையிடம் பேசுவதற்கு முன் உமது தூதை என்னிடம் நீர் சொல்லலாம்” என்றான். “இளவரசே, செய்திகள் அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள்” என்றான் கிருஷ்ணன். “நாங்கள் மதுராவை கைவிட்டுவிட்டோம். எங்கள் தோள்களில் ஆற்றல் நிறையும்போது வந்து மீண்டும் அதை வெல்வோம். ஆனால் இப்போது சென்றுகொண்டிருக்கும் இடம் தட்சிண கூர்ஜரம். அந்நிலத்தை நாங்கள் அடையும்போது கூர்ஜரத்தின் படைகள் எங்களை தடுக்கலாம்…”
“ஏன்?” என்றான் தருமன். “அது வீண் நிலம் அல்லவா? அது மானுடக்குடியிருப்பாவது அவர்களுக்கு நல்லது அல்லவா?” கிருஷ்ணன் “நேரடி நோக்கில் அது உண்மை. ஆனால் நாங்கள் வெறும் யாதவர்களாக செல்லவில்லை. மதுராவில் மணிமுடிசூடிய மன்னரான என் தந்தை வசுதேவர் எங்களுடன் வருகிறார். நானும் என் தமையனும் புகழ்பெற்ற போர்வீரர்கள். கம்சரை நாங்கள் கொன்றதை கூர்ஜரம் அறியும்” என்றான். “மூத்த பாண்டவரே, மணிமுடி உயிர்வல்லமை கொண்ட விதை. அதன் துகள் எங்கு சென்றுவிழுந்தாலும் முளைக்கும். தன் நாட்டுக்குள் ஒரு நாடு முளைக்க கூர்ஜரன் விரும்பமாட்டான்.”
சிலகணங்கள் சிந்தனைசெய்த பின் “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்றான் தருமன். “எங்களுக்குத் தேவை ஒரு படை. கூர்ஜரத்தை வெல்ல அல்ல. எங்கள் எல்லைகளைக் காத்துக்கொள்ள. அந்தப்படை அஸ்தினபுரியின் படையாக இருக்கவேண்டும். அதை கூர்ஜரம் அஞ்சும்… சில வருடங்கள் அப்படை அங்கிருந்தாலே போதும். நாங்கள் வேரூன்றிவிடுவோம்” என்றான் கிருஷ்ணன். “சிறிய படை போதும். அப்படைக்குரிய செலவை கடனாகவே அஸ்தினபுரி அளிக்கட்டும். கப்பத்துடன் சேர்த்து அதை திருப்பி அளிப்பார்கள் யாதவர்கள்.”
தருமன் “நேற்று அரசர் தன் அவையில் அறிவித்த முடிவு என்னைக் கட்டுப்படுத்தும் யாதவரே” என்றான். “அஸ்தினபுரி இன்று எந்தப் போரிலும் ஈடுபட முடியாது. யாதவர்களுக்குத் தேவையான நிதியை அளிக்கமுடியும். அவ்வளவுதான்.” கிருஷ்ணன் “தங்கள் கருணையை நாடி வந்துள்ளோம் மூத்தவரே. எங்களுக்கு இன்று தேவை நிதி அல்ல ஒரு கொடி… அமுதகலசம் பொறித்த ஒரு கொடி மட்டும் எங்களுடன் இருந்தால் போதும்… ஒரு சிறிய படைப்பிரிவை அனுப்பினாலே போதும்… அதை எவரும் அறியப்போவதில்லை.”
“நானும் உடன் செல்கிறேன்” என்றான் அர்ஜுனன். தருமன் திரும்பி விழிகளில் சினத்துடன் நோக்கிவிட்டு “உங்கள் இக்கட்டை நாங்கள் நன்கறிந்துள்ளோம் யாதவரே. எங்கள் இக்கட்டை புரிந்துகொள்ளுங்கள். சிட்டுக்குருவியின் விரைவை யானையிடம் எதிர்பார்க்க இயலாது. எங்களுக்கு பல இடர்கள் உள்ளன. கூர்ஜரம் நடுநிலை நாடு. கூர்ஜரத்தின் நட்பு இல்லையேல் நாம் காந்தாரத்துடன் தொடர்புகொள்ளவே முடியாது. இந்தச் சிறிய சீண்டல் வழியாக கூர்ஜரம் நம்மிடமிருந்து விலகினால் மகதத்தின் கையில் சென்றுவிழும். இப்போதே நாம் சௌவீரர்களை வென்றதை அவர்கள் கசப்புடனும் ஐயத்துடனும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.”
“நேர்மாறாகவும் நிகழலாம்… ஒரு சிறியபடையே அவர்களை வெல்லமுடியுமென்றால் கூர்ஜரம் மட்டுமல்ல, அத்திசையில் உள்ள அத்தனை நாடுகளும் அஸ்தினபுரியை அஞ்சும். அவை அனைத்தும் அஸ்தினபுரியின் நட்புநாடுகளாகும்…” என்றான் கிருஷ்ணன். “அது வெற்றிக்குப்பின் சிந்திக்கவேண்டியது. தோல்வியடைந்தால் என்னசெய்வது என்றுதான் அரசு சூழ்பவர் எண்ணவேண்டும்” என்றான் தருமன். “மூத்தவரே, அப்பால் மாபெரும் காந்தாரம் இருப்பது வரை கூர்ஜரன் அஸ்தினபுரியை அஞ்சுவான்… ஐயமே வேண்டாம்” என்றான் கிருஷ்ணன். “அந்த அச்சத்தாலேயே அவன் மகதத்தை நாடலாமே?” என்றான் தருமன்.
கிருஷ்ணன் அதே புன்னகையுடன் தலையை அசைத்து பெருமூச்சுவிட்டான். வாதத்தில் வென்றுவிட்டதை உணர்ந்த தருமன் மெல்லிய புன்னகையுடன் “அன்னை வரும்போது நீர் உமது தூதைச் சொல்லலாம். அவர்களும் இதையே சொல்வார்கள். அவர்கள் அரசரின் ஆணையை மீறிச் செல்லமுடியாது” என்றான். கிருஷ்ணன் புன்னகை மாறாமல் “என் கடமையைச் செய்கிறேன்” என்றான். “நான் உம் மீது பரிவுடன் இருக்கிறேன் யாதவரே, ஆனால் என்னால் இதையன்றி எதையும் செய்யமுடியாது” என்றபின் தருமன் மீண்டும் புன்னகை செய்தான்.