பிரயாகை - 36
பகுதி எட்டு : மழைப்பறவை – 1
பீமன் ஒவ்வொரு வாசலாக நோக்கியபடி புழுதிபடிந்த தெருவில் மெல்ல நடந்தான். அவனுடைய கனத்த காலடியோசை தெருவில் ஒரு யானை செல்வதைப்போல ஒலியெழுப்பவே திரைச்சீலைகளை விலக்கி பல பெண்முகங்கள் எட்டிப்பார்த்தன. பெரும்பாலானவர்கள் அவனை அடையாளம் கண்டுகொண்டு திகைத்து வணங்கினர். கிழவர்கள் கைகூப்பியபடி முற்றம் நோக்கி வந்தனர்.
ஆனால் எவரும் அவனை அணுகவோ பேசவோ முற்படவில்லை. தற்செயலாக அவனுக்கு நேர் எதிராக வந்துவிட்டவர்கள் அஞ்சி உடல்நடுநடுங்க சுவரோடுசுவராக ஒண்டிக்கொண்டனர். பீமன் தெருவில் நின்று சுற்றிலும் நோக்கினான். அங்கே நின்றிருந்த மெலிந்து வளைந்த கரிய மனிதன் அவனை வணங்கி “இளவரசே, அடியேன் வணங்குகிறேன். தாங்கள் தேடுவது தங்கள் இளையோனையா?” என்றான். பீமன் அவனை நோக்கி புன்னகைத்து “ஆம்… நான் இத்தெருவையே முதல்முறையாக காண்கிறேன்” என்றான்.
“ஆம், நாங்களும் தங்களை முதல்முறையாக காண்கிறோம்” என்றான் அவன். “அருகே வாரும்… உமது பெயர் என்ன?” என்றான் பீமன் புன்னகையுடன் அணுகியபடி. அவன் மேலும் பின்னடைந்து உடலை நன்றாகக் குறுக்கி நடுங்கியபடி “நான் எந்தப்பிழையும் செய்யாதவன் இளவரசே. நோயாளியும்கூட… மேலும்…” என்றான். பீமன் அருகே சென்று “உம்மை அறிமுகம் செய்துகொள்ளும்…” என்றான். அவன் நடுங்கும் கைகளைக் கூப்பி “என் பெயர் உச்சிகன்…” என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டான். “என்ன செய்கிறீர்?” என்றான் பீமன். “நான் சமையல் செய்வேன்… அதோடு இங்கு வருபவர்களுக்கு அவர்கள் விரும்பும்படி பெண்களை அறிமுகம் செய்வதுண்டு.”
“சமையல் செய்வீரா?” என்றான் பீமன் ஆர்வத்துடன். “இங்கே என்ன சமையல் செய்வீர்கள்? எளிமையாக சுட்டோ வேகவைத்தோ உண்பீர்கள் அவ்வளவுதானே?” உச்சிகன் சற்றே தயக்கத்துடன் விழிகளைத்திறந்து “இங்குள்ளதும் சமையலே” என்றான். “என்ன செய்வீர்கள்?” என்றான் பீமன். “இளவரசே, மானுட நாக்கு எப்போதும் சுவையைத் தேடுகிறது. நீங்கள் உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் கொண்டு சுவையை உருவாக்குகிறீர்கள். நாங்கள் இங்கே கீழான பொருட்களில் எவை இருக்கின்றனவோ அவற்றைக்கொண்டு உணவை சுவையாக அமைக்கிறோம்.”
பீமன் அவனை நோக்கி கைகூப்பி “உச்சிகரே, நான் பாண்டுவின் மைந்தனாகிய பீமன். எனக்கு தங்கள் சமையலை சொல்லித்தந்தால் கடன்பட்டவனாக இருப்பேன். வேண்டும் குருகாணிக்கையையும் அளிப்பேன்” என்றான். உச்சிகன் அவனை ஓரக்கண்ணால் பார்த்து குழம்பி “தாங்கள் இதை கற்று என்ன செய்யப்போகிறீர்கள்?” என்றான். “நான் அன்னத்தில் இருந்து சுவை உருவாகும் விதத்தை அறிய விழைபவன் உச்சிகரே. உயிர் அன்னத்தை அறியும் விதத்தையே நாம் சுவை என்கிறோம். இப்புவியில் அருவும் உருவும் இணையும் ஒரு புள்ளியை நாம் அறிவதற்கான ஒரே தூலமான வழி சுவையை அறிந்துகொள்ளுதலே” என்றான்.
உச்சிகன் முகம் மலர்ந்து “நானெல்லாம்கூட நிறைய தத்துவம் பேசுவேன்… இப்போது பேசுவதில்லை. தத்துவம் பேசினால் நான் சந்திப்பவர்கள் என்னை அடிக்கிறார்கள்…” என்றான். “இப்போது நீங்கள் சொன்னவை கேட்க அழகாக உள்ளன” என்றபின் “தாங்கள் தங்கள் இளையவரைத் தேடி சென்றுகொண்டிருந்தீர்கள்…” என்றான். “அவன் எங்கே?” என்றான் பீமன். “அங்கே சபரை என்ற தாசியின் இல்லத்தில் நேற்று நான் அவரைக்கொண்டுசென்று விட்டேன்…” உடனே அவன் நடுங்கி “அவரே என்னிடம் கோரியதனால்தான்” என்றான்.
“அவன் அங்குதான் இருப்பான்… நான் பிறகு அவனை பார்க்கிறேன்” என்றான் பீமன். “முதலில் உங்கள் உணவை எனக்கு அளியுங்கள்” உச்சிகன் துடிப்புடன் “வாருங்கள்… இங்கே அருகேதான் என் மடைப்பள்ளி… உண்மையில் அது எளிய மக்களுக்கான சத்திரம். நாங்கள் அங்கே இரவெல்லாம் உணவை அளிக்கிறோம்” என்றபின் “தாங்கள் குதிரையில் வரவில்லையா?” என்றான். “இல்லை… நான் நடந்துசெல்வதையே விழைகிறேன்” என்றான் பீமன். “தாங்கள் நடக்கலாம். நடப்பதனால் களைப்படையாத ஒரே விலங்கு யானைதான்… உத்கலம் வரைக்கும்கூட யானையை நிற்காமல் கூட்டிச்செல்லமுடியும்…” என்றான் உச்சிகன்.
நடந்தபடியே ஐயத்துடன்“எங்கள் இடத்துக்கு நீங்கள் வருவது தகாது என்பார்களே?” என்றான் உச்சிகன். “எவரும் எதுவும் சொல்லமாட்டார்கள்… என்னையும் அவர்கள் உங்களைப்போன்றவன் என்றே நினைப்பார்கள்” என்றான் பீமன். “பின்னர் என்னை எவரும் வந்து தண்டிக்கலாகாது… இப்பகுதியின் நூற்றுக்குடையோன் விரோகணன் கொடுமையானவன். எதற்கும் சவுக்கைத் தூக்கிவிடுவான். அவனிடம் அடிவாங்கிய தழும்புகள் என் உடலெங்கும் உள்ளன.” பீமன் “இனிமேல் என் பெயரைச் சொல்லும்…” என்றான். “அவன் நம்பாவிட்டால்..” என்றான் உச்சிகன். “நேராக வந்து என்னிடம் சொல்லும்…” உச்சிகன் புன்னகைத்து “அரண்மனையில் என்னை உள்ளே விடமாட்டார்களே” என்றான். “நான் உமக்கு ஒரு சொல்லை அளிக்கிறேன். அதைச் சொன்னால் விடுவார்கள்” என்றான் பீமன். “என்னைத்தேடி வருபவர்களெல்லாம் உம்மைப்போன்றவர்களே.”
உச்சிகனின் மடைப்பள்ளி பழையபாத்திரங்களும் விறகும் பலவகையான உணவுக்குப்பைகளும் நிறைந்திருந்தது. வெவ்வேறு வகையான மக்கள் அங்கே பாத்திரங்களைக் குவித்துப்போட்டு கழுவிக்கொண்டிருந்தனர். போர்க்களத்தைப்போல உலோக ஒலிகளும் பேச்சொலிகளும் கூச்சல்களும் கேட்டன. “அவர்களெல்லாம் இங்கே அறவுணவை உண்பவர்கள். நிகராக அவர்களே பாத்திரங்களைக் கழுவ வேண்டுமென்பது நெறி. அவர்களால் எதையும் கூச்சலிட்டே சொல்லமுடியும்” என்றான் உச்சிகன். “ஏன்?” என்றான் பீமன். “ஏனென்றால் அவர்கள் சொல்வதை எவரும் செவிகொடுப்பதில்லை” என்றான் உச்சிகன். “வெறும் மக்கள். பெரும்பாலானவர்கள் குடிகாரர்கள், பிச்சைக்காரரகள்… இங்கே குடிகாரர்கள் பிச்சைக்காரர்களாக ஆவது இயல்பான மாற்றம்.”
பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தவர்கள் திகைத்து பீமனை நோக்கினர். அவர்கள் அவன் யாரென்றே அறிந்திருக்கவில்லை. எந்த அரசுக்கும் நிலத்துக்கும் சொந்தமற்ற மிதக்கும் குப்பைகள் அவர்கள் என்று பீமன் எண்ணிக்கொண்டான். அவனுடைய பேருடலைத்தான் அவர்கள் நோக்கினர். ஒருவன் “இவன் தின்றபின் நமக்கு மதிய உணவு எங்கே எஞ்சப்போகிறது?” என்றான். ஒரு கிழவி “இவனைத் தின்றுவிடவேண்டியதுதான்” என்று சொல்ல அவர்கள் அனைவரும் நகைத்தனர். பீமன் அவர்களை நோக்கி நகைத்து “அண்ணா, நான் சாப்பிடுவதைவிட அதிகமாக சமைப்பேன்” என்றான். “உன்னைப்பார்த்தாலே உணவுதான் நினைவு வருகிறது” என்றான் ஒருவன்.
பீமன் அவர்கள் நடுவே அமர்ந்துகொண்டான். “என் அன்னை என்னை உணவின் மேல் பெற்றிட்டாள்” என்றான். அவர்கள் நகைத்தனர். உச்சிகன் “உணவுண்ண வாருங்கள்” என்றான். “இங்கே கொண்டு வாரும் உச்சிகரே” என்றான் பீமன். “இங்கேயா?” என்றான் உச்சிகன். “ஆம், அங்கே நான் தனியாக அமர்ந்தல்லவா உண்ணவேண்டும்?” என்ற பீமன் “பிறர் உண்பதைவிட பன்னிருமடங்கு நான் உண்பேன்” என்றான்.
அப்பால் எச்சில்கள் குவியுமிடத்தில் அமர்ந்திருந்த இரு குரங்குகள் பீமனை நோக்கியபின் எழுந்து வால் தூக்கியபடி அருகே வந்தன. “போ” என ஒருவன் நீரை அள்ளித்தெறித்தான். அவை மெல்ல பதுங்கியபின் பீமனை நோக்கி புன்னகைசெய்தன. “ஒன்றும் செய்யவேண்டாம்… நான் பேசுவதைக் கேட்க வந்திருக்கின்றன” என்றான் பீமன்.
“நீ பேசுவதையா? அவை அறியுமா?” என்றான் ஒருவன். “ஆம் நான் பேசுவதை குரங்குகள் புரிந்துகொள்கின்றன. அவை என்னை ஒரு குரங்காகவே நினைக்கின்றன” என்றான் பீமன். “நாங்களும் அவ்வாறே நினைக்கிறோம்” என்று ஒரு பெண் சொல்ல அனைவரும் நகைத்தனர். பீமன் நகைத்து “நானும் அவ்வாறே நினைக்கிறேன் அக்கா” என்றான். அவள் “அக்காவா? நானா?” என்றாள். “ஏன் என்னைவிட இளையவளா நீ?” என்றான் பீமன். “நானா? எனக்கு என்ன வயது என்றே தெரியவில்லை… ஆனால் காவலர்கள் என்னை பிடித்துப் புணர்வதை நிறுத்தி சிலவருடங்களாகின்றன” என்று அவள் சொன்னாள். “அதன்பின்னர்தான் நாங்கள் தொடங்கினோம்” என்றான் ஒரு கிழவன். மீண்டும் சிரிப்பு எழுந்தது.
உச்சிகன் ஒரு பெரிய மரத்தாலத்தில் உணவைக் கொண்டுவந்து பீமன் அருகே வைத்தான். “நிறைய இருக்கிறது இளவரசே… நீங்கள் உண்ண உண்ண கொண்டுவருகிறேன்” என்றான். “இளவரசா, இவனா? எந்த நாட்டுக்கு?” என்றாள் ஒருத்தி. “வடக்கே அன்னமலை என்றொரு மலை இருக்கிறது. அதன் மேல் அன்னசத்திரம் என்று ஒரு நாடு… அதன் இளவரசர். இவர்பெயர் அன்னன்” என்றான் ஒருவன். அனைவரும் உரக்க நகைக்க “இவரது கொடி அகப்பை… இவரது படைக்கலம் சட்டுவம்…” என்றான். அங்கிருந்த அனைவரும் நகைத்துக்கொண்டனர்.
பீமன் உண்ணத்தொடங்கியதும் இருகுரங்குகளும் வந்து அந்தத் தட்டிலேயே அள்ளி உண்ணத்தலைப்பட்டன. “குரங்குகள் உண்ணும் உணவையா?” என்றான் ஒருவன். “குரங்குகள் சிறந்த உணவை அன்றி உண்பதில்லை” என்றான் பீமன். ஒரு குரங்கு உணவில் இருந்த ஏதோ ஒன்றை எடுத்து வீசியது. அவனிடம் இன்னொன்று ஏதோ சொன்னது. “காரம் கூடுதல் என்கிறது” என்றான் பீமன் “இளவரசே, எளிய சமையலின் விதிகளில் ஒன்று, காரம் உப்பு புளி கூடுதலாக இருக்கும் என்பது. வாசப்பொருட்களும் கூடுதலாக போடுவோம். ஏனென்றால் சமையற்பொருட்கள் சிறந்தவை அல்ல. புளித்தவை அழுகியவை புழுங்கியவை. அவற்றை நாவும் மூக்கும் அறியக்கூடாது.” பீமன் “பழகிவிட்டால் சுவையாகிவிடும்” என்றான்.
அவன் உண்பதை அவர்கள் வியந்து நோக்கினர். “நீ காலையிலேயே இத்தனை உணவை அருந்துவது வியப்பளிக்கிறது” என்றான் ஒருவன். “நான் அதிகாலையில் எழுந்து உணவருந்திவிட்டுத்தான் வந்தேன்” என்றான் பீமன். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கியபின் “நீ ஏன் போருக்குச் செல்லக்கூடாது? உன் எதிரே எவரும் நிற்கமுடியாதே?” என்றனர். “ஏன் போருக்குச் செல்லவேண்டும்? அதன் மூலம் எனக்கு மேலும் உணவு கிடைக்குமா என்ன?” என்றான் பீமன். “ஆம் அது உண்மை. அரசர்கள் மேலும் அதிகம் பெண்களைப் புணர்வதற்காக போரை நடத்துகிறார்கள். வீரர்கள் அதன்பொருட்டு சாகிறார்கள்” என்றான் ஒருவன்.
“என்னை ஒரு காவலன் ஒருமுறை அடித்தான். வடுகூட இருக்கிறது. நான் ஓர் அரசனை கூட்டத்தில் நின்று எட்டிப்பார்த்துவிட்டேன். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஏன் சிரித்தேன் என்று அடி.” பீமன் மென்றபடி “ஏன் சிரித்தாய்?” என்றான். “அவன் ஏதோ செடியோ மரமோ இல்லாத ஊரின் மனிதன் போலத் தெரிந்தான். பூக்களையும் கொடிகளையும் இலைகளையும் உலோகத்தில் செய்து உடலெங்கும் கட்டி வைத்திருந்தான். அவை சருகு நிறத்தில் இருந்தன. சேற்றில் விழுந்து சருகில் புரண்டு எழுந்தவன் போல ஒரு தோற்றம்… மடையன்” என்றான் அவன். பீமன் சிரித்து “இதையே நானும் நினைத்தேன்… ஆகவேதான் நான் எந்த அணிகளையும் அணிவதில்லை” என்றான்.
“அவன் பெயர் தருமன், அவன்தான் பட்டத்து இளவரசன் என்றார்கள்” என்றான் அவன். “நிறைய நூல்களைக் கற்றவனாம். ஆகவே அவனுக்கு நிறைய ஐயங்கள். அவன் அமர்ந்திருப்பதைப்பார்த்தேன். அமர்வதா எழுவதா என்ற ஐயத்துடன் இருந்தான்” என்றான். ஒரு பெண் “அவனுக்கு பின்பக்கம் மூலநோய் இருக்குமோ?” என்றாள். அனைவரும் சிரிக்க இன்னொருவன் “அவனுடைய சிம்மாசனத்தில் ஓர் ஓட்டை போட்டு அமரச்செய்ய வேண்டும்” என்றான். மீண்டும் சிரிப்பு. “அவர்கள் ஐந்துபேர் இருக்கிறார்களாம்…” என்றான் ஒருவன். “ஐந்து பேரும் ஐந்துவகை மூடர்கள் என்பதுதான் அவர்களின் சிறப்பாம்.”
உச்சிகன் பதறிக்கொண்டே இருந்தான். பீமனின் கண்களை அவன் கண்கள் வந்து தொட்டுச்சென்றன. பீமன் எழுந்து “சிறந்த உணவு உச்சிகரே. ஆனால் இவர்களுக்குத்தான் பிடிக்கவில்லை” என்றான் குரங்குகளைச் சுட்டிக்காட்டி. உச்சிகன் நகைத்து “அவை இங்கே வந்து நாங்கள் வீசும் பழைய காய்கறிகளை மட்டுமே உண்கின்றன” என்றான். பீமன் அவர்களை நோக்கி “நான் வருகிறேன்…” என்றான். “ஆம், உண்டபின் தாசியைத்தானே பார்க்கவேண்டும்?” என்றான் ஒரு கிழவன். அவர்கள் நகைத்துக்கொண்டு இயல்பாக விடைகொடுத்தனர்.
மீண்டும் சிறுபாதையை அடைந்தபோது பீமன் “நான் நீங்கள் சமைக்கும்போது மீண்டும் வருகிறேன் உச்சிகரே” என்றான். “இளவரசே, நீங்கள் எங்களை உளவறிய வந்தீர்களா?” என்றான் உச்சிகன். “உச்சிகரே நான் உங்களில் ஒருவன். என்னை என் அன்னை அரண்மனையில் பெற்றாள் என்றால் அது என் பிழை அல்ல. என் தமையனுக்கும் குலத்துக்கும் செய்யவேண்டிய கடன் என்பதனாலேயே அரண்மனையில் வாழ்கிறேன். பிறப்பில் இருந்து துறவு வழியாக அன்றி எவரும் தப்ப முடியாது….நான் உங்களை என் தோள்தோழராகவே எண்ணுகிறேன்” என்றான் . உச்சிகன் “என் நல்லூழ்” என்றான். பீமன் அவன் தோள்களைப்பற்றி தன்னுடன் அணைத்துக்கொண்டு “நம்புங்கள்” என்றான்.
அவன் தொட்டதுமே உச்சிகன் அழத்தொடங்கினான். “நான் ஏழை… எனக்கு யாருமே இல்லை… என் அன்னை ஒரு பரத்தை. ஆகவே…” என்று விக்கினான். “நான் உம்முடன் இருப்பேன்” என்றான் பீமன். “எனக்கு அடியை மட்டும்தான் அச்சம்… என்னை அனைவருமே அடிக்கிறார்கள்” என்றான் உச்சிகன். “இனிமேல் அடிக்கமாட்டார்கள்…” என்றான் பீமன். உச்சிகன் பீமன் அவனைத் தொட்டதுமே அதுவரை இருந்த அத்தனை அக விலக்கத்தையும் இழந்து பீமன் உடலுடன் ஒட்டிக்கொண்டான். “உம் உடம்பு யானை உடம்பு…” என்றான்.
“என்னை விருகோதரன் என்று அழையும்” என்றான் பீமன். “விருகோதரே, எனக்கு ஓர் ஐயம்… இதையெல்லாம் எப்படி செரிக்கிறீர்?” பீமன் “மிக எளிது… அணிவகுப்பில் முன்னால் செல்லும் யானை நின்றுவிடாமலிருக்க மிகச்சிறந்த வழி பின்னால் மேலும் யானைகளை அனுப்புவதே…” என்றான். உச்சிகன் உரக்க நகைத்து “ஆம்…” என்று சொல்லி மீண்டும் நகைத்தான். “என் இளையோனும் அங்கே அதைத்தான் செய்கிறான். புதியபெண்ணைக்கொண்டு பழைய பெண்ணை மறக்கிறான்” என்றான். “ஆம், இங்கே வருபவர்கள் அனைவருமே பெண்களை வெறுப்பவர்கள்தான்… அதை நான் அறிவேன்” என்றான் உச்சிகன். “ஏன்?” என்றான் பீமன். “பெண்ணை விரும்புபவர்கள் என்றால் வீட்டில் இருக்கும் பெண்ணை விரும்பவேண்டியதுதானே?”
“அதோ அதுதான் அவள் வீடு. சற்று முதிர்ந்த கணிகை அவள். தடித்தவள். அவளை இளவரசர் விரும்புவார் என்று நான் எண்ணினேன்” என்றான் உச்சிகன். “ஏன்?” என்றான் பீமன். “ஏனென்றால் அவர் இளையவர்…” என்றபின் “செல்லுங்கள். நீர் என்னை அணைத்துக்கொண்டு நடப்பதை அத்தனை பேரும் பார்க்கிறார்கள். நீர் சென்றதும் நான் இவர்களிடமெல்லாம் தண்டல் செய்யலாமென்றுகூடத் தோன்றுகிறது” என்றான். பீமன் அவன் தோளில் அடித்து “மீண்டும் சந்திப்போம்” என்றபின் முன்னால் சென்று அந்த வீட்டின் வாயிலை அடைந்தான்.
அவன் வருவதை முன்னரே பார்த்திருந்த சபரை வாயிலில் நின்றிருந்தாள். விரைவாக உடைகளை அள்ளி அணிந்திருந்தாள். கூந்தலைச் சுழற்றி பின்னால் கட்டி உடலைக் குறுக்கி கைகூப்பி நின்றிருந்தாள். அவன் அருகே சென்றதும் அவள் மன்றாடும் குரலில் “நான் இளவரசரிடம் சொன்னேன்… அவர்தான்… என்னை மன்னிக்கவேண்டும். நான்…” என்று பேசத்தொடங்கினாள். பீமன் உள்ளே சென்று அறையின் அரையிருளில் பழைய ஈச்சையோலைப்பாயில் படுத்திருந்த அர்ஜுனனை நோக்கி ஒரு கணம் நின்றபின் அருகே சென்று குனிந்து அவன் தோளைத் தொட்டு “பார்த்தா” என்றான்.
அர்ஜுனன் திகைத்து எழுந்து சிலகணங்கள் விழித்தபின் வாயைத் துடைத்துக்கொண்டு “மூத்தவரே” என்றான். உடனே தன் உடையை துழாவி எடுத்து அணிந்துகொண்டு “தாங்கள் இங்கே..” என்றான். “உன்னை அழைத்துச்செல்லத்தான்…” என்றான் பீமன். “என்னையா… நான்…” என்றபின் அர்ஜுனன் தன்னை தொகுத்துக்கொண்டு எழுந்து விரைவாக ஆடைகளை சரிசெய்துகொண்டான். பீமன் வெளியே செல்ல அவனும் பின்னால் வந்தான். “அந்தப்பெண்ணுக்குரியதை கொடுத்துவிட்டாயா?” என்றான் பீமன். “அதெல்லாம் நேற்றே எடுத்துக்கொண்டுவிட்டாள்” என்றான் அர்ஜுனன்.
தெருவிற்குச் சென்றதும் அர்ஜுனன் “நான் புரவியில் வந்தேன்… நீங்கள்?” என்றான். “இங்கே புரவி வருமா என்றே தெரியவில்லை… நடந்து வந்தேன்” என்றான் பீமன். ஆனால் அதற்குள் தெருவின் மறு எல்லையில் பீமனின் ரதமோட்டி நின்றிருப்பதை அர்ஜுனன் கண்டான். “உங்கள் சாரதி பின்னாலேயே வந்திருக்கிறான்” என்றான் அர்ஜுனன். பீமன் “ஆம், அரசபதவி அல்லவா? சிதைவரைக்கும் வரும்” என்றபின் “நீ இங்குதான் இருக்கிறாய் என்று அறிவேன்” என்றான்.
அர்ஜுனன் “இதற்குள் மூழ்கிவிடலாகாது என்று எனக்கு நானே அணை போட்டுக்கொள்வேன் மூத்தவரே. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒன்று என்னை இங்கே கொண்டுவந்து சேர்க்கிறது” என்றான். பீமன் ஒன்றும் சொல்லவில்லை. “பெருக்கில் செல்பவன் இறுதியாகப் பற்றிக்கொண்ட வேர் போலிருந்தார் நம் மூத்தவர் எனக்கு. அந்த வேர் நேற்று பெயர்ந்து வந்துவிட்டது. இனி வெள்ளம் முடிவுசெய்யட்டும் என் திசையை” என்றான் அர்ஜுனன். பீமன் ஏதேனும் சொல்வான் என அவன் எண்ணினான். மீண்டும் “அன்னை பின்னர் ஆசிரியர் என ஒவ்வொரு தெய்வமாக கல்லாகிக்கொண்டிருக்கின்றன மூத்தவரே” என்றான்.
பீமன் நகைத்து “அதனால்தான் கல்லையே தெய்வமாக வணங்கச் சொல்கிறார்களோ” என்றான். அர்ஜுனன் “இதில் என்ன நகைக்க இருக்கிறது?” என்று மூச்சிரைக்கச் சொன்னான். “நேற்று என் மூத்தவர் என் முன் உடைந்து நொறுங்கினார்” என்றான். தலையை அசைத்து “அவர் இன்னமும் என் மூத்தவரே. அவருக்காக உயிர்துறப்பதும் என் கடனே. ஆனால் அவர் இனி என் வழிகாட்டி அல்ல. என் தெய்வம் அல்ல” என்றான். பீமன் புன்னகை செய்து “இளையவனே, நீ மிக எளிதில் தெய்வங்களை உருவாக்கிக் கொள்கிறாய். மிக எளிதில் அவற்றை உடையவும் விடுகிறாய்” என்றான்.
“நீங்களும் அன்று அரசரின் அவையில் நம் மூத்தவருக்காக உங்களை முன்வைத்தீர்கள்…” என்று அர்ஜுனன் சினத்துடன் சொன்னான். “ஆம்….அது அவரை தெய்வமென்று எண்ணி அல்ல. எளிய மனிதர் அவர். எல்லா மனிதர்களையும் போல தன்னைத்தானே நிறுவிக்கொள்ளவும் பிறர் முன் நிலைகொள்ளவும் ஏதோ ஒன்றை அன்றாடம் பயில்கிறார். வில்லை கையாளமுடியாதவர் என்பதனால் சொல்லை எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரை நன்கறிந்த பின்னரே அவரை என் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டேன்” பீமன் சொன்னான்.
“அவரிடம் நான் எதிர்பார்ப்பது மெய்ஞானத்தை அல்ல. உலக ஞானத்தையும் அல்ல. அதெல்லாம் அவரைவிடவும் எனக்குத்தெரியும். அந்த ஞானத்தால்தான் அவரை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவரிடம் நான் காண்பது என் மேல் அவர் கொண்டிருக்கும் அன்பை. என்னையும் தானாகவே அவர் நினைக்கிறார் என்பதை உறுதியாக அறிவேன். அந்த அன்பு மட்டுமே அவர். வேறேதுமில்லை. அது எனக்குப் போதுமானது…” என்றான் பீமன்.
அர்ஜுனன் உரக்க “அந்த எளிமையான அன்பல்ல நான் தேடுவது. நான் தேடுவது வேறு” என்றான். “நீ தேடுவதற்கு அவரா பொறுப்பு?” என்றான் பீமன். “உன் எதிர்பார்ப்புகளை அந்த எளிய மனிதர் மேல் ஏற்றிவைத்து பின் அவரை வெறுப்பது என்ன நியாயம்?” அர்ஜுனன் “வெறுக்கவில்லை” என்றான். “ஏமாற்றம் மெல்ல வெறுப்பாகத் திரியும்… அதுவே இயல்பான பாதை…” என்றான் பீமன். “ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “ஏமாறும்போது நம் ஆணவமல்லவா அடிபடுகிறது? நம் நம்பிக்கை பிழையென்றல்லவா அது சொல்கிறது? அந்தப்பழியை முழுக்க ஏமாற்றமளித்தவர் மேல் ஏற்றிக்கொண்டால் நாம் தப்பிவிடலாமே?” என்றான் பீமன் புன்னகையுடன்.
ரதத்தில் ஏறிக்கொண்டே அர்ஜுனன் “மூத்தவரே, நீங்கள் நச்சு நிறைந்த நகைப்பால் அகத்தை நிறைத்து வைத்திருக்கிறீர்கள்” என்றான். “ஆம்…” என்றான் பீமன். “நம் பாட்டனார் விசித்திரவீரியர் அப்படித்தான் இருந்தார் என்று முதுசூதர் பூராடர் சொன்னார். அவரிடமிருந்து நான் பெற்றுக்கொண்டதாக இருக்கலாம் இது… இது என் கவசம்” என்றான் பீமன். “அந்தக் கசப்பால் உள்ளூர வைரம் பாய்ந்திருக்கிறீர்கள் மூத்தவரே. மூத்த எட்டிமரம்போன்றவர் நீங்கள். நீரிலோ நெருப்பிலோ அழியமாட்டீர்கள். சிதலரிக்க மாட்டீர்கள்…” என்றான் அர்ஜுனன். “நான் அப்படி அல்ல. எனக்குள் திசைகாட்டி முள்ளின் தவிப்பு ஓயவே இல்லை. கைவிடப்பட்டவனாகவே எப்போதும் உணர்கிறேன்.”
ஓவியம்: ஷண்முகவேல்
“நேற்று நான் செய்திருக்கவேண்டியதென்ன என்று எண்ணி எண்ணி இரவைக் கழித்தேன்” என்றான் அர்ஜுனன். “நான் சென்று துரியோதனரைப் பணிந்து அவரது வஞ்சினத்தை என் குலத்தின் சொல்லாக ஏற்றுக்கொண்டிருப்பதாக சொல்லியிருக்கவேண்டும். என் வில்லை அவர்முன் வைத்திருக்கவேண்டும். ஆனால் என்னால் மூத்தவரைக் கடந்து எதையும் செய்யமுடியாது. மூத்தவரிடம் நாம் விவாதிக்கவே முடியாது. கௌரவர்களின் கண்ணீர் என் நெஞ்சில் கற்சிலைமுகங்கள் போல அப்படியே பதிந்துவிட்டது மூத்தவரே. நாமறிவோம் துரியோதனரின் ஆணவம் என்ன என்று. நேற்று நம் மூத்தவர் முன் தலைகுனிந்து நின்றது அவரது இறப்பின் கணம்… அவர் என்னைக் கடந்துசென்றபோது அவர் உடலெங்கும் ஓடிய துடிப்பை நான் உணர்ந்தேன்.”
“அவன் என்னைக் கொல்ல முயன்றவன்” என்றான் பீமன். “ஆம், மறுகணமே அவ்வெண்ணம் வந்தது. என்னதான் இருந்தாலும் அவர்கள் நம் எதிரிகள். அவர்கள் அவ்வெண்ணத்தை ஒருபோதும் மறந்ததில்லை. நான் செய்வதற்கு ஏதுமில்லை. உடைவாளை எடுத்து கழுத்தை வெட்டிக்கொள்ளவேண்டும். அதைச்செய்வதற்கு மாற்றாக இங்கே வந்தேன்” என்றான் அர்ஜுனன். ரதம் தெற்குப்பெருஞ்சாலையை அடைந்தது. பீமன் “நான் உன்னை கூர்ந்து நோக்கிக் கொண்டே இருக்கிறேன் இளையவனே. நீ எளிதில் நிலைகொள்ளப்போவதில்லை என்றே தோன்றுகிறது” என்றான். “ஆனால் அது நல்லதுதான். எளிய விடைகளில் நீ அமைய மாட்டாய். மேலும் மேலுமென வினவி முழுமுதல் விடையைச் சென்று தொடுவாய். யார் கண்டது, நீ ஒரு யோகியாக ஆகக்கூடும். இச்சிறகடிப்பெல்லாம் ஞானத்தின் கிளைநுனியில் சென்று அமர்வதற்காகத்தானோ என்னவோ!”
அர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. “நீ தேடுவது எதைத் தெரியுமா?” என்றான் பீமன். “ஒரு ஞானாசிரியனை. முழுமையானவனை. முதல் ஞானாசிரியன் தந்தை, அதை நீ அடையவில்லை. தாய் உனக்கு எதையும் அளிக்கவில்லை. ஆசிரியனைக் கண்டுகொண்டாய். அவரோ உன் வினாக்களுக்கு மிக அப்பால் இருக்கும் எளிய மனிதர். பின் உடன்பிறந்தவனைக் கண்டுகொண்டாய். அவனையும் இதோ இழந்திருக்கிறாய்.” உரக்க நகைத்து “மாதா பிதா குரு வரிசையில் இனி உனக்கு தெய்வம்தான் குருவாக வந்தாகவேண்டும்.”
அர்ஜுனன் நகைத்து “ஏன் தோழனாக வரலாமே? சேவகனாக வரலாமே?” என்றான். “எதிரியாகக்கூட வரலாம்” என்றான் பீமனும் நகைத்தபடி. “ஆனால் எவராக இருந்தாலும் நீ எளிதில் கண்டடையப்போவதில்லை. நீ தேடுபவன் பேரன்புகொண்டவனாக இருக்கவேண்டும். உன்னுள் உள்ள தந்தையையும் தாயையும் இழந்த மைந்தனுக்கு அவன் தாயும் தந்தையுமாக வேண்டும். உன்னில் எழுந்த மாவீரன் கண்டு மலைக்கும் நிகரற்ற வீரனாகவும் அவன் இருக்கவேண்டும். உன்னை ஆளும் இந்திரனுக்குரிய விளையாட்டுத் தோழனாகவும் அமையவேண்டும். அனைத்துக்கும் அப்பால் நீ எழுப்பும் அத்தனை வினாக்களுக்கும் விளக்கம் அளிக்கும் பேரறிஞனாகவும் ஞானியாகவும் அவன் அமையவேண்டும்…”
பீமன் தொடையில் அடித்து நகைத்து “இதையெல்லாம் பிரம்மம் கேட்டுக்கொண்டிருந்தால் உனக்கு அது அனுப்பும் குரு எப்படி இருப்பார் தெரியுமா? சலவைக்காரியின் துணிமூட்டையைத் திருடி ஆடைகளை அணிந்துகொண்ட பித்தன் போலிருப்பார்.” அந்த குழந்தைத்தனமான கற்பனை அர்ஜுனனை வெடித்துச்சிரிக்கச் செய்தது. “ஒவ்வொரு தேவைக்கும் ஒன்றாக பெருங்கூட்டமாக ஆசிரியர்கள் வந்துவிட்டால் என்ன செய்வதென்று யோசிக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “அவர்களை ஒருவரோடு ஒருவர் போரிடச் சொல்லவேண்டியதுதான்” என்றான் பீமன். “போரிட்டால் சரி. புணர்ந்து மேலும் குருநாதர்களை உருவாக்கிவிட்டால்?” என்றான் அர்ஜுனன். பீமன் ரதத்தின் தூணில் அறைந்து நகைத்தான்.
“எதற்காக என்னை அழைக்க வந்தீர்கள்?” என்றான் அர்ஜுனன். “மூத்தவர் தேடினார்… இன்று யாதவர்களிடமிருந்து ஒரு தூது வருகிறது” என்றான் பீமன். “முடிவுதான் எடுக்கப்பட்டாயிற்றே?” என்றான் அர்ஜுனன். “இது அரசியல் தூது அல்ல. வசுதேவரின் மைந்தன் கிருஷ்ணன் அவனே நேரில் வருகிறான். தன் அத்தையைப் பார்க்க…” என்றான் பீமன். “உதவி கோரத்தான் என்று தெளிவு. நேரில் உதவிகோரினால் அன்னை அதை மறுக்கமுடியாது. என்னசெய்யலாம் என்று மூத்தவர் தவிக்கிறார்” என்றான். அர்ஜுனன் “அவர் எப்போதுமே தவிக்கத்தானே செய்கிறார். இறுதி முடிவை அன்னை எடுப்பார். வேறென்ன?” என்றான்.