பிரயாகை - 29

பகுதி ஆறு : கரும்புனல் கங்கை – 3

அந்தப்புரத்தை ஒட்டி அமைந்திருந்த சிறிய கூத்தரங்கில் சூதப்பெண்கள் தங்கள் இசைக்கருவிகளுடன் காத்திருந்தனர். முழவின் தோற்பரப்பின் மீது ஒரு விரல் மெல்ல மீட்ட அது ம்ம் என்றது. தட் தட் என்று கிணை ஒலித்தது. நாண் இறுக்கப்பட்ட மகரயாழை யாரோ தூக்கி வைக்க அத்தனை நரம்புகளும் சேர்ந்து தேனீக்கூட்டம் மலர்விட்டு எழுந்ததுபோல ஒலியெழுப்பின.

பிருஷதி திரௌபதியின் கையைப்பற்றிக்கொண்டு மன எழுச்சியுடன் “எனக்கு இசையை விட இந்த ஓசைகள்தான் மேலும் உவப்பானவை கிருஷ்ணை… இவை அளிக்கும் எதிர்பார்ப்பு இசையில் இல்லை. இசை கரைந்து அழிந்து இல்லாமலாகிறது. இந்த ஒலிகளோ வளரப்போகும் விதைகள் போலிருக்கின்றன” என்றாள். திரௌபதி புன்னகைத்தாள். அதற்கு ‘நீ மிகவும் கற்பனையில் உலவுகிறாய்’ என்று பொருள் என்று அவளுக்குப்பட்டது. “ஆம். இதெல்லாம் வெறும் கற்பனைதான். ஆனால் எனக்கு கற்பனைகள்தான் இன்றுவரை வாழ்க்கையாக இருந்திருக்கின்றன. நான் அறிந்த வெளியுலகம் இங்கே வரும் சூதர்களும் விறலியரும் சொல்லும் கதைகள் வழியாக கற்பனை செய்துகொண்டதுதானே?” என்றாள்.

அதற்கும் திரௌபதி புன்னகைத்தாள். அதிலிருந்த பரிவால் நிறைவடைந்த பிருஷதி “கற்பனை செய்வதில் ஒன்றும் பிழையில்லை. இங்கே வந்த வைஷ்ணவி ஒருத்தி சொன்னாள். நாம் புறவுலகமாக அறியும் அனைத்தும் நாம் செய்துகொள்ளும் கற்பனையே என்று…” என்றாள். திரௌபதி அதற்கும் புன்னகையையே விடையாக அளித்தாள். “அனைத்துக்கும் புன்னகைக்கிறாய்… நான் உன்னிடம் பேசியதைவிட உன் புன்னகையிடம் பேசியதே மிகுதி” என்று சொல்லிக்கொண்டே பிருஷதி அவளைத் தொடர்ந்து வந்தாள்.

அவர்கள் கூத்தரங்கில் நுழைந்ததும் அங்கிருந்த விறலியர் அனைவரும் எழுந்து வணங்கினர். சேடியர் அவர்கள் வருவதற்காக காத்து நின்றிருந்தனர். வண்ணப்பாயில் திரௌபதியும் பிருஷதியும் அமர்ந்ததும் சேடியரும் தாதியரும் தங்கள் இடங்களில் அமர்ந்துகொண்டனர். அவர்கள் மெல்லிய குரலில் பேசிய ஒலி கூத்தரங்கின் மரச்சாளரங்கள் வழியாக வந்த காற்றில் கலைந்து சுழன்றது. ஒலியை புகைச்சுருள்போல பார்க்கமுடிகிறது என்று பிருஷதி எண்ணிக்கொண்டாள்.

ஓரு முதியதாதி செருமிக்கொண்டாள். ஒருத்தியின் மேலாடைமேல் இன்னொருத்தி அமர அவள் மெல்லியகுரலில் அவளை எழுப்பி ஆடையை இழுத்துக்கொண்டாள். வெள்ளிநகைகளும் சங்குவளைகளும் ஒலித்தன. முன்னால் அமர்ந்திருந்த நடுவயது தாதி தன் முலைகள்மேல் அமைந்திருந்த பெரிய சரப்பொளிமாலையை சரிசெய்துகொள்ளும் ஓசை தனியாகக் கேட்டது. மெல்லமெல்ல உடல்கள் அசைவழிந்து ஓசைகள் காற்றில் கரைந்து மறைந்து கூத்தரங்கு இசைக்காக ஒருங்கியது.

திரௌபதியை ஓரக்கண்ணால் நோக்கியபின் பிருஷதி தாதிக்கு கண்காட்ட அவள் விறலியரிடம் ஆரம்பிக்கலாமென்று கைகாட்டினாள். அவர்கள் முன்னரே அமரும் இடங்களை வகுத்து அங்கே முழவுகளையும் யாழ்களையும் அமைத்திருந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் இடங்களில் அமர்ந்து ஒருவருக்கொருவர் விழிகளாலேயே பேசினர். முழவு வாசிப்பவள் அதன் தோல்பரப்பின்மீது மெல்ல சுட்டுவிரலால் தட்டிப்பார்த்தாள். முதல் யாழினி மகரயாழை அங்குலம் கணக்கிட்டு சற்றே தள்ளி வைத்தாள்.

கதை சொல்லும் இளையவிறலி பெரியகொண்டையை இடப்பக்கமாகச் சரித்துக் கட்டி அதில் முல்லைச்சரம் சூடியிருந்தாள். மாநிறமான அழகிய கன்னிமுலைகள் மேல் வேப்பிலைவடிவ பொளிகள் அடுக்கிய சரம் வளைந்து எழுந்து வயிற்றை நோக்கித் தொங்கியது. மஞ்சள்பட்டாடைக்குமேல் இளஞ்சிவப்புநிறமான கச்சையைக் கட்டியிருந்தாள். அவளுக்குப்பின்னால் வலப்பக்கம் அவள் அன்னை தோளில் சரிந்த கொண்டையுடன் முலைகள் மேல் செந்நிறமேலாடை அணிந்து கையில் குறுமுழவுடன் அமர்ந்திருக்க இடப்பக்கம் தண்ணுமையுடன் தடித்த விறலி அமர்ந்திருந்தாள். அவளுடைய கனத்த கரிய முலைகள் மேல் மத்ததகத்தில் அணிந்த முகபடாம் போல வெள்ளிச்சரப்பொளி மாலை வளைந்து இறங்கியிருந்தது.

வெள்ளியாலான மணிக்கோலை வலக்கையில் எடுத்து நெற்றிமேல் வைத்து கண்மூடி வணங்கி “வெள்ளைக்கலையுடுத்தோள் தாள் போற்றி! அவள் உள்ளம் கவர்ந்தோன் எண்விழி போற்றி! வாரணமுகத்தோன் எழுதுகோல் போற்றி! சொல்கடந்த சொல்லன் கிருஷ்ணதுவைபாயனன் நா போற்றி போற்றி!” என்று வெண்கலமணிக்குரலில் பாடினாள். அக்கணம் வரை இருந்த கூத்தரங்கு மறைந்து முற்றிலும் இன்னொன்று உருவாகிவந்திருப்பதை பிருஷதி வியப்புடன் நோக்கினாள். சொல் ஒரு இடத்தை ஒளிகொள்ளச் செய்ய முடியும். பூக்களைப்போல.

“அன்னை கங்கையின் ஆயிரம் கரங்கள் போற்றி! அவள் மடியிலிட்டு தாலாட்டி முலையூட்டும் பாஞ்சால மண் போற்றி! அதிலெழுந்த விற்கொடி போற்றி! குலம்பேணி நெறிபேணி நிலம்பேணும் துருபதன் கோல் போற்றி! அவர் நெஞ்சம் அமைந்த பிருஷதியின் கொடைபோற்றி!” என்று சொல்லி கோல் தாழ்த்தி ஒருகணம் விழிவிரித்து அமர்ந்திருந்தபின் திரும்பி திரௌபதியை நோக்கி “மண்ணிலெழுந்த விண்பெருக்கே போற்றி! துர்க்கையும் சாரதையுமாக எழுந்தருளிய கருணையே போற்றி! பாரதவர்ஷத்தின் பேரரசியே உன் பாதங்கள் போற்றி!” என்றாள்.

குளிர்ந்த நீரை அள்ளி மேலே கொட்டியதுபோல பிருஷதிக்கு மெய்சிலிர்ப்பெழுந்தது. ஆனால் திரௌபதி கருவறையில் அமர்ந்த தேவி போல விழியும் அசையாமல் அமர்ந்திருந்தாள். விறலி தன் மணிக்கோலை இடதுகையால் தட்டி தாளமிட்டபடி “இன்று கார்த்திகை மாதம் வளர்பிறை ஏழாம் நாள். இளநிலவு அருள மலைமரங்கள் கனவுகாணும் கதை ஒன்றை சொல்ல ஆணைகொண்டுள்ளேன். என் நா வாழ்க! அதில் குடிகொள்ளும் என் மூதாதையரின் சொல் வாழ்க! அச்சொற்தேனீக்கள் தேடிச்சேர்த்த அமுதம் வாழ்க! ஓம் அவ்வாறே ஆகுக!” என்று பாடினாள்.

“அழியாப்புகழ்கொண்டது சந்திரவம்சம் என்று ஆன்றோர் அறிவர். அதன் கதை இது. அறிதலுக்கு அப்பால் குடிகொள்ளும் பிரம்மத்தில் இருந்து அறிவின் முதல் விதையென பிரம்மன் தோன்றினார். அவரிடமிருந்து மரீசி தட்சன் என்னும் இரு பிரஜாபதிகள் தோன்றினர். மரீசியின் மைந்தர் கசியபர். தட்சனின் மகளாகிய அதிதியை அவர் மணந்து ஆதித்யர்களை பெற்றார். ஆதித்யர்களில் ஒருவனாகிய சூரியனின் மைந்தன் மனு. அவன் மகள் இளை. சந்திரனின் மைந்தன் புதனுக்கு இளையில் பிறந்த மைந்தனே புரூரவஸ். அவனே சந்திரகுலத்தின் முதல் அரசன்.

“புரூரவஸ் பெற்ற மைந்தன் ஆயுஷ். ஆயுஷ் நகுஷனைப் பெற்றான். நகுஷன் யயாதியைப் பெற்றான். யயாதி சந்திரகுலத்தின் மாமன்னர். அவரது சொல்லும் குருதியும் முளைத்துப்பரவிய வயல்வெளியே பாரதவர்ஷம் என்கின்றனர் ஞானியராகிய சூதர்” விறலி சொன்னாள். குலவரிசைகளைச் சொல்வதற்கு அவர்களுக்கென ஒரு தாளமும் பண்ணும் இருந்தது. கேட்டுக்கேட்டுப்பழகிய வரிசை என்பதனால் அவள் சொல்லும்போதே அவையினர் உதடுகளும் அப்பெயர்களைச்சொல்லிக்கொண்டிருந்தன.

“அவையீரே, யயாதியின் கொடிவழி வந்த சந்திரகுலத்து மன்னன் விகுஞ்சனன். அவன் யதுகுலத்து அரசியாகிய சுந்தரையை மணந்தான். அவள் அஜமீடன் என்னும் அரசனைப் பெற்றாள். அஜமீடன் கைகேயி நாகை காந்தாரி விமலை ரிக்ஷை என்னும் ஐந்து மனைவியரை அரசியராக்கினான். அவன் மைந்தன் ருக்‌ஷன் சம்வரணன் என்னும் மாவீரனைப் பெற்றான். அவன் பெயரை வணங்கட்டும் பாரதவர்ஷம்! அவன் வீரத்தால் கங்கை உயிராகியது. மண் அன்னமாகியது. அவன் பெயர் கேட்டால் இன்றும் கங்கையில் அலைகள் எழுந்தமைகின்றன. என்றும் அவ்வாறே ஆகும்!”

“வெல்லும் வில்திறன் கொண்டிருந்த சம்வரணன் வேட்டையாடுவதில் பெருவிருப்புடன் இருந்தான். மருப்புயர்ந்த யானைகளையும் அறைகூவும் சிம்மங்களையும் காற்றில் தாவும் மான்களையும் அவன் அம்புகள் பொருட்டாக எண்ணவில்லை. வானில் சுழலும் பறவைகளையே அவன் வீழ்த்தினான். பின்னர் அவையும் எளிய இலக்குகள் என்று கண்டு சிறு பூச்சிகளை அம்புகளால் அடித்தான். தேனீக்கள் பறக்கும் ஒலியைக்கொண்டே அவற்றை அம்பால் அடித்தான். ஒற்றை அம்பில் பலதேனீக்களை கோர்த்து எடுக்கும் கலை அறிந்தவன் என்பதனால் அவனை மதுசரன் என்று அழைத்தனர்.

மதூகம் என்று பெயர்கொண்ட அவன் வில்லைப்பற்றி எண்ணியதுமே பகைவர் அஞ்சினர். எனவே அவன் ஆண்ட அஸ்தினபுரிக்கு எதிரிகளே இருக்கவில்லை. அச்சமில்லாத இடத்தில் யானைக்கூட்டத்தருகே மான்கள் மேயவருவதுபோல வணிகர்கள் கூடுகிறார்கள். ஆகவே அஸ்தினபுரியின் களஞ்சியத்தில் பொன்விளைந்தது. அள்ளிக்கொடுக்கும் கரங்கள் கொண்டவனாதலால் அவன் அரசில் அறம் விளைந்தது. அரசன் அறச்செல்வன் என்பதனால் அங்கே கல்வியும் கலைகளும் விளைந்தன. இந்திரனின் வில் அஸ்தினபுரியின் மீது பருவம் தவறாமல் வைக்கப்பட்டது. அங்குள்ள நிமித்திகர் மழையைக்கொண்டு நாளை கணக்கிட்டனர்.

இலைநுனி சொட்டும் நீர் வேர்ப்படர்ப்பு மேல் விழும் ஹரிதமயம் என்னும் பசுங்காடு ஒன்றில் அம்புகளால் வானை அளந்தபடி கால்போக்கில் அலைந்துகொண்டிருந்த சம்வரணன் ஆழ்காட்டில் எவரும் செல்லாத தொலைவுக்குச் சென்றான். வழிதவறி பின்னிப்பின்னி மாயம்காட்டிய கானகக் கால்தடங்களில் அலைந்தான். நெடுந்தொலைவு பயணம் செய்து களைத்துச் சோர்ந்த அவன் குதிரை விழுந்து இறந்தது. கால்நடையாக காட்டில் அலைந்த அவன் அறியாத வழிகளில் நெடுந்தூரம் சென்றான்.

ஒரு வேங்கை மரத்தடியில் வில் தாழ்த்தி வைத்து உடல் சாய்த்து ஓய்வெடுக்கையில் பசுஞ்சோலைக்கு அப்பால் தொலைதூரத்தில் மரங்கள் நடுவே நெருப்பு எழுந்து ஒளிர்வதைக் கண்டான். மரங்களின் நிழல்கள் மரங்களின் மேல் நடனமிட்டன. அதன்பின்னர்தான் வனநெருப்பெழுந்த பின்னரும் பறவைகள் கலைந்து வானிலெழவில்லை என்பதை அறிந்தான். கீரிகளும் பாம்புகளும் எலிகளும் புதர்களினூடாக அம்புகளென ஊடுருவி ஓடவில்லை. மான்களும் புலிகளும் விலகிப்பாயவில்லை. அன்னையானைகள் மகவுகளுக்கு எச்சரிக்கை அளிக்கவில்லை. என்ன நெருப்பு அது என வியந்து அவன் அதை நோக்கிச் சென்றான்.

அணுகியதும் அது நெருப்பல்ல என்று அறிந்தான். புதர்களுக்கப்பால் ஒரு செவ்வொளி நின்று அலைத்துக்கொண்டிருந்தது. இலைத்தழைப்பை விலக்கி ஊடுருவிச்சென்றபோது அங்கே ஒரு குளம் ஒளிநிறைந்து கிடப்பதைக் கண்டு வியந்தான். நீரலைகள் தழல்களாக நெளிந்தன. கரைவிளிம்புகளின் சேற்றையும் நாணலையும் எரித்து அழித்துவிடுபவை போல நாநீட்டின. எச்சரிக்கையுடன் காலெடுத்துவைத்துச் சென்று அந்த நீர்தழலை அடைந்து குனிந்து கைகளால் தொட்டான். நீரே என்று உறுதிகொண்டபின் அள்ளி முகத்தில் விட்டான்.

ஐயத்துடன் நிமிர்ந்து வானை நோக்கினான். கார்த்திகை மாதம் ஏழாம் வளர்நிலவு நாள். முகில் மூடியிருந்தமையால் சூரியனை காணமுடியவில்லை. அப்படியென்றால் இவ்வொளி எங்கிருந்து வருகிறதென்று எண்ணி அவன் சுற்றுமுற்றும் நோக்கியபோது நீரைப்பிளந்து எழுந்து கரைநோக்கிச் சென்ற ஒரு செந்நிறப்பேரழகியைக் கண்டான். அவள் உடல் தழலாக இருந்தது. கூந்தல் அதன் புகையென நெளிந்தது. செந்தாமரை இதழிலென நீர்த்துளிகள் ஆடையற்ற அவள் உடலில் ஒளியுடன் உருண்டு வழிந்தன.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

அவள் உடலொளியால் குளம் ஒளிகொண்டிருக்கிறதென்று அவன் அறிந்தான். அங்கே அசைவற்ற கற்பாறையென நின்று அவள் அழகை நோக்கவேண்டுமென்ற ஆசையும் அவளை அழைத்து தன்னை அறிவிக்கவேண்டுமென்ற ஆசையும் ஒரேசமயம் எழுவதை உணர்ந்தான். இரு தட்டுகள் நடுவே துலாமுள் என அவன் உடல் மெல்ல அசைந்தது. அவள் அதை விழிமுனையால் கண்டு திரும்பி நோக்கினாள். அவன் இதயம் அதிர பின்னகர்ந்த பின்னர்தான் உடல் நகரவில்லை என்று அறிந்தான். இதோ அஞ்சிய மான் என அவள் புதருக்குள் மறையப்போகிறாள் என்று எண்ணி அவன் கையெடுத்தான். ஆனால் அவள் நாணமென்று ஒன்றிலாதவளாய் அவனை புருவம் தூக்கி நோக்கினாள்.

பொன்னிறத்தில் விழிகளிருக்கமுடியும் என்று அவன் கதைகளிலும் அறிந்ததில்லை. நீலச்சிறகெழுந்த இரு பொன்வண்டுகள். செங்கனல்துண்டுகளென உதடுகள் மெல்ல வளைந்து ஏதோ வினவின. பின் அவள் அவனை நோக்கித் திரும்பி இளங்குதிரை என நடந்து வந்தாள். எழுபத்திரண்டு சுழிகளும் பொருந்தி ஐந்து அழகுகளும் அமைந்த புரவி இருபக்கமும் முற்றிலும் சமநிலைகொண்டிருக்கும் என்றும் இழுத்துக்கட்டிய கயிற்றின் மேல் அதனால் நிலைபிறழாது ஓடமுடியும் என்றும் அவன் அறிந்திருந்தான். அதை அப்போது நம்பினான்.

பெண்ணுடலைக் கட்டிப்போட்டிருக்கும் காணாச்சரடான நாணம் முற்றிலும் இல்லாதிருந்தமையால் அவள் உறுப்புகள் ஒவ்வொன்றும் முழுமை கொண்டிருந்தன. ஆடையை அமைக்க எப்போதும் கருத்துகொண்டிருக்கும் பெண்கைகளையே அவன் அதுவரை கண்டிருந்தான். இயல்பாக வீசிச்சுழலும் கரங்கள் பெண்ணுக்கு சிறகுகளாக ஆகமுடியுமென்று அன்று அறிந்தான். அவளை மண்மீது மிதந்து வருபவள்போல ஆக்கின அவை.

மலர் சுமந்த பனித்துளிகள் போல முலைகள் ததும்பின. இரையை இறுக்கும் மலைப்பாம்பு போல அசைந்தது இடை. நடையின் அசைவில் இறுகி நெகிழ்ந்தன தொடைத்தசைகள். செம்பொற்தாலத்தில் ஏந்திய அகல்விளக்கின் சுடரென அல்குலின் செந்நிற மென்மயிர். அவள் அருகே வந்து உடலில் செம்பளிங்கில் விரிசல்கள் போல ஒட்டியிருந்த நனைந்த கூந்தலை நகத்தால் வருடி எடுத்து காதுக்குப்பின் சேர்த்தபடி சற்றே தலைசரித்து “யார் நீ?” என்றபின் பொன்னிறவிழிகளால் அவன் அணிந்திருந்த குண்டலங்களை நோக்கி “அரசனா?” என்றாள்.

நாணமில்லாத பெண்ணின் முழங்காலளவுக்கே ஆணின் உயரமென்று அன்று அவன் அறிந்தான். அவள் இடையில் கைவைத்து இடைவளைத்து நின்றபோது வலது தொடை சற்றே முன்னால் வந்தது. செந்நிறக் காம்புடன் வலது முலை சற்று கீழிறங்கியது. அவன் மூச்சுத்திணற ஏறிட்டு நோக்கி “ஆம்… நான்…” என்றான். “இந்தக்காட்டில் இவ்வேளையில் மானுடர் உலவலாகாது. விலகிச்செல்” என்றபின் திரும்பினாள். அவன் ஓரடி முன்னால் எடுத்து வைத்து “நீ யார்?” என்றான். அவள் கழுத்தைத்திருப்பி நோக்கினாள். அவள் உதடுகள் விரிந்து வெண்ணிற ஒளிகொண்ட பற்கள் தெரிந்தன. ஏளனத்துடன் சிரித்து “நிற்காதே… ஓடு” என்றாள்.

“பெண்ணே, ஓடும் குலத்தில் பிறந்தவனல்ல நான். சந்திரகுலத்தில் அஜமீடனின் மைந்தனாகப்பிறந்த என்பெயர் சம்வரணன். அஸ்தினபுரியின் அரசன். இப்புவியில் உள்ள அழகிய பெண்களை எல்லாம் அடையும் விருப்பு கொண்டவன். அரசர்களை எல்லாம் வெல்லும் ஆற்றலும் கொண்டவன்.” சலிப்புடன் அவள் இடை மெல்ல ஒசிய வலது முலையின் பக்கவாட்டு வளைவு மீது நீர்த்துளி ஒன்று வழிந்தது. கூந்தல் நுனி சொட்டிய நீர்த்துளிகள் இணைந்து முதுகின் ஓடைக்குள் வழிந்து பின்னழகின் இடுக்கில் நுழைந்தன. “அரசனே, என்னைக் கண்டபின்னும் அச்சமின்றி நின்றதனால் மட்டுமே நீ கருகி இறக்காமல் இங்கிருக்கிறாய். உயிரை பேணிக்கொள்… விலகிச்செல்!” என்றாள்.

“உன்னை மறந்து சென்றால் என் படுக்கையே அனலாகிவிடும்…” என்று சொல்லி சம்வரணன் அவளை நெருங்கினான். “நீ யாரென்று அறியாமல் நான் செல்ல முடியாது. எரிந்து சாம்பலாகி மறைந்தாலும் உன்னை மறப்பதும் இயலாது” என்றான். அவள் வெண்ணிறப் பற்கள் தெரிய சீறியதும் புன்னகை போலவே இருந்தது. அப்போது அந்தக் குளத்தில் புயல்பட்ட கனல்படுகை போல செந்நிற ஒளி பொங்கி எழுந்தது. அவள் அதில் உருகிவழியும் பொற்பதுமைபோல நின்றாள். ஆனால் காதலால் நிறைந்திருந்த சம்வரணன் சற்றும் தயக்கமின்றிச் சென்று அவள் இடக்கையை பற்றிக்கொண்டான்.

அவள் அவன் பிடியை உதறி அவனை அறைய வலக்கையைத் தூக்க அவன் அக்கையையும் பற்றிக்கொண்டு அவள் கண்களை நோக்கி “உன்னை அடைய விழைகிறேன். அதற்கு நான் என்னசெய்யவேண்டுமென்று சொல்” என்றான். “என்னை நீ அடையமுடியாது மூடா… நீ என் வெம்மையை தாளமாட்டாய்” என்றாள் அவள். அக்கணம் அவள் விழிகள் தீக்கங்குகளாக உடல் பழுக்கக்காய்ச்சிய உலோகம் போல ஆகியது. சம்வரணனின் கைகளின் தசை வெந்து வழிந்தது. ஆயினும் அவன் பிடியை விடவில்லை. “உன்னால் எரித்தழிக்கப்படுவேன் என்றால் அதையும் என் நல்லூழ் என்றே கொள்வேன்” என்றான்.

அவன் துணிவு அவளை குளிரச்செய்தது. கண்கள் மீண்டும் பூவரசமலர்களாக பொன்னிறம் கொண்டன. “நான் மானுடப்பெண் அல்ல. சூரியனின் மகள். சாவித்ரிக்கு இளையவள். அதிகாலையின் இளம்பொன்வெயில் என் தமக்கை. முதல்மதியத்தின் வெம்பொழிவே நான். தாபம் கொண்டவளாதலால் என் பெயர் தபதி. என்னை மானுடர் தீண்டமுடியாது. நீ என்மேல் கொண்ட காதல் விட்டில் விளக்குமேல் கொண்ட விருப்புக்கு நிகர்” என்றாள். “ஆசைகொண்டபின் அடையாமல் செல்வது என் இயல்பல்ல” என்று சம்வரணன் சொன்னான். அவள் இருகைகளும் இரு எரிசிறகுகளாக எழுந்தன. அவனை ஓங்கியறைந்து வீழ்த்தியபின் அவள் எழுந்து மறைந்தாள்.

அவன் இமைமுடிகளும் கருகின. தோல் பொசுங்கி எரிந்தது. ஆனால் அவ்விடம்விட்டு  நீங்க அவன் எண்ணவில்லை. சுனைக்கரையிலேயே தன் வில்லை வைத்து அமர்ந்துகொண்டான். அவள் நினைவை ஆடாத அகல்சுடர் என தன் அகத்தறையில் நிறுத்தி அங்கே அமர்ந்திருந்தான். அவள் விண்ணிலெழவில்லை. ஒளிரும் சிறகுள்ள சிறிய பொன்வண்டாக மாறி அக்காட்டுக்குள் சுற்றிக்கொண்டிருந்தாள். யாழின் இசையுடன் பறந்துவந்து அவனை மீண்டும் மீண்டும் நோக்கிக்கொண்டிருந்தாள்.

பன்னிரு நாட்களுக்குப்பின் மெலிந்து இறப்பின் வாயிலை நெருங்கிக்கொண்டிருந்த அவனருகே வந்து நின்று பெருமூச்சுவிட்டாள். அவன் விழிகளைத் திறந்து நோக்கியபோது கன்னங்கள் மடிந்த புன்னகையுடன் குனிந்து நோக்கி “இறப்பதற்கு முடிவெடுத்துவிட்டாயா?” என்றாள். “இறப்பையும் அச்சத்தையும் வென்றபின்னரே நான் அரசனானேன்” என்றான்.

அவள் அவனருகே மண்டியிட்டு அமர்ந்து அவன் கரங்களை தன் கைகளில் எடுத்துக்கொண்டாள். “அரசனே, துணிந்து என் இடக்கையை நீ பிடித்தாய். என் விழிகளுக்குள் நோக்கி உன் காதலை சொன்னாய். அது ஒருபோதும் நிறைவேறாத காதலென்று அறிந்தேன். ஆயினும் உன்னை என்னால் மறக்க முடியாதென்று உணர்ந்தேன். இன்னொருவனை என்னால் எண்ணவும் முடியாது” என்றாள். அவன் “அவ்வண்ணமெனில் என்னை ஏற்றுக்கொள். என்ன தடை?” என்றான். “விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே அத்தனை தொலைவை வைத்தது பிரபஞ்சத்தை நெய்தவன் அல்லவா? நான் என் நெறிகளை மீறமுடியாது” என்றாள் தபதி.

“அதுவன்றி எதையும் நான் ஏற்கமாட்டேன்” என்றான் சம்வரணன். “இங்கே உன் நினைவால் என்னை இறக்க விடு. அதுவும் காதலின் நிறைவேற்றமேயாகும்.” அவள் அவன் கன்னங்களைத் தொட்டு “நான் என்ன செய்வேன்? உங்கள் இறப்பை நான் எப்படி தாங்கமுடியும்? ஒரே வழிதான் உள்ளது. என் தந்தையிடம் சென்று என்னை பெண்கேளுங்கள். அவர் உங்களுக்கு என்னை கன்னிக்கொடை அளிப்பாரென்றால் நான் உங்கள் கைகளைப்பற்றுவேன்” என்று சொன்னபின்னர் சுழலும் ஆடியில் பட்ட ஒளி பாய்வது போல காட்டில் விரைந்தோடி பூத்த வேங்கை ஒன்றை பொன்னொளி கொள்ளச்செய்து வானிலெழுந்தாள். வானில் ஒரு மேகம் சுடர்ந்து அவளை வாங்கிக்கொண்டது.

அவன் வெந்துருகிய கைகளுடன் அங்கே நின்றான். அவனைத்தேடிவந்த அமைச்சர்களும் படைகளும் அந்தக்காட்டில் பித்தனைப்போல அலைந்துகொண்டிருந்த அவனை கண்டுபிடித்தனர். அவனுடைய பார்வை மறைந்திருந்தது. அவர்கள் அவனை கைக்குழந்தையைக் கொண்டுவருவதுபோல அஸ்தினபுரிக்குக் கொண்டுவந்தனர். அவன் கண்களை மருத்துவர்கள் குளிரச்செய்து பார்வையை மீட்டனர்.

அவளைக் கண்டதைப்பற்றி அவன் சொன்னதைக்கேட்டு “அரசே, அது வீண்முயற்சி. தீமையைக் கொண்டுவருவதும் கூட. அவளை மறந்துவிடுங்கள்” என்றனர் அமைச்சர். “விரும்பியதை அடையாது இறந்தான் அஸ்தினபுரியின் சந்திரகுலத்து அரசன் என்ற சொல் எஞ்ச விண்ணுலகு சென்றால் என் மூதாதையர் கால்களைத் தொட்டு வணங்க அவர் ஒப்புவரா?” என்றான் சம்வரணன். “முன்னர் என் மூதாதை புரூரவஸ் விண்ணுலக மங்கை ஊர்வசியை மணக்கவில்லையா என்ன? அவர்கள் மண்ணவர் அறியாத பேரின்பத்தை அடையவில்லையா?”

“அரசே, விண்ணவளாயினும் ஊர்வசி காதலில் கனிந்தவள். சுனையில் மலர்ந்த தாமரைபோல குளிர்ந்தவள். இவள் வெம்மையின் வடிவாக இருக்கிறாள். இவளை எப்படி நீங்கள் அடையமுடியும்? உங்கள் மானுட உடல் அதை தாளாது. உங்களால் ஆளப்படும் இந்நகரும் அதை தாளாது” என்றனர் அமைச்சர்கள். “அமைச்சர்களே, கட்டற்ற பெருவிழைவும் அதை நோக்கி எழும் ஆற்றலுமே ஷாத்ரம் என்று சொல்லப்படுகின்றன. ஒரு நாட்டில் ஷாத்ர குணம் நிறைந்திருக்கையிலேயே அது செல்வத்தையும் வெற்றியையும் அடைகிறது. மரத்தின் இனிமை கனியில் முதிர்வு கொள்வதுபோல ஒரு நாட்டின் ஷாத்ரம் அதன் அரசனில் குவிந்து நிறையவேண்டும். என் விழைவை ஒடுக்கினேன் என்றால் நான் என் ஷாத்ரகுணத்தை இழந்தவனாவேன். அதன் வழியாக என் மக்களின் வெற்றிவேட்கையையும் அழித்தவனாவேன்.”

“அதைவிட இம்முயற்சியில் நான் அழிவதே மேல். என் கதை அவர்களுக்கு என்றும் ஊக்கமளிப்பதாக எஞ்சும். அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் என்னைப்பற்றிச் சொல்லி வளர்ப்பார்கள். அவர்களும் தாங்கள் எட்டமுடிவதன் உச்சத்தை நோக்கியே எப்போதும் கைநீட்டுவார்கள். எது எப்போதும் அதன் கைத்தொலைவுக்கு அப்பால் கைநீட்டி எம்பிக்கொண்டிருக்கிறதோ அதுவே வெல்லும் நாடு என்கின்றன நூல்கள். என் நாட்டை பாரதவர்ஷத்தின் திலகமென ஆக்கி என்னிடம் அளித்துச்சென்றனர் மூதாதையர். என் நாளில் அதன் கொடி இறங்க நான் ஒப்பேன்” என்றான்.

நிமித்திகர்களை வரவழைத்து கணிக்கச்செய்தான். “நீங்கள் சூரியனின் உறவைப்பெற வாய்ப்புகள் உள்ளன என்றே நூல்கள் காட்டுகின்றன அரசே. ஆனால் அதன் மூலம் இந்நாடு அழிவையே அடையும்” என்றனர் நிமித்திகர். “ஒரு வனநெருப்பு அஸ்தினபுரிக்குத் தேவையாகிறது போலும். முதுமரங்கள் எரிந்தழியட்டும், புதுமுளைகள் எழட்டும்” என்றான் சம்வரணன். வைதிகர்களை வரவழைத்து சூரியனை வரவழைக்க என்ன செய்யவேண்டுமென்று கேட்டான். அவர்கள் சூரியனுக்காக ஒரு பெரும்வேள்வி ஒன்றை நிகழ்த்தவேண்டும் என்றனர். அவ்வண்ணமே ஆகுக என்றான் சம்வரணன்.

வேள்விக்கென பந்தல் எழுந்துகொண்டிருந்தபோது முதுநிமித்திகன் ஒருவன் அவனிடம் வந்தான். “அரசே, உங்களை நம்பியிருக்கும் குடிகளை நீங்கள் எண்ணிப்பார்க்கவில்லை. விண்ணின் சூரியதாபம் மண்ணிலிறங்கினால் என்ன ஆகுமென்று அறியமாட்டீர்களா?” என்றான். “அப்பெண்ணை நீங்கள் கண்ட இடத்துக்கு மீண்டும் சென்று நோக்குங்கள்… விடை காண்பீர்கள்” என்றான். “ஆம், அதையும் கண்டுவருகிறேன்” என்றபின் சம்வரணன் தன் காவலர்களுடன் காட்டுக்குள் சென்றான். வழித்தடம் தேர்ந்து தபதி மண்ணிலிறங்கிய இடத்தை அணுகினான்.

செல்லும்தோறும் அந்தப்பசுங்காடு வாடிநின்றிருப்பதைக் கண்டான். பின்னர் மரங்களெல்லாம் கருகி விறகுக்குவியல்களாக நின்றன. அவள் இறங்கி நீராடிய சுனை வறண்டு வெடித்து மீன்கள் வெள்ளிமின்னி விரிந்துகிடக்க வெறுமைகொண்டிருந்தது. “அரசே, இதைவிடப்பெரிய எச்சரிக்கை வேறில்லை. அவள் நம் நகரை அழிப்பாள்” என்றனர் நிமித்திகர். ஒரு புள்கூட சிறகடிக்காமல் சிறுபூச்சிகளின் மீட்டலும் ஒலிக்காமல் பாழ்நிறைத்து நின்றிருந்தது அந்த இடம்.

சம்வரணன் திரும்பிவந்தான். அஸ்தினபுரியின் பன்னிரு குலப்பெரியோர்களைக் கூட்டி அவை நிறைத்து அவர்களிடம் சொன்னான் “விழைந்ததை விட்டவன் என்னும் பழியுடன் விண்ணேக நான் எண்ணவில்லை. ஆனால் என் விழைவின்பொருட்டு என் நாடும் குடிகளும் துயருறுதல் கூடாது. ஆகவே முடிதுறக்க எண்ணுகிறேன். அஸ்தினபுரியின் முடியை குலத்தலைவர்களிடமே அளிக்கிறேன். தங்கள் அரசனை அவர்கள் தேர்வுசெய்யலாம். நான் என் காதலைத் தொடர்ந்து ஆகும் தொலைவுவரை செல்லவிருக்கிறேன். அடிபின்னெடுக்கும் வழக்கம் அறியாத குலத்தவன் நான். அவ்வண்ணமே வாழ்ந்தேன், இறப்பேன்” என்றான்.

“அரசே, நாட்டை யானை என்றும் அரசனை அதன் துதிக்கை என்றும் சொல்கின்றன நூல்கள். யானையை உணவீட்டி ஊட்டுவதும் யானைக்காகப் போரிடுவதும் துதிக்கையே. யானையின் காமத்தை அறிவதும் அதுவே. யானையறிந்த ஞானமெல்லாம் துதிக்கையில் குடிகொள்கிறது. துதிக்கையில் காயம்பட்டபின் வாழும் யானை ஏதுமில்லை” என்றார் குலமூத்தாரான குவலயர். பிறர் “இறுதிச் சொல் அது அரசே. அதற்கப்பால் ஏதுமில்லை” என்றனர். “அவ்வாறெனில் இவ்வேள்வியை நான் முன்னெடுக்கிறேன். சூரியனிடம் ஆணைபெற்று அவளை மணப்பேன்” என்று சம்வரணன் சூளுரைத்தான். “ஓம் ஓம் ஓம்” என அவன் குடிகள் முழங்கினர்.

வெண்முரசு விவாதங்கள்