பிரயாகை - 25

பகுதி ஐந்து : ஆயிரம் ஆடிகள் – 3

சிபிநாட்டின் பாலைநிலத்தை கடப்பதற்குள் சகுனியின் கால் மிகப்பெரியதாக வீங்கிவிட்டது. அவரது உடலருகே இன்னொரு சிறிய உடல்போல அது கிடந்தது. கிளம்பிய முதல் நாழிகையிலேயே வலிதாளாமல் பல்லைக்கடித்துக்கொண்டிருந்த அவர் தன்னையறியாமல் முனகத்தொடங்கிவிட்டிருந்தார். காய்ச்சல் கண்டவர் போல அவர் உடல் நடுங்கியது.

அவரை நோக்கிய காவலர்தலைவன் அவரது வெண்ணிற உடல் சிவந்து கனல் கொண்டிருப்பதை கண்டான். அவரால் குதிரையில் அமர முடியவில்லை. ஒருமுறை குதிரையிலிருந்து அவர் சரிந்து விழப்போனபோது அதை எதிர்பார்த்திருந்த வீரன் அவரைப்பிடித்துக்கொண்டான். அவரது உடலின் வெம்மையை உணர்ந்து அவன் திகைத்தான். அவரை கையில் தாங்கிக்கொள்ள முடியாதபடி கைகள் தகித்தன.

அவர்களிடம் வண்டிகள் இல்லையென்பதனால் அவரை படுக்கவைக்க முடியவில்லை. காவலர்தலைவன் அவரை குதிரைமேலேயே நீளவாட்டில் அமரச்செய்தான். குதிரையின் கழுத்துடன் அவர் இடையை சேர்த்துக்கட்டி காலை பின்பக்கம் நீட்டி துணியால் குதிரைச்சேணத்துடன் சேர்த்துக்கட்டினான். குதிரை அதை புரிந்துகொண்டது. பெருநடையில் அது ஓடியபோதுகூட சகுனி ஒருமுறையும் சரியவில்லை.

பாலைநிலத்தின் கொதிக்கும் வெயிலில் அவர்கள் தங்கள் குறுகிய நிழல்களின் மேல் பயணம் செய்தனர். தொலைவில் தெரிந்த மொட்டைப்பாறை மலைகள் அசைவில்லாமல் அப்படியே நின்றன. அவற்றின் காற்றால் அரிக்கப்பட்ட சரிவுகளில் யோகியின் கையில் உருளும் ஜபமாலை என மணல் மெல்ல பொழிந்துகொண்டிருந்தது. தங்களைச் சூழ்ந்து பசியுடன் நோக்கியபடி அசையாமல் காத்திருக்கும் செந்நிற ஓநாய்கள் அந்த மலைச்சிகரங்கள் என காவலர்தலைவன் எண்ணிக்கொண்டான். காற்று திசைமாறி வீசியபோது தொலைவில் ஓநாயின் ஓலம் போலவே மணல் அறைபடும் ஒலி எழுந்தது.

“நாம் வழிதவறிவிட்டோமா? என்று காவலர்தலைவன் கிருதரிடம் கேட்டான். “இல்லை. என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்” என்றார் கிருதர். “மலைகள் மாறவே இல்லை. நாம் நெடுநேரம் பயணம் செய்துவிட்டோம்” என்றான் காவலர்தலைவன். “அக்‌ஷரே, மானுடனின் ஆயுள்காலம் மலைகளுக்கு ஒரு நாள். அவனுடைய ஒருநாள் அவற்றுக்கு ஒரு கணநேர அசைவு” என்றார் கிருதர். காவலர்தலைவன் பெருமூச்சுவிட்டு “நேரம் செல்லச்செல்ல இளவரசரின் உடல் வீங்கி வருகிறது. கால் கனலில் காய்ச்சப்பட்ட இரும்புத்தூண்போல ஆகிவிட்டது” என்றான்.

“ஓநாயின் வாயில் வாழும் ஜடரை அவருக்குள் குடியேறிவிட்டாள். அனல் வடிவமானவள் அவள். நாம் காண்பது அவளுடைய வெம்மையைத்தான். அவளுக்கு நாம் அவியளித்துப்பேணவேண்டும். இல்லையேல் அவள் அவ்வுடலை உண்பாள். எஞ்சியதை இன்னொரு உடலுக்கு உணவாக்குவாள். அவள் அன்னத்தில் இருந்து அன்னத்துக்கு படர்ந்தேறிக்கொண்டே இருக்கிறாள். அன்னத்தாலான இவ்வுலகை முழுமையாக உண்டாலும் அவள் பசி தணியாது” என்றார் கிருதர். “அக்‌ஷரே, உயிர் என்றால் என்ன? அன்னம் ஜடராதேவியுடன் கொள்ளும் ஓயாத போர் அல்லவா அது?”

பாலையின் எல்லையில் முதல் சிற்றூர் தெரிந்ததும் கிருதர் “அங்கே மருத்தவர் இருப்பார்” என்றார். “எப்படித்தெரியும்?” என்றான் காவலர்தலைவன். “பசித்த விலங்குகள் வந்து காத்திருக்கும் இறுதி எல்லை இது. எனவே மறுபக்கம் நோயாளியை எதிர்பார்த்து மருத்துவரும் காத்திருப்பார்” என்றார் கிருதர். உயரமான மரத்தின் மீது கட்டப்பட்ட மூங்கிலில் பச்சை நிறமான பாலைவன அழைப்புக்கொடி காற்றில் துடித்துக்கொண்டிருந்தது. அந்த செந்நிற விரிவில் எழுந்த ஒற்றை இலை போல அது தெரிந்தது.

ஊரை அவர்கள் நெருங்கியபோதே நாய்கள் கூட்டமாக குரைத்தபடி ஓடிவந்தன. “ஓநாய்களுக்கு எதிராகவே வாழ்க்கையை கட்டி எழுப்பியிருக்கிறார்கள்” என்றார் கிருதர். நாய்கள் வெறியுடன் குரைத்தபடி அவர்களை நோக்கி வந்தன. குதிரைகள் சீறும்மூச்சுடன் தயங்கின. வீரர்கள் கடிவாளத்தை இழுத்தபடி திரும்பி நோக்கினர். கிருதர் “செல்லலாம். அவை தங்கள் எல்லைக்கு அப்பால் நாம் சென்றால் மட்டுமே தாக்கும். அதற்குள் எவரேனும் வந்துவிடுவார்கள்” என்றார்.

நாய்கள் குரைப்பதில் இருந்த வெறியை காவலர்தலைவன் கண்டான். “அவை இளவரசரின் காலில் உள்ள சீழின் வாசனையை அறிந்துவிட்டன. அது ஓநாயின் கடி என்றுகூட அவை அறிந்திருக்கும்” என்றார் கிருதர். அவர்கள் மேலும் நெருங்கியபோது நாய்கள் ஒரு பெரிய நாயின் தலைமையில் மெல்ல இணைந்து அணிவகுத்தன. அவற்றின் குரைப்பொலி அடங்கியது. தலைவன் தலையை நன்றாகத் தாழ்த்தி, செவிகளை கூர்மையாக்கி, கண்கள் சுடர்விட நோக்கி நின்றது. பிற நாய்களும் அதைப்போலவே தலைகளைத் தாழ்த்தி காதுகளை குவித்தன.

பின்பக்கம் குதிரையில் வந்த இருவர் உரக்கக் கூவி நாய்களை பின்னுக்கு அழைத்தனர். காவலர்தலைவன் காந்தாரத்தின் கொடியை தூக்கி ஆட்டினான். அவர்களில் ஒருவன் இளம்பச்சை நிறமான கொடியை வீசி அவர்கள் வரலாம் என்று தெரிவித்தான். குதிரைகள் நெருங்கி வந்தபோது நாய்கள் எரிச்சலுடன் முனகியபடி அணிவிலகின. உறுமியபடி அகன்று சென்று ஊர்முகப்பின் மண்ணாலான சுவர்களுக்கு அப்பால் மறைந்தன.

முன்னால் வந்தவன் தன்னை பகன் என அறிமுகம் செய்துகொண்டான். ஊர்க்காவலர்படையின் தலைவன். அவனுடன் இருந்தவன் துணைத்தலைவனாகிய சக்ரன். “வாருங்கள்… என்ன ஆயிற்று?” என்றான் பகன். “எங்கள் இளவரசரை ஓநாய் கடித்துவிட்டது” என்றான் காவலர்தலைவன். “ஓநாயா? தனியாகச் சென்றிருந்தாரா?” பகன் கேட்டான். “ஆம், காலையில்” என்றான் காவலர்தலைவன்.

பகன் வந்து சகுனியை நோக்கினான். அவருக்கு நினைவே இல்லை. அக்‌ஷனுக்கு அவரைப்பார்க்க அச்சமாக இருந்தது. அவரது உடல் சிவந்து நீலநிறமான நரம்புகள் பின்னிப்பிணைந்து விரைத்து நின்றிருந்தது. “இறுதிக்கணம்” என்றான் பகன். “ஓநாய் கடித்தவர்கள் பிழைப்பதில்லை… அத்துடன் ஓநாய் இவரது காலை கடித்திருக்கிறது. அது மிக அரிது.”

“ஏன்?” என்றார் கிருதர். அவர்கள் ஊருக்குள் குளம்படிகளின் எதிரொலி சூழ நுழைந்தனர். செம்மண்ணால் ஆன குடில்களில் இருந்து அதேமண்ணால் ஆனவர்கள் போன்ற சிறுவர்களும் கிழவர்களும் எட்டிப்பார்த்தனர். தலைமேல் முக்காடு போட்டிருந்த பெண்கள் சிறிய சாளரங்கள் வழியாக நோக்கி அவர்களின் மொழியில் கூவிப்பேசிக்கொண்டனர்.

“இவர் எங்காவது அமர்ந்திருந்தாலோ படுத்திருந்தாலோ மட்டும்தான் ஓநாய் தாக்கும். அப்போது அது நேராக கழுத்துநரம்பையே கவ்வும். அவர் திருப்பித்தாக்க தருணமே கொடுக்காது. காலைக்கடித்திருக்கிறது என்றால்…” என்று அவன் இழுக்க “அது இறக்கும் நிலையில் இருந்த ஓநாய். இவர் அருகே சென்றிருக்கிறார்” என்றார் கிருதர்.

“ஆம், அப்படி மக்கள் செல்வதுண்டு” என்றான் பகன். “இறக்கும் ஓநாயின் கண்களில் எவருமே மீறமுடியாத ஒரு தெய்வ ஆணை உண்டு. அதை நோக்கி ஈர்க்கப்பட்டு இறுதிக்கடியை வாங்கி இறந்தவர்கள் பலர். அதன் வயிற்றில் வாழும் அந்த தெய்வம் பசிகொள்ளும்போது கண்களில் வந்து கோயில் கொள்கிறது, அதை நாங்கள் இங்கே ஜடரை என்று வழிபடுகிறோம்.” அருகே தெரிந்த சிறிய கோயிலை சுட்டிக்காட்டி “அதோ அதுதான் ஜடராதேவியின் ஆலயம்” என்றான்.

உருளைக்கற்களைத் தூக்கி அடுக்கி உருவாக்கப்பட்ட ஆளுயரக் கோயிலுக்குள் மண்ணால் செய்யப்பட்ட சிறிய செந்நிறச்சிலையாக ஜடராதேவி தெரிந்தாள். நான்குகைகளிலும் வாள், வில், சக்கரம், கோடரி என படைக்கலங்கள் ஏந்தி காலைமடித்து அமர்ந்திருந்தாள். ஓநாயின் நீள்முகத்தில் வாய் திறந்து சிவந்த நாக்கு தொங்கியது. வெண்ணிறக்கூழாங்கற்கள் பற்களாக அமைக்கப்பட்டிருந்தன. செந்நிறமான படிகக் கற்கள் விழிகளாக சுடர்விட்டன.

“எங்கள் குலதெய்வம். ஒவ்வொருநாளும் ஒருதுளி உதிரமாவது அவளுக்குப் படைத்து வழிபடவேண்டும். உணவே இல்லாத நாட்களில் எங்கள் உடலில் இருந்து ஒரு துளிக்குருதியை விடுவோம்” என்றான் பகன். கிருதர் கைகூப்பி வணங்கினார். காவலர்தலைவன் “பசித்த ஓநாயின் பார்வையை அப்படியே கொண்டுவந்திருக்கிறார்கள்” என்றான். கிருதர் “தலைமுறைதலைமுறையாக அவர்கள் கண்டுவரும் பார்வை. தங்கள் கனவில் இவர்கள் ஒவ்வொருவரும் அதை கண்டிருப்பார்கள்” என்றார்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

மருத்துவரின் இல்லம் ஊரின் நடுவே இருந்தது. அதைச்சூழ்ந்திருந்த முள்மரங்களில் ஒரு இலைகூட இல்லை. கீழே சருகுகளும் இல்லை. மாலைவெயிலில் முட்களின் நிழல் தரையில் வலையெனப் பரவியிருந்தது. கடந்துசெல்லும் காற்றில் மரங்களின் முட்கள் மெல்ல சீறிக்கொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான பழுத்த இரும்பு ஊசிகள் மேல் நீர் விழுந்ததுபோல.

சக்ரன் ஓடிச்சென்று கதவைத்தட்டி வைத்தியரை அழைத்தான். பின்னர் கதவை அவனே திறந்தான். மென்மரப்பட்டைகளால் ஆன கதவுக்கு அப்பால் இருட்டு நிறைந்திருந்தது. அந்த ஊரிலேயே அதுதான் பெரிய வீடு. ஆனால் அதற்கு சாளரங்களே இருக்கவில்லை. இருட்டுக்குள் இருந்து ஒரு கிழவர் கண்களைச் சுருக்கி மூடியபடி தள்ளாடி வந்தார். கைநீட்டி கதவைத் தொட்டபடி “என்னைக்கேட்காமல் திறக்காதே என்று சொன்னேனா இல்லையா?” என்றார்.

“நீங்கள் துயில்கிறீர்கள் என நினைத்தேன் ஊஷரரே” என்றான் சக்ரன். “இவர் காந்தார இளவரசர் என்கிறார்கள். இவரை ஓநாய் கடித்துவிட்டது. இறக்கும் ஓநாய்…” ஊஷரர் “இவன் எதற்கு ஜடரையிடம் போனான்?” என முனகியபின் “யார் என்று சொன்னாய்?” என்றார். “…காந்தார இளவரசர்” என்றார் கிருதர். “சகுனித்தேவரா? சௌபாலர்?” என்று ஊஷரர் கேட்டார். “ஆம்” என்றார் கிருதர். ஊஷரர் கண்களில் வழிந்த நீருடன் ஆடும் தலையுடன் சகுனியை நோக்கிவிட்டு “பெரும்பாலும் விடைபெற்றுவிட்டார்… ஜடரை என்ன நினைக்கிறாள் என்று பார்ப்போம்” என்றார்.

“கொண்டுவந்து படுக்கவையுங்கள்…” என்றபடி ஊஷரர் உள்ளே சென்றார். அவர்கள் உள்ளே வந்ததும் “கதவுகளை மூடுங்கள்… வெளிச்சத்தில் என்னால் பார்க்க முடியவில்லை” என்று சொல்லி ஒரு துணியை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டார். கதவுமூடப்பட்டதும் அறைக்குள் இருட்டு பரவியது. அவர் ஒரு சிறிய துளையை சுவரின் மரப்பட்டையில் போட்டிருந்தார். அது எதிர்பக்கம் ஒரு சிறிய ஆடியில் விழுந்தது. அவ்விரு ஒளியில் அறை மெல்லிய ஒளியில் துலங்கியது.

ஊஷரர் குனிந்து சகுனியின் கைகளைப்பற்றி நாடியை நோக்கினார். “நெருப்பின் நடனம்” என்றார். “ஜடரை கூத்தாடுகிறாள். இவ்வுடலை பெரும்பாலும் அவள் உண்டுவிட்டாள்” என்றார். சகுனியின் தொண்டையில் கைவைத்து அழுத்தினார். அவரது வயிற்றிலும் தொடையிலும் அழுத்தி நோக்கிவிட்டு “உயிர் குளிர்ந்து வருகிறது… ஒன்றைமட்டுமே இப்போது நோக்கவேண்டும். இது உணவையும் நீரையும் ஏற்கிறதா? ஒரு துளி நீரையேனும் இவ்வுடல் ஏற்றுக்கொண்டதென்றால் இதை நான் மீட்டுவிடுவேன்.”

தலையை ஆட்டி உதட்டைப் பிதுக்கி “ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவே” என்றார் ஊஷரர். “இப்போது இவ்வுடலுக்கு அளிக்கப்படும் உணவு ஜடரை எனும் நெருப்பை அணைக்கும் நீர். அவள் அதை விரும்பமாட்டாள்.” அவர் ஒரு சிறு சுரைக்காய்க் குடுவையை எடுத்துவந்தார். அதிலிருந்த குளிர்ந்த நீரில் அக்காரக்கட்டிகளைப்போட்டு மரக்கரண்டியால் கலக்கினார். அதை நீளமான மூக்கு கொண்ட இன்னொரு குடுவைக்குள் ஊற்றினார். அதைத் தூக்கி சகுனியின் வாயருகே கொண்டுவந்தார்.

அவரது கைகள் நடுங்கியமையால் அக்காரநீர் சிந்தியது. சகுனியின் உதடுகள் கருகி பற்கள் கிட்டித்திருந்தன. அவர் மரக்கரண்டியால் பற்களை விலக்கி குடுவையின் மூக்கை உள்ளே விட்டு நீரை உள்ளே ஊற்றினார். தடித்த நாக்கில் பட்டு நீர் வெளியே வழிந்தது. தொண்டையிலோ உதட்டிலோ அசைவு நிகழவில்லை. ஊஷரர் “அவ்வளவுதான்” என்றார்.

அவர் குடுவையை விலக்குவதற்குள் சகுனி கண்களைத் திறந்தார். நாவால் அந்த நீரை நக்கியபின் ஒரு கையை ஊன்றி மெல்ல உடலைத் தூக்கி “நீர்” என்றார். “நீர்…” என்றும் மீண்டும் கேட்டார். குடுவையை அவர் வாய்க்குள் வைத்தார் ஊஷரர். சகுனி குடிக்கும் ஒலி இருண்ட அறைக்குள் ஒலித்தது. கிருதர் “உடனடியாக இவ்வளவு நீர் குடிப்பதனால்…” என்று சொல்ல ஊஷரர் “அருந்துவது ஜடரை. அவளுக்கு கடல்களும் போதாது…” என்றார்.

சகுனி குடுவையை முழுமையாகக் குடித்து முடித்துவிட்டு மல்லாந்து படுத்தார். உதடுகள் மெல்ல அசைய “மேலும் நீர்… மேலும்” என்றார். “நாம் மருத்துவத்தை தொடங்கலாம்” என்றார் ஊஷரர். “மேலும் கேட்கிறாரே” என்று கிருதர் சொல்ல “இனிமேலும் கொடுக்கலாகாது. ஜடரை ஏங்கட்டும். கெஞ்சட்டும்… அப்போதுதான் அவளை நாம் கையாளமுடியும்” என்றார் ஊஷரர்.

ஊஷரர் நடுங்கும் கால்களுடன் எழுந்து சென்று தன் கருவிகள் கொண்ட மென்மரப் பெட்டியை எடுத்துவந்தார். அதைத்திறந்து அதிலிருந்து மெல்லிய சிறிய கத்திகளையும் ஊசிகளையும் எடுத்துப்பரப்பினார். திரும்பி கிருதரிடம் “நீர் அந்த அடுப்பை பற்றவையும். அதில் நாம் மெழுகையும் அரக்கையும் உருக்கவேண்டியிருக்கும்” என்றார்.

கிருதர் எழுந்துசென்று அந்த அறையின் மூலையில் இருந்த அடுப்பில் அருகே இருந்த பெட்டியில் இருந்து கரித்துண்டுகளை அள்ளிப்போட்டு நிறைத்துவிட்டு சிக்கிமுக்கிக் கற்களை உரசி நெருப்பெடுத்து மென்சருகில் பற்றவைத்து அதிலிட்டு ஊதினார். கனல் சிவந்து எழத்தொடங்கியது. திறந்த பெரிய புண்போல அடுப்பின் வாய் மாறியதும் ஊஷரர் “அந்த இரும்பு வாணலியில் கனல்துண்டுகளைப் போட்டு கொண்டு வாரும்” என்றார்.

கிருதர் வாணலியில் அலையலையாக சிவந்து கொண்டிருந்த கனல்துண்டுகளை கொண்டு சென்று ஊஷரர் முன் வைத்தார். ஊஷரர் ஒரு நீளமான கத்தியை எடுத்ததும் அவர் புரிந்துகொண்டு “மருத்துவரே, அகிபீனா அளித்துவிட்டு அறுவைமருத்துவத்தைச் செய்யலாமே” என்றார். “தேவையில்லை. ஜடரைக்கு கடும் வலி பிடிக்கும்” என்றபின் இரண்டு கரிய பற்கள் மட்டும் எஞ்சிய வாயைத் திறந்து நகைத்து “வலிக்கு வலியே மருந்து” என்றார்.

கத்தியையும் ஒரு நீளமான கம்பியையும் நெருப்பில் இட்டு சிறிய பாளைவிசிறியால் வீசிக்கொண்டு மறுகையால் சகுனியின் காலில் இருந்த காயத்தைப் பிரித்தார். கச்சைத்துணியை சுழற்றி விரித்தபோது வெந்து தணிந்ததுபோல புண் தெரிந்தது. “தசையை அள்ளி எடுத்திருக்கிறது. ஊன்சுவைத்து இறந்திருக்கிறது…” என்றார் ஊஷரர் மேலும் புன்னகைத்தபடி. “ஆண்மையுள்ள ஓநாய்… இந்தப் பாலையில் ஆண்மை உள்ள ஓநாய்கள் மட்டுமே முதுமை அடையும் பேறுபெற்றவை.”

கத்தி சிவந்து பழுத்து செந்தாழை மலரிதழ் போல ஆகியது. கம்பி உருகி வழிந்தது போலத் தெரிந்தது. “கிருதரே, அந்தக்கனலின் மேல் சிறுவாணலியை வைத்து அரக்குருளைகளை போடும். அவை உருகி கொதிக்கும்போது மேலே சிற்றறையில் இருக்கும் துணிச்சுருளை அதிலிட்டு நன்றாகப் புரட்டி எடுத்து சற்றே ஆறவைத்து என்னிடம் கொடும்” என்றார். “படிகாரம் கலந்த அரக்கு அது. உருகும்போது வரும் வாசனையைக் கண்டு அஞ்சிவிடாதீர்.”

விரல்களில் மரத்தாலான குவை உறைகளை அணிந்தபின் வலக்கையில் அந்தக் கத்தியை எடுத்தார். இடக்கையில் ஊசியை எடுத்துக்கொண்டு “இளவரசரை பிடித்துக்கொள்ளுங்கள். இருகைகளுக்கு இருவர். இரு கால்களுக்கு இருவர். இடைக்கு ஒருவர், தலைக்கு ஒருவர்” என்றார் ஊஷரர். வீரர்கள் அமர்ந்து சகுனியை பிடித்துக்கொண்டனர். “நீர்” என்று சகுனி முனகினார். “நீர் கொடுங்கள் மூடர்களே… உணவு வேண்டும் எனக்கு.”

வாடிய மலர்போலத் தெரிந்த சதைக்கதுப்பில் கம்பியால் தொட்டபோது சகுனி இரண்டாகக் கிழிபடும் உலோகத்தகடு போல ஒலியெழுப்பி அதிர்ந்து எழுந்தார். ஊஷரர் கத்தியால் அந்தத் தசைக்குழியை வெட்டி எடுத்தார். அலறல் இறுகி ஓசை அழிய சகுனியின் உடல் எழுந்து வளைந்து நாண் இறுகிய வில்லென நின்றது. ஊஷரர் வெட்டி எடுக்க எடுக்க அதில் மெல்லிய அதிர்வு மட்டுமே நிகழ்ந்தது.

பிடித்திருந்தவர்களில் எவரும் அதை நோக்கவில்லை. அவர்களின் கைகளும் உடலும் நடுங்கிக்கொண்டிருந்தன. குருதி வழிய கத்தியும் கம்பியும் கருகின. புண்ணை நன்றாகத் தோண்டி எடுத்தபின் அருகே இருந்த சிறிய படிகச் சிமிழில் இருந்து அரக்குநிறமான திரவத்தை எடுத்து புண்மேல் ஊற்றினார்.

அடைத்த குரலில் அலறியபடி சகுனி சற்றே தளர்ந்திருந்த பிடிகளை உதறிவிட்டு விடுபட்டு எழுந்தார். அக்கணம் மருத்துவர் ஓங்கி அவர் காதுக்குப்பின்னால் அறைந்தார். சகுனி கழுத்துநரம்புகள் இருமுறை இழுபட்டு அதிர வாய் திறந்து தவித்துவிட்டு தளர்ந்து பின்னால் சரிந்தார். “பிடித்துக்கொள்ளுங்கள் மூடர்களே” என்றார் ஊஷரர். பிடித்திருந்த வீரர்களில் ஒருவன் விம்மி அழத்தொடங்கினான்.

அது யவனமது என்று கிருதர் வாசனை மூலம் உணர்ந்தார். புண்ணில் இருந்து சோரியுடன் கலந்து அது வழிந்தது. “கொண்டு வாருங்கள்…” என்றார் ஊஷரர். அரக்கில் புரட்டப்பட்டு சற்றே ஆறி விட்டிருந்த துணிச்சுருளை கிருதர் வாணலியுடன் கொண்டுவந்து அருகே வைத்தார்.

ஊஷரர் சிறிய கிண்ணம் ஒன்றில் இருந்து சாம்பல்நிறமான பொடி ஒன்றை எடுத்து சேற்றுக்குழி போல ஊறி வழிந்துகொண்டிருந்த புண்மேல் அப்பினார். தூக்கத்தில் பேசுபவர் போல சகுனி “அணையாதது” என்றார். கிருதர் புரியாமல் ஊஷரரை நோக்கினார். “ஜடரையின் சொற்கள் அவை” என்றார் ஊஷரர். சகுனி “எப்போதும்… என்றும்” என்றார்.

அந்தப்பொடி சோரி வழிவதை நிறுத்தி புண்ணை இறுகச்செய்தது. “அது இங்கே பாலையில் கிடைக்கும் மண். கொதிக்க வறுத்து சேமிப்போம்” என்றார் ஊஷரர். கிடுக்கியால் சூடான அரக்குத்துணியை எடுத்து அந்தப்புண்மேல் வைத்து சுற்றிக்கட்டினார். துணி அரக்குடன் சேர்ந்து நன்றாக இறுகியது.

அது இறுகுவதை நோக்கியபின் திரும்பி “மீண்டுவிடுவார். ஆனால் இனி அவருக்கு நேர்நடை இல்லை. வலதுகால் என்றும் ஊனமாகவே இருக்கும்” என்றார் ஊஷரர். “உயிர் எஞ்சினால் போதும் ஊஷரரே” என்றார் கிருதர். “உயிர் ஆற்றவேண்டிய பணி நிறையவே எஞ்சியிருக்கிறது. ஆகவேதான் அது ஜடரையை வென்றிருக்கிறது.”

எழுந்து இடையில் கையை வைத்து நெளிந்து “அன்னையே” என்று கூவியபின் “என்னிடம் அரசகுலத்தார் அனைவரின் கதையும் இருக்கிறது. சகுனியைப்பற்றி சிலநாட்களுக்கு முன்னர்தான் வாசித்தேன். சுவடியைத் தேடி எடுக்கிறேன்” என்றார். இடையில் கையூன்றியபடியே நடந்து சென்று ஒரு பெரிய பெட்டியைத் திறந்தார். தூசியில் வீரர் இருவர் தும்மினர். அவர் அதற்குள் இருந்த காலத்தால் கருகிப்போன சுவடிக்கட்டுகளை எடுத்து வெளியே வைத்து அவற்றைச் சேர்த்துக் கட்டியிருந்த சரடில் கோர்க்கப்பட்டிருந்த குறிப்புகளைப் படித்தார்.

ஒவ்வொன்றாக நோக்கி இறுதியில் ஒரு சுவடிக்கட்டை எடுத்தார். “இதுதான்… துர்வசுவின் குலத்தின் கதை முழுமையாகவே இதில் உள்ளது” என்றபடி நடந்து வந்தார். சுவடியை கண்களைச் சுருக்கி வாசித்தார். ”சந்திரனில் இருந்து புதன், புரூரவஸ், ஆயுஷ், நகுஷன், யயாதி, துர்வசு…. அவர்களிடமிருந்து வர்க்கன், கோபானு, திரைசானி, கரந்தமன், மருத்தன், துஷ்யந்தன், வரூதன், கண்டீரன்… அவ்வரிசையில் காந்தாரன்… அவன் குலத்தில் சுபலன். சகுனியாகிய இவர் சுபலனின் மைந்தர்.”

அமர்ந்துகொண்டு அந்தச்சுவடியைப் பிரித்து ஊஷரர் வாசிக்கலானார். “சகுனி கிதவன் என்றும் பர்வதீயன் என்றும் அழைக்கப்படுகிறார். இவருடன் பிறந்தவர்கள் நூறுபேர்.” கிருதர் திகைப்புடன் “என்ன சொல்கிறீர்கள் ஊஷரரே? மன்னர் சுபலருக்கு மூன்று மைந்தர்கள்தானே?” என்றார். “எங்கள் புலவர்கள் செவிச்செய்திகளைக் கேட்டு எழுதிவைத்த ஏடுகள் இவை. எங்கள் வரலாறு இதுதான். இதன்படி சுபலரின் மைந்தர்கள் நூறுபேர். மூத்தவர் அசலர்” என்றார் ஊஷரர்,

“ஆம்” என்றார் கிருதர். “இரண்டாமவர் சகுனி. மூன்றாமர் விருஷகர்.” “அது உண்மை” என்றார் கிருதர். “இவர்களுடன் பிறந்த நூறுபேரின் பெயர்களும் இந்நூலில் உள்ளன.” கிருதர் “எனக்குப்புரியவில்லை. அவர்கள் இப்போது உயிருடன் இருக்கிறார்களா?” என்றார். சுவடிகளை நோக்கிவிட்டு “இல்லை” என்றார் ஊஷரர். “அவர்கள் அனைவருமே கொல்லப்பட்டுவிட்டனர்.”

சிலகணங்களுக்குப்பின் கிருதர் பெருமூச்சுவிட்டு “உங்கள் சுவடிகளில் உள்ளதை முழுமையாகச் சொல்லுங்கள் மருத்துவரே” என்றார். “சுபலருக்கு பதினொரு மகள்கள். மூத்தவள் காந்தாரி. அவளை வல்லமை வாய்ந்த பேரரசனுக்கு மனைவியாக்கவேண்டுமென சுபலர் எண்ணினார். ஆனால் நிமித்திகர்கள் ஊழ்வினையால் அவளுக்கு சுமங்கலையாக வாழும் விதி இல்லை என்றனர். அவள் மணக்கும் கணவன் வாளால் இறப்பான் என்று கணித்துச் சொன்னார்கள்.”

கிருதர் திரும்பி தன் வீரர்களை நோக்கினார். அவர்கள் மெல்ல அமர்ந்துகொண்டு அரையிருளில் மின்னிய கண்களுடன் கேட்டிருந்தனர். “அப்போது அஸ்தினபுரியில் இருந்து பிதாமகர் பீஷ்மரின் தூது வந்தது. இளவரசன் திருதராஷ்டிரனுக்கு காந்தாரியை பெண்கேட்டிருந்தார். மிகச்சிறந்த வாய்ப்பு என்று அமைச்சர்கள் சொன்னார்கள். ஆனால் காந்தாரி விதவையாவது உறுதி என்றனர் நிமித்திகர்.”

“அப்போது மூத்த அமைச்சர் ஒரு வழி சொன்னார்” என்று ஊஷரர் தொடர்ந்தார். “ஒரு செம்மறியாட்டுக்கு முதலில் காந்தாரியை மணம்புரிந்து வைத்து அதை பலிகொடுத்துவிடலாம். அவள் விதவையாவாள் என்ற விதி நிறைவேறிவிடும். அதன்பின் அவளை திருதராஷ்டிரனுக்கு மணம்செய்துகொடுத்தால் அஸ்தினபுரியில் காந்தார குலத்து மைந்தர்கள் பிறப்பார்கள் என்றார் அமைச்சர். முதலில் தயங்கினாலும் அமைச்சரின் வற்புறுத்தலால் அதற்கு சுபலர் ஒப்புக்கொண்டார்.”

அதன்படி ஓர் அமாவாசை இரவில் எவருமறியாமல் முறைப்படி காந்தாரியை ஒரு செம்மறியாட்டுக்கு மணம்புரிந்து வைத்தனர். அதை பாலைவனத் தெய்வங்களுக்கு பலிகொடுத்தனர். அச்செய்தியை மறைத்து அவளை அஸ்தினபுரியின் இளவரசன் திருதராஷ்டிரனுக்கு மணம்புரிந்து வைத்தனர். பெரும் செல்வத்தை சீராகக் கொடுத்து அஸ்தினபுரிக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் திருதராஷ்டிரர் மணிமுடி சூடும் வேளை வந்தது. விழியிழந்தவர்களின் ஊழ்வினையை சரிவர கணிக்க முடியாதென்றனர் நிமித்திகர். எனவே காந்தாரிக்கு பேரரசியாகும் ஊழ்நெறி உண்டா என்று பீஷ்மர் நிமித்திகர்களிடம் கேட்டார். அவர்கள் நோக்கியபின் “அரசி காந்தாரியின் முதல்கணவர் மறைந்துவிட்டார். இரண்டாவது கணவனாக அவள் திருதராஷ்டிரரை மணந்திருக்கிறாள். விதவை மறுமணம் செய்தால் பட்டத்தரசியாக அமரமுடியாது. இதுவே குலநெறியாகும்” என்றனர்.

பீஷ்மர் சினம் கொண்டு வாளை உருவி நிமித்திகரை வெட்டப்பாய்ந்தார். “யாரைப்பற்றி பேசுகிறாய்? யாரடா விதவை?” என்று கூவினார். நிமித்திகர் தன் சொல்லில் ஊன்றி நின்று “என் சிரமறுந்து விழுந்தாலும் விழட்டும். நான் சொல்வது உண்மை. இவ்வரசியின் இரண்டாவது கணவர் இவர்” என்றார்.

சினம் தலைமீறிய பீஷ்மர் வாளால் நிமித்திகர் கழுத்தை வெட்டப்போனபோது அங்கே நின்றிருந்த இளைய அரசியான குந்தி “விரைவுகொள்ளவேண்டாம் பிதாமகரே. உண்மை என்னவென்று அறிந்த ஒருவர் இங்கிருக்கிறார், நம் மூத்த அரசி காந்தாரிதான் அவர். சுடர்கொண்டு வரச்சொல்லுங்கள். மூத்த அரசி அதைத்தொட்டு ஆணையிடட்டும், இந்நிமித்திகர் சொல் பொய் என்று. அவ்வண்ணம் ஆணையிட்டால் நாம் இந்நிமித்திகர் தலையை வெட்டுவோம்” என்றாள்.

“ஆம், அதுவே வழி… கொண்டுவாருங்கள் சுடரை” என்றார் பீஷ்மர். சுடர் கொண்டு வைக்கப்பட்டது. “சுடரைத்தொட்டு ஆணையிடு அரசி” என்றார் பீஷ்மர். “ஆம், ஆணையிடு” என்று திருதராஷ்டிரரும் சொன்னார். நிமித்திகர் “அரசி, தெய்வங்களுக்கு நிகராக அரசகுலத்தை நம்புபவர்கள் நாங்கள். எங்கள் வாழ்வும் இறப்பும் உங்கள் நெறிகளை நம்பியே” என்றார்.

காந்தாரி அழுதபடி நிமித்திகரை நோக்கியபின் “ஆணையிடவேண்டாம் பிதாமகரே, அவர் சொன்னதெல்லாம் உண்மையே” என்றாள். பீஷ்மர் கையில் இருந்து வாள் ஒலியுடன் உதிர்ந்தது. “என்ன சொல்கிறாய்?” என்று அவர் மெல்லிய குரலில் கேட்டார். நடந்ததை எல்லாம் காந்தாரி அழுதபடியே சொன்னாள். பீஷ்மர் “அப்படியென்றால் திருதராஷ்டிரர் மணிமுடி சூடவேண்டியதில்லை. பாண்டுவே அரசாளட்டும்” என்று ஆணையிட்டார். பாண்டு அரசராக குந்தி அரசியானாள்.

பீஷ்மர் அந்த வஞ்சத்தை மறக்கவில்லை. தன்னை சிறுமைசெய்துவிட்டார்கள் என்று அவர் நெஞ்சுலைந்துகொண்டிருந்தார். பாண்டுவின் முடிசூட்டுவிழா அறிவிப்புக்கு முன்னர் திருதராஷ்டிரருக்கு முடிசூட்டுவதாக பொய்யான செய்தியை அனுப்பி சுபலரையும் அவரது நூறு மைந்தர்களையும் அஸ்தினபுரிக்கு வரவழைத்தார். அவர்கள் ஆயிரம் அத்திரிகளில் சீர்வரிசைகளுடன் வந்தனர்.

அவர்களைக் கொல்லத்தான் பீஷ்மர் எண்ணினார். ஆனால் உறவினர்களைக் கொல்வது மூதாதையர் பழியை கொண்டுவந்து சேர்க்கும் என்று நிமித்திகர் சொன்னார்கள். ஆகவே அவர்கள் நூற்றியொருவரையும் கொண்டுசென்று மண்ணுக்குள் ஆழமான குகை ஒன்றுக்குள் சிறையிட்டார் பீஷ்மர்.

அவர்களுள் ஒருவருக்கு மட்டுமே போதுமான அளவு உணவும் நீரும் அளிக்கலாம், பசி மீதூரும்போது உணவுக்காக அவர்கள் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் கொன்று விடுவார்கள். அவர்களைக் கொன்ற பாவம் பீஷ்மருக்கு எஞ்சாது, அவர்களுக்கே அப்பழியும் சேரும் என்று பலபத்ரர் என்ற அமைச்சர் பீஷ்மரிடம் சொன்னார். அதை பீஷ்மர் ஏற்றார்.

அதன்படி அவர்களுக்கு ஒவ்வொருநாளும் ஒருவருக்குரிய உணவு மட்டும் அளிக்கப்பட்டது. பீஷ்மரின் எண்ணத்தை காந்தார மன்னர் சுபலர் உணர்ந்தார். “மைந்தர்களே, இது அஸ்தினபுரியின் பிதாமகர் நம்மை நாமே கொன்றழிப்பதற்காகச் செய்யும் சதி. நாம் பசிதேவதை குடிகொள்ளும் பாலைநிலத்து ஓநாய்கள். நாம் அச்சதிக்கு ஆட்பட்டுவிடக்கூடாது. நம்மில் அறிவாற்றல் மிக்கவன் சகுனி. இளையவன். இவ்வுணவை அவன் மட்டும் உண்ணட்டும். நாமனைவரும் பட்டினி கிடந்து இறப்போம்” என்றார்.

“ஆணை” என்று தொண்ணூற்றொன்பது மைந்தர்களும் தலைவணங்கினர். “சகுனி இங்கே வாழட்டும். ஒருநாள் அவன் வெளியே செல்லும் தருணம் வாய்க்கும். அப்போது அவன் பீஷ்மரிடம் தன் வஞ்சத்தைத் தீர்க்கவேண்டும். இது என் ஆணை!” என்றார் சுபலர். “ஆணை!” என்றனர் நூற்றுவர்.

“சகுனி, என் மகனே இதைக்கேள்” என்றார் சுபலர். “நாம் ஒருவரை ஒருவர் கிழித்துக்கொண்டு குருதிசிந்திச் சாவோம் என்று பீஷ்மர் நினைக்கிறார். அவர் நினைத்த அதே செயலை அவரது குலம் செய்யவேண்டும். அவரது கண்முன் அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவித்து அழியவேண்டும். அதைக்கண்டு அவரது நெஞ்சு உருகி விழிநீர் வழியும்போது காற்றுவெளியில் நின்றபடி நானும் உன் உடன்பிறந்தாரும் சிரித்துக்களிப்போம். இந்த வஞ்சம் அப்போதுதான் தீரும்.”

“ஆணை தந்தையே. நான் அதைச்செய்கிறேன்” என்றான் இளமைந்தனாகிய சகுனி. “மைந்தா, பீஷ்மர் பெருவீரர். அவரது குலத்தில் மாவீரர்கள் தோன்றுவர். அவர்களை நீ களத்தில் வெல்லமுடியாது. ஆகவே சூதில் வெல்” என்றார் சுபலர். “சூதின் அழகிய வடிவம் பகடையே. விதியை எவ்வகையிலேனும் உணர்ந்த ஒருவனால் பகடையின் ஈர்ப்பை புறந்தள்ள முடியாது. அவனை உனக்கு அடிமையாக்கு. அவனை வெல். அவன் வழியாக உன் குறிக்கோளை அடை!”

முற்றிலும் எதிர்பாராத கணத்தில் சுபலர் சீறியபடி வாய்திறந்து பாய்ந்து சகுனியின் வலது குதிகாலைக் கடித்து தசையைப் பிய்த்து எடுத்துவிட்டார். சகுனி அலறியபடி குருதி வழியும் காலை பிடித்துக்கொண்டான். நிணத்தசையை துப்பியபின் “உன் கால் நரம்பை அறுத்துவிட்டேன். இனி உன்னால் இயல்பாக நடக்க முடியாது. ஒவ்வொரு முறை உன் வலக்காலை தூக்கி வைக்கும்போதும் கடும் வலியை உணர்வாய். அந்த வலி என்னையும் இந்த வஞ்சத்தையும் உனக்கு நினைவூட்டியபடியே இருக்கும்.”

தன் இரு கைகளை விரித்துக்காட்டி சுபலர் சொன்னார் “மைந்தா, இந்தப் பத்துவிரல்களையும் பார். விரைவில் நான் செத்து இக்குகைக்குள் மட்கி எலும்புக்கூடாக ஆவேன். அப்போது இந்தப் பத்து எலும்புகளையும் எடுத்து வைத்துக்கொள். அவற்றை அழகிய பகடைக்காய்களாக செதுக்கிக்கொள். எப்போதும் உன் இடையில் அவற்றை வைத்துக்கொள். நீ பகடையாடும்போது அக்காய்களில் பேய்வடிவமான நான் வந்து அமைவேன். அனைத்து ஆட்டங்களையும் நீயே வெல்லச்செய்வேன்.”

சகுனி அக்குகைக்குள் நான்கு வருடங்கள் கிடந்தான். அவனுடைய தந்தையும் தொண்ணூற்றொன்பது உடன்பிறந்தவர்களும் குகைக்குள் மௌனமாக பசித்துக்கிடந்து உயிர்துறந்தனர். அவர்களின் உடல்கள் மட்கி வெள்ளெலும்புக்குவையாக ஆயின. அவனைச்சுற்றி அவர்களின் மண்டையோடுகளின் துயரம் மிக்க புன்னகையே நிறைந்திருந்தது.

சகுனி அந்த உணவை துளித்துளியாக சுவைத்து உண்டு உடலை வலுவாக்கிக் கொண்டான். அந்த எலும்புகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி உடைத்து கூராக்கி குகையின் பாறைகளின் இடுக்குகளில் அறைந்து இறக்கினான். அவற்றை மிதித்து மேலேறிச்சென்று தப்பினான். தன்னந்தனியனாக நடந்து காந்தார நாட்டை அடைந்து உடலையும் உள்ளத்தையும் வளர்த்துக்கொண்டபின் மீண்டும் அஸ்தினபுரிக்குச் சென்றான். அவனை பீஷ்மருக்கோ திருதராஷ்டிரருக்கோ அடையாளம் தெரியவில்லை. நூற்றுவருடன் இருந்த மெலிந்த வெளுத்த சிறுவனை அவர்கள் சரியாகப் பார்த்திருக்கவில்லை.

“சகுனி காத்திருக்கிறார்” என்றார் ஊஷரர். “பசிகொண்ட ஓநாய் காத்திருப்பதைப்போல… இதுதான் இச்சுவடியில் உள்ள கதை.” கிருதர் சிலகணங்கள் கழித்து பெருமூச்சுவிட்டு “வியப்புக்குரிய கதை. இதற்கும் உண்மைக்கும் தொடர்பே இல்லை. இளவரசர் சகுனித்தேவரின் தந்தை சுபலர் காந்தாரத்தை இன்றும் ஆள்கிறார். இரு உடன்பிறந்தாரும் நலமாக இருக்கிறார்கள்” என்றார்.

“கிருதரே, உண்மை என்றால் என்ன? இந்தத் தகவல்கள் மட்டும்தானா?” என்றார் ஊஷரர். “ஒருவேளை எங்கள் மூதாதையர் வேறேதும் உண்மையை சொல்கிறார்களோ என்னவோ!” கிருதர் “ஆம், நாம் ஏதறிவோம்” என்றார். படுத்திருந்த சகுனி மெல்ல முனகி “உணவு” என்றார். “ஜடரை எழுந்துவிட்டாள்… இன்னும் சில நாட்களில் இளவரசர் எழுந்துவிடுவார். நீங்கள் பயணத்தைத் தொடரலாம்” என்றார் கிருதர்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்