பிரயாகை - 23

பகுதி ஐந்து : ஆயிரம் ஆடிகள் – 1

விடிகாலையில் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து நின்று கண் எட்டா தொலைவுவரை விரிந்துகிடந்த செந்நிறமான வறண்ட நிலத்தைப்பார்த்தபோது சகுனி தன்னுள் ஆழ்ந்த விடுதலையுணர்வை அடைந்தார். நெஞ்சின் மேல் அமர்ந்திருந்த கனத்த எடைகொண்ட ஒன்று சுழன்றடித்த காற்றில் உடைகளைப்போலவே படபடத்து பறந்து விலகிச் செல்வதுபோலிருந்தது.

சூரியன் எழ இன்னும் நெடுநேரமிருக்கிறது என சகுனி உணர்ந்தார். பாலையின் பிரம்மாண்டமான தொடுவான் கோட்டில் இருந்து கசிந்த ஒளியால் செம்மண் நிலம் கனல்பரப்பு போல தெரிந்தது. சிவந்த துகிலின் அலைபோல அப்பால் செம்மண்காற்று சுழன்று சென்றது. அதன் ஒலி அவரை அடையவில்லை. இல்லை என்பதுபோல எப்போதும் என்பதுபோல அமைதிகொண்டு கிடந்தது பெரும்பாலை நிலம்.

அஸ்தினபுரியில் இருந்து கிளம்பி ஆறுமாதக்காலம் பயணம் செய்து சிபிநாட்டின் எல்லைக்கு அவரும் சிறிய மெய்க்காவல்படையினரும் முந்தையநாளே வந்திருந்தனர். சிந்துவையும் அதன் நிலத்தையும் கடந்ததுமே மெல்லமெல்ல நிலம் வறண்டு பாலையாகத் தொடங்கிவிட்டிருந்தது. அவர் அகவிழிகள் புறத்தைக் காணவில்லை. சீராகக் காலெடுத்து வைத்து நடந்த குதிரைமேல் தலையைத் தூக்கி தொடுவானை நோக்குபவர்போல அமர்ந்திருந்தார். குதிரையின் நடைக்கு ஏற்ப அவர் உடல் இயல்பாக அசைந்ததைத் தவிர அவரிடம் உயிர்ச்சலனமே இருக்கவில்லை.

அஸ்தினபுரியில் இருந்து அவர் தனியாகக் கிளம்பத்தான் எண்ணினார். தருமனுக்கு இளவரசுப்பட்டம் கட்டும் முடிவை அவைகளில் அறிவித்த அன்றே அவர் கிளம்ப முடிவெடுத்துவிட்டார். திருதராஷ்டிரரின் ஆணையுடன் பேரமைச்சரான சௌனகர் குலமூத்தார் சபை நோக்கி சென்றார். அவருக்கு இருபக்கமும் துரியோதனனும் பீஷ்மரும் சென்றனர். பின்னால் தருமனை அழைத்துக்கொண்டு விதுரர் சென்றார். அவர்தன் இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.

பீஷ்மர் திரும்பி “காந்தாரனே, என்னுடன் வருக! நீயும் அங்கே நின்றாகவேண்டும். உன் படையினரும் இன்று அஸ்தினபுரியின் குடிகளே” என்றார். சகுனி நிமிர்ந்து அவர் விழிகளை நோக்க அவர் “வருக!” என்று மீண்டும் மெல்லிய அழுத்தமான குரலில் சொன்னார். சகுனி எழுந்து “ஆணை, பிதாமகரே” என்று தலைவணங்கிவிட்டு அவருடன் நடந்தார். பாதக்குறடுகள் மரத்தரையில் ஒலிக்க அவர்கள் சென்றனர்.

இடைநாழியில் செல்லும்போது பீஷ்மர் தன் கைகளை அவர் தோளில் வைத்தார். அவரது தோளுக்குக் கீழேதான் சகுனியின் தலை இருந்தது. அந்த உயரவேறுபாடு காரணமாக எப்போதுமே பீஷ்மரின் கைகளின் முழு எடையும் தன் தோள்மேல் இருப்பதாக சகுனி உணர்வதுண்டு. நெடுநாட்களுக்குப்பின் அவரது கைகளை உணர்ந்தபோது அவை எடையற்றவை போல இருப்பதாகத் தோன்றியது. தோளில் ஒரு பறவை அமர்ந்திருப்பதைப்போல. மெல்லிய வெம்மை, நடுக்கம், தோள்தசையைத் தொட்ட முதிய நகங்கள் பறவையின் பழுத்த உகிர்கள்.

குலமூத்தார் சபைக்குள் அவர்கள் நுழைந்தபோது உள்ளே நிமித்திகன் அவர்களின் வரவை அறிவித்து முடித்திருந்தான். மங்கலஇசையும் வாழ்த்தொலிகளும் எழுந்து முகட்டுக்குவையில் முழங்கிக்கொண்டிருந்தன. அந்தக் கார்வை எடைமிக்கதாகத் தோன்றியது. குளிர்ந்து சூழ்ந்து அழுத்தி மூச்சுத்திணறச்செய்தது. உடலெங்கும் அழுத்தி கணுக்கால்களை தெறிக்கச் செய்தது. முட்டைவடிவமான பெருங்கூடத்தில் சாளரத் திரைச்சீலைகள் காற்றிலாடிக்கொண்டிருந்தன. பாவட்டாக்கள் மெல்லத் திரும்பி மீண்டன.

இந்தத் தருணம் என் வாழ்க்கையின் உச்சங்களில் ஒன்று. இங்கும் காந்தாரத்தின் தலை நிமிர்ந்தே இருக்கும். என்னைச்சூழ்ந்திருக்கும் இத்தனை விழிகளின் கூர்நுனிகளுக்கு மேல் நான் சமன் குலையாமல் நின்றிருப்பேன். சொற்களையே மூச்சாக உள்ளும் புறமும் ஓடவிட்டு தன்னைத் திரட்டிக்கொண்டு சகுனி நின்றார். வீரர்கள் வழிவிட கூடத்திற்குள் நுழைந்தபோது அவர் முகம் இறுகி சிலையாகிவிட்டிருந்தது.

அவர்கள் அவை நடுவே வந்து நின்றதும் அமைதி உருவாகியது. சில செருமல்கள். சில படைக்கல ஒலிகள். பாவட்டா ஒன்று திரும்பித்திரும்பி தூணில் உரசும் ஒலி. யாரோ அங்கே கண்ணுக்குத்தெரியாமல் நடப்பதைப்போல அது கேட்டது. யாரோ ஏதோ மெல்லிய குரலில் சொல்வது அறியாத்தெய்வமொன்றின் ஆணைபோல ஒலித்தது.

நிமித்திகரின் அறிவிப்பு முடிந்ததும் பீஷ்மர் அஸ்தினபுரியின் அரசகுலத்தின் ஒருங்கிணைந்த முடிவை துரியோதனனே தன் தந்தையின் பொருட்டு அறிவிப்பான் என்றார். அப்போதே அனைவருக்கும் முடிவு புரிந்துவிட்டதை சகுனி கண்டார். அந்த புரிதல் கூட்டத்தில் ஓர் உடலசைவாக நிகழ்ந்தது. முகங்கள் மலர்ந்தன. எங்கும் வெண்பற்கள் ஒளிவிட்டன.

துரியோதனன் கைகூப்பி தலைவணங்கி முறைமை மீறாத தேர்ந்த சொற்களில் தருமன் அஸ்தினபுரியின் இளவரசனாக திருதராஷ்டிர மாமன்னரால் தேர்வுசெய்யப்பட்டிருப்பதை அறிவித்தான். அவன் சொல்லி முடித்து தலைவணங்கியபின்னரும் சபை விழிகள் நிலைத்து அப்படியே அமைந்திருந்தது. அவர்கள் அதை அப்போதும் முழுமையாக உள்வாங்கிக்கொள்ளாததுபோல. பின்னர் எங்கோ ஒரு தொண்டை செருமலுடன் உயிர்கொண்டது. உடல்பெருந்திரள் ஒற்றைப்பெருமூச்சுடன் மெல்ல தளர்வதை சகுனி கண்டார்.

அக்கணம் ஓர் உண்மை அவருக்குத் தெரிந்தது. அந்தத் திரள் ஏமாற்றம் கொள்கிறது. ஆம், அது ஏமாற்றமேதான். எடைமிக்க ஒன்றை கைகளில் வாங்கியது போல அப்புரிதல் அவரை நிலை தடுமாறச்செய்தது. மாறிமாறி கூட்டத்தின் விழிகளையே நோக்கி அவ்வெண்ணத்தை மேலும் தெளிவாகக் கண்டடைய முயன்றார்.

இல்லை, நான் அவ்வெண்ணத்தை மறுக்கும் சான்றுகளையே தேடுகிறேன். அது என்னை, ஒட்டுமொத்த ஷத்ரியர்களை, அரசை, வீரத்தை அனைத்தையும் கேலிக்குரிய கேளிக்கையாக ஆக்கிவிடுகிறது. பல்லாயிரம் பல லட்சம் களமரணங்களை மூடத்தனமாக ஆக்குகிறது. அது என் அகம் கொள்ளும் மாயத்தோற்றமாக இருந்தால்மட்டுமே நான் என் படைக்கலங்களுடன் என் பீடத்தில் மீண்டும் அமர்ந்துகொள்ளமுடியும்.

ஆனால் கண்மூடி மறுக்கமுடியாத கற்பாறை போல அந்த உண்மை அங்கே முகங்களில் திகழ்ந்து நின்றது. அவர்கள் ஏமாற்றம் கொள்கிறார்கள். ஒரு பெரிய பூசலை, குருதிச்சிதறலை அவர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள். அங்கே ஒரு உச்சகட்ட நாடகத்தருணம் வெடிக்குமென எண்ணியிருந்தார்கள். பல்லாண்டுகளாக அதை அவர்கள் எண்ணியும் பேசியும் வந்திருக்கிறார்கள். அங்கே அவர்கள் எதிர்நோக்கியது மானுடக்கீழ்மையின் ஒரு தருணத்தையா என்ன?

ஆம், ஏனென்றால் அவர்கள் அந்தப்பேச்சுக்கள் வழியாக தங்கள் அகக்கீழ்மையையே மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். அத்தனை பேச்சுக்களிலும் அவர்கள் பிறரது கீழ்மையை தேடிக்கண்டடைவது தங்கள் சுயக் கீழ்மையால்தான். துரியோதனன் சிறுமையின் படிகளில் இறங்க இறங்க அவர்களின் அகம் உவகை கொள்ளும், ஏனென்றால் அவர்களும் அவனுடன் சேர்ந்து இறங்குகிறார்கள்.

சகுனி புன்னகைத்தார். துரியோதனன் செய்யவிருப்பவை என அவர்கள் தங்களுக்குள் கற்பனைசெய்துகொண்ட பல்லாயிரம் செயல்களை ஒரு காவிய ஆசிரியன் தொகுப்பான் என்றால் அதிகாரத்துக்காக மானுடன் எவற்றையெல்லாம் செய்வான் என்பதை முழுமையாகவே எழுதிவிடலாம். இம்மானுடர் நாடுவது அதைத்தானா? வரலாற்றிடம் அவர்கள் கோருவது அவர்களை கொப்பரைகளாக ஆக்கி அரைத்து குருதியும் கண்ணீருமாகப்பிழிந்து காய்ச்சி வடித்தெடுக்கப்படும் ஒரு காவியத்தை மட்டும்தானா?

அவர்கள் முகத்தில் முதலில் இருந்தது ஒருவகை எரிச்சல், ஆற்றாமை. பின் அது ஏளனமாக ஆகியது. பல்லாயிரம் முகங்கள் சேர்ந்து உருவாகி வந்த அந்த விராடமுகம் கொள்ளும் மெய்ப்பாடுகள் சகுனியை அச்சம் கொள்ளச்செய்தன. அதன் ஏளனம் வெயில்போல, மழைபோல ஒரு பருவடிவ நிகழ்வாக அக்கூடத்திற்குள் நிறைந்து நின்றது. கணம் தோறும் அது வளர்ந்தது. மேகங்கள் மலைத்தொடர்களாக உருவெடுப்பதுபோல. அதன்முன் சிற்றெறும்பாக அணுவடிவம் கொண்டு நின்றிருப்பதாகத் தோன்றியது.

துரியோதனனின் அறிவிப்பைத் தொடர்ந்து சௌனகர் அவ்வறிவிப்பை அரசகட்டளையாக முன்வைத்தார். இளவரசாக அறிவிக்கப்பட்டுள்ள தருமனுக்கு முடிகொண்டு நாடாள்வதற்கான அனைத்துப் பயிற்சிகளும் அளிக்கப்படும் என்றார். அறிவிப்பு முடிந்ததும் முரசுகள் முழங்கின. கொம்புகளும் சங்குகளும் ஓசையெழுப்பின. அவையினர் எழுந்து அஸ்தினபுரியையும் சந்திரகுலத்தையும் திருதராஷ்டிரரையும் தருமனையும் வாழ்த்தி கூவினர்.

தருமன் முன்வந்து நிற்க நிமித்திகர் அவனுடைய குலவரிசையைச் சொல்லி அவன் அஸ்தினபுரியின் இளவரசனாக பட்டமேற்கவிருப்பதை அறிவித்தார். தருமன் தலைகுனிந்து வணங்க அவை அவனை வாழ்த்தி குரலெழுப்பியது. மலர்களும் மஞ்சளரிசியும் அவன் மேல் பெய்தன.

இடைநாழி வழியாகத் திரும்புகையில் தளர்ந்த கால்களுடன் சகுனி பின்னால் வந்தார். அதை உணர்ந்த பீஷ்மர் சற்று நின்று அவருடன் சேர்ந்துகொண்டு “காந்தாரரே, அவையில் நிற்கையில் நான் எப்போதும் நடிகனாகவே என்னை உணர்கிறேன்” என்றார். அச்சொற்கள் சகுனியை சற்று திகைக்கச் செய்தன. அப்படியென்றால் அது தன்னுடைய உள்ளம் கொள்ளும் பாவனைகள் அல்ல, அது ஒரு பொதுவான உண்மை. விழிமூடி மறுக்கமுடியாத பருப்பொருள்.

“பூனைக்கு முன் காலொடித்துவிடப்பட்ட எலியாகவும் உணர்வதுண்டு” என்றார் பீஷ்மர். புன்னகைத்து, “அந்த எலியைப்போல இரங்கத்தக்க நடிகன் யாருண்டு? ஒடிந்த காலுடன் அது செய்யும் அனைத்து உயிர்ப்போராட்டங்களும் நடனமாக மாறி பூனையை மகிழ்விக்கின்றது. இறுதியில் மனநிறைவுடன் பூனை அந்நடிகனை உண்கிறது. நல்ல பூனை. அழகியது, நுண்ணுணர்வு மிக்கது. நடனக்கலையை நாவாலும் சுவைக்கிறது அது.” சகுனி பீஷ்மரை விழிதூக்கி நோக்கினார். அவர் விழிகளில் கசப்பில்லை. அந்நகைப்பு குழந்தைகளின் எளிய மகிழ்ச்சியுடன்தான் இருந்தது.

மீண்டும் திருதராஷ்டிரரை வணங்கி அரசமுறைமைகளை முடித்துக்கொண்டு சகுனி தேர்முற்றம் நோக்கி சென்றபோது துச்சாதனன் அருகே வந்தான். அவரை அணுகுவதற்காக உள்ளறையில் இருந்து விரைந்தவன் அவர் பார்வையை உடலால் உணர்ந்ததும் மெல்ல நடந்து அருகே வந்து கைகூப்பி தலைவணங்கியபின் பார்வையை பக்கவாட்டில் திருப்பி “கிளம்பிவிட்டீர்களா மாதுலரே?” என்றான். “ஆம். களைத்திருக்கிறேன்” என்றார் சகுனி.

“இவ்வண்ணம் ஆனதற்காக நீங்கள் வருந்துவீர்கள் என்று தெரியும் மாதுலரே” என்றான் துச்சாதனன் “எந்தையின் ஆணை அது. அதற்கு என் தமையனும் நானும் முழுமையாகவே கட்டுப்பட்டவர்கள்.” சகுனி “ஆம்” என்றார். “அதற்காக தங்கள் உள்ளம் ஒருகணமும் என் தமையன் மேல் சினம் கொள்ளலாகாது. அதை மன்றாடி கேட்டுக்கொள்ளவே நான் வந்தேன். எனக்கு என் தமையன் இறைவடிவம். அவருக்கு தந்தை இறைவடிவம். இவ்வுலகில் எதுவும் இந்த அர்ப்பணிப்பை விட மேலானதல்ல எங்களுக்கு.”

சகுனி முகம் மலர்ந்தார். அருகே சென்று தன் தலைக்குமேல் இருந்த துச்சாதனனின் தோள் மீது கையை வைத்து “இச்சொற்களுக்காக நான் உன்னை வாழ்த்துகிறேன் மருகனே. உன்னை வீரர்களின் மேலுலகுக்குக் கொண்டுசெல்வது இந்தப் பற்றேயாகும்” என்றார்.

துச்சாதனன் தலைதாழ்த்தி உதடுகளை அழுத்திக்கொண்டு “ஆனால் இன்று என் தமையன் அவை நின்றபோது அவரைச்சூழ்ந்திருந்த அத்தனை முகங்களிலும் தெரிந்த ஏளனம் என்னைக் கொல்கிறது மாதுலரே. அந்த சபை ஒற்றை முகம் கொண்டு அவரை நோக்கி நகைப்பதாக எனக்குத் தோன்றியது. எங்கும் தலைவணங்காத என் தமையன் அங்கும் ஒருகணம்கூட குன்றவில்லை. தன் உள்ளத்தின் விரிவால் அவர் அச்சிறுமையை வென்று அங்கே நின்றார். ஆனால்…”

சகுனி “மருகனே, அரசு சூழ்பவன் ஒன்றை எப்போதும் அறிந்துகொண்டே இருப்பான். மானுடர் என்ற பேரில் பேருருவம் கொண்டு இப்புவியை நிறைத்திருக்கும் காமகுரோதமோகங்களின் பெருந்தொகையை. அதன் அளப்பரிய சிறுமையை. ஒவ்வொரு கணத்திலும் அது வாழ்க்கைமேல் கொண்டுள்ள பெரும் சலிப்பை. அதைக் கடந்து வாழ்வை பொருள்கொள்ளச்செய்ய அது செய்யும் வீண்முயற்சிகளை…பேராசையும் நன்றியின்மையும் கோழைத்தனமும் நிறைந்தது அது. எங்கும் தீயதையே நோக்கும். எதிலும் தன் சிறுமையையே பேருருவாக்கி கண்டுகொண்டிருக்கும்…”

துச்சாதனனின் பெருந்தோள்களில் மேலும் ஒருமுறை தட்டி “மக்கள்…அவர்களை ஆள்பவன் வெல்கிறான். ஆட்படுபவன் அதனால் அவமதிக்கப்பட்டு அழிகிறான்” என்றார் சகுனி. “அவர்களை வெறுப்பவன் அவர்களை வதைக்கத்தொடங்குவான். அவர்களை வழிபடுபவன் அவர்களால் ஆட்டிப்படைக்கப்படுவான். அவர்களை புரிந்துகொள். அவர்களிடமிருந்து விலகியே இரு” என்றார்.

திரும்பி தன் அரண்மனைக்கு வந்ததுமே அருகே வந்த முதுசேவகர் கிருதரிடம் “என் பயணப்பைகள் சித்தமாகட்டும். நான் சற்றுநேரம் கழித்து காந்தாரம் திரும்புகிறேன்” என்றார். கிருதர் “இளவரசே” என்று தொடங்க “என் பணி இங்கே முடிந்துவிட்டது கிருதரே” என்றார் சகுனி. பெருமூச்சுடன் “ஆம்” என்றார் கிருதர். பின்னர் “படைகள்…” என்றார். “நான் மட்டும்..” என்றபின் “என் மெய்க்காவலர்களும் உடன்வரட்டும்” என்றார் சகுனி.

மாலையில் அவர் கிளம்பிக்கொண்டிருக்கும்போது கௌரவர்கள் சூழ துரியோதனன் வந்தான். சகுனி கூடத்தில் அமர்ந்து யவன மதுவை அருந்திக்கொண்டிருந்தார். மாளிகைமுற்றத்தில் பன்னிரு குதிரைகளும் பன்னிரு அத்திரிகளும் நின்றிருந்தன. தோல்பைகளில் பயணத்துக்கான உணவுப்பொருட்களும் பிறவும் அத்திரிகள் மீது ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. துரியோதனன் அவற்றை நோக்கியபடியே குதிரையில் இருந்து இறங்கி மாளிகைப்படிகளில் ஏறி கூடத்துக்கு வந்து வாயிலில் நின்றான். பின்னால் துச்சாதனன் நின்றான்.

“வருக மருகனே, நான் கிளம்பும்போது செய்தி அறிவிக்கலாமென்றிருந்தேன்” என்றார் சகுனி. “தாங்கள் அன்னையிடமும் அரசரிடமும் முறைப்படி விடைபெற்று அல்லவா செல்லவேண்டும்?” என்றான் துரியோதனன். “அவர்களை சந்தித்தபின் என்னால் செல்லமுடியாது. மாமன்னர் என்னை ஒருபோதும் கிளம்ப அனுமதிக்க மாட்டார். அதை நான் உறுதியாக அறிவேன்” என்றார் சகுனி. துரியோதனன் “ஆம், அது உண்மை. தாங்கள் கிளம்பிய செய்தி அறிந்தால் அவர் கண்ணீர் விடுவார்” என்றான்.

“ஆம், இத்தனைநாள் அவரது பேரன்பின் நிழலில் வாழும் நல்லூழ் பெற்றிருந்தேன். கடன் நிறைவாக அவருக்கு ஓர் மாவீரனை மைந்தனாக உருவாக்கி அளித்திருக்கிறேன். நன்று, வந்த பணி நிறைவுற்றது” என்றார் சகுனி. “நீ இப்போது காந்தாரம் வரமுடியாதென்று அறிவேன். இங்கு உன் பணிகள் முடிந்தபின்னர் அங்கே வா. நாம் அங்கே பாலைவனவேட்டையை கற்போம்.”

துரியோதனன் வந்து பீடத்தில் அமர்ந்தபடி “நான் இப்போதேகூட வந்துவிடமுடியும் மாதுலரே” என்றான். “பிதாமகர் ஒவ்வொருவருக்கும் ஆணைகளை பிறப்பித்திருக்கிறார். மாமன்னர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதனால் தருமன் முடிசூட விரைவுகொள்ளவேண்டியதில்லை என்கிறார். தருமன் தன் தம்பியருடன் நால்வகை மக்களையும் ஐவகை நிலங்களையும் கண்டு தெளிந்து திரும்பிவரவேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறார்.”

சகுனி புன்னகை செய்து “பிதாமகர் விரைவு கொள்ளமாட்டார் என நான் அறிவேன்” என்றார். துரியோதனன் ஏறிட்டு நோக்க “மருகனே, அவர்கள் யாதவக் குருதி கொண்டவர்கள். அஸ்தினபுரியின் குடிகளில் பெரும்பாலானவர்கள் யாதவர்களும் மலைக்குடிகளும்தான். அவர்கள் தருமனை ஏற்கலாம். இங்குள்ள ஷத்ரியர்களிலும் சிலர் ஏற்கலாம். ஆனால் முதன்மையாக ஏற்றாகவேண்டியவர்கள் ஆரியவர்த்தத்தின் ஷத்ரிய அரசர்கள். அங்குள்ள உயர்குடியினர்” என்றார்.

“அத்துடன் அஸ்தினபுரியின் சமந்த அரசுகளும் சிற்றரசுகளும் துணையரசுகளும் தருமனை ஏற்கவேண்டும். அது எளிதில் நிகழக்கூடியது அல்ல. பாண்டவர்கள் யாதவ அரசியின் மைந்தர்கள் என்பதை ஒருபோதும் அவர்கள் மறக்க மாட்டார்கள். தருமனுக்கு இளவரசுப்பட்டம் சூட்டப்பட்ட செய்தி அவர்களை சினம் கொள்ளச்செய்யும். அதையே காரணமாகக் காட்டி அஸ்தினபுரிக்கு எதிரான மனநிலையை உருவாக்கவும் அணிதிரட்டவும் முயல்வார்கள். இப்போதே செய்திகள் பறக்கத் தொடங்கியிருக்கும்” சகுனி சொன்னார்.

“ஆகவேதான் பிதாமகர் தருமனை காடேகச் சொல்கிறார். அது போதிய காலத்தை பிதாமகருக்கு அளிக்கும். அவர் ஒவ்வொரு நாட்டுக்காக தூதர்களை அனுப்புவார். ஷத்ரியர்களை தேற்றி வாக்குறுதிகள் அளித்து தன் வயப்படுத்துவார். அவர்கள் தருமனை ஏற்றபின்னரே அவன் முடிசூடுவான்” என்றார் சகுனி. “ஆம், அது விதுரரின் திட்டமாகவும் இருக்கலாம்” என்றான் துரியோதனன்.

“இந்த காடேகலே ஒரு சிறந்த சூழ்ச்சி. இந்தப்பயணத்தில் தருமன் முனிவர்களையும் வைதிகர்களையும் கண்டு வாழ்த்து பெறுவான். அவன் எந்தெந்த முனிவர்களை சந்தித்தான் என்பதும் எவர் அவன் மணிமுடியை வாழ்த்தினார் என்பதும் சூதர்கதைகளாக நாடெங்கும் பரப்பப்படும். அவை மெல்லமெல்ல அவனுக்கு மக்களின் ஒப்புதலை பெற்றுத்தரும்.”

சகுனி புன்னகைத்து “கூடவே பீமனின் வீரச்செயல்களும் அர்ஜுனனின் வெற்றிச்செய்திகளும் சூதர்கள் வழியாக மக்களிடம் வந்து சேர்ந்துகொண்டே இருக்கும்” என்றார். “அவர்கள் எளியவர்களைக் காத்த செய்திகள். தீயவர்களை அழித்த மெய்சிலிர்ப்பூட்டும் கதைகள். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் கதைகளை விரும்புகிறார்கள். கதைகளில் வாழ முந்துகிறார்கள். எனென்றால் வாழ்க்கையில் எதற்கும் விடைகள் இல்லை. கதைகள் திட்டவட்டமான முடிவுகொண்டவை.”

சகுனி தலைகுனிந்து தன்னைநோக்கிச் சொல்பவர் என “இன்னும் சில ஆண்டுகளில் அவர்கள் பாரதவர்ஷம் போற்றும் அறச்செல்வர்களாகவும் மாவீரர்களாகவும் காவியப்புகழ் பெற்றுவிடுவார்கள். அதன்பின் குலம் பற்றிய கசப்புகள் எஞ்சியிருக்காது” என்றார். “அத்துடன் இப்பயணத்திலேயே தருமன் ஒரு பெரும் சுயம்வரத்திற்குச் சென்று முதன்மையான ஷத்ரிய குலம் ஒன்றில் இருந்து இளவரசியை மணப்பான்… அதற்கும் பிதாமகர் திட்டமிட்டிருப்பார்.”

“எதுவேண்டுமானாலும் நிகழட்டும். நான் ஆர்வமிழந்துவிட்டேன்” என்றான் துரியோதனன். “நான் இங்கிருக்கப்போவதில்லை. அவர்கள் கிளம்பியதும் நானும் கிளம்பலாமென்றிருக்கிறேன். கதாயுதப் பயிற்சியை முழுமையாக அடையவேண்டுமென விரும்புகிறேன். துரோணரிடமிருந்து நான் கற்றவை அடிப்படைகள் மட்டுமே. இப்போது என்னிடமிருப்பது நானே அடைந்த பயிற்சி. மேலும் கற்றாகவேண்டும்.”

“நீ செல்லவேண்டியது மதுராபுரிக்கு” என்றார் சகுனி. “அங்கே யாதவராகிய வசுதேவரின் மைந்தர் பலராமரை நாடிச்செல். இன்று இப்பாரதவர்ஷத்தில் அவரே முதன்மையான கதாயுத வீரர்.” துரியோதனன் தயங்கி “ஆனால் அவர் யாதவர். அவர் எனக்கு…” என்றான். “மருகனே, நல்லாசிரியர்கள் குலம் இனம் என்னும் அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு மாணவர்களை மதிப்பிடுபவர்கள். பலராமர் அத்தகையவர் என நான் உறுதியாகவே அறிவேன்” என்றார் சகுனி.

“அவ்வண்ணம் ஆகுக!” என்றான் துரியோதனன். “ஆசிரியன் தெய்வங்களுக்கு நிகர். தவத்தால் தெய்வங்களை கனியச்செய்து கல்வி என்னும் வரத்தைப் பெறவேண்டும். தவத்தால் அடையப்பெறாத கல்வி பயனற்றது” என்றார் சகுனி. துரியோதனன் “நான் அவரிடம் பயில்வேன், இது உறுதி” என்றான்.

துச்சாதனன் “நானும் தம்பியரும் இங்கே இருந்தாகவேண்டும் என்கிறார் தமையன்” என்றான். “ஆம், என் இடத்தில் இவன் இருந்து தம்பியரை நடத்தவேண்டும் என ஆணையிட்டேன்” என்று துரியோதனன் சொன்னான். ”மேலும் நான் இல்லாதபோது நானாக இருக்கவும் அவன் கற்றாகவேண்டும்.”  சகுனி நகைத்தார்.

“கர்ணன் வில்வித்தை  கற்பதற்காக செல்கிறான். பரசுராமரையே தேடிச்செல்லவிருப்பதாக சொல்கிறான்” என்று துரியோதனன் சொன்னான். சகுனி “அதுவும் உகந்ததே. இனி அவனுக்கு அவரன்றி எவரும் கற்பிக்கமுடியாது” என்றார். “குடம் நிறைவதை அதுவே அறியும் என ஒரு பழமொழி உண்டு. அவன் தனக்குரிய கல்வி கிடைக்கும் வரை அமையமாட்டான்.”

பின் பெருமூச்சுடன் எழுந்து “மருகனே என் விடைபெறல் ஓலைகளை உங்களிடமே அளிக்கிறேன். உங்கள் அன்னையிடமும் அரசரிடமும் பிதாமகரிடமும் விதுரரிடமும் அளியுங்கள்” என்றார் சகுனி. துரியோதனனும் கௌரவர்களும் கண்களில் கண்ணீர் வழிய சகுனியின் கால்களைத் தொட்டு வணங்கினர். அவர்கள் ஒவ்வொருவரையாக கட்டித்தழுவி சகுனி விடைபெற்றார்.

அஸ்தினபுரியை இருளில் கடக்கவேண்டும் என்பது சகுனியின் திட்டமாக இருந்தது. அது ஏன் என அவர் அகம் உணர்ந்திருந்தது. அந்தத் தன்னுணர்வு அவரை கூசவும் வைத்தது. அஸ்தினபுரியின் மக்களின் விழிகளில் நிறைந்திருந்த ஏளனத்தை அவர் அஞ்சினார். அந்த ஏளனம் கழுத்தைத் தொட்ட கூர்வாள் முனைபோல எப்போதும் உடனிருந்தது.

நகரைவிட்டு விலகும்போதும் அஸ்தினபுரியின் எல்லைகளை கடக்கும்போதும் எவரும் காணாமல் விலகிவிடவேண்டுமென்ற எச்சரிக்கையும் பதற்றமும் மட்டுமே இருந்தன. அது நல்லது என்றுகூட தோன்றியது. அந்தக்கணத்தில் மேலோங்கிவிடக்கூடும் என அவர் அஞ்சிய துயரத்தையும் கசப்பையும் அந்த மேலோட்டமான உணர்ச்சிகள் மறைத்து ஒத்திப்போட்டன. பந்தங்கள் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இருளுக்குள் குளம்படி ஓசைகள் மட்டுமே ஒலிக்க நகர் நீங்கி நாடு நீங்கினார். ஒளிமிக்க பல்லாயிரம் பந்தங்களுடன் வந்தவன் இருளில் திரும்பிச்சென்றான் என்று சூதர்கள் பாடுவார்கள்.

காலையில் சப்தசிந்துவை அடைந்தபோது எழுந்த விடுதலை உணர்வை அவரே வியந்துகொண்டார். அவரது இறுகிய உடல் நெகிழ்ந்தது. குதிரையில் உடலை எளிதாக்கி அமர்ந்துகொண்டு காலை ஒளி பரவிய வயல்வெளிகளை நோக்கிக்கொண்டிருந்தார். ஆனால் ஒரு சொல்லும் பேசவில்லை. அந்த விடுதலை உணர்வின் நிம்மதி திரும்பிச்செல்வதன் கசப்பை எழாமலாக்கியது. மிகப்பெரிய உணர்வு ஒன்று அகத்தில் திரண்டு நின்றிருந்தது. அதை சின்னஞ்சிறிய உணர்ச்சிகளால் மறைக்கமுடிந்தது. அலைகள் மறைக்கும் கடல்போல அப்பால் இருந்தது அகம்.

இரவில் படுத்ததுமே தூங்கமுடிந்தது. காலை எழுந்ததும் கனவில் இருந்து விழித்தெழுந்தது போலத் தோன்றியது. பதினெட்டாண்டுக்காலம் ஒரு கனவு நீடிக்கமுடியுமா என்ன? பதினெட்டாண்டுகளா என உடனே அகம் வியந்தது. பதினெட்டு ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் காத்திருந்து காலத்தை சுமந்திருக்கிறேன்…

முற்றத்தில் நடந்து பாலையின் விளிம்பை அடைந்தார். இரவெல்லாம் வீசிய காற்றில் செம்மணல்பரப்பு அலையலையாக படிந்திருந்தது. எப்போதும் அசைந்து உருமாறிக்கொண்டிருக்கும் பாலைமணல் உயிருள்ளது. எதையோ உச்சரித்துக்கொண்டே இருக்கும் பித்தனின் உதடு போல. அதன்மேல் முட்புதர்கள் இரவின் காற்றில் சுழன்று பதித்த அரைவட்டங்கள் தெரிந்தன. சிற்றுயிர்கள் ஊர்ந்து சென்ற கோடுகள். சிறிய குழிக்குள் காலடிக்கு அஞ்சி மூழ்கி மறைந்த பூச்சிகள்…

அப்போதுதான் சகுனி அந்தக் காலடித்தடத்தைக் கண்டார். குனிந்து அதை நோக்கி அது முதிய ஓநாய் என்று அறிந்தார். இரவெல்லாம் கூடாரத்தின் அருகே சிறிய மணல்மேட்டில் அது அமர்ந்திருக்கிறது என்று தெரிந்தது. பசித்த ஓநாய். குருதிவாசனைதேடி வந்திருக்கிறது. எவரேனும் இரவில் தனியாக வந்திருந்தால் தாக்கியிருக்கும். அது அருகில் எங்கோதான் இருக்கும். ஒரு சோலைப்புதருக்குள் மென்புழுதியில் ஒடுங்கி இரவுக்காகக் காத்திருக்கும். பசித்து தனித்து…

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

சகுனி அந்தக் காலடித்தடத்தைத் தொடர்ந்து நடக்கத்தொடங்கினார். அதன் விழிகளை நோக்கவேண்டும் போலிருந்தது. அதனுடன் ஒரு சொல்லேனும் பேசிவிடலாமென்று தோன்றியது.


வெண்முரசு அனைத்து விவாதங்களும்