பிரயாகை - 2

பகுதி ஒன்று : பெருநிலை – 2

மிகமெல்லிய ஒலிகளைப்போல துல்லியமாகக் கேட்பவை பிறிதில்லை. அன்னையின் மடியின் ஆடைமடிப்புக்குள் அழுந்தி ஒலித்த துருவனின் விம்மலோசையைக் கேட்டபோது அதை உத்தானபாதன் உணர்ந்தான். அவன் தலையில் சிறு பூச்சிகள் ஊர்வதுபோல உணரச்செய்தது அவ்வொலி. திரும்பி துருவனைப்பார்க்க எண்ணினான். ஆனால் கழுத்து இரும்பாலானதுபோல பூட்டப்பட்டிருந்தது. செயற்கையாகப் பெருமூச்சு விட்டு கால்களை நீட்டிக்கொண்டு அந்த இறுக்கத்தை வென்றான்.

உத்தமனின் தலையை மெல்ல வருடினான். “தந்தையே என் குதிரை!” என்று அவன் கையை விரித்து “எனக்கு அவ்வளவு பெரிய குதிரைவேண்டும்…” என்றான். உத்தமன் முழுக்கமுழுக்க சுருசியின் வார்ப்பு என்று உத்தானபாதன் எண்ணிக்கொண்டான். நினைவு தெளிந்த நாளிலிருந்தே அவன் கேட்டுக்கொண்டே இருக்கிறான். பெற்றுக்கொள்வது தன் உரிமை என்பதுபோல அடையும்தோறும் ஆசைகொள்கிறான்.

உத்தமனின் மென்மையான வியர்த்த உள்ளங்கைகளைப் பிடித்து முத்தமிட்டான். ஆனால் அச்செயல் அப்போது அவன் மேல் எழுந்த கடும் வெறுப்பை வெல்வதற்கான பாவனையா என்றும் ஐயுற்றான். இவனில் என்னுடைய ஒரு துளிகூட இல்லை. வாழ்நாளெல்லாம் என்னிடம் விளையாடும் மாயத்தின் சிறிய துளிதான் இது. அவன் சாயல் சுருசியைப்போல இல்லை. அவன் அனைத்திலும் உத்தானபாதனையே கொண்டிருந்தான். ஆனால் விழிகளில் சுருசியின் அந்தத் தீராவிழைவு இருந்தது. அந்த விழைவு மட்டும்தான் அவள். அவளுடைய அந்நெருப்பை எந்த உடலிலும் அவளால் பற்றிக்கொள்ளவைக்கமுடியும். அடைந்தவற்றுக்கு அப்பால் எப்போதும் கனவுகண்டுகொண்டிருப்பவர்கள் எதை நிரூபிக்க எண்ணுகிறார்கள்?

துருவனின் உடல் மெல்ல அசைந்ததை அவன் ஓரக்கண் அறிந்தது. சட்டென்று பெரும் கழிவிரக்கம் அவனுள் வந்து நிறைந்தது. துருவனாக ஒருகணம் நின்று உத்தானபாதன் அச்செயலின் குரூரத்தை முற்றிலும் உணர்ந்தான். ஏன் அதைச்செய்தான் என அவன் அகம் பிரமித்தது. துருவனை ஒருநாளும் கையில் எடுத்துக் கொஞ்சியதில்லை. உடலோடு அணைத்துக்கொண்டதேயில்லை. விழிகளைச் சந்திப்பதையே தவிர்ப்பான். மைந்தனின் தொடுகை உத்தானபாதனைக் கூசவைத்தது. ஏன் அந்த வெறுப்பு?

ஏனென்றால் அவனுடைய சொந்த ஆற்றலின்மைக்கும் அவன் தன்னுள் எப்போதும் உணரும் தன்னிழிவுக்கும் கண்முன் நின்றிருக்கும் சான்று அச்சிறுவன். அந்தச் சிறு உடல் அவன் முன்னால் நீட்டப்பட்ட சிறிய சுட்டுவிரல். அவனைப்பற்றிய ஒரு இழிவாசகம் பொறிக்கப்பட்ட ஓலை. அவன் சென்றபின் அவனைப்பற்றி பூமியில் எஞ்சியிருக்கும் கீழ்நினைவு. உண்மையில் அந்தச் சான்றை முற்றாக மண்ணிலிருந்து அழிக்கவே அவன் அகம் எழுகிறது. அது தன் குருதி என்பதனால் அதை தவிர்த்துச்செல்கிறது.

என் குருதி! அச்சொல் அப்போது நெஞ்சில் எழுந்ததை உத்தானபாதன் அச்சத்துடன் உணர்ந்தான். அப்போது தெரிந்தது, அந்த மெலிந்த பெரியவிழிகள் கொண்ட சிறுவனே உண்மையில் தன் முழுமையான வழித்தோன்றல் என்று. அவன் நானேதான். என் அச்சங்களும் ஐயங்களும் கூச்சங்களும் கொண்டவன். என்னைப்போலவே ஆற்றலற்ற உள்ளம் கொண்டவன். என்னைப்போல எஞ்சிய வாழ்நாள் முழுக்க விரும்புவதற்கும் வெறுப்பதற்கும் காரணங்கள் தேடி அலைபாயப்போகிறவன். அவனை வெறுத்தது நான் என்னை வெறுப்பதனால்தான்.

தலையைத் திருப்பாமல் விழியை மட்டும் திருப்பி உத்தானபாதன் துருவனை நோக்கினான். அன்னையின் மடியில் முகம்புதைத்து இறுக்கிக் கொண்டிருந்தான். திரும்பவும் கருவறைக்குள் புகவிழைபவன் போல அவன் உடல் துடித்தது. சுநீதி அவன் தலையை மீண்டும் மீண்டும் கைகளால் தடவியபடி மெல்லிய குரலில் காதில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். என்ன சொல்வாள்? எப்போதும் அத்தருணத்தில் சொல்லப்படுபவற்றை மட்டும்தான். அச்சொற்கள் ஒவ்வொன்றும் அவன் மேல் எரித்துளிகளாக விழும் என அறியமாட்டாள். அச்சொற்களில் உள்ள மாற்றமற்ற மரபார்ந்த தன்மை காரணமாகவே இப்போது அவன் அவளையும் வெறுத்துக்கொண்டிருப்பான்.

வெறுப்பும் விருப்பும் அவ்வயதிலேயே ஆழப்பதிந்து விடுகின்றனவா என்ன? நிலைபெற்ற மதிகொண்ட தந்தையிடம் இருந்து நான் பெற்றுக்கொண்டதா இந்நிலையின்மை? நான் விலக்கியவையும் நான் விரும்பியவையும் இணைந்துதான் மைந்தனாகி என் முன் வந்து நிற்கின்றதா? தன் மனம் உருகிக்கொண்டிருப்பதை உத்தானபாதன் உணர்ந்தான். என் மகன். என் சிறுவடிவம். ஆனால் நான் அவன் ஆன்மாவில் காறி உமிழ்ந்தேன்.

இது இறப்பின் கணம். அதன்பின் மானுடர் மறுபிறப்பு கொள்கிறார்கள். அதுவரை இருந்த அனைத்திலிருந்தும் அறுத்துக்கொள்கிறார்கள். எரிந்து அழிகிறார்கள், அல்லது உருகி மறுவார்ப்படைந்து விடுகிறார்கள். அருகே அவன் அழலாகிக் கொண்டிருக்கிறான் என உத்தானபாதன் உணர்ந்தான். அங்கிருந்து உடல் கரைந்து விழிகளில் இருந்து மறைந்துவிட விழைகிறான். உலகத்தையே தனக்கு எதிர்தரப்பாக நிறுத்தி முழுமையான தனிமையில் இருக்கிறான். அவமதிக்கப்பட்ட மனிதன் தெய்வங்களால் பழிவாங்கப்பட்டவன்.

கைநீட்டி அவனைத் தொட்டாலென்ன? செய்யவேண்டியது அது அல்ல. அவனை அள்ளி எடுத்து மார்போடணைக்கவேண்டும். நெஞ்சில் அவன் நெஞ்சத்துடிப்பை அறியவேண்டும். நீ நான் என்று உடலாலேயே சொல்லவேண்டும். அதைத்தவிர எது செய்தாலும் வீணே. அவன் அதை நோக்கிச் சென்றான். நெடுந்தொலைவில் இருந்தது அந்தக்கணம். ஆனாலும் அவன் அங்கேதான் சென்றுகொண்டிருந்தான்.

ஒரு செருமலோசையால் கலைக்கப்பட்டு தலைதூக்கி அவையை நோக்கினான். அங்குள்ள அத்தனை கண்களுக்கும் முன்னால் ஒருபோதும் மீளமுடியாதபடி சிறுமைகொண்டுவிட்டதை உணர்ந்த கணமே அவனுக்கு தன்னை அங்கே கொண்டு நிறுத்திய துருவன் மீதுதான் கடும் சினம் எழுந்தது. எளிய புழு. மெலிந்த தோள்களும் வெளிறிய தோள்களும் கொண்டவன். அப்போது அவனுக்கு ஒன்று தெரிந்தது. அவனை அத்தனை சினம் கொள்ளச்செய்தது எது என. அவன் மடியில் ஏற முயன்ற துருவனின் கண்களில் இருந்தது அன்புக்கான விழைவு அல்ல, ஆழ்ந்த சுயஇழிவு. உரிமை அல்ல, அவமதிக்கப்படுவேனோ என்ற அச்சம்.

அவையை மீட்டுச்செல்ல விரும்பிய அமைச்சர் சுருசி சொன்ன கருத்தில் ஒரு சிறு நடைமுறை இக்கட்டைச் சொன்னார். அவையிலிருந்த அனைவருமே அந்தத் தருணத்தைக் கடந்துசெல்ல விழைந்தனர் என்பதனால் அதை ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்டு விரித்து விரித்துக் கொண்டு சென்றனர். ஒவ்வொருவரும் அந்த விவாதத்தை பாவனைதான் செய்யத் தொடங்கினார்கள். ஆனால் எதிர்ப்பு வந்தபோது அவர்களின் உணர்ச்சிகள் உண்மையாக மாறின. அவ்வுணர்ச்சிகள் வளர்ந்தன. சற்றுநேரத்தில் அங்கே அப்படி ஒரு நிகழ்வுக்கான சான்றே இருக்கவில்லை.

உத்தானபாதன் ஓரக்கண்ணால் சுருசியை நோக்கிக் கொண்டிருந்தான். ஒரு கணமேனும் அவளில் சிறு வெற்றிப்புன்னகை ஒன்று வரும் என அவன் எதிர்பார்த்தான். இன்று இச்செயலுடன் அவள் விழைந்தது முழுமை அடைந்துவிட்டது. மணிமுடிக்கும் செங்கோலுக்கும் உரியவன் எவன் என இனி எவருக்கும் ஐயமிருக்கப்போவதில்லை. ஆனால் அவள் மிகுந்த பரிவுடன் சிலமுறை துருவனை நோக்கினாள். ஒன்றுமே நிகழாததுபோல விவாதங்களில் கலந்துகொண்டாள். நினைத்ததை அடைந்த உவகையின் சாயல் கூட அவள் கண்களில், குரலில், உடலசைவுகளில் வெளிப்படவில்லை.

அவள் அறிவாள், மொத்த அவையும் அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதைத்தான் நோக்கிக்கொண்டிருக்கிறது என. கண்கள் இல்லாதபோதுகூட உடல்கள் நோக்கின. அவளுடைய ஒரு சிறு அசைவுகூட அதுவரையிலான பயணத்தை முறியடித்துவிடும். ஆகவே அவள் அங்கே சிறுமியாகவும் கனிந்த அன்னையாகவும் விவேகம் கொண்ட அரசியாகவும் மாறிமாறித் தோற்றமளித்தாள். ஆனால் எப்படி அத்தனை உணர்ச்சிகளையும் முழுமையாக வென்று செல்கிறாள்? எப்படி ஒரு சிறு தடயம் கூட வெளிப்படாமலிருக்கிறாள். உடலுக்கும் உள்ளத்துக்கும் நடுவே அத்தனை பெரிய இடைவெளியை எப்படி உருவாக்கிக்கொள்கிறாள்? அக்கணம் அவளை உத்தானபாதன் மிகவும் அஞ்சினான்.

மரக்குதிரையை கையில் வைத்து திருப்பித் திருப்பி நோக்கிக்கொண்டிருந்த உத்தமனை நோக்கினான். சுயம்புமனுவின் குருதிவழி இனி அவனில் நீடிக்கப்போகிறது. ஆனால் அவனுக்கும் அதற்கும் எத்தொடர்பும் இல்லை. ஒருவகையில் அவனும் அவன் அன்னையும் நிலைபேறு கொண்டவர்கள். ஊசலாட்டங்களேதும் அற்றவர்கள். சுயம்புமனு விண்ணில் கருத்தூன்றி அடைந்த நிலைப்பேற்றை மண்ணில் காலூன்றி அடைந்தவர்கள். விழைவதெல்லாம் இப்புவியில் பருப்பொருளாகவே காணப்பெற்றவர்கள் எத்தனை நல்லூழ் கொண்டவர்கள்!. அவர்களுக்கு சஞ்சலங்களே இல்லை.

சங்கும் பெருமுரசும் ஒலிக்க நிமித்திகன் மன்று எழுந்து முடிகாண் நிகழ்வு முழுமைகொண்டது என அறிவித்தான். குடிகள் வந்து உத்தானபாதனை வணங்கினர். ஓரிருவர் சென்று சுருசியிடம் சில சொற்கள் பேசினர். சுருசி பணிவும் நாணமுமாக அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டாள். அவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குடியையும் மைந்தர்பெயரையும் அவள் அறிந்திருந்தாள். அவளிடம் பேசியவர்கள் அதன்பின்னர்தான் சுநீதியிடம் வந்து பேசினர் என்பதை உத்தானபாதன் கண்டான்.

ஆனால் ஒவ்வொருவராலும் திட்டமிடப்படவில்லை. முதலில் செய்தவர் வகுத்த நெறியை பிறர் இயல்பாகவே கடைப்பிடித்தனர். அது கூட்டத்தின் இயல்பு. அப்போதுதான் அதுவரை அவன் கருத்தூன்றாத ஒன்றை அறிந்தான். எப்போதும் சுருசிக்கு நெருக்கமான குடித்தலைவர்தான் முதலில் எழுந்துவந்து விடைபெற்றார். அதையும் அவள்தான் முன்னரே சொல்லிவைத்திருக்கிறாளா? சிலந்தி வலையைப் பார்க்கையில் எழும் பெரும் அச்சத்தை அவன் அடைந்தான். எளிய பூச்சிகளுக்காகவா இத்தனை நுட்பமான வலை?

வெண்குடை ஏந்திய வீரன் வந்து உத்தானபாதன் பின்னால் நிற்க, நிமித்திகன் முன்னால் சென்று அவன் அவை விலகுவதை அறிவித்தான். வாழ்த்தொலிகள் முழங்க உத்தானபாதன் நான்குபக்கமும் திரும்பி அவையை வணங்கி இடைநாழி நோக்கிச் சென்றான். அவனுக்குப்பின்னால் ஒவ்வொருவரிடமும் மென்னகையால் வணங்கி விடைபெற்று சுருசி வந்தாள். ஒவ்வொரு வேலையாளிடமும் ஓரிரு சொற்கள் பேசினாள்.

உத்தமனை இடைசேர்த்து அணைத்து அவனிடம் மிகமெல்ல ஏதோ பேசியபடி சுருசி வந்ததை அவன் கேட்டுக்கொண்டிருந்தான். அவள் பின்னால் வருவதை அவன் உணர்ந்தாகவேண்டும் என்பதற்காகத்தான் அப்படிப் பேசுகிறாளா? மிகமெல்லப் பேசும்போது அவன் மேலும் செவிகூர்வான். அவன் சிந்தை முற்றிலும் அவள் மீதே இருக்கும். அப்போது அவன் அவளைப்பற்றி மட்டுமே எண்ண அவள் விழைகிறாள். அந்த மெல்லிய பேச்சில் ஒருவன் பெயரை சொல்லிவிட்டாளென்றால் அவன் அவளையன்றி பிற எதையும் என்ணமாட்டான். தன்னைச்சூழ்ந்தவர்களின் எண்ணங்களைக்கூட அவளே தீர்மானிக்கிறாள்.

சுருசிக்குப் பின்பக்கம் சுநீதி தலைகவிழ்ந்து வந்தாள். அவள் ஆடையைப்பற்றி முகத்தை அதற்குள் மறைத்தபடி துருவன் வருவதை உத்தானபாதன் எதிரே தெரிந்த வெண்கலத் தூண்கவசத்தில் பார்த்தான். கால்களில் தொற்றியிருந்த துருவனை இழுத்துக்கொண்டு வந்ததனாலோ, அகம் தளர்ந்திருந்ததனாலோ சுநீதி மெல்லத்தான் வந்தாள். அவளுடைய கால்கள் மரத்தரையில் இழுபட்ட ஒலியின் மாறுபாட்டை உணர்ந்தவனாக உத்தானபாதன் அனிச்சையாகத் திரும்பி அவளைப்பார்த்தான்.

அவன் உதடுகள் அசைவதற்குள்ளாகவே சுருசி திரும்பி சுநீதியின் சேடியிடம் “மூத்தவரின் ஆடையைப்பற்றிக்கொள்ளுங்கள்” என்றாள். சுநீதியின் முகம் சிவந்து கண்களில் ஈரம் படர்ந்தது. சுருசி குனிந்து துருவனை நோக்கி “என்ன, இன்னுமா அழுகிறான்?” என்றாள். துருவன் தாயின் ஆடையிலிருந்து தலைதூக்கி அவளை நீர்நிறைந்த பெரிய கண்களால் பார்த்தான். உத்தானபாதன் நெஞ்சு அதிர்ந்தது. அடுத்து அவள் என்னசெய்யப்போகிறாள்? மிகநுண்ணிய ஒரு சொல், எஞ்சியவாழ்நாள் முழுக்க சுநீதியின் நெஞ்சில் இருந்து அது சீழ்கட்டும்.

ஆனால் சுருசி முகமெங்கும் விரிந்த இளக்காரப்புன்னகையுடன் துருவனிடம் “அரசரின் மடியில் அமர விரும்புகிறாயா? அதற்கு நீ என் வயிற்றில் அல்லவா பிறந்திருக்கவேண்டும்?” என்றாள். அந்த நாணமில்லாத நேரடிப் பேச்சை ஒருபோதும் அவளிடம் கேட்டிருக்காத உத்தானபாதன் திகைத்து நின்றுவிட்டான். அவன் கைவிரல்கள் அதிரத் தொடங்கின. சுநீதியின் முகம் வெளுத்து தலை குளிரில் நடுங்குவதுபோல ஆடியது. “எது உன்னால் எட்டமுடிவதோ அதை எட்ட முயல்க! உனக்குரியதல்லாதவற்றை நோக்கி எழமுயன்றால் பாதாள இருளே உனக்கு எஞ்சும்” என்றாள் சுருசி.

மிச்சமின்றி அழித்துவிட்டாள் என உத்தானபாதன் எண்ணிக்கொண்டான். இந்த இறுதி அடிக்காகத்தான் அவள் இத்தனைநாள் காத்திருந்தாள். இந்தக்கணத்திற்குப்பின் ஒரு சிறு தன்மதிப்பும் சுநீதியிடம் எஞ்சலாகாது என்று விரும்புகிறாள். சட்டென்று மெல்லிய விம்மலுடன் வாயைப்பொத்திக்கொண்டு சுநீதி தோள்குறுக்கிக் குனிந்தபோது அது நிகழ்ந்துவிட்டது என்றும் அவன் அறிந்தான். சொற்களையே கத்தியாக்கி அடிவயிற்றில் செலுத்தி சுழற்றி இழுத்து எடுத்ததுபோல.

மேலும் விரிந்த புன்னகையுடன் “அன்பையும் மதிப்பையும் இரந்து பெறமுடியாது மைந்தா. அவை உன் தகுதியால் உனக்குக் கிடைக்கவேண்டும். உனக்கு உன் அன்னையின் அன்பும் உன்னைப்போன்ற சிலரின் மதிப்பும் அன்றி வேறேதும் எழுதப்பட்டிருக்கவில்லை. செல். நூல்களைப்படி. அகப்பாடமாக்கு. அதைச்சொல்லி சிறுபாராட்டுகளைப் பெறு” என்றபின் திரும்பி இனிய புன்னகையுடன் உத்தானபாதனிடம் “அவனுடைய நலனுக்காகவே சொன்னேன் அரசே. அவன் இதேபோல மேலும் ஏமாந்து துயரடையக்கூடாதல்லவா?” என்றாள். விரிந்த புன்னகையுடன் “செல்வோம்” என்று சொல்லி முன்னால் நடந்தாள்.

அது அவளுடைய உணர்ச்சிகளே அல்ல. அந்த ஏளனமும் ஆணவமும் அவளுடைய துல்லியமான நடிப்புகள். அவள் அதை முன்னரே திட்டமிட்டிருப்பாள். எப்படிச் சொல்லவேண்டும், எப்படி தலை திருப்பவேண்டுமென நூற்றுக்கணக்கான முறை ஒத்திகை செய்திருப்பாள். வெறுப்பாலோ ஏளனத்தாலோ சொல்லப்படும் சொற்களுக்கு இத்தனை கூர்மை இருக்காது. அப்படி இருக்கவேண்டுமென்றால் அவை உச்சகட்ட அழுத்தத்தை அடைந்திருக்கவேண்டும். இவை ஒரு கவிஞன் எழுதிய நாடகத்தில் நன்கு செதுக்கப்பட்ட சொற்கள் போலிருக்கின்றன.

சுநீதியை திரும்பிப்பார்த்த உத்தானபாதன் தவிப்புடன் விழி விலக்கிக்கொண்டான். அவள் சரிந்துவிழப்போகிறவள் போல மெல்லிய அசைவுடன் நின்றுகொண்டிருந்தாள். சேடியர் இருவர் அவளை நோக்கிச் சென்றனர். அவர்கள் அவளை கூட்டிச்சென்றுவிடுவார்கள் என்று எண்ணிக்கொண்டு அவன் முன்னால்நடந்தான். ஓரிரு அடி வைத்தபின்னர்தான் அவன் இறுதியாக நோக்கிய துருவனின் கண்களை நினைவுகூர்ந்தான். அவை அச்சிறுவனில் அதுவரை இருந்த விழிகள் அல்ல. நெஞ்சுநடுங்க தன்னை முழுமையாக விலக்கிக்கொண்டான்.

அதுவரை நடந்தவற்றை மீண்டும் ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டபோதுதான் அந்த இறுதி நாடகத்துக்கும் சரியான இடத்தை சுருசி தேர்வுசெய்திருப்பதை உணர்ந்தான். குடிமக்கள் அவையினருக்கு அவள் அச்சொற்களைச் சொல்பவள் என்றே தெரிந்திருக்காது. ஆனால் அரண்மனைப்பணியாளர்களுக்கு அவளை நன்குதெரியும். அங்கு நிகழ்வதும் தெரியும். அவர்கள் முன் அது நிகழ்ந்தாகவேண்டும். அந்நிகழ்வு அவர்களின் கற்பனை வழியாக பெருகிப்பெருகிச் செல்லும். இனி எவராலும் அதை அழிக்க முடியாது. திரும்பத்திரும்ப அது சுநீதியிடம் வந்து சேரும். எத்தனை விலக்கினாலும் மறையாது. ஒவ்வொருமுறையும் மேலும் வளர்ந்திருக்கும்.

ஒன்றும் செய்வதற்கில்லை என்று உணரும்போது மட்டும் எழும் ஆழ்ந்த அமைதியை உத்தானபாதன் அடைந்தான். தன் தனியறைக்குச் சென்று ஆடையணிகளை கழற்றிவிட்டு அமர்ந்துகொண்டான். அவன் உள்ளத்தை உணர்ந்த அணுக்கச்சேவகன் ஊற்றித்தந்த மதுவை அருந்திவிட்டு படுக்கையில் படுத்து கண்களை மூடிக்கொண்டான். மது அவனுக்கு எதையுமே அளிப்பதில்லை. மது அருந்தியிருக்கிறோம் என்னும் உணர்வு மெல்லிய விடுதலையை அளிக்கும்.

அணுக்கச்சேவகனின் மெல்லிய குரலைக்கேட்டு அவன் கண்விழித்தான். திரைச்சீலை போல ஆடியபடி அவன் நிற்பதாகத் தோன்றியது. “சொல்” என்றான். “இளவரசர் வந்திருக்கிறார்.” அச்சொல்லைக் கேட்டதுமே அது துருவன்தான் என அவன் உணர்ந்தான். அன்னையின் ஆடைபற்றி நின்ற துருவனின் கண்களில் இறுதியாக அவன் பார்த்தது ஒரு எரிதலை. அவனைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்திருக்கிறது அகம்.

“வேண்டாம். நான் ஓய்வெடுக்கிறேன்” என்றான் உத்தானபாதன். தலைவணங்கி அவன் சென்றதுமே நான் அஞ்சுகிறேனா, என் மைந்தனையா என்ற எண்ணம் எழுந்தது. மறுகணம் ஒருபோதும் அவனை அஞ்சவேண்டியதில்லை என்று எண்ணிக்கொண்டான். துருவனைப்போன்ற மைந்தன் எந்நிலையிலும் தந்தையை அவமதிக்கத் துணியமாட்டான். தந்தை வருந்தும் ஒன்றைச்செய்ய நினைத்தாலும் அவனால் முடியாது. ஏனென்றால் அவன் சுநீதியின் மைந்தன். எழுந்து “வரச்சொல்” என்று சொல்லிவிட்டு தன் மேலாடையை எடுத்து அணிந்துகொண்டான்.

துருவன் உள்ளே வந்து அமைதியாக தலைவணங்கினான். உத்தானபாதன் கைதூக்கி சொல்லில்லாமல் ஆசியளித்தபின் ஒருகணம் அவன் பார்வையைச் சந்தித்து திடுக்கிட்டு விலகிக்கொண்டான். அப்போதிருந்த அதே நோக்கு சித்திரத்தில் இருப்பதுபோல அப்படியே இருந்தது அவ்விழிகளில். ஒருவினா, அல்லது ஒரு பெரும் திகைப்பு, அல்லது ஓர் அறைகூவல். திருப்பும்தோறும் வண்ணம் மாறும் வைரம்போன்ற விழிகள்.

என்ன கேட்கப்போகிறான்? என்னை ஏன் வெறுக்கிறீர்கள் என்றா? அவன் சுநீதியின் மைந்தன் என்றால் அதைத்தான் கேட்பான். மிகநேரடியாக. அந்த நேரடித்தன்மை காரணமாகவே திரும்பமுடியாத சுவரில் முட்டச்செய்து கடும் சினத்தை மூட்டுவான். அவனை அச்சினம் மேலும் சிறுமை கொள்ளச்செய்வதனால் அதை வெல்ல அவன் துருவனைத்தான் அவமதிப்பான். அதுவே நிகழவிருக்கிறது. ஆனால் அவன் விழிதூக்கி நோக்கியபோது அறிந்தான். அது வேறு சிறுவன் என. அந்த மெல்லிய உடலைக் கிழித்து வீசிவிட்டு உள்ளிருந்து முற்றிலும் புதிய ஒருவன் பிறந்து வந்து நின்றிருந்தான்.

“அன்னையிடம் கேட்டேன் தந்தையே, நான் இப்புவியில் அடைய முடியாதது எது என்று. மானுடர் அடையமுடிவது அனைத்தையும் நான் அடையமுடியும் என்றாள். இல்லை, அதுவல்ல பதில் என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். இப்புவியிலுள்ள அனைத்துமே மானுடர் அடையக்கூடுவதுதான். அதன்பொருட்டே அவை இங்கு உள்ளன. ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஒருபோதும் அடையமுடியாத ஒன்று உண்டு என நான் உணர்கிறேன்.”

அதைச் சொல்பவன் ஐந்துவயதான சிறுவன் என்று நம்ப அவன் சிந்தை தயங்கியது, அதற்குள் உணர்ச்சி அதை ஏற்றுக்கொண்டுவிட்டது. காலகாலங்களுக்கு ஒருமுறைதான் மாபெரும் வினாக்கள் மானுட உள்ளங்களில் முற்றிலும் குவிகின்றன. அக்கணமே அவை தடுக்கவியலாத ஆற்றலாக ஆகிவிடுகின்றன. அவற்றால் மலைகளை அசைக்க முடியும். வானை துளைத்தேறமுடியும். படைத்து அழித்து விளையாடும் பரம்பொருளையே வரவழைத்து விடைசொல்லவைக்க முடியும். ககனவெளியில் எங்கோ கூர்மைகொள்ளும் அவ்வினா அங்கே ஒரு மானுட உடலை தேர்ந்தெடுக்கிறது. அது ஆணா பெண்ணா குழந்தையா பெரியவனா என்று பார்ப்பதில்லை.

“தந்தையே, இப்புவியில் அனைத்தையும் வெல்ல என்னால் முடியும் என நான் இன்று சற்றுமுன் உணர்ந்தேன்” என்றான் துருவன். “இளைய அன்னை என்னை அவமதித்தபோது அவர்களுக்கு எதிரக என்னுள் இருந்து தடைகளைமீறிப் பொங்கி எழுந்த சினத்தின் பேராற்றலைக் கண்டு நானே அஞ்சினேன். அந்த ஆற்றலுக்கு முன் நீங்கள் ஆண்டுகொண்டிருக்கும் இந்தச் சின்னஞ்சிறிய நாடும் இதன் அரியணையும் ஒரு பொருட்டே அல்ல. இந்தப் பாரதவர்ஷமேகூட என் காலடி மண்ணுக்கு நிகர்தான்.”

அவன் விழிகளை நோக்கி உத்தானபாதன் அகம் உறைந்து அமர்ந்திருந்தான். மிக மெல்லிய குரலில் அத்தனை ஆற்றல் திகழமுடியுமென்பதை உத்தானபாதன் அறிந்தான். துருவன் “ஏனென்றால் என்னால் எதையும் செய்யமுடியும். இதோ இந்த வாளை உருவி உங்கள் நெஞ்சில் பாய்ச்சிவிட்டு ஒரு கணம்கூட மீண்டும் உங்களைப்பற்றி நினைக்காமலிருக்க முடியும். லட்சக்கணக்கான பச்சிளம் குழந்தைகளின் சங்கை சிறு நடுக்கமும் இல்லாமல் அறுக்க என் கைகளால் முடியும். கோடிக்கணக்கானவர்களைக் கொன்றுகுவித்து அச்சடலங்களின் நடுவே அவர்களின் மனைவியரின் சாபச்சொற்கள் சூழ சஞ்சலமின்றி என்னால் துயில முடியும்.”

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

உத்தானபாதனின் விழிகளை நேருக்குநேர் நோக்கி துருவன் சொன்னான் “என் ஆணையை எளிய உயிர்கள் மீறமுடியாது. இப்போதே உங்கள் படைத்தலைவனை கைசொடுக்கி அழைத்து உங்களையும் உங்கள் இரு அரசிகளையும் மைந்தனையும் கொல்லும்படி ஆணையிடுகிறேன். அவன் தன் குலதெய்வத்துக்குப் பணிவதுபோல எனக்குப் பணிவான்” . தன்னையறியாமலேயே கைகூப்பி “ஆம்” என்றான் உத்தானபாதன்.

“தந்தையே, இப்புவியிலுள்ள எல்லாம் என் கையருகே என்றால் நான் ஒருபோதும் வெல்லமுடியாத அந்த ஒன்று எது? அதை என் அன்னையிடம் கேட்டேன். உங்களிடம் கேட்கும்படி சொன்னாள். ஆகவேதான் இங்கு வந்தேன். சொல்லுங்கள், அது எது?”

உத்தானபாதன் கூப்பிய கை நடுங்க “வேண்டாம் மைந்தா” என்றான். “அதுவன்றி அனைத்துமே உன்னால் அடையக்கூடுவது என்றால் அதை அறிந்து என்ன பயன்?” சொல்லநினைப்பதற்கெல்லாம் சொற்கள் அமையாத பெருந்தவிப்பு அவன் உடலில் அசைவாக அலைமோதியது.

எளிய புன்னகையில் துருவனின் இதழ்கள் வளைந்தன. “தந்தையே, மாமனிதர்களின் உள்ளம் செயல்படுவதை நீங்கள் உணர முடியாது. நான் இப்புவியில் யுகயுகங்களுக்கொருமுறை பிறப்பவன். மானுடம் என்றும் நினைத்திருக்கும் பெயர் நான். மானுடமும் இப்புவியும் காலத்தில் ஒரு வெற்றுக் குமிழியாக வெடித்தழிந்தாலும் எஞ்சி என்றுமிருப்பவன். ஒரு கண்ணிமைப்பால் அடையக்கூடுவனவற்றில் என்னைப்போன்றவர்களின் சித்தம் தங்காது.”

“நீ யாராக இருந்தாலும் என் மைந்தன்” என்றான் உத்தானபாதன். “நீ நானேதான். நான் செல்லக்கூடும் எல்லையற்ற பாதையில் நெடுந்தொலைவில் எங்கோ நீ இருக்கிறாய் என்றாலும் உன்னில் நானே இருக்கிறேன். என்றும் நான் என்னுள் உணரும் எல்லையைத்தான் உனக்கும் இறைவல்லமைகள் அமைத்திருக்கும்.” கூர்ந்து நோக்கும் மைந்தனின் விழிகளைக் கண்டு “நீ அனைத்தையும் அடைவாய், நிலைபேறு ஒன்றைத்தவிர” என்றான்.

துருவனின் விழிகளில் மிகமெல்லிய அசைவொன்று நிகழ்ந்ததை அறிந்ததும் பெரும் களிப்பு உத்தானபாதன் நெஞ்சுக்குள் ஊறியது. இதோ நான் என் விராடவடிவையே வென்றுவிட்டிருக்கிறேன். ஒருகணமேனும் அவனைக் கடந்துவிட்டிருக்கிறேன். “மைந்தா, என்றும் நீ என்னைப்போல் அலைபாய்ந்துகொண்டுதான் இருப்பாய். நான் விருப்புவெறுப்புகளில் அலைபாய்ந்தேன். நீ அனைத்து இருமைகளையும் கடந்துசெல்லக்கூடும். காலத்தையும் வெளியையும், இருப்பையும் இன்மையையும் நீ ஒன்றாக்கிக்கொள்ளவும்கூடும். ஆயினும் உன்னில் ஓர் நிலையின்மை இருந்துகொண்டேதான் இருக்கும்.”

“நிலைபேறன்றி எதையுமே நான் நாடமுடியாது என்கிறீர்கள் தந்தையே. அதுவே உங்கள் அருள்மொழி என்று கொள்கிறேன். அறிக இவ்வுலகு! அறிக தெய்வங்கள்! அதுவன்றி பிறிது கொண்டு அமையமாட்டேன்” என்று சொல்லி தன் இடைசுற்றிய ஆடையை எடுத்தான். அதன் நுனியைக் கிழித்து கௌபீனமாக்கி கட்டிக்கொண்டு ஒரு விழியசைவால்கூட விடைபெறாமல் திரும்பி நடந்துசென்றான்.

அவன் பின்னால் ஓடவேண்டும் என்று பதைத்த கால்களுடன் அசையாத நெஞ்சுடன் உத்தானபாதன் அங்கேயே நின்றான். பின்னர் உரத்தகுரலில் “துருவா, மைந்தா” என்று கூவியபடி இடைநாழிக்குப் பாய்ந்தான். அவன் அரண்மனை முற்றத்துக்கு வரும்போதே எங்கும் செய்தி பரவிவிட்டிருந்தது. அரண்மனையின் மரத்தரை அதிர்ந்து பேரொலி எழுப்ப அமைச்சர்களும் தளகர்த்தர்களும் சேடிகளும் சேவகர்களும் முற்றத்தைச் சூழ்ந்தனர். திகைத்து சொல்லிழந்து நின்றிருந்த அவர்கள் நடுவே எவரையும் நோக்காமல் நடந்து சென்றான். அரண்மனை முற்றத்தில் நின்றிருந்த பட்டத்துயானை மட்டும் அவனைக் கண்டு துதிக்கை தூக்கி பிளிறியது.

நகைகளும் சிலம்பும் ஒலிக்க மூச்சிரைக்க ஓடிவந்த சுருசி முற்றத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் அவனைக்கண்டு நெஞ்சில் கைவைத்து திகைத்து நின்றாள். அவளுக்குப்பின்னால் வந்த உத்தமனை நோக்கி “என்னுடன் வா” என்று கூவி பின்னால் ஓடினாள். அவன் காவலர்முகப்பை கடக்கும்போது அவன் முன் வந்து “உத்தமரே, எளியவளாகிய எனது மைந்தனுக்கு உங்கள் வாழ்த்துக்களை அளியுங்கள்” என்று கூவி மண்ணில் முழந்தாளிட்டு அவன் கால்களைத் தொட்டாள்.

துருவன் புன்னகையுடன் திரும்பி உத்தமன் தலையைத் தொட்டு “நலம் பெறுக!” என்று வாழ்த்தினான். சுருசியின் தலையைத் தொட்டு “நிறைவடைக” என்று வாழ்த்திவிட்டு நடந்து சென்றான். நகரெங்கும் செய்திகேட்ட மக்கள் அவன் செல்லும் சாலையின் இருமருங்கும் நின்று கைகூப்பி வாழ்த்தொலி எழுப்பினர். அன்னையர் கண்ணீர் விட்டு அழுதனர். நகரெல்லை நீங்கி காட்டுக்குள் சென்று அவன் மறையும்வரை நகர்மக்கள் உடனிருந்தனர். காட்டுக்குள் அவன் சென்றதைக் கண்ட மலைவேடர் வந்து செய்தி சொன்னார்கள். பிறகு உத்தானபாதன் அவனைப்பற்றி கேள்விப்படவேயில்லை.

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்