பிரயாகை - 16
பகுதி மூன்று : இருகூர்வாள் – 6
அர்ஜுனன் ஈரமான கைகளை முன்னாலிருந்த இருக்கையின் மேல் விரிக்கப்பட்டிருந்த பட்டில் துடைத்துக்கொண்டபடி சௌனகர் மேல் விழி ஊன்றி காத்து நின்றான். அவன் நினைத்ததைவிட அவர் எழுவதற்கு தாமதமாகியது. சால்வையைச் சுற்றியபின் மீண்டும் விதுரரிடம் எதையோ கேட்டார். அவர் அதனாலொன்றுமில்லை என்பதுபோல தலையசைத்து பதில் சொன்னார்.
ஆனால் அக்கணம் விதுரரின் விழிகள் வெண்திரையை நோக்கிச் சென்று மீண்டதை அர்ஜுனன் கண்டான். மீண்டும் சௌனகர் ஏதோ கேட்டபின் எழப்போகும்போது திரைக்கு அப்பாலிருந்து “அவையை வணங்குகிறேன்” என்று குந்தியின் குரல் கேட்டது. “பிதாமகரின் சொல் வாழவேண்டும் என்றே எளியவள் விரும்புகிறேன். அச்சொல்லை இறைநெறியாகக் கொள்வதும் அதன்பொருட்டு உயிர்துறப்பதும் என் மைந்தரின் கடன்.” அச்சொற்களில் இருந்த உறுதியே அதை உடனே அவள் மறுக்கப்போகிறாள் என்பதற்கான ஆதாரம் என எண்ணி அர்ஜுனன் புன்னகைசெய்த கணமே பீமனும் புன்னகை செய்தான்.
“ஆனால் அனைத்தையும்விட முதன்மையானது இந்நாட்டுக்கும் தங்கள் முன்னோருக்கும் அவர்கள் கொண்டிருக்கும் கடன். ஷத்ரியர்களென அவர்கள் பிறந்திருப்பதே அக்கடனை நிறைவேற்றத்தான். அவையினரே, பராசர ஸ்மிருதியின்படி ஷத்ரியனின் கடமைகள் மூவகை. ஜன்மம், பைத்ருகம், ஸ்வார்ஜிதம். பிறப்பால் அவன் அடையும் கடமைகளே ஜன்மம். அவன் ஷத்ரியனாக இருப்பதனாலேயே நிறைவேற்றியாகவேண்டியவை அவை. குலமுறையாக வந்த பொறுப்புகளை கொண்டு குடிகளைக்காத்து அறத்தின்படி நிற்றல் எனப்படும்.”
குந்தி தொடர்ந்தாள் “மூத்தார் அளித்த ஆணைகள் பைத்ருகம் எனப்படுகின்றன. அவை இரண்டாமிடத்திலேயே வருகின்றன. தானே அளித்த வாக்குறுதிகள் ஸ்வார்ஜிதம். தன்னேற்புக் கடன்களுடன் மூத்தார்கடன்கள் முரண்படுமென்றால் மூத்தார்கடனையே கொள்ளவேண்டும். மூத்தார்கடனுடன் பிறப்புக்கடன் முரண்படுமென்றால் பிறப்புக்கடனையே கொள்ளவேண்டும். இங்கு என் மைந்தர் அவர்களுக்கு பிறப்பால் அளிக்கப்பட்ட கடனையே முதன்மையாகக் கொள்வார்கள். அதுவே முறை.” அவள் குரலில் இருந்த திடமான அமைதி அங்கிருந்தவர்களின் முகங்களையும் தீவிரமாக ஆக்கியது. அனைவரும் திரையை நோக்க சகுனி மட்டும் தன் முன்னாலிருந்த தரையை நோக்கியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.
குந்தி மெல்லிய திடமான குரலில் சொன்னாள். அச்சொற்கள் முகமில்லாது ஒலித்தமையாலேயே மறுக்கமுடியாத தன்மை கொண்டிருந்தன. “ஆதிமானுஷிகமாக கிடைக்கும் அரியணை என்பது தலைமுறைதலைமுறையாக அப்படியேதான் இருக்கும் என்று நீதிநூல்கள் சொல்லவில்லை. பராசரநீதி அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் சந்திரதேவநீதி அதைப்பற்றி தெளிவான விளக்கத்தை சொல்கிறது. ஆதிமானுஷிகமாக கிடைத்த அரசை ஒருவன் பன்னிரண்டாண்டுகாலம் ஆண்டுவிட்டான் என்றால் அவன் அரியணை நிலைத்துவிடுகிறது. அவனுடைய மைந்தன் ஆதிதெய்வீகமாகவே அம்முடியுரிமையைப் பெறுகிறான். ஆகவே என் மைந்தன் தருமன் இறையாணையால் இவ்வரசைப் பெற்றிருக்கிறான்.”
அந்த ஐயமே அற்ற சொல்லாட்சிகளை அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். எத்தனைமுறை தனக்குள் அக்காட்சியை நடித்து அச்சொற்களை சொல்லிக்கொண்டிருந்தால் அது கைவந்திருக்கும்! தருமன் பிறந்த மறுகணம் முதல் குந்தி அச்சொற்களை கோர்க்கத் தொடங்கியிருப்பாள். மறுபக்கம் சகுனியும் தனக்கான சொற்களை கோர்த்திருப்பார். இருபக்கமும் பதினெட்டாண்டுகாலம் ஊறித் தேங்கி புடமிடப்பட்ட சொற்கள். நிகரான எடைகொண்டவை. நடுவே துலாக்கோலின் முள் அசைவற்று நிற்கும்.
“பிதாமகரை வணங்குகிறேன்” என்று குந்தி தொடர்ந்தாள். “அவரது சொற்களை என் மைந்தர் வைரமுடி என தலைமேல் சூடிக்கொள்வார்கள். ஆனால் நான் அறியவிழைவது பிதாமகர் அளித்த அந்தச் சொல் காந்தார இளவரசருக்கு அளிக்கப்பட்டதா, அன்றி என் கணவரான மறைந்த மன்னர் பாண்டுவுக்கு அளிக்கப்பட்டதா?” அவள் சால்வையை சரிசெய்தபடி இருக்கையில் சற்று முன்னால் சாய்ந்து செவிகூரும் மெல்லிய ஒலியைக்கூட கேட்கமுடிந்தது.
அந்த வினாவை சிலகணங்களுக்குப்பின்னரே அனைவரும் முழுமையாக உணர்ந்தனர். எங்கோ அகம் அலைந்துகொண்டிருந்தமையால் அதைக்கேட்டதும் சிலகணங்கள் தடுமாறிய பீஷ்மர் “அன்று அந்தச் சூழலில் எவரிடம் அதைச் சொன்னேன் என்று நினைவில்லை… நான் அதை சகுனியிடம் சொன்னேன் என்பது உறுதி” என்றார். “அவனை நான் நெஞ்சோடு அணைத்தேன். மைந்தன் என என் எஞ்சியநாளெல்லாம் அவனையும் சொல்லிக்கொள்வேன் என்று சொன்னேன். அவன் விழிநீரை என் தோள்கள் உணர்ந்தன. அவன் தோள்களை இறுக்கியபடி அவனிடம் அச்சொற்களை சொன்னேன்.”
“பிதாமகரே, எளியவளை பொறுத்தருளுங்கள். அந்த வாக்குறுதியை மீண்டும் என் கணவர் பாண்டுவிடம் சொன்னீர்களா?” என்றாள் குந்தி. பீஷ்மரின் தலை முதியவர்களுக்குரிய முறையில் மெல்ல நடுங்கியது. வளைந்த விரல்கள் கொண்ட வலக்கையை உதடுகள் மேல் வைத்து சிந்தனை செய்து “இல்லை, நான் இருமுறை கூறியதாக நினைவில்லை” என்றார். குழப்பத்துடன் தாடியை தடவியபடி “நெடுங்காலமாகிறது” என முனகினார்.
“பிதாமகரே, தங்கள் பாதங்களைப் பணிகிறேன். அந்த வாக்குறுதியை நீங்கள் சகுனித்தேவருக்கு அளித்தபோது அருகே மாமன்னர் பாண்டு இருந்தாரா?” என்றாள் குந்தி. சிலகணங்கள் அமைதிக்குப்பின் “இல்லை, அவ்வறையில் அவன் இல்லை” என்றார் பீஷ்மர். மீண்டும் தயங்கி தன் பழுத்த விழிகளைத் திருப்பி “விதுரா, அந்த அவையில் எவர் இருந்தார்கள்?” என்றார்.
விதுரர் எழுந்து வணங்கி “பிதாமகரே, அந்த அவையில் பேரரசி சத்யவதி இருந்தார். நானும் தாங்களும் காந்தார இளவரசரும் இருந்தோம். பேரமைச்சரான காலம்சென்ற யக்ஞசன்மர் இருந்தார். தாங்கள் காந்தார இளவரசருக்கு வாக்களித்தீர்கள். தங்கள் சொற்களை அப்படியே அன்றே சென்று ஏட்டில் பதிவுசெய்தேன். அதை நானும் யக்ஞசன்மரும் முத்திரையிட்டு அரச ஆவணமாக ஆக்கினோம்.”
விதுரர் எழுந்து ஒரு ஓலையை பீடத்திலிருந்து எடுத்து “இதுதான் தாங்கள் சொன்ன வரிகள் பிதாமகரே” என்றபின் குரலை மாற்றி “அந்த வஞ்சினம் அவ்வாறே இருக்கட்டும் மகனே! இங்கே நீ பதினெட்டு வருடம் காத்திரு. வெறும் பதினெட்டே வருடங்கள். உன் தமக்கையின் வயிற்றில்பிறந்த மைந்தன் முடிசூடியதும் நீ நாடு திரும்பலாம். இது என் வாக்கு” என்று வாசித்து நிமிர்ந்தார். அவையினர் முகங்களை நோக்கியபின் “அப்போது பேரரசி சத்யவதி சொன்ன சொற்களையும் குறித்திருக்கிறோம்” என்று மீண்டும் வாசித்தார். “சௌபாலரே, இந்த நாட்டில் என் மைந்தனின் வாக்கு என்பது ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்துவது. அது அஸ்தினபுரியின் தெய்வங்களின் வாக்குறுதி.”
விதுரர் அமர்ந்ததும் குந்தி “தாங்கள் அளித்த வாக்குறுதி சகுனித்தேவருக்கு மட்டுமே. அதையே பேரரசி உறுதிசெய்திருக்கிறார். அமைச்சர்கள் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அச்செய்தி மாமன்னர் பாண்டுவுக்கு சொல்லப்பட்டதா என்றே நான் கேட்கிறேன்” என்றாள். பீஷ்மர் மெல்லியகுரலில் “நான் சொல்லவில்லை” என்றார். “தங்கள் சொற்களை அவ்வண்ணமே அவை கொள்ளட்டும். வணங்குகிறேன் பிதாமகரே” என்றாள் குந்தி.
உள்ளக்கிளர்ச்சியால் அர்ஜுனன் ஒழுக்குமிக்க நீரோடையில் நிற்பவனைப்போல கால்கள் மண்ணில் நிலைக்காமல் தவித்து முன்னகர்ந்து முன்னாலிருந்த இருக்கையின் பின்பக்கத்தை பிடித்துக்கொண்டான். பீமன் திரும்பி நோக்கி புன்னகை செய்தான். சகுனி எழுந்து “எவரிடம் சொல்லப்பட்டாலென்ன? அது பிதாமகரின் சொல்” என்று உரக்கக் கூவினார். “அவரது சொல் இந்நாட்டின் தெய்வங்களின் சொல் என்று சொன்னவர் பேரரசி. அவர் அளித்த மணிமுடி இது. இந்நாட்டில் பிதாமகரும் பேரரசியும் சொன்ன சொல்லுக்கு என்ன மதிப்பு என்றே நான் அறிய விழைகிறேன்” என்றார்.
சகுனியை முதல்முறையாக சினம்கொண்ட நிலையில் அர்ஜுனன் கண்டான். சிவந்து பழுத்த நிலையில் அவரில் எப்போதுமிருக்கும் உயிரற்ற வெளிறல் மறைந்து அவர் அழகனாக தோற்றமளித்தார். அவரது முகத்தில் எப்போதும் இறுகியே தெரியும் தசைகளெல்லாம் உருகி வழிபவை போல இளகின. கைகளை வீசி “எனக்களித்த சொல்லுக்கு பிதாமகர் மட்டும் பொறுப்பா? இல்லை, அஸ்தினபுரியின் மைந்தரும் அதற்குப்பொறுப்பா? அதைச்சொல்லுங்கள்” என்றார்.
அவையை நோக்கி நடந்து நடுவே நின்று மூச்சிரைக்க “அவையோரே, அச்சொற்களுக்கு அவர் மட்டும் பொறுப்பென்றால் இக்கணமே அவர் இங்கிருக்கும் பிதாமகர் நிலையை உதறவேண்டும். மரவுரி அணிந்து காடேகவேண்டும். மீண்டும் இந்நகரில் அவர் நுழையக்கூடாது. அவருக்கான நீர்க்கடன்களை இங்குள்ள மைந்தர் எவரும் செய்யலாகாது” என்று கூவினார். அகவிரைவெழுந்த உடல் படபடக்க சொற்களும் பதறின.
அர்ஜுனன் சபையைச் சூழ்ந்து நோக்கிக்கொண்டிருக்கையில் அவனருகே இருந்து “சபையோரே” என்று தருமனின் நடுங்கும் குரல் எழுந்தது. அவன் கைகளைக் கூப்பியபடி முன்னகர்ந்தான். “மூத்தோர் இருக்க நான் பேசுவதற்கு என்னை பொறுத்தருள்க. எனக்கும் என் தம்பியருக்கும் இறைச்சொல்லுக்கு நிகரானது பிதாமகரின் சொல். பிதாமகர் அளித்தவாக்கின் ஒவ்வொரு சொல்லும் இக்குலத்தினருக்கு எண்ணத்திலும் மீறமுடியாத ஆணையே ஆகும்” என்றான்.
சகுனி அவனை நோக்கி திரும்பினார். தருமன் “பிதாமகர் காந்தார இளவரசருக்கு வாக்குறுதி அளித்திருந்தார் என்றால் நான் அதை சிரமேற்கிறேன். இம்மணிமுடியை நான் கோரவில்லை. அவரது சொல்லை மீறி அதை நான் ஏற்றாகவேண்டுமென எவரேனும் சொன்னால் இச்சபைக்கு வெளியே சென்று தர்ப்பைமேல் வடக்கிருந்து உயிர்விடுவேன். அறம் மீது ஆணை. எந்தை மேல் ஆணை” என்றான். அவன் உடலிலும் முகத்திலும் நடுக்கமோ தயக்கமோ இருக்கவில்லை. குரல் உறுதியுடன் ஒலித்தது.
தருமன் எண்ணத்தை முன்னரே அறிந்திருந்தும்கூட அதை அப்போது கேட்கையில் அர்ஜுனன் மேனிசிலிர்த்தான். அவனை அறியாமலேயே தருமனை நோக்கி மெல்ல நகர்ந்தான். அவன் தோளின் வெம்மை தன் தோளில் படும்விதமாக. சபையெங்கும் தருமனின் சொல் உருவாக்கிய மெல்லிய விதிர்ப்பை கண்டான். சகுனியேகூட வியந்தபடி சற்றுத்திறந்த வாயுடன் நோக்கியிருந்தார். துரியோதனன் விழிகள் தருமன் மேல் திகைத்தபடி நிலைத்திருந்தன.
“இளையவரே, நீங்கள் சொல்வதென்ன?” என்றார் விதுரர் பீமனிடம். “நான் என் அன்னைக்கு இன்னொரு வாக்கை அளித்திருந்தேன்” என்றான் பீமன். “ஆனால் இன்று என் தமையன் இச்சபையில் எழுந்து என்னையும் தானென்றே உணர்ந்து சற்றும் ஐயமின்றி சொன்ன அச்சொல் எனக்கு இம்மண்ணில் தெய்வங்கள் அளித்த வரம். அவரது எண்ணமும் சொல்லும் இப்பிறவி முழுக்க என்னை கட்டுப்படுத்தும். அவரது விருப்பமேதும் எனக்கு ஆணையே. அதை மீற என் அன்னையோ நான் வழிபடும் தெய்வமோ எனக்கு ஆணையிடுவாரென்றால் அவர் முன் என் கழுத்தை அறுத்துவிழுவேன். அறிக என்னை ஆளும் கொடுங்காற்றுகள்” என்றான்.
விதுரர் விழி தன்னை நோக்கி திரும்புவதற்குள் அர்ஜுனன் தன் நெஞ்சில் கைவைத்து முன்னகர்ந்து “என் சொற்கள் ஒவ்வொன்றையும் இளையதமையன் பீமசேனரே சொல்லிவிட்டார் அமைச்சரே. அவரைவிட சொல்லறிந்தவன் அல்ல நான்” என்றான். “அறமெனப்படுவதும் நெறியெனப்படுவதும் இறையெனப்படுவதும் என் தமையனே. பிறந்து நெறிநின்று மறையும் இச்சிறு வாழ்வில் எங்கும் எவரிடமும் கடன் என பிறிதேதும் எனக்கில்லை. அறிக என் வில்!”
பீஷ்மரின் கண்களில் இருந்து கண்ணீர் வழியத்தொடங்கியது. முதுமையின் விளைவான தயக்கமின்மையால் அவர் அதை மறைக்கவோ நிறுத்தவோ முயலவில்லை. சுருங்கிய கன்னங்களில் வழிந்து வெண்தாடி மயிர்களில் பரவி துளித்து நின்ற கண்ணீருடன் நெஞ்சில் கைசேர்த்து அவர் விசும்பி அழுதார். அவர் தொண்டையை கனைக்கும் ஒலியும் மூக்கை உறிஞ்சும் ஒலியும் அமைதி கனத்து நிறைந்த கூடத்தில் ஒலித்தன.
பட்டுத்திரைக்கு அப்பால் குந்தி மெல்லச் செருமும் ஒலி கேட்டு அத்தனை தலைகளும் அத்திசை நோக்கி திரும்பின. திரைச்சீலையை அவள் மெல்லத் தொட்டு அலையெழுப்பினாள். அது அவர்கள் தன்னை முற்றிலும் விழியும் செவியும் கூர்வதற்காக என அவன் அறிந்தான். “இச்சொற்களைக் கேட்பதற்காகவே நான் உயிர்வாழ்ந்தேன் என எண்ணுகிறேன்” என்று அவள் மெல்லிய குரல் எழுந்தது. “என் மைந்தர் என்றும் அவர்களின் தந்தையின் இடத்தில் தமையனை கொண்டிருக்கவேண்டுமென்று வேண்டுகிறேன். அவர்களுக்கு அனைத்து நலன்களும் சூழ்வதாக! விண்ணுலகிலிருந்து மாமன்னர் பாண்டு அவர்களை வாழ்த்தட்டும்!”
அவள் சொல்லவருவதென்ன என்று தெரியாமல் அவை திகைப்பதை அர்ஜுனன் கண்டான். குந்தி பெருமூச்சுவிட்டாள். “ஆனால் நான் சொல்வது ஒன்றே. மாமன்னர் பாண்டுவுக்கு ஓர் மணிமுடி அளிக்கப்பட்டது. அது பதினெட்டு வருடங்களுக்கு மட்டுமே என்ற நெறி அவரிடம் சொல்லப்படவில்லை. அதை பிதாமகர் காந்தார இளவரசருக்கு அளித்ததை மாமன்னர் பாண்டு அறியவில்லை என்றால் அதற்கு என்ன பொருள்? தனக்கு அரசுப்பட்டம் அளிக்கப்பட்டது என்றும் மைந்தன் அரியணை ஏறுவான் என்றும் நம்பியவராக அவர் இவ்வுலகை நீத்தார் என்றால் நாம் இறந்தவருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி ஒன்றை மீறுகிறோம் அல்லவா?”
அந்த வினாவிற்குப் பின்னாலிருந்த திட்டத்தை நன்கறிந்திருந்தபோதும் அர்ஜுனன் அதைக்கேட்டு படபடப்படைந்தான். “அவையோரே, மாமன்னர் பாண்டுவின் ஆன்மா அந்த விழைவைக்கொண்டிருந்தது என்றால் அது ஃபுவர்லோகத்தில் நிறைவின்மையை அடையும் என்றல்லவா நூல்கள் சொல்கின்றன?” குந்தியின் குரல் ஒலி எழாமலேயே ஓங்கியது. “தென்புலத்தார், தெய்வம், மூத்தோர், முனிவர் என்றல்லவா நூல்கள் மானுடர் கடன்பட்டிருப்போரின் வரிசையை வகுக்கின்றன? தென்புலம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்கை மீற மண்ணில் எவருக்கும் உரிமை இல்லை அவையினரே. உண்டென்று நூல் சொல்லுமென்றால் சொல்லுங்கள். நான் அவை விட்டு எழுகிறேன். இந்நகர் விட்டு நீங்குகிறேன். நீத்தோரைக் கைவிடும் நிலத்தில் என் கால் பதியாமலாகட்டும்.”
அவை கடும்குளிரில் விரைத்தது போல அமர்ந்திருந்தது. கிருபரும் சௌனகரும் கைகூப்பினர். குந்தியின் குரல் தணிந்தது. “நான் இங்கே பேசுவது என் மைந்தனுக்குரிய மணிமுடிக்காக அல்ல. அவன் சதசிருங்கம் சென்று மரவுரி அணிந்து வாழ்ந்தால் எனக்கொன்றும் இல்லை. மானுடர் தங்கள் வாழ்வை தாங்கள் தேர்வுசெய்யலாம். நான் வாதிடுவது உலகுநீத்த என் கணவருக்காக. அவரது நெஞ்சில் நிறைந்த விழைவு புறக்கணிக்கப்பட்டு அவர் நிறைவழியக்கூடாதென்பதற்காக. மண்ணில் வாழும் மக்களின் அதிகார விழைவால் விண்ணேறிய என் கொழுநருக்கு வஞ்சம் இழைக்கப்படலாகாது என்பதற்காக. ஏனென்றால் மண்ணில் அவருடைய குரலாக எஞ்சியிருப்பவள் நான் மட்டுமே. நான் அவருக்காகப் பேசியாகவேண்டும்.”
குந்தியின் குரல் உடைந்தது. மெல்லிய தேம்பலை வாயை ஆடையால் மூடி அவள் அடக்குவதை கேட்கமுடிந்தது. சௌனகர் எழுந்து உரக்க “நான் அமைச்சன்! ஆணையை நிறைவேற்றவேண்டியவன். ஆனால் இச்சபையில் நான் என் தரப்பை சொல்லியாகவேண்டும். மாமன்னர் பாண்டுவிடம் வாக்கு சொல்லப்படவில்லை என்றால் அவர் விழைந்ததே நிகழவேண்டும். தருமர் அரசாளவேண்டும். இக்குலத்தின்மேல், இவ்வரியணைமேல் நீத்தார் சொல் விழலாகாது… அதை வெளியே அவைகொண்டிருக்கும் என் குலமும் ஏற்காது” என்றார். விதுரர் ஏதோ சொல்வதற்கு முன் அவர் கைதூக்கி மறித்து “அவ்வாறு நிகழுமெனில் நீத்தார் சொல் மறுக்கப்பட்ட இந்நிலத்தை விட்டு நானும் என்குலமும் விலகிச்செல்வோம். காட்டிலோ பாலையிலோ எங்கள் வாழ்க்கையை கண்டடைவோம். அறிக என் குலதெய்வங்கள்!” என்று கூவினார்.
சகுனி ஏதோ சொல்வதற்காக எழுவதற்குள் திரையைக் கிழிப்பதுபோல விலக்கியபடி சத்யசேனையும் சத்யவிரதையும் பாய்ந்து வெளியே வந்தனர். சத்யவிரதை கைகளை நீட்டியபடி உடைந்த குரலில் “இது சதி! முன்னரே தீர்மானிக்கப்பட்ட நாடகம் இது. இங்கே நெறிநூல்கள் இல்லையா? இந்தப் பழிகாரியின் பசப்பைக் கேட்டா இந்த அவை முடிவெடுக்கப்போகிறது?” என்று கூவினாள். “அமைச்சருடன் சேர்ந்து நாடகமாடுகிறாள்… இவள் யாதவப்பெண்ணா சூதப்பெண்ணா?” என்று கூவ மற்ற காந்தாரியரும் வெளியே வந்து “சதி. இதை ஒப்ப மாட்டோம்” என்று கூச்சலிட்டனர்.
திடமான தாழ்ந்த குரலில் திருதராஷ்டிரர் “துரியோதனா” என்றார். “அடுத்த சொல் பேசி திரைக்கு வெளியே நின்றிருக்கும் பெண் எவளாக இருந்தாலும் அவள் தலையை வெட்டி வீழ்த்து.” துரியோதனன் அக்கணமே தன் இடையில் இருந்த வாளை உலோக ஒலியுடன் உருவியபடி முன்னால் செல்ல காந்தாரியர் பதறியடித்து திரைக்குப்பின் சென்று மூடிக்கொண்டனர். அவர்களில் ஒருத்தி திரையைப்பிடித்திருந்தாள். அவள் கையுடன் சேர்ந்து திரை நடுங்கியது. துரியோதனன் “வெளியே எவரும் இல்லை தந்தையே” என்றபின் தலை தாழ்த்தி பின்னகர்ந்தான்.
திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் மெல்ல எழுந்து நின்று தன் கைகளை கூப்பினார். “அவையோரே, இங்கு மாமன்னர் ஹஸ்தி அமர்ந்த அரியணைக்கு அருகே நான் அமர்ந்திருக்கிறேன். என்றும் வாழும் நெறியும் அறமும் எதுவோ அது இங்கு வாழவேண்டுமென என் மூதாதையர் இட்ட ஆணையை என் குருதியில் கொண்டிருக்கிறேன். அதைத்தவிர எனக்கு முதன்மையானது பிறிதில்லை” என்றார்.
“இது பிதாமகரின் நாடு. அவரது சொல் நின்றாகவேண்டும். ஆகவே பாண்டுவின் மணிமுடியை முறைப்படி என் மைந்தன் பெற்றுக்கொள்ளட்டும்” என்றார் திருதராஷ்டிரர். “ஆனால் அரசியார் இங்கே சொன்னபடி என் இளையோனிடம் இம்மணிமுடி என்னிடம் மீளுமென்று சொல்லப்படவில்லை என்றால் அவன் வாழும் விண்ணுலகில் அவன் அமைதியிழக்கக் கூடும். அவையோரே, நாம் ஏதறிவோம் அவ்வுலகை? அங்கே என் பொருட்டு ஒருகணமேனும் என் இளையோன் துயர்கொள்வான் என்றால் இங்கே மானுடனாக நான் வாழ்ந்துதான் என்ன பயன்? இந்தப் பேருடலும் தலையும் மண்ணிலிருப்பதுபோல இழிவென்ன?”
இருகைகளையும் வானோக்கி தூக்கி செஞ்சதை விழிகள் கலங்கி வழிய திருதராஷ்டிரர் சொன்னார் “இங்கே வாழ்ந்தபோதெல்லாம் நிறைவிலாது உழன்றவன் என் தம்பி பாண்டு…” குரல் இடற அவர் நிறுத்திக்கொண்டார். குரல்வளை ஏறி இறங்கியது. செருமியபடி “இவ்வைந்து மக்களைப் பெற்றதன்றி வாழ்க்கையின் இன்பமெதையும் அறியாதவன் என் சிறுவன். அங்கே விண்ணக போகங்கள் சூழ இருந்தாலும் குனிந்து இம்மைந்தரைத்தான் நோக்கிக் கொண்டிருப்பான். அவன் உளம் வாட நான் ஒருநாளும் ஒப்ப மாட்டேன். அதை எவரும் எந்நெறியையும் சுட்டி என்னிடம் சொல்லவேண்டியதில்லை.”
உரத்த குரலில் திருதராஷ்டிரர் சொன்னார் “நான் நூலறிந்தவனல்ல. நான் காட்டுமிருகம். என் இச்சைகளின்படி செல்பவன், என் தசைகளால் வாழ்பவன். எதையும் நான் கருத்தில் கொள்ளப்போவதில்லை. எடுத்து வீசுங்கள் உங்கள் நூல்களை… நான் சொல்வது என் குருதியில் எழுந்த சொற்களை…” மேலும் சொற்கள் வராமல் கைகளை விரித்து ஆட்டினார். பின் மெல்ல அடங்கி பெருமூச்சு விட்டார். பெருமூச்சுகள் அவரது பெரிய நெஞ்சை அசைத்தன.
“அவையோரே, என் தம்பியின் தலையில் ஹஸ்தியின் மணிமுடியை முழுமனத்துடன்தான் வைத்தேன். அன்று நான் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் நினைவுறுகிறேன்.” திருதராஷ்டிரர் அச்சொற்களைச் சொன்னார் “நான் அஸ்தினபுரியின் அரசாட்சியை, ஹஸ்தியின் அரியணையை, குருவின் செங்கோலை உனக்கு அளிக்கிறேன். உன் புகழ்விளங்குவதாக! உன் குலம் நீள்வதாக! நீ விழைவதெல்லாம் கைகூடுவதாக! ஓம் ஓம் ஓம்! நான் சொன்ன சொற்கள் இவை.”
“ஆம், இம்மண்ணின் அனைத்து உரிமையும் அவனுக்கே என்று சொல்லி மண்ணுள்ளவரை அவன் குலம்வாழ்கவென்று வாழ்த்தி அளித்த என் அன்புக்கொடை இம்மணிமுடி. என் சிறுவனுக்களித்த கொடையில் ஒரு முன்விதியைச் சேர்க்கும் அற்பனா நான்? மண்ணில் ஒவ்வொருநாளும் அவனை எண்ணி ஏங்க என்னை விட்டுவிட்டு அவன் சென்றான். இங்கிருந்து அவனிடம் நான் வணிகம் பேசவேண்டுமா… எவரிடம் சொல்கிறீர்கள் அதை?” திருதராஷ்டிரர் தன் மார்பில் ஓங்கி அறைந்துகொண்ட ஒலி அவையை அதிரச்செய்தது. ”நான் விசித்திரவீரியரின் மைந்தன். ஹஸ்தியின் தோள்களைப்பெற்றவன். ஒருபோதும் சிறுமையை என் நெஞ்சு அறியாது.”
கைகளைத் தூக்கி திருதராஷ்டிரர் அழைத்தார் “மைந்தா!” துரியோதனன் வணங்கி “தந்தையே” என்றான். “இந்நாட்டின் இளவரசுப்பட்டத்தை நான் என் இளையோனின் மைந்தனும் குலமூத்தோனுமாகிய யுதிஷ்டிரனுக்கு அளிக்கிறேன். அவனுக்குரியது இம்மண். அவனும் அவன் குலமும் இதை ஆளட்டும். அவர்களின் புகழ் பாரதவர்ஷமெங்கும் பரவட்டும். விண்ணகத்தில் என் இளையோன் உளம் நிறையட்டும்” என்று சொல்லி கைகூப்பினார்.
துரியோதனன் சற்று முன்னகர்ந்து தலைவணங்கி “தந்தையே, உங்கள் ஆணை என் கடமை” என்றான். அவன் முகமும் உடலும் அமைதியாகவே இருந்தன. “ஆம், என் குருதி நீ. சிறியன உன் சிந்தையில் எழாது. மைந்தா, தருமனை கைப்பற்றி அழைத்துச்சென்று அங்கே கூடியிருக்கும் நம் குலமூத்தார் முன் நின்று நீயே என் முடிவை அறிவி. உன் கையால் இளவரசுக்கான மணிமுடியை அவன் தலையில் சூட்டு. இதோ, இது என் ஆணை. நீ உன் வெல்லமுடியாத கதாயுதத்துடன் அவன் அரியணைக்குக் காவலாக நின்றிருக்கவேண்டும். உன் ஆற்றலால் அஸ்தினபுரி என்றும் வெல்லவேண்டும்.”
“தங்கள் ஆணை தந்தையே” என்றான் துரியோதனன். கண்ணீருடன் துச்சாதனன் கைகூப்பினான். கௌரவர்கள் கைகூப்பி தலை தாழ்த்தினர். தன்னருகே தருமன் கண்ணீர் மார்பில் வழிய நின்றிருப்பதை அர்ஜுனன் கண்டான். திருதராஷ்டிரர் கைநீட்டி மகனை அழைத்தார். துரியோதனன் அவர் அருகே சென்றதும் அவன் தலைமேல் கையை வைத்து “மைந்தா, இந்த மண் மீது உனக்கு விருப்பிருந்ததா? இம்மணிமுடியை இழந்தமைக்காக வருந்துகிறாயா?” என்றார்.
துரியோதனன் “ஆம் தந்தையே. நான் நாடாள விழைந்தேன். என் மாமன் அவ்விழைவை இளவயதிலேயே என்னுள் விதைத்தார். இந்நாடு என்னுடையதென்றே நான் வளர்ந்தேன். இம்மணிமுடியை இழந்த துயரை எளிதில் என்னால் வெல்லவும் முடியாது. ஆனால் உங்கள் ஆணைக்கு அப்பால் என் எண்ணத்தில் ஒரு சொல்லும் எஞ்சாது” என்றான். “பணிந்திரு மைந்தா, உனக்கு தெய்வங்கள் அருள்செய்யும்” என்றார் திருதராஷ்டிரர்.
திருதராஷ்டிரர் திரும்பி “எங்கே என் மைந்தன் தருமன்?” என்று கை விரித்தார். தருமன் உதடுகளை இறுக்கி அழுகையை அடக்கியபடி அருகே சென்றான். அவர் தன் பெரிய கரங்களால் யானை துதிக்கையால் அள்ளுவதுபோல அவனைச் சுருட்டி அள்ளிக்கொண்டார். “மேலும் மெலிந்திருக்கிறாய். அரசனுக்குரிய தோள்களா இவை? மூடா… என் மைந்தன் தோள்களைப்பார்” என்று சொன்னபடி துரியோதனனையும் தருமனையும் இருகைகளால் ஒரேசமயம் மார்புடன் அணைத்தார். அவரது அரசமரத்தின் அடித்தூர் போன்ற மார்பில் அவர்கள் இரு சிறு செடிகள் போலிருந்தனர். முகம் விரிய கண்கள் உருள அண்ணாந்து நோக்கி “மேலிருந்து பார்க்கிறானா என் இளையோன்? விதுரா மூடா, விண்ணுலகமென்று ஒன்றுள்ளது உண்மைதானா?” என்றார்.
“அரசே, அது நம் கற்பனையாகவும் இருக்கலாம். அங்கொரு உலகம் தேவையாவது நமக்கல்லவா?” என்றார் விதுரர். “ஆம், ஆம்” என்றபடி இருவரின் முதுகிலும் தன் பரந்த கைகளால் படீர் படீரென்று அறைந்து உரக்க நகைத்தார். “இளையவன் எங்கே? என் மல்லன்?” பீமன் மெல்ல நடந்து அருகே சென்றான். அவன் முகம் மலர்ந்திருந்தது. துரியோதனனையும் தருமனையும் விட்டுவிட்டு திருதராஷ்டிரர் கைகளை விரித்தார். அவர்கள் விலகி மேலாடையையும் குழலையும் சரிசெய்துகொண்டனர். பீமன் அருகே சென்றதும் திருதராஷ்டிரர் அவனை அப்படியே அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டார்.
“பெருந்தோள்கள்… ஆம்” என்று அவன் தோள்களை அறைந்தார். மீண்டும் அள்ளித்தழுவிக்கொண்டார். “நாளை… நாளையே என் களத்துக்கு வா! நாம் தோள்பொருதவேண்டும்… விதுரா மூடா!” விதுரர் “அரசே” என்றார். “மறக்காதே. நாளைக்காலை நான் இவனுடன் களம்பொருதுகிறேன்…” விதுரர் புன்னகையுடன் “ஆணை” என்றார்.
பீமனை இருகைகளாலும் மீண்டும் மீண்டும் தடவியபடி “மைந்தரைப் பார்க்கும் விழியை அளிக்காத தெய்வங்கள் தொட்டுத்தீண்டும் உடலையாவது அளித்தனவே” என்றார் திருதராஷ்டிரர். “அரசே, ஒவ்வொரு விரல்நுனியிலும் விழிகளை அளித்து தெய்வங்கள் உங்களை வாழ்த்தியிருக்கின்றன” என்றார் விதுரர். “ஆம் ஆம், உண்மை” என்று அவர் நகைத்தார். “எங்கே வில்லாளன்?” என்று கைநீட்டினார்.
அர்ஜுனன் திருதராஷ்டிரரை அணுகியதும் அவரது கனத்த கரங்கள் வந்து அவன் தோளில் விழுந்தன. இரும்புத்தூண் போல எடை கொண்டவை. அவரது வியர்வையின் வாசம் பழமையான குளத்தின் படிகளின் பாசிபோலிருந்தது. அவர் அவனை அணைத்து தலையை முகர்ந்தபின் வெடித்து நகைத்து “விதுரா, மூடா, அறிவாயா, உன் மைந்தன் ஆண்மகனாகிவிட்டான். பெண்ணை அறிந்துவிட்டான்… ஆஹாஹாஹா!” என்று கூவினார். அர்ஜுனன் உடல் கூசி விதிர்க்க அவர் மார்பிலேயே முகத்தை அழுத்திக்கொண்டான்.
“என்ன வெட்கம்… எந்தமரமாவது பூத்ததற்காக நாணுமா?” என்று சொல்லி திருதராஷ்டிரர் அவனைப்பிடித்து திருப்பி சபைநோக்கி நிறுத்தினார். “அவையோரே, என் மைந்தன் முகத்தைப்பாருங்கள். அவன் இந்திரனின் மைந்தன். லீலையைத் தொடங்கிவிட்டான்.” பீஷ்மர் வேறுபக்கம் திரும்பி புன்னகையை உதட்டை இறுக்கி அடக்கியபடி துரோணரிடம் ஏதோ சொல்ல கண்களில் சிரிப்பு மின்ன அவர் தாடியைத் தடவியபடி மெல்லியகுரலில் ஏதோ சொன்னார். பீமன் நகைத்துக்கொண்டே பார்த்தான். அர்ஜுனன் தலையைத் தூக்காமல் நின்றான்.
“அது அவர் கடமைதானே அரசே?” என்றார் விதுரர். “இளவரசுப்பட்டம் பெற்றபின் ஐவகை நிலங்களையும் நால்வகை குடிகளையும் மூவகை அறங்களையும் அறிந்துவரவேண்டும் என்றுதானே நூல்கள் சொல்கின்றன?” திருதராஷ்டிரர் “ஆம், ஐவரும் கிளம்பவேண்டியதுதான்… நலம் திகழட்டும்” என்றபின் அர்ஜுனன் தோளில் அறைந்து “மைந்தா, நீ என்னை வென்று காட்டு” என்று நகைத்தார். விதுரர் “அது எளிய பணி அல்ல அரசே” என்று சொல்ல திருதராஷ்டிரர் மார்பில் அறைந்துகொண்டு மேலும் உரக்க நகைத்தார்.
ஓவியம்: ஷண்முகவேல்
அவையிலிருந்த அனைவரும் எழுந்து முகம் மலர்ந்து வட்டமிட்டு நின்றதை அர்ஜுனன் கண்டான். கௌரவர் முகங்களும் சிரிப்பில் விரிந்திருந்தன. ஆனால் சகுனி மட்டும் தன் இருக்கையில் தலைகுனிந்து அசையாமல் அமர்ந்திருந்தார்.