பன்னிரு படைக்களம் - 8
[ 11 ]
தென்திசையில் எழுந்து பற்றி எரிவதுபோல் ஒளிவிட்ட முகில்குவையை அணுகும்தோறும் ரக்தபீஜன் உடலும் செவ்வொளி கொண்டு அனல்போல் ஆயிற்று. அவன் நெஞ்சில் இனிய நினைவுகள் எழுந்தன. எங்கோ இனிய இசை ஒன்றை கேட்டான். நறுமணங்களை அறிந்தான். நாவிலினித்தது அவன் வாய்நீர். விழிகள் அழகை மட்டுமே கண்டன. அலையடித்து திரைவிலகுவதுபோல முகில்கள் வழிவிட அவன் சென்றுகொண்டே இருந்தான். பின்னர் அறியாது அவன் கைகள் கடிவாளத்தை இழுத்தன. முகில்முடிகளுக்கு அப்பால் எழுந்து தெரிந்த தேவியின் மணிமகுடத்தை அவன் கண்டான்.
விண்ணில் ஒரு மணியோசை எழுந்தது. மங்கலச்சங்குகள் ஓம் ஓம் என்றன. பொன்னிறச்சிறகுகளுடன் முகில்களில் மூழ்கியும் துழாவியும் களித்தனர் கந்தர்வர்கள். மேலும் மேலுமென சுடர்கொண்டன முகில்கள். அவன் அன்னையின் திருவுருவை அருகிலென கண்டான்.
கரியவழிவாக விரிந்திருந்தது கூந்தல். நடுவே சூரியவட்டமென அவள் முகம். கனிந்து பாதிமலர்ந்து குனிந்த விழிகள். வெண்பல்நிரை மின்ன புன்னகைத்தன இதழ்கள். கன்னத்தில் குறுநிரை ஆடியது. காதில் தழைந்த மணிக்குழை கண்ணொளிக்கு நிகர்நின்றது. மூக்கில் தொங்கிய புல்லாக்கு பல்நிரைக்கு எதிர்நின்றது. அவன் மண்ணில் விழும் எடைபோல அவளை நோக்கி சென்றுகொண்டே இருந்தான். விழிகளிலும் உள்ளத்திலும் அவளன்றி வேறின்றி இருந்தான்.
அவள் காலடியில் நின்றிருந்தது செம்பிடரி எழுந்த சிம்மம். அதன் சிப்பிவிழிகள் அவனை நோக்கி சொல்லின் ஒளிகொண்டன. வாய் திறந்து நாக்கு வளைந்து அச்சொல் வடிவு கொண்டது. அவ்விழிகளை அவன் அறிந்திருந்தான். அவ்வுகிர்களை முன்பும் பலமுறை கண்டிருந்தான். அவ்வெண்ணம் எழுந்ததுமே அமிழ எதிரே பொன்மலை என எழுந்தது அன்னையின் உருவம்.
அன்னை தன் இரு கைகளையும் விரித்து அவனை அருகே அழைத்தாள். அவன் கால்தயங்கி நிற்க, அவள் புன்னகையுடன் மேலும் குனிந்து “வருக என் கண்ணே!” என்றாள். அவன் பின்னடி எடுத்துவைத்து மாட்டேன் என தலையசைத்தான். “என் அமுதல்லவா? என் துளியல்லவா?” என்று அன்னை கொஞ்சினாள். அவன் மேலும் அடி வைத்து பின்னகர்ந்து மாட்டேன் என்று தலையசைத்தான். “உனக்கு இனியன தருவேன். உன் இரு கன்னங்களிலும் முத்தாடுவேன்” என்றாள் அன்னை.
அவன் காலை உதைத்து முகம் சுளித்து உரத்தகுரலில் “விலகு!” என்றான். மூச்சிரைத்தபடி “விலகிச்செல்… விலகு!” என்று கூவினான். தன் கண்களை மூடி அவள் உருவத்தை அகற்ற முயன்றான். இமைகள் அவள் தோற்றத்தை தடுப்பதில்லை என்று உணர்ந்து சினத்துடன் விழிதிறந்து “அகன்றுபோ! போய்விடு!” என்றான். அவள் சிரித்து “உன்னிலிருந்து எப்படி அகல்வேன்? நீ என்னிடமிருந்து எங்கு செல்வாய்?” என்றாள்.
அவன் அவள் கைகளை பார்த்தான். எங்கோ எவ்வெவ்வடிவிலோ கண்டுமறந்தவை அவை. சிம்மம்போல் உகிர்கொண்டவையா அவை? அன்றி, நாகம்போல் நெளிபவையா? அவன் விழிகள் அவளுடைய எடுத்த இணைமுலைகளை பார்த்தன. தன் கைவிரல்நுனிகளில் ஒரு நடுக்கமென சினமெழுவதை உணர்ந்தான். அதை அறிந்ததுமே அவன் உள்ளம் விரைவுகொண்டது. ஊதி ஊதி கனல்பெருக்கி அச்சினத்தை தன் உடலெங்கும் நிறைத்துக்கொண்டான். நெஞ்சை கைகளால் அறைந்து பேரொலி எழுப்பியபடி நீட்டிய கைகளுடன் அவன் அவளை நோக்கி பாய்ந்து சென்றான். அவன் கொண்ட சினத்தை அறிந்து களிவெறிகொண்டது அவன் கையமைந்த வாள்.
“நில்! நில்!” என்று அன்னை சொன்னாள். “உன் மேல் முனிந்து இங்கு வந்தேன். உன் பால்படியா செவ்வுதடுகளை கண்டபின்பே கனிந்தேன். என் அமுதை கொள்க! நீ அழிவற்றவனாவாய்” அவள் விழிகளை நோக்கி ரக்தபீஜன் குரலெடுத்தான். “விலகு! என் முன் எழுந்த முலைகள் எவற்றையும் கொய்யாமல் நான் அமைந்ததில்லை… இழிமகளே, இன்று உன் முறை”
தன் வலக்கையில் ஏந்திய வைரவாளை சுழற்றியபடி அவள் அமர்ந்திருந்த சிம்மம் நோக்கி சென்றான். “இன்று நான் விழைவது உன் முலையமுதல்ல. வெங்குருதியை மட்டுமே. உன் முலையரிந்து வீசி அதை பருகித் திளைக்கிறேன். உன் நெஞ்சு பிளந்து துடிக்கும் குலையை கையில் எடுத்துப்பார்க்கிறேன், அதிலுள்ளதா என் பெயர் என்று!” என்று அவன் குரல் முழக்கமிட்டது.
அன்னை கைகளை வீசித்தடுத்து “வேண்டாம், மைந்தா. அன்னையை வென்றவன் எவனுமில்லை” என்றாள். “வெல்லமுடியாதெனில் அழிகிறேன். வீண்மகளே, ஊட்டப்படாத முலைப்பால் போல் நஞ்சு பிறிதில்லை” என்றான் ரக்தபீஜன். “அன்னையிடம் பால் எஞ்சுவதில்லை மைந்தா” என்றாள் அவள்.. “சொல்வேண்டாம். எடு உன் படைக்கலங்களை. இங்கு முடியட்டும் நமது முரண்” என்றான் ரக்தபீஜன். “ஆம், இக்களம் அதுவே” என்று அன்னை சொன்னாள். நீள்மூச்சுடன் அவள் ஒளிமங்கலானாள். அவளைச்சூழ்ந்த சுடர்முகில்கள் திரிதாழ்த்தி அணையத்தொடங்கின.
அவன் அணுகும்தோறும் அன்னை இருண்டு உருவிரியத் தொடங்கினாள். அவள் தோள்களில் எட்டு கைகள் எழுந்தன. அவற்றில் வாளும் கேடயமும் முப்புரிவேலும் உடுக்கும் வடமும் அங்குசமும் கதையும் உழலைத்தடியும் தோன்றின. இருளுருவான முகத்தில் விழிகள் எரிமீன்களென தழல்விட்டன. செந்நா எழுந்த குருதிவாய் திறந்து அவள் பிளிறிய ஒலியில் முகில்கள் சிதறி விலக வானம் வெளித்தது. அதில் அவள் மட்டுமே எஞ்சுவதுபோல் அவன் தலைக்குமேல் எழுந்து தெரிந்தாள். வாளேந்தி மறுகையில் உகிர்நீட்டி போர்க்குரல் எழுப்பி அவன் அவள் எட்டு கைகளுடனும் போரில் தன்னை தொடுத்துக்கொண்டான்.
அவனைச்சூழ்ந்து பல்லாயிரம் இடியோசைகள் எழுந்தன. பல்லாயிரம் மின்னல்கள் துடிதுடித்தன. அவன் நின்ற நிலமும், அந்நிலம் சூடிய விண்ணும் அதிர்ந்து நடுங்கின. அவள் கைகளின் படைக்கலங்கள் வளர்ந்து வெற்பெழுச்சி என, வான்வளைவென அவனை சூழ்ந்தன. அவன் அவள் முலைகளை அன்றி பிறிதெதையும் நோக்கவில்லை. அப்படைக்கலங்களை தன் வாளால் எதிர்கொண்டான். அவை பேரொலியுடன் முட்டிச் சிதறின.
ஒவ்வொரு கணமும் தன்னைத் திரட்டி ஒன்றே நிலையென அவன் அவளுடன் போரிட்டான். அவன் உடலுக்குள் நுண்வடிவில் செறிந்த பல்லாயிரம்கோடி ரக்தபீஜர்கள் உயிர்கொண்டு துள்ளித்தவித்தனர். அவர்களின் விசையால் அவன் தசைத்திரள்கள் அனைத்தும் புடைத்துச்சுருண்டன. அவன் தோள்கள் விம்மி எழுந்து அதிர்ந்தன.அவளை நண்ணும்தோறும் அவன் வல்லமை கொண்டு விரிந்தான். அவள் பெய நிறைந்த உள்ளத்தில் அச்சம் முற்றழிந்தது. அவள் உருக்கண்ட கண்களில் பிறிதொன்றும் தெரியாதாயிற்று,
விண்ணவர் அப்போர் கண்டு வியந்தனர். மலை மலையுடன் என என்றனர் முதல்வானில் நின்றிருந்த கந்தர்வர். கடல் கடலுடன் என என்றனர் இரண்டாம் வானில் நின்றிருந்த யட்சர். மூன்றாம் வானில் நின்றிருந்த கிம்புருடர் முகில் முகிலுடன் என என்றனர். நான்காம் வானில் நின்ற தேவர்கள் அதை விண்ணகமும் மண்ணகமும் மோதுவதாக எண்ணினர். ஐந்தாம் வானில் அமைந்த முனிவர் அதை விழைவும் வெறுமையும் கொண்ட வெறியாட்டெனக் கண்டனர். ஆறாம் வானில் நின்றிருந்த பிரம்மன் அழிவும் ஆக்கமும் என்று அறிந்தான். ஏழாம் வானில் நின்றிருந்த இருவர் அதை அன்னை முலையருந்த முட்டும் சிறுமைந்தன் என உணர்ந்து புன்னகை செய்தனர்.
அன்னையின் வேல்நுனி வந்து அவன் தோளை தொட்டுச்சென்றதும் குருதி பீரிட்டு நிலத்தில்விழ அங்கிருந்து போர்வெறிக்கூச்சலுடன் ரக்தபீஜர்கள் எழுந்தனர். களிகொண்டு நகைத்து ரக்தபீஜன் “இதோ நான். வெறியாடும் கொற்றவையே, வெளிநிறைத்த வெறுமையே, இதோ நாங்கள்… எங்கள் அனைவருக்கும் நிறையும்படி அமுதுள்ளதா உன்னிடம்?” என்று கேட்டான். ரக்தபீஜர்களின் உடல்களிலிருந்து விழுந்த குருதித்துளிகள் மேலும் ரக்தபீஜர்களாயின. ஒன்றுபல்லாயிரமெனப் பெருகி வெளிநிறைத்தன. உகிர்கள் நீட்டி பிடரி சிலிர்த்து அலறி ஆர்த்து தேவியை அவர்கள் சூழ்ந்துகொண்டனர்.
தேவி தன்னை மாயையால் பல்லாயிரங்களின் பல்லாயிரம் மடங்கென பெருக்கினாள். கைகளின் கிளைக்காடு. கால்களின் வேர்க்காடு. செவிகளின் இலைக்காடு. விழிகளின் மலர்க்காடு. அக்காட்டை எதிர்கொண்டது ரக்தபீஜர்களின் முள்பெருத்த பாலைக்காடு. திசையெங்கும் நடந்தது பெரும்போர். தேவியின் மாயைப்பெருக்கே ரக்தபீஜர்களின் பெருக்கை உருவாக்கியது. தன்னை நுரைக்கச்செய்து அந்நுரைக்குமிழிகளுடன் போர்புரிந்துகொண்டிருந்தாள் அன்னை. முடிவிலாது பெருகி முடிவிலாது பொருது முடிவிலாது வென்று முடிவிலாது தோற்றாள்.
பெருகி உருவெடுத்து படையெனப் பொருதி நின்றிருக்கையிலும் அவள் முலைகள் சுரந்து வழிந்துகொண்டிருந்தன. அவள் முடிவிலா மாயைகளிலிருந்து பெருகிய அமுது பெருகி குருதியுடன் கலந்து களம் நிறைத்தோடியது. வெட்டுண்டும் சிதைந்தும் சரிந்த ரக்தபீஜர்களின் உடல்களுக்குமேல் அவள் முலைப்பால் வெண்சரடுகளாக வழிந்தது. துடிக்கும் உடல்களுக்குமேல் இழுபட்டுத்திறந்த வாய்களில் இதழ்கள் குவிந்து அதை சுவைத்துண்டன.
அவள் கண்முன் மலைகளென குவிந்துகிடந்தனர் கொல்லப்பட்ட ரக்தபீஜர்கள். அவற்றின்மேல் கால் நாட்டி தலை எழுந்து நின்ற அன்னை ஒருகணம் உளம்சோர்ந்தாள். அவள் முலைப்பால் சொரிவு மிகுந்தோறும் கொலைக்கைகளின் விரைவு குறைந்தது. நகைத்து வெறியாடி பெருகிக்கொண்டிருந்த ரக்தபீஜன் அக்கணத்தின் இடைவெளியை தான் நிறைத்து பன்மடங்கானான். பிறிதொருகணம் அமையும் எனில் வெற்றி தனக்கே என்று அவன் எக்களித்தான். அக்கணம் அன்னையின் வலத்தோளில் ஆடிய குழையில் எழுந்த சிவம் “நீ வென்றாகவேண்டியது என்றும் உன்னையே தோழி” என்றது. “உன் கன்னியை துணைவி வென்றாள். துணைவியை அன்னை வென்றாள். அன்னையை இன்று அறம்சூடிய பேரன்னை வென்றாக வேண்டும்!”
காலமென்றான அக்கணத்தில் நின்று கைசோர்ந்து அன்னை நீள்மூச்செறிந்தாள். “அன்னையென்றிருப்பதன் களிப்பெருக்கைக் கடக்க என்னால் இயலாது” என்றாள். “கடந்தாகவேண்டும். இப்புடவி உன் மடிசேர்ந்த மகவு” என்றார் வலபாகத்தன். “இது என் மைந்தர்நிரை” என்றாள் ஆவுடையாள். “மைந்தரென்பது உன்னில் கருக்கொண்டு உன் உதிரமுண்டு எழும் உன் துளிகளே தேவி… வெல்வதும் வீழ்வதும் நீயே” என்றார் தாதை. “என் செய்வேன்? பிறிதொன்று அறிந்திலேன்” என்றாள் தாய். “உன்னில் எழுந்ததை நீயே உறிஞ்சிக்கொள்க! நீரை எல்லாம் கடலே ஆக்கி உண்கிறது என்றறிக!” அன்னை நெஞ்சுலைந்து நின்றாள். “உன்னிலெழுக உன் பிறிதுரு!” என்றது பதி. “ஆம்” என்றாள் அன்னை.
அன்னை தன் வாளை தூக்கி தன் நெற்றிப்பொட்டில் வைத்தாள். வெறிக்குரல் எழுப்பியபடி தன்னை வெட்டி இரண்டாகப்பிளந்தாள். துடித்துவிழுந்த ஒருபாதி கருநிறம் கொண்டு அவளுக்குப்பின்னால் நிழலென எழுந்தது. நிழலற்ற ஒளிகொண்டிருந்த அன்னைக்கு நிழலெழுந்ததும் விண்ணவர் வாழ்த்தொலி எழுப்பி அம்மறுவுருவை வணங்கினர். விண்ணிலெழுந்த நிழல் மேலும் கருமைகொண்டு பருவுருத் திரட்டி சாமுண்டி என ஓங்கி நின்றது. கருநாகங்கள் சடைகளென நெளிந்த மண்டையில் எரிகுழிகளென விழிகள். எலும்புருவான உடலில் சுருங்கி உள்வலிந்திருந்த முலைகள். கருகிய சுள்ளிகளென எட்டு கைகள் விரிந்து அவற்றில் எரிகலமும் மண்டையும் வாளும் சூலமும் துடியும் கோடரியும் மின்படையும் கதையும் அமைந்தன.
சாமுண்டியின் வாயிலிருந்து செந்நிறப்பெருக்காக நாக்கு நீண்டு நெளிந்து துழாவியது. அன்னையின் படைக்கலங்கள் வெட்டி ரக்தபீஜனின் உடலில் இருந்து ஊறிச்சிதறிய குருதித்துளிகள் மண் தொடுவதற்குள் அந்த நெடுநாக்கால் நக்கிச்சுருட்டி உண்ணப்பட்டன. பாலைநிலம் நீரை உறிஞ்சுவதுபோல அவளுக்குள் அக்குருதிப்பெருக்கு சென்று மறைந்துகொண்டே இருந்தது. தேவியின் வேல்பட்டும் அம்புதைத்தும் கதைஉடைத்தும் விழுந்த ரக்தபீஜர்களின் உடல்கள் குருதியின்றி அசைவிழந்தன. அலையடங்குவதுபோல அவளைச்சூழ்ந்திருந்த அவன் தணிந்துகொண்டிருந்தான்.
தங்கள் குருதி உண்ணப்படுவதை ரக்தபீஜர்கள் நோக்கினர். ஆனால் சாமுண்டியை நோக்கி சற்றே விழிதிருப்பினாலும் போர்க்குவியம் மாறுவதை உணர்ந்து தேவியிலேயே விழிநிலைத்து போரிட்டனர். ஓரக்கண்ணால் சாமுண்டியின் நாக்கை நோக்காமல் அமையவும் இயலவில்லை. அனல்கதிரென அது களமெங்கும் பரவி குருதியை பொசுக்கியது. காற்றுச்சுழலென அலைந்து ஈரத்தை உலரச்செய்தது. தன்னை உண்ணும் அந்நாக்கின் தொடுகையை ரக்தபீஜன் ஒரு விதிர்ப்பாக உடலில் உணர்ந்தான். ஒருமுறை அதன் மென்வெம்மை வந்து அவன் கால்களை தொட்டுச்சென்றபோது உடல்சிலிர்த்து விழியூறினான். அவன் உள்ளம் உவகை கொண்டது. “உண்ணுக! மேலும் உண்ணுக!” என அவன் அறியா ஆழம் கரைந்தது. முலையூட்டும் அன்னையென அவன் கனிந்து ஊறிக் கொண்டிருந்தான்.
குருதியுண்டு சாமுண்டி திமிறிப்பரக்க முலையூறி அன்னை நின்றிருக்க களமெங்கும் வெண்ணிற அமுதம் நிறைந்தது. அப்பெருக்கில் ரக்தபீஜன் கால்வழுக்கி விழுந்தான். எழமுயன்று மீண்டும் விழுந்தான். எழும் முயற்சியிலேயே அவன் தவழ்ந்தும் துழைந்தும் புரண்டும் எழுந்தும் குழவியென்றானான். மூழ்கி மூச்சுதவறி எம்பி எழுகையில் உண்ட முதல்வாய் அமுது கடும்கசப்பு கொண்டிருந்தது. நாவில் எரிந்து தொண்டையில் கமறி வயிற்றில் குமட்டியது. பின்பு அடிநாக்கில் ஓர் இனிமையென எஞ்சியது. அவ்வினிமையை தேடிய அவன் நாக்கு அடுத்த மிடறை தேடி உண்டது. மேலும் மேலுமென உண்டு இனிமையில் திளைத்தது.
தன்னருகே பிடரிமயிர் பறக்க அணுகிய சிம்மத்தின் முகத்தை அருகே கண்டான். அதன் விழிகளிலிருந்த அணுக்கத்தை உணர்ந்து துணுக்குற்றான். “தாங்களா?” என்றான். கைதொழுது “பிழைபொறுக்கவேண்டும்” என்றான். சிம்மம் தன் குளிர்ந்த மூக்கால் அவன் சிம்மமுகத்தின் மூக்கை தொட்டது. அதன் செந்நா வெளிவந்து அவன் உதடுகளை மெல்ல முத்தமிட்டது. அதன் இனிய உறுமலை அவன் அருகென கேட்டான்.
தன்னைச்சூழ்ந்த பால்பெருக்கில் விழுந்தான் ரக்தபீஜன். அள்ளி அள்ளிக் குடித்து அமுதால் நிறைந்தான். தன் உடலெங்கும் பரவிய அமுதை ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்தான். கொதித்தும் குமிழியிட்டும் அவனுள் செறிந்திருந்த குருதி முழுக்க வழிந்தோடி அங்கே குளிரென அமுது நிறைந்தது. கால்நுனிகளில், கைவிரல்முனைகளில், செவிமடல்களில், மூக்குக்குவியத்தில் குளிர்ந்தது. வயிற்றிலும் நெஞ்சிலும் இனித்தது. சொற்களில் எண்ணத்தில் கனிந்தது. “அம்மா” என்று அவன் சொன்னான். அவன் மேல் குனிந்த அன்னை நீண்டு வளைந்த கொம்புகளுடன் எருமைமுகம் கொண்டிருந்தாள். மெல்லிய ஆழ்குரலில் “மைந்தா” என்றாள்.
[ 12 ]
வேதம் கதிரெழுந்த காலத்தின் புலரியில் இது நடந்தது. கன்னங்கரியவனாகிய வருணனால் ஆளப்பட்ட முதற்கட்டத்தில் அமைந்த வேள்விக்களத்தில் தன் நூற்றெட்டு மாணவர்களுடன் அமர்ந்து மேதாதிதி என்னும் வேதமூதாதை எரி எழுப்பி அவியளித்தார். கிழக்கு அதன் திசை. காலைவிடியல் அதன் பொழுது.
வேதம் தொட்டெழுப்ப விண்ணகம் உருகி வழிந்து மண்ணைத் தொட்டது. முதற்களத்தின் தெய்வங்கள் உருத்திரட்டி மண்ணிறங்கின. இரண்டு செங்கைகளிலும் நெய்க்கரண்டிகளுடன் அனலோன் துணைவியாகிய அன்னை ஸ்வாகை எழுந்துவந்தாள். நான்கு வளைக்கைகளில் பொற்காசுகளுடன் வேள்விதேவனின் மூத்த துணைவியாகிய தட்சிணை தேவி எழுந்தாள். ஆறுகரங்களில் ஏடும் எழுத்தாணியும் தாமரையும் மின்படையும் அஞ்சலும் அருளலுமாக தீக்ஷை தோன்றினாள். அவர்களால் அழைத்துவரப்பட்டவள் போல் அன்னை மங்கலசண்டிகை இருளென ஒளியென எழுந்தாள். அவள் நெற்றிசூடிய சிந்தாமணியில் சுடரென துர்க்கை தோன்றினாள்.
“முடிவிலா இருமை கொண்டவளை, ஈன்றும் கொன்றும் ஆடுபவளை வணங்குக! ஆதலும் அழிதலுமென ஆடுபவளை பணிக! தன்னை தான் ஈன்று தன்னை தானுண்டு நிறைபவளை அணைக! அவள் நமக்கு அருள்க!” என்றார் மேதாதிதி. “ஓம் ஓம் ஓம்” என்றனர் மாணவர். “இப்புடவி அவள் இருமை. இதையறியும் சித்தமும் அவள் இருமைத்தோற்றமே. ஒருமையென அவளை உணர்கையில் அவ்வுணர்வென ஆகி நின்று நகைக்கிறாள். இங்கு அவள் எழுக! நம் அவியுண்டு அன்னை நிறைக!”
அன்னையருக்கு அவியிட்டு நிறைவுறச்செய்தார் மேதாதிதி. அன்னையர் நிறைவுற்றபோது விண்நிறைந்த மூதாதையர் விடாய்தீர்ந்தனர். வெளிநிறைந்த தேவர்கள் மகிழ்ந்தமைந்தனர். வெளியாளும் தெய்வங்கள் கனிவுற்றன. “எழுக இக்களம்!” என்று வானொலி எழுந்தது. அத்தருணத்திற்குரிய விண்மீனை எரிதழல்திரையில் மேதாதிதி நோக்கினார். வெள்ளாட்டின் தலையென செம்பிடரி பறக்க செந்நா நீண்டு வளைய தோன்றி மறைந்தது அது.
“இது எரிவடிவென கிழக்கே சுடரும் மேடம். அவியிடுக இளையோரே!” என்றார் மேதாதிதி. நூற்றெட்டு மரக்கரண்டிகளில் அள்ளி அள்ளி விடப்பட்ட அவிநெய்யை உறிஞ்சி உண்டது வெள்ளாட்டின்தலை. “மேலும்! மேலும்! தீராவிடாய் கொண்டவன் போலும் இவன். இக்களத்திற்குரியோர் அனலடங்காதவர். தன்னை உண்டு தணியாதவர்” என்றார் மேதாதிதி.
மேலும் மேலுமென அவி சென்றுகொண்டிருக்கையில் அவ்வாட்டுத்தலையில் மின்னிய விழிகளை ஒருகணம் கண்டு நெய்க்கரண்டி அசைவிழக்க கைகாட்டி “நிறுத்துங்கள்” என்றார். உரத்த குரலில் “இந்திரனே, விழைவெரியும் இவ்விழிகளை நான் நன்கறிவேன். வெளியே வருக!” என ஆணையிட்டார். வெள்ளாடு அனலில் இருந்து எழுந்து முன்னங்கால்களைத் தூக்கி வைத்து வெளியே வந்தது. இளவைதிகர் வியப்பொலி எழுப்பினர்.
“இவ்வண்ணம் நீ கரந்து வந்தது ஏன்?” என்றார் மேதாதிதி. “அங்கே கீழ்ச்சரிவின் பெருந்தனிமையில் இன்னும் தோன்றாத சூரியனுக்காக காத்திருக்கிறான் மேடன். அவன் தயங்குவதைக் கண்டு நான் உட்புகுந்தேன்” என்றான் இந்திரன். “நீ இளையமேடன் என்று ஆகுக! சித்திரை முழுப்பதுவரை நீ இவ்வுடலுடன் இருப்பாய். இவ்வண்ணமே விண்ணகமும் அணைவாய். அங்கு உன்னவரால் இளிவரல் செய்யப்படுவாய்” என்றார் மேதாதிதி. “கதிர்காத்துத் தயங்கியவன் உனக்கு முன்னவன் என்றாகுக! உன்னுள் அவனும் அவனுள் நீயும் என்றும் குடிகொள்க! இருபாற்பட்ட எதுவும் கொள்ளும் முடியா ஆடல் உங்களுள் நிகழ்க! ஆம் அவ்வாறே ஆகுக!”
வெள்ளாட்டின் வடிவில் தலைகுனிந்து அமராவதியை அணைந்தான் இந்திரன். அவனைக்கண்டு தேவரும் முனிவரும் மேடன் என்று நகையாடினர். சித்திரை விடியும்வரை வியோமயானத்தில் அமர்ந்து விண்நோக்கி காத்திருந்தான். விரியும் கதிர்வளையத்துடன் சூரியன் எழுந்தபோது தன் ஆட்டுருவம் உருகி வழிந்து தேவருடல் மீள்வதை கண்டான். கதிரவனை வணங்கி தன் நகர்மீண்டான்.